வியாழன், 28 செப்டம்பர், 2017

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு: Twenty-sixth Sunday in Ordinary Time A



ஆண்டின் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு 
01.10.2017.  


முதல் வாசகம்: எசேக்கியேல் 18,25-28
திருப்பாடல்: திருப்பாடல் 25
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2,1-11
நற்செய்தி: மத்தேயு 21,28-32

மனமாற்றம்

மனவருத்தம் அல்லது மனஸ்தாபம் என்பது விவிலியத்தில் மனமாற்றம் என்ற கருப்பொருளிலே சிந்திக்கப்படுகிறது. மனமாற்றத்தை குறிக்க, நாஹம் என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இது பல வேளைகளிலே மனிதர்களுக்கிடையிலான உறவு சம்மந்தப்படாமல், ஒருவருடைய பாவம் சம்மந்தமான வாழ்வை குறிக்கிறது (נָהַם). மனிதர்களின் இந்த உணர்வு பல வேளைகளிலே கடவுளுடைய மனதை மாற்றுவதாக காட்டப்படுகிறது. முதல் ஏற்பாடு ஷுவ் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறது (שׁוּב), இதன் அர்த்தமாக திரும்புதல் அல்லது ஒரு பாதையிலிருந்து விலகுதல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இப்படியாக இது பாவத்திலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட நடத்தையிலிருந்து திரும்புதலைக் காட்டுகிறது (காண்க எசாயா 1,10-17: எசேக்கியேல் 14,6: 18,30: ஆமோஸ் 4,6-11). மனிதருடைய மனமாற்றத்திற்கு கைமாறாக கடவுள் மனிதரின் பாவங்களை மன்னிக்கிறார், அத்தோடு தன்னுடைய உறவையும் புதுப்பித்துக்கொள்கிறார்
புதிய ஏற்பாட்டில், மனமாற்றத்தைக் குறிக்க μετανοέω (மெடாநொஎயோ), μετάνοια (மெடாநொய்யா) என்ற இரண்டு வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன. இது ஒருவர் பலத்த சிந்தனை அல்லது மீள்சிந்தனையின் பின்னர், தன் பாதையை அல்லது வழிமுறையை மாற்றும் செயலைக் குறிக்கிறது. இந்த சிந்தனை மாற்றம், செயல் மாற்றத்திற்கு கொண்டு செல்கிறது. சிந்தைதான் உடலை கட்டுப்படுத்துகிறது என்ற கிரேக்க நம்பிக்கையையும் இந்த சொல் மறைமுகமாகக் காட்டுகிறது. இயேசு, பேதுரு மற்றும் பவுல் போன்றோரின் செய்திகளில் இந்த மனமாற்றம் மையமான இடத்தை பெறுகிறது
இறையரசு நெருங்கிவிட்டது எனவே மனம் மாறுங்கள் என்ற செய்தியோடே தன் நற்செய்தியை தொடங்குகிறார் இயேசு (காண்க மாற் 1,15: மத் 4,17). மாற்கு 6,12-13 இயேசுவின் நற்செய்தியை மனமாற்றத்தின் நற்செய்தி என்று வரைவிலக்கணம் செய்கிறது. அத்தோடு பேய்களை விரட்டுதலும் நோயாளர்களை குணப்படுத்தலும் இந்த பணியோடு சேர்த்து ஒப்பிடப்படுகிறது. இயேசு தன்னுடைய மனித வாழ்வின் இறுதி நாட்களில் இந்த மனமாற்றத்தையே மக்களிடம் போதிக்கச் சொல்லி, தன் சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார் (லூக் 24,47)
பேதுரு, பவுல் மற்றும் ஏனைய திருத்தூதர்களும் தங்கள் ஆண்டவரின் கட்டளைக்கு ஏற்ப மனமாற்றத்தின் நற்செய்தியையே போதித்தார்கள். பெந்தகோஸ்து விழாவில் பேதுருவின் மறையுரை மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தது (காண்க தி.பணி 2,38), இதனைத்தான் பேதுரு பின்னர் யூத தலைமைச் சங்கத்திடமும் முன்வைத்தார் (காண்க தி.பணி 3,19). பவுலும் தன்னுடைய மறைசெய்தியை மனமாற்றம், மற்றும் நேர்மையான வாழ்விற்கான அறைகூவல், என்றே சொல்கிறார் (காண்க தி.பணி 17,30: 26,20). மனமாற்றம் என்பது புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து அவரை மீட்பராக ஏற்றுக்கொள்ளுதல் என்ற பொருளைக் கொடுக்கிறது. மனமாற்றம்தான் ஒருவருடைய நம்பிக்கையின் வெளியடையாளமாக பார்கப்படுகிறது
ஆரம்ப கால திருச்சபை தந்யைர்களைவிட இரண்டாம் நூற்றாண்டின் திருச்சபை தந்தையர்கள் மனமாற்றத்தை தங்களுடைய செய்திகளின் மையப் பொருளாக கொண்டனர். இந்த மனமாற்றத்தின் அடையாளம்தான், பாவத்திலிருந்து திருமுழுக்கு எனவும் சொல்லப்பட்டது. தெர்த்துல்லியன் என்ற திருச்சபை தந்தை இப்படியான மனமாற்றத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார், இருப்பினும் அது விபச்சாரிகள், சிலைவழிபாட்டுக்காரர்கள், மற்றும் கொலைகாரர்களுக்கு பொருந்தாது என்றும் வலியுறுத்தினார்
திருச்சபையின் மத்திய காலத்தில், பாவத்திற்கு பொது மன்னிப்பு செய்ய முடியும் என்ற சிந்தனையை திருச்சபை முன்வைத்தது. அதேவேளை கத்தோலிக்கர் ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீத்தனம் என்ற திருவருட்சாதனத்தை, தம் மனமாற்றத்தின் அடையாளமாக செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. திருச்சபையின் பெரும் தந்தை அக்குவினா தோமா, மனமாற்ற திருவருட்சாதனத்தின் அங்கங்களாக, பாவ அறிக்கை, பிரதி உபகாரம் மற்றும் பாவங்கள் மன்னிக்கப்படல் என்பவற்றை முன்வைத்தார், இது பின்னர் திருச்சபையின் கொள்கைத் திரட்டாக மாறியது. பாவமன்னிப்பு திருவருட்சாதனத்தின் ஏற்பட்ட குழறுபடிகளும் துஸ்பிரயோகங்களும், மறுமலர்ச்சிக் கிறிஸ்தவர்களை, இந்த திருவருட்சாதனத்தை புறக்கணிக்க வைத்தது. கல்வினியர்கள் மற்றும் ஆர்மேனியர்கள் இந்த மனமாற்ற திருவருட்சாதனத்தில் தங்களுடைய மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்
இப்படியாக மனமாற்றம், நம்பிக்கை, மற்றும் இறைவனின் தெரிவு போன்றவை நற்செய்திகளின் முக்கியமான செய்திகளாக அமைந்திருக்கின்றன. கடவுளில் விசுவாசம் வைக்க ஒருவர் முயற்சிப்பதே, அவருடைய மனமாற்றத்தின் முதலாவது அடையாளமாக பார்க்கப்படுகிறது (காண்க உரோ 10,11-17: ஒசே 6,1-6: யோவோ 2,32). மனமாற்றம், தாழ்ச்சியோடு சம்பந்தப்படுகிறது, அத்தோடு நல்ல சுய அறிவுள்ளவரே மனமாற்றத்திற்கு முயற்சி செய்கிறார். மனமாற்றத்திற்கு மேலிருந்து அருள் தரப்படுகிறது இருப்பினும் ஒருவர் தன்னுடைய மனமாற்றத்தின் முக்கியமான செயற்பாட்டாளராகவும் இருக்கிறார்


எசேக்கியேல் 18,25-28
25ஆயினும், 'தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள்
இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! 26நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். 27பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். 28அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார். 29ஆயினும், 'தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை' என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள். இஸ்ரயேல் வீட்டாரே! என் வழிகளா நேர்மையற்றவை? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!

இஸ்ராயேலின் மிக முக்கியமான காலப்பகுதியை எசேக்கியேல் புத்தகம் பிரதிபலிக்கின்றது. இது இஸ்ராயேலின் முடியாட்சியின் இறுதிக்காலமும், பபிலோனிய அடிமை வாழ்வின் காலமுமாக இருக்கிறது. இந்த காலப்பகுதியில் மத்திய கிழக்கு பிராந்தியம் புதிய பேரரசின் எழுச்சியை சந்தித்தது. எகிப்திய பேரரசு வயதில் முதிர்ந்து கொண்டிருந்தது, அசிரிய பேரரசு மெதுவாக சரிந்து கொண்டிருந்தது. பபிலோனிய அரசு வெகு சீக்கிரமாக பேரரசாக மாறிக்கொண்டிருந்தது. ஏற்கனவே வட அரசான இஸ்ராயேல், அசிரியாவில் அழிக்கப்பட்டிருந்தது (கி.மு 721), தென்னரசான யூதா தன்னுடைய விசுவாசத்தை எகிப்திற்கும், பபிலோனியாவிற்கும் இடையில் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலிருந்தது. இந்த காலப்பகுதியில் யூதேயாவின் அரசன் யோயாக்கின் பபிலோனியாவிற்கு எதிராக கிழர்ச்சி செய்து அவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் நெபுக்கத்னசார் எருசலேமை முற்றுகையிட்டு இறுதியாக அதனை அழித்து, செல்வங்களை கொள்ளையிட்டு மக்களையும் சிறைப்படுத்தினான் (கி.மு 597). இப்படியாக அவன் கொண்டு சென்றவர்களில் எசேக்கியேலும் ஒருவர் என சொல்லப்படுகிறது
எசேக்கியேல் ஒரு குருவாகவும், இறைவாக்கினராகவும் இருந்திருக்கிறார் (காண்க எசே 1,3). இவருடைய மனைவி ஆரம்ப காலத்திலேயே இறந்துவிட்டார். மற்றைய இறைவாக்கினர்களைப் போலல்லாது, இவர் பபிலோனியாவில் இறைவாக்குரைக்கிறார். இவருடைய ஆரம்ப இறைவாக்குகள் பல, எருசலேமைப் பற்றியதாகவும், யூதேயாவைப் பற்றியதாகவுமே இருக்கின்றன. இதனால் எசேக்கியேல் யூதேயாவில் சில காலம் இருந்திருக்க வேண்டும் என்ற வாதமும் எழுகிறது. ஆனால் இந்த வாதத்திற்கு எசேக்கியேல் புத்தகத்தில் எந்தவித உள்ளாதாரமும் இல்லை. அகதியாக எசேக்கியேல் மற்றைய தன் சக அகதி சகோதரர்களைப்போல, தன் தாயகத்தைப் பற்றி ஏங்கியிருப்பார் (நம் சக ஈழ அகதிகளிடம், தாயக கனவு எப்படி என்றால், இது புலப்படும்). 
இறைவாக்கினராக தன் உணர்வுகளை மக்களுக்கு எடுத்துச்செல்ல முயல்கிறார். எசேக்கியேல் வார்த்தைகள் மட்டுமன்றி உடல் அசைவாலும், காட்சிகள் மற்றும் உருவகங்களாலும் தன் இறைவாக்கை முன்னெடுக்கிறார். இவருடைய அடையாளபூர்வமான இறைவாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தது (காண்க 4,1-8: 5,1-2: 12,3-7: 12,18: 24,16-24).  
எசேக்கியேல் சமூக தலைவர்களால் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட்டவர். இவருடைய பெயரின் அர்த்தமாக ஆண்டவர் என் பலமாக இருக்கிறார், அல்லது ஆண்டவர் பலப்படுத்துகிறார் என்ற பொருள் வருகிறது (יְחֶזְקֵאל யெஹெட்ஸ்கெ'ல்). எல்லா வேளைகளிலும் மக்கள் எசேக்கியேலுக்கு செவிகொடுத்தார்கள் என்று சொல்வதற்கில்லை. எசேக்கியேல் பபிலோனியாவில் ஆடம்பர வாழ்வை வாழவில்லை, மாறாக தன் மக்களில் பெரும்பாலானவர்களைப் போல, பபிலோனியாவின் பலகடவுள் வழிபாட்டிற்கும், கலாச்சார சவால்களுக்கும் இடையில் ஒரு நல்ல இஸ்ராயேலனாக வாழ முயன்றார்
எசேக்கியேலின் பதினெட்டாவது அதிகாரம், தனிமனிதர்கள் தங்கள் வாழ்விற்கு பொறுப்பானவர்கள் என்ற சிந்தனையை முன்வைக்கிறது. அனைத்து வாழ்வியல் நிலைகளுக்கும் பெற்றோரை குற்றம் சாட்டுவது சரியல்ல என்பதை அழகாக புரியவைக்கிறார். இது இஸ்ராயேலின் இறையியலில் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது

.24: நீதிமான்கள் தங்கள் தூய்மையான வாழ்வினின்று விலகி பாவம் செய்தால், அவர்களுடைய பாவத்தின் பொருட்டு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், அதாவது மரணமடைவார்கள் (יָמֽוּת  யாமுத் சாவான்). அவர்களின் முன்னால் நன்மைத்தனங்கள் நினைவுகூறப்படாது என்கிறார் எசேக்கியேல். இதன் மூலமாக நீதியான வாழ்வு நித்தியத்தறிகும் கேட்கப்படுகிறது என்ற ஒரு பலமான செய்தி முன்வைக்கப்படுகிறது

.25: இதனை கேட்ட இஸ்ராயேலர்கள் தங்கள் தலைவரின் வழி (ஆண்டவரின் வழியாக 
இருக்கலாம்) (דֶּרֶךְ אֲדֹנָי தெரெக் 'அதோனாய்) செம்மையானதாக இல்லை என்கிறார்கள். இவர்கள் யாரை சாடுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை. கடவுளைத்தான் சாடுகிறார் என்றும் எடுக்கலாம். இங்கே பேசுகிறவர் கடவுளாக இருக்கிறபடியால் (காண்க .1), இந்த குற்றச்சாட்டு கடவுளுக்கு எதிரானது என எடுக்கலாம். ஆண்டவர் இதனை மறுக்கிறார், அதற்கு பதிலாக இஸ்ராயேலரின் பாதைகள்தான் நேர்மையற்று இருக்கின்றன என பதிலுரைக்கிறார்
(הֲלֹ֥א  דַרְכֵיכֶ֖ם לֹ֥א יִתָּכֵֽנוּ ஹலோ' தர்கெகெம் லோ' யித்தாகெனூ- உங்கள் வழிகளல்லவா நேர்மையற்றது). 

.26: நேர்மையாளர் தம் நேரிய வழியினின்று விலகி தவறிழைத்தால், அவர்கள் அந்த தீமையின் பொருட்டு சாவார்கள் என கடுமையாக சாடுகிறார் கடவுள். நேர்மையான வாழ்வு, ஒரு விருப்ப தெரிவல்ல, மாறாக அது ஒரு கட்டாயமான தெரிவு. இந்த தெரிவை மேற்கொள்கிறவர் அதிலே தொடர்ந்து இருக்க கட்டாயப்படுத்துகிறார். இவர் ஏற்கனவே நேர்மையான வாழ்வை வாழ்ந்தவர் என்ற படியால், அதன் மகத்துவத்தை உணர்ந்தவராகிறார், இதனால் அதிலிருந்து விலத்தும்போது, அவர் செய்கின்ற தீமை இரண்டு மடங்காகின்றது. இதனால் அவருடைய பழைய நேர்மைத்தனங்கள் நினைக்கப்டாது மாறாக தற்கால தீமைகள்தான் நினைக்கப்படும் என்கிறார். (בְּעַוְל֥וֹ אֲשֶׁר־עָשָׂ֖ה יָמֽוּת பெ'அன்லோ 'அஷேர்-'அசாஹ் யாமுத்- அவர் செய்த அநீதியிலே மரிப்பார்). 

.27: பாவிகளுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் முன்னைய பாவ வாழ்க்கையிலிருந்து திரும்பி நேர்மையான வாழ்விற்கு வந்தால் அவர்களின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, புதிய வாழ்வும் ஆசிரும் வழங்கப்படுகின்றன. நேர்மையான வாழ்விற்கு திரும்புதல், ஒருவரின் சுயத்தை (வாழ்வை அல்லது ஆனமாவை) காக்க உதவுகிறது என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. இதன் மூலம் கடவுள் தண்டிப்பதை அல்ல மாறாக மன்னிப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்பது புலப்படுகிறது

.28: தந்தையர்களின் பாவங்களை கடவுள் நினைவுகூறுகிறார். தலைமுறைதோறும் இஸ்ராயேலர் முன்னைய பாவ வாழ்விற்காக தண்டிக்கப்படுகிறார் என்ற ஒரு சந்தேகம் இருந்தது. இதனை எசேக்கியேல் முழுவதுமாக மாற்றி விட்டார். அதாவது, அவரவர் வாழ்விற்கு அவரவர்தான் பொறுப்பு. முன்னைய பாவ வாழ்க்கை தற்போதைய நீதியான வாழ்வை பாதிக்காது, அல்லது திருந்திய ஒருவரின் முன்னைய பாவ வாழ்க்கையை கடவுள் நினைப்பவர் அல்ல. இவர்கள் தங்களது தற்போதைய நல்வாழ்வின் பொருட்டு தங்கள் உயிரை காத்துக் கொள்கிறார்கள் என்றும் நம்பிக்கை கொடுக்கப்படுகிறது
இவர்கள் வாழ்வது உறுதி, அத்தோடு இவர்கள் சாகமாட்டார்கள் என்று எபிரேய விவிலியம் ஆழமாக வலியுறுத்துகிறது

.29: ஏற்கனவே இருபத்தைந்தாவது வரியில் சொல்லப்பட்டது மீண்டுமாக நினைவுகூறப்படுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட விளக்கங்களைக் கொண்டு முடிவுரைபோல இந்த வரி அமைந்துள்ளது. இப்படியாக கடவுளுடைய வழிகளல்ல, மாறாக இஸ்ராயேலருடைய வழிகள்தான் நேர்மையற்றவை என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது


திருப்பாடல் 25
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்
2என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்
3உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்
4ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்
5உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்
6ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே
7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்
8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்
9எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். 10ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு , அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்
11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது
12ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்
13அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர். 14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்
15என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்
16என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன். 17என் வேதனைகள் பெருகிவிட்டன் என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்
18என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். 19என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்
20என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்
21வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்
22கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.

திருப்பாடல்கள் புத்தகத்தை ஐந்து பிரிவுகளாக பிரிக்கும் பிரிவினுள், இந்த 25வது பாடல், முதலாவது பிரிவினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த திருப்பாடலை ஒரு தனி மனித புலம்பல் பாடல் என வகைப்படுத்தியுள்ளனர். அத்தோடு இதனை முழுமையில்லாத அகரவரிசைப் பாடல் எனவும் வாதிடுகின்றனர். எபிரேய அகரவரிசையில் சில எழுத்துக்கள் இந்த பாடலிலே தவறவிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலின் முன்னுரை இதனை தாவீதிற்குரிய பாடல் எனக் காட்டுகிறது (לְדָוִד லெதாவித்- தாவீதிற்குரியது)

.1: அலெப்- எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்து): முதலாவது எழுத்தில் தொடங்கும் இந்த வரியில், ஆசிரியர் தான் ஆண்டவரை நோக்கி தன் ஆன்மாவை அல்லது உள்ளத்தை உயர்த்துவதாகச் சொல்கிறார் (נַפְשִׁ֥י אֶשָּׂא நப்ஷி 'எஸ்ஸா'). இது ஒரு தனிநபர் புலம்பல் பாடலாக இருக்கின்ற படியால், இங்கே ஆண்டவரை நோக்கி உள்ளத்தை உயர்த்துவது, அவரது கடினமாக நிலையைக் காட்டுகிறது என எடுக்கலாம்

.2: இந்த வரியும் முதலாவது எழுத்துடனேயே தொடங்குகின்றது. தான் ஆண்டவரில் நம்பிக்கை வைத்திருப்பதால், தன்னை அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார் (אַל־אֵבוֹשָׁה 'அல்-'எவோஷாஹ்- நான் அவமானம் அடையாதிருப்பேனாக). அதுவும் தான் தன்னுடைய எதிரிகளிடம் அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார். என் எதிரிகள் என்னில் மகிழ்சி அடையாதிருப்பார்களாக என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது (אַל־יַעַלְצוּ אֹיְבַי לִי׃). 
தான் அவமானம் அடைந்தால் அதுவும் கடவுளுடைய அனுமதியோடே நடைபெறுகிறது. அதாவது அனைத்தும் ஆண்டவரின் கைகளிலேயே உள்ளது, எனவே அவர் நினைத்தால் அதனை தடுக்கலாம் என்பதால் ஆண்டவரிடம் மன்றாடுகிறார் ஆசிரியர்

.3: கிமெல்- எபிரேயத்தின் மூன்றாவது எழுத்து). இந்த வரி மூன்றாவது எழுத்தில் ஆரம்பிக்கிறது. ஆண்டவரை நம்புவோர் வெட்கம் அடைவதில்லை என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கை அதனை தானும் கொண்டிருக்கிறார்.
அதேவேளை துரோகம் இழைக்கிறவர்கள் நிச்சயமாக அவமானம் அடைவார்கள் அதில் மாற்றம் இல்லை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இவர்களை குறிக்க הַבּוֹגְדִ֥ים רֵיקָֽם ஹபோக்திம் ரெகாம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தமாக தேவையில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் அல்லது பிரையோசனமில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் என்ற அர்த்தங்கள் வருகின்றன

.4: தலெத்- நான்காவது எழுத்து). எபிரேயத்தின் நான்காவது எழுத்தில் இந்த வரி தொடங்குகின்றது. திருப்பிக் கூறுதல் முறையில், உமது பாதைகளை (דְּרָכֶיךָ தெராகெகா) மற்றும் உமது வழிகளை (אֹרְחוֹתֶיךָ 'ஓர்ஹோதெகா) என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரின் பாதைகளையும் அவர் வழிகளையும் விட்டு தங்களை அகலவிட வேண்டாம் என்ற வேண்டுதலை முன்வைக்கிறார்

.5: (ה ஹெ- ஐந்தாவது எழுத்து). ஆசிரியர் கடவுளை தன்னுடைய மீட்பராம் கடவுளாக ஏற்றுக்கொள்வதால் (אֱלֹהֵי יִשְׁעִי 'எலோஹே யிஷ்'), உண்மை நெறியில் தன்னை நடத்தி கற்பிக்க கேட்கிறார். ஆண்டவரை மீட்பின் கடவுளாக காண்பது இஸ்ராயேலர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த கடவுளையே இவர் நாள் முழுவதும் நம்பியிருப்பதாகவும் சொல்கிறார். இதிலிருந்து சிலர், சில வேளைகளில் கடவுளையும் வேறு வேளைகளில் பொய்த் தெய்வங்களையும் நம்பியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைப்பது போல தெரிகிறது

.6: ட்ஸயின்- எழாவது எழுத்து). ஆறாவது எழுத்து தவறவிடப்பட்டுள்ளது. இந்த வரி ஏழாவது வரியில் தொடங்குகின்றது. ஆறாவது வரி தவறியதற்கான காரணம் அறியப்படவில்லை. ஆண்டவருக்கு, அவர் தன்னுடைய இரக்கத்தையும் (רַחֲמֶיךָ ரஹாமெகா), பேரன்பையும் (וַחֲסָדֶ֑יךָ வஹாசாதேகா) நினைக்கவேண்டும் என சொல்லப்படுகிறது
மனிதர்கள் கடவுளுக்கு எப்படி நினைவூட்டலாம் என்ற கேள்வியை இந்த வரி தரலாம். ஆனால் திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய ஆழமான உறவின் பொருட்டும், தான் கடவுளிடம் கொண்டுள்ள நெருக்கத்தின் பொருட்டும் இப்படிச் சொல்கிறார் என எடுக்கலாம். இதுவும் ஒரு வகையான மன்றாட்டே. அதேவேளை இந்த இரக்கமும் பேரன்பும் தொடக்கமுதல் உள்ளவை என்பதையும் ஆசிரியர் தெளிவு படுத்துகிறார்

.7: (ח ஹேத்- எட்டாவது எழுத்து). இளமைப் பருவத்தின் பாவங்களும் குற்றங்களும் இங்கே எழுவாய் பொருளாக எடுக்கப்படுகின்றன. இளமைப் பருவத்தில் பாவங்களும் குற்றங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிமாக உள்ளன என்பதை இவர் காட்டுகிறார் போல. ஆண்டவர் நல்லவராக இருக்கிறபடியால், அவரது பேரன்பிற்கேற்ப தன்னை மன்னிக்கும் படி கேட்கிறார்

.8: (ט தெத்- ஒன்பதாவது எழுத்து). ஆண்டவர் நல்லவர், மற்றும் நேர்மையுள்ளவர் என்று விழிக்கப்படுகிறார் (טוֹב־וְיָשָׁר יְהוָה தோவ்-வெயாஷார் அதோனாய்). இதன் காரணமாகத்தான் அவர் பாவிகளுக்கு நல்வழியைக் காட்டுகிறார் என்று நம்புகிறார் ஆசிரியர். ஆசிரியர் தன்னையும் பாவியாக ஒப்புவித்து மன்னிப்பு கேட்பது போல வரிகள் அமைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம்

.9: (י யோத்- பத்தாவது எழுத்து). பாவிகளைப் பற்றி பேசிய ஆசிரியர் இந்த வரியில் எளியோர்களைப் பற்றி பேசுகிறார். ஆண்டவர் எளியோருக்கு நேரிய வழியைக் காட்டி, அதில் வாழச் செய்கிறார் என்கிறார். இங்கே எளியோர்களை குறிக்க עֲנָוִים ('அனாயிம்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது வழக்கமாக தாழ்த்தப்பட்டவர்களை அல்லது வறியவர்களை குறிக்கின்ற சொல், ஆனால் இங்கே இது மனத்தாழ்மை உடையவர்களை குறிப்பதாக ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.  

.10: (כּ கப்- பதினோராவது எழுத்து). இந்த வரி இஸ்ராயேல் ஞானிகளுடைய இன்னொரு நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆண்டவருடைய உடன்படிக்கையும் (בְּרִית பெரித்), அவருடைய ஒழுங்குமுறையும் (עֵדוּת 'எதூத்) மிக முக்கியமானவை. அதை அனைவரும் கடைப்படிக்க கட்டளையிடப்பட்டார்கள்
இவற்றை கடைப்பிடிப்போருக்கு ஆண்டவருடைய பாதைகள் எல்லாம் பேரன்பு உள்ளதாகவும், உண்மையுள்ளதாகவும் விளங்குமாம்

.11: (ל லமெத்- பன்னிரண்டாவது எழுத்து). இந்த எழுத்தில் ஆசிரியர் தன்னை நேரடியாகவே, பாவி என்று அழைக்கிறார் (לַעֲוֹנִי லா'அயோனி- என் குற்றத்தை). தன்னுடைய குற்றத்தை மன்னிக்க கேட்கும் அவர், அதனை ஆண்டவர் தனது பெயரின் பொருட்டு செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார் (לְמַֽעַן־שִׁמְךָ֥ லெமா'அன்-ஷிம்கா). ஆண்டவருடைய பெயர் புனிதமானது, ஆக இந்த புனிதத்துவத்தை கொண்டுள்ள ஆண்டவர் தன் மக்களின் பாவத்தை மன்னிக்க வேண்டியவராக இருக்கிறார் என்பதே ஆசிரியரின் வாதம். அதேவேளையில் தன்னுடைய குற்றங்களும் அதிகமாக உள்ளன என்றும் அறிக்கையிடுகிறார் (רַב־הֽוּא ராவ்-ஹு'). 

.12: מ மெம்- பதின்மூன்றாவது எழுத்து). ஆண்டவர் யாருக்கு தன் வழியை கற்பிக்கிறார் என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆண்டவருக்கு அஞ்சிநடப்பவர்கள் என்பவர்கள், ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்கிறது, இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன் வழியை கற்பிக்கிறார். ஆக ஞானிகளுக்கல்ல மாறாக ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்பவர்கள்தான் ஆண்டவரின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
(מִי־זֶה הָאִישׁ יְרֵא יְהוָה மி-ட்செஹ் ஹா'இஷ் யெரெ' அதோனாய்- யார் இந்த மனிதன், அவன் கடவுளுக்கு அஞ்சுபவன்).

.13: ן நுன்- பதினாங்காம் எழுத்து). கடவுளுக்கு அஞ்சுபவருக்கு இந்த உலகத்தில் நடப்பது என்னவென்று சொல்லப்படுகிறது. முதலில் இவர்கள் நலமுடன் வாழ்வார்கள். இதனை எபிரேய விவிலியம் 'அவருடைய ஆன்மா நன்மையில் வாழும்' என்கிறது (נַפְשׁוֹ בְּט֣וֹב תָּלִ֑ין நப்ஷோ பெதோவ் தாலிவ்). அதேவேளை ஆண்டவருடைய ஆசீர் அவரின் வழிமரபையும் ஆசீர்வதிக்கிறது அதாவது அவர் வழிமரபினர் நாட்டை உரிமையாக்குவர் என்பதும் சொல்லப்படுகிறது

.14: (ס சாமெக்- பதினைந்தாவது எழுத்து). ஆண்டவரின் நட்புறவு யாருக்குரியது என்பதை இந்த வரி காட்டுகிறது. வழமையாக ஆண்டவருடைய நட்புறவைப் பற்றி விவிலியம் அதிகமாக பேசுவதில்லை, அது ஆண்டவருடைய இறைதன்மையை குறைத்துவிடும் என்பதால் அப்படி இருக்கலாம். ஆனால் திருவிவிலியத்தின், ஞான ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் இந்த சட்டங்களை தாண்டியவர்கள் என்பதால் இந்த கருத்தை அவர் பயமின்றி முன்னெடுக்கிறார்
(ס֣וֹד יְ֭הוָה சோத் அதோனாய்- ஆண்டவரின் நட்பு). 
இப்படியாக ஆண்டவரின் நட்புறவை பெற்றவர்கள் அதாவது அவர் நண்பர்கள் என்போர் ஆண்டவருக்கு அஞ்சிநடக்கிறவர்கள், இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன்னுடைய உடன்படிக்கையை வெளிப்படுத்துகிறார்

.15: (ע அயின்- பதினாறாவது எழுத்து). மீண்டுமாக தன்னுடைய நம்பிக்கையின் உணர்வுகளை தன் அங்க உறுப்புக்களை பாவித்து விளக்குகிறார். தன்னுடைய கண்கள் எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கின்றன என்கிறார். கண்கள் என்பது இங்கே பார்வை, விருப்பம், நோக்கம் மற்றும் சிந்தை போன்றவற்றை குறிக்கின்றன (עֵינַי תָּמִיד אֶל־יְהוָה 'எனாய் தாமித் 'எல்-அதோனாய்: என் கண்கள் எப்போதும் ஆண்டவரிலே). 
கண்களைப்போலவே தன் கால்களையும், ஆண்டவர் வலையிலிருந்து மீட்பார் என்கிறார் (רֶגֶל ரெகெல்- கால்). கால்கள் இங்கே ஒருவருடைய சுயத்தைக் காட்டுகின்றன. அவர் தன்னை கண்ணியில் சிக்கிய கால்களுடன் ஒப்பிடுகிறார்.   

.16: (פּ ף பே- பதினேழாவது எழுத்து). ஆசிரியர் தன்னுடைய வேதனையை மேலும் வலுப்படுத்துகிறார். கடவுளை தன்னைநோக்கி திரும்பி, அவர் மீது இரங்குமாறு கேட்கிறார். ஆண்டவரை திரும்பச் சொல்வது மனிதர்களை திரும்பச் சொல்வது போல இருக்கலாம். ஆனால் இங்கே ஆண்டவரை திரும்பச் சொல்வதன் வாயிலாக ஆசிரியர் ஆண்டவரின் கவனத்தை பெறவேண்டும் என்றே நினைக்கிறார். அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். அதாவது அவர் தனிமையாக இருப்பதாகவும், அவர் துணையற்று இருப்பதாகவும் சொல்கிறார் (כִּֽי־יָחִ֖יד וְעָנִ֣י אָֽנִי கி-யாஹித் வெ'ஆனி 'ஆனி).  

.17: (צ ץ ட்சாதே- பதினெட்டாவது எழுத்து). தன்னுடைய வேதனைகள் பெருகிவிட்டதாகவும், தன்துயரங்களிலிருந்து தன்னை மீட்டருளும் என்றும் இரஞ்சுகிறார். இந்த திருப்பாடல் ஒரு தனி மனிதனுடைய வரலாற்று அனுபவமாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளது என்பதை இந்த வரி நிரூபிக்கிறது
இந்த வரி எபிரேய விவிலியத்தில் வித்தியாசமாக உள்ளது
צָר֣וֹת לְבָבִ֣י הִרְחִ֑יבוּ ட்சாரோத் லெவாவி ஹிர்ஹிவூ- என் இதயத்தின் துன்பங்கள் பெருக்கப்பட்டுள்ளன - பெருக்குகிறார்கள்

குறிப்பு:
(எபிரேய வினைச் சொல்லின் அர்த்தத்தில் இந்த இறுதி சொல்லின் தன்மைக்கு பல விளக்ங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இதனை ஹிபில் மூன்றாம் ஆள் வினைமுற்று என காண்கின்றனர். அப்படியாயின் இதன் அர்த்தமாக 'அவர்கள் என் இதயத்தின் வேதனையை பெருக்குகிறார்கள்' என்று வரும் - הִרְחִיבוּ ஹிர்ஹிவூ: இன்னும் சிலர் இந்த சொல்லை எபிரேய வினைச் சொல்லின் இன்னொரு வகையான ஹிபில் வியங்கோள் சொல்லாக பார்க்கின்றனர்
இப்படியாயின் இதன் அர்த்தமாக 'என் இதயத்தின் வேதனைகளில், என் உறைவிடத்தை பெரிதாக்கும்' என்று வரும்הַרְחֵיב ஹர்ஹெவ். எபிரேய விவிலியம் ஆரம்ப காலத்தில் மெய்யெழுத்துக்களை மட்டுமே கொண்டு பரம்பரையாக வாசிக்கப்பட்டன. பிற்காலத்தில் மசரோட்டியர் என்ற மொழிவல்லுனர்கள்தான் இந்த விவிலியத்திற்கு உயிர் எழுத்து அடையாளங்களை வழங்கினர். இதனால் எபிரேய விவிலியம் பல இடத்தில் பல வித்தியாசமான விளக்கங்களை கொடுப்பது போன்று தோன்றுகிறது). 
מִמְּצֽוּקוֹתַי הוֹצִיאֵנִי׃ மிம்மேட்சுகோதாய் ஹோட்சி'எனி- என்னுடைய துன்பத்திலிருந்து என்னை எடுத்தருளும்

.18: (ר ரெஷ்- இருபதாவது எழுத்து). பதினொன்பதாவது எழுத்தும் இங்கே விடப்பட்டிருக்கிறது
இது காலப்போக்கில் தவறவிடப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த வரியும் ஒரு செபமாக அல்லது வேண்டுதல் வாக்கியமாகவே வருகிறது. ஆசிரியர் தன்னுடைய சிறுமையையும் (עָנִי 'அனி), தன்னுடைய துன்பங்களையும் (עָמַל 'ஆமல்) பார்க்கச் சொல்லிக் கேட்கிறார். அதேவேளை தன்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னிக்குமாறும் கேட்கிறார். இந்த இடத்திலும் ஆசிரியர் தன்னை பாவியென்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறார்

.19: மீண்டும் ஒருமுறை எபிரேய அரிச்சுவடியின் இருபதாவது எழுத்து ר ரெஷ்- பாவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் புரியவில்லை. தன்னுடைய எதிரிகள் பெருகிவிட்டார்கள் என ஆண்டவரிடம் முறையிடுகிறார் (אוֹיְבַי כִּי־רָבּוּ 'ஓயெவாய் கி-ராவூ). இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று தெரியாமையினால், இவர் எதிரிகள் யார் என்றும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. அவர்கள் கொடுமையோடு தனக்கு கொடுமை செய்கிறார்கள் என்கிறார்

.20: (שׁ ஷின்- இருபத்திதோராவது எழுத்து). இந்த வரி இறுதியான மன்றாட்டாக இருக்கிறது. மூன்றுவிதமான மன்றாட்டுக்களை அவர் முன்வைக்கிறார்
. என்னுயிரைக் காப்பாற்றும் - שָׁמְרָה נַפְשִׁי ஷாம்ராஹ் நப்ஷி  
. என்னை விடுவித்தருளும் - הַצִּילֵנִי ஹட்சிலெனி
. என்னை வெட்கமுறவிடாதேயும் - אַל-אֵ֝בוֹשׁ 'அல்-'எவோஷ்
இதற்கு காரணமாக தான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளவன் என்பதைக் காட்டுகிறார்

.21: (ת தௌ- இருபத்திரண்டாவது எழுத்து, இது இறுதியான எழுத்து). கடவுளுடைய விழுமியங்களை ஆசிரியர் நன்கு புரிந்துவைத்திருக்கிறார் எனலாம். தன்னுடைய பாதுகாப்பு அரணாக வாய்மையையும் (תֹּם தோம்), நேர்மையையும் (יָשַׁר யாஷர்) காட்டுகிறார். தான் கடவுளையே நம்பியிருப்பதாக இந்த வரியிலும் காட்டுகிறார். இந்த வரி ஆசிரியரின் ஆழமான ஆன்மீகத்தைக் காட்டுகிறது

.22: (פ பே- பதினேழாவது எழுத்து). ஏன் பதினேழாவது எழுத்தோடு இந்த பாடல் முடிவடைகிறது என்று புரியவில்லை. அத்தோடு ஏற்கனவே பதினேழாவது எழுத்து பாவிக்கப்பட்டுவிட்டது, மேலும் சில எழுத்துக்கள் பாவிக்கப்படவும் இல்லை. இப்படியிருக்க ஏன் இரண்டாவது தடவையாக פ பே என்ற எழுத்து பாவிக்கப்படுகிறது என்ற கேள்வி எழும்புகிறது.
இவ்வளவு நேரமும் தனிமனித புலம்பல் போல பாட்டிசைத்தவர் இந்த இறுதியான வரியில் முழு இஸ்ராயேலரையும் எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இப்படி பாடல் முடிவது வழக்கமாக 
இருந்தாலும், இங்கே இந்த வரி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில வேளைகளில் குழு புலம்பல் பாடல்கள் தனிமனித பாடல்களாகவும், தனிமனித புலம்பல்கள் குழுப்பாடல்களாக வருவதும் திருப்பாடல்களின் காணப்படுகின்றன. திருச்சபையின் செபங்கள் மற்றும் சடங்குகளிலும் இப்படி நடப்பதுண்டு. முழு இஸ்ராயேலையும் உள்வாங்கி அனைவருக்கும் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் தேவை என்று சொல்லி, அவர்களை துன்பங்களிலிருந்து மீட்கச்சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்


பிலிப்பியர் 2,1-11
தாழ்மையும் ஒற்றுமையும்

1எனவே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? 2அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். 3கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். 4நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
5கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! 6கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; 11தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பிலிப்பியர் திருமுகம் அறிமுகம் கடந்த வார தொடர்ச்சி-

இந்த திருமுகம் எழுதப்பட்டதற்கான நோக்கம்
பிலிப்பியர் தனக்கு அனுப்பிய பரிசில்களுக்கு நன்றி சொல்வதற்காக பவுல் இக்கடிதத்தை எழுதியிருக்கலாம் என்ற நம்பிக்கையிருக்கிறது. தான் சிறையில் இருந்தாலும் நலமாக 
இருப்பதாகவும், சிறைவாழ்வு தன் நற்செய்தி பணியில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என அறிவிக்கவும், மேலும் திமோத்தேயு தன்னுடைய செய்தியுடன் பிலிப்பிக்கு வருகிறார் என்பதை அறிவிக்கவும் இந்த திருமுகம் எழுதப்பட்டிருக்கலாம் (காண்க 2,19-24). எபாபுரோடிசுவை பவுல் ஏன் மீண்டும் பிலிப்பிக்கு அனுப்புகிறார் என்ற தேவையை விளக்க வேண்டியவராகவும் இருந்தார் (காண்க 2,25-30). பிலிப்பியில் பிரிவினை வாதம் இருக்கிறது என்ற செய்தி பவுலுக்கு தெரியவே, அவர் பிலிப்பியில் ஒற்றுமை காக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த திருமுகத்தை எழுதினார் என்ற ஒரு வாதமும் இருக்கிறது (காண்க 4,2-3). சில யூதர்கள் முன்வைத்த சட்டவாதம் பிலிப்பிய திருச்சபையில் தாக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகவும், பிலிப்பியர்கள் தாங்கள் சந்திக்கின்ற துன்பங்களை நல்ல விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த திருமுகம் எழுதப்பட்டிருக்கலாம் என்றவாறு பல வாதங்கள் உள்ளன
ஏற்கனவே முதலாவது அதிகாரத்தில் கிறிஸ்தவ வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்று போதிக்க தொடங்கிய பவுல் இந்த இரண்டாவது அதிகாரத்தில், கிறிஸ்தவர்கள் தாழ்மையுடையவர்களாகவும், ஒற்றுமையானவர்களாகவும் இருக்க வேண்டு;ம் என போதிக்கிறார்

.1: இந்த முதலாவது வரியில் பவுல் இரண்டு முக்கியமான கேள்விகளை முன்வைக்கிறார்
. கிறிஸ்துவிடமிருந்து இவர்கள் ஊக்கம் பெற்றார்களா? (παρακλήσις பாராக்லேசிஸ்- ஊக்கம்). இந்த கேள்வியின் மூலம் அவர்கள் கிறிஸ்துவிடமிருந்து ஊக்கம் பெற்றிருக்கவேண்டும் என்பது புலப்படுகிறது

. அன்பினால் ஆறுதலும், தூய ஆவியால் தோழமையும், பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளார்களா? என்ற இரண்டாவது கேள்வியும் கேட்கப்படுகிறது. இந்த கேள்வி மிக முக்கியமான இறையியல் வார்த்தைகளால் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது
அன்பினால் ஆறுதல் (παραμύθιον ἀγάπης பாராமுதியொன் அகாபேஸ்) என்பது கிறிஸ்தவ அன்பின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. தூய ஆவியார்தான் தோழமையையும் (κοινωνία கொய்னோனியா), பரிவுள்ளத்தையும் (σπλάγχνον ஸ்பிலாக்னொன்), இரக்கத்தையும் (οἰκτιρμός ஒய்க்டிர்மொஸ்) தருகிறார் என்பதும் காட்டப்படுகிறது

.2: இந்த கேள்விகளுக்கு சரியான விடையை இவர்கள் தருவார்களாயின், அவர்கள் ஒரே எண்ணமும் (φρονῆτε), ஒரே அன்பும் (ἀγάπην), ஒரே உள்ளமும் (σύμψυχοι) கொண்டவர்களாக திகழ்ந்து பின்னர், பவுலின் அதே மகிழ்ச்சியை நிறைவாக்க கேட்கப்படுகிறார்கள்.
இந்த வரி, அக அன்பின் அடையாளங்களைக் காட்டுகிறது. பிலிப்பியர் எண்ணத்தில் ஒன்றாக இருக்கவேண்டியது காலத்தின் தேவை, அத்தோடு அதுதான் இவர்கள் சந்திக்கின்ற சிக்கல்களுக்கு மருந்து என்பதில் பவுல் உறுதியாக இருக்கிறார். ஒரே உள்ளமும் ஓரே எண்ணமும் என்பது ஒரே விதமான சிந்தனைகள் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல்களைக் குறிக்கின்றது

.3: இரண்டாம் வரியில் தியானித்ததை இந்த வரியில் தெளிவாக கூறுகிறார் பவுல். கட்சி மனப்பான்மையும், வீண்பெருமையும் விலக்கப்படவேண்டும் என்கிறார். கட்சிமனப்பான்மையை சுயநலமான சிந்தனை என கிரேக்க விவிலியம் வார்த்தைப்படுத்துகிறது (ἐριθεία எரித்தெய்யா). எரித்தெய்யா என்ற சுயநலமான சிந்தனை, ஒற்றுமையாக வேலைசெய்வதை குலைக்கும் என்பதால் தமிழ் விவிலியம் இதனை கட்சி மனப்பான்மை என எடுக்கிறது எனலாம்
வீண்பெருமையை கிரேக்க விவிலியம் அகங்காரம் எனக் காட்டுகிறது (κενοδοξία கெனொதொக்சியா). வீண்பெருமை என்பது சரியான மொழிபெயர்ப்பு. கிரேக்க சொல்லின் உள்ளார்ந்த அர்த்தமாக 'இல்லாத மாட்சி' இருப்பதைக் காணலம்
இப்படியாக இந்த இரண்டு தீமைகளையும் விடுத்து, ஒருவர் மற்றவரை உயர்ந்தவராகக் கருதவேண்டும் எனக் கேட்கப்படுகிறார். அதற்கு அவருக்கு தாழ்ச்சி தேவையாக இருக்கிறது என்பதையும் பவுல் காட்டுகிறார்

.4:  அனைத்து பிலிப்பியரும் மற்றவரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொள்ளவேண்டும் எனப்படுகின்றனர். இந்த வரி பல முக்கியமான பாடங்களில் வித்தியாசமாக வாசிக்கப்படுகிறது, உதாரணமாக இந்த வரி இப்படியும் சில பாடங்களில் வாசிக்கப்படுகிறது: 'நீங்கள் உங்களைச் சார்ந்தவற்றில் மட்டும் சிந்தனையை செலுத்தாமல், மற்றவருடையதிலும் கருத்தாயிருங்கள்'. எது எவ்வாறெனினும், பிலிப்பியர் மற்றவருக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க பழக வேண்டும், என்பது தெளிவாக தெரிகிறது. சிந்தனையை செலுத்துதல் என்பதற்க்கு σκοπέω (ஸ்கொபெயோ) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது

.5: கிறிஸ்து இயேசுவின் மனநிலை இந்த வரியின் எழுவாய்ப் பொருள். φρονεῖτε ἐν ὑμῖν ὃ καὶ ἐν Χριστῷ Ἰησοῦ புரொநெய்டெ என் ஹுமின் ஹொ காய் என் கிறிஸ்டோ இயேசூ- கிறிஸ்து இயேசுவின் மனநிலையை சிந்தியுங்கள். இந்த வரியினூடாக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருக்க தயங்குகிறார்கள் என்பதை பவுல் சாடுவது புரிகிறது
பின்வருகின்ற ஐந்து வரிகள் ஒரு பாடல் போல தோன்றுகின்றன. அதிகமான ஆய்வாளர்கள் இந்த வரிகளை கவிதை அல்லது பாடல் என்றே கருதுகின்றனர். இதனை பாடல் அல்லது கவிதை என கருத இரண்டு முக்கியமான பண்புகள் அவதானிக்கப்படுகிறன. இவை பொது கிரேக்க வார்த்தைகளிலே அழகாக செய்யப்பட்டுள்ளன. அத்தோடு எபிரேய கவிநடைக்கே உரிய திருப்பிக்கூறல் முறை இங்கே பாவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து ஆய்வாளர்களும் இந்த சிந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை

.6: ஆரம்ப கால திருச்சபையின் விசுவாசம் இந்த வரியில் அழகாக தெரிகிறது. கிறிஸ்து இயேசு கடவுள் வடிவில் விளங்கியவர், கடவுளுக்கு இணையாக இருப்பவர், தானாக அதனை இழந்து மானிடராக வருகிறவர். இங்கே எந்தவிதமான வெளிச் சக்திகளும் பிரயோகிக்கப்படவில்லை. இயேசுவின் சுயவிருப்பத்தினோடே அனைத்தும் நடைபெறுகிறது. மிகவும் வலுவான வார்த்தைகள் இங்கே பாவிக்கப்பட்டுள்ள
. μορφῇ θεοῦ ὑπάρχων மொர்பே தியூ ஹுபார்கோன்- கடவுள் வடிவில் இருந்தார், வடிவம் என்பது கடவுளாகவே இருந்தார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது
. οὐχ ἁρπαγμὸν ἡγήσατο τὸ εἶναι ἴσα θεῷ- ஊக் ஹர்பாக்மொன் ஹேகேசாடொ டொ எய்னாய் ஈசா தியூ- கடவுளுக்கு நிகரான நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்கவில்லை

.7: இயேசு தம்மையே வெறுமையாக்கினார், அடிமை உருவில் வந்தார், மனித உருவில் தோன்றினார். இந்த வரி ஆரம்ப கால திருச்சபையில் விசுவாசத்தை பிரதிபலிக்கின்றது
தம்மையே வெறுமையாக்கினார் (ἑαυτὸν ἐκένωσεν ஹெஅவுடொன் எகெனோசென்) என்பது ஆண்டவருடைய தாழ்ச்சியை குறிக்கும் கருப்பொருள். இதன் மூலம் பிலிப்பியருக்கு தாழ்ச்சி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அக்காலத்தில் சாதாரண அரச தலைவர்கள் கூட தங்கள் அரியணையில் இருந்து இறங்குவதை விரும்ப மாட்டார்கள். அப்படியிருக்க இந்த உயர் கடவுள் இதனைச் செய்கிறார், ஆக அவர் மக்களாகிய பிலிப்பியருக்கும் அந்த தாழ்ச்சி உற்சாகப்படுத்தப்படுகிறது
அடிமையின் வடிவை ஏற்றார் ஆண்டவர் (μορφὴν δούλου λαβών மொர்பேன் தூலூ லாபோன்), ஏற்கனவே சீடர்களின் பாதங்களை கழுவி ஆண்டவர் அடிமையின் வேலையை செய்து காட்டியுள்ளார் (யோவான் 13,1-15). அடிமைகள் உரோமைய உலகத்திலே விலங்குகளைப் போலவே கருதப்பட்டார்கள். உரிமைகளும், மாண்பும், சட்டங்களும் இவர்களுக்கு மறுக்கப்பட்டன. ஆண்டவர் அடிமையாக மாறுவது இவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். இது தாழ்ச்சியின் உச்சக்கட்டம்
அதேவேளை ஆண்டவர் சாதாரண மனிதராக தோன்றினார் (ἀνθρώπων γενόμενος அந்த்ரோபோன் கெநொமெநொஸ்). தெய்வங்கள் மனிதர்களாக உருமாறி சில காலங்கள் வாழ்ந்ததை கிரேக்க இலக்கியங்கள் ஏற்கனவே தங்களுடைய புராணங்களில் சொல்லியுள்ளன. அதேவேளை மனிதர்களும் தெய்வங்களாக மாறியதையும் அவை சொல்லியுள்ளன. ஆனால் இங்கே இந்த கடவுள் மனிதரின் உருவதை;தை எடுக்கிறார், இறுதி வரைக்கும் மனிதராக வாழ முயற்சிக்கிறார். இது இவர்களுக்கு புதியதாக இருந்திருக்கலாம்

.8: ஆண்டவருடைய தாழ்ச்சியின் உச்சக்கட்டம் சொல்லப்படுகிறது. இயேசு சாவை ஏற்கிறார், அதுவும் சிலுவைச் சாவை ஏற்கிறார் (θανάτου δὲ σταυροῦ தானாடூ தெ ஸ்டாவுரூ- சிலுவைச் சாவு). சாகின்ற தெய்வங்கள் பெரிய தெய்வங்களாக இருக்க முடியாது, வெற்றி பெறுகின்ற தெய்வங்கள்தான் பெரிய தெய்வங்களாக வணங்கப்பட்டன. இப்படியிருக்க இந்த பெரிய கடவுள், சாவதற்கும் தன்னை தாழ்த்துகிறார்
சிலுவைச் சாவை உரோமையர்கள் தாங்களின் பயங்கர குற்றவாளிகள் என கண்டவர்களுக்கு வழங்கினர், அவர் உரோமையர்கள் அல்லாதவர்களாக இருந்தார்கள். ஆக சிலுவையிலே சாகிறவர், உரோமைய குடியுரிமை பெறாத குற்றவாளி ஆவார். இந்த தண்டனையையும் இயேசு ஏற்றுக்கொள்கிறார் என்று சொல்லி பிலிப்பியருடைய அகங்காரத்தை அசைக்கிறார் எனலாம்

.9: இயேசு தன்னை தாழ்த்தியதால் கடவுள் அவருக்கு செய்த கைமாறு சொல்லப்படுகிறது. இயேசுவின் தாழ்ச்சி அவரை உயர்த்துகிறது (ὑπερύψωσεν ஹுபெருப்ஸ்சோசென்- உயர்த்தினார்), அத்தோடு எப்பெயருக்கும் மேலான பெயரொன்று அவருக்கு கொடுக்கப்படுகிறது. இதுதான் இயேசுவின் வெற்றியாக பார்கப்படுகிறது. இங்கே இயேசுவின் தோல்விபோன்ற நிகழ்வு, அவருக்கு வெற்றியைக் கொண்டுவருகிறது எனக் காட்டுகிறார்

.10: இதன் காரணமாக அனைத்து உலகத்தோரும் இயேசுவின் பெயருக்கு மண்டியிடுகின்றனர் என்கிறார். இங்கே விண்ணவர் (ἐπουρανίων), மண்ணவர் (ἐπιγείων), கீழுலகோர் (καταχθονίων), அனைவரும் உள்வாங்கப்பட்டு காட்டப்படுகின்றனர். இந்த வரியில் மூன்றுவிதமான மக்கள் காட்டப்படுகின்றார்கள். இது அக்கால சிந்தனையையும் காட்டுகிறது. மண்டியிடுதல், விசுவாசத்திற்கான ஒரு அடையாளம். இதனை வீரர்கள் அரசர்களுக்கு செய்தார்கள். இதனைத்தான் அனைத்து உலகமும் இயேசுவிற்கு செய்கிறது.

.11: இயேசுவை கிறிஸ்து ஆண்டவர் என அறிக்கையிடுவது (κύριος Ἰησοῦς Χριστὸς கூரியோஸ் இயேசூஸ் கிறிஸ்டொஸ்), தந்தையின் மாட்சிக்காக என்கிறார். இயேசுவை ஆண்டவர் என்பது, இறை கடவுளை கொச்சபை;படுத்துவது அல்லது தெய்வ நிந்தனை என்ற வாதத்திற்கு இது எதிராக உள்ளது. ஒரே கடவுள் வழிபாடு பல யூதர் இயேசுவை மெசியாவாக ஏற்க தடையாக இருந்தது. ஆனால் பவுலுடைய வாதத்திலே இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளல், உண்மையில் கடவுளுக்கே மாட்சியைத் தருகிறது என்கிறார்.  


மத்தேயு 21,28-32
இரு புதல்வர்கள் உவமை

28மேலும் இயேசு, 'இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு 
இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், 'மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். 29அவர் மறுமொழியாக, 'நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 30அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, 'நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. 31இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?' என்று கேட்டார். அவர்கள் 'மூத்தவரே' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், 'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 32ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை' என்றார்.

மத்தேயு நற்செய்தியின் இருபத்தோராவது அதிகாரம், இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்ததன் பின்னர் நடைபெற்ற போதனைகளைக் காட்டுகின்றது. முதலில் இயேசு கோவிலை தூய்மையாக்குகிறார், பின்னர் அத்திமரத்தை சபித்து அதன் வழி ஒரு உதாரணத்தைக் காட்டுகிறார் (வவ.12-22). இந்த அடையாளங்கள் யூத தலைமைத்துவத்தை கோபம் கொள்ள வைக்க அவர்கள் இயேசுவின் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள். இவர்களின் கேள்விக்கு இயேசு இன்னொரு கேள்வியைத்தான் விடையாக கொடுக்கிறார் (காண்க வவ. 23-27). இந்த பின்னணியில் தான் இன்றைய நற்செய்தி வாசகம் வருகிறது. இந்த வாசகத்தோடு சேர்ந்து மூன்று உவமைகள் யூத தலைமை இயேசு மீது கொண்டிருந்த 
காழ்புணர்ச்சியைக் காட்டுவதாக அமைகின்றன (காண்க மத் 21,23-22,14: இரு புதல்வர் உவமை, கொடிய குத்தகைக்காரர் உவமை, திருமண விருந்து உவமை)
இந்த மூன்று உவமைகளிலும் அழைக்கப்பட்டவர்கள் தங்கள் மாண்பினையும், சந்தர்ப்பத்தையும் இழப்பதையும், இதனால் வேறு மக்கள் அதனை பெற்று பெருவாழ்வு அடைவதையும் மத்தேயு நோக்கத்தோடு வரியிடுகிறார். இந்த உவமைகளின் வாயிலாக யார் உண்மையில் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை மத்தேயு காட்ட முயற்சிக்கிறார். தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் வாய்ப்பை பயன்படுத்தாத போது கடவுள் அதனை மற்றவர்களுக்கு கொடுக்கிறார் என்ற செய்தி சொல்லப்படுகிறது

.28: இயேசு கேள்வியோடு இந்த உவமையை தொடங்குகிறார். இது கிரேக்க உரைநடையின் ஒரு அங்கம். 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்று சொல்லி நாமும் தமிழில் சில விளக்கங்களை சொல்ல முன்வருகின்றோம். (Τί δὲ ὑμῖν δοκεῖ; டி தெ ஹுமின் தொகெய்- நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்). இரண்டு புதல்வர்களை இயேசு உதாரணத்திற்கு எடுக்கிறார். இந்த புதல்வர்கள் கற்பனை ஆட்கள் என்பது தெரிகிறது (τέκνα δύο டெக்னா துஊ- இரண்டு ஆண்பிள்ளைகள்).
இதிலே முதலாவது மகனிடம் தன் திராட்சை தோட்டத்திலே வேலை செய்யச் சொல்கிறார். திராட்சைத் தோட்டம் யூதர்களுக்கு நன்கு பரீட்சயமான ஒரு அடையாளம் (நமக்கு வாழைத்தோட்டம் போல), அதே வேளை, திராட்சை தோட்டம் மெசியாவின் அடையாளத்தையும் கொண்டுள்ளது (ἀμπελών அம்பெலோன் -திராட்சை தோட்டம்).

.29: இந்த முதலாமவர் உடனடியாக தான் போக விருப்பமில்லை என்கிறார் (οὐ θέλω ஹு தெலோ- நான் விரும்பவில்லை). பின்னர் மனதை மாற்றிக்கொண்டு தோட்டத்திலே வேலை செய்கிறார். மனமாற்றத்தை குறிக்க கிரேகக் விவிலியம் μεταμέλομαι (மெடாமெலொமாய்) என்ற சொல்லை பாவிக்கிறது. இது சாதார சிந்தை மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை மாறாக இதயத்தில் மனவருத்தத்தையும், அதனால் செயலில் மாற்றத்தையும் குறிக்கிறது

.30: இரண்டாவது மகனிடமும் தந்தை அதே பணியைக் கொடுக்கிறார். இரண்டாமவர் போவேன் என்கிறார் ஆனால் போகவில்லை. இந்த இரண்டாமவர் தந்தையை 'ஆண்டவர்' என்கிறார், அதாவது தந்தைக்கு பிரபு, ஆண்டவர், தலைவர், ஐயா போன்ற அர்த்தத்தை கொடுக்கவல்ல சொல் பாவிக்கப்படுகிறது (κύριε கூரியே- ஆண்டவரே, தலைவரே..). 

.31: இயேசு மீண்டும் கேள்வி கேட்கிறார். இந்த இரண்டு ஆண் பிள்ளைகளில் யார் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியவர் என்பதே அந்த கேள்வி. மக்களும் மூத்தவரே (ὁ πρῶτος ஹொ புரோடொஸ்) என்று பதிலளிக்கிறார்கள். ஆக மக்களுக்கு எது சரி பிழை என்று தெரிந்திருக்கிறது என்கிறார் மத்தேயு
பின்னர் இயேசு இந்த மூத்தவர்கள் யார் என சொல்கிறார். அவர்கள் வரிதண்டுபவர்களும் விலைமாதரும் என்கிறார் (τελῶναι καὶ αἱ πόρναι டெலோனாய் காய் ஹாய் பொர்னாய்). இந்த இரண்டு சாராரும் யூத தலைமையினால் அதிகமாக வெறுக்கப்பட்டவர்கள். வரிதண்டுபவர்கள் உரோமைய அரசிற்கு வேலை செய்தார்கள். மக்களின் பணத்தை உரோமையருக்காக சேர்த்தார்கள். விலைமாதர் விவிலியம் காட்டும் வாழ்க்கை முறைக்கு எதிராக வாழ்ந்தார்கள். இதனால் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள்தான் கடவுளைத் தேடுகிறார்கள், மனமாறுகிறார்கள். தங்களை உயர்ந்தவர்கள் என்பவர்கள் மனமாறாமல் நடிக்கிறார்கள் என்கிறார் மத்தேயு
மத்தேயு இலாவகமாக, யூத தலைமையை இரண்டாவது மகனாக்கி, அவர்கள் பாவிகள் என்று கருதியவர்களை முதலாவது மகனாக்கிவிட்டார். இவர் சிறந்த ஆசிரியர் என்பதற்கு இது நல்ல உதாரணம்

.32: இங்கே திருமுழுக்கு யோவானின் போதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களால் மதிக்கப்பட்டவர்;. ஆனால் யூத தலைமை அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக இந்த முன்சொன்ன (τελῶναι καὶ αἱ πόρναι டெலோனாய் காய் ஹாய் பொர்னாய்), விலைமாதரும் வரிதண்டுவோரும் அவரை ஏற்றுக்கொண்டனர். இதனைப் பார்த்தும் அவர்கள் நம்பவில்லை. என்கிறார். இயேசு இங்கே தன்னை உதாரணமாக எடுக்காமல், திருமுழுக்கு யோவானை எடுத்ததன் மூலம், இவர்கள் ஒரு இறைவாக்கினரையே ஏற்கவில்லை, இறைவனை எப்படி ஏற்கப்போகிறார்கள் என்பதை கேட்பது போல உள்ளது

மனமாற்றம் பலசாலியின் அடையாளம்
தாழ்ச்சி நேரிய உள்ளம் கொண்டவரின் பண்பு
உள்ளத்திலே உயர்ந்தவர், தான் இன்னும் வளர வேண்டும் என்கிறார்
உள்ளத்திலே செருக்குற்றவர், தான் பலவீனனாக இருந்தும், பலசாலி என நினைக்கிறார்

ஆண்டவரே தாழ்ச்சி என்றும் புண்ணியத்தை கற்றுத்தாரும். ஆமென்

மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்
வியாழன், 28 செப்டம்பர், 2017






தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...