வெள்ளி, 29 மே, 2020

தூய ஆவியார் பெருவிழா (அ) Part ONE



தூய ஆவியார் பெருவிழா ()
31.05.2020

M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’
Kopay South, Kopay, Jaffna, Sri Lanka.
Friday, May 29, 2020

முதலாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2,1-11
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 104
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 12,3-7.12-13
நற்செய்தி: யோவான் 20, 19-23


யார் இந்த தூய ஆவியார்?

விவிலியத்தில் ஆழமான சிந்தனைகளையும் பல ஆராய்சித் தேடல்களையும் உருவாக்கிய சிந்தனைகளில், தூய ஆவியானவர் பற்றிய சிந்தனையும் மிக முக்கியமானது. கத்தோலிக்க திருச்சபை இவரை, அவளின் பாரம்பரிய விசுவாசத்தின் படி, திரித்துவத்தின் மூன்றாவது ஆளாக ஏற்றுக்கொண்டு நம்புகிறது. எபிரேயத்தில் רוּחַ קָדוֹשׁ (ரூஹா காடோஷ்), தூய மூச்சு அல்லது தூய காற்று என பொருள்கொள்ளலாம். கிரேக்கத்தில் πνεῦμα ἅγιος (புனுமா ஹகியோஸ்), தூய மூச்சு என்றும், இலத்தீனில் Spiritus (ஸ்பிரித்துஸ்), உயிர்-ஆவி என்றும் பொருள் கொள்ளலாம். எபிரேயத்தில் இவர் பெண் பாலகவும், கிரேக்கத்தில் பலர்பாலகவும், இலத்தீனில் ஆண்பாலகவும் 
இருப்பதனால், தூய எரோம், கடவுள் பால் பிரிவினைகளை கடந்தவர் என்று வாதாடுகிறார். (காண் தொ.நூ 1,2: யோபு 33,4). இந்த வாதாட்டம் திருச்சபையின் தந்தையியலின் ஆளுமையைக் காட்டுகிறது

முதல் ஏற்பாட்டில், கடவுள் தெரிவு செய்யும் நபர்களை உற்சாகப்படுத்தி உந்துபவர்களாக 
இந்த சக்தி வர்ணிக்கப்படுகிறது. முக்கியமாக நீதிமான்களையும், இறைவாக்கினர்களையும், அரசர்களையும் இந்த ஆவி ஆட்கொள்கிறது (காண் நீதி.தலை 3,10: 6,34). இறைவாக்குரைத்தல், கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தல் போன்றவை இந்த ஆவியின் முக்கியமான பணிகளாக காட்டப்படுகிறன (காண் தொ.நூ 41,38: 1சாமு 10,10). மிக முக்கியமாக இறைவாக்கினர்கள் இந்த ஆவியின் நபர்களாக காணப்பட்டனர் (எசே 2,2). அத்தோடு முதல் ஏற்பாட்டில் இந்த ஆவியார் அதிகமான வேளைகளில் நபர் சாராத சக்தியாக காணப்படுகிறார்

புதிய ஏற்பாட்டில் இந்த ஆவியானவரைப் பற்றிய சிந்தனை, முதல் ஏற்பாட்டு விசுவாசத்தில் இருந்து வளர்கின்றது. நற்செய்தியாளர்கள் லூக்கா, யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இந்த ஆவிபற்றிய சிந்தனைகளை விசேட விதமாக இயேசுவின் பணியுடன் இணைத்து 
காட்சியமைக்கிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் இயேசு தூய ஆவியில் திருமுழுக்கு கொடுப்பார் எனவும் (காண்க மாற் 1,8), அவர் அந்த ஆவியை தனது திருமுழுக்கில் பெற்றார் எனவும் (காண்க மாற் 1,10), இந்த தூய ஆவிக்கெதிரான குற்றம் பாரதூரமானது எனவும் காட்டுகிறார் (காண்க மாற் 3,29). சில வேளைகளில் இயேசு அசுத்த ஆவிகளை விரட்டுவதையும் காட்டுகிறார் (காண்க மாற் 3,11). ஆண்டவரின் பிறப்பு நிகழ்சிகளில் இந்த ஆவியானவரின் முக்கியமான பணிகளை மத்தேயு விவரிக்கின்றார் (காண்க மத் 1,20), அதே ஆவியானவரை இயேசு இறுதியில் சீடர்களுக்கும் கொடுத்து கட்டளை கொடுக்கிறார் (காண்க மத் 28,18-20). லூக்காவின் நற்செய்தியின் ஒவ்வொரு பகுதியையும் இந்த ஆவியார் ஆட்கொள்ளுவார். மரியா, சக்கரியா, எலிசபேத்து, யோவான், சிமியோன் போன்றவர்கள் இதே ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆவியார் திருமுழுக்கில் இயேசு மீது இறங்குகிறார், ஆண்டவரை பாலை நிலம் அழைத்து செல்கிறார், பணிகளில் அவர்கூட இருக்கிறார், இறுதியாக இந்த ஆவியானவரை இயேசு தன் சீடர்களுக்கு பணிக்கிறார் (காண்க லூக் 24,49). இதே ஆவியின் ஆட்கொள்ளலை திருத்தூதர் பணிகள் நூல்கள் ஆழமாக காட்டுகிறது. வரலாற்றில் ஒரு கட்டத்தில், இந்த நூல், தூய ஆவியின் நற்செய்தி என அழைக்கப்படும் அளவிற்கு அவரின் செயற்பாடுகளை இங்கே காணலாம். பவுல், உயிர்த்த ஆண்டவரின் முகவராக தூய ஆவியைக் காண்கிறார் (காண்க உரோ 8,9). இந்த ஆவியானவரையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது என்பதும் அவர் நம்பிக்கை (காண்க 1தெச 1,5-6). முதல் ஏற்பாட்டை போலல்லாது பவுல் தூய ஆவியை தனி ஆளாக காட்டுகிறார், அத்தோடு தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும் தனித்தனியாக விவரிக்கிறார் (காண்க 1கொரி 12-14: கலா 5,22-23). உரோமையார் 8ம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை விவரிக்கிறது

இவர்களின் சிந்தனைகளையும் தாண்டி தூய ஆவியானவரின் உள்ளார்ந்த அனுபவத்ததை விவரிக்கிறார் யோவான் நற்செய்தியாளர். யோவான் தூய ஆவியானவரை துணையாளராக காட்டுகிறார். ஒருவருடைய புதிய பிறப்பு இந்த தூய ஆவியானவராலேயே நடக்கிறது, எனவும் இயேசு அறிவித்த பலவற்றை இந்த ஆவியானவரே விளங்கப்படுத்துவார் என்பது யோவானின் தனித்துவமான படிப்பினை. உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் இந்த தூயஆவியாராலே, வழியிலே நடைபெறும் என்பதும் இவரின் புதிய சிந்தனை. திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இந்த தூய ஆவியானவரை மத்தேயுவும், திருமுகங்களும் அங்காங்கே தெளிவாக காட்ட முயற்சிக்கின்றன (காண் மத் 28,19: 2கொரி 13,14). திரித்துவத்தின் மூன்றாம் ஆள், தூய ஆவியார் என்பது திருச்சைபயின் விசுவாச உண்மையும், பாரம்பரிய பிரகடணமுமகா இருக்கிறது

திருத்தூதர் பணிகள் 2,1-11
தூய ஆவியின் வருகை
1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். 5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், 'இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?' என வியந்தனர். 9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! 'என்றனர்.

இன்றைய முதலாம் வாசகம், தூயஆவியாரின் வருகை நிகழ்வை காட்டுகின்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியைப் போல திருத்தூதர் பணிகளில் வேறு எந்த பகுதியும் முக்கியம் பெறவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

.1: இந்த விழா, (πεντηκοστή பென்டேகோஸ்டே) பாஸ்காவிற்கு பதினைந்தாம் நாளுக்கு பின்னர் முற்காலத்தில் கொண்டாடப்பட்டது (காண் தோபி 2,1). இஸ்ராயேலரின் மூன்றில் இரண்டாவது முக்கியமான விழாவும் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது எருசலேமில் பாஸ்காவின் பின்னர் ஏழாவது வாரத்தில் அறுவடைகளுக்கு நன்றியாக கொண்டாடப்பட்டது. இதனை வாரங்களின் திருநாள் (חַג שָׁבֻעֹת֙ ஹக் ஷவுஓத்) மற்றும் அறுவடையின் திருநாள் (חַג קָּצִיר֙ ஹக் காட்சிர்) என்றும் அழைப்பர். இயேசு யூதனாக இந்த விழாவில் பல முறை பங்குபற்றியிருப்பார். சில யூத குழுக்கள் இந்த திருவிழாவை தாங்கள் மோசேயிடம் இருந்து சட்டங்களை பெற்றுக்கொண்டதை நினைத்து கொண்டாடும் விழாவாகவும் இதனை பார்த்தனர்

.2: தூய ஆவியாரின் வருகை விவரிக்கப்படுகிறது. லூக்கா இங்கே, இஸ்ராயேலர் சீனாய் மலையடிவாரத்தில் பெற்ற இறைக்காட்சி அனுபவத்தை ஒத்ததாக விவரிக்கின்றார் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். கொடுங்காற்று வீசுவது போல இரைச்சல் (ἦχος ὥσπερ φερομένης πνοῆς βιαίας) என்ற அடையாளம் அசாதாரணமான சூழ்நிலையை விளக்குகின்றது. இங்கே காற்றிற்கு (πνοή புனொஏ) பாவிக்கப்படுகின்ற அதே சொல்லைத்தான் கிரேக்க மொழி தூய ஆவிக்கும் பாவிக்கிறது. இங்கணம் இந்த இரண்டிற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைக் காணலாம். இந்த இரைச்சல் வீடு முழுவதும் ஒலித்தது என்று சொல்லி, இது ஒரு தனி மனித அனுபவம் அல்ல மாறாக இது ஒரு வரலாற்று நிகழ்வு என லூக்கா காட்டுகிறார்

வவ.3-4: தூய ஆவியானவரை காற்றாகவோ அல்லது நெருப்பு நாவாகவோ இங்கே லூக்கா காட்டவில்லை மாறாக தூய ஆவியை இவற்றிக்கு ஒப்பிடுகிறார். நெருப்பு போன்ற நாக்கு என்ற உருவகம் கிரேக்க உரோமைய இலக்கியங்களில் உள்ளாந்த உளவியல் அனுபவங்களையும்
இறைவாக்கு, அறிவியல், பேச்சு அனுபவங்களையும் காட்டுவனவாக அமைந்திருந்தது. லூக்கா இந்த உருவகங்கள் மூலமாக கடவுள் தனது வல்லமையை காட்டுவதாக உணர்த்துகிறார். முழு வீடு, ஒவ்வொருவரின் தலை, பலவிதமான மொழிகள், இவைகள் கடவுளின் நிறைவான அருளையும் அவரின் பல்முகத்தன்மையையும் காட்டுகின்றன. பரவசப்பேச்சு மற்றும் பல மொழிப்பேச்சுக்கள் என்பவை ஒரே பொருளைக் குறிக்காது. பன்மொழி திறமை என்பது அக்காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு கல்வித் தகமை. பவுல் இப்படியான திறமையுடையவராக இருந்தார். இங்கே இந்த தகமையை பெறுகிறவர்கள் சாதாரண கலிலேயர்கள், இதனால்தான் இந்த நிகழ்வு மிக ஆச்சரியாமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த சாதாரண சமானிய கலிலேயர்களுக்கு வேறு நாட்டு மொழிகள் தெரிய வாய்ப்பில்லை இதனால் அவர்கள் ஏதோ ஒரு சக்தியினால் இதனை செய்கிறார்கள் என்பதும் மற்றவருக்கு புலப்படுகிறது

வவ. 5-8: ஈழத் தமிழர் சமூதாயத்தைப்போல், யூத மக்கள் பல காலங்களாக தாயக மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களாக காணப்பட்டனர். இந்த புலம்பெயர்ந்த யூத மக்கள் அந்த நாட்டு மொழிகளையும் அத்தோடு கல்வி மொழியான கிரேக்கத்தையும், அரச மொழியான இலத்தீனையும் கற்றனர். தாயக இஸ்ராயேலில் அதிகமானோர் பாலஸ்தீன அரமேயிக்கத்தை பேசினர். இந்த அறுவடைத் திருநாளுக்காக அனைத்து புலம்பெயர்ந்த இடங்களில் இருந்து வந்தவர்களை லூக்கா இங்கே காட்டுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் கலிலேயரின் அரமேயிக்கத்தை அறிந்திருக்க வாய்பில்லை, திருத்தூதர்கள் அனைவருக்கும் கிரேக்கமோ இலத்தீனோ தெரிந்திருக்கவும் வாய்பில்லை, அல்லது இதனை இந்த யூதர்கள் எதிர்பார்திருக்கவும் மாட்டார்கள். புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. தமது புலத்து மொழிகளில் கலிலேயர் பேசுவதைக் கேட்கின்றனர். வழமையாக புலம்பெயர்ந்தவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தனர், இதனால் தாயகத்தில் இருந்த வறியவர்களை நக்கல் கண்களோடு பார்த்திருக்கலாம். இதனால் கலிலேயரின் சாகசங்கள் ஆச்சரியத்தை தருகிறது. (இந்த தாயாக-புல ஆச்சரியங்களை நாமும் நல்லூரிலும் மடுவிலும் அடிக்கடி காணலாம்). ஆச்சரியம் தந்தாலும் இவர்களின் கேள்விகள் நியாயமானவை. வானத்தின் கீழுலுள்ள (ἀπὸ παντὸς ἔθνους τῶν ὑπὸ τὸν οὐρανόν) அனைத்து நாடுகள் (.5) என்று அன்றைய உரோமைய சாம்ராச்சியத்தையும், அத்தோடு அவர்களுக்கு தெரிந்த நாடுகளையும் லூக்கா குறிப்பிடுகிறார் என்றே எடுக்க வேண்டும். இவை எந்தெந்த நாடுகள் என்று பின்வரும் வரிகள் விளக்குகின்றன. இவர்கள் கலிலேயர்கள் அல்லவா (.7: ἅπαντες οὗτοί εἰσιν οἱ λαλοῦντες Γαλιλαῖοι;)  என்ற இவர்களின் கேள்வி, கலிலேயர்களை புலம்பெயர்ந்தவர்கள் எப்படி பாhத்தார்கள், அல்லது அக்கால லூக்காவின் வாசகர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது. இவர்களின் வியப்பு, மகிழ்ச்சியை அல்ல, மாறாக சந்தேகத்தையே காட்டுகிறது. இங்கே வியப்பிற்கு பாவிக்கப்பட்டுள்ள இந்த கிரேக்க சொல் (ἐθαύμαζον எதௌமாட்சோன், ஆச்சரியப்பட்டனர்) பலவேளைகளில் இயேசு அதிசயங்கள் செய்தபோது மக்கள் சந்தேகப்பட்டு வியந்தார்கள், அதனை குறிக்க நற்செய்திகளில் பாவிக்கப்பட்டுள்ளது

வவ. 9-10: இவர்கள் எந்தெந்த இடத்தில் வசிக்கிறவர்கள் அல்லது இடத்தவர்கள் என்பதை லூக்கா விவரிக்கிறார். உரோமைய பேரரசு திருத்தூதர் காலத்தில் பரந்து விரிந்திருந்தது. பார்தியா, மேதியா, எலாயமியா, மொசோப்போதோமியா (Πάρθοι καὶ Μῆδοι καὶ Ἐλαμῖται καὶ οἱ κατοικοῦντες τὴν Μεσοποταμίαν) போன்றவை உரோமையரின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை. மற்றைய பகுதிகளான: யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா (சின்ன), பிரிகியா, பம்பலியா, சீரேன் போன்றவை வடகிழக்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய துருக்கி, இஸ்ராயேல், லெபனான், சிரியா, பலஸ்தீனா). எகிப்து லிபியா போன்றவை, தெற்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மோறாக்கோ போன்றய நாடுகளின் வடக்கு பிராந்தியாங்கள்). உரோமை என்பது பழைய உரோமை நிலவளவைக் குறிக்கும்

.11: லூக்கா, யூதர்கள் மட்டுமல்ல யூத மதத்தை தழுவியவர்களையும் விவரிக்கின்றார். இவர்கள், கிரேக்கரும், அரேபியருமாவர். உரோமையில் பல யூதர்கள் இருந்தனர், ஆனால் உரோமையர்களில் சிலர் யூத மதத்தை தழுவினார்கள் என்பது சாத்தியமில்லை. இந்த விவரிப்பில் இருந்து அக்காலத்தில் சமய சுதந்திரங்களும், சகிப்புத்தன்மைகளும், தூர புனித இடங்களுக்கான பயணங்களும் வழமையில் இருந்ததை காணலாம். இந்த காலத்தில் அரேபியாவில் இஸ்லாம் என்ற ஒரு மதம் உருவாகியிருக்கவில்லை. அங்கே மத சகிப்புத்தன்மை இருந்திருக்கிறது. இந்த நாட்களில் இஸ்லாமியர் எருசலேமிற்கு வருவதையோ, அல்லது யூதர்கள் இஸ்லாமியரின் தேசங்களுக்கு செல்வதையோ சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. இருவரும் தங்களுக்கென்று 'உண்மைகளை' உருவாக்க்கி அதனை நியாயப்படுத்த கதைகளையும், வியாக்கியானங்களையும் உருவாக்குகிறார்கள். (உரோமை பேரரசின் நில வரபடைத்தை காண இங்கே சொடுக்குக:http://www.timemaps.com/civilization/Ancient-Rome)


தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...