தவக்காலம் நான்காம் வாரம் (ஆ)
11,03,2017
மி. ஜெகன்குமார் அமதி,
வசந்தகம், யாழ்ப்பாணம்,
Wednesday, March 7, 2018
முதல் வாசகம்: 2 குறிப்பேடு 36,14-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 137
இரண்டாம் வாசகம்: எபேசியர் 2,4-10
நற்செய்தி: யோவான் 3,14-21
2 குறிப்பேடு 36,14-23
எருசலேமின் வீழ்ச்சி
(2 அர 25:1-21; எரே 52:3-11)
13கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். 14அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர்.
15அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். 16ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. 17ஆதலால், அவர் அவர்களுக்கு எதிராக கல்தேயரின் மன்னனைப் படையெடுத்து வரச் செய்தார். அவன் அவர்களின் திருஉறைவிடமாகிய ஆண்டவரின் இல்லத்தில் அவர்களின் இளம் வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினான்; இளைஞர் கன்னியர் என்றோ, முதியோர் இளைஞர் என்றோ, எவர்மேலும் இரக்கம் காட்டாமல், எல்லாரையும் அவன் கையில் ஆண்டவர் ஒப்புவித்தார்.✠ 18கடவுளின் இல்லத்து எல்லாச் சிறிய, பெரிய பாத்திரங்களையும், அதன் கருவூலங்களையும் அரசனிடமும் அவன் அதிகாரிகளிடமும் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். 19கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர்.
20மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். 21'நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்' என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின.
யூதர்கள் எருசலேமிற்குத் திரும்புமாறு சைரசு கட்டளையிடல்
(எஸ்ரா 1:1-4)
22பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: 23'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'
எருசலேமின் வீழ்ச்சி இஸ்ராயேலரின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. அது இஸ்ராயேலருக்கு ஓர் புது அடையாளத்தைக் கொடுத்தது. எருசலேமின் வீழ்ச்சி, தோறா வலுவாக உருவாகக் காரணம் என நம்பப்படுகிறது. எதிரிகள் எருசலேம் நகரை அழிப்பதன் வாயிலாக இஸ்ராயேல் என்ற தேசியத்தை அழிக்கலாம் என நினைத்தார்கள் (இன்று அடிப்படை வாதிகள், ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், விகாரைகள் மற்றும் நூலகங்களை அழித்து, குறிப்பிட்ட இன அடையாளங்களை அழிக்கலாம் என நினைப்பது போல). அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, மாறாக இஸ்ராயேலர்கள் தங்கள் தேசியத்தில் வளரவும், ஆலயம், அரசன், மண் இல்லாமலே பல ஆயிரம் ஆண்டுகள் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிந்தது. இந்த பகுதியில், எருசலேமின் வீழ்ச்சியை ஆசிரியர் தத்ரூபமாக விளக்குகிறார். எருசலேமின் அழிவிற்கு காரணம், நெபுக்கத்நேசரின் பலம் அல்ல, மாறாக யூதர்களின் பிழையான அரசியல் அணுகுமுறையும், அவர்களின் அவவிசுவாசமுமே என்று காட்டுகிறார். அத்தோடு இறைவன்தான் அனைத்தையும், தீர்மானிக்கிறார் என்பதையும் காட்டுகிறார்.
யூதாவின் இறுதி அரசன் யோயாக்கின் என குறிப்பேடு புத்தகம் காட்டுகிறது. இவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே எருசலேமில் ஆட்சி செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எகிப்திற்கு அடிபணிந்திருந்த இவர், கிர்காமேஷில் பாரவோன் பபிலோனியரிடம் தோற்றபோது, தன் விசுவாசத்தை பபிலோனியாவிற்கு காட்டினார். ஆனால் மூன்று ஆண்டுகளில் பபிலோனியரை எதிர்க்க துணிந்தார், இதனால் பபிலோனியர் இவரை சிறைப்படுத்தி எருசலேமை அழித்தனர். யோயாக்கின் அடிமையாக பபிலோனில் வாழ்ந்து பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்ட்டார். இருப்பினும் இவர் அங்கேயே அடிமையாக இறந்தார். இவருடைய சந்ததி இன்னமும் பபிலோனியாவிலிருந்து தப்பி பிழைத்திருக்கிறது என்று இன்னும் சில யூதர்கள் நம்புகின்றனர். யோயாக்கினை சிறைப்பிடித்த பபிலோனியர், அவர் சித்தப்பா, மத்தானியாவை போலி அரசராக ஏற்படுத்தி அவருக்கு 'செதேக்கியா' என்ற பெரையும் கொடுத்தனர். 2குறிப்பேட்டு ஆசிரியரும், 2அரசர்கள் ஆசிரியரும் இவரை தீயவர் எனவே காட்டுகின்றனர். செதேக்கியா, இறைவாக்கினர் எரேமியாவின் பேச்சை கேட்காமல், பிழையான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தை நம்பி பபிலோனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார், இவருடைய காலத்தில்தான் எருசலேம் முற்றாக அழிக்கப்பட்டது, எருசலேம் தேவாலயமும் தரைமட்டமாக்கப்பட்டது.
வ.13: பபிலோனியருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தமைக்கு காரணமாக செதேக்கியாவை காட்டுகிறார் ஆசிரியர். நெபுக்கத்நேசாரை (נְבֽוּכַדְנֶאצַּר֙ நெபுகாத்நெ'ட்சார்) ஆசிரியர் கதாநாயகராக காட்டவில்லை, மாறாக அவரை கடவுளின் திட்டங்களை நிறைவேற்றும் அன்னிய நாட்டு அரசராகவே காட்டுகிறார். செதேக்கியா நெபுக்கத்நேசாருக்கு எதிராக கலகம் செய்ததை, ஆண்டவருடைய சொற்களுக்கு எதிரான கலமாக பார்க்கிறார். இதனை இறுமாப்புற்ற, கடினமான இதயம் என்று சொல்கிறார் ஆசிரியர் (וַיְאַמֵּץ אֶת־לְבָב֔וֹ מִשּׁ֕וּב אֶל־יְהוָ֖ה אֱלֹהֵ֥י יִשְׂרָאֵֽל׃ வாயெ'மெட்ஸ் 'எட்-லெவாவோ மிஷ்ஷுவ் 'எல்-அதோனாய் எலோஹெ யிஷ்ரா'எல், அவன் தன் இதயத்தை கடினமாக்கினான், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து திரும்பினான்).
வ.14: எருசலேமின் அழிவிற்கு அரசர் மட்டுமே காரணம் அல்ல மாறாக குருக்களும் மக்களும்தான் என்கிறார் ஆசிரியர். இவர்கள் வேற்றினத்தாரின் அருவருப்புக்களையும், உண்மையற்றவர்களாகவும், கோவிலை தூய்மையற்றதாகவும் மாற்றினார்கள் என குற்றம் சாட்டுகிறார். இந்த மூன்று குற்றச்சாட்டுக்களும், மிக பாரதூரமானவை.
குருக்கள் சமுதாயத்தில் மிக முக்கியமானவர்கள், இவர்கள் யூத சமுதாயத்தில் எந்த காலத்தில் தோன்றினார்கள் என்பதில் பல வாதங்கள் இருக்கின்றன. விடுதலைப் பயணம் மற்றும் லேவியர் புத்தகத்தின் படி ஆரோனிடமிருந்து குருத்துவம் தொடங்குகின்றது, ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் குருத்துவத்தை பிற்காலத்தின் நிகழ்வு என்றும் காட்டுகின்றனர். குருக்கள் கடவுளின் ஆசீரைக் கொண்டு வருகிறவர்கள். அவர்கள் இறைவாக்கினர்களின் வேலையையும் செய்யக் கேட்கப்படுகிறார்கள். குருக்களின் அசமந்த போக்கு மிக ஆபத்தானது என்பதை இந்த வரி காட்டுகிறது. குருக்களிடம் மட்டுமே அனைத்து குற்றச்சாட்டுக்களையும் போட்டுவிடாமல், மக்களும் அதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டுகிறார் ஆசிரியர். இந்த வரியில் குருக்கள் என்று காட்டாமல் அனைத்து குருக்களின் அலுவலர்கள் என்று சொல்கிறார் ஆசிரியர் (גַּם כָּל־שָׂרֵ֨י הַכֹּהֲנִ֤ים וְהָעָם֙ காம் கோல்-சாரே ஹகோஹனிம் வெஹா'ஆம்- குருக்களின் தலைவர்களும், மக்களும்).
வ.15: அரசர், குருக்கள் மற்றும் மக்கள் இவ்வாறிருக்க, கடவுள் வித்தியாசமாக அவர்களை அணுகுகிறார். ஆசிரியர் கடவுளை இஸ்ராயேலரின் மூதாதையரின் கடவுள் எனக் காட்டுகிறார்
(יְהוָה אֱלֹהֵי אֲבוֹתֵיהֶם அதோனாய் 'எலேஹே 'அவோதெஹெம்- அவர்களின் மூதாதையரின் கடவுள்).
இந்த மூதாதையரின் கடவுள் இவர்கள் மீதும், தன் உறைவிடமான எருசலேம் மீதும் அன்பு கொண்டு தன் தூதர்களை அவர்களிடம் அனுப்புகிறார் (וַיִּשְׁלַח מַלְאָכָיו வய்யிலாஹ் மல்'ஆகாவ்- அவர் தூதர்கள்). இந்த தூதர்களை வானதூதர்கள் என்றும் மொழிபெயர்க்கலாம். ஆனால் இங்கு
இது இறைவாக்கினர்களைத்தான் அதிகமாய் குறிக்கிறது எனலாம்.
வ.16: இறைவாக்கினர்களுக்கு அரசர், குருக்கள், மக்கள் என்ன செய்தார்கள் என்பது சொல்லப்படுகிறது. முதலில் இவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்தார்கள் என குற்றம் சாட்டுகிறார் (מַלְעִבִים֙ மல்'இவிம்- ஏளனம் செய்துகொண்டு). தூதர்களை ஏளனம் செய்வது அவர்கள் தலைவரை அவமதிப்பதற்குச் சமம். இங்கே தூதர்களை ஏளனம் செய்தல் அவர்கள் தலைவராகிய கடவுளை அவமதிப்பதாக இருக்கிறது. அடுத்ததாக அவர்கள் இறைவாக்கினர்களின் வார்த்தைகளை புறக்கணித்து, இறைவாக்கினர்களை இழித்துரைக்கிறார்கள்
(וּבוֹזִים דְּבָרָיו וּמִֽתַּעְתְּעִים בִּנְבִאָיו வுவோட்சிம் தெவாராவ் வுமித்த'தெ'இம் பின்வி'அய்வ் - அவர்கள் வார்த்தைகளை அவமதித்தார்கள், அவர் இறைவாக்கினர்களை அசிங்கப்படுத்தினார்கள்).
இந்த செயற்பாடு கடவுளுடைய சினத்தை கடுமையாக எருசலேம் மீது கொண்டு வருகிறது. இதனை தப்ப முடியாத தண்டனை என்கிறார் ஆசிரியர்.
வ.17: கல்தேயரின் மன்னன் (אֶת־מֶלֶךְ כַּשְׂדִּיִּים 'எத்-மெலெக் கஸ்தியிம்- கல்தேயரின் மன்னன்) நெபுகத்நேசரின் வருகை கடவுளுக்கு தெரிந்துதான் நடக்கிறது என்பது ஆசிரியரின் நம்பிக்கை. நெபுகத்நேசார் கடவுளின் இல்லத்தில் இஸ்ராயேலின் இளம் வீரர்களையே வாளால் கொல்கிறார். கடவுளின் இல்லத்தில் கடவுளின் மக்கள், அதுவும் அவர்களின் இளம் வீரர்கள் வாளால் மடிவது பல கேள்விகளை எற்படுத்துகிறது. இது கடவுள் அவர் இல்லத்தில் இல்லை என்பதையும், அவரின் இளம் வீரர்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை என்பதையும் காட்டுகிறது.
அடுத்து, கடவுள் பாரபட்சம் காட்டாமல் அனைவரையும் கல்தேயர் மன்னனிடம் ஒப்புவித்தார் என்கிறார். இதிலிருந்து நெபுகத்நேசர் அனைவரையும் அழித்தார் என்ற வரலாறு தெரிகிறது (בָּחוּר וּבְתוּלָה זָקֵן וְיָשֵׁשׁ பாஹுர் வுவெதூலாஹ் ட்சாகென் வெயாஷெஷ்- ஆண்களும், பெண்களும், முதியவர்களும், பெரியவர்களும்). நெபுக்கத்நேசரின் படையெடுப்பு மட்டுமல்ல மாறாக அவரின் செயற்பாடுகளும் கடவுளுக்கு தெரிந்தே நடக்கின்றன.
வ.18: நெபுக்கத்நேசர் கொள்ளையிட்ட பொருட்களின் விபரம் சொல்லப்படுகிறது. விவிலிய முதல் ஏற்பாட்டுக் காலத்தில், போர் பல தாக்கங்களையும் கொண்டு வந்தது. போரில் கொள்ளையடிப்பது அக்கால போர் தர்மமாக பார்க்கப்ட்டது (தர்மம்மில்லா தர்மம்). போரில் தோற்கிறவர்களின் சொத்துக்கள், போரில் வெற்றியெடுக்கிறவர்கள் வசமானது. சில வேளைகளில் இந்த சொத்துக்களில் குழந்தைகளும், பெண்களும் உள்ளடக்கப்பட்டார்கள் (ஈழப்போரில் நம் சொத்துக்கள் சூறையாடப்பட்டது போல).
வழமையாக ஆண்டவரின் இல்லதினுள், யூத பெண்களை அனுமதிக்கப்படுவது கிடையாது. இங்கே கல்தேயர், புறவினத்தவர் ஆண்டவரின் இல்லத்தினுள் செல்கிறார்கள், அங்கிருந்து சிறிய, பெரிய பாத்திரங்களையும், கருவூலச் சொத்துக்களையும், அரச செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார்கள், அத்தோடு அவற்றை கல்தேயாவிற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பாத்திரங்கள், ஆலய வழிபாட்டிற்கு பயன்படுகின்றவை. இதனை சாலமோன் வெகு சிரத்தையாக உருவாக்கினார். சொத்துக்கள் அரசர்களால் சேர்க்கப்பட்டவை. ஏற்கனவே பல சொத்துக்கள் அசிரியரால் கவரப்பட்டிருந்தன (כֹל כְּלֵי בֵּ֤ית הָאֱלֹהִים֙ கோல் கெலே பெத் ஹா'எலோஹிம்- ஆண்டவரின் இல்லத்து அனைத்து திருப்பாத்திரங்கள்).
வ.19: எருசலேம் தேவாலயமும், அரசரின் அரண்மனை கட்டடங்களும் அருகருகில் இருந்திரு;கின்றன. எருசலேமின் சுற்று மதில், அனைத்தையும் பாதுகாத்தது. அக்கால போர்களில், எதிரிகள் முதலில் நகர் சுற்று மதில்களை தகர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். நகர்களின் மதில்கள் தகர்க்கப்டுவது, அதன் இறைமை தகர்க்கப்படுவதற்குச் சமன். பின்னர் அவர்கள் ஆலயத்தை எரித்தார்கள். இதன் மூலமாக ஒரு நகரின் அல்லது நாட்டின் தெய்வம் தோற்றுவிட்டது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். பின்னர் அரண்மனையை தகர்த்தார்கள், இது இனி உள்நாட்டு அரசர்கள், தலைவர்கள் அல்ல என்பது காட்டப்பட்டது. இப்படியாக இங்கே அனைத்தும் அழிக்கப்பட்டன என்பதை ஆசிரியர் காட்டுகிறார். விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்பது, இஸ்ராயேலர்கள் (யூதேயா) பழங்கால பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகிறது.
வ.20: வாளுக்கு தப்பியவர்கள் அடிமையானார்கள். அடிமை வியாபாரம் மற்றும் அடிமை வாழ்வு அக்காலத்தல் மிக ஆபத்தான போர்த்தீமையாக இருந்தது. போர் செய்கிறவர்கள் மனித வலுவை மிக உயர்ந்த சொத்தாக கருதினார்கள். முக்கியமாக இளைஞர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளை அவர்கள் அடிமைகளாக கொண்டு சென்றார்கள். இந்த அடிமைகள் வெற்றி பெற்ற நாட்டில் விற்கப்பட்டார்கள். சில வேளைகளில் இவர்கள் கூலிப்படைகளாகவும் வேலை செய்தார்கள். அடிமைகள் மனிதர்களாக அதிகமான சந்தர்ப்பங்களில் கருதப்படவில்லை. உரோமையர்கள் காலத்திலும் கூட இந்த அடிமை வர்த்தகம் மற்றும் அடிமை நிலைமை இருந்திருக்கிறது. (19ம் நூற்றாண்டுவரை ஐரோப்பியர்களில் சிலர் அடிமை வியாபாரத்தை முன்னெடுத்திருந்தினர்). இஸ்ராயேல் மக்கள் அடிமைத் தனத்தை எப்படி பார்த்தார்கள் என்பது ஒரு கேள்வி. நிச்சயமாக தங்கள் சகோதர இஸ்ராயேல் மக்களை அவர்கள் அடிமைகளாக வாங்க முடியாது, ஆனால் வேற்றினத்தவர்களை சில காலப்பகுதியில் அடிமைகளாக வைத்திருந்திருக்கலாம்.
யூதேய இஸ்ராயேல் மக்கள் சுமார் எழுபது ஆண்டுகள் பபிலோனியருக்கு அடிமைகளாக
இருந்தனர். பபிலோனியாவில் பிற்காலத்தில் அவர்கள் சில வசதி வாய்ப்புக்களோடு விடுதலை பெற்றிருந்தார்கள் என்றும் நம்பப் படுகிறது. பபிலோனிய வங்கி மற்றும் வியாபாரத்திலும் யூதேயாவினர் பங்குபெற்றியதை பபிலோனிய ஆவணங்கள் காட்டுகின்றன. புதிய இஸ்ராயேல் நாடு எழும்வரை கூட (கி.பி.1947) ஒரு கணிசமான அளவு இஸ்ராயேலர்கள் பபிலோனியாவில் வாழ்ந்தார்கள். குறிப்பேட்டு ஆசிரியரின் கணிப்பின் படி, பாரசீகரின் எழுச்சி வரை, பபிலோனியாவில் யூதேயாவினர் அடிமைகளாக இருந்தார்கள்.
வ.21: இந்த எழுபது வருட அடிமை வாழ்விற்கு காரணம் என்ன என்பதை குறிப்பேட்டு ஆசியரியர் சொல்கிறார், அவர் இறைவாக்கினர் எரேமியாவின் இறைவாக்கை சுட்டிக்காட்டுகிறார். ஓய்வு நாளை கடைப்படிக்காமைதான் நாட்டின் அடிமை வாழ்விற்கு காரணம் என்கிறார்.
வ.22: பாரசீக மன்னரின் வரைவை மிக சுருக்கமாக சொல்லிவிடுகிறார், குறிப்பேட்டு ஆசிரியர். பாரசீக மன்னரின் எழுச்சிகூட இஸ்ராயேலின் ஆண்டவருடைய திட்டம் என்பதில் அவர் உறுதியாக
இருக்கிறார். சைரசின் எழுச்சி, ஆண்டவரின் வாக்கை உறுதிப்படுத்துகிறது, அந்த வார்த்தை ஏற்கனவே எரேமியா இறைவாக்கினரால் சொல்லப்பட்டிருக்கிறது. כוֹרֶשׁ מֶלֶךְ פָּרַס கோலரெஷ் மெலெக் பாரஸ்- பாரசீக மன்னர் சைரசு.
பாரசீக மன்னர் தன் குடிமக்களிடம் கடிதம் வாயிலாக பேசுகிறார். மடல் வாயிலாக அரச ஆணைகளை கொடுப்பது அக்கால வழக்கம். מִכְתָּב மிக்டாவ்-எழுத்து.
வ.23: பாரசீக மன்னரின் கட்டளை இவ்வாறு சொல்லப்படுகிறது: כָּל־מַמְלְכוֹת הָאָרֶץ֙ נָתַן לִ֗י கோல்-மம்லெகோத் ஹா'ஆரெட்ஸ் நாதன் லி- அனைத்து அரசுகளையும் எனக்கு கொடுத்துள்ளார்.
יְהוָה֙ אֱלֹהֵ֣י הַשָּׁמַ֔יִם அதேனாய் ''எலோஹெ ஹஸ்ஸாமாயிம், விண்ணகத்தின் கடவுளாகிய ஆண்டவர். וְהֽוּא־פָקַ֤ד עָלַי֙ לִבְנֽוֹת־ל֣וֹ בַ֔יִת בִּירוּשָׁלִַ֖ם אֲשֶׁ֣ר בִּֽיהוּדָ֑ה வெஹு-பாகத் 'அலாய் லிவெனோத்-லி பாயித், பிரூஷாலாயிம் ''அஷேர் பியெஹுதாஹ் - அங்கே அவருக்கு ஆலயம் கட்டும்படி, அதாவது யூதேயாவில் உள்ள எருசலேமில். מִכָּל־עַמּ֗וֹ יְהוָ֧ה אֱלֹהָ֛יו עִמּ֖וֹ וְיָֽעַל׃ மிகோல்-'அமோ அதோனாய் 'எலோஹாவ் 'இம்மோ வெயா'அல் - ஆண்டவரின் அனைத்து மக்களும் அங்கு செல்லட்டும், ஆண்டவர் அவர்களோடு.
சைரசின் வார்த்தைகள் அன்பான அரசரின் வார்த்தைகளைப்போல உள்ளன. சைரசின் விவிலியத்தில் கடவுளின் பணியாளராக காட்டப்படுகிறார். சைரசைப்பற்றி வேறுவிதமான தரவுகள் விவிலியம் அல்லாத கோப்புக்களில் உள்ளன.
திருப்பாடல் 137
நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல்
1பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
3ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்;
எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு
கேட்டனர். ‛சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர்.
4ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக!
6உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
7ஆண்டவரே! ஏதோமின் புதல்வருக்கு எதிராக, எருசலேம் வீழ்ந்த நாளை நினைத்துக் கொள்ளும்!
'அதை இடியுங்கள்; அடியோடு இடித்துக் தள்ளுங்கள்' என்று அவர்கள் எவ்வாறெல்லாம்
சொன்னார்கள்!
8பாழாக்கும் நகர் பாபிலோனே! நீ எங்களுக்குச் செய்தவற்றை உனக்கே திருப்பிச் செய்வோர்
பேறுபெற்றோர்!
9உன் குழந்தைகளைப் பிடித்து, பாறையின்மேல் மோதி அடிப்போர் பேறுபெற்றோர்!
'பபிலோனியரின் ஆற்றருகே' என்ற இந்த 137வது திருப்பாடல் மிகவும் தனித்துவமானது. அடிமை வாழ்வு, அகதி வாழ்வு, போர்த் தோல்வி போன்ற சாதாரண மனிதரின் இதய உணர்வுகளை கனமாக தாங்கியுள்ளது இந்தப் பாடல். தமிழர் மெய்யியல் தந்தை பெரியாரின் கருத்துப்படி சுயமரியாதை மனிதருடைய மிக அடிப்படைத் தேவை. இந்த சுயமரியாதையை அவர்கள் எப்படி தவிப்பார்கள் எனப்தை இந்த பாடல் காட்டுகிறது. கிரேக்க இலக்கத்தில் இது 136வது பாடல் என காட்டப்படும். எருசலேமை இஸ்ராயேலர் எந்தளவிற்கு காதலித்தார்கள் என்பதற்கு இந்த பாடல் ஒரு நல்ல சான்று. யூதர்கள், கத்தோலிக்கர் மற்றும் சீர்திருத்தவாத கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் இந்த பாடல் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதனை தனி மனித அல்லது குழும புலம்பல் பாடலாக ஆய்வாளர்கள் காண்கின்றார்கள். யூதர்கள் இந்த பாடலை சில வேளைகளில் தங்கள் இரவுணவின் பின்னர் பாடுவார்கள். அதேவேளை எருசலேமின் அழிவை நினைக்கும் நாட்களிலும் இந்த பாடல் பாடப்படுகிறது. கத்தோலிக்கர் புனித பெனடிக்றின் காலத்திலிருந்து
இதனை புதன் கிழமை மாலைசெபத்தில் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த திருப்பாடல் நான்காம் வாரம், தவக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின்னர் இந்த திருப்பாடலின் கடைசி மூன்று வரிகள் அதன் கடினமான உணர்வுகளின் பொருட்டு வழிபாட்டிலிருந்து நீங்கப்பட்டன.
இந்த திருப்பாடலுக்கு பல பிரசித்தி பெற்ற இசையமைப்பாளர்கள் பலர்
இசையமைத்திருக்கிறார்கள். தமிழிலும் இந்த திருப்பாடல் பல இசைவடிவங்களைப் பெற்ற திருப்பலியில் பாடப்படுகிறது.
நினைவுகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். வரலாற்றை பிள்ளைகள் மறந்து போவது மிகவும் ஆபத்தானது. இஸ்ராயேல் இனம், வரலாற்றில் தக்கி நிற்பதற்கு அவர்கள் வரலாற்றை மறக்காமல் இருப்பது ஒரு முக்கியமான காரணம். இந்த திருப்பாடல், இஸ்ராயேலர்கள் எப்படி வரலாற்றை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் நல்லதோர் உதாரணம்.
வ.1: நெபுக்கத்நேசர் யூதேய போர்க் கைதிகளையும், மக்களையும் அதன் தலைநகருக்கு கொண்டு சென்றார், அங்கே அவர்கள் நதியருகே குடியமர்த்தப்பட்டார்கள். பபிலோனியாவில் யூப்பிரடீஸ் மற்றும் தைகிறீஸ் நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் ஒன்றாக இருக்கலாம், ஆசிரியர் குறிப்பிடும் இடம் (עַ֥ל נַהֲר֨וֹת ׀ בָּבֶ֗ל 'அல் நஹரோத் பாபேல்- பபிலோனியாவின் நதி அருகில்).
இந்த பாடல் பபிலோனியாவில் எழுதப்பட்டதா அல்லது, பபிலோனிய துன்பியல் நிகழ்வுகளை நினைத்து பின்நாட்களில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை.
பபிலோனின் நதிகள், மற்றும் நிலப்பரப்புக்கள் எருசலேமைவிட நிச்சயமாக வளமானவை.
இருப்பினும் அன்னியநாடு தாய்நாட்டை ஈடு செய்ய முடியாது என்பது இங்கே புலப்படுகிறது. பபிலோனியாவில் இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் எருசலேமாகவே இருக்கிறது யூதேயாவினர்க்கு. சீயோனை நினைத்து அழுதோம் என்கின்றார் ஆசிரியர் (בְּזָכְרֵנוּ אֶת־צִיּוֹן׃ பெட்சாக்ரெநூ 'எத்-ட்சியோன்- சீயோனின் நினைவுகளிலிருந்து). (எந்த வளமான தேசத்தில்
இருந்தாலும், ஈழத்தின் நினைவுகள் தூங்கவிடாமல் இருக்கும் ஈழவர்களுக்கு என்பதுபோல).
வ.2: யாழ் (כִּנּוֹר கின்னோர்- யாழ்) இஸ்ராயேல் மக்களுடைய மிக சாதாரண இசைக்கருவி, அதனை அவர்கள் பபிலோனியாவில் அலரிச் செடிகள் மீது மாட்டி வைத்தார்கள் என்கிறார் அசிரியர் (עֲרָבִ֥ים 'அராவிம்- வில்லோ செடி).
யாழை இவர்கள் தங்களுடைய உடமைகளோடு கொண்டு சென்றிருக்க வேண்டும்.
இடப்பெயர்வின் போது சில பொழுதுபோக்கு உபகரணங்களை எடுத்துச் செல்வது வழக்கமாக
இருந்திருக்க வேண்டும் (நாங்கள் கிரிக்கட் மட்டைகளை கொண்டு சென்றது போல). யாழை
இவர்கள் தொங்கவிடுவதன் மூலம், பண்ணிசைக்கும் நிலையில் இவர்கள் இல்லை என்பது காட்டப்படுகிறது. இவர்கள் இதனை அலரிச் செடியில் தொங்கவிட்டார்கள் என தமிழ் விவிலியம் மொழி பெயர்க்கிறது. அலரிச் செடிக்கு மூல பாடம், அராவிம் என்ற சொல்லை பயன்படுத்துகிறது,
இது வில்லோ அல்லது பொப்லர் மரம் என எடுக்கலாம்.
வ.3: ஏன் இவர்கள் அழுகின்றனர் என்ற கேள்விக்கு விடைதருகிறார் ஆசிரியர். பபிலோனியாவில் கல்தேயர், அதாவது இவர்களை சிறைபிடித்து சென்றவர்கள், பாட்டு பாடும்படி கேட்கிறார்கள்.
(שְׁאֵלוּנוּ שׁוֹבֵינוּ דִּבְרֵי־שִׁיר ஷெ'எலூனூ ஷோவெனூ திவ்ரெ-ஷிர், பாடல்வரிகளைக் கேட்டார்கள் எங்களை அடிமைப்படுத்தியவர்கள்). சிறைப்பிடித்தவர்களை 'துன்புறுத்தியவர்கள்' என்று இன்னொரு சொல்லில் அழைக்கிறார் ஆசிரியர் (תוֹלָלֵינוּ தோலாலெனூ).
சிறைப்பிடித்தவர்கள் இவர்களிடம் சீயோனின் பாடல் ஒன்றைக் கேட்கிறார்கள். இதனை
இவர்கள் ஆர்வத்தில் கேட்டிருக்கலாம், அல்லது யூதேயாவினரை ஏளனப்படுத்தக் கேட்டிருக்கலாம். சூழலியலில் வைத்துப்பார்க்கும் போது, அவர்கள் யூதேயாவினரை ஏளனப்படுத்தவே கேட்கிறார்கள் என்பதுபோல தெரிகிறது. இவர்களின் இந்த கட்டளை யூதேயாவினருக்கு நிச்சயமாக பலத்த துன்பத்தைக் கொடுத்திருக்கும்.
வ.4: அடிமை வாழ்வில் இருந்தாலும், தங்கள் அடையாளங்களை மறக்காமல் இருந்தார்கள்
இஸ்ராயேலர்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது. அன்னிய நாட்டில் இருந்தாலும், அன்னிய நாட்டவர்களை, தங்கள் தலைவர்களாக ஏற்காமல், கடவுள் ஒருவரே தங்கள் தலைவர் என்பதையும், அவருக்கு உரிய பாடலை அன்னியருக்கு எவ்வாறு பாட முடியும் என்பதை மகிவும் சோகமான வரிகளில் தருகிறார் ஆசிரியர்.
אֵיךְ נָשִׁיר אֶת־שִׁיר־יְהוָ֑ה עַל אַדְמַת נֵכָר׃ 'ஏக் நாஷிர் 'எத்-ஷிர்-அதோனாய் 'அல் 'அத்மத் ரெகார்- எப்படிப்பாடுவோம், கடவுளின் பாடலை, அன்னிய நிலத்திலே. மானமுள்ளவர்களாய் பாட முடியாது என்ற விடையே இங்கே நேரடியாக வருகிறது.
வ.5: எருசலேம் மட்டில் ஆசிரியர் தனக்கிருந்த அன்பை வரிப்படுத்துகிறார். எருசலேமை மறந்தால் தன் வலக்கை சூம்பிப் போகட்டும் என்று தன்னைத்தானே சபிக்கிறார். அதாவது எருசலேமை மறக்க முடியாது. ஒருவர் தன் வலக்கையை இழக்க விரும்ப மாட்டார். வலக்கை அதிகாரம் மற்றும், துணையின் அடையாளம். அதனைவிட எருசலேம் என்ற நகர் முக்கியமாக இருக்கிறது என்பது இவருடைய ஆழமான உணர்வு.
எபிரேய விவிலியத்தில், சூம்பிப் போதல் என்ற சொல் மறைக்கப்பட்டுள்ளது. சில பழைய பாடங்களில் இந்த சொல் உட்புகுத்தப்பட்டுள்ளது.
אִם־אֶשְׁכָּחֵךְ יְֽרוּשָׁלִָ֗ם תִּשְׁכַּ֥ח יְמִינִֽי׃ 'இம்-'எஷ்காஹெகா யெரூஷாலாம் திஷ்கஹ் யெமினி- உன்னை மறந்தால் எருசலேம், என் வலக்கை மறக்கப்படட்டும்.
வ.6: வலது கையை சபித்தவர் இப்போது தன் மேல் வாயையும் சபிக்கிறார். எருசலேமை மறந்தால் அல்லது அதனை மகிழ்சியின் மகுடமாக கருதாவிட்டால், மேல் நா, மேல் வாயோடு ஒட்டட்டும் என்கிறார்.
நாக்கும் (לָשׁוֹן லாஷோன்- நா) வாயும் (חֵךְ ஹெக்- மேல்வாய்) இங்கு சத்தங்களின் அல்லது இசையின் உறைவிடமாக பார்க்கப்படுகின்றன. எருசலேமின் நினைவுகள் இல்லாமல் இசையும் வேண்டாம் அல்லது சத்தமும் வேண்டாம் என இவர் நினைத்திருக்கலாம்.
வ.7: எருசலேம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது என்பதை மீட்டிப் பார்க்கிறார். பபிலோனியரை 'எதோமின் மக்கள்' (בְנֵי אֱדוֹם வெனே 'எதோம்) என்கிறார் போல. எதோமியர், இஸ்ராயேலரின் பொதுவான எதிரிகளாக இருந்திருக்கிறார்கள்.
எருசலேம் வீழ்ந்தபோது, எதோமியர் மகிழ்ந்திருக்கலாம். அதன் நகரின் அடித்தளங்களை
இடியுங்கள், இடியுங்கள் என கத்தியதை நினைத்துப்பார்க்கிறார். இதனை அவர் அவமானமாகவே கருதுகிறார் (עָרוּ ׀ עָרוּ עַד הַיְס֥וֹד 'அரூ 'அரூ 'அத் ஹயெசோத்- இடியுங்கள் இடியுங்கள் அடித்தளத்தை).
இதனை அவர் கடவுளுக்கு நினைவூட்டுவது போலச் சொல்கிறார். இதன் மூலமாக கடவுள் வரலாற்றை மறந்துவிட்டார் என்ற பொருளை அவர் தரவில்லை, மாறாக இதனை அவர் ஒரு புலம்பலாகவே செய்கிறார். זְכֹר יְהוָה ட்செகோர் அதோனாய், நினைத்துக்கொள்ளும் ஆண்டவரே.
வ.8: மிகவும் வித்தியாசமான வரி. பபிலோனை சபிக்கிறார் ஆசிரியர். இஸ்ராயேல் கவிதைகளில் புலம்பல் ஒரு தனி வடிவம். இந்த புலம்பல்களில் சபித்தல் ஒரு அங்கமாக இருக்கிறது.
இஸ்ராயேலின் சாபம் உண்மையில் நீதிக்கான குரலாக மட்டுமே பார்க்கப்படவேண்டும். அந்த சாபத்தை அவர்கள் உண்மையாகவே விரும்பினார்களா என்பது ஒரு கேள்வி. இஸ்ராயேலின் சாபம் உண்மையாக ஒரு சாபம் அல்ல என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அப்படியாயின் பபிலோனை சபிப்பதல்ல ஆசிரியரின் நோக்கம், மாறாக தங்களின் துன்பங்களின் கனத்தை ஆண்டவருக்கு சொல்வதும், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை சொல்வதுமாகவே இருக்கிறது.
இந்த வரியின் மூலம், பபிலோன் எருசலேமை பாழாக்கியிருக்கிறது என்பது புலப்படுகிறது (בַּת־בָּבֶל הַשְּׁדוּדָה பாத்-பாவேல் ஹஷ்ஷெதூதாஹ்- பழாக்கும் மகள் பாபிலோனே). இதனை யாராவது பபிலோனுக்கு செய்தால் அவர் பேறுபெற்றவர் என்கிறார் ஆசிரியர் (אַשְׁרֵי 'அஷ்ரே- பேறுபெற்றவர்).
இந்த வரி இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பின்னர், திரு வழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
வ.9: குழந்தைகளை பிடித்து பாறையில் அடித்து கொலை செய்தல் அக்கால போர்களின் பின்னர் நடந்திருக்க வேண்டும். இதனைப் பற்றிய கல்வெட்டுக்களும், தரவுகளும் விவிலியம் அல்லாத பாடங்களிலும் இருக்கின்றன. பபிலோனியர், இஸ்ராயேல் குழந்தைகளை பாறையில் அடித்துக் கொன்றிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
குழந்தைகளை வைத்து, பேணிக்காப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பதாலும், அல்லது இந்த குழந்தைகள் நாளை வளர்ந்து தங்களுக்கு எதிராக வரும் என்பதாலும், அவற்றிக்கு உடனடியாக மரண தண்டனையை அவர்கள் கொடுத்திருக்கலாம் என எடுக்கலாம். மனிதர்கள்
இயல்பில் மிருகங்கள், என்பதற்கு இந்த வரி நல்ல உதாரணம். குழந்தைகளை கொடூரமாக பபிலோனியர்கள் மட்டுமல்ல, நவீன உலகில் இன்றும் பலர் கொடூரமாக கொலை செய்யத்தான் செயகிறார்கள் (என்றும் மிருகங்கள், மிருகங்கள் கவலைப்படும்).
தங்கள் குழந்தைகளுக்கு நடந்தது, பபிலோனிய குழந்தைகளுக்கும் நடக்கவேண்டும் என்றும், அதனை செய்கிறவர்களை புனிதர்கள் என்றும் வித்தியாசமாக சபிக்கிறார் ஆசிரியர். இந்த வரி சூழலியலில் மட்டுமே நோக்கப்படவேண்டும். தாங்கள் பபிலோனிய குழந்தைகளை கொல்வோம் என்று ஆசிரியர் சொல்லவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
(அக்கால போரின் கொடூரத்தையும், வடுக்களைக் காண, வாசிக்க: 2அரசர்கள் 8,12: எசாயா 13,16: ஒசேயா 13,16: நாகூடம் 3,10).
ஏன் வத்திக்கான் பொதுச் சங்கம், திருவழிபாட்டில் விவிலியத்தின் சில வரிகளை தவிர்க்கிறது என்பது இந்த வரிகளில் நன்கு புரிகிறது என நினைக்கிறேன்.
எபேசியர் 2,4-10
4ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார். 5குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. 6இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். 7கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். 8நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல் மாறாக இது கடவுளின் கொடை. 9இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. 10ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.
பவுலுடைய திருமுகத்தில் மிகவும் முதிர்ந்த மற்றும் முழுமையான திருமுகம் என்று எபேசியர் திருமுகத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். கிறிஸ்து, திருச்சபை மற்றும் இறைதிட்டம் போன்ற ஆழமான இறையியல் சிந்தனைகளை இந்த திருமுகம் தாங்கியுள்ளது. அமைதியான வார்த்தை பிரயோகங்களையும் மகிழ்வான சிந்தனைகளையும் உள்ளடக்கி இது ஒரு மேய்ப்புப் பணி திருமுகம் என்ற அடையாளத்தைப் பெறுகிறது. பவுலுடைய மற்றைய திருமுகங்களைப் போலல்லாது சற்று வித்தியாசமாகவே இந்த திருமுகம் உள்ளது. பவுல் அல்லது இதன் ஆசிரியர் எதோ ஒரு விசேட தேவைக்காக இந்த திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும். எபேசியர் திருமுகத்தில் போதனைப் பகுதி மிக நீண்டதாகவும், கடவுள் புகழ்ச்சி வரிகளாகவும் இருக்கின்றன. வாசகர்களுக்கான மன்றாட்டும், நீண்ட அறிவுரை வசனங்களும் எபேசியர் திருமுகத்தின் விசேட பண்புகள் என எடுக்கலாம். கொலோசேயர் திருமுகத்தில் எபேசியர் திருமுகம் அதிமாக தங்கியிருக்கிறது என்ற வாதம் ஒன்றும் இருக்கிறது.
எபேசியர் திருமுகத்தின் ஆசிரியத்துவம் ஒரு சவாலான விடயம். ஆரம்ப கால திருச்சபை தந்தையர்கள் பவுல்தான் எபேசியர் திருமுகத்தின் ஆசிரியர் என்று திடமாக நம்பியபோதும், இக்கால ஆய்வாளர்கள் இதனை அதிகம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. பவுலுடைய சீடர் அல்லது பவுலின் இறையியலை நன்கு அறிந்த அவருடைய ரசிகர் ஒருவர், பவுல் இப்படித்தான் சொல்வார் என்பது போல எழுதியிருக்கலாம் என்பது இன்றைய வாதம். வார்த்தைப் பிரயோகங்கள், நீண்ட வசனங்கள், பிற்கால இறையியல் சிந்தனைகள் இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கின்றன. இருப்பினும் பவுல் இந்த திருமுகத்தின் ஆசிரியர்தான் என்பதில் இன்னமும் வலுவான நம்பிக்கைகள் இருக்கின்றன.
இன்றைய பகுதி சாவின் நிலையிலிருந்து வாழ்வின் நிலையை அடைதல் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது.
வவ.1-3: பாவங்கள் குற்றங்கள் ஒருவரை இறந்தவராக மாற்றுகிறது. இது ஒருவகையாக தீமையின் தலைமைத்துவத்திற்கான வாழ்வும் பணியுமாகும். இந்த வாழ்க்கையை அனைவரும் வாழ்ந்தனர். இந்த வாழ்க்கை முறையினுள் பவுல் தன்னையும் இணைக்கிறார். இப்படியான கீழ்ப்படிவில்லா வாழ்க்கை முறை கடவுளின் சினத்தை வரவழைக்கும் வாழ்க்கை முறை என்கிறார். இதனை உடலும் மனமும் விரும்பும் வாழ்க்கை முறை என்கிறார்.
இந்த வரிகள் யூத மிட்ராஷ் (விரிவுரை) எழுத்துக்களை நினைவூட்டுகின்றன. பாவம் செய்கிறவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் இறந்தவர்களே என்பது தீமைக்கான ஒரு யூத விளக்கம். தீமைக்கு காரணம், இந்த உலகின் விழுமியங்கள், பரலோகத்திற்கு சற்று கீழே இருக்கும் தீய சக்தி, மற்றும் மனிதர்கள் இயற்கையாகவே கொண்டுள்ள கீழ்படிவில்லா வாழ்க்கை முறை.
வ.4: மனிதரின் வாழ்க்கை முறை மேற்சொன்னவாறு இருக்க, கடவுள் வேறுபட்டவராக இருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. கடவுளுளை மிகுந்த இரக்கம் உடையவராகவும் (πλούσιος ὢν ἐν ἐλέει, புலூசியோஸ் ஹோன் என் எலெய்), மிகுந்த அன்பு கொண்டவராகவும் பவுல் காட்டுகிறார் (πολλὴν ἀγάπην பொல்லேன் அகாபேன்). இது எபேசிய திருச்சபைக்கான மறைபடிப்பினையாக இருக்கலாம்.
வ.5: குற்றங்கள் காரணமாக இறந்தவர்களாக இருந்தும் (νεκροὺς நெக்ரூஸ், இறந்தவர்), அவருடைய அன்பின் காரணமாக உயிர்த்தவரானோம் (συνεζωοποίησεν சுன்நெட்சோஓபொய்ஏசென்- உயிர்பெற்றவர்) என்று விழிக்கிறார். அத்தோடு அனைவரும் மீட்க்கப்பட்டுவிட்டோம் (σεσῳσμένοι செசோஸ்மெனொய்- மீட்க்கப்பட்டவர்) என்கிறார். இது பவுலுடைய சாதாரண வாதத்திலிருந்து வேறுபடுகிறது.
சாதாரணமாக, மீட்பு இன்னமும் நிறைவடையவில்லை என்ற வாதத்தையை முன்வைக்கும் பவுல் இந்த இடத்தில் அனைவரும் ஏற்கனவே மீட்க்பபட்டாயிற்று என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
வ.6: கடவுள் நம்மை இயேசு கிறிஸ்துவோடு இணைத்து, அவரோடு உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்துள்ளார் என்கிறார். இந்த வரியும், முன் வரியைப்போல நிறைவடைந்த மீட்பைப்பற்றி பேசுகிறது. இங்கே பவுல் பாவிக்கின்ற நிறைவுக்காலம், உண்மையில் வரவிருக்கும் காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையான வாதமாகவே எடுக்கப்படவேண்டும் என்பது பல ஆய்வாளர்களின் வாதம்.
வ.7: கடவுளின் இந்த செயற்பாட்டிற்கான காரணங்கள் விளங்கப்படுத்தப்படுகின்றன. இயேசு வழியாக அவர் செய்த நன்மையையும் (χρηστότης கிரேஸ்டொடேஸ்- நன்மை), ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் (χάρις காரிஸ்-அருள்), எதிர்காலத்திற்கு காட்டவே கடவுள் இதனை செய்திருக்கிறார்.
எதிர்காலத்தில் உண்மையில் நடக்கவிருப்பது இப்போது நம்பிக்கையில் புலப்படுகிறது என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது.
வ.8: அருளால் நம்பிக்கையின் வழியாய் மீட்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள் என்பது பவுலுடைய மிக முக்கியமான வாதம் (χάριτί ἐστε σεσῳσμένοι διὰ πίστεως· காரிடி எஸ்டெ செசோஸ்மெநொய் தியா பிஸ்டெயோஸ் - அருளில் நம்பிக்கையில் வழியாய் மீட்கப்பட்டு இருக்கிறீர்கள்). இந்த சிந்தனை ஆரம்ப கால திருச்சபைக்கு மிகவும் தேவையாக இருந்தது. பல சவால்களை எதிர்கொண்ட எபேசிய திருச்சபைக்கு தங்களின் மாண்பு இந்த வரி வழியாக நிச்சயமாக விளங்கியிருக்கும் என எடுக்கலாம்.
இந்த நற்செயலுக்கு காரணம், கடவுள், அவருடைய கொடை (τοῦτο οὐκ ἐξ ὑμῶν, θεοῦ τὸ δῶρον· டூடு ஊக் எக்ஸ் ஹுமோன், தியூ டொ தோரொன்- இது உங்களுடையது அல்ல மாறாக கடவுளிடமிருந்து வரும் கொடை). கடவுளுடைய ஆசீர்வாதங்களுக்கு யாரும் உரிமை கோர முடியாது என்ற பவுலுடைய வாதம் இப்படி தெளிவுபடுத்தப்படுகிறது.
வ.9: மனித செயல்களால் யாருக்கும் பெருமை பாராட்ட உரிமையில்லை என்று யாரையோ மறைவாக சாடுகிறார் பவுல். யூதர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள், கடவுள் தங்களுக்கு விசேட சலுகைகள் செய்வார் என்று நம்பினர். இதற்கு அவர்களின் இஸ்ராயேல் அழைப்பை ஒரு காரணமாக காட்டினார். ஆனால் யாரும் இயேசுவிற்கு முன்னால் ஒன்றுமில்லாதவர்கள் என்பதை பவுல் அடிக்கடி காட்டுவார்.
பிறப்பாலும், இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும், பொருளாதாரத்தாலும், மக்கள் தங்களை எப்படி உயர்ந்தவர்கள் என கருதமுடியும், எனெனில் அனைத்தையும் தீர்மானிக்கிறவர் கடவுள். அவர் பாகுபாடு காட்ட முடியாதவர். ஆக இயற்கையில் அனைவரும் சமமானவர்களே என்பது பவுலுடைய அழகான வாதம். இதனால்தான் 'புழுகவேண்டாம்' என்கிறார் பவுல் (μή τις καυχήσηται. கௌகேசேடாய்-பெருமைபாராட்ட வேண்டாம்).
வ.10: மனிதர்கள் யார் என்று எபேசியருக்கு அழகான பாடம் எடுக்கிறார். நாம் கடவுளின் கைவேலைப்பாடு என்பது உண்மையான யூதரின் நம்பிக்கை. இதனை மிக நேர்த்தியாகச் சொல்கிறார். வித்தியாசம் என்னவெனில் இந்த கைவேலைப்பாடுதான் எபேசியர்களும் என்பதாகும். (ἐσμεν ποίημα, எஸ்மென் பொய்யேமா- அவர்கையால் உருவானவர்கள் நாங்கள்). இந்த வாதத்தின் முன்னால் அனைத்து பிரிவினைவாதங்களும் இல்லாமல் போகவேண்டும்.
மனிதரின் படைப்பின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்: நற்செயல் புரியவே அனைவரும் கிறிஸ்துவின் வழியாய் படைக்கப்பட்டிருக்கின்றோம் (κτισθέντες ἐν Χριστῷ Ἰησοῦ ἐπὶ ἔργοις ἀγαθοῖς கிடிஸ்தென்டெஸ் என் கிரிஸ்டோ இயேசூ எபி எர்கோய்ஸ் அகாபொய்ஸ்). நற்செயல் செய்வது ஒவ்வொரு மனிதருடையதுமான மிக முக்கியமான தார்மீக கடமை என்பது வலுவாக சொல்லப்படுகிறது. மனிதர் இயற்கையாக நல்லவர்கள் என்ற தத்துவம் இதன் அடிப்படையாக உள்ளது. நன்மை செய்யார், மனிதர் அல்ல, என எடுக்கலாம்.
இப்படியாக நன்மைசெய்து வாழும் திட்டத்தை கடவுள் முற்கூட்டியே ஏற்படுத்தியிருக்கிறார் என்பது பவுலுடைய வாதம். அதாவது கடவுளுடைய திட்டம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டாயிற்று.
இயேசுவின் பிறப்பும் வருகையும் தற்கால திட்டம் அல்ல, மாறாக அது மனிதருடைய படைப்பின் திட்டத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டது என்பது சொல்லப்படுகிறது.
யோவான் 3,14-21
14பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். 16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். 17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 19ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. 20தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. 21உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
யோவான் நற்செய்தியில் இயேசுவிற்கும் நிக்கதேமுவிற்கும் இடையிலான சந்திப்பு மிக முக்கியமானது. யோவான், உரையாடல் என்ற இலக்கிய வகையை அழகாக கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இந்த உரையாடலில் சொல்லப்படுகின்ற செய்தி, நிக்கதேமுவுக்கு மட்டுமல்ல, மாறாக அனைத்து வாசகர்களுக்குமாகும். முக்கியமாக நம்பிக்கை குறைவாக இருப்பவர்கள், அல்லது நம்பிக்கையில் வளரவேண்டியவர்கள், அல்லது இயேசுவை இருளில் சந்திக்க விரும்பும் அனைவருக்கும் பொருந்தும். யோவான் நற்செய்தியாளர் நிக்கதேமுவை எதிர்மறையாளராக காட்டவில்லை, மாறாக அவருடைய அணுமுறையைத்தான் வளரவேண்டிய அணுகுமுறையாகக் காட்டுகிறார் என்பதை அவதானிக்க வேண்டும். ஒருவர் பிறந்திருந்தாலும், அவர் இயேசுவில் மீள பிறக்க வேண்டும், வாழ்ந்தாலும் அவர் இயேசுவில் மீண்டும் வாழ வேண்டும் என்பது யோவானுடைய முக்கியமான செய்தி.
வ.14: பாலைநிலத்தில் பாம்பு உயர்த்தப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு என்றுதான் யூதர்களுக்கு தெரிந்திருந்தது (காண்க எண்ணிக்னை 21,9). இதனை யோவான் ஒரு அடையாளமாக பார்க்கிறார். இது நிச்சயமாக நிக்கதேமுவுக்கு ஆச்சரியமாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கும். மக்களின் கீழ்ப்படியாமை பாலைநிலத்தில் சாவைக் கொணர்ந்தது. அப்போது வெண்கல பாம்பை மோசே உயர்த்தினார் அதனை பார்த்தவர், உயிர் பிழைத்தனர். இருப்பினும் அதில் உயிர் பிழைத்தவர்கள் பின்நாட்களில் வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையாமலே மடிந்தனர். அவர்கள் பிள்ளைகள்தான் பிறகாலத்தில் வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழைந்தார்கள்.
பாம்பு சாதாரண விலங்கு மட்டுமல்ல, பாம்பை மையமாக வைத்து கானான் நாட்டிலும் சமயங்களிலும் வழிபாடுகளும், கதைகளும், தெய்வங்களும் இருந்திருக்கின்றன. விவிலியத்தில் பாம்பு வருகின்ற இடங்களில் எல்லாம், அது ஒரு விலங்கு என்பதையும் தாண்டி, அடையாளமாகவே உருவகிக்கப்படுகிறது. பாம்பு வழிபாட்டை இஸ்ராயேலர்கள் வெறுத்தார்கள் என்ற வாதம் ஒன்றும் உள்ளது.
பாம்பு உயர்த்தப்பட்டது போல, இங்கே மனுமகன் உயர்த்தப்பட வேண்டும் என்கிறார் யோவான் நற்செய்தியாளர் (οὕτως ὑψωθῆναι δεῖ τὸν υἱὸν τοῦ ἀνθρώπου, ஹுடோஸ் ஹுப்சோதேனாய் தெய் டொன் ஹுய்யொன் டூ அந்த்ரோபூ- இதேபோலவே மானிட மகனும் உயர்த்தப்படவேண்டும்). இங்கே பாம்பும் இயேசுவும் ஒப்பிடப்படவில்லை மாறாக இயேசுவின் சிலுவை மரணமும், பாம்பின் உயர்த்தப்படலும் ஒப்பிடப்படுகிறது.
வ.15: இயேசுவை உற்று நோக்குபவர்கள் நிலைவாழ்வு பெறுவர் என்கிறார். உற்று நோக்குபவர்களை, நம்பிக்கை கொள்பவர் என்று அழைக்கிறார் (ὁ πιστεύων ஹொ பிஸ்டெயூஓன்- நம்பிக்கையாளர்கள்).
ஆரம்ப காலத்தில் இந்த சொல் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் நம்பிக்கையாளர்கள் என்றே அறியப்பட்டார்கள்.
வ.16: யோவான் நற்செய்தியில் மிகவும் அதிகமான கோடிடப்படுகின்ற வசனம் இது. அதிகமான
இடங்களில் இந்த வரியை காணலாம். கடவுளுடைய அன்பின் வரைவிலக்கணத்தை இப்படி விவரிக்கலாம். இந்த வரியைவிட புதிய ஏற்பாட்டில், கடவுளின் அன்பின் அடையாளத்தை சொல்ல முடியாது எனலாம்.
தன் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறும் பொருட்டு (ὁ πιστεύων εἰς αὐτὸν μὴ ἀπόληται ἀλλ᾿ ἔχῃ ζωὴν αἰώνιον. ஹொ பிஸ்டெயுஓன் எய்ஸ் அவுடொன் மே அபொலேடாய் அல்ல் எக்சே ட்சோன் அய்யோனியோன்), அந்த மகனையே அளிக்கும் அளவிற்கு கடவுள் இந்த உலகின் மீது அன்பு கொண்டார் (ἠγάπησεν ὁ θεὸς τὸν κόσμονஇ ὥστε τὸν υἱὸν τὸν μονογενῆ ἔδωκεν ஏகாபேசென் ஹொ தியூஸ் டொன் கொஸ்மொன், ஹோஸ்டெ டொன் ஹுய்யோன் டொன் மொனொகெனே எதோகென்).
இந்த வரியைப் பற்றி மட்டுமே பல ஆயிரம் புத்தகங்களும், கட்டுரைகளும், ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. இந்த வரியை அமைதியாக வார்த்தைக்கு வார்த்தை வாசித்தால், ஒவ்வொரு தடவையும் புதுப் புது அர்த்தம் கொடுக்கும்.
வ.17: இயேசுவுடைய வருகையின் அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு யோவான் விடையளிக்கிறார்.
இந்த கேள்வியை நிக்கதேம் கேட்டாரா அல்லது வாசகர்கள் கேட்கிறார்களா என்பதை வாசகர்கள் -தான் தெரிவு செய்யவேண்டும்.
உலகிற்கு தண்டனை தீர்ப்பு அளிப்பதல்ல கடவுளுடைய நோக்கம் (οὐ ... εἰς τὸν κόσμον ἵνα κρίνῃ τὸν κόσμον ஹு எய்ஸ் டொன் கொஸ்மொன் ஹினா கிறினே டொன் கொஸ்மொன்- உலகை தீர்ப்பிட அல்ல). பல மானிட புருசர்களின் வருகை, உலகை தண்டிக்கவாயிருந்தது என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் ஆண்டவரின் வருகை அதனை ஒத்தல்ல.
உலகை மீட்கவே, அதுவும் தன் மகன் மூலமாக உலகை மீட்பதே கடவுளின் நோக்கமாக இருக்கிறது (ἀλλ᾿ ἵνα σωθῇ ὁ κόσμος δι᾿ αὐτοῦ. அல்ல் ஹினா சோதே ஹொ கொஸ்மொஸ் தி அவுடு - மாறாக அவரால் உலகை மீட்க).
வ.18: யோவானின் பார்வையில் தண்டனைத் தீர்ப்பு சற்று வித்தியாசமானது (κρίνω கிரினோ-தீர்ப்பு). இயேசு இல்லாத வாழ்வுதான் யோவானின் பார்வையில் தண்டனைத் தீர்ப்பு. நம்பிக்கை கொண்டவர்கள் இந்த தீர்ப்பை அடையமாட்டார்கள். நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கனவே தங்கள் நம்பிக்கை அற்ற தன்மையால், தண்டனை தீர்ப்பு அடைந்து விட்டார்கள் என்பது யோவானின் இறையியல்.
ஆக தண்டனை தீர்ப்பை வழங்குபவர் இயேசு அல்ல, மாறாக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்லது இயேசுவில் நம்பிக்கையில்லா வாழ்க்கை முறை எனலாம். கடவுளின் மகனிடம் நம்பிக்கை கொள்ளா வாழ்க்கை முறை மிகவும் ஆபத்தானது என்பதை யோவான் வலுயுறுத்துகிறார்.
வ.19: ஒளி உலகிற்ககு வந்தது (φῶς ἐλήλυθεν εἰς τὸν κόσμον போஸ் எலேலூதென் எய்ஸ் டொன் கொஸ்மொன்). இப்படியாக இயேசுவின் வருகை ஏற்கனவே வந்துவிட்டது. இயேசுதான் ஒளி என்று யோவான் காட்டுகிறார். இயேசுவை ஒளி என்று காட்டுவது யோவானின் விடேச அணுகுமுறை. கிரேக்கர்கள் ஒளிக்கடவுளை பெரிய கடவுளாக நம்பினார். இந்த பின்புலத்தில் இயேசுவை யோவான் ஒளி என்று காட்டுகிறார்.
மனிதர் தங்கள் செயல்கள் தீயனவாய் இருப்பதால் ஒளியைவிட இருளையே விரும்புகின்றனர் என்பது யோவானின் வாதம் (σκότος ஸ்கோடொஸ்- இருள்). ஒளியையும் இருளையும் யோவான் அடையாளமாக பாவிக்கிறார். இயேசுவை நம்புகிறவர்கள் ஒளியின் மக்கள், நம்பாதவர்கள் இருளின் மக்கள் என்பது யோவானின் பாவனை. இருள், தொடக்க காலத்திலிருந்தே தீமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. விவிலியம் இருளை ஒரு மறைபொருளாகவே பாhக்கிறது. இருளை அறிவியல், ஒளியில்லா தன்மையாக பார்த்தாலும், ஆரம்ப கால மக்கள் அதனை பலவீனமாகவே பார்த்தார்கள்.
வ.20: தீங்கு செய்வோர் ஒளியை வெறுக்கிறார்கள் (ὁ φαῦλα πράσσων μισεῖ τὸ φῶς ஹொ பாவ்லா பிராஸ்ஸோன் மிசெய் டொ போஸ்), அதாவது, நம்பிக்கையில்லாதோர் இயேசுவை வெறுக்கிறார்கள். ஏன் அவர்கள் வெறுக்கிறார்கள், அவர்களின் தீச்செயல் வெளிப்பட்டுவிடும் என்று அஞ்சுவதால் ஒளியிடம் வருவதில்லை என்கிறார் யோவான்.
இருளில் இருப்பது பாதுகாப்பானது என்று கருதுவது ஒரு மாயை என்று யோவான் கருதுகிறார் அத்தோடு, இந்த வரி மூலமாக யாரையோ கடுமையாக சாடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
வ.21: உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள் (ποιῶν τὴν ἀλήθειαν ἔρχεται πρὸς τὸ φῶς, பொய்யோன் டேன் அலேதெய்யான் எர்கெடாய் புரொஸ் டொ போஸ்). ஒளியிடம் வருவதையும், உண்மையாக வாழ்வதையும், நம்பிக்கைகொண்டோரின் வாழ்க்கை முறை என்கிறார் யோவான்.
இந்த வருகையும், ஒளியில் வாழ்க்கையும், இவர்களை, அவர்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும், கடவுளோடு இருக்க வைக்கிறது. 'கடவுளோடு இணைந்து செய்தல்' என்ற வார்த்தை பிரயோகமும் நோக்கப்படவேண்டிய ஒன்று. இயேசு இல்லாத வாழ்வு, கடவுள் இல்லாத வாழ்வு என்பது சொல்லப்படுகிறது (ἐν θεῷ ἐστιν εἰργασμένα. என் தியூ எஸ்டின் எய்ர்காஸ்மெனா- கடவுளில் வேலைசெய்தல்).
இயேசு இல்லாத கிறிஸ்தவம் ஆபத்தானது,
கடவுள் இல்லாத மதம் மனதை தொடாது,
ஆன்மீகம் இல்லாத சடங்குகள் பாதகமானவை,
மனிதம் இல்லாத பாரம்பரியங்கள் வெறுக்கத்தக்கவை,
நேர்மையற்ற கலாச்சாரங்கள் தூக்கியெறியப்படவேண்டியவை,
கற்பனையில் மிதக்கும் புராணங்கள் கதையாக மட்டுமே பாhக்கப்படவேண்டும்.
கடவுளை மீட்க முயலாமல்,
நம்மை மீட்க அவரை விடுவோம்.
அன்பு ஆண்டவரே
உமது பெயரால் செய்யப்படும் வன்முறைகளை தடுத்துவிடும். ஆமென்.
இரக்கமற்ற மனித விலங்குளால் பாதிக்கப்பட்ட,
இஸ்லாமிய-பௌத்த சகோதர சகோதரிகளுக்கு அர்ப்பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக