வியாழன், 7 செப்டம்பர், 2017

23rd Sunday in Ordinary Time; ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்திமூன்றாம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்திமூன்றாம் ஞாயிறு
10,09,2017

முதல் வாசகம்: எசேக்கியேல் 33,1-9
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 94
இரண்டாம் வாசகம்: உரோமையர் 13,8-10
நற்செய்தி: மத்தேயு 18,15-20


விவிலியத்தில் பழிவாங்குதல்:

பாவம் அல்லது குற்றத்திற்கான தண்டனை அல்லது சம்பளத்தைக் கொடுத்தலும் வாங்குதலும், பழிவாங்குதல் என அழைக்கப்படுகிறது. இந்த பழிவாங்குதல் தண்டனை மனித சட்டத்தின் கண்ணோட்டத்திலோ அல்லது இறைசட்டத்தின் கண்ணோட்டத்திலோ நோக்கப்பட்டது. பழிவாங்குதல் முதல் ஏற்பாட்டு கண்ணோட்டத்தில் சாதாரணமானதாகவும், நியாயமானதாகவும் நோக்கப்படுகிறது. பழிவாங்கப்படுதல் அல்லது பழிவாங்குதல் வாயிலாக ஒருவர் தன்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து திருந்துவதற்கான வாய்ப்பை பெறுகிறார் என்றும் நம்பப்பட்டது. விடுதலை பயண நூலில் காணப்படும் (காண்க வி. 20-23), உடன்படிக்கை சட்ட ஓழுங்குகள் மற்றும் லேவியர் புத்தகத்தில் காணப்படும் (காண்க லேவி 17-26) தூய்மைச் சட்ட ஒழுங்குகள் இந்த நியாயமான பழிவாங்குதலை ஆழமாக விவரிக்கின்றன
பழிவாங்குதல் சட்டங்கள் மனிதர்-மனிதர் மற்றும் மனிதர்-இறைவன் உறவை அடிப்படையாக கொண்டுள்ளன. உடன்படிக்கையை மீறுதல், இறைவனை ஏளப்படுத்தல் அல்லது சிறுமைப்படுத்தல் நிகழ்வாக கருதப்பட்டது. விவிலியத்தில் காணப்படும் அனைத்துவிதமான சட்டங்களும் ஒழுங்குகளும் நம்பிக்கையில் ஒருங்கமைக்கப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு வழங்கப்பட்டவை. இந்த சட்டங்களை விசுவாசத்திற்கும் அல்லது நம்பிக்கை சமூகத்திற்கும் வெளியே நோக்கப்பட்டால் அது சரியான இறையியல் புரிதலைத் தராது என நினைக்கின்றேன். இந்த கண்ணோட்டத்தில் பழிவாங்குதல் சட்டங்கள் தவறு செய்தவர்களை தண்டிக்கவும், நன்மை செய்தவர்களை ஊக்குவிக்கவுமே உருவாக்கப்பட்டன என ஊகிக்கலாம்
பழிவாங்குதல் என்ற கருப்பொருள் இஸ்ராயேல் இனத்தின் வரலாற்றில் ஆழமான இறையியல் கருத்தைக் கொண்டிருக்கிறது. காயின் விவிலியத்தில் முதலாவதாக, செய்த தவறிற்காக பழிவாங்கப்படுகிறார். அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது இந்த பழிவாங்கலின் அடையாளம் (காண்க தொ.நூல் 4). இதனைப்போலவே அனைத்துலகமும் பாவத்திற்காக வெள்ளத்தால் பழிவாங்கப்படுகிறது (காண்க தொ.நூ 6-9). ஆண்டவரின் சொல்லை நம்பியதன் காரணமாக ஆபிரகாமும் அவர் மனைவி சாராவும் ஈசாக்கு என்ற மகனைப் பெற்று ஆசிர்வதிக்கப்படுகின்றனர் (தொ.நூல் 12). யாக்கோபு-எசா-லாபான் போன்றோரின் கதைகளும் அதிகமான பழிவாங்கல் மற்றும் ஆசீர்பெறுதல் என்ற தலைப்புக்களைத் தாங்கி வருகின்றன மோசேயுடைய காலத்தில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து அகற்றப்பட்டாலும், பாலைவனத்தில் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்ததன் காரணமாக தண்டிக்கப்பட்டார்கள். இதனை பழிவாங்கப்பட்டார்கள் என முதல் ஏற்பாட்டு இறையியலில் கருதலாம்
ஆனால் ஏன் நல்லவர்கள் தண்டிக்கப்பட தீயவர்கள் வளமாக வாழ்கிறார்கள் என்ற கேள்வி விவிலியத்தில் அங்காங்கே ஆராயப்பட்டாலும், அதற்கான விடை உடனடியாக இல்லை. இந்த கேள்வியை ஏரேமியா ஆரம்ப காலத்திலேயே கேட்டுவிட்டார் (காண்க எரேமியா 12,1). யோபு புத்தகத்திலும் இந்த கேள்வி அதிகமாக எழுகிறது. பாவம் செய்யாத யோபு பலவாறு தண்டிக்கப்படுகிறார். அவருக்கு கிடைக்கும் தண்டனை அவர் பாவி போல அவரைக் காட்டுகிறது. அவர் மனைவி கூட யோபுவை பாவி என்ற கருதுகிறார். எரேமியாவைப் போல யோபுவிற்கும் கடவுள் பதிலளிக்கிறார் ஆனால் அந்த பதில் நாம் எதிர்பார்க்கும் பதில் போல் இல்லை என்பதுதான் விவிலியம் காட்டும் உண்மை. இவர்களுக்கு உலகம் நிறைவாக இல்லை அத்தோடு படைப்பு மனித அறிவிற்கு அப்பாற்பட்டது என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. கடவுள் மட்டுமே தண்டனையையும் ஆசீரையும் தீர்மானிக்கிறார் என்பதே விடையாக கொடுக்கப்படுகிறது. அதன் வடிவம் மற்றும் நியதி விளங்கப்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாகவே இணைசட்ட வரலாற்று நூல்களும், நீதி மொழிகளும் தங்களது விடையைத் தருகின்றன அதில் பாவிகள் தண்டிக்கப்படுவார்கள் அதேவேளை நீதிமான்கள் ஆசீக்கப்படுவார்கள் என காட்டுகின்றன


எசேக்கியேல் 33,1-9
கடவுள் எசேக்கியேலைக் காவலாளியாக அமர்த்தல்
(எசே 3:16 - 21)

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 2மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்; ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது, அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க, 3அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது, 4எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க, வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால் அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர். 5எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும் அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர். 6ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில், வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது, அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும், அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.
7அவ்வாறே, மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும். 8தீயோரிடம் நான், ' தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். 9ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

வாயில் காவலாளிகள் மிக முக்கியமானவர்கள். வான் பாதுகாப்பும், தொலை நோக்கு கருவிகளும் குறைவாக இருந்த அந்த நாட்களில், இராணுவம் அதிகாமாக ஒற்றர்களினதும், வாயில் காப்போர்களினதும் பலத்திலேயே நகர்களையும் நாட்டையும் வைத்தது. வாயில் காப்போர்களின் அசமந்த போக்குகள் பெரிய நகரைக்கூட தோல்விக்கு இட்டுச் செல்ல முடியும். இதன் காரணமாகத்தான் பல வாயில்களும் அதிகமான வாயிற் காப்போர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். வாயில் காப்போர்கள் தங்கள் காவல் வேளைகளை பலவாறு பிரிதார்கள். நித்திரை கொள்ளாமல் இருக்க அவர்கள் குழுக்களாக அல்லது கூட்டம் கூட்டமாக இயங்கினார்கள். உரோமையர்கள் காவல் வேளைகளை மணித்தியாலங்களாக பிரித்து காவல் காத்தார்கள். இதுவே பிற்காலத்தில் மணித்தியால அளவுகளாக மாறியது
எசேக்கியேல் புத்தகம் இறைவாக்கு புத்தகங்களில் காலத்தால் பிந்தியது என அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பபிலோனிய அடிமைத்தனத்தில் எழுதப்பட்டது என்று பாரம்பரியமாக நம்பினாலும், இந்த புத்தகம், நாடு திரும்பலுக்கு பின்னர்தான் எழுதப்பட்டது என்ற ஒரு பலமான வாதம் இருக்;கிறது. ஆரம்ப கால இறைவாக்குகள், தந்தையின் குற்றங்களை கடவுள் தலைமுறைக்கும் நினைவுகூறுகிறார் என்றும், ஒருவர் தான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படலாம் என்றும் காட்டின. ஆனால் எசேக்கியேல் புத்தகம் இந்த சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது இந்நாட்களில் கடவுள் ஒருவருடைய குற்றத்திற்காகத்தான் அவரை தண்டிப்பார் எனவும், அவரவரே அவரவருடைய குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் என்ற இறையியல் வாதத்தை முன்வைக்கிறது
இது இஸ்ராயேலருடைய இறையியலில் மாற்றம் அல்லது வளர்ச்சி ஏற்படுவதைக் காட்டுகிறது
முப்பத்திமூன்றாவது அதிகாரத்திலே எசேக்கியேல், இஸ்ராயேல் மக்களுடைய காவல்காரராக காட்டப்படுகிறார். அவருடைய இறைவாக்கு பணி, அவருக்கு பொறுப்பையும் தண்டனையையும் கொண்டு வருகிறது. இந்த இறைவாக்கு இஸ்ராயேலருடைய பாவத்தின் இரு முகங்களைக் காட்டுகிறது

.1: ஆண்டவருடைய வாக்கு எனக்கு வந்தது (וַיְהִי דְבַר־יְהוָה אֵלַי לֵאמֹֽר வாயெஹி தெவர்-அதோனாய் 'எலய்  லெ'மோர்) என எபிரேய மொழி குறிப்பிடுவது, ஆண்டவருடைய இறைவாக்கைக் குறிக்கிறது. இதன் மூலமாக தான் சொல்கின்ற வார்த்தை தன்னுடைய சொந்த வார்த்தை கிடையாது மாறாக அது இறைவார்த்தை என்பது புலப்படுகிறது

.2: எசேக்கியேலிடம் ஆண்டவர், மானிடா உன் மக்களிடம் சொல் என்று சொல்லி மக்களை பிரித்துக் காட்டுகிறார் (בֶּן־אָדָם דַּבֵּר אֶל־בְּנֵֽי־עַמְּךָ֙ பென் 'ஆதாம் தபொர் 'ஏல்-பெனி-'அம்மெகா). இதன் வாயிலாக கடவுள் தன்னுடைய கோபத்தையும், மக்கள் என்றும் மக்கள்தான் என்பதையும் வெளிக்காட்டுகிறார்
ஒரு நாட்டின் மீது தான் வாளைக் கொணரும் போது என்று இரண்டாவது வரி தொடங்குகின்றது. வாள் இங்கே கலாபனை அல்லது துன்பத்தைக் குறிக்கலாம் (חֶרֶב ஹெரெவ்- வாள்). ஏன் இதனை கடவுள் கொணர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது
இதிலிருந்து தண்டனைகள் அனைத்தும் கடவுளிடமிருந்துதான் வருகின்றன என்ற அக்கால நம்பிக்கை நன்கு புலப்படுகிறது. அத்தோடு அனைத்து நிகழ்வுகளும் கடவுளுடைய திட்டத்திற்கு உட்பட்டுத்தான் நடக்கின்றன என்ற நம்பிக்கையும் புலப்டுகிறது
இந்த வேளையில், மக்கள் தங்கள் நாட்டின் எல்லையிலிருந்து ஒருவரை தெரிவு செய்து அவரை நாட்டின் காவலாளியாக ஏற்படுத்துகின்றார்கள் எனச் சொல்லப்படுகிறது (צֹפֶה ட்சோபெஹ்- காவலாளி). நாட்டின் எல்லை என்பது போர் நடக்கும் இடத்தைக் குறிக்கலாம் அல்லது நாட்டின் எல்லையில்தான் காவலர்கள் சேவையில் இருப்பார்கள் என்பதையும் காட்டுகிறது. இந்த இடத்திலிருந்து ஒருவரை தெரிவு செய்வது என்பது, தெரிவு செய்யப்படுகிறவர் ஏற்கனவே காவல் கடமையில் பயிற்சி பெற்றவர் என்பதும் புலப்படுகிறது

.3: காவலாளிகள் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை தயார் படுத்துவர் (שּׁוֹפָ֖ר ஷோபெர்- எக்காளம்). இந்த எக்காளம் (ஷோபார்) என்பது அக்காலத்தில் மாடு அல்லது பெரிய ஆட்டுக் கொம்புகளால் செய்யப்பட்ட ஒரு ஊது குழல் ஆகும். பின்னர் இதன் தொழிற்பாட்டை பின்பற்றித்தான் உலோகத்தினால் ஆன எக்காளங்கள் உருவாக்கப்பட்டன. இந்த எக்காளங்கள் போர் காலத்திலும், போர் நடைபெறும் இடங்களிலும் பயன்படுத்தப்பட்டன. சில வேளைகளில் இவை வழிபாட்டு நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்பட்டன.  
எக்காளம் ஊதுதல் உடனடியாக வருகின்ற ஆபத்தைக் குறித்துக்காட்டும் அடையாளமாக வேறு முதல் ஏற்பாட்டு நூல்களிலும் பதியப்பட்டுள்ளது (காண்க நெகேமியா 4,18-20: எரேமியா 4,19: ஆமோஸ் 3,6). 

.4: எக்காளத்தின் ஒலியை மக்கள் கேட்க வேண்டும், தவறும் பட்சத்தில் அது ஆபத்தை விளைவிக்கலாம். அதாவது ஆபத்து வருகின்ற போது, இந்த ஒலியைக் கேட்காதவர்கள் பயங்கரத்திற்கு தயார்நிலையில் இல்லாமல் இருப்பார்கள், இதனால் அவர்கள் துன்பங்களை சந்திப்பார்கள்.  
அவர்கள் துன்பங்களை அவர்களே சுமப்பர் என்பதை, அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலைமேலே இருக்கும் என்பது எபிரேய பாடம் (דָּמוֹ בְרֹאשׁוֹ தாமோ வெரொ'ஷோ- அவர் இரத்தம் அவர்தலைமேல்). இங்கே எக்காளம் இறைவார்த்தையையும், ஊதுகிற காவலாளி, இறைவாக்கினரையும் குறிப்பது போல் உள்ளன

.5: இவர்கள் தங்கள் இரத்தப்பழியை தாங்களே சுமப்பதற்கான காரணம் சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் அபாய அறிவித்தலைக் கேட்டும் அதனை அவர்கள் அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த அலட்சியம்தான் தண்டனைக்கான காரணமாக அமைகிறது. ஒருவேளை இதனை அவர்கள் அலட்சியம் செய்யாமல் இருந்திருந்தால் அவர்கள் தங்கள் தண்டனையிலிருந்து தப்பியிருக்கலாம் என்பது சொல்லப்படுகிறது
எச்சரிக்கைக்கு செவிகொடுத்தல் (הַשֹּׁמֵעַ ஹஷோமெ'- கேட்டல்) என்பது ஒருவருடைய பொறுப்பாண வாழ்க்கை முறையை கட்டுகிறது. அவரவருடைய வாழ்கையின் நியதிகளுக்கு அவரரவர்களே பொறுப்பு, இதனை அவர்கள் மற்றவர் மேலோ அல்லது கடவுள் மேலோ போட முடியாது. கடவுள் அனைத்தையும் நிர்ணயிக்கிறவராக இருந்தாலும், கடவுள் மக்களை விதி என்ற மாயைக்குள் சிக்கித் தவிக்கிற பொம்மைகளாக மாற்றவில்லை என்பதை எபிரேய சிந்தனையில் அழகான இறையியலில் விளக்குகிறார் இறைவாக்கினர் எசேக்கியேல்

.6: மேலுள்ள வரிகள் மக்களுடைய நிலையை குறிக்கின்ற அதேவேளை இந்த வரி காவலாளியுடைய நிலையை விவரிக்கின்றது. காவலாளி தன்னுடைய முக்கியமான பணியை உணரவேண்டும். அவர் ஆபத்தை அறிந்து உடனடியாக எக்காளத்தை ஊத வேண்டும். ஊதாமல் விட்டு மக்கள் தண்டிக்கப்பட்டால், அதுவும் அவர்கள் தங்கள் பாவத்திற்காக தண்டிக்கப்பட்டாலும், அதன் பொறுப்பை கடவுள் காவலாளி மேல் சுமத்துவார் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. இதிலிருந்து மக்கள் பாவிகளாக இருந்தாலும், அவர்களை கடவுள் நேசிக்கிறார் என்பது புலப்படுகிறது. காவலாளிகள் தூயவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பொறுப்புக்களில் தவறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் சொல்லப்படுகிறது (הַצֹּפֶה ஹட்சோபெஹ்- காவலாளி). 

வவ.7-8: இவ்வளவு நேரமும் அடையாளம் வாயிலாக பேசிய கடவுள் இந்த வரியில் அந்த அடையாளம் யார் எனக் காட்டுகிறாh. 
இஸ்ராயேல் மக்கள் - நகர் மக்கள்
எக்காளம் - இறைவாக்கு 
காவலாளி - எசேக்கியேல்
ஆண்டவர் தன்னுடைய வாக்கை எசேக்கியேல் கேட்டு மக்களை எச்சரிக்க வேண்டும் என்கிறார். எசேக்கியேலைப் போல அபகூக்கு மற்றும் எரேமியா இறைவாக்கினர்களும் காவலாளி என்ற பணியை ஏற்றிருக்கின்றார்கள் (காண்க எரேமியா 6,17: அபகூக்கு 2,1). 
தீயோர்கள் என்பவர்கள் இந்த வரிகளின் படி இஸ்ராயேல் மக்களில் சிலரைக் குறிப்பது போலவே உள்ளது. கொடியவர்கள் சாவார்கள் என்ற கடவுளின் இறைவாக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறைவாக்கை இறைவாக்கினர் அவதானமாக கேட்கவேண்டும், பின்னர் அதனை உரியவர்களுக்கு உரைக்க வேண்டும்
கொடியவர்கள் தங்கள் கொடுமையின் படி தண்டிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இறுதியாகவும் ஒரு வாய்ப்பு இருந்திருக்கிறது. அந்த வாய்ப்பை இறைவாக்கினர் தன்னுடைய அவதானக்குறைவால் கொடுக்காமல் இருந்திருந்தால், அதன் பாவம் இறைவாக்கினரையே சாரும் என்கிறது இறைவார்த்தை. இந்த வரியின் மூலம், கடவுள் கொடியவர்களையும் எந்தளவிற்கு அன்பு செய்கிறார் என்பது அழகாகக் காட்டப்படுகிறது

.9: இந்த வரி, எசேக்கியேலுக்கு ஆறுதலாக வருகிறது. அதாவது இறைவாக்கினர் தன்னுடைய கடமையை செய்திருந்தும் அதனை மக்கள் ஏற்காமல் விட்டிருந்தால், அதற்கு பொறுப்பு இறைவாக்கினர் அல்ல, மாறாக அது அந்த மக்களையே சாரும்
இந்த வரி மூலம், எசேக்கியேல் தான் கடவுளுடைய பார்வையில் உத்தமராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறார். தான் செய்ய வேண்டியதை செய்துவிட்டார் என்பதையும் காட்டுகிறார்

திருப்பாடல் 95
புகழ்ச்சிப் பாடல்

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்
3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்
4பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன் மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. 5கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின
6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்
8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்
9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். 10நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது; 'அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'. 
11எனவே, நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.

கடவுளை பாறை (צוּר ட்சூர்) என்று விழிக்கும் இந்த திருப்பாடல் மிக முக்கியமான புகழ்ச்சிப் பாடல்களில் ஒன்று. மீட்பின் மகிழ்ச்சியான நற்செய்தி என்றும் இதனை ஆய்வாளர்கள் பெயரிடுகின்றனர். கடவுளுக்கு, பாறை, அரசர், படைத்தவர், உருவாக்கியவர், ஆயன், அத்தோடு கீழ்ப்படிவு கொடுக்கப்படவேண்டியவர், என்ற பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பாடலில் சில இடங்களில் பல கடவுள் வழிபாடுகளை நினைவூட்டுகிற சொற்பதங்கள் காணப்பட்டாலும், இவை ஒரு கடவுள் வழிபாட்டை மையப்படுத்தவே பாவிக்கப்பட்டுள்ளன என்றே எடுக்க வேண்டும். அத்தோடு கடவுளுக்கு பாவிக்கப்படும் சொற்கள் (எலோகிம் אֱלֹהִים) வேற்று தெய்வங்களுக்கு (אֱלִילִ֑ים எலிலிம் தி.பா 96,5) பாவிக்கப்படவில்லை அல்லது தவிர்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அதற்க்கு பதிலாக வேறு சொற் பதம் பாவிக்கப்பட்டுள்ளது
தொண்ணூற்றைந்தாவது திருப்பாடல் காரண-காரிய வடிவத்தில், அத்தோடு அதிகமான கவி அடிகள் திருப்பிக்கூறுதல் என்ற எபிரேய கவி நயத்தில் அமைந்துள்ளது, இவ்வாறு:

1. (வவ.1-2). மகிழ்வுடன் ஆராதிக்க ஒரு அழைப்பு
1. (வவ.3-5) ஆண்டவருடைய மாட்சியை பற்றிய விளக்கம்

2. (.6). வணக்கத்துடன் ஆராதிக்க ஒரு அழைப்பு
2. (.7,,) எமது சலுகைகளைப் பற்றிய விளக்கம்

3. (7). பணிவிற்க்கான ஒரு அழைப்பு
3. (வவ.8-11). அதனுடைய முக்கியமான விளைவுகளைப் பற்றிய விளக்கம்

வவ.1-2: நம் மீட்பின் பாறை (צ֣וּר יִשְׁעֵֽנוּ ட்சூர் யிஷ்'எனூ) என்று ஆண்டவரை விழிப்பது இஸ்ராயேல் கவி வரிகளின் முக்கியமான ஒரு சொற்றொடர். பாலை நிலத்தில் அசையாமல் இருக்கும் கடினமான பாறைகள் கடவுளின் பலத்தையும் மாட்ச்சியையும் மக்களுக்கு நினைவூட்டின. பாறைகளைப்போலவே கடவுளும் அவர் பலத்தை பொறுத்த மட்டில் அசையாதவர் அல்லது அசைக்கமுடியாதவர் என்ற கருத்தை கொண்டுவருகின்றது

'அவர் திருமுன் செல்வோம்' என்பதற்கு 'அவர் முகத்தின் முன் செல்வோம்' (פָנָיו பானாவ்- அவர் முகங்கள்) என்ற வரிகள் எபிரேயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன

.3: முதல் இரண்டு வரிகளுக்கான காரணங்கள் இந்த வரியில் விளக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் பெரிய இறைவன் என்பதும் (גָּדוֹל יְהוָה காதோல் அதோனாய்), தெய்வங்கள் எல்லாவற்றிக்கும் மோலான பேரரசர் (עַל־כָּל־אֱלֹהִֽים 'அல்-கோல்- 'எலோஹிம்) என்பதும் இதற்கான காரணங்கள். கடவுளை அரசராகவும், தெய்வங்களை அரசர்களாகவும் பார்க்கின்ற சிந்தனைகள் இந்த காலத்தில் வழக்கிலிருந்தன. இஸ்ராயேல் இறைவாக்கினர்களுக்கு கடவுளை அரசராக காட்டவேண்டிய தேவையிருந்தது. கடவுள்தான் இஸ்ராயேலருக்கு என்றும் அரசர், மனிதர்கள் அவர்களின்; அரசராக இருக்க முடியாது என்ற சிந்தனையை இது நினைவூட்டுகிறது (ஒப்பிடுக 1சாமு 8:7).

வவ.4-5: கடவுளுடைய படைப்பாற்றல்கள் விவரிக்கப்படுகின்றன. ஆழிகள், மலைகளின் கொடுமுடிகள், கடல், உலர்ந்த தரை போன்றவை கடவுளாலே படைக்கப்பட்டன என்னும் போது கடவுளின் மாட்சிமை வெளிப்படுத்தப்படுகிறது. எந்த ஒரு அரசனாலும் அல்லது வேறு தெய்வங்களாலும் இவை அனைத்தையும் படைத்திருக்க முடியாது என்ற வாதத்தை ஆசிரியர் சொல்லாமல் சொல்லுகிறார்
.6: இப்படியாக ஆண்டவர் வணக்கத்துக்குரியவராக இருக்கின்ற படியால் அவரை வணங்க ஆசிரியர் அழைப்பு விடுகிறார். முழந்தாள் படியிட்டு வணங்குதலை, அதிகமான வேளைகளில் எபிரேய மொழி வணக்க அடையாளமாக குறிக்கிறது (נִשְׁתַּחֲוֶה நிஷ்த்தாஹவெஹ் வணங்குவோமாக). வணங்குதலும் முழந்தாள் படியிடுதலும் ஒத்த கருத்துச் சொற்களில் பாவிக்கப்பட்டுள்ளன
கடவுள்தான் மக்களை உருவாக்கியவர் என்ற தொடக்க நூல் விசுவாசக் கோட்பாடும் இங்கே நினைவூட்டப்படுகிறது (יְהוָה עֹשֵֽׂנוּ அதோனாய் 'ஓஸ்செனூ- நம்மை செய்தவர்). 

.7: இந்த வரி வித்தியாசமாக கடவுளின் மக்கள், முதலில் யார் என்றும் கடவுள் யார் என்றும் விளங்கப்படுத்தி, பின்னர் கடவுளுக்கு செவிசாய்க்க ஒரு அழைப்பை விடுக்கிறது. ஆடும் ஆயனும் என்ற உருவகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் தெரிந்த மற்றும் அந்நியோன்யமான உருவகங்கள்.

. அவர் மேய்சலின் மக்கள் (עַם מַרְעִיתוֹ 'அம் மர்'இதோ).
. அவர் கைகளின் ஆடுகள் (צֹאן יָדוֹ ட்சோ'ன் யாதோ).


வவ.8-10: பணியாதவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை வரலாற்றின் பாடத்திலிருந்து விளக்க முயல்கிறார் ஆசிரியர். மெரிபாவிலும் மாசாவிலும் இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு செய்த காட்டிக்கொடுப்புக்கள் முக்கியமான படிப்பினைகளாக இஸ்ராயேல் பிள்ளைகளால் தங்கள் மறையறிவின் போது நினைவுகூறப்பட்டது

. மெரிபா (מְרִיבָה மெரிபாஹ்) என்றால் கலவரம் என்று பொருள். இது இரண்டு வித்தியாமனா நிகழ்வுகளாக விவிலியத்தில் பதியப்பட்டுள்ளது (ஆராய்க வி. 17,1-7 மற்றும் எண் 20,1-13 அத்தோடு தி.பா 81,7: 106,32). இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தண்ணீரைப் பற்றிய முறைப்பாடு பதியப்பட்டுள்ளது

. மாசா (מַסָּה மாசாஹ்) என்பது சோதித்தலைக் குறிக்கிறது. மெரிபாவைப்போல 
இதுவும் இஸ்ராயேலரின் முணுமுணுப்பையும், முறைப்பாடையும் பதிவு செய்த நிகழ்வு. இதுவும் கடவுளுக்கெதிரான ஒரு குற்றச் செயலாக இஸ்ராயேலரிடையே கணிக்கப்பட்டது (காண்க வி. 17,1-7: . 6,16: 9,22: 33,8). 

கடவுளை சோதித்தால், மனிதருக்கு கிடைக்கும் விளைவு என்ன என்பதை இங்கே காணலாம். கடவுளை சோதித்ததை கடவுளுக்கு வெறுப்பூட்டியதாக ஆசிரியர் காண்கிறார். சோதித்ததும், வெறுப்பூட்டியதும் கடவுளிடம் இருந்து மனிதருக்கு தூரத்தை அதிகமாக்கியது என்கிறார் ஆசிரியர். அத்தோடு கடவுளின் மக்கள் என்ற புதிய பெயரை பெற்றுக்கொள்கின்றனர்.

. அலைகின்ற இதயத்தை கொண்ட மக்கள் (עַם תֹּעֵ֣י לֵבָב הֵם)
. அவர்கள் கடவுளின் பாதையை அறியாத மக்கள் (הֵ֗ם לֹא־יָדְעוּ דְרָכָי)

.11: இறுதியாக இந்த மக்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது, அதாவது அவர்கள் பாலைநிலத்திலே மடிந்தார்கள், அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு நுழைய முடியாமல் போனார்கள். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இங்கே ஒரு புதிய உருவகம் கொடுக்கப்படுகிறது அதாவது அது 'இளைப்பாற்றின் இடமாக' (מְנוּחָתִֽי மெநூஹாதி - என் இளைப்பாருதல்) பார்க்கப்படுகிறது
இஸ்ராயேல் மக்களை மந்தைகளாக பார்க்கும் ஆசிரியர், மந்தைகளுக்கு இளைப்பாறும் இடம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கானானை இளைப்பாறும் இடமாக காண்கின்றார்


உரோமையர் 13,8-10
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல்

8நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். 9ஏனெனில், 'விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், 'உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.
10அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
இறுதிக்காலம் நெருங்குகிறது

உரோமையர் பதின்மூன்றாம் அதிகாரம் பல நடைமுறை ஒழுக்க விதிகளை உள்ளடக்கி வருகின்றது. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் அந்தரத்தில் வாழுகின்ற ஒரு நிழல் மக்கள் கூட்டம் அல்ல, மாறாக அவர்கள் இந்த உலகத்தில் வாழுகின்ற ஒரு உண்மையான மக்கள் கூட்டம். கிறிஸ்தவம் இவர்களுக்கு காட்டுச் சுதந்திரத்தையோ அல்லது ஒழுக்கமற்ற வாழ்வையோ கொடுக்கவில்லை மாறாக, கிறிஸ்தவம் இவர்களுக்கு பெறுப்புணர்ச்சியுள்ள நல்ல விழுமிய வாழ்வையே கொடுக்கிறது என்பதில் கவனமாக இருக்கிறார் பவுல்
ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில், இவர்கள் சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்ற குற்றச்சாட்டும் முக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவர்களும், தங்களுடைய புதிய மார்க்த்தைக் காரணம் காட்டி, தங்களை சில முக்கியமான நாளாந்த கடமைகளிலிருந்து விலக்க முயன்றார்களோ என்ற சந்தேகத்தையும் இந்த பகுதிகள் உண்டுபண்ணுகின்றன. அதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கலாம்
இந்த பதின்மூன்றாம் அதிகாரத்தை தமிழ் விவிலியம் முக்கிய மூன்று பிரிவுகாள பிரிக்கின்றது
. அதிகாரிகளுக்கு கீழ்படிதல் (வவ.1-7)
. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தல் (வவ.8-10)
. இறுதிக்காலம் பற்றிய அறிவித்தல் (வவ.11-14).

.8: இன்று போல் அன்றும் உரோமைய கிறிஸ்தவர்கள் பலவாறு கடன்பட்டவர்களாக இருந்திருக்கலாம் போல எண்ணத்தோன்றுகிறது. இவர்களை, யாருக்கும் எதிலும் கடன்படாமல் இருக்க கேட்கிறார் புறவினர்கான திருத்தூதர் பவுல் (Μηδενὶ μηδὲν  ὀφείλετε மேதெனி மேதேன் ஓபெயிலேதே).  
கடன் படுவதாக இருந்தால் அந்த கடனை அன்பின் மட்டிலான கடனாக இருக்கட்டும் என்கிறார் பவுல். அன்பு செய்வது திருச்சட்டத்தை நிறைவேற்றுதல் என்ற புதிய மற்றும் ஆழமான ஒரு இறையியல் சிந்தனையையும் முன்வைக்கிறார் பவுல் (ὁ γὰρ ἀγαπῶν τὸν ἕτερον νόμον πεπλήρωκεν. ஹொ கார் அகாபோன் டொன் எடெரொன் நொமொன் பெப்லேரோகென்). திருச்சட்டத்தை நிறைவேற்றுதல் என்பது யூதர்களின் தலையாகிய கடமை, யூதர்களை மதிப்பவர்களுக்கும் இது முக்கியமானதாகிறது. திருச்சட்டத்தை நிறைவேற்றாமல் இந்த கிறிஸ்தவர்கள் எப்படி தங்கள் கடவுளை தமது கடவுளாக கொள்ள முடியும் என்பதும் யூதர்களுடைய கேள்வியாக இருந்தது. இவை அனைத்தையும் சரி செய்கிறார் பவுல்

.9: இயேசு ஏற்கனவே பத்து கட்டளைகளை இரண்டு கட்டளைகளில் அடக்கியிருப்பதை நற்செய்திகள் காட்டுகின்றன. இதனைத்தான் இப்போது பவுலும் தன்னுடைய அமைப்பில் காட்டுகிறார். விடுதலைப் பயணம் 20, 13-15 மற்றும் இணைச்சட்ட நூல் 5,17-19.21 போன்றவை பத்து கட்டளைகளை முதல் ஏற்பாட்டில் பதிவு செய்திருக்கின்றன. பத்துக் கட்டளைகள் இஸ்ராயேல் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. இவை கட்டளைகளுக்கெல்லாம் பிரதானமானவை. இந்த பத்துக் கட்டளைகளை விளக்கவே மேலதிகமான கட்டளைகள் லேவியர் புத்தகத்தில் உருவாகின என்ற சிந்தனையும் உள்ளது. இந்த பத்துக் கட்டளைகள் கடவுளால் மோசேக்கு சீனாய் மலையில் கொடுக்கப்பட்டபடியால், அவை தெய்வீக கட்டளைகளாக கருதப்பட்டன. இந்த கட்டளைகளை கடைப்படிப்பதன் வாயிலாக ஒருவர் இஸ்ராயேல் குடிமகனாகவும் கடவுளின் பிள்ளையாகவும் மாறுகிறார் என்ற சிந்தனையும் முன்வைக்கப்பட்டது. இப்படியாக மிக முக்கியமான இறையியல் மற்றும் கலாச்சார முக்கியத்தும் வாய்ந்த கட்டளைகளை பவுல் வித்தியாசமான முறையில் நோக்குகிறார்
முதலில் அவர் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார், அதனை வரிசையும் படுத்துகிறார் 
(οὐ μοιχεύσεις மொய்கெயுசெய்ஸ் - நீங்கள் விபச்சாரம் செய்யலாகாது,)
(οὐ μοιχεύσεις மொய்கெயுசெய்ஸ் - நீங்கள் கொலை செய்யலாகாது,)
(οὐ κλέψεις கிலெப்செய்ஸ் - நீங்கள் திருடக்கூடாது,)
(οὐκ ἐπιθυμήσεις ஊக் எபிதூமெசெய்ஸ் - நீங்கள் கவர்ந்து பறிக்கக்கூடாது)
அத்தோடு மற்றைய கட்டளைகளையும் உள்ளடக்கி பேசுகிறார். இந்த கட்டளைகள் அனைத்தையும் புதிய இரண்டு கட்டளைகளுக்குள் உட்படுத்துகிறார் அவை

. உன் மீது அன்பு கூர்வாயாக
. உன் அயலவர் மீதும் அன்பு கூர்வாயாக:  

இந்த வரியையும் பவுல் லேவியர் 19,18 அதிகாரத்திலிருந்தே காட்டுகிறார். பவுலுடைய இந்த சட்டங்கள் பற்றிய அறிவு அவர் முதல் ஏற்பாட்டை நன்கு அறிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. அதேவேளை அவர் அதனை தன்னுடைய இறையியலுக்கு ஏற்ற விதத்தில் பாவிக்கவும் தெரிந்திருக்கிறார் என்பதும் புலப்படுகிறது

.10: அன்புதான் திருச்சட்டத்தின் நிறைவு என்பது மிகவும் ஆழமான இறையியல் சிந்தனை (πλήρωμα οὖν νόμου ἡ ἀγάπη. பிலேரோமா ஊன் நொமூ ஹே அகாபே- ஆக சட்டத்தின் நிறைவு அன்பு). இதற்கான காரணத்தையும் பவுல் முன்வைக்கிறார். அன்பு மற்றவருக்கு தீங்கிழைக்காது 
இதுவே இந்த வாதத்தின்; காரணம் என்கிறார்
இந்த விதத்தில் நோக்குமிடத்து, சட்டங்கள் மற்றவருக்கு தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டவை. அன்பு இருக்கும் இடத்தில் ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைக்க முன்வரமாட்டார் இதனால், அங்கே சட்டம் தேவையில்லை, அந்த சட்டத்தில் தொழிலை அன்பு செய்கிறது என்பது பவுலின் வாதம். வேறு திருமுகங்களிலும், முக்கியமாக 1கொரிந்தியர் 13வது அதிகாரத்திலே இந்த தலைப்பு ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.  


மத்தேயு 18,15-20
பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)

15'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும். 16இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். 17அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். 18மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 19-20உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.’

மத்தேயு நற்செய்தியின் பதினெட்டாவது அதிகாரம் திருச்சபை பொழிவு என்று அறியப்படுகிறது. இந்த தலைப்பு தமிழ் விவிலியத்தின் தலைப்பு பிரிவாக வருகிறது. திருச்சபை என்பது இப்போது நாங்கள் காண்கின்ற திருச்சபை என்கின்ற அமைப்பா அல்லது சிறிய சீடத்துவ கூட்டங்களா என்பதில் பல வாத பிரதிவாதங்கள் கத்தோலிக்கருக்கும், மற்றய சகோதர சபைகளுக்கிடையிலும் இருக்கின்றன. சிலர் திருச்சபை என்ற சொல் பிற்காலத்து சொல் என்றும், அது ஆரம்ப கால திருச்சபையின் தேவைக்காக உட்புகுத்தப்பட்டது என்றும் வாதிடுகின்றனர். இன்றைய வாசக பகுதி, பாவம் செய்யும் சகோதரரை எப்படி மன்னிப்பது மற்றும் அவரை எப்படி வழிக்கு கொண்டுவருவது போன்றவற்றையே நோக்கமாகக் கொண்டது என்பதையே முதலில் நோக்க வேண்டும். அவருக்கு தண்டனை கொடுப்பதன் நோக்கமும் அவரை திருத்துவதற்காகவே என்பதும் இங்கே நோக்கப்படவேண்டும்
மத்தேயு நற்செய்தியின் வாசகர்கள் மற்றும் மத்தேயு நற்செய்தியாளரின் விசேடமான 
இறையியல் பார்வை பற்றிய அறிவுகள் இந்த பகுதியை ஆழமாக விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன். கத்தோலிக்க திருச்சபையின் ஒப்புரவு திருவருட்சாதனம், மற்றும் தண்டனை பற்றிய படிப்பினைகள் இந்த பகுதியை அடித்தளமாக கொண்டிருக்கின்றன என்பதையும் அவதானிப்போம்

.15: சகோதரர்கள் பாவம் செய்வது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதை இயேசு விளங்கப்படுத்துகிறார். சகோதரர்கள் என்பது (ἀδελφός அதெல்பொஸ்) சகோதர சகோதரிகள், என்ற இருபால் அர்த்த்தில்தான் கிரேக்க மொழியிலும் பாவிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சகோதரர்கள் பாவம் அல்லது குற்றம் செய்கின்றபோது அதனை தீர்பதற்கான வழிகள், முதலில் சில உள்ளன என காட்டப்படுகிறது

. தனித்திருக்கும் போது அவர் குற்றத்தை எடுத்துக்காட்டுதல் - தனித்திருக்கும் போது அவருடைய குற்றத்தை எடுத்துக் காட்டும்போது ஒருவேளை அவர் அறிவுத் தெளிவு பெறலாம். அவர் அவமானம் அடையாமல், தன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம். தனிமையாக இருப்பது அவருடைய சிந்திக்கின்ற திறனையும் அதிகப்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ளலாம் (μόνος மொநொஸ்- தனிமையாக, ஒருவராக).  

. அவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் நல்லது, அது உறவு தொடர்வதற்கான நல்ல வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. இதனை கிரேக்க விவிலியம் இன்னொரு விதத்தில் காட்டுகிறது: ἐάν σου ἀκούσῃ ἐκέρδησας τὸν ἀδελφόν σου· எயான் சூ அகூசே எகெர்தேசாஸ் டொன் அதெல்பொன் சூ- உமக்கு செவிசாய்த்தால், நீர் உம் சகோதரரை மீளப் பெற்றிருக்கிறீர்). 
இந்த வரி மூலாமாக குற்றங்கள் சுட்டிக்காட்டப்டுதல், சகோதரர்களை தண்டிப்பதற்காக அல்ல மாறாக அவர்களை மீள பெற்றுக்கொள்ளுதலுக்காவே என்பது காட்டப்படுகிறது

.16: இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் ஒருவருக்கு சாட்சியம் கொடுக்க சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அமைப்பு முறை, அதனை மத்தேயு இங்கே நினைவு படுத்துகிறார் (காண்க .சட் 19,15). இந்த சாட்சியங்கள் குற்றம் செய்தவருக்கும், செய்யப்பட்டவருக்கும் இடையிலிருந்து இவர்களில் எவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை கண்காணிப்பார்கள்

.17: இந்த இரண்டு முறைகளுக்கு குற்றமிழைத்த சகோதரர் செவிசாய்க்காவிட்டால், முதல் ஏற்பாட்டு முறைப்படி அவருக்கு தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனால் மத்தேயுவின் 
இயேசு இன்னொரு வாய்ப்பை முன்வைக்கிறார். அதாவது இந்த சகோதரர் திருச்சபையிடம் முறையிடப்படுகிறார் (ἐκκλησίᾳ எக்கிலேசியா). திருச்சபை என்பது இங்கே தலத் திருச்சபை அல்லது சிறிய சீடர்களின் கூட்டத்தை குறிக்கிறதா? அல்லது முழுத்திருச்சபையையும் குறிக்கிறதா? என்பதில் பிரதி வாதங்கள் உள்ளன்
திருச்சபைக்கு செவிசாய்க்காவிடில், தண்டனை முன்வைக்கப்படுகிறது. இயேசு சொல்கின்ற தண்டனை சற்று வித்தியாசமாக இருக்கிறது. அவர் புறவினத்தவர் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும் என்கிறார் (ἔστω σοι ὥσπερ ὁ ἐθνικὸς καὶ  ὁ τελώνης. எஸ்டோ சொய் ஹோஸ்பர் ஹொ எத்நிகொஸ் காய் ஹொ டெலோநேஸ்). இயேசு தன்னுடைய மானிட வாழ்வில் இந்த இரண்டு தரப்பினரையும் ஆதரித்தார். அவர்களுக்கும் தன் அன்பையும் சீடத்துவத்தையும் கொடுத்தார். அப்படியிருக்க ஏன் இங்கே இவர்களை எதிர்மறை உதாரணமாக எடுக்கிறார்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பல விடைகள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இந்த சொற்பதங்கள் யூதர்களின் சாதாரண சாபச் சொற்றொடர்கள் என்ற விடையை கொடுக்கின்றனர். சிலர் புறவினத்தவர்களும், வரிதண்டுபவர்களும் அக்கால யூத மக்களால் வெறுக்கப்பட்டார்கள் அது அவர்களுக்கு வேதனையைத் தந்தது அந்த வேதனையை மட்டுமே இயேசு உதாரணமாக தருகிறார் என்றும் சொல்கின்றனர்
புறவினத்தவர்கள் யூத மக்களால் நண்பர்களாக கருதப்பட்டாலும் அவர்கள் சகோதரர்களாக கருதப்படவில்லை. வரிதண்டுபவர்கள், உரோமைய அரசிற்கு கப்பம் பெற்றதாலும், அதிகமான வேளைகளில் தங்களின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தமையினாலும், இவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டார்கள். சில வேளைகளில் தண்டிக்கவும் பட்டார்கள்

.18: ஆரம்ப திருச்சபைக்கு இந்த வரி மிக முக்கியமான வரியாக இருந்திருக்கிறது. இயேசு இங்கே தடைசெய்தல் மற்றும் அனுமதித்தல் என்ற இரண்டு செயற்பாடுகளை விவாதிக்கிறார். எதனை அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை. கத்தோலிக்கர் இதனை பாவ மன்னிப்பு மற்றும் திருச்சபை வெளியேற்புத் தண்டனை என எடுக்கின்றனர்
இயேசுவுடைய வார்த்தைகள் உறுதியாக அமைகின்றன (Ἀμὴν λέγω ὑμῖν·  ஆமென் லெகோ ஹுமின்- உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்). மண்ணுலகம் மற்றும் விண்ணுலகம் (γῆ கே, மண்ணுலகம் - οὐρανός ஹுராநொஸ்- விண்ணகம்) என்பவை மத்தேயு நற்செய்தியில் முக்கியமான பதங்கள். இந்த சொற்பதங்கள் ஆரம்ப கால திருச்சபையில் இருந்த சில சிக்கல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. கலாபனைகளின் போது திருச்சபையை காட்டிக்கொடுத்தவர்களும், பிரிந்து போனவர்களை எப்படிநோக்கவேண்டும் என்ற சிந்தனையும் இந்த வரியின் எழுவாய் பொருட்களாக இருக்கலாம்

.19: மனிதர்களின் மனமொத்திருத்தல் எவ்வளவு முக்கியமானது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. எதைக் குறித்து மனிதர்கள் மனமொத்திருக்க வேண்டும் என்பது, வேண்டுதலைப்பற்றியது என காட்டப்படுகிறது. இது தெளிவில்லாமல் இருந்தாலும், நிச்சயமாக நல்லதைப் பற்றித்தான் அல்லது இயேசு அறிவிக்கும் இறையரசைப் பற்றியதாக அவை இருக்கவேண்டும் என்பது மற்றைய பகுதிகளில் இருந்து தெளிவாகிறது
மனமொத்திருத்தல் என்பதற்கு συμφώνησις (சும்போநேசிஸ்) என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்துதான் தற்கால சிம்பனி அல்ல சேர்ந்த இசை என்ற சொற்பதம் உருவெடுக்கிறது

.20: இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றாக இயேசுவின் பெயரில் கூடியிருத்தல் என்பது சீடர்களின் கூட்டத்தை குறிக்கிறது. இரண்டு அல்லது மூன்றுபேர் என்பவர்கள் சிறிய கூட்டத்தை குறிக்கிறது. இவர்கள் தனியாட்களாக இல்லாமல் பலராக இருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது
ஆரம்ப கால சீடர்கள் கிறிஸ்தவர்கள் ஒன்றாக இருப்பது அவர்களுக்கு பல வேளைகளில் ஆபத்தாக அமைந்தது. இதனால் அவர்கள் திருச்சபைக்கு வருவதை தவிர்த்தார்கள். இந்த வேளையில் இவர்கள் நடுவில் இயேசு இருக்கிறார் என்ற வாதம், நிச்சயமாக இவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்திருக்கும்
இந்த ஒன்றாக இருத்தல் என்பது 'இயேசுவில் பெயரில்' இருக்கவேண்டும் என்பது இந்த வரியின் மிக முக்கியமான மையக் கருத்து என்பதையும் இங்கே நோக்க வேண்டும் (εἰς τὸ ἐμὸν ὄνομα எய்ஸ் டொ எமொன் ஓநொமா- என் பெயரின் பொருட்டு).  

சகோதரர்கள் என்பவர்கள் அனைவரையும் குறிக்கிறார்கள்
சகோதரர்கள் ஒன்றாக இருப்பதைத்தான் கடவுள் விரும்புகிறார்
குற்றம் செய்தவர்களையும் கடவுள் மன்னிக்க ஆயத்தமாக இருக்கிறார்
சாபத்தை விட ஆசீரையே கடவுள் அதிகமாக தருகிறார்
கிறிஸ்தவம் தண்டனை கொடுப்பதைவிட ஆசீர்வதிப்பதையே விரும்பவேண்டும்.
மற்றவரை பாவி என்று சொல்ல நான் யார்?
நானும் கண்டுபிடிக்கப்டாத பாவியே


நானும் பாவிதான் என்பதை மறக்கவிடாதேயும்
அன்பு ஆண்டவரே, ஆமென்

மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்
வியாழன், 7 செப்டம்பர், 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூய திரித்துவ ஞாயிறு (ஆ) 26,05,2024: Trinity Sunday 2024

தூய திரித்துவ ஞாயிறு ( ஆ ) 26,05,2024 M. Jegankumar Coonghe OMI, Our Lady of Good Voyage,  Chaddy,  Velanai, Jaffna.  Saturday, 2...