சனி, 29 டிசம்பர், 2018

‘திருக்குடும்ப விழா, நல்லதொரு குடும்பம் செய்வோம்’ Feast of the Holy Family 2018





கிறிஸ்து பிறப்பு எண்கிழமை, ஞாயிறு
திருக்குடும்ப விழா, நல்லதொரு குடும்பம் செய்வோம்
A Commentary on the Sunday Readings

மி. ஜெகன்குமார் அமதி
சங்கமம், அமதிகள் ஆன்மீக மையம்
கோப்பாய், யாழ்ப்பாணம்.
Saturday, December 29, 2018
முதல் வாசகம்: 1சாமுவேல் 1,20-22.24-28
திருப்பாடல் 84,1-2.4-5.8-9
இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2.21-24
நற்செய்தி: லூக்கா 2,41-52


1சாமுவேல் 1,20-22.24-28
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஷநான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்| என்று சொல்லி, அவர் அவனுக்குச் ஷசாமுவேல்| என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை.
அவர் தம் கணவரிடம், பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.
பின் அவர் கூறியது: ஷஷஎன் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.|| அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

. சாமுவேல்
உண்மையில் சாமுவேலின் பெயரின் அர்த்தம் என்ன? என்பது சில விவிலிய ஆய்வாளர்களின் தேடல், இங்கே ஓர் அழகான ஷசெம்மொழி சிலேடையை| பாவிக்கிறார் ஆசிரியர். שְׁמוּאֵל (ஷெமுஎல்) என்கின்ற சொல் வழக்கம் போல் மூன்று மெய்யெழுத்துக்களைக் கொண்டமைந்துள்ளது அவை, שׁמא செவிமெடு| என்று பொருள், ஷவரம் கேள்| என்பதற்கு שָׁאַל ஆக வரவேண்டும், இப்படிவந்தால் அது ஆசிரியருடைய கருத்தையோ, பெயரையோ குறிக்காது, சிலர் உண்மையில் இது சவுல் அரசரைக் குறிக்கிறது என்பர், ஆனால் இந்த வாதத்துக்கு அதிக வாய்ப்பு இக்கதை அமைப்பில் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம், ஆசிரியர் இங்கே இறைவாக்கினர் சாமுவேலைத்தான் குறிக்கிறார், அவருடைய பெயரின் அர்த்தமும், எழுத்தும் ஒத்துப்போகவில்லை.

. ஆனால் அன்னா செல்லவில்லை:
முழு குடும்பமும் யாத்திரை செல்லும் போது அன்னா செல்லவில்லை என்பதைக் காட்டி, அக்கால பெண்களின் தனிமனித சுதந்திரத்தை காட்டுகிறார். அன்னாவிற்கு ஆலயத்தைவிட வீட்டில் முக்கியமான வேலை இருப்பதை உணர்கிறார்

. அன்னாவின் கட்டளை:
அன்னா இங்கே தன் கணவரிடம் இரஞ்ச வில்லை, சம உரிமையோடு பொறுப்பாக பேசுகிறார். முடிவையும் அவரே எடுக்கிறார். 23வது வசனம் (இன்றைய வாசகத்தில் இல்லை) நல்ல கணவனின் பண்பைக் காட்டுகிறது. ஏற்கனவே அன்னா எடுத்த முடிவை மதிக்கிறார், எல்கானா
(பி.கு. கணவனை அரசனாகவோ-அதிகாரியாகவோ அல்லது மனைவியை சண்டைக்காரியாகவோ பார்க்கும் சிலருக்கு இவர்கள் நல்ல பாடம் சொல்கின்றனர்).

. பலிப்பொருட்கள்:
வழமையாக பலிப்பொருட்களை ஆண்களே கொண்டுவருவதனைப் பார்க்கிறோம், இங்கு அன்னாதான் பலிப்பொருள்களைக் கொண்டுவருகிறார். அவர்தான் இங்கே கதாநாயகி. பலிப்பொருட்களில் அக்கால கட்டளைப்படி பொருட்களைக்கொண்டு வருகிறார் (மாவு, இரசம், காளை). மூன்று காளைகளைக் கொண்டுவந்தாரா? அல்லது மூன்று வயது காளையைக் கொண்டுவந்தாரா? என்பது தெளிவாக இல்லை. எபிரேய விவிலியம் காளைகள் என்று சொல்லி பின் காளை என்று சொல்கிறது

. சீலோ இல்லம்:
வட நாட்டில் இருந்த இந்த ஆண்டவரின் இல்லம், அரசர்கள் காலத்திற்கு முந்தியது, இங்கே ஆண்டவரின் சந்திப்புக் கூடாரமும், ஒரு பலிப்பீடமும் இருந்ததென்பர். ஆரோனுடைய குருத்துவத்தோடு தொடர்புபட்ட இந்த இடம், பெத்தேலை ஒத்தது. தாவிதினுடைய எழுச்சியும், எருசலேம் ஆலயத்தின் வருகையும் பிற்காலத்தில் இந்த இடத்தை அதிகாரபூர்வமற்ற வழிபாட்டிடமாக்கியது. வடநாட்டுக்காராக்களும், சவுல் மன்னரும் இவ்விடத்தை பெரிதும் மதித்தனர். இங்கே நிச்சயமாக ஆண்டவரின் பிரசன்னம் இருந்ததை விவிலியம் காட்டுகிறது. ஆண்டவர் சாமுவேலிடம் போசியதும் இங்கேதான்

. ஏலியிடம்:
ஏலி இங்கே பணிபுரிந்த குரு, ஒரு நீதிபதியாகவும் கருதப்பட்டார் (1சாமு 4,18), பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்காத தகப்பனாக விவிலியம் இவரைக் காட்டுகிறது (1சாமு 2,12), அன்னா அவசரப்பட்டு தவறாக கருதுகிறார். அன்னா ஏலியை மரியாதையுடனே பார்கிறார், தனது வாக்கினையும் நிறைவேற்றுகிறார்
(தங்களைத் முதலில் திருத்தாமல், அவசரப்பட்டு மற்றவருக்கு முடிவெடுக்கும் குருக்களுக்கும், மௌனமாக நற் பாரம்பரியங்களை கற்பிக்கும் அன்னையர்க்கும் இவர்கள் நல்ல உதாரணங்கள்)

. ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவன்:
சிலர் இவ்வர்ப்பணிப்பை ஷநாசிரேத்து| அர்ப்பணிப்பாக கருதுகின்றனர் ஆனால் பாடம் இவ்வாறு சொல்லவில்லை (சிம்சோன் ஓர் நசிரேத்துவாக அர்ப்பணிக்கப்பட்டவர்). சில ஆய்வாளர்கள், இங்கே ஆசிரியர் சவுல் மன்னனையும் அவரது பிரமாணிக்கமில்லா அழைப்பையும் சாடுவதாக இக்காட்சிகளைக் காண்கின்றனர். வசனங்களை ஆராய்ந்தால் அவை சாமுவேலையே குறிக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால் ஏலியின் மைந்தர்களை கடவுள் புறக்கணித்தது போல சாமுவேலின் மைந்தர்களையும் புறகணித்தார், அவர்களின் தீவினையின் பொருட்டு (1சாமு 8,1-3), சவுலையும் புறக்கணித்தார். தலைவர்கள்; யாராக இருந்தாலும், வழுவினால் புறக்கணிக்கப்படுவார்கள்!

திருப்பாடல் 84,1-2.4-5.8-9
பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.

1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது
2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.

8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்
9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்.

இது ஒருவகை எருசலேம் திருப்பயண திருப்பாடல் அல்லது சீயோன் பாடல். கோராவினுடைய அல்லது கோரா பிரிவினரால் எழுதப்பட்ட பாடல்களில் ஒன்று எனக்கொள்ளலாம். எருசலோம் ஆலயத்தை, பலவகை பெயர்களால் (முற்றம், வாயில், பீடம், இல்லம், சீயோன்) அலங்கரிப்பதனால், ஆசிரியரின் எருசலேம் மீதான காதல் புரிகிறது.

1-2: உலகில் எத்தனை வகை இன்பங்கள் இருந்தாலும் தனது ஆன்மாவும், இதயமும், சதையும் வாழுகின்ற ஆண்டவரின் இல்லத்திற்காக ஏங்கிப் பாடுவதாக கூறுகிறார்.

4-5: ஆசிரியர் ஆண்டவர் இல்லத்தில் தொடர்ந்து இருக்கும் குருக்களில் வியப்படைகிறார். சீயோனிற்கான பாதைகள் இதயத்தில் பதிந்துள்ளது என்கிறார். அதனையே தமிழில் ஷஷஉள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது|| என்று மொழிபெயர்கப்பட்டு;ள்ளது

8ல்: ஒருபோகு நிலை (இருசொல் இயைபணி) பாவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். படைகளின் ஆண்டவர்-யாக்கோபின் கடவுள் (אֱלֹהִים צְבָאוֹת - אֱלֹהֵי יַעֲקֹב  எலோஹிம் ட்சபாஒத் - எலோஹே யா|கொப்)

9ல்: திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்பது, இடப்பெயர்வுக்கு முன் அரசர்களைக் குறித்திருக்கும், பின்னர் தலைமைக்குருக்களையோ அல்லது மக்களின் பிரேதேச தலைவர்களையோ குறித்திருக்கும்.


இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2.21-24

1.அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. 2.என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்
21.அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.
22.அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

அமைப்பிலும் இறையியலிலும் யோவான் நற்செய்தியை ஒத்திருக்கும், யோவானின் மடல்கள் மிகவும் ஆழமான வரிகளைக் கொண்டவை. திருமுகங்கள் என் அழைக்ப்பட்டாலும் ஷயாருக்கு| ஷயாரால்| போன்ற திருமுக பன்புகளை இங்கே காணமுடியாது. கிறிஸ்தவம் ஷஅறிவுவாதிகள்| என்னும் ஒரு பிரிவினருடைய போதனைகளால் தாக்கப்பட்டபோது இந்த மறையுறை தொகுப்புக்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

.1: τέκνα θεοῦ κληθῶμεν  καὶ ἐσμέν: கடவுளுடைய பிள்ளைகளாக அழைக்கப்படலாம் ஆக அவ்வாறே இருக்கிறோம்| யோவான் குடும்பத்திற்கே உரிய சொற்பிரயோகம். யோவான் கிறிஸ்தவர்களை கடவுளுடைய பிள்ளைகள் என்று சொல்வதன் மூலம் எல்லாவிதமான வேற்றுமைகளையும் தகர்க்க முயல்கிறார்
ὁ κόσμος கொஸ்மோஸ், உலகம் என்று யோவான் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மிகவும் சாதூர்தியமாக இருக்கும். இது இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களையோ, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களையோ, யோவானின் திருச்சபைக்கு ஏதிரான கருத்துக்களை பரப்பியவர்களையோ அல்லது அறிவுவாதிகளையோ குறிக்கலாம்

.2. இன்னும் வெளிப்படவில்லை: (οὔπω ἐφανερώθη ஊபோ எபானெரோதே) இது அக்கால திருச்சபைக்கு பெரிய சிக்கலாகவே இருந்தது. சிலர் ஆண்டவர் வந்துவிட்டார் அங்கே இங்கே என்று பல கதைகளைச் சொன்னதால் யோவானுக்கு தன் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இயேசு இரண்டாம் முறை வரும்போது எப்படி இருப்பார் எனும் கேள்விக்கு (ὀψόμεθα αὐτόν καθώς ἐστιν ஒப்ஸ்சோமெதா அவ்டொன், காதோஸ் எஸ்டின்) ஷஅவரைப் பார்ப்போம், அவர் இருப்பதைப் போல| என்று பதிலலிக்கிறார். யோவான், கடவுள் மோயிசனுக்கு வெளிப்படுத்தியதை இங்கே ஞாபகப்படுத்துகிறார் என நினைக்கிறேன் (காண். வி. 3,14: 
אֶהְיֶה אֲשֶׁר אֶֽהְיֶה  'எஹ்யேஹ் 'அஷேர் 'அஹ்யேஹ-; இருந்து கொண்டு இருக்கிறார் அவர் இருந்துகொண்டு இருக்கிறார்). இருத்தல் என்ற எபிரேய வினைச் சொல்லுக்கும், எபிரேயர்கள் கடவுளுக்கு பிரத்தியோகமாக பாவிக்கும் சொல்லிற்கும் தொடர்ப்பு இருக்கிறது

.21. மனச்சான்று என்று யோவான் இதயத்தையே இங்கு குறிப்பிடுகிறார் (καρδία கார்தியா) இங்கே ஒரு எதிர்காலத்திலே பேசுகிறார். ஆக மற்றவருடன் வாதிடுவதன் முன் ஒருவர் தன்னில் சரியாக இருக்கவேண்டும் என்பது நியதி.

.22. கட்டளைக் கடைப்பிடிப்பதும் கடவுள் விரும்புவதைச் செய்வதும் ஒன்று எனும் வாதம் மீண்டும் மீண்டும் யோவான் நற்செய்தியில் வருவதை இங்கு நோக்க வேண்டும்.

.23-24. அந்த கட்டளை எது என்று விளக்கம் தரப்படுகிறது. இயேசுவை நம்புதலும், ஒருவர் மற்றவரை அன்பு செய்தலுமாகும். (ஒப்பிடுக: யோவான் 12,49: 13,34: 14,15: 14,21: 15,10: 15,12) ஷஆண்டவரோடு இணைந்திருத்தல்(μένω மெனோ) என்பது யோவானுடைய 
இன்னுமொது இறையியல் வாதம்



நற்செய்தி: லூக்கா 2,41-52
41.ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். 42. இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். 43. விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது. 44. பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;. 45.அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். 46. மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். 47. அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 48. அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ஷஷமகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே|| என்றார்.
49. அவர் அவர்களிடம், ஷஷநீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?|| என்றார். 50. அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 51. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். 52. இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.


.41. இயேசுவினுடைய பெற்றோர் யூத சமய சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாய் 
இருந்ததைக் காட்டுகிறது. யூத ஆண்கள் மூன்று விழாக்களை கடைப்பிடித்தனர், பாஸ்கா விழா அவற்றுள் முக்கியமானது. எருசலேமிற்கு போதல் என்பது யூதருக்கு தவிர்க்க முடியாத கடமை, திருப்பாடலில் அதனை அவதானித்தோம். இயேசுவிற்கும் நல்ல யூதனாக எருசலேம் மீதான காதல் இருந்தது

.42. தமிழர்களுக்கு பெண்பிள்ளைகள் முக்கியமானவர்கள் என்பதைப் போல் யூதர்களுக்கு ஆண் பிள்ளைகள் மிக முக்கியமானவர்கள். 12வயது ஆண் பிள்ளைகள் சமய சடங்குகளை செய்ய தகுதி அடையும் வயதாக அறியப்படுகிறது. அதனை அவர்கள் பார் மிட்ஸ்வா בַּר מִצְוָה என்று அழைக்கிறார்கள். நமது மொழியில் சொன்னால், இயேசு ஆண்டவர் வயசுக்கு வந்த நாள்

.44. எருசலேம் சுமார் 25,000 மக்களைக் கொள்ளக்கூடிய நகர் பாஸ்காவிழாவின் போது நிரம்பி வழிந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே வருவார்கள். உரோமைய அரசாங்கத்திற்கு அது பிடிக்காத நாள். பலர் கலவரமும் செய்வார்கள். இதனால் பலர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக உறவினர்களை நாடுவது வழக்கம். ஆகவேதான் உறவினர்களிடம் தேடினர் என்று லூக்கா சொல்லுகிறார்

.45. எருசலேமிற்கு திரும்பினர் என்று இந்த திருக்குடும்பத்தின் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒரு நாள் இதே எருசலேமில் தம் மகனை இழப்பர் என சொல்லாமல் சொல்லுகிறார் போல.

.46. மூன்று நாட்களுக்கு பின் கோவிலில் கண்டார்கள்: மூன்றாவது நாள் என்றும் பொருள் படும் (μετὰ ἡμέρας τρεῖς மெடா ஹேமெராஸ் ட்ரெய்ஸ்), லூக்கா இங்கே மூன்று என்னும் இலக்கத்துடன் விளையாடுவது போல தோன்றுகிறது. இயேசு இறந்த பின்னர், (லூக் 9,12: 18,33: 24,7: 24,46) இவ்வாறே மூன்றாம் நாள் உயிர் பெறும் இம்மரியின் மைந்தனை யாரும் தொலைக்க முடியாது என்பதைப் போல

.46-47. இயேசுவை ஆலயத்தில் முதியவர்களின் நடுவில் காண்பதும், ஆச்சரியப்படுவதும், தானியேலை பெரியவர்கள் நடுவில் கண்டதை ஞாபகப்படுத்துகிறது. தானியேல் சமூக முதியவர்கள் நடுவில் இருந்தார், இயேசுவோ ஆசிரியர்கள் நடுவில் இருக்கிறார். (διδασκάλων திதாஸ்கலோன்), இங்கே அவர்களுக்கு போதித்தார் என்று எடுக்க முடியாது மாறாக அவர் நல்ல யூத சிறுவனாக, அறிவில் இருந்தார், சமய பற்றோடு இருந்தார் என எடுக்கலாம். கேட்டவர்கள் மலைத்துப்போயினர் என்பதனால் இயேசு வயதையும் தாண்டிய அறிவாளியாக சிறு வயதிலே இருந்தார் என உலக தலைவர்களைப் சொல்வதைப்போல மேலாக சொல்கிறார் லூக்கா

.48. அன்னை மரியாவுடைய கேள்வி எம்மை பல கேள்விகள் கேட்க வைக்கிறது. லூக்காவுடைய மரியா சாதாரன மரியா அல்ல, அவர் ஆண்டவரின் தாய். இங்கே லூக்கா மரியாவை ஒரு பொறுப்புள்ள நல்ல தாயாக காட்டுகிறார், அல்லது இயேசு முழுமையாக மனிதாராகவும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது

.49. இயேசுவினுடைய பதில், செல்லமாக மரியாவை மங்கள வாழ்த்து நிகழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. மரியாவுக்கு மீண்டும் இயேசு, தாம் யார் எனச் சொல்கிறார். பிறப்பிலே குழந்தைகள் தனித்துவமானவர்கள் என்பதை ஒவ்வொரு தாயாரும் உணர வேண்டும் என தனது அன்புத் தாயாருக்கு சொல்கிறார் ஆண்டவர்.

.50. ஆண்டவரின் தாயாரால் கூட புரிய முடியாத நிகழ்வுகளும் உண்டு என லூக்கா பதிவு செய்கிறார். அனைத்திற்கும் பதில் அளிப்பவரும், அனைத்தையும் புரிந்துகொள்பவரும்தான் ஞானியர் என்றில்லை என்கிறார் லூக்கா. மரியா மான்புள்ள யூத தாய் என்பது இவ்வாறு விளங்குகிறது.

.51. இந்த வசனம் அன்னை மரியாவை இன்னொரு முறை பெண்களுக்கெல்லாம் முதல் பெண்னாக காட்டுகிறது. இதனையே மரியா 2,19உம் செய்தார்ஷஅவர் தனது இதயத்தில் சேர்;த்து வைத்தார்| என் கிரேக்க மூல பாடம் சொல்கிறது (ἡ μήτηρ αὐτοῦ διετήρει πάντα τὰ ῥήματα ἐν τῇ καρδίᾳ ஹே மேடேர் அவ்டூ தியடேரெய் பான்டா டா ஹ்ரேமாடா என் டே கார்தியா) மரியாவின் மாட்சியை அறியாதவர்கள் இவ்வார்த்தைகளை வாசித்து தெளிய வேண்டும்.

.52. இவ்வசனம் இயேசுவின் முழுமனித வளர்ச்சியைக் காட்டுகிறது. இயேசுவின் மீட்புப்பணிக்கு இவ்வசனம் சாட்சி. பிள்ளைகள் அறிவிலும், அளவிலும் வளரவேண்டும், அத்தோடு கடவுள்-மனித அருளைப் பெறவேண்டும், இயேசுவைப்போல

இன்று நாம் காணும் மரியாவும் அன்னாவும் உதாரணமான அன்னையர்கள்
தமிழர் பண்பாடும், கலாச்சாரமும் பெண்மையை முதன்மைப்படுத்துவபையே
அதனையே நம்முடைய மொழியின் சொற்களும்
இலக்கியங்களும் சொல்கின்றன
வேற்று நன்பர்களின் சிந்தனைகளும் மதங்களும்
தமிழர் பண்பாட்டை ஆணாதிக்க சமூகமாக மாற்றிவிட்டன
இதற்கு நம்முடைய சமயங்களின் சில கொள்கைகளும் காரணம்
சமய மடமைகளைத் தாண்டி நம் தமிழ் பெண்ணை மீட்க வேண்டும்
பாரதியின் புதுமைப் பெண்ணை விடுவிக்க வேண்டும்

ஒழுக்கமான குடும்பம், பல்கலைக் கழகம்,
ஒழுக்கமற்ற குடும்பம்
தீமைகளின் தொழிற்சாலை

நல்லதொரு குடும்பம் அமைக்க பெண்களை அவர்களின் இடத்தில் வைக்க ஆண்டவர் எமக்கு ஆசீர் தருவாராக! ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...