ஞாயிறு, 24 டிசம்பர், 2017

Christmas Vigil Mass: கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி (அ,ஆ,இ)



கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி (,,)
24,12, 2015
(A commentary of the readings of the Christmas Vigil

மி. ஜெகன்குமார் அமதி
கோட்டைப்பிட்டி,
சிலாபம்.
சனி, 23 டிசம்பர், 2017

முதல் வாசகம்: எசாயா 62,1-5
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 89
இரண்டாம் வாசகம்: திருத்தூதர்பணி 13,16-17.22-25
நற்செய்தி: மத்தேயு 1,1-25


எசாயா 62,1-5
1சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். 2பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். 5இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

எசாயாவின் 62வது அதிகாரம், சீயோனின் மகிமை என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது
இது ஒருவகை கவிநடையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் விசேடமாக இந்த பகுதியில் சீயோன் ஒரு பெண்ணாக வர்ணிக்கப்படுகிறாள்

.1: எசாயா ஆசிரியர் எதோ எதிர்காலத்திற்கான இறைவாக்கு போல இதனை பதிவு செய்கிறார். இந்த வரியின் மூலமாக எருசலேம் தற்காலத்தில் துன்பப்படுகிறது ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக மகிழ்வுறும் என்பதனைப்போல காட்சியமைக்கப்படுகிறது. சீயோன் צִיּוֹן֙ 
(ட்சியோன்) இங்கு வழக்கம்போல எருசலேமை குறிக்கிறது. வைகறை ஒளியும், சுடர் விளக்கும் நம்பிக்கையின் அடையாளங்கள், இதனை வைத்துத்தான் அக்காலத்தில் விடியலை கணித்தார்கள்

.2: பிற இனத்தார் மற்றும் மன்னர்கள் என்னும் சொற்கள் இங்கே ஒத்த கருத்துச்சொற்களாக பாவிக்கப்பட்டுள்ளன. எருசலேமிற்கு ஆண்டவர் ஒரு புதிய பெயரை שֵׁם חָדָ֔שׁ (ஷெம் ஹாதாஷ்) சூட்டுவார் என்று சொல்லப்படுகிறது. புதிய பெயர் என்பது புதிய வாழ்வையும், புதிதான நம்பிக்கையையும் குறிக்கிறது. இஸ்ராயேலின் வெற்றி (צֶדֶק ட்செதெக் நீதி), மற்றும் அதன் மகிமை நினைவூட்டப்படுவதன் மூலமாக தற்காலத்தில் எருசலேம் தோல்வியில் துவண்டாலும், பல தாழ்வுகளைக் கண்டாலும் அவை நிரந்தரம் இல்லை என்பது சொல்லப்படுகிறது

.3: ஆண்டவரின் கையில் எருசலேம் மணிமுடியாகவும் עֲטָרָה ('அதாராஹ்), அரச மகுடமாகவும் צָנִיף (ட்சாநிப்) சித்தரிக்கப்படுவது எருசலேமின் மேன்மையையும் விசேட கவனிப்பையும் காட்டுகிறது. மணிமுடி மற்றும் அரசமகுடம் என்பன ஒருவரின் இறைமையை காட்டும் அடையாளங்கள். இந்த அடையாளங்கள் மூலமாக எருசலேமிற்கு நம்பிக்கை கொடுக்கப்படுகிறது

.4: எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும், அன்நியரின் படையெடுப்புக்களாலும் சீரழிக்கப்பட்டது. இதனால் அதற்கு முக்கியமான பெயர்கள் கொடுக்கப்பட்டன -ம். עֲזוּבָה அட்சுவாஹ்- கைவிடப்பட்டவள், שְׁמָמָה ஷெமாமாஹ்- புறக்கணிக்கப்பட்டவள். ஆனால் கடவுளின் கண்பார்வையால் இந்த பெயர்கள் மாற்றம் பெறுகின்றன. அவை: חֶפְצִי־בָהּ ஹெப்ட்சிபாஹ்- மகிழ்ச்சி, בְּעוּלָה பெ'வுலாஹ்- திருமணமானவள். இவை சாதாரண பெயர்மாற்றங்கள் அல்ல மாறாக வாழ்வின் முழுமையான மாற்றங்கள்

.5: ஒரு இளைஞனின் திருமண அனுபவம் இங்கே உவமிக்கப்படுகிறது. இளைஞன் பலவிதமான எதிர்பார்ப்புக்களோடு தன்னுடைய திருமணத்தை அரங்கேற்றுகிறார். அங்கே புதிய உறவு, காதல், சுவாசம் என்பன அவர் இதயத்தில் ஏற்படுகிறது. இதனை எசாயா எருசலேமை மணமகளாகவும், கடவுளை திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் ஒப்பிட்டு காட்சிப்படுத்துகிறார். (உன்னை எழுப்பியவர் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு எபிரேய விவிலியத்தில் בָּנָיִךְ உன் மைந்தர் (பானாயித்) என்றே உள்ளது. இதற்கு பலர் பல அர்தங்களைக் கொடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் உன்மைந்தர் என்ற சொல்லை உன்னை எழுப்பியவர் בֹּנָיִךְ (போனாயித்) என்று மாற்றுவது. அர்த்தத்தை பொறுத்த மட்டில் இது சரியாக தோன்றினாலும் மொழியியலில் அவ்வாறு சரியாக தோன்றாது.)

திருப்பாடல் 89
நாடு இடருற்றபோது பாடியது
(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)

என்பத்தொன்பதாம் திருப்பாடல் ஐம்பத்திரண்டு வரிகளைக் கொண்ட அழகான ஒரு பாடல். இந்த பாடலை (מַשְׂכִּ֗יל மஸ்கில்) எஸ்ராகியரான ஏத்தான் אֵיתָן ('ஏதான்) பாடினார் என்று இப்பாடலின் முகவுரை சொல்கிறது. இந்த ஏத்தான் ஒரு இசைக்கருவி மீட்டுகின்ற குழுவிற்கு தலைவராக இருந்திருக்க வேண்டும் என்று வாதாடப்படுகிறது. ஆனால் இவரது காலத்தை கணிப்பது சற்றுக் கடினம். அத்தோடு இவரின் இசையைவிட சாலமோனின் இசைஞானம் மேலானது என்றும் விவிலியம் கூறுகிறது (காண்க 1அர 4,31).
(எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார்.)

ஒரு குழும வியாகுலப் பாடலான, அரசரினதும் நாட்டு மக்களினதும் தோல்வி கடவுளின் தோல்விக்கு நிகரானது என நினைத்து இந்தப் பாடல் புலம்புகிறது. கடவுளிள் உலக படைப்பையும் அவருடைய வல்லமையையும் சக்தியையும் நினைவூட்டுகின்ற நல்லதொரு செய்தி. ஆனால் ஆண்டவரின் பணியாளனாகிய மண்ணுலக அரசரின் தோல்வி ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. கடவுள் தாவீதையும் அவர் வழிமரபையும் என்றென்றைக்கும் ஆசீர்வதித்துள்ளமையால் அவர்களின் தோல்விகள் கடவுள் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்க வாய்ப்பளிக்கக்கூடியவை என புலம்;புகிறார் ஆசிரியர். கடவுள் உலகை படைத்ததையும், இஸ்ராயேலர் கானான் நாட்டில் குடியேறியதையும் ஒப்பிட்டு, வெற்றி என்றும் கடவுளுக்குரியது, அதேபோல் மண்ணக வெற்றி அவர் பணியாளர்களாகிய தாவீதின் வீட்டாருக்கு இருக்க வேண்டும் என்கிறார்
இஸ்ராயேலின் நம்பிக்கை இப்படியிருக்க, தம் நாட்டின் தலைவரும் அவர் நிலமும் ஆக்கிரமிக்கப்படுவதும் துன்பமானது என கடவுளுக்கு நினைவூட்டுகிறார். எது எவ்வாறெனினும் அனைத்து புலம்பல் பாடல்களும் இறுதியாக நம்பிக்கையை வாசகர்களுக்கு கொடுப்பதே வழக்கம் அதனையே இந்தப்பாடலும் கொண்டுள்ளது


திருத்தூதர்பணி 13,16-17.22-25
16அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: 'இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். 17இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்;. 

22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து 'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார்.
23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார்.

இந்த பகுதி பவுலுடைய முதலாவது தூதுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. எரோதின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலாபனையின் பின்னர், ஏரோது எப்படியான சாவினை தழுவினான் என திருத்தூதர் பணி காட்டுகிறது, இதன் பின்னர் தூய ஆவியார் பவுலையும் பர்னபாவையும் விசேட பணிக்கென தெரிவு செய்வதாக திருத்தூதர் பணி ஆசிரியர் (லூக்கா) குறிப்பிடுகிறார். இவ்வாறு இவர்கள் சிரியாவின் அந்தியோக்கியாவிலிருந்து சைப்பிரஸ் தீவு வழியாக பம்பிலியாவை அடைந்து பின்னர் பிசிதியாவை அடைகிறார்கள் (தற்போதைய தெற்கு துருக்கியின் இடங்கள்). இந்த பிசிதியாவிலிருந்த அந்தியோக்கியா செபக்கூடம் ஒன்றில் அவர்கள் செப வழிபாட்டில் பங்கு பெறுகிறார்கள் (காண்க தி.பணி 13,13-15: அந்தியோக்கியா என அக்காலத்தில் பல இடங்கள் பெயரிடப்பட்டிருந்தன. அந்தியோக்குஸ் என்ற பிரசித்தி பெற்ற ஒரு கிரேக்க அரசன் இந்த இடங்களை தன் பெயரில் நிறுவினான் என நம்பப்படுகிறது.). செபக்கூடத்திலே வழக்கம்போல சட்டமும் இறைவாக்கும் வாசிக்கப்பட்டதன் பின் முக்கியமானவர்கள் உரையாற்றுவது வழக்கம். இது நம்முடைய மறையுரை போல அமைந்தது. பவுலும் பர்னபாவும் விருந்தாளிகளாக இருந்ததால் அந்த வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. இந்த வேளையிலே பவுல் தன்னுடைய மிக முக்கியமான மறையுரையை ஆரம்பிக்கிறார். இதனை பவுலுடைய கன்னி மறையுரை என்றும் சிலர் பாhக்கின்றனர். மரியோன் சோர்ட்ஸ் (Marion L. Soards) என்னும் விவிலிய ஆய்வாளரின் ஆய்வுப்படி, திருத்தூதர் பணிகள் நூலில் இருபத்தி நான்கு (24) மறையுரை-உரைகள் காணப்படுகின்றன. அவற்றில் யாக்கோபு, ஸ்தேவான், பேதுரு மற்றும் பவுல் போன்றவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அத்தோடு இந்த உரைகளுக்கும் அக்கால கிரேக்க உரோமைய 
இலக்கியங்களுக்ககும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இவர் கருதுகிறார். (உசாத்துணை: Soards, Marion L., The Speeches in Acts. Their Content, Context, and Concerns (Kentucky 1994).)

.16: இந்த வசனத்தை பல விதமாக நோக்கலாம். முதலாவதாக பவுல் இஸ்ராயேல் மக்களை விழிக்கிறார் (ἄνδρες Ἰσραηλῖται அந்த்ரெஸ் இஸ்ராயேலிடாய் - இஸ்ராயேல் மனிதர்களே!), 
இரண்டாவதாக அவர் கடவுளுக்கு அஞ்சுவோரே (οἱ φοβούμενοι τὸν θεόν ஹொய் பொபூமெனொய் டொன் தீயோன்) எனவும் விழிக்கிறார். இந்த இரண்டாவது விழிப்பு இஸ்ராயேல் மக்கள் இல்லாதவர்களை குறிக்கிறது என பல ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். (இது இஸ்ராயேல் மக்களுக்கு ஒரு ஒத்தகருத்துச் சொல்லாகக்கூட இருக்கலாம்). இதன் வாயிலாக இஸ்ராயேல் மதத்தை தழுவாமல் இஸ்ராயேல் வழிபாடுகளில் பங்கெடுத்தவர்கள் செபக்கூடங்களிலே 
இருந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. பவுலுடைய கையசைவு, கேட்பவர்களுடைய அவதானத்திற்கான பவுலின் அறிகுறியாக இருக்கலாம்

.17: இந்த வசனத்தில் பவுல் முழு மீட்பின் வரலாற்றையும் சுருக்கமாக சொல்லிவிட்டார்
. நாம் வணங்குகின்ற கடவுள் இஸ்ராயேல் மக்களுடைய கடவுள்.
. அவர் நம் மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்.
. அவர்கள் எகிப்தில் அன்னியர்களாக தங்கியிருந்தனர்
. அங்கே அவர்களை பெரிய இனமாக்கினார்
. கடவுள் தன் தோள் வலிமையினால் அவர்களை வெளியே கொணர்ந்தார்

.18: பாலைவனத்தில் மக்கள் திரிந்தலைந்தது, நாற்பது வருடமாக கருதப்பட்டது. இந்த காலம் அவர்களுக்கு சோதனை மற்றும் தூய்மையாக்களுக்கான காலமாகவும் கருதப்பட்டது. நாற்பது என்பது ஒரு அடையாள இலக்கமாகவும் இருக்கலாம்

.19-20: இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டை அடைய பல இன்னல்களையும் போர்களையும் சந்திக்கவேண்டியிருந்தது. கடவுள் ஏழு மக்களினங்களை அழித்துத்தான் கானானை 
இஸ்ராயேலருக்கு கொடுத்ததாக பவுல் உரைக்கிறார். இந்த மக்கள் கூட்டத்தின் பெயர்களை 
. 7,1இல் காணலாம். அத்தோடு இஸ்ராயேல் 450 ஆண்டுகள் கானானை உரிமைச் சொத்தாக கொண்டதாகவும் கூறுகிறார். இந்த காலம் நீதிபதிகளின் காலமாக இருக்கலாம். இதனை பவுல் 450 ஆண்டுகள் எனக் கணக்கிடுகிறார், இந்த கணிப்பு அக்காலத்தில் பிரபல்யமாக இருந்திருக்கலாம்
சாமுவேல் இறுதியான நீதிபதியாகவும் முக்கியமான இறைவாக்கினராகவும் இன்றுவரை 
இஸ்ராயேல் வரலாற்றால் கருதப்படுகிறார்.  
(1நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன்கண்முன்னே விரட்டியடித்து,)

.21: சவுல் அரசனானது மக்களின் விருப்பத்தினாலேயே என்று பவுல் நாசூக்காக் சொல்கிறார். சவுல் நாற்பது ஆண்டுகள் அரசான்டிருக்கிறார் என்று சொல்வது அவர் நிறைவான ஆண்டுகள் ஆட்சிசெய்தார் என்பதையும் குறிக்கலாம்

.22: இஸ்ராயேலருடைய மீட்பின் வரலாற்றில் தாவீது மாமன்னர் மிக முக்கியமானவர். இது பவுலுக்கு நன்கு தெரிந்திருந்தது. திருத்தூதர் பவுல், அரசர் சவுலுடைய பெஞ்சமின் குலத்தை சார்ந்தவர் இருப்பினும் யூதா குலத்தின் தாவீதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர் வரலாற்றை பொதுவாக பார்க்கிறார் என்பதற்கான நல் அடையாளம். அத்தோடு தாவீதை நியாயப்படுத்தி, பவுல் இறைவாக்குகளையும் கோடிடுகிறார் (தி.பா 90,20: ❀❀). இந்த இறைவாக்குகள் மூலமாக தாவீதுதான் உண்மையாக தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் என நிரூபிக்கப் பார்க்கிறார்

(20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்)
(❀❀14ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை என்றார்.)

.23: இந்த வரிதான் பவுலுடைய இந்த உரையின் மிக முக்கியமான நோக்கம். அதாவது தாவீதின் உண்மை வாரிசு இயேசு, அவரிலேதான் தாவீதின் அரியணை சாகாவரம் பெறுகிறது என்கிறார். பவுல் இயேசுவை 'மீட்பர் இயேசு' (σωτῆρα Ἰησοῦν சோடேரா ஏசூன்) என்று தைரியமாக அறிக்கையிடுகிறார்

.24: யோவானை நினைவூட்டுவதன் வாயிலாக அவர் மெசியாவல்ல, மாறாக மெசியாவிற்காக வந்தவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். அத்தோடு யோவானின் முக்கிய செய்தியாக இருந்தது மனமாற்றத்திற்கான அழைப்பே, இந்த அழைப்பு அனைத்து இஸ்ராயேலருக்கும் கொடுக்கப்பட்டது என்பதன் வாயிலாக இந்த அழைப்பிற்குள் தற்போது இதனை கேட்கிறவர்களும் உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் நினைவூட்டுகிறார்

.25: பவுல் தான் யோவானைப்பற்றி சொன்னவற்றை யோவானின் வாயிலிருந்தே எடுக்கிறார். அதாவது யோவானைப் பற்றி மக்களின் பொதுவான நினைப்பு தவறானது என்கிறார். யோவானைப் பற்றி மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதை பவுல் கூறாமல் விடுகிறார். ஒருவேளை இது பவுலின் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். (யோவானை சிலர் மெசியாவாக கருதினார்கள் என்ற வாதமும் ஆரம்ப கால திருச்சபைக்கு ஒரு சவாலாக இருந்தது). இரண்டாவதாக யோவான் தான் இயேசுவின் மிதியடிகளையும் அவிழ்க்க தகுதியில்லாதவர் என்கிறார். மிதியடிகளை அவிழ்ப்பது அக்காலத்தில் அடிமைகளின் வேலையாகக் கருதப்பட்டது. அதேவேளை மிதியடிகளை அவிழ்த்து இன்னொருவரிடம் கொடுப்பதன் மூலம் ஒருவர், குறிப்பிட்ட விடயத்தில் தனக்கு முழு உரிமையுள்ளது என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (காண்க ரூத்து 4,7). ஆக இந்த அடையாளத்தின் மூலம் யோவான் தனக்கு மீட்பு வேலையில் தகுதியோ பங்கோ கிடையாது என சொல்வதை அடையாளமாக குறிக்கிறார் எனலாம்

(7இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.)

மத்தேயு 1,1-25
இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்
இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(லூக் 3:23 - 38)

1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;
ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள்
யூதாவும் அவர் சகோதரர்களும்.
3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த
புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
பெரேட்சின் மகன் எட்சரோன்;
எட்சரோனின் மகன் இராம்.
4இராமின் மகன் அம்மினதாபு;
அம்மினதாபின் மகன் நகசோன்;
நகசோனின் மகன் சல்மோன்.
5சல்மோனுக்கும் இராகாபுக்கும்
பிறந்த மகன் போவாசு;
போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த
மகன் ஓபேது;
ஓபேதின் மகன் ஈசாய்.
6ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்
பிறந்த மகன் சாலமோன்.
7சாலமோனின் மகன் ரெகபயாம்;
ரெகபயாமின் மகன் அபியாம்;
அபியாமின் மகன் ஆசா.
8ஆசாவின் மகன் யோசபாத்து;
யோசபாத்தின் மகன் யோராம்;
யோராமின் மகன் உசியா.
9உசியாவின் மகன் யோத்தாம்;
யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா.
10எசேக்கியாவின் மகன் மனாசே;
மனாசேயின் மகன் ஆமோன்;
ஆமோனின் மகன் யோசியா.
11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
13செருபாபேலின் மகன் அபியூது
அபியூதின் மகன் எலியாக்கிம்;
எலியாக்கிமின் மகன் அசோர்.
14அசோரின் மகன் சாதோக்கு;
சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது.
15எலியூதின் மகன் எலயாசர்;
எலயாசரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு.
16யாக்கோபின் மகன்
மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே
கிறிஸ்து என்னும் இயேசு.
17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்.22-23'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

இன்றைய மத்தேயு நற்செய்தியின் வாசகப் பிரிவு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தவிர்க்கமுடியாத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. வவ 1-17 இயேசு ஆண்டவரின் பரம்பரை அட்டவணையையும், 18-25 இயேசு ஆண்டவரின் பிறப்பு நிகழ்சியையும் விவரிக்கின்றன

. மத்தேயு நற்செய்தியின் படி இயேசுவின் பரம்பரை அட்டவணை:
இந்த பரம்பரை அட்டவணையின் தலைப்பு மத்தேயு நற்செய்தின் நோக்கத்தை அப்படியே தெளிவாக வாசகர்க்கு ஆரம்பத்திலேயே காட்டிவிடுகிறது. மத்தேயு தன்னுடைய நற்செய்தியின் வழியாக இயேசுதான் ஆபிரகாமிற்கு கடவுள் வாக்களித்த ஆசீர்வாதத்தின் நிறைவு எனவும், அவரின் வாயிலாகத்தான் அனைத்து இனங்களும் கடவுளின் ஆசீரைப் பெறுகின்றன எனவும், அத்தோடு தாவீதின் உண்மையான வாரிசு இயேசுதான் என்பதையும் அழுத்தம் திருத்தமாக முன்மொழிகிறார்
பரம்பரை அட்டவணை (Γενεαλογία கெனெயலொகியா) மத்தேயுவின் கண்டுபிடிப்பு கிடையாது. ஏற்கனவே இந்த பரம்பரை அட்டவணை இலக்கியம், புராதன மத்திய கிழக்கு நாடுகளின் (ANE) வரலாற்றில் அதிகமாகவே காணப்படுகின்றது. மொசெப்பத்தோமியர், எகிப்தியர், கிரேக்கர் மற்றும் உரோமையர் என பலரும் இந்த இலக்கிய வகையை தங்கள் தேவைக்கேற்றவாறும், நம்பிக்கைக்கு ஏற்றவாறும் உருவாக்கி பாவித்திருக்கின்றனர்
இஸ்ராயேலருக்கு இந்த பரம்பரை அட்டவணை நன்கு பரிசித்தியமானதொன்றாக இருந்திருக்கிறது. முதல் ஏற்பாட்டில் ஏறக்குரைய 25 இப்படியான அட்டவணைகள் (תּוֹלֵדוֹת தொலெதொத்) காணக்கிட்க்கின்றன. ஒவ்வொன்றும் பலவிதமான தேவைகளுக்காக விசேடமாக எழுதப்பட்டன, அத்தோடு அவை எபிரேய இலக்கியத்தின் முக்கியமான வடிவங்களில் ஒன்று. இந்த பரம்பரை அட்டவணைகள் ஒருவருக்கு அடையாளத்தையும், உரிமையையும், முழு அந்தஸ்தையும் அவர் சமூக கட்டமைப்பிலே கொடுத்தது. முதல் ஏற்பாட்டு பரம்பரை அட்டவணையில் சில, ஏறு வரிசையிலும், சில இறங்கு வரிசையிலும் காணப்படுகிறது. மத்தேயுவின் பரம்பரை அட்டவணை இறங்கு வரிசை அட்டவணை. மத்தேயுவைத் தவிர புதிய ஏற்பாட்டில் இன்னொரு பரம்பரை அட்டவணை இயேசுவின் மூதாதையரைப் பொறுத்தமட்டில் காணப்படுகிறது (ஒப்பிடுக லூக்கா 3,23-38). மத்தேயுவின் அட்டவணையைப் போலல்லாது லூக்காவின் அட்டவணை அமைப்பிலும், எண்ணிக்கையிலும் இறையியலிலும் மாறுபட்டது. லூக்கா 77 நபர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஏறுவரிசையில் காட்டி இயேசுவை முதல் மனிதனான ஆதாமோடு
இணைக்கிறார். இவ்வாறு இயேசு இரண்டாவது ஆதாமாகவும், உண்மையான கடவுளின் மகனாகவும், அனைத்து படைப்புக்களின் தலையாகவும், நிறைவாகவும், அத்தோடு ஆதாமின் மீட்பராகவும் காட்டப்படுகிறார். (விவிலிய ஆய்வாளர் றேமன் பிறவுன் தன்னுடைய படைப்பான 'மெசியாவின் பிறப்பு' என்ற நூலில் இந்த புதிய ஏற்பாட்டு பரம்பரை அட்டவணைகளை அழகாக விளக்கியுள்ளார். (காண்க BROWN, R. E., The birth of Messiah. A Commentary on the Infancy Narratives in the Gosples of Matthew and Luke (London 1993).). 



மத்தேயுவின் பரம்பரை அட்டவணை சில முக்கியமான இறையியில் கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. அவை:

. மத்தேயு தன்னுடைய பரம்பரை 'அட்டவணை-இலக்கிய' வகையின் ஊடாக தொடக்க நூலை நினைவூட்டுகிறார்

. மத்தேயு ஆபிரகாமை மையப்படுத்துவதன் ஊடாக இயேசுதான் ஆபிரகாமின் உண்மையான புதல்வர் என்பதை அறிவூட்டுகிறார் (Ἰησοῦ Χριστοῦ υἱοῦ Ἀβραάμ. இயேசூ கிறிஸ்டூ ஹுய்யூ ஆப்ராம்- இயேசு ஆபிரகாமின் மகன்) ஒவ்வொரு இஸ்ராயேல் மகனுக்கும், மகளுக்கும் ஆபிரகாம்தான் அடையாளம். ஆபிரகாமின் வழிமரபில்லாமல் இஸ்ராயேல் இல்லை, ஆக 
இயேசு இஸ்ராயேல் வழிமரபின் முக்கியமான தொடக்கமும் நிறைவும் என காட்டப்படுகிறார்

. மத்தேயு நற்செய்தியில் வருகின்ற அடுத்த முக்கியமான நபர் தாவீது. பல அரசர்களை நினைவூட்டினாலும் மத்தேயு தாவீதை மட்டுமே அரசர் என அடைமொழியில் விழிக்கிறார் (τὸν Δαυὶδ τὸν βασιλέα. டொன் தாவித் டொன் பசிலெயா) ஆக தாவீது எவ்வளவு முக்கியமானவரோ அதனைவிட இயேசு மிக முக்கியமானவராகிறார். தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியின் நிறைவும், முழுமையும் இயேசுதான் என்பது மத்தேயுவின் அழகான இறையியல். மற்ற அனைத்து அரசர்களும் அழிவையும் சாபத்தையும் நோக்கியவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்

. மத்தேயு இந்த பரம்பரை அட்டவணையை மூன்றாக பிரித்து முதல் பிரிவை ஆபிரகாம் தொடக்கம் தாவீது அரசர் வரையாகவும், இரண்டாவது பிரிவை தாவீது தொடக்கம் பபிலோனிய அடிமைத்தனம் வரையாகவும், மற்றும் மூன்றாவது பிரிவை பபிலோனிய அடிமைத்தனம் முதல் கிறிஸ்துவரையாகவும் பிரித்துள்ளார். இந்த மூன்று என்ற இலக்கம் ஒரு முக்கியமான இறையியல் அடையாளம். அத்தோடு இந்த மூன்று பிரிவுகளும் பதிநான்கு (14) தலைமுறைகளை உள்ளடக்கியதாக காட்டுகிறார் (.17). அவை உண்மையாக பதிநான்காக இல்லாவிடினும், பதிநான்கு என்பதும் இன்னொரு முக்கியமான இறையியல் இலக்கம். தாவீதின் எபிரேய சொல்லின் எபிரேய எண்ணிக்கையும் ஏழாக (7) வருகிறது (דּוד). இதுவும் அவதானமாக நோக்கப்படவேண்டும் ஏனெனில் ஏழு என்கின்ற இலக்கமும் நிறைவின் அடையாளமாகும்

. மத்தேயு மிக விசேடமாக ஐந்து பெண்களை உள்ளடக்கியிருக்கிறார். அவர்கள், தாமார் (Θαμάρ தாமார்), இராகாபு (Ῥαχάβ ராகாப்), ரூத்து (Ῥούθ ரூத்), உரியாவின் மனைவி பெத்சேபா (τῆς τοῦ Οὐρίου டேஸ் டூ ஊரியூ), மற்றும் மரியா (Μαριάμ மாரியாம்). இவர்கள் தங்கள் விசேடமான வரலாற்றால் நம் பார்வையை ஈர்க்கிறார்கள்
தாமார் யூதாவின் மருமகள், இவருடைய கணவனும், யூதாவின் மூத்த மகனுமான ஏர் (עֵר), கடவுள் பார்வையில் தீயவனாக இருந்ததால் அழிந்துபோனான். வாரிசில்லாத ஏருக்காக அவன் தம்பி ஓனானை யூதா தாமாருக்கு கணவனாக கொடுத்தார். ஓனான் செய்த அசிங்கமான காரியம் அவனையும் அழித்தது. இரண்டு மகன்களையும் இழந்த யூதா தன் இளைய மகன் சேலாவை தாமாருக்கு கொடுக்க தயங்கினார். சட்டப்படி இறந்த சகோதரர்களுக்கு வாரிசு இல்லாவிடின், உயிரோடிருக்கும் சகோதரர்கள் இறந்த சகோதரரின் மனைவியை மணந்து வாரிசு உண்டாக்க வேண்டும் என்பது இவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாக இருந்தது. இருப்பினும் யூதா பயத்தினால் சேலாவை தாமாருக்கு மணமுடிக்கவில்லை. தாமார் இறந்த தன் மூத்த கணவனுக்கும் தன் மாமாவின் வீட்டிற்கும் வாரிசு உண்டாக்குவது ஒரு நல்ல மருமகளின் கடமை என உணர்ந்து ஒரு விலைமாது போல் நடித்து, தன் மாமாவுடன் (யூதா) உறவுகொண்டு வாரிசு உருவாக்கினார்
இதனைக் கண்ட யூதா தன் தவறை உணர்ந்து, தாமாரை உண்மையான பெண்மணியாக ஏற்றார். (காண்க தொ.நூல் 38), (மத் 1,3). 
இராகாபு எரிக்கோவின் விலைமகளாக அறிமுகமாகிறார். யோசுவாவின் உளவாளிகள் எரிக்கோவையும் முழு கானானையும் உளவு பார்த்தபோது, இராகாபு இஸ்ராயேலின் கடவுளின் வல்லமையை அறிந்தவராய் உளவாளிகளுக்கு தன் வீட்டில் ;டம் கொடுத்தார். இதற்கு மரியாதை செய்யும் விதமாக எரிகோவை கடவுள் அழித்த போது இவருடைய வீடு மட்டும் தப்பித்துக் கொள்கிறது. யோசுவாவும் இவர் வீட்டாருக்கு வாழ்வாதாரம் கொடுக்கிறார். (காண்க யோசுவா 2,15-18. மற்றும் 6). முதல் ஏற்பாட்டில் நம்பிக்கைக்கு ஒரு நல்ல உதாரணமாக இராகாபு திகழ்கிறார். மத்தேயு இராகாபை போவாசின் தாயாக அட்டவணையிடுகிறார் (காண்க மத் 1,5).
ரூத்து போவாசின் மனைவியும் நாவோமியின் அன்பு மருமகளுமாவார். ரூத்து புத்தகம் காலத்தால் அழியாத மனிதநேயத்தின் தெய்வீக காவியம். மாமி மருமகளுக்கான உறவிற்கு தெய்வீக சாயல் கொடுத்தவர் ரூத்து. இவர் மோவாபிய பெண்மணி. நாவோமியின் மூத்த மகனுக்கு மனைவியாக மோவாபிலே தெரிவுசெய்யப்படுகிறார். மோவாபிலே நாவோமியின் கணவரும், இரண்டு மகன்களும் இறந்து போகவே நாவோமி தன் தாயகம் (யூதேயா) நோக்கி பயணமாகிறார். அப்போது தன் வயது முதிர்ந்த மாமியாரை தன்தாயைப் போலவே நோக்கி அவருடைய நாட்டிற்கு வந்து அவர் கடவுளுளையும், நாட்டையும், மக்களையும் தன்னுடையதாக்குகிறார் ரூத். போவாஸ் என்ற வயது முதிர்ந்த மனிதரை திருமண முடிக்கவும் இதன் மூலம் தன் மாமியாருக்கும், இறந்த கணவருக்கும் வாரிசு தேட இவர் செய்யும் நியாயமான முயற்சிகள் மிகவும் இனிமையானவை மற்றும் ஆழமானவை. பொறுப்புணர்ச்சிக்கும், அன்பிற்கும், பிரமாணிக்கத்திற்கும் ரூத்தை மிஞ்ச முதல் ஏற்பாட்டில் யாருமில்லை (காண்க ரூத்து 1,16-18. 4,18-22). மத்தேயு தன் பரம்பரை அட்டவணையில் ரூத்தை தாவீதின் பேத்தியாக்குகிறார்; (பாட்டி) (காண்க மத் 1,5).   
பெத்செபா இவர் உரியாவின் மனைவி. இவருடைய கணவர் தாவீதின் படையில் முக்கியமான தகுதிவாய்ந்த வீரராக இருந்தவர். இவர்கள் இத்திய இனத்தை சார்ந்தவர்கள். இத்தியா பலாஸ்தீனாவிற்கு வடக்கே இருந்த மிக முக்கியமான பேரரசு. முற்காலத்தில் எகிப்திற்கு சவாலான ஒரு எதிரிப் பேரரசு. இன்றைய துருக்கியின் தென் கிழக்கு பிராந்தியம். இந்த இடத்தின் பல வீரர்கள் மற்றைய நாட்டில் வாடகைக்கு போர்வீரர்களாய் இருந்தனர். உரியாவும் இப்படியான வரலாற்றை கொண்டவராக இருக்கலாம். முக்கியமான ஒரு போரிலே உரியா, தாவீதிற்காக போர்செய்த வேளையில், தாவீது நயவஞ்சகமாக அவர் மனைவியை தன்னுடையவளாக்கினார். இந்த குற்றத்தை மறைக்க உரியாவையும் அன்நியர் கையாலே சாவடித்தார். இதற்கு தகுந்த தண்டனையையும் அவர் பெற்றார். இந்த பெத்சேபாதான் சாலமோன் மன்னனின் தாயாரும், தாவீதின் முக்கியமான அரசியல் பொறுப்பாளியுமாவார். நல்லதொரு தாயாக இவர் காட்டப்பட்டாலும், ஆண் ஆதிக்க சமூதாயத்திலே பெண்களின் பலவீனத்திற்கான நல்லதொரு அடையாளம் இவர். அந்த நாள் சமுதாயம் எப்படியெல்லாம் பெண்களை துஷ்பிரயோகம் செய்தது என்பதற்கு இவர் ஒரு வாழும் அடையாளம் (காண்க 2சாமு 11,1-12,25). மத்தேயு இவரையும் இயேசுவின் மூதாதையரின் அட்டவணையில் பிழையின்றி உள்வாங்குகிறார் (காண்க மத் 1,6)
மரியா, நான்கு நற்செய்திகளிலும் இயேசுவிற்கு அடுத்த படியாக மிக முக்கியமான கதாபாத்திரம். இவர் நாசரேத்தூர், சாதாரண யூத குலப் பெண். லூக்கா இவரை தாவீதின் வழிமரபு என்கிறார். மத்தேயுவிற்கு இவர் யோசேப்பின் வாயிலாக தாவீதின் வழிமரபு. யோசேப்பிற்கு மண ஒப்பந்தமாகியிருக்கையில் தூய ஆவியால் இவர் இயேசு ஆண்டவரை கருத்தரிக்கிறார். உலகில் தோன்றிய பெண்களில் இவர்தான் உன்னதமான பெண்ணாக திருச்சபை இவரை மரியாதை செய்கிறது. இயேசுவின் பிறப்பும், இவருக்கு வானதூதர்கள், இடையர்கள், அயலவர்கள், மற்றும் நண்பர்கள் சொன்ன வாழ்த்துக்களும், இவரை கடவுளின் அருளைக் கண்டடைந்த ஒரே உத்தம, தூய பெண்ணாக அடையாளம் காட்டுகிறது (லூக்கா 1,28)
மத்தேயு இந்த வீரப் பெண்மணிகளை உள்வாங்கியதன் வாயிலாக இயேசு ஒரு சாதாரண தலைவர் அல்ல எனவும், இஸ்ராயேலின் கடவுள், ஆண்ணாதிக்க கடவுள் இல்லை எனவும் ஆழமாகச் சொல்கிறார். கடவுள் அனைத்து வரையறைகளையும் கடந்தவர், மனித சிந்தனைக்கு கட்டுப்பட்டவர் அல்லர், அத்தோடு மனித குலத்தின் தொடர்ச்சி பெண்களின்றி கிடையாது என்பதையும் அழகாக காட்டுகிறார். (குணமாக்க முடியாத ஆண்நோய் பிடித்தவர்களுக்கு இது புரிந்தால் சரி- ஈழத்தின் வரலாறு பெண்களை மறக்க முடியாதது, இதனை முதலில் பெண்கள் உணர வேண்டும்). 


. 18: இயேசுவின் பிறப்பு மறைபொருளை ஒரே வரியில் அறிமுகப்படுத்துகிறார் மத்தேயு. இப்படித்தான் இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்று கூறி பிழையான வதந்திகளை நிறுத்தவோ, அல்லது இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளை அறியாதவர்களுக்கு அதனை அறிவிப்பதையோ மத்தேயு நோக்கமாகக் கொண்டிருக்கலாம். இயேசு மரியாவையும் யோசேப்பையும் இரண்;டாம் தடவையாக அறிக்கையிடுகிறார். மரியா யோசேப்பிற்கு மண ஒப்பந்தமானவர் என்று மத்தேயு கூறுவதன் வாயிலாக இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதை காட்டுகிறார். மண ஒப்பந்தம் (μνηστεύω ம்னேஸ்டெயுஓ) என்பது கிட்டத்தட்ட தமிழ் திருமண நிச்சயதார்த்தத்தைக் குறிக்கும். இது திருமணத்திற்கு முன் செய்யப்படுகின்ற ஒரு சடங்கு, இதன் பின்னர் மணமகள் தன் பெற்றோரின் வீட்டில் இருந்தாலும் அவர் மண ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் பெண்ணாகவே கருதப்படுவார். இந்த வேளையில் இவர் வேறு ஆணுடன் உறவு வைத்தால், அதுவும் திருமணத்திற்கு எதிரான பாவமாகவே கருதப்படும்
மரியா திருமணமாவதற்கு முன் கருவுற்றிருந்ததாகவும் அதற்கான காரணம் தூய ஆவியார் என்பதையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். திருமணம் என்பது கிரேக்க விவிலியத்தில் கூடிவருதல் (συνέρχομαι சூனெர்கொமாய்) என்பதைக் குறிக்கிறது. லூக்கா நற்செய்தி வாசகர்களுக்கு இந்த தூய ஆவியாரின் செயற்பாடுகள் நன்கு தெரிந்திருக்கும், அந்த நற்செய்தியில் இந்த பகுதி இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த பகுதிகளை தன் வாசகர்கள் நன்கு அறிந்திருந்த காரணத்தால் மத்தேயு அதனை சுருக்கமாகச் சொல்கிறார் போல

.19: மத்தேயு யோசேப்பிற்கு கொடுக்கும் வரைவிலக்கணம்: Ἰωσὴφ δὲ ὁ ἀνὴρ αὐτῆς, δίκαιος (யோசேப் தெ ஹொ ஆனெர் அவுடேஸ், திகாய்யோஸ்) யோசேப்பு அவர் ஒரு நேர்மையான மனிதர். மத்தேயு ஒரு யூத கிறிஸ்தவர் என்றால் அவருக்கு நேர்மையாளருக்கான வரைவிலக்கனம் நன்கு தெரியும். கடவுளின் சட்டங்ளை கடைப்பிடிப்பவர்தான் முதல் ஏற்பாட்டில் நேர்மையாளராக கருதப்படுவார். விவிலியத்தில் முதலில் நோவா ஒரு நீதிமானாக அறிமுகப்படுத்தப்படுகிறார் (காண்க தொ.நூல் 6,9). வெளிப்பார்வையில் கடவுளின் சட்டத்தை மீறுகிறவர் போல காணப்படுகிற யோசேப்பு நீதிமானாக கருதப்படுபது, மத்தேயுவின் சட்டம் பற்றிய உண்மையான அறிவைக் காட்டுகிறது. (✻✻ஒப்பிடுக வி.. 20,14). யோசேப்பு மனித பார்வையில் சட்டத்தை, வார்த்தைக்கு மட்டும் கடைப்பிடிப்பவரானால், அவர் மரியாவிற்கு தண்டனை தர முயற்சி எடுத்திருப்பார் (✻✻✻லேவி 20,10). அவருக்கு மரியாவின் கர்ப்பத்திற்கான காரணம் தெரியாதிருந்தும், தண்டனை தர முயற்சிக்காமல், இன்னொரு படி மேலே சென்று ஒரு பெண்ணை இகழ்ச்சிக்கு உட்படுத்த விரும்பாதவாரக இருக்கிறார். இவர் ஒரு உண்மையான யூதன். இந்த ஒரு வரிமட்டுமே போதும் அவர் இயேசுவின் வளனாரகாவும், நீதிமானாகவும் இருக்க. அவர், அதேவேளை மரியா பாவியாக 
இருந்தால் அவருடன் வாழவும் விரும்பவில்லை, இது அவருக்கு நீதியானதே. எனவே மரியாவை மறைவாக விலக்கிவிட தீர்மானிக்கிறார். இதற்கான வழிமுறைகள் மோசேயின் சட்டங்களில் இருந்தன

(நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்).
(✻✻விபசாரம் செய்யாதே).
(✻✻✻அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.)

.20: யோசேப்பின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கடவுளின் தூதர் மூலம் வருகிறது. மரியாவின் கருவிற்கு காரணம் தூய ஆவியார் என்பது அறிவுறுத்தப்படுகிறது. கடவுளின் தூதருக்கு மத்தேயு பெயர் கொடுக்கவில்லை. அத்தோடு யோசேப்பின் கலக்கம் நியாயமான கலக்கமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்தேயு இரண்டு முறை (.18 மற்றும் .20) தூய ஆவியாரை மையப்படுத்துவதன் மூலம் (πνεύματος ἁγίου புனூமாடொஸ் ஹகியூ), இயேசுவின் பிறப்பு, தூய ஆவியாரின் செயலால்தான் நடைபெறுகிறது என்பதை ஆழப்படுத்த முயல்கிறார்,

.21: மரியாவிடம் பிறக்கப்போகிறவரைப் பற்றியும் யோசேப்பிற்கு சுருக்கமாக சொல்லப்படுகிறது. மரியாவிற்கு பிறக்கப்போகிறவர் ஒரு மகன். அவருக்கு இயேசு என்று பெயரிடுமாறு யோசேப்பிற்கு சொல்லப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் இந்த கட்டளை மரியாவிற்கு கொடுக்கப்பட்டது (காண்க லூக் 1,31). பெயரைப் பொறுத்த மட்டில் இரண்டு நற்செய்தியாளர்களும் ஒருமித்து இருக்கிறார்கள். இயேசு என்னும் பெயருக்கும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. இயேசு என்றால் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்கிறவர், என்கிறார் வானதூதர்

இயேசு (Ἰησοῦς ஏசூஸ்): இந்த உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர். இவருடைய பிறப்பாலே உலகத்தின் காலங்கள் முன், பின் என பிரிக்கப்பட்டன. மத்தேயுவிற்கு இவர் மீட்பரும் மெசியாவும். லூக்காவிற்கு இவர் பிரபஞ்சத்தின் கடவுள், மாற்குவிற்கு இவர் இறைமகன், யோவானுக்கு இவர்தான் முதல் ஏற்பாட்டின் கடவுளாகிய ஆண்டவர். இயேசு என்ற பெயரை ஒவ்வொரு நற்செய்தியாளர்களும் அப்படியே பாவிக்கின்றனர். இயேசு என்பதற்கு 'கடவுள் மீட்கிறார்' என்று பொருள். கடவுள் இவருக்கு உதவியாக இருக்கிறார் என்ற பொருளும், இயேசு என்ற பெயருக்கு உண்டு. இந்த பெயரின் எபிரேய வடிவம் יְשׁוּעָה யெஷு'ஆஹ் என்று வரும். இதன் அரமயிக்க வடிவம் יֵשׁוּעַ (யேஷுவா') என்று வரும். ஆனால் அர்த்தம் அனைத்து மொழியிலும் ஒன்றாகவே 
இருக்கிறது

(இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.)

வவ.22-23: மத்தேயு இங்கே எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார் ஆனால் மத்தேயுவின் வார்த்தைகள் செப்துவாஜின்து விவிலியத்தையே ஒத்திருக்கிறது.

மத்தேயு: ἰδοὺ ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ  καλέσουσιν τὸ ὄνομα αὐτοῦ Ἐμμανουήλ, (பார்தெனொஸ் கன்னி)
செப்துவாஜின்து: παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ καλέσεις τὸ ὄνομα αὐτοῦ Εμμανουηλ· . (பார்தெனொஸ் கன்னி)
הִנֵּ֣ה הָעַלְמָ֗ה הָרָה֙ וְיֹלֶ֣דֶת בֵּ֔ן וְקָרָ֥את שְׁמ֖וֹ עִמָּ֥נוּ אֵֽל׃  
எபிரேய விவிலியம் (ஹா'அல்மாஹ்- இளம்பெண்
மத்தேயுவிற்கு இது இறைவாக்கின் நிறைவு, அவர் கன்னியின் மகன், அவர் இம்மானுவேலன் அதாவது அவர் 'கடவுள் நம்மோடு'. 

. 24: இந்த வரியின் மூலம் யோசேப்பு கனவில்தான் காட்சி காண்கிறார் என்பது புலப்படுகிறது. லூக்காவில் மரியா உண்மையாகவே வானதூதரைக் காண்கிறார். அக்காலத்தில் கனவு ஒரு முக்கியமான கடவுளின் வெளிப்படுத்தல் ஊடகமாகக் கருதப்பட்டது (ὕπνος ஹஉப்னொஸ் கனவு).

.25: இந்த வரியை பலர் தங்களுக்கு தேவையான முறையில் திரித்துக் கூறுகின்றனர். ஆனால் இதன் கிரேக்க பாடம், இயேசுவையே மையப்படுத்துகிறது. அதாவது யோசேப்பிற்கு 
இயேசுவின் கருத்தரிப்பில் தொடர்பில்லை என்பதே இங்கே எழுவாய்ப் பொருள். மரியாவுடன் யோசேப்பு தொடர்பு வைத்திருந்தால் பிறந்தவர் யோசேப்பின சொந்த மகனாகவே கருதப்பட்டிருப்பார். அத்தோடு, அவர் கடவுளின் மகன் எனக்காட்டவே, மத்தேயு மரியா யோசேப்பின் உறவை மையப்படுத்துகிறார். இதனை விடுத்து, சொந்த தர்க்கத்திற்காக மரியாவையும், யோசேப்பையும் வாத-விதாதத்திற்கு எடுப்பது நியாயமாகாது
  

இயேசுவின் பிறப்பு முழு மனித குலத்துக்குமான முழுமையான ஒரு நற்செய்தி,
இன்று இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிறவர்களுள் அதிகமானவர்களுக்கு எதிராகத்ததான் 
அன்று இயேசுவின் சிந்தனைகளும் செய்தியும் அமைந்தது
இயேசு அரசியல், சமய, சமூக முதலைகளுக்குத்தான் சாட்டையடித்தார்.
இன்று வாணிப கூடங்களும், மதுக் கடைகளும், கொள்ளையரின் குகைகளுமே
விமரிசையாக கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகின்றன
இவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு ஒரு களியாட்டம்
ஆனால் இயேசுவின் அன்பு மக்களான
பெண்கள், சிறுவர், ஏழையர், கைவிடப்பட்டோர், உதவியற்றோர், பலவீனமானவர்,
நல்மனத்தோருக்கு இவ்வருட கிறிஸ்து பிறப்பும் சவாலகவே இருக்கிறது.

அன்பு ஆண்டவரே உம்முடைய பிறப்பு ஒரு நினைவுமட்டுமே,
ஏனெனில் நீவீர் ஏற்கனவே பிறந்து எம்மில் வாழ்கிறீர் 
என்பதை உணரப்பண்ணும்
இந்த நத்தார் எமக்கு அருள் வழங்க பிறந்து, வாரும். ஆமென்.


அனைவருக்கும் இனிய இயேசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(துன்புறும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்). 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...