கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ)
முதல் வாசகம்: எசாயா 62,11-12
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 96
இரண்டாம் வாசகம்: தீத்து 3,4-7
நற்செய்தி: லூக்கா 2,15-20
எசாயா 62,11-12
11உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: 'மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:
இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.' 12'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.
எசாயாவின் 62வது அதிகாரம், மிகவும் அழகிய பாடல் போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் முழுவதும் நம்பிக்கை வசனங்களால் நிறைந்துள்ளது. அதேவேளை மூன்றாம் எசாயாவின் இறையியல் சிந்தனைகளை இப்பகுதி தாங்கி வருகிறது. எவ்வாறு முழு உலகும் எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டதோ, அதே போல, அவளுடைய மீட்பையும் காணும் என்பது மையக்கருத்து.
வ.11: ஷஉன் மீட்பு வருகிறது| (יִשְׁעֵךְ בָּא யிஷ்எஹ் பா) இந்த சொல்லுக்கும் இயேசு என்கிற சொல்லுக்கும் வேர்ச்சொல்லில் தொடர்பிருக்கிறது. கைவிடப்பட்டவர்கள் என அறியப்பட்ட மக்கள்
இனி தூயவர்கள் என அறியப்படுவார்கள். ஒரு மக்கள் போரில் தோற்றால் அவர்கள் தெய்வமும் தோற்றதற்கு சமம். கடையெல்லைவரை என்று சொல்லி ஆசிரியர் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார். இஸ்ராயேல் வீழ்த்தப்பட்டபோது அனைவரும் அதனைக்கண்டார்கள் ஆகவே மீட்பு வருகின்ற வேளையிலும் அனைவரும் அதனை அறியவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஆண்டவரின் வெற்றிப்பரிசு (שָׂכָר) என்பது இங்கே போர் வெற்றிப்பொருட்களைக் குறிக்கிறது. இது அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருதலைக் குறிக்கலாம். அடிமைகளாக
இருக்கிறவர்கள் என்ன ஊதியத்யைப் பெற்றாலும் அது விடுதலை என்ற உன்னதமான பரிசுக்கு நிகராக முடியாது. அதேபோல 'கைமாறு' என்ற சொல்லும் (פְּעֻלָּה செயலின் பயன்) இங்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்க்கு மேலாக சீயோனுக்கு மீட்பு (יָשַׁע) என்ற செய்தி வருகிறது, இதற்கு ஒத்த கருத்தாகத்தான் மற்ற சொற்பதங்கள் பாவிக்கப்படுகின்றன.
வ.12: இஸ்ராயேல் தூய மக்களினமாக மாற்றம் பெருகிறது (עַם־הַקֹּדֶשׁ) இங்கே இனி இஸ்ராயேல் மக்களும் அவர்கள் கடவுளும் தோற்றவர்கள் அல்ல என எசாயா நம்பிக்கை கொடுக்கிறார். அழிக்கப்பட்ட எருசலேமிற்கு புதுப்பெயர் கொடுக்கப்படுகிறது, ஷதேடப்படுகிற நகர் (பிரசித்திபெற்ற), கைவிடப்பட்ட நகர் அல்ல.|
தீத்து 3,4-7
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். 7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
திருத்தூதர் பவுலுடைய மேய்புப்பணி மடல்களில் ஒன்றான தீத்துவிற்கான திருமுகம், செய்தியிலும் இறையியலிலும் திமோத்தேயுவிற்கான மடல்களை ஒத்திருக்கிறது.
அ. ஷநம் மீட்பராம் கடவுள்| (σωτῆρος ἡμῶν θεοῦ சோடேரோஸ் ஹேமோன் தேயு) என்பது
இயேசுவுக்கு ஆரம்ப காலத்திலே வழங்கப்பட்ட சிறப்பு பெயர் சொற்கள். இங்கே பவுல் இயேசுவை முதல் ஏற்பாட்டு கடவுளாக காண்கிறார். இயேசுவை கடவுளாக கண்டது திருச்சபை தந்தையர்களின் கண்டுபிடிப்பு என்ற பிற்கால பேதகத்திற்கு இந்த சொற்பதம் நல்லதொரு விசுவாச சான்று.
ஆ. நன்மையும் மனித நேயமும்| (ἡ χρηστότης καὶ ἡ φιλανθρωπία) இவை பவுல் மேய்புப்பணி நூல்களிலே அதிகமாக பயண்படுத்தும் சொற்றொடர். இது நன்மையையும் பரிவையும் பிரிக்க முடியாது எனக் காட்டுகிறது.
ஆ. கடவுளிடம் இருந்து பெறும் எந்தக் கொடைக்கும் மனிதர் உரிமை கோர முடியாது, அது கடவுளின் இரக்கத்தினால் மட்டுமே பெறப்படுகிறது என்கிறார் பவுல். தீத்துவை (ஆயர்களை) அதனைச் செய்யச் சொல்கிறார். கடவுள் மனித குலத்தை மீட்டது தூய ஆவியால் என்பதன் மூலம், கிறிஸ்தவர்கள் பாரபட்சத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்கிறார்.
பவுல் தன்னுடைய இறுதி காலம் நெருங்கியதை உணர்ந்தவராக, இனி வரும் காலங்களில் திருச்சபையை வழிநடத்துகிற ஆயர்கள் எவ்வாறு அக்கால சவால்களை சந்திக்க வேண்டும் என்று இம்மடல்களை எழுதியதாக பாரம்பரியம் கருதுகிறது. இம்மடல்களை வாசிக்கும் போது, அக்கால பிரச்சனைகளும், அக்கால கிறிஸ்தவ நம்பிக்கையும் நமக்கு புரியும். கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் இருந்து விடுபட்டு முழு உலகை அடைவதனை இங்கு காணலாம்.
லூக்கா 2,15-20
15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, 'வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டு, 16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 20இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. 21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
லூக்கா அவதாணமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம். மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், மெசியாவாகவும் காட்டுகிற அதேவேளை, லூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லது அனைவரின் கடவுளாகவும் காட்டுவார். லூக்காவின் கடவுள் அனைவரினதும் கடவுள். இயேசுவின் பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால், இயேசுவை அவர் எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும். லூக்கா சின்கிறேசிஸ் (Syncresis) என்ற ஒரு கிரேக்க இல்க்கிய வகையை இங்கே பாவிக்கிறார். அதாவது லூக்கா யோவானையும் இயேசுவையும் ஒப்பிடுகிறார், இறுதியாக இயேசுவின் பக்கத்திலுள்ள உயர்வுகளையும் விசேட தன்மைகளையும் காரணம் காட்டி அவர்தான் மெசியா என்கிறார். லூக்கா நற்செய்தியின் இரண்டாம் அதிகாரம்:
இயேசுவின் பிறப்பு, இடையர்களும் வானதூதர்களும், இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல், நாசரேத்திற்கு திரும்பிச் செல்லுதல், மற்றும் கோவிலில் சிறுவன் இயேசு என்ற விதத்தில்
இயேசுவின் முழு குழந்தைப் பருவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றைய பகுதியிலே,
அ. ஷவானதூதர்கள்.| (ἄγγελος ஆன்கலோஸ்) இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக் காட்டுகிறார். மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும், கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம் காட்ட, லூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார். வானதூதர்கள் முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் (מַלְאָךְ மல்அக்), சில அதிவிசேடமான இடங்களின் கடவுளின் பிரசன்னத்தையும் காட்டுகிறவர்களாகவும் வருகிறார்கள். புதிய ஏற்பாட்டு காலத்தில் வானதூதர்கள் பற்றிய அறிவு நன்கு வளர்ந்திருந்தது.
இதற்கு கிரேக்க இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நற்செய்தியில் வருகின்ற வானதூதர்கள் கடவுளின் செய்தியை கொண்டுவருகின்ற முக்கியமான செய்தியாளர்களாக
இருக்கிறார்கள்.
ஆ. இடையர்களின் பெத்லகேம் வருகை: (ποιμένες பொய்மெனஸ்) இடையர்கள் பற்றி இயேசு பிறந்த காலத்தில் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை, அவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல் நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லை. கடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவே காட்டினார். தலைவர்களையும் நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார், இயேசுவும் தன்னை நல்ல ஆயன் என பல வேளைகளில் வெளிப்படுத்தினார் (✽காண்க யோவான் 10,1). புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக முக்கியமான வசனம் இது. பேதுருவையும் அவர் உடன்பணியாளர்களையும், ஆயர்களாகவே இருக்கச்சொல்கிறார். லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ஒன்று: நல்ல ஆயரின் பிறப்பு ஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இரண்டு: தாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும் லூக்கா அறிவிக்கிறார்.
(✽ Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός நானே நல்ல ஆயன்)
இ. இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம் சிந்திக்க வைக்கிறது. ஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம் அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறது. அத்தோடு அவர்கள் விரைவு ஒர் ஆவலைக் காட்டுகிறது. சோம்பல்தான் பல தோல்விகளுக்கு காரணம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஈ. பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்: யாருக்கு சொன்னார்கள், மரியாவுக்கும் யோசேப்புக்கும் என்று நினைக்கிறேன். யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இந்த மற்ற அணைவரும் யார்? (πάντες οἱ ἀκούσαντες கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம். வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல். (θαυμάζω தௌமாட்சோ: வியப்படை, ஆச்சரியப்படு, மகிழ், பயங்கொள், மரியாதைகொள், வணங்கு) ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின் இந்த பதிலுணர்வு, வெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
உ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்: லூக்காவின் மரியா சாதாரண இளம் பெண்ணல்ல. அவர் திருச்சபையின் முன்னோடி. நம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்கா. மரியா பல வேளைகளில் இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவது, மரியாவை யார் எனக் காட்டுகிறது.
ஊ. இடையர்களின் ஆட்டமும் பாட்டும், கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக் காட்டுகிறார். எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லி, கடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும் சொல்கிறார்.
பிறந்த குழந்தை ஆண்டவர், நமது குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவுபடுத்துவாராக!
தன்னலத்தாலும்;, போர் வெறியாலும், சமய மூட நம்பிக்கையாலும்
அல்லலுறும் இவ்வுலகை, குழந்தை இயேசு தன் சிரிப்பால் கழுவுவாராக!
இயேசு ஆண்டவரின் பிறப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வாழ்த்துகிறேன்!
மி. ஜெகன்குமார் அமதி
தூய மரியாள் ஆலயம்,
பன்வில, கண்டி
வெள்ளி, 23 டிசம்பர், 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக