The Ascension of the Lord:ஆண்டவரின் விண்ணேற்பு திருவிழா,(அ)
ஆண்டவரின் விண்ணேற்பு திருவிழா
24.05.2020
M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’
Kopay South, Jaffna,
Sri Lanka,
Tuesday, May 19, 2020
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1,1-11
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 47
இரண்டாம் வாசகம்: எபேசியர் 1,17-23
நற்செய்தி: மத்தேயு 28,16-20
விண்ணேற்ப்பு என்னும் சிந்தனையை விவிலிய நூல்களும் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களும் உள்வாங்கியிருக்கின்றன. முதல் ஏற்பாடு, ஏனோக்கு மற்றும் எலியா போன்றவர்கள் விண்ணிற்கு சென்றாதக காட்சி அமைக்கின்றது (காண் தொ.நூ 5,24: 2அர 2,11). மோசே கூட, அவருடைய இறந்த உடலை மக்கள் காணாதபடியால் விண்ணகம் சென்றார், என இஸ்ராயேல் மக்கள் நம்பினர். இராபேல், தோபியாவின் கண்முன்னால் வானகம் ஏறிச்சென்றதை தோபித்து நூல் காட்டுகிறது (காண் தோபி 12,20). ஏற்றுக்கொள்ளப்படாத பல நூல்களான 4ம் எஸ்ரா, 2ம் பாருக்கு, போன்ற காட்சி நூல்களும் இந்த சிந்தனையை ஆழமாக முன்வைக்கின்றன. இதைவிட வேறு சில யூத நூல்களும் இப்படியான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றன. ஆரோனின் சாட்சியம் என்ற நூல் அவர் கடவுளின் அரியணைக்கு ஏறிச்சென்றதாக கூறும் அதேவேளை சில கும்ரான் சுருள்களும் நீதிமான் என்னும் பெரும் தலைவரும், வானகம் ஏறிச்சென்றார் என்று கூறுகின்றது (காண் 4கு491). ஆபிராகாம், ஈசாக்கு போன்றோரும் இவ்வாறு வானகம் சென்றதாகவும் சில வெளிப்பாட்டு நூல்கள் காட்டுகின்றன. ஏறுதல்-இறங்குதல் என்னும் சிந்தனை, மோசே சீனாய் மலையின் மீது ஏறி கடவுளின் வார்த்தையை பெற்றுக்கொண்டு இறங்கினார், அத்தோடு மேலே உயரமான இடத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்ற சிந்தனையிலிருந்து தொடங்கியது என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புதிய ஏற்பாடு, ஆண்டவர் இயேசு மரணத்திற்கு பின்னர் உயிர்த்து விண்ணுலகம் ஏறினார் என்பதை காட்டுகின்றது. நற்செய்தியாளர்கள் இயேசு விண்ணிற்கு சென்ற நிகழ்வை தானியேலில் காணப்படும் மானிட மகனுடன் (காண்க தானி 7,13) ஒப்பிடுகின்றனர். மேகங்களில் இயேசு மேலே செல்லும் நிகழ்வு, இயேசு மேலுலகை சார்ந்தவர் என்பதனைக் காட்டுகிறது. இந்த சிந்தனையை யோவான் அதிகமாக பயன்படுத்துவார் (காண்க யோவான் 3,13: 6,62). இது இயேசுவிற்கு கடவுளோடு இருந்த நெருங்கிய தொடர்பையும், அவரது இறைதன்மையையும் காட்டும் அடையாளங்களாகும். இந்த சிந்தனைகளையும் தாண்டி, எபிரேயர் திருமுகம், இயேசுவை வானகத்திற்கு ஏறிச்சென்ற தலைமைக் குருவாகக் காண்கின்றது. இந்த தலைமைக் குருவால்தான் மனித குலம் தன்னுடைய பழைய பாவங்களுக்கு பரிகாரம் செய்ய முடிந்தது என்பதனையும் விவரிக்கின்றது. பவுல் தன்னுடைய திருமுகங்களில், காலம் வரும்போது இயேசுவைப் போல மக்களும் வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என எழுதுகிறார் (காண் 1தொச 4,17). இச் சிந்தனையை திருவெளிப்பாடும் காட்டுகிறது (காண்க தி.வெ 11,12).
திருத்தூதர் பணிகள் 1,1-11
தூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி
1தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். 2விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். 3இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.4அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், 'நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். 5யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்' என்று கூறினார்.
இயேசுவின் விண்ணேற்றம்
6பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், 'ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?' என்று கேட்டார்கள்.
7அதற்கு அவர், 'என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல் 8ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்' என்றார்.
9இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. 10அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, 11'கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' என்றனர்.
வவ.1-3: லூக்கா தன்னுடைய இரண்டாவது நூலான திருத்தூதர் பணி நூலையும் முதலாவது நூலின் பெறுநரான தியோபிலுவிற்கே எழுதுகிறார். Θεόφιλος தியோபிலொஸ் என்பவர் அல்லது என்பது, இறைவனின் அன்பரைக் குறிக்கலாம். அல்லது ஒரு மரியாதைக்குரிய தனி நபரைக் குறிக்கலாம். உரோமைய பேரரசில் அனைவரினாலும் மரியாதை செய்யப்பட்ட ஒருவர், லூக்கா ஆண்டவரின் வரலாற்றை எழுதுவதற்கு நிதியுதவி செய்தார், அவருக்கே லூக்கா தன்னுடைய நூல்களை சமர்பித்ததாகவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் யாராக இருந்தாலும், இங்கே நோக்கப்பட வேண்டியது லூக்காவின் செய்திகளையாகும். லூக்கா இயேசு விண்ணேற்றமடைந்த நிகழ்வை இயேசுவின் முதலாவது பாகமாகக் காண்கிறார். அத்தோடு இயேசு தான் திருத்தூதர்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிய பின்னர்தான், விண்ணேற்றம் அடைந்தார் என்கிறார். இதனால் இயேசுவின் விண்ணேற்றம் அவருடைய கட்டுப்பாட்டில்தான் நடந்தது என்கிறார். இயேசு உயிர்த்த நாளில் இருந்து விண்ணேற்றம் அடையும் நாள்வரை, இந்த குறிப்பிட்ட நாட்களில் அவர் திருத்தூதர்களோடு பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் புலப்படுகிறது. இந்த செயற்பாடுகள் இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதைக் காட்டுகின்றன. இயேசு இறந்த பின்னர் அவருடைய உடல் திருடப்பட்டது, அவர் உண்மையிலேயே உயிர்க்கவில்லை என்ற சில கிறிஸ்தவ எதிர்போக்குகள் அக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. இதனை எதிர்க்க வேண்டிய தேவையும் லூக்காவிற்கு இருந்தது. மூன்றாவது வசனத்தில் உள்ள நாற்பது நாட்கள் (ἡμερῶν τεσσεράκοντα hêmerôn tesserakonta) என்பது அவர் நாற்பது நாட்களும் தொடர்ச்சியாக தோன்றினார் என்பதை குறிக்காது. நாற்பது நாட்கள் என்னும் காலப் பகுதி ஒரு நிறைவான காலப்பகுதியாக விவிலியத்தில் அங்காங்கே காணப்படுகிறது.
நாற்பது ஆண்டுகள் விடுதலைப்பயணம்,
எலியாவின் நாற்பது நாள் பயணம்,
தாவீதின் நாற்பது ஆண்டுகால ஆட்சி,
இயேசுவின் நாற்பது நாள் பாலை வன அனுபவம்
என்று இந்த நாற்பது நாள் உண்மையில் ஒரு நிறைவான காலத்தை காட்ட முயல்கிறது எனலாம்.
வ 4: இயேசுவின் கட்டளைகள் மீளறிவிக்கப்படுகிறது. இயேசு திருத்தூதர்களுடன் உணவருந்தும் போதுதான் இந்ந கட்டளைகளைக் கொடுத்தார் என்று கூறுவதனால் இயேசுவின் உயிர்ப்பு ஒரு மன அனுபவம் அல்ல, மாறாக அது ஒரு உண்மை நிகழ்வு என்று விவரிக்கின்றார். 'அவர்களோடு சேர்ந்து உண்ணும் போது' என்ற இந்த சொற்களை கிரேக்க மூல மொழியில் வித்தியாசமாக காண்கிறோம். இது συναλιζόμενος sunalidzomenos என்று கிரேக்கத்தில் உள்ளது, இதற்கு மூன்று அர்த்தங்களை கொடுக்க ஆய்வாளர்கள் முயல்கின்றனர்.
அ. அவர்களோடு உணவருந்திக்கொண்டிருந்த போது,
ஆ. அவர்களோடு கூடியிருந்தபோது,
இ. அவர்களோடு இரவைக் கழித்தபோது,
இந்த மூன்று அர்த்தங்களில் சரியானதை கண்டுபிடிப்பது இலகுவாக இருக்காது. மற்றைய
கட்டளைகள் இயேசுவால் சீடர்களுக்கு கொடுக்கப்பட்டது, மாறாக சீடர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள் அல்ல என்பதையும் காட்டுகிறார் லூக்கா. எருசலேமில் காத்திருக்கச் சொன்னது, ஏற்கனவே லூக்கா நற்செய்தியிலும் வேறு வார்த்தைகளில் பதியப்பட்டுள்ளது (காண் லூக்கா 24,49). எருசலேமின் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் இந்த வசனத்தை எடுக்கலாம். தந்தையின் வாக்குறுதி என்பது, தூய ஆவியாரின் வருகையைக் குறிக்கிறது என அதிகமானவர்கள் சூழலியலின் அடிப்படையில் நோக்குகின்றனர்.
வ. 5: ஏற்கனவே இயேசு திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவின் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை யோவான் கூறியிருக்கிறார் (காண் லூக் 3,16). இது இங்கே நிறைவடைகிறது. இயேசுவின் சீடர்களில் சிலரும் தண்ணீர் திருமுழுக்கை பெற்றவர்களாக இருந்திருக்கலாம், இங்கே இயேசுவின் உண்மை திருமுழுக்கான தூய ஆவியின் (ἐν πνεύματι en pnumati) திருமுழுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. யோவானின் தண்ணீர் திருமுழுக்கும் (Ἰωάννης μὲν ἐβάπτισεν ὕδατι), இயேசுவின் பெயரால் பெற்ற தூய ஆவியார் திரு முழுக்கும், ஆரம்ப காலத்தில் ஒரே நேரத்தில் இருந்ததாகவும் திருத்தூதர் பணி நூலில் காணலாம். திருச்சபை தூய ஆவியின் திருமுழுக்கை மட்டுமே உண்மையானதாக அங்கீகரித்தது, நீர் திருமுழுக்கை அடையாளமாகவும் அல்லது ஆயத்தமாகவும் நோக்கியது.
வவ. 6-7: திருத்தூதர்களின் இந்தக் கேள்வி அவர்களின் இஸ்ரேலிய பாரம்பரிய நம்பிக்கையைக் காட்டுகிறது. பபிலோனியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், எரோதியர்கள், உரோமையர்கள் என பலரால் ஆட்சிசெய்யப்பட்டவர்கள், தங்களுக்கு சுதந்திரமும் தாவீதின் ஆட்சியைப்போல சொந்த ஆட்சியுரிமையும் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அந்நியர்களின் ஆட்சியை மண்ணின் மைந்தர்களால் சகிக்க முடியாமல் இருப்பதை வரலாற்றில் காண்கின்றோம், இந்த விடயத்தில் இஸ்ராயேலர்கள் சற்று கடினமானவர்களாகவே இருக்கிறார்கள். இஸ்ராயேலருக்கு ஆட்சியுரிமை என்பது, இயேசுகால யூதர்களுக்கு மிக முக்கியமான கனவாக இருந்தது (ἀποκαθιστάνεις τὴν βασιλείαν τῷ Ἰσραήλ; apokathistaneis tên basileian tô Israêl). (தமிழர்களுக்கும் அவர்கள் போராளிகளாக இருந்தாலும், மதவாதிகளாகவிருந்தாலும், மிதவாதிகளாகவிருந்தாலும், சாதாரண பொது மக்களாக இருந்தாலும், இந்த கேள்வி இதயத்திலிருந்து மறைவாக எழும் என்பதை யாரும் மறுக்க முடியாது).
இயேசுவின் பதில் இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது.
அ) காலங்களை நிர்ணயிப்பவர் இறைவன் ஒருவரே.
ஆ) மனிதர்களின் ஆட்சி மாறினாலும் உள்ளார்ந்த சுதந்திரத்தை அவர்களால் தர இயலாது. அத்தோடு உண்மையான ஆட்சியுரிமை கடவுளிடமிருந்தே வருகிறது.
காலங்களையும் நேரங்களையும் (χρόνους ἢ καιροὺς chronous ê kairous) கணித்தல் கிரேக்க காலத்தில் மிக முக்கியமான விஞ்ஞானமாக இருந்தது. இக்காலத்திலும் இது முக்கியமான அறிவியலாக இருக்கிறது. சில விஞ்ஞானிகள் காலத்தை கடக்க முயல, சிலர் நேரத்ததை விட வேகமாக சென்று முன்நோக்கி பார்க்க முடியுமா என சிந்திக்கிறார்கள். இந்த இடத்தில் காலத்தையும், தக்க நேரத்தையும் கணிக்கும் இரண்டு முக்கியமான சொற்களை பாவிக்கிறது. காலத்தையும் நேரத்தையும் மனிதன் கணித்தால், இயற்கையில் விநோதம், எதிர்பார்ப்புக்கள், அதிசயங்கள் மற்றும் நம்பிக்கை இல்லாமல் போகும், ஆக அது கடவுளுடைய வேலை, அவருக்கே விட்டுவிடுங்கள் என்கிறார் ஆண்டவர்.
வ. 8: இவர்கள் இஸ்ராயேலுக்கு விடுதலையை பற்றி பேச, இயேசு இவர்கள் விரும்பாத சமாரியாவையும் இஸ்ராயேலோடு சேர்த்து அனைவருக்கும் விடுதலை தரவேண்டியுள்ளது என்கிறார். எருசலேமில் தங்கியிருக்கச் சொன்னவர், இப்போது சமாரியாவையும் உலகின் கடையெல்லையையும் உள்ளடக்குகிறார். இந்த உள்ளடக்க சிந்தனைக்கு, அவர்களுக்கு தேவையாக இருந்தது தூய ஆவியின் வருகையே எனவும் காட்டுகிறார். உலகின் கடை எல்லை (ἕως ἐσχάτου τῆς γῆς heôs eschatou tês gês) என்பது, அக்காலத்தில் உரோமையாக கருதப்பட்டது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். சிலர் இதனை உரோமைய பேரரசின் மேற்கு எல்லையாக இருக்கும் என கருதுகின்றனர், அதாவது இது இன்றைய ஸ்பானிய தேசமாக இருக்கலாம். இருப்பினும் இந்த வரிக்கு பின்னால் இறுதிக்கால சிந்தனை இருக்கிறது என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர், இதனால் 'உலகின் கடையெல்லை' என்பது விண்ணகத்தை குறிக்கலாம்.
வ. 9: ஆண்டவர் சீடர்களின் கண் முன்னால்தான் எடுத்துக்கொள்ளப்பட்டார். இங்கே செயற்பாட்டு வினை பாவிக்கப்படுகிறது (ἐπήρθη epêrthê மேலே எடுக்கப்பட்டார்). ஆக ஆண்டவரின் விண்ணேற்பில் இறைவனின் திட்டம் அடங்கியிருக்கிறது என்பதை லூக்கா காட்டுகிறார். இயேசுவை அனுப்பியதைப் போல இப்போது அவருடைய வருகையையும் கடவுளே ஏற்பாடு செய்கிறார். மேகம் (νεφέλη nefelê), இயேசுவின் தெய்வீகத்தையோ அல்லது அவர் மனித உலகில் இருந்து தன்னுடைய உலகம் செல்லுவதையோ குறிக்க பயன்படுகிறது.
வவ. 10-11: வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்து, இவர்கள் காட்சி; காண்பவர் போல் காணப்படுகிறார்கள். அனைத்தும் அவர்கள் கண்முன்னாலே நடக்கிறது. வெண்ணுடை அணிந்தவர்கள் லூக்கா நற்செய்தியில் ஏற்கனவே தோன்றியவர்கள் (காண்க லூக் 24,4.23).
இவர்கள் வானதூதர்களாக இருக்கலாம். கலிலேயர்கள் என்று சீடர்களை அழைப்பதன் மூலம் சீடர்களை குறுகிய வரையறைக்குள் இருந்து, வெளியால் வந்து, இயேசு சொன்ன முழு உலகையும் பார்க்கக் கேட்கின்றனர்;. வெண்மை இங்கே இவர்களின் ஆடையைவிட அவர்களின் மேலுலக தன்மையை காட்டும் உருவகமாக இருக்கலாம். பார்வையாளர்களாக இருக்காமல் சாட்சியாளர்களாக இருக்குமாறு இந்த வெண்மையானவர்கள் இயேசுவின் கட்டளைகளை நினைவூட்டுகின்றனர்.
திருப்பாடல் 47
ஆண்டவரே உலகின் அரசர்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)
1மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவர்
3வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)
5ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
7ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். 9மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.
இந்த நாற்பத்தி ஏழாவது திருப்பாடல் ஒரு வகை புகழ்சிப்பாடல் வகையை சார்ந்தது. கோராவின் பாடல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த கோராவினர் (קֹרַח), பாடகர் குலாமாக இருக்கலாம் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இந்த பாடல் இஸ்ராயேலரின் பெருமைகளை எடுத்துரைப்பது போல தோன்றினாலும், இங்கே மக்கள் என்பவர்கள், கடவுளின் பிள்ளைகளாகிய அனைவரையும் குறிக்கும் என்ற நோக்கோடு இப்பாடலை காணவேண்டும்.
இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய வேதனையான நாட்களில் இப்படியான பாடல்களை பாடி தங்களது பழைய பெருமைகளை நினைத்து துன்பத்தில் துவண்டு விடாமல் மீண்டும் எழுந்திருக்க முயற்சிசெய்தனர். பழைய நன்மைத் தனங்களை நினைப்பது தற்கால வெறுமைகளிடமிருந்து தப்பிக்க, நல்லதொரு ஆரோக்கியமான முயற்சி என்பதை அவர்கள் அன்றே அறிந்திருக்கிறார்கள். (ஒப்பிடுக: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். குறள் 239). இந்த பாடல் பல வழிபாட்டு வார்த்தைகளை கொண்டமைந்திருப்பதனால் இதனை ஆலய வழிபாட்டு புகழ்சிப்பாடல் எனவும் சிலர் தரம்பிரிக்கின்றனர்.
வவ.1-2: மக்களினங்கள் என்று அனைத்து மக்களையும் உள்வாங்குகிறார் ஆசிரியர். கைதட்டுதலும் (תָּקַע தகா), மகிழ்சியால் சத்தமிடுதலும் (רוּעַ rû‘a) வழிபாட்டு முறையை குறிக்கின்றன. உன்னதராகிய கடவுள் (יְהוָה עֶלְיוֹן அடோனாய் எலியோன்) என்பது கடவுளுக்கு இஸ்ராயேலர் கொடுத்த இன்னொரு காரணப் பெயர். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது பயத்தை உண்டுபண்ணுவதற்கல்ல, மாறாக நன்மைத் தனத்தை மேற்கொள்வதற்கே என்று பார்க்கவேண்டும். இந்த கருத்துடன்தான், கடவுளிடம் கொள்ளும் அச்சமே மெய்யறிவின் தொடக்கம் என்று விவிலியம் காட்டுகின்றது. மக்களினங்களுக்கு மனிதர்கள் அரசர்களாக இருக்க முடியாது, கடவுள் மட்டுமே அரசர் என்பது கடவுள்-இறைமைத் தத்துவம். கடவுள்தான் உண்மையான அரசர் என்பதற்கு பின்னால் பல இறையியல் மற்றும் வரலாற்று கருத்துக்கள் காணக்கிடக்கின்றன.
வவ.3-4: யாக்கோபு வீட்டாரின் (இஸ்ராயேலரின்) பழைய பெருமைகள் நினைவூட்டப்படுகின்றன. எபிரேய விவிலியத்தில் வேற்றினத்தார் என்ற பிரிவினைச் சொல் இல்லை, மக்களினம் என்றே உள்ளது (עַמִּים ‘ammîm). இது சில வேளைகளில் இஸ்ராயேலரையும் குறிக்கும், மற்றவரையும் குறிக்கும். கடவுளுக்கு அனைவரும் அவர் மக்களே. யாக்கோபு வீட்டார் தவறான வழியில் சென்றால் அவர்களும் மற்றவர் காலடியில் விழுவர் என்பதைத்தான் ஆசிரியர் காட்டுகிறார். தமது பெருமைகளைக் காட்டும் அதேவேளை ஆசிரியர் மறைமுகமாக எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.
வவ.5-7: கடவுள் உயரமான இடத்தில் இருக்கிறார் என்பது பண்டைய நம்பிக்கை.
இஸ்ராயேலர் இதனால்தான் மலைகளில் மற்றும் குன்றுகளில் பலிப் பீடங்களைக் கட்டினர்.
இயேசுவும் மலையில் சென்று செபிப்பதையும் அல்லது மலையில் அமர்ந்து போதிப்பதையும் இங்கு ஒப்பிட வேண்டும். ஆறாவது வசனம் அழகான எபிரேய சொற்றொடர் அணிநயத்தில் அமைந்துள்ளது. (זַמְּרוּ אֱלֹהִים זַמֵּרוּ זַמְּרוּ לְמַלְכֵּנוּ זַמֵּרוּ׃ dzammerû ’elôhim dzamrû dzamrû lemalmenû dzamrû) நான்கு தடவைகள் பாடுங்கள் என்று ஏவல் விடப்படுகிறது (זַמְּרוּ ட்சம்ரூ- பாடுங்கள்), மீண்டுமாக ஆசிரியர் கடவுளை அரசராக வர்ணிக்கிறார். ஏழாவது வசனம், புகழ்பா என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறது. இதனை எபிரேயத்தில் மஸ்கில் מַשְׂכִּיל என்று அழைப்பார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன, தியானப் பாடல் என்றும் இது பொருள்படும்.
வவ.8-9: பிற இனத்தார் என்பதற்கு நாடுகளின் மக்கள் (עַל־גּוֹיִם) என்ற சொல் பாவிக்கப்படுகிறது.
இது அனைவருக்கும் கடவுள் மேல் உரிமையுண்டு என்பதனைக் காட்டுகிறது. அரியணையை அதிகாரத்தின் அடையாளமாக மனிதர்கள் கருதுகின்றனர். ஆனால் கடவுளின் அரியணை தூய்மையின் அடையாளமாக இருப்பதாக காட்டுகிறார் ஆசிரியர் (קֹדֶשׁ கொடோஷ்- தூய்மை).
வ.10: ஆபிரகாமின் மக்களுக்கு இணையாக, மக்களினங்களின் தலைவர்கள் (נְדִיבֵי עַמִּים nedive ‘amîm) ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பாதுகாக்காக்கப்படுவததையும் நினைவூட்டுகிறார்.
கொற்றம் என்பதை கடவுளின் பாதுகாப்பு கேடயம் எனவும் கொள்ளலாம்.
எபேசியர் 1,17-23
17நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! 18-19கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, 20கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். 21அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல் வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். 22அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார்.
23திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
கிறிஸ்தியலையும் மற்றும் திருச்சபையியலையும் ஆழமாக காட்டுவதில் எபேசியர் திருமுகம் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. மேய்ப்புப் பணியியலில் மிகவும் ஆர்வத்தையும், அறிவுறை கூறுவதில் மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கிறது. பவுலுடைய மற்றைய திருமுகங்களில் பார்கிலும் இந்த திருமுகம் சற்று வித்தியாசமானதாக இருக்கின்ற படியால் பலர் இதன் ஆசிரியத்துவத்தை கேள்விக்குட்படுத்துகின்றனர். அத்தோடு எபேசியர் திருமுக்திற்கும் கொலோசேயர் திருமுகத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதும், நம்முடைய ஆராட்சியை வேகப்படுத்தும். இக்கடிதத்தின் ஆசிரியத்துவத்தை விளக்குவது இலகுவல்ல. பாரம்பரியமாக பவுல்தான் இந்த கடிதத்தை எழுதினார் என நம்பப்படுகிறது. நவீன ஆய்வியல் இக்கடிதத்தின் ஆசிரியத்துவத்திற்கு பவுலுடைய நண்பர் அல்லது சீடர் ஒருவரையே பரிந்துரை செய்கிறது.
பவுல் எபேசில் பல ஆண்டுகள் பணியாற்றினார் அத்தோடு எபேசிய தலத்திருச்சபையை அதிகமாக அன்பு செய்தார். இந்த கடிதம், ஒனேசிமுஸ் தன்னுடைய முதலாளியிடம் திரும்பி வரும்வேளை அவர் எபேசு வழியாக வரவேண்டியிருந்தது. எனவே பவுல் எபேசியருக்கும் ஒரு திருமடலை எழுதினார், அதுதான் இந்த திருமடலாக இருக்கவேண்டும் என்பது ஒரு ஊகம். எபேசியருக்கு (காண்க 1,1: ἐν Ἐφέσῳ) என்ற சொற்றொடர் மூல பாடங்களில் இல்லை, இதனைக் கொண்டு சிலர் இந்த கடிதம் இலாவோதியருக்கு எழுதப்பட்டது என்றும், இது ஒரு பொதுவான திருமடல் எனவும் சிலர் ஆரம்ப காலம் தொட்டே வாதிட்டு வருகின்றனர்.
இந்த கடிதத்தை பவுல் எழுதவில்லை என்று உறுதியாகவும் இலகுவாகவும் சொல்லிவிட முடியாது. ஏன் இந்த கடிதம் எழுதப்பட்டது என்பதும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்கப்பட முடியாதது. வழிபாடும் செபமும் இந்த கடிதத்தில் முக்கியமான இடத்தை பிடிப்பதை அவதானிக்கலாம். கொலோசேயர் திருமுகத்தைபோல கிறிஸ்துவின் முக்கியத்துவத்தை இந்த கடிதத்தின் மையமான செய்தியாக எடுக்கலாம்.
வ.17: தந்தையாகிய கடவுளுக்கு இரண்டு அழகான பெயர்களை வைக்கிறார் பவுல். அவை: இயேசு கிறிஸ்துவின் கடவுள் (θεὸς τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ theos tou kuriou hêmôn Iêsou Christou), மற்றும் மாட்சி மிகு தந்தை (ὁ πατὴρ τῆς δόξης ho patêr tês dodzês). நற்செய்திகள், கடவுளை மற்றும் அவர் செய்தியை அறியவே தூய ஆவியார் வருகிறார் என்று சொல்ல, இந்த திருமுகம் வேறுவிதமாக, இந்த தூய ஆவி இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தருவார் என்கிறது. இதிலிருந்து இயேசுவையும், தந்தையையும் அறிந்துகொள்ளல் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ளது என்பது புலப்படுகிறது. கிரேக்க மூல பாடம் இந்த வரியில் முக்கியமான சில மயக்கத்தைக் கொண்டுள்ளது. இங்கே தூய ஆவியார் என்ற சொல் செயற்படு பொருளாக வராமல், ஆறாம் வேற்றுமை உருபு போல வருகிறது (πνεῦμα σοφίας καὶ ἀποκαλύψεως pneuma sofias kai apokalupfeôs) என்று சிலர் வாதிடுகின்றனர். ஞானமும் இறைவெளிப்பாடும் தரும் தூய ஆவியை கடவுள் தருவாராக என்பது யூத செப வாழ்த்துக்களில் ஒன்று.
வவ.18-19: இந்த நீண்ட வரிகள் இன்னொரு ஆன்மீக வேண்டுதல். இந்த வரிகளில் வாசகர்களுடைய அகக்கண்கள் ஒளியூட்டப்பட்டு (τοὺς ὀφθαλμοὺς τῆς καρδίας tous ofthalmous tês kardias), மூன்று முக்கியமான பாக்கியங்களை பெறவேண்டும் என விரும்பப்படுகின்றன. அகக்கண்கள் என்ற தமிழ் சொல்லுக்கு, இதயத்தின் கண்கள் என்ற மூல கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.
அ. கடவுளுடைய அழைப்பு எத்தகைய எதிர்நோக்கை தந்துள்ளது.
ஆ. இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது.
இ. நம்பிக்கை கொள்பவர்களில் செயலாற்றும், அவருடைய வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது.
இவை, பவுலின் சிந்தனைப்படி இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியனவல்ல, அவை கடவுளால் மட்டுமே, தூய அவியின் உதவியோடு விளங்கப்படுத்தப்படவேண்டியவை. இந்த பாக்கியங்கள் நிச்சயமாக, யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கு தமது சொந்த மாட்சியை அழகாக விளக்கி நம்பிக்கை கொடுக்கும். எபேசியர்கள், கிரேக்க பின்புலத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு கிரேக்க தெய்வங்கள் தருவனவாகிய சில மந்திர தந்திரங்கள் கடவுளின் கொடைகளை விட முக்கியமானதாக தெரிந்திருக்கலாம். உதாரணமாக கிரேக்க தெய்வமான டயானா கடவுளின் வல்லமை என்ற மயக்கம் இவர்களுக்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது. இவர்களுக்கு இந்த இயேசுவும், அவர் தந்தையாகிய உண்மைக் கடவுளின் மாட்சியும், அவர் பிள்ளைகளாக இருப்பதன் கௌரவத்தையும் பவுல் அழகாகவும், ஆழமாகவும் தெளிவு படுத்தவேண்டியவராக இருக்கிறார்.
வ.20: கடவுள் கிறிஸ்துவிற்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை விளக்குகிறார் பவுல். முதலின் கடவுள் தன்னுடைய வல்லமையுள்ள செயல்களை கிறிஸ்துவில் செயல்படுத்துகிறார். இப்படியாக கிறிஸ்து மட்டும்தான் கடவுளின் வல்லமையான செயல்களை செயல்படுத்த தகுதியானவராகிறார். அதாவது அவர் மட்டும்தான் கடவுளின் திருப்த்திகரமான மெசியாவாக மாறுகிறார். இவர் இறந்தாலும் அவரை கடவுள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழ செய்கிறார் (ἐγείρας αὐτὸν ἐκ νεκρῶν egeiras auton ek nekrôn). அத்தோடு கடவுள் அவரை தன்னுடைய வலப்பக்கத்தில் அமரச் செய்கிறார் (καθίσας ἐν δεξιᾷ αὐτοῦ ἐν τοῖς kathisas ev dezdia autou en tois). இது பரலோகத்தில் நடக்கிறது என்பதையும் இந்த வரி காட்டுகிறது. மெசியா கடவுளின் வலப்பக்கத்தில் அமர்வார் என்று இஸ்ராயேலின் நம்பிக்கை காட்டியது. சில வேளைகளில் ஒரு சில மனிதர்களை இந்த இடத்திற்கு அவர்கள் கொண்டுவந்தும் பார்த்தனர். ஆனால் இந்த வரியில், பவுல் இந்த கடவுளின் வலப்பக்கம், இயேசு கிறிஸ்து ஒருவருக்கே உரியது என்பதைக் காட்டுகிறார்.
வ.21: தன்னுடைய நம்பிக்கையை இந்த வரியில் விசாலமாக விளக்குகிறார். கடவுள் இயேசுவை பலருக்கு மேலாக உயர்த்தியுள்ளதாக பவுல் கூறுகிறார். ஆட்சியாளர்கள் (ἀρχῆς archês), அதிகாரம் கொண்டோர் (ἐξουσίας edzousias), வல்லமையுடையோர் (δυνάμεως dunameôs), தலைமை தாங்குவோர் (κυριότητος kuriotêtos) போன்றவர்கள் இவ்வாறு காட்டப்பட்டுள்ளனர். ஆண்டவரை இவர்களுக்கு மேல் உயர்த்துவது என்பது, அக்கால அதிகார வர்க்க கிரேக்க உலகிற்கு வித்தியாசமானதாக தோன்றியிருந்திருக்கும். இவர்கள் அனைவரும் இவ்வுலகின் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள். இவர்கள்தான் இந்த உலகின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் என நம்பப்பட்டார்கள். ஆனால் இப்போது கிறிஸ்துவிற்கு முன் இவர்கள் சிறியவர்கள் என்பது புலப்படுகிறது. இரண்டாவதாக, கீழுலகில் மட்டுமல்ல, எந்த உலகிலும் இயேசு கிறிஸ்துவிற்கு மேல் எவரும் இல்லை என்பதையும் காட்டுகிறார் பவுல். வரும் உலகிலும் (τῷ μέλλοντι), அத்தோடு வேறு எப்பெயர் கொண்டவர் எவருக்கும் மேலாகவும் இயேசு கிறிஸ்து உயர்த்தப்பட்டிருக்கிறார். பவுல் இங்கே காட்டுகின்ற சிந்தனைகள் யூத மெசியானிக்க சிந்தனைகளைவிட பல மடங்கு மேலாக செல்கிறது.
வ.22: தொடக்க நூலில் கடவுள் அனைத்தையும் ஆதாமின் கட்டளையின் கீழ் வைத்தார் என காட்டப்படுகிறது (காண்க தொ.நூல்1,28). ஆனால் ஆதாமின் கீழ்ப்படியாமை அனைத்தையும் தலைகீழாக்கியது. எபேசியரில் பவுல் இதனை நினைவுபடுத்துகிறார் போல. இயேசுவின் கீழ்ப்படிவு அவரை இரண்டாவது ஆதாமாக்கி அனைத்தையும் அவர் கட்டளைக்கு உட்படுத்துகிறது. அனைத்தும் அவருக்கு கீழ்படிகிறது (ὑπέταξεν ὑπὸ τοὺς πόδας αὐτοῦ hupetadzen hupo tous autou). அக்கால அரச அரியணை ஏறும் நிகழ்வுகளில், படைகள் மற்றும் மக்கள் அரசருக்கு அடிபணிவதாக அரசருடைய அரியணை ஏறுதலில் வாக்களிப்பர், அதனை ஒட்டியே இங்கே இயேசு உண்மையான தலைவராகவும் அனைத்தும் அவருக்கு கீழ்ப்படிவனவாக காட்டப்படுகின்றன.
அடுத்த பகுதியில் இன்னொரு முக்கியமான செய்தியை இறுதியாகவும் அனைத்திற்கும் மேலாகவும் கொண்டு வருகிறார். இவ்வளவு நேரமும் உலகின் சக்திகளையும் தலைவர்களையும்
இயேசுவிற்கு கீழாக காட்டியவர், இறுதியாக திருச்சபையை கொண்டு வருவதன் மூலம், திருச்சபைதான் இறுதியான சக்தி என்பது புலப்படுகிறது. அத்தோடு இந்த திருச்சபையின் தலை (κεφαλή kefalê) இயேசுவாகிறார். தலை உடலுக்கு மிக முக்கியமானது, இதனை கிரேக்கர் நன்கு அறிந்து வைத்திருந்தனர். தலையில்லாமல் உடலால் வாழவோ அல்லது இயங்கவோ முடியாது. தலையின்றி உடல் வெறும் சவம். ஆக தலைதான் உடலுக்கு உயிரையும் அடையாளத்தையும் கொடுக்கிறது. அத்தோடு திருச்சபை ஒரு உடல், அங்கே உறுப்புக்கள் பல இருக்கலாம், பணியாளர்களும் பலர் இருக்கலாம், ஆனால் தலை ஒன்றே, அது இயேசு கிறிஸ்து மட்டுமே. ஆரம்ப கால திருச்சபையில் சில தலைவர்கள் பிரிவினை வாதங்களை முன்வைத்து தங்களை தலைவர்களாக மாற்ற முயன்றனர், இது அடிப்படையிலே தவறானது. தலை என்றால் அவர் இயேசு மட்டுமே என்பது பவுலுடைய மிக முக்கியமான கிறிஸ்தியல் சிந்தனை.
வ.23: கிறிஸ்துவின் உடல் திருச்சபை (σῶμα sôma). உடல் நல்லது, அழகானது. தலை தனித்து மனிதனாக இயங்க முடியாது, தலைக்கு ஒரு உடல் நிச்சயமாக தேவை. அந்த உடல்தான் திருச்சபை (ἐκκλησίᾳ ekklêsia) என்கிறார் பவுல். இயேசுவிற்கு இன்னொரு பெயரை முன்மொழிகிறார். அவரை எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகிறவராக காட்டுகிறார் (τὸ πλήρωμα τοῦ τὰ πάντα ἐν πᾶσιν πληρουμένου.). இந்த வரியை சில விவிலியங்கள் வித்தியாசமாக மொழிபெயர்க்கின்றன, அதற்கு கிரேக்க மூல மொழியின் பன்முகத்தன்மையே காரணம். திருச்சபை கிறிஸ்துவின் உடல், அதுவே அவருடைய நிறைவு, அவர் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார். திருச்சபை சக்தியில்லாத வெறும் உணர்வு ரீதியான ஒரு கூட்டம் அல்ல மாறாக அது கடவுளின் வல்லமை பெற்ற ஒரு சமூகம் என்பது இங்கணம் புலப்படுகிறது.
மத்தேயு 28,16-20
யேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18, லூக் 24:36 - 49, யோவா 20:19-23, திப 1:6 - 8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். 17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். 18இயேசு அவர்களை அணுகி, 'விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. 19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார்.
இவை மத்தேயு நற்செய்தியின் இறுதியான வரிகள். மத்தேயு தன் நற்செய்தின் தொடக்கத்தில் இயேசுவை தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனும் என அறிமுகப்படுத்தினார் (காண்க மத் 1,1 υἱοῦ Δαυὶδ υἱοῦ Ἀβραάμ hiou David huiou Abraam). இப்போது அவரை முழு பிரபஞ்சத்தின் தலைவராகவும் ஆண்டவராகவும் முடிவுரை எழுதுகிறார். இந்த காட்சிகளுக்கு முன் இயேசு தான் உயிர்த்ததன் பின்னர், பல காட்சிகளையும் கட்டளைகளையும் சீடர்களுக்கு கொடுத்திருக்கிறார் பின்னர் இறுதியாக அவர் வானுலகம் செல்ல ஆயத்தமாகிறார். இயேசுவின் விண்ணேற்பு, மாற்கு, மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளிலும் தரப்பட்டுள்ளது. இயேசுவின் விண்ணேற்பும் அவருடைய இறுதியான கட்டளையும் முக்கியமான பல இறையியல் சிந்தனைகளை முன்வைக்கின்றன. இதன் வாயிலாக இயேசு மண்ணுலகை சார்ந்தவர் அல்ல என்பதும், அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்பதும், அவருடைய அனுமதியிலேயே அனைத்தும் நடைபெறுகிறது எனவும் காட்டப்படுகின்றன.
வ.16: யூதாசை தவிர்த்து பதினொரு சீடர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள். இவர்களைத் திருத்தூதர்கள் என எடுக்கலாம். மத்தேயுவின் கிரேக்க விவிலியம் இவர்களை ἕνδεκα μαθηταὶ hendeka mathêtai (பதினொரு சீடர்கள்) என்று சொல்கிறது. இயேசுவிற்கு இன்னும் பல சீடர்கள் இருந்தார்கள், அவருடைய தாய் இருந்தார், அவருடைய பெண் சீடர்கள் இருந்தார்கள், அத்தோடு அவருடைய உறவினர்களும் இருந்தார்கள். இவர்களை விடுத்து, இங்கே மத்தேயு கலிலேயாவிற்கும் அவர் பதினொரு சீடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இவர்கள் கலிலேயாவில் உள்ள ஒரு பெயரிடப்படாத மலைக்கு செல்கிறார்கள். பல நேரங்களில் திருத்தூதர்களின் பெயர்களை விவரிக்கின்ற மத்தேயு இங்கே அதனை செய்யாமல் விடுகிறார். அவசரம் காட்டுகிறார் அல்லது தன் வாசகர்களுக்கு அது தெரிந்திருக்கும் என நினைக்கிறாரா? என்று தெரியவில்லை. எருசலேம் யூதர்களின் புனித நகராகவும் தலை நகராகவும் இருந்தது, இருப்பினும் இயேசு தான் வளரவும் தன் பணியை தொடக்கவும் கலிலேயாவையே தெரிவு செய்கிறார். கலிலேயா எப்போதுமே அவருக்கு மகிழ்ச்சியான இடமாகவும், ஆறுதலின் இடமாகவும் இருந்திருக்கிறது. இறுதியாக கலிலேயாதான் திருச்சபையின் தொடக்க இடமாகவும், இறுதியான கட்டளையை பெற்ற இடமாகவும் மாற்றம் பெறுகிறது. இவ்வாறு கலிலேயா ஆசீர் வதிக்கப்படுகிறது. இயேசு தன் சீடர்களை கலிலேயாவில் உள்ள மலையில் சந்திக்கிறார். இவர்களுக்கு முன்னமே இங்கு வந்தார் என எடுக்கலாம். மலை இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம். முதல் ஏற்பாட்டில், அதிகமாக கடவுள் தன்னை மலையிலும் உயரமான இடத்திலும் காட்டுவார், அதனைத்தான் இங்கேயும் மத்தேயு இயேசுவிற்கு கொடுக்கிறார்.
வ.17: இவர்கள் இயேசுவை இங்கே காண்கிறார்கள் (ἰδόντες αὐτὸν). இதனால் இயேசு இவர்களுக்கு முன்பே வந்துவிட்டார் என்பது புலப்படுகிறது. இயேசுவை கண்டவர்களை இரண்டு வகையான சீடர்களாக பிரிக்கிறார் மத்தேயு. ஒருவகை அவரைக் கண்டதும் பணிகிறார்கள் (προσεκύνησαν proseukunêsan). இது சாதாரண பணிதல் அல்ல மாறாக முகம் குப்புற விழுதல், இதன் மூலம் இவர்கள் இயேசுவை கடவுளாக காண்கிறார்கள் என்பது காட்டப்டுகிறது. இவர்களின் இந்த முகம்படவிழுதல் வணக்கம், மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் ஞானிகள் செய்த வணக்கத்தை நினைவூட்டுகிறது (காண்க மத் 2,11). இன்னொரு வகை ஐயம் கொள்கிறது. இவர்கள் ஆரம்ப கால திருச்சபையில் இருந்த நம்பிக்கை குன்றியவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் (ἐδίστασαν edistasan). இந்த ஐயம் கொள்கிறவர்கள் பதினொரு சீடர்களுக்குள்ளேயே இருந்திருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
சில ஆய்வாளர்கள் அனைவரும் முதலில் வணங்கிவிட்டு பின்னர் சந்தேகித்தார்கள் என்ற ஒர வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இதற்கு வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆண்டவரோடு இருந்தும், அவரைக் கண்டும், அவரை அனுபவித்தும் இறுதியாக ஐயம் கொள்ள வைக்கிறது என்பது மனிதத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வ.18: இயேசு இன்னொரு அடியை முன்வைக்கிறார். அவர் அவர்களை அணுகுகிறார் (προσελθὼν ὁ Ἰησοῦς). ஆக இங்கே முதலில் அணுகுகிறவர் இயேசு. அணுகிக் கொண்டு தன்னுடைய அதிகாரத்தின் வரையறையை விளக்குகிறார். சாதாரண உலக தலைவர்களைப்போல் அல்லாமல் தனக்கு விண்ணுலகிலும் மண்ணுலகிலும் சகல அதிகாரங்களும் தரப்பட்டதாக சொல்கிறார்.
இயேசுவின் இந்த அதிகார வரையறை அவரை உண்மையான மெசியா எனக் காட்டுகிறது. இதே அதிகாரத்ததைத்தான் சாத்தான் இயேசுவிற்கு கொடுப்பதாக சொல்லியது (காண்க 4,8-9). சாத்தானின் அதிகாரம் மாயையான அதிகாரம், ஆனால் இப்போது இயேசு கொண்டிருப்பது உண்மையான அதிகாரம். இந்த அதிகாரம் அருளப்பட்டிருக்கிறது, ஆனால் யாரால் என்று சொல்லவில்லை, சூழலியலில் இருந்து பார்க்கின்றபோது கடவுள்தான் அதன் முதலாளி என்பது தெரிகிறது.
வ.19: சீடர்களுக்கு மிக முக்கியமான வரலாற்று கட்டளை கொடுக்கப்படுகிறது. எல்லா மக்களினங்களையும் சீடராக்கச் சொல்லி கட்டளையிடுகிறார் இயேசு (μαθητεύσατε πάντα τὰ ἔθνη mathêteusate panta ta ethnê). இது மிகவும் வித்தியாசமான கட்டளை. ஆண்டவரின் முதல் சீடர்கள் அனைவரும் யூதர்களாகவோ அல்லது யூத மத கலாச்சாரத்துடன் தொடர்புபட்டவர்களாகவோ இருந்தனர். இப்போதுதான் முதல் தடவையாக அனைத்து இன மக்களும் இந்த சீடர்கள் என்ற தகமையை சுவைக்க முழுமையான கட்டளையை பெற்றுக்கொள்கிறார்கள். இதிலிருந்து, யூதர் அல்லாதவர் முழுமையான சீடர்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள், அந்த அந்தஸ்தை கடவுளே கொடுக்கிறார். இந்த சீடத்துவத்தின் அடையாளமாக தந்தை, மகன் தூய ஆவியின் பெயராலான திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது (τὸ ὄνομα τοῦ πατρὸς καὶ τοῦ υἱοῦ καὶ τοῦ ἁγίου πνεύματος to onoma tou patros kai tou hiou kai hagiou pneumatos). திருமுழுக்கு சீடத்துவத்தின் அடையாளமாக அக்காலத்திலிருந்தே இருந்திருக்கிறது என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பல வகையான திருமுழுக்குகள் பாவனையில் இருந்தபோது இயேசு இந்த வகையான திருமுழுக்கை அறிமுகம் செய்கிறார்.
திருமுழுக்கில் திரித்துவத்தின் அடையாளத்தை, மூல வரியில் சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி இந்த வரி பிற்கால இணைப்பு என்று வாதிடுகின்றனர். ஆனால் இந்த கருத்தை ஆதரிக்கும்படி எந்த பிரதியும் காணப்படவில்லை. இந்த வரிதான் முதல் தடவையாக திரித்துவத்தை நேரடியாகவே வாசகர்களுக்க அறிமுகம் செய்கிறது.
வ.20: இந்த சீடத்துவத்திற்கு மேலதிகமான கட்டளையொன்றும் கொடுக்கப்படுகிறது. இவர்கள்
இயேசுவின் கட்டளைகள் யாவற்றையும் மற்றைய சீடர்களைப்போல கடைப்பிடிக்க கேட்கப்படுகிறார்கள். சீடர்கள் குருவின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறவர்கள், இந்த அடையாளம் இவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
ஏற்கனவே தன்னை இம்மானுவேல் என்று அறிமுகம் செய்த இறைவன், இறுதி வசனத்தில் மீண்டுமாக அதனை வலியுறுத்துகிறார். உலகம் முடியும் வரை கடவுள் மக்களோடு இருக்கிறார் எனற் வசனம், துன்பமான வேளையில் கடவுள் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார் என்ற சிந்தனையை பொய்ப்பிக்கிறது. கடவுள், மனிதரின் நாளாந்த செயற்பாடுகளில் அவர்களோடு பயணிக்கிறார் என்ற கருத்தையும் கொடுக்கிறது. இயேசு பரலோகம் சென்றாலும், அவர் கடவுளாக இருக்கிற படியால் அவருடைய பிரசன்னம், மற்றும் இருப்பு இந்த உலகத்திலேயே தங்கியிருக்கும் என்பது இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது.
இயேசு ஆண்டவர், வானகம் ஏறினார், ஆண்டவரின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்,
ஆனாலும் அவருடைய பிரசன்னம் இன்று வரை பூலோகத்திலேயே இருக்கிறது.
இயேசுவின் விண்ணேற்றம், இந்த உலக வாழ்வு
முடிவடைய வேண்டும், அனைவரும் உலகத்தையும் தாண்டி
வாழ வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
அன்பு ஆண்டவரே,
எம் சிந்தனைகளும் வாழ்வும் மேல்நோக்கியதாகவும்,
உயர்ந்ததாகவும் இருக்க உதவிசெய்யும். ஆமென்.
New Trial:
ஞாயிறு மறையுரை சிந்தனைகள்
அ. ஐயம், சாதாரண மனித எண்ணம், ஆனால் சிலருடைய ஐயம் பேரழிவையும் உண்டாக்கும். வரலாற்றில் யூத மக்களுக்கெதிரான நாசிக்களின் ஐயம், தென்னாசிய நாடுகளில் கிறிஸ்தவ மக்களுக்கெதிரான ஐயம், அதிகமான நாடுகளில் சிறு பான்மையினருக்கெதிரான ஐயம், பல வன்முறைகளை தோற்றுவித்திருக்கிறது, தோற்றுவித்துக்கொண்டும் இருக்கிறது. பலம் பொருந்தியவர்கள் என நினைக்கிறவர்கள், தங்களைவிட பலம் குறைந்தவர்கள் என எண்ணுகிறவர்கள், முன்னேற்றம் காணும்போது, அல்லது வாழ்வில் உயரும் போது ஐயம் கொள்கிறார்கள். இது ஆபத்தான சூழ்நிலைக்கு இரு சாராரையும் கொண்டுபோய் சேர்க்கிறது. ஐயம் கொள்வது தவறல்ல மாறாக, தவறான நோக்கத்தோடு ஐயம் கொள்வது தவறாகவே முடியும்.
ஆ. அதிகாரம் என்பது ஒரு மாயை. உலகில் அதிகாரம் என்பது ஒரு சந்தர்ப்பம். அதிகாரம் கடவுளுக்குரியது. மனிதர்கள் சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பம் காரணமாக அதிகாரத்தை பெறுகிறார்கள், அல்லது அதிகாரத்தை இழக்கிறார்கள். கடவுள் யாரையும் அதிகாரியாக படைப்பது கிடையாகது. அதிகாரம் என்பது பணிவாழ்வு என்ற நிலையை அடைவதுதான் ஞானம். அதிகாரத்தை ஒருவருக்கு கொடுத்தால் அவரின் உண்மையான முகம்தெரியும் என்கிறார்கள் ஞானிகள். இயேசு அதிகாரிக்கெல்லாம், அதிகாரி. அவர் அதிகாரத்தை பெற்றபோதும், அதிகாரத்தை விட்டுக்கொடுத்த போதும் ஒரு மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. இன்று அதிகாரம் நல்ல மனிதர்களை அரகர்களாக மாற்றுகிறது, அல்லது அவர்களின் அரக்க முகத்தைக் காட்டுகிறது எனலாம். தன்னுடைய ஆதிகாரத்தையும் கட்டுப்படுத்துகிறவரே இயேசுவின் உண்மையான சீடனாக மாறமுடியும்.
இ. சீடத்துவம் என்பது ஒரு உறவு. இது மதத்தையும் தாண்டியது. மதம் சீடத்துவத்திற்கு சார்பாக இருக்கவே உருவாக்கப்பட்டது, ஆனால் துர்ரதிஸ்ட வசமாக மதங்கள் எல்லாம் சீடத்துவத்தை ஏற்க சாதாரணமாக மறுக்கின்றன. பக்தர்களாலும் மதவாதிகளாலும் இந்த உலகம் நிறைந்திருக்கிறது, ஆனால் சீடத்துவம் மிகக் குறைவாகவே உள்ளது, இதனால்தான் என்னவோ, சில மதங்களில் கடவுளுக்கும் இடமில்லை எனலாம். இயேசுவின் சீடர்களாக மாற ஒருவர் இயேசுவை உணரவும் அனுபவிக்கவும் வேண்டும். சீடத்துவத்திற்கு எல்லைகள் இல்லை, அவர் ஒருவரே அதன் சொத்து.
இ. திருமுழுக்கு என்பது ஒரு பயணம். தண்ணீரால் கழுவுகிறவரும் அழுக்காக இருக்கலாம். திருமுழுக்கு புதுப்பிறப்பை தராவிட்டால் அது வெறும் சடங்கே. திருமுழுக்கு ஓர் உண்ணதமான பயணத்தை தொடங்குவதால், திருமுழுக்கு பெறுகிறவர் நிச்சயமாக பயணிக்க வேண்டும். திருமுழுக்கு பெறுகிறவர் நிச்சயமாக முக்தியடைவார் என்றில்லை. ஆண்டவர்தான் திருமுழுக்கை கட்டுப்படுத்துவார், திருமுழுக்கு ஆண்டவரைக் கட்டுப்படுத்தாது. அதாவது வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாதவருக்கு திருமுழுக்கு வெறும் வெளியடையாளமே, அல்லது வெறும் மூட நம்பிக்கையே.
ஈ. நம் ஆண்டவருக்கு இன்னொரு பெயர் 'நம்மோடு கடவுள்'. ஆண்டவர் வாக்கு மாறாதவர். நமக்கு வாக்கை காப்பாற்றுவது மிகக் கடினம். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார், நாமும் அவரோடு இருக்கலாம், வாழ்வில் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காட்டாமல். சிலவேளைகளில் நம்மோடு இருக்கும் சொத்துக்கள், வளங்கள், சந்தர்ப்பங்கள், உறவுகள், நட்புக்கள், வசதிகள் பயன்படாமலே காலாவதியாகின்றன. அது அவைகளின் தவறல்ல மாறாக அவற்றை பயன்படுத்தாதவரின் தவறே. நம் சுதந்திரத்தை அதிகமாக மதிக்கின்றபடியால், நம் ஆண்டவரும் அதிகமான மனிதர்களின் வாழ்வில் பயன்படாத செல்வமாக மாறிவிடுகிறார் போல. ஆண்டவரை பயன்படுத்தாமல், அவரை வெறும் புத்தகங்களாக்கி, சிலைகளாக்கி, மரபுகளாக்கி, சடங்குகளாக்கி என்ன பயன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக