திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (ஆ) Third Sunday of Advent (B)
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (ஆ)
17,12,2017
ஞாயிறு வாசக விளக்கவுரை
(A Commentary on the Sunday Readings)
(தலைப்பு - மகிழ்ச்சி)
மி. ஜெகன்குமார் அமதி,
வசந்தகம்-யாழ்ப்பாணம்.
வெள்ளி, 15 டிசம்பர், 2017
முதல் வாசகம்: எசாயா 61,1-2.10-11
பதிலுரைப் பாடல்: லூக்கா 1,46-48.49-50.53-54
இரண்டாம் வாசகம்: 1தெசலோனியர் 5,16-24
நற்செய்தி: யோவான் 1,6-8.19-28
எசாயா 61,1-2.10-11
விடுதலை பற்றிய நற்செய்தி
1ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். 2ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும்,
10ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். 11நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
எசாயா புத்தக்தின் மூன்றாவது பிரிவாக இந்த பகுதி அறியப்படுகிறது. பபிலோனிய அடிமைதனத்தின் பின்னர் கண்ட உலகம் வித்தியாசமாக இருக்கையில், அதனுடைய சவால்களும் பலமாக இருக்கையில், நம்பிக்கையையே மையமாக கொண்டு ஆண்டவர் தேற்றுகிறார் என்ற தோறணையில் இந்த பகுதி இறைவாக்குரைக்கப்பட்டுள்ளது. எசாயா புத்தகத்தின் 61, 62ம் அதிகாரங்களை சீயோனின் மாட்சி என்ற தலைப்பில் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அதிகாரத்தின் கதாநாயகனை கிறிஸ்தவர்கள் எந்த விதமான சந்தேகங்களும் இன்றி இயேசு கிறிஸ்துவாகவே பார்ப்பார்கள். வரலாற்றில் அது சைரஸ் மன்னனை குறிக்கிறது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பல யூதர்களுக்கு இது வரவிருக்கும் மெசியாவை குறிக்கிறது என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. எப்படியாயினும் இது மெசியாவைத்தான் குறிக்கிறது என்பது பொதுவான நம்பிக்கை, ஆனால் யார் இந்த மெசியா என்பதில்தான் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வ.1: இந்த வரியை அதிகமான மறைபரப்பு சபைகள், துறவறசபைகள் தங்களுடைய விருதுவாக்கிற்கு உதாரணமாக எடுப்பர். மறைபரப்பு அமல மரித்தியாகிகள் சபையும் இந்த வரியிலிருந்துதான் தங்களுடைய விருதுவாக்கை உருவாக்கினார்கள்.
ஆண்டவரை இந்த வரி தலைவர் என அழைக்கிறது (אֲדֹנָי 'அதோனாய்). இந்த உச்சரிப்பிலேதான் யாவே என்ற புனிதமான சொல் (יְהוִה யாவே) உச்சரிக்கப்படுகிறது. அதோனாய் என்றால் என் தலைவரே! என்ற பொருள். முதல் ஏற்பாட்டில் ஆண்டவரின் ஆவி சிலவேளைகளில் ஆண்டவரையும் குறிக்கும். இந்த இடத்திலே அது இன்னொரு நபரைக் குறிக்கிறது தெரிகிறது. அத்தோடு திருத்துவ கொள்கைக்கு இந்த பகுதியையும் உதாரணமாக எடுக்கிறார்கள் (רוּחַ ரூஹா). ஆண்டவர் அருள் பொழிவு செய்துள்ளார் என்பது, ஆண்டவர் அவரை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது (מָשַׁח יְהוָה אֹתִי மாஷஹ் அதோனாய் 'இத்தி- அவர் என்னை அபிசேகம் செய்துள்ளார்). மாஷஹ் என்ற வினைச் சொல்லிற்கும், மஷியாஹ் என்ற பெயர்ச்சொல்லிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. மஷியாஹ் என்றால் அபிசேகம் செய்யப்பட்டவர் (திருப்பொழிவு) என்று பொருள்.
ஏன் இந்த கதாநாயகரை ஆண்டவர் அபிசேகம் செய்துள்ளார் என்பது இந்த வசனத்தின் இரண்டாவது பாகத்திலே விவரிக்கப்பட்டுள்ளது:
அ. ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க (לְבַשֵּׂר עֲנָוִים லெவசெர் 'அனாவிம்)- சூழலியலில் ஒடுக்கப்பட்டவர்கள் என யூதர்களைக் குறித்தார்கள். பிற்காலத்தில் இது கிறிஸ்தவர்களை குறித்தது.
ஆ. உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்த (לַחֲבֹשׁ לְנִשְׁבְּרֵי־לֵ֔ב லஹவிஷ் லெநிஷ்வெரெ-லெவ்)-
இது மனவுளைச்சலைக் குறிக்கலாம். எருசலேமின் நிலையும், நாட்டின் அரசியல் அடிமைத்தனமும் இதனைக் குறித்திருக்கலாம்.
இ. சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்ற (לִקְרֹא לִשְׁבוּיִם דּר֔וֹר லிக்ரோ' லிஷ்வுயிம் தெரோர்): கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்க (לַאֲסוּרִ֖י פְּקַח־קֽוֹחַ׃ ல'அசூரிம் பெகாஹ்-கோஹ்) அவர் என்னை அனுப்பினார் (שְׁלָחַ֙נִי֙ ஷெலாஹானி). இந்த அடிமைத்தனம், அரசியல் அடிமைத்தனத்தைக் குறிப்பது போல உள்ளது.
வ.2: இரண்டாவது வரியும், முதாலாவது வரி தருகின்ற அதே நம்பிக்கையை மையப்படுத்தியதாகவே அமைகிறது. ஆண்டவரின் அருள்தரும் ஆண்டு என்ற அழகான வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆண்டவரின் வருகை தண்டனையை கொண்டு வரும் என்று கேட்டவர்களுக்கு இது இதமாக இருந்திருக்கும் (לִקְרֹ֤א שְׁנַת־רָצוֹן֙ லிக்ரோ' ஷெனாத்-ராட்சோவ்). ஆண்டவரின் பழிவாங்கும் ஆண்டும் நினைவுகூறப்படுகிறது. இந்த சிந்தனை ஏற்கனவே இவர்களுக்கு நன்கு பரீட்சயமான சிந்தனைதான் (יוֹם נָקָם யோம் நாகாம்- பழிவாங்கும் நாள்), கடவுள் அநீதிக்கு பழிவாங்கும் நாளை அவர்கள் இரண்டாவது வருகையாக பார்த்தார்களா அல்லது இஸ்ராயேலின் இன்னொரு பொற்காலத்தை இந்த உலகத்திலே எதிர்பார்த்தார்களா, என்பதை சூழலியலில்தான் நோக்க வேண்டும்.
துயருற்று அழுவோருக்கு ஆறுதல் அளிக்கவும் தான் அனுப்பப்பட்டதாகவும் முன்மொழிகிறார். இங்கே துயருற்று அழுவோர்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்த யூதர்களையே குறிக்கிறது எனலாம்.
வ.3: இரண்டாவது வரியின் சில சந்தேகங்களை மூன்றாவது வரி தெளிவுபடுத்துகின்றது. அழுகிறவர்கள் யார் என்பதை இங்கே புரிந்து கொள்ளலாம். இவர்கள் சீயோனில் அழுகிறவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள் (לַאֲבֵלֵי צִיּ֗וֹן ல'அவெலெ ட்சியோன்). சீயோனில் அழுகிறவர்கள் சீயோனுக்காகத்தான் அழுதிருப்பார்கள் என எடுக்கலாம். இவர்களுக்கு ஆறுதல் கொடுக்கப்படுகிறது. சாம்பலுக்கு பதிலாக அழகுமாலை பரிந்துரைக்கப்படுகிறது (לָהֶם פְּאֵר תַּחַת אֵפֶר லாஹெம் பெ'எர் தாஹத் 'எபெர்- சாம்பலுக்கு பதிலாக தலைப்பாகை அவர்களுக்கு). சாம்பல் துன்பத்தின் அடையாளம், பலர் தங்களின் இழிநிலையைக் குறிக்க இதனை தடவிக் கொண்டனர். தாவீது கூட இதனைச் செய்திருக்கிறார். இறைவாக்கினர்கள் இதனை மனமாற்றத்திற்கான அடையாளமாக தலைகளில் பூசினர். வீபூதிப் புதனிற்கும், சாம்பலுக்கும் அடையாள ரீதியில் தொடர்பிருக்கிறது. அழகு மாலை என்ற தமிழில் உள்ளதை எபிரேயம் தலைப்பாகை அல்லது தலையை அலங்கரிக்கும் ஆடை என்று காட்டுகிறது. அதாவது இனி துன்பமில்லை மாறாக மகிழ்ச்சி என்பதையே இது காட்டுகிறது.
புலம்பலுக்கு பதிலாக மகிழ்சி தைலமும், நலிவுற்ற நெஞ்சத்திற்கு பதிலாக 'புகழ்' என்னும் ஆடையும் வழங்கப்படுகிறது. புகழ் என்பது ஆடையாக இங்கே காட்டப்படுகிறது. ஆடை ஒருவருடைய அடையாளத்தை காட்டிய படியால், இங்கே புகழே அவருக்கு ஆடையாக வருகிறது என சொல்லப்படுகிறது.
அழுது புலம்பியவர்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்படுகின்றன. இனி இவர்கள் நீதியின் தேவதாருகள் (אֵילֵי הַצֶּדֶק 'ஏலே ஹட்செதெக்- நீதியின் ஓக் மரங்கள்) என அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ஆண்டவரால் அவருடைய மாட்சிக்காக நடப்பட்டவர்கள் எனவும் அழைக்கப்படுவார்கள். ஆண்டவருடைய மனவருத்தத்திற்கு காரணமாகிப்போனார்கள் என்ற நிலை மாறி ஆண்டவருடைய மகிழ்ச்சியின் காரணமானவர்களாக மாறுகிறார்கள்.
வவ.4-10: இவர்கள் மேலும் செய்பவற்றை இந்த வரிகள் காட்டுகின்றன. இவர்கள் பலநம்பிக்கையான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். இடிந்தவற்றை கட்டியெழுப்புகிறார்கள், அழிந்த நகர்களை சீராக்குகிறார்கள், அத்தோடு இவர்கள் அன்னியர் நாட்டில் வேலை செய்த காலம் போய், அன்னியர்கள் இவர்கள் நாட்டில் உழவர்களாகவும், மேய்ப்பவர்களாகவும் மாறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. எசாயாவின் உவமானம் மிகவும் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது.
குருக்களைப்போல இவர்கள் ஆண்டவருடைய பிரசன்னத்திலே மட்டுமே வாழ்வார்கள் எனவும், மற்றவர்களுடைய சொத்திலே இவர்கள் மகிழ்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதனை யூதர்களின் பபிலோனிய அடிமைத்தன வாழ்வியலின் பின்னனியிலே பார்க்க வேண்டும். அவமானத்திற்க்கு பதிலாக இவர்கள் இரண்டு மடங்கு மகிழ்;ச்சியடைவார்கள். ஆண்டவர் நீதியை விரும்புகிறவராக இருக்கிறபடியால், இவர்களுக்கு தண்டனை கிடைக்கும், இருந்தும் இவர்கள் மன்னிப்பபுபெற்று பின்னர், முடிவில்லாத உடன்படிக்கையை கடவுளோடு செய்து கொள்கிறார்கள். அவர்களுடைய வழிமரபினரும் மக்களினங்களிடையே பிரசித்தி பெறுகிறார்கள். இவர்களைக் காண்கிறவர்கள் இவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற மக்கள் என வாழ்த்துவார்கள்.
வ.10: இந்த வரியிலிருந்து ஆண்டவரின் பணியாளர் பேசுவது போல மீண்டும் வரிகள் மாற்றம் அடைகின்றன. ஆண்வரில்தான் இந்த பணியாளர் பெரு மகிழ்ச்சியும் பூரிப்பும், அடைகிறார். இங்கே திருப்பிக்கூறல் வரியமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மணமகன் மலர்மாலை அணிகிறார்கள் என்பதும், மணமகள் நகைகளால் அழகு படுத்தப்படுகிறார்கள் என்பதும் தெரிகிறது. எபிரேயர்கள் மணமாலை அணிபவர்கள் அல்லர், அவர்கள் ஒரு வகையான தலைவிரிப்புக்களை அணிபவர்கள்,
இது பெயர் (פְּאֵר பெ'எர்) என அழைக்கப்படுகிறது. இதனை வழமையாக குருக்கள் அணிந்தார்கள் எனப்படுகிறது. வழிபாட்டு உடையாக இது இருந்தாலும். இது ஆடம்பர அழகைக் காட்டுகிறது. மணமகள் அணிகலன்கள் அணிவது எபிரேயரின் வழக்கமாகவும் இருந்திருக்கிறது (חָתָן֙ ஹாதான்- மணமகன்: כַּלָּה கல்லாஹ்- மணமகள்).
வ.11: நிலமும், தோட்டமும் ஆசிரியருக்கு அதிசயங்களாக தோன்றியிருக்கிறது. இங்கே முளைக்கின்ற விதைகளையும் அவர் அதிசயமாகவே பார்க்கிறார். இதனைப் போலவே இஸ்ராயேல் மக்களுடைய வாழ்வும், வேற்றினத்தார் முன்னிலையில் அதிசயமாக பார்க்கப்படும் என்கிறார். அதாவது தழைக்கும் என்கிறார்.
லூக்கா 1,46-48.49-50.53-54
மரியாவின் பாடல்
46அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
47'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
48ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
50-53அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54-55மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்'. 56மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
இன்றைய பதிலுரைப் பாடல் லூக்காவின் நற்செய்தியிலிருந்து எடுக்கப்படுகிறது. லூக்கா நற்செய்தி சிறுபாடல்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. லூக்கா நற்செய்தியில் வரும் பாடல்களை திருச்சபை செபிக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறது. லூக்கா நற்செய்தியில் வருகின்ற சிறுபாடல்களை ஆரம்பகால திருச்சபை பாடல்களாக தனது வழிபாட்டிலே பயன்படுத்தியது என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இன்றைய பதிலுரைப் பாடலாக வரும் இந்த சிறுபாடல், அதனுடைய இலத்தின் முதல் வார்த்தையை கொண்டு மஞ்ஞிபிகாட் (Magnificat) என அழைக்கப்படுகிறது. இதன் முழுவடிவமாக Magnificat anima mea Dominum, என்பது இருக்கிறது, இதன் அர்த்தம் - என் ஆன்மா ஆண்டவரை போற்றுகிறது. எலிசபெத்தின் வாழ்த்துரையை கேட்டவுடன் இந்த பாடலை மரியா, கடவுளை வாழ்த்தி பாடியதாக காண்பிக்கப்படுகிறது. எபிரேய பாரம்பரிய மற்றும் முதல் ஏற்பாட்டு விவிலிய புகழ்ச்சிப் பாடல்களை இந்த பாடல் அப்படியே ஒத்திருக்கிறது. அத்தோடு முதல் ஏற்பாட்டில் (காண்க 1சாமுவேல் 2,1-10) இறைவாக்கினர் சாமுவேலின் தாயாரான, அன்னாவின் பாடலுக்கும் இந்த பாடலுக்கும் சொல்லாட்சியிலும், இறையியலிலும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
மஞ்ஞிபிகாட்டை இரண்டு பிரிவுகளாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். முதலாவது பகுதி ஆண்டவரை புகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது (வவ.46-50). இங்கே கடவுள் மரியாவிற்கு செய்த அனைத்திற்காகவும் புகழப்படுகிறார். இங்கே சொல்லாட்சி அப்படியே எபிரேய கவிநடையான திருப்பிக்கூறுதல் மற்றும் இரணை வரிகள் அமைப்பைக் காட்டுகிறது. முதலாவது இரணைவரி மரியாவின் மகிழ்வைக் காட்டுகிறது (வவ.46-47). இரண்டாவது இரணைவரி மரியாவை கடவுள் உயர்நிலைக்கு உயர்த்தியதைக் காட்டுகிறது (வவ.48-49). 50வரி இந்த பாடலின் முதலாவது பிரிவை முடித்துவைக்கிறது. அத்தோடு இரண்டாவது பிரிவு ஆரம்பமாகிறது.
இரண்டாவது பரிவிலே கடவுள் தாழ்ந்தோர்களை உயர்த்துகிறவர் என்பது காட்டப்படுகிறது (வவ.51-55). இறைவாக்கினர்களின் இறைவாக்கைப் போல, கடவுள் வரலாற்றில் தாழ்ந்தவர்களையும், அடிமைகளையும், அடிமட்டத்தில் இருப்பவர்களையும் உயர்த்துகிறவர் என்பதையும், அத்தோடு அதிகாரத்தில் இருக்கும் பொல்லாத செல்வர்களை அவர் விரட்டுவார் என்பதையும் காட்டுகிறது. இந்த பகுதியும் இரணைவரிகளாக பிரிக்கப்படக்கூடியது (காண்க வவ. 51-52: 53-54). முதலாவது பிhவை வ.50 முடித்துவைத்ததைப் போல் இரண்டாவது பகுதியையும் வ.55 முடித்துவைக்கிறது. இயேசுவின் மீட்புப் பணியை முன்கூட்டியே சொல்வது போல மரியாவின் வாழ்வில் ஆண்டவர் செய்த அதிசயங்களை இந்த பாடல் காட்டுகிறது. இந்த பாடலில் வரும் கருப்பொருட்கள் அப்படியே இயேசுவின் வாழ்வில் நிறைவாவதை அவதானிக்கலாம். இங்கே லூக்காவின் புலமைத்துவம் தெரியும். சில முக்கியமில்லாத பாடங்கள் இதனை எலிசபெத்தின் பாடல் என காட்டுகின்றன, இருப்பினும் இது மரியாவின் பாடல்தான் என்பது வலுவான பாடம்.
இந்த பாடலை பாடுவதற்கு முன் மரியா, கர்பிணியாக இருந்த தன்னுடைய உறவினரான எலிசபேத்தை சந்திக்க நாசரேத்திலிருந்து வந்திருந்தார். எலிசபேத்து, யூதேய மலைநாட்டில் வாழ்ந்து வந்தார். எலிசபேத்தை மரியா சந்தித்த வேளை, எலிசபேத்தின் வயிற்றிலிருந்து யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார் என லூக்கா காட்டுகிறார். இந்த வேளையில் எலிசபேத்து மரியாவை நோக்கி, ஆண்டவர் தாயார் தன்னிடம் வர தான் தகுதியில்லாதவர் என்பதை அறிக்கையிடுகிறார் (காண்க லூக்கா 1,39-45). எலிசபேத்தின் ஆசியை கேட்ட மரியா இப்படிப் பாடுகிறார். வழமையாக பாடுகிறவர் தன்னைப் பற்றியே பாடுவார், ஆனால் இங்கே மரியா கடவுளை கதாநாயகராக வர்ணித்து பாடுவது அவருடைய தாழ்;ச்சியைக் காட்டுகிறது.
வ.46: லூக்காவின் நற்செய்திப்படி இந்த பாடலைப் பாடியவர் மரியா - Καὶ εἶπεν Μαριάμ· காய் எய்ப்பென் மரியாம் அத்தோடு மரியா சொன்னார். (இங்கே சில முக்கியமில்லாத இலத்தின் பாடங்கள் இந்த பாடலைப் பாடியவர் எலிசபேத்து என காட்ட முயல்கின்றன). இனி வருகின்ற வரிகள் எபிரேய கவிநடையிலே அமைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் தமிழ் திருவிவிலியமும், இந்த வரிகளை கவிநடையில் மொழிபெயர்த்துள்ளது. இங்கே திருப்பிக்கூறல், ஒத்த கருத்துச் சொற்கள், இரணை வரிகள், பாகங்கள், முடிவுரைகள் போன்ற எபிரேய கவிநடையைக் காணலாம்.
மரியா தன் ஆன்மா கடவுளை பெருமைப்படுத்துவதாகச் சொல்கிறார் (Μεγαλύνει ἡ ψυχή μου τὸν κύριον மெகாலுநெய் ஹே ப்சுகே மூ டொன் கூரியோன்), இதன் வாயிலாக நன்மைத்தனத்தை பெறுகிறவர்கள் ஆண்டவரை மட்டுமே பெருமைப்படுத்த வேண்டும் என்பது சொல்லப்படுகிறது.
வ.47: முதலாவது வரியில் சொல்லப்பட்ட அதே கருப்பொருள் திருப்பிச் சொல்லப்படுகிறது. முதலாவது வரியில் ஆண்டவர், இந்த வரியில் மீட்பராக பெயரிடப்படுகிறார் (σωτήρ சோடேர்), இவரிலே தன் மனம் பேருவகை (ἠγαλλίασεν ஏகாலியாசென்) கொள்கிறது என்கிறார். மனத்தைக் குறிக்க 'என் ஆன்மா' என்ற சொல் பாவிக்கப்படுகிறது (πνεῦμά μου புனுமா மூ).
வ.48: மரியா இங்கே தன்னை பாடுபொருளாக எடுத்து, தன்னை அடிமையாகவும், தான் தாழ்நிலையில் இருந்ததாகவும் பாடுகிறார். இது யூத குலத்தின் சாதாரண மக்களின் நிலையைக் குறிப்பதாக அமைகிறது. அடிமைகள் சுதந்திரம் அற்றவர்களாக இருந்தார்கள் (δούλη தூலே), இவர்கள் தங்கள் உரிமையாளர்களையே நம்பி இருந்தார்கள். விடுதலை என்பது இவர்களுக்கு புது பிறப்பைக் கொடுத்தது.
கடவுளின் கிருபையால் இனி எல்லாத் தலைமுறையும் தன்னை பேறுபெற்றவர் எனச் சொல்லும் என்கிறார் (μακάριος மகரியோஸ்- பேறுபெற்றவர்). பேறுபெற்றவர்கள் கடவுளின் வழியில் நடப்பவர்கள், சட்டங்களை கடைப்பிடிக்கிறவர்கள். இவர்களைப்போல் தான் ஆகிவிட்டதாக மரியா பாடுகிறார்.
வ.49: இந்த வரி கடவுளின் மேன்மையைக் காட்டி நிற்கிறது. கடவுளை வல்லவர் எனவும், அவர் அரும் பெரும் செயல்கள் செய்தார் என்றும் அறிக்கையிடுகிறது. கடவுளுடைய பெயர் தூயவர் என்பது முதல் ஏற்பாட்டில் அடிக்கடி வருகின்ற ஒரு காரணப் பெயர். இதனை மரியா இங்கே நினைவுகூறுகிறார் (ἅγιον τὸ ὄνομα αὐτοῦ ஹகியோன் டொ ஒனொமா அவுடூ- தூயது என்பது அவர் பெயர்).
வ.50: இந்த வரி முதலாவது பிரிவை முடித்து வைக்கிறது. ஆண்டவர் தன் இரக்கத்தை, தனக்கு அஞ்சி நடப்போருக்கு தலைமுறை தலைமுறையாக காட்டிவருகின்றமை இங்கே சொல்லப்படுகிறது.
இரக்கத்தைக் குறிகக் (ἔλεος) எலயோஸ் என்ற சொல்ல பாவிக்கப்பட்டுள்ளது. இது அன்பிரகத்தை அல்லது பிரியத்தைக் குறிக்கும். திருப்பாடல்கள் இந்த சொல்லை அழகாக வர்ணிக்கின்றன.
கடவுளுக்கு அஞ்சி நடத்தல் என்பது பயத்தை குறிக்காது, மாறாக ஆழமான கடவுள் நம்பிக்கையையும், மரியாதையான வாழ்வையும் குறிக்கும். கடவுளின் பிரசன்னத்தை நம்புகிறவர், தீமையை அகற்றுவார், இதனைத்தான் கடவுளுக்கு அஞ்சிவாழுதல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
வ.51: கடவுளுக்கு அஞ்சாதோர் யார், அவர்கள் உள்ளத்தில் செருக்குடன் வாழ்கிறவர்கள். அவர்களின் இதய சிந்தனைகளை கடவுள் தன்னுடைய பலத்துடன் இல்லாமல் ஆக்குவார் என்கிறார் மரியா. கடவுளின் பலத்தைக் குறிக்க 'அவர் தோள்வலிமை' என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (κράτος ἐν βραχίονι கிராடொஸ் என் பிராகியொனி).
வ.52: கடவுள் வலியோரை அரியணையிலிருந்து தூக்கி எறிந்து விட்டு, தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தியுள்ளார். இங்கே மரியா அனைத்து வலியோர்களையும் தாக்கி பாடுகிறார் என்று எடுக்க முடியாது, மாறாக தீமையான வலியோர்கள் மட்டுமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டு தாழ்நிலையில் இருப்போருக்கு நம்பிக்கையாக இந்த வரி அமைகிறது.
விவிலிய சிந்தனைகள் வலியோருக்கு எதிரானவை அல்ல. ஆபிரகாம், யாக்கோபு, ஈசாக்கு மற்றும் பல முதல் ஏற்பாட்டு பெரியவர்கள் வலியவர்களாக இருந்திருக்கிறார்கள். கடவுள் மனிதர்கள் வலிமையடை வேண்டும் என்பதையும் விரும்புகிறார். ஆனால் இந்த வலிமை, மற்றவர்களுக்கு எதிராக வருகின்றபோது அல்லது தீமையான பாதையை நோக்கி செல்கின்றபோது, அவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள் (நம் நாட்டு அரசியல் தலைவர்கள் போல).
வ.53: பசித்தோரை ஆண்டவர் நலன்களால் நிரப்புகிறார். இங்கே உணவுப் பசிதான் குறிப்பிடப்படுகிறது எனலாம். பசித்தவர்களை உணவால் நிரப்பாமல், அவர்களை கடவுள் நலன்களால் நிரப்புவதாகச் சொல்கிறார் மரியா (ἀγαθός அகாதொஸ்-நலன்). ஒருவேளை உணவு அனைத்து பசியையும் நிரப்பாது என்று சொல்கிறார் போல.
செல்வருடைய கர்வத்திற்கு காரணம், அவர்கள் யாரிடமும் தங்கியில்லை என்ற உணர்வாகும். இவர்களுக்கு தேவைகள் வருகின்றபோது, அவர்கள் மற்றவர்களிடம் தங்கிவாழ்கிறார்கள் என்பது புரிகிறது. இதனால் மரியா இவர்களை கடவுள் வெறுமையாக அனுப்புகிறார் என்கிறார் (κενός கெனொஸ்-வெறுமை).
வ.54: கடவுள் ஏற்கனவே ஆபிரகாமையும், அவர் வழிமரபினரையும் இரக்கத்தோடு நினைவிற்கொள்வார் என்று உரைத்திருக்கிறார். இது உடன்படிக்கைகள் வாயிலாக நினைவுறுத்தப்பட்டது. ஆபிரகாம் ஒரு தனிநபர் என்பதையும் தாண்டி ஒரு இனத்தின் அடையாளம்.
இரண்டாவது பிரிவில் வரும் இஸ்ராயேல் என்ற சொல்லிற்க்கு ஒத்த கருத்துச் சொல்லாக ஆபிரகாம் என்ற பெயர்ச் சொல் பாவிக்கப்படுகிறது. இஸ்ராயேல் கடவுளின் ஊழியராக பார்க்கப்படுகிறது.
ஊழியர் என்பதற்கு கிரேக்க பாடல் பைதோஸ் (παιδὸς) என்ற சொலலை பயன்படுத்துகிறது. இதற்கு பையன் அல்லது குழந்தை என்ற அர்த்தமும் உள்ளது.
வ.55: மரியா மூன்று மாதங்கள் மட்டுமே எலிசபேத்தின் வீட்டில் இருந்திருக்கிறார். கபிரியேல் வானதூதர் மரியாவிற்கு தோன்றியபோது எலிசபேத்து ஆறாம் மாதத்தில் இருந்தார். ஆக மரியா, எலிசபேத்து ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த போது அவரைவிட்டு வந்திருக்க வேண்டும். யோவான் பிறக்கும்போது வருகின்ற மக்கள் கூட்டத்தை தவிர்க்க இப்படிச் செய்தார் என்ற ஒரு வாதமும் இருக்கிறது.
1தெசலோனியர் 5,16-24
16எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். 17இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். 18எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. 19தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். 20இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். 21அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். 22எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.
7. முடிவுரை
23அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! 24உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
தெசலோனியர் முதலாவது திருமுகம் ஐந்து அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பவுலுடைய ஆரம்ப கால திருமுகம் என்று இது அறியப்படுகிறது. அக்காலத்தில் போதிக்கப்பட்ட கிறிஸ்தவ நம்பிக்கைகளை எழுது பொருளாகக் கொண்டுள்ளது. மிக முக்கியமாக ஆண்டவருடைய இரண்டாவது வருகை இந்த திருமுகத்திலே பேசப்படுகிறது. ஆண்டவருடைய இரண்டாவது வருகையை காரணம் காட்டி, மக்கள் தவறான வழியை பின்பற்ற தொடங்கியபோது அதனை சீர்செய்வதையும் இந்த திருமுகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டவருடைய இரண்டாம் வருகையை மன அமைதியுடனும், சஞ்சலங்கள் இல்லாமலும் எதிர்கொள்ள முடியும் என்பதை பவுல் அழகாகக் காட்டுகிறார். இன்றைய வாசக பகுதிகள் புதிய ஏற்பாட்டு மறையுரைஞர்களால் அதிகமாக பாவிக்கப்படும் பகுதி. மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு இந்த பகுதி நிச்சயமாக ஆறுதல் கொடுக்கும். சிலவற்றைச் செய்யச் சொல்கிறார் சிலவற்றை செய்யவேண்டாம் என்கிறார். இதனையும் ஒருவகையான கடித முறை என்று எடுக்கலாம்.
வ.16: பவுல் தன் மக்களை எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் படி கேட்கிறார். ஆண்டவருடைய இரண்டாம் வருகையைப் பற்றிய பிழையான புரிதல்களும், அதனால் ஏற்படும் மனகுழப்பங்களும் தேவையற்றது என்பதைக் இந்த ஆறுதல் வார்த்தைகள் காட்டுகின்றன. (Πάντοτε χαίρετε - பன்டொடெ கய்ரெடெ- எப்போதும் மகிழுங்கள்).
வ.17: இதற்கு இடைவிடாது செபிக்கவேண்டும் என்பது சொல்லப்படுகிறது - ἀδιαλείπτως προσεύχεσθε - அதியாலெய்ப்டோஸ் புரொசெயுகெஸ்தெ. இடைவிடாது செபித்தல் என்பது, நம்பிக்கையோடு தொடர்புபட்டது. நம்பிக்கை குறைகின்றபோது செபம் குறைகிறது. இடைவிடாது செபியுங்கள் என்பது, மனந்தளராமல் நம்புங்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கலாம்.
வ.18: எல்லாச் சூழ்நிலையிலும், நன்றி கூறச்சொல்கிறார். சூழ்நிலைகள் ஒருவருடைய மனநிலையை தீர்மானிக்கிறது. மகிழ்வான நிலையில் நன்றி சொல்வது இலகுவான விடயம், ஆனால் குழப்பமான நிலையில் நன்றி சொல்வது அவ்வளவு இலகுவாக இருக்காது. இதனை கருத்தில் கொண்டு எல்லா சூழ்நிலையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லக் கேட்கிறார் பவுல் (ἐν παντὶ εὐχαριστεῖτε· என் பன்டி எவுகாரிஸ்டெய்டெ).
இந்த நன்றி கூறுதல் தன்மைதான் கடவுளுடைய திருவுளம் (θέλημα θεοῦ தெலேமா தியூ) இதனை அவர் கிறிஸ்துவழியாகக் செய்தார் என்று சொல்கிறார்.
வ.19: தூய ஆவியின் செயற்பாட்டை தடுக்க வேண்டாம் என்கிறார் பவுல். தூய ஆவியாரை தனி நபராக காண்கின்ற நம்பிக்கை இக்காலத்தில் வளர்ந்திருந்தது என்பது புலப்படுகிறது. தூய ஆவியாரைத் தடுக்கக்கூடிய செயற்பாடுகள் எவை என்பதை இந்த இடத்தில் பவுல் சொல்லவில்லை, ஆனால் சூழலியலில் தெசலோனிக்கருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இதற்கான கிரேக்க மூலத்தை 'தூய ஆவியை நிறுத்தவேண்டாம்' என்றும் மொழி பெயர்க்கலாம் (τὸ πνεῦμα μὴ σβέννυτε; டொ புனுமா மே ஸ்பென்னூடெ).
வ.20: அடுத்ததாக இறைவாக்கை புறக்கணிக்க வேண்டாம் என்ற கட்டளையும் கொடுக்கப்படுகிறது. (προφητείας μὴ ἐξουθενεῖτε புரொபேடெய்ஆஸ் மே எட்சூதெநெய்டெ). தொடக்க திருச்சபையில் சில தலைவர்களும் இறைவாக்கினர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இருப்பினும் இங்கே பவுல் சொல்கின்ற இறைவாக்கு, முதல் ஏற்பாட்டு இறைவாக்குகளாக இருக்கலாம். இறைவாக்குகளைப் பொறுத்த மட்டில், யூதத்திற்றும் கிறிஸ்தவத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.
வ.21: அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கக் கேட்கிறார். இருப்பினும் நல்லதை மட்டுமே பற்றிக்கொள்ளக் கேட்கிறார். πάντα °δὲ δοκιμάζετε, τὸ καλὸν κατέχετε, - பன்டா தெ தொகிமாட்செடெ, டொ காலொன் காடெகெடெ. பவுல் எந்தளவிற்கு சகிப்புத் தன்மையுடையவராகவும் மற்றவர்களின் மெய்யறிவை பாராட்டுகிறவராகவும் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மற்றவர்களின் சிந்தனைகளை கேட்பது தவறல்ல, மாறாக பிழையானவற்றால் ஆட்கொள்ளப்படுவதுதான் தவறு எனச் சொல்கிறார். இங்கே பவுல் யூதத்தையும், கிரேக்கத்ததையும் உள்வாங்குகிறார் எனலாம்.
வ.22: முடிவாக எல்லா வகையான தீமைகளிலிருந்தும், விலகக் கேட்கிறார். ἀπὸ παντὸς εἴδους πονηροῦ ἀπέχεσθε. அபொ பான்டொஸ் எய்தூஸ் பொனேரூ அபெக்கெஸ்தே. தெசலோனிக்க சமூதாயம், பல விதமான தீமைகளை சந்தித்திருக்கலாம். தீமைகள் எந்த வடிவத்தால் வந்தாலும் அதனை சீடர்கள் வெறுக்க வேண்டும் என்பது பவுலின் போதனை (εἶδος எய்தொஸ்- வடிவம்).
வ.23: இனிவரும் மூன்று வரிகள் முடிவுரையாக அமைகின்றன. கிரேக்க-உரோமைய திருமுகங்கள் முடிவுரைகளை முக்கியமான பிரிவாகக் கொண்டிருந்தன.
கடவுள் அமைதியருள்பவராக காட்டப்படுகிறார் (ὁ θεὸς τῆς εἰρήνης ஹொ தியோஸ் டேஸ் எய்ரேனேஸ்). இந்த கடவுள் தெசலோனிக்கரை தூய்மைப்படுத்துவாராக என்று இரஞ்சப்படுகிறார்.
திருமுகங்களின் முடிவுரைகள் ஆசீர்களை தாங்கியிருக்கும், அதனை இந்த வரியின் பிரிவில் காணலாம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது, கடவுள் தெசலோனிக்கரின் உள்ளம், ஆன்மா மற்றம் உடலை குற்றமின்றி காப்பாராக என்று ஆசிக்கிறார். இந்த வரியில் பவுல் இந்த திருமுகத்தின் முக்கியமான எழுவாய்ப் பொருளான. ஆண்டவரின் இரண்டாம் வருகையை நினைவூட்டுகிறார்.
வ.24: இறுதியாக கடவுளுக்கு ஒரு காரணப் பெயரையும் கொடுக்கிறார். கடவள் நம்பிக்கைக்குரியவர் என்று சொல்லப்படுகிறார் (πιστὸς பிஸ்டொஸ்- நம்பிக்கைக்குரியவர்).
வவ.25-28: இந்த வரிகளின் தங்களின் தேவைகளையும் உணர்வுகளையும் பவுல் எழுதுகிறார். வாசகர்களை சகோதர சகோதரிகள் (Ἀδελφοί அதெல்பொய்) என்று அழைக்கிறார். தங்களுக்குள்ளே நல்ல உறவை வளர்க்க வேண்டும் என்பதற்காக தூய முத்தம் கொடுக்கச் சொல்கிறார். இது முக்கியமாக கிரேக்க யூதர்களின் வாழ்த்து முறையாக இருந்திருக்கலாம் (ἐν φιλήματι ἁγίῳ என் பிலேமாடி ஹகியோ- தூய முத்தத்தில்). தன்னுடைய திருமுகம் அனைவருக்கும் உரியது என்பதால் அனைவருக்கும் இதனை வாசிகக் கொடுக்கும் படியாக ஆண்டவர் பெயரால் கட்டளை கொடுக்கிறார் (அக்காலத்திலும் தலைவர்கள் பொறுப்பானவர்கள், முக்கியமான கடிதங்களை அங்கத்தவர்களிடமிருந்து மறைத்தார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது).
இறுதியாக ஆண்டவரின் ஆசிரை அனைவருக்கும் வழங்குகின்றார்.
யோவான் 1,6-8.19-28
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். 7அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். 8அவர் அந்த ஒளி அல்ல் மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்
(மத் 3:1-12 மாற் 1:7-8; லூக் 3:15-17)
19எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார். 20இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். 21அப்போது, 'அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?' என்று அவர்கள் கேட்க, அவர், 'நானல்ல' என்றார் 'நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?' என்று கேட்டபோதும், அவர், 'இல்லை' என்று மறுமொழி கூறினார். 22அவர்கள் அவரிடம், 'நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?' என்று கேட்டார்கள். 23அதற்கு அவர்,
''ஆண்டவருக்காக வழியைச்
செம்மையாக்குங்கள்
எனப் பாலைநிலத்தில் குரல்
ஒன்று கேட்கிறது'
என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே' என்றார். 24பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் 25அவரிடம், 'நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?' என்று கேட்டார்கள். 26யோவான் அவர்களிடம், 'நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; 27அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை' என்றார். 28இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
யோவான் நற்செய்தி நற்செய்திகளிலே காலத்தால் மிகவும் பிந்தியது என்று இன்று அதிகமான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த யோவானை ஆண்டவருடைய பிரியமான சீடர் எனவும், திருத்தூதர் யாக்கோபுவின் சகோதரர் எனவும், முதல் மூன்று சீடர்களுள் ஒருவர் எனவும் பாரம்பரியமாக திருச்சபை அறிக்கையிடுகிறது. இவர் மிகவும் இளமையானவராக ஆண்டவரின் சீடத்துவத்தை பெற்றிருக்கலாம். நீண்ட காலமாக வாழ்ந்தவரும், அன்னை மரியாவை அவருடைய இறுதிக் காலத்தில் பாதுகாத்தவராகவும் இருந்தார் என்பது கத்தோலிக்க-கிறிஸ்தவ நம்பிக்கை.
மாற்கு நற்செய்தியைப் போல யோவான் நற்செய்தியும் ஆண்டவரின் குழந்தைப் பருவ நிகழ்சிகளை வரலாறாக பதியவில்லை. ஆனால் யோவான் வித்தியாசமாக ஆண்டவர் இயேசுவின் கடவுள் தன்மையை தன்னுடைய முன்னுரை பாடலில் விளக்குகிறார். இது யோவானுக்கே உரிய மிகவும் கிரேக்க மெய்யில்தன்மை நிறைந்த பண்பு. யோவான் நற்செய்தியாளர் கிரேக்க தத்துவங்களை நன்கு அறிந்திருந்தார் என்பதை இங்கே பாவிக்கப்பட்டுள்ள கிரேக்க மொழி காட்டுகிறது. இயேசுவைப் பற்றிய யோவானின் முன்னுரைப் பாடலில் திருமுழுக்கு யோவானும் உள்ளவாங்கப்பட்டிருக்கிறார்.
திருமுழுக்கு யோவானிற்கு பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் இயேசுவிடம் வந்து அவர் சீடராக மாறினார்கள். அந்திரேயா மற்றும் நற்செய்தியாளர் யோவான் போன்றவர்களும், திருமுழுக்கு யோவானின் முன்னால் சீடர்கள் என்று சொல்லப்படுகிறது. திருமுழுக்கு யோவானை மெசியாவாக கருதியவர்களும் இருந்தார்கள். ஆரம்ப கால திருச்சபையில் இந்த நம்பிக்கை சற்று பலமாகவே இருந்திருக்கிறது. இதனால்தான் திருமுழுக்கு யோவானை யார் என்று தெளிவாக சொல்லவேண்டிய தேவை நற்செய்தியாளர்களுக்கு இருந்திருக்கிறது.
வ.6: இது யோவான் நற்செய்தியாளரின் முன்னுரைப் பாடலின் திருமுழுக்கு யோவானைப் பற்றிய முதலாவது வரி. நற்செய்தியாளர் திருழுக்கு யோவானை கடவுள் அனுப்பியவராகவும், அவருடைய பெயர் யோவான் எனவும் சொல்கிறார்.
யோவானை கடவுளால் அனுப்பப்பட்டவர் (ἀπεσταλμένος அபெஸ்டால்மெனொஸ்) எனச் சொல்வது, அவர்க்கான உயர்ந்த மரியாதை என்று எடுக்கலாம். ஆரம்ப கால திருச்சபை திருமுழுக்கு யோவானை ஆண்டவர் இயேசுவிற்கு எதிரியாக பார்க்கவில்லை என்பதும் புரிகிறது. அனுப்பப்பட்டவர் என்பதற்கும், அப்போஸ்தலர் என்பதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
வ.7: யோவான் ஏன் கடவுளால் அனுப்பப்பட்டார் என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. அவர் சான்று பகரவே வந்தார் (μαρτυρίαν மார்டுரியான்), அதாவது இயேசுவிற்கு அவர் சான்றாக வந்தார் என்பது சொல்லப்படுகிறது. வேதசாட்சி என்ற தமிழ்ச் சொல்லிற்கு மார்டுரொஸ் (μαρτυρος) என்பதுதான் கிரேக்க ஒத்த கருத்துச் சொல். அனைவரும் மீட்படைய அவர் ஒளியைக் குறித்து சான்று பகர்ந்தார். இங்கே ஒளி இயேசுவைக் குறிக்கிறது (φῶς போஸ்). ஒளி என்பது யோவான் நற்செய்தியில் மிகவும் ஆழமான வார்த்தை. கிரேக்க முக்கியமான தெய்வமான அப்பல்லோ ஒளியின் தெய்வமாக பார்க்கப்பட்டது.
வ.8: இந்த வரி ஏழாவது வரியை திருப்பிக்கூறுகிறது. இந்த இடத்தில் யோவானுடைய முன்னுரைப் பாடல் எபிரேய இலக்கியத்தை ஒத்துப்போகிறது.
திருமுழுக்கு யோவான் ஒளியல்ல மாறாக அவர் ஒளியைக் குறித்து சான்று பகர வந்தவர் என்பது அழுத்திச் சொல்லப்படுகிறது.
வ.19: எருசலேமில் இருந்த யூத குருக்களினதும், லேவியர்களினதும் கேள்விகளை தன்னுடைய சான்றாக எடுக்கிறார் நற்செய்தியாளர். இவர்கள் இயேசுவை யார் என கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்வி இவர்களுடைய கேள்வியாக மட்டுமல்ல, மாறாக பலருடைய கேள்வியாக ஆரம்ப காலத்திலே இருந்திருக்கிறது. இங்கே லேவியர்களும், குருக்களும் யோவானை கேள்வி கேட்கிறார்கள். 'நீர் யார்?' (σὺ τίς εἶ; சு டிஸ் எய்) என்பது ஒரு மெய்யியல் கேள்வி. யோவானின் கேள்விற்கு உடனடியாக விடை எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தான் மெசியா அல்ல என ஏற்றுக்கொள்கிறார். மெசியாவின் வருகைக்காக இயேசு காலத்து யூதர்கள் பார்த்திருந்தார்கள். மெசியா என்றால் அபிசேகம் செய்யப்பட்டவர் அல்லது கிறிஸ்து என்று பொருள் (χριστός கிறிஸ்டொஸ்).
வ.20: திருமுழுக்கு யோவான் தான் கிறிஸ்து அல்ல என்பதை வெளிப்படையாகவே சொல்கிறார். இதுவும் யோவான் நற்செய்தியாளரின் வாசகர்களுக்கு தேவையான பதிலாகவே இருந்திருக்கிறது.
வ.21: யோவானின் இல்லை என்ற பதில், இன்னொரு கேள்வியை கேட்கவைக்கிறது. அந்த கேள்விகளும் யூதர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளே. யூதர்கள் மெசியாவின் வருகைக்கு முன் இறைவாக்கினர் எலியா வருவார் என எண்ணினார்கள். ஆக இவரை எலியாவாக எதிர்பார்த்திருக்கலாம். தான் எலியாவும் அல்ல என்கிறார் யோவான். அல்லாவிடில் வரவிருக்கும் இறைவாக்கினரா என்றும் கேட்கிறார்கள். அதற்கு எதிர்மறையான விடைதான் கிடைக்கிறது, யோவானிடமிருந்து. இயேசுவையும் பலர் இறைவாக்கினராக கருதினர். ஆண்டவருடைய வருகையில் மோசே போன்ற இறைவாக்கினர்கள் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்திருக்கிறது. இயேசு இன்னொரு சந்தர்ப்பத்தில் யோவானை எலியாவிற்கு ஒப்பிட்டதை நினைவிற்கொள்ள வேண்டும்.
வ.22: திருமுழுக்கு யோவானுடைய இல்லை என்ற பதில்கள் மீண்டும் கேள்விகளை எழுப்புகின்றன. இந்த முறை அவர்கள், தாங்கள் ஏவப்பட்டவர்கள் என்பதை காட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களாக இந்த கேள்விகைளை கேட்காமல், தங்களை ஏவியர்களுக்குத்தான் இவை சொந்தம் என்கிறார்கள். உம்மைப் பற்றி என்ன சொல்கிறீர் என்ற இவர்கள் கேட்பது, தான் யார் என்று சொல்ல யோவானுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது (τί λέγεις περὶ σεαυτοῦ டி லெகெய்ஸ் பெரி செயாடூ- உம்மைப் பற்றி என்ன சொல்கிறீர்), இது வாசகர்களுக்கும் மிகவும் தேவையானது. வாசகர்களும் யோவானின் வாயிலிருந்தே யார் அவர் என்பதை இப்போது கேட்பார்கள். இது நற்செய்தியாளர் யோவானின் அழகான எழுதுமுறை.
வ.23: யோவான் எசாயா இறைவாக்கினரை மேற்கோடிடுகிறார். (காண்க எசாயா 40,3). இங்கே யோவான் பாவிக்கின்ற வரி சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. யோவானுடைய மூலம், இந்த மாற்றத்தைக் கொண்டிருந்திருக்கலாம், அல்லது யோவான் தன்னுடைய தேவைக்காக இதனை வடிவமைத்திருக்கலாம்.
ἐγὼ φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ· (எகோ போனே பொஓன்டொஸ் என் டே எரேமோ)
εὐθύνατε τὴν ὁδὸν κυρίου, (எவுதுனாடெ டேன் ஹொடொன் கூரியூ)
καθὼς εἶπεν Ἠσαΐας ὁ προφήτης. (காதோஸ் எய்பென் ஏசாய்யாஸ் ஹொ புரொபேடேஸ்)
பாலைநிலத்தில் சத்தமிடும் அந்த குரல் நான்,
ஆண்டவருடைய பாதையை நேராக்குங்கள்.
என்று எசாயா இறைவாக்கினர் உரைத்தார்.
மற்றைய நற்செய்தியாளர்கள் இந்த வரியை வௌ;வேறு விதமாகவே நோக்குகின்றார்கள்.
வவ.24-25: பரிசேயர்களால் அனுப்பப்பட்டவர்களின் அடுத்த கேள்வி. மெசியாவோ, எலியாவோ அல்லது வரவிருப்பவரோ இல்லை என்றால் ஏன் திருமுழுக்கு. இந்த கேள்வி மூலம், யோவானின் திருமுழுக்கு சாதாரண திருமுழுக்கு அடையாளம் என்பது புலப்படுகிறது. இதனை ஒருவர் சாதாரணமாக செய்ய முடியாது, அப்படிச் செய்தால் அதற்கு பின்னால் ஓர் காரணம் இருக்கும் என்பதை மக்கள் தெரிந்திருந்தனர் என்பது புலப்படுகிறது.
வ.26: யோவான் தன்னுடைய திருமுழுக்கின் தன்மையை தெளிவுபடுத்துகிறார். தான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுப்பதாகச் சொல்கிறார். தண்ணீர் கழுவுதலின் அடையாளம். ஆக இவருடைய திருமுழுக்கு ஒரு சாதாரண சடங்கு கழுவுதலைக் குறிக்கும் (ἐγὼ βαπτίζω ἐν ὕδατι எகோ பாப்டிஸ்ட்சோ என் ஹுதாடி).
அத்தோடு இயேசுவை மக்களிடையே இருப்பவராகச் சொல்கிறார் யோவான். அவரை மக்களுக்கு தெரியாது என்றும் சொல்கிறார். மெசியா மக்களிடையே இருப்பார் என்பது சாதாரண விடயம் அல்ல, அவ்வளவு பெரியவர் மக்களிடையே எப்படி இருப்பார், அத்தோடு அந்த முக்கியமானவரை இவர்களுக்கு தெரியாமலும் இருக்கிறது. இது மக்களின் அறியாமையையும், மெசியாவின் உன்னதமான மேன்மையையும் காட்டுகிறது (μέσος ὑμῶν ἕστηκεν ὃν ὑμεῖς οὐκ οἴδατε, மெசொஸ் ஹுமோன் எஸ்டேகென் ஹொன் ஹுமெய்ஸ் ஊக் ஒய்தாடெ - உங்கள் மத்தியில் இருக்கிறார் உங்களுக்கு அவரை தெரியாது).
வ.27: அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க தனக்கு தகுதியில்லை என்கிறார். மற்றைய நற்செய்தியாளர்களும் இந்த வரியை பாவிக்கின்றனர்.
வீட்டு உரிமையாளார்கள், மற்றும் பெரியவர்களின் மிதியடிவார்களை அடிமைகள் அவிழ்த்தார்கள். அந்த அடிமைநிலைகூட தனக்கு இல்லை என்கிறார் யோவான். இதன் மூலம் யோவான் தன்னை இயேசுவின் அடிமட்ட பணியாளராகவே காட்டுகிறார்.
முதல் ஏற்பாட்டில், மிதியடிவார்களை அவிழ்த்தல் என்பது ஒருவருடைய பொறுப்பைக் காட்டும். உதாரணமாக போவாசு தன் மிதியடிவாரை அவிழ்த்து ரூத்தை தன் மனைவியாக்கினார் (காண்க ரூத் 4, 7-9). மாற்கு இதனை உருவகமாக பாவித்தார் என்றால், திருச்சபையின் தலைவர் இயேசுதான், அவர்தான் தன் மிதியடிவாரை அவிழ்க்கவேண்டும் என்கிறார் எனலாம். ஆனால் இந்த உருவகம் இங்கே பாவிக்கப்படுகிறது என்பது போல தோன்றவில்லை. திருமுழுக்கு யோவான் தன்னை தகுதியில்லாதவராக நேரடியாகவே காட்டுகிறார்.
வ.28: இந்த நிகழ்வுகள் எங்கே நடைபெற்றது என்னும் இடத்தைக் குறித்து விளக்குகிறார், நற்செய்தியாளர் யோவான். இவை பெத்தானியாவில் நடந்தது. இந்த பெத்தானியா யோர்தான் நதிக்கரைக்கு அப்பால் இருந்தது. அங்கே திருமுழுக்கு யோவான் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார். பெத்தானியா என்ற இந்த இடம் யோர்தானுக்கு அருகில் இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றது. சிலர் இதனை பெத்தாபரா என்று அடையாளப்படுத்துகின்றனர். (Βηθαβαρᾶ). இதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. எழுத்துப்பிழை என்றும் இதற்கு ஒரு காரணம் கொடுக்கப்படுகிறது.
நம்முடைய மெசியா நம் நடுவில் இருக்கிறார்,
அவரை நமக்கு தெரியாமல் இருக்கிறது.
நம் நடுவில் அவர் இருப்பது அவருடைய பெருந்தன்மை,
அவரை நமக்கு தெரியாமல் இருப்பது நம் அறியாமை.
ஆண்டவரே உம்மை அடையாளம் காண உதவி செய்யும், ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக