புதன், 20 செப்டம்பர், 2017

25th Sunday in Ordinary Time A: ஆண்டின் பொதுக்காலம் இருபத்தைந்தாம் வாரம் (அ)



ஆண்டின் பொதுக்காலம் இருபத்தைந்தாம் வாரம் ()
24,09,2017


முதல் வாசகம்: எசாயா 55,6-9 
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 1,20-24.27
நற்செய்தி: மத்தேயு 20,1-16

நீதி-

அனைவருக்கும் பொதுவாக இருத்தல், சமமாக வழங்குதல், சரியான தீர்ப்புக்கள், சரியான பங்கீடுகள் போன்றவைகள்நீதி என்று மெய்யியல் பார்iவியிலே குறிக்கப்படுகின்றது. ஆனால் விவிலியம் பாராட்டும் நீதி என்பது பொருட்களைத் தாண்டியது. விவிலியம் நீதியை கடவுளுடைய அடிப்படை குணமாக காட்டும் அதேவேளை, கடவுளுடைய நீதியான அன்பையும் இரக்கத்தையும் அடையாளமாகக் கொண்டுள்ளது. இந்த இடத்திலே மனிதருடைய நீதியும், கடவுளுடைய நீதியும் வித்தியாசம் பெறுகின்றன. இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த காலத்திலேயே அவர்கள் எப்படி நீதி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விபரமாக சொல்லப்பட்டதாக விடுதலைப் பயணம், எண்ணிக்கை மற்றும் லேவியர் நூல்கள் காட்டுகின்றன. முக்கியமாக விதவைகள், குழந்தைகள், நோயாளர்கள், கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள், அநாதைகள், அடிமைகள், வெளிநாட்டவர் என பலதரப்பட்ட பாதிக்கப்படக்கூடிய மக்கள், இந்த நீதியின் எழுவாய்ப் பொருட்களாக காட்டப்படுகிறார்கள்
நீதியை நிலைநாட்ட போராடிய பெண்களையும் ஆண்களையும் விவிலியம் கனவான்களாக பார்க்கிறது. அவர்களுடைய வரலாறுகள் வீரவரலாறாக மெருகூட்டப்பட்டுள்ளன. தெபொரா தொடக்கம் அரசர் கால இறைவாக்கினர்கள் வரை இந்த வரலாறு நீண்டு கொண்டு செல்கிறது. எபிரேயம் நீதியைக் குறிக்க இரண்டு முக்கியமான சொற்களைப் பயன்படுத்துகிறது, அவை צְדָקָה ட்செதாகாஹ், מִשְׁפָּט மிஷ்பாத், இவை இரண்டும் சட்ட ரீதியான நீதியைக் காட்டுகின்றன. ட்செதாகாஹ் என்ற பதம், மனிதர்கள் அனைவரும் நீதியின் முன் சமனானவர்கள் என்றும், அவர்களின் வாழ்க்கை ஒழுங்குகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் காட்டுகின்றன. அதனைப்போல மிஷ்பாத் என்ற சொல், சட்டவரைவுகளையும், மத மற்றும் அரசியல் சட்டங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன. மிஷ்பாத் என்ற சொல் நேரடியாகவே சட்டத்தைக் குறிக்கிறது
இந்த இரண்டு எபிரேய சொற்களும் கிரேக்கத்தில் திகே அல்லது தியாகாய்யோசூனே (δίκη, δικαιοσύνη), என்ற சொற்களில் விளங்கப்படுத்தப்படுகின்றன. இவையும், நீதி அல்லது தீர்ப்புக்கள் என்ற அர்த்தத்தையே காட்டுகின்றன. இருந்தபோதும் இந்த சொற்பதங்கள் விவிலியத்தின் நீதி என்ற தலைப்பை முழுவதுமாக தெளிவுபடுத்துபனவாக இல்லை. ஆயினும் விவிலிய ஆசிரியர் நீதி என்ற கருப்பொருளை ஆழமாக சிந்திக்க விளைகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது
நீதி கடவுளில் இருந்து வெளிப்படுகிறது, அத்தோடு நீதிதான் கடவுளின் அடையாளமும் கூட (காண்க எசா 5,16: . 32,4). அதேபோல நீதியை அல்லது நீதியை மட்டுமே கடவுளும் தன்னுடைய மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்பதையும் விவிலியம் அதிகமாகக் காட்டுகிறது (காண்க .. 16,20). ஒரு சமூகம் எவ்வளவு நீதியானது என்பதை அந்த சமூகம் எப்படி எளியவர்களை நடாத்துகின்றது என்பதிலிருந்து அளவிடப்படுகிறது. விவிலியம் முழுவதுமாக நீதியைப் பற்றி கற்பித்தாலும், இறைவாக்கினர்கள்தான் நீதி என்ற தலைப்பை மிக முக்கிய கருப்பொருளாக எடுத்து, மக்கள் நீதியை பின்பற்ற வேண்டும் என்று இடித்துரைக்கிறார்கள். இவர்களுடைய மிக முக்கிய சொற்களாக மீக்காவின் இறைவாக்கை காட்டலாம், காண்க மீக்கா 6,8: மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
யூபிலி என்ற கருப்பொருளே நீதியில்லாத சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட கொண்டுவரப்பட்ட ஒரு வாழ்கை முறையைக் காட்டுகிறது. பிற்காலத்தில் இத பாரம்பரியமாக பழக்கப்பட்டது (காண்க லேவியர் 25). ஒவ்வொரு ஐம்பது ஆண்டுகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இந்த யூபிலி உடன்படிக்கை சட்டத்திலும், இணைச்சட்ட சட்டத்திலும் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன. யூபிலி ஆண்டிலே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, வாங்கப்பட்ட நிலங்கள் அவற்றின் சொந்த உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. அடிமைகள் விடுதலை செய்யப்பட்டர்கள். இந்த நியதிகள் முக்கியமாக எபிரேயர்களுக்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், நீதியை இஸ்ராயேலர்கள் மிக முக்கியமான கொண்டிருக்கிறார்கள் என்பது திருப்தி தரக்கூடிய ஒரு உண்மை
இஸ்ராயேலைப் போல வேளான்மை சமூதாயத்திலே கடன்கள் தள்ளுபடி செய்யப்படுதலும், நிலங்கள் திருப்பி தரப்படுதலும், சமுதாயத்தை மீள உருவாக்குவதில் மிக முக்கியமான பங்காற்றின


எசாயா 55,6-9 
6ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் 
இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். 7கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக் அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். 8என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். 9மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

எசாயா புத்தகத்தின் ஐம்பத்தி ஐந்தாவது அதிகாரம் ஆண்டவரின் இரக்கத்தைப் பற்றி பேசுகிறது. இந்த பகுதி இரண்டாம் எசாயாவின் புத்தகத்தின் ஒரு அங்கம் என கருதப்படுவதால், இதன் 
பின்புலத்தை பபிலோனியாவிலிருந்து நாடு திரும்பிய சூழலை கருத்தில் எடுக்கலாம். பல விதமான சவால்களும், அங்கலாய்ப்புக்களும் அவர்கள் கண்முன்னால் வந்து போயிருக்கும். இந்த வேளையில் எசாயாவின் ஐம்பத்தைந்தாவது அதிகாரம் மிகவும் இதமான வார்த்தைகளைக் கொண்டு நம்பிக்கை கொடுப்பதாய் அமைந்துள்ளது. வசனங்கள் 1-5: மிகவும் அழகான வரிகளையும் வரலாற்று அனுபவங்களையும் கொண்டு யூதமக்களை சிந்திக்க வைக்கிறது. தாவீது இங்கே நினைவுகூரப்படுகிறார். பசியும் வறுமையும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் இல்லாமல் போகும் எனச் சொல்லப்படுகிறது

.6: சரியான நேரத்தில் சரியான செயற்பாடுகளைச் செய்யுங்கள் என்கிறார் எசாயா இறைவாக்கினர். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடச்சொல்கிறார்: דִּרְשׁוּ יְהוָה בְּהִמָּצְאוֹ திர்ஷு அதோனாய் பெஹிம்மாட்ஸ்'. இதனை 'ஆண்டவர் தன்னை தேடும் வாய்பை தரும்பொழுதே அவரைத் தேடுங்கள்' என்று நேரடியாக மொழி பெயர்க்கலாம். இதற்கு இணையாக அடுத்த பகுதி திருப்பிக்கூறுதல் என்ற எபிரேய கவிநடையில் வருகிறது. அது: קְרָאֻהוּ בִּהְיוֹתוֹ קָרֽוֹב׃  கெரா'ஊஹு 
பிஹெஓதோ கார்ஓவ் என்று வாசிக்கிறது. இதனை, அவர் அருகில் உள்ளபோதே அழையுங்கள் என்று மொழிபெயர்க்கலாம்
இந்த வரிமூலம், ஆண்டவரை வழிபடுதல் என்பது நாளாந்த செயற்பாடு எனவும், அதனை ஒருவர் தன்னுடைய சொந்த சூழலியலிலே செய்ய வேண்டும் என்றும், இந்த முக்கியமான செயற்பாட்டை பிற்போடுதல் உகந்ததல்ல என்பதும் காட்டப்பட்டுள்ளது

.7: இந்த வரியில் கொடியவர்கள் எழுவாய்ப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளார்கள். கொடியவர்களை குறிக்க எபிரேயம், רָשָׁע֙ ராஷா' என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இதன் அர்த்தமாக, தீமை செய்கிறவர்கள், பொல்லாதவர்கள், வஞ்சகக்காரர்கள், கடவுளையும் அவர் மக்களையும் வெறுப்பவர்கள் என்ற பல அர்த்தத்தைக் காணலாம். ஏன் இப்படிப்பட்டவர்களை எழுவாய்ப் பொருளாக எசாயா எடுக்கிறார் என்பது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இந்த சொல் சில வேளைகளில் சாதாரண பாவிகளையும் குறிக்கும். இதனால் இந்த இடத்தில் எசாயா பாவிகளைத்தான் குறிக்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது
இந்த வரியும் திருப்பிக்கூறல் முறையிலே அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது பிரிவையும் இரண்டாவது பிரிவையும் வைத்து ஒப்பிட்டு நோக்குகையில், எசாயா பாவிகளைத்தான் இங்கே குறிப்பிடுகிறார் என்பது புலப்படுகிறது
. יַעֲזֹב רָשָׁע דַּרְכּ֔וֹ யா'அட்ஸோவ் ராஷா' தர்கோபொல்லாதவன் தன் வழியை கைவிடுவானாக
. וְאִ֥ישׁ אָוֶן מַחְשְׁבֹתָ֑יו வெ'இஷ் 'ஆவென் மஹ்ஷெவோதாவ்- பாவ மனிதன் தன் எண்ணத்திலிருந்து
இந்த வரியின் இரண்டாவது பாகத்தில், இப்படியாக கடவுளிடம் திரும்பி வருவதனால் 
இவர்களுக்கு கிடைக்கும் நன்மைத்தனங்கள் விளக்கப்படுகிறது. இவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவார் என்பது சொல்லப்படுகிறது (וִֽירַחֲמֵ֔הוּ விரஹமெஹு- அவனுக்கு அவர் இரக்கம்காட்டுவார்). அத்தோடு கடவுள் மன்னிப்பதில் தாராள மனத்தினர் என்பதும் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறது
இந்த இரண்டு வரிகளும் (வவ 6-7) இணைச்சட்ட நூலின் (காண்க 4,25-31: 30,1-10) இந்த பகுதிகளை நினைவூட்டுகின்றன. இந்த பகுதியில் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் திரும்பி வருகின்றபோது கடவுள் எந்த மனநிலையில் மக்களை வரவேற்பார் என்பதை கடந்த காலத்திலேயே சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பாவம் செய்து பின்னர், மக்கள் மனந்திரும்பி திரும்பி வந்தால், கடவுள் எப்போதுமே அவர்களை வரவேற்க ஆயத்தமாய் இருக்கிறார் என்பதை அவை காட்டுகின்றன (ஒப்பிடுக 1அரசர்8: 8,46-53). 

.8: எசாயா இந்த வரியில் கடவுளின் நேரடி வார்த்தையை பதிவு செய்கிறார். ஆண்டவருடைய எண்ணங்கள் மனிதருடைய எண்ணங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. எண்ணங்கள் செயற்பாடுகளையும் குறிக்கலாம், அல்லது எண்ணங்களே பின்னர் செயல் வடிவம் பெறுவதால், அவை செயற்பாடுகளுக்கான முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது, (מַחֲשָׁבָה மஹஷாவாஹ்
எண்ணங்கள் என்று சொல்லப்பட்டது இரண்டாவது பகுதியில் செயற்பாடுகள் என்று நேரடியாகவே சொல்லப்படுகின்றன. செயற்பாடுகளைக் குறிக்க பாதைகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றன (דְּרָכָי தெராகாவ்- என்பாதைகள்). 

.9: மேல்சொன்ன ஒப்பீடுதல்களைக் குறிக்க மண்ணகமும், விண்ணகமும் உருவகிகப்பட்டுள்ளன. மண்ணகத்திற்கு மேலாக விண்ணகம் இருப்பதாகவும், மண்ணகம் மக்களுடையதாகவும், விண்ணகம் இறைவனுடையதாகவும் இஸ்ராயேலர்கள் ஆழமாக நம்பினர் (שָׁמַיִם ஷமாயிம்- விண்ணகங்கள்: אֶרֶץ 'எரெட்ஸ்- மண்ணகம், நிலம்). 
இந்த மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் இடையிலான உயரம் மிக விசாலமானது அதனைப்போலவே மனிதரின் எண்ணங்களிலிருந்தும், பாதைகளிலிருந்தும் கடவுளின் எண்ணமும் பாதையும் உயரமாக அதாவது உன்னதமாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது
திருப்பாடல் 145
அரசராம் கடவுள் போற்றி!
(தாவீதின் திருப்பாடல்)

1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்
2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்
3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது
4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்
5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்
6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்
7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்
8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்
11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்
13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது
14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்
15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்
16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். 17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே
18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்
19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்
20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார்
21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

திருப்பாடல் புத்தகத்தில் காணப்படும் அகரவரிசைப் பாடல்களில் இந்த 145வது சங்கீதமும் ஒன்று. நுன் (נ , ן , பதினான்காவது எழுத்து) வருகின்ற வரி மட்டும் இதில் இல்லாமல் இருக்கிறது
இதனால்தான் இந்த பாடல் 21வரிகளைக் கொண்டிருக்கிறது, இல்லாவிடில் இதில் 22வரிகள் காணப்படும். காலத்தின் ஓட்டத்தில் இந்த வரி அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறது
இருந்தாலும், மனித மொழியான எபிரேயம், ஆண்டவரின் மறைபொருளை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதது என்பதைக் காட்டவே, ஆசிரியர் வேண்டுமென்றே இந்த (நுன்) வரியை (14ம்) விட்டிருக்கலாம் என்ற ஒரு பலமான வாதமும் இருக்கிறது
இந்தப் பாடல், கடவுள் பாடப்படவேண்டியவர், மற்றும் அவருடைய மாட்சிமை புகழப்படவேண்டியது என்பதைக் காட்டுகிறது. தாவீதின் திருப்பாடல் என்று தொடங்கும் இந்த திருப்பாடல், அதிகமான திருப்பாடல்களைப் போல் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. (תְּהִלָּה לְדָוִד தெஹிலாஹ் லெதாவித் - தாவீதின் (தாவீதுக்கு) பாடல் (புகழ்))

.1 (א '- அலெப்): திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய அரசராக காண்கிறார் 
(אֱלוֹהַי הַמֶּלֶךְ 'எலோஹாய் ஹம்மெலெக்- என்கடவுள் அரசர்). கடவுளைப் போற்றுவதும் அவர் பெயரைப் போற்றுவதும் சமனாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புகழ்ச்சி என்றென்றைக்கும் நடைபெற வேண்டியது என்கிறார்.

.2 (בּ - பெத்): மீண்டுமாக ஆண்டவரும் அவர் பெயரும் ஒத்தகருத்துச் சொற்களாக பார்க்கப்டுகின்றன. ஆண்டவரை போற்றுதலும் அவருடைய பெயரை புகழ்தலும் நாள் முழுவதும் செய்யப்பட வேலை என்பதை விளக்குகின்றார்

.3 (גּ கி- கிமெல்): ஆண்டவரை புகழ்வதற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பெரியவர், மாட்சிக்குரியவர். இந்த சொற்கள், மனிதர்கள் மற்றும் மனித தலைவர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு ஆண்டவருடைய உயரிய தன்மைகள் தேடிக்கண்டுபிடிக்க முடியாதவை என்பதையும் விளக்குகிறார் (אֵין חֵקֶר 'ஏன் ஹகெர்- தேட முடியாதது). 

.4 (דּ - தலெத்): ஒரு தலைமுறையின் நோக்கத்தை கடவுள் அனுபவத்தில் பார்க்கிறார் ஆசிரியர். அதாவது ஒரு தலைமுறையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு கடவுளின் புகழை எடுத்துரைப்பதாகும் என்கிறார். இந்த புகழை அவர், வல்லமையுடைய செயல்கள் என்கிறார்

.5 (ה - ஹெ): மனிதர்கள் எதனைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. கடவுளுடைய வியத்தகு செயல்கள், மாண்பின் மேன்மை இவற்றைப் பற்றியே தான் சிந்திப்பதாகச் சொல்கிறார். இது கடவுளை புகழ்தலுக்கு சமமானது என்ற அர்த்தத்தில் வருகிறது

.6 (ו - வாவ்): கடவுளுடைய செயல்கள் அச்சம் தருபவை என சொல்லப்படுகின்றன. இந்த அச்சம் பயத்தினால் ஏற்படுபவையல்ல, மாறாக கடவுள்மேல் உள்ள மாறாத அன்பினால் வருபவை. கடவுளுடைய இந்த அச்சந்தரும் செயல்கள், மாண்புக்குரிய உயரிய செயல்கள் என்று ஒத்த கருத்தில் திருப்பிக்கூறப்பட்டுள்ளது (גְּדוּלָּה கெதூலாஹ்- உயர்தன்மை). 

.7 (ז ட்ச- ட்சயின்): ஆண்டவரின் உயர்ந்த நற்பண்புகளை நினைப்பது அவரை புழந்து பாடுவதற்கு சமன் என்கிறார். ஒருவருடைய நற்பண்புகளை நினைத்தல், அவர்மேல் உள்ள நல்மதிப்பு மற்றும் விசுவாசத்தை ஆழப்படுத்தும், என்ற தற்கால உளவியல் சிந்தனைகளை அன்றே அறிந்திருக்கிறார் இந்த ஆசிரியர்

.8 (ח - ஹத்): முதல் ஏற்பாடு அடிக்கடி கொண்டாடும் கடவுளைப் பற்றிய பல நம்பிக்கைகளை 
இந்த வரி அழகாக தாங்கியுள்ளது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர் என்பது 
இஸ்ராயேலருடைய நாளாந்த நம்பிக்கை. இந்த இரக்கமும் கனிவும்தான் கடவுளின் மன்னிப்பை மக்களுக்கு பெற்றுத்தருகிறது என இவர்கள் நம்பினார்கள் (חַנּוּן וְרַחוּם יְהוָה ஹனூன் வெராஹும் அதோனாய் - இரக்கமும் பரிவும் உள்ளவர் ஆண்டவர்). 
இந்த ஆண்டவர் எளிதில் சினம் கொள்ளாதவர் என்கிறார் ஆசிரியர். தெய்வங்களின் கோபம், நோய் மற்றும் போர் போன்ற துன்பங்களை உலகில் ஏற்படுத்துகின்றன என்று அக்கால ஐதீகங்கள் நம்பின, இதனை மறுத்து உண்மையான இஸ்ராயேலின் தேவனின் குணங்கள் பாராட்டப்படுகின்றன (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அபிம்- மூக்கில் மெதுமை, கோபத்தில் மெதுமை). ஆண்டவருக்கு பேரன்பு என்ற அழகான பண்பு மகுடமாக சூட்டப்படுகிறது (חָסֶד ஹெசெட்- அன்பிரக்கம்). மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்புகள் ஆண்டவருக்கு மட்டுமே அதிகமாக விவிலியத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்க வேண்டும்

.9 (טֹ - தெத்): ஆண்டவர் அனைவருக்கும் (அனைத்திற்கும்) நன்மை செய்கிறவராக பார்க்கப்படுகிறார். இந்த அனைத்து (כֹּל கோல், சகலமும்) என்பதை அவர் உருவாக்கியவை என காட்டுகிறார் ஆசிரியர். ஆக இந்த உலகத்தில் கெட்டவை என்பது கிடையாது, அனைத்தும் நல்லவை, அவையனைத்தையும் ஆண்டவரே உருவாக்கியுள்ளார் எனக் காட்டுகிறார். ஆண்டவருடைய இரக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக அது அனைத்திற்கும் உரியது. இந்த சிந்தனை சாதாரண யூத சிந்தனையிலிருந்து மாறுபட்டது

.10 (יֹ - யோத்): இப்படியாக ஆண்டவர் உருவாக்கிய (מַעֲשֶׂה மா'அசெஹ்- உருவாக்கியவை) அனைத்தும் அவருக்கு நன்றி செலுத்துகின்றன. இந்த ஆண்டவர் உருவாக்கியவை என்பவை ஆண்டவருடைய அன்பர்கள் (חָסִיד ஹசிட்- தூயவர், அன்பர்) என பெயர் பெறுகின்றன

.11 (כּ - கப்): இந்த அன்பர்கள் கடவுளுடைய ஆட்சியின் வித்தியாசத்தை அறிவிக்கிறவர்கள் அதாவது அவருடைய வல்லமையை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆண்டவரை அரசராக பார்ப்பதும் அவருடைய அரசில் நன்மைத்தனங்களை பாடுவதும், முதல் ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். இதனைக் கொண்டு அவர்கள் மனித அரசர்களை பாராட்டவும், எச்சரிக்கை செய்யவும் செய்தார்கள்

.12 (ל - லமெத்): இந்த தூயவர்கள் மானிடர்க்கு ஆண்டவரின் வல்ல செயல்களை சொல்கிறார்கள். மானிடர்கள் என்பவர்கள் இங்கே ஆண்டவரை அறியாத வேற்றின மக்களைக் குறிக்கலாம். இந்த மானிடர்களைக் குறிக்க ஆதாமின் மக்கள் (בְנֵי הָאָדָם வெனே 'ஆதாம்) என்ற சொல் பயன்படுகிறது. இந்த சொல் சில வேளைகளில் இஸ்ராயேல் மக்களையும் குறிக்க பயன்படுகிறது. ஆண்டவருடைய ஆட்சிக்கு பேரொளி உள்ளதாகவும் ஆசிரியர் காட்டுகிறார்

.13 (ם מ - மெம்): அனைத்து மன்னர்களுடைய ஆட்சியும் காலத்திற்கு உட்பட்டதே. மன்னர்களின் ஆட்சிகள் தொடங்குகின்றன பின்னர் அவை முடிவடைகின்றன. ஆளுகை என்பது அவர்களின் ஆட்சி நடைபெறும் இடங்கள். இவையும் மாற்றமடைகின்றன. ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் அவர் இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர். இதனைத்தான் ஆசிரியர் அழகாகக் காட்டுகிறார். ஒருவேளை இந்தப் பாடல் இடப்பெயர்விற்கு பின்னர் அல்லது யூதேய அரசு சிக்கலான காலங்களில் இருந்த போது எழதப்பட்டிருந்தால், இந்த வரி அதிகமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்

.14 (סֹ - சாமெக்): இந்த பதிநான்காவது வரி எபிரேய (அரமேயிக்க) எழுத்தில் நுன்னாக ן ,) இருந்திருக்க வேண்டும். எதோ ஒரு முக்கிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நுன் விடப்படுகிறது. அதற்கு பதிலாக சாமெக் வருகிறது, இது பதினைந்தாவது எழுத்து. சில கும்ரானிய படிவங்கள் இந்த பதிநான்காவது எழுத்திற்கும் ஒரு வரியை புகுத்த முயன்றிருக்கின்றன, ஆனால் பிற்காலத்தில் அவை மூலப் பாடலின்படியே விடப்பட்டுள்ளன. கும்ரானிய பிரதியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வரி இவ்வாறு வருகிறது: 'ஆண்டவருடைய வார்த்தைகள் எக்காலத்திற்கும் நம்பக்கூடியவை, அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிகைக்கு உரியவை'  
சாமெக் வரி, பாதிக்கப்பட்டவர்களை கடவுள் எப்படி காக்கிறார் எனக் காட்டுகிறது. கடவுள் தடுக்கி விழுகிறவர்களை காக்கிறவராக காட்டப்படுகிறார். இந்த தடுக்கி விழுகிறவர்களை எபிரேய விவிலியம், துன்புறுகிறவர்கள் மற்றும் மற்றவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் போன்றோரைக் குறிக்கிறது (הַנֹּפְלִים ஹநோப்லிம்- விழுகிறவர்கள்: הַכְּפוּפִים ஹப்பூபிம்- ஊக்கமிழந்தவர்கள்). 

.15 (ע '- அயின்): அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்குபவராக கடவுள் காட்டபடுகிறார். இந்த வரியை எபிரேயே விவிலியம், 'அனைத்து கண்களும் உம்மையே எதிர்பார்க்கின்றன' என்ற வரியில் காட்டுகிறது, அத்தோடு கடவுள் அனைத்திற்கும் தக்க காலத்தில் உணவளிக்கிறவர் எனவும் காட்டுகிறது. இங்கே கடவுள் அதிசயம் செய்து, காலங்களை கடந்து அல்லது காலத்திற்கு புறம்பாக உணவளிப்பவராக காட்டப்படவில்லை, மாறாக அவர் தக்க காலத்திலேயே உணவளிக்கிறார். அதாவது காலங்களை அவர் நெறிப்படுத்துகிறார் எனலாம். அதிசங்களை இயற்கைக்கு வெளியில் தேடாமல், இயற்கையே அதிசயம்தான் என்ற அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது

.16 (פּ, ף - பே): ஆண்டவர் தன் கைகளை திறந்து அனைத்து உயிரினங்களினதும் தேவைகளை நிறைவேற்றுகிறவராக பாடப்படுகிறார். ஆண்டவர் கரங்களை திறத்தல் என்பது, வானங்களை திறந்து மழைநீரை வழங்குவதைக் குறிக்கலாம். மழைநீர் அனைத்து உயிரினங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதால் இப்படி உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஆண்டவரின் கரங்களில் அனைத்து விதவிதமான உணவுகளும் அடங்கியிருக்கின்றன என உருவகங்கள் மூலமாகக் காட்டுகிறாh. 


.17 ץ ட்ச- ட்சாதே ): உலக அரசர்கள் தங்களுக்கென்று நீதியை வைத்திருக்கிறார்கள். நாடுகள், கலாச்சாரங்கள், சுய தேவைகள் என்பவற்றிருக்கு ஏற்ப உலக நீதி மாற்றமடைகிறது அல்லது திரிபடைகிறது. ஆனால் கடவுளை பொறுத்தமட்டில் அவரது நீதிக்கு மாற்றம் கிடையாது அவர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளவராகவே இருக்கிறார். இந்த அனைத்து செயல்களில் ஆண்டவரின் தண்டனையும் உள்ளடங்கும். ஆண்டவர் தண்டிக்கும்போதும் நீதியுள்ளவராகவே இருக்கிறார்


.18 - கோப்): ஆண்டவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி விவிலியத்தில் மிக முக்கியமானது. பல இடங்களில் ஆண்டவர் வானத்தில் இருக்கிறார் என விவிலியம் காட்டினாலும், ஆண்டவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை இந்த வரி ஆழமாகக் காட்டுகிறது. அதுவும் அந்த விசுவாசிகள் கடவுளை உண்மையில் அழைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பையும் தருகிறது

.19 - ரெஷ்): ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மெச்சப்படுகிறார்கள். காட்டுச் சுதந்திரத்தையும், பொறுப்பில்லாத தனிமனித சுதந்திரத்தையும் பாராட்டுகின்ற இந்த உலகிற்கு, கடவுள்-அச்சம் ஒரு உரிமை மீறலாகவே காணப்படும். விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்ற கடவுள் அச்சம் என்பது, மரியாதை மற்றும் அன்பு கலந்த விசுவாச அச்சத்தைக் குறிக்கும். இங்கே மனிதர்கள் பயத்தால் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள் என்றில்லை, மாறாக சட்டங்களில் உள்ள தேவைகள் மற்றும் கடவுளில் உள்ள அன்பின் பொருட்டு அதனை செய்கிறார்கள். இதனைத்தான் ஆசிரியர் பாராட்டுகிறார். இவர்களின் தேவையை கடவுள் நிறைவேற்றுகிறார் என்கிறார்

.20 (שׁ - ஷி;ன்) இந்த வரி கடவுளை பாதுகாக்கிறவராகக் காட்டுகிறது (שׁוֹמֵר ஷோமெர்). ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொண்டவர்களை பாதுகாக்கின்றவேளை பொல்லார்களை அழிக்கிறார். பாதுகாக்கிறவர் அழிக்கிற வேலையையும் செய்கிறவர் என்ற சிந்தனை பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த சிந்தனை புதிய ஏற்பாட்டில் மெதுவாக மாற்றம் பெறுகிறது

.21 - தௌ): இந்த இறுதி வரியில் தன்னுடைய வாயையும், உடல் கொண்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக்கி, இவை ஆண்டவரின் திருப் பெயரின் புகழை அறிவிப்பதாக என்று ஒரு விருப்பு வாக்கியத்தை அமைக்கிறார். உடல் கொண்ட அனைத்தும் என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும்



பிலிப்பியர் 1,20-24.27
20என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன். இதுவே என் பேராவல்
இதுவே என் எதிர்நோக்கு. 21ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. 22எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. 23இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். — இதுவே மிகச் சிறந்தது. — 24ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். — இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது

27ஒன்றைமட்டும் மறந்துவிடாதீர்கள்; கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.

பிலிப்பி நகர் உரோமைய பேரரசில் மிக முக்கியமான இடத்தில் இருந்தது. மாக அலெக்சான்டருடைய தந்தை மசிதோனியா பிலிப்புக்கு இந்த நகர் அர்ப்பணிக்கப்பட்டது. கிரேக்கர்களை போரில் வென்றாலும், அவர்களின் நகர்களையோ, அல்லது காலாச்சாரத்தையோ உரோமையர்கள் அழித்தார்கள் என்று அதிகமாக சொல்வதற்கில்லை. (நம்நாட்டில், வடநாட்டினர்க்கு தென்நாட்டவர் செய்ததைப்போல இல்லை). உரோமையர்கள் பிலிப்பு நகரை வெளிநாட்டு குட்டி உரோமையாகவே கருதினர். இங்கே வாழ்க்கைமுறையும், அதிகமான உள்மான அரசியல் சமூக கட்டமைப்பும் உரோமையை ஒத்ததாகவே காணப்பட்டது. இதனை உரோமையர்கள் விரும்பினர்
பல சீசர்கள் இந்த பிலிப்பு நகரை விரும்பியிருக்கிறார்கள். மார்க் அன்டனி, மற்றும் ஒக்டாவியன் போன்றவர்கள் தங்களுக்கு விசுவாசமான போர் வீரர்களை இந்த நகரிலே குடியேற்றி இதனை ஒரு உரோமை காலனியாக மாற்றி, இந்த நகரை பல வித்தில் வளப்படுத்தினர். பிலிப்பி நகர்தான் ஐரோப்பாவில் முதன் முதலில் நற்செய்தியை பெற்றுக்கொண்ட நகர். பவுல்தான் இங்கே நற்செய்தியை கொண்டுவந்தார். தி.பணி 16,9-10: பவுல் இந்நகருக்கு தன்னுடைய ஒரு கனவு வெளிப்பாட்டின் பொருட்டு சீலாவுடனும், திமோத்தேயுவுடனும் வந்தார். லிதியா என்கின்ற ஒரு பெண் இங்கே பவுலுடைய நற்செய்தி பணிக்கு மிக உதவியாக முதன் முதலில் தன் கதவுகளை திறந்துவிட்டார். இங்கே யூதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு இங்கே ஒரு செபக்கூடமும் இருந்திருக்கிறது. அதேவேளை இங்கே உரோமைய மற்றும் கிரேக்க நம்பிக்கைகள் அதிகமாகவே இருந்திருக்கிறது. பவுலுடைய போதனைகள் இங்கே பல தாக்கங்களை ஏற்படுத்தின. இதன் காரணமாகத்தான் பவுலும் சீலாவும் இங்கே சிறையில் அடைக்கப்பட்டார்கள். பவுல் பல தடவைகள் பிலிப்பி நகருக்கு வந்திருக்கவேண்டும். பவுல் பிலிப்பியில் மிகவும் வலுவான ஒரு கிறிஸ்தவ சபையை நிறுவினார் என நம்பலாம். இந்த சபை பல காலம் அவரோடு உறவாடி இருந்திருக்கிறது. பிலிப்பி நகர திருச்சபையை சில ஆய்வாளர்கள் பவுலுடைய அன்புத் திருச்சபை எனவும் காண்கின்றனர்
பிலிப்பியருக்கான திருமடலை பவுல் சிறையில் இருந்தபோது எழுதினார் என தெரிகிறது (காண்க 1,12-26). இதனால் பிலமோன், கொலோசேயர், மற்றும், எபேசியர் திருமுகங்களோடு சேர்த்து இந்த கடிதமும், சிறைக்கூடக் கடிதம் என அழைக்கப்படுகிறது. பவுல் செசாரியா, எபேசு மற்றும் உரோமையில் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். ஆக எங்கிருந்து இவர் இந்த திருமடலை எழுதினார் என்று உறுதியாக சொல்வது கடினமாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கும், சார்பாகவும் எதிராகவும் பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். பாரம்பரியமாக பவுல் உரோமைய சிறையிலிருந்தே இந்த கடிதத்தை எழுதினார் என்று நம்பப்படுகிறது

.20: பிலிப்பியர் முதலாவது அதிகாரம் பவுலுடைய ஆழமான நம்பிக்கையையும், அவர் இயேசு ஆண்டவர் மேல் வைத்திருந்த அன்பையும் அழகான வார்த்தைகளில் காட்டுகிறது. பவுல் தான் சிறையில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஏற்றுக்கொள்கிறார். பலர் பல நோக்கங்களுக்காக கிறிஸ்துவை அறிக்கையிடுகிறார்கள், இருப்பினும் கிறிஸ்து எதோ ஒரு விதத்தில் அறிக்கையிடப்படுவது தனக்கு மகிழ்வை தருவதாக பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறார்சிறையில் இருந்தாலும், இந்த கடிதத்தை எழுதும்போது அவர், தன் கிறிஸ்தவர்களின் மன்றாட்டால் (.19) விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தார் என்பதும் தெரிகிறது
பவுல் தான் என்ன நேர்ந்தாலும் வெட்கமுறமாட்டேன் என்கிறார் (οὐδενὶ αἰσχυνθήσομαι ஊதெனி அய்ஸ்குன்தேசொமாய்). இங்கே அவர் தன்னுடைய சிறைவாசத்தையும், மறைசாட்சிய வாழ்வையும் குறிப்பிடலாம் என எடுக்கலாம். கிறிஸ்துவை வாழ்விலும் சாவிலும் அதுவும் தன் உடலின் பெருமைப்படுத்தவதாகவும் சொல்கிறார். இந்த வரி மிக மிக ஆழமான பவுல் ஆன்மீகத்தைக் கொண்ட வரி. இப்படிச் செய்வது தன்னுடைய பேராவல் எனவும், அதுவே தன்னுடைய எதிர்நோக்கு என்றும் சொல்கிறார் (ἀποκαραδοκία; அபொகாராதொகியா- பேராவல்: ἐλπίς எல்பிஸ்- எதிர்நோக்கு). 

.21: பிலிப்பியர் திருமுகத்திலும் சரி முழு புதிய ஏற்பாட்டிலும் சரி இந்த வரி மிக முக்கியமான 
இடத்தைப் பெறுகிறது. பல விரிவுரையாளர்களாலும், பல மறையுரைஞர்களாலும் இந்த வரி அதிகமாக இறையியல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரியின் ஆழத்தைக் கொண்டே பவுலுடை விசுவாசத்தின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம்
பவுல் தான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவிற்காகவே என்றும், இறந்தாலும் அது தனக்கு ஆதாயமே என்கிறார் (τὸ ζῆν Χριστὸς καὶ τὸ ἀποθανεῖν κέρδος டொ ட்சேன் கிறிஸ்டொஸ் காய் டொ அபொதாநெய்ன் கெர்தொஸ்). இவ்வாறு தன்னுடைய இறப்பையும் வாழ்வையும் கிறிஸ்து என்ற அளவையால் அளக்கிறார் எனலாம்

.22: இப்படிச் சொன்னவர் இந்த வரியில் சற்று தடுமாறுகிறார். இறப்பது ஆதாயம் எனச் சொன்னவர், வாழ்வது மேலும் பயனைக் கொடுக்கும் என உணர்வது போல தெரிகிறது. இந்த தெரிவில் தனக்கு எதை செய்வது என்பது தெரியவில்லை என்கிறார் (οὐ γνωρίζω கினோரிட்சோ- எனக்கு தெரியவில்லை). 

.23: இந்த வரியில் தன்னுடைய தெரிவு பிரச்சனையை இழுபறி என்று சொல்கிறார். உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்பது ஒரு பக்கம் எனச் சொல்கிறார். பவுல் தன்னுடைய ஆரம்ப காலத்தில், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை உடனடியான ஒரு நிகழ்வாகக் கண்டபடியால், அவர் இறப்பதை பெரிய விடயமாக கருதியிருக்கமாட்டார். இவர் சாதாரண உயிர் நீத்தலை விரும்பினர் என்று எடுக்கமுடியாது, கிரேக்க வார்த்தைகள் இந்த இடத்தில் அழகான காரண காரிய வாரி மூலம் பவுல் விருப்பத்தைக் காட்டுகிறது. அதாவது தான் உயிர் நீத்தல் கிறிஸ்துவோடு இருப்பதற்கே என்றாகிறது

.24: தன்னுடைய இழுபறியின் இரண்டாவது பக்கத்தைக் விவாதிக்கின்றார். தான் இன்னும் வாழவேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது என்கிறார். இந்த வரிகளை வைத்துப் பார்க்கின்றபோது, இந்த சிறைவாழ்வு நிச்சயமாக மரணத்தை கொண்டுவராது என்பதை பவுல் அறிந்திருந்தார் எனலாம்
தான் உயிர் வாழ நினைப்பது தனக்காக அல்ல, மாறாக பிலிப்பிய திருச்சபைக்காகத்தான் என்றும் அதனை விவரிக்கின்றார் (ἀναγκαιότερον δι᾿ ὑμᾶς. அனாக்காய்யோதெரொன் தி ஹுமாஸ்- உங்கள் பொருட்டு தேவையாக உள்ளது).

வவ.25-26: தான் பிலிப்பியரோடு இன்னும் சிறிது காலம் இருந்தால் அவர்கள் நம்பிக்கையில் வளர்வார்கள், அத்தோடு அது கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் பிலிப்பியருக்கு பெருமையாகவும் இருக்கும் என்றும் சொல்கிறார்

.27: தான் வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்பதில் இழுபறி இருக்கும் நிலையில் ஒன்றை மட்டும் பிலிப்பியருக்கு வலியுறுத்துகிறார் அதாவது அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளவேண்டும் என ஆசிக்கிறார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு வாழுதல் என்பதை கிரேக்கம் கிறிஸ்துவின் குடிமக்களாக வாழுதல் என்று வார்த்தைப்படுத்துகிறது (Χριστοῦ πολιτεύεσθε கிறிஸ்டூ பொலிடெயுஎஸ்தே). 
இதனை தான் வந்து பார்த்தாலும் சரி அல்லது கேள்விப்பட்டாலும் சரி, தனக்கு அது மகிழ்வாக இருக்கும் என்கிறார்


மத்தேயு 20,1-16
திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை

1'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். 2அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். 3ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். 4அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். 5அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். 6ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், 'நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். 7அவர்கள் அவரைப் பார்த்து, 'எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். 8மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். 9எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். 10அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். 11அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 12'கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே' என்றார்கள். 13அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். 16இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்' என்று இயேசு கூறினார்.

இயேசு கலிலேயாவில் தன்னுடைய ஆரம்ப பணிகளை முடித்துக்கொண்டும், அங்கேயே தன் சீடர்களை தெரிவு செய்துவிட்டும், எருசலேம் நோக்கி பயணமாகும் வேளையில் இறையரசைப் பற்றியும் தன்னுடைய பாடுகளைப் பற்றியும் அதிகமாக பேசுகிறார். இறையரசு மத்தேயு நற்செய்தியல் மிக முக்கியமானதும், மையமானதுமான ஒரு கருப்பொருள். இதனைச் சுற்றியே மற்றைய போதனைகள் அமைந்திருக்கின்றன. ஏற்கனவே இயேசு தன்னுடைய பாடுகளைப் பற்றி இரண்டு முறை அறிவித்துவிட்டார் இப்போது மூன்றாம் முறை அறிவிப்பதற்கு முன் இறையரசின் இன்னொரு பண்பை விளக்க முன்வருகிறார். இந்த திராட்சை தோட்ட உரிமையாளர் உவமை, கடவுளின் இரக்க முகத்தை வித்தியாசமாக திருத்தூதர்களுக்கு காட்டியிருக்கும். தொழிற் சங்கங்களும், போராட்டங்களும், தொழிலாளர் உரிமைகளும் மதிக்கப்படாத அக்காலத்தில், நாட்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் முழுவதுமாகவே முதலாளிகளின் இரக்கத்தையே நம்பியிருந்தார்கள். இந்த காலத்து வாசகர்களுக்கு இந்த நற்செய்திப்பகுதி வித்தியாசமான ஒரு வாசகத்தை கொடுத்திருக்கும் எனலாம். கடவுளுடைய நீதி வித்தியாசமானது என்பதையும் கடவுளுடைய பார்வையும் மனிதர்களுடைய சாதாரண பார்வையிலும் பார்க்க பன் மடங்கு மேன்மையானது என்பதையும் இந்த பகுதி அழகாகக் காட்டுகிறது

.1: இன்னொரு முறை இயேசு விண்ணரசை ஒப்பிட்டுப் பேசுகிறார். விண்ணரசை மத்தேயு யூதர்க்ளின் மொழியையும் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு, வாணங்களின் அரசு என குறிப்பிடுகிறார் (ἡ βασιλεία τῶν οὐρανῶν ஹே பாசிலெய்யா டோன் ஊரானோன்- வானங்களின் அரசு). மற்றைய நற்செய்தியாளர்கள் இதனை இறையரசு என்றே குறிப்பிடுவார்கள். இது புறவின வார்த்தைபோல இருப்பதனால் மத்தேயு தன் யூத வாசகர்களை கருத்தில் கொண்டு அதனை விலக்கியிருக்கலாம் என முக்கியமான ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்
இந்த உவமையின் கதாநாயகனாக வருபவர் ஒரு நிலக்கிழார் (ἀνθρώπῳ οἰκοδεσπότῃ அந்த்ரோபோ ஒய்கொதெஸ்பொதே- வீட்டு முதலாளி). இப்படியான முதலாளிமார்கள் அக்கால யூத சமுதாயத்தில் முதல்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், வசதிபடைத்தவர்களாகவும் இருந்தார்கள். இந்த உருவகம் அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. இவர் வேலையாட்களைத் தேடி விடியற்காலையிலே வெளியில் செல்கிறார். அக்காலத்தில் அதிகமானவர்கள் நாட்கூலியாட்களையே வேலைக்கு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினர்

.2: இவர் தான் வேலையாட்களை கண்டு கொண்டு அவர்களுக்கு ஒரு தொனாரியம் என்று கூலி பேசி அவர்களை தன் நிலத்திற்கு அனுப்புகிறார். தெனாரியம் (δηνάριον தேனாரியோன்), உரோமைய உலகத்தில் ஒரு நாட்கூலி. இது ஒரு வெள்ளி நாணயம். இதனை 1500 இலங்கை ரூபாக்கள் என எடுக்கலாம்

.3: இந்த நிலக்கிழார் மூன்றாவது மணித்தியாலத்தில் (τρίτην ὥραν டிரிடேன் ஹோரான்) சிலர் சந்தைவெளியில் வேலையற்று இருப்பதை அவதானிக்கிறார். அதேவேளை இவரும் வெளியில் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறார் என்பதும் புலப்படுகிறது. மூன்றாவது மணித்தியாலம், நம்முடைய நவீன கடிகாரத்தின் காலை ஒன்பது மணியை குறிக்கும். மக்கள் வேலையில்லாமல் சும்மா இருப்பது அக்காலத்திலும் நல்ல விடயமாக கருதப்படவில்லை என்பது தெரிகிறது (ἀργός அர்கொஸ்- சோம்பேரித்தனம், வேலையற்ற தன்மை). 

.4: அவர்களையும் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பி நேர்மையான கூலி தருவதாக வாக்களிக்கிறார். நேர்மையான கூலி என்பது எமாற்றாத கூலி என்பதைக் குறிக்கலாம். திராட்சைத் தோட்டங்கள் இஸ்ரேலிய நாட்டில் நமது வயல் நிலங்களைப் போல மிக முக்கியமான வேலைத்தளமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல, கூலியாட்கள் நேர்மையான ஊதியத்தை இழப்பார்கள் என்பதும் இங்கே புலப்படுகிறது

.5: இந்த நிலக்கிழார் ஆறாவது மணித்தியாலத்திலும் (ἕκτος ஹெக்டொஸ்- ஏழு), ஒன்பதாவது மணித்தியாலத்திலும் (ἔνατος எனாடொஸ்- ஒன்பது) முன்பு செய்தது போலவே செய்கிறார். இந்த முதலாளி தன்னுடைய வேலையாட்கள் தோட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்காமல் வெளியில், வேலையாட்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கவே ஆர்வம் காட்டுகிறார் போல காட்டப்படுகிறார். இந்த ஆறாவது மணித்தியாலம் நவீன கணக்கில் பகல் பன்னிரண்டு மணியையும், ஒன்பதாவது மணித்தியாலம், மலை மூன்று மணியையும் குறிக்கின்றன.  

.6: மீண்டும் இவர் பதினோராவது மணித்தியாலத்தில் வெளியே சென்று, வேலையில்லாமல் 
இருப்பவர்களைக் கண்டு அவர்களிடம் அவர்களின் வேலையின்மைக்கான காரணத்தைக் கேட்கிறார். இவருடைய கேள்வியை நோக்குகின்றபோது, ஏதோ இந்த கூலியாட்களும் தங்களுடைய வேலையின்மைக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது போல தோன்றுகிறது. பதினோராவது மணித்தியாலத்தை (ἑνδέκατος என்டெகாடொஸ்- பதினொன்று) நவீன மணியில் மாலை ஐந்து மணி என கணக்கிடுகிறார்கள். கிரேக்க விவிலியம் பாவிக்கின்ற மணித்தியால முறைகள் உரோமைய காவல் மணித்தியால முறைகள். இந்த முறையைத்தான் முக்கியமாக உரோமைய இராணுவம் பின்பற்றியது

.7: நிலக்கிழாருடைய எல்லாக் கேள்விகளுக்கும், வேலையாட்கள் சரியான பதிலைக் கொடுக்கிறார்கள். தங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்று இவர்கள் சொல்வதன் வாயிலாக, உலகில் மக்கள் கைவிட்பட்டு வெளியிலே சும்மா நிற்கிறார்கள் என்று மத்தேயு அழகாகக் காட்டுகிறார், அதேவேளை கடவுள் இந்த நிலக்கிழார் போல வெளியில் நிற்கும் மக்களைத் தேடித்தேடி வருகிறார் எனவும் அழகாகக் காட்டுகிறார். தன்னுடைய நிலத்தில் பலர் வேலைக்கு இருந்தும், அங்கே திருப்தி காணாத நிலக்கிழார் வெளியிலே வேலையில்லாமல் இருப்போரையே தேடுகிறார். பிந்திய நேரத்தில் வேலையாட்களை கூலிக்கு அமர்த்துவது இப்படியான நிலக்கிழார்களுக்கு நன்மை பயக்காது, இருந்தும் அவர் மீண்டும் மீண்டும் அவர்களை தேடிச் செல்கிறார். இந்த உவமானம் மூலம் மத்தேயு கடவுளை வித்தியாசமான பார்வையில் காண்கிறார் என்பது புலப்படுகிறது

.8: மலையானதும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நிலக்கிழாருடைய கட்டளை வித்தியாசமாக இருக்கிறது. இவர் தன் தலைமை அதிகாரியை அழைக்கிறார் (ἐπίτροπος எபிட்ரொபொஸ்- முகாமையாளர்). முதலில் வந்தவர் தொடங்கி கடைசியில் வந்தவர் வரை என்று சொல்லாமல், கடைசியில் வந்தவர் தொடங்கி, முதலில் வந்தவருக்கு சம்பளம் கொடுக்கச் சொல்கிறார் (ἀπὸ τῶν ἐσχάτων ἕως τῶν πρώτων. அபொ டோன் எஸ்காடோன் ஹெயோஸ் டோன் புரோடோன்). நிலக்கிழார் கட்டளை கொடுக்கின்ற சாயலை பார்க்கும் போது அவர் தான் செய்வதில் அவதானமாக இருக்கிறார் என்பதும் புலப்படுகிறது

.9: பதினோரவது மணித்தியாலத்தில் (மாலை ஐந்து) வந்தவர்கள் ஒரு தொனாரியம் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் ஒரு மணித்தியாலம்தான் வேலை செய்திருப்பார்கள், இருப்பினும் முழு நாளுக்குரிய ஊதியத்தை பெற்றுக்கொள்கிறார்கள்

.10: மேற்குறிப்பிட்டவர்கள் பெற்ற நிறைவான ஊதியம், முதலில் வந்தவர்களுக்கு பிழையான நம்பிக்கையைக் கொடுகிறது. அவர்கள் எட்டு மணித்தியாளங்கள் வேலை செய்தபடியால், தங்களுக்கு மேலதிகமாக கிடைக்கப்போகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் ஒரு தெனாரியம்தான் கொடுக்கப்படுகிறது. இதுதான் ஏற்கனவே அவர்களுடன் பேசப்பட்ட நாட்கூலி

வவ.11-12: முதலில் வந்தவர்கள் நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள். மேலோட்டமாக பாhக்கின்றபோது அவர்களின் முணுமுணுத்தலில் நியாயம் இருப்பதுபோல தோன்றுகிறது. அவர்கள் முதலில் வந்தவர்கள், நாள் முழுவதும் வேலை செய்தவர்கள், வேலைப் பழுவையும், வெயிலையும் தாங்கியவர்கள். இப்படியானவர்களுடன் கடைசியில் வந்தவர்களை நிலக்கிழார் இணையாக்கிவிட்டாhர் என்பது இவர்களின் வாதம். இது சாதாரண மனிதர்களின் பார்வையை பிரதிபலிக்கறிது.  

.13: நிலக்கிழாருடைய கேள்வி நியாயமாக இருக்கிறது. முதலில் அவர் மரியாதையாக இந்த வேலையாட்களை அழைக்கிறார், அவர்களில் ஒருவரை நண்பர் என அழைக்கிறார் (ἑταῖρος எடாய்ரொஸ்). தான் அநியாயம் செய்யவில்லை என்கிறார் (οὐκ ἀδικῶ σε ஊக் அதிகோ செ- நான் அநியாயம் செய்யவில்லை). இந்த வரி நிகழ்காலத்தில் எழுதப்பட்டுள்ளது, ஆக இப்போது வரை தான் நியாயம்தான் செய்கிறார் என்று சொல்வது போல உள்ளது
அவர்கள் ஒரு தெனாரியத்திற்கு ஒத்துக்கொண்டதை அவர் நினைவூட்டுகிறார். இவருடைய கேள்வி உள்ளே பதில் அடங்கியிருக்கிறது. அவர் விடையை எதிர் பார்க்கவில்லை. விடை அவருக்கும், கூலியாட்களும் வாசகர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கிறது

.14: நிலக்கிழார் தன்னுடைய தலைமைத்துவத்தைக் காட்டுகிறார். கூலியாளை தனக்குரியதை பெற்றுக்கொண்டு போய்விடச் சொல்கிறார் (ἆρον τὸ σὸν καὶ ὕπαγε. அரோன் டொ சொன் காய் ஹுபாகெ- உம்முடையதை எடும் போய்விடும்). இங்கே வியங்கோல் வாக்கியம் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிலக்கிழார் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது புலப்படுகிறது. தன்னுடைய விருப்பத்தை தான் செய்வது தனது உரிமை என்கிறார்

.15: இரண்டு முக்கியமான மேலதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன
. எனக்குரியதை என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? οὐκ ἔξεστίν μοι  ὃ θέλω ποιῆσαι ἐν τοῖς ἐμοῖς; 
. நான் நல்லவனாய் இருப்பதால் உமக்கு பொறாமையா? ὁ ὀφθαλμός σου πονηρός ἐστιν ὅτι ἐγὼ ἀγαθός εἰμι;
இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அந்த முணுமுணுத்தவர்களுக்கு பொருந்துமானவை என்று தெரியவில்லை, ஆனால் அவை வாசகர்களுக்கு பொருந்துகிறது

.16: கடைசியானவர்கள் முதன்மையாவதும், முதன்மையானவர்கள் கடைசியாவதும், சாதாரண வாழ்வியலில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. கடைசியாக வருபவர் கடைசியாகத்தான் கவனிக்ப்பட வேண்டும். முதலில் வந்தவர்தான் முதலில் கவனிக்கப்பட வேண்டும். இது உலக நீதி. இறை நீதி வித்தியாசமாக இருக்கிறது
முதலில் வந்தவர் பாதிக்கப்படக்கூடாது, இருப்பினும் இறுதியாக வந்தவர் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை முதலில் வந்தவர்கள் அல்ல மாறாக முதலாளியே தீர்மானிக்க வேண்டும் என்ற வாதம் தெரிகிறது. கடைசியானோர் முதனை;மையாவது, போன்ற வரிகள் மத்தேயு நற்செய்தியில் வேறு இடங்களிலும் காண்ப்படுகிறது


எனக்குரியது எனக்கு கிடைக்கவேண்டும் என்பதில் தப்பில்லை
மற்றவர்க்கு என்ன கிடைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானித்தல் கிறிஸ்தவம் இல்லை
யார் யாருக்கு என்ன கொடுப்பது, எப்படி கொடுப்பதை 
கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும்
ஏனெனில் அனைத்தும் அவருடையதே, அவர் மட்டுமே 
கொடுப்பவர், அத்தோடு அவருக்கு மட்டுமே தேவைகள் ஒரு தேவையில்லை


அன்பு ஆண்டவரே மற்றவருக்குரியதை 
நான் தடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும், ஆமென்


This issue is dedicated for Rohingya Muslim Brethren,
who like us, feel abandoned by every one. 
May God protect them. 

துன்புறுத்தப்படும் ரோகின்ஜா முஸ்லிம் சகோதரர்களுக்கு சமர்ப்பணம். 
இந்த உலகம், கடவுளுடையது, 
ஒருவர் மற்றவரை அகதி என்றால் எப்படி?
இன்னொருநாள் அவர்களையும், வேரொருவர் அகதி என்பார் ...


மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்
யாழ்ப்பாணம்
புதன், 20 செப்டம்பர், 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022

  Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022 Thirty-third Sunday in Ordinary T...