புதன், 25 ஜனவரி, 2017

ஆண்டிடன் பொதுக்காலம் நான்காம் வாரம் (அ), Fourth Sunday in Ordinary Times.



ஆண்டிடன் பொதுக்காலம் நான்காம் வாரம்
29,01,2017


முதல் வாசகம்: செப்பானியா 2,3: 3,12-13
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 145,6-10
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,26-31
நற்செய்தி: மத்தேயு 5,1-12

செப்பானியா 2,3: 3,12-13
3நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். 

12ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். 13இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.'

செப்பானியா புத்தகத்தின் முக்கியமான செய்தியாக நீதித் தீர்ப்பை பல ஆய்வாளர்கள் காண்கின்றனர். செப்பானியா, பபிலோனியா இடப்பெயர்வின் முன் இறைவாக்குரைத்திருக்க வேண்டும். நீதித் தீர்ப்பை பற்றிக் கூறினாலும், செப்பானியா நம்பிக்கையின் செய்தியை தருகிறார், அதிலும் முக்கியமாக யூதாவின் எஞ்சிய வறியவர்கள், ஆண்டவரின் நம்பிக்கையாக மாறுவர் என்பது அக்காலத்தில் மிகவும் நோக்கப்பட வேண்டிய இறைவாக்காக இருந்திருக்கிறது. இரக்கமற்ற தன்மை, கர்வம் மற்றும் இறுமாப்பு போன்ற மனித பாவங்களை செப்பானியா சாபங்களாக சாடுகின்றார். கடவுளின் இறுதி நாளைப் பற்றி பேசுகின்ற இந்த இறைவாக்கு நூலுக்கு ஆமோஸ், எசாயா, மற்றும் மீக்கா புத்தகங்களுடன் தொடர்பிருந்திருக்க வேண்டும். யோசியா அரசன் செப்பானியாவின் இறைவாக்கினாலே தூண்டப்பட்டார் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்திருக்கிறது. 

வ.3: செப்பானியா புத்தகத்தில் வெறும் மூன்று அதிகாரங்களே உள்ளன, அதில் இரண்டாவது அதிகாரம் மனந்திரும்ப அழைப்பு விடுகிறது. இந்த இரண்டாவது அதிகாரம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கின்ற அதேவேளை, ஏழைகளை பொறுத்த மட்டில் மிக மெதுவான வாhத்ததைகளை பிரயோகிக்கின்றது. 
நாட்டில் இருக்கும் எளியோருக்கு (כָּל־עַנְוֵי הָ), அழகான வரைவிலக்கனம் கொடுக்கிறார் செப்பானியா. அவர்களை ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்போர் என்கிறார். எபிரேய விவிலியம் இவர்களை, கடவுளுடைய நெறிமுறைகளை செய்கிறவர்கள் (מִשְׁפָּטוֹ פָּעָלוּ), என்று வர்ணிக்கிறது. இவர்களுக்கு பல முக்கியமான கட்டளைகளைக் கொடுக்கிறார்.

அ. ஆண்டவரைத் தேடுங்கள் (בַּקְּשׁוּ אֶת־יְהוָה֙)
ஆ. நேர்மையை நாடுங்கள் (בַּקְּשׁוּ־צֶ֙דֶק֙):
இ. மனத்தாழ்மையை தேடுங்கள் (בַּקְּשׁוּ עֲנָוָה):
ஒருவேளை இந்த கட்டளைகளை எளியோரைத் தவிர வேறு எவரும் பின்பற்ற மாட்டார்கள் என இந்த இறைவாக்கினர் நினைக்கிறார் போல. அத்தோடு ஆண்டவரின் சினத்தின் நாளில் இவர்களுக்கு ஒருவேளை புகலிடம் கிடைக்கலாம் என்ற சிறிய நம்பிக்கையையும் இவர் வெளிப்படுத்துகிறார். ஆண்டவருடைய சினத்தின் நாள் என்பது (בְּיוֹם אַף־יְהוָה), செப்பானியா புத்தகத்தின் மிக முக்கியமான செய்திகளில் ஒன்று. 

வ.12: இந்த வசனம் மூன்றாவது அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம், முதல் இரண்டு அதிகாரங்களைப் போலல்லாது நம்பிக்கையை கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆண்டவரின் தண்டனை தவிர்கப்பட முடியாதது, ஆனால் ஆண்டவர் முழு யூதேயாவையும் அழிக்க மாட்டார், அத்தோடு அவர் தாவீதின் குலத்தை முழுவதுமாக மறக்கவும் மாட்டார். ஆனால் இந்த நம்பிக்கையை தரப்போகிறவர்கள் பெறியவர்களோ, அல்லது பலமானவர்களோ அல்ல மாறாக அவர்கள் ஏழை எளியவர்களே என்பது, செப்பானியாவின் அழகான இறையியல். 
ஆண்டவர் நிச்சயமாக ஏழை எளியவர்களை விட்டுவைப்பார், அத்தோடு இந்த ஏழை எளியவர்கள் கடவுளின் பெயரில் நம்பிக்கை வைப்பார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த வரி, வசதி படைத்தவர்கள்மேல் செப்பானியாவின் கோபத்தை தெளிவு படுத்துகிறது. 

வ.13: இந்த வரியும், இந்த எழை எளியவர்களின் பண்பையே பேசுகிறது. இந்த ஏழை எளியவர்களை எஞ்சியவர்கள் என்கிறார் இறைவாக்கினர். இந்த எஞ்சியவர்கள் என்பவர்கள், கடவுளின் நீதித் தீர்ப்பால் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்புவோரைக் குறிக்கும் (שְׁאֵרִית יִשְׂרָאֵל). அவர்கள் கொடுமை செய்யமாட்டார்கள் அத்தோடு வஞ்சகமாகவும் பேசார்கள் என்கிறார். இதிலிருந்து வசதி படைத்தவர்களின் அழிவிற்கு அவர்களின் கொடுமையும், வஞ்சகப் பேச்சும்தான் காரணம் என்பது புலப்படுகிறது. அச்சுறுத்துவார் இன்றி, மந்தைகள் அமைதியில் இளைப்பாறுதல் என்பது ஒரு அழகான உவமானம். கடவுளின் மக்களை மந்தைகளுக்கு ஒப்பிடுதல், மிகவும் இலகுவான ஒரு விவிலிய அடையாளம். எபிரேய விவிலியத்தில், 'அவர்கள்; அச்சமின்றி மேய்சலில் ஈடுபடுவார்கள் அத்தோடு இளைப்பாறுவார்கள்' (כִּי־הֵמָּה יִרְעוּ וְרָבְצוּ וְאֵין מַחֲרִיד׃) என்றே உள்ளது. மந்தை என்ற சொல் தெளிவிற்காக தமிழ், மற்றும் ஏனைய மொழிபெயர்பு விவிலியங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. 


திருப்பாடல் 146
1அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 
2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். 
3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம். 4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். 
5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 
6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! 
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். 
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 
9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 
10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!

திருப்பாடல்கள் 146-150 வரையானவை 'முடிவில்லா அல்லேலூயா பாடல்கள்' என திருப்பாடல் புத்தகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாடல்களில் தனிப்பட்ட தேவையோ, அல்லது வேண்டுதல்களோ அல்லது வரலாற்று பின்புலங்களோ இருப்பதுபோல தெரியவில்லை. 
இவை கடவுளை புகழ்வதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் தனி மனித புகழ்சியாக தொடங்கும் இந்த பாடல்கள், குழுப் புகழ்ச்சியாக மாறி, பின்னர் பூலோகம் மற்றும் பரலோகம் கடவுளை புகழ்வது போல நிறைவுறுகின்றன. அத்தோடு, அனைத்தும் இறுதி மூச்சுவரை கடவுளை புகழவேண்டும் என்ற ஆசிரியரின் ஆழமான வார்த்தைகளை இந்த பாடல்கள் நினைவூட்டுகின்றன (காண்க 150,6)
திருப்பாடல் 146, ஒரு தனி மனித அல்லேலூயா புகழ்சிப்பாடல் போல் தொடங்கி பின்னர் குழுப்பாடலாக மாறி, இறுதியில் மீண்டும் தனி மனித புகழ்சியாகவே மாறுகிறது. பல திருப்பாடல்களைப் போல இந்த திருப்பாடலும் ஆழகான திருப்பிக் கூறும் எபிரேய கவிநடையைக் கொண்டுள்ளது. கடவுள் என்றுமே புகழப்பட வேண்டியவர் என்பதே இந்த பாடலினதும் மையக் கருத்தாகும். 

வ.1: ஆசிரியர் தன் நெஞ்சத்திற்கு கட்டளை கொடுப்பது போல பாடுகிறார். அல்லேலூயா என்ற சொல் (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்) கடவுளைப் புகழுங்கள் என்ற எபிரேய சொல்லின் தமிழ் வடிவம். இது பன்மை வடிவமாக இருந்தாலும், தனி மனிதருக்கும் இந்த சொல் பாவிக்கப்படுகிறது. நெஞ்சே என்கின்ற சொல் (נֶפֶשׁ நெபெஷ்), ஒருவரின் சுயத்தை அல்லது ஆன்மாவைக் குறிக்கும். 

வ.2: எபிரேய திருப்பிக்கூறல் அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அ1. நான் உயிரோடு உள்ளவரை - ஆ1. ஆண்டவரை போற்றிடுவேன்.
அ2. என் வாழ்நாள் எல்லாம் - ஆ2. கடவுளை புகழ்ந்து பாடுவேன்
இந்த வரிகள் இப்படியான புகழ்சிப்பாடல்களின் மையக் கருத்ததை வெளிப்படையாகவே காட்டுகின்றன. மனித பிறப்பின் காரணமும், இலக்கும் கடவுளை புகழ்தலே என்ற முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான இறையியல் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன. 

வ.3: ஆட்சியாள்களை மிகவும் நக்கலாக கிண்டலடிக்கிறார் ஆசிரியர். அவர்களை நம்பவேண்டாம் என்றும், அவர்கள் சாதாரன மானிடர்களே என்பதையும் மற்றவர்களுக்கு தெளிவூட்டுகிறார். ஆட்சியாளர்களை (נְדִיבִ֑ים בְּבֶן அரச மக்களில்), தெய்வீக பிறப்புக்களாக இஸ்ராயேலின் அயலவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை படிப்படியாக இஸ்ராயேல் வழிபாட்டிலும் வளர தொடங்கிய ஆபத்தை ஆசிரியர் சாடுவதனைப் போல இந்த வரி உள்ளது. இப்படியான தலைவர்கள் ஒரு விசுவாசியை காப்பாற்ற முடியாதவர்கள், ஏனெனில் அவர்களும் சாதாரண மனிதர்களே என்பது இவர் வாதம். 

வ.4: இந்த வரி, ஏன் மனித தலைவர்கள் நம்ப முடியாதவர்கள் என்பதை விளக்குகிறது. மனிதர்கள் பிரியக்கூடிய ஆவியால் உருவானவர்கள், அவர்களின் ஆவி (רוּחַ றுவாஹ்) பிரியும்போது அவர்கள் மண்ணுக்கு திரும்புவார்கள் என்கிறார். இது அவர்கள் மண்ணினால் உருவானவர்கள் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை நினைவூட்டுகிறது. மேலும், அவர்களின் இறப்போடு அவர் (ஆட்சியாள்களின்) எண்ணங்களும் மறையும் என்று, மிக ஆழமான மெய்யறிவையும் வாசகர்களுக்கு முன்வைக்கிறார். 

வ.5: மேற்குறிப்பிட்ட ஆட்சியாளர்களைப் போலல்லாது, யாக்கோபின் கடவுள் உயர்ந்தவர் என்ற சிந்தனையை முன்வைக்கிறார். 'யாக்கோபின் இறைவன்' (אֵל יַעֲקֹב) என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட அழகான பெயர்களில்; ஒன்று. இது யாக்கோபுக்கும்- கடவுளுக்கும்- 
இஸ்ராயேலருக்கும் இடையிலான நம்பிக்கையின் உறவைக் குறிக்கிறது. பேறு பெற்றோர் என்போர், இஸ்ராயேல் மக்களுக்கு மிக முக்கியமானவர்கள். நம்முடைய தூயவர்களை இது நினைவூட்டுகிறது. இந்த பேறுபெற்றவர்களுக்கு ஒரு வரைவிலக்கணமாக அவர்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பியிருப்போர் என்கிறார். 
நம்பிக்கை, பேறுபெற்றோரின் உன்னதமான பண்பு என்பது புதிய ஏற்பாட்டின் மிக முக்கியமான படிப்பினை. இந்த படிப்பினை முதல் ஏற்பாட்டிலும் காணப்படுகிறதை இந்த வரியில் காணலாம் (✼ஒப்பிடுக: லூக் 7,50), அல்லது இந்த படிப்பினையின் தொடர்சியாகவே புதிய ஏற்பாடு இருக்கிறது எனவும் கருதலாம். 

(✼இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க' என்றார்.)

வ.6: இந்த கடவுள் யார் என்று விளக்க முயல்கிறார் ஆசிரியர். இந்த கடவுள் புராணக் கதைகளிலுள்ள பெயர் தெரியாத கடவுள் அல்ல, மாறாக இவர் விண் (שָׁמַיִם ஷமாயிம்), மண் (אָרֶץ அரெட்ஸ்), கடல் (יָּם யாம்) மற்றும் அவற்றில் உள்ள யாவற்றையும் படைத்தவர். இந்த மூன்று பொளதீக சக்திகளும் அக்கால மக்களுக்கு பல ஆச்சரியங்களையும், கேள்விகளையும் கொடுத்தன. இவற்றை படைத்தவர்களாக பலரை பாரசீக, பபிலோனிய, கிரேக்க கதைகள் முன்மொழிந்தன. இஸ்ராயேல் ஆசிரியர், இவற்றை உருவாக்கியவர், பெயர் தெரியாக் கடவுள் அல்ல மாறாக அவர் யாக்கோபின் கடவுள், அத்தோடு இந்த கடவுள்தான் எனறென்றும் நம்பிக்கையை காப்பாற்றுகிறவர் என்கிறார். 

வ.7: ஆண்டவரின் முப்பரிமாண மீட்புச் செயல்கள் பாராட்டப்படுகின்றன.
அ. ஒடுக்கப்பட்டோருக்கு நீதி (עֹשֶׂ֤ה מִשְׁפָּ֨ט ׀ לָעֲשׁוּקִ֗ים)
ஒடுக்கப்பட்டோருக்கு நீதி செய்தல் இக்காலத்தில் மட்டுமல்ல, அக்காலத்திலும் மிக முக்கியமான சமூக பணியாக பார்கப்பட்டது. எளியவர்கள் பலவாறு ஒடுக்கப்பட்டார்கள். நீதியில்லாத கட்டமைப்பு இவர்களுக்கு ஆபத்தானதாகவே அமைந்தது. இதனால் இவர்கள் தலைவர்களின் இரக்கத்தையே அதிகமாக நம்பினார்கள், இருப்பினும் பல அரசியல் தலைவர்கள் இந்த கடமைகளை தவறியவர்களே. இவர்களைப் போல் இல்லாது இஸ்ராயேலின் கடவுள் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவார் என்கிறார் ஆசிரியர். 

ஆ. பசித்தோருக்கு உணவு (נֹתֵ֣ן לֶ֭חֶם לָרְעֵבִ֑ים): உணவு மனிதரின் அடிப்படைத்தேவைகளில் மிக முக்கியமானது. உணவினால்தான் பல புரட்சிகளும், போர்களும் வரலாற்றில் உருவாகின்றன. பசியால் வாடுதல், வறுமை என்கிற சாத்தானின் கோர முகம். இந்த வறுமையிலிருந்து தலைவர்கள் அல்ல, மாறாக கடவுள்தான் தம் மக்களை காக்கிறவர் என்கிறார் ஆசிரியர். 

இ. சிறைப்பட்டோருக்கு விடுதலை (מַתִּיר אֲסוּרִים׃): அதிகமான குற்றவாளிகள் சிறையில் இல்லை வெளியில்தான் இருக்கிறார்கள், பல நல்லவர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்பது மனித உரிமை வாதிகளின் வாதம். விவிலிய கால உலகில் பல காரணங்களுக்காக அப்பாவிகள் சிறையில் வாடினார்கள். இவர்களின் விடுதலை மனித தலைவர்கள் சுய விருப்பத்திலேயே தங்கியிருந்தது. 
இப்படியில்லாமல், கடவுள் சிறைப்பட்டோரை உண்மையாக விடுவிப்பவர் என்கிறார் ஆசிரியர். 
இந்த மூன்று சமூகப் பணிகள் புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு பல விதத்தில் ஒப்பிடப்படுகிறது, இயேசுவும் தன்னுடைய பணிகள் இவைதான் என, பல இடங்களில் காட்டியுள்ளார். ஆக இந்த பணிகள் இறைவனின் பணிகள் என்பது புலனாகிறது. 

வ.8-9: இந்த வரிகளில், இன்னும் மேலதிகமான தனிமனித நல்வாழ்வின் நலன்கiளை ஆண்டவர் செய்வதாக ஆசிரியர் பாடுகிறார். 

அ. பார்வையற்றவரின் கண்களை திறத்தல் - பாhவையற்றவர் வாழ்ந்தும் இறந்தவராக கருதப்பட்டவர். அத்தோடு பார்வையற்ற தன்மை கடவுளின் தண்டனையாகவும் கருதப்பட்டது. பார்வைபெறுவது என்பது ஒருவர் மீண்டும் உயிர் பெறுதலுக்கு சமனாக பார்க்கப்பட்டது. 

ஆ. தாழ்த்தப்பட்டோருக்கு உயர்ச்சி - பலவிதமான தாழ்ச்சிகளை விவிலிய கால உலகம் காட்டுகிறது. முக்கியமாக பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயாளிகள், புறவினத்தவர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் பலர் இந்த வகைக்குள் அடங்குவர். இவர்கள் சந்தித்த தாழ்ச்சி அவர்களை மிகவும் பலவீனப்படுத்தியது. அத்தோடு இவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது. 
இவர்களும் மதிக்கப்படாத மனிதர்களாவே பார்க்கப்பட்டார்கள். 

இ. நீதிமான்களுக்கு அன்பு - நீதிமான்கள் கடவுளுடைய சட்டங்களை கடைப்பிடிப்பவர்கள் என்று முதல் ஏற்பாடு அழகாக காட்டுகிறது (✼காண்க தி.பா 1,2). நீதிமான்களை கடவுள் அன்பு செய்கிறார் என்பது முதல் ஏற்பாடு காட்டுகின்ற ஓரு முக்கியமான படிப்பினை. இதன் வாயிலாக ஒருவர் கடவுளின் அன்பை பெற நீதிமானாக வாழ வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. 

(✼2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;).

ஈ. அயல் நாட்டினர்க்கு பாதுகாப்பு - அயல் நாட்டினரை இஸ்ராயேல் மக்கள் உட்பட பலர் தரக்குறைவானவராகவே கருதினர். இஸ்ராயேல் மக்களின் சகோதரத்துவம் தங்கள் மக்களை மட்டுமே உள்வாங்கியது. ஆனால் இந்த திருப்பாடலின் வரி இஸ்ராயேலின் உண்மை ஆன்மீகத்தை காட்டுகிறது. அதாவது அயல் நாட்டவரும் இஸ்ராயேல் கடவுளின் பிள்ளைகள் என்பது இங்கே புலப்படுகிறது. 

உ. அனாதைப் பிள்ளைகளையும், கைம் பெண்களையும் ஆதரிக்கிறார் - இந்த இரண்டு வகையான குழுக்கள் பல சக்திகளால் சுரண்டப்பட்டவர்கள். இஸ்ராயேல் சமுகத்தின் அடி தட்டு மக்கள் என்று கூட இவர்களைச் சொல்லலாம். இயற்கை அழிவுகள், மற்றும் மனித செயற்பாட்டு அழிவுகளால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களே. இவர்களை காத்தல், அரசன் மற்றும் அரசியல் தலைவர்களின் முக்கியமான கடமையாக கருதப்பட்டது. ஆனால் அதிகமான சந்தர்பங்களில் 
இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தொடர்ந்து இருந்தனர். ஆனால் கடவுளின் பார்வையில் 
இவர்கள் பாதிக்கப்பட்டவர்களில்லை, அவர்கள் அவர் பாதுகாப்பிற்கு உரியவர்கள் என்பது ஆசிரியரின் வாதம்.

ஊ. பொல்லாரை கவிழ்கிறார் - மேற்குறிப்பிட்ட வாதங்கள் கடவுளின் ஆக்க செயற்பாட்டை காட்டுகின்ற அதேவேளை, இது கடவுளின் தண்டனையைக் காட்டுகிறது. கடவுள் 
இரக்கமுடையவர் இருப்பினும்  கடவுளின் இன்னொரு முகம் நீதி மற்றும் நீதித்தீர்ப்பு. கடவுளின் இரக்கத்தால் பொல்லாருக்கு வாய்ப்பு கிடையாது, மாறாக அவர்கள் தங்கள் பொல்லாப்பிலிருந்து அழிவது திண்ணமே என்கிறார் ஆசிரியர். 

வ.10: இந்த இறுதியான வசனம், சீயோனுக்கு புகழ் பாடுவது போல் உள்ளது. கடவுளின் ஆட்சி காலத்தில் மட்டுபடுத்தப்பட்ட அரசியல் ஆட்சியல்ல அத்N;தாடு சீயோன் என்பது ஒரு சாதாரண அரசியல் தலைவரின் ஆட்சிப் பீடம் அல்ல, மாறாக அது காலத்தை கடந்த கடவுளின் வீடு உள்ள இடம் என்பதை காட்டுகிறார் ஆசிரியர். 
அல்லேலூயா என்ற சொல்லுடன் தொடங்கிய இந்த அழகான திருப்பாடல் அதே சொல்லுடன் முடிவடைவது இந்த வகை திருப்பாடல்களின் தனித்துவம். 


1கொரிந்தியர் 1,26-31
26எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? 27ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். 28உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். 29எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். 30அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். 31எனவே மறைநூலில்எழுதியுள்ளவாறு, 'பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.

கடந்த வாரம் திருச்சபையிலுள்ள பிளவுகளுக்கு எதிராக பவுலுடைய படிப்பினையிலிருந்து ஒரு பகுதியை வாசித்தோம். இந்த வாரம் இந்த பிளவுகளுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் கடவுளின் ஞானமான இயேசுவையே தங்கள் மேல்வரிச் சட்டமாக கொள்ளவேண்டும் என்ற அழகான படிப்பினையிலிருந்து இந்த பகுதி எடுக்கப்படுகிறது. இந்த பகுதியில் (வவ 18-31), முதலில் பவுல் கிறிஸ்துவின் சிலுவையின் தனித்துவத்தை காட்டுகிறார். இந்த சிலுவை யூதர்களின் பார்வையில் தீட்டுப்பட்டவர்களுக்கான தண்டனை, ஆனால் இதுதான் கிறிஸ்தவர்களுக்கு வல்லமை என்னும் பவுலுடைய இந்த சிந்தனை மிகவும் ஆழமானது. அத்தோடு இந்த பகுதியில் பவுல் உலக ஞானத்தை கடுமையாக சாடுகிறார். இந்த உலக ஞானம் (σοφία சோபியா), கிரேக்கர்கள் மத்தியில் பவுலுடைய காலத்தில் மிக முக்கியமானதாக விரும்பப்பட்டது. இந்த ஞானத்தின் மேலுள்ள காதல்கூட, கொரிந்து திருச்சபையில் பிளவிற்கு காரணமாகியது. இதனால்தான் பவுல் இந்த ஞானத்தை இயேசுவின் ஞானத்திற்கு முன்னால் அழியக்கூடியது என்கிறார் பவுல். அதேவேளை பவுல் அறிவித்த நற்செய்தியை சிலர் மடமை (μωρία மோரியா) என தாக்கியிருக்கலாம், இதனை பவுல் எசாயா ✼29,14ல் வரும் இறைவார்த்தையை பாவித்து கண்டிக்கிறார். இறுதியாக பவுல் உண்மையான ஞானம் கிறிஸ்துவின் சிலுவையே என்று இவர்களுடைய வாதங்களுக்கு ஆணியடிக்கிறார். வ.25: 'ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது'. இந்த வரிதான் இந்த முழு பகுதியினதும் மையக் கருத்தாக இருக்கிறது. 

(✼14ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்; அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.)

வ.26: பவுல் ஒரு முக்கியமான கேள்வியை தன் கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு முன்வைக்கிறார். தங்களுடைய முன்னைய நிலையை நினைத்துப்பார்க்கச் சொல்கிறார். அதாவது ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், முக்கியமாக யூதரல்லாத கிறிஸ்தவர்கள் சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் உயர் குடி என தங்களை கருதியவர்கள் அல்லது பணக்கார வர்க்கத்திலிருந்து வரவில்லை, சாதாரண மக்களையே கடவுள் அழைத்திருக்கிறார். இந்த சாதாரணம்தான் கடவுள் முன்னிலையில் உயர்ந்ததாக இருந்திருக்கிறது. இப்படியிருக்க இவர்கள் மனிதரின் உயர் தன்மையை முன்னிலைப்படுத்துவது எத்துணை நியாயம் என்பது பவுலுடைய நியாயமான கேள்வி. 

வ.27: ஞானத்தையும், வலிமையையும் முடிவுசெய்ய வேண்டியவர் கடவுள் ஒருவரே. அவர் உலக ஞானத்தை வெட்கப்படுத்த, உலக மடமையை தன் ஞானமாக்கினார். வலியோரை வெட்கப்படுத்த உலகம் பலவீனம் என கருதுவதை தெரிவுசெய்தார். இதுதான் கடவுளின் அழகு அல்லது இதனை மனிதரின் அறியாமை என்றும் சொல்லலாம். பணக்காரர்கள் சிலர் ஒன்றுகூடி தங்கள் வசதிகளை காரணம் காட்டி தம்மை உயர் குடிமக்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாக கருதுவதும், பின்னர் அதனை ஞானம் என்பதும் கடவுள் பார்வையில் நகைப்புக்குரியது. அதேவேளை சாதாரண மக்கள் தங்கள் உண்மையான மாண்பை மறந்து, உலக பிரிவினையையும், ஞானத்தையும் தேடி அலைந்து மீண்டும் அடிமைகளாக வாழ முயல்வதும், கடவுள் பார்வையில் மிகவும் வேதனைக்குரியது. 
இதனைத்தான் பவுல் காட்ட முயல்கிறார். 

வ.28: கடவுளின் தெரிவு (ἐκλέγομαι) என்பது பவுலின் இறையியலில் இன்னொரு முக்கியமான விடயம். கடவுளின் தெரிவிற்கு, யாரும் யாப்பு செய்யவோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கவோ முடியாது. உலகம் சிலவற்றை பொருட்டாக கருதுகிறது, அது பல வேளைகளில் பிழையாகவே இருக்கிறது. உலகத்தின் தெரிவு, சந்தேகத்தையும், அநியாயத்தையும், சமத்துவமின்மையையும், பிழையான வர்க்க பிரிவுகளையும் கொண்டிருப்பதால் அதன் விளைவுகளும் பிழையாகவே இருக்கும். இந்த உலகு தாழ்ந்தது என கருதுவது, அதிகமான வேளைகளில் உன்னதமானதாக இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் இயேசு. ஆனால் கடவுளின் தெரிவு இந்த உலகத்தால் வெறுக்கப்பட்ட அத்தோடு கடவுளின் பார்வையில் பெரியதாக இருக்கிறது. 

வ.29: கடவுள் முன் யார் பெருமை பாராட்ட முடியும்? இது பவுலுடைய நேர்த்தியான சிந்தனை. புண்ணுக்கு வலியா மருத்துக்கு வலியா என்ற பழம் தமிழ் பழிமொழி நினைவிற்கு வருகிறது. சிலர் கடவுள் முன் தங்களது, இனம், மதம், கோத்திரம், பால், இடம், மொழி, அறிவு மற்றும் பொருள், இவற்றை வைத்து தங்களை தாங்களே பெருமைப் படுத்தினர். இது முற்றிலும் மடமை, ஏனெனில் கடவுள் முன் அனைவரும் சமமே அத்தோடு அனைவரும் தூசியே. 

வ.30: எப்படி வசதிபடைத்தோர் கடவுள் முன் பெருமை பாராட்ட முடியாதோ அதேபோல் சாதாரண மக்களும் கடவுள் முன் பெருமை பாராட்ட முடியாது. எவரும் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் அது கிறிஸ்து ஒருவர் பொருட்டே ஆகும். கடவுளின் ஞானம்தான் இப்படியான எளியவர்களுக்கு கிறிஸ்து என்னும் அரும்கொடையை கொடுத்துள்ளது, அத்தோடு இந்த கிறிஸ்துதான் இவர்களை ஏற்புடையவராக்கியுள்ளார், தூயவராக்கியுள்ள்hர் மற்றும் மீட்டுள்ளார். ஏற்புடைமை என்னும் சிந்தனை பவுலுடைய இறையியலில் மிக முக்கியமானது (δικαιοσύνη). முதல் ஏற்பாட்டில் பலவிதங்களில் 
இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு ஏற்புடையவராகினர். இங்கே இந்த ஏற்புடைமை இலவசமாக
இயேசுவில், கடவுளின் தெரிவால் உருவாகிறது என்பது தூய பவுலுடைய அசைக்க முடியாத 
இறையியல். 

வ.31: எவராவது பெருமை பாராட்ட வேண்டும் என்றால் அவர் இப்படி பெருமை பாராட்ட வேண்டும் என்று ஒரு மறைநூலை வாசகத்தை கோடிடுகிறார். இதனை அவர் எரேமியா 9,24இல் இருந்து எடுத்து சில மாற்றங்களை செய்திருக்க வேண்டும் (காண்க ✼எரேமியா 9,24). 

(✼24பெருமை பாராட்ட விரும்புபவர், 'நானே ஆண்டவர்' என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.)

மத்தேயு 5,1-12
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். 2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
3'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4துயருறுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை
உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
6நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நிறைவுபெறுவர்.
7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள்
கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறு பெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்குரியது.
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! 
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

மத்தேயு நற்செய்தியின் தனித்துவத்திற்கு இந்த மலைப் பொழிவு ஒரு சான்று. கிறிஸ்தவம் அல்லது கத்தோலிக்கத்தை கடந்து அனைத்து மக்களாலும், இறைதேடல் செய்பவர்களாலும் அதிகமாக இந்த பகுதி வாசித்து வாழப்படுகிறது. மத்தேயு பல இடங்களில் இயேசுவை புதிய மோசேயாகவும், உண்மை மீட்பராகவும் காட்ட விழைவதை நாம் அவதானிக்கலாம். மோசே பல படிப்பினைகளை மலையுச்சியிலிருந்தே கொடுத்தார். அதேபோல் கடவுளின் இடமாக மலை கருதப்பட்டது. இந்த மலையுச்சியில் இயேசு ஏறி போதிப்பது அவரை கடவுளாக காட்ட முயலும் நல்ல அடையாளம் என, பல மத்தேயு ஆய்வாளர்கள் காண்கின்றனர். 
இந்த பகுதிக்கு சற்று முன்தான் இயேசு தன் முதல் சீடர்களை அழைத்திருந்தார், பின்னர் திரளான மக்களுக்கு சில பணிகளும் புரிந்திருந்தார். பின்னர் தன் சீடர்களை அழைத்து மலையுச்சியில் இந்த மலைபொழிவு நடத்தப்படுகிறது. மத்தேயுவின் மலைப்பொழிவு மைய செய்தியில் லூக்கா 6,20-23ஐ ஒத்திருக்கிறது. ஆனாலும் மத்தேயுவின் பகுதி நீளமானதாகவும், சற்று மொழிநடையில் கவர்ச்சியாகவும் இருக்கிறது. மத்தேயுவும் லூக்காவும் பொதுவான ஒரு மூலத்தை பாவித்திருக்கிறார்கள் என்ற ஒரு கருதுகோளை இது நியாயப்படுத்துகிறது. இந்த பகுதியில், சீடத்துவம், மற்றும் விண்ணரசு சார்ந்த வாழ்வு போன்ற படிப்பினைகளை சுற்றி வருவதைக் காணலாம். சீடர்களை அழைத்த இயேசு, சீடத்துவத்தின் நியாயமான எதிர்பார்ப்புக்களையும், அது தரும் வரப்பிரசாதங்களையும் எடுத்துரைக்கிறார். மோசே மலையுச்சியிலிருந்து பத்துக்கட்டளைகளை மக்களுக்கு கொடுத்தார், அந்த நிகழ்வை இந்த மலைப்பொழிவு நினைவூட்டும். 

வ.1: இந்த வரி, இந்த படிப்பினைகளில் இயேசு சீடர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டுகிறது. இயேசு ஒரு அரசர் போல் அவர் அரியணையான மலையில் அமர்கிறார். அவர் சீடர்கள் அமைச்சர்கள் போல் அவர் அருகில் வந்து அமர்கின்றனர். பின்னர் இயேசு பேசுகிறார். விவிலியத்தில் இருத்தல் (καθίζω காதிட்சோ- அமர், இரு, உட்கார்), என்பது அதிகாரத்தை குறிக்கும் ஒரு உடல் நிலை. சீடர்கள் இயேசுவிடம் வருவது அவர்களின் பணிவையும் விசுவாசத்தையும் காட்டுகிறது. 

வ.2: இந்த வரியை 'அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை' என்று தமிழ் விவிலியம் மொழிபெயர்க்கிறது. கிரேக்க விவிலியத்தில், 'அவர் தன்வாயை திறந்துகொண்டு கற்பித்து சொல்லிக்கொண்டிருந்தது' என்று உள்ளது. இவை இந்த வரியின் காலம்சாராத தன்மையைக் காட்டுகிறது. அத்தோடு பின்வருபவை விசேடமாக சீடர்களுக்குரியது என்பதையும் காட்டுகிறது. 
பேறுபெற்றோர் என்னும் தமிழ் மொழிபெயர்ப்பின் கிரேக்க மூலம் μακάριος மக்கரியொஸ் ஆகும். இந்த மக்கரியொசின் அர்த்தம், பேறுபெற்றோர் என்பதையும் தாண்டியது. இதன் அர்த்தங்களாக நற்பேறுபெற்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், மகிழ்சியாக இருப்பவர்கள், இன்னும் பல தரப்படுகின்றன. எபிரேயம் இந்த சொல்லை אַשְׁרֵי அஷ்ரே என்றழைக்கிறது. இதன் அர்த்தமும் மேற்சொன்ன அர்த்தத்ங்களையே குறிக்கிறது. இப்படியாக பேறுபெற்றோர் என்ற எட்டு வரிகளை 
இந்த மலைபொழிவில் சந்திக்கிறோம். இந்த வரிகளை வாசிக்கும் போது, ஆரம்ப கால திருச்சபை முக்கியமாக மத்தேயுவின் வாசகர்கள் சந்தித்த சவால்களை நினைவில் கொண்டாரல், இன்னும் 
இதன் அர்த்தம் விளங்க உதவியாக அமையும்.

வ.3: ஏழையரின் உள்ளத்தோர் - விண்ணரசுக்குரியவர்கள்: 
இந்த வரி ஏழைகளை அல்ல மாறாக ஏழைய உள்ளத்தோரையே எழுவாயாகக் கொண்டு;ள்ளது (οἱ πτωχοὶ τῷ πνεύματι). இந்த ஏழைய உள்ளத்தோரை, ஆன்மாவில் எளியவர்கள் என்றும் மொழி பெயர்க்கலாம். இவர்கள் கடவுளை மட்டுமே தங்களது தஞ்சமாக கொண்டார்கள். இவர்களை திருப்பாடல் ஆசிரியரும் பேறுபெற்றவர்களாக காட்டுவார் (ஒப்பிடுக தி.பா 14,6: 22,24: 25,16: 34,6: 40,17: 69,29). ஏழ்மை அல்லது எளிமை என்பது வேறு, வறுமை என்பது வேறு. விவிலியம் யாரையும் வலிந்து வறுமையை தேடச்சொல்லவில்லை, மாறாக உதவிகள் இல்லாமல் ஏழைகளாக வாடுகிறவர்கள் கடவுளால் கைவிட்பட்டவர்கள் இல்லை என்றே சொல்கிறது. 

வ.4: துயருவோர் - ஆறுதல் பெறுவர்:
துன்பம் கடவுளின் தண்டனையாக கருதப்பட்டது, அதாவது பாவிகளுக்கு கடவுளின் தண்டனை கிடைக்கிறது. ஆக துயருவோர் பாவிகள் என்றாகிறது. இதனைத்தான் இயேசு ஆண்டவர் சரியாக விளக்குகிறார். பலர் தங்கள் செய்யாதவற்றிற்காக துன்புறுகிறார்கள். சிலர் தங்களுடைய சுயநலத்திற்காக பலரை துன்பப்படுத்துகிறார்கள். துன்புறுகிறவர்களுக்கு கடவுள்தான் ஆறுதல் என்பது முதல் ஏற்பாட்டின் செய்தி, இதனைத்தான் இயேசு இங்கே மீள நினைவுபடுத்துகிறார். துயருவோர் என்பவரை கிரேக்கம் புலம்புவோர் என்றே காட்டுகிறது (οἱ πενθοῦντες)

வ.5: கனிவுடையோர் - நாட்டை உரிமையாக்குவோர்:
இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாடு வெளிநாட்டுக்காரர்களான உரோமையருக்கும் நரிகளான ஏரோதுக்கும் உரிமையாகிக் கொண்டிருந்தது. இவர்களிடமிருந்து நாட்டைக் காக்க இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர், வன்முறையில் ஈடுபட்டனர். அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு எதிராக கனிவு (οἱ πραεῖς) என்னும் ஆயுதம் நாட்டை தரும் என்று வித்தியாசமாக கடவுள் பாணியில் உரைக்கிறார் அன்பு ஆண்டவர். கனிவை, கிரேக்க விவிலியம் தாழ்ச்சியுடையவர்கள் அல்லது இனிமையானவர்கள் என்று காட்டுகிறார். 

வ.6: நீதி நிலைநாட்ட வேட்கைகொண்டோர் - நிறைவு பெறுவர்: 
விவிலியம் நிறைவிற்கும், இன்பத்திற்கும் வித்தியாசம் காட்டுகிறது. நீதியில்லாமல் அநீதிக்கு தூபம் காட்டுவோர் துன்பத்தை தவிர்ப்பர். இதனைத்தான் பலர் செய்து உரோமைய இன்பத்தை 
இயேசுவின் காலத்தில் பெற்றனர். அவர்கள் நிறைவு பெறவில்லை என்பது இயேசு ஆண்டவரின் செய்தி. நீதி நிலைநாட்டுவது என்பது கடவுளின் பணியில் பங்கெடுப்பதாகவும், இதனால்தான்
இவர்கள் பேறுபெற்றவர்கள் என்றாகின்றனர். நீதிக்கான வேட்கையை கிரேக்க விவிலியம், நீதிக்கான பசியாகவும், தாகமாகவும் காட்டுகிறது (οἱ πεινῶντες καὶ διψῶντες τὴν δικαιοσύνην).

வ.7: இரக்கமுடையோர் - இரக்கம் பெறுவர்: 
யார் கடவுளின் இரக்கத்தை பெறுபவர் என்பது யூதர்களின் முக்கியமான கேள்விகளில் ஒன்றாக இருந்தது. கடவுள் தேர்ந்து கொண்ட மக்கள் இரக்கம் பெறுவர் என்று சிலர் வாதிட்டனர். ஆனால் இரக்கம் காட்டும் எவரும் கடவுளின் இரக்கத்தை பெறுவர், அவர் யாராக இருந்தாலும், தங்களுடைய இரக்க குணத்தால், கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றனர். இரக்கம் (οἱ ἐλεήμονες) என்பது மத்தேயு நற்செய்தியில் விண்ணரசின் குணாதிசியங்கள் முக்கியமான ஒன்று. 

வ.8: தூய்மையான உள்ளத்தோர் - கடவுளைக் காண்பர்: 
பலி ஒப்புக்கொடுப்பபோர், எருசலேம் தேவாலயத்தை தரிசிப்போர், கட்டளைகளை அப்படியே கடைப்பிடிப்போர், கடவுளைக் காண்பர் என்பது நம்பிக்கையாக இருந்தது. வெளி அடையாளங்கள் முக்கியத்துவம் பெற்ற அந்த நாட்களில், இயேசு அக உளநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தூய்மையான உள்ளம் என்பது ஒருவருடைய தூய்மையான வாழ்வைக் குறிக்கும். தூய்மையான இதயங்களை கொண்டோர் என இந்த வரியை கிரேக்க விவிலியம் காட்டுகிறது (οἱ καθαροὶ τῇ καρδίᾳ). 

வ.9: அமைதி ஏற்படுத்துவோர் - கடவுளின் மக்கள்: 
கடவுளின் மக்கள் என்போர் விருத்தசேதனம் செய்வதாலோ அல்லது பலிகளை ஒப்புக்கொடுப்பதாலே உருவாவது அல்ல, மாறாக அமைதி ஏற்படுத்துவதாலே என்று ஒர் ஆழமான இறையியலை ஆண்டவர் காட்டுகிறார். இயேசுவின் காலத்திலும், ஆரம்ப கால திருச்சபையின் காலத்திலும் அமைதி, மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருந்தது. அமைதியில்லாமல் அனைத்து செல்வங்களையும் கொண்ட உலகு உண்மையில் வறுமையான உலகு அல்லது, சாத்தானின் உலகு. இங்கே அமைதி (εἰρηνοποιός) என்று கிரேக்க விவிலியம் சொல்வது வெறும் அரசியல் அமைதி மட்டுமல்ல. இது ஆண்டவர் தரும் அமைதி. 

வ.10: நீதியின் பொருட்டு துன்புறுவோர் - விண்ணரசு அவர்களது: 
கனிவுடையோர் உலக நாட்டை பெறுகின்ற வேளை, நீதியின் பொருட்டு துன்புறுவோர் விண்ணகத்தையே உரிமையாக்குகின்றனர். இயேசுவின் போதனையின் மிக முக்கியமான இலக்கு விண்ணரசு. இதனை அடைய நீதி அவசியமாகிறது என்று மத்தேயு சொல்வதிலிருந்து, நீதி எவ்வளவு தெய்வீகமானது என்பது புலப்படுகிறது. 

வ.11-12: இந்த வசனம் பல துன்பங்களை வரிசைப்படுத்துகிறது. இயேசுவின் பொருட்டு இகழப்படுதல் (ὀνειδίσωσιν), மற்றும் இல்லாத பொல்லாது சொல்லப்படுதல் (πονηρός), என்பவை ஒருவரை இயேசுவிற்கு சொந்தமாக்கிறது. இவர்களை மகிழ்ந்து பேருவகை கொள்ளக் கேட்கிறார் இயேசு. சாதாரணமாக இந்த துன்பங்கள் ஒருவருக்கு மனவுளைச்சலையே கொடுக்கும். ஆனால் இவை ஒருவருக்கு இயேசுவின் பொருட்டு மகிழ்வையும் (χαίρω),  பேருவகையையும் (ἀγαλλιάω) கொடுக்கிறது. விண்ணுலகின் கைமாறு என்பது நிலைவாழ்வை குறிக்கலாம். அத்தோடு இவர்களின் துன்பம் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களின் துன்பத்தோடு ஒப்பிடப்படுகிறது. ஆக இயேசுவின் பொருட்டு துன்புறுவோர் இறைவாக்கினர் நிலையை அடைகின்றனர் என்பது மத்தேயுவின் செய்தி. 

கிறிஸ்தவம் ஒரு கலாச்சாரம், அது வெறும் மதம் அல்ல. 
சீடத்துவம் ஒரு இனிமையான பயணம், முடிவல்ல.
இயேசுவை பின்பற்றுவோர், போர் வீரர் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். 
துன்பம் இல்லாமல், தியாகம் இல்லாமல், காட்டிக்கொடுப்பு இல்லாமல்,
இறையரசு இல்லை. 
அவர்களே பேறுபெற்றோர். 

ஆண்டவரே உம்மிலே எம் கண்களை பதிய வைக்க உதவி செய்யும்,
எம்; வெறுமையை உம் அருளால் நிரப்பும். ஆமென்

மி. ஜெகன்குமார் அமதி
தூய செபஸ்தியார் பேராலயம், மகா ஞானொடுக்கம், மன்னார்.
வியாழன், 26 ஜனவரி, 2017



வியாழன், 19 ஜனவரி, 2017

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு (அ) 22,01,2016: Third Sunday in the Ordinary Times.



ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு (அ)
22,01,2016

முதல் வாசகம்: எசாயா 8,23-9,3
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 27
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,10-13.17
நற்செய்தி: மத்தேயு 4,12-23

எசாயா 9,1-4
1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். 2காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. 3ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். 4மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

எசாயா இறைவாக்குப் புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரத்தில், முதல் ஒன்பது வசனங்கள் வரவிருக்கும் மெசியாவையும், அவர் எதிரி (அயல்) நாடுகளுக்கு செய்ய விருப்பதையும் விளக்குகின்றன. இதனை மெசியாக்கால விடியல் எனவும் அழைக்கின்றனர். இந்த வரிகளை நம்பிக்கையின் வரிகளாக காணவேண்டும் என நினைக்கின்றேன். அத்தோடு இந்த வரிகளை நாம் வாசிக்கும் போது, அசிரியர்கள், வடநாடான இஸ்ராயேலுக்கு செய்தவற்றை நினைவில் கொள்வது நலமாக இருக்கும். அசிரியா கி.மு 7ம் நூற்றாண்டில் வட அரசான இஸ்ராயேலை தாக்கி அதனை கைப்பற்றயது. அசிரியர்கள், சமாரியவை சூறையாடி, இஸ்ராயேல் நிலப்பரப்பையே மாற்றி அமைத்தார்கள். மக்களை அடிமைகளாக தம் தலைநகர் நினிவேக்கு கொண்டு சென்றார்கள் என ஒரு பாரம் பரியம் நம்புகிறது. இவர்களின் கைப்பற்றுதலால் வட அரசின் பல நகர்களும், கோத்திரங்களும் இல்லாமலேயே போயின. இது இஸ்ராயேலுக்க மிகவும் துன்பம் நிறைந்த காலம். தென்னரசான யூதேயாவை விட, வட அரசு இஸ்ராயேல், பல வழிகளில் வல்லமையுடையதாக இருந்தது, இருந்தபோதும் அழிந்து போனது. அசிரியாவின் வருகையினால் கடவளின் மக்களான, இஸ்ராயேல் இனமும் மாற்றம் பெற்றது. இன்று வரை இந்த வட அரசின் மக்களுக்கு என்ன நடந்தது என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. 

வ.1: இந்த வரி தமிழ் மற்றும் ஏனைய விவிலியங்களில் 8,23 வது வரியாக அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த வரியின் முக்கிய பாடுபொருளாக நெப்தலியும், செபுலேனும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மூன்றாம் திக்லத் பிலயேசர் சமாரியாவை தாக்கியபோது இந்த நிலங்களை அசிரியாவுடன் 
இணைத்தான். எசாயா ஆசிரியர், முற்காலத்தில் செபுலோனுக்கும், நப்தலி நாட்டிற்கும் கடவுள் அவமதிப்பு செய்தார் எனச் சொல்கிறார். 

அ. செபுலோன் (זְבֻלֽוּן), இவர் யூதாவின் பத்தாவது மகன். இவருடைய தாயார் லேயா, லேயாவிற்கு இவர் ஆறாவதும் இறுதியுமான மகன். இவர்தான் கலிலேய பகுதியில் குடியேறியவர்களின் ஆரம்ப பிதாவாக கருதப்படுகிறார். செபுலோன் என்றால் மகிமை என்றும் பொருள்படும். செபுலோன் பகுதி பல வளமான காட்டு நிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. நீதிமான்களுடைய காலத்தில் இந்த பகுதி முக்கியமான இடமாக இருந்திருக்கிறது. இறைவாக்கினர் யோனா இந்த பகுதியிலிருந்து வந்தவர் என நம்பப்படுகிறது (2அர 14,25). செபுலோனையும் நப்தலியையும் எசாயா இணைத்து ஆசி வார்த்தைகளை கூறுவது, பிற்காலத்தில் இந்த பகுதியில் (கலிலேயாவில்) இயேசு பணிசெய்ததை நினைவூட்டுகிறது என்று கிறிஸ்தவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆ. நப்தலி (נַפְתָּלִי), இவர் யாக்கோபின் ஆறாவது மகன், இராக்கேலின் பணிப்பெண்ணான பில்காலின் இரண்டாவது மகன். நப்தலி என்றால் என்னுடைய மல்யுத்தம் என்று பொருள். இது இராக்கேல் தன் சகோதரி லேயாவினுடன் கொண்டிருந்த மனக் கசப்பைக் காட்டுகிறது. இந்த குலத்திலிருந்து பல இராணுவ வீரர்கள் நீதிபதிகள் மற்றும் அரசர்கள் காலத்தில் தோன்றியிருக்கிறார்கள். பாராக் என்ற ஒரு முக்கியமான தலைவர் இந்த கோத்திரத்தை சார்ந்தவரே. இந்த பகுதியும் அடர்த்தியான காடுகளையும் மலைத் தொடர்களையும் கொண்டிருந்தது. நப்தலி பென்-கதாத் என்ற சீரிய தலைவனால்; கைப்பற்றப்பட்டது, பின்னர் இந்த பகுதி அசிரியாவுடன் 
இணைக்கப்பட்டது. 
இந்த இரண்டு கோத்திரங்களின் அழிவு, ஆண்டவருடைய தெரிவிலே உண்டானது என்று எசாயா காண்கின்றார். இது இவ்வாறு இருக்க, பிற்காலத்தில் அதிகளவாக புறவினத்தவர் வாழ்ந்த பெருங்கடல் வழிப்பகுதி, அதாவது தோர் மகாணம் (கார்மேல் மலைக்கு கீழ்ப்பகுதி), யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதிகள், மற்றும் புறவினத்தர் வாழும் கலிலேயா போன்றவை ஆண்டவரால் மேன்மைப்படுத்தப்படும் என்கிறார்.

வ.2: இந்த வரி புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளது (ஒப்பிடுக ✽மத் 4,15: ✽✽லூக் 1,79). இந்த வரி திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ள அதே வேளை, ஒளி-இருள் என்ற இரண்டு அடையாளங்களை அழகாக பாவிக்கிறது. இருள் (חֹשֶׁךְ ஹொஷேக்), கடவுள் இல்லாத சாபம் நிறைந்த வாழ்வின் அடையாளம். ஒளி (אוֹר ஓர்), இருளுக்கு எதிர்மாறாக, கடவுளின்  இருப்பையும், ஆசீரையும் குறிக்கின்றது. சாவின் நிழல் சூழ்ந்த நாடு (אֶרֶץ צַלְמָוֶת) என்பது யூதாவின் இழிநிலையைக் குறிக்கிறது. சுடர் ஒளி உதித்தது என்பது, அந்நாட்டில் எதிர் கால நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்த அடையாளங்கள் வாயிலாக நிகழ்கால துன்பங்கள் நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையை எசாயா கொடுக்க முயல்கிறார். 

(✽காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.)
(✽✽இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.)

வ.3: மெசியாவின் வருகையினால் நடக்கவிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்கிறார் எசாயா. ஓர் இனம் பெருகுதல் என்பது அதன் வளர்ச்சியைக் காட்டுகிறது. அது நிச்சயமாக மகிழ்சியை பெருக்கும். 
இதனை இரண்டு உதாரணங்கள் வாயிலாக விளக்குகிறார். 

அ. அருவடை நாளில் வேளாளர் மகிழ்வதனைப்போல். 
ஆ. போரின் பின்னர் எதிரி நாட்டு கொள்ளைப் பொருளை பங்கிடுதல் போல. 
இந்த இரண்டு உதாரணங்களும் அக்கால மக்களுக்கு நன்கு தெரிந்த உதாரணங்கள். அக்காலத்தில் அறுவடை காலத்தில் விளைச்சலை பக்குவமாக அறுவடை செய்வது அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. அறுவடை காலத்தில் மிருகங்களின் தாக்குதல்களும், எதிரி நாட்டின் படையெடுப்பும் மிகுதியாக இருந்திருக்கும். கொள்ளைப் பொருளை பங்கிடுதல் (בְּחַלְּקָם שָׁלָל), அக்கால போர் விழுமியமாக கருதப்பட்டது. இது நமக்கு நன்கு தெரிந்த ஒரு அனுபவம் ஆனால் இது நமக்கு விழுமியமல்ல மாறாக சாபம். (நம்முடைய சொத்துகள் முப்பது வருட போரில் பலரால் பகிரங்கமாகவும் பங்கிடப்பட்டதனை எப்படி மறப்பது).  

வ.4: மிதியான் (מִדְיָן), ஆபிரகாமின் நான்காவது மகன். இவர் ஆபிரகாமின் வைப்பாட்டியின் மூலமாக பிறந்தவர். இவர் வழிவந்த மக்களை விவிலியம் மிதியானியர் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் நாடோடி மக்களாக வட மேற்கு ஆரேபிய பலைவனத்தில் வாழ்ந்தனர் (தற்போதைய வடமேற்கு சவுதி அரேபியா). இவர்கள் இஸ்ராயேலருக்கு முக்கியமான எதிரி மக்களாக கருதப்பட்டனர். இந்த மிதியானியரை கிதயோன் முறியடித்திருந்தார் (வாசிக்க நீதி 7-8). எசாயா இந்த வரலாற்றை நினைவு படுத்துகிறார் போல தோன்றுகிறது. நுகமும், தோலை புண்படுத்தும் தடியும் அடிமைத்தனத்தின் சின்னங்கள். மாட்டுக்கு நுகம், பாரம் ஏற்ற பயன்படுகிறது. தடி, தண்டனை கொடுக்க பயன்படுகிறது. கோல், அதிகாரத்தைக் குறிக்கிறது. இவை எல்லாம் உடைக்கப்படும் என்கிறார் ஆசிரியர் எசாயா. 

திருப்பாடல் 27
1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? 
2தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். 
3எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். 
4நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். 
5ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார். 6அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்; அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன். 
7ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.  
8'புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்; ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். 
9உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்; என்னைக் கைவிடாதிரும். 10என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். 11ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும். 
12என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர். 
13வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 
14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.

திருப்பாடல் 27, தனி மனித புகழ்ச்சிப்பாடல் என தமிழ் விவிலியத்தில் வகைப் படுத்தப்பட்டுள்ளது. தாவீதுக்கு அல்லது தாவீதுடைய, என்ற ஓர் ஒற்றைச்சொல் முன்னுரையை எபிரேய விவிலியம் இதற்கு தருகிறது (לְדָוִד லேதாவித்). திருப்பாடல் 26, ஒரு நேர்மையாளர் செய்யும் விண்ணப்பம் போலவும், இந்தப்பாடல் அதன் தொடர்ச்சியாக அந்த நேர்மையாளரின் புகழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. இது புகழ்சிப்பாடலாக தோன்றினாலும், இதன் வரிகளுக்கு பின்னால் இஸ்ராயேலின் விசுவாச பிரமாணம் அடங்கியுள்ளதை அவதானிக்கலாம். 
இதன் காலம் மற்றும் இடத்தை அறிவது இலகுவாக இருக்காது, ஆனால் துன்பமான வேளையிலும் மற்றும் செப வேளையிலும் பாவிக்கப்படக்கூடிய ஒரு பாடல் போல தோன்றுகிறது. ஒரு சில ஆய்வாளர்கள் இந்த பாடலில் சமாந்தர அடுக்கு கவிநடையை காண்கின்றனர். அதே வேளை தனியான வரிகளில் இந்த பாடல், ஏறு படி வடிவிலான கவிநடையையும் கொண்டுள்ளது. 

அ1: வவ.1-3- கடவுளின் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய தேவை
ஆ1: வவ.4-6- கடவுளிடம் பாதுகாப்பிற்கான முதலாவது செபம்
ஆ2: வவ.7-12- கடவுளிடம் பாதுகாப்பிற்கான இரண்டாவது செபம்
அ2: வவ.13-14- கடவுளிடம் நம்பிக்கை வைத்தல் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. 

வ.1: ஆசிரியர் இரண்டு கேள்விகளை கேட்கிறார் அதில் அவருடைய விடையும் அடங்கியுள்ளது, 
இந்த கேள்விகள் நேர்மறையான கேள்விகள் அல்ல, விடைகளைக் கொண்ட கேள்விகள் எனலாம். ஒளி மற்றும் மீட்பு என்ற சொற்கள் இரண்டு வேறு சொற்கள் என்றாலும், அர்த்தத்தில் அவை ஒத்த கருத்துச் சொற்களே. இருவருடைய மீட்புதான் ஆசிரியர் சொல்லும் ஒளி. இதனையே இந்த ஆசிரியர் காட்டுகிறார். இந்த ஒளியாகவும், மீட்பாகவும் ஆண்டவர் இருப்பதனால், அவர் நீதிமான்கள் யாருக்கும் அஞ்சவோ அல்லது அஞ்சிநடுங்கவேண்டியதோ இல்லை என்கிறார். முதல் ஏற்பாட்டில் ஒளியும் (אוֹר ஓர்), மீட்பும் (יֵשַׁע யெஷா), கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகின்ற அடையாளங்கள். 

வ.2: தீயவர்கள் என்பவர்கள் இங்கே இவரின் எதிரிகளாகவும், பகைவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இவரின் உடலை விழுங்க முயற்சிக்கிறார்கள் என்கிறார், இது அவர்கள் இவரை அழிக்க முயல்கிறார்கள் என்பதை ஊகிக்கலாம். 

வ.3: இந்த வரி, அரச வாழ்வியலை காட்டும் வரி போல மேலோட்டமாக தோன்றுகிறது. இந்த வரியைக் கொண்டு ஆய்வு செய்கிறவர்கள், இந்த பாடலின் ஆசிரியர் ஓர் அரசராக இருக்க வேண்டும் என நினைப்பர், ஆனால் இது சாதாரண மனிதனின் சிக்கலாகக் கூட இருக்கலாம். அதே வேளை, ஆசிரியர் இதனை கற்பனையாகவும் வடித்திருக்கலாம். போர் மற்றும் படை போன்றவை அக்காலத்திலும் இக்காலத்திலும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய நிகழ்வுகள். இருப்பினும் ஆண்டவர் தன்னோடு இருப்பதனால் இவற்றிக்கு அஞ்சவேண்டிய தேவை தனக்கில்லை என்கிறார் ஆசிரியர். 

வ.4: தன்னுடைய ஒரே ஒரு விண்ணப்பம் என்று சொல்லி மூன்று விண்ணப்பங்கனை முன்வைக்கிறார் ஆசிரியர். அவை உண்மையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டதே. அவர் விண்ணப்பங்களானவை: 
அ. ஆண்டவரின் இல்லத்தில் வாழ்நாள் எல்லாம் குடியிருத்தல் שִׁבְתִּ֣י בְּבֵית־יְ֭הוָה
ஆ. ஆண்டவரின் அழகை-இனிமையைக் காணுதல் לַחֲז֥וֹת בְּנֹֽעַם־יְ֝הוָ֗ה
இ. அவரது கோவிலில் அவர் திருவுளத்தை காணல் וּלְבַקֵּ֥ר בְּהֵיכָלֽוֹ
இந்த வேண்டுதல்கள் இஸ்ராயேல் நீதிமானுடைய சாதாரணமானதும், இறுதியுமானதுமான வேண்டுதல்கள். இவற்றையே அதிகமான இஸ்ராயேலர் விரும்பினர். ஆண்டவருடைய இல்லம் என இரண்டு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன, அவை ஓர் கட்டப்பட்ட ஆலயத்தை குறிப்பன போல் உள்ளன, ஆக இந்த பாடல் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டதன் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம் (בֵית־יְ֭הוָה கடவுளின் வீடு, הֵיכָלֽוֹ அவர் மாளிகை).

வ.5: இந்த வரியில் கடவுளின் உறைவிடம் கூடாரம் என சொல்லப்படுகிறது (אֹהֶל). இந்த சொல் பாலைவன இடப்பெயர்வு அனுபவத்தை நினைவுகூறுகிறது. அதாவது இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து மீண்டு வந்தபோது நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம் செய்தனர், அப்போது ஆண்டவர் சந்திப்புக் கூடாரத்தில் தங்கினார், இதனால் கூடாரம் கடவுளின் இல்லத்தின் அடையாளமாகியது. இந்த கூடாரத்தில் கடவுள் தன்னை எல்லா தீங்கிலிருந்தும் ஒழித்து வைப்பார் என்கிறார் ஆசிரியர், ஏனெனில் இந்த கூடாரத்திற்குள் எவரும் நுழைய முடியாது. ஆக இது மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியது. அடுத்து, குன்றின் உச்சியையும் அவர் பாதுகாப்பான இடமாக காண்கிறார். குன்றிலே என்று எபிரேய விவிலியத்தில் உள்ளது (בְּצוּר). குன்று பாதுகாப்பான இடம், அத்தோடு இங்கு இலகுவில் எதிரிகள் ஏறிவர முடியாது, அல்லது மறைவாக தாக்க முடியாது. 

வ.6: மேல் சொன்ன வரியில், பாதுகாப்பிற்காக மன்றாடுகிறார், இதன் பலனை இந்த வரியில் விவரிக்கிறார். எதிரிகள் முன்னால் தலைநிமிர்தல், வெற்றியைக் குறிக்கிறது. ஆண்டவரின் கூடாரத்தில் பலிசெலுத்துவம், புகழ்ச்சிப் பாடல்களை பாடுவதும் மகிழ்வைக் குறிக்கின்றன. அவை வெற்றியையும் குறிக்கலாம். 

வ.7: இந்த வரி மீண்டுமாக வேண்டுதலை மையப்படுத்துகிறது. குரலைக் கேட்பதும், பதிலளிப்பதும் ஆண்டவரின் செவிசாய்தலைக் குறிக்கின்றன. 

வ.8: இவர் செபிக்கும் போது அந்த செபம் கேட்கப்பட்டுவிட்டது என்றால் போல், இவரின் உள்மனம் சாற்றுகின்றது. ஆண்டவரின் முகத்தை நாடுதல் என்பது, அவரின் பிரசன்னத்தை நாடுதல் என்ற பொருள் படும். இதனைத்தான் இவர் உள்ளம் சொன்னது அதனையே அவர் செய்வதாக வாக்களிக்கிறார். 

வ.9: இந்த வரியில் ஒரு பயத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். கடவுள் ஒருவருக்கு முகத்தை மறைத்தல் என்பது, கடவுள் ஒருவருக்கு செவிசாய்கிறார் இல்லை என்ற பொருள் தருகிறது. கடவுளுக்கு உருவம் இல்லை, அவருக்கு முகமும் இல்லை ஆனால் இங்கே கடவுளை ஒரு மனித தலைவராக வர்ணிக்கிறார், இது அவரின் கடவுள் அனுபவத்தைக் காட்டுகிறது. கடவுள் முகத்தை மறைத்தல் என்ற செயலுக்கு இன்னும் பல ஒத்த செயல்கள் விவரிக்கப்படுகின்றன: சினம்கொண்டு அடியேனை விலக்கிவிடல், மீட்பராகிய கடவுள் தன்னை தள்ளிவிடல், மற்றும் கைவிடுதல் போன்றவை அவை. 

வ.10: இந்த வரி ஆசிரியரின் இறையனுபவத்தின் உச்சத்தைக் காட்டுகிறது. தன் தந்தையும் தாயும் தன்னைக் கைவிட்டாலும், கடவுள் தன்னை கைவிடார் என்கிறார். தன் பெற்றோர் தன்னை கைவிட்டுவிட்டார்கள் எனச் சொல்லவில்லை (כִּי־אָבִ֣י וְאִמִּ֣י עֲזָב֑וּנִי). பெற்றோர்கள் பிள்ளையை கைவிடுவது இயற்கையல்ல, அதனையும் தாண்டிய அன்பு இறைவனுடையது என்கிறார். (இக்கால உலகில் பெற்றோர்கள் பிள்ளைகளை கைவிடுவது அவ்வளவு கடினமான செயல் அல்ல, என்பதைப்போல் பல சந்தர்பங்களைக் காண்கின்றோம்). 

வ.11: ஆண்டவரின் வழியை கற்றல் என்பது ஆண்டவரது நியமங்களை கற்றல் என்பதற்கு சமன். ஆண்டவரின் வழிதான் செம்மையான பாதை என்கிறார் ஆசிரியர். பாதை (דֶּרֶךְ தெரெக்) என்பது, விசுவாசம், மார்கம் மற்றும் வாழ்கை முறை என்ற பல அர்தங்களைக் கொடுக்கும்.

வ.12: இந்த வரி, ஆசிரியருக்கு பல எதிரிகள் இருப்பதுபோல ஒரு காட்சியைக் காட்டுகிறது. பொய்சாட்சிகள் மற்றும் வன்முறைகள் அக்காலத்திலும், நீதிமான்களுக்கு எதிரான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. ஆசிரியர் தனக்கெதிராக சூழ்ச்சிகள் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிறார். 

வ.13: இஸ்ராயேலின் பாரம்பரிய விசுவாசம், மறுவாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லை. இஸ்ராயேல் முதல் ஏற்பாட்டு காலத்தில் இவ்வுலக வாழ்க்கையே முதலும் முடிவும் என நம்பினர். வாழ்வோர் நாடு என்பது இவ்வுலக நாட்டை குறிக்கும் (בְּאֶ֣רֶץ חַיִּֽים). இறந்தோர் நாடு என்பது இருள் சூழ்ந்த சீயோல் שְׁאוֹל என்ற ஒரு பள்ளத்தை குறிக்கும். இதனை பற்றிய சரியான புரிதல் இன்னும் 
இல்லை. இது மரணத்தை குறிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர். ஆசிரியர் தான் இன்னும் நம்பிக்கையில் இருப்பதாக கூறுகிறார். 

வ.14: இந்த வரி, ஆசிரியர் தன்னுடைய உள்ளத்திற்கு தானே கட்டளையிடுவதைப் போல் அமைந்துள்ளது. ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பது ஒரு முக்கியமான நம்பிக்கை விழுமியம். காத்திருத்தல் என்பது இதயத்தை சஞ்சலம் இல்லாமல் வைத்திருத்தல் என்ற ஒரு அர்த்தத்தை இங்கே காட்டுகிறது. இதயம்தான் எண்ணத்தின் உறைவிடம் என்ற பழைய எபிரேய சிந்தனை இங்கே புலப்படுகிறது. 


1கொரிந்தியர் 1,10-13.17
10சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். 11என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். 12நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் 'நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, 'நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம். 13கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? 14கிறிஸ்பு, காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். 15ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது. 16ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை. 17திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

கொரிந்திய திருச்சபையில் காணப்பட்ட முக்கியமான சிக்கல்களில் பிரிவினைவாதம் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. கொரிந்திய திருச்சபை, பவுலால் நேரடியாக உருவாக்கப்பட்ட திருச்சபைகளில் ஒன்று என நம்பப்படுகிறது. இந்த திருச்சபையை, பவுல் கி.பி 50களில் உருவாக்கியிருக்க வேண்டும். ஒன்றரையாண்டுகள் பவுல் இங்கு பணியாற்றியபின் கொரிந்தை பிரிந்தார். பின்னர் அப்பொல்லோ என்ற ஒரு கிறிஸ்தவர், பவுலின் வேலையை தொடர்ந்தாற்றினார். இவர் பவுலோடு சேர்ந்து கொரிந்தில் பணியாற்றினாரா என்பது சந்தேகமே, ஆனால் பவுலுடைய பணியை இவர் தொடர்ந்தார் (ஒப்பிடுக தி.பணி 18,24-28). பவுல் இவரை தன்னுடைய உடன்-பணியாளர் என்று அழைக்கிறார் (காண்க தி.பணி 3,5-9). சிலர் பிற்காலத்தில் இந்த அப்பலோவை பவுலைவிட உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும், இதனால் அங்கே சில பிரிவினைகள் தோன்றியிருக்க வேண்டும். இதற்கு அப்பலோ காரணமாக இருந்திருக்க வேண்டிய தேவையில்லை. அப்பலோ கொரிந்தில் பணியாற்றிய காலத்தில், பவுலின் நெருங்கிய நண்பர்களான பிரிஸ்கில்லாவும், அக்குவில்லாவும் அங்கே இருந்தார்கள். இவர்கள்தான் இவருக்கு விசுவாசத்தை தெளிபடுத்தினார்கள். அப்பலோ தன்னுடைய வாதாடும் திறமையாலும், பேச்சாற்றலாலும் அறியப்பட்டார். அப்பலோ தன்னுடைய கிரேக்க மெய்யியல் அறிவின் மூலம் இயேசுவை பறைசாற்ற முயன்றார், இருப்பினும் இவருடைய மெய்யியல் பார்வைகள் கொரிந்தில் பிரிவினைகளை உண்;டாக்கியதா? என்ற கேள்விகளும் இருக்கின்றன. ஆனால் கொரிந்தின் பிரிவினைக்கு அப்பலோ காரணம் அல்ல, அத்தோடு இவருக்கும் பவுலுக்கும் பிரச்சனைகள் இருந்ததாகவும் சொல்வதற்கில்லை. தலைவர்களை நட்சத்திரங்களாக கொண்டாடி அவர்களுக்கு பால் வார்க்கும் மூடநம்பிக்கை கொரிந்தியரையும் பாதித்திருக்கிறது. (இன்றைய நம்முடைய இளசுகள் சினிமாக்காரர்களுக்கு பால் ஊற்றுவது போல்).  

வ.10: பவுல் மிகவும் உணர்வு பூர்வமான வார்த்தைகளை இதில் பிரயோகிக்கிறார். இயேசுவின் பெயரால் கெஞ்சிக் கேட்பதாக சொல்கிறார். பிளவுகள் (σχίσμα ஸ்கிஸ்மா) மிகவும் ஆபத்தானவை என்பதை கவலையோடு சாடுகிறார். பிளவுக்கு எதிராக ஒத்தகருத்தையும், ஒரே மனத்தையும், மற்றும் ஒரே நோக்கத்தையும் கொண்டிருக்க கேட்கிறார். (அதே ஆபத்துத்தான் இன்றும் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கிறது. கொரிந்தியர்களும் அன்று கேட்கவில்லை நம்மவர்களும் கேட்பதுபோல தெரியவில்லை). 

வ.11: பவுல் ஒரு நல்ல தலைவர். தான் கொரிந்தைவிட்டு பிரிந்தாலும் அந்த திருச்சபை மட்டிலே கரிசனையுடையவராகவே இறுதிவரை இருந்தார். அவருடைய நலன்விரும்பிகள், இன்றைய வார்த்தையில் உளவாளிகள் பவுலுக்கு கொரிந்தின் நிலைமைகளை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களில் குலோயி விட்டார் (Χλόη) முக்கியமானவர்கள். இவர்கள் கொரிந்தின் பிரிவினைகளை தங்கள் ஆயனுக்கு 'போட்டுக்கொடுக்கிறார்கள்'. குலோயி என்பவர் ஒரு பணக்கார வாணிக பெண்ணாக இருந்திருக்க வேண்டும். இவர் விட்டார் என்பவர்கள், இவரின் பணியாளர்கள், அடிமைகள் மற்றும் உறவினர்களாக இருந்திருக்கலாம். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர் ஒரு தளத்திருச்சபையில் தலைவியாக இருந்ததற்கான வாய்ப்புக்களும் உள்ளன. குலோயி வீட்டாரின் அக்கறை, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தலத்திருச்சபையில் முக்கிய பங்குள்ளது என்பதைக் காட்டுகிறது. 

வ.12: பவுல் தன்னுடைய குற்றச்சாட்டை விவரிக்கிறார். சிலர் பவுலைச் சார்ந்தவராகவும், சிலர் அப்பலோவை சார்ந்தவராகவும், மற்றும் சிலர் கேபாவை சார்ந்தவராகவும் தங்களை காட்டுவதாக சொல்கிறார். சிலர் பவுலை, இந்த திருச்சபையின் நிறுவுனரை சார்ந்திருந்தனர். சிலர் அப்பலோவை, இந்த திருச்சபையை பவுலின் பின்னர் வளர்த்தவரை சார்ந்திருந்தனர். சிலர் கேபா அதாவது பேதுருவை, அகில திருச்சபையின் தலைவரை சார்ந்திருந்தனர். (இந்த காட்சி, நம் ஈழ திருச்சபையில், சிலர் மாதா கோவில்காரர்களாகவும், சிலர் வளனார் கோவில்காரர்களாகவும், சிலர் யோவான் கோவில்காரர்களாகவும் தம்மை பிரித்து திருச்சபைக்கு பிரிவினை சாயம் பூசுவதைக் அப்படியே காட்டுகிறது. இது கத்தோலிக்க திருச்சபை கிடையாது. இதனை இனியும் சகிக்கவும் முடியாது). 

வ.13: இந்த பிரிவினை அடிப்படையில் தவறானது என்பதை இயேசுவை மையமாகக் கொண்டு விளக்குகிறார். கிறிஸ்துதான் ஒரே இலக்கும் ஒரே பாதையும். அவர் இடத்தை எந்த தலைவரும் எடுக்க முடியாது. சிலுவையில் அறையப்பட்டவர் கிறிஸ்து, கிறிஸ்து பிளவுபடாதவர், அத்தோடு திருமுழுக்கும் அவருக்கே சொந்தம். இவற்றை கேள்வியாக கேட்டு அதனுள் சரியான விடையையும் வைக்கிறார் பவுல். 

வ.14: இந்த வரி பவுலின் ஆழமான விசுவாசத்தை காட்டுகிறது. பவுல் தன்னுடைய நற்செய்தி பணியின் நோக்கம், திருமுழுக்கு கொடுப்பதல்ல, மாறாக இயேசுவை அறிவிப்பதே அல்லது 
இயேசுவை மையப்படுத்துவதே என்று கூறுகிறார். இங்கே பவுல் திருமுழுக்கை கொச்சைப் படுத்துகிறார் என்று எடுக்க முடியாது, ஆனால் திருமுழுக்கு ஓர் அடையாளமே. அதே திருமுழுக்கு என்னும் சடங்கு இயேசுவிடமிருந்து மக்களை பிரிக்கும் என்றால் அது தவறு என்கிறார். அத்தோடு, தான் சிலருக்கு மட்டும் திருமுழுக்கு கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறார். இவர் மிகவும் பலசாலி. கிறிஸ்பு (Κρίσπος), இவர் ஒரு செபக்கூடத் தலைவர். இவர் சிலரோடு சேர்ந்து பவுலிடம் திருமுழுக்கு பெற்றார் (✽காண்க தி.பணி 18,8). காயு (Γάϊος), இந்த பெயரோடு தொடர்புடைய நான்கு நபர்கள் புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த காயு என்னும் நபர் பவுலால் திருமுழுக்கு பெற்றவர்களுள் முக்கியமானவராக இருக்கலாம். 

(✽தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.) 

வ.15-16: தன்னுடைய பெயரையும் திருமுழுக்கையும் வீணாக பயன்படுத்த வேண்டாம் என கேட்கிறார். அத்தோடு தான் திருமுழுக்கு கொடுத்தவர்களில் இன்னொருவரையும் நினைவு கூருகிறார். ஸ்தேவானா Στεφανᾶς குடும்பம் பிரசித்தி பெற்ற ஆரம்ப கால கிறிஸ்தவ குடும்பம். அக்காயாவில் இவர்கள் பவுலால் கிறிஸ்தவம் பெற்றார்கள் (காண்க 1கொரி 16,15: தி.பணி 17,34).  இந்த ஸ்தேவானா வீட்டாரும் பவுலுக்கு கொரிந்திய பிளவுகளைப் பற்றி சொல்லியிருக்கலாம்.  பவுல் இவர்களின் நம்பிக்கையின் பொருட்டு இவர்களின் முக்கியத்துவத்தை தனது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார் (✽காண்க 1கொரி 16,17-18). 
(✽17ஸ்தேவனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள். 18அவர்கள் என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள். இத்தகையோருக்கு மதிப்பு அளியுங்கள்.) 

வ.17: ஒரு மறைபணியாளனின் நோக்கத்தை பவுல் அறிவிக்கிறார். திருமுழுக்கல்ல, நற்செய்தியே தன் இலக்கு அதற்கு ஓர் அடையாளமே திருமுழுக்கு என்கிறார். மனித ஞானமல்ல சிலுவை, அது இறைஞானம் என்கிறார். இங்கே பவுல் கிரேக்க மெய்யியலை சாடுவதைப் போல் உள்ளது. கிரேக்கர்கள் தங்கள் ஞானத்தை போற்றிவந்தனர், இந்த இயல்பு கொரிந்திலும் நிச்சயமாக 
இருந்திருக்கும். 

மத்தேயு 4,12-23
12யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 13அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 14இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
15'செபுலோன் நாடே! நப்தலி நாடே!
பெருங்கடல் வழிப் பகுதியே!
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே!
பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!
16காரிருளில் இருந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர் மேல்
சுடரொளி உதித்துள்ளது.'
17அதுமுதல் இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20 லூக் 5:1 - 11)

18இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். 19இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார். 20உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். 22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(லூக் 6:17 - 19)
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

இன்றுதொடங்கி இந்த வருடத்திற்கான மத்தேயு நற்செய்தி, தொடர்ந்து பயணிக்கின்றது. மத்தேயுவின் நான்காவது அதிகாரம், இயேசுவின் பொதுப்பணிக்கான ஆயத்தத்தையும் மற்றும் தொடக்த்தையும் விவரிக்கின்றது. பாலை நிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டு தன்னுடைய தெய்வீகத்தை சாத்தானுக்கும் காட்டிய இயேசு தன் பணிவாழ்வை தொடங்குகிறார். சாத்தான் இயேசுவை விட்டு அகன்ற பின், வானதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள் என மத்தேயு விவரிக்கின்றார். வானதூதர்கள் ἄγγελοι இங்கே, இயேசு சரியான பாதையில் அதாவது இறைவனின் பாதையில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இயேசு பாலைவனத்தில் இருந்த போது அவர் சகோதரனும், ஆயத்த இறைவாக்ககினருமான திருமுழுக்கு யோவான் கைது செய்யப்படுகிறார். யோவான் கைது
செய்யப்பட்டதற்கு எரோது அரசனே முழுக்காரணம் என நற்செய்திகள் காட்டுகின்றன. திருமுழுக்கு யோவான், எரோதுவின் ஏற்றுக்கொள்ள முடியாத திருமணத்தை சாடினார், அதாவது ஏரோது, தன்னுடைய சகோதரனான பிலிப்பின் மனைவியும், நபேத்திய இளவரசியுமான ஏரோதியாவை தன் மனைவியாக்கினான். இது இஸ்ராயேலின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம், இருப்பினும் அவன் உரோமைய ஆசி பெற்ற அரசனாக இருந்த படியால் சட்டத்திலிருந்து தப்பினான். இதனால் இறைவாக்கினர் இவரை சபித்தார், இதனால் யோவான் சிறைவாசம் செல்ல வேண்டிவந்தது, பின்னர் மரணிக்கவும் வேண்டி வந்தது. (காண்க மத்தேயு 14,1-12). 

வ.12: இயேசு கலிலேயா சென்றதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். திருமுழுக்கு யோவானின் கைது இயேசுவை சிந்திக்க வைத்திருக்கும். இயேசு தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே எரோதுவை சந்திக்க விரும்பியிருக்க மாட்டார், அத்தோடு அவர் இறுதிவரை ஏரோதுவை சந்திக்க விரும்பியதுமில்லை. இரண்டாவதூக கலிலேலயா, இயேசுவுடைய சொந்த மாகாணம், அங்கே தன்னுடைய பணியை அவர் தொடங்க விரும்பியிருக்கலாம், மற்றும் தன்னுடைய தாயையும் அவர் நினைவுகூர்ந்திருக்கலாம். 

வ.13: இந்த வரியிலிருந்து அவர் கலிலேயாவில், முதலில் நாசரேத்திற்குத்தான் வந்தார் எனப் புலப்படுகிறது. செபுலோன் மற்றும் நப்தலி அகிய இடங்கள் ஏற்கனவே எசாயா இறைவாக்கில் மெசியாவின் வருகையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றன. இந்த பிரதேசங்களுக்கு மெசியா வருவார் என்றும் இறைவாக்குகள் உள்ளன (காண்க எசாயா 9,1). கப்பர்நாகும், இயேசுவின் பணியில் மிகவும் முக்கியமான பணித்தளம். இங்கிருந்த செபக்கூடம் இயேசுவிற்கு மிகவும் பிரியமான செபக்கூடம். இந்த செபக்கூடத்தின் சிதைவுகளை இன்றும் காணலாம்.  
கப்பர்நாகும் Καπερναουμ, கெனசரேத்து, திபேரியா ஏரியின் மேற்கு பக்கமாக அமைந்திருக்கிறது. இந்த வழியாகவே யோர்தான் நதி இந்த ஏரியினுள் விழுகிறது, அத்N;தாடு மீன்பிடியிலும், விவசாயத்திலும் இந்த இடம் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது. கப்பர்நாகும் என்ற இந்த இடம் முதல் எற்பாட்டில் குறிப்பிடப்டவில்லை ஆதலால் இந்த நகர் பபிலோனிய 
இடப்பெயர்விற்கு பின்னரே உருவாகியிருக்க வேண்டும். இயேசுவின் ஆரம்பகால நண்பர்களும், முதல் சீடர்களும் இந்த இடத்தை சார்ந்தவர்களே. 

வ.14-16: மத்தேயு எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார். இந்த இறைவாக்கை நாம் ஏற்கனவே முதலாவது வாசகத்தில் விவரித்திருக்கிறோம். மத்தேயு, எசயாவை குறிப்பிடுவதன் வழியாக, மத்தேயுவிற்கு நல்ல முதல் ஏற்பாட்டு புலமைத்துவம் இருந்ததையும், எசாயா இறைவாக்கினர் அக்காலத்திலும் மிகவும் மதிக்கப்பட்ட மெசியானிக்க இறைவாக்கினர் என்பதும் புலப்படுகிறது. மத்தேயு, இந்த இறைவாக்கை செப்துவாஜிந்து நூலில் இருந்துதான் கோடிடுகிறார் ஆனால், அவர் அதனை அப்படியே காட்டவில்லை சில மாற்றங்களைச் செய்கிறார். மத்தேயுவிற்கு இந்த 
இறைவாக்கு இயேசுவின் வருகையால் நிறைவடைகிறது. மத்தேயு பல இடங்களில் இயேசுதான் முதல் ஏற்பாட்டின் நிறைவு என்பதை காட்டுவார். இவ்வாறு இயேசுதான் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்று நற்செய்தியுரைக்கிறார். அத்தோடு மெசியாவின் கவனம் எருசலேமிற்கு மட்டுமல்ல வடக்கின் முக்கியமான இடங்களுக்கும், மேலும் பிறவினத்தவர் வாழுகின்ற இடங்களுக்கும் உண்டு என்ற ஒரு செய்தியும் இங்கே புலப்படுகிறது. 

ஒப்பிடுக: எசாயா 9,1-2: 1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். 2காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.

வ.15: இதிலிருந்து இயேசு தன்னுடைய செய்தியை ஆரம்பிக்கிறார். அவருடைய செய்தியாக 'மனமாறுங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' (μετανοεῖτε· ἤγγικεν γὰρ ἡ βασιλεία τῶν οὐρανῶν) என்பதைக் காட்டுகிறார் மத்தேயு. மனமாற்றம் என்பது மத்தேயு நற்செய்தியில் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்று. இந்த மனமாற்றம் மத்தேயு நற்செய்தியிலே யூதர்களையே முதன்மைப்படுத்துகிறது, (μετανοέω மெடாநொயோ).
மற்றய நற்செய்தியாளர்கள் இறையரசு என்று சொல்வதை (βασιλείᾳ⸃ τοῦ θεοῦ பசிலெய்யா தூ தியூ) மத்தேயு தனக்கேயுரிய யூத வடிவத்தில், விண்ணரசு (ἡ βασιλεία τῶν οὐρανῶν. பசிலெய்யா டோன் ஹுரானோன்) என்றே குறிப்பிடுவார், இது மத்தேயுவிற்கே உரிய தனித்துவம். இதன் வாயிலாக மத்தேயு தன்னுடைய நற்செய்தியை யூத சாயலில் கொடுக்க விழைகிறார் என்பது தெரிகிறது. 

வ.18: இது முதல் சீடர்களை அழைத்த பகுதியின் தொடக்கமாகும். இயேசு கலிலேய கடற்கரையில் வழமையாக நடப்பதுபோல காட்டப்படுகிறார். இந்த வசனம் தொடக்கநூலில் கடவுள் ஏதோன் தோட்டத்தில் உலாவருவதை நினைவூட்டுகிறது (✽காண்க தொ.நூல் 3,8). சீமோன் பேதுருவும், அந்திரேயாவும் சகோதரர்களாக காட்டப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் மீனவர்கள் எனவும் மத்தேயு காட்டுகிறார். கலிலேயா கடல் மீனவர்களின் நம்பிக்கையாக இருந்தது. மீன், மீன்பிடித்தல் மற்றும் வலை என்பன விவிலியத்தில் இறையரசுடன் தொடர்புடைய அடையாளங்கள். ஆனால் இங்கே இவர்கள் அடையாளங்கள் அல்ல, மாறாக உண்மை மீனவர்கள். யூத மக்களுள் பல வகையான தொழில் செய்கிறவர்கள் இருந்திருக்கிறார்கள். வேளான்மை இவர்களிடையே வளர்ந்த போதே, மீன்பிடியும் இவர்களிடைய வளர்ந்ததாக மானிடவியல் வாதிடுகிறது. சிலர் மீன்பிடித்தலை, வேட்டையாடுதலின் ஒரு வளர்ந்த தொழிலாகக் காண்கின்றனர். 
(✽8மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.)

வ.19: இந்த வரி மத்தேயு நற்செய்தியில் மிகவும் முக்கியமான வரி. இயேசு இவர்களை பார்க்கிறார், இந்த பார்வை முதல் ஏற்பாட்டில் கடவுளின் முகப் பார்வையை நினைவுபடுத்துகிறது. கடவுளின் பார்வை என்பது அவரின் பிரசன்னத்தையும், அன்பையும் குறிக்கும். இங்கே இந்த சகோதரர்கள் அந்த பார்வையையும், அன்பையும் பெறுகிறார்கள். மனிதரைப் பிடித்தல் என்பதை (ἁλιεῖς ἀνθρώπων) இந்த சாமான்ய மீனவர்கள் அன்று புரிந்திருப்பார்களா, என்பது சந்தேகமே. ஆனால் இந்ந வரி மத்தேயுவின் வாசகர்களுக்கு மிகவும் பொருந்தும். அதாவது அவர்கள் இயேசுவின் பின்னால் வர கேட்கப்படுகிறார்கள், அத்தோடு அந்த வருகை, அவர்களை மனிதரை பிடிப்பவராக்குகிறது என்கிறார் மத்தேயு. இந்த காட்சியில் மனித குலம், உலகியல் வேலையில் மூழ்கியிருக்கும் வேளை, ஆண்டவரின் குரல், தன்பின்னால் வரச்சொல்லி கேட்கிறது போல காட்டப்படுகிறது. யோவான் நற்செய்தியில் பேதுருவை, இயேசு முதலில் அழைக்கவில்லை. அவர் அந்திரேயாவால் இயேசுவிடம் அழைத்து வரப்படுகிறார் (காண்க யோவான் 1,40-42). சமநோக்கு நற்செய்திகள், பேதுருவின் தலைமைத்துவத்தை எல்லா இடங்களிலும் மையப்படுத்துகிறார்கள். 

வ.20: இந்த செய்தியும் மிக முக்கியமான செய்தி, அதாவது ஆண்டவரின் குரலைக் கேட்டவர்கள் உடனே (εὐθέως), வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றுகிறார்கள். இந்த செய்தியும் மத்தேயுவின் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. அதாவது அவர்களையும் உடனடியாக தங்கள் உலகத்தையும் அதன் அலுவல்களையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்ற கேட்கிறது இந்த ஆசிரிய-நற்செய்தி. 

வ.21: செபதேயுவின் மக்களை அறிமுகம் செய்கிறார் மத்தேயு. செபதேயு ஒரு பணக்கார மீனவராக இருந்திருக்க வேண்டும். மாற்கு நற்செய்தியில் இவர் வேலையாட்களுடன் காணப்படுகிறார் (காண்க மாற் 1,19-20). மேலுள்ள வரியில் வந்த சகோதரர்களைப்போல இந்த மீனவ சகோதரர்களும் (யாக்கோபு, யோவான்) ஒன்றாகவே அழைக்கப்படுகிறார்கள். யாக்கோபு (Ἰάκωβος யாகோபொஸ்), பெரிய யாக்கோபு என அறியப்படுகிறார். இவர்தான் சந்தியோகு மயோர் என்ற புனிதர் என நம்பப்படுகிறது. இவர்தான் திருத்தூதர்களில் முதலாவது மறைசாட்சி (காண்க தி.பணி 12,2). யோவான் (Ἰωάννης யோஅன்னேஸ்), இவர் இயேசுவை பின்பற்றியவர்களில் மிக இளமையானவர் என நம்பப்படுகிறது. இவரைத்தான் கத்தோலிக்க பாரம்பரியம் நற்செய்தியாளர் யோவான் எனவும், யோவான் நூல்களில் ஆசிரியர் எனவும், அத்தோடு இயேசுவின் மார்பில் சாய்ந்த அவர் அன்புச்சீடர் எனவும் நம்பி ஏற்றுக்கொள்கிறது. இந்த நம்பிக்கைகளுக்கு எதிர்கருத்துக்களும் உள்ளன. இந்த இரண்டு சகோதரர்களும், அவர்களோடு பேதுருவும் சேர்ந்து, இயேசுவின் முதல் நெருக்கமான ஒரு குழுவை அமைக்கிறார்கள். இந்த மூவர், அதிக முக்கியமான வேளைகளில் இயேசுவோடு இருந்தார்கள். இவர்களும் தங்கள் வலைகளை தம் தந்தையுடன் பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது அழைக்கப்படுகிறார்க்ள். அதாவது தம் சாதாரண உலகியல் வேலைகளில் இருந்த போதே அழைக்கப்படுகிறார்கள். 

வ.22: இவர்களும் உடனே தம் தந்தையையும், படகையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றுகிறார்கள். இயேசுவை இவர்கள் முன்பின் அறிந்ததில்லை, தெரியாத ஒருவருக்காக இவர்கள், தங்கள் தந்தையையும், சொத்துக்களையும் தியாகம் செய்கிறார்கள், எப்படி? ஒருவேளை இயேசுவின் முகம் இவர்களுக்கு மெசியாவை நினைவூட்டியிருக்கலாம், அல்லது இவர்கள் தங்கள் தந்தையிடம் இருந்து வெளியேற வாய்ப்பு தேடியிருக்கலாம், அல்லது இவர்கள் இஸ்ராயேலின் விடுதலைக்காக காத்துக்கொண்டிருக்கலாம். மத்தேயு, இயேசுவின் குரலை மையப்படுத்துவதால், இவர்கள் இயேசுவை ஆண்டவர் என்று உணர்ந்தே அவரை பின்பற்றுகின்றனர் என்பது புலப்படுகிறது. இதுவும் மத்தேயு தன் வாசகர்களுக்கு தரும் மையச்செய்தி அதாவது, சொந்த உறவுகளையும், சொத்துக்களையும் விட இயேசு பெரியவர் மற்றும் உடனடியாக பின்பற்றபட வேண்டியவர் என்பதாகும். 


இயேசு பெரியவர், உன்னதர், பிளவுபடாதவர்.
எந்த புனிதரும், தலைவரும் இயேசுவின் இடத்தை பிடிக்காமல் பார்க்கவேண்டும்.
பிரிவினைவாதம், கிறிஸ்தவத்தின் துன்பமும் சாபமும் ஆகும். 
பிரிவினைவாதம் தமிழ்க் கலாச்சாரமும் அல்ல. 
இயேசு பாதை மட்டுமல்ல அவர்தான் அந்த பாதை காட்டும் இலக்கு!


அன்பு ஆண்டவரே உம்மை பின்பற்ற உதவிசெய்யும், ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
தொம்மையப்பர் ஆலயம்,
மாதகல், யாழ்ப்பாணம்.
புதன், 18 ஜனவரி, 2017


தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...