புதன், 30 டிசம்பர், 2015

Mary Mother of God.

தை 01, 2016
மரியா, இறைவனின் தாய்!
————————————————————————————————————————
அன்னை மரியாவை இறைவனின் தாயாக விழிப்பது திருச்சபையின் புராதன பாரம்பரியங்களின் மிகவும் முக்கியாமான ஒன்று. அன்னை மரியாவின் மறைவினதும், விண்ணேற்பினதும் பின்னர் இந்த விழா  ஒரு பிரசித்திபெற்ற விழாவாக கீழைத்தேய திருச்சபையினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கி.பி 431ல் எபேசிய பொதுச்சங்கத்தில், இந்த விழா அனைத்து கத்தோலிக்க திருச்சபையின் விழாவாக அங்கிகரிகப்பட்டு அன்னைக்கு தியோட்டோகோஸ் θεοτοκος' (இறைவனை சுமக்கிறவர்) என்ற பெயர் வழங்கப்பட்டது. சிலர் இதனை அங்கீகரிக்கவில்லை. சிலர் அன்னையை அந்ரோபோடோகோஸ் - άνδροποτοκος (மனிதரை சுமக்கிறவர்) என்றுதான் அழைக்கவேண்டும் என்று வாதிட்டனர். இந்த வாதத்தை முன்வைத்தவர்கள் மரியாவுக்கு எதிராவனர்கள் என்றில்லை. அவர்களுடைய பிரச்சனையாக இருந்தது இயேசுவும் அவருடைய இறை தன்மையுமாகும். கிறிஸ்துவையும் கடவுளையும் இரண்டாக பிரித்த இவர்கள், மரியாவை இறைவனை சுமக்கிறவர் என்றில்லாமல், ஓர் உன்னத மனிதரை சுமந்தவர் என வாதிட்டனர். இந்த மாற்று கொள்கைகளுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை சார்பாக கொள்கைப் போரிட்டவர்களில் தூய அத்தனாசியஸ் மிக முக்கியமானவர். ஆக எவர்; என்ன சொன்னாலும், மரியன்னை இறைவனின் தாய் என்பதில் கத்தோலிக்கராகிய எமக்கு எந்தவிதமான கிலேசங்களும் இல்லை. லூக்கா எலிசபோத்தின் வாயிலாக அன்னையை ஷஷஆண்டவரின் தாய் என அழகாக வர்ணிப்பார் (காண். லூக் 1,43 καὶ πόθεν μοι τοῦτο ἵνα ἔλθῃ ἡ μήτηρ τοῦ κυρίου μου πρὸς  ἐμέ; ஆக ஏன் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வந்திருக்க வேண்டும்?). இது நம் திருச்சபையின் விசுவாசம், எம் முன்னோர்களின் விசுவாசம், இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ் விசுவாசம் நமக்கு நன்மையைத்தான் தந்துள்ளது, இந்த விசுவாச சத்தியம் எம்மையும் இறைவனை சுமப்பவர்களாக இருக்க ஓர் அழைப்பை விடுகிறது. மேலும் வாசிக்க:
http://www.catholic.org/mary/theo.php

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6:22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: ஷஷஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!||
இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

இன்றைய முதலாவது வாசகம் கடவுளுக்கும் மோயிசனுக்கும் இடையில், ஆரோனுடைய குருத்துவத்தைப் பற்றி நடக்கும் உரையாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பல ஆழமான கருத்துக்ளைக் கொண்டு இங்கு ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. இங்கே இந்த ஆசீர்வாதங்கள் முன்னிலையை, (இரண்டாம் ஆளை, நீ-நீங்கள்) ஒருமையாக (நீ) நினைத்து வழங்கப்படுகிறது ஆனால் இது பலரைக் குறிக்கும் (நீங்கள்). உனக்கு என்பது 'உங்களுக்கு' என்று பொருள் படும்.

அ. கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக: ஆசீர்வதித்தலும் பாதுகாத்தலும் ஒரு குடும்பத்தலைவனுடைய வேலைகளில் முக்கியமானது என இஸ்ராயேலர் கருதினர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே போன்றோர் இதையே தம்முடைய இறப்பின் முன்னர் செய்தனர். இங்கு கடவுளே ஒரு குடும்பத்தலைவனாக அனைத்து இஸ்ராயேல் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்கிறார். கடவுள் தொடக்கத்தில் ஆதாமை ஆசீர்வதித்தது ஞாபகத்துக்கு வரலாம்.
יְבָרֶכְךָ יְהוָה וְיִשְׁמְרֶךָ : இவாரேஹா அதேனாய் வேயிஷ்மெரெஹா, கடவுள் உங்களை ஆசீர்வதித்து உங்களை பாதுகாப்பாராக! எனும் இவ்வாசீர் இன்று மட்டும் எபிரேயர்களிடம் புழக்கத்தில் இருக்கும் முக்கியமான வாழ்த்து, ஆண்டவரே இரட்சியும்|| என்று நாம் அடிக்கடி சொல்வது போல.

ஆ. கடவுள் தம் திருமுக ஒளியைகை காட்டுவாராக அருள் பொழிவாராக: இது இன்னொரு முக்கியமான வாழ்த்து. ஆண்டவரின் திருமுகம் அவரது பிரசன்னத்தை இங்கே குறிக்கிறது. பாலை வனத்தில் மேகத்தில் தோன்றியவர், தமது ஒளியைத் தருவாராக என்று வேண்டும்படி ஆரோன் புதல்வர்களுக்கு சொல்லப்படுகிறது. (காண் தி.பா 31,16: 67,1: 80,3.9)

இ. கடவுள் தமது வதனத்தை உயர்த்துவாராக: கடவுள் தமது முகத்தை உயர்த்துதல், அவரது அக்கறையை உங்கள் மீது திருப்புவாராக என்று பொருள் படும். கடவுளுடைய முகம், இங்கு அரவது கரிசனையையும், கவனிப்பையும் குறிக்கிறது. (פָּנָיו அவரது முகம்)

உ. அமைதி அருள்வாராக: அமைதி இஸ்ராயேல் மக்களிடையே இன்று வரை எதிர்பார்கப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான ஆசீர்வாதம். (שָׁלוֹם ஷலோம் அமைதி). அமைதியைத்; தருபவர் கடவுள் ஒருவரே என்று ஆசிரியர் தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்.

ஊ. ஆரோனுடைய மக்கள் கடவுளுடைய பெயரை மக்கள் மேல் வைப்பாராக என்பது, இந்த மக்கள் கடவுளுக்கு உரியவர்கள் என்பதைக் காட்டுகிறது. பெயர் இங்கே இவ்வினம் ஆண்டவரைச் சார்ந்தது என நினைவூட்டுகிறது.

இந்த ஆசீர்வாதங்கள் பல முறை விவிலியத்தில் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம், தூய பவுலும் தனது கடிதங்களில் இதனையே சிறு மாற்றங்களுடன் பாவிக்கின்றார் (காண். உரோ1,7: 1கொரி 1,3: 2திமோ 1,2)

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி அப்பா, தந்தையே, ஷஷஎனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல் பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும்
இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே||.

பவுல் தனது கைப்பட எழுதிய கடிதமாக அதிகமானவர்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். என்ன காரணத்திற்காக, யாருக்கெதிராக இக்கடிதத்தை ஏழுதினார் என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் கிறிஸ்தவர்கள் மீண்டும் யூத மதத்திற்கும் சட்டங்களுக்கும் உட்பட வேண்டும் என்று கூறியும், பவுலுடைய திருத்தூதர் பணியைப்பற்றி பல கேள்விகளையும் எழுப்பி வந்ததாக நம்பப்படுகிறது. இக் கடிதத்தின் காலத்தை கணிப்பது மிகக் கடினமாக உள்ளது, கி.பி 50கள் எனச் சொல்லலாம்.
பவுல் மரியன்னையை மறைமுகமாக கோடிட்டுக் காட்டும் மிகமான பகுதிகளில் இதுவும் ஒன்று.

அ. காலம் நிறைவேறியபோது என்பதை காலம் கனிந்தபோது அல்லது தகுந்த காலத்தில் என்று மொழிபெயர்கலாம். காலம் இங்கே கடவுளுடைய திருவெளிப்பாட்டை குறிப்பதாக பவுல் வாதிடுகிறார்.

ஆ. பெண்ணிடமிருந்து: (ἐκ γυναικός எக் குனாய்கோஸ்) இந்த வாதம் லூக்காவின் நற்செய்தியின் கபிரியேல் தூதர் மரியாவுக்கு சொன்ன மங்கள வார்த்தையை ஞாபகப்படுத்துகிறது.
இது இயேசுவுக்கு எதிராக சுமத்தப்பட்ட பிரதிவாதங்களை தகர்க்க பவுல் பாவித்த முக்கியமான விசுவாச பிரமாணங்களில் ஒன்று. அத்தோடு திருச்சட்டத்தையும் பவுல் இணைத்து இயேசு திருட்சட்டதிற்கு (தோறா) எதிரானவர் என்றில்லை என்பதை காட்டுகிறார். அதே வேலை சட்டத்தின் பிடியிலிருந்தும் அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தேவை இயேசுவுக்கு இருக்கிறது எனவும் காட்டுகிறார்.

இ. பவுல் தன்னுடைய திருமுகங்களில் ஆவியின் உந்துதல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் அதனையே இங்கேயும் செய்கிறார். இயேசு ஆண்டவர் முதல் முதலாக பாவித்த அப்பா என்ற அரமேயிக்க சொல்லை (காண். மாற் 14,36) முதல் தடவையாக பாவிக்கிறார், இச் சொல்லை உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பாவிப்பார் (உரோ. 8,15). இங்கே பாவிக்கப்பாடுகின்ற அப்பா எனும் சொல் (אַבָּא) என் அப்பா என்பதைக் குறிக்கும், ஆனால் பவுல் இங்கு இச்சொல்லை பொதுச் சொல்லாகப் பாவிக்கிறார்.

உ. அடிமைகள் அல்ல உரிமை குடிமக்கள் என்பது கலாத்தியர் திருமுகத்தின் முக்கியமான வாதம். இந்த உரிமைக் குடிமக்களாகும் தகுதியை கடவுள் இலவசாமக இயேசுவின் வாயிலாக தந்துள்ளார் என பிரதிவாதங்களை முன்வைப்பவர்களுக்கு கூறுகிறார் பவுல்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
16.அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17. பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18.அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
19.ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 20.இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21.குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இங்கே இன்றைய நாளுடைய சிறப்பினை ஒட்டி இரண்டு வாதங்களை முன்வைக்க முடியும்.

அ. வவ 16.17.18.20: பிறந்த குழந்தை அதன் பெற்றோர், கேட்டவர்கள் வியப்படைதல், மற்றும் அடையாளங்கள் அனைத்தும் இக்குழந்தை கடவுளுடைய மனித வருகை என்பதனைக் காட்டுகிறது.

ஆ. வ 19. மரியாவின் அமைதியான சிந்தனைகள், இங்கு நடப்பவைகளை முன்னமே அறிந்திருந்தார் அல்லது அவர் அவற்றை கிரமமாக நோக்கினார் எனச் சொல்லி, மரியா ஒரு சாதாரண பாத்திரம் அல்ல மாறாக, இறைதிட்டத்தில் முக்கியமான பங்காளி எனச் சொல்கிறார் லூக்கா.

வ. 20. மரியாவின் வயிற்றில் வந்தவர்தான் இயேசு என ஆணித்தரமாக சொல்கறார் லூக்கா. συλλημφθῆναι αὐτὸν ἐν τῇ κοιλίᾳ அவள் கர்பத்தில் கருத்தரித்த அவரை என்று மொழிபெயர்கலாம். அவர் கர்பத்தில் கருத்தரித்த அவர்தான் இயேசு எனக் காட்டுவதன் மூலம் மரியா என்பதவர்தான் இயேசுவினுடைய தாய் என விரிவாகவும், நேர்தியாகவும் சொல்கிறார் லூக்கா. மரியா இறைவனின் அல்லது ஆண்டவரின் தாய் என்பதற்கு இதைவிட வேறு வசனங்கள் தேவையில்லை.

இறைவனின் தாயான மரியா, இறைவனை சுமந்து காட்டியவர், இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இறைவனை தமது வார்தையாலும், வாழ்க்கையாலும், சுமப்பாவர்களும் மரியாள்களே, அவர்களும் இறைவனின் தாய்மார்களே!!!

இறைவனின் தாயும், எங்கள் தாயுமான மரியா, எங்களுக்காக தம் மகனை தொடர்ந்து பரிந்து பேசுவாராக,
கடவுள் நம்மை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக! இப் புத்தாண்டில் ஆண்டவர் தம் திருமுகத்தை; நம்மீது ஒளிரச் செய்து அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை நம்; பக்கம் திருப்பி நமக்கு அமைதி அருள்வாராக!||
ஆமென்.
அன்புடன் மி. ஜெகன்அமதி
நாப்போலி,திங்கள், 28 டிசம்பர், 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...