வியாழன், 29 டிசம்பர், 2016

மகா பரிசுத்த அன்னை மரியா, இறைவனின் தாய்(அ) 01,01,2017: The Feast of Mary Mother of God, Theotokos



மகா பரிசுத்த அன்னை மரியா, இறைவனின் தாய்(அ)
01,01,2017


மரியன்னையைப் பற்றி நான்கு விசுவாசக் கோட்பாடுகளை கத்தோலிக்க திருச்சபை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறது. அவை

அ. அன்னை மரியா இறைவனின் தாய்
ஆ. அன்னை மரியா என்றும் கன்னி
இ. அன்னை மரியா என்றும் அமல உற்பவி
ஈ அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும் வானகம் எடுத்துக்கொள்ளப்பட்டவர். 
இந்த கோட்பாட்டு படிப்பினைகளுள் இன்று அன்னை மரியா இறைவனின் படிப்பினை ஒவ்வொரு வருடமும் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அன்னை மரியாவோடு ஆண்டினை தொடங்குவது எவ்வளவு நலம், இதற்காகவே நாம் விவிலிய மற்றும் வழிபாட்டு ஆணைக்குழுவினரை பாராட்ட வேண்டும். 


அன்னை மரியா இறைவனின் தாய் (கத்தோலிக்க பார்வை): 
அன்னை மரியாவின் விண்ணேற்றத்திற்கு பின் அவரைப் பற்றிய பல நம்பிக்கைகளும் அதனால் உருவாகிய விழாக்களும் திருச்சபையில் வழக்கத்திற்கு வந்தன. அவற்றுள் மிக முக்கியமானது இந்த பெருவிழா. இந்த விழா அன்னை மரியாவை மையப்படுத்துகிறது என்பதை விட இயேசுவையே மையப்படுத்துகிறது. இயேசு ஆண்டவர், கடவுளாகிய இவர் உண்மையான கடவுளாகவும் மனிதராகவும் ஒரே நேரத்தில் இருந்தார் என்பது திருச்சபையின் விசுவாசம். சிலர் இந்த நம்பிக்கையை திரித்துக் கூற முற்பட்டனர். உதாரணமாக சிலர் இயேசுவை ஒரு வானக வாசி என்றனர், சிலர் அவரை ஒரு சக்திமிக்க வானதூதர் என்றனர், சிலர் அவரை ஓர் 
இறைவாக்கினர் என்றனர், சிலர் அவரை கடவுளின் அவதாரம் என்றனர், சிலர் அவரை தெய்வீக மனிதன் என்றனர், சிலர் அவரை ஒரு சாதாரண ஆனால் கடவுள் அருள் பெற்ற மனிதர் என்றனர், இன்னும் சிலர் அவரை மறைவாக இருந்த கடவுள் என்றனர். இயேசுவின் தெய்வீகமும் மனிதமும் பலமுறை பலரால் பேதகங்களாக முன்வைக்கப்பட்டன. இயேசுவின் மனிதமும், தெய்வீகமும் முழுமையானது அது ஒன்றிலொன்று தங்கியுள்ளது. இதில் ஏதாவது ஒன்றிற்கு எதிரான பேதகம் மற்றைய விசுவாச கோட்பாட்டை பாதிக்கும் என்பதை திருச்சபை கண்டுகெண்டது. 
இந்த வேளையில் ஆரிய கோட்பாடு என்ற பேதகம், இயேசுவை மனிதராகவும், இதனால் அவரை சுமந்தவர் 'மனிதரைச் சுமந்தவர்' (άνδροποτοκος- அந்ரொபொடொகொஸ்) என்றழைக்கபட வேண்டும் என நம்பினர். இதற்கு எதிராக எபேசிய (கி.பி 431), பொதுச்சங்கத்தில் கூடிய திருச்சபை தந்தையர்கள் அன்னை மரியாவிற்கு 'இறைவனை சுமந்தவர்' (θεοτοκος- தியோட்டோகோஸ்) என்ற கொள்கையை விசுவாச பிரகடனமாக ஏற்படுத்தினர். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்ககள் மரியன்னைக்கு எதிரானவர்கள் என்றெடுக்க முடியாது, அவர்களின் வாதங்கள் எல்லாம் இயேசுவைப் பற்றியதாகவே இருந்தது. மரியன்னையை இறைவனின் தாய் என்ற வாதத்தை முன்வைத்து வாதாடியவர்களுள் தூய அத்தனாசியார் மிக முக்கியமானவர். இந்த வாதத்தின் போது அவர் ஒரு தியாக்கோனாகவே (திருத்தொண்டர்) இருந்தார். அன்னை மரியா இறைவனின் தாய் என்பதற்கு லூக்காவின் வரிகள் மிக முக்கியமானவையாக கோடிடப்பட்டன (காண். லூக் 1,43 καὶ πόθεν μοι τοῦτο ἵνα ἔλθῃ ἡ μήτηρ τοῦ κυρίου μου πρὸς  ἐμέ; ஆக ஏன் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வந்திருக்க வேண்டும்?||). இது நம் திருச்சபையின் விசுவாசம், எம் முன்னோர்களின் விசுவாசம், இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ் விசுவாசம் நமக்கு நன்மையைத்தான் தந்துள்ளது, இந்த விசுவாச சத்தியம் எம்மையும் இறைவனை சுமப்பவர்களாக இருக்க ஓர் அழைப்பை விடுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமல்ல பல கத்தோலிக்க திருச்சபைகள் இந்த விழாவை மிக முக்கியமான விழாவாக கொண்டாடுகின்றன.  
மேலும் வாசிக்க இங்கே சொடுக்குக: 

 முதல் வாசகம்: எண்ணிக்கை 6,22-27
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 66
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 4,4-7
நற்செய்தி லூக்கா 2,16-21

எண்ணிக்கை 6,22-27
22ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 23நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை; 24'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! 25ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! 26ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' 27இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

இந்த பகுதி கடவுள் ஆரோனுக்கும் அவரது புதல்வர்களுக்கும் அருளிய குருத்துவ தகமைகளை விளக்குகிறது. ஆரோன் முதல் ஏற்பாட்டில் ஆச்சரியமூட்டுகிற தலைமைத்துவங்களின் ஒருவராக காணப்படுகிறார். மோசேயோடு சேர்ந்து ஆரோனும் அவர் சகோதரி மிரியமும் மிக முக்கியமான தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள். விடுதலை பயணத்திலே மோசேயோடு இவர்கள் ஒன்றாக சேர்ந்து உழைத்தார்கள். இருப்பினும் சில வேளைகளில் மோசேக்கு எதிராக கருத்துக்களை உரைத்ததன் வாயிலாக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் விவிலியத்தில் காணலாம். யூதாவின் புதல்வர்களில் ஒருவரான லேவியின் வழிமரபில் வந்தவராக கருதப்படும் ஆரோன் இஸ்ராயேல் மக்களிடையே குருத்துவத்தையும் தலைமைக் குருத்துவத்தையும் தொடங்கி வைக்கிறார் (ஒப்பிடுக வி.ப 7,1-25). ஆரோனைப் பற்றியும் அவரது புதல்வர்களைப் பற்றியதுமான தரவுகள் அதிகமாக இணைச்சட்ட வரலாற்று புத்தகங்களிலே காணப்டுகிறது (முதல் ஐந்து நூல்களில்). பிற்கால இறைவாக்கு புத்தகங்களில் இவர்களை பற்றிய குறிப்புக்கள் இல்லாமையும் அத்தோடு செதோக்கியர் என்ற இன்னொரு குருத்துவ குடும்பத்தைப் பற்றிய தரவுகள் நமக்கு பல கேள்விகளையும் கூடவே விடைகளையும் தருகின்றன (ஒப்பிடுக எசேக் 40,46). சிலர் ஆரோனை குருவாக பார்காமல் அவரை மோசேயின் சக தலைவராக பார்க்க வேண்டும் என்றும் வாதாடுகின்றனர். புதிய ஏற்பாடு ஆரோனுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. சில வேளைகளில் அவரை பொன்கன்றுக் குட்டிக்கு தவறான வழிபாடு செய்தவராகவும் சாடுகிறது (காண்க தி.பணி 7,40). அதேவேளை எபிரேயர் திருமுகம் (புத்தகம்) ஆரோனின் குருத்துவத்தை ஏற்றுக்கொண்டாலும் அது கிறிஸ்துவின் குருத்துவத்திற்கு இணையாகாது என்கிறது (எபி 7,11). 
எது எவ்வாறெனினும் ஆரோன் ஒரு தெரிவு செய்யப்பட்ட குருவாக விடுதலைப் பயண வரலாற்றிலே காட்டப்படுகிறார். ஆரோன், மோசே மற்றும் மிரியத்தைப்போல் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்லாமலே வெளியில் மரிக்கிறார்கள். இதன் வாயிலாக, கடவுள் மனித குருத்துவத்திற்கு கட்டுப்பட்டவர் அல்லர், அத்தோடு தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தம் தண்டனையை நிச்சயமாக பெறுவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை காணமுடிகிறது. 
இன்றைய பகுதியிலே வருகின்ற ஆரோனின் ஆசீர் என்கிற நிகழ்வு சரியான இடத்திலே பதியப்பட்டுள்ளது. ஆரோனின் ஆசிர் மூலம் இஸ்ராயேலுக்கு தங்களின் விசேட அழைப்பு நினைவூட்டப்படுகிறது. ஆரோனின் ஆசீர் வெறும் வார்த்தைகள் அல்ல மாறாக இந்த வார்த்தைகளுக்கு பின்னால் ஆழமான இறையியல் நிறைந்துள்ளது. இங்கே இந்த ஆசீர்வாதங்கள் முன்னிலையை, (இரண்டாம் ஆளை, நீ-நீங்கள்) ஒருமையாக (நீ) நினைத்து வழங்கப்படுகிறது ஆனால் இது பலரைக் குறிக்கும் (நீங்கள்). ‘உனக்கு’ என்பது ‘உங்களுக்கு’ என்று பொருள் படும். இந்த பகுதியை ஆறு பிரிவுகளாக பிரித்து நோக்கலாம்.

அ. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கிறார் (יְבָרֶכְךָ יְהוָה): கடவுளின் ஆசீர்வாதம் அவர் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குறுதியை மையப்படுத்தி நினைவூட்டுகிறது. தந்தையர்கள் தங்கள் மக்களை (மகன்களை) ஆசீர்வதிப்பது வழக்கம் (காண்க தொ.நூல் 27,27-29). கடவுளும் ஆதி மனிதன் ஆதாமை தன் மகனாக கருதி ஆசீர்வதித்தார் (தொ.நூல் 1,28). ஆதாமின் கீழ்படியாமையே அவனுக்கு சாபத்தை கொணர்ந்தது, இருப்பினும் ஆபிரகாம் மூலமாக இந்த ஆசீர் மீள வாக்களிக்கப்பட்டது. முதல் ஏற்பாட்டில் ஆசீர் என்பது நிறைவான வாழ்வைக் குறிக்கும் அதாவது பல பிள்ளைகள், நீடிய ஆயுள், பல மடங்கான சொத்துக்களும் கால்நடைகளும், போன்றவைகளுமாகும். இவையில்லாதவர் கடவுளால் ஆசீர் பெற்றவராக கருதப்படவில்லை, அதேவேளை இவைகள் ஆசீரின் அடையாளங்களாக மட்டுமே கருதப்பட்டன. 

ஆ. கடவுள் உங்களை பாதுகாக்கிறார் (יִשְׁמְרֶךָ): கடவுளின் பாதுகாப்பும் இஸ்ராயேல் மக்களுக்கு அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவூட்டியது. தங்களை காக்கிறவர் கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை இஸ்ராயேல் மக்களிடையே ஆழமாக காணப்;பட்டது (காண்க தி.பா 121,7-8). இந்த காத்தல் அடையாளம் புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவிற்கு இறை அடையாளமாக கொடுக்கப்பட்டது. 
(7ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.)

இ. கடவுள் தம்திருமுக ஒளியை உம்மீது ஒளிரச் செய்வாராக (יָאֵר יְהוָ֧ה פָּנָיו אֵלֶיךָ): கடவுளுடைய முகம் என்பது இங்கே அவருடைய பிரசன்னத்தையே குறிக்கிறது. இதே பிரசன்னம்தான் அன்று மேகத்தூணாகவும் நெருப்புத்தூணாகவும் பாலைவனத்திலே காட்டப்பட்டது. திருமுக ஒளியைக் காட்டியருளும் என்பது, மக்கள் மீது அன்பு பாராட்டி அவர்களை மீட்பதற்கும் சமனாகும் (காண்க தி.பா 31,16).
(16உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.)

ஈ. உன்மீது அருள் பொழிவாராக (וִֽיחֻנֶּֽךָּ): ஆண்டவருடைய அன்பின் வெளிப்பாடே அவர் வழங்கும் அருள். ஆண்டவர் ஒருவரை ஆசீர்வதிக்கிறார் என்றால் அவர் ஆண்டவரின் அருளைப் பெறவேண்டும். அத்தோடு ஆண்டவர் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரமும் ஒருவர் ஆண்டவரின் அருளுக்கு தகுதியாகிறார். இது மக்கள் ஆண்டவர்மேல் அதிகாரமுள்ளவர்கள் என்பதைக் காட்டவில்லை மாறாக, ஆண்டவர் தன்னுடைய உடன்படிக்கையை மீறாதவர் என்பதைக் காட்டுகிறது.  

உ. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்புவாராக (יִשָּׂא יְהוָה ׀ פָּנָיו אֵלֶיךָ): ஆண்டவரின் திருமுகம் என்பது ஆண்டவரின் பிரசன்னத்தையே எபிரேய மொழியில் குறிக்கிறது. ஆண்டவரின் திருமுகம் ஒருவரை நோக்கி திரும்புகின்ற போது அங்கே ஆண்டவர் அந்த நபரை தன்னுடைய கரிசனையில் எடுக்கிறார் என்பது பொருள். ஆரோனின் ஆசீர் இதனையே அந்த ஆசீர் பெறுகிறவர்களுக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவர் தன் முகத்தை மறைத்தால் அது அவர்களை ஆண்டவர் கைவிட்டுவிட்டார் என்பதைக் குறிக்கும். (פָּנָיו அவரது முகம்).

ஊ. ஆண்டவர் உனக்கு அமைதி அளிப்பாராக (יָשֵׂם לְךָ שָׁלוֹם): அமைதி இஸ்ராயேல் மக்களிடையே இன்று வரை எதிர்பார்கப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான ஆசீர்வாதம். (שָׁלוֹם ஷலோம் அமைதி). அமைதியைத்; தருபவர் கடவுள் ஒருவரே என்று ஆசிரியர் தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார். எபிரேயத்தில் அமைதி என்பது சமாதானத்தையும் தாண்டி, நிறைவு, முழுமை, வளர்ச்சி, நன்மைத்தனமான வாழ்வு என்ற பல அர்த்தத்தைக் கொடுக்கிறது. (தமிழிலும் அமைதி என்பது மிகவும் ஆழமான சொற்பதம் என்பதை நாம் மறக்கக் கூடாது). மனிதர் தருகின்ற அமைதி போலன்றி, கடவுள் தரும் அமைதி முழுமையான அமைதி என்பதை இஸ்ராயேலர் நன்கு உணர்ந்திருந்தனர் (லேவி 26,6: நீதி 16,7)

ஆரோனின் ஆசீர் இரண்டு முக்கியமான பண்புகளைக் கொண்டுள்ளது. முதலாவது இது கவிநடையில் அமைந்துள்ளது, அத்தோடு மூன்று வரிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. 
இரண்டாவது வரி முதலாவது வரியை விட நீண்டதாக அமைந்துள்ளது. இரண்டாவது இது கடவுளுடைய திருமுகத்தை இரண்டு தடவை நினைவூட்டி அதன் முக்கியத்;துவத்தைக் காட்டுகிறது. கடவுளுடைய புனித பெயரை (யாஹ்வேஹ் יהוה) மூன்று தடைவை இந்த ஆசீர் பாவிக்கிறது. சில கத்தோலிக்க ஆய்வாளர்கள் இந்த ஆசீர் திருத்துவத்தின் ஆசீர் எனவும் சார்பு வாதாடுகின்றனர் ஆனால் இந்த ஆசீர் மிக பழைமையான ஆசீர் என்பது மட்டும் நிச்சயமாக புலப்படுகிறது. இந்த ஆசீர்வாதங்கள் பல முறை விவிலியத்தில் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம், தூய பவுலும் தனது கடிதங்களில் இதனையே சிறு மாற்றங்களுடன் பாவிக்கின்றார் (காண். உரோ1,7: 1கொரி 1,3: 2திமோ 1,2). இஸ்ராயேலர் தங்களுடைய நாளாந்த வாழ்கையில் இன்றும் இதனை திரும்ப திரும்ப பாவிக்கின்றனர். 

திருப்பாடல் 66
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல்)
1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா) 
2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா) 
3கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 
4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா) 
5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 
6நானிலம் தன் பலனை ஈந்தது நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 
7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

இந்த திருப்பாடல் ஆரோனின் ஆசீரை வார்த்தைகளில் ஒத்திருக்கிறது. மிக அழகான வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடலை அறுவடை நாள் பாடல் என்று சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். முதல்வரும் மக்களும் மாறி மாறி பாடுவது போல இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது (நம்முடைய நாளாந்த திருப்புகழ்மாலை திருப்பாடல்களைப்போல). இறுதியாக இஸ்ராயேலின் கடவுளின் ஆட்சிக்குள் இந்த முழு உலகும் ஈர்க்கப்பெறுவதாக என்ற பாடகர் தலைவiரால் ஆசிக்கப்படுகிறது. பாடகர் தலைவர்க்கு, நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல் என்று இதன் தொடக்கவுரை ஆரம்பிக்கின்றது. இது பிற்கால இணைப்பாக இருக்கலாம். (לַמְנַצֵּח בִּנְגִינֹת מִזְמוֹר שִׁיר׃). திருப்பிக் கூறல் கவிநடை இங்கே நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

வ.1: கடவுளுடைய ஆசீருக்கு அவர் முதலில் இரக்கம்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். கடவுளுடைய ஆசீர் என்பது அவரது திருமுகத்தின் ஒளி மக்கள் மீது வீசப்படுவதாகும் என்ற திருப்பிக்கூறல் அமைப்பில் விளக்கப்பட்டுள்ளது. (ஆரோனின் ஆசிருடன் ஒப்பிடுக). இந்த வரியின் முடிவில் சேலா (סֶלָה), இதனுடைய சரியான அர்த்தத்தை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. 
இது பாடர்களுக்கான ஒரு குறியீட்டு சொல்லாக இருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர்.

வ.2: கடவுளின் வழிதான் (דַּרְכֶּךָ) உமது மீட்பு (יְשׁוּעָתֶךָ) அதனை உலகம் மற்றும் மக்களினத்தார் அறிந்துகொள்வர். இது கடவுளின் இரக்கத்தால் அதாவது அவரது திருமுக ஒளியால் நடைபெறும் என்கிறார் ஆசிரியர். 

வ.3: மக்களினங்கள் கடவுளை புகழவேண்டும் இதனை நோக்கித்தான் ஒவ்வொரு இஸ்ராயேலருடைய வாழ்வும் அமைய வேண்டும், இதனை ஆசிரியர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனையே இங்கே தெளிவு படுத்துகிறார். இங்கே மக்களினங்கள் என்பது அனைத்து உலக மக்களையும் குறிக்கிறது (עַמִּים அமிம்). கடவுளுக்கும் சாதி பார்க்கின்றவர்கள் இதனை உணர்ந்தால் நல்லது. 

வவ.4-5: தம் நாட்டினர் வேற்று நாட்டினர் என்ற வேறுபாடு இஸ்ராயேல் மக்களிடையே தொன்று தொட்டு இருந்துகொண்டே இருந்தது. இதிலே தம் மக்களை கடவுளின் நேசமான மக்களாக இவர்கள் கருதினார்கள், ஆனால் இந்த பாடலின் மூலமாக வேற்று நாட்டினரும் இஸ்ராயேல் மக்களின் மதிப்புக்குரியவர்கள் என்பது அக்காலத்தில் வழக்கிலிருந்திருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. அத்தோடு தம்முடைய கடவுள்தான் அனைத்து மக்களின் கடவுள் என்பதையும் இவர் ஏற்றுக்கொள்கிறார். 

வ.6: நிலம் தக்க காலத்தில் பலனைத் தருவது ஆண்டவருடைய ஆசீராகக் கருதப்பட்டது. நம்பிக்கை என்பது அதிசயத்தை எதிர்பார்ப்பதல்ல மாறாக இயற்கையின் சீரான ஓட்டத்தை எதிர்பார்ப்பதே என்கின்ற யதார்த்தத்தை தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். 

வ.7: இந்த இறுதி வசனத்திலும் உலகின் கடையெல்லை மக்களை உள்வாங்குகிறார் ஆசிரியர். யார் இந்த கடையெல்லை மக்கள் என்பது தெளிவாக இல்லை. இது தூர தேசத்து மக்களை குறிப்பதற்கான அடைமொழியாக இருந்திருக்கலாம். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளை நம்புதல் என்ற பொருளைத் தருகிறது. 

கலாத்தியர் 4,4-7
4ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். 6நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. 7ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல் பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

பவுல் தனது கைப்பட எழுதிய கடிதமாக அதிகமானவர்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். என்ன காரணத்திற்காக, யாருக்கெதிராக இக்கடிதத்தை ஏழுதினார் என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. சிலர், கிறிஸ்தவர்கள் மீண்டும் யூத மதத்திற்கும் சட்டங்களுக்கும் உட்பட வேண்டும் என்று கூறியும், பவுலுடைய திருத்தூதர் பணியைப்பற்றி பல கேள்விகளையும் எழுப்பி வந்ததாக நம்பப்படுகிறது. இவர்களுக்கெதிராகவும் ஆரம்ப கால திருச்சபையின் நம்பிக்கைகளை பாதுகாப்பதற்காகவும் பவுல் இந்தக் கடிதத்தை எழுதினார் என எடுக்கலாம். இக் கடிதத்தின் காலத்தை கணிப்பது மிகக் கடினமாக உள்ளது, கி.பி 50கள் என சிலர் இக்காலத்தை கணிக்கிறார்கள். புதிய ஏற்பாட்டு திருமுக இலக்கியங்களில் அன்னை மரியாவை பற்றிய சிந்தனைகள் குறைவாகவே உள்ளன. பவுல் மரியன்னையை மறைமுகமாக கோடிட்டுக் காட்டும் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று. 

அ. காலம் நிறைவேறியபோது என்பதை காலம் கனிந்தபோது அல்லது தகுந்த காலத்தில் என்று மொழிபெயர்கலாம் (τὸ πλήρωμα τοῦ χρόνου). காலம் என்பது கிரேக்க மெய்யியலிலும் எபிரேய நம்பிக்கையிலும் மிக முக்கியமான ஒரு கருப்பொருளாக பார்க்கப்படுகிறது. கடவுள் காலத்தை கடந்தவர் அத்தோடு காலத்தினுள்ளும் இயங்குபவர். காலத்தின் அசைவுகளும் ஓட்டங்களும் கடவுளை கட்டுப்படுத்த முடியாது. இன்று காலத்தையும் மனிதனால் தப்ப முடியும் அல்லது கடந்து பயனக்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்து பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் முன்னெடுக்கின்றனர். கால இயந்திரம் என்ற பெயரிலும் பல கதைகளும், திரைப்படங்களும் தமிழிலும் வெளிவருவதனைக் காண்கின்றோம். நடிகர் சூர்யாவின் 24 என்ற திரைப்படம் இதற்கு நலல ஒரு உதாரணம். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவிலிய ஆசிரியர், காலம் என்ற சிந்தனையும் கடவுளின் பார்வையில் சாதாரணமானதே என்பதை இலகுவாக கணிக்கிறார். தகுந்த காலம் என்பது கடவுளின் கணிப்பிலே தங்கியுள்ளது. இந்த மதத்தின் நம்பிக்கையிலும் சுப நேரம், தீய நேரம் என்ற சிந்தனையும் இப்படியான ஒரு மெய்யியலை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வரியில் பவுல் குறிப்பிடுகின்ற நிறைவான நேரம் என்பது கடவுளுடைய திருவெளிப்பாட்டை குறிப்பது என்பதுபோல் வாதிடுகிறார்.  

ஆ. பெண்ணிடமிருந்து: (ἐκ γυναικός எக் குனாய்கோடஸ்) இந்த வாதம் லூக்காவின் நற்செய்தியின் கபிரியேல் தூதர் மரியாவுக்கு சொன்ன மங்கள வார்த்தையை ஞாபகப்படுத்துகிறது. இது இயேசுவுக்கு எதிராக சுமத்தப்பட்ட பிரதிவாதங்களை தகர்க்க பவுல் பாவித்த முக்கியமான விசுவாச பிரமாணங்களில் ஒன்று. அத்தோடு திருச்சட்டத்தை பவுல் இணைத்து இயேசு திருட்சட்டதிற்கு (தோறா) எதிரானவர் என்றில்லை என்பதை காட்டுகிறார். அதேவேளை சட்டத்தின் பிடியிலிருந்தும் அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தேவை இயேசுவுக்கு இருக்கிறது எனவும் காட்டுகிறார்.  

இ. பவுல் தன்னுடைய திருமுகங்களில் ஆவியின் உந்துதல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் அதனையே இங்கேயும் செய்கிறார். இயேசு ஆண்டவர் முதல் முதலாக பாவித்த ஷஅப்பா| என்ற அரமேயிக்க சொல்லை (காண். மாற் 14,36) முதல் தடவையாக பாவிக்கிறார், இச் சொல்லை உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பாவிப்பார் (உரோ. 8,15). இங்கே பாவிக்கப்படுகின்ற ஷஅப்பா| எனும் சொல் (אַבָּא) 'என் அப்பா' என்பதைக் குறிக்கும், ஆனால் பவுல் இங்கு இச்சொல்லை பொதுச் சொல்லாகப் பாவிக்கிறார். 

உ. அடிமைகள் அல்ல உரிமை குடிமக்கள் என்பது கலாத்தியர் திருமுகத்தின் முக்கியமான வாதம். இந்த உரிமைக் குடிமக்களாகும் தகுதியை கடவுள் இலவசாமக இயேசுவின் வாயிலாக தந்துள்ளார் என பிரதிவாதங்களை முன்வைப்பவர்களுக்கு கூறுகிறார் பவுல்.


லூக்கா 2,15-21
15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, 'வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டு, 16.அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17. பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18.அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19.ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 20.இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. 21.குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

(கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ) கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது)
லூக்கா அவதானமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம். மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், மெசியாவாகவும் காட்டுகிற அதேவேளை, லூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லது அனைவரின் கடவுளாகவும் காட்டுவார். லூக்காவின் கடவுள் அனைவரினதும் கடவுள். இயேசுவின் பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால், இயேசுவை அவர் எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும். லூக்கா சின்கிறேசிஸ் (ளுலnஉசநளளை) என்ற ஒரு கிரேக்க இல்க்கிய வகையை இங்கே பாவிக்கிறார். அதாவது லூக்கா யோவானையும் இயேசுவையும் ஒப்பிடுகிறார், இறுதியாக இயேசுவின் பக்கத்திலுள்ள உயர்வுகளையும் விசேட தன்மைகளையும் காரணம் காட்டி அவர்தான் மெசியா என்கிறார். லூக்கா நற்செய்தியின் இரண்டாம் அதிகாரம்இயேசுவின் பிறப்பு, இடையர்களும் வானதூதர்களும், இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல், நாசரேத்திற்கு திரும்பிச் செல்லுதல், மற்றும் கோவிலில் சிறுவன் இயேசு என்ற விதத்தில் இயேசுவின் முழு குழந்தைப் பருவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இன்றைய பகுதியிலே,

அ. வானதூதர்கள்.| (ἄγγελος ஆன்கலோஸ்) இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக் காட்டுகிறார். மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும், கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம் காட்ட, லூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார். வானதூதர்கள் முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் (מַלְאָךְ மல்அக்), சில அதிவிசேடமான இடங்களில் கடவுளின் பிரசன்னத்தையும் காட்டுகிறவர்களாகவும் வருகிறார்கள். புதிய ஏற்பாட்டு காலத்தில் வானதூதர்கள் பற்றிய அறிவு நன்கு வளர்ந்திருந்தது. 
இதற்கு கிரேக்க இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நற்செய்தியில் வருகின்ற வானதூதர்கள் கடவுளின் செய்தியை கொண்டுவருகின்ற முக்கியமான செய்தியாளர்களாக 
இருக்கிறார்கள்.

ஆ. இடையர்களின் பெத்லகேம் வருகை: (ποιμένες  பொய்மெனஸ்) இடையர்கள் பற்றி இயேசு பிறந்த காலத்தில் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை, அவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல் நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லை. கடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவே காட்டினார். தலைவர்களையும் நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார், இயேசுவும் தன்னை நல்ல ஆயன் என பல வேளைகளில் வெளிப்படுத்தினார் (✽காண்க யோவான் 10,1). புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக முக்கியமான வசனம் இது. பேதுருவையும் அவர் உடன்பணியாளர்களையும், ஆயர்களாகவே இருக்கச்சொல்கிறார். லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ஒன்று: நல்ல ஆயரின் பிறப்பு ஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இரண்டு: தாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும் லூக்கா அறிவிக்கிறார்.
(✽ Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός நானே நல்ல ஆயன்
இ. இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம் சிந்திக்க வைக்கிறது. ஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம் அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறது. அத்தோடு அவர்கள் விரைவு ஒர் ஆவலைக் காட்டுகிறது. சோம்பல்தான் பல தோல்விகளுக்கு காரணம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். 

ஈ. பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்: யாருக்கு சொன்னார்கள், மரியாவுக்கும் யோசேப்புக்கும் என்று நினைக்கிறேன். யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இந்த மற்ற அனைவரும் யார்? (πάντες οἱ ἀκούσαντες கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம். வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல். (θαυμάζω தௌமாட்சோ: வியப்படை, ஆச்சரியப்படு, மகிழ், பயங்கொள், மரியாதைகொள், வணங்கு) ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின் இந்த பதிலுணர்வு, வெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

உ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்: லூக்காவின் மரியா சாதாரண இளம் பெண்ணல்ல. அவர் திருச்சபையின் முன்னோடி. நம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்கா. மரியா பல வேளைகளில் இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவது, மரியாவை யார் எனக் காட்டுகிறது. 

ஊ. இடையர்களின் ஆட்டமும் பாட்டும், கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக் காட்டுகிறார். எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லி, கடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும் சொல்கிறார்.

வ.20: மரியாவின் வயிற்றில் வந்தவர்தான் இயேசு என ஆணித்தரமாக சொல்கறார் லூக்கா. συλλημφθῆναι αὐτὸν ἐν τῇ κοιλίᾳ ‘அவள் கர்பத்தில் கருத்தரித்த அவரை’ என்று மொழிபெயர்கலாம். அவர் கர்ப்பத்தில் கருத்தரித்த அவர்தான் இயேசு எனக் காட்டுவதன் மூலம் மரியா என்பதவர்தான் இயேசுவினுடைய தாய் என விரிவாகவும், நேர்தியாகவும் சொல்கிறார் லூக்கா. மரியா இறைவனின் அல்லது ஆண்டவரின் தாய் என்பதற்கு இதைவிட வேறு வசனங்கள் தேவையில்லை. 

வ.21: எட்டாம் நாள் இயேசுவிற்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது, இப்படியாக அவருடைய யூத சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இயேசு ஆபிரகாமின் சட்டங்களை நிறைவேற்றுகிறார், எனவே அவர் சடங்கிலும் ஆபிரகாமின் மகனாகிறார். இயேசு என்ற பெயரே அவருக்கு வைக்கப்படுகிறது, இவ்வாறு கடவுளின் திட்டமும் நிறைவேற்றப்படுகிறது. ஆக இயேசு கடவுளின் மகனாகிறார். Ἰησοῦς ஏசுஸ் என்ற கிரேக்க சொல் கடவுள் மீட்கிறார் அல்லது கடவுள் மீட்பராயிருக்கிறார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இது எபிரேய அல்லது அரமேயிக்க ஜெசுவா என்ற சொல்லுடன் தொடர்பு பட்டது (יְהוֹשׁוּעַ). 

இறைவனின் தாயான மரியா, 
இறைவனை சுமந்து காட்டியவர், 
இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. 
இறைவனை தமது வார்தையாலும், வாழ்க்கையாலும், சுமப்பாவர்களும் மரியாள்களே, அவர்களும் இறைவனின் தாய்மார்களே!!!

இந்த புதிய ஆண்டில் புதிதாய் பார்ப்போம், கேட்போம், சுவாசிப்போம்,
அனைத்திலும் புதிதாய் வாழ்வோம்.
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! 
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! 
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!'



மி.ஜெகன் குமார் அமதி 
தொடர்பகம், யாழ்ப்பாணம்,
வியாழன், 29 டிசம்பர், 2016

வெள்ளி, 23 டிசம்பர், 2016

கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ): Christmasn Moring Mass



கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ)

முதல் வாசகம்: எசாயா 62,11-12
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 96
இரண்டாம் வாசகம்: தீத்து 3,4-7
நற்செய்தி: லூக்கா 2,15-20 



எசாயா 62,11-12
11உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: 'மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: 
இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.' 12'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.

எசாயாவின் 62வது அதிகாரம், மிகவும் அழகிய பாடல் போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் முழுவதும் நம்பிக்கை வசனங்களால் நிறைந்துள்ளது. அதேவேளை மூன்றாம் எசாயாவின் இறையியல் சிந்தனைகளை இப்பகுதி தாங்கி வருகிறது. எவ்வாறு முழு உலகும் எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டதோ, அதே போல, அவளுடைய மீட்பையும் காணும் என்பது மையக்கருத்து. 

வ.11: ஷஉன் மீட்பு வருகிறது| (יִשְׁעֵךְ בָּא யிஷ்எஹ் பா) இந்த சொல்லுக்கும் இயேசு என்கிற சொல்லுக்கும் வேர்ச்சொல்லில் தொடர்பிருக்கிறது. கைவிடப்பட்டவர்கள் என அறியப்பட்ட மக்கள் 
இனி தூயவர்கள் என அறியப்படுவார்கள். ஒரு மக்கள் போரில் தோற்றால் அவர்கள் தெய்வமும் தோற்றதற்கு சமம். கடையெல்லைவரை என்று சொல்லி ஆசிரியர் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார். இஸ்ராயேல் வீழ்த்தப்பட்டபோது அனைவரும் அதனைக்கண்டார்கள் ஆகவே மீட்பு வருகின்ற வேளையிலும் அனைவரும் அதனை அறியவேண்டியவர்களாக இருக்கிறார்கள். 
ஆண்டவரின் வெற்றிப்பரிசு (שָׂכָר) என்பது இங்கே போர் வெற்றிப்பொருட்களைக் குறிக்கிறது. இது அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருதலைக் குறிக்கலாம். அடிமைகளாக 
இருக்கிறவர்கள் என்ன ஊதியத்யைப் பெற்றாலும் அது விடுதலை என்ற உன்னதமான பரிசுக்கு நிகராக முடியாது. அதேபோல 'கைமாறு' என்ற சொல்லும் (פְּעֻלָּה செயலின் பயன்) இங்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்க்கு மேலாக சீயோனுக்கு மீட்பு (יָשַׁע) என்ற செய்தி வருகிறது, இதற்கு ஒத்த கருத்தாகத்தான் மற்ற சொற்பதங்கள் பாவிக்கப்படுகின்றன.

வ.12: இஸ்ராயேல் தூய மக்களினமாக மாற்றம் பெருகிறது (עַם־הַקֹּדֶשׁ) இங்கே இனி இஸ்ராயேல் மக்களும் அவர்கள் கடவுளும் தோற்றவர்கள் அல்ல என எசாயா நம்பிக்கை கொடுக்கிறார். அழிக்கப்பட்ட எருசலேமிற்கு புதுப்பெயர் கொடுக்கப்படுகிறது, ஷதேடப்படுகிற நகர் (பிரசித்திபெற்ற), கைவிடப்பட்ட நகர் அல்ல.|


தீத்து 3,4-7
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். 7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார். 

திருத்தூதர் பவுலுடைய மேய்புப்பணி மடல்களில் ஒன்றான தீத்துவிற்கான திருமுகம், செய்தியிலும் இறையியலிலும் திமோத்தேயுவிற்கான மடல்களை ஒத்திருக்கிறது. 

அ. ஷநம் மீட்பராம் கடவுள்| (σωτῆρος ἡμῶν θεοῦ சோடேரோஸ் ஹேமோன் தேயு) என்பது 
இயேசுவுக்கு ஆரம்ப காலத்திலே வழங்கப்பட்ட சிறப்பு பெயர் சொற்கள். இங்கே பவுல் இயேசுவை முதல் ஏற்பாட்டு கடவுளாக காண்கிறார். இயேசுவை கடவுளாக கண்டது திருச்சபை தந்தையர்களின் கண்டுபிடிப்பு என்ற பிற்கால பேதகத்திற்கு இந்த சொற்பதம் நல்லதொரு விசுவாச சான்று. 

ஆ. நன்மையும் மனித நேயமும்| (ἡ χρηστότης καὶ ἡ φιλανθρωπία) இவை பவுல் மேய்புப்பணி நூல்களிலே அதிகமாக பயண்படுத்தும் சொற்றொடர். இது நன்மையையும் பரிவையும் பிரிக்க முடியாது எனக் காட்டுகிறது. 

ஆ. கடவுளிடம் இருந்து பெறும் எந்தக் கொடைக்கும் மனிதர் உரிமை கோர முடியாது, அது கடவுளின் இரக்கத்தினால் மட்டுமே பெறப்படுகிறது என்கிறார் பவுல். தீத்துவை (ஆயர்களை) அதனைச் செய்யச் சொல்கிறார். கடவுள் மனித குலத்தை மீட்டது தூய ஆவியால் என்பதன் மூலம், கிறிஸ்தவர்கள் பாரபட்சத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்கிறார். 

பவுல் தன்னுடைய இறுதி காலம் நெருங்கியதை உணர்ந்தவராக, இனி வரும் காலங்களில் திருச்சபையை வழிநடத்துகிற ஆயர்கள் எவ்வாறு அக்கால சவால்களை சந்திக்க வேண்டும் என்று இம்மடல்களை எழுதியதாக பாரம்பரியம் கருதுகிறது. இம்மடல்களை வாசிக்கும் போது, அக்கால பிரச்சனைகளும், அக்கால கிறிஸ்தவ நம்பிக்கையும் நமக்கு புரியும். கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் இருந்து விடுபட்டு முழு உலகை அடைவதனை இங்கு காணலாம்.

லூக்கா 2,15-20
15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, 'வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டு, 16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 20இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. 21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா அவதாணமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம். மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், மெசியாவாகவும் காட்டுகிற அதேவேளை, லூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லது அனைவரின் கடவுளாகவும் காட்டுவார். லூக்காவின் கடவுள் அனைவரினதும் கடவுள். இயேசுவின் பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால், இயேசுவை அவர் எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும். லூக்கா சின்கிறேசிஸ் (Syncresis) என்ற ஒரு கிரேக்க இல்க்கிய வகையை இங்கே பாவிக்கிறார். அதாவது லூக்கா யோவானையும் இயேசுவையும் ஒப்பிடுகிறார், இறுதியாக இயேசுவின் பக்கத்திலுள்ள உயர்வுகளையும் விசேட தன்மைகளையும் காரணம் காட்டி அவர்தான் மெசியா என்கிறார். லூக்கா நற்செய்தியின் இரண்டாம் அதிகாரம்: 
இயேசுவின் பிறப்பு, இடையர்களும் வானதூதர்களும், இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல், நாசரேத்திற்கு திரும்பிச் செல்லுதல், மற்றும் கோவிலில் சிறுவன் இயேசு என்ற விதத்தில் 
இயேசுவின் முழு குழந்தைப் பருவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றைய பகுதியிலே,

அ. ஷவானதூதர்கள்.| (ἄγγελος ஆன்கலோஸ்) இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக் காட்டுகிறார். மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும், கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம் காட்ட, லூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார். வானதூதர்கள் முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் (מַלְאָךְ மல்அக்), சில அதிவிசேடமான இடங்களின் கடவுளின் பிரசன்னத்தையும் காட்டுகிறவர்களாகவும் வருகிறார்கள். புதிய ஏற்பாட்டு காலத்தில் வானதூதர்கள் பற்றிய அறிவு நன்கு வளர்ந்திருந்தது. 
இதற்கு கிரேக்க இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நற்செய்தியில் வருகின்ற வானதூதர்கள் கடவுளின் செய்தியை கொண்டுவருகின்ற முக்கியமான செய்தியாளர்களாக 
இருக்கிறார்கள்.

ஆ. இடையர்களின் பெத்லகேம் வருகை: (ποιμένες  பொய்மெனஸ்) இடையர்கள் பற்றி இயேசு பிறந்த காலத்தில் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை, அவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல் நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லை. கடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவே காட்டினார். தலைவர்களையும் நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார், இயேசுவும் தன்னை நல்ல ஆயன் என பல வேளைகளில் வெளிப்படுத்தினார் (✽காண்க யோவான் 10,1). புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக முக்கியமான வசனம் இது. பேதுருவையும் அவர் உடன்பணியாளர்களையும், ஆயர்களாகவே இருக்கச்சொல்கிறார். லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ஒன்று: நல்ல ஆயரின் பிறப்பு ஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இரண்டு: தாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும் லூக்கா அறிவிக்கிறார்.

(✽ Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός நானே நல்ல ஆயன்

இ. இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம் சிந்திக்க வைக்கிறது. ஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம் அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறது. அத்தோடு அவர்கள் விரைவு ஒர் ஆவலைக் காட்டுகிறது. சோம்பல்தான் பல தோல்விகளுக்கு காரணம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். 

ஈ. பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்: யாருக்கு சொன்னார்கள், மரியாவுக்கும் யோசேப்புக்கும் என்று நினைக்கிறேன். யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இந்த மற்ற அணைவரும் யார்? (πάντες οἱ ἀκούσαντες கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம். வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல். (θαυμάζω தௌமாட்சோ: வியப்படை, ஆச்சரியப்படு, மகிழ், பயங்கொள், மரியாதைகொள், வணங்கு) ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின் இந்த பதிலுணர்வு, வெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

உ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்: லூக்காவின் மரியா சாதாரண இளம் பெண்ணல்ல. அவர் திருச்சபையின் முன்னோடி. நம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்கா. மரியா பல வேளைகளில் இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவது, மரியாவை யார் எனக் காட்டுகிறது. 

ஊ. இடையர்களின் ஆட்டமும் பாட்டும், கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக் காட்டுகிறார். எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லி, கடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும் சொல்கிறார்.

பிறந்த குழந்தை ஆண்டவர், நமது குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவுபடுத்துவாராக!
தன்னலத்தாலும்;, போர் வெறியாலும், சமய மூட நம்பிக்கையாலும் 
அல்லலுறும் இவ்வுலகை, குழந்தை இயேசு தன் சிரிப்பால் கழுவுவாராக!

இயேசு ஆண்டவரின் பிறப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வாழ்த்துகிறேன்!

மி. ஜெகன்குமார் அமதி
தூய மரியாள் ஆலயம், 
பன்வில, கண்டி
வெள்ளி, 23 டிசம்பர், 2016

வியாழன், 22 டிசம்பர், 2016

Sunday 25 December 2016: கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி (அ,ஆ,இ) 24,12,2015


கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி (அ,ஆ,இ)
24,12,2015

முதல் வாசகம்: எசாயா 62,1-5
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 89
இரண்டாம் வாசகம்: திருத்தூதர்பணி 13,16-17.22-25
நற்செய்தி: மத்தேயு 1,1-25  


எசாயா 62,1-5
1சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். 2பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். 5இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

எசாயாவின் 62வது அதிகாரம், சீயோனின் மகிமை என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. 
இது ஒருவகை கவிநடையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் விசேடமாக இந்த பகுதியில் சீயோன் ஒரு பெண்ணாக வர்ணிக்கப்படுகிறாள். 

வ.1: எசாயா ஆசிரியர் எதோ எதிர்காலத்திற்கான இறைவாக்கு போல இதனை பதிவு செய்கிறார். இந்த வரியின் மூலமாக எருசலேம் தற்காலத்தில் துன்பப்படுகிறது ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக மகிழ்வுறும் என்பதனைப்போல காட்சியமைக்கப்படுகிறது. சீயோன் צִיּוֹן֙ இங்கு வழக்கம்போல எருசலேமை குறிக்கிறது. வைகறை ஒளியும், சுடர் விளக்கும் நம்பிக்கையின் அடையாளங்கள், இதனை வைத்துத்தான் அக்காலத்தில் விடியலை கணித்தார்கள். 

வ.2: பிற இனத்தார் மற்றும் மன்னர்கள் என்னும் சொற்கள் இங்கே ஒத்த கருத்துச்சொற்களாக பாவிக்கப்பட்டுள்ளன. எருசலேமிற்கு ஆண்டவர் ஒரு புதிய பெயரை שֵׁם חָדָ֔שׁ சூட்டுவார் என்று சொல்லப்படுகிறது. புதிய பெயர் என்பது புதிய வாழ்வையும், புதிதான நம்பிக்கையையும் குறிக்கிறது. இஸ்ராயேலின் வெற்றி (צֶדֶק நீதி), மற்றும் அதன் மகிமை நினைவூட்டப்படுவதன் மூலமாக தற்காலத்தில் எருசலேம் தோல்வியில் துவண்டாலும், பல தாழ்மைகளை கண்டாலும் அவை நிரந்தரம் இல்லை என்பது சொல்லப்படுகிறது. 

வ.3: ஆண்டவரின் கையில் எருசலேம் மணிமுடியாகவும் עֲטָרָה, அரச மகுடமாகவும் צָנִיף
சித்தரிக்கப்படுவது எருசலேமின் மேன்மையையும் விசேட கவனிப்பையும் காட்டுகிறது. மணிமுடி மற்றும் அரசமகுடம் என்பன ஒருவரின் இறைமையை காட்டும் அடையாளங்கள். இந்த அடையாளங்கள் மூலமாக எருசலேமிற்கு நம்பிக்கை கொடுக்கப்படுகிறது. 

வ.4: எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும், அன்நியரின் படையெடுப்புக்களாலும் சீரழிக்கப்பட்டது. இதனால் அதற்கு முக்கியமான பெயர்கள் கொடுக்கப்பட்டன உ-ம். עֲזוּבָה அட்சுவாஹ்- கைவிடப்பட்டவள், שְׁמָמָה ஷெமாமாஹ்- புறக்கணிக்கப்பட்டவள். ஆனால் கடவுளின் கண்பார்வையால் இந்த பெயர்கள் மாற்றம் பெறுகின்றன. அவை: חֶפְצִי־בָהּ ஹெப்ட்சிபாஹ்- மகிழ்ச்சி, בְּעוּלָה பெவுலாஹ்- திருமணமானவள். இவை சாதாரண பெயர்மாற்றங்கள் அல்ல மாறாக வாழ்வின் முழுமையான மாற்றங்கள். 

வ.5: ஒரு இளைஞனின் திருமண அனுபவம் இங்கே உவமிக்கப்படுகிறது. இளைஞன் பலவிதமான எதிர்பார்ப்புக்களோடு தன்னுடைய திருமணத்தை அரங்கேற்றுகிறார். அங்கே புதிய உறவு, காதல், சுவாசம் என்பன அவர் இதயத்தில் ஏற்படுகிறது. இதனை எசாயா எருசலேமை மணமகளாகவும், கடவுளை திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் ஒப்பிட்டு காட்சிப்படுத்துகிறார். (உன்னை எழுப்பியவர் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு எபிரேய விவிலியத்தில் בָּנָיִךְ உன் மைந்தர் என்றே உள்ளது. இதற்கு பலர் பல அர்தங்களைக் கொடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் உன்மைந்தர் என்ற சொல்லை உன்னை எழுப்பியவர் בֹּנָיִךְ என்று மாற்றுவது. அர்த்தத்தை பொறுத்த மட்டில் இது சரியாக தோன்றினாலும் மொழியியலில் அவ்வாறு சரியாக தோன்றாது.)
திருப்பாடல் 89
நாடு இடருற்றபோது பாடியது
(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)

என்பத்தொன்பதாம் திருப்பாடல் ஐம்பத்திரண்டு வரிகளைக் கொண்ட அழகான ஒரு பாடல். இந்த பாடலை (מַשְׂכִּ֗יל) எஸ்ராகியரான ஏத்தான் אֵיתָן பாடினார் என்று இப்பாடலின் முகவுரை சொல்கிறது. இந்த ஏத்தான் ஒரு இசைக்கருவி மீட்டுகின்ற குழுவிற்கு தலைவராக இருந்திருக்க வேண்டும் என்று வாதாடப்படுகிறது. ஆனால் இவரது காலத்தை கணிப்பது சற்றுக் கடினம். அத்தோடு இவரின் இசையைவிட சாலமோனின் இசைஞானம் மேலானது என்றும் விவிலியம் கூறுகிறது (❀காண்க 1அர 4,31).
(❀எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார்.)

ஒரு குழும வியாகுலப் பாடலான, அரசரினதும் நாட்டு மக்களினதும் தோல்வி கடவுளின் தோல்விக்கு நிகரானது என நினைத்து இந்தப் பாடல் புலம்புகிறது. கடவுளிள் உலக படைப்பையும் அவருடைய வல்லமையையும் சக்தியையும் நினைவூட்டுகின்ற நல்லதொரு செய்தி. ஆனால் ஆண்டவரின் பணியாளனாகிய மண்ணுலக அரசரின் தோல்வி ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. கடவுள் தாவீதையும் அவர் வழிமரபையும் என்றென்றைக்கும் ஆசீர்வதித்துள்ளமையால் அவர்களின் தோல்விகள் கடவுள் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்க வாய்ப்பளிக்கக்கூடியவை என புலம்;புகிறார் ஆசிரியர். கடவுள் உலகை படைத்ததையும், இஸ்ராயேலர் கானான் நாட்டில் குடியேறியதையும் ஒப்பிட்டு, வெற்றி என்றும் கடவுளுக்குரியது, அதேபோல் மண்ணக வெற்றி அவர் பணியாளர்களாகிய தாவீதின் வீட்டாருக்கு இருக்க வேண்டும் என்கிறார். 
இஸ்ராயேலின் நம்பிக்கை இப்படியிருக்க, தம் நாட்டின் தலைவரும் அவர் நிலமும் ஆக்கிரமிக்கப்படுவதும் துன்பமானது என கடவுளுக்கு நினைவூட்டுகிறார். எது எவ்வாறெனினும் அனைத்து புலம்பல் பாடல்களும் இறுதியாக நம்பிக்கையை வாசகர்களுக்கு கொடுப்பதே வழக்கம் அதனையே இந்தப்பாடலும் கொண்டுள்ளது. 

திருத்தூதர்பணி 13,16-17.22-25
16அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: 'இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். 17இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்;. 

22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து 'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார்.
23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை'  என்று கூறினார்.

இந்த பகுதி பவுலுடைய முதலாவது தூதுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. எரோதின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலாபனையின் பின்னர், ஏரோது எப்படியான சாவினை தழுவினான் என திருத்தூதர் பணி காட்டுகிறது, இதன் பின்னர் தூய ஆவியார் பவுலையும் பர்னபாவையும் விசேட பணிக்கென தெரிவு செய்வதாக திருத்தூதர் பணி ஆசிரியர் (லூக்கா) குறிப்பிடுகிறார். இவ்வாறு இவர்கள் சிரியாவின் அந்தியோக்கியாவிலிருந்து சைப்பிரஸ் தீவு வழியாக பம்பிலியாவை அடைந்து பின்னர் பிசிதியாவை அடைகிறார்கள் (தற்போதைய தெற்கு துருக்கியின் இடங்கள்). இந்த பிசிதியாவிலிருந்த அந்தியோக்கியா செபக்கூடம் ஒன்றில் அவர்கள் செப வழிபாட்டில் பங்கு பெறுகிறார்கள் (காண்க தி.பணி 13,13-15: அந்தியோக்கியா என அக்காலத்தில் பல இடங்கள் பெயரிடப்பட்டிருந்தன. அந்தியோக்குஸ் என்ற பிரசித்தி பெற்ற ஒரு கிரேக்க அரசன் இந்த இடங்களை தன் பெயரில் நிறுவினான் என நம்பப்படுகிறது.). செபக்கூடத்திலே வழக்கம்போல சட்டமும் இறைவாக்கும் வாசிக்கப்பட்டதன் பின் முக்கியமானவர்கள் உரையாற்றுவது வழக்கம். இது நம்முடைய மறையுரை போல அமைந்தது. பவுலும் பர்னபாவும் விருந்தாளிகளாக இருந்ததால் அந்த வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. இந்த வேளையிலே பவுல் தன்னுடைய மிக முக்கியமான மறையுரையை ஆரம்பிக்கிறார். இதனை பவுலுடைய கன்னி மறையுரை என்றும் சிலர் பாhக்கின்றனர். மரியோன் சோர்ட்ஸ் (Marion L. Soards) என்னும் விவிலிய ஆய்வாளரின் ஆய்வுப்படி, திருத்தூதர் பணிகள் நூலில் இருபத்தி நான்கு (24) மறையுரை-உரைகள் காணப்படுகின்றன. அவற்றில் யாக்கோபு, ஸ்தேவான், பேதுரு மற்றும் பவுல் போன்றவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அத்தோடு இந்த உரைகளுக்கும் அக்கால கிரேக்க உரோமைய 
இலக்கியங்களுக்ககும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இவர் கருதுகிறார். (உசாத்துணை: Soards, Marion L., The Speeches in Acts. Their Content, Context, and Concerns (Kentucky 1994).). 

வ.16: இந்த வசனத்தை பல விதமாக நோக்கலாம். முதலாவதாக பவுல் இஸ்ராயேல் மக்களை விழிக்கிறார் (ἄνδρες Ἰσραηλῖται இஸ்ராயேல் மனிதர்களே!), இரண்டாவதாக அவர் கடவுளுக்கு அஞ்சுவோரே (οἱ φοβούμενοι τὸν θεόν) எனவும் விழிக்கிறார். இந்த இரண்டாவது விழிப்பு 
இஸ்ராயேல் மக்கள் இல்லாதவர்களை குறிக்கிறது என பல ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். (இது இஸ்ராயேல் மக்களுக்கு ஒரு ஒத்தகருத்துச் சொல்லாகக்கூட இருக்கலாம்). இதன் வாயிலாக இஸ்ராயேல் மதத்தை தழுவாமல் இஸ்ராயேல் வழிபாடுகளில் பங்கெடுத்தவர்கள் செபக்கூடங்களிலே இருந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. பவுலுடைய கையசைவு, கேட்பவர்களுடைய அவதானத்திற்கான பவுலின் அறிகுறியாக இருக்கலாம். 

வ.17: இந்த வசனத்தில் பவுல் முழு மீட்பின் வரலாற்றையும் சுருக்கமாக சொல்லிவிட்டார். 
அ. நாம் வணங்குகின்ற கடவுள் இஸ்ராயேல் மக்களுடைய கடவுள்.
ஆ. அவர் நம் மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்.
இ. அவர்கள் எகிப்தில் அன்னியர்களாக தங்கியிருந்தனர்
ஈ. அங்கே அவர்களை பெரிய இனமாக்கினார்
உ. கடவுள் தன் தோள் வலிமையினால் அவர்களை வெளியே கொணர்ந்தார். 

வ.18: பாலைவனத்தில் மக்கள் திரிந்தலைந்தது, நாற்பது வருடமாக கருதப்பட்டது. இந்த காலம் அவர்களுக்கு சோதனை மற்றும் தூய்மையாக்களுக்கான காலமாகவும் கருதப்பட்டது. நாற்பது என்பது ஒரு அடையாள இலக்கமாகவும் இருக்கலாம். 

வ.19-20: இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டை அடைய பல இன்னல்களையும் போர்களையும் சந்திக்கவேண்டியிருந்தது. கடவுள் ஏழு மக்களினங்களை அழித்துத்தான் கானானை இஸ்ராயேலருக்கு கொடுத்ததாக பவுல் உரைக்கிறார். இந்த மக்கள் கூட்டத்தின் பெயர்களை ❀இ.ச 7,1இல் காணலாம். அத்தோடு இஸ்ராயேல் 450 ஆண்டுகள் கானானை உரிமைச் சொத்தாக கொண்டதாகவும் கூறுகிறார். இந்த காலம் நீதிபதிகளின் காலமாக இருக்கலாம். இதனை பவுல் 450 ஆண்டுகள் எனக் கணக்கிடுகிறார், இந்த கணிப்பு அக்காலத்தில் பிரபல்யமாக 
இருந்திருக்கலாம். சாமுவேல் இறுதியான நீதிபதியாகவும் முக்கியமான இறைவாக்கினராகவும்
இன்றுவரை இஸ்ராயேல் வரலாற்றால் கருதப்படுகிறார்.  
(❀1நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன்கண்முன்னே விரட்டியடித்து,)

வ.21: சவுல் அரசனானது மக்களின் விருப்பத்தினாலேயே என்று பவுல் நாசூக்காக் சொல்கிறார். சவுல் நாற்பது ஆண்டுகள் அரசான்டிருக்கிறார் என்று சொல்வது அவர் நிறைவான ஆண்டுகள் ஆட்சிசெய்தார் என்பதையும் குறிக்கலாம். 

வ.22: இஸ்ராயேலருடைய மீட்பின் வரலாற்றில் தாவீது மாமன்னர் மிக முக்கியமானவர். இது பவுலுக்கு நன்கு தெரிந்திருந்தது. திருத்தூதர் பவுல், அரசர் சவுலுடைய பெஞ்சமின் குலத்தை சார்ந்தவர் இருப்பினும் யூதா குலத்தின் தாவீதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர் வரலாற்றை பொதுவாக பார்க்கிறார் என்பதற்கான நல் அடையாளம். அத்தோடு தாவீதை நியாயப்படுத்தி, பவுல் இறைவாக்குகளையும் கோடிடுகிறார் (❀தி.பா 90,20: ❀❀). இந்த இறைவாக்குகள் மூலமாக தாவீதுதான் உண்மையாக தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் என நிரூபிக்கப் பார்க்கிறார். 
(❀20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்)
(❀❀14ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை என்றார்.)

வ.23: இந்த வரிதான் பவுலுடைய இந்த உரையின் மிக முக்கியமான நோக்கம். அதாவது தாவீதின் உண்மை வாரிசு இயேசு அவரிலேதான் தாவீதின் அரியணை சாகவரம் பெறுகிறது என்கிறார். பவுல் இயேசுவை 'மீட்பர் இயேசு' (σωτῆρα Ἰησοῦν சோடேரா ஏசூன்) என்று தைரியமாக அறிக்கையிடுகிறார். 

வ.24: யோவானை நினைவூட்டுவதன் வாயிலாக அவர் மெசியாவல்ல, மாறாக மெசியாவிற்காக வந்தவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். அத்தோடு யோவானின் முக்கிய செய்தியாக இருந்தது மனமாற்றத்திற்கான அழைப்பே, இந்த அழைப்பு அனைத்து இஸ்ராயேலருக்கும் கொடுக்கப்பட்டது என்பதன் வாயிலாக இந்த அழைப்பிற்குள் தற்போது இதனை கேட்கிறவர்களும் உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் நினைவூட்டுகிறார். 
வ.25: பவுல் தான் யோவானைப்பற்றி சொன்னவற்றை யோவானின் வாயிலிருந்தே எடுக்கிறார். அதாவது யோவானைப் பற்றி மக்களின் பொதுவான நினைப்பு தவறானது என்கிறார். யோவானைப் பற்றி மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதை பவுல் கூறாமல் விடுகிறார். ஒருவேளை இது பவுலின் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். (யோவானை சிலர் மெசியாவாக கருதினார்கள் என்ற வாதமும் ஆரம்ப கால திருச்சபைக்கு ஒரு சவாலாக இருந்தது). இரண்டாவதாக யோவான் தான் இயேசுவின் மிதியடிகளையும் அவிழ்க்க தகுதியில்லாதவர் என்கிறார். மிதியடிகளை அவிழ்ப்பது அக்காலத்தில் அடிமைகளின் வேலையாகக் கருதப்பட்டது. அதேவேளை மிதியடிகளை அவிழ்த்து இன்னொருவரிடம் கொடுப்பதன் மூலம் ஒருவர், குறிப்பிட்ட விடயத்தில் தனக்கு முழு உரிமையுள்ளது என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (❀காண்க ரூத்து 4,7). ஆக இந்த அடையாளத்தின் மூலம் யோவான் தனக்கு மீட்பு வேலையில் தகுதியோ பங்கோ கிடையாது என சொல்வதை அடையாளமாக குறிக்கிறார் எனலாம். 

(❀7இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.)

மத்தேயு 1,1-25
இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்
இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(லூக் 3:23 - 38)

1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;
ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள்
யூதாவும் அவர் சகோதரர்களும்.
3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த
புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
பெரேட்சின் மகன் எட்சரோன்;
எட்சரோனின் மகன் இராம்.
4இராமின் மகன் அம்மினதாபு;
அம்மினதாபின் மகன் நகசோன்;
நகசோனின் மகன் சல்மோன்.
5சல்மோனுக்கும் இராகாபுக்கும்
பிறந்த மகன் போவாசு;
போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த
மகன் ஓபேது;
ஓபேதின் மகன் ஈசாய்.
6ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்
பிறந்த மகன் சாலமோன்.
7சாலமோனின் மகன் ரெகபயாம்;
ரெகபயாமின் மகன் அபியாம்;
அபியாமின் மகன் ஆசா.
8ஆசாவின் மகன் யோசபாத்து;
யோசபாத்தின் மகன் யோராம்;
யோராமின் மகன் உசியா.
9உசியாவின் மகன் யோத்தாம்;
யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா.
10எசேக்கியாவின் மகன் மனாசே;
மனாசேயின் மகன் ஆமோன்;
ஆமோனின் மகன் யோசியா.
11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
13செருபாபேலின் மகன் அபியூது
அபியூதின் மகன் எலியாக்கிம்;
எலியாக்கிமின் மகன் அசோர்.
14அசோரின் மகன் சாதோக்கு;
சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது.
15எலியூதின் மகன் எலயாசர்;
எலயாசரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு.
16யாக்கோபின் மகன்
மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே
கிறிஸ்து என்னும் இயேசு.
17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.

இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.✠ 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்.22-23'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

இன்றைய மத்தேயு நற்செய்தியின் வாசகப் பிரிவு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தவிர்க்கமுடியாத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. வவ 1-17 இயேசு ஆண்டவரின் பரம்பரை அட்டவணையையும், 18-25 இயேசு ஆண்டவரின் பிறப்பு நிகழ்சியையும் விவரிக்கின்றன. 

அ. மத்தேயு நற்செய்தியின் படி இயேசுவின் பரம்பரை அட்டவணை:
இந்த பரம்பரை அட்டவணையின் தலைப்பு மத்தேயு நற்செய்தின் நோக்கத்தை அப்படியே தெளிவாக வாசகர்க்கு ஆரம்பத்திலேயே காட்டிவிடுகிறது. மத்தேயு தன்னுடைய நற்செய்தியின் வழியாக இயேசுதான் ஆபிரகாமிற்கு கடவுள் வாக்களித்த ஆசீர்வாதத்தின் நிறைவு எனவும், அவரின் வாயிலாகத்தான் அனைத்து இனங்களும் கடவுளின் ஆசீரைப் பெறுகின்றன எனவும், அத்தோடு தாவீதின் உண்மையான வாரிசு இயேசுதான் என்பதையும் அழுத்தம் திருத்தமாக முன்மொழிகிறார். 
பரம்பரை அட்டவணை (Γενεαλογία கெனெயலொகியா) மத்தேயுவின் கண்டுபிடிப்பு கிடையாது. ஏற்கனவே இந்த பரம்பரை அட்டவணை இலக்கியம், புராதன மத்திய கிழக்கு நாடுகளின் (ANE) வரலாற்றில் அதிகமாகவே காணப்படுகின்றது. மொசப்பத்தோமியர், எகிப்தியர், கிரேக்கர் மற்றும் உரோமையர் என பலரும் இந்த இலக்கிய வகையை தங்கள் தேவைக்கேற்றவாறும், நம்பிக்கைக்கு ஏற்றவாறும் உருவாக்கி பாவித்திருக்கின்றனர். இஸ்ராயேலருக்கு இந்த பரம்பரை அட்டவணை நன்கு பரிசித்தியமானதொன்றாக இருந்திருக்கிறது. முதல் ஏற்பாட்டில் ஏறக்குரைய 25 இப்படியான அட்டவணைகள் (תּוֹלֵדוֹת தொலெதொத்) காணக்கிட்க்கின்றன. ஒவ்வொன்றும் பலவிதமான தேவைகளுக்காக விசேடமாக எழுதப்பட்டன, அத்தோடு அவை எபிரேய இலக்கியத்தின் முக்கியமான வடிவங்களில் ஒன்று. இந்த பரம்பரை அட்டவணைகள் ஒருவருக்கு அடையாளத்தையும், உரிமையையும், முழு அந்தஸ்தையும் அவர் சமூக கட்டமைப்பிலே கொடுத்தது. முதல் ஏற்பாட்டு பரம்பரை அட்டவணையில் சில, ஏறு வரிசையிலும், சில இறங்கு வரிசையிலும் காணப்படுகிறது. மத்தேயுவின் பரம்பரை அட்டவணை இறங்கு வரிசை அட்டவணை. மத்தேயுவைத் தவிர புதிய ஏற்பாட்டில் இன்னொரு பரம்பரை அட்டவணை இயேசுவின் மூதாதையரைப் பொறுத்தமட்டில் காணப்படுகிறது (ஒப்பிடுக லூக்கா 3,23-38). மத்தேயுவின் அட்டவணையைப் போலல்லாது லூக்காவின் அட்டவணை அமைப்பிலும், எண்ணிக்கையிலும் இறையியலிலும் மாறுபட்டது. லூக்கா 77 நபர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஏறுவரிசையில் காட்டி இயேசுவை முதல் மனிதனான ஆதாமோடு இணைக்கிறார். இவ்வாறு இயேசு இரண்டாவது ஆதாமாகவும், உண்மையான கடவுளின் மகனாகவும், அனைத்து படைப்புக்களின் தலையாகவும், நிறைவாகவும், அத்தோடு ஆதாமின் மீட்பராகவும் காட்டப்படுகிறார். (விவிலிய ஆய்வாளர் றேமன் பிறவுன் தன்னுடைய படைப்பான 'மெசியாவின் பிறப்பு' என்ற நூலில் இந்த புதிய ஏற்பாட்டு பரம்பரை அட்டவணைகளை அழகாக விளக்கியுள்ளார். (காண்க: BROWN, R. E., The birth of Messiah. A Commentary on the Infancy Narratives in the Gosples of Matthew and Luke (London 1993).). 

மத்தேயுவின் பரம்பரை அட்டவணை சில முக்கியமான இறையியில் கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. அவை:

அ. மத்தேயு தன்னுடைய பரம்பரை 'அட்டவணை-இலக்கிய' வகையின் ஊடாக தொடக்க நூலை நினைவூட்டுகிறார். 

ஆ. மத்தேயு ஆபிரகாமை மையப்படுத்துவதன் ஊடாக இயேசுதான் ஆபிரகாமின் உண்மையான புதல்வர் என்பதை அறிவூட்டுகிறார் (Ἰησοῦ Χριστοῦ υἱοῦ Ἀβραάμ. இயேசு ஆபிரகாமின் மகன்) ஒவ்வொரு இஸ்ராயேல் மகனுக்கும், மகளுக்கும் ஆபிரகாம்தான் அடையாளம். ஆபிரகாமின் வழிமரபில்லாமல் இஸ்ராயேல் இல்லை, ஆக இயேசு இஸ்ராயேல் வழிமரபின் முக்கியமான தொடக்கமும் நிறைவும் என காட்டப்படுகிறார். 

இ. மத்தேயு நற்செய்தியில் வருகின்ற அடுத்த முக்கியமான நபர் தாவீது. பல அரசர்களை நினைவூட்டினாலும் மத்தேயு தாவீதை மட்டுமே அரசர் என அடைமொழியில் விழிக்கிறார் (τὸν Δαυὶδ τὸν βασιλέα.) ஆக தாவீது எவ்வளவு முக்கியமானவரோ அதனைவிட இயேசு மிக முக்கியமானவராகிறார். தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியின் நிறைவும், முழுமையும் 
இயேசுதான் என்பது மத்தேயுவின் அழகான இறையியல். மற்ற அனைத்து அரசர்களும் அழிவையும் சாபத்தையும் நோக்கியவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். 

ஈ. மத்தேயு இந்த பரம்பரை அட்டவணையை மூன்றாக பிரித்து முதல் பிரிவை ஆபிரகாம் தொடக்கம் தாவீது அரசர் வரையாகவும், இரண்டாவது பிரிவை தாவீது தொடக்கம் பபிலோனிய அடிமைத்தனம் வரையாகவும், மற்றும் மூன்றாவது பிரிவை பபிலோனிய அடிமைத்தனம் முதல் கிறிஸ்துவரையாகவும் பிரித்துள்ளார். இந்த மூன்று என்ற இலக்கம் ஒரு முக்கியமான இறையியல் அடையாளம். அத்தோடு இந்த மூன்று பிரிவுகளும் பதிநான்கு (14) தலைமுறைகளை உள்ளடக்கியதாக காட்டுகிறார் (வ.17). அவை உண்மையாக பதிநான்காக இல்லாவிடினும், பதிநான்கு என்பதும் இன்னொரு முக்கியமான இறையியல் இலக்கம். தாவீதின் எபிரேய சொல்லின் எபிரேய எண்ணிக்கையும் ஏழாக (7) வருகிறது (דּוד). இதுவும் அவதானமாக நோக்கப்படவேண்டும் ஏனெனில் ஏழு என்கின்ற இலக்கமும் நிறைவின் அடையாளமாகும். 

உ. மத்தேயு மிக விசேடமாக ஐந்து பெண்களை உள்ளடக்கியிருக்கிறார். அவர்கள், தாமார் (Θαμάρ), இராகாபு (Ῥαχάβ), ரூத்து (Ῥούθ), உரியாவின் மனைவி பெத்சேபா (τῆς τοῦ Οὐρίου),
மற்றும் மரியா (Μαριάμ). இவர்கள் தங்கள் விசேடமான வரலாற்றால் நம் பார்வையை ஈர்க்கிறார்கள். 
தாமார் யூதாவின் மருமகள், இவருடைய கணவனும், யூதாவின் மூத்த மகனுமான ஏர், கடவுள் பார்வையில் தீயவனாக இருந்ததால் அழிந்துபோனான். வாரிசில்லாத ஏருக்காக அவன் தம்பி ஓனானை யூதா தாமாருக்கு கணவனாக கொடுத்தார். ஓனான் செய்த அசிங்கமான காரியம் அவனையும் அழித்தது. இரண்டு மகன்களையும் இழந்த யூதா தன் இளைய மகன் சேலாவை தாமாருக்கு கொடுக்க தயங்கினார். சட்டப்படி இறந்த சகோதரர்களுக்கு வாரிசு இல்லாவிடின், உயிரோடிருக்கும் சகோதரர்கள் இறந்த சகோதரரின் மனைவியை மணந்து வாரிசு உண்டாக்க வேண்டும் என்பது இவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாக இருந்தது. இருப்பினும் யூதா பயத்தினால் சேலாவை தாமாருக்கு மணமுடிக்கவில்லை. தாமார் இறந்த தன் மூத்த கணவனுக்கும் தன் மாமாவின் வீட்டிற்கும் வாரிசு உண்டாக்குவது ஒரு நல்ல மருமகளின் கடமை என உணர்ந்து ஒரு விலைமாது போல் நடித்து, தன் மாமாவுடன் (யூதா) உறவுகொண்டு வாரிசு உருவாக்கினார். இதனைக் கண்ட யூதா தன் தவறை உணர்ந்து, தாமாரை உண்மையான பெண்மணியாக ஏற்றார். (காண்க தொ.நூல் 38)(மத் 1,3). 
இராகாபு எரிக்கோவின் விலைமகளாக அறிமுகமாகிறார். யோசுவாவின் உளவாளிகள் எரிக்கோவையும் முழு கானானையும் உளவு பார்த்தபோது, இராகாபு இஸ்ராயேலின் கடவுளின் வல்லமையை அறிந்தவராய் உளவாளிகளுக்கு தன் வீட்டில் இ;டம் கொடுத்தார். இதற்கு மரியாதை செய்யும் விதமாக எரிகோவை கடவுள் அழித்த போது இவருடைய வீடு மட்டும் தப்பித்துக் கொள்கிறது. யோசுவாவும் இவர் வீட்டாருக்கு வாழ்வாதாரம் கொடுக்கிறார். (காண்க யோசுவா 2,15-18. மற்றும் 6). முதல் ஏற்பாட்டில் நம்பிக்கைக்கு ஒரு நல்ல உதாரணமாக இராகாபு திகழ்கிறார். மத்தேயு இராகாபை போவாசின் தாயாக அட்டவணையிடுகிறார் (காண்க மத் 1,5).
ரூத்து போவாசின் மனைவியும் நாவோமியின் அன்பு மருமகளுமாவார். ரூத்து புத்தகம் காலத்தால் அழியாத மனிதநேயத்தின் தெய்வீக காவியம். மாமி மருமகளுக்கான உறவிற்கு தெய்வீக சாயல் கொடுத்தவர் ரூத்து. இவர் மோவாபிய பெண்மணி. நாவோமியின் மூத்த மகனுக்கு மனைவியாக மோவாபிலே தெரிவுசெய்யப்படுகிறார். மோவாபிலே நாவோமியின் கணவரும், இரண்டு மகன்களும் இறந்து போகவே நாவோமி தன் தாயகம் (யூதேயா) நோக்கி பயணமாகிறார். அப்போது தன் வயது முதிர்ந்த மாமியாரை தன்தாயைப் போலவே நோக்கி அவருடைய நாட்டிற்கு வந்து அவர் கடவுளுளையும், நாட்டையும், மக்களையும் தன்னுடையதாக்குகிறார் ரூத். போவாஸ் என்ற வயது முதிர்ந்த மனிதரை திருமண முடிக்கவும் இதன் மூலம் தன் மாமியாருக்கும், இறந்த கணவருக்கும் வாரிசு தேட இவர் செய்யும் நியாயமான முயற்சிகள் மிகவும் இனிமையானவை மற்றும் ஆழமானவை. பொறுப்புணர்ச்சிக்கும், அன்பிற்கும், பிரமாணிக்கத்திற்கும் ரூத்தை மிஞ்ச முதல் ஏற்பாட்டில் யாருமில்லை (காண்க ரூத்து 1,16-18. 4,18-22). மத்தேயு தன் பரம்பரை அட்டவணையில் ரூத்தை தாவீதின் பேத்தியாக்குகிறார்; (பாட்டி) (காண்க மத் 1,5).   
பெத்செபா இவர் உரியாவின் மனைவி. இவருடைய கணவர் தாவீதின் படையில் முக்கியமான தகுதிவாய்ந்த வீரராக இருந்தவர். இவர்கள் இத்திய இனத்தை சார்ந்தவர்கள். இத்தியா பலாஸ்தீனாவிற்கு வடக்கே இருந்த மிக முக்கியமான பேரரசு. முற்காலத்தில் எகிப்திற்கு சவாலான ஒரு எதிரிப் பேரரசு. இன்றைய துருக்கியின் தென் கிழக்கு பிராந்தியம். இந்த இடத்தின் பல வீரர்கள் மற்றைய நாட்டில் வாடகைக்கு போர்வீரர்களாய் இருந்தனர். உரியாவும் இப்படியான வரலாற்றை கொண்டவராக இருக்கலாம். முக்கியமான ஒரு போரிலே உரியா, தாவீதிற்காக போர்செய்த வேளையில், தாவீது நயவஞ்சகமாக அவர் மனைவியை தன்னுடையவளாக்கினார். இந்த குற்றத்தை மறைக்க உரியாவையும் அன்நியர் கையாலே சாவடித்தார். இதற்கு தகுந்த தண்டனையையும் அவர் பெற்றார். இந்த பெத்சேபாதான் சாலமோன் மன்னனின் தாயாரும், தாவீதின் முக்கியமான அரசியல் பொறுப்பாளியுமாவார். நல்லதொரு தாயாக இவர் காட்டப்பட்டாலும், ஆண் ஆதிக்க சமூதாயத்திலே பெண்களின் பலவீனத்திற்கான நல்லதொரு அடையாளம் இவர். அந்த நாள் சமுதாயம் எப்படியெல்லாம் பெண்களை துஷ்பிரயோகம் செய்தது என்பதற்கு இவர் ஒரு வாழும் அடையாளம் (காண்க 2சாமு 11,1-12,25). மத்தேயு இவரையும் இயேசுவின் மூதாதையரின் அட்டவணையில் பிழையின்றி உள்வாங்குகிறார் (காண்க மத் 1,6). 
மரியா, நான்கு நற்செய்திகளிலும் இயேசுவிற்கு அடுத்த படியாக மிக முக்கியமான கதாபாத்திரம். இவர் நாசரேத்தூர், சாதாரண யூத குலப் பெண். லூக்கா இவரை தாவீதின் வழிமரபு என்கிறார். மத்தேயுவிற்கு இவர் யோசேப்பின் வாயிலாக தாவீதின் வழிமரபு. யோசேப்பிற்கு மண ஒப்பந்தமாகியிருக்கையில் தூய ஆவியால் இவர் இயேசு ஆண்டவரை கருத்தரிக்கிறார். உலகில் தோன்றிய பெண்களில் இவர்தான் உன்னதமான பெண்ணாக திருச்சபை இவரை மரியாதை செய்கிறது. இயேசுவின் பிறப்பும், இவருக்கு வானதூதர்கள், இடையர்கள், அயலவர்கள், மற்றும் நண்பர்கள் சொன்ன வாழ்த்துக்களும், இவரை கடவுளின் அருளைக் கண்டடைந்த ஒரே உத்தம, தூய பெண்ணாக அடையாளம் காட்டுகிறது (லூக்கா 1,28). 
மத்தேயு இந்த வீரப்பெண்மணிகளை உள்வாங்கியதன் வாயிலாக இயேசு ஒரு சாதாரண தலைவர் அல்ல எனவும், இஸ்ராயேலின் கடவுள், ஆண்ணாதிக்க கடவுள் இல்லை எனவும் ஆழமாகச் சொல்கிறார். கடவுள் அனைத்து வரையறைகளையும் கடந்தவர், மனித சிந்தனைக்கு கட்டுப்பட்டவர் அல்லர், அத்தோடு மனித குலத்தின் தொடர்ச்சி பெண்களின்றி கிடையாது என்பதையும் அழகாக காட்டுகிறார். (குணமாக்க முடியாத ஆண்நோய் பிடித்தவர்களுக்கு இது புரிந்தால் சரி- ஈழத்தின் வரலாறு பெண்களை மறக்க முடியாதது, இதனை முதலில் பெண்கள் உணர வேண்டும்). 

ஆ. மத்தேயு நற்செய்தியின் படி இயேசுவின் பிறப்பு: (கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது). 

வ. 18: இயேசுவின் பிறப்பு மறைபொருளை ஒரே வரியில் அறிமுகப்படுத்துகிறார் மத்தேயு. இப்படித்தான் இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்று கூறி பிழையான வதந்திகளை நிறுத்தவோ, அல்லது இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளை அறியாதவர்களுக்கு அதனை அறிவிப்பதையோ மத்தேயு நோக்கமாகக் கொண்டிருக்கலாம். இயேசு மரியாவையும் யோசேப்பையும் இரண்;டாம் தடவையாக அறிக்கையிடுகிறார். மரியா யோசேப்பிற்கு மண ஒப்பந்தமானவர் என்று மத்தேயு கூறுவதன் வாயிலாக இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதை காட்டுகிறார். மண ஒப்பந்தம் (μνηστεύω மெனேஸ்டெஉஓ) என்பது கிட்டத்தட்ட தமிழ் திருமண நிச்சயதார்த்தத்தைக் குறிக்கும். இது திருமணத்திற்கு முன் செய்யப்படுகின்ற ஒரு சடங்கு, இதன் பின்னர் மணமகள் தன் பெற்றோரின் வீட்டில் இருந்தாலும் அவர் மண ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் பெண்ணாகவே கருதப்படுவார். இந்த வேளையில் இவர் வேறு ஆணுடன் உறவு வைத்தால், அதுவும் திருமணத்திற்கு எதிரான பாவமாகவே கருதப்படும். 
மரியா திருமணமாவதற்கு முன் கருவுற்றிருந்ததாகவும் அதற்கான காரணம் தூய ஆவியார் என்பதையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். திருமணம் என்பது கிரேக்க விவிலியத்தில் கூடிவருதல் (συνέρχομαι) என்பதைக் குறிக்கிறது. லூக்கா நற்செய்தி வாசகர்களுக்கு இந்த தூய ஆவியாரின் செயற்பாடுகள் நன்கு தெரிந்திருக்கும், அந்த நற்செய்தியில் இந்த பகுதி இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த பகுதிகளை தன் வாசகர்கள் நன்கு அறிந்திருந்த காரணத்தால் மத்தேயு அதனை சுருக்கமாகச் சொல்கிறார் போல. 

வ.19: மத்தேயு யோசேப்பிற்கு கொடுக்கும் வரைவிலக்கணம்: Ἰωσὴφ δὲ ὁ ἀνὴρ αὐτῆςஇ δίκαιος யோசேப்பு அவர் ஒரு நேர்மையான மனிதர். மத்தேயு ஒரு யூத கிறிஸ்தவர் என்றால் அவருக்கு நேர்மையாளருக்கான வரைவிலக்கனம் நன்கு தெரியும். கடவுளின் சட்டங்ளை கடைப்பிடிப்பவர்தான் முதல் ஏற்பாட்டில் நேர்மையாளராக கருதப்படுவார். விவிலியத்தில் முதலில் நோவா ஒரு நீதிமானாக அறிமுகப்படுத்தப்படுகிறார் (✻காண்க தொ.நூல் 6,9). வெளிப்பார்வையில் கடவுளின் சட்டத்தை மீறுகிறவர் போல காணப்படுகிற யோசேப்பு நீதிமானாக கருதப்படுபது, மத்தேயுவின் சட்டம் பற்றிய உண்மையான அறிவைக் காட்டுகிறது. (✻✻ஒப்பிடுக வி.ப. 20,14). யோசேப்பு மனித பார்வையில் சட்டத்தை, வார்த்தைக்கு மட்டும் கடைப்பிடிப்பவரானால், அவர் மரியாவிற்கு தண்டனை தர முயற்சி எடுத்திருப்பார் (✻✻✻லேவி 20,10). அவருக்கு மரியாவின் கர்ப்பத்திற்கான காரணம் தெரியாதிருந்தும், தண்டனை தர முயற்சிக்காமல், இன்னொரு படி மேலே சென்று ஒரு பெண்ணை இகழ்ச்சிக்கு உட்படுத்த விரும்பாதவாரக இருக்கிறார். இவர் ஒரு உண்மையான யூதன். இந்த ஒரு வரிமட்டுமே போதும் அவர் இயேசுவின் வளனாரகாவும், நீதிமானாகவும் இருக்க. அவர், அதேவேளை மரியா பாவியாக இருந்தால் அவருடன் வாழவும் விரும்பவில்லை, இது அவருக்கு நீதியானதே. எனவே மரியாவை மறைவாக விலக்கிவிட தீர்மானிக்கிறார். இதற்கான வழிமுறைகள் மோசேயின் சட்டங்களில் இருந்தன. 

(✻நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்).
(✻✻விபசாரம் செய்யாதே).
(✻✻✻அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.)

வ.20: யோசேப்பின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கடவுளின் தூதர் மூலம் வருகிறது. மரியாவின் கருவிற்கு காரணம் தூய ஆவியார் என்பது அறிவுறுத்தப்படுகிறது. கடவுளின் தூதருக்கு மத்தேயு பெயர் கொடுக்கவில்லை. அத்தோடு யோசேப்பின் கலக்கம் நியாயமான கலக்கமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்தேயு இரண்டு முறை (வ.18 மற்றும் வ.20) தூய ஆவியாரை மையப்படுத்துவதன் மூலம் (πνεύματος ἁγίου), இயேசுவின் பிறப்பு, தூய ஆவியாரின் செயலால்தான் நடைபெறுகிறது என்பதை ஆழப்படுத்த முயல்கிறார்,

வ.21: மரியாவிடம் பிறக்கப்போகிறவரைப் பற்றியும் யோசேப்பிற்கு சுருக்கமாக சொல்லப்படுகிறது. மரியாவிற்கு பிறக்கப்போகிறவர் ஒரு மகன். அவருக்கு இயேசு என்று பெயரிடுமாறு யோசேப்பிற்கு சொல்லப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் இந்த கட்டளை மரியாவிற்கு கொடுக்கப்பட்டது (✻காண்க லூக் 1,31). பெயரைப் பொறுத்த மட்டில் இரண்டு நற்செய்தியாளர்களும் ஒருமித்து இருக்கிறார்கள்.
இயேசு என்னும் பெயருக்கும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. இயேசு என்றால் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்கிறவர், என்கிறார் வானதூதர். 

இயேசு (Ἰησοῦς ஏசூஸ்): இந்த உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர். இவருடைய பிறப்பாலே உலகத்தின் காலங்கள் முன் பின் என பிரிக்கப்பட்டன. மத்தேயுவிற்கு இவர் மீட்பரும் மெசியாவும். லூக்காவிற்கு இவர் பிரபஞ்சத்தின் கடவுள், மாற்குவிற்கு இவர் இறைமகன், யோவானுக்கு 
இவர்தான் முதல் ஏற்பாட்டின் கடவுளாகிய ஆண்டவர். இயேசு என்ற பெயரை ஒவ்வொரு நற்செய்தியாளர்களும் அப்படியே பாவிக்கின்றனர். இயேசு என்பதற்கு 'கடவுள் மீட்கிறார்' என்று பொருள். கடவுள் இவருக்கு உதவியாக இருக்கிறார் என்ற பொருளும், இயேசு என்ற பெயருக்கு உண்டு. இந்த பெயரின் எபிரேய வடிவம் יְשׁוּעָה ஜெஷஉவாஹ் என்று வரும். இதன் அரமயிக்க வடிவம் יֵשׁוּעַ ஜேஷஉவா என்று வரும். ஆனால் அர்த்தம் அனைத்து மொழியிலும் ஒன்றாகவே 
இருக்கிறது. 

(✻இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.)

வவ.22-23: மத்தேயு இங்கே எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார் ஆனால் மத்தேயுவின் வார்த்தைகள் செப்துவாஜின்து விவிலியத்தையே ஒத்திருக்கிறது.

மத்தேயு: ἰδοὺ ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ  καλέσουσιν τὸ ὄνομα αὐτοῦ Ἐμμανουήλஇ (கன்னி)
செப்துவாஜின்து: ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ καλέσεις τὸ ὄνομα αὐτοῦ Εμμανουηλ· . (கன்னி)
הִנֵּ֣ה הָעַלְמָ֗ה הָרָה֙ וְיֹלֶ֣דֶת בֵּ֔ן וְקָרָ֥את שְׁמ֖וֹ עִמָּ֥נוּ אֵֽל׃ : எபிரேய விவிலியம் (இளம்பெண்
மத்தேயுவிற்கு இது இறைவாக்கின் நிறைவு, அவர் கன்னியின் மகன், அவர் இம்மானுவேலன் அதாவது அவர் 'கடவுள் நம்மோடு'. 

வ. 24: இந்த வரியின் மூலம் யோசேப்பு கனவில்தான் காட்சி காண்கிறார் என்பது புலப்படுகிறது. லூக்காவில் மரியா உண்மையாகவே வானதூதரைக் காண்கிறார். அக்காலத்தில் கனவு ஒரு முக்கியமான கடவுளின் வெளிப்படுத்தல் ஊடகமாகக் கருதப்பட்டது (ὕπνος ஹஉப்னொஸ் கனவு).

வ.25: இந்த வரியை பலர் தங்களுக்கு தேவையான முறையில் திரித்துக் கூறுகின்றனர். ஆனால் இதன் கிரேக்க பாடம், இயேசுவையே மையப்படுத்துகிறது. அதாவது யோசேப்பிற்கு இயேசுவின்
கருத்தரிப்பில் தொடர்பில்லை என்பதே இங்கே எழுவாய்ப் பொருள். மரியாவுடன் யோசேப்பு தொடர்பு வைத்திருந்தால் பிறந்தவர் யோசேப்பின சொந்த மகனாகவே கருதப்பட்டிருப்பார். அப்படியன்று அவர் கடவுளின் மகன் எனக்காட்டவே, மத்தேயு மரியா யோசேப்பின் உறவை மையப்படுத்துகிறார். 
  

இயேசுவின் பிறப்பு முழு மனித குலத்துக்குமான முழுமையான ஒரு நற்செய்தி,
இன்று இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிறவர்களுள் அதிகமானவர்களுக்கு எதிராகத்ததான் 
அன்று இயேசுவின் சிந்தனைகளும் செய்தியும் அமைந்தது. 
இயேசு அரசியல், சமய, சமூக முதலைகளுக்குத்தான் சாட்டையடித்தார்.
இன்று வாணிப கூடங்களும், மதுக் கடைகளும், கொள்ளையரின் குகைளுமே
விமரிசையாக கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகின்றன. 
இவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு ஒரு களியாட்டம். 
ஆனால் இயேசுவின் அன்பு மக்களான, 
பெண்கள், சிறுவர், ஏழையர், கைவிடப்பட்டோர், உதவியற்றோர், பலவீனமானவர்,
நல்மனத்தோருக்கு இவ்வருட கிறிஸ்து பிறப்பும் சவாலகவே இருக்கிறது.

அன்பு ஆண்டவரே உம்முடைய பிறப்பு ஒரு நினைவுமட்டுமே,
ஏனெனில் நீவீர் ஏற்கனவே பிறந்து எம்மில் வாழ்கிறீர் 
என்பதை உணரப்பண்ணும். 
இந்த நத்தார் எமக்கு அருள் வழங்க பிறந்து வாரும். ஆமென்.


அனைவருக்கும் இனிய இயேசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 

(துன்புறும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்). 

மி. ஜெகன்குமார் அமதி
அமதி அகம், வவுனியா
வியாழன், 22 டிசம்பர், 2016


தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...