செவ்வாய், 22 டிசம்பர், 2015

Christmas Morning Mass Celebrations!




நத்தார் விழா, காலைத் திருப்பலி

எசாயா 62,11-12

மூன்றாம் எசாயாவின் இறையியல் சிந்தனைகளை இப்பகுதி தாங்கி வருகிறது. எவ்வாறு முழு உலகும் எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டதோ, அதே போல, அவளுடைய மீட்பையும் காணும் என்பது மையக்கருத்து. ஷஉன் மீட்பு வருகிறது| (יִשְׁעֵךְ בָּא யிஷ்எஹா பா) இந்த சொல்லுக்கும் இயேசு என்கிற சொல்லுக்கும் வேர்ச்சொல்லில் தொடர்பிருக்கிறது. கைவிடப்பட்டவர்கள் என அறியப்பட்ட மக்கள் இனி தூயவர்கள் என அறியப்படுவாhகள். ஒரு மக்கள் போரில் தோற்றால் அவர்கள் தெய்வமும் தோற்றதற்கு சமம். இங்கே இனி இஸ்ராயேல் மக்களும் அவர்கள் கடவுளும் தோற்றவர்கள் அல்ல என எசாயா நம்பிக்கை கொடுக்கிறார். அழிக்கப்பட்ட எருசலேமிற்கு புதுப்பெயர் கொடுக்கப்படுகிறது, ஷதேடப்படுகிற நகர் (பிரசித்திபெற்ற), கைவிடப்பட்ட நகர் அல்ல.

தீத்து 3,4-7

திருத்தூதர் பவுலுடைய மேய்புப்பணி மடல்களில் ஒன்றான தீத்துவிற்கான திருமுகம், செய்தியிலும் இறையியலிலும் திமோத்தேயுவிற்கான மடல்களை ஒத்திருக்கிறது.

அ. ஷநம் மீட்பராம் கடவுள்| (σωτῆρος ἡμῶν θεοῦ சோடேரோஸ் ஹேமோன் தேஇஉ) என்பது இயேசுவுக்கு ஆரம்ப காலத்திலே வழங்கப்பட்ட சிறப்பு பெயர் சொற்கள். இங்கே பவுல் இயேசுவை முதல் ஏற்பாட்டு கடவுளாக காண்கிறார்.

ஆ. ஷநன்மையும் மனித நேயமும்| (ἡ χρηστότης καὶ ἡ φιλανθρωπία) இவை பவுல் மேய்புப்பணி நூல்களிலே அதிகமாக பயண்படுத்தும் சொற்றொடர். இது நன்மையையும் பரிவையும் பிரிக்கமுடியாது எனக் காட்டுகிறது.

ஆ. கடவுளிடம் இருந்து பெறும் எந்தக் கொடைக்கும் மனிதர் உரிமை கோர முடியாது, அது கடவுளின் இரக்கத்தினால் மட்டுமே பெறப்படுகிறது என்கிறார் பவுல். தீத்துவை (ஆயர்களை) அதனைச் செய்யச் சொல்கிறார். கடவுள் மீட்டது தூய ஆவியால் என்பதன் மூலம், கிறிஸ்தவர்கள் பாரபட்சத்தைக் கண்டு அஞச வேண்டியதில்லை என்கிறார்.

பவுல் தன்னுடைய இறுதி காலம் நெருங்கியதை உணர்ந்தவராக, இனி வரும் காலங்களில் திருச்சபையை வழிநடத்துகிற ஆயர்கள் எவ்வாறு அக்கால சவால்களை சந்திக்க வேண்டும் என்று இம்மடல்களை எழுதியதாக பாரம்பரியம் கருதுகிறது. இம்மடல்களை வாசிக்கும் போது, அக்கால பிரச்சனைகளும், அக்கால கிறிஸ்தவ நம்பிக்கையும் நமக்கு புரியும். கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் இருந்து விடுபட்டு முழு உலகை அடைவதனை இங்கு காணலாம்.

லூக்கா 2,15-20

லூக்கா அவதாணமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம். மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், மெசியாவாகவும் காட்டுகிற அதே வேளை, லூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லது அனைவரின் கடவுளாகவும் காட்டுவார். லூக்காவின் கடவுள் அனைவரின் கடவுள். இயேசுவின் பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால், இயேசுவை அவர் எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும். இன்றைய பகுதியிலே,

அ. ஷவானதூதர்கள்.| இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக் காட்டுகிறார். மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும், கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம் காட்ட, லூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார்.

ஆ. இடையர்களின் பெத்லகேம் வருகை: (οἱ ποιμένες  ஹொய் பொய்மெனஸ்) இடையர்கள் பற்றி இயேசு பிறந்த காலத்தில் நல்ல அபிப்பிரயாயம் இருக்கவில்லை, அவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல் நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லை. கடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவே காட்டினார். தலைவர்களையும் நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார், இயேசுவும் தன்னை நல்ல ஆயன் எனவே பல வேளைகளில் வெளிப்படுத்தினாh. பேதுருவையும் அவர் பணியாளர்களையும் ஆயர்களாகவே இருக்கச்சொல்கிறார். லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ஒன்று: நல்ல ஆயரின் பிறப்பு ஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இரண்டு: தாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும் லூக்கா அறிவிக்கிறார்.

இ. இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம் சிந்திக்க வைக்கிறது. ஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம் அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறது.

ஈ. பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்: யாருக்கு சொன்னார்கள், மரியாவுக்கும் யோசேப்புக்கும் என்று நினைக்கிறேன். யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இந்த மற்ற அணைவரும் யார்? (πάντες οἱ ἀκούσαντες கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம். வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல். (θαυμάζω தௌமாட்சோ: வியப்படை, ஆச்சரியப்படு, மகிழ், பயங்கொள், மரியாதைகொள், வணங்கு,) ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின் இந்த பதிலுணர்வு, வெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

உ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்: லூக்காவின் மரியா சாதாரண இளம்பெண்ணல்ல. அவர் திருச்சபையின் முன்னோடி. நம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்கா. மரியா பல வேளைகளில் இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவது, மரியாவை யார் எனக் காட்டுகிறது.

ஊ. இடையர்களின் ஆட்டமும் பாட்டும், கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக் காட்டுகிறார். எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லி, கடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும் சொல்கிறார்.

பிறந்த குழந்தை ஆண்டவர், நமது குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவுபடுத்துவாராக!
தன்னலத்தாலும்;, போர் வெறியாலும், சமய மூட நம்பிக்கையாலும்
அல்லலுறும் இவ்வுலகை குழந்தை இயேசு தன் சிரிப்பால் கழுவுவாராக!

இயேசு ஆண்டவரின் பிறப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வாழ்த்துகிறேன்!


அன்புடன்
மி.ஜெகன்அமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...