First Sunday of Advent (B) திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (ஆ)
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (ஆ)
03,12,2017
ஞாயிறு வாசக விளக்கவுரை
(A Commentary on the Sunday Readings)
மி. ஜெகன் குமார் அமதி,
வசந்தகம், யாழ்ப்பாணம்.
வெள்ளி, 1 டிசம்பர், 2017
முதல் வாசகம்: எசாயா 63,16-17.19: 64,2-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 80
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,3-9
நற்செய்தி: மார்கு 13,33-37
திருவருகைக் காலம்:
ஒவ்வொரு திருச்சபைகளிலும் திருவருகைக் காலம் வித்தியாச விதமாகக் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையில் கி.பி. 480ம் ஆண்டுகளிலிருந்து இந்த வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. சிலர் இதனை பேதுருவின் காலத்துடனும் இணைக்கப் பார்க்கின்றனர், அதற்கு வாய்மொழிப் பாரம்பரியம் மட்டுமே சாட்சியமாக உள்ளது. 'திருவருகை' என்ற சொல் கிரேக்க παρουσία பரூசியா என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது. இதன் இலத்தின் வடிவமாக அத்வென்துஸ் adventus என்ற சொல் இருக்கிறது, இதிலிருந்துதான் ஆங்கில யுனஎநவெ அட்வென்ட் என்ற தற்போதைய சொல் உருவாகியிருக்கிறது.
பரூசியா என்பது ஆரம்ப கால கிரேக்க நம்பிக்கையில் மனிதர்களின் கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தெய்வத்தின் வருகையைக் குறித்தது. பின்னர் கிரேக்க-உரோமையர்கள் காலத்தில் இது ஆட்சியாளர்களின் வருகையைக் குறிக்க பயன்பட்டது. சீசர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள், தங்கள் மக்களை சந்திக்க, அவர்கள் இடங்களுக்கு எப்போதாவது வருவது வழமை, அவர்களின் வருகைக்காக மக்கள் காத்திருப்பர். இந்த நிகழ்வு அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு.
கிறிஸ்தவம் வளர்ந்ததன் பின்னர், இயேசுவின் இரண்டாம் வருகையை நினைவூட்டும் விதமாக இந்த பரூசியா என்ற சொல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக பயன்படுத்தப்பட தொடங்கியது. இது இரண்டு விதமான வருகையை கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுகிறது. முதலாவது வருகை மெசியாவின் பிறப்பிற்காக காத்திருந்த வருகையாகவும், இரண்டாவது வருகை இந்த மெசியா இரண்டாவது தடவையாக வருவதற்கான காத்திருத்தலாகவும் இருக்கின்றன. திருவருகைக் காலம் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்து வைக்கிறது, இவ்வாறு இந்த ஆண்டு (ஆ-மாற்கு) ஆண்டாக இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்த காலத்தில் நத்தார் மலர்-வளையம், நத்தார் இசைப் பாடல்கள், நத்தார் கால அட்டவணை, நத்தார் சோடினைகள், மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் என நம் வீடுகளையும் ஆலயங்களையும் அலங்கரிக்கும். கீழைத்தேய கிறிஸ்தவர்கள் இந்த காலத்தில் நத்தார் உணவுத்தவிர்ப்பு என்ற நிகழ்வை 40 நாட்களுக்கு தவமாக மேற்கொள்கின்றனர், இந்த மரபு பல காலங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் வழகிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
இந்த நாட்களின் வழிபாட்டு வாசகங்களின் கருப்பொருளாக இயேசுவின் இரண்டாம் வருகையும் அத்தோடு அவரின் வரலாற்று பிறப்பு நிகழ்வும் திகழ்கின்றன. கத்தோலிக்க திருச்சபை இந்த நான்கு வாரங்களை இரண்டாக பிரித்து, முதலாவது பகுதியாக, திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16ம் திகதிவரை உள்ளதை, இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாகவும் (பரூசியா): இரண்டாவதாக, 17ம் திகதியிருந்து 24ம் திகதிவரையான நாட்களை இயேசுவின் முதலாவது வருகையான அவரது வரலாற்று பிறப்பு மகிழ்சியை நினைவு கூருவதாகவும் (நத்தார்) அமைத்துள்ளது. இந்த காலம் ஒர் ஆயத்த காலமாக இருப்பதனால், தபசு காலத்தைப்போல் ஊதா நிற ஆடைகள் வழிபாட்டில் அணியப்படுகின்றன. ஐரோப்பிய திருச்சபையிலும் மற்றும் அனைத்துலக திருச்சபையிலும் இந்த காலத்திற்கென்று பல தனித்துவமான கிறிஸ்து பிறப்பு பாடல்கள் இன்னும் அழியாமல் பாவனையில் உள்ளன. வட ஐரோப்பிய நாடுகளில் பல விதமான அத்வென்துஸ் பாரம்பரிய நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் வரும் நான்கு வாரங்களில் முதலாவது வாரத்திற்கு நம்பிக்கையின் மெழுகுவர்த்தியும், இரண்டாவது வாரத்திற்கு பெத்லேகேம் மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை குறிக்கும் (Gaudete) எனும் மூன்றாவது வாரத்திற்கு ரோசா வண்ண மெழுவர்த்தியும்,
இறுதியாக வானவர்களின் மகிழ்ச்சி செய்தியைக் குறிக்கும் விதமான நான்காவது மெழுகுவர்த்தியாக வானதூதர் மெழுகுவர்த்தியும் (வெள்ளை) ஏற்றப்படுகின்றன. இருபத்திநான்காம் நாள் மாலைப் பொழுதில் ஆண்டவரின் பிறப்பை குறிக்கும் விதமாக ஐந்தாவது மெழுகுதிரி ஒன்றும் ஏற்றப்படுகின்றது. கிறிஸ்து பிறப்புக் காலம் பல பரிசில்களையும், மகிழ்வான தருணங்களையும் நினைவுபடுத்துவதால் இதனை குழந்தைகளின் காலம் என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நத்தார்;, பல குழந்தைப் பருவ நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
எசாயா 63,16-17.19: 64,2-7
இரக்கமும் துணையும் வேண்டி மன்றாடல்
15விண்ணகத்தினின்று கண்ணோக்கும்; தூய்மையும் மாட்சியும் உடைய உம் உறைவிடத்தினின்று பார்த்தருளும்; உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே? என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும் அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே? என்னிடமிருந்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளீரே! 16ஏனெனில் நீரே எங்கள் தந்தை; ஆபிரகாம் எங்களை அறியார்; இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்; ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டை நாளிலிருந்து 'எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். 17ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும். 18உம் திருத்தலத்தை உம் புனித மக்கள் சிறிது காலம் உடைமையாகக் கொண்டிருந்தனர்; எங்கள் பகைவர் அதைத் தரைமட்டமாக்கினர். 19உம்மால் என்றுமே ஆளப்படாதவர்கள் போலானோம்; உம் பெயரால் அழைக்கப்படாதவர்கள் போலானோம்.
1நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! 2விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்; வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர். 3நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! 4தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை. 5மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்; இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? 6நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின் நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன. 7உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.
எசாயா புத்தகத்தின் மூன்றாவது புத்தகம், யூதர்களின் பபிலோனியாவில் இருந்து நாடு திரும்பியதன் பின்னர் நடந்த நிகழ்வுகளை பின்புலமாக கொண்டமைகின்றது.
வ.15: பழைய கால நிகழ்வுகளை மீட்டிப் பார்ப்பது போல இந்த வரி அமைந்துள்ளது. ஆசிரியர் ஆண்டவருக்கு வரலாறு சொல்லிக்கொடுக்கிறார். இப்படியாக பழைய நட்பை நினைவூட்டுகிறார். கடவுள் விண்ணகத்தில் இருக்கிறார் என்பது, இஸ்ராயேலர்கள் மற்றும் அதிமான மதங்களைச் சார்ந்தவர்களின் நம்பிக்கை (שָׁמַיִם ஷாமயிம்-வானகம்). இந்த வானகத்திலிருந்து கண்ணோக்கச் சொல்கிறார், அத்தோடு வானகத்திற்கு ஒத்த பண்பாக அதனை தூய்மையும் மாட்சியும் உரிய கடவுளின் இடம் எனக் காண்கிறார்.
கடவுளுடைய ஆற்றல், நெஞ்சுருக்கும் அன்பு, இரக்கப் பெருக்கு போன்றவற்றை கடவுள் நிறுத்தி வைத்துள்ளார் என்பது போல சொல்கிறார். எசாய புத்தகத்தின் இந்த வரியில் ஆசிரியர் தன்னை கதாநாயகனாக வர்ணித்து ஒருமையில் பேசுகிறார். இது இறைவாக்கு நூல்களில் சாதாரணமாக காணப்படாது. இங்கே அவர் தன்னை என்று சொல்வதை இஸ்ராயேல் இனம் என்று எடுக்கலாம். இந்த வரியிலிருந்து, இவர்கள் தாங்க முடியாத துன்பத்தை சந்திக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.
வ.16: இந்த வரி இன்னும் ஆழமான உறவை நினைவூட்டுகிறது. ஆபிரகாம் இஸ்ராயேல் மக்களின் தந்தை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சரித்திரம். இதனை தாண்டுகிறார் ஆசிரியர், ஆபிரகாம் அல்ல கடவுள்தான் இஸ்ராயேலரின் தந்தை என்பதை அவர் அறிக்கையிடுகிறார். அது தங்களுக்கு தெரியும் என்றும் சொல்கிறார் (כִּי־אַתָּ֣ה אָבִ֔ינוּ כִּי אַבְרָהָם֙ לֹא கி-'அத்தாஹ் 'அவினூ கி 'அவ்ராஹாம் லோ'). அபிரகாமிற்கு தங்களை தெரியாது என்கிறார். அத்தோடு யாக்கோபையும் விசாரணைக்கு
இழுக்கிறார், அவர் தங்களை ஏற்றுக்கொள்ளார் என்கிறார் (יִשְׂרָאֵל לֹא יַכִּירנוּ யிஷ்ரா'எல் லோ' யகிரானூ).
இதற்கு மாறாக ஆண்டவர் தந்தை, ஏனெனில் அவர்தான் இவர்களை அறிந்திருக்கிறார், பண்டைய காலத்திலிருந்தே இவர்தான் மக்களின் மீட்பர். ஒரு வேளை இவர்கள் இறந்துவிட்டார்கள், கடவுள் ஒருவரே இறகாதவர் இதனால்தான் கடவுளை இப்படிச் சொல்கிறார் என எடுக்கலாம், (גֹּאֲלֵ֥נוּ கோ'அலெனூ - எம் மீட்பர்).
வ.17: இஸ்ராயேல் மக்களின் பாவங்களுக்கு கடவுள் காரணர் என்பது போல காட்டப்படுகிறார். குற்றச்சாட்டுக்கள் மறைமுகமாக கடவுளுக்கு எதிராக வைக்கப்டுகிறன. அந்த குற்றச்சாட்டுக்கள், கடவுளின் வழிகளிலிருந்து பிறழச் செய்தல் (מִדְּרָכֶ֔יךָ மிதெராகெகா- உம்வழிகளிலிருந்து), கடவுளுக்கு அஞ்சாதவாறு நெஞ்சங்களை கடினப்படுத்தல் போன்றவையாகும். நெஞ்சத்தைக் குறிக்க இதயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் (לִבֵּנוּ லிப்பேனூ- எங்கள் இதயம்). இந்த வரிகள் ஊடாக கடவுள் பாவத்திற்கு பொறுப்பாளர் என்பதைவிட அனைத்து செயற்பாடுகளும் கடவுளைக் கேட்டுத்தான் நடைபெறுகின்றன என்ற நம்பிக்கை காட்டப்டுகிறது.
இறுதியாக இஸ்ராயேல் மக்களை, ஆண்டவரின் உரிமைச் சொத்தை நோக்கி திரும்பி வரும்படியாக அழைக்கப்படுகிறார். ஆண்டவரின் உரிமைச் சொத்தின் கோத்திரங்கள் என்பது இஸ்ராயேல் மக்களுடைய ஒரு புராதனப் பெயர் (שִׁבְטֵי נַחֲלָתֶךָ ஷிவ்தே நாஹாலாதெகா).
வ.18: எருசலேம் தேவாலயத்தின் வரலாறு சொல்லப்படுகிறது. எருசலேம் தேவாலயம் ஆண்டவரின் திருத்தலம் (קָדְשֶׁךָ காத்ஷெகா-உம் திருத்தலம்). சிறிது காலம் மட்டுமே இஸ்ராயேலர் அதனை பாவித்தனர், அதிகமான காலம் அது அழிவடைந்த நிலையிலேயே இருந்திருக்கிறது (இப்போது தரைமட்டமாகிவிட்டது). அதனை அழித்தவர்கள் பகைவர்கள் என பெயரிடப்படுகின்றனர் (בּוֹסְסוּ போஸ்சூ- தரைமட்டமாக்கினர்).
வ.19: இன்னோர் உண்மை சொல்லப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் எதிரிகள் ஆட்சியில் இருந்தால் அவர்கள் கடவுளின் ஆட்சியில் இல்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். தங்களை கடவுள் மட்டும்தான் ஆளவேண்டும் என நினைத்தனர். கடவுளால் ஆளப்படுதல் என்பது, இவர்களுக்கு தனி அடையாளத்தை (பெயரைக்) கொடுத்தது. இவையனைத்தும் இப்போது இல்லை என்று வருந்தப்படுகிறது.
அதிகாரம் 64, வசனம் 1: வானம் மண்ணகத்தையும் விண்ணகத்தையும் பிரிக்கிறது என்று நம்பியபடியால் அதனை பிளந்து இறங்கி வரும்படியாக ஆண்டவரைக் கேட்கிறார் ஆசிரியர். இந்த வசனம் எபிரேய விவிலியத்தில் 63ம் அதிகாரத்தின் 19ம் வசனத்தின் இரண்டாவது பாகமாக உள்ளது. ஆங்கில விவிலியங்கள் இரண்டாவது வரியிலிருந்தே தொடங்குகின்றன.
வ.2: நெருப்பு முதல் ஏற்பாட்டில், ஆண்டவரின் பிரசன்னம். இது அனைத்து சமயங்கள் மற்றும் புராணங்களிலும் வௌ;வேறு விதமாக காணப்படுகிறது. சில சமய நம்பிக்கைகள் நெருப்பை ஒரு தனிக்கடவுளாக காண்கின்றன (இந்து சமயங்களிலும் இது காணக்கிடக்கிறது). விவிலியத்தில் கடவுளுக்கும் நெருப்பிற்கும் நெருங்கிய உறவு காட்டப்படுகிறது (אֵשׁ 'எஷ்- நெருப்பு).
ஆண்டவருடைய வருகை நெருப்பிற்கு ஒப்பிடப்படுகிறது. விறகு நெருப்பால் கொழுந்துவிட்டு எரிகின்றது. தண்ணீரும் நெருப்பால் கொதிக்கிறது. இந்த நெருப்பைப் போன்ற ஆண்டவரின் வருகை இஸ்ராயேலரின் பகைவருக்கு பயத்தை தரவேண்டும் என்கிறார் ஆசிரியர், பகைவரை குறிக்க புறவினத்தார் என்ற ஒரு ஒத்த கருத்துச் சொல்லும் பாவிக்கப்படுகிறது (גּוֹיִם கோயிம்- மக்களினங்கள்).
வ.3: மலைகள் மிகவும் உறுதியானவை, இதனால்தான் மலைகளை ஆண்டவருக்கு ஒப்பிடுகின்றனர் விவிலிய ஆசிரியர்கள். இவை மணற் குன்றுகள் அல்ல மாறாக வெண்பாறை மலைகள், மிக மிக உறுதியானவை. இஸ்ராயேல் நாட்டிற்கே தனித்துவமானவை. இந்த மலைகள் உருகுவது என்பது ஒரு உவமாணம். இதனைத்தான் ஆசிரியர் இங்கே காட்சிக்கு எடுக்கிறார். கடவுளால் மலைகளைக் கூட உருக்க முடியும் என்பது அவரின் பலத்தைக் காட்டுகிறது. இதனை அச்சம் தரும் செயல் என்கிறார். மலைகள் உருகி ஓடின என்பதை எபிரேய விவிலியம் மலைகள் அசைந்தன அல்லது நடுங்கின என்கிறது (הָרִים נָזֹֽלּוּ ஹாரிம் நாட்சோல்லூ).
வ.4: ஒரு கடவுள் வழிபாடு என்பது இஸ்ராயேலருடைய தனித்துவமான அடையாளமாக இருந்தாலும், அவர்களைச் சுற்றியிருந்தவர்களின் பலகடவுள் வழிபாடுகளின் தாக்கம் இஸ்ராயேலில்
இருக்கவில்லை என்று சொல்வதற்கில்லை. இதனால்தான் ஆசிரியர் வேறுயார் உண்மைக் கடவுளாக இருக்க முடியும் என்று கேட்கிறார்.
கடவுளுக்கு நிகராக வேறு பெயரை இஸ்ராயேலர்களின் முன்னோர்கள் கேள்வியுற்றதும்
இல்லை (לֹא־שָׁמְעוּ லோ'-ஷாம்'ஊ), செவுயுற்றதும் இல்லை (לֹא הֶאֱזִינוּ லோ' ஹெ'ஏட்சினூ), கண்ணால் பார்த்ததும் இல்லை (עַיִן לֹֽא־רָאָ֗תָה 'அயின் லோ'-ரா'ஆதாஹ்) என்கிறார் ஆசிரியர்.
வ.5: முன்னைய வரியில் கடவுளின் தண்டனையை மறைமுகமாக சாடிய ஆசிரியர், உண்மையில் கடவுளின் தண்டனையில் அர்த்தம் உள்ளது என்பதை புரியவைக்கிறார். இது இஸ்ராயேல் பக்தி இலக்கியங்களில் வரும், புலம்பல் வடிவங்களில் மிகவும் முக்கியமானது.
ஆண்டவர் மகிழ்ச்சியுடன் நேர்மையை கடைப்பிடிப்போருக்கும் (אֶת־שָׂשׂ וְעֹשֵׂה צֶ֔דֶק 'எத்-சாஸ் வெ'ஓசெஹ் ட்செதெக்), ஆண்டவரின் வழியை நினைவிற்கொள்வோருக்கும் (דְרָכֶיךָ יִזְכְּרוּךָ தெராகெகா யிட்ஸ்கெரூகா) துணை செய்ய வருகிறார். ஆனால் இந்த நல்ல ஆண்டவர் சினம் அடைந்துள்ளார் அதற்கான காரணம் சொல்லப்படுகிறது. மக்கள் பாவம் செய்தனர் (נֶּחֱטָא நெஹெடா') அத்தோடு அதனை நெடுங்காலமாக செய்துள்ளனர், இப்படியிருக்க எங்கனம் மீட்க்கப்படுவது என்கிறார்.
வ.6: தீட்டுப்பட்டவர்கள் என்பவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், அல்லது தொழுநோய் உடையவர்கள், சில வேளைகளில் மாதவிடாய் காலத்து பெண்கள் போன்றவர்களைக் குறிக்கலாம் (טָּמֵא֙ தாமெ'- தீட்டு). அத்தோடு செய்த நேரிய செயல்கள் கூட அழுக்கடைந்த ஆடைகளைப் போல உள்ளன என்று ஒப்பிடுகிறார்.
இலைபோல் கருகிப்போகிறோம் (וַנָּבֶל כֶּעָלֶה֙ כֻּלָּ֔נוּ வான்நாவெல் கெ'ஆலெஹ் கூல்லானூ) என்று தங்கள் துன்பங்களை ஒப்பிடுகிறார். இலை வயது வந்து விழுந்து கருகிப்போகின்றது.
இது இயற்கையான நியதி, இதனை துன்பங்கள் அல்லது பாவங்களுடன் ஆசிரியர் ஒப்பிடுவது அழகாக உள்ளது. தீச்செயல்கள் காற்றைப் போல வந்து, இலைகளான தங்களை அடித்துப் போகிறது என்று உருவகம் செய்கிறார்.
வ.7: மீண்டும் ஒருமுறை தன்னுடைய மனக்குமுறலை முறையீடாக முன்வைக்கிறார். ஆண்டவரைப் போற்றுபவர் எவரும் இல்லை எனச் சொல்லப்படுகிறது, இதனை எபிரேயத்தில் ஆசிரியர், உம் பெயரை அழைக்க எவரும் இல்லை என்கிறார் (וְאֵין־קוֹרֵא בְשִׁמְךָ֔ வெ'என்-கோரெ' வெஷிம்கா). ஆண்டவரை அழைக்க எவரும் இல்லை என்பது இஸ்ராயேலின் ஆன்மீகத்தில் மிகவும் ஆபத்தான கட்டம் என்பது போல காட்டப்படுகிறது. ஆண்டவரை பற்றிக்கொள்ள முயல்பவரும் எவரும் இல்லை என்கிறார், அதாவது இவர்கள் ஆண்டவரை விட வேறு எதனையோ பற்றிக்கொள்ள முயல்கிறார்கள் என்பதை இவர் சொல்கிறார் என்றும் எடுக்கலாம்.
இதற்கு காரணமாக கடவுளையும் காட்டுகிறார். ஆண்டவர் முகத்தை மறைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது (פָנֶ֙יךָ֙ பானெகா, உம்முகம்). இது ஆண்டவரின் பிரசன்னத்தைக் குறிக்கும். இதனால் மக்களை அவர்களின் தீச்செயலில் அழியவிட்டார் என்றும் கடவுள் குற்றம் சாட்டப்படுகிறார். இவை ஆசிரியரின் மனக்குமுறலால் வருகின்ற வரிகள்.
திருப்பாடல் 80
நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: 'சான்றுபகர் லீலிமலர்' என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)
1
1இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்!
3கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு
உமது முக ஒளியைக் காட்டியருளும்!
4படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
5கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்.
6எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள்
எம்மை ஏளனம் செய்தார்கள்.
7படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
8எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு
அதனை நட்டு வைத்தீர்.
9அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
10அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.
11அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும்ழூழூ பரவின.
12பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும்
அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன் வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.
14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக்காத்தருளும்!
16அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;
உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக!
17உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
19படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!
நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
இறைபராமரிப்பிற்க்கான வேண்டுதல் இந்த பாடலின் மையமாக இருக்கிறது. ஆண்டவரின் புன்முறுவலும் அவருடைய கோபமும் ஒப்பிடப்படுகிறது. ஆண்டவருடய இரக்கமும் ஆசீர்வதாமும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், அவருடைய வெறுப்பு மிகவும் ஆபத்தானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திருப்பாடல் ஒரு குழு புலம்பல் பாடல் என ஆசிரியர்களால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. எருசலேம் ஆலயத்தின் அழிவு இந்த பாடலின் பின்புலமாக இருந்திருக்கலாம். அதிகமான எபிரேய திருப்பாடல்களின் பண்புகளான திருப்பிக்கூறுதல் மற்றும் ஒத்த கருத்துச் சொற்கள் இங்கே அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளன.
வ.0: இந்த திருப்பாடலுக்கு ஒரு விசேடமான மெட்டு ஒன்று உள்ளதாக முன்னுரை காட்டுகிறது. இந்த மெட்டை שֹׁשַׁנִּים עֵדוּת ஷோஷானிம் 'எதூத் (சான்றுபகர் லில்லி மலர்) என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. அத்தோடு இந்த பாடல் ஆசாபின் பாடல் எனவும் பெயரிடப்பட்டுள்ளது (לְאָסָף מִזְמֽוֹר லெ'ஆசாப் மிட்ஸ்மோர்).
வ.1: கடவுள் இஸ்ராயேலின் ஆயரெனவும், மக்கள் மந்தைகள் எனவும் காட்டப்படுகிறார்கள். கடவுளை ஆயர் எனக் காட்டுவது மிகவும் பழமையானதும் இஸ்ராயேலுக்கே தனித்துவமானதுமான ஒரு அடையாளம் (רֹעֵ֤ה יִשְׂרָאֵל ரோ'எஹ் யிஷ்ரா'எல்). இஸ்ராயேலர்கள் அதிகமாக மந்தை வளர்ப்பவர்களாக இருந்த படியால் இந்த உருவகம் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இயேசுவும் தன்னை நல்ல ஆயன் எனவே காட்டுகிறார் என்பதை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும் (யோவான் 10,11 Εγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός. எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலொஸ்).
கடவுள் ஆயனாக இருக்கிறபடியால் நிச்சயமாக மக்கள் மந்தைகளாக இருக்கவேண்டும்.
இஸ்ராயேலைக் குறிக்க யோசேப்பு என்ற சொல் பாவிக்கப்படுகிறது (יוֹסֵף யோசெப்). வழமையாக இந்த சொல் வட நாடான இஸ்ராயேலைக் குறிப்பதாக அமைகிறது. இந்த பாடலின் ஆசிரியர் இந்த சொல்லை பாவிப்பதன் வாயிலாக, வடநாட்டிற்கும் தென்நாட்டிற்கும் இடையிலான உறவு மறக்கப்படாது என்பதை காட்டுகிறார் என எடுக்கலாம்.
அத்தோடு கடவுளை கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே என்று விழிக்கிறார். கெருபின்கள் כְּרוּבִים ஒருவகையான இறக்கைகள் உள்ள வானதூதர்கள் என நம்பப்படுகிறார்கள். அவர்கள் மனித மற்றும் விலங்குகளின் தன்மைகளை உடையவர்கள் என்றும் முதல் ஏற்பாட்டில் காட்டப்படுகிறார்கள் (எருது, கழுகு, சிங்கம்: எசேக்கியேல் 1,10: 10,14.21: 41,18).
வ.2: இந்த வரி வடநாடான இஸ்ராயேலை அவர்களின் பிரத்தியோக பெயர்களில் விழிக்கிறது (אֶפְרַיִם ׀ וּבִנְיָמִ֤ן וּמְנַשֶּׁה எப்ராயிம், பெஞ்சமின் மனாசே). எப்ராயிமும் மானாசேயும் யோசேப்பின் புதல்வர்கள். இவை வடநாடான இஸ்ராயேலின் மறுபெயர்கள். பெஞ்சமின் தென்நாட்டின் ஒரு கோத்திரம். பெஞ்சமினும் யூதாவும் சேர்ந்துதான் தென்நாடான யூதேயா உருவாகியது. இந்த வரியில் ஆசிரியர் வடநாட்டையும் தென்நாட்டையும் இணைத்து ஒரே தலைப்பில் விழிக்கிறார்.
இவர்கள் முன்னால் விழித்தெழச் சொல்கிறார் (עוֹרְרָה אֶת־גְּבֽוּרָתֶךָ 'ஓர்ராஹ் 'எத்-கெவூராதெகா). இதனை 'ஆற்றலை கிளர்ந்தெழச் செய்யும'; என்றும் மொழிபெயர்க்கலாம். இப்படிச் செய்து, தங்களை மீட்க வாரும் என்று அழைக்கிறார்.
வ.3: தம்மை தங்களது முன்னைய நிலைக்கு கொண்டுவரச் சொல்கிறார். இதன் மூலம் தற்போதைய நிலை ஆபத்தான நிலையாக இருப்பது தெரிகிறது. முன்னைய நிலை என்பது இஸ்ராயேல் மற்றும் யூதாவின் அரசாட்சி நாட்களைக் குறிக்கலாம்.
இதற்கு ஒத்த கருத்து வரியாக, எம்மை மீட்க உம்முடைய திருமுக ஒளியைக் காட்டியருளும் என்ற வரியும் பாவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவருடைய திருமுக ஒளி
(הָאֵ֥ר פָּ֝נֶ֗יךָ) இந்த இடத்தில் அவருடைய கரிசனை அல்லது அவரது இரக்கத்தைக் குறிக்கும்.
வ.4: ஆண்டவருடைய இன்னொரு முக்கியமான பெயர் பாவிக்கப்பட்டுள்ளது. கடவுளை, படைகளின் ஆண்டவர் என விழிப்பதும் இஸ்ராயேலரின் மிக முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. ஆண்டவரை சுற்றி எண்ணிலடங்கா வானதூதர் படையணிகள் இருப்பதாக நம்பப்படுவதால் அவர் படைகளின் ஆண்டவர் என அழைக்கப்படுகிறார் (יְהוָה אֱלֹהִים צְבָאוֹת அதோநாய் 'எலோகிம் ட்செவா'ஓத்).
எத்தனை காலம் சினம் கொள்வீர் என்று கடவுளை கேள்வி கேட்பதன் வாயிலாக, இன்னும் ஆண்டவரின் சினம் தணியவில்லை என்ற செய்தியை ஆசிரியர் சொல்கிறார்.
வ.5: கண்ணீர், துன்பத்தின் வெளிப்பாடாக கண்களில் இருந்து வருகிறது (דִּמְעָה திம்'அஹ் - கண்ணீர்). கண்ணீரை உணவிற்கு ஒப்பிடுவதன் வாயிலாக இஸ்ராயேலர் அதிகமான துன்பத்தையே நாளாந்த உணவாகக் கொண்டுள்ளார் என்பது புலப்படுகிறது. இது உணவாக மட்டுமல்ல, பெருமளவாகவும் பெருகுகின்றது. இந்த வரியில் ஆண்டவர்தாம் இதனை கொடு;ப்பவர் என்ற அர்த்தத்திலும் சொல்லப்படுகிறது. இதனை புலம்பல் சூழ்நிலையிலே பார்க்கவேண்டும். துன்பத்திற்கு யார் காரணம் என்பதிலும் விவிலியம் தெளிவான விடையைத் தருவதில்லை.
வ.6: இந்த வசனத்திலும் கடவுள்தான் காரணியாக பார்க்கப்படுகிறார். கடவுள் இஸ்ராயேலரை அண்டை நாட்டினருக்கு கையளித்ததாக சொல்லப்படுகிறார். இஸ்ராயேலர் அண்டை நாட்டினருக்கு சர்ச்சைப் பொருளாக மாறியிருக்கின்றனர் என்கிறார் (מָדוֹן மாதோன்). இந்த எபிரேய வார்த்தை எபிரேயர்கள் அண்டை நாட்டினரால் விரும்பப்படாதவராக இருக்கிறார் என்பது புலப்படுகிறது.
எதிரிகளின் ஏளனம் என்பது மிக வருத்தத்தைத் தரவல்லது, இதனை வீரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்ராயேலருடைய வீரத்திற்கு இது ஒரு முக்கியமான சவால். ஏளனத்தை குறிக்க 'அவர்கள் எங்களை நகைக்கிறார்கள்' (יִלְעֲגוּ־לָֽמוֹ யில்'அகூ- லாமோ) என்று எபிரேயம் வார்த்தைப் படுத்துகிறது.
வ.7: மூன்றாவது வரி மீண்டுமாக திருப்பிக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பாடல் பல்லவி வடிவில் பாடப்பட்ட பாடலாக இருக்கும் என்பது தெரிகிறது. இந்த வரியிலும் ஆண்டவர், படைகளின் ஆண்டவராக சொல்லப்படுகிறது (אֱלֹהִים צְבָאוֹת).
வ.8: இஸ்ராயேலரை திராட்சை செடிக்கு ஒப்பிடுவது விவிலியத்தில் அங்காங்கே காணப்படுகிறது.
இந்த வரியில் அது மிக அழகாக கையாளப்பட்டுள்ளது. இஸ்ராயேலர் திராட்சை செடியாகவும், அதுவும் அவர்கள் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது (גֶּפֶן מִמִּצְרַ֣יִם கெபென் மிம்மிட்ஸ்;ராயிம்). திராட்சை செடி, ஐரோப்பாவிலிருந்து அல்லது மத்திய தரைக்கடல் பிரதேசங்களிலிருந்தான் எகிப்திற்கு சென்றிருக்க வேண்டும். இங்கே இஸ்ராயேலுக்கு இந்த உருவகம் பாவிக்கப்டுவதால், இவர்கள் எகிப்திலிருந்து வந்தவர்கள் ஆகிறார்கள்.
இந்த திராட்சைசெடி, வேற்றினத்தாரை விரட்டிவிட்டு நாட்டப்படுகிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து கானான் நாட்டில் வேற்றினத்தார், இஸ்ராயேலருக்கு முன்பே வாழ்ந்தார்கள் என்பதும், அந்த உண்மை இஸ்ராயேலருக்கு தெரியும் என்பதும் புலப்படுகிறது.
வ.9: இந்த திராட்சை செடிக்கு கடவுள் நிலத்தைக் பண்படுத்தி கொடுக்க அது ஆழ வேரூன்றியது என்பது இந்த வரியில் சொல்லப்படுகிறது. இந்த வரி மூலமாக இஸ்ராயேலின் பழைய ஸ்திரமான அரசியல் மற்றும் பொருளாதார நிலை நினைவுகூறப்படுகிறது எனலாம். வேர் (שֹׁרֶשׁ ஷோரெஷ்), வளர்ச்சி மற்றும் விரிவாக்கலின் மிக முக்கியமான அடையாளம். இது இங்கே இஸ்ராயேலரின் முன்னால் பலத்தையும் விரிவாக்கலையும் குறிக்கிறது.
வ.10: காடுகள் மற்றும் தாவரவியல் அமைப்பை உதாரணமாக எடுத்து, முன்நாட்களில்
இஸ்ராயேலரின் வளர்ச்சி எப்படியிருந்தது என்பது காட்டப்படுகிறது. இந்த திராட்சை செடியின் நிழல் மலைகளை மூடுகிறதாக உருவகிக்கிறார். மலைகள் மிக பிரமாண்டமானவை. அவற்றின் நிழல்தான் வழமையாக நிலத்தை மூடும். இங்கே மலைகளையே திராட்சை செடியின் நிழல் மூடுகிறது என்பதன் வாயிலாக, திராட்சை செடி மலையைவிட பிரமாண்டமாக வளர்ந்தது என்பது சொல்லப்படுகிறது.
இதிலிருந்து இந்த ஆசிரியரின் கவித்திறமை நன்கு புலப்படுகிறது. כָּסּ֣וּ הָרִים צִלָּהּ காசூ ஹாரிம் ட்சில்லாஹ்- அதன் நிழல் மலைகளை மூடுகிறது.
கேதுரு மரங்கள் (אֶרֶז 'எரெட்ஸ்) அதன் பலத்திற்காக அறியப்படுகிறது. இந்த மரங்கள் வட இஸ்ராயேல் மற்றும் லெபனானில் அதிகமாக வளர்ந்தன. இஸ்ராயேலில் இது மிகவும் விலையுயர்ந்த நிலையிலேயே பெறப்பட்டது. திராட்சை செடியின் கிளைகள் கேதுருவுடன் ஒப்பிடப்பட முடியாதது. இருந்தும் அதனையும் ஒப்பிடுகிறது, இந்த ஆசிரியரின் கற்பனை வளம்.
வ.11: இஸ்ராயேல் இனம் எங்கெல்லாம் இருந்தது என்பதை இந்த வரி காட்டுகிறது. கிளைகள் என்பது இஸ்ராயேலின் நில அளவை அல்லது இஸ்ராயேலின் அரசியல் ஆதிக்கத்தைக் குறிக்கலாம் (קְצִירֶהָ கெட்சிரெஹா- அதன் கிளைகள்). இந்த வரியில் வருகின்ற கடல் என்னும் சொல் (יָם யாம்), மத்தியதரைக் கடலைக் குறிக்கும். இது இஸ்ராயேலின் மேற்கு எல்லை. ஆறு (נָהָ֗ר நாஹார்) என்பது யுப்பிரதீஸ் மற்றும் தைகிரிஸ் நதிகளைக் குறிக்கும். இது இஸ்ராயேலின் கிழக்கு எல்லை.
வ.12: இஸ்ராயேலின் வளர்ச்சியை கற்பனை வளத்துடன் விவரித்த ஆசிரியர், அதன் தற்போதைய நிலையை கேள்வியாக கேட்கிறார். இப்படியான இஸ்ராயேல் இப்பபோது மதில்கள் இன்றி, அதாவது எல்லைகள் இன்றி இருப்பதாகவும், அன்னியரின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும் காட்டப்படுகிறது (גָּדֵר காதெர்- சுவர்). திராட்சை செடியின் பழங்கள் என்பது இஸ்ராயேல் இளம் சந்ததியைக் குறிக்கலாம்
வ.13: காட்டுப் பன்றிகளும், வயல் வெளி மிருகங்களும் அந்நியர்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. இந்த வரியிலுள்ள சில வார்த்தைகள் விவிலியத்தில் இந்த இடத்தில் மட்டுமே தோன்றுகின்றன.
இஸ்ராயேலருக்கு பன்றிகள் விரும்பப்படாத விலங்கு, ஆனால் இங்கே காட்டுப்பன்றிகள் என்ற வார்த்தையே பாவிக்கப்படுவதால் அது அசுத்தமான விலங்கை குறிக்கிறதா என்பது புலப்படவில்லை (חֲזִיר ஹட்சிர்- பன்றி). வயல் வெளி மிருகங்கள் என்பதற்கு, வயல் வெளி பூச்சிகள் அல்லது ஊர்வன என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது, இந்த சொல் அரமேயிக்க, அக்காடிய அல்லது அராபிய சொல்லாக இருக்கலாம் என்றும் வாதிடப்படுகிறது (זִיז ட்சிட்ஸ்- ஊர்வன). திருப்பாடல்கள் வார்த்தைகள் எந்தளவிற்கு பழமையானவை என்பதற்கு இந்த சொல் நல்ல உதாரணம்.
வ.14: வேண்டுதல் முன்வைக்கப்படுகிறது. படைகளின் கடவுள் என்ற வார்த்தை மூன்றாவது முறையாக பாவிக்கப்படுகிறது (אֱלֹהִים צְבָאוֹת֮). ஆண்டவர் விண்ணுலகில் வாழ்கிறவர் என்பதும் இங்கே நினைவுகூறப்படுகிறது. இதனால்தான் விண்ணுலகில் இருந்து பார்க்கச் சொல்கிறார் ஆசிரியர். இந்த பார்வை என்பது, ஆண்டவருடைய இரக்கத்தை குறிக்கிறது என்பதும் காட்டப்படுகிறது.
வ.15: இஸ்ராயேல் இனம், கடவுளின் வலக்கை நட்ட திராட்சை செடி எனவும், அவர் வளர்த்த மகவு எனவும் இனிமையாக சொல்லப்படுகிறது (יְמִינֶךָ யெமிநெகா- உமது வலக்கை: בֵּ֗ן பென்- மகன்). இந்த இரண்டு சொற்களும் இஸ்ராயேலின் பிறப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இஸ்ராயேல் இனம் கடவுளால் மிகவும் நேசிக்கப்பட்ட இனம் என்பது இங்கே புலப்படுகிறது. வலது கையும், மகனும் என்ற சொற்கள் இதனைத்தான் குறிக்கின்றன.
வ.16: இது வரையும் துன்பத்தை கடவுள்தான் தந்தார் என புலம்பிய ஆசிரியர் இந்த வரியில் அந்த குற்றச்சாட்டை எதிரிகளின் மேல் போடுகிறார். இந்த எதிரிகள் திராட்சை செடியான இஸ்ராயேலுக்கு தீ மூட்டி வெட்டிச் சாய்த்துவிட்டார்கள் என்கிறார். இது எருசலேம் நகரின் அழிவைக் குறிப்பது போல உள்ளது. இதனை வைத்து பார்க்கின்றபோது, இந்த திருப்பாடல் நிச்சயமாக எருசலேம் அழிவிற்கு பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
அத்தோடு அவர்களுக்கு சாபமும் கொடுக்கப்படுகிறது. சாபம் கொடுத்தல் இஸ்ராயேல் புலம்பலின் ஒரு அங்கம். இது அழிவிற்கான சாபம் என்பதைவிட, ஒரு வகையான மனவுளைச்சல் தீர்வு என்றே நோக்கப்படவேண்டும்.
வ.17: எதிரிகளுக்கு சாபம் கொடுத்தவர், இஸ்ராயேலருக்கு ஆசீர் கேட்கிறார். இஸ்ராயேலர் இரண்டு வார்த்தைகளால் மெச்சப்படுகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு வலப்புறத்தில் இருப்பவர்கள், அத்தோடு அவர்கள் கடவுளுக்காகவே உறுதி செய்யப்பட்டவர்கள். இந்த வார்த்தைகள் இஸ்ராயேலரின் தெரிவை முக்கியத்துவம் செய்கிறது.
வ.18: புலம்பல் பாடல்கள் இறுதியில் நம்பிக்கை வரிகளைக் கொண்டிருப்பது வழமை. இந்த பாடலிலும் இந்த நம்பிக்கை வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இனி இவர்கள் பாவம் செய்யமாட்டார்கள் என்று ஆசிரியரால் உறுதிப்படுத்தப்படுகிறார். இதற்கு, இனி இவர்கள் 'அகலமாட்டார்கள்' (נָס֥וֹג מִמֶּךָּ நாசோக் மிம்மேகா) அத்தோடு 'உம் பெயரை தொழுவார்கள்'
(בְשִׁמְךָ֥ נִקְרָֽא வெஷிம்கா நிக்ரா') என்ற சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.
வ.19: நான்காவது தடவையாக கடவுள், படைகளின் ஆண்டவர் என விழிக்கப்டுகிறார். அத்தோடு முன்னைய நிலைக்கு தங்களை கொண்டுவருமாறு கேட்கிறார் ஆசிரியர்.
1கொரிந்தியர் 1,3-9
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். 4கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். 5ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். 6மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. 8நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.✠ 9கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
கொரிந்தியர் திருமுகம் பல வழிகளில் கிரேக்க கடிதங்களை ஒத்திருக்கிறது. அதன் ஒரு அங்கமாக இந்த கடிதம் வாழ்த்து, எழுதுபவர், எழுதப்படுபவர் போன்ற அம்சங்களை தாங்கியுள்ளது. அதிகமான பவுலுடைய திருமுகங்கள் இந்த அம்சங்களை கொண்டுள்ளன. இன்றைய வாசகத்திலும் இந்த தாக்கங்களைக் காணலாம்.
வ.3: வாழ்த்துச் செய்தி சொல்லப்படுகிறது. இந்த வாழ்த்தில் பவுல் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச படிப்பினைகளை போதிக்க முயல்கிறார். கடவுள் தந்தை எனப்படுகிறார் (θεοῦ πατρὸς ἡμῶν தியூ பட்ரொஸ் ஹேமோன்- எம் தந்தையாகிய கடவுள்). இயேசு ஆண்டவர் என வாhத்தையிடப்டுகிறார் (κυρίου Ἰησοῦ Χριστοῦ கூரியூ இயேசூ கிறிஸ்தூ- ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து). தூய ஆவியாரைப் பற்றி வார்த்தைகள் இன்னமும் சரியாக பாவனைக்கு வரவில்லை என எண்ணத்தோன்றுகிறது. தந்தை மற்றும் ஆண்டவரிடமிருந்து அருளும் அமைதியும் விரும்பப்படுகிறது, இந்த அருளும் அமைதியும் அக்கால திருச்சபைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கலாம் (χάρις καὶ εἰρήνη காரிஸ் காய் எய்ரேனே- அருளும் அமைதியும்).
அத்தோடு சேர்த்து இயேசுக் கிறிஸ்து அனைவருக்கும் ஆண்டவர் என்ற மறைபரப்பு விசுவாசக் கொள்கையை முன்னிருத்துகிறார் (இந்த வரி இரண்டாவது வசனத்தில்தான் கிரேக்க விவிலியத்தில் காணப்படுகிறது).
வ.4: ஒரு மறைபணியாளர் தன்னுடைய மக்களின் வளர்ச்சியைக் கண்டே கடவுளுக்கு நன்றி செலுத்துவார், அதனைத்தான் பவுலும் செய்கிறார். கொரிந்தியரின் வளர்ச்சி அதுவும் அவர்கள் ஆண்டவரின் வழியாக பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு அவர் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். கடவுளை தன் கடவுள் என்று அழைப்பது அவருடைய விசுவாச ஆழத்தைக் காட்டுகிறது (θεῷ μου தியூ மூ- என் கடவுளுக்கு).
வ.5: இந்த அருளை விளங்கப்படுத்துகிறார். அதாவது இவர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று (ἐν αὐτῷ என் அவுடோ), சொல்வன்மையும் (παντὶ λόγῳ பன்டி லொகோ), நிறையறிவும் (πάσῃ γνώσει பாசே குனோசெய்) பெற்று செல்வர்கள் ஆகிவிட்டார்கள் எனப் படுகிறார்கள். ஆரம்ப கால திருச்சபை அனைத்தையும் இழந்து, பல துன்பங்களை சந்தித்த வேளை, அவர்களை செல்வர்கள் என்று பவுல் சொல்வது உண்மையாக அவர்களுக்கு நம்பிக்கையையும் இதயத்திற்கு இதமாகவும்
இருந்திருக்கும்.
வ.6: கிறிஸ்துவைப் பற்றிய சான்றுக்கு கொரிந்தியர்கள் உறுதி கொடுக்கிறார்கள். இது கொரிந்தியர்கள் பெற்ற உச்சக்கட்ட சான்றிதழ் என்று கூடச் சொல்லலாம். கிறிஸ்துவைப் பற்றிய என்ன சான்றுகளை இவர்கள் உறுதிப்படுத்தினார்கள் என்ற சொல்லப்படவில்லை. அதிகமாக இது, அவர்களின் நம்பிக்கையைத்தான் குறிக்கிறது எனலாம்.
வ.7: கொரிந்தியர் திருமுகமும், ஆண்டவரின் வருகையைப் பற்றி பேசுகிறது. இக்காலத்தில் அனைத்து திருச்சபை தலைவர்களும் ஆண்டவரின் வருகை மிக அருகில் உள்ளது என்றே நம்பினார்கள். ஆண்டவருக்காக காத்திருக்கும் (ἀποκάλυψις அபொகாலுப்ஸ்சிஸ்- வெளிப்பாடு) எவருக்கும் எந்தவிதமான குறையும் இருக்காது என்கிறார் பவுல்.
வ.8: ஆண்டவர் வெளிப்படும் நாள் இங்கே நினைவு கூறப்படுகிறது (ἡμέρᾳ τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ ஹேமெரா டூ கூரியூ ஹேமோன் இயேசூ கிறிஸ்டூ). கொரிந்தியரின் விசவாசத்தைப் பொறுத்து அவர்கள் கிறிஸ்துவாலே உறுதிப்படுத்தப்படுவர் என்று நம்பிக்;கை கொடுக்கப்படுகின்றனர்.
வ.9: கடவுளை நம்பிக்கைக்குரியவர் என்கிறார் பவுல். இங்கே இந்த நம்பிக்கையை, கடவுள் ஏமாற்றாதவர் என்ற சிந்தனையில் பார்க்கவேண்டும் (πιστὸς ὁ θεός பிஸ்டொஸ் ஹொ தியோஸ்). இயேசு, கடவுளின் மகனும் நம்முடைய ஆண்டவரும் என்ற சிந்தனை மீண்டும் வருகிறது. இந்த மகனும், ஆண்டவருமானவரின் நட்புறவில் கொரிந்தியருக்கு பங்கு கிடைக்கிறது (κοινωνία கொய்னோனியா- நட்புறவு, அன்புறவு).
மார்கு 13,33-37
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36-44)
32'ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது. 33கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. 34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.✠ 35அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. 36அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. 37நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.
மாற்கு நற்செய்தி காலத்தால் மிகவும் முந்தியது என அறியப்படுகிறது. மற்றைய மூன்று நற்செய்திகளும் மாற்கு நற்செய்தியைத்தான் தங்களுடைய மிக முக்கியமான மூலமாக கொண்டிருந்தார்கள் எனவும் இதுவரை நம்பப்படுகிறது. மாற்குவின் கிரேக்க மொழி மிகவும் வித்தியாசமாக உள்ளது. மாற்குவின் உரை நடை மற்றும் மொழி நடை சுருக்கமானவையாக உள்ளன. மாற்கு நற்செய்தி அதிகாரம் மற்றும் வார்த்தை எண்ணிக்கையிலும் மிக சிறியதாக அமைந்துள்ளது. இன்றைய பகுதி, மாற்கு நற்செய்தியில் ஆண்டவர் தன்னுடைய இரண்டாம் வருகையைப் பற்றி பேசும் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. மானிட மகன் பற்றிய அறிவு யூத மக்களுக்கு மிகவும் அதிகமாகவே தெரிந்திருக்க வேண்டும். இந்த மானிட மகன் என்ற பதம் பல அர்த்தங்களையும் கொடுத்திருக்க வேண்டும். ஆண்டவரின் இரண்டாம் வருகையிலே மானிட மகன் என்ற சொல் வருகின்றபோது அது மெசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றித்தான் பேசுகிறது என்று எடுக்கலாம் (ஒப்பிடுக மத்தேயு 24,36-44).
வ.32: இந்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள நாளும் வேளையும், மானிட மகனின் நாளும் வேளையும் என முன் வரிகளின் மூலம் அறிந்துகொள்ளலாம் (ἡμέρα ஹேமெரா, ὥρα ஹோரா). நாளும் வேளையும் கிரேக்க மொழியில் பல அர்த்தங்களைக் தரவல்லது. இதனைப் பற்றியே பல மெய்யியல்கள் இருந்திருக்கின்றன. வானசாஸ்திர அறிவியலும் நாட்கள் நேரங்களைப் பற்றி இருந்திருக்கின்றன. தமிழர்களும் முற்காலத்தில் நாட்களையும், நேரங்களையும் கணிப்பதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். சமயங்களின் வருகையின் பின்னர் இந்த அறிவியல், சாஸ்திரங்களாக வெறுமனே மாறிவிட்டன.
மாற்குவில் இயேசு இந்த நாட்களையும் மற்றும் நேரங்களையும் பற்றி கடவுளைத்தவிர யாருக்கும் தெரியாது என்கிறார். தெரியாதவர்களின் மகனையும், வானதூதர்களையும் அடக்குகிறார். இந்த வரியில் இந்த பிரிவைப் பற்றி பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன (ὁ υἱός ஹொ ஹுய்யோஸ்). இந்த வரி மகனின் கடவுள் தன்மைக்கு பாதமாக இருக்கிறது என்று சிலர் அக்காலத்திலேயே வாதாட தொடங்கிவிட்டனர். இருப்பினும் மகனுக்கு தன்னுடைய இரண்டாவது வருகையைப் பற்றி அதிகமான கவலை இல்லை என்பதே இந்த வரியில் நோக்கப்பட வேண்டும் என்பது ஒரு பலமான வாதம். எப்படி கடவுளாக இயேசுவால் தன்னுடைய நேரத்தை அறிய முடியாமல் இருக்கும்? இதுதான் மிக முக்கியமான வாதமாக வருகிறது. இதனைப் போல வேறு சில இடங்களிலும் இயேசு தனக்கு தெரியாது என்று சொல்கிறார். லூக்கா இயேசு ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்தார் என்கிறார், எப்படி கடவுளால் ஞானத்தில் வளர முடியும், அவர்தானே ஞானம் (காண்க லூக்கா 2,52). இதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. மிக முக்கியமான அர்த்தமாக, இயேசு கடவுளாகவும் மனிதராகவும் இருந்தபடியால், தன்னை உண்மையான மனிதராக காட்ட மனித அறிவின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையும் காட்டப்படுகிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அல்லது இயேசு இதனை மறைபொருளாகச் சொல்லியிருப்பார் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
வ.33: மானிட மகனுக்கே இதனை தெரியாது இருக்கும் போது மனிதர்கள் எம்மாத்திரம். எனவே அவர்கள் கவனமாகவும் (Βλέπετε பிலெபெடெ), விழிப்பாகவும் (ἀγρυπνεῖτε அகுருப்னெய்டெ)
இருக்கக் கேட்கப்படுகிறார்கள். இங்கே நேரத்தைக் குறிக்க கய்ரோஸ் (καιρός) என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இந்த கைரோஸ் கடிகார நேரத்தைக் குறிக்காது, மாறாக தக்க காலத்தையே குறிக்கும். இதனை அறிந்திருப்பவர் கடவுள் ஒருவரே என்பது மாற்குவின் வாதம்.
வ.34: மத்தேயுவும் லூக்காவும் பல வரிகளில் உவமைகளாக சொன்னதை மாற்கு ஒரே வரியில் சொல்லிவிட்டார் (காண்க மத் 24,45-51: லூக் 12,35-48). பணியாளர்கள் என்பவர் அதிகமாக அடிமைகளையே கிரேக்க மொழியில் குறிக்கிறார்கள் (δοῦλος தூலொஸ்). இந்த அடிமைகள் செல்வரின் வீட்டில் பணியாளர்கள் என்பதையும் தாண்டி, பிள்ளைகளாகவே கருதப்பட்டார்கள் எனலாம். சில பணியாளர்கள் சொந்த பிள்ளைகளையும் தாண்டி, முதலாளியின் முக்கியமான அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள். நம்பிக்கைக்குரிய பணியாளர்களிடம் வீட்டின் அனைத்து பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டன. சில வேளைகளில் இவர்களின் நேர்மையான நிர்வாகத்தின் பொருட்டு இந்த அடிமைகளுக்கு சுதந்திரமும் வழங்கப்பட்டது.
நெடும் பயணங்கள் அக்காலத்தில் சிலவேளைகளில் ஆண்டுகளாகவும் இருந்தன.
இதனால்தான் வீட்டு உரிமையாளர் அனைத்து பொறுப்புகளையும் அந்த அந்த அடிமைகளுக்கே பொறுப்புக் கொடுத்துவிடுகிறார். கிரேக்க மொழி நெடும் பயணங்களை 'பயணம்' என்றே குறிப்பிடுகிறது (ἀπόδημος அபொதேமொஸ்). வீட்டினுள் வேலை பார்த்த அடிமைகளுக்கு மட்டுமல்ல காவல் காத்தவர்களுக்கும் கட்டளை கொடுக்கப்படுகிறது. அவர்கள் விழிப்பாய் இருக்கும் படி கேட்கப்படுகிறார்கள்.
அடிமைகளை வைத்து, வாழ்க்கை நடாத்திய அக்கால கிரேக்க-உரோமைய சமுதாயத்தில் தவறு செய்யும் அடிமைகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. ('தவறு' என்பதும் உரிமையாளர்களாலே உருவாக்கப்பட்டன).
வ.35: இந்த வாழ்க்கை முறையை இயேசு ஆதரித்தார் என்று சொல்வதற்கில்லை. மாறாக இதனை உதாரணமாக எடுத்து தன் சீடர்களும் இப்படியாக விழிப்பாய் இருக்கவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார். வீட்டுத் தலைவர் மாலையிலோ (ὀψὲ ஒப்சே), நள்ளிரவிலோ (μεσονύκτιον மெசொநுக்டியோன்), சேவல் கூவும் வேளையிலோ (ἀλεκτοροφωνία அலெக்டொரொபோனியா) அல்லது காலையிலோ (πρωΐ புரோய்) வரலாம்.
தொடர்பு சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் இது நிதர்சனமாக இருந்தது. அதேவேளை நோட்டம் பார்க்கவும், சில வேளைகளில் வீட்டு உரிமையாளர்கள் தெரியாமல் வீட்டிற்குள் வந்தனர்.
வ.36: வீட்டு உரிமையாளர்கள், தங்கள் பணியாளர்கள் தூங்குவதை காணக்கூடாது. (இன்று இது கேள்விக் குறியே அதிகமானவர்கள் தூங்குகிறவர்களாகவே இருக்கிறார்கள்). பணியாளர்கள் தூங்குவது, மிகவும் தண்டனைக்குரிய குற்றம். அவர்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களை இவர்களின் தூக்கம் ஆபத்தில் தள்ளுகிறது, போன்ற காரணங்கள் இதற்கு பின்னால் இருக்கின்றன.
இதனால் தூங்குகிறவர்கள் நிச்சயமாக தண்டனை பெறுவார்கள்.
வ.37: முடிவாக இதனையே அனைவருக்கும் சொல்கிறார் ஆண்டவர், அதாவது விழிப்பாக இருக்கும் படி சொல்கிறார் (γρηγορεῖτε கிரேகொரெய்டெ). விழிப்பாய்யிருத்தல் என்பது அவதானமாய் இருத்தல் என்பதையும் குறிக்கும்.
ஆரம்ப கால திருச்சபையில், ஆண்டவரின் உயிர்ப்பின் பின்னர் நாட்கள் செல்லச் செல்ல, சீடர்கள் நம்பிக்கையில் தளர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதாவது ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றிய சில தவறான சிந்தனைகள் இருந்து, மக்களின் நம்பிக்கையை தளரச் செய்திருக்கலாம். இவர்களுக்கு இந்த எச்சரிக்கை மிகவும் அர்த்தம் உள்ளதாக அமைகிறது.
ஆண்டவர் நேரங்களையும், காலங்களையும் கடந்தவர்,
ஆண்டவர் தன் மக்களை விழிப்பாய் இருக்கும் படி கேட்கிறார்.
அவதானக் குறைவே அதிகமான எதிர் விளைவுகளுக்கு காரணமாகிறது.
கிறிஸ்தவர்கள் விழிப்பாக இருக்கவேண்டியவர்கள்.
தூக்கத்திலும் விழிப்பாய் இருக்கலாம்,
விழித்தருந்தும், அவதானமில்லாமல் இருக்கலாம்,
இரண்டாவது ஆபத்தானது.
ஆண்டவரே விழிப்பாய் இருக்க கற்றுத்தாரும், ஆமென்.
மக்களின் விடிவிற்காய் தங்களின் உயிர்களை தியாகம் செய்த
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
சமர்ப்பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக