திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (ஆ)
24,12,2017
ஞாயிறு வாசக விளக்கவுரை
(A Commentary on the Sunday Readings)
(தலைப்பு - அமைதி)
மி. ஜெகன்குமார் அமதி,
வசந்தகம்-யாழ்ப்பாணம்.
புதன், 20 டிசம்பர், 2017
முதலாம் வாசகம்: 2சாமுவேல் 7,1-5.8-12.14-16
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 89
இரண்டாம் வாசகம்: உரோமையர் 16,25-27
நற்செய்தி: லூக்கா 1,26-38
2சாமுவேல் 7,1-5.8-12.14-16
1அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். 2அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, 'பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது' என்று கூறினார்.
3அதற்கு நாத்தான், நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று அரசரிடம் சொன்னார்.
4அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: 5'நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: 'நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா?
8எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். 9நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். 10-11எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். 12உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.
13எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 14நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். 15உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல, என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். 16என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!'
2சாமுவேல் புத்தகம், 1சாமுவேல் புத்தகத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. தாவீது இஸ்ராயேல் மக்களின் மனங்களிலும், வரலாற்றிலும் நிவர்த்தி செய்யப்படமுடியாத ஒரு அரசர். தாவீது பிறகாலத்தில் ஒரு மனிதர் என்பதையும் தாண்டி, அவர்களின் அடையாளமாகவே மாறிவிட்டார். வரலாற்றுப் புத்தகங்கள் தாவீதை வௌ;வேறு கோணத்தில் காட்ட முயல்கின்றன. பழைய எபிரேய பாடங்கள் சாமுவேல் புத்தகங்களை ஒரே அலகாகவே கண்டது. பழைய கிரேக்க விவிலியம் ஒன்று சாமுவேல் புத்தகங்களையும் அரசர்கள் புத்தகங்களையும் ஒரே வரலாற்றுப் புத்தகங்களாவே எடுத்துக்கொண்டது. சில ஆரம்ப கால இலத்தின் விவிலியங்களும் இந்த முறையையே கையாண்டன. 16ம் நூற்றாண்டில் இருந்துதான் அரசர்கள் புத்தகங்களும் நான்கு புத்தகங்களாக பிரிக்கப்பட்டன. சாமுவேல் புத்தகங்களை ஆய்வு செய்கிறவர்கள், பல முக்கியமான சவால்களை சந்திக்கின்றனர். பாடங்கள் (மூல வரைவுகள்), இலக்கிய அமைப்புக்கள், மற்றும் வராலாறுகள் போன்றவை முக்கியமான கேள்விகளாக சாமுவேல் புத்தகத்தில் தோன்றுகின்றன.
சாமுவேல் என்கின்ற மனிதர் இந்த புத்தகத்தின் முக்கியமான பாத்திரமாக
இருந்தாலும், அவர்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியராக இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அவருடைய மரணம் இந்த புத்தகத்தின் தொடக்கத்திலேயே பதியப்பட்டுள்ளது (காண்க 1சாமு.25,1). இதன் ஆசிரியர் சாலமோனின் காலத்தவராகவே
இருக்கவேண்டும். இவருக்கு இஸ்ராயேல் அரசு வட அரசாகவும், தென்னரசாகவும் பிரிந்தது நன்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் பபிலோனிய இடப்பெயர்வுக்கு பிந்திய ஒருவர்தான் இதன்
ஆசிரியராக இருக்கவேண்டும் என்ற வாதமும் இருக்கிறது.
இந்த புத்தகம் ஒரு வரலாற்று புத்தகத்தின் சாயலாக இருக்கின்ற படியால் இதனை மற்றைய வரலாற்று புத்தகங்களான, யோசுவா, நீதிபதிகள், 1-2 அரசர்கள் போன்ற புத்தகங்களுடன் ஒப்பிட்டு வாசிப்பது நலமாகும். இருப்பினும் விவிலிய வரலாற்று புத்தகங்கள் வெறுமனே வரலாற்றை தருகின்ற புத்தகங்கள் அல்ல, அவை விசுவாசத்தையும் வரலாற்றில் கடவுள் எங்கனம் செயலாற்றுகிறார் என்பதையும் தருகின்ற புத்தகங்கள். வரலாற்றிலே கானான் தேசத்தில் குடியிருந்த காலம் தொடக்கம், வெற்றி, தோல்வி, அரசாட்சி, அடிமைவாழ்வு, மீள்வருகை போன்றவை மிக முக்கியமானவை. இதனை இஸ்ராயேலின் பிள்ளைகள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதனைத்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியரும் தன்னுடைய நோக்கமாகக் கொண்டுள்ளார். வரலாற்றின் நாயகன் சவுலோ, தாவீதோ அல்லது சாலமோனோ அல்ல மாறாக கடவுள்தான் வரலாற்றின் நாயகன் அவர்தான் வரலாற்றை தீர்மானிக்கிறார் என்பது இவர் நம்பிக்கை. கடவுளை நம்புகிறவர்கள் பாவம் செய்தாலும் மன்னிக்கப்படுகிறார்கள், கடவுளை நம்பாதவர்கள் பாவத்திலே இல்லாமல் போகிறார்கள் என்பதையும் இந்த புத்தகம் செய்தியாகக் கொண்டுள்ளது. அரசாட்சி உன்மையிலே இஸ்ராயேலுக்கு நலமானதல்ல, மெசியாதான் உன்மையாக அரசர் என்பதையும் தூரநோக்கோடு இந்த புத்தகம் காண்கிறது.
இஸ்ராயேலின் இரண்டு மிக முக்கியமான அரசர்களான சவுலும் தாவீதும், சாமுவேல் புத்தகத்தின் முக்கியமான பாத்திரங்கள். தாவீது மிக முக்கியமான தலைவர், இருப்பினும் அவர் வாழ்விலும், துன்பங்களும் சாவால்களும் நிறைந்திருந்தன என்பதையும் இந்த புத்தகம் காட்டுகிறது. வரலாற்றில் பாவம் செய்கிறவர்கள் திருந்தினால் மன்னிப்பு பெற்றார்கள், அதனைப் போலவே தற்காலத்திலும் மனமாறினால் அனைத்து இஸ்ராயேல் மக்களும் நலமடைவார்கள் என்பதையும் ஆசிரியர் வலியுறுத்துகிறார். மனமாற்றம் என்பது இங்கே கடவுளில் நம்பிக்கை வைத்தலைக் குறிக்கிறது.
2சாமுவேலின் ஏழாவது அதிகாரம், தாவீது ஆண்டவருக்கு ஆலயம் கட்ட முயலும் வரலாற்றைக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தை கட்டியவர் சாலமோன் அரசர், தாவீது அதனைக் கட்ட முயன்றார், அதற்காக பல அர்ப்பணிப்புக்களையும் செய்தார். இருப்பினும் அவரால் ஆலயத்தைக் கட்ட முடியவில்லை அதற்கான காரணத்தை இந்த அதிகாரம் காட்டுகிறது. நாத்தான் என்கின்ற நபர் தாவீதோடு தொடர்புடையவர். தாவீதிற்கு பெத்செபா வாயிலாக பிறந்த பிள்ளைகளில் நாத்தான் என்ற மகன் ஒருவரும் இருந்திருக்கிறார் (காண்க 2சாமு 5,14: 1குறிப் 3,5: 14,4). இவர்தான் இறைவாக்கினர் நாத்தான் என்ற நம்பிக்கை ஒன்றும் இருக்கிறது. இவர் சாலமோனின் சகோதரராக இருக்கவேண்டும். லூக்கா ஆண்டவரின் பரம்பரை அட்டவணைக்கு, சாலமோனை தவிர்த்து இவரைத்தான் ஆண்டவரின் மூதாதையாக எடுக்கிறார் (காண்க லூக் 3,31).
தாவீதின் அரசாட்சியிலே அவருக்கு உறுதுணையாக வரும் இறைவாக்கினர் நாத்தான் தாவீது குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். மிக முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் இவர் தாவீதிற்கு அருகில் இருந்திருக்கிறார். அதேவேளை தாவீது தவறு விடுகின்றபோதும்
இவர்தான் முதல் ஆளாக தாவீதை எச்சரித்தவர் (காண்க 2சாமு 12). முதல் முதலாவதாக 2சாமுவேல் 7ம் அதிகாரத்தில் நாம் இவரை சந்திக்கின்றோம். இவர்தான் சாலமோனை உடனடியாக அரசராக்க வேண்டும் என்று தாவீதை தூண்டியவர் (காண்க 1அரசர் 1,5-10).
வ.1: தாவீதின் அரசாட்சியை விவரிக்கிறார் ஆசிரியர். தாவீது எருசலேமிற்குள் குடியேறிய பின்னர், அவருடைய எதிரிகள் மீது அதிகாரம் உள்ளவராகவே காணப்பட்டார். சவுல் தன்னுடைய காலத்தில் எப்போதுமே எதிரிகளின் தாக்கத்திற்கு உட்பட்டவராகவே இருந்தார். இந்த முதலாவது வரி தாவீதிற்கும் சவுலுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்டுகிறது. தாவீதின் இந்த அமைதியான அரசாட்சிக்கு காரணம் அவர் அல்ல மாறாக கடவுள் என்பதையும் காட்டுகிறார் ஆசிரியர்
(וַיהוָה הֵנִיחַ־לוֹ வாயாதோனாய் ஹெனிஹா-லோ: கடவுள் அருக்கு அமைதியை அளித்தார்).
வ.2: தாவீது நாத்தானை அழைக்கிறார் (וַיֹּאמֶר הַמֶּלֶךְ אֶל־נָתָן வாய்யோமெர் ஹம்மெலெக் 'எல்-நாதான்). இங்கணம் இறைவாக்கினர்கள் அரசர்களின் அழைப்பிற்கு செவிகொடுத்தனர் என்பது புலப்படுகிறது. எருசலேமில் குடிபுகுந்த தாவீது அரசர், ஆரம்ப காலங்களிலேயே கேதுரு மரங்களால் ஆன இல்லத்தில் வாழ்ந்திருக்கிறார் (אֲרָזִים 'அராட்சிம் கேதுரு மரங்கள்). கேதுரு மரம் இஸ்ராயேலின் மிகவும் விலையுயர்ந்த மரமாக கருதப்பட்டது. இது அதிகமாக லெபனான் மலைக் காடுகளிலேயே வளர்ந்தது. 90அடிகள் உயரம் வரை வளரக்கூடிய இந்த மரங்கள் 3000 ஆண்டுகள் கூட வாழக்கூடியது என்று நம்பப்படுகிறது. இந்த மரங்கள் இயற்கையாகவே ஒரு வகை நறுமணத்தை தந்தது, அத்தோடு பூச்சிகளையும் விரட்டக்கூடியது. சாலமோன் எருசலேம் தேவாலயத்தைக் கட்ட இந்த மரங்களை அதிகமாக பெற்றுக்கொண்டார் (காண்க 1அரசர் 5). இதனைவிட பல இடங்களில் வலிமையின் அடையாளமாக கேதுரு மரம் பார்க்கப்பட்டிருக்கிறது (காண்க ஆமோஸ் 2,9). தூய்மைச் சடங்கிற்கும் கேதுரு மரப்பட்டைகள் பயன்பட்டிருக்கின்றன (காண்க லேவியர் 14).
இப்படியான உயர்தர மரமான கேதுரு மரத்திலாலான இல்லத்தில் தான் இருக்க, கடவுளின் பேழை கூடாரத்தில் இருப்பது தாவீதிற்கு துன்பத்தைக் கொடுக்கிறது. கூடாரம், பயணம் செய்வோரின் இல்லம். நாடோடிகள் கூடாரத்தில் வசித்தார்கள். அதிகமான பாலை நில மக்களும் கூடாரத்தில் வசித்தார்கள் (יְרִיעָה யெரி'அஹ்-கூடாரம்).
வ.3: கடவுளுக்கும் தாவீதிற்கும் இடையிலான உறவை நன்கு அறிந்திருந்த படியால்தான்
இறைவாக்கினர் நாத்தான், கடவுளின் வாக்கை அறிவதற்கு முன்பே தாவீதிற்கு முழு அதிகாரத்தையும் கொடுக்கிறார். அத்தோடு கடவுள் தாவீதோடு இருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்துகிறார் (כִּי יְהוָה עִמָּךְ கி அதோனாய் 'இம்மாக்- ஏனெனில் கடவுள் உம்மோடு).
வ.4: அன்று இரவு கடவுளின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. இரவில் அதாவது கனவில் ஆண்டவரின் வார்த்தை அதிகமாக அருளப்பட்டது என்பது விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (בַּלַּיְלָה பால்லாய்லாஹ்- அந்த இரவில்).
வ.5: கடவுள் நாத்தானிடம் கேள்வி ஒன்று கேட்கிறார். அந்த கேள்வியில் தாவீதை தன் ஊழியர் என்று அழைக்கிறார். இந்த வார்த்தை கடவுளுக்கும் தாவீதிற்கும் இருந்த நெருங்கிய உறவைக் குறிக்கிறது (אֶל־עַבְדִּי 'எல்-'அவ்தி என் பணியாளனுக்கு). தான் தங்குவதற்காக கோவில் கட்டப்போகிறாரா என்ற கேள்வியையும் கடவுள் கேட்கிறார். இந்த வரியில் கோவில் என்ற அர்த்தத்திற்கு 'இல்லம்' என்ற சொல்தான் எபிரேயத்தில் பயன்படுத்தப்பட்டுள்து (בַּיִת பாயித்- இல்லம், வீடு).
அதேவேளை தாவீது தன் உள்ளத்தில் நினைத்தது கடவுளுக்கு நன்கு தெரியவருகிறது. ஆக கடவுள் மனிதர்களின் உள்ளத்து சிந்தனைகளையும் நன்கு அறிந்திருக்கிறார் என்பதும் புலப்படுகிறது.
வவ.6-7: கடவுள் தான் ஆலயத்தில் அடக்கப்படமுடியாதவர் என்பதைக் காட்டுகிறார். இல்லதில் அல்ல மாறாக கூடாரம்தான் தன் இல்லமாக இருந்திருக்கிறது என்பதையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். அதேவேளை கடவுள் தன்கென்று எந்த ஆலயத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். இப்படியாக ஆலயம் அமைத்தது முழுக்க முழுக்க மனிதர்களின் விருப்பம், அது கடவுளுடையது அல்ல என்பதும் சொல்லப்படுகிறது. (வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே தன் கூடாரத்தை அடித்தார் என்ற யோவானின் நற்செய்தி இங்கே நோக்கப்பட வேண்டும் (காணக் யோவான் 1,14).
வ.8: கடவுள் தாவீதை அவருடைய ஊழியனாக ஏற்றுக்கொள்கிறார் (עַבְדִּי 'அவ்தி- என் ஊழியன்). தன்னை படைகளின் ஆண்டவர் என்று அறிக்கையிடுகிறார். விவிலியத்தில் ஆசிரியர் கடவுளை படைகளின் ஆண்டவர் என அழைக்கின்றவேளை, இங்கே கடவுளே தன்னை படைகளின் ஆண்டவர் என அழைக்கிறார் (יְהוָה צְבָא֔וֹת அதோனாய் ட்செபா'ஓத்- படைகளின் ஆண்டவர்). தாவீது புல்வெளியில் மந்தைகளின் ஆயனாக இருந்ததையும், அவரைத்தான் தன் மக்களை மேய்க்க அழைத்ததையும் தான் மற்க்கவில்லை என்பதை தாவீதிற்கு நினைவூட்டச் சொல்கிறார்.
வ.9: கடவுள் தான் தாவீதிற்கு செய்ததை நினைவூட்டச் சொல்கிறார். கடவுள் தாவீதோடு
இருந்தார். அவர் கண்முன்னே தாவீதின் எதிரிகளை எல்லாம் அழித்தார். அத்தோடு உலகில் வாழும் பெரும் மனிதர்கள் முன் தாவீதிற்கு பெருமையையும் கடவுள் கொடுத்தார்.
இந்த வரிகள் தாவீதிற்கு தான் யார் என்பதையும், அவருக்காக கடவுள் என்னவெல்லாம் செய்தார் என்பதையும் நிச்சயமாக நினைவூட்டியிருக்கும். அத்தோடு வாசகர்களுக்கும், தாவீதின் மாட்சிமையும், இவர் போர் வெற்றிகளும் கடவுளால்தான் ஏற்பட்டவை என்பதையும் சொல்கிறது.
வவ.10-11: தாவீதோடு சேர்த்து இஸ்ராயேல் முழு இனமும் ஆசீர்வதிக்கப்படுகிறது.
இஸ்ராயேல் மக்கள் தாவீதின் காலத்தில் நிலையான இடத்தில் வாழ்ந்தார்கள். இருப்பினும் நிலையான இடத்தைக் கொடுத்தது தாவீதின் அரசாட்சியல்ல, மாறாக கடவுள் என்பது வாசகர்களுக்கு சொல்லப்படுகிறது. நிலையான இடத்தில் மக்கள் நிலைத்து வாழ்கிறார்கள். நீதித்தலைவர்களுடைய (שֹֽׁפְטִים֙ ஷோப்திம்- நீதித்தலைவர்கள்) காலத்தில் இஸ்ராயேல் மக்கள் பல விதமான துன்பங்களை எதிரிகளால் சந்தித்தார்கள். அதனைப்போல இனி இவர்கள்
இருக்கமாட்டார்கள்.
அனைவரின் தொல்லைகளினின்றும் கடவுள் இவர்களை காப்பாற்றுவதாக வாக்களிக்கிறார். தாவீது கடவுளுக்கு வீட்டைக் கட்ட முயல்கின்ற வேளை, கடவுள் தாவீதின் வீட்டை உறுதிப்படுத்துகிறார். தாவீது நினைத்தது கற்களினால் ஆலயம் ஒன்றைக் கட்ட, ஆனால் கடவுள் உறுதியளிப்பது தாவீதின் வம்சத்தை.
வ.12: இந்த வரி மிகவும் முக்கியமான வரி. இந்த வரியின் படி கடவுள் தாவீதின் வாரிசை அழிக்க முடியாத, நிலையான அரசிற்கு அதிபதியாக்குகிறார். ஆனால் வரலாற்றில் தாவீதின் அரசு சிதைந்து அழிந்து போனது. அவருடைய வாரிசுகள் சிறைக்கைதிகளாகச் சென்று காணாமல் போயினார். இந்த வேளையில் கடவுள் இப்படிச் சொல்வது, வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது எனலாம். அதாவது மெசியாவைப் பற்றியது இது என்று சிலர் இதனை எடுக்கின்றனர். ஆனால் சூழலியலில் இது நேரடியாக சாலமோன் மன்னனையே குறிக்கிறது. சாலமோன் மன்னனின் அரசு, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அமைதியான நிலையிலும், இராஜ தந்திர ரீதியில் வலுவான அரசாகவும் காணப்பட்டது.
வ.13: எருசலேம் தேவாலயத்தை சாலமோன் மன்னர்தான் கட்டுவார் என்பது சொல்லப்படுகிறது. இந்த தேவாலயம், கடவுளின் பெயருக்காக கட்டப்பட்டது என்பதும் நினைவுகூறப்படுகிறது. சாலமோனின் அரசைத் தான் என்னென்றும் நிலைநாட்டுவதாகச் சொல்கிறார்.
சாலமோனின் காலத்திற்கு பின், அவருடைய அரசு பலவிதமான சவால்களைச் சந்தித்து, பின்னர் பபிலோனியர் காலத்தில் முற்றாக அழிந்தே போனது. இப்படியிருக்கையில் சாலமோனின் அரசை நிரந்தரமான அரசாக கடவுள் நிலைநிறுத்துவார் என்ற வரி பல கேள்விகளை எழுப்புகிறது.
அ. இந்த பகுதிகள் சாலமோனின் அரசு நிலையாக இருந்த காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஆ. சாலமோனின் அரசுடைய வீழ்ச்சிக்கு கடவுள் காரணமல்ல, மாறாக அவர் வாரிசுகள்தான் காரணம் என்பதைக் காட்ட எழுதப்பட்டிருக்கலாம்.
இ. இந்த வரி சாலமோனையும் தாண்டி வரவிருக்கும் மெசியாவைப்பற்றியதாக
இருந்திருக்கலாம்.
வ.14: சாலமோனுக்கும் கடவுளுக்குமான உறவு காட்டப்படுகிறது. கடவுள் தாவீதைப் போல, சாலமோனையும் ஏற்றுக்கொள்கிறார். கடவுள் சாலமோனை ஏற்றுக்கொள்வது, சாலமோனின் அதிகாரத்திற்கு நல்ல உறுதியைக் கொடுக்கிறது. இஸ்ராயேல் மக்களும் சாலமோனையும் அவர் அரசையும் இங்கணம் ஏற்றுக்கொள்ள தூண்டப்படுகிறார்கள்.
கடவுளுக்கும் சாலமோனுக்கும் இடையிலான உறவு, தந்தை மகன் உறவாகக் காட்டப்படுகிறது. அதேவேளை அவர் தவறுசெய்கின்றபோது அதற்கான தண்டனையும் நிச்சயமாக பெறுவார் என்பதும் காட்டப்படுகிறது. வரலாற்றில் சாலமோன் பல தவறுகளைச் செய்தார். அதற்கான தண்டனையையும் அவர் பெற்றார். இதற்கான காரணத்தைத்தான் இந்த வரி காட்டுகிறது.
வ.15: சவுல் கடவுளால் விலக்கப்பட்டவராகவே கருதப்பட்டார். இந்த சிந்தனை தாவீது குடும்பத்தாரால் பரப்புரைசெய்யப்பட்டது என்ற ஒரு வாதமும் இருக்கிறது. ஆசிரியர், சவுல் கடவுளால் விலக்கப்பட்டது போல விலக்கப்படமாட்டார் என்ற வாதத்தை முன்வைத்து சாலமோன் பிழைவிட்டாலும் அவர் விலக்கப்படமாட்டார் என்ற ஒரு புதிய சிந்தனையை முன்வைக்கிறார்.
வ.16: இந்த வரியில் தாவீதின் குடும்பமும் (בֵּיתְךָ பெத்தேகா- உன் வீடு), அரசும் (מַֽמְלַכְתְּךָ மம்லாக்தெகா- உம் அரசு), அரியணையும் (כִּסְאֲךָ கிஸ்'அகா- உம் அரியணை) வாதப்பொருளாக எடுக்கப்படுகிறது. இந்த மூன்று விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டது. இந்த வரியும் தாவீது-சாலமோன் அரசின் நித்தியத்தையே முக்கியமான செய்தியாக எடுக்கின்றன.
திருப்பாடல் 89:2-3.4-5.27-29
2உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப்போல் உறுதியானது.
3நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்' (சேலா)
5ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன் தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும்
மன்னன் ஆக்குவேன்.
28அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
29அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரைநிலைக்கச் செய்வேன்.
திருப்பாடல் 89, 52 வரிகளைக் கொண்ட நீண்டதொரு பாடல். எஸ்கியரான ஏத்தானின் அறப்பாடல் என இதன் முகவுரை விளக்கம் கொடுக்கிறது. ஏத்தான் என்பவர் (אֵיתָן 'எதான்), ஒரு பிரசித்தி பெற்ற ஞானியாக இருந்திருக்க வேண்டும். இஸ்ராயேல் இனம் தனித்துவமாக உருவாகுவதற்கு முன்பிருந்த சிறு குழுக்களில் இந்த எஸ்கியர் குழு, அவற்றில் ஒன்றாக
இருந்திருக்க வேண்டும். இவர்கள் பாடகர் குழுமமாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய சில பாடல்களை திருப்பாடல் புத்தகம் கொண்டிருக்கிறது. இவர்களுடைய பாடலை விவிலியம் மஸ்கில் என அழைக்கிறது, இதனை தமிழ் விவிலியம் அறப்பாடல் என மொழிபெயர்க்கிறது. மஸ்கில் என்றால் ஞானம், அறிவு, நன்மை, மற்றும் மெய்யறிவு நிறை பாடல் என எடுக்கலாம் (מַשְׂכִּיל).
இந்த திருப்பாடலை தமிழ் விவிலியம், நாடு இடருற்றபோது பாடியது (வவ.1-18), கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி (வவ.19-37), அரசரின் தோல்வி குறித்து புலம்பல் (வவ.38-45) மற்றும் விடுதலைக்காக மன்றாட்டு (வவ.46-52) என வகைப்படுத்துகிறது. திருப்பாடல் புத்தகத்தின் ஆய்வாளர்கள் இந்த பாடலை அரச மற்றும் புலம்பல் பாடல் என வகைப்படுத்துகின்றனர். இந்த பாடலில் தாவீதின் அரியணை மற்றும் அவருடைய அரச வம்சத்தின் நிலைப்பாட்டை அன்றைய
இஸ்ராயேல் மக்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்பதைக் காணலாம். தாவீதை அவர்கள் அரசர் என்பதைவிட தங்கள் கடவுளின் பிரதிநிதியாகவே கண்டார்கள். தாவீது எப்படி இஸ்ராயேலுக்கோ, அதேபோல் கடவுள் முழு உலகிற்கும் அரசராக இருக்கிறார், அவர் அரசில் மட்டுமே நீதியும் உண்மையும் நிலைத்திருக்கிறது என்பது இந்தப் பாடலின் உயிர் மூச்சாக இருக்கிறது.
வ.2: ஆண்டவருடைய பேரன்பும், அவருடைய உண்மையும் எவ்வளவு உறுதியானவை என்பதைக் காட்ட நித்தியத்தையும், வானையும் உதாரணத்திற்கு எடுக்கிறார் (חֶסֶד ஹெசெத்- பேரன்பு: אֶמוּנָה 'எமுனாஹ்- உண்மை). வானம் என்றும் அசைவுறாத ஒரு திரை என்று இஸ்ராயேலர் நம்பினர்,
இதனை கடவுளுடைய உறுதியான பண்பிற்கும் ஒரு உதாரணமாகக் கண்டனர். பல வேளைகளில் விவிலிய ஆசிரியர்கள் இந்த அடையாளத்தை கடவுளுடைய பலத்தை காட்ட உருவகத்திற்கு எடுக்கின்றனர்.
வ.3: ஆண்டவர் தாவீதோடு உடன்படிக்கை செய்து கொண்டார் என்பது ஆண்டவருடைய நேரடி வார்த்தையாகக் காட்டப்படுகிறது. தாவீதை தான் தேர்ந்துகொண்டவர் என்கிறார் ஆண்டவர்
(כָּרַתִּי בְרִית לִבְחִירִי காரதி பெரித் லெவ்ஹிரெ- உடண்படிக்கை செய்து கொண்டேன், நான் தோந்துகொண்டவரோடு). இதன் மூலமாக தாவீதிற்கு எதிரான எந்த போக்கும் கடவுளுக்கு எதிரானது என்றாகிறது. தாவீது கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட அவருடைய பணியாளர் என்பது தெளிவாக காட்டப்படுகிறது.
வ.4: தாவீதின் வழிமரபிற்கு கடவுள் என்ன செய்தி சொல்கிறார் என்பது இந்த வரியில் காட்டப்பட்டுள்ளது. தாவீதின் வழிமரபு, சவுலுடைய வழிமரபைப் போல்லல்லாது என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது சொல்லப்படுகிறது. இதனை ஒத்த கருத்து வரியில் அவருடைய அரியணை என்னென்றும் நிலையாய் இருக்கும் என திருப்பிக் கூறப்பட்டுள்ளது.
இந்த வரியும் தாவீதுடைய அரசாட்சியை போற்றும் விதமாகவும், அந்த அரசாட்சி கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாட்சி என்ற கொள்கையை போற்றுதாகவும் அமைந்துள்ளது.
வ.5: மீண்டுமொருமுறை வானங்களை உதாரணத்திற்கு எடுக்கிறார் (שָׁמַיִם ஷாமயிம்-வானங்கள்). வானங்கள் ஆண்டவரின் மாட்சியை ஆசிரியருக்கு காட்டுகின்றன. வானங்களில் உள்ள நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள், என்றுமே விவிலிய ஆசிரியருக்கு அழகானதும் ஆச்சரியம் நிறைந்ததுமான உருவகங்கள். அதிகமான வேளைகளில், வானங்களில்தான் தூயவர்கள் குழுக்கள் இருப்பதாகவும் அக்கால இறையியலாலர்கள் நம்பினார்கள். எப்படி வானங்கள் ஆண்டவரின் மாட்சியை அறிவிக்கின்றனவோ, அதனைப்போலவே தூயவர்கள் குழுக்களும் ஆண்டவரின் மாட்சியை அறிவிக்கின்றார்கள்.
வ.28: கடவுள் தாவீதிற்கு அளித்த வாக்குறுதி இந்த வரியிலும் சொல்லப்படுகிறது. தாவீது பல வேளைகளில் கடவுளுக்கு ஒவ்வாத செயற்பாடுகளைச் செய்தார். இந்த வேளைகளில் அவருடைய எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இப்படியிருக்கையில், கடவுள் தான் தாவீது மேல் கொண்ட பேரன்பு (חֶסֶד ஹெசெத்- பேரன்பு) என்றுமே நிலைக்கும் எனச் சொல்லப்படுகிறது. அந்த பேரன்பை உடன்படிக்கையோடு (בְּרִית பெரித்- உடன்படிக்கை) ஒப்பிடுகிறார் ஆசிரியர். பேரன்பைப்போல தாவீதோடு கடவுள் செய்த உடன்படிக்கையும் என்றென்றும் நிலைக்கும் என்கிறார்.
வ.29: ஏற்கனவே சொல்லப்பட்டதுதான் மீண்டும் வேறு வழிகளில் சொல்லப்படுகிறது. தாவீதின் வழிமரபும் (זַרְעוֹ ட்சர்'ஓ- அவர் வாரிசு), அவரது அரியணையும் (כִסְא֗וֹ கிஸ்'ஓ- அவர் அரியணை), வானுள்ளவரை நிலைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
உரோமையர் 16,25-27
25இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 26இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். 27ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
உரோமையர் திருமுகத்தின் முடிவுரையாக இன்றைய வாசகம் வருகிறது. புவுலுடைய திருமுகங்களிலே மிக முக்கியமான இறையியல் கருத்துத்களை நேர்த்தியாக கொண்டுள்ள திருமுகம் என அறியப்பட்ட உரோமையர் திருமுகம், பல முக்கியமான பணித்தள சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களை தீர்த்துவைக்க முற்படுகிறது. பவுல் உரோமைய திருச்சபையை நிறுவாவிட்டாலும், உரோமையை திருச்சபை பவுலுடைய குரலுக்கு செவிகொடுத்தது என்பதை இந்த திருமுகத்தின் தன்மையிலிருந்து கண்டுகொள்ளலாம். உரோமையர் திருமுகம் நிச்சயமாக அக்கால உரோமைய திருச்சபையின் வரலாற்று பின்னனியிலே எழுதப்பட்டது, இருப்பினும் இது புத்தகங்களைப்போல ஒழுங்கு முறையில் எழதப்படவில்லை என்பது தெளிவாக தெரியும்.
எருசலேமில் வழக்குகளை சந்தித்த பவுல், தன்னுடைய இறுதி வழக்கை சீசர்தானே விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார், அவருக்கு ஒரு உரோமை குடிமகனாக இது சாத்தியமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பின்னர் உரோமையிலிருந்து, ஸ்பானியா சென்று அங்கு மறையறிவிக்க விரும்பினார். தன்னுடைய மூன்றாவது மறைபயணத்தின் பின்னர்தான் பவுல் இந்த திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும் (இதனை அவர் எழுதினார் என்றால்).
உரோமைய திருச்சபையை தூய பேதுரு நிறுவினார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. பெந்தகோஸ்து விழாவில் பேதுருவின் மறையுரையைக் கேட்டவர்கள் உரோமைக்கு திரும்பி வந்து கிறிஸ்தவத்தை பரப்பினார்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் நாடுகடந்த யூதர்களாக இருந்திருக்க வேண்டும் (காண்க தி.பணி 2,10). அனைத்து உரோமைய யூதர்களும் கிறிஸ்தவத்தை தழுவினார்கள் என்று சொல்வதற்கில்லை. உரோமைய பேரரசர், சீசர் கிளாவுதியூஸ் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் யூதர்கள் அனைவரையும் உரோமையிலிருந்து துரத்தினார், அதற்கான காரணம் யூதர்களுக்கும், யூத கிறிஸ்தவர்களுக்கும்
இடையிலான சிக்கல்கள் என்று சொல்லப்படுகிறது.
யூதர்கள் வெளியேறியபோது, அவர்களோடு சேர்ந்து யூத கிறிஸ்தவர்களும் வெளியேறியிருக்கலாம். ஆரம்ப கால கிறிஸ்தவர்களாக அக்குவிலா மற்றும் பிறிஸ்கில்லா போன்றவர்கள் இவர்களில் சிலர் (காண்க தி.பணி 18,2). இந்நிகழ்வு ஏறத்தாழ கி.பி 49இல் நடந்திருக்கலாம். சில காலங்களுக்கு பின்னர் இந்த வெளியேற்றப்பட்டவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது ஏற்கனவே திருச்சபையில் யூதரல்லாதவர்களின் கரங்கள் ஓங்கியிருந்தது. ஆக உரோமையர் திருமுகம் பல்முகப்பட்ட உரோமைய திருச்சபைக்கே எழுதப்படுகிறது.
வ.25: இந்த முடிவுரையில் பவுல் கடவுளுக்கு புகழுரை சாற்றுகிறார். இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய தன்னுடைய நற்செய்திக்கு ஏற்ப வாழ கடவுள்தாமே அவர்களை உறுதிப்படுத்துவார் என்கிறார்.
இந்த காலத்தில் இயேசுவைப் பற்றிய செய்தியை குறிக்க நற்செய்தி (εὐαγγέλιον எவாங்கலியோன்- நற்செய்தி) என்ற சொல் பாவிக்கப்பட தொடங்கி விட்டது. இயேசுவை வாழுவதற்கு கடவுள் தான் உதவிசெய்கிறார் என்பதன் மூலம், கடவுளுக்கும் இயேசுவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது காட்டப்படுகிறது. அத்தோடு கடந்த காலங்களில் இந்த நற்செய்தி மறைபொருளாக (μυστήριον முஸ்டேரியோன்) இருந்தது, இப்போது வெளிக்காட்டப்பட்டுள்ளது என்கிறார்.
வ.26: இந்த மறைபொருளை தெரிவிக்கிறவர்களை இறைவாக்கினர் என்கிறார் பவுல். கிரேக்க விவிலியம் இதனை 'இறைவாக்கு நூல்கள்' என்று கொண்டுள்ளது. அத்தோடு இதனை செய்யச் சொன்னவரை 'என்றும் வாழும் எல்லா வல்ல இறைவன்' என்று சொல்கிறார். இது ஆரம்ப காலத்தில் கடவுளை விழிக்க பயன்பட்ட சொல் என்று எடுக்கலாம். அத்தோடு இந்த கட்டளை நம்பிக்கையின் கீழ்ப்படிவில் கொடுக்கப்படுகிறது (εἰς ὑπακοὴν πίστεως எய்ஸ் ஹுபாகொனே பிஸ்டெயோஸ்). இந்த கட்டளை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் முதல் ஏற்பாட்டு திருவெளிப்படுத்தலுக்கும், புதிய ஏற்பாட்டு வெளிப்படுத்தலுக்கும் வித்தியாசம் காட்டப்படுகிறது.
வ.27: கடவுளை 'ஞானம் உருவாக்குகிற கடவுள்' என்று வித்தியாசமான பெயரில் அழைக்கிறார் பவுல் (σοφῷ θεῷ சோபோ தியூ- ஞானம் சார்பான கடவுள்). இந்த கடவுளுக்கு இயேசு கிறிஸ்து வாயிலாக என்றென்றும் மாட்சி என்று முடிக்கிறார். எபிரேயர்களின் மிக முக்கியமான செபச் சொல்லான ஆமெனுடன் இந்த திருமுகம் முடிவடைகிறது (ἀμήν ஆமென்).
லூக்கா 1,26-38
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'ழூழூ என்றார். 29இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' என்றார்.
34அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார்.
35வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.✠ 37ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார்.
38பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
லூக்கா நற்செய்தியாளரின் ஆண்டவர் பிறப்பு செய்தி பகுதியில் இருந்து இன்றைய வாசகம் எடுக்கப்படுகிறது. லூக்கா நிகழ்வுகளை அழகாக வர்ணிப்பதில் வல்லவர் என்பதை காட்டுகிறார். இந்த பகுதிக்கு முன்னுள்ள பகுதியில், திருமுழுக்கு யோவானின் பிறப்பு பகுதி தரப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளுக்கும், யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இரண்டும் ஒரே விதமான காட்சியமைப்பில் தரப்பட்டுள்ளன, ஆனால் இறுதியில் இயேசுவின் பிறப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக
இயேசுதான் இந்த நற்செய்தியின் கதாநாயகரும், நோக்கமும் என்பது காட்டப்படுகிறது. இது ஒரு கிரேக்க இலக்கிய முறை, இதனை 'ஒப்பிட்டு உயர்த்துதல்' (syncresis) என்று கிரேக்க இலக்கிய முறைகள் அழைக்கின்றன.
வ.26: ஆறாம் மாதத்தில் கடவுள் கபிரியேல் தூதரை நாசரேத்தூரிலுள்ள ஒரு கன்னியிடம் அனுப்புகிறார். ஆறாம் மாதம் என்பது, செக்கரியாவிற்கு கபிரியேல் தோன்றி ஆறுமாதம் ஆனதைக் குறிக்கலாம் (μηνὶ τῷ ἕκτῳ மேனி டோ எக்டோ- ஆறாம் மாதத்தில்). மரியாவிற்கு தோன்றுகின்ற வானதூதரின் பெயர் கபிரியேல், இவர்தான் செக்கரியாவிற்கும் தோன்றினார் (காண்க 1,19). கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லிற்க்கு கடவுளின் வீரர் அல்லது, கடவுள் பலமாக இருக்கிறார் என்று பொருள் (Γαβριὴλ காப்ரியேல்: גַּבְרִיאֵל கவ்ரி'எல்). இந்த பெயர் நான்கு தடவை விவிலியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது (காண்க தானியேல் 8,16: 9,21: லூக் 1,19: 1,26).
இவர் நாசரேத்தூரில் இருந்த ஒரு கன்னியிடம் அனுப்பப்படுகிறார் (παρθένος பார்தெனொஸ்). பார்தெனொஸ் என்பது மணம்முடிக்காத, அல்லது மணமுடித்த இளம் பெண்ணைக் குறிக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக இவர் கடவுளால் அனுப்பப்படுகிறார். ஆக இந்த முழு நிகழ்வையும் நடத்துகிறவர் கடவுளாகவே இருக்கிறார் என்பதை லூக்கா அழகாகக் காட்டுகிறார்.
வ.27: இந்த கன்னிப்பெண் யோசேப்பிற்கு மண ஒப்பந்தமானவர். இந்த யோசேப்பை தாவீதின் வழிமரபினர் என்று காட்டுகிறார். மெசியா தாவீதின் வழிமரபில்தான் வருவார் என்பது யூதர்களின் ஆழமான நம்பிக்கை அதற்கு இந்த வரி வலுச்சேர்க்கிறது. இந்த வரியில் யோசேப்பையும் மரியாவையும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார் லூக்கா.
மண ஒப்பந்தம் என்பது, திருமணத்திற்கு முதல் நடக்கும் ஒரு நிகழ்வைக்குறிக்கிறது (μνηστεύω ம்னேஸ்டெயுஓ). மண ஒப்பந்தத்தின் பின்னர், அந்த குறிப்பிட்ட பெண், மண ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆணின் மனைவியாகவே கருதப்படுவார். சில காரணங்களுக்காக அவர் சில காலம் தன் பெற்றோருடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார். இந்த காலத்தில் அந்த பெண் வேறு ஆணுடன் உறவு வைத்தால், அதனை திருமணத்திற்கு எதிரான பாலியல் குற்றம் அல்லது விபச்சாரம் என்றே அக்காலதில் கருதினார்கள், தண்டனையும் கொடுத்தார்கள்.
மரியா யோசேப்பிற்கு மணஒப்பந்தமாகி இருந்தார் என்று நற்செய்தியாளர்கள், குறிப்பிடுவது அவர்களின் எதிர் கால திருமணத்தை கருத்தில் கொண்டே என்று எடுக்கலாம்.
வ.28: வானதூதரின் வாழ்த்து சொல்லப்படுகிறது. வானதூதரின் வாழ்த்தை கிரேக்க விவிலியம் இப்படிச் சொல்கிறது - χαῖρε, κεχαριτωμένη, ὁ κύριος μετὰ σοῦ காய்ரெ, கெக்காரிடோமெனே, ஹொ கூரியோஸ் மெடா சூ- வாழ்த்துக்கள், ஆசீர்வதிக்கப்பட்டவரே, ஆண்டவர் உம்மோடு.
இலத்தீன் வல்கேட் விவிலியம் மரியாவை இந்த இடத்தில் 'அருள் நிறைந்தவரே வாழ்க' என்று மாற்றி வாசிக்கின்றது (ave gratia plena Dominus tecum benedicta tu in mulieribus) சில முக்கியமில்லாத படிவங்கள் இதே இடத்தில், மரியாவை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதையும் சேர்த்து வாசிக்கின்றன - εὐλογημένη σὺ ἐν γυναιξίν.
லூக்கா மரியாவிற்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதை தற்செயலான விடயம் என எடுக்கமுடியாது. இந்த நற்செய்தியில் மரியா மிக முக்கியமான ஒரு பாத்திரம்.
வ.29: இந்த வாழ்த்து மிக பிரசித்தி பெற்றதாக இருந்தாலும், மரியா அதனை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இந்த வாழ்த்து எத்தகையதோ என்று கலங்கினார் என்று சொல்லப்படுகிறது. இது மரியாவின் தாழ்ச்சியைக் காட்டுகிறது.
வானதூதரின் வருகை, அவருடைய கபிரியேல் என்ற பெயர், தன்னுடைய தாழ்நிலை,
இவற்றை நன்கு அறிந்திருந்த மரியா கலங்கியிருக்கலாம். மரியா மிகவே கலங்கினார் என்று லுக்கா குறிப்பிடுகிறார் (διεταράχθη தியடாராக்தே).
வ.30: வானதூதர் மரியாவின் கலக்கத்திற்கு விடையளிக்கிறார். அஞ்சவேண்டாம் என்கிறார், அத்தோடு மரியா கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளார் என்றும் சொல்கிறார்.
மரியாவிற்கு கடவுளின் அருள் ஏற்கனவே கிடைத்துவிட்டது என்பதைக் குறிக்க இந்த சொல் இறந்த காலத்தில் வாசிக்கப்படுகிறது (εὗρες γὰρ χάριν எவுரெஸ் கார் காரின்- ஏனெனில் அருளைக் கண்டடைந்துள்ளீர்).
வ.31: மரியா கருவுற்று ஒரு மகனை பெறுவார் எனவும் அவருக்கு இயேசு என்று பெயரிடும் படியாகவும் சொல்லப்படுகிறது. வழமையாக இந்த வாய்ப்பு தந்தைக்கே கொடுக்கப்படும் இயேசுவின் விடயத்தில் அதுவும் லூக்கா நற்செய்தியில் இது மரியாவிற்கு கொடுக்கப்படுகிறது.
இயேசு என்கின்ற பெயர் (Ἰησοῦς இயெசூஸ்), யூதர்களுக்கு நன்கு தெரிந்த பெயர். இதனை எபிரேயம், யேஹொஷுவா அல்லது யேஷுவா என்று அழைத்தது. இதன் பொருளாக கடவுள் மீட்கிறார் அல்லது கடவுள் மீட்பராக இருக்கிறார் என்று வரும்.
வ.32: இயேசு யார் என்பதைக் இந்த வரி காட்டுகிறது. அவர் பெரியவராயிருப்பார் (μέγας மெகாஸ் பெரியவர்), உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் (υἱὸς ὑψίστου உன்னதரின் மகன்-ஹுய்யொஸ் ஹுப்சிஸ்டூ), தாவீதின் அரியணையை கடவுள் அவருக்கு கொடுப்பார் (θρόνον Δαυὶδ தாவீதின் அரியணை- துரொனொன் தாவித்) என்று கபிரியேல் உரைக்கிறார்.
இந்த வரி மூலமான முற்காலத்தில் உரைக்கப்பட்ட தாவீதின் வாரிசு இந்த இயேசுதான் என்பதை காட்டுகிறார் லூக்கா. இதனை கடவுள்தாமே கொடுக்கிறபடியால், இது முக்கியத்துவம் பெறுகிறது. இயேசு சாதாரண இறைவாக்கினர் இல்லை மாறாக அவர் கடவுளின் மகன் என்பது இயேசுவை மிக மிக முக்கியமானவராகக் காட்டுகிறது.
வ.33: இயேசுவிற்கும் இஸ்ராயேலுக்கும் இடையிலான உறவு காட்டப்படுகிறது. இஸ்ராயேலுக்கு யாக்கோபின் வீடு என்ற பெயரும் உண்டு (οἶκον Ἰακὼβ ஒய்கொன் யாகோப்). இதனை லூக்கா பாவிக்கிறார். இயேசு யாக்கோபின் வீட்டின் மேல் என்றென்றும் ஆட்சி செலுத்துவார் என்பதன் வாயிலாக ஏற்கனவே தாவீதிற்கு வாக்களிக்கப்பட்ட முடிவில்லா அரசுரிமை இங்கே நிறைவு பெறுகிறது.
வ.34: சாதாரண யூதப் பெண், மரியாவின் நியாயமான கேள்வியை பதிகிறார் லூக்கா. கன்னிப் பெண் எப்படி கருத்தாங்க முடியும் என்பது மரியாவின் கேள்வி.
தமிழ் விவிலியம் மரியாவிற்கு மரியாதை சொற்பதங்களை பாவித்துள்ளது, ஆனால் மூல கிரேக்க பாடத்தில் 'எப்படி, நான் ஆண் ஒருவரை அறிவில்லை' என்று உள்ளது (ἐπεὶ ἄνδρα οὐ γινώσκω - எபெய் அந்திரா ஊ கினோஸ்கோ). அறியவில்லை என்பது திருமண உறவைக் குறிக்கிறது.
வ.35: இதற்கும் விளக்கத்தை வானதூதர் கபிரியேல் கொடுக்கிறார். அதாவது தூய ஆவி மரியா மீது வருவார் (πνεῦμα ἅγιον ἐπελεύσεται), உன்னத கடவுளின் வல்லமை அவர் மீது நிழலிடும் (δύναμις ὑψίστου ἐπισκιάσει σοι·), ஆக பிறக்கும் குழந்தை தூயதாக இருக்கும் (τὸ γεννώμενον ἅγιον). அந்த குழந்தை இறைமகன் எனப்படுவார் (υἱὸς θεοῦ.).
அனைத்து விளக்கங்களையும் அப்படியே கொடுத்துவிட்டார் லூக்கா. இதன் மூலம்
இயேசுவின் கருத்தரிப்பிற்கு மனித ஆண் ஒருவர் காரணம் அல்ல, மாறாக அவர் இறைவனின் மகன் என்பது தெளிவாகக் காட்டப்படுகிறது.
வ.36: மரியாவின் கேள்விக்கு இன்னொரு உதாரணமும் கொடுக்கப்படுகிறது. எலிசபேத்து உதாரணத்திற்கு எடுக்கப்படுகிறார். இவர் மரியாவின் உறவினர். கருவுற இயலாமல் இருந்தது மரியாவிற்கு நன்கு தெரிந்திருக்கும். இப்போது இவர் ஆறாம் மாதத்தில் இருக்கிறார் என்ற மங்களமான செய்தி மரியாவிற்கு சொல்லப்படுகிறது. இது மரியாவின் கேள்விக்கு பதிலளித்திருக்கும்.
வ.37: மேலுமாக, கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை என்று சொல்கிறார் கபிரியேல். இதன் மூலம் கடவுள் எதையும் செய்வார் என்பது மரியாவிற்கு சொல்லப்படுகிறது.
வ.38: இந்த இறுதியான வசனம் மரியாவின் மேன்மைக்கு நல்லதொரு உதாரணம். மரியா உடனடியாக தன்னை ஆண்டவரின் அடிமை (δούλη κυρίου· தூலே கூரியூ) என்கிறார். அத்தோடு வானதூதரின் வார்த்தைப் படியே தனக்கு நிகழட்டும் என்றும் ஏற்றுக்கொள்கிறார்.
அடிமைகள் மிக முக்கியமான உரிமைகள் இல்லாதவர்கள். அவர்கள் பல தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் தங்கள் உரிமையாளர்களை நம்பியிருப்பார்கள். உரிமைக் குடிமக்கள் தங்களை அடிமைகளாக மாற்ற முயலமாட்டார்கள். மரியா என்கின்ற யூதப் பெண், இங்கே தன்னை அடிமையாக மாற்றுகிறார். அவருடைய இந்த தாழ்ச்சி வானதூதரை அவரைவிட்டு அகலச் செய்தது. வானதூதரின் அகலுதல், இங்கே அவர் செய்யவந்த பணி நிறைவடைந்ததைக் காட்டுகிறது.
(γένοιτό μοι κατὰ τὸ ῥῆμά σου. கெனொய்டெ மொய் காடா டொ ரேமா சூ- உம் வார்த்தை படியயே என்க்கு நடக்கட்டும்.) வார்த்தை என்ற சொல், இங்கே பொருள், விருப்பம், செயல்திறன் என்ற பல அர்த்தத்தைக் கொடுக்கிறது (ῥῆμα ரேமா).
இயேசு தாவீதிற்கு சொந்தமானவர் அல்ல,
தாவீதும் இயேசுவிற்கு சொந்தமானவர்.
மெசியா ஒரு இனத்தின் அடையாளம் அல்ல,
அவர் ஓர் இனத்தில் பிறந்தார் என்பதில் துவேசம் இல்லை.
இயேசு உலகத்தின் மீட்பர்.
உலகத்தில் இயேசு பிறந்தார் என்பதைவிட
இயேசு பிறக்க உலகம் தயார் செய்யப்பட்டது என்பதே சரியாக இருக்கும்.
மரியா கேள்வி கேட்டார், அது நியாயமானது.
கடவுளின் வலியவர் கபிரியேல் அதற்கு விடை கொடுக்க வேண்டியவராக இருந்தார்.
செக்கரியாவைப் போல மரியாவை அவரால் தண்டிக்க முடியாது.
ஏனெனில் இறைவனின் தாயுடைய பணிவுதான்,
அவர் பலம்.
அன்பு ஆண்டவரே,
என் வாழ்வில் உம்மை தாங்க வரம் தாரும். ஆமென்.
Wish you all a wonderfull and blessed Christmas
and a prosperous
New Year.
May the New Year 2018 be a year of blessings.
God bless you all.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக