திருவிழிப்பு திருப்பலி: 24.12.2015
எசாயா: 62,1-5
எருசலேமை திருமணக்கோலத்தில் இருக்கும் மணமகளாக ஒப்பிட்டு எசாயா இறைவாக்குரைக்கிறார். எருசலேமிற்கு புதிய பெயர், மகிழ்ச்சி என சூட்டப்படுகிறது. மணமுடித்தல் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு, அது பெண்களுக்கு தாய்மையையும் இல்லத்தரசி அதிகாரத்தையும் தருகிற நிகழ்வு. கடவுளை மணமகனாக வர்ணிப்பது இஸ்ராயேல் மக்களின் வழமை. ஆக இங்கு எருசலேம் மண மகளாகவும் அதன் மணவாளனாக கடவுளும் வர்ணிக்கப்படுகின்றனர். இஸ்ராயேல் மக்களை சுற்றி இருந்தவர்கள் தங்கள் தெய்வங்களை மணவாளர்களாகவும், மணவாட்டிகளாகவும் நினைப்பது வழமை. எசாயா கடவுளை காதலனாக நினைப்பது, அன்புறவை மையப்படுத்துகிறது.
(எருசலேமின் புதுப்பெயர்: חֶפְצִי־בָהּ கெப்ட்சி-பா மகிழ்ச்சி)
திருத்தூதர் பணி: 13,16-17,21-25
பவுலுடைய முதலாவது திருத்தூதுப் பயணத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. பிசிதியா அந்தியோக்கியாவில்
யூதருக்கும் மற்றவருக்கும் பவுல் போதிக்கும் அவருடைய முதலாவது உரை அல்லது பிரசங்கம் என இதனைக் கருதலாம். இதிலே பவுல் இஸ்ராயேல் மக்களுக்கு தங்களது மீட்பின் வரலாற்றை சுருக்கமாக கூற விழைகிறார். மூதாதையர் தொடங்கி, பாலைவனம் சென்று, சவுலையும் தாவீதையும் தாண்டி, உண்மையாக கடவுள் தேர்ந்தெடுத்தவர் இயேசு ஆண்டவரே என புலமைத்துவத்தோடு வாதிடுகிறார். பவுல் திரு முழுக்கு யோவானையும் யார் என்று சுட்டிக்காட்ட மறக்கவில்லை. லூக்கா பவுலைப் பற்றி பதிவு செய்த முக்கியமான போதனை உரைகளில் இதுவும் ஒன்று.
இயேசுதான் எதிர்பார்க்கப்பட்ட மீட்பர் என்பதுதான் இவ்வுரையின் சுருக்கம்: (σωτήρ Ἰησοῦς சோடேர் ஏசூஸ்)
மத்தேயு: 1,1-25
மத்தேயு நற்செய்தியில் மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியை இரண்டாக பிரிக்கலாம்.
அ. ஆண்டவரின் தலைமுறை அட்டவணை. 1:1-17
ஆ. யோசேப்புக்கு வானதூதரின் செய்தி. 1:18-25
அ. மிகவும் பிடித்த, விளங்க முடியாத ஆழமான பகுதி இதுவாகும். வரலாற்றில் முக்கியமானவர்களுக்கு தலைமுறை அட்டவணையைக் கொடுத்து அவர்களின் சாதாரண பிறப்பைக் கூட பிரசித்திபெற்றதாக செய்வது திறமையான ஆசிரியர்களின், எழுத்தாளர்களின் இலக்கிய நடை. அதனையே மத்தேயு நற்செய்தியாளர் தனது ஆண்டவருக்கு செய்கிறார், ஆனால் இங்கு ஆண்டவரை பிரசித்திபடுத்த அல்ல. மாறாக, அவரை தலைமுறைகளுக்கு அறிவிக்க. (εὐαγγελίζω எவான்ங்கலிட்சோ).
1. தலைமுறை அட்டவணை: (γενεσις கெனஷிஸ்) என்பதை ஷதொடக்கம்| எனவும் மொழிபெயத்கலாம். இது முதல் ஏற்பாட்டின் முதல் நூலும், தோராவினுடைய முதல் நூலுமான தொடக்க நூலை (בְּרֵאשִׁית பெர|ஷித்) ஞாபகப்படுத்துகிறது. மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், தனது நூலை புதிய தோராவாகவும் காட்டுகிறார் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆக இந்த அட்டவணைதான் மத்தேயு நற்செய்தின் தொடக்கமும் முடிவுமாகும்.
2. இதனுடைய தலையங்கமே மத்தேயு நற்செய்தியின் சுருக்கத்தை காட்டுகிறது. மத்தேயு நற்செய்திப்படி இயேசுகிறிஸ்து (மெசியா - எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்) ஆபிரகாமின் மகன்: (தொடக்கநூல் 12ம் அதிகாரத்தில் வாக்களிக்கப்பட்டவர்). அனைத்து மக்களினங்களின் வாரிசும் கடவுளுமானவர். தாவீதின் மகன்: எருசலேமில் தாவீதின் அரச பரம்பரை அழிந்தபோது எசாயா மற்றும் இறைவாக்கினர்களும் வாக்களித்த அழியாத தாவிதின் வாரிசு, அவர் தாவீதுக்கும் தலைவர்.
3. இந்த பகுதியில் மத்தேயு ஐந்து பெண்களை உள்வாங்கியுள்ளார், இவர்கள் அனைவரும் சாதாரண பெண்கள் இல்லை. மிக உயர்ந்தவர்கள். தமிழில் சொன்னால், குல தெய்வங்கள். ஆண்களுடைய தீய எண்ணங்களால் பாதிக்கப்பட்டாலும், வரலாற்றில் தோற்காதவர்கள். இவர்களைப்பற்றி ஆயிரம் புத்தகங்கள் எழுதினாலும் போதாது. ஆண்களை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் தலைமுறை அட்டவணையில் பெண்களைக் கொண்டுவருவதன் மூலம், கடவுளுக்கு பேதங்கள் இல்லை என்பதனை நிருபிக்க விழைகிறார் மத்தேயு. இவ்வட்டவணையில் பல அரசர்கள்களும் வரலாற்று புதல்வர்களும் வந்து போனாலும் இங்கே தோன்றுகின்ற இந்த ஐந்து பெண்கள் நம்முடைய கவனத்தை ஈர்ப்பது அவர்களின் மாட்சியைப் பறைசாற்றுகிறது. இங்கே வரும் பெண்கள்: தாமார்: யூதாவின் மருமகள். இவர் வழியாகவே யூதாவின் சந்ததி வளர்ந்தது. இராகாபு: மத்தேயுவின் எண்ணப்படி இவர் போவாசின் தாயாகிரார். ரூத்து: போவாசின் மனைவியும், தாவீது மன்னனின் பாட்டியுமாவார். உரியாவின் மனைவி: தாவீதின் மனைவியாகி, சாலமோன் மன்னனின் தாயாகிறார். மரியா: இயேசு ஆண்டவரின் தாய்.
4. இந்த பகுதி மூன்று தடவை ஏழு ஏழாக பிரிக்கப்பட்டு 21 தலைமுறைகள் என கணக்கிடுகிறார் மத்தேயு, தான் ஒரு மறைநூல் அறிஞர் என சொல்கிறார் போலும். 3, 7, 21 - இவை நிறைவின் எண்கள், இறைவன் ஏழு நாட்களில் உலகை படைத்ததாக கருதுவதும் இந்த நம்பிக்கையில்தான். தாவீதினுடைய எண் கணக்கும் ஏழு ஆகும். ஏழு என்னும் இலக்கம், எண்ணையும் தாண்டி அறியப்பட வேண்டியது.
ஆ. இரண்டாவது பகுதி வானதூதர் யோசேப்புக்கு சொன்ன செய்தியை உள்ளடக்கி அமைந்துள்ளது.
லூக்கா நற்செய்தியில் மரியாவுக்கு நிஜத்தில் தோன்றும் வானதூதர் இங்கே யோசேப்புக்கு கனவில் தோன்றுகிறார். யோசேப்பை தாவீதின் மகன் எனச் சொல்வதன் மூலம், இயேசு தாவீதின் வாரிசு எனும் இறைவாக்கு மீண்டும் ஞாபகப்படுத்தப்படுகிறது. யோசேப்பு, முதல் ஏற்பாட்டு கணவான்களான தானியேல், யோசேப்பு போன்றவர்களும் சரியாக கனவிலே கடவுளுடைய செய்தியை கண்டடைந்தவர்களே. நேர்மையாளர் (δίκαιος திக்கைஒஸ்), ஆண்டவரின் சட்டங்களை கடைப்பிடித்து வாழ்பவர், இஸ்ராயேல் மக்கள் இச்சட்டங்களுக்காக தமது உயிரையும் கொடுத்தனர். மத்தேயு சட்டங்களை எப்படி கடைப்பிடிக்க வேண்டும், சட்டங்கள் தேவையானவைதான், ஆனால் இரக்கம் அதனைவிட தேவையானதே, எனக் காட்டுகிறார், பின்னர் இயேசுவும் தன் தந்தை வளனாரை பின்பற்றி சட்டங்களுக்கு புது விளக்கம் கொடுப்பார் (மத் 5:17).
இயேசு: உலக வரலாற்றைப் புரட்டி போட்ட பெயர் இது. (Ἰησοῦς இஏசுஸ்) என்கிற கிரேக்கச் சொல் யோசுவா (יהושׁווּעַ யேஹோஷுவா) என்ற எபிரேய-அரமேயிக்க சொல்லின் வடிவமாகும். இதற்கு 'கடவுள் மீட்கிறவர்' என்று பொருள் கொள்ளலாம். (காண். விப 3:10-15) இப்பெயர் கடவுளுடைய சொந்த பெயரை ஒத்ததாக தோன்றுகிறது.
இம்மானுவேல்: (Ἐμμανουήλ இம்மானுஏல், עִמָּ֥נוּ אֵֽל இம்மானு ஷஏல்) 'நம்மோடு கடவுள்' என்று பொருள். எசாயா இறைவாக்கு 7:14 இங்கே கோடிடப்படுகிறது. இரண்டு வேறுவிதமான பின்புலங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். எசாயா ஆகாசு மன்னனுக்கு நம்பிக்கை கொடுக்க இறைவாக்குரைக்கிறார், அங்கே கன்னிப்பெண் என சொல்லப்படுவது ஆகாசு மன்னனுடைய இளம் மனைவியொருவரைக் குறிக்கலாம், அல்லது எசாயாவினுடைய மனைவியைக் குறிக்கலாம், அல்லது மெசியாவினுடைய தாயையும் குறிக்கலாம். மத்தேயு இங்கே கன்னி என்று சொல்வது நிச்சயமாக மரியாவையே குறிக்கவேண்டும்-குறிக்கிறது.
வ25. மிகவும் பிரச்சனைக்குரிய வசனம், ஆனால் நற்செய்தியாளருக்கு அது பிரச்சனையான விடயம் அல்ல. கத்தோலிக்க திருச்சபைக்கு அன்னை மரியா உடலாலும், உள்ளத்தாலும் கன்னியானவள்-தூய்மையானவர். திருமணத்தையோ திருமண உறவையே இங்கே நற்செய்தியாளர் தனது வாதத்துக்குள் எடுக்கவில்லை என்பதை கவணமாக நோக்கவேண்டும். நமக்கு விவிலியத்துடன் பாரம்பரியமும் முக்கியம் என்ற படியாலும், அன்னை மரியாவை விவாதிக்க எனக்கு தகுதியில்லை என்பதாலும் அம்மாவை அம்மாவாகவே விடுவோம்.
Wish you all a blessed Nativity Celebration of our Living Lord, Jesus.
Jegan omi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக