வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு (அ) Sixth Sunday in OT A, 2020




ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு ()
16.02.2020

M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’ Kopay South,
Jaffna. 
Thursday, February 13, 2020
முதல் வாசகம்: சீராக் 15,16-21
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 2,6-10
நற்செய்தி: மத்தேயு 5,17-37

சீராக் 15,16-20
விருப்புரிமை
11'ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம்' எனச் சொல்லாதே தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை. 12'அவரே என்னை நெறிபிறழச் செய்தார்' எனக் கூறாதே பாவிகள் அவருக்குத் தேவையில்லை. 13ஆண்டவர் அருவருப்புக்குரிய அனைத்தையும் வெறுக்கிறார்; அவருக்கு அஞ்சிநடப்போர் அவற்றை விரும்புவதில்லை. 14அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினார்; தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார். 15நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. 16உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். 17மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். 18ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். 19ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். 20இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.

  சீராக்கின் ஞானம் கிரேக்க மொழியில் கிடைக்கப்பட்ட ஞானநூல்களில் ஒன்று. இந்த புத்தகம் முதலில் சீராக் என்ற மெய்யியல் வாதியால் 180 (கி.மு) ஆண்டளவில் ஏழுதப்பட்டது என்று, இன்று பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் 19ம் நூற்றாண்டு வரை இந்த எபிரேய நூல் கிடைக்கப்படவில்லை. சீராக்கின் பேரனாகிய இயேசு என்பவர், இந்த நூலை 130 (கி.மு) கிரேக்க மொழியில், மொழி பெயர்த்துள்ளார். செப்துவாஜின்ட் கிரேக்க விவிலியத்தில் இந்த நூல் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது எபிரேய மொழியில் எழுதப்படாததன் காரணமாகவும், வேறுபல மொழியியல் காரணத்திற்காகவும் இந்த நூலை எபிரேயர்களும், சீர்திருத்த கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. உரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், பாரம்பரிய கிறிஸ்தவர்களும், தூய எரோமின் காலம் தொடங்கி இந்த நூலை தங்கள் விவிலியத்தில் இணைத்திருமுறைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்கின்றனர். சீராக் நூல் முதலில் எழுதப்பட்ட போது கிரேக்கர்களும் அவர்களது ஆதிக்கமும், பாலஸ்தீனாவிற்குள் வந்திருக்கவில்லை, இருப்பினும் சீராக் அந்த ஆபத்துக்களை நன்கு முன்னுணர்ந்து கொண்டார் என்பதை இந்த நூலில் காணலாம். சீராக்கின் நூலை, எபிரேயம் பென் சீராக் (சீராக்கின் மகன்) בּן סירא என்றும், இலத்தீன் எக்கிலிசியாஸ்டிகுஸ் Ecclesiasticus (திருச்சபை புத்தகம்) என்றும் பெயரிட்டு அழைக்கின்றன
 விதி மற்றும் பரம்பரை தண்டனை போன்ற சிந்தனைகளை, அவை எபிரேய நம்பிக்கைகள் 
இல்லை என்பதை அழகாகவும் ஆழமாகவும் இந்த நூல் விளக்குகின்றது. ஒவ்வொருவருக்கும் முழுச் சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது, இதனால் ஆசீருக்கும், அழிவிற்கும் அவரவர்தான் பொறுப்பு என்று இந்த புத்தகம் விளக்குகின்றது. முதல் ஏற்பாட்டில் சில புத்தகங்கள், தந்தையின் குற்றத்திற்கு பிள்ளைகள் தண்டிக்கப்படுவர் என்ற படிப்பினையை கொண்டிருக்கிறபோது (காண்க வி. 20,5), பின்நாட்களில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல இதற்கு மாறாக, ஒருவருடைய பாவத்திற்கு அவரவர்தான் தண்டிக்கப்படுவார் என்பதைக் காட்டுகின்றன (✼✼காண்க எசேக்கியேல் 18,2-4).

(5நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.).
(✼✼2'புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்' என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? 3என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. 4உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.).

.11: ஒருவருடைய வீழ்ச்சிக்கு யார் காரணம்? கடவுள் காரணம் என்றால், அவர் பொல்லாதவரா? கடவுள் இல்லையென்றால், யார் அவர் கடவுளைவிட பெரியவரா? இல்லாவிடில் கடவுள் ஏன் ஒருவரின் விழுதலிலிருந்து அந்த நபரைக் காக்க வில்லை? ஆசிரியர் இந்த கேள்வியை வேறு கோணத்தில் பார்க்கிறார், அதாவது யாரும் தன்னுடைய வீழ்ச்சியை விரும்ப மாட்டார், அப்படியிருக்க கடவுள் எப்படி அதனை விரும்புவார் என்பது இவரது விடையான கேள்வியாகும்

.12: நெறிதவறி வாழ்கிறவர் கடவுளுக்கு தேவையில்லாதவர்கள் (ἀνδρὸς ἁμαρτωλοῦ andros hamartolou)இதனால் இவர்களில் நெறி தவறுதலான வாழ்விற்கு அவர்கள்தான் காரணம் என்கிறார். ஆசிரியர் காலத்தில், அந்த மக்கள் தங்களுடைய அனைத்து செயற்பாடுகளுக்கும் கடவுளை காரணம் காட்டியிருக்கலாம், அல்லது தங்கள் பிழைகளை ஆண்டவரின் கைகளில் விட்டுவிட்டு தப்பிக்க பார்த்திருக்கலாம். இதனையே மறுக்கிறார் ஆசிரியர்

.13: ஆண்டவர் வெறுக்கிற அருவருப்புக்குரிய செயற்பாடுகள் எவை என்பதை ஆசிரியர் கூறாமல் விடுகிறார். இது சீராக்கின் கால வாசகர்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்து பாவங்களையும், அல்லது இஸ்ராயேல் மக்கள் வெறுத்த செயற்பாடுகளை சொல்லலாம். அத்தோடு ஆண்டவர் அவற்றை வெறுப்பது மட்டுமல்ல, ஆண்டவருக்கு அஞ்சிநடப்பவர்கள் அவற்றை விரும்புவதில்லை என்று, ஆண்டவருக்கு அஞ்சுபவர்களுக்கு புதிய வரைவிலக்கணத்தையும் கொடுக்கிறார். ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் (τοῖς φοβουμένοις tois forboumenois) என்பது, முதல் ஏற்பாட்டில் நீதிமான்களை அல்லது சட்டங்களை கடைப்பிடிப்பவர்களைக் குறிக்கும்

.14: இந்த வரி மனிதரின் படைப்பு வரலாற்றை நினைவுபடுத்தும் அதே வேளை, மனிதருடைய சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவர் தொடக்கத்தில் மனித இனத்தை உருவாக்கினார் என்ற எபிரேய நம்பிக்கை மிக முக்கியமானது, இது மனிதர் வேறெவராலும் உண்டாக்கப்படவில்லை என்பதை காட்டுகிறது. மனிதரின் படைப்பிற்கு கிரேக்க இலக்கியங்கள் பல காரணங்களையும் பல சிந்தனைகளையும் முன்வைத்தன, அவற்றை தவிர்க்கிறார் ஆசிரியர். அத்தோடு மனிதர்கள் விதிக்கு அல்லது கர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் தமது சொந்த விருப்புரிமைக்கே கட்டுபட்டவர்கள் என்ற ஆழமான சிந்தனையையும் முன்வைக்கிறார். இது முழுக்க முழுக்க எபிரேய சிந்தனை. பல மத்திய கிழக்கு மற்றும் கிரேக்க சிந்தனைகள் மனிதனின் செயற்பாடுகளுக்கு பல புற காரணிகளை காரணம் காட்டியது, இதனால் பல வேளைகளில் மனிதர் தமது தவறுகளிலிருந்து தப்பிக்கக்கூடிய வாய்பிருந்தது. இவரின் சிந்தனைப்படி மனிதர் தம் பாவ வாழ்க்கைக்கு தம்மைத் தவிர மற்றவரை அல்லது மற்றவற்றை காரணம் காட்ட முடியாது. இந்த சிந்தனை பிற்காலத்தில் புதிய ஏற்பாட்டில் இன்னும் ஆழமாக ஆரயப்பட்டது

.15: ஆண்வரின் கட்டளையை கடைப்பிடிப்பது அல்லது விட்டுவிடுவது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது அல்லது அவரவரின் தெரிவைப் பொறுத்தது. ஆண்டவர், அடிமையான நீதிமான்களை அல்ல சுதந்திரமான நீதிமான்களையே விரும்புகிறார், என்பதை இந்த வரி காட்டுகிறது. இந்த வரி இணைச்சட்ட நூலில் மோசே வாழ்வையும் சாவையும் தெரிவுகளாக முன்வைப்பதை நினைவூட்டுகிறது (காண்க . 30,15-19). பற்றுருதியுடன் நடப்பது ஒவ்வொருவரின் தெரிவு என்பது எவ்வளவு ஆழமான இறையியல் என்பதை இங்கே காணலாம். பற்றுருதி என்பது 'விருப்பமான நம்பிக்கை' என கிரேக்க விவிலியத்தில் காட்டப்பட்டுள்ளது (πίστιν εὐδοκίας pistin eudokias).  

.16: நீரும் நெருப்பும் மிக முக்கியமான உருவகங்கள். ஒன்று இதத்தையம், இன்னொன்று வெப்பத்தையும் காட்டுகின்றன. பல இடங்களில் இந்த இரண்டும் ஒரே அர்த்தத்திலும் பாவிக்கப்பட்டுள்ளன. பலிப்பொருட்களை அர்ப்பணம் செய்யவும் இந்த இரண்டு பௌதீகப் பொருட்கள் பாவிக்கப்பட்டன. புதிய ஏற்பாட்டில் இவை தூய ஆவியை குறிக்கும் அடையாளங்களாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. சீராக் இந்த வரியில், இதனை இரண்டு எதிர் கருத்து பதங்களாக ஒப்பிடுகிறார். நீர் பாதுகாப்பான உருவகமாகவும் அல்லது ஆசீருக்கான உருவகமாகவும், நெருப்பு பாதுகாப்பற்ற உருவகமாகவும் அல்லது தண்டணைக்கான உருவகமாகவும் பாவிக்கப்பட்டுள்ளன

.17: மேற்குறிப்பிட்ட வசனத்தின் பொருளையே இந்த வரியும் உணர்த்துகின்றது. வாழ்விற்கும் சாவிற்கும் பொறுப்பாளிகள் மனிதர்களே என்பது இங்கே புலப்படுகிறது (ἡ ζωὴ καὶ ὁ θάνατος hê dzōê kai ho thanatos). வாழ்வையும் சாவையும் கடவுள் மட்டும்தான், அதுவும் மனிதரின் விருப்பம் இல்லாமல் தீர்மாணிக்கிறார் என்ற நம்பிக்கை பிழையானது என்பது சீராக்கின் மெய்யறிவு

.18: ஆண்டவரின் ஞானத்தை அளவிட முயல்கின்றார் ஆசிரியர். கடவுள் ஆற்றல் மிக்கவராக இருப்பதாலும் அத்தோடு அவர் அனைத்தையும் காண்கின்ற படியினாலும் அவருடைய ஞானம் உலக ஞானத்தைவிட பெரிதாக இருக்கிறது என்பது இவர் வாதம். செப்துவாஜின்ட் கடவுளுடைய ஞானத்தை 'அதிகம்' (πολλὴ ἡ σοφία τοῦ κυρίου pollê hê sofia tou kuriou) என்றே கூறுகின்றது. இதனுடன் ஒப்பிடும் போது மனிதர்களுடைய ஞானம் குறைவு என்பது புலப்படுகிறது.

.19: ஆண்டவரின் பார்வை என்பது ஆண்டவரின் கரிசனையும் மற்றும் அவரின் ஆசீரையும் குறிக்கும் (οἱ ὀφθαλμοὶ hoi ofthalmoi). பார்வை என்பது, செப்துவாஜின்ட் கிரேக்கத்தில் கண்களை குறிக்கிறது. தமிழ் இலக்கியத்திலும், கண்கள் பார்வையை குறிக்க பயன்படுத்தப்படுவது உண்டு. அத்தோடு மனிதரின் செயல்கள் அனைத்தையும் கடவுள் அறிவார் என்பதும் விவிலியத்தின் முக்கியமான ஒரு மெய்யறிவு

.20: இறைபற்றில்லாமல் இருப்பதும், பாவம் செய்வதும் ஒத்த கருத்துச் வசனங்கள். இவற்றை செய்வது மனிதரின் தெரிவாக இருந்தாலும், அதனை கடவுள் விரும்பவில்லை என்கிறார் ஆசிரியர். அதாவது கடவுள் மனிதர் நன்மை செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறார் இருப்பினும் அவர் மனிதரை கட்டுபடுத்துபவர் அல்ல என்பதும் புலப்படுகிறது. அனுமதி கொடுத்தல் வேறு, கட்டுப்படுத்தல் வேறு என்பது இங்கே ஒப்பிடப்படவேண்டும்

திருப்பாடல் 119
1மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்

4ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்
5உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!

17உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்
18உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.

33ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்
34உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்

 விவிலியத்தின் மிக நீண்ட திருப்பாடல்களில், 119 வது பாடல்தான் மிக மிக நீளமான திருப்பாடல். இந்த திருப்பாடல் 176 வரிகளைக் கொண்டமைந்துள்ளது. இந்த திருப்பாடல் சட்டம் (מִשְׁפָּט mišfāt) மற்றும் கடவுளின் நியமங்கள் (תּוֹרָה tôrāh) என்ற தலைப்பை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திருப்பாடலுக்கு பல விசேட அம்சங்கள் உள்ளன:

. இது எபிரேய அகர வரிசையில் எழுதப்பட்ட மிக ஆச்சரியமான எபிரேய பாடல்.

. இதன் காலத்தை கணிப்பது மிக கடினம் என்பதால், இதனை எழுத எத்தனை சுருள்களை பயன்படுத்தினர் என்பதும் ஆச்சரியமாக உள்ளது.

. இறைவார்த்தை என்னும் சொல், ஒவ்வொரு வரியிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவே வருகிறது.

. இந்த திருப்பாடலின் மையக் கருத்து திருச்சட்டத்தைப் பற்றியதாகும். திருச்சட்டத்தை குறிக்கின்ற முக்கியமான சொற்களான மிஷ்பாத் (מִשְׁפָּט நெறிமுறை mišpāt), எதுத் (עֵדוּת சாட்சியம் ‘edût) போன்றவை, சரியாக தீர்மானம் செய்தல் மற்றும் சாட்சியம் சொல்லுதல் என்ற அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளன

. பாறையில் எழுத்துக்கள் நித்தியத்திற்கும் பொறிக்கப்படுவது போல, திருச் சட்டங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை ஹொக் (חֹק hôq பொறித்துவை) என்ற சொல் காட்டுகிறது

. இறைவார்த்தையின் அதிகாரமும் அன்பும்தான், திருச்சட்டம் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இதற்கு சட்டத்தை குறிக்கும் முக்கியமான சொல்லான தோறாஹ் (תּוֹרָה tôrāh சட்டம், வழிமுறை, நெறி) பாவிக்கப்பட்டுள்ளது

. இறைவார்த்தை நாளாந்த வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துகிறது என்பதை குறிக்க மிட்ஸ்வாஹ் (מִצְוָה படிப்பினைகள்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த சொல் 'சொல்லப்படுவதை செய்யவும்', என்ற அர்த்தத்தை தாங்கியுள்ளதுஇஸ்ராயேல்
 மக்களுக்கு இந்தத் திருப்பாடல் ஒரு முக்கியமான, அத்தோடு ஒரு பொக்கிசமான செபம் போல வழங்கி வருகிறது. வழிதவறிய இஸ்ராயேலருக்கு இந்த திருப்பாடல், திருச்சட்டத்தின் மேன்மையையும், திருச்சட்டத்தின் நிறைவையும், அதன் ஆன்மீகத்தையும், அதன் புனிதத்துவத்தையும், அந்த சட்டங்கள் ஏன் பின்பற்றப்படவேண்டும் என்ற காரணங்களையும் குறிப்பனவாக அமைகின்றது
  அத்தோடு எபிரேய அரிச்சுவடியின் 22 எழுத்துக்களுக்கும், ஓர் எழுத்திற்கு எட்டு வரிகள் வீதமாக, நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும், கருத்து சிதையாத வகையில் இந்த திருப்பாடலின் 176 வரிகள் அமைக்கப்பட்டுள்ளன (22x8= 176). இது எபிரேய கவிநடையின் வல்லமையைக் காட்டுகிறது. ஒவ்வொரு எட்டு வரி குழுவும் ஒரு முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழ் விவிலியம் அவற்றை தனித் தனியாக ஒவ்வொரு தலைப்பின் கீழுமாக பிரித்து காட்டுகிறது, ஆனால் எபிரேய விவிலியத்தில் இப்படியாக பிரிக்கப்படவில்லை

வவ.1-8 அலெப் - உச்சரிப்பு இல்லை): ஆண்டவரின் திருச்சட்டத்தின் பேறு
வவ.9-16 (בּ பேத் - பே): திருச்சட்டத்தின் படி நடத்தல்

வவ.17-24 கிமெல் - கி): திருச்சட்டம் தரும் இன்பம்
வவ.25-32 டலெத் - ): திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல்
வவ.33-40 ஹெ - ): உள்ளார்ந்த புதுபித்தல், வேண்டல்
வவ.41-48 வவ் - ): திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை, நிலையான முன்னேற்றம்
வவ.49-56 ட்செயின் - ட்ஸ்): இறைவார்த்தையில் நம்பிக்கை வைப்போர்
வவ.57-64 ஹெத் - ஹெ): திருச்சட்டத்தின் மீது ஆர்வம், வாழ்க்கையின் நெறி
வவ.65-72 (ט தெத் - தெ): திருச்சட்டத்தின் பயன், ஆண்டவரின் நெறியில் பயிற்சி
வவ.73-80 (י யோத் - ): திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை, துன்பம் சாட்சியமாக
வவ.81-88 (כּ காப் - ): விடுதலைக்கு மன்றாட்டு
வவ.89-96 லமெத் - ): திருச்சட்டத்தில் நம்பிக்கை, முடிவில்லாத வார்த்தை 
வவ.97-104 மெம் - ): திருச்சட்டத்தின் மீது அன்பு, மகிழ்ச்சி தரும் வார்த்தை
வவ.105-112 நுன் - ): திருச்சட்டத்தின் ஒளி, நடைமுறை வார்த்தை
வவ.113-120 சமெக் - ): திருச்சட்டம் தரும் பாதுகாப்பு, சமரசம் அற்ற சிந்தனை
வவ.121-128 அயின் - உச்சரிப்பு இல்லை): திருச்சட்டத்தின் படி நடத்தல், ஆபத்தில் திட்டம்
வவ.129-136 (פּ பேஹ் - ): திருச்சட்டதில் ஆவல், இரட்டை இழை ஒளி
வவ.137-144 ட்சாதே - ட்ச): திருச்சட்டத்தின் ஒழுங்கு, நேர்மையான கடவுளும் வார்த்தையும்
வவ.145-152 கொப் - ): விடுதலைக்கு மன்றாட்டு, உணரப்பட்ட உடனிருப்பு
வவ.153-160 றெஷ் - ): உதவிக்காக மன்றாட்டு, மூன்று நம்பக்கூடிய காரணிகள்
வவ.161-168 (שׂ சின் - , שׁ ஷின் - ): திருச்சட்டத்தின் மீது பேரன்பு, பாதுகாக்கப்படவேண்டிய  வார்த்தை
வவ.169-176 (תּ தௌ - ): உதவிக்கு மன்றாட்டு, தவறினாலும் கீழ்படிவுள்ள தன்மை

வவ. 1-2: இந்த வரிகள் இந்த திருப்பாடலின் ஆரம்ப வரிகளாக நின்று இந்த திருப்பாடலின் செய்தியை அறிமுகம் செய்கின்றன. இவை எபிரேய முதல் எழுத்தான א அலெப் குழுவிலிருந்து எடு;க்கப்பட்டுள்ளன. பேறு பெற்றவர்கள் என்பவர், நீதிமான்களைக் குறிக்கும் (אַשְׁרֵי அஷ்ரே) ஆவர். இவர்கள் திருச்சட்டத்தை மதித்து நடப்பவர்கள் (הַהֹלְכִ֗ים hahôlkîm) அத்தோடு கடவுளை தேடுவோர் (יִדְרְשֽׁוּהוּ yidrešûhû) என அடையாளப் படுத்தப்படுகின்றனர்

வவ. 4-5: ஆண்டவர்தான் நியமங்களை தந்ததாகவும், அவற்றை மக்கள் கடைப்பிடிக்க அவர் விரும்புவதாகவும் ஆசிரியர் கடவுளையும், சட்டங்களையும் அறிமுகம் செய்கிறார். அத்தோடு 
இவற்றைச் செய்தால் அது எத்துணை நலம் என தனக்கே வியக்கிறார். ஒருவருக்கு நலம் என்பது திருச்சட்டத்தை கடைப்பிடித்தலே என்பது இவர் நம்பிக்கை.

வவ. 17-18: இந்த வரிகள் எபிரேயத்தின் மூன்றாம் எழுத்தான ג கிமெல் குழுவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி திருச்சட்டம் தரும் இன்பத்தை விளக்குகின்றது. திருச்சட்டத்திற்கு கீழ்படிதலே நன்மையாகும் என்கிறார் ஆசிரியர். இவர் தான் நன்மையடைய திருச்சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என நம்புகிறார். அத்தோடு திருச்சட்டம் வியப்பானது அதனைக் காண கண்கள் திறக்கப்பட வேண்டும் என்கிறார்

வவ. 33-34: இந்த வரிகள் எபிரேயத்தின் ஐந்தாம் எழுத்தான ה ஹெ குழுவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் நுண்ணறிவின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. திருச்சட்டத்தை கடைப்பிடிக்க நுண்ணறிவு (בִּינָה பினாஹ்) மிகவும் தேவையானது அதனை கடவுள்தான் தர வேண்டும் என்பது ஆசிரியரின் வேண்டுதல்

1கொரிந்தியர் 2,6-10
6எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல் உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். 7வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. 8இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். 9ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, 'தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.'
10இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்

  கடந்த வாரத்தின் தொடக்கமாக இந்த வாரமும், கொரிந்தியர் முதலாவது திருமுகத்திலிருந்து வாசிக்கின்றோம். திருச்சபையில் பிளவுகள் சகித்துக்கொள்ள முடியாதவை, அத்தோடு அவை கிறிஸ்தவத்திற்கே எதிரானவை என்பதையும் முதாலவது அதிகாரம் அழகாகக் காட்டுகிறது. அத்தோடு மனிதர் பற்றிக்கொள்ள வேண்டியது உலக ஞானத்தை அல்ல, மாறாக இறைஞானத்தையே என்றும் அது காட்டுகிறது. இந்த இரண்டாவது அதிகாரம், கடவுளின் ஞானம் வேறொன்றுமில்லை அது சிலுவையின் ஞானமே என அழகாகவும், ஆழமாகவும் காட்டுகிறது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை விளக்கிய பவுல் இந்த (வவ.6-10) வரிகளில் தூய ஆவியும் வெளிப்பாடும் என்ற தலைப்பில் எழுதுகிறார். ஆளுகின்ற அதிகார மிக்கவர்களின் ஞானங்கள் கவர்ச்சியானதாகவும், முதலாளித்துவமானதாகவும் இருந்த படியால் அதிகமானவர்கள் அதனையே விரும்பினர். இதற்கு எதிராக சிந்தித்த கிறிஸ்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் இந்த உலக சிந்தனையுடன் சேர்ந்து விட முயன்றனர். பவுல் இங்கே சாடுகின்ற உலக ஞானம் என்பது யாரைப் பற்றியது என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. இது ஒரு வேளை அரிஸ்டோட்டிஸ், சோக்கிரடீஸ், பிளேட்டோ போன்ற கிரேக்க மெய்யியல் வாதிகளாக இருக்கலாம் அல்லது, புதிதாக முளைத்த கிறிஸ்தவ மற்றும் யூதமத பிரிவினை தலைமைத்துவங்களாகவும் இருக்கலாம். ஒரு வேளை உரோமைய தத்துவங்களாகவும் கூட இது இருக்கலாம். எதுவானாலும், பவுல் தான் போதித்த கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானவற்றை உலக ஞானமாகவும், அழியக்கூடியதாகவுமே காண்கிறார்

.6: முதிர்ச்சி பெற்றவர்களோடு தாங்கள் ஞானத்தை பற்றி பேசுவதாக பவுல் வாதாடுகிறார்
இங்கே முதிர்ச்சிபெற்றவர்கள் என்போரைக் குறிக்க τέλειος டெலெய்யோஸ், என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது பவுல் கால கிரேக்க தத்துவமான ஒரு வகை மறைவான மதக் கொள்கையைக் குறிக்கிறது. பவுல் இந்த சொல்லை தன் நற்செய்தியை நம்பிய ஆரம்ப கால கிறிஸ்தவர்களைக் குறிக்க பயன்படுத்துகிறார். இவ்வாறு தனது வாசகர்களை அறிவுள்ள முதிர்ச்சியான ஞானிகளாக கருதுகிறார். அதே வேளை இந்த வாதத்தை அவர் தான் என்று ஒருமையில் கூறாமல், தாங்கள் என்று பன்மையில் கூறுவது, ஆண்டவரின் நற்செய்திப் பணி ஒரு குழு முயற்ச்சி என்பதில் கருத்தாய் இருப்பதைக் காட்டுகிறதுபவுல், தமது ஞானம் உலக ஞானம் அல்ல, உலக தலைவர்களின் ஞானமும் அல்ல என்கிறார், ஏனெனில் அவை அழிவுக்குரியது என்றும் மேலதிகமாக வாதிடுகிறார் (τούτου τῶν καταργουμένων toutou tôn katargoumenôn). பவுல் தன் வாசகர்களை, அதாவது கிறிஸ்தவர்கள்தான் வருகின்ற காலங்களில் கிரேக்கத்தையும் முழு உலகையும் வழிநடத்தப் போகிறவர்கள் என்பதை மனதில் கொண்டவர் போல் பேசுகிறார்

.7: தாங்கள் பேசும் ஞானம் வெளிப்படுத்தப்படாமல் மறைவாயிருக்கும் ஞானம் என்கிறார் (σοφίαν ἐν μυστηρίῳ τὴν ἀποκεκρυμμένην). அத்தோடு இந்த ஞானம் புதிதாய் உருவாகிய ஒன்றல்ல, மாறாக கிறிஸ்தவர்களின் மகிமைக்காக (δόξα டொக்ட்சா), தொடக்கத்திலிருந்தே, கடவுளின் திட்டத்தில் இருக்கிறது என்கிறார். கிறிஸ்தவர்களின் நற்செய்தியை ஒரு நவீன கால பிரமலமான சிந்தனை, மாறாக அது முழுமையான சிந்தனை கிடையாது என்று சிலர் வாதிட்டனர். இதனையே பவுல் இங்கே எதிர்க்கிறார்

.8: பவுல் சொல்லும் இவ்வுலக தலைவர்கள் என்போர் கிரேக்க-உரோமைய ஆட்சியாளர்களையும், யூத தலைவர்களையும், கிரேக்க-உரோமைய மெய்யியல் வாதிகளையும் குறிக்கின்றன. இவர்கள் தங்களது நிலையின் காரணமாக பல முக்கியமான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டனர்இருப்பினும் அவர்கள் உண்மையான ஞானத்தை பெறவில்லை என்கிறார். அதற்கான காரணமாக, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்ததை காட்டுகிறார். அவர்கள் உண்மையான ஞானிகளாக இருந்திருந்தார் மாட்சிக்குரிய ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார் என்பது அவர் வாதம். மாட்சிக்குரிய ஆண்டவர் என்பது Κύριος της δόξης அக்காலத்தில் இயேசுவிற்கு பாவிக்கப்பட்ட பெயராக இருந்திருக்கலாம்

.9: இந்த வரியில் பவுல் எசாயாவின் இறைவாக்கு ஒன்றை கோடிடுகிறார். (காண்க எசாயா 64,4). இந்த வரி செப்துவாஜின்ட் விவிலியத்தில் சற்று வித்தியாசமாக இருக்கிறது

וּמֵעוֹלָ֥ם לֹא־שָׁמְע֖וּ לֹ֣א הֶאֱזִ֑ינוּ  עַ֣יִן לֹֽא־רָאָ֗תָה אֱלֹהִים֙ זוּלָ֣תְךָ֔ יַעֲשֶׂ֖ה לִמְחַכֵּה־לֽוֹ׃
(முதல் ஏற்பாட்டு எபிரேய விவிலியத்திலிருந்து)

ἀπὸ τοῦ αἰῶνος οὐκ ἠκούσαμεν οὐδὲ οἱ ὀφθαλμοὶ ἡμῶν εἶδον θεὸν πλὴν σοῦ καὶ τὰ ἔργα σου ἃ ποιήσεις τοῖς ὑπομένουσιν ἔλεον. (செப்துவாஜின்;ட் கிரேக்க விவிலியத்திலிருந்து)

ἃ ὀφθαλμὸς οὐκ εἶδεν καὶ οὖς οὐκ ἤκουσεν καὶ ἐπὶ καρδίαν ἀνθρώπου οὐκ ἀνέβη ἃ ἡτοίμασεν ὁ θεὸς τοῖς ἀγαπῶσιν αὐτόν. 
(பவுல் பாவிக்கும் கிரேக்க புதிய ஏற்பாட்டிலிருந்து)

 பவுலுக்கு இந்த இரண்டு பாடங்களும் தெரிந்திருக்க அதிகமான வாய்பிருப்பதாகத் தோன்றுகிறது

.10: இந்த வரியில், மேற்குறிப்பிட்ட ஞானத்தை வெளிப்படுத்துபவர் தூய ஆவி என்கிறார் பவுல். இந்த தூய ஆவியார்தான் πνεῦμα pneuma அனைத்தையும் துருவி ஆய்கிறவர் அத்தோடு அவர்தான் கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறவர். இந்த தூய ஆவியாரின் மட்டிலேதான் உலக ஞானத்தின் பலவீனமும் நற்செய்தியின் பலமும் தெளிவாக தெரிகிறது

(4தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.)

மத்தேயு 5,17-37
திருச்சட்டம் நிறைவேறுதல்
17'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 18'விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். 19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். 20மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
சினங்கொள்ளுதல்
21'கொலை செய்யாதே கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். 22ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 23ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
விபசாரம்
(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)
27''விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. 29உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 30உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 31'தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது. 32ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

ஆணையிடுதல்
33'மேலும், 'பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. 35மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். 36உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. 37ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

 மத்தேயு நற்செய்தியில் மழைப் பொழிவிற்கு பின்னர், அதகிமான கட்டளைகளை உள்ளடக்கி இந்த வரிகள் அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் விவிலியம், வாசகர்களின் நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த அதிகாரத்தை பல தலைப்பின்கீழ் வரிசைப்படுத்துகிறது. இன்றைய வாசகத்தில் வரும் தலைப்புக்களான திருச்சட்டத்தை நிறைவேற்றுதல், சினங்கொள்ளுதல், விபச்சாரம், மற்றும் ஆணையிடுதல் போன்றவை நம் சிந்தனையை உலுப்பி விடுகின்றன

. திருச்சட்டம் நிறைவேறுதல் (வவ 17-20). 
 திருச்சட்டமும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள ஆர்வமும் ஒரு யூதரை நீதிமானாகக் காட்டியது. விவிலியம் பல இடங்களில் திருச்சட்டத்தின் மகிiiயையும், விட்டுக்கொடுக்க முடியாத அதன் ஒருமைப்பாட்டையம் அழகாகக் காட்டுகிறது. திருப்பாடல் 119 இதற்கு நல்ல உதாரணம். திருச்சட்டத்தை மீறுகிறவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற அந்தஸ்தை இழக்கிறார்கள் (ஒப்பிடுக சீராக் 41,8). இயேசுவின் மீதும், திருத்தூதர்கள் மீதும் ஆரம்ப கால திருச்சபை மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது, அவர்கள் திருச்சட்டத்தை மீறுகிறார்கள் என்பதாகும். இந்த குற்றச்சாட்டை அழகாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே முறிக்க முயல்கிறார் மத்தேயு. இந்த வரிகளில் இயேசு 'ஆமென் நான் உங்களுக்கு சொல்கிறேன்' (ἀμὴν γὰρ λέγω ὑμῖν) என்பது, இயேசுவின் மெசியானித்துவ அதிகாரத்தைக் காட்டுகிறது

.17: இந்த வரியிலிருந்து அக்காலத்தில் இயேசு மீதும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மீதும் இருந்த குற்றச்சாட்டு தெளிவாக தெரிகிறது. இயேசு திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க வந்தவர் இல்லை என்பது மத்தேயுவின் முக்கியமான படிப்பினை. திருச்சட்டம் என்பது இங்கே சட்டங்களையம் தாண்டி, முதல் ஐந்து நூல்களையும் குறிக்கின்றன (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை மற்றும் இணைச் சட்டம்). இறைவாக்குகள் என்பது இறைவாக்கு நூல்களை குறிக்கலாம் அல்லது இறைவாக்கினர்களின் இறைவாக்கை குறிக்கலாம். மத்தேயு, இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்கையும் கடைப்பிடிக்கிற ஒரு சாதாரண யூதரல்ல அதற்கும் மேலாக அவர் அவற்றை நிறைவேற்றுகின்ற மெசியா எனக் காட்டுகிறார்

.18: இந்த வரியினூடாக விண்ணையும் மண்ணையும் விட திருச்சட்டத்தின் ஒவ்வொரு எழுத்துக்களும் முக்கியம் என்பது புலப்படுத்தப்படுகிறது. சிற்றெழுத்தும் புள்ளியும் என்பது, ἰῶτα ἓν ἢ μία κεραία - ஒரு புள்ளியோ அல்லது கோடோ என்ற கிரேக்க மூல மொழியில் உள்ளது. இது திருச்சட்டம் (விவிலியம்) பற்றிய நல்ல புரிதலை காட்டுகிறது.

.19: திருச்சட்டத்தை போதிப்பதால் ஒருவர் பெரியவராக முடியாது, மாறாக அதை வாழ்பவரே பெரியவர் என்கிறார் இயேசு. பல யூத தலைவர்கள், திருச்சட்டதின் சிறியவற்றையேனும் கடைப்பிடிக்காமல், அதனை போதித்து தங்களை பெரியவர்களாகக் காட்டிக்கொண்டனர், அதனை வைத்து மற்றவர்களையும் பாவிகள் என சுட்டிக் காட்டினர். இவர்கள் உண்மையிலேயே வி;ண்ணரசில் சிறியவர்கள் என்பதுதான் வாதம். விண்ணரசு (βασιλείᾳ τῶν οὐρανῶν basileia tôn houranôn) என்பதும் மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான ஒரு தலைப்புப் பொருள்

.20: இந்த வரியில், யாருக்கு எதிராக மத்தேயு மேற்குறிப்பிட்ட வரிகளை பாவிக்கிறார் என்பது புலப்படுகிறது. இயேசுவின் மீதும், ஆரம்ப கால திருச்சபை மீதும், முக்கியமாக மத்தேயுவின் திருச்சபைமீதும், குற்றம் சுமத்தியவர்கள் இந்த (சில) மறைநூல் அறிஞர்கள், பரிசேயர், மற்றும் தலைவர்கள், இவர்களைத்தான் சட்டத்தை காட்டி ஏமாற்றும் சிறுவர்கள் என்கிறார் மத்தேயு. (அன்று அந்த யூதர்களுக்கு, இன்று பல கிறிஸ்தவர்களுக்கு இது நச்சென பொருந்தும்). 

. சினம் கொள்ளுதல் (வவ. 21-26): 
முதல் ஏற்பாட்டில் கோபம் கொள்ளுதல் அதிகாரத்தில் இருப்பவர்களின் தகைமையாக கருதப்பட்டது. முதலில், அநீதியைக் கொண்டு கடவுளே பல வேளைகளில் கோபம் கொள்கிறார், பின்னர் அவர் கோபம் ஒவ்வொரு நிகழ்விலும் தணிகிறது. இறைவாக்கினர்கள், அரசர்கள் மற்றும் தலைவர்கள் அநீதிக்கு எதிராக கோபம் கொண்டார்கள். முதல் ஏற்பாடு இதனை ஒரு சாதாரண மன வெளிப்பாடாகவும் கருதியது. மத்தேயு இங்கே குறிப்பிடுகின்ற கோபம் (ὀργή orgê), நீதியில்லாத கோபத்தைக் குறிக்கும். இது ஒருவேளை யூத மற்றும் உரோமைய தலைமைகள், கிறிஸ்தவர்கள் மேல் காட்டிய கோபத்தைக் குறிக்கலாம்

வவ.21-22: உடலியல் ரீதியான வன்முறைக்கு காரணம் என்ன என்பதை இயேசு அழகாக காட்டுகிறார். இஸ்ராயேல் மக்களுக்கு இணைச்சட்ட நூல் மற்றும் லேவியர் கால சட்டங்கள் எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், இயேசுவின் சட்டங்கள் மீதான புதிய பார்வைகள் வருகின்றன. இங்கே இயேசு வன்முறையின் தொடக்கத்தை ஆய்வு செய்கிறார். வன்முறை அல்ல உண்மையான பிரச்சனை, மாறாக வன்முறையை தூண்டும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்கிறார். சினங்கொள்ளுதல், கீழ்தரமான வார்த்தை பிரயோகங்கள், அவமானப்படுத்தும் வசனங்கள் போன்றவை நிச்சயமாக வன்முறையை தூண்டி மரணங்களை தோற்றுவிக்கும். எனவே இவை தண்டிக்கப்படவேண்டியது என பயமுறுத்துகிறார். அதிசயமாக 
இயேசு இங்கே, தண்டனை, தலைமைச் சங்க தீர்ப்பு, எரிநரக வாழ்வு போன்றவை இங்கே உதாரணப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்

வவ.23-24: காணிக்கை செலுத்தி உறவுகளை சீர்ப்படுத்த முடியாது மாறாக மன்னிப்பு மற்றும் பரஸ்பர அன்பின் மூலமாகத்தான் நல்ல உறவு ஏற்படுகிறது என இந்த வரிகள் காட்டப்படுகின்றன. பலிப்பீடத்திற்கு முன் யாரும் கொண்டுவந்த காணிக்கைகளை செலுத்தாமல் விட்டுவிடுவது அபூர்வம், இருப்பினும் சமரசம் முக்கியமான இடத்தை இங்கே பெறுகிறது. நல்லுறவை ஏற்படுத்த, கோபம் கொண்டவர்களை தேடிப் போய் சமரசம் செய்ய சொல்லுவது இயேசுவின் புதுமையான ஆன்மீகத்தைக் காட்டுகிறது. சகோதரர்களுடன் உறவில்லாத காணிக்கையால் எந்த பயனும் இல்லை என்பதையும் இந்த வரிகள் காட்டுகின்றன. சகோதரர்கள் என்பது, இங்கே சொந்த சகோதரர்கள் என்பவரை விட, இனத்தவரைக் குறிக்கலாம் (ἀδελφός adelfos)

வவ.25-26: நடுவர் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு போன்றவை, மத்தேயுவின் வாசகர்களுக்கு நன்கு தெரிந்த உதாரணங்களாக இருந்திருக்கலாம். மத்தேயுவின் திருச்சபை அங்கத்தவர்கள் பல, இந்த நடுவ தீர்ப்பிற்கு கிறிஸ்தவத்தின் பொருட்டு உள்ளானவர்களே. இந்த பின்புலத்துடன், எதிரிகளோடு நீதியற்ற முறையில் முரண்பாடு நல்லதல்ல என்று ஒரு வித்தியாசமான பார்வையை காட்டுகிறார் மத்தேயு

. விபச்சாரம் (வவ 27-32):
வவ.27-28: விபச்சாரம் பற்றிய அன்றைய உலகின் சிந்தனையை (இன்றைய உலகும் கூட) மாற்றுகிறார் இயேசு. விபச்சாரம் என்பது உடலியல் ரீதியான பாவம் மட்டுமல்ல அது உளவியல் ரீதியான பாவம் என்கிறார் இயேசு. வி. 20,14 மற்றும் . 5,18 போன்றவை விபச்சாரத்தை, கட்டளைகளுக்கு எதிரான பாவமாக காட்டுகின்றன, ஆனால் இவை அதன் மூல காரணியை பற்றிக் கூறவில்லைஇயேசு, இவற்றின் மூல காரணி இச்சையான பார்வை என்கிறார். ஆக, விபச்சாரத்தில் இனி பெண்கள் மட்டுமல்ல அனைத்து ஆண்களும் சமமான குற்றவாளிகள் என்பது புலப்படுகிறது

வவ.29-30: வலக்கண்ணும், வலக்கரமும் மிக முக்கியமான உறுப்புக்கள். இவற்றை வெட்டி விடுவது என்பது, முழு உடலையும் முடமாக்குவதற்கு சமன். இருப்பினும் நரக வாழ்க்கையை விட
இயலாமல் இருப்பது மேல் என்கிறார் இயேசு. ஒரு பாவத்திற்கு செயற்பாடுகளைப் போல, பார்வையும் சிந்தனையும் சமமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அழகாக காட்டுகிறார்

வவ.31-32: மணவிலக்கு சான்றுதல் என்பது (ἀποστάσιον), திருமணத்தில் ஏற்படும் அநீதிகளை கட்டுபடுத்த அக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முறை. . 24,1-4 மணவிலக்கையும், மறுமணத்தையும் பற்றி விவரிக்கின்றன. இதனை இயேசு நன்கு அறிந்திருக்கிறார். இந்த சட்டங்கள் ஆணின் உரிமைகளை பற்றி பேசுகின்ற அதே வேளை, பெண்ணின் உரிமைகளை பேசாமல் விட்டுவிடுகிறது. இதனால் பல வேளைகளில் பெண்கள் அநீதிக்கு தள்ளப்பட்டார்கள். சில சில ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காரணங்களுக்காகவெல்லாம் பெண்கள் மணமுறிவை சந்தித்தார்கள். மணமுறிவு, பெண்களை மேலும் பலவீனத்துக்குள்ளும், சமூக அநீதிக்குள்ளும் தள்ளும் என்பதில் இயேசு கவனமாக இருக்கிறார். பரத்தமை (πορνεία பெர்நெய்யா) என்று இயேசு இங்கே குறிப்பிடுவது, சாதாரண விபச்சாரத்தை அல்ல மாறாக, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பால் உறவுகளைக் குறிக்கும். உதாரணமாக சில உறவுகளுடன் பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வது இன்றும், அன்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவை, அதனைத்தான் இந்த சொல் குறிக்கிறது. ஆக சந்தர்ப்பவாத, விபச்சாரங்கள் பாவமாகவும், அநீதியாகவும் இருந்தாலும்,
உடனடியாக விவாகரத்திற்கு போவது நல்லதல்ல என்கிறார். பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதைவிட அவர்கள் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுகிறார் என்ற உண்மை இன்று பல மனித உரிமை ஆர்வளர்களால் பேசப்படுகிறது. இதனை அன்றே இயேசு ஆழமாக கூறிவிட்டார். விபச்சாரத்தை விட, விபச்சாரத்திற்குள் தள்ளுவது முக்கியமான பாவமாகும் என்பது, இயேசு பெண்கள் மேல் வைத்திருந்த மரியாதையைக் காட்டுகிறது. இது கடவுளின் பார்வை

. ஆணையிடுதல் (வவ. 33-37):
. 33: லேவியர் 19,12: எண் 30,2 மற்றும் . 23,21 போன்றவை, பொய்யாணையிடுதலை பாவம் என்று கடுமையாக கண்டிக்கிறது. இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய சாட்சியமாக வாழுகின்ற கடவுள் மேல் ஆணை எனறே பல சாட்சியங்களை முன்வைத்தனர். இதனால், இந்த உண்மையான வாழுகின்ற கடவுளின் பெயரால் செய்யப்படுகின்ற பொய் சாட்சியங்கள், அவரின் உண்மையான 
இருப்பை பொய்ப்பித்துவிடும் என்பதால், அவை கனமாக பாவமாக கருதப்பட்டது. இதனால் இந்த பாவம் கடவுளின் இருப்பிற்கெதிரான பாவமாக கருதப்பட்டது. பொய்யாணைகள், சரிசெய்யப்படலாம் என்ற முதல் ஏற்பாட்டு சிந்தனையை இயேசு இல்லாமல் ஆக்குகிறார்

வவ.34-35: ஆணையிடுவதே பாவம் என்கிறார் இயேசு. விண்ணுலகின் மீது ஆணையிடுவது ஆண்டவரின் அரியணையை கொச்சைப்படுத்துவதாகும். மண்ணுலகின் மீது ஆணையிடுவது அவரது கால்மணையை கொச்சைப்படுத்துவதாகும். எருசலேம் மீது ஆணையிடுவது அதன் புனிதத்துவத்தை கெடுப்பதாகும். இந்த வரிகளில் விண்ணகம், மண்ணகம், மற்றும் எருசலேமின் முக்கியத்துவங்கள் காட்டப்படுகின்றன. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று முக்கியமானவை என்பது காட்டப்படுகிறது. எருசலேமை பேரரசரின் நகரம் (μεγάλου βασιλέως), என்ற கூறுவதில் பேரரசராக கடவுளை குறிப்பிடுகிறார் எனலாம். பல இனங்கள் இன்று வரை கடவுள் மீது ஆணையிடுவதை பெரிய பாவமாக கருதுவார்கள், முக்கியமாக இத்தாலியர்கள் இதனை (Bestemmia பெஸ்தேமியா) தெய்வ நிந்தையாக கருதுகிறார்கள். (நமக்கு இது பழகிவி;ட்டதால் இதன் கனாகனம் தெரிவதில்லை)

.36: தலைமுடியின் மீதும் ஆணையிட வேண்டாம் என்கிறார் இயேசு. தலைமுடி மிகவும் கீழ்மட்டமான உடலின் ஒரு அங்கம், அதனைக் கூட தீர்மானிக்கிற சக்தி மனிதர்க்கு இல்லை என்பதாலும், தலைமுடியின் நிறம் ஒருவரின் ஆயுளுடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதனை மாற்றக்கூடிய சக்தி மனிதர்கில்லை என்பதை இயேசு காட்டுகிறார், (தலை முடிக்கு நிறம் பூசி தங்கள் வயதை குறைப்பவர்களை என்ன வென்று மத்தேயு காட்டுவார்?).

.37: மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான வரி இதுவாகும். ஆம் என்றால் ஆம் எனவும் (ναὶ ναί நாய் நாய்), இல்லை என்றால் இல்லை (οὒ οὔ ) எனவும் சொல்லுவது நீதிமான்களின் பண்பைக் குறிக்கும். இயேசுவின் பாதை இடுக்கமான பாதை, அங்கே நடுநிலமை கிடையாது. ஒன்றில் சரி அல்லது தவறு. ஆரம்ப கால திருச்சபையில் பல வேளைகளில் இந்த இரண்டு பக்கமும் சாயும் வாழ்வு, மற்றவர்களின் சாட்சிய வாழ்விற்கு இடைஞ்சலாக இருந்தது. இப்படியான வாழ்வு சாத்தானுடையது என்கிறார் மத்தேயு. இன்று சில வேளைகளில் உலகம், பொய் என்ற பாவத்திற்கு, 'சரியானதை சொல்லாமல்விடும் விவேகம்' என்று வரைவிலக்கணம் கொடுக்க முயற்சி செய்கிறது. இவர்களுக்கு மத்தேயுதான் முடிவு சொல்ல வேண்டும்

சட்டம் என்பது தீமையானது அல்ல,
சட்டங்கள் நன்மைக்காகவே உருவாக்கப்படுகின்றன,
ஆனால் சட்டங்கள் மனிதர்காகவே தவிர, மனிதர் அவற்றிக்காக அல்ல,
இருப்பினும், மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக சட்டங்களை மாற்ற முடியாது
சட்டம் என்பது என்றும் நிலைக்கும்,
அது திருச்சட்டம் என்றால்.

ஆம் என்றால் ஆம் எனவும்,
இல்லை என்றால் இல்லை எனவும்
சொல்லி வாழ, வரம் தாரும் உண்மை ஆண்டவரே!

Dedicated to the Missionary Oblate of Mary Immaculate congregation on the day, 17th 1826, whence it was approved by the Pope Leo XII; may the Oblates be faithful to their charism and long serving tradition. 


தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...