வெள்ளி, 30 மார்ச், 2018

பெரிய சனி - Holy Saturday (B) 2018



பெரிய சனி - Holy Saturday
31,03,2018

தூய மரியாள் ஆலயம்
பன்வில, கண்டி,
Thursday, March 29, 2018
தொடக்க நூல் 1,1-2,2
விடுதலைப் பயணம் 14,15-15,1
எசாயா 54,5-14
எசேக்கியேல் 36,16-17,18-28
உரோமையர் 6,3-11
மத்தேயு 28,1-10

பெரிய சனி, பாஸ்கு சனி, அல்லது திருவிழிப்பு சனி என்று பலவாறு இந்த நன்நாள் அழைக்கப்படுகிறது. ஒரு சில தமிழ் மக்கள் சனிக்கிழமையை சனி பகவானுடைய நாளாகவும், சனி கிரகத்தினுடைய நாளாகவும் கருதி வழிபடுகின்றனர். யூத மக்கள் சனிக்கிழமையை கடவுளுடைய ஓய்வு நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். கிரேக்க-உரோமையர் சனிக்கிழமையை, சனி கோளுக்கு அல்லது அதன் தேவைதையோடு ஒப்பிட்டு விவாதித்தனர். நமக்கு, இயேசு ஆண்டவர் இந்த நாளில் ஓய்ந்திருந்தார் அல்லது துயில் கொண்டார் என்பதனால், இந்த நாள் முக்கியமான நாட்களில் ஒன்றாகவும், புனிதமான நாளாகவும் மாறுகிறது. இந்த தூய்மையான நாளைப்பற்றி திருச்சபை பல படிப்பினைகளை முன்வைக்கிறாள் அவற்றைப் பார்ப்போம்:

! ஆண்டவர் இந்த நாளில் துயில் கொண்டார்,
! ஆண்டவர் இறந்து பாதளங்களுக்குள் இறங்கி தொலைந்து போனவர்களை தரிசித்தார்,
! செபத்தோடும் தபத்தோடும் இந்த நாள் செலவிடப்படுகிறது,
! பிரதானமாக திருவருட்சாதனங்கள் இன்று நிறைவேற்றப்படாது,
! திருச்சபை உயிர்ப்பு திருவிழிப்பிற்க்காக காத்திருக்கிறது,
! இரவு வேளையில் இத்திரு விழிப்பு தொடங்குகிறது,
! இத்திருவிழிப்பில் கடவுளின் மாட்சிமிகு செயல்கள் நினைவூகூரப்பபடுகின்றன,
! புது நெருப்பு ஏற்றபடுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறது,
! தியாக்கோன் (திருத்தொண்டர்) அல்லது குரு பாஸ்கா புகழுரை பாடி கிறிஸ்துவை மாட்சிப்படுத்துவார்,
! இன்று, இறைவார்த்தைகள் மூலமாக மக்கள் வரலாற்றில் கடவுள் செய்தவற்றை நினைவுகூருவர்,
! புதியவர்களுக்கு திரு முழுக்கு தரப்படுகிறது, ஏற்கனவே அதனை பெற்றவர்கள் தங்களை புதுப்பிப்பர்,
! இன்றைய நற்கருணை வழிபாடு ஆண்டின் முக்கிய வழிபாடாக உருப்பெருகிறது


தொடக்க நூல் 1,1-2,2

தொடக்க நூல் முதல் 11அதிகாரங்கள் இஸ்ராயேலின் தனி வரலாற்றைப் பற்றி விவரிக்காமையினால் அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என அழைக்கப்படுகிறது. இந்த படைப்பு காட்சிகளினூடாக யாவே மரபு ஆசிரியரும், (மற்றவர்களும்கூட) இஸ்ராயேலை முழு வரலாற்றினுள் நிலைநிறுத்த முயற்சி செய்கின்றனர். இந்த முதல் அதிகாரங்களில் யாவே மரபிற்கு, குரு மரபு அசிரியர் தொகுப்புரை வழங்க முயற்சிப்பதனால் இந்த இரண்டு மரபுகளும் மாறி மாறி வருவதனைக் காணலாம், இருந்தபோதிலும் யாவே மரபு தனது தனித்துவத்தோடு வாசகர்களை கவர்கின்றது. (நான்கு-மரபுகள் எண்ணக் கருத்தை சந்தேகித்து, புதிய விளக்கங்களை கொடுக்கும் புதிய விவிலிய ஆய்வுகள் வளர்ந்துவருகின்றன). படைப்புக்களைப் பற்றி பல கதைகள் மத்திய கிழக்கு மற்றும் எகிப்திய பிரதேசங்களில் இருந்தன, இவை மனிதனையும், உலகையும் மற்றும் கடவுளையும் பற்றி பல கேள்விகளை மேலதிமாக்கிச் சென்றன. விவிலிய படைப்புக் கதைகளில், ஆசிரியர்கள், படைப்புக்கள் கடவுளால் நடந்தப்பட்ட நல்ல திட்டங்கள் எனவும், மனிதர் தங்களது தீய எண்ணத்தாலும், கீழ்படியாமையினாலும், சுயநலத்தாலும் கடவுளைவிட்டு அகன்று சென்றனர் எனவும் விவரிக்கின்றார்

. 1,1-2  : படைப்பின் தொடக்கம்

தொடக்க நூலின் முன்னுரை தனியாக தெரிவதன் மூலம், இது முழு முதல் ஏற்பாட்டிற்கும் தொடக்க உரை போல தோன்றுகிறது. முதல் இரண்டு சொற்கள் (בְּרֵאשִׁית בָּרָא பெரெஷித் பாரா') மட்டுமே பல விவிலிய வாதங்களையும் ஆய்வுகளையும் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது (בְּרֵאשִׁית בָּרָא אֱלֹהִים אֵת הַשָּׁמַיִם וְאֵת הָאָֽרֶץ׃  பெரெஷித் பரா எலோஹிம் 'எத் ஹஷ்ஷமாயிம் வெ'எத் ஹா'ஆரெட்ஸ் - தொடக்கத்தில் கடவுள் வானங்களையும் நிலத்தையும் படைத்தார்). முதலாவது வசனத்தில், கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும் படைத்ததால் அவர் முழு வல்லமையுடையவர் என காட்டப்படுகிறார். ஆனால் உலகு உருவற்று சாயலற்று இருந்ததால், கடவுள் அதனை எவ்வாறு வடிவமைத்தார் என்று, தொடர்கின்ற வசனங்கள் விவரிக்கின்றன
இரண்டாவது வசனத்தில் உலகம் இருளாகவும், கைவிடப்பட்டும், நீரால் மூடப்பட்டும், விசித்திரமான ஆவியால் ஆட்கொள்ளப்பட்டும் இருந்தது என விவரிக்கிறது. இவை உண்மையில் உலகம் எவ்வாறு தொடக்கத்தில் இருந்தது என்பதைவிட, கடவுள் உலகை எவ்வாறு படைத்தார் என்பதையே காட்ட முய்ற்சிக்கின்றன

. 1,3-23 : படைப்பு தொடர்கின்றது

வவ. 3-5: ஒளியின் படைப்பு: இருண்ட உலகிற்கு, ஒளி தோன்றுக (יְהִי אוֹר யெஹி 'ஓர் - உண்டாகுக ஒளி) என்று கடவுள் சொன்னவுடன் ஒளியேற்றப்பட்டது. ஒளி இங்கே ஒரு பெரிய சக்தியாக காட்டப்படுகிறது. நவீன அறிவியலாளரின் பெரு வெடிப்பு கொள்கையும் ஒளியோடு உலகம் தோன்றியது என்று வாதிடுகின்றனர். கடவுள் ஒளிதோன்றியதன் பின்னர், அதனை நல்லதெனக் கண்டதன் மூலம், படைப்பு நல்லதாகவே உருவெடுக்கிறது. இங்கே பாவிக்கப்படுகின்ற இரவு, பகல், மாலை, காலை போன்றவற்றை எபிரேய நாட்கணிப்பில் விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை இக்கால கணக்கின் படி வாசித்தால் சரியான விளக்கங்களை கண்டுகொள்ள முடியாமல் போகும்

வவ. 6-8: நீர்த்திரள் பிரிக்கப்படுகிறது: (וִיהִי מַבְדִּיל בֵּין מַיִם לָמָיִם வியெஹி மவ்தில் பென் மாயிம் லாமாயிம்- நீரிலிருந்து நீர் பிரிக) இவ்வாறு கடவுளுக்கு நீர்திரளின் மீதுள்ள அதிகாரம் காட்டப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் நீரை ஒரு வகை சக்தியாக கருதினர். உலகத்தின் கீழும் மேலுமாக நீர்திரள் இருப்பதாகவே கருதினர். கடவுள் ஒர் ஆகாய-விரிப்பினால் (רָקִיעַ ராகியா)அதனை பிரித்துள்ளார் என சிந்தித்தனர்.

வவ. 9-13: நிலங்கள், தாவரங்களின் படைப்புக்கள்: உலர்ந்த தரை, விதவிதமான தவாரங்கள் கடவுளின் ஒழுங்கான படைப்புத்திறனுக்கு உதாரணங்கள்.

வவ. 14-19: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் (שְׁנֵי הַמְּאֹרֹת הַגְּדֹלִים ,הַכּוֹכָבִים ஷெனே ஹம்ஓரோத் ஹக்டோலிம், ஹகோகாவிம்-இரண்டு பெரிய ஒளிகள், நட்சத்திரங்கள்) போன்றவற்றை அக்கால மக்கள் தெய்வீக சக்திகளாக கருதினர், இங்கே கடவுளே அவற்றை படைக்கின்ற போது, அவரின் பலம் தெரிகிறது அத்தோடு அவை பலமானவை ஆனால், படைப்புப் பொருள்கள என்பது தெரிகிறது.

வவ. 20-23: பறவைகளும், மீன்களும்: சில கடல் உயிரினங்கள், அக்காலத்தில் புராணக்கதை உருவக உயிரினங்களாக பார்க்கப்பட்டு, பயமுறுத்தும் விலங்கினங்களாக கருதப்பட்டன. இன்று நாம் அறிந்துள்ள டைனோசர்கள் போன்றவற்றை அவர்கள் கடல் உயிரினங்களாகவும், பெயரிடப்படாத உயிரினங்களாகவும் கண்டனர். விலங்கினங்கள் முதலில் கடலிலும் மற்றும் நீரிலும் தோன்றின என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கும், விவிலிய அறிவிக்கும் எதோ தொடர்புள்ளது போல தோன்றுகிறது

. 1,24-31 : மிருகங்களினதும் மனிதரினதும் படைப்பு

வவ. 24-31: மனிதரின் படைப்பு: மனிதர் கடவுளின் உச்ச படைப்பு. பல புராணக் கதைகள், மனிதரை பாவியர் எனவும், தீயவர் எனவும், கலகக்காரர் எனவும் சொன்னவேளை, தொடக்கநூல் மனிதரை கடவுளின் சாயலும், பாவனையும் என்று சொல்வது, மிகவும் அற்புதமானது 
(נַעֲשֶׂה אָדָם בְּצַלְמֵנוּ כִּדְמוּתֵנוּ 'அசெஹ் 'ஆதாம் பெட்சல்மெனூ கித்மூதெனூ- மனிதனை நம் சாயலிலும் வடிவத்திலும் படைப்போம்). கடவுள் இந்த இடத்தில் தன்னை பன்மையாக பாவிக்கிறார். நான் என்பது இங்கே நாம் என்று சொல்லிடப்படுகிறது, இதற்கு இன்று வரை பல விளக்கங்கங்கள் தரப்படுகின்றன. இதனை திரித்துவத்துடன் ஒப்பிட்டு ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது. சரியான விளக்கம் இன்றுவரை கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் (אֲנַחְנוּ 'அநாஹ்நூ- நாங்கள்:  אָנִי அனி- நான்

மனிதனிடம் சகல படைப்புக்களும் ஒப்படைக்கப்படுகின்றன. படைப்புக்களை பாதுகாக்க கடவுள் மனிதனை ஏற்படுத்துகிறார். ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று, யாவே மரபில் கடவுள், மனிதனிடம் பிரிவினையை காணவில்லை எனலாம். கடவுள் அனைத்தையும் நல்லது எனவே கண்டார். (וְהִנֵּה־ט֖וֹב מְאֹ֑ד வெஹின்னெஹ்-தோவ் மெ'ஓத்- அனைத்தும் நல்லதாக இருந்தது.)

. 2,1-3   : தூய ஏழாம் நாள்

கடவுள் எப்படி தான் படைத்தவற்றை விரும்பினாரோ, அவ்வாறே ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார். (וַיִּשְׁבֹּת בַּיּוֹם הַשְּׁבִיעִ֔י מִכָּל־מְלַאכְתּוֹ אֲשֶׁ֥ר עָשָׂה׃ வாய்யிஷ்வொத் பாய்யோம் ஹஷ்வி', மிக்கோல்- மெலா'க்தோ அஷேர் 'ஆசெஹ் - ஏழாம் நாளில் ஓய்ந்தார், தான் செய்த அனைத்து வேலையிலிருந்தும்) கடவுளுடைய நாளை புனிதப்படுத்த வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. அதனை இங்கே அழகாக காட்டுகிறார். கடவுளே ஓய்ந்திருந்தார், எனவே கடவுளுடைய நாள் கடவுளுக்கு உரியது என்பதே இங்கே மையப்படுத்தப்படுகிறது. ஓய்வு நாள் (בַּיּ֣וֹם הַשְּׁבִיעִ֔י  பய்யோம் ஹஷ்ஷெவி') புனிதமானது என்ற சிந்தனை இதிலிருந்தே வருகிறது


விடுதலைப் பயணம் 14,15-15,1

இந்த பகுதியிலே ஆசிரியர், எகிப்திய கடவுள் என பார்க்கப்பட்ட பாரவோனுக்கும்
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கும், இடையிலான ஓர் போராட்டத்தை காட்டுகிறார். மக்களின் பயம் அவர்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. கடவுள் மோசேயின் கையைக் கொண்டு கடலை பிரித்தது, ஆண்டவரின் பணியாளர்களோடு அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கடல், தீய சக்தியாக இருந்தாலும் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்கிறார் ஆசிரியர். இங்கே விவிலிய ஆசிரியர் பபிலோனிய மற்றும் கானானிய சிந்தனையிலிருந்து மாறுபடுகிறார். மேகத்தூணும் நெருப்புத்தூணும் (עַמּוּד הֶעָנָן  'அம்மூத் ஹெ'ஆனான்- மேகத்தூன்) கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. இங்கே பார்க்கப்படவேண்டியது கடவுள் எப்படி எகிப்தியரை சாவடித்தார் என்பதைவிட, கடவுள் எப்படி இஸ்ராயேலரை பாதுகாத்தார் என்பதே. உண்மையில் செங்கடல் என்பது எங்கே இருக்கிறது என்பதிலும் இன்று வரை பல புதிர்கள் இருக்கின்றன. செங்கடலை கடந்து வந்த அனுபவம் இஸ்ராயேல் மக்கள் மட்டில் அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டுபண்ணியதை முழு விவிலியத்திலும் காணலாம். மக்கள் ஆண்டவரிலும் அவர் பணியாளன் மோசேயிலும் நம்பிக்கை கொண்டனர் என்பதே, இந்த கதையின் செய்தி. யார் கடவுள் என்ற கேள்விக்கும் இந்த பகுதி விடையளிப்பதாக அமைகிறது, ஆண்டவரா அல்லது பாரவோனா? என்பதே அந்தக் கேள்வி. எகிப்தியர்கள் இஸ்ராயேல் ஆண்டவரைக் கண்டார்கள் என்பதே அதன் விடை

எசாயா 54,5-14

கடவுள் இஸ்ராயேல் மக்கள்பால் கொண்ட அன்பு, என்ற மையப் பொருளில் இந்த பகுதி அமைந்துள்ளது. ஆண்டவருக்கு மிக முக்கியமான இனிமையான பெயர்கள் வழங்கப்பட்டுளளன, அவர் படைகளின் ஆண்டவர் (יְהוָ֥ה צְבָאוֹת அதோனாய் செவாஓட்), இஸ்ராயேலின் தூயவர் உன் மீட்பர் (גֹאֲלֵךְ קְדוֹשׁ יִשְׂרָאֵ֔ל கேஅலெக் கதோஷ் யிஸ்ராஏல்), உலக முழுமைக்கும் கடவுள் 
(אֱלֹהֵי כָל־הָאָרֶץ ஏலேஹெ கோல் ஹாஅரெட்ஸ்) என சொல்லிடப்படுகிறார். இந்த பகுதியிலே எசாயா, இஸ்ராயேலை ஒரு தாயாகவும், இளம் மனைவியாகவும் (אֵשֶׁת נְעוּרִים 'எஷெத் நெ'ஊரிம்), ஒப்பிட்டு அழகான வார்த்தைகளால் இந்த பகுதியை நெய்துள்ளார். கடவுளை கணவராக 
இஸ்ராயேலுக்கு (כִּי בֹעֲלַיִךְ עֹשַׂיִךְ கி வோ'அலாய்க்; 'அசாயிக்) ஒப்பிடுவது அழகான உருவகம்
இது இங்கே அழகாக கையாளப்பட்டுளளது
இப்போது இஸ்ராயேலின் நிலை, கைவிடப்பட்டவள் போல் இருந்தாலும், மீட்பராகிய கடவுள் அதனை மாற்றுவார் என்பது எசாயாவின் இறைவாக்கு. கடவுளின் தன் மன்னிப்பை, நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையையோடு நினைவூட்டி உறுதிப்படுத்துகிறார். மலைகள் சாயினும் கடவுளின் நம்பிக்கை சாயாது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. அடித்தளங்கள், கால்மாடங்கள், வாயில்கள் போன்றவை ஒரு நகருக்கு மிக முக்கியமானவை
இஸ்ராயேலை ஒரு நகராக ஒப்பிட்டு கடவுள் இந்த நகரை இப்போது புதுப்பிக்க இருக்கிறார் என்று எசாயா இறைவாக்குரைக்கிறார். நேர்மையில் நிலைநாட்டப்படுதல் (בִּצְדָקָ֖ה תִּכּוֹנָ֑נִי பெட்செதாகாஹ் திக்கோனானி) என்பது, நம்பிக்கையிழந்து போயிருந்த மக்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தி


எசேக்கியேல் 36,16-17,18-28

கடவுள் தன்னுடைய பெயரின் பொருட்டு அதிசயங்கள் செய்வார், புது இதயத்தை தருவார், என்பது எசேக்கியல் இறைவாக்கினரின் தனித்துவமான செய்திகள். எசேக்கியலும் அகதியாக பபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் ஒருவர் என்று சில விளக்கவுரையாளர்கள் கருதுகின்றனர். எவ்வாறெனினும், இவருடைய இறைவாக்குகளில் புது இதயம், புதிய உடன்படிக்கை, புதிய சட்டம், புதிய நீதி போன்றவை மிகவும் அழகானதும், மிகவும் ஆழமானவையுமாகும். இன்றைய பகுதி இஸ்ராயேலின் புதிய வாழ்வைப் பற்றி பேசுகிறது. பெண்களின் மாதவிடாய் இரத்தமாக வெளியேறிய படியால் பலர் அன்று அதனை தீட்டாக கருதினர்இந்த உதாரணத்தை ஆசிரியர் உவமையாக பாவிக்கிறார் (சிலர் இந்த இயற்கையின் ஆச்சரியத்தை இன்னமும் தீட்டாக கருதுகின்றனர்). ஆசிரியர் மாதவிடாயைப் பற்றி பேசவில்லை, மாறாக பாவத்தைப் பற்றியே பேசுகிறார். எசேக்கியேல், ஏன் மக்கள் கடவுளை வழிபட்டாலும், வேறு நாட்டுற்கு அகதிகளாக போகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விவரிக்கின்றார்
தீட்டானது இஸ்ராயேலருடைய நாடும் மக்களுமட்டுமல்ல, கடவுளுடைய பெயரும்கூட என்பது எசேக்கியேலுடைய புதிய போதனை. எனவே மக்கள் மட்டில் இல்லாவிடினும், தனது பெயரின் பொருட்டுடாவது கடவுள் மக்களை மீட்க வேண்டியவராக இருக்கிறார் என்பது இவரது வாதம். கடவுள் இரண்டு விதமான மீட்புச் செய்ற்பாடுகளை செய்ய இருக்கிறார்
). கூட்டிச் சேர்த்தல் (וְקִבַּצְתִּי אֶתְכֶם வெக்வாட்செதி 'எத்கெம்)
). சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டுவருதல் 
(וְהֵבֵאתִי אֶתְכֶם אֶל־אַדְמַתְכֶם׃ வெஹெவெ'தி 'எத்கெம் 'எல்-'அத்மத்கெம்). இதனையே இஸ்ராயேல் மக்கள் விரும்பினர். (இதுவே புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்கும், ஈழத்தழிழர் நமக்கும் தேவையாக இருக்கிறது.) ஆண்டவரே இவர்கள் விரும்பியவற்றை செய்யப்போகிறார் என அழகாக சொல்கிறார் இந்த புலம்பெயர்ந்த இறைவாக்கினர், எசேக்கியல். 26-28 வரையான வசனங்கள் மிகவும் முக்கியமானவை. பல விசேட அம்சங்கள் இங்கே சொல்லப்படுகின்றன
). புதிய இதயம் (לֵב חָדָשׁ லெவ் ஹாதாஷ்)
). புதிய ஆவி (רוּחַ חֲדָשָׁה ரூவாஹ் ஹதாஷாஹ்)
). கல்லுக்கு பதிலான சதையான இதயம் (וְנָתַתִּי לָכֶם לֵב בָּשָׂר வெநாததி லாகெம் லெவ் பாசார்). ). ஆண்டவரின் ஆவி (רוּחִי ரூஹி
). ஆண்டவிரின் நியமங்களும் சட்டங்களும் 
(בְּחֻקַּי תֵּלֵ֔כוּ וּמִשְׁפָּטַי תִּשְׁמְרוּ பெஹுக்காய் தெலெகூ, வுமிஷ்பாதாய் திஷ்மெரூ). 
இறுதியாக பழைய உடன்படிக்கை புதிய வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. அதாவது கடவுள் இவர்களின் ஆண்டவராகவும், மக்கள் ஆண்டவரின் மக்களாகவும் இருப்பார்கள், இதுதான் மோசேயுடன் செய்து கொண்ட உடன்படிக்கை, அது இங்கே புதியதாகவும் வித்தியாசமானதாகவும் சொல்லப்படுகிறது


உரோமையர் 6,3-11

கிறிஸ்தவ வாழ்வின் மறையுண்மைகளை அழகாக விவரிக்கும் திருமுகங்களில் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த பகுதியிலே திருமுழுக்கினால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் நன்மை எடுத்துரைக்கப்படுகிறது. திருமுழுக்கு (βάπτισμα பப்டிஸ்மா) ஒருவருக்கு புதுவாழ்வு அருளுகின்றதென்பது நமது நம்பிக்கை, இதனை மரணம் என்று வர்ணிக்கிறார் பவுல். திருமுழுக்கு இந்த நல்மரணத்தை கொண்டுவருகின்றதென்றும், திருமுழுக்கு ஒருவகை அடக்கச் சடங்கு என்றும் வித்தியாசமான பாவனையில் விளங்கப்படுத்துகிறார்
உரோமையர்கள் கிறிஸ்துவோடு உயிர்க்க வேண்டும் என்றால் அவர்கள் அவரோடு இறக்க வேண்டும் என்பது கட்டாயம் என்கிறார். பவுல் இங்கு உருவகங்களை கையாள்கின்றார் என்பதை அவதானமாக நோக்க வேண்டும். திருமுழுக்கை ஒரு வகையான மாய வித்தையாக தவறாக கண்ட உரோமையருக்கு திருமுழுக்கு ஒரு திருவருட்சாதனம், அத்தோடு அது வாழப்படவேண்டும் என்கிறார். மாற்றம் இல்லாமல் திருமுழுக்கினால் பயன் இல்லையென்று காட்டமாகவும் சொல்கிறார்
பாவ வாழ்கை சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது (ὅτι ὁ παλαιὸς ἡμῶν ἄνθρωπος συνεσταυρώθη, ஹொடி ஹொ பலாய்யொஸ் ஹேமோன் அந்த்ரோபொஸ் சுன்னெஸ்தாவ்ரோதே - நம்முடைய பழைய மனிதம் சிலுவையில் உடன் அறையப்பட்டுள்ளது) என்ற உருவகத்தின் வாயிலாக கிறிஸ்தவர்கள் பாவ வாழ்க்கையை வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை முன்வைக்கிறார். இறந்தோர் பாவத்திலிருந்து விடுதலையடைந்துவிட்டனர் என்ற வரிகளின் ஊடாக, பவுல் சிலருக்கு உயிர்ப்பு எற்கனவே கிடைத்துவிட்டது என நம்பினாரா என எண்ணத்தோன்றுகிறது. இவரின் வாதங்களை ஒரு இறையியல் வளர்ச்சியாகவே காணவேண்டும். பாவம் என்பது மரணம், வாழ்வு என்பது உயிர்பு என்ற சிந்தனையே இங்கே நோக்கப்படவேண்டியது. பவுலுடைய உயிர்ப்பு மற்றும் திருமுழுக்கு போன்ற வாதங்களை விளங்கிக்கொள்ள திருமுகங்களை அவற்றின் பின்புலத்திலும், எழுதப்பட்ட காலநிலைகளுக்கும் ஏற்றபடி வாசிகக் வேண்டும்

நற்செய்தி
மாற்கு 16,1-7
1ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். 2வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். 3'கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?' என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். 4ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். 5பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். 6அவர் அவர்களிடம், 'திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். 7நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்' என்றார். 8அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.

இந்த பகுதிதான் மாற்கு நற்செய்தியின் ஆரம்ப கால முடிவுப் பகுதி என்று நம்பப்படுகிறது. பிற்காலத்தின் வசனங்கள் 9-20 சேர்க்கப்பட்டன என்று வாதாடப்படுகிறது. இயேசுவின் உயிர்;ப்பு நிகழ்ச்சிகளை ஏன் மாற்கு தவிர்த்தார் என்பது பலருடைய மேலார்ந்த கேள்வி. மாற்கு நற்செய்தி முதல் நற்செய்தி என்படியாலும், மாற்குவிற்கு இயேசுவின் உயிர்ப்பை ஒரு பணிவிடையோடு (பெண்களுக்கு கொடுக்கப்பட்ட) காட்ட வேண்டும் என்ற தேiவியருந்ததாலும், அதனை அப்படியே விட்டுவிட்டார் என்பது ஒரு சார்பான வாதம்

.1: ஓய்வுநாள் முடிவடைந்தது என்றால் அது ஞாயிறாக இருந்திருக்க வேண்டும். இந்த தினத்தில் சில பெண்கள், மகதலா மரியா (Μαρία ἡ Μαγδαληνὴ மரியா ஹே மக்தாலேனே), யாக்கோபின் தாய் மரியா (Μαρία  ἡ [τοῦ] Ἰακώβου மரியா ஹே டூ இயகோபூ), மற்றும் சலோமி (Σαλώμη ட்சாலோமி) ஆண்டவருடைய கல்லறையை நோக்கி வருகின்றனர். இந்த நாள் ஓய்வுநாள் அல்லாதபடியால், அவர்களுக்கு தாங்கள் விரும்பியவற்றை செய்ய சுதந்திரம் இருந்திருக்கிறது எனலாம்
வாரத்தின் முதல்நாளில் வணிககூடங்கள் திறந்திருந்திருக்கலாம், இதனால் அவர்களால் நறுவமணத் தைலம் வாங்க முடிகிறது (ἄρωμα அரோமா). இது ஒரு விலையுயர்ந்த தைலம்
இதனை இயேசுவின் இறந்த உடலில் பூச அவர்கள் வாங்குகின்றார்கள். இயேசு உயிர்த்துவிடுவார் என்று இவர்கள் நம்பியிருந்தால், இவற்றை வாங்கியிருக்க மாட்டார்கள் எனலாம். இருப்பினும், அவர்கள் இயேசுவை மிகவே அன்பு செய்தார்கள் என்பது தெளிவாகிறது. இயேசுவின் பெண் சீடர்கள் அவரோடு என்றுமே இருந்திருக்கிறார்கள், ஆண் சீடர்கள் அவரை விட்டு ஓடியும், அல்லது பயத்தால் பின்வாங்கியபோது, இவர்கள் எப்போது முன்னுதாரணமாகவே இருக்கிறார்கள். இந்த நிகழ்வு அனைத்து நற்செய்திகளிலும் தெளிவாக சொல்லப்படுகிறது

.2: இவர்கள் ஞாயிறு, அதாவது வாரத்தின் முதன் நாளில் கதிரவன் எழுவதற்கு முன்பே கல்லரைக்கு செல்கிறார்கள். இவர்கள் ஓய்வுநாள் முடியவேண்டும் என்று காத்திருந்தார்கள், சூரியனின் உதயத்திற்காக காத்திருக்கவில்லை. இவர்களின் அவசரமும், இயேசு மேல் இருந்த ஆழமான அன்பும் தெளிவாக தெரிகிறது

.3: யூதர்கள் தங்கள் கல்லரைகளை குகைளிலும் அமைத்தார்கள். அந்த குகைகளை பெரிய கற்களால் மூடினார்கள். உடல்கள் சுற்றப்பட்டடு குகைகளுள் வைக்கப்பட்டன. உடல்களின் துர் நாற்றத்தை குறைக்கவும், அவை விரைவாக பூச்சிகளால் உண்ணப்படவும் அவற்றிக்கு தைலங்கள் பூசினார்கள். சில மாதங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த உடல்களின் மிகுதியாக இருக்கும் எலும்புகளை சேகரித்து குகையினுள் ஒரு இடத்தில் வைத்தார்கள். சதையை விட எலும்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யூதர்கள் அடிப்படையில் உயிர்ப்பையோ அல்லது மறுவாழ்வையோ நம்பவில்லை. கிரேக்க சிந்தனையின் வருகையினாலும், எபிரேய சிந்தனையின் வளர்ச்சியினாலும், யூதர்களின் ஒரு பிரிவு (பரிசேயர்) மறுவாழ்வை நம்பியிருக்க வேண்டும்
இயேசுவின் காலத்தில் இந்த பரிசேயர்கள் முக்கியமான ஒரு குழுவாக இருந்தார்க்ள
இயெசு எருசலேமிற்கு வெளியே கிதரோன் பள்ளத்தாக்கில், அரிமத்தியா யோசேப்பின் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் என்று மற்றைய நற்செய்திகளும், பாரம்பரியங்களும் சொல்கின்றன. நிச்சயமாக கல்லறையின் கல்லை அக்கால யூத பெண் ஒருவரால் புரட்ட முடியாது எனலாம். ஆக, யார் நமக்காக கல்லறையின் கல்லை அகற்றுவார் என்பது நியாயமான கேள்விதான் (λίθον ἐκ τῆς θύρας τοῦ μνημείου; லிதோன் எக் டேஸ் தூராஸ் து ம்னேமெய்யூ- கல்லறையின் வாயிற் கல்). 

.4: அவர்கள் உற்று நோக்கியபோது அந்த பெரிய கல் (μέγας σφόδρα மெகாஸ் ஸ்பொர்தா- மகி பெரிய அளவு) ஏற்கனவே புரட்டப்பட்டிருக்கிறது
உற்று நோக்கினார்கள் என்று சொல்லி, இந்த தகவல்களை ஒரு படம் போல காட்டுகிறார், அத்தோடு அவர்களின் பார்வையில் பிழையில்லை என்பதையும் பதிவுசெய்கிறார் மாற்கு நற்செய்தியாளர்

.5: இது வித்தியாசமான வரி. இந்த பெண்கள் கல்லறைக்குள் சென்று விடுகிறார்கள் (εἰσελθοῦσαι εἰς τὸ μνημεῖον எய்செல்தூசாய் எய்ஸ் டொ ம்னேமெய்யோன்- கல்லறைக்குள் நுழைந்தார்கள்). 
இந்த வரி இவர்களை தைரியமான பெண்களாகக் காட்டுகிறது. இவர்கள் கால பெண்கள் இந்த செயலை செய்ய துனிந்திருக்க மாட்டார்கள்
உள்ளே சென்றவர்கள் வெள்ளை தொங்கல் ஆடை அணிந்திருந்த இளைஞர் ஒருவரைக் காண்கிறார்கள். யார் இந்த இளைஞர்? (νεανίσκος நெயாநிஸ்கொஸ்-இளைஞன்) மாற்கு இவரை ஏன் வானதூதர் என்று சொல்வதை தவிர்க்கிறார்? இவர் நிச்சயமாக இயேசுவின் சிடராக இருக்க முடியாது, அல்லது அவருடைய தீருத்தூதரில் ஒருவராகவும் இருக்க முடியாது. அவர் அனைவரும் இப்போது ஒளிந்திருக்கிறார்கள் அல்லது பயத்தில் உறைந்திருக்கிறார்கள். இவருடைய வெண்மையான ஆடை (στολὴν λευκήν ஸ்டொலேன் லெயுகேன்- வெண்னிற ஆடையில்), இவரை சாதாரண மனித ஆள் இல்லை என்பதையும், அவருக்கு தெய்வீக தொடர்பு இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. இவர் வலப்பக்தத்தில்தான் அமர்ந்திருக்கிறார், அது அவர் வெற்றியின் அடையாளமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது (δεξιοῖς தெக்ட்சியொய்ஸ்-வலக் கை). விவிலியத்தில் வெண்மை மற்றும் வலப்புறம் வெற்றியின் அடையாளங்கள். இந்த அடையாளங்களை தானியேல் புத்தகம் மற்றும் திருவெளிப்பாடு புத்தகம் போன்றவை அதிகமாக பாவிக்கின்றன
மாற்கு நற்செய்தியில் இந்த வெண்ணிற ஆடைய இளைஞருடைய இருப்பு, இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும், இருப்பினும் இவர்கள் திகில் அடைகிறார்கள். இந்த திகில் மாற்கு நற்செய்தியில் எதிர்மறையான பண்பு என்பது நோக்கப்படவேண்டும் (ἐξεθαμβήθησαν எக்செதாம்பேதேசான்- பயந்தனர்). 

.6: வெண்ணிற இளைஞரின் முதலாவது அறிவுரை: பயப்படவேண்டாம் என்கிறார் (μὴ ἐκθαμβεῖσθε மே எக்தாம்பெய்ஸ்தே). பல இடங்களின் மக்கள் திகிலடைகின்ற போது ஆண்டவர் இதனைத்தான் சொல்வார். இவர்களுடைய பயத்திற்கான காரணம், ஆண்டவர் இயேசுவுடைய உடல், அதனை அவர்கள் தேடுகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்கிறார் (Ἰησοῦν ζητεῖτε  τὸν Ναζαρηνὸν τὸν ἐσταυρωμένον· ஈயேசூன் ட்சேடெய்டெ டொன் நாட்சாரேனொன் டொன் எஸ்டாவ்ரோமென்னொன்- சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தூர் இயேசுவை தேடுகிறீர்கள்). அவர் இங்கே இல்லை என்கிறார் (οὐκ ἔστιν ὧδε· ஊக் எஸ்டின் ஹேதெ- அவர் இங்கில்லை).  இயேசு கல்லரைக்குரியவர் அல்ல என்ற ஆழமான செய்தி சொல்லப்படுகிறது
அவர் உயிர்த்துவிட்டார் என்பதுதான் மாற்கு நற்செய்தி மற்றும் அனைத்து நற்செய்திகளினதும் செய்தி (ἠγέρθη எகெர்தே-உயிர்த்தார், உயிர்ப்பிக்கப்பட்டார்). 'உயிர்க்கப்பட்டார்' என்ற சொல் பல வாதகங்களை மொழியியலாளர்களுக்கு நிச்சயமாக உருவாக்கும், சாதாரண விசுவாசிகளுக்கல்ல. இயேசு உயிர்ப்பிக்கப்பட்டார் என்பதற்று கிரேக்க விவிலியம், மூன்றாம் ஆள், ஒருமை, இறந்தகால செயற்பாட்டு வினையை பாவிக்கிறது (ἐγείρω எகெய்ரோ-உயிர்ப்பி). இதற்கு இயேசு விண்ணக தந்தையால் உயிர்ப்பிக்கப்பட்டார் என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால் இயேசுவின் மேல் இன்னொருவர் ஆதிக்கம் செலுத்துகின்றாரா? என்ற கேள்வி வரும். இயேசுவின் பாடுகள் மரணம் மற்றும் உயிர்ப்பு போன்றவற்றில் விண்ணக தந்தை முதலாவது ஆளாக செயற்படுகிறார் என்பது கத்தோலிக்க விசுவாசம். ஆக இங்கே இயேசுவின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று எடுக்க முடியாது. இதனை இறைதிட்டம் என்றே எடுக்க வேண்டும்
இயேசு உயிர்த்;தார் என்பதற்கு அடையளாமாக அவருடைய உடல் இருந்த வெற்றிடத்தை அடையாளமாக காட்டுகிறார் அந்த வெண்ணிற இளைஞர் (ἴδε ὁ τόπος இதெ ஹொ டொபொஸ்-இதோ அந்த இடம்). 

.7: இரண்டாவது கட்டளை கொடுக்கப்படுகிறது. அவர்களை புறப்பட்டுச் செல்லச் சொல்கிறார் (ὑπάγετε ஹுபாகெடெ- புறப்படுங்கள்). இறந்த ஆண்டவருக்கு பணிவிடைசெய்வதைவிடுத்து, உயிர்த்த ஆண்டவரை அறிவிக்கச் சொல்கிறார் அந்த இளைஞர்
ஆண்டவர் எருசலேமில் மரணிக்கவில்லை மாறாக அவர் கலிலேயாவிற்கு சென்றுகொண்டிருக்கிறார். கலிலேயாவில்தான் ஆண்டவரின் பணி தொடங்கியது, அந்த பணி 
இப்போது மீண்டும் தொடங்குகிறது என்பதை இது குறிக்கலாம். இயேசு சீடர்களுக்கு முன்பே சென்றுகொண்டிருக்கிறார், ஆக அவர் சொல்வதை செய்யும் ஆண்டவர் என்பது இங்கே புலப்படுகிறது. ஆண்டவரை காணவேண்டுமா, இந்த எருசலேம் கல்லறையில் அவர் இல்லை, மாறாக அவர் கலிலேயாவில் இருக்கிறார் என்பது இதன் பொருளாக எடுக்கப்படலாம் (αὐτὸν ὄψεσθε, καθὼς அவுடொன் ஒப்பிஸ்தே, காதோஸ்- அவரை அங்கே காண்பீர்கள்). 
இந்த செய்தி, பெண்கள் மூலமாக பேதுருவிற்கும், சக சீடர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. பெண்கள் அக்காலத்தில் முக்கியமான செய்திகளை கொடுக்க தகுதியில்லாதவர்கள் என கருததப்பட்டார்கள் அவர்களுக்குத்தான் இந்த முக்கியமான செய்தி கொடுக்கப்படுகிறது

.8: பெண்களின் செயற்பாடு விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த பெண்களுக்கு கடவுள் உயர்ந்த 
இடத்தைக் கொடுக்கிறார், இருப்பினும் அவர்கள் சாதாரண பெண்களைப்போலவே செயற்படுகிறார்கள். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்க்ள (ἔφυγον எபுகொன்-ஓட்டம்பிடித்தார்கள்). நடுக்கமுற்றார்கள், யாரிடமும் எதுவும் பேசாமல் மெய்மறந்தார்கள், அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். இவையனைத்தையும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் கொண்டிருக்காமல், நம்பிக்கையோடு வீரமுள்ளவர்களாய் கிறிஸ்துவின் உயிர்ப்பை பறைசாற்ற வேண்டும் என்று மார்க்கு விரும்புகிறார் என்பது தெரிகிறது
மாற்கு இந்த இடத்தில் நற்செய்தியை முடிக்கிறார். பல முக்கியமில்லாத படிவங்கள் இதற்கு பின்னர் சிறிய முடிவுரை ஒன்றையும், பெரிய முடிவுரை ஒன்றையும் தருகிறது. அதனை தமிழ் விவிலியமும் கொண்டிருக்கிறது. மாற்கு ஏன் இந்த இடத்தில் திடீரென நற்செய்தியை முடிக்கிறார் என்பதற்கு பல காரணங்கள் மற்றும் இறையியல் வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகின்றன. இயேசு உயிர்த்துவிட்டார், அதனை அறிவிக்க வேண்டியது, அனைவரினதும் கடமை, அதனை முதலில் 
இந்த பெண்கள் செய்ய தயங்கினார்கள், பின்னர் செய்தனர். அதனைத்தான் வாசகர்களும் செய்ய வேண்டும் என்பது செய்தியாக தரப்படுகிறது என்பது வாதங்களில் ஒரு வாதம்

நம்முடைய ஆண்டவர் இறந்தாலும், அவர் கல்லறையில் இல்லை
வெறுமையான கல்லறை அவர் உயிர்ப்பின் அடையாளம்
ஆண்டவருக்கு தைலம் பூசுவதை விட
அவர் உயிர்ப்பினை அறிக்கையிடுவது முக்கியமானதாகிறது
அதனைத்தான் அவரும் விரும்புகின்றார்
பக்தி முயற்ச்சிகள் முக்கியமானவை
இருப்பினும் அவை மறைபரப்பாக மாற வேண்டும்

அன்பு ஆண்டவரே
உமது உயிர்பை அனுபவிக்கவும்
அதனை அறிவிக்கவும் வரம் தாரும், ஆமென்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு (ஆ) (08.09.2024)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு ( ஆ ) (08.09.2024) முதல் வாசகம் : எசாயா 35,4-7 பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 146 இர...