தவக்காலம் ஐந்தாம் வாரம் (ஆ)
18,03,2018
மி. ஜெகன்குமார் அமதி,
வசந்தகம், யாழ்ப்பாணம்.
Friday, March 16, 2018
முதல் வாசகம்: எரேமியா 31,31-34
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 51
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 5,7-9
நற்செய்தி: யோவான் 12,20-33
எரேமியா 31,31-34
31இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். 32அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். 33அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். 34இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்.
எரேமியா இறைவாக்கினர் தென் நாடான யூதேயாவின் இறுதி காலத்தில் வாழ்ந்தவர். யூதேயாவின் அரசியல் நிகழ்வுகளையும் முடிவுகளையும் மிக நெருக்கமாக அவதானித்து பல முன்னெச்சரிக்கைகளையும்
ஆலோசனைகளையும், ஆளும் தலைமைத்துவத்திற்கு அக்காலத்தில் வழங்கினார். இருப்பினும் தலைவர்கள் எரேமியாவை எதிரியாகவே பார்த்தனர், அவரை எதிர் மறையான சிந்தனையாளர் என குற்றம் சாட்டினர். எரேமியா தன்னுடைய இறைவாக்கின் பொருட்டு பல துன்பங்களை சந்தித்தார். எரேமியாவின்
இறுதிக்காலங்கள் இறுக்கமாகவே இருந்திருக்கின்றன. தன்னுடைய இறைவாக்கின் பொருட்டு அவர் உடல்-உள ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார். உயிர்பிழைக்க அவர் எகிப்திற்கு தப்பிச்சென்றார் என்றும் நம்பப்படுகிறது. எரேமியா பல இடங்களில் எருசலேமின் அழிவைப் பற்றி இறைவாக்குரைத்தாலும், நம்பிக்கை தரும் வாக்குகளை அவர் அதிகமாகவே தந்திருக்கிறார்.
எரேமியா புத்தகத்தின் 30-33 அதிகாரங்கள் புதிய உடன்படிக்கையை பற்றி பேசுகின்றன. கடவுள், தந்தையரின் குற்றச்செயல்களின் பொருட்டு அவர் மக்களையும் தண்டிக்கிறார் என்று நம்பப்பட்ட அக்காலத்தில் எரேமியா மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார். அதாவது அவரவர் வாழ்க்கைக்கு, அவரவர்தான் பொறுப்பு என்பதை காட்டுகிறார். இதனை அவர் ஒரு பழமொழியை காட்டி அதனை மாற்ற முயல்கிறார் 'தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்' (காண்க எரே 31,29) இதே பழமொழியை எசேக்கியேல் இறைவாக்கினரும் பிற்காலத்தில் பயன்படுத்துவார் (ஒப்பிடுக எசே 18,2). குற்றங்களுக்கான தண்டனையை குற்றம் செய்பவர்தான் சந்திக்க வேண்டும் என்ற சிந்தனை இங்கேயே சொல்லப்பட்டுவிட்டது.
வ.31: எரேமியா இறைவாக்கினர் புதிய உடன்படிக்கை ஒன்றை கடவுள் செய்வதாகச் சொல்கிறார்.
(כָרַתִּי בְּרִית חֲדָשָׁה׃ காரத்தி பெரித் ஹதாஷாஹ்- புதிய உடன்படிக்கையை வெட்டுவேன்). இந்த உடன்படிக்கை இஸ்ராயேல் வீட்டாரோடும் யுதேயா வீட்டாரோடும் செய்யப்படுகிறது
(אֶת־בֵּית יִשְׂרָאֵל וְאֶת־בֵּית יְהוּדָה 'எத்-பேத் இஸ்ரா'எல் வெ'எத்-பேத் யெஹுதாஹ்- இஸ்ராயேல் வீட்டாரோடும், யூதேயா வீட்டாரோடும்). இஸ்ராயேல் (வட நாடு) எற்கனவே அழிந்து போயிருந்தாலும், அதன் நினைவுகளும், அதன் மீதான அன்பும் மறையவில்லை என்பதையே இந்த வரி காட்டுகிறது.
கடவுள் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்வதாகச் சொல்வது, ஏற்கனவே செய்யப்பட்ட உடன்படிக்கையில் எதோ தவறிருக்கிறது என்பதை சொல்கிறது எனவும் எடுக்கலாம். அல்லது புதிதாக எதனையோ கடவுள் தொடங்கப்போகிறார் என்றும் எடுக்கலாம்.
வ.32: பல முக்கியமான வரலாற்றுச் செய்திகள் இங்கே சொல்லப்படுகின்றன. இஸ்ராயேலரின் மூதாதையரை தான் எகிப்திலிருந்து கைப்பிடித்து வழிநடத்தி வந்ததாக நினைவுகூறுகிறார் ஆண்டவர்
(בְיָדָ֔ם לְהוֹצִיאָ֖ם מֵאֶ֖רֶץ מִצְרָ֑יִם பெயாதாம் லெஹோட்சி'ஆம் மெ'எரெட்ஸ் மிட்ஸ்ராயிம்- கைகலால் எகிப்து நாட்டிலிருந்து கூட்டிவர). இந்த இடத்தில் கடவுள் தன்னை ஒரு தந்தைக்கு ஒப்பிடுகிறார்.
தந்தையாக இஸ்ராயேலரை எகிப்திலிருந்து கூட்டிவந்தபோது அவர்களோடு சீனாய் மலையில் செய்த உடன்படிக்கையை நினைவுகூருகிறார் (לֹא כַבְּרִית אֲשֶׁר כָּרַתִּי אֶת־אֲבוֹתָם லோ' கபெரித் 'அஷேர் காராதி 'எத்-'அவோதாம் - அவர்கள் மூதாதையருடன் வெட்டிய உடன்படிக்கையைப் போல அல்லாது).
இந்த உடன்படிக்கையை, தான் அவர்கள் தலைவராக இருந்தும், அவர்கள் மீறினார்கள் என்று வருத்தப்படுகிறார் (אֲשֶׁר־הֵמָּה הֵפֵרוּ 'அஷேர் ஹம்மாஹ் ஹெபெரூ - அதை அவர்கள் உடைத்தார்கள்). தலைவர் என்பதற்கு 'பாஅல்' (בַּעַל ப'அல்) என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இதனை தலைவர், கணவர், முதலாளி என்ற அர்த்தத்திலும் மொழி பெயர்க்கலாம்.
வ.33: புதிதாக செய்யவிருக்கும் உடன்படிக்கையைப் பற்றி சொல்கிறார் ஆண்டவர். இதிலிருந்து இந்த உடன்படிக்கை வித்தியாசமானதாகவே இருக்கும் என்பது தெரிகிறது. இந்த உடன்படிக்கையில், திருச்சட்டத்தை மக்களின் இதயத்தில் பதிப்பிப்பதாகச் சொல்கிறார் ஆண்டவர், மிகவும் அழகான வரி
(נָתַתִּי אֶת־תּֽוֹרָתִי בְּקִרְבָּ֔ם நாததி 'எத்-தோராதி பெகிர்பாம்- என் சட்டத்தை அவர்களுள்ளே வைப்பேன்).
இதனை அடுத்த வரி திருப்பிக்கூறுதல் முறையில் மீண்டும் சொல்கிறது: וְעַל־לִבָּם אֶכְתֲּבֶנָּה (வெ'அல்-லிபாம் 'எக்தவெனாஹ்- அதை அவர்கள் இதயத்தில் எழுதுவேன்). இதயத்தில் எழுதுவது என்பது மிகவும் நெருக்கமான வார்த்தைகள். சாதாரணமாக தலைவர்கள் தங்கள் சட்டங்களை கற்களில் எழுதுவார்கள், இங்கே கடவுள் மனிதர்களின் இதயத்தில் எழுதுவதாக முன்வருகிறார். இதன் மூலம், இந்த கடவுளுக்கு அவர் மக்கள் மீது எவ்வளவு பிரியம் என்பது புலப்படுகிறது.
இந்த வரியின் இறுதிப் பிரிவு இன்னும் முக்கியமான வார்த்தைகளைக் கொண்டுள்ளது. அவர், அவர்களின் கடவுளாய் இருப்பதாகவும், அவர்கள் கடவுளின் மக்களாகவும் இருப்பதையும் சொல்கிறது
(וְהָיִיתִי לָהֶם לֵאלֹהִ֔ים וְהֵמָּה יִֽהְיוּ־לִי לְעָם׃ வெஹாயிதி லாஹெம் லெ'எலோஹிம், வெஹெம்மாஹ யிஹ்வூ-லி லெ'ஆம் - நான் அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன், அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்).
இவ்வளவு காலமும், இந்த மக்கள் அவர் மக்களாய் இருக்கவில்லையா? என்ற கேள்வியை இந்த வரி நிச்சயமாக எழுப்பும்.
வ.34: ஆண்டவரை அறிந்து கொள்ளுங்கள் என்பது ஒரு முக்கியமான கட்டளையும் படிப்பினையும் ஆகும். இந்த கட்டளையும் படிப்பினையும் இனி தேவைப்படாது என்பது போல ஆண்டவர் சொல்கிறார்.
(דְּעוּ אֶת־יְהוָה தெ'வூ 'எத்-அதோனாய், ஆணடவரை அறிந்துகொள்ளுங்கள்). இதற்கான காரணத்தையும் ஆண்டவர் தருகிறார். தெரியாதவர்கள்தான் அறிந்துகொள்வார்கள், அனைத்தும் தெரிந்தவர்களுக்கு எதையும் அறியவேண்டிய தேவையிருக்காது என்பது சொல்லப்படுகிறது. அனைவரும் தன்னை அறிந்துகொள்வார்கள் என்று ஆண்டவர் நம்பிக்கை தருகிறார். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த செய்தி உரைக்கப்பட்டபோது யூதேயா மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது, அனைத்தும் இருளாக இருந்தபோது, இந்த நம்பிக்கையான செய்தி மிகவும் நோக்கப்படவேண்டியது (יֵדְעוּ אוֹתִי யெத்'வூ 'ஓதி, அனைவரும் என்னை அறிவர்). இந்த அனைவரும் என்போருள் சிறியவர்களையும் பெரியவர்களையும் உள்ளடக்குகிறார் கடவுள்.
அத்தோடு இன்னோர் முக்கியமான செய்தி வழங்கப்படுகிறது. அதாவது பாவங்களும் குற்றங்களும்தான் கடவுள் இஸ்ராயேல் மக்கள் இடையிலான மிக முக்கியமான சிக்கலாக இருந்தது.
இதனை இனி கடவுள் நினைவுகூறமாட்டேன் என்கிறார். அதாவது இனி புதிய வாழ்வு ஒன்று தொடங்குகின்றது என்ற செய்தி கொடுக்கப்படுகிறது. தீச்செயல் மன்னிக்கப்படுகிறது (אֶסְלַח לַעֲוֹנָם 'எஸ்லாஹ் ல'அனோனாம் அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்), பாவங்கள் மறக்கப்படுகிறது (וּלְחַטָּאתָם לֹא אֶזְכָּר־עוֹד வுல்ஹத்தா'தாம் லோ' 'எட்ஸ்கார்-'ஓத், அவர்களின் குற்றங்களை இனிமேலும் நினைக்கமாட்டேன்).
திருப்பாடல் 51
1கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத்
தூய்மைப்படுத்தியருளும்;
3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. 4உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
6இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். 7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.
8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
9என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 14கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
18சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.
திருப்பாடல் 51, தனிமனித புலம்பல் பாடல் என இன்று அதிகமான திருப்பாடல்கள் ஆய்வாளர்களினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதன் முகவுரை, தாவீது இந்தப் பாடலை அவர் உரியாவின் மனைவியுடன் பாவம் செய்ததனை நாத்தான் இறைவாக்கினர் சுட்டிக்காட்டிய போது, அவர் உண்மையாகவே மனமாறினார், அந்த வேளையில் பாடிய பாடல் என காட்டுகிறது (בְּבוֹא־אֵלָיו נָתָ֣ן הַנָּבִ֑יא כַּֽאֲשֶׁר־בָּ֝֗א אֶל־בַּת־שָֽׁבַע׃). (ஒப்பிடுக 2சாமுவேல் 12,1-13). இருப்பினும் இந்த பாடல் சாமுவேல் புத்தகத்திலோ அல்லது குறிப்பேடு புத்தகத்திலோ குறிக்கப்படவில்லை. ஒருவரின் பாவம் மனமாற்றத்தாலே கழுவப்படுகிறது, மனமாற்றமில்லா வெறும் பலிகள், ஒருவரின் பாவத்தை கழுவாது என்றும், அத்தோடு கடவுள் தன்னுடைய தண்டனைத் தீர்ப்பில் நேர்மையானவர், இது போன்ற பல ஆழமான சிந்தனைகளை
இந்தப் பாடல் முன்வைக்கின்றது.
கடவுளுடைய பார்வையின் முன்னால் அனைவரும் சமன், அவர்கள் அரசராக இருந்தாலும்கூட நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். மனமாற்றம் ஒன்றே ஒருவரை பாதுகாக்கும் என்பதும் இந்த ஆசிரியரின் நம்பிக்கை. இந்த திருப்பாடலின் அதிகமான வரிகளும் எபிரேய கவிநடையான திருப்பிக் கூறுதல் நடையையே பிரதிபலிக்கின்றன.
வவ.0-0: இந்த வரிகள் திருப்பாடல் 51ஐ அரசர் தாவீதுடன் சம்மந்தப்படுத்துகின்றன. இதன் காரணமாக தமிழ் விவிலியத்தின் வரிகளின் எண்ணிக்கைக்கும், எபிரேய விவிலியத்தின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் வருகிறது. தமிழ் மற்றும் வேறு தேசிய மொழிகள் 19 வரிகளைக் காட்டுகின்ற அதேவேளை, எபிரேய விவிலியம் 21வரிகளைக் காட்டுகின்றது. இந்த இரண்டு வரிகளும் பின்நாளில் சேர்க்கப்பட்டவை என்ற ஒரு வாதமும் இருக்கின்றது.
எபிரேய விவிலியத்தில் 1-2: பாடகர் தலைவர்க்கு தாவீதின் திருப்பாடல் அல்லது தாவீதிற்கான திருப்பாடல் (לַמְנַצֵּ֗חַ מִזְמוֹר לְדָוִד׃ லம்நட்செஹா மிட்ஸ்மோர் லெதாவித்). இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் (தாவீது) வந்தபோது, அதாவது அவர் (தாவீது) பெத்செபாவிடம் சென்றபின்
(בְּבוֹא־אֵלָיו נָתָן הַנָּבִ֑יא כַּאֲשֶׁר־בָּא אֶל־בַּת־שָֽׁבַע׃ பெபோ'-'எலாவ் நதான் ஹந்நாவி' க'அஷெர் பா' 'எல்- பாத்-ஷாவா').
வ.1: ஆசிரியர் தன்னுடைய குற்றங்களை மன்னிக்குமாறு கடவுளை கேட்கிறார், இதற்கு ஆதாரமாக கடவுளின் பேரன்பையும் (חֶסֶד ஹெசெத்), அளவற்ற இரக்கத்தையும் (רַחֲמִים ரஹமிம்) கோடிடுகிறார். கடவுளுடைய இரக்கம் என்பது பாவிகளின் குற்றங்களை துடைத்தலாகும் என்று பாடுகிறார். இந்த முதலாவது வரியே, ஆசிரியர் தன் பாவத்தின் கனாகனத்தை உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
வ.2: சாதரணமாக புலம்பல் பாடல்கள் வேண்டுதலை ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும். இந்த பாடலில் இந்த வேண்டுதல்கள் ஆரம்பத்திலேயே வருகின்றன. பாவம் (חַטָּאת ஹத்தா'த்) என்பதைப் பற்றி பல புரிதல்கள் விவிலியத்தில் இருக்கின்றன. அதனை இந்த பாடல் ஆசிரியர் உடலின் அழுக்குடன் ஒப்பிட்டு அதனை கடவுள் கழுவ வேண்டும் என்று மன்றாடுகின்றார். இந்த முதல் இரண்டு வரிகளில் மூன்று வகையான பாவத்தினை ஆசிரியர் காட்டுகிறார் (பெஷ' குற்றம் פֶּשַׁע, 'ஆயோன் தீவினை עָוֹן, ஹத்தா'த் பாவம் חַטָּאת), இவை ஏற்கனவே லேவியர் சட்டங்களில் நன்கு தெரிந்தவை (காண்க வி.ப 34,7: ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்' என அறிவித்தார்.)
வ.3: பாவ மன்னிப்பிற்கு முதலில் தேவையானது சுய அறிவு என்பதை ஆசிரியர் அழகாக காட்டுகிறார். தனக்கு தன்னுடைய பாவம் நன்கு தெரிவதாகவும், அந்த பாவம் தொடர்ச்சியாக தன் முன்னால்
இருப்பதாகவும் கூறுகின்றார், אֲנִי אֵדָע ('அனி 'எதா') எனக்கு தெரிந்திருக்கிறது.
வ.4: இந்த வரியில் தன்னுடைய பாவம் யாருக்கு எதிரானது என்பதைக் காட்ட முயல்கிறார். முதலில் தன் பாவம் கடவுளுக்கு எதிரானது என்பதை அறிக்கையிடுகிறார் (לְךָ לְבַדְּךָ ׀ חָטָאתִי லெகா லெவாதெகா ஹாதா'தி - உமக்கு எதிராக மட்டுமே பாவம் செய்தேன்). பாவம் சமூக மயமானது, ஒருவர் தன் அயலவருக்கு எதிராக செய்யும் பாவங்கள் உண்மையாக கடவுளுக்கு எதிரானவை என்பதை இஸ்ராயேலர்கள் நன்கு
அறிந்திருக்கின்றனர். இந்த பாடலின் ஆசிரியர் தாவீது என்று நாம் கருதினால், தான் உரியாவிற்கும் அவர் மனைவிக்கும் செய்த பாவம் உண்மையிலேயே கடவுளுக்கும், அவர் மாட்சிக்கும் எதிரான பாவம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.
ஆண்டவர் தன் தீர்ப்பினால் நீதியை வெளிப்படுத்தினார் என்கிறார். நாத்தான் தாவீதை கடுமையாக கண்டித்தார் அத்தோடு இந்த பாவத்திற்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார் (காண்க 2சாமு 12,7-13). இந்த தண்டனை உடனடியாக பெத்செபாவின் முதலாவது மகனின் மரணத்துடன் தொடங்கி பின்னர், தாவீதின் சொந்த பிள்ளைகளே அவர் மனைவியருடன் விபச்சாரம் செய்யும் அளவிற்கு நீண்டது. இந்த தண்டனையைத்தான் தாவீது நீதியான தண்டனை என்கிறார்.
வ.5: பாவியாக தன்னுடைய பாவத்திற்கு மன்னிப்பு கேட்கும் தாவீது, பாவம் எங்கு தொடங்குகின்றது என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார். தான் பாவத்திலே பிறந்ததாக சொல்கிறார் (חוֹלָלְתִּי ஹோலால்தி). பாலியல் உறவு தறவான இச்சையினால் உருவாகிறது என்று அதிகமான கலாச்சாரங்கள் முற்காலத்தில் நம்பின. தூய அகுஸ்தினார் கூட, சென்ம பாவம் உடலியல் உறவினால் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படுகிறது என நம்பினார். தமிழ் இலக்கியங்கள் இதற்கு மாறாக, பல காலத்திற்கு முன்பே பாலியல் உறவு தூய்மையானது என்பதைக் காட்டிவிட்டன. இந்த பாடலில் தாவீது தன் தாய் பாவி என்று சொல்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் அவர் தன்னை மட்டும்தான் பாவி என்று சொல்வதைப் போலத்தான் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன (בְחֵטְא יֶֽחֱמַתְנִי אִמִּי- வெஹெத்' யெஹெமத்னி 'இம்மி- பாவத்தில் என் தாய் என்னை கருத்தரித்தாள் )
வ.6: இனிவருகின்ற வரிகளில் கடவுள் செய்யவேண்டியதைக் காட்டுகின்ற அதேவேளை, பாவ மன்னிப்பால் தான் செய்ய இருக்கின்ற பரிகாரங்களையும் வரிசைப் படுத்துகின்றார். கடவுள் விரும்புவது உள்ளத்து உண்மை (אֱמֶת 'எமெத்), அத்தோடு மறைவாக ஞானத்தை அறிய செய்கின்றார் எனவும் பாடுகிறார். இங்கனம் உள்ளத்து உண்மையும் ஞானமும் ஒன்றோடொன்று சம்மந்தமானது என்பது தெரிகிறது.
வ.7: ஈசோப்பு (אֵזוֹב 'எட்சோவ்) என்னும் ஒருவகை சிறிய தாவரம் எரிபலிகனின் மீது தண்ணீர் தெளிக்க பயன்பட்டது. இது ஒரு வகை பலிசெலுத்தும் சடங்கு முறை (காண்க 1அரசர் 4,33: வி.ப 12,22). திருப்பாடல் ஆசிரியர் இந்த வெளிச்சடங்கு முறையை உள்ளாந்த மனமாற்ற சடங்கு முறைக்கு ஒப்பிட்டு பார்க்கின்றார். பலிப்பொருட்கள் தூய்மையாக்கப் படுவதைப் போல, தானும் தூய்மையாக வேண்டும் என்பது இவர் விருப்பம். இதனால் இவர் உறைபனியிலும் வெண்மையாவார் என நம்புகிறார். இஸ்ராயேல் குளிர் காலங்களில் சிலவேளைகளில் உறைபனியை கண்டது. அத்தோடு வடக்கில் ஏர்மோன் மலையுச்சிகள் வெண்மையாக காட்சியளித்தன, இதனால் வெண்மை தூய்மை மற்றும் கடவுளின் நிறமாக பார்க்கப்பட்டது (שֶּׁלֶג אַלְבִּין ஷெலெக் 'அல்பின்- வென்பனி). அல்புஸ் என்ற சொல் இலத்தின் மொழியிலும் வென்மையைக் குறிக்கிறது. இந்த சொல்iலை இலத்தின் எபிரேயத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
வ.8: மகிழ்வையும் (שָׂשׂוֹן ஷாஷோன்), சந்தோசத்தையும் (שִׂמְחָה ஷிம்ஹாஹ்) கேட்க வேண்டும் என விரும்புகிறார். இங்கே உருவக அணிகள் பாவிக்கப்பட்டுள்ளன. பாவ மன்னிப்பினால் ஒருவருக்கு மகிழ்ச்சியும் சந்தேசமும் வருகின்றது, இதனைத்தான் ஆசிரியர் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கிறார். பலமாக தாக்கப்படும் போது எலும்புகள் உடைகின்றன. இந்த தாக்குதல்கள் மனிதராலோ அல்லது மிருகங்களாலோ ஏற்படலாம். எலும்புகளில்தான் மனித உணர்வுகள் அடங்குகின்றன என்பது எபிரேய சிந்தனையாகவும் இருக்கிறது (עֶצֶם 'எட்செம் - எலும்பு, சுயம்). ஆக தன்னுடைய பாவத்தின் நிலையை எலும்புகள் உடைக்கப்படுதலுக்கு ஒப்பிடுகிறார் தாவீது.
வ.9: தன் பாவங்கள் கொடூரமாக இருப்பதனால் அதனை கடவுள் பார்க்கக்கூடாது என விரும்புகிறார். அத்தோடு அந்த பாவக் கறைகள் துடைக்கப்படவேண்டும் எனவும் விரும்புகிறார். முகத்தை மூடிக்கொள்ளல் என்பது பாவத்திற்காக தீர்ப்பு வழங்க வேண்டாம் என்பதைக் குறிக்கிறது. பாவத்தை துடைத்தல் என்பதுவும் ஒரு சடங்கு போலவே காட்டப்படுகிறது.
வ.10-11: பாவத்தை கழுவி துடைக்கும் ஆண்டவர் மேலும் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கிறார். புதிய இதயத்ததை உருவாக்கக் கேட்கிறார் (לֵב טָהוֹר בְּרָא־לִי லெவ் தாஹோர் பெரா'-லி). அத்தோடு புதியதும் உறுதியானதுமான ஆவியை தன்னுள்ளே வைக்கவும் கேட்கிறார். தாவீது இங்கே கடவுளின் ஆவியை நினைவூட்டி மன்றாடுகிறார் (רוּחַ ரூஹ). சவுல் கடவுளுக்கெதிராக பாவம் செய்த போது தன் ஆவியை இழந்தார், அந்நாளில் இருந்து சவுல் தோற்கத் தொடங்கினார் (காண்க 1சாமுவேல் 16,14). ஒருவேளை இப்படியான நிகழ்வு தனக்கும் ஏற்பட்டு விடுமோ என்று தாவீது அஞ்சியிருக்கலாம்.
(14ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.)
வ.12: தன் பாவத்தின் காரணமாக மீட்பின் மகிழ்ச்சி அவரிடமிருந்து சென்றுவிட்டதாகவும், அதனை மீண்டும் தரும் படியாகவும் கேட்கிறார். அத்தோடு முன்போல் இனியொரு போதும் பாவம் செய்யாதபடி தன்னார்வமாக கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் பக்குவத்தையும் கேட்கிறார்.
வ.13: இங்கே தாவீது தன்னுடைய பணிகளை மீண்டுமாக நினைவூட்டுகிறார். ஒரு அரசர் குற்றம் செய்தவர்களையும், பாவிகளையும் திருத்தவேண்டிய கட்டயாத்தில் இருக்கிறார். ஆனால் அரசரே பாவம் செய்து கடவுளின் ஆவியை இழந்தால் அவரால் இந்த காரியங்களைச் செய்ய இயலாது போகும். இதனை நினைவில் கொண்டு, அரசர் தன் பணியை செய்ய முதலில் ஆண்டவர் அவரை மன்னிக்கவேண்டியுள்ளது.
வ.14: கடவுளை தன் மீட்பின் கடவுளாக விழித்து (אֱלֹהֵי תְּשׁוּעָתִי 'எலோஹெ தெஷு'ஆதி), இரத்த பழியினின்று தன்னை மீட்குமாறு வேண்டுகிறார் (מִדָּמִים மிதாமிம்). இரத்தப்பழி இங்கே ஒருவேளை உரியாவின் மரணத்தைக் குறிக்கலாம். தாவீதின் தூண்டுதலாலேயே யோவாபு, உரியாவை அன்னியரின் கையாலே சாவடித்தார் (ஒப்பிடுக 2சாமு 11,17). இந்தப் பாவம் யோவாபை அல்ல, தாவீதையே சாரும். இதனை தாவீது நினைத்திருக்கலாம். இதன் காரணமாக தான் நீதியற்றவனாக இருப்பதாகவும், கடவுளின் மன்னிப்பு அந்த நீதியை மீண்டும் கொண்டு வரும் என காட்டுகின்றார்.
வ.15: இந்த வரி ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்கள் தங்கள் புகழ்மாலை புத்தகத்திலே சொல்லுகின்ற ஆரம்ப வரி. 'ஆண்டவரே என் இதழ்களை திறந்தருளும், அப்போது என் நா உம்மை புகழ்தேற்றும்'.
(אֲדֹנָי שְׂפָתַי תִּפְתָּח 'அதோனாய் செபாதாவ் திப்தாஹ்- தலைவரே என் இதழக்ளை திறந்தருளும்,
וּפִ֗י יַגִּיד תְּהִלָּתֶךָ׃ வுபி யகித் தெஹில்லாதாகா- என் வாய் உம் புகழைச் சாற்றும்) தன்னுடைய பாவத்தின் பொருட்டு பாடகராக தாவீது தன் இதழ்களை திறக்க முடியாமல் உள்ளார், இதனால் அவரால் கடவுளுடைய புகழையும் பாடமுடியாமல் உள்ளது. எனவே தன் பாவத்தை மன்னிக்க கேட்கிறார்.
வ.16-17: இந்த வரி மிக முக்கியமான வரி. எரிபலியினாலும் எந்தப் பலியினாலும் இஸ்ராயேலின் கடவுள் திருப்திப்படுத்தப்பட முடியாதவர். அவர், நீதியின் தேவன். நீதியொன்றே அவரை திருப்திப்படுத்த முடியும். இந்த வரிகளின் மூலமாக தாவீது பலிகளுடைய அல்லது எரிபலிகளுடைய முக்கியதுவத்தை
இல்லாமலாக்குகிறார் என்று நினைக்க முடியாது மாறாக, அவர் அந்த பலிகளைவிட உன்மையான மனமாற்றமே மேலானது என்கிறார். நொருங்கிய உள்ளமும் (רוּחַ נִשְׁבָּרָה ரூஹ நிஷ்பாரெஹ்- நொறுங்கிய ஆவி), குற்றமுணர்ந்த இதயம் (לֵב־נִשְׁבָּר லெவ்-நிஷ்பார், உடைந்த இதயம்), இதனை கடவுள் நல்ல பலியாக ஏற்றுக்கொள்கிறார் என்பது தாவீதின் நம்பிக்கை. (זֶבַח ட்செவாஹ்- பலி: עוֹלָה 'ஓலாஹ்- எரிபலி).
வ.18: இந்த வரி தாவிதின் ஆசிரியத்துவத்தை சந்தேகிக்க வைக்கிறது. தாவீது இந்த பாடலின் ஆசிரியர் என்றால், ஏன் எருசலேமின் மதில்கள் உடைந்திருக்கின்றன? தாவீதின் காலத்தில் எருசலேமின் மதில்கள் உறுதியாக இருந்தன. சில ஆய்வாளர்கள் இந்த மதில்ளை மக்களின் விசுவாசத்திற்கு ஒப்பிடுகின்றனர். ஆக இங்கே தாவீது கடவுளிடம் கட்டச்சொல்லி கேட்பது கல் மதில்களை அல்ல மாறாக மக்களின் உள்ளங்களை என்று வாதிடுகின்றனர். சீயோனும் எருசலேமும் இங்கு ஒத்த கருத்துச் சொற்களாக மக்களையும் இடங்களையும் குறிக்கின்றன.
இந்த வரியும் பின் வரியும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன என்ற ஒரு வாதமும் இருக்கிறது.
(חוֹמ֥וֹת יְרוּשָׁלָֽם׃ ஹோமோத் யெரூஷாலாயிம்- எருசலேமின் மதில்கள்)
வ.19: மனமாற்றத்தின் வாயிலாக, மற்றைய மிருக பலிகள் கடவுளால் விரும்பப்படும் என்பதை இந்த
இறுதியான வரி பாடிநிற்கின்றது. மிருக பலிகள் எருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்பட்டன, இந்த வரிகள் பபிலோனிய அடிமைவாழ்வு அல்லது அதற்கு பிற்பட்ட காலத்தை ஒத்திருக்கலாம்.
பபிலோனிய அடிமைவாழ்வில் எருசலேம், தேவாலயம், பலிகள் போன்றவை வரலாற்று நினைவாக மாறியிருந்தன. அதனைத்தான் ஆசிரியர் நினைக்கிறார் என எடுக்கலாம்.
எபிரேயர் 5,7-9
7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 8அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9அவர் நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். 10'மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு' என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.
தலைமைக் குருத்துவம்:
தலைமைக்குரு என்பவர் இயேசுவின் காலத்தில் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார்.
இயேசுவை மெல்கிசதேக்கின் முறைப்படி உண்மையான தலைமைக் குருவாக (ἀρχιερεύς அர்கெய்ரெயுஸ்) எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இந்த அதிகாரத்தில் காட்டுகிறார். இயேசுவை தலைமைக் குருவாக
இறையியல்படுத்தும் தனித்துவம் எபிரேயர் ஆசிரியருக்கு மட்டுமே உள்ளது.
இயேசுவின் காலத்தில்தான் தலைமைக்குருக்கள் மிக முக்கியமான அரசியல் தலைமைத்துவமாக
இருந்தார்கள். இவர்களுக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. குருக்களையும் தலைமைக்குருக்களையும் விவிலிய ஆசிரியர்கள் அங்காங்கே மாறி மாறி கோடிடுகின்றனர். தலைமைக் குருத்துவமும் அதன் முக்கியத்துவமும், ஆபிரகாமின் காலத்திற்கு பின்நோக்கி செல்கின்றன. மெல்கிசதேக் என்ற சாலம் நகரின் அரசர் ஆபிரகாமை வழியில் சந்திக்கிறார். இந்த மெல்கிசதேக் யார் என்ற கேள்வி இன்னமும் கேள்வியாகவே உள்ளது. இவர் எருசலேம் நகரில், ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவருடைய காலத்தில் எருசலேமை பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. இந்த மெல்கிசதேக் தொடக்கமும் முடிவும் இல்லாதவராக இருந்த படியால் அவர் கிறிஸ்துவிற்கான ஒரு ஒப்பீடு என்றும் ஆரம்ப காலத்தில் நம்பப்பட்டது.
தலைமைக் குருத்துவம் பபிலோனியர் காலத்திற்கு முன்னர் இஸ்ராயேலில் இருந்திருக்கவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. பபிலோனியர் காலத்திற்கு பின்னர், அரசர்கள் எருசலேம் ஆலயத்தின் உரிமையாளர்கள் என்ற தகுதியை இழந்தார்கள். குருக்களும் எருசலேம் ஆலயத்தின் முழுப் பொறுப்பாளர்கள் என்ற உரிமையையும் இழந்தார்கள். ஆரோன் குலத்தில் வந்த சகோக்கியர் மட்டுமே முக்கியமான குரு குலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். பபிலோனிய அடிமை வாழ்வு இஸ்ராயேலின் சமுக கட்டமைப்பையே மாற்றியது. பபிலோனிய அடிமை வாழ்வின் பின்னர்தான் இந்த தலைமைக் குருத்துவம் உருவாகியிருக்க வேண்டும். இரண்டாம் தேவாலயத்தின் காலத்தில், தாவீதின் வழிமரபு செருபாபேலின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கியது. இந்த காலத்தில் சாதோக்கின் குடும்பம் எருசலேமில் சிறிய ஆதிக்கத்தை செலுத்தியது. அரசர்கள் மற்றும் சாமுவேல் புத்தகங்களைப் போல்லல்லாது குறிப்பேட்டு புத்தகங்கள்தான் முதலில் இந்த புதிய குருக்களின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன. எசேக்கியேல் மற்றும் குறிப்பேட்டு புத்தகங்களின் காலத்தின் இடையில்தான் இந்த தலைமைக் குருத்துவம் உருவாகி அது சீனாய் உடன்படிக்கையுள் அடையாளப்படுத்தப்பட்டது. தலைமைத்துவம் இல்லாத காரணத்தால், இந்த புதிய தலைமைக் குருத்துவம் இரண்டாம் எருசலேம் தேவாலயத்தனின் அதி பரிசுத்த பகுதியை அலங்கரிக்கும் பணியாக மாறியது. சாதாரண யூதர்களையும், குருக்களையும் விட தலைமைக் குரு உயர்ந்தவராகவும், தூயவராகவும் காட்டப்பட்டார். சாதாரண யூதர்கள், பெண்கள், சிறியவர்கள், புறவினத்தவர்கள், குருக்கள், ஆலய பணியாளர்கள் செல்ல முடியாத ஆலயத்தின் அதி பரிசுத்த இடத்திற்கு இவர்களால் மட்டுமே செல்ல முடிந்தது. வருடாந்த பரிகாரப் பலியை (யொம் கிப்பூர்) செலுத்தும் அதிகாரத்தையும்
இவர்கள் மட்டுமே பெற்றார்கள். விடுதலைப் பயணம் மற்றும் லேவியர் புத்தகங்களில் காணப்படும் குருக்கள் பற்றிய சட்டங்கள் இவர்களோடு இணைத்து அல்லது இவர்களை பற்றியதாக பார்க்கப்பட்டது. மக்கபேயர் காலத்தில் இந்த தலைமைக் குருத்துவம் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுத்தது. கிரேக்கர்கள் தங்களுக்கு விரும்பிய படி தலைமைக்குருக்களை மாற்றினார்கள்.
கிரேக்கர்களுக்கு பின்னர் உரோமையர்களின் காலத்தில், ஏரோது தலைமைக் குருத்துவத்தை வலுவற்றதாக்கினார். எரோதின் மரணத்தின் பின்னர் உரோமையர்கள் தலைமைக் குருத்துவத்திற்கு சில முக்கிய அதிகாரங்களை வழங்கினர். இருப்பினும் உரோமைக்கு சார்பானவர்களே தலைமைக் குருத்துவத்தை அலங்கரித்தனர். இதன் வழியாக உரோமையர்கள் இஸ்ராயேலர்களை கட்டுப்படுத்தினர் (பல நாடுகளில் சமய தலைவர்களைக் கொண்டு, வெளி ஆட்சியாளர்கள் மண்ணின் மைந்தர்களை கட்டுப்படுத்துவது போல). இக்காலத்தின் இஸ்ராயேலில் தோன்றிய விடுதலை வீரர்கள் உரோமையர்களைப் போலவே, தலைமைக் குருக்கள் குடும்பத்தையும் எதிர்த்து அழிக்க முயன்றார்கள். எருசலேமின் இறுதியான தலைமக்குரு ஒரு பொதுநிலையினன், இவர் சீட்டுக் குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டார், இவர் பெயர் பன்னியார் (வாசிக்க யோசேபுஸ் 1:147-157).
கி.பி 70தில் உரோமைய இராணுவ அதிதி தீத்து எருசலேமை அழித்தபோது தலைமைக் குருத்துவமும் அழிந்து போனது. ஏற்கனவே பல ஊழல்களை சந்தித்த இந்த தலைமைக் குருத்துவம் இல்லாமலே யூதர்கள் வாழ பழகிக் கொண்டனர். இருப்பினும் இந்த பலமிக்க தலைமைக் குருத்துவத்தின் நினைவுகள் இன்றும் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆட்கொள்கிறது.
வவ.1-6: இந்த பகுதி துன்புற்ற தலைமைக் குரு என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த பகுதியில் எபிரேயர் ஆசிரியர், யார் தலைமைக் குரு என்பதைக் காட்டுகிறார். தலைமைக் குரு என்பவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிறுவுவதில் ஆசிரியர் கவனமாக இருக்கிறார் எனலாம். இந்த தலைமைக் குரு மக்களுக்காக பாவ பரிகாரப் பலியை செலுத்தினாலும், அவருடைய சொந்த பாவத்திற்காகவும் பரிகாரப் பலி செலுத்தப்படுகிறது என்பதை அவர் காட்டுகிறார். தலைமைக் குருத்துவம் ஆண்டவரால் கொடுக்கப்படுகிறது, ஆரோன் முதல் கிறிஸ்துவரை அனைவரும் கடவுளால் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது இவர் வாதம். இருப்பினும் மெல்கிசதேக்கைப் போல கிறிஸ்து ஒருவர்தான் உன்னதமான தலைமைக் குரு என்பது ஆசிரியரின் முடிவு.
வ.7: இயேசுவின் இவ்வுலக வாழ்க்கை முறை ஒரு தலைமைக் குருவின் வேண்டுதல் பலியுடன் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது. இயேசு தன்னை சாவிலிருந்து எழுப்ப வல்லவரிடம் அதாவாது கடவுளிடம், நேரடியாக வேண்டும் அதிகாரம் பெற்றிருந்தார் என்று சொல்லப்படுகிறார்.
இவருடைய வேண்டுதலை, உரத்த குரலெழுப்பும், கண்ணீர் சிந்தி மன்றாடும் வேண்டுதல் என்று காட்டுகிறார் ஆசிரியர். அத்தோடு ஆண்டவரும், இயேசுவுடைய இறைபற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு (εὐλάβεια எவுலாபெய்யா- விசுவாசம்), அவருக்கு செவிசாய்த்தார் என்கிறார்.
வ.8: இயேசு இறைமகன், இருந்தும் துன்பங்கள் வாயிலாக கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறார் என்கிறது இந்த வரி. கீழ்ப்படிதல் ஆரம்ப கால திருச்சபை போற்றிய மிக முக்கியமான விழுமியம்.
இயேசுவே இதனை பின்பற்றுகிறார் என்றால், அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என்பது செய்தி.
துன்பங்கள் விழியாக இறைபற்றைக் கற்றுக்கொள்ளல் (ἔμαθεν ἀφ᾿ ὧν ἔπαθεν τὴν ὑπακοήν, எமாதென் அப் ஹோன் எபாதென் டேன் ஹுபாகொஏன்) என்பது, இயேசுவுடைய துன்பம் மீட்பளிக்கும் துன்பம் என தெளிவு படுத்துகிறது.
வ.9: இயேசு நிறைவானவரான தலைமைக்குரு. இயேசு நிறைவுள்ளவராக மாறியதன் வாயிலாகத்தான் அவருக்கு கீழ்படிகிறவர்கள் மீட்படைய காரணமாகிறார் எனலாம்.
இதன் வாயிலாக மற்றைய தலைமைக் குருக்கள் நிறைவில்லாதவர்கள் எனவும், அவர்களால் அவர்களுக்கு கீழ்படிகிறவர்களுக்கு மீட்பளிக்க முடியாது என்பதை அவர் மறைமுகமாகச் சொல்கிறார் எனலாம்.
வ.10: கடவுள் இயேசுவிற்கு புதிய பெயரைச் சூட்டுகிறார். இயேசு மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த என்றென்றைக்குமான தலைமைக்குருவாகிறார். ἀρχιερεὺς κατὰ τὴν τάξιν Μελχισέδεκ. அர்கெய்ரெயுஸ் காடா டேன் டாக்ட்சின் மெல்கிலெதெக்.
இந்த இடத்தில் திருப்பாடல் 110,4 மற்றும் தொடக்க நூல் 14,18-20 போன்றவற்றை கோடிடுகிறார் ஆசிரியர். மெல்கிசதேக் தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு உன்னத குருவாக நோக்கப்படுகிறார். மெல்கிசதேக்கைப்பற்றிய அறிவு பாபிலோனிய அடிமை வாழ்விற்கு பின்னர் உருவானதா, அல்லது அதற்கு முன்னமே, தாவீதின் காலத்திலேயே அறிவில் இருந்ததா, என்பது தெளிவில்லை. மெல்கிசதேக் என்ற சாலேம் நகர அரச-குரு மிகவும் அறியப்பட்டவராக எபிரேயர் திருமுகத்தின் காலத்தில் இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது. இன்றுவரை மெல்கிசதேக் இரகசியங்கள் நிறைந்த கிறிஸ்துவிற்கான ஒரு முதல் ஏற்பாட்டு அடையாளமாகவே இருக்கிறார்.
யோவான் 12,20-33
கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். 21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டுக் கொண்டார்கள்.
22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். 23இயேசு அவர்களைப் பார்த்து, 'மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். 26எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்' என்றார்.
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்
27மேலும் இயேசு, 'இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். 28தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், 'மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்' என்று ஒலித்தது.
29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, 'அது இடிமுழக்கம்' என்றனர். வேறு சிலர், 'அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு' என்றனர்.
30இயேசு அவர்களைப் பார்த்து, 'இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. 31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். 32நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்' என்றார். 33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
கிரேக்கர்களுக்கும் இயேசு கால யூதர்களுக்கும் பல தொடர்பிருந்திருக்கிறது. உரோமையின் எழுச்சியுடன் கிரேக்கர்களின் அரசியல் ஆதிக்கம் முடிந்ததே அன்றி, அவர்களின் அறிவியல் மற்றும் பாரம்பரியங்கள் முடிவடையவில்லை. உரோமைய உலகம் பலவற்றில் கிரேக்கர்களை சார்ந்தோ அல்லது கிரேக்கர்களை நம்பியோ இருந்தது. உரோமைய பேரரசிலும், கிரேக்கம்தான் அறிவியல் மற்றும் மெய்யியல் மொழியாக நிலைத்திருந்தது. கலிலேயாவில்கூட கிரேக்க மொழி, யூதர்கள் மத்தியில் பேசப்பட்டிருக்கலாம். இயேசுவின் திருத்தூதர்களும் கிரேக்க மொழியை அறிந்திருந்தார்கள் என்ற வாதம் இருக்கிறது. இயேசுகூட கிரேக்க மொழியை பேசினாரா என்றும் சில ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர். இந்த பகுதியில் குறிப்பிடப்படுகின்ற கிரேக்கர்கள் (Ἕλληνές ஹெல்லேனெஸ்-கிரேக்கர்கள்), கிரேக்க யூதர்கள் அல்லது யூத மதத்தை தழுவிய கிரேக்கர்கள் என்று எடுக்க முடியாது.
வ.20: கிரேக்கர்கள் கூட எருசலேமிற்கு யூதர்களின் வழிபாட்டிற்காக வந்திருக்கின்றனர். இவர்கள் வியாபாரத்திற்காககூட வந்திருக்கலாம். அல்லது இவர்கள் யூத வழிபாட்டில் ஆர்வமுள்ளவர்களாக
இருந்திருக்கலாம். யூத மதம் அக்கால மற்றைய மதங்களைவிட மிகுந்த கட்டுக்கோப்புள்ளதாகவும், பல ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்டிருந்ததாலும் பிற மதத்தவர்கள் கூட யூத மதத்தின் மீது ஆர்வம் கௌ;ளச் செய்தது எனலாம்.
வ.21: இந்த கிரேக்கர்கள் தெகாபொலிஸ் என்ற இடத்திலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் பிலிப்பை சந்திக்கிறார். பிலிப்பு பெத்சாய்தாவை சாந்தவர். பெத்சாய்தா கிரேக்கர்களுக்கு பரீட்சயமான இடமாக இருந்தது எனலாம்.
இவர்கள் மிக மரியாதையாக பிலிப்பை அழைக்கிறார்கள் κύριε, θέλομεν τὸν Ἰησοῦν ἰδεῖν. கூரியே, தெலொமென் டொன் ஈயேசூன் இதெய்ன்- ஐய்யா நாங்கள் இயேசுவை காண விரும்புகின்றோம். பிலிப்பு என்ற பெயர் ஒரு கிரேக்க பெயர், இதன் மூலம் பிலிப்பிற்கு கிரேக்க தொடர்புகள் இருந்திருக்க வேண்டும் எனவும் எடுக்கலாம் (Φιλίππος பிலிப்பொஸ்).
வ.22: கிரேக்கர்களின் விருப்பத்தை பிலிப்பு அந்திரேயாவிடம் சொல்லி பின்னர் இருவரும்
இயேசுவிடம் வருகிறார்கள். இயேசு ஆரவாரத்துடன் எருசலேம் நுழைந்தது மற்றும் அவருடைய பெயரின் புகழும், கிரேக்கர்களை இயேசுவை பார்க்க தூண்டியிருக்கலாம்.
வ.23: கிரேக்கர்களுடைய வருகையை யோவான் மனுமகனின் நேரம் வந்துவிட்டதற்கான அடையாளமாகப் பார்க்கிறார். மனுமகனின் காலத்தில் வேற்று நாட்டவர்கள் எருசலேம் வருவார்கள் என்ற நம்பிக்கை யூதர்களிடையே இருந்தது.
இயேசு இந்த நேரத்தை மானிட மகனின் மகிமையின் நேரமாக காண்கிறார் (ἐλήλυθεν ἡ ὥρα ἵνα δοξασθῇ எலேலூதென் ஹே ஹோரா ஹினா தொக்ஸ்சாஸ்தே - நேரம் வந்துவிட்டது, அதனால் அவர் மாட்சிபெறுவார்).
வ.24: தன்னுடைய மாட்சியை விளக்க இயேசு கோதுமை மணியை உதாரணத்திற்கு எடுக்கிறார். கோதுமை மணி வளரவேண்டும் என்றால் அது மண்ணில் விழுந்து தன் உருவை இழக்க வேண்டும் என்பதை அனைத்து யூத வாசகர்களும் நன்கு அறிந்திருந்தனர்.
உதாரணங்களையும் அடையாளங்களையும் பயன்படுத்துவதில் யோவானின் இயேசு மிகவும் நுட்பமானவர். கோதுமையை இயேசு இங்கே சாதாரண உதாரணமாக மட்டும் எடுக்கிறாரா அல்லது வழமைபோல யோவான் நற்செய்தியின் இன்னொரு அடையாளமாக வருகிறதா என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன. அடையாளமாக எடுப்பது போலத்தான் தெரிகிறது. தன்னை கோதுமை மணிக்கு ஒப்பிடுகிறார் போல. இந்த இறைவன் மாட்சியடைய அவர் இறங்கி வரவேண்டும் என்ற சிந்தனை தெரிகிறது.
வ.25: தமக்கென்று வாழ்வோரும், பிறர்க்காக வாழ்வோரும் வித்தியாசப்படுத்தப்படுகிறார். தமக்கென்று வாழ்வோர் வாழ்வை இழந்துவிடுவர் என்கிறார் இயேசு. தமக்கென்று வாழ்வோர் எனப்படுவோர் இந்த நற்செய்தியில் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவரை குறிக்கும். அவர்கள் தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும் முகமாகத்தான் இயேசுவை புறக்கணிக்கிறார்கள் என்று யோவான் நம்பினார். இருப்பினும் இது தவாறான முடிவு என்பது அவர் வாதம் (ὁ φιλῶν τὴν ψυχὴν αὐτοῦ ⸀ἀπολλύει ஹொ பிலோன் டேன் ப்யுகேன் அவுடூ அபொல்லூய்- சொந்த வாழ்வை அன்பு செய்வோர் இழக்கின்றனர்).
தம் வாழ்வை ஒரு பொருட்டாக கருதாதோர் என்ற தமிழ் விவிலியத்தின் மொழிபெயர்ப்பை கிரேக்க மூல பாடம் இவ்வாறு கொண்டுள்ளது: ὁ μισῶν τὴν ψυχὴν αὐτοῦ ἐν τῷ κόσμῳ ஹொ மிசோன் டேன் ப்யுகேன் அவுடூ என் டோ கொஸ்மோ, உலகில் தங்கள் வாழ்வை வெறுப்போர். வாழ்வை வெறுப்போர் என்பது தங்கள் வாழ்வைவிட கிறிஸ்துவை முதன்மை படுத்துவோரையே குறிக்கிறது. இதனால்தான் தமிழ் விவிலியம், வாழ்வை பொருட்டாக கருதாதோர் என்று சரியாக மொழிபெயர்க்கிறது.
இவர்கள் நிலைவாழ்வை உரிமையாக்குவர் என்பது இயேசுவின் போதனை (ζωὴν αἰώνιον ட்சோன் அய்யோனியோன்- நிலை வாழ்வு). நிலைவாழ்வு என்பது யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள்.
வ.26: தனக்கு தொன்டு செய்வோர் தன்னை பின்பற்றட்டும் என்கிறார் இயேசு (ἐμοί τις διακονῇ எமொய் டிஸ் தியாகொனே- எனக்கு பணி செய்பவர்). தொண்டு செய்பவர்கள் இங்கே சீடர்களைக் குறிக்கிறார்கள். இவர்கள் இயேசுவின் இடத்தையும் தந்தையின் மதிப்பையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த இரண்டும் ஒரு சீடருடைய வாழ்விற்கான பரிசாக இருக்கிறது.
வ.27: யோவான் நற்செய்தியில் இயேசு மிகவும் பலமான மெசியாவாக காட்டப்படுவார். துன்புறும் ஊழியராக இயேசுவைக் காட்டுவதை யோவான் தவிர்க்கிறார், அதற்கு அவருடைய ஆழமான இறையியல் காரணமாக இருக்கிறது. இந்த வரியில் இயேசு தன்னுடைய மனநிலையை விளக்குகிறார்.
தன்னுடைய உள்ளம் கலக்கமுற்றுள்ளது என்பதை இயேசு ஏற்றுக்கொள்கிறார் (ἡ ψυχή μου τετάρακται ஹெ ப்புகே மூ டெடாராக்டாய்- என் மனம் கலக்கமுற்றுள்ளது). இயேசு வாசகர்களின் கேள்வியை தன் கேள்வி போலக் கேட்டு விடையும் அளிக்கிறார். தன்னை இந்த கலக்கத்தில்
இருந்து அவர் காப்பாற்றச்சொல்லி கடவுளை கேட்கவில்லை. அப்படிக் கேட்டால், இயேசு
பயந்துவிட்டார் அல்லது, மனிதர்கள் தரும் துன்பம் அவரை குழப்பமடையச் செய்கிறது என்றாகிவிடும். இந்த துன்பத்திற்காகத்தான் தான் இவ்வளவு காலம் வாழ்ந்ததாக இந்த வரி முடிவடைகிறது. ஆக ஆண்டவரின் துன்பம், அவர் நன்கு அறிந்த ஒன்றுதான் என்பது காட்டப்படுகிறது.
வ.28: இயேசு வானை நோக்கி தந்தையிடம் அவர் பெயரை மாட்சி படுத்த வேண்டுகிறார் (πάτερ, δόξασόν ⸂σου τὸ ὄνομα⸃ பாடெர், டொக்சாசொன் சூ டொ ஒனோமா, தந்தையே உம் பெயரை மாட்சிப் படுத்தும்).
மாட்சிப்படுத்துதல், யோவான் நற்செய்தியின் இன்னொரு முக்கியமான இறையியல் சிந்தனை. மாட்சிபடுத்தல் இயேசுவுடைய வருகையின் நோக்கமாகவும் இருக்கிறது. இதற்கு எற்றால் போல, வானிலிருந்து குரல் ஒன்று கேட்கிறது: ἐδόξασα καὶ πάλιν δοξάσω (எதொட்சாசா காய் பாலின் டொக்சாசோ- மாட்சிபடுத்தினேன், மீண்டும் மாட்சிப் படுத்துவேன்). வானிலிருந்து குரல் ஒலிப்பது, அந்த குரல் கடவுளின் குரல் என்பதை தெளிவு படுத்துகிறது (φωνὴ ἐκ τοῦ οὐρανοῦ போனே எக் டூ ஹுரானூ- வானிலிருந்து குரல்).
வ.29: இந்த குரலை அங்கு கூட்டமாய் நின்றவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதனை அவர்கள் வித்தியாசமாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள். சிலருக்கு இது இடிமுழக்கமாக இருக்கிறது (βροντή புரொன்டே- இடி), வேறு சிலருக்கு வானதூதரின் பேச்சாக இருந்திருக்கிறது. இரண்டு குழுக்களும் தவறாகத்தான் புரிந்து கொள்கிறார்கள் என்பதை யோவான் காட்டுகிறார்.
வ.30: இயேசு அந்த குரல் யாரைப் பொருட்டு என்பதை தெளிவு படுத்துகிறார். அந்தக் குரல் மக்களைப் பற்றியே பேசியது என்பது சொல்லப்படுகிறது. வானிலிருந்து வருகின்ற செய்தியை
இயேசு நன்கு அறிந்திருக்கிறார், அறிய வேண்டியவர்கள் மனிதர்களே என்பது அவர் வாதம்.
வ.31: உலகு தீர்ப்புக்குள்ளாகிறது என்பது யோவான் நற்செய்தியின் இன்னொரு வாதம் (κρίσις கிறிசிஸ்-தீர்ப்பு) அதாவது இயேசுவின் வருகை இந்த உலகை ஏற்கனவே தீர்ப்புள்ளாக்கிவிட்டது. இயேசுவை ஏற்றுக்கொள்பவர் அவர் சார்பானவர்களாகவும், அவரை ஏற்காதோர் அவருக்கு எதிரானவர்களாகவும் ஏற்கனவே தீர்ப்பு பெற்றுவிட்டார்கள்.
உலகின் தலைவன் (ὁ ἄρχων τοῦ κόσμου ஹொ அர்கோன் டூ கொஸ்மூ- உலகின் தலைவன்) என்ற கருப்பொருள் இங்கே பயன்படுத்தப்படுகிறது. இது சாத்தானை குறிக்கிறது என எடுக்கலாம்.
வ.32: மண்ணிலிருந்து உயர்த்தப்படுதல் என்ற வார்த்தைப் பிரயோகமும், அடையாளமாகவே பாவிக்கப்படுகிறது ὑψωθῶ ἐκ τῆς γῆς ஹுஸ்ப்ஓதோ எக் டேஸ் கேஸ். இதன் ஆண்டவரின் சிலுவை மரணத்தையும் அத்தோடு அவருடைய மாட்சியையும் குறிக்கிறது. இந்த உயர்த்தப்படுதல் கடவுள் இயேசுவிற்கு கொடுக்கும் அங்கீகாரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
வ.33: இதனை யோவான், ஆண்டவரின் மரணம் என காட்டுகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு அனைத்தும் அறிந்த கடவுளின் சாயல், ஆக அவருடைய மரணத்தைப் பற்றிய சகல தரவுகளையும் அவர் அறிந்திருந்தார் என்பது காட்டப்படுகிறது.
மனிதர்கள் செய்வது சமரசம் கலந்த ஒப்பந்தம்,
கடவுள் செய்வது சமரசம் இல்லாத உடன்படிக்கை.
உடன்படிக்கை பிரமானிக்கத்தையும் அன்பையும் உயிராகவும் மெய்யாகவும்
கொண்டுள்ளது,
ஒப்பந்தம், வேவுபார்த்தலையும், பயத்தையும் அடிப்படையாக
கொண்டுள்ளது.
ஆண்டவரை பின்பற்றி உறவுகளோடு உடன்படிக்கை செய்வோம்,
உறவை வளர்க்க.
அன்பு ஆண்டவரே உமது அன்பான உடன்படிக்கைக்கு
பிரமானிக்கமாயிருக்க உதவும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக