புதன், 16 டிசம்பர், 2015

Fourth Sunday of the Advent




20 டிசம்பர் 2015 திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு
முதல் வாசகம், மீக்கா 5,1-4
ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்
2நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும்இ இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். 3ஆதலால் பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். 4அவர் வரும்போது ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில் உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; 5அவரே அமைதியை அருள்வார்.

எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யூதேயா இறைவாக்கினர் மீக்காவுக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பன்னிருவருள் இவர் ஆறாமவர். மீக்கா என்பதன் முழுவடிமாக மீக்காயா என்று வரலாம் (מִיכָיָה மீக்காயா, கடவுளைப்போல் யார்? ). பல அழகான இறைவாக்குகனை கொண்டு;ள்ள இந்நூல் திருவருகைக்காலத்தில் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றது. இவ்விறைவாக்கினர் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா காலத்திலும் மற்றும் இறைவாக்கினர்களான எசேயா, ஆமோசு, ஓசேயா  போன்றவர்களுடைய காலத்திலும் இறைவாக்குரைத்துள்ளார். இவருடைய காலத்தில்தான் வட அரசு அசிரியரிடம் வீழ்ந்ததும், தென்அரசு அசீரியர்களின் ஆக்கிரபிப்பை சந்தித்ததுமாகும். அரசியல் நிச்சயமற்ற காலங்களில் எழுந்த இந்த இறைவாக்கு, அடிப்படையில் தென்னரசுக்கு நம்பிக்கையை கொடுப்பதாக அமைகிறது.

வ.2. அ. எப்ராத்தா எனப்படும் பெத்லகேம: (בֵּֽית־לֶ֣חֶם אֶפְרָ֗תָה எப்ராத்தாஹ் பேத் லெஹெம்): எப்ராத்தா, பெத்லேகேமிற்கு ஒத்த கருத்துச் சொல்லாகவே அல்லது பெத்லேகேமின் மாகாணத்தை குறிப்பதாகவே அமையலாம்.

ஆ. இஸ்ராயேலே என் சார்பாக: தென் நாட்டவருடைய சிந்தனையை அழகாக இவ்வார்த்தைகள் காட்டுகின்றன. வட நாடு, தென் நாடு என்று இருந்தாலும் கடவுளுடைய வாக்களிப்பட்ட நாடு ஒன்றுபட்ட இஸ்ராயேலே, அதன் தலைவர் தாவீதின் வழிமரபே, என்பது மீண்டும் மீண்டும் இறைவாக்குகளில் வருவதைக் காணலாம். (நம்முடைய பல அரசியல் தலைவர்களும் மக்களும், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கவேண்டும் என விரும்புவதைப்போல என்றும் எண்ணலாம்)

ஆ. உன்னிடமிருந்தே தோன்றுவா: தாவீதின் வழிமரபு என்பது தென்நாட்டு அரசர்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி, சில இறைவாக்கினர்களுக்கும் சரி மிகவும் முக்கியமான கருப்பொருள். அரசியல் குழப்பங்கள் நடைபெறும் மீக்காவின் காலத்தில் மீட்பர் அல்லது எதிர்கால ஆட்சியாளர் தாவீதின் வாரிசாகவே இருப்பார் என்பது மீக்காவுக்கு மிகவும் முக்கியமான சிந்தனை.

இ. ஊழி ஊழிக் காலம: (מִקֶּ֖דֶם מִימֵ֥י עוֹלָֽם மிகெதெம் மிமெ ஓலாம்) புராதன நாட்களிலிருந்து நித்தியத்திற்கு என மொழிபெயர்க்கலாம். இவ்வார்த்தைகள் அரசியல் எதிர்காலமில்லாமலிருந்த இருந்த தென்நாட்டு மக்களுக்கு நிச்சயமாக நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

வ.3. அ. பேறு கால வேதனை|: (יוֹלֵדָ֖ה יָלָ֑דָה யோலெதா யாலாதா) இது உருவகிக்கப்பட்ட எருசலேமின் வேதனைகளைக் குறிக்கிறது. அதாவது எருசலேமில் வேதனைகள் நடந்தே தீரும், ஆண்டவர் அதனை அனுமதிக்கவேண்டியிருக்கிறது.

ஆ. எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களிடம் திரும்புவார்கள்: இதுவே இவ்விறைவாக்கினுடைய மையமாக இருக்கும் என எண்ணுகிறேன். கடவுள் ஒட்டுமொத்தமாக கைவிடமாட்டார் எனும் சிந்தனை.

வ.4. இங்கு எழுவாய்பொருள் மாறுவதை அவதானிப்போம். அவர் வரும்போது| யார் இவர்?: ஏற்கனவே மீக்கா குறிப்பிட்ட ஆட்சியாளர் (மோட்ஷேல் מוֹשֵׁ֖ל) என்பதனைக் குறிக்கும். அப்போது நடைபெறுபவை விவரிக்கப்படுகின்றன:

ஆண்டவரின் வலிமையோடும், பெயரின் மாட்சியோடும் விளங்குவா: மீக்கா கால அரசர்களைப்போல பலவீனமானவர்களாகவும், மாட்சியற்றவர்களாகவும் இரார். அவரின் வல்லமையும் மாட்சியும் கடவுளேயாவார் என்கிறார்.

மந்தையை மேய்ப்பர்: மந்தையை மேய்க்கும் தன்மை, இஸ்ராயேல் மக்களுக்கு கடவுளுடைய அரவணைப்பையும் அன்பினையும் இலகுவாக காட்டக்கூடிய ஒரு உருவகம். யோவானும் பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இயேசு ஆண்டவரை நல்ல ஆயனாக சித்தரிப்பதும் இதே நல்லெண்ணத்தோடே (காண். யோவான் 10,11)

வரலாற்றில் ஆயத்துவம் அதிகாரத்துவமானது அநியாயமானது !!!.

அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள: மக்கள் எவ்வாறு அச்சமின்றி வாழ்வார்கள் என்பதற்கு விடையாக அடுத்த வரிவருகிறது. இந்த ஆட்சிசெய்கிறவரே உலகின் கடை எல்லைவரை ஆட்சி செய்வார். இதனால் அரசியல் பேராசைகள், நாடு பிடித்தல்கள், இனவழிப்புக்கள், மதமாற்றங்கள், இனமாற்றங்கள், கொள்ளைகள் இடம்பெறாது என ஒரே வரியில் சொல்கிறார் மீக்கா.

அமைதி: (שָׁל֑וֹם லோம், அமைதி) எபிரேய மூலப் பிரதி அவரே-அதுவே இந்த அமைதி என காட்டுகிறது. பயத்தில் நடுங்கும் தென்நாட்டினர்க்கு, எசக்கியா அரசர் அல்ல, ஆண்டவரே அமைதியாய் இருப்பார் என காட்டுகிறார், ஆண்டவரே அமைதியாய் வருவார் என்பது எத்துணை ஆழமான செய்தி. (தமது அமைதிக்காக மற்றவர்களை பயமுறுத்தும் தலைவர்களுக்கு இது விளங்கினால் எத்துணை நலம்)

பதிலுரைப்பாடல், திருப்பாடல் 80, நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்

1இஸ்ரயேலின் ஆயரேஇ செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரேஇ ஒளிர்ந்திடும்!முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! 
14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 
15உமது வலக்கை நட்டுவைத்த கிளையைஇ உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! 16அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால்இ அவர்கள் அழிந்துபோவார்களாக! 
17உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 
18இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். 
19படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!

இருபது வரிகளைக் கொண்டமைந்த இப்பாடல், ஒரு குழு வேதனைப்பாடல் என்பது பல விவிலிய வல்லுநர்களின் கருத்து.

வ.1. கடவுளுக்கு பல வரலாற்றனுபவ பெயர்களைக் கொடுத்து, கடவுளைத் தொடநினைக்கிறார் ஆசிரியர்:
இஸ்ராயேலின் ஆயர், யோசேப்பின் மேய்ப்பர், கேருபுகளில் வீற்றிருப்பவர், என்பவை இதனையே குறிக்கின்றன.

வ.14. திராட்சைக்கொடி: இது இஸ்ராயேல் மக்களுக்கான இன்னொரு உருவகம்.

வ.15. இந்த திராட்சைக்கொடியின் தற்போதைய நிலைமை வர்ணிக்கப்படுகிறது.

வ.17. ஏன் கடவுள் இந்த திராட்சைகொடியை காக்க வேண்டும் என்பது கடவுளுக்கு நினைவூட்டப்படுகிறது. வலப்புறம் இருக்கிறவர்| மானிட மைந்தர் இவர்கள் யார் என்பதை அறிவது கடினம். முழு மக்களையும் குறிக்கலாம் அல்லது அக்கால தலைவர்களையும் குறிக்கலாம். திருப்பாடல்களின் முக்கிய பண்பான சபித்தலை அழிந்துபோவார்களாக என இங்கே காணலாம்.

வ.18. அகலமாட்டோம், தொழுவோம : இவ் வசனங்கள், பழைய பாவ வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது. இறைவனை விட்டு அகலாமலிருப்பதும் அவரை தொழுதலுமே முக்கியமென காட்டப்படுகின்றன.

வ.19. அ. இந்த திருப்பாடலின் முக்கிய மைய வேண்டுதல் இதுவாகும். முன்னைய நிலைக்கு கொணர்ந்தருளும். பின்னைய நிலைமை மோசமாக இருக்கிறபோது மனங்கள் பழைய நல்ல நிலைகளை நினைப்பது, அன்றும் இருந்திருக்கிறது என்னும் உணர்வினை இங்கு காணலாம். (நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற நமது நாட்டார் பழமொழி ஞாபகம் வருகிறது)

ஆ. முக ஒளியைக் காட்டியருளும்|: அநேகமாக கடவுளுடைய சிரிப்பை இது குறிக்கலாம். (காண்: சபை உரை 8,1: எண் 6,25: தி.பா 4,6: தானி 9,17). கடவுளுடைய முகத்தின் சிரிப்பு அல்லது ஒளி மீட்பைக் கொணர்கிறது என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது.

இரண்டாம் வாசகம், எபிரேயர் 10:5-10
5அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோதுஇ 'பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லைஇ ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். 6எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. 7எனவே நான் கூறியது: என் கடவுளேஇ உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது' என்கிறார்.
8திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும் 'நீர் பலிகளையும் காணிக்கையையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல' என்று அவர் முதலில் கூறுகிறார். 9பின்னர் 'உமது திருவுளத்தை நிறைவேற்றஇ இதோ வருகின்றேன்' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். 10இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

இதனை திருமடல் என்பதைவிட, புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற அழகான இறையியல் தொகுப்பு என்பதே சாலப் பொருந்தும். முன்னர் இதனை பவுல் அடிகளார் எபிரேயர்க்கு எழுதிய திருமுகம் என கருதினர், பின்னர் (தற்போது) இதன் காலத்தையும் இடத்தையும் அறியமுடியாமல், இதனை பவுல் எழுதவில்லை, எபிரேயர்க்கும் எழுதப்டவில்லை, இது கடிதமும் இல்லை என வாதிடுகின்றனர். இந்த ஆய்வுகள் இதன் பெருமையை குறைப்பாதற்காகவல்ல. மாறாக இதனுடைய உண்மை செய்தியையும் அதன் ஆழத்தையும் கண்டுபிடிக்கவே ஆகும் என்பதை கவனமாக நோக்க வேண்டும். அநேகமாக இது ஓர் அழகான கிறிஸ்தியல் தர்க்க பிரசங்கம் போல தோன்றுகிறது.

வ.5-6. இங்கு பேசுகிறவர் இயேசு போல தென்படுகிறவாறு எழுதப்பட்டுள்ளது. பலியையும் காணிக்கையையும் இந்த வரிகளுக்கு பின்னால் ஒரு முதல் ஏற்பாட்டு கருத்தியல் காணப்படுகிறது. மிருக பலிகள் பொய்த்துப்போனதையும், கடவுளுக்கு அவை தேவையில்லை என்பதையும் பல பின்னைய இறைவாக்கினர்கள் எடுத்துரைத்தனர். எருசலேம் ஆலயத்தின் அழிவும் இதற்க்கு ஒரு காரணம். ஆசிரியர் இவ் வசனங்களை செப்துவாயிந்த் திருப்பாடல் 39,7-9 வரையான பகுதியிலிருத்து காட்டுகிறார். இங்கு சொல்லப்படுகின்ற செய்திகளாவன:

அ. பலியையும் காணிக்கையையும் கடவுள் விரும்பவில்லை (θυσίαν καὶ προσφορὰν தூயசியா புரஸ்பொரா), இங்கு சாமுவேல் சவுலுக்கு சொன்னது ஞாபகம் வருகிறது. (காண்: 1சாமு 15,22 ஒசேயா 6,6: மத் 9,13) மனிதர் தங்களை கடவுளின் சாயல், படைப்புக்களில் உயர்ந்தவர் என்று சொல்லி, சாதுவான உயிர்களை தங்கள் தெய்வங்களுக்கு பலியிடுகின்றனர். அறிவு வளர்ந்துள்ளது எனச் சொல்லும் இக்காலத்திலும் இது நடக்கிறது, எமது சில ஆலயஙகளிலும் நடக்கிறது. மிருகங்கள் தங்களை கடவுளின் சாயல் எனச் சொல்லி மனிதரை பலியிட்டால் எப்படி இருக்கும்? அவைகளையும் (அவர்களையும்) கடவுள்தானே படைத்தார்.

வ.7. திருப்பாடலில் பேசுகிறவர் யார் என்பதனை கண்டறிய கடினமாக இருக்கும், இது அரசரை அல்லது மக்களையோ குறிக்கலாம், இங்கே எபிரேயர் நூலின் ஆசிரியர்க்கு, இவர் இயேசு ஆண்டவர்.

ஆ. திருநூலில் எழுதப்பட்டுள்ளது இவ்வாறு இயேசுவை முதல் ஏற்பாட்டின் இறைவாக்குகளில் நிலை நிறுத்துகிறார் ஆசிரியர்.

வ.8. திருச்சட்டப்படி| (תּוֹרָה தோரா, νόμος நோமோஸ்) அதிகமாக தவறாக அறியப்பட்ட ஒரு முக்கியமான நல்ல சொல் இதுவாகும். பலிகள் சட்டப்படி நடப்பதால் அது தூய்மையானது என்ற கருத்து பல வேளைகளில் தேவையற்ற பலிகளுக்கும் உயிர் கொடுத்தது ஆனால் சட்ட வரிகளுக்கு உயிர்கொடுப்பது திருச் சட்டமல்ல மாறாக திருச்சட்டத்தின் முதலாளியான கடவுளே என்ற இயேசு ஆண்டவரின் படிப்பினையை மறைமுகமாக காட்டுகிறார்.

நீர் விரும்பியிருக்கவுமில்லை திருப்திப்பட்டிருக்கவுமில்லை| என்;பது, ஒரு இறந்த கால தொடர்ச்சியை காட்டுகிறது.   கிரேக்க மொழியில் இறந்தகால வினைமுற்று வாக்கியம் ஒன்று பாவிக்கப்பட்டுள்ளது. இது கடவுள் எதை விரும்புகிறார் என்பதை கேள்வியாக்கி அதற்க்கு விடையை 9வது வசனத்தில் கொணர்கிறது.

வ.9. திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்| - இதுதான் பல முன்னனி இறைவாக்கினருடைய இறைவாக்கின் சாராம்சம். அதனை ஆசிரியர் இயேசுவின் முழு வாழ்க்கைக்கும் ஒப்பிடுகிறார். அத்தோடு ஆண்டவரின் திருவுளத்தின் முன் சட்டங்கள் செயலற்றவை எனவும் வசனத்தின் இறுதியில் காட்டுகிறார்.

வ.10. எபிரேயர் நூலின் கிறிஸ்தியலில் முக்கியமான ஒரு பகுதி இயேசுவின் நித்திய குருத்துவமாகும். இந்த வசனம் இயேசுவின் குருத்துவத்தின் தன்மையையும், பலிப்பொருளையும், காலத்தையும் காட்டுகிறது. செலுத்தியவர் இயேசு, மனித குரு அல்ல. செலுத்தப்பட்டது அவர் உடல், மிருகங்கள் அல்ல,
காலம் நித்தியத்திற்கும், இனி வேறு பலிகள் தேவைப்படாது என்கின்றார்.

நற்செய்தி, லூக்கா 1,39-45
மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்

39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42அப்போது அவர் உரத்த குரலில் 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' என்றார்.

ஈழத்தில் பிள்ளைகளை தொலைத்த தாய்மார் ஒவ்வொர் ஆணைக்குழுக்களுக்கும் பின்னால் சென்று களைத்து, தற்போது  சனாதிபதி ஆணைக்குழுவிற்கு பின்னால் சென்று கண்ணீர்வடிக்கும் இக்காலத்தில், லூக்கா அன்னை மரியா ஷஎயின் கரேம்| என்ற யூதேய மலைநாட்டுக்கு சென்ற வரலாற்றை தனது சாயலில் வர்ணிக்கிறார். எருசலேமின் மேற்கு மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த உயர் நகர், எருசலேமிலிருந்து 7.5 கி.மீ தொலைவில் உள்ளது. யூதர்கள், எரேமியா இறைவாக்கினர் எருசலேமை தாக்க வந்தவர்களை கண்காணிக்க சிறுவர்களை இங்கே அமர்த்தினார் என நம்புகின்றனர் (காண். எரே 6,1), கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு யோவானின் இரண்டு வீடுகளையும், அன்னை மரியாவின் நீர் ஊற்று இடத்தையும் கொண்டு இது விளங்குவதால் முக்கியம் பெறுகிறது. இங்குள்ள எலிசபேத்தின் ஆலய வீட்டில் நம்முடைய அழகு தமிழிலும், சகோதர சிங்கள மொழியிலும் செபங்களைக் காணலாம். (சுப்பர்லிங் வான்சேவைக்கு நன்றி). ஷஎயின் கரேம்| என்றால் ஷதிராட்சை தோட்ட நீர் ஊற்று| என்று பொருள.

அன்னை மரியா 145 கி.மீ தொலைவிலுள்ள (தற்போதைய நிலவரப்படி) மலைநாட்டுக்கு வந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

வ.40. எலிசபெத்தை வாழ்த்தினார்|: எலிசபெத்திற்கு நிச்சயமாக மரியா இயேசுவை கருத்தரித்துள்ளமை தெரியும், இருந்தும் இங்கு முதலில் வணக்கம் சொல்பவர் மரியாவாகவே இருக்கிறார். இதிலிருந்து லூக்காவின் புலமைத்துவம் புரிகிறது. மரியா எவ்வளவு உயர்ந்தவர் எனச் சொல்கிறார் லூக்கா.

வ.41. அ. ஷகுழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று|: துள்ளுதல் உச்ச கட்ட மகிழ்ச்சியின் அடையாளமாக முதல் ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பதியப்பட்டுள்ளது. தாவீது தொடங்கி ஆலய வாயிலில் இருந்து பிச்சைக்காரர் வரை, ஆண்டவரை அணுபவித்த போது துள்ளினர் (காண. 2சாமு 6,16 தி.ப 3,8)

ஆ. தரிசிக்கும் கடவுள்: விவிலியத்தில் கடவுள் தன்னை மக்களை தரிசிப்பவராகவே வெளிப்படுத்துகிறார். பாபேல் கட்டிய தீயவர்களனாலும் சரி, ஆபிரகாமானலும் சரி, நீதி தலைவர்களானாலும் சரி, கடவுள் அவர்களை தரிசிப்பதை விவிலியத்தில் பல இடங்களில் காணலாம். ஆனால் இறைவாக்கினர்கள் தாம் கடவுளை தரிசிக்க அவர்கள் பிரயாணம் செய்வதையே காண்கிறோம் (மேசே, எலியா), இங்கு லூக்கா கடவுள் தன் இறைவாக்கினரை வந்து தரிசிப்பதை காட்டுகிறார். லூக்காவின் கடவுள் ஷதேடி வந்து தரிசிக்கும் கடவுள்|, இதனையையே எம்மாவு (லூக் 24,15) சந்திப்பிலும் மேலும் விரிவுபடுத்துவார் லூக்கா.

இ. வயிற்றிலுள்ள குழந்தைகள் தாம் சந்திக்கின்ற அதே நிகழ்வை, எலிசபெத்தை மரியா சந்திக்கும் நிகழ்வோடு ஒப்பிட்டு காட்டுகிறார். மரியா பயணம் செய்ததை பலர் பலவாறு விவாதிக்கின்றனர், சிலர் மரியா, கபிரியேல் வானதூதரின் செய்தியை உண்மைதன்மை பார்க்கவே வந்தார் என்று கூட சொல்வார்கள். ஆனால் லூக்காவின் நற்செய்தியில் மரியா ஒரு முக்கியமான கதாபாத்திரம், லூக்காவுடைய மரியாவுக்கு அப்படியான தேவை இருந்திருக்காது என எண்ணுகிறேன். ஆக மரியா உதவிசெய்யவே 145 கி.மீ மேல் வந்துள்ளார் என அறியலாம்.

உ. தூய ஆவி|: லூக்காவின் நற்செய்தியிலும் திருத்தூதர் பணியிலும் தூய ஆவியானவருக்கு முக்;கிய பங்குள்ளதை அவதானிக்கலாம். இங்கு தூய ஆவி எலிசபெத்தை ஆட்கொள்வதிலிருந்து, ஆட்களை தெரிவு செய்பவர் கடவுளே என்பது புரிகிறது.

வ.42. பெண்களுள் ஆசி பெற்றவர், உமது குழந்தையும் ஆசி பெற்றதே|: லூக்காவின் நற்செய்தியின் சுருக்கம் எனச் சொல்லலாம். ஏற்கனவே இந்த செய்தியை வானதூதர் சொல்லி இருக்கிறார், இங்கு ஆவியானவரே எலிசபெத்தின் வாயிலாக சொல்கிறார். இந்த செய்தி மரியாவுகல்ல, லூக்காவின் வாசகர்களுக்கு.

வ.43. ஆண்டவரின் தாய்|: (ἡ μήτηρ τοῦ κυρίου μου ஹே மேடேர் தூ கூரியூ மூ, ஷஎனது ஆண்டவரின்-தலைவரின் தாய்|)
மரியாவை ஆண்டவரின் தாய் என வழிக்கும் சந்தர்ப்பத்ததை பெற்ற முதல் பெண்மணியாகிறார் லூக்காவின் எலிசபேத்து, கடவுளின் மீட்பு திட்டத்தில் முதியவரான இப்பெண் உள்வாங்கப்படுவதை அழகாக சித்தரிக்கிறார். கிரேக்க உரோமைய வரலாற்றில் அரசர்ககளின், பேரரசர்களின் தாயார், மனைவியர் முக்கியமானவர்கள் என்பதனையும் நோக்கும் போது இவ்வரிகளின் ஆழம் நமக்கு புரியும். தமிழ் இலக்கியங்களிலும் பெண்கள்தான் மிக நோக்கப்பட வேண்டியவர்கள் (தமிழ் காவியங்கள் காவிய தலைவிகளை மறப்பதில்லலை, ஒப்பிடுக கண்ணகி - சிலப்பதிகாரம்).

வ.44. மரியா ஏன் முதலில் வாழ்த்துச்சொல்ல வேண்டும்? ஏன்; குழந்தை தன் தாயைவிட வாழ்த்ததை முதலில் உணர வேண்டும்? லூக்காவின் ஆழமான வரிகள் சிந்திக்க தூண்டுகின்றன. மரியாவின் வாழ்த்து எலிசபெத்துக்கா அல்லது திரு முழுக்கு யோவானுக்கா?

வ.45. யார் இந்த மரியா? என்ற கேள்விக்கு ஓரே வரியில் விளக்கம் கொடுக்கிறார் மாண்புமிகு வைத்தியர் லூக்கா. அவர் நம்பியவர்| வினைச்செற்களை அவதானமாக பார்த்தால், முதலில் மரியா நம்புகிறார் (இறந்த காலம் நம்பிய நீ) நடைபெற இருந்தது எதிர்காலத்தைச் சார்ந்தது (எதிர் காலம் நிறைவேறும்) என்பது புலப்படும். இறைவனின் மக்களுக்கு நம்பிக்கைதான் முதலில் வரவேண்டும் என்பதனை அவதானிக்கவேண்டும், இயேசுவும் பின்னர் பல வேளைகளில் இச்செய்தியையே முதன்மைப் படுத்துவார்.


பிறந்த பிள்ளைகளைக் காணாது, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி பாவிகளிடம் கூட பேரம் பேசி கண்ணீர் வடிக்கும் ஈழத்து தாய்மாருக்கு, இந்த திருவருகைக் காலம் ஆறுதலைக் கொண்டுவர வேண்டியும், அன்னை மரியா தொடர்ந்து ஆண்டவர் இயேசுவை இவ்வன்னையர்க்கும் கொண்டுவரவும் மன்றாடுவோம். ஆமென். 

lovingly 
Jegankumar omi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...