வியாழன், 5 ஆகஸ்ட், 2021




 ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு ()

08.08.2021


மி.ஜெகன்குமார் அமதி,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Jaffna.

Friday, 6 August 2021

முதல் வாசகம்: 1அரசர்கள் 19,4-8

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 34

இரண்டாம் வாசகம்: எபேசியர் 4,30-5,2

நற்செய்தி: யோவான் 6,41-51



1அரசர்கள் 19,4-8

4அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.' 5பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, 'எழுந்து சாப்பிடு' என்றார்.


6அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார். 7ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, 'எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்' என்றார். 8அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்


ஒம்ரி மன்னனின் மகன் ஆகாபு ஈசபேலை மணந்தார். இவர் சீதோன் மன்னரின் மகள். வட நாட்டு அரச தலைவர்கள் புறவின பெண்களை மணந்தனர் என்பதற்கு ஈசபேல் நல்லதோர் உதராணம். விவிலிய ஆசிரியர்களின் அனைவரும் ஈசபேலை எதிர் மறையான பாத்திரத்திலே காட்சிப்படுத்துகின்றனர். எலியா வட நாடான இஸ்ராயேலில் ஒரு கடவுள் மறையை நிறுவ அதிகமாக பாடுபட்ட அதேவேளையில் இவர் பல தெய்வ வழிபாடுகளை பலமாக முன்னெடுத்தார்

இதனால் இவருக்கும், எலியாவிற்கும் பகைமை வளர்ந்து கொண்டே வந்தது. இவருடைய 

கணவரான ஆகாபு அரசரை பலவீனமாக அரசராக விவிலியம் காட்டுகிறது, இந்த ஈசபேலின் கருத்தினைக் கேட்டு அவர் பல தீய செயல்களை முன்னெடுத்ததாகவும் காட்டுகிறது. நாபோத்தின் திராட்சை தோட்டத்தை அபகரித்தது, இஸ்ராயேலின் இறைவாக்கினர்களை கொலை செய்தது என்று பல நிகழ்வுகளை விவிலியம் காட்டுகிறது. இருப்பினும் விவிலியத்திற்கு வெளியே ஒம்ரியும், அவர் மகன் ஆகாபும் பலமான அரசியல் தலைவர்களாக காட்டப்படுகின்றனர். தென்நாடான யூதேயாவை விட, வடநாடான இஸ்ராயேலே அரசியல்-பொருளாதாரத்தில் பலமாக இருந்ததாகவும், அதற்கு ஒம்ரியின் வம்சம்தான் காரணம் என்று அகழ்வு சாட்சியங்கள் காட்டுகின்றன

எது எவ்வாறெனினும் ஈசபேல், ஆகாபு என்பவர்களை எலியா பாவிகளாகவும், இஸ்ராயேல் மக்களின் பாவத்திற்கு காரணமானவர்கள் எனவும் பார்க்கிறார். எலியாவிற்கும், ஈசபேலின் 

இறைவாக்கினர்க்கும், கடந்த இறை பிரசன்ன போட்டியில் எலியா வெற்றிபெறுகிறார், அதில் 

இறுதியாக எலியா பொய்வாக்கினர்களை கார்மேல் மலையில் வதம் செய்கிறார். இது ஈசபேலுக்கு மேலும் ஆத்திரத்தை வரவைக்கிறது


வவ.1-3: ஆகாபிடமிருந்து கார்மேல் மலையில் எலியா செய்த அனைத்தையும் கேள்வியுற்ற அரசி, எலியாவிற்கு கொலை மிரட்டல் விடுகிறார். இந்த கொலை மிரட்டலை ஈசபேல்தான் முன்னெடுக்கிறார் என்றும், பொய்வாக்கினர்களை எலியா வதம் செய்த போது அரசர் அங்கே இருந்தார் என்றும் காட்டி, ஆகாபை ஈசபேலுடன் சற்ற குறைவான பாவியாகவே காட்ட முயற்சிக்கிறார் எனலாம்

எலியா தன் பொய்வாக்கினர்களின் உயிரை பறித்ததை கடுமையாக எச்சரித்து, அதனைப் போலவே எலியாவின் உயிரையும் மறுநாள் அதேவேளைக்குள் தான் பறிக்கப் போவதாக சூழுரைக்கிறார். இப்படிச் செய்யாவிடில் தன் தெய்வங்கள் தன்னை தண்டிக்கும் என்பதையும் உரைக்கிறார். இதிலிருந்து இவர் இஸ்ராயேலின் கடவுளை நம்பாதவர் என்பது புலப்படுகிறது. தெய்வங்கள் என்பதற்கு 'எலோஹிம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (אֱלֹהִים֙). இது ஒரு பன்மைப் பதமாக இருந்தாலும், இந்த சொல் இஸ்ராயேலின் கடவுளுக்கும் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்

இஸ்ராயேல் வரலாற்றில் மோசேக்குப் பின்னர் மிகவும் சக்திவாய்ந்த இறைவாக்கினர், தப்பி ஓடுவது விசித்திரமாக இருக்கிறது. இதன் மூலம், எலியா தன் உயிரை மதிக்கிறார் என்றும், ஈசபேல் மிகவும் கொடுமையான அரசியாக இருந்தார் என்பதும் புலப்படுகிறது. யூதேயாவிலிருந்து தப்பி ஓடுகிறவர் தன்னோடு தன் பணியாளரையும் கூட்டிக்கொண்டே ஓடுகிறார். இவர் எலிசாவாக 

இருந்திருக்க வாய்ப்பில்லை. பெயர்செபா தன் பணியாளருக்கு பாதுகாப்பான இடமாக இருந்திருக்க வேண்டும், அங்கே அவரை விட்டுவிட்டு தொடர்ந்து பயணிக்கிறார்


.4: உயிரை காத்துக்கொள்ள ஓடியவரின் சிந்தனை மாற்றும் பெறுகிறது. பாலைநிலத்தில் எலியா ஒரு நாள் முழுவதும் பயணம் செய்கிறார். וְהוּא־הָלַךְ בַּמִּדְבָּר דֶּרֶךְ יוֹם வெஹு-ஹாலக் பாமித்பார் தெரெக் யோம்- அவர் பாலைவனத்தில் ஓர் நாள் முழுவதும் நடந்தார்

சூரைச் செடியின் அடியில் அமர்ந்து தான் சாகவேண்டும் என விரும்புகிறார். இந்த செடியை ஒருவகையான கம்புச் செடி எனலாம், இது நான்கு தடவைகள் முதல் ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (רֹתֶם ரோதெம்). அடையாளமாக இது பாவிக்கப்பட்டுள்ளதா என்று நினைக்கவில்லை. இது ஓர் உலர் வலய செடியென்பதால் வரட்சியைக் குறிக்கலாம். இந்த வரண்ட செடி இவரின் உள்ளார்ந்த வரட்சியைக் குறிக்கலாம். இங்கிருந்து தான் சாகவேண்டும் என விரும்புகிறார். தான் வாழ்ந்தது போதும், அத்தோடு தான் தன் மூதாதையரைவிட நல்லவன் அல்ல என்கிறார். இந்த வார்த்தைகள் அவரது விரக்தியைக் குறிக்கின்றன. இருப்பினும் ஓர் 

இறைவாக்கினராக, தன் உயிரை கடவுளிடமே விட்டுவிடுகிறார். பொய்வாக்கினருக்கும்

இறைவாக்கினருக்கும் உள்ள வித்தியாசம் இங்கே காட்டப்படுகிறது. ஈசபேல் அல்ல, கடவுளால்தான் இறைவாக்கினரின் உயிரைக் எடுக்க முடியும் என்பது மறைமுகமாகச் செல்லப்படுகிறது. קַח נַפְשִׁי காஹ் நப்ஷி- என் உயிரை எடுத்துவிடும். முடிவு ஆண்டவர் கையில் 


.5: பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் படுத்துறங்குகிறார். இந்த உறக்கம் நிம்மதியால் வரவில்லை, வேதனையில் வருகிறது. இவருடைய முடிவு உறக்கமாக இருக்க, கடவுளின் முடிவு உணவாக வருகிறது

ஆண்டவரின் வானதூதர் (מַלְאָךְ֙ மல்'ஆக்) இவரை தட்டி எழுப்பி சாப்பிடு (קוּם אֱכוֹל׃ கூம் 'ஏகோல்) என்கிறார்


.6: எலியாவின் செயற்பாடு ஆச்சரியாமாக இருக்கிறது. வானதூதரைக் கண்டு அவர் வியப்படையவில்லை. எழுந்து அங்கே இருந்த தணலில் சுடப்பட்ட அப்பத்தை உண்டு, தலைமாட்டில் இருந்த தண்ணீரைப் பருகி மீண்டும் உறங்கிவிடுகிறார். யார் இந்த அப்பத்தை சுட்டது? அது வானக அப்பம் இல்லை என்பதைக் காட்ட தணலில் சுடப்பட்ட அப்பம் என்கிறார் ஆசிரியர் (עֻגַת רְצָפִים 'உக்காத் ரெட்சாபிம்). இது சாதாரண அப்பாமாகவும் இருக்காது என எடுக்கலாம்

மீண்டும் உறங்கிவிடுவதற்கான காரணமும் தெளிவாக இல்லை. இது அவர் தொடர்ச்சியாக கழைத்துப் போயுள்ளார் அல்லது, இனி கடவுள் பார்த்துக்கொள்வார் என நினைப்பதாகவும் எடுக்கலாம்


.7: ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து அவரைத் தட்டி எழுப்பி, இரண்டாம் முறை சாப்பிடச் சொல்கிறார். எலியா நீண்ட பயணம் ஒன்றை செய்ய இருப்பதாகச் சொல்கிறார். நீண்ட பயணத்தை அடையாளப்படுத்த இரண்டாம் முறை உணவு கொடுக்கப்பட்டிருக்கலாம், அத்தோடு இறைவாக்கினரின் பயணங்களை கடவுளே தீர்மானிக்கிறார் என்பதும் காட்டப்படுகிறது


.8: இந்த இரு முறை உணவினால் வலிமை பெற்றவர், நாற்பது பகலும், நாற்பது இரவும் நடந்து ஆண்டவரின் மலையான ஓரேபு மலையை அடைகிறார்

நாற்பது நாட்கள் விவிலியத்தில் ஓர் அடையாளம். நாற்பது ஆண்டுகள் இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்துதிருந்தனர். மோசே நாற்பது நாட்கள் சீனாய் மலையில் தங்கியிருந்தார். இயேசுவும் பாலைவனத்தில் நாற்பது நாட்கள் செப தபத்தில் இருந்தார்

எலியா அடைந்தது ஒரேபு மலை எனச் சொல்லப்படுகிறது (הַר הָאֱלֹהִים חֹרֵב׃ ஹர் ஹா'ஏலோஹிம் ஹோவாவ்). சீனாய் மலையும் ஒரேபு மலையும் ஒரே இடம் என்பது ஆய்வாளர்களின் முடிவு. சீனாய் மலையும் ஒரேபு மலையின் புவியியல் இடம் தெளிவாக கண்டுபிடிக்கப்படாவிடினும், தற்போதைய ஜெபல் மூசா என்ற இடத்தோடு அது அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில் புனித கத்தரீன் துறவற மடம் ஒன்று உள்ளது. ஓரேபு என்ற சொல், வட நாட்டு விவிலிய இலக்கியங்களின் அடையாளம் என்பதும் ஒரு ஆய்வியல் மரபு





திருப்பாடல் 34

கடவுளின் கருணையைப் புகழ்தல்

(தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்

என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம்

அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர்

பேறுபெற்றோர்.

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு

எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு

நன்மை ஏதும் குறையாது.

11வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி

உங்களுக்குக் கற்பிப்பேன்.

12வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?

13அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை

உன் வாயைவிட்டு விலக்கிடு!

14தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

15ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன் அவர் செவிகள்

அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே

உலகில் அற்றுப்போகச் செய்வார்.

17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து

இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை

அவர் காப்பாற்றுகின்றார்.

19நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.

20அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

21தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.


இந்த முப்பதிநான்காம் திருப்பாடலின் தலையங்க வரி இதற்கு பின்னால் உள்ள வரலாற்றை நினைவுபடுத்துகின்றது. (தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர்போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது). இந்த பின்னணியை 1சாமு 21,10-14 இல் வாசிக்கலாம். சவுலுக்கும் தாவீதிற்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டியில் தாவீது தன் உயிரைக் காக்க அந்நியரான பிலிஸ்திய அரசன் காத்தின் பாதுகாப்பை நாடி அவர் நாட்டில் தங்கினார். காத்தினுடைய தனிப்பட்ட பெயர் ஆகிஷ் ஆனால் இந்த திருப்பாடல் அவரை அபிமெலெக் அல்லது அகிமெலக் என வாசிப்பது வித்தியாசமாக உள்ளது ( אֲבִימֶלֶךְ அவிமெமெலக், Αχιμελεχ அகிமெலெக்). இந்த பிலிஸ்திய அரசன் தாவீதிற்கு அடைக்கலம் கொடுத்த போது சவுலின் பகைமையை மட்டுமே நினைத்திருப்பார், அனால் பிலிஸ்தியருக்கெதிரான தாவீதின் செயல்கள் அவருக்கு நினைவூட்டப்பெற்ற போது அவர் தாவீதை சிறைப்பிடிக்க முயல்கிறார், இதனால் தாவீது மனநோயாளிபோல் நடித்து தப்பிக்கிறார். தாவீது சிறந்த போர் வீரன் மட்டுமல்ல நல்ல தற்பாதுகாப்பு நடிகன் என்பதையும் நிரூபிக்கிறார். ஆகிஷிடம் இருந்து தப்பித்தது, தாவீதுக்கு ஒரு கடவுள் அனுபவத்தைக் கொடுக்கிறது, அந்த கடவுள் அனுபவம் அவரை இந்த பாடலை இயற்றி படிக்க வைத்ததாக எபிரேய வரலாற்று நம்பிக்கை எடுத்துரைக்கிறது


(10பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார். 11ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், 'இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?' என்றனர். 12தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். 13அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். 14அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், 'இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? 15என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?' என்று சினமுற்றான்.)


வவ.1-2: இந்த முன்னுரையின் உதவியுடன் இந்த வரிகளை வாசிக்கின்ற போது இந்த வார்த்தைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவரை புகழ்தல் அல்லது அவரது பெருமைகளை பறைசாற்றுதல் என்பது, ஒரு காலத்திற்கு உட்பட்டதல்ல ஏனெனில் கடவுள் ஒருவர் பலமாக இருக்கும் போது மட்டுமல்ல அவர் பலவீனமாக இருக்கும் போதும் தேவையானவர், என்ற உண்மையை தாவீது பிலிஸ்தியரின் அரண்மனையில் புரிந்துகொண்டார். கடவுளின் பெருமைகளை கேட்டபோது எளியோர் அக்களிப்பர் என்று தாவீது பாடுவது, இஸ்ராயேலரை குறிக்கும் அல்லது தாவீதைச் சார்ந்த இஸ்ராயேலரைக் குறிக்கிறது என்றும் எடுக்கலாம். יִשְׁמְעוּ עֲנָוִים וְיִשְׂמָחוּ யிஷ்மெ' 'ஆனாவிம் வெயிஸ்மாஹு- எளியோர் இதைக் கேட்ப்பார்கள், மகிழ்வார்கள்


.3: தன்னோடு இணைந்து ஆண்டவரை பெருமைப்படுத்தக் கேட்கிறார் ஆசிரியர், அதனை அவர் ஆண்டவரின் பெயரை மேன்மைப் படுத்தல் முயற்ச்சி என்கிறார்

ஆண்டவரை பெருமைப் படுத்தலும், அவரது பெயரை பெருமைப் படுத்தலும் (גַּדְּלוּ לַיהוָה கத்லூ லஅதோனாய்- ஆண்டவரை உயர்த்தல்: נְרוֹמְמָה שְׁמוֹ நெரோம்மாஹ் ஷெமோ- அவர் பெயரை உயர்த்துங்கள்), ஒத்த கருத்து வினைகளாக பார்க்கப்படுகிறது


.4: தான் ஆண்டவரை துணைவேண்டி மன்றாடியதாகவும், அவர் மறுமொழி பகர்ந்ததாகவும், எல்லாவகையான அச்சத்திலிருந்தும் தன்னை விடுவித்ததாகவும் சொல்கிறார்

ஆண்டவர் ஒருவருக்கு மறுமொழி கொடு;த்தல் மற்றும் அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் விடுவித்தல் என்ற உணர்வுகள் ஆழமான நம்பிக்கையின் வரிகள். இதனை உரைக்கின்றவர், நிச்சயமாக ஆண்டவரைப் பற்றி பல ஆழமான அனுபவங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த வரியும், தாவீதுதான் இந்த பாடலை எழுதினார் என்பதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. כָּל־מְגוּרוֹתַי கோல்-மெகூரோதாய்- என்னுடைய எல்லாவகையான அச்சங்கள்


.5: ஆண்டவரை நோக்கி பார்த்தோரை இந்த வரி எழுவாய்ப் பொருளாக எடுக்கிறது. ஆண்டவரை மனித பண்புகளளோடு வர்ணிப்பது திருப்பாடல்களின் தனித்துவம். ஆண்டவரின் முகம் என்பது அவரது பிரசன்னத்தைக் குறிக்கலாம். ஆண்டவரை பார்த்தல் என்பது அவரது பிரசன்னத்தை உணர்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்

மக்கள் மகிழ்ச்சியால் மிளிர்தல் என்பது, அவர்களுடைய உள்ளத்தின் நிறைவைக் காட்டுகின்றது. அவர்களின் முகம் அவமானத்தை சந்திக்கவில்லை என்பது, அவர்கள் தோல்வியை சந்திக்கவில்லை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது


.6: ஆசிரியர் தன்னை 'இந்த ஏழை அழைத்தான்' என்கிறார் (זֶה עָנִי קָרָא ட்செஹ் 'ஆனி காரா'). இவருடைய கூவி அழைத்தலுக்கு, மன்றாட்டு  என்ற அர்த்தமும் கொடுக்கப்படலாம். ஆசிரியர் மிகவும் தாழ்ச்சியுடையவராக இருந்திருக்க வேண்டும், இதனால்தான் தன்னை ஏழை என்கிறார்

செவிசாய்த்தலும், அனைத்து நெருக்கடிகளில் நின்று விடுவித்தலும், ஒத்த கருத்துச் செயற்பாடுகள். மீண்டும் மீண்டும் ஆண்டவரின் செவிசாய்த்தல் என்ற அர்த்தம் இந்த வரிகளில் வருவதைக் காணலாம்


.7: ஆண்டவரின் தூதர், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை காத்திடுவார் என்று உறுதிப்படுத்துகிறார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் என்போர், ஆண்டவரில் மிக நம்பிக்கை உள்ளோரைக் குறிக்கும். ஆண்டவருக்கு அச்சம் என்பது பயத்தை குறிக்காது. ஆண்டவரின் தூதர் ஒருவரைக் காத்தல் என்பதன் மூலம், அந்த நபர் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. מַלְאַךְ־יְהוָ֓ה סָ֘בִ֤יב לִֽירֵאָ֗יו மல்'அக்-அதோனாய் சாவிவ் லிரெ'ஆவ்- ஆண்டவரின் தூதர் அவருக்கஞ்சுவோரை சூழ்ந்திடுவார்


.8: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பார்க்கச் சொல்கிறார். இந்த வரி நற்கருணை ஆண்டவரோடு தொடர்பு படுத்தப்படுகிறது. இந்த வரி திருப்பாடல்கள் புத்தகத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரிகளில் ஒன்று. טַעֲמוּ וּרְאוּ כִּי־טוֹב יְהוָה 'அமூ வுரெ' கி-தோவ் அதோனாய்- சுவையுங்கள் பாருங்கள், ஆண்டவர் நல்லவர் என்று

சுவை என்பது முதல் ஏற்பாட்டில் அனுபவமாகத்தான் இருக்கவேண்டும். இவர்கள் நற்கருணை கொண்டாடத்தில் பங்கெடுக்கவில்லை. அக்காலத்தில் நற்கருணை கொண்டாட்டமும் இருந்திருக்கவில்லை. ஆண்டவரை சுவைத்தலை அவரிடம் அடைக்கலம் புகுதல் என்ற ஒத்த கருத்துச் சொல்லில் இன்னொருமுறை வார்த்தைப் படுத்துகிறார் (יֶחֱסֶה־בּֽוֹ யெஹெசெஹ்-போ அவரில் அடைக்கலம் புகுவோர்). 


.9: ஆண்டவருக்கு அஞ்சுவோரை ஆண்டவரின் தூயவர் என்கிறார் தாவீது. ஆண்டவருக்கு அஞ்சுதல் அதாவது அவரில் நம்பிக்கை கொள்ளல் என்பது தூய்மையான மக்களின் வாழ்வைக் குறிக்கிறது. இவர்களுக்கு எக்குறையும் இருக்காது என்கிறார். இந்த குறைகள் எவை என அவர் சொல்லவில்லை

தாவீது பலவிதமான குறைகளை அனுபவித்தவர், அவர் ஆழமான நம்பிக்கையை கொண்டிருந்த படியால், அக்குறைகள் அவரை தாக்கவில்லை. அனைத்து குறைகளையும் அவர் தாண்டி வந்திருக்கிறார். அந்த அனுபவம்தான் இங்கே சொல்லப்படுகிறது. קְדֹשָׁיו கெதோஷாவ்- அவர் தூயவர்கள்


.10: அருட் தந்தை பெக்மான்ஸ் (இந்தியா தமிழ்நாடு) இந்த வரிகளைக் கொண்டு அழகான பாடல் வரியை உருவாக்கியுள்ளார்.

சிங்கக்குட்டிகள் உணவின்றி பசியாய் இருக்காது என்பது ஆசிரியரின் நம்பிக்கை போல. சிங்கம் மிகவும் பலமான வேட்டை மிருகம். அதனை நாம் வனத்து அரசன் என்கின்றோம். இதற்கு பல புராண கதைகள் சார்பாக உள்ளன. இஸ்ராயேல் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிங்கள் அழிந்துவிட்டன. இருப்பினும் இவர்களுக்கு ஆபிரிக்காவில் வாழ்ந்த சிங்கங்களை பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும், அத்தோடு சிங்கம் வல்லமையின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது. இதனால்தான் சிங்கக் குட்டிகள் பசியால் வாடாது என நம்பியிருக்கிறார் என எடுக்கலாம். தற்போதை ஆய்வுகளின் படி சிங்கங்கள் உண்மையாக பலமான வேட்டை மிருகங்கள் கிடையாது, சிங்கத்தைவிடவும் பலமான வேட்டை மிருகங்கள் நிலத்திலும் நீருலும் உள்ளன. அத்தோடு சிங்கங்கள் அதிகமான நேரத்தை தூக்கத்திற்கே செலவழிக்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிங்கம் காட்டு அரசன் என்பது ஒரு கதைதான் என்பதும் உண்மை. இவை ஆசிரியரின் எழுவாய்ப் பொருள் அல்ல

அவருக்கு தெரிந்த சிங்கம் பலமான மிருகம். இப்படி பலமான மிருகத்தின் குட்டிகளே பசியால் வருந்தினாலும், ஆண்டவரை நாடுவோருக்கு என்றுமே குறைவிராது என்கிறார். ஆக ஆண்டவரை நாடுவோர், சிங்கத்தை விட பலசாலியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது. כְּפִירִים கெபிரிம்- குருளைகள்


(அடுத்த வாரம் தொடரும்...)


எபேசியர் 4,30-5,2

30கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். 31மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். 32ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

1ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். 2கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.


எபேசியர் திருமுகத்தில், ஆண்டவருக்கு உரிய வாழ்க்கை மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. தூய ஆவியார், கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறவர். ஆக கிறிஸ்தவர்கள் இந்த தூய ஆவியாருக்கு உகந்த வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறார்கள்


.30: கடவுளின் தூய ஆவியாருக்கு துயரம் வருவிக்க வேண்டாம் என்கிறார் பவுல். μὴ λυπεῖτε τὸ πνεῦμα τὸ ἅγιον τοῦ θεοῦ, மே லூபெய்டெ டொ புனூமா டொ ஹகியோன் டூ தியூ. கடவுளின் தூய ஆவியாருக்கு வருத்தம் வருவிக்க வேண்டாம்.

கடவுளின் ஆவியாரை ஓர் ஆளாக வருவிக்கிறார். அத்தோடு பிழையான வாழ்க்கை முறை இவருக்க துன்பம் தரும் என்பதையும் சொல்லிவிடுகிறார். இந்த தூய ஆவியார், மீட்பு நாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக இருக்கிறார் என்ற அழகான இறையியல் கருத்து முன்வைக்கப்படுகிறது (ἐσφραγίσθητε எஸ்பிராகிஸ்தேடெ- நீங்கள் முத்திரை குத்தப்பட்டவர்கள்)இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளல், தேர்ந்துகொள்ளப்பட்டவர் உடைய முத்திரையாக கருதப்பட்டது. இயேசுவுடைய உயிர்ப்பின் பின்னர், அவர் அனுப்பிய தூய ஆவியார் நம்பிக்கை கொண்டோரின் முத்திரையாக மாறிவிட்டது. இந்த தூய ஆவியார் 'மீட்பு நாளை முன்னறிவிக்கிறார்' (ἡμέραν ἀπολυτρώσεως ஹேமெரான் அபொலுட்ரோசெயோஸ்). 


.31: தூய ஆவியாருக்கு துயரம் வருவிக்கும் காரணிகளை விட்டுவிடச் சொல்கிறார். அவை: மனக்கசப்பு (πικρία பிக்ரியா), சீற்றம் (θυμὸς தூமொஸ்), சினம் (ὀργὴ ஓர்கே), கூச்சல் (κραυγὴ கிரௌகே), பழிச்சொல் (βλασφημία பிளாஸ்பேமியா), அத்தோடு தீமை அனைத்தையும் விட்டுவிடச் சொல்கிறார்

இந்த வாழ்க்கை முறை அக்கால எபேசிய திருச்சபையில் வழக்கிலிருந்திருக்க வேண்டும், அத்தோடு இந்த வாழ்க்கை முறை கிறிஸ்தவர்களுக்கானது அல்ல என்பதில் திருத்தூதர் மிகவும் அவதானமாகவும் கடுமையாகவும் இருக்கிறார். இவற்றை விட்டு நீங்கிவிடுமாரு கண்டிப்பாக கட்டளையிடுகிறார் (ἀρθήτω அர்தேடோ- விட்டுவிலகுங்கள்: πάσῃ κακίᾳ பாசே காகியா- அனைத்து விதமான தீமைகள்). 


.32: இதற்கு எதிர்மாறாக நல்ல வாழ்வை கிறிஸ்தவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்கிறார். அதனை அழகான விழுமியங்களால் வர்ணிக்கிறார். ஒருவருக்கொருவர் பரிவு காட்டச் சொல்கிறார் (γίνεσθε  δὲ εἰς ἀλλήλους χρηστοί கினேஸ்தே தெ எய்ஸ் அல்லேலூஸ் கிரேஸ்டொய்). பரிவு கிறிஸ்தவர்களின் பண்பு என்பதிலும் மிக உறுதியாக இருக்கிறார். இயேசு தான் வாழ்ந்த காலத்தில் அனைவருக்கும் பரிவு காட்டினார். அத்தோடு தூய ஆவியாரின் பண்புகளிலும் இந்த பரிவு மிக முக்கிய இடத்தை பெறுகிறது

கடவுள் அனைவரையும் மன்னித்திருக்கிறார், அதுவும் கிறிஸ்து வழியாகத்தான் மன்னித்திருக்கிறார். கிறிஸ்துவின் வருகையும், அவர் நமக்கு கொடுத்த வாழ்க்கை முறையும், கடவுளின் மன்னிப்பின் அடையாளம். அதனை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் தன் அயலவரை மன்னிக்க வேண்டும் என்பது கடமை. χαρίζομαι; காரிட்சொமாய்- மன்னித்தல்.


5,1: ஐந்தாவது அதிகாரத்தின் முதல் ஐந்து வரிகளும் முதல் வரிகளில் வந்த செய்தியின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன

அனைவரும் கடவுளின் பிள்ளைகள், ஆக கிறிஸ்துவைப் போல அனைவரும் கடவுளின் அன்புப் பிள்ளைகளாக மாறவேண்டும் என்று கட்டளை கொடுக்கிறார் (Γίνεσθε οὖν μιμηταὶ τοῦ θεοῦ ὡς τέκνα ἀγαπητὰ கினேஸ்தே ஹுன் மிமேடாய் டூ தியூ ஹோஸ் டெக்னாஆகாபேடா). இது இயேசு போல் ஆவதற்கான ஒரு அழைப்பு. கிறிஸ்துவை பின்பற்றுவதற்கான அழைப்பு பவுலுடைய 

இறையியலில் பல திருமுகங்களில் வருவதைக் காணலாம்


.2: எபேசியர் அன்புள்ள மக்களாக வாழ கேட்கப்படுகிறார்கள். இந்த அன்பை அழகான வரைவிலக்கனம் கொண்டு விளங்கப்படுத்துகிறார் பவுல். கிறிஸ்து மக்களுக்காக, நறுமணம் வீசும் பலியும், காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்தார், அத்தோடு மக்களிடம் அன்பும் கூர்ந்தார். (ὀσμὴν εὐωδίας ஹேஸ்மேன் எவ்தோதியாஸ்- வீசும் நறுமணம்). 

கிறிஸ்துவிற்கு பல அடையாளங்களையும், உருவகங்களை கொடுப்பதில் பவுல் மிக வல்லவர். இந்த வரியில் அவர், இயேசுவை நறுமணம் வீசும் காணிக்கையாக ஒப்பிடுவது மிகவும் அழகான உருவகம். நறுமணங்கள் கடவுளுக்கு பிடித்தமானது என்பது முதல் ஏற்பாட்டு நம்பிக்கை, புகை நறுமணத்தோடு மேலே எழும்புகின்றபோது அதனை கடவுள் முகர்ந்து, ஒப்புக்கொடுக்கிறவரின் வேண்டுதலை கண்ணோக்குகிறார் என்பது லேவிய நம்பிக்கை. இதனைத்தான் இன்னொரு விதமாக பவுல் காட்டுகிறார். ஆனால் இங்கே பலிப் பொருள், மிருகம் அல்ல, மாறாக இயேசு



யோவான் 6,41-51

41'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். 42'இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படி சொல்லலாம்?' என்று பேசிக்கொண்டார்கள்.

43இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: 'உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். 44என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

45'கடவுள்தாமே அனைவருக்கும்கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். 46கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். 47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். 48வாழ்வுதரும் உணவு நானே. 49உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். 50உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

மானிட மகனின் சதையும் இரத்தமும் உணவாதல்

51'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.'


கடந்த வாரங்களின் தொடர்ச்சியாக இந்த வார நற்செய்தி பிரிவும் வருகின்றது. சாதாரண அப்பங்களை உண்டவர்கள், தங்கள் முன்னோர்கள் மன்னாவை உண்டதை அறிந்திருந்தவர்கள்

இன்னமும் அழியக்கூடிய அப்பங்களை விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். அழியா அப்பத்தை அறிவிப்பதில் இயேசு கருத்தாய் இருந்தாலும், மக்களின் சிந்தனை முழுவதும் அழியும் அப்பத்தைப் பற்றியே இருப்பதை யோவான் நற்செய்தியாளர், கேள்வி விடை என்ற கிரேக்க 

இலக்கிய முறையில் காட்சிப்படுத்துகிறார்


வவ.36-40: இயேசு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இயேசுவை நம்புகிறவர்கள் வெகு சிலராகவே இருப்பது அவருடைய வருத்தத்திற்கான காரணம். இருப்பினும், தந்தையின் விரும்பம் இன்றி எவராலும் தன்னிடம் வரமுடியாது என்பதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். தந்தையின் விரும்பம் அனைவரும் மீட்படைவதாக இருந்தாலும், அதற்குள் தனி மனித சுதந்திரம் வேலைசெய்கிறது என்பதும் இன்னொரு முட்டுக்கட்டையாக இருக்கிறது

இயேசுவை கண்டிருந்தும் அவர்கள் நம்பாமல் இருப்பது அவருக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கிறது. இருந்தும் தந்தையால் கொடுக்கப்பட்டு தன்னிடம் வரும் எவரும் அழியார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு நிம்மதி கொடுக்கிறது


.41: 'நானே' என்ற வசனம் இந்த வரியிலும் நினைவுகூறப்படுகிறது. வானிலிருந்து இறங்கிவந்த உணவு நானே (ἐγώ εἰμι ὁ ἄρτος ὁ καταβὰς ἐκ τοῦ οὐρανοῦ, எகோ எய்மி ஹொ ஆர்டொஸ் ஹொ காடாபாஸ் எக் டூ ஹுரானூ). இந்த வசனம் யூதர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்துகிறது

யூதர்களுடைய ஒரு கடவுள் நம்பிக்கை, மற்றும் உருவமற்ற கடவுளின் தன்மை போன்றவை அவர்களை இயேசுவிற்கு எதிராக சிந்திக்க வைக்கிறது. இருந்தாலும் எந்த நம்பிக்கையாக 

இருந்தாலும், அது கடவுளிடம் நம்மைக் கொண்டு போக உதவ வேண்டும், கடவுள் வந்த பிறகு பாதையாக இருக்கும் நம்பிக்கையை கட்டிப்பிடிப்பது என்ன நன்மை செய்யும்? இங்கே யூதர்கள் என்று யோவான் குறிப்பிடுகிறவர்கள் அனைத்து யூதர்களையும் குறிக்காது, மாறாக இயேசுவில் நம்பிக்கை கொள்ளாத யூதர்களை மட்டுமே குறிக்கும் (Ἰουδαῖοι யூதாய்யொய்). 


.42: இவர்களுடைய சாதாரண மனித அறிவே இங்கே அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக வருகிறது. இயேசுவின் தந்தை யோசேப்பை இவர்கள் அறிந்திருந்தார்கள், அதனால் முதலாவது கேள்வி அதனை ஒட்டியதாக இருக்கிறது (οὐχ οὗτός ἐστιν Ἰησοῦς ὁ υἱὸς Ἰωσήφ, ஊக் ஹுடொஸ் எஸ்டின் ஈயேசூஸ் ஹொ ஹுய்யொஸ் ஈயோசேப்- இவர் இயேசு யோசேப்பின் மகன் அல்லவா?)

அவருடைய தாயையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் (οὗ ἡμεῖς οἴδαμεν τὸν πατέρα  καὶ τὴν μητέρα; ஹு ஹெமெய்ஸ் ஒய்தாமென் டொன் பாடெரா காய் டேன் மேடெரா- இவருடைய தாந்தையும் தாயும் நமக்கு தெரிந்தவர்களே?), இப்படியாக தெளிவுகள் இருக்க இவர் தன்னை எவ்வாறு வானகதிலிருந்த வந்தவர் எனச் சொல்லலாம் என்பது அடுத்த கேள்வி (νῦν  λέγει  ὅτι ἐκ τοῦ οὐρανοῦ καταβέβηκα; நுன் லெகெய் ஹொடி எக் டூ ஹுரானூ காடாபெபேகா- வானிலிருந்து இறங்கிவந்தவன் என்று இப்போது சொல்கிறார்?). 

இயேசு பல அரும் அடையாளங்கள் செய்கின்றபோது அதனை சந்தோசமாக அனுபவித்தவர்கள், நம்பிக்கை என்று வருகின்றபோது பல கேள்விகளை எழுப்புகிறார்கள். இந்த கேள்விகளை யோவானின் திருச்சபையும் எழுப்பியிருக்க வேண்டும். அல்லது யோவானின் திருச்சபைக்கு எதிரானவர்கள் எழுப்பியிருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இந்த காட்சியை மிக நுணுக்கமாக அமைக்கிறார் யோவான என எடுக்கலாம்


.43: இயேசு அவர்களைப் பார்த்து உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம் என்கிறார். μὴ γογγύζετε μετ᾿ ἀλλήλων. மே கொக்குட்சேடெ மெட் அல்லேலோன்

முதல் ஏற்பாட்டிலும் இப்படியான முணுமுணுத்தல்தான் பல துன்பங்களையும் தண்டனைகளையும் வரவைத்தது. முதல் ஏற்பாட்டில் ஏற்பட்ட அதே நிலையை இவர்கள் எதிர்நோக்கக் கூடாது என்பதில் இயேசு கருத்தாய் இருப்பது போல காட்சி காட்டப்படுகிறது. அத்தோடு முணுமுணுத்தல் நம்பிக்கையின்மையின் அடையாளம், நம்பிக்கையின்மையை இயேசு விரும்பவில்லை, அதனை தவிர்க்கவிரும்புகிறார். நும்பிக்கையின்மை மற்றவர்களையும் பாவத்திற்கு இட்டுச் செல்லும், இதனால் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சலாக இருப்பதையும் அவர் விரும்பியிருக்க மாட்டார்


.44: ஏற்கனவே முன்வரியில் சொல்லப்பட்டது இன்னொரு முறை சொல்லப்படுகிறது. அதாவது தந்தை ஈர்த்தாலொழிய எவரும் தன்னிடம் வரமுடியாது என்கிறார். இயேசு அனைவருக்கும் பொதுவான ஆண்டவராக இருந்தாலும், இந்த ஆண்டவரிடம் வருவது ஒரு அழைப்பு மற்றும் கிருபை என்பது இந்த வரியில் நினைவூட்டப்படுகிறது

இயேசுவும் தந்தையும் ஒருவர், இருவருடைய பணிகளும் ஒற்றுமையானது. ஒருவர் இன்னொருவருக்கு எதிராக இருக்க முடியாது. ஆக இயேசுவிடம் செல்லவது தந்தையின் திருவுளம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவது இயேசுவின் நோக்கம்

தன்னிடம் வருகிறவர் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இறுதி நாளில் தான் உயிர்த்தெழச் செய்வது தன்னுடைய கடமை என்கிறார். ἀναστήσω αὐτὸν  °ἐν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ அனாஸ்டேசோ அவ்டொன் எக் டே எஸ்காடே ஹெமேரா- அவரை நான் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்


.45: எசாயா 54,13வது இறைவார்த்தை இங்கே கோடிடப்படுகிறது. כָל־בָּנַיִךְ לִמּוּדֵי יְהוָה கோல்-பானாய்க் லிமூதாவ் அதோனாய்- உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் கடவுள் கற்றுத்தருவார். கடவுள் அனைவருக்கும் கற்றுத்தருவதான் வாயிலாக, கற்கும் சந்தர்ப்பம் அனைவருக்கும் உண்டாகிறது, அத்தோடு, ஆசிரியர் கடவுளாக இருப்பதால் அங்கே பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பும் சரியாக உள்ளது

எசாயாவின் இறைவாக்கை யோவான் கோடிடுவதன் மூலம், இங்கே அந்த இறைவாக்கு நிறைவாகி, கடவுள், இயேசு வடிவாக கற்றுக்கொடுக்கிறார் என்பதைக் காட்டுகிறார்


.46: கடவுளை காண்பது அரிது, அத்தோடு யூதர்கள் கடவுளைக் காணவும் முயலமாட்டார்கள்

இந்த பாரம்பரியத்தை யோவான் நன்கு அறிந்திருக்கிறார். இதனால்தான், கடவுள் அனைவருக்கும் கற்றுத்தருவார் என்பதால், அனைவரும் கடவுளைக் காண்கிறார்கள் என்ற பொருளை எடுக்க வேண்டாம் என்கிறார் போல

கடவுளிடமிருந்து வந்தவர் மட்டுமே கடவுளைக் கண்டவர் (οὗτος ἑώρακεν τὸν  πατέρα.   ஹுடொஸ் ஹெராகென் டொன் பாடெரா). கடவுளிடமிருந்து வந்தவர் இயேசு ஆக, அவர் மட்டுமே கடவுளைக் கண்டவர் ஆகிறார்


.47: தன்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் என்பதை உறுதியாகச் சொல்கிறார் (Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὁ πιστεύων  ἔχει ζωὴν αἰώνιον. ஆமேன் ஆமேன் லெகோ ஹுமின், ஹொ பிஸ்டெயுயோன் எகெய் ட்சோஏன் அய்யோனியோன்). 

யோவான் நற்செய்தியில் நிலைவாழ்வு என்பது இயேசுவுடைய வருகையோடு ஆரம்பமாகி விட்டது. இயேசுவை நம்புகிறவர்கள் ஏற்கனவே நிலைவாழ்விற்கு உட்பட்டுவிட்டார்கள்


.48: இன்னொரு முறை 'நானே' என்ற வார்த்தைப் பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளது. Εγώ εἰμι ὁ ἄρτος τῆς ζωῆς. எகோ எய்மி ஹொ அர்டொஸ் டேஸ் ட்சோஏஸ்- நானே வாழ்;வுதரும் உணவாக இருக்கின்றேன்

யோவான் நற்செய்தியில் நானே என்ற வார்த்தை மிகவும் ஆராயப்பட வேண்டியது. முதல் ஏற்பாட்டில் கடவுள் பல முக்கியமான இடங்களில் 'நானே' என்ற வார்த்தையை பாவிப்பார். இது ஆசிரியர்கள் அல்லது இறைவாக்கினர்களுடைய வார்த்தைகளாக இருக்காது. அதே முறைமை இங்கே பாவிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டைப் போலவே, யோவான் நற்செய்திலும், நம்பிக்கை குறைவான பினபுலத்தில்தான் இந்த 'நானே' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது


.49: மன்னாவைப் பற்றி பல கதைகளையும், கட்டுக்கதைகளையும் கொண்டிருந்த மக்களுக்கு மிக உறைப்பான உண்மையை இயேசு சொல்கிறார்

நீங்கள் பெருமையாக பேசும் முன்னோர்கள், உங்கள் மன்னாவை உண்டபோதும் இறந்து விட்டார்கள் என்பதை நாசூக்காக சொல்கிறார் ஆண்டவர். மன்னாவும் நிலையில்லை, உங்கள் முன்னோர்களும் நிலையில்லாதவர்கள் என்பதையும், நம்பாவிட்டால் நீங்களும் அவ்வாறே என்பது சொல்லப்படுகிறது. ἔφαγον  ἐν τῇ ἐρήμῳ τὸ μάννα καὶ ἀπέθανον· எகாகொன் என் டே எரேமோ டொ மான்னா காய் அபெதானொன்- மன்னாவை பாலைநிலத்தில் உண்டார்கள், இறந்தார்கள்


.50: இதிலிருந்து விடிவொன்று உள்ளது என்று நம்பிக்கை கொடுக்கிறார் ஆண்டவர். உண்பவர்களின் பசியை உணவு தற்காலிகமாக தடுக்கும். உணவால் நிலைவாழ்வை கொடுக்க முடியாது. சில உணவுகள் மேலதிக பசியையும் உண்டாக்கக்கூடியவை. இயேசு புதிய உணவு ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்

உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு தான் என்கிறார். இந்த உணவு வானிலிருந்து இறங்கி வந்த உணவு என்கிறார் (οὗτός ἐστιν ὁ ἄρτος ὁ ἐκ τοῦ οὐρανοῦ καταβαίνων, ஹுடொஸ் எஸ்டின் ஹொ ஆர்டொஸ் ஹொ எக் டூ ஹுரானூ வானிலிருந்து 

இறங்கிவந்த உணவு அவர்: ἵνα τις ἐξ αὐτοῦ φάγῃ καὶ μὴ  ἀποθάνῃ. ஹினா டிஸ் எக் அவ்டூ பாகே காய் மே அபொதானே- ஆக யாராவது அவரை உண்டால் இறக்கமாட்டார்). 


.51: நானே என்ற வார்த்தை இன்னொருமுறை இந்த வரியிலும் பாவிக்கப்படுகிறது. கடந்த வரிகளில் மறைமுகமாக 'மூன்றாம் ஆளில்' விளங்கப்படுத்திய ஆண்டவர் (படர்க்கையில்), இந்த வரியில் நேரடியாக தான்தான் அவர் என்று (தன்மையில்) தெளிவு படு;த்துகிறார்

விண்ணிலிருந்து இறங்கிவந்த உணவு நானே என்கிறார் (ἐγώ εἰμι ὁ ἄρτος ὁ ζῶν ὁ ἐκ τοῦ οὐρανοῦ καταβάς· எகோ எய்மி ஹொ ஆர்டொஸ் ஹொ ட்சோன் ஹொ எக் டூ ஹுரானூ காடாபாஸ்). இதனைவிட யோவானால் இந்த இயேசு-உணவைப் பற்றி தெளிவாகச் சொல்ல முடியாது

என்றுமே வாழ்வது என்பது கிரேக்கர்களுடைய கனவு. கிரேக்க மற்றும் பாரசீக இதிகாசங்கள் இதனைப் பற்றி அதிகமாக பேசுகின்றன. இந்த கருத்தியிலில் இஸ்ராயேல் குறைவாகவே உள்ளது. யோவானின் வாசகர்கள் கிரேக்க வாசிகள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நிலைவாழ்வை மாய வித்தைகளில் தேடியவர்களுக்கு இந்த செய்தி வித்தியாசமாகவும்

இனிமையாகவும் இருந்திருக்கும். ἐάν τις φάγῃ ἐκ  τούτου τοῦ ἄρτου  ζήσει εἰς τὸν αἰῶνα, எயான் டிஸ் பாகே எக் டூடூ டூ ஆர்டூ ட்சேசெய் எய்ஸ் டொன் அய்யோனா. யாராவது இந்த உணவை உண்டால், அவர் நித்தியத்திற்கும் வாழ்வார்

இறுதியாக தன்னுடைய சதைதான் அந்த உணவு என்கிறார், அதுவும் அந்த சதை-உணவை உலகுக்கு வாழ கொடுக்கிறேன் என்கிறார்: ὁ ἄρτος  °δὲ ὃν ἐγὼ δώσω  ἡ σάρξ μού ἐστιν ஹொ ஆர்டொஸ் தெ ஹென் எகோ தோசோ ஹே சார்க்ஸ் மூ எஸ்டின், அந்த உணவு அதை நான் கொடுப்பது, என்னுடைய சதையாக இருக்கிறது

உலகின் பசியை தடுப்பதல்ல தன்னுடைய நோக்கம், மாறாக உலகின் நிலைவாழ்வே தன்னுடைய நோக்கம் என்பதை இயேசு ஆண்டவர் அழகாக் காட்டுகிறார்


உணவு மனிதருடைய அடிப்படைத் தேவைகளில் ஒன்று

அனைத்து உயிரினங்களுக்கும், உணவு அடிப்படைத் தேவை

உணவு பசியை தடுக்கும்

பசிக்கா வரத்தை தராது.

பசி மனித உணர்வுகளில் மிக முக்கியமானது

பசிக்கும் மனிதர் ஆரேக்கியமானவர்கள்.

வாழ்வதால் பசிக்கிறது

வாழவே புசிக்கிறோம்

புசிப்பதற்காகவே வாழக்கூடாது

ஆண்டவரே உணவானால்

பசியும் இல்லை புசிப்பும் இல்லை

மரணமும் இல்லை.  


ஆண்டவரே நீரே என் உணவு

உம்மில் என்றும் நிறைவடைய வரம் தாரும், ஆமேன்

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...