வியாழன், 31 டிசம்பர், 2015

Visit of the Magi,



ஆண்டவரின் திருட்காட்சிப் பொருவிழா.

ஆண்டவரின் திருட்காட்சி என்பது, முதல் ஏற்பாட்டில் பல வேறு நிகழ்வுகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தியதை ஞாபகப்படுத்துகிறது. கடவுள் தன்னை வெளிப்படுத்துவதை இஸ்ராயேலரும் கிறிஸ்தவர்களும் ஒரு மறைபொருளாகவே பார்கின்றனர். கீழைத்தேய திருச்சபையிலே மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இவ்விழா பின்னர் கத்தோலிக்க முழுத் திருச்சபையின் விழாவாக மாறியது. பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திய இறைவன், இயேசுவாக தன்னை முழு மனித இனத்திற்கும் தன்னை வெளிப்படுத்தியதையும், இறைவனின் இறைதன்மை அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிறது எனும் விசுவாசத்தை இவ்விழா நினைவூட்டுகிறது. ஞானிகளின் வருகையும், அவர்களின் பரிசில்களும் எமது பாலன் குடில்களை இன்று அலங்கரிக்கும்.

எசாயா 60,1-6
1.எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! 2.இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3.பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
4.உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
5.அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். 6.ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

நாடுகளின் துருவ நட்சத்திரம் (வடமீன்) என்னும் சிந்தனையுள்ள, மூன்றாம் எசாயாவின் பகுதியிலிருந்து இவ்வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள யூதா மக்களுக்கும், சிதைந்துபோயுள்ள சீயோன் நகரின் எதிர்கால நம்பிக்கையை உறுதிபடுத்துவதாகவும் அழகான உருவக அணிகளுடன் இப்பகுதி அமைந்துள்ளது.

வ.1. எருசலேமின் ஒளியென எசாயா ஆண்டவரின் மாட்சியை ஒப்பிடுகிறார்.

வ.2. ஆண்டவரின் வருகை எனும் நிகழ்வு, இஸ்ராயேல் மக்களிடம் காலம் காலமாக இருந்த முக்கிய நம்பிக்கை, எருசலேமின் அழிவின் பின்னர் இந்நிகழ்வு, முக்கியமான நிகழ்வாக உருவெடுக்கிறது. இதனையே இவ்வசனத்தில் காண்கிறோம். (חֹשֶׁךְ֙ ஹொஷேக்) இருள் இங்கு ஆண்டவரின் வருகையின் வல்லமையை காட்ட பயன்;படுத்தப்படுகிறது. ஆண்டவரின் மாட்சி: (כָּבוֹד கவோட் மாட்சி, அருள், நிறைவு) என்று ஆண்டவரின் மாட்சியை சொல்லி எருசலேமில் அவரது பிரசன்னம் இருக்கும் என நம்பிக்கை கொடுக்கிறார்.

வ.3. உதயக் கதிர்: (נֹגַהּ זַרְחֵךְ நோகா ட்சேர்ஹேகா) இது எருசலேமின் புது மாட்சியையோ அல்லது அந்த மாட்சியைக் கொடுக்கும் ஆண்டவரையோ குறிக்கலாம்.

வ4. கண்களை உயர்திப்பார்க்கச்சொல்லி, எசாயா நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டாம் எனச் சொல்கிறார், இது ஒருவகை உருவக அணி. ஷஷபுதல்வர் புதல்வியர் தூக்கி வரப்படுவர்|| என்பது இஸ்ராயேல் மக்களின் இடம்பெயர் மற்றும் புலம்பெயர் வாழ்வை காட்டுகிறது. இந்த உருவக அணி, எம் மக்களின் புலம்பெயர் வாழ்வையும் படம் பிடிக்கிறது. (பி.கு. எம் மக்களில் அதிகமானவர், இஸ்ராயேல் மக்களைப்போல, பல புலம் பெயர் உறவுகள், மண் மீது அன்பு கொண்டு வருகின்றனர். சிலர் தங்களது விடுமுறையை தவறான முறையில் களிக்க வந்து, ஈழ மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுப்பது வேதனையான விடயம்)

வ.5. இஸ்ராயேலின் புது உணர்வு காட்டப்படுகிறது: கண்டு மகிழ்வாய், இதயம் விம்மும், செல்வமும் சொத்துக்களும் கொண்டு வரப்படும். யூதா நாடும் எருசலேமும் கொள்ளையிடப்பட்ட போது எதிரிகள் இதனையே உணர்ந்தனர், இப்போது நீ அதனை உணர்வாய் என்கிறார் எசாயா.

வ.6. இவ்வசனம் மிகமுக்கியாமானது. இஸ்ராயேலருக்கும் எசாயாவிற்க்கும் இது சாலமோனின் நாட்களை ஞாபகப்படுத்துகிறது, அவர்காலத்தில் சிபாவின் அரசி பரிசில்களை எருசலேமிற்கு கொண்டுவந்ததை
நினைவூட்டுகிறது. கிறிஸ்தவர்களுக்கு இவ் நிகழ்வு ஞானியர் இயேசுவிற்கு பரிசில்களை கொண்டுவந்ததை நினைவூட்டுகிறது அல்லது இறைவாக்கு உரைக்கிறது.


பதிலுரைப்பாடல், திருப்பாடல் 72,1-2.7-8.10-11.12-13

திருப்பாடல் 127ம் 72ம் சாலமோனைப்பற்றிய திருப்பாடல்கள் என வல்லுனர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், அல்லது சாலமோனுக்கான தாவிதின் செபம் என கருதுகின்றனர். சாலமோனின் மெய்யறிவும், செல்வமும், போர் இல்லாத அமைதியும் இஃது நோக்கப்பட வேண்டியவை. அதேவேளை இத்திருப்பாடல் மனித அரசனைத் தாண்டிய ஒரு பெருந்தலைவரை, மெசியாவை குறிக்கிறது என்பதை மறக்க முடியாது. 19 வரிகளைக் கொண்ட இத்திருப்பாடல், கருத்துக்களால் பிணைக்கப்பட்ட அடிகளைக் கொண்டமைந்துள்ளதை காணலாம்.


பதிலுரைப்பாடல், திருப்பாடல் 72.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. 

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். 
10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். 

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.

வவ.1-2: தாவீதின் வேண்டுதல் போல் உள்ளது, நீதியும் நீதித்தீர்ப்பும் அரசர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாய பண்புகள். (வரலாற்றில் மிக அரிதாகவே இவர்களிடம் காணப்பட்டது)

வவ.7-8: நிலா உள்ள அளவு, அரசரது நாட்டின் பரப்பளவை குறிகக் பயன்படுகிறது, கடல் என குறிக்கப்படுவது மத்தியதரைக்கடலையும், அரேபியக் கடலையும் குறிக்கலாம். பேராறு என்பது யூப்பிரதீசு ஆற்றைக் குறிக்கும்.

வவ.10-11: தர்சீசு நகரும் சேபா மற்றும் செபா நாடுகள் திசைகளைக் குறிக்க பயன்;படுத்தப்பட்டுள்ளன. சாலமோனின் ஆட்சியில் செல்வங்களும், பரிசில்களும் (மணவாட்டிகளும்) இவ்விடங்களில் இருந்து வந்ததை விவிலியம் பதிவு செய்கிறது. பின்னர் இயேசுவுக்கு பரிசில்கள் கொண்டுவந்த ஞானியரும் இவ்விடத்திலிருந்து வந்ததாக பாரம்பரியம் சொல்கிறது.

வவ. 12-13: இவ்வரிகள் சாலமோனையும் தாண்டி மெசியாவை குறிப்பாதாகவே காணப்படுகிறது. ஏழைகளை விடுவித்தலும் (אֶבְי֣וֹן எவ்யோன், ஏழைகள்), இரக்கம் காட்டுதலும், உயிரைக் காத்தலும், வரவிருந்த மெசியாவின் பண்புகளாகும்.

இரண்டாம் வாசகம், எபேசியர் 3,2-3.5-6
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.
அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள
தூய பவுலுடைய திருச்சபை சிந்தனைகளையுடைய திருமடல் என இதனை சிலர் அழைக்கின்றனர். தளத்திருச்சபைக்காண அறிவுறத்தல்களையும், வழிபாட்டு முறைகளையும், அமைதியான படிப்பினைகளையும், கொண்டமைந்துள்ள இக்கடிதத்தில், பவுலடிகளாரின் சில மற்றைய கடிதங்களிலிருந்து மாறுபடுவதனையும் மறக்க முடியாது. இது பவுலுடையது என்பதனைவிட அவருடை பெயரில் எழுதப்பட்டது என இன்று பலர் இதனைக் காண்கின்றனர். இன்றைய வாசகத்தில்

அ. யூதரல்லாதவர்க்கு இயேசுவை அறிவிக்கும் பணியை தனது பொறுப்பு என்று சொல்லி அதனை மறைபொருள் எனவும் சொல்கிறார். இங்கே அவர் தமஸ்கு-வழியில் உயிர்த்த இயேசுவை சந்தித்ததை சொல்கிறார் என் எண்ணலாம்.

ஆ. இந்த மறைபொருள் அதாவது இயேசுதான் மெசியாவென்பதும், அவருடைய முதல் வருகை நிறைவடைந்துவிட்டதென்பதையும், இது பவுலுடைய காலத்தில்தான் நடந்ததென்பதையும் நினைவுபடுத்துகிறார்.

இ. முதல் ஏற்பாட்டு பெரியவர்களை விட திருத்தூதர்களும் இறைவாக்கினர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது பவுலுடைய வாதம்.

உ. இந்த மறைபொருளான, இயேசுவின் உடண் பஙகாளியாகும் வாய்ப்பு அனைவருக்கும் நற்செய்தியின் வாயிலாக கிட்டியுள்ளதென்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றார்.


நற்செய்தி, மத்தேயு 

1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். 3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. 4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். 5-6அவர்கள் அவனிடம், 
'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
'யூதா நாட்டுப் பெத்லகேமே,யூதாவின் ஆட்சி மையங்களில்
நீ சிறியதே இல்லை; ஏனெனில்,என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர்உன்னிலிருந்தே தோன்றுவார்'
என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' என்றார்கள். 
7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 8மேலும் அவர்களிடம், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

வ.1. ஏரோது என்னும் அரசனை வரலாறு பெரிய ஏரோது எனச் சொல்கிறது. இந்த ஏரோது குடும்பம் இதுமேய அரச வம்சத்ததை சார்ந்தது. ஹெஸ்மோனியர் (மக்கபேயர் காலத்திற்கு பின்னர்) காலத்தில் பிரசித்திபெற்று, பின்னர் யூதப்பெண்களை திருமணம் செய்து கொண்டு அரசாட்சியை உரோமையருடைய காலத்தில் தந்திரமாக பெற்றுக்கொண்டனர். இக் குடும்பத்தில் முக்கியமானவன் நாம் இன்று சந்திக்கும் ஏரோது. உரோமில் ஆட்சியில் இருப்பவர்களுடன் விசுவாசமாக இருந்து, ஒருகாலத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த யூதேயா நாட்டையும் மக்களையும் தன் விருப்பப்படி நடத்தினான். குடும்ப அங்கத்தவர்களையே நம்பாத இவன், மனைவியர், உறவினர் இன்னும் பிள்ளைகளையும் கொலை செய்ய துணிந்தான். உரோமைய சீசர், மாற்கு அந்தோனி, எரோதுவின் நண்பர்களாக மற்றும் உறவினாராக இருப்பதை விட பன்றிகளாக இருக்கலாம் என்றார். (யூதர்கள் பன்றிகளை தொடுவதில்லை).  கட்டடக்கலையை மிகவும் விரும்பிய இவன் பல கட்டடங்களை யூதேயாவில் கட்டினான். எருசலேம் தேவாலய திருத்தம் மற்றும் மசாதா போன்றவை இவனுடைய பிரசித்தி பெற்ற கட்டடங்களே. குழந்தை இயேசுவை அழிக்க மற்றைய குழந்தைகளைக் கொலை செய்யக்கூடிய ஒரு அரசனாக இவனைத் தவிர வேறு எவரையும் மத்தேயுவினால் தெரிவு செய்திருக்க முடியாது. இவனுடைய வாரிசைதான் இயேசு "நரி"என்று அழைத்தார்.

வ.1.1. கிழக்கிலிருந்து ஞானிகள்: இந்த மெய்யறிவு வாதிகளைத்தான் நாம் மூவிராசாக்கள் என்று அழைக்கிறோம். இவர்களை அரசர்கள் என்றோ, மூன்று பேர்கள் என்றே மத்தேயு பதிவு செய்யவில்லை. இவர்களைப்பற்றி பல சுவாரசியமான பாரம்பரியங்களைச் தலத்திருச்சபைகள் கொண்டிருக்கின்றன. இன்னும் விசேடமாக நம்முடைய சில ஈழத்து கதைகள், இதில் கஸ்பார் என்னும் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றார் என்றும் சொல்லும் (கதைவிடும்). யேர்மனி பாரம்பரியம் ஒன்று, இவர்கள் யேர்மனி நாட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டனர் என்கிறது. இவர்களை மூவர் என்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார். உண்மையில், மத்தேயுவின் ஞானிகள் யார்?

அ. மத்தேயு வெளிநாட்டு நண்பர்களை அறிவாளியாக்கி யூதேய அறிவாளிகள் ஆண்டவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அழகாக சொல்வார். இந்த உவமையையும் அதற்கே பாவிக்கிறார் என நம்புகிறேன்.

ஆ. இவர்கள் வானசாஸ்திர வல்லுனர்களாக இருந்திருக்கலாம். கிழக்கு ஞானிகள் என்பவர்கள் இங்கு மொசப்பத்தேமியரை குறிக்கலாம் (தற்போதைய இராக் நாடு), இவர்கள் வின்மீன்களையும், வானவியலையும் கணிப்பதில் அன்றைய நாசாக்காரர்கள் எனலாம். இந்த ஞானிகள் வின்மீன் என கூறுவதை கிரேக்கத்தில் ἀστήρ அஸ்டேர் என காண்கின்றோம், ஆங்கில ஸ்டார், யேர்மனிய ஸ்டர்ன் போன்றவை இதிலிருந்தே வருகின்றன. இது மாட்சியையும் வான அடையாளத்தையும் குறிக்கிறது.

வ. 2-3. ஞானிகளையும் ஏரோதுவையும் ஒப்பிடுகிறார்: ஞானிகள் தேடிவருகின்றனர், ஆண்டவரை வணங்கக்கேட்கின்றனர், ஆனால் எரோது கலங்குகிறான். அவனோடு சேர்ந்து எருசலேம் முழுவதும் கலங்கிற்று என்று கூறி, நன்பர்களும் வெளிநாட்டவரும் கடவுளைத்தேட, எருசலேமும் அதன் பொய் அரசனும் அவரைக்கண்டு கலங்கினர் என்று லாவகமாகச் சொல்கிறார் இந்த விவிலிய வல்லுநர் மத்தேயு.

வ. 4. மத்தேயு நற்செய்தியில் இயேசுவை அழிக்கத்தேடிய மற்றைய யூத பெரியவர்கள் கோடிடப்படுகின்றனர், அவர்கள் தலைமைக் குருக்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள். கிறிஸ்துவிற்கு எதிராக சதிநடக்கும் போதெல்லாம் மத்தேயு நற்செய்தியில் இவர்களைக் காணலாம்.

வவ.5-6. இயேசுவின் பிறப்பைப்பற்றியும், பெத்லகேமைப்பற்றியும், இஸ்ராயேலின் ஆயர் (கடவுள்) பற்றியும் இந்த யூத அறிஞர்களுக்கு நல்ல தெளிவு இருந்ததை மத்தேயு நமக்கு காட்டி, இவர்கள் எவ்வளவு பக்க சார்பானவர்கள் என நம்மை தூண்டுகிறார். இவர்களுக்கு தெரிந்திருந்தும், இவர்கள் ஆர்வம் காட்டவில்ல என்கிறார்.

வவ.7-8. ஏரோது யார் என்று காட்டுகிறார் மத்தேயு. இவ்வாறுதான் ஹஸ்மோனியரை வீழ்த்த உரோமையருடன் சதிதிட்டம் தீட்டியிருப்பான் என்கிறார் போல. (இப்படியான ஏரோதுக்களிடம் இருந்து ஞானியரையும், குழந்தை இயேசுவையும் காப்பாற்றியது போல, ஆண்டவர் ஈழத்தையும், மக்களையும் காக்க வேண்டும்)

வவ. 9-10. விண்மீனை மீண்டும் கண்டார்கள் என சொல்வதன் மூலம், ஏரோதுவின் வீட்டில் அது இல்லை என்கிறார். அவர்கள் பெரு மகிழ்சி அடைந்தார்கள் என்பதன் மூலம், ஏரோதுவின் வீட்டிலும் இஸ்ராயேல் அறிஞர்களிடமும் அவர்கள் பெருமகிழ்சி அடையவில்லை என்கிறார். இந்த பெருமகிழ்சி (χαίρω காய்ரோ) இறையனுபவத்தை பெறும்போது கிடைப்பதாக விவிலியத்தில் காணலாம், ஆக விண்மீன் தருவதும் இந்த இறையனுபவமே என்கிறார் மத்தேயு.

வ.11. அ. குழந்தையையும் அதன் தாய் மரியாவையும் கண்டார்க்ள என்று, இந்த ஞானியர் கண்டது சரியான குழந்தை இயேசுவைத்தான் என்கிறார்.

ஆ. நெடுஞ்சான் கிடையாய் விழுந்தார்கள் (πεσόντες προσεκύνησαν αὐτῷ) முகங்குப்புற விழுந்து வணங்கினார்கள் என்று சொல்லலாம். இது இறைவனின் முன்னால் மனிதர்கள் செய்யும் பணிவான வணக்க முறை, மோயிசனும் பலரும் இதைத்தான் ஆண்டவர் முன்னர் செய்தனர். இந்த வணக்கம் இயேசுவை யார் எனக் காட்டுகிறது.

இ. பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம்: இவை அரசர்களுக்கு கொடுக்கப்படுகின்ற விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் (காணிக்கைப்பொருட்கள்). சாலமோனுக்கு கிடைத்தவையும் இவைதான். மத்தேயு இயேசுவை தாவிதின் உண்மையான வாரிசாக காட்டுகிறார் போல. சிலர் ஆண்டவரின் மரணத்தின் பின்னர் நடந்த நிகழ்வுகளைக் காட்ட இப்பொருட்கள் பயன்படுகின்றன என்கின்றனர்.

மத்தேயு பல வேளைகளில் இயேசுவை புதிய மோயிசனாக காட்டுவதைக் காணலாம். இந்த ஏரோது எகிப்திய பாரவோனை நமக்கு ஞாபகப்படுத்துகிறான். யார் என்ன செய்தாலும், இந்த மெசியாவை, கடவுளின் உண்மையான மகனை உலகம் அறிந்து கொள்வதில் இருந்து எவரும் தடுக்க முடியாது என்கிறார் இந்த முன்னைய நாள் ஆயக்காரர் தூய மத்தேயு.

உலகில் கடவுளைக் காட்ட பல அடையாளங்கள் உள்ளன, 
புறவினத்தவர் என்று சொல்லி அவைகளை விலக்கிவிடாமல்
மெய்யறிவோடு தேடுவோம், அவரைக் கண்டு வணங்குவோம். பேராசை கொண்ட போலி தலைவர்களான ஏரோதுக்களிடமிருந்து எம்மையும் எமது எதிர்காலத்தையும் காப்பாற்றுவோம்.
நம்மக்களின் கனவான சுயநிர்ணய உரிமைவாழ்வை இப்புத்தாண்டு கொண்டுவருவதாக!
ஆமென்.





புதன், 30 டிசம்பர், 2015

Mary Mother of God.

தை 01, 2016
மரியா, இறைவனின் தாய்!
————————————————————————————————————————
அன்னை மரியாவை இறைவனின் தாயாக விழிப்பது திருச்சபையின் புராதன பாரம்பரியங்களின் மிகவும் முக்கியாமான ஒன்று. அன்னை மரியாவின் மறைவினதும், விண்ணேற்பினதும் பின்னர் இந்த விழா  ஒரு பிரசித்திபெற்ற விழாவாக கீழைத்தேய திருச்சபையினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கி.பி 431ல் எபேசிய பொதுச்சங்கத்தில், இந்த விழா அனைத்து கத்தோலிக்க திருச்சபையின் விழாவாக அங்கிகரிகப்பட்டு அன்னைக்கு தியோட்டோகோஸ் θεοτοκος' (இறைவனை சுமக்கிறவர்) என்ற பெயர் வழங்கப்பட்டது. சிலர் இதனை அங்கீகரிக்கவில்லை. சிலர் அன்னையை அந்ரோபோடோகோஸ் - άνδροποτοκος (மனிதரை சுமக்கிறவர்) என்றுதான் அழைக்கவேண்டும் என்று வாதிட்டனர். இந்த வாதத்தை முன்வைத்தவர்கள் மரியாவுக்கு எதிராவனர்கள் என்றில்லை. அவர்களுடைய பிரச்சனையாக இருந்தது இயேசுவும் அவருடைய இறை தன்மையுமாகும். கிறிஸ்துவையும் கடவுளையும் இரண்டாக பிரித்த இவர்கள், மரியாவை இறைவனை சுமக்கிறவர் என்றில்லாமல், ஓர் உன்னத மனிதரை சுமந்தவர் என வாதிட்டனர். இந்த மாற்று கொள்கைகளுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை சார்பாக கொள்கைப் போரிட்டவர்களில் தூய அத்தனாசியஸ் மிக முக்கியமானவர். ஆக எவர்; என்ன சொன்னாலும், மரியன்னை இறைவனின் தாய் என்பதில் கத்தோலிக்கராகிய எமக்கு எந்தவிதமான கிலேசங்களும் இல்லை. லூக்கா எலிசபோத்தின் வாயிலாக அன்னையை ஷஷஆண்டவரின் தாய் என அழகாக வர்ணிப்பார் (காண். லூக் 1,43 καὶ πόθεν μοι τοῦτο ἵνα ἔλθῃ ἡ μήτηρ τοῦ κυρίου μου πρὸς  ἐμέ; ஆக ஏன் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வந்திருக்க வேண்டும்?). இது நம் திருச்சபையின் விசுவாசம், எம் முன்னோர்களின் விசுவாசம், இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ் விசுவாசம் நமக்கு நன்மையைத்தான் தந்துள்ளது, இந்த விசுவாச சத்தியம் எம்மையும் இறைவனை சுமப்பவர்களாக இருக்க ஓர் அழைப்பை விடுகிறது. மேலும் வாசிக்க:
http://www.catholic.org/mary/theo.php

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6:22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: ஷஷஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!||
இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

இன்றைய முதலாவது வாசகம் கடவுளுக்கும் மோயிசனுக்கும் இடையில், ஆரோனுடைய குருத்துவத்தைப் பற்றி நடக்கும் உரையாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பல ஆழமான கருத்துக்ளைக் கொண்டு இங்கு ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. இங்கே இந்த ஆசீர்வாதங்கள் முன்னிலையை, (இரண்டாம் ஆளை, நீ-நீங்கள்) ஒருமையாக (நீ) நினைத்து வழங்கப்படுகிறது ஆனால் இது பலரைக் குறிக்கும் (நீங்கள்). உனக்கு என்பது 'உங்களுக்கு' என்று பொருள் படும்.

அ. கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக: ஆசீர்வதித்தலும் பாதுகாத்தலும் ஒரு குடும்பத்தலைவனுடைய வேலைகளில் முக்கியமானது என இஸ்ராயேலர் கருதினர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே போன்றோர் இதையே தம்முடைய இறப்பின் முன்னர் செய்தனர். இங்கு கடவுளே ஒரு குடும்பத்தலைவனாக அனைத்து இஸ்ராயேல் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்கிறார். கடவுள் தொடக்கத்தில் ஆதாமை ஆசீர்வதித்தது ஞாபகத்துக்கு வரலாம்.
יְבָרֶכְךָ יְהוָה וְיִשְׁמְרֶךָ : இவாரேஹா அதேனாய் வேயிஷ்மெரெஹா, கடவுள் உங்களை ஆசீர்வதித்து உங்களை பாதுகாப்பாராக! எனும் இவ்வாசீர் இன்று மட்டும் எபிரேயர்களிடம் புழக்கத்தில் இருக்கும் முக்கியமான வாழ்த்து, ஆண்டவரே இரட்சியும்|| என்று நாம் அடிக்கடி சொல்வது போல.

ஆ. கடவுள் தம் திருமுக ஒளியைகை காட்டுவாராக அருள் பொழிவாராக: இது இன்னொரு முக்கியமான வாழ்த்து. ஆண்டவரின் திருமுகம் அவரது பிரசன்னத்தை இங்கே குறிக்கிறது. பாலை வனத்தில் மேகத்தில் தோன்றியவர், தமது ஒளியைத் தருவாராக என்று வேண்டும்படி ஆரோன் புதல்வர்களுக்கு சொல்லப்படுகிறது. (காண் தி.பா 31,16: 67,1: 80,3.9)

இ. கடவுள் தமது வதனத்தை உயர்த்துவாராக: கடவுள் தமது முகத்தை உயர்த்துதல், அவரது அக்கறையை உங்கள் மீது திருப்புவாராக என்று பொருள் படும். கடவுளுடைய முகம், இங்கு அரவது கரிசனையையும், கவனிப்பையும் குறிக்கிறது. (פָּנָיו அவரது முகம்)

உ. அமைதி அருள்வாராக: அமைதி இஸ்ராயேல் மக்களிடையே இன்று வரை எதிர்பார்கப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான ஆசீர்வாதம். (שָׁלוֹם ஷலோம் அமைதி). அமைதியைத்; தருபவர் கடவுள் ஒருவரே என்று ஆசிரியர் தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்.

ஊ. ஆரோனுடைய மக்கள் கடவுளுடைய பெயரை மக்கள் மேல் வைப்பாராக என்பது, இந்த மக்கள் கடவுளுக்கு உரியவர்கள் என்பதைக் காட்டுகிறது. பெயர் இங்கே இவ்வினம் ஆண்டவரைச் சார்ந்தது என நினைவூட்டுகிறது.

இந்த ஆசீர்வாதங்கள் பல முறை விவிலியத்தில் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம், தூய பவுலும் தனது கடிதங்களில் இதனையே சிறு மாற்றங்களுடன் பாவிக்கின்றார் (காண். உரோ1,7: 1கொரி 1,3: 2திமோ 1,2)

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி அப்பா, தந்தையே, ஷஷஎனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல் பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும்
இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே||.

பவுல் தனது கைப்பட எழுதிய கடிதமாக அதிகமானவர்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். என்ன காரணத்திற்காக, யாருக்கெதிராக இக்கடிதத்தை ஏழுதினார் என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் கிறிஸ்தவர்கள் மீண்டும் யூத மதத்திற்கும் சட்டங்களுக்கும் உட்பட வேண்டும் என்று கூறியும், பவுலுடைய திருத்தூதர் பணியைப்பற்றி பல கேள்விகளையும் எழுப்பி வந்ததாக நம்பப்படுகிறது. இக் கடிதத்தின் காலத்தை கணிப்பது மிகக் கடினமாக உள்ளது, கி.பி 50கள் எனச் சொல்லலாம்.
பவுல் மரியன்னையை மறைமுகமாக கோடிட்டுக் காட்டும் மிகமான பகுதிகளில் இதுவும் ஒன்று.

அ. காலம் நிறைவேறியபோது என்பதை காலம் கனிந்தபோது அல்லது தகுந்த காலத்தில் என்று மொழிபெயர்கலாம். காலம் இங்கே கடவுளுடைய திருவெளிப்பாட்டை குறிப்பதாக பவுல் வாதிடுகிறார்.

ஆ. பெண்ணிடமிருந்து: (ἐκ γυναικός எக் குனாய்கோஸ்) இந்த வாதம் லூக்காவின் நற்செய்தியின் கபிரியேல் தூதர் மரியாவுக்கு சொன்ன மங்கள வார்த்தையை ஞாபகப்படுத்துகிறது.
இது இயேசுவுக்கு எதிராக சுமத்தப்பட்ட பிரதிவாதங்களை தகர்க்க பவுல் பாவித்த முக்கியமான விசுவாச பிரமாணங்களில் ஒன்று. அத்தோடு திருச்சட்டத்தையும் பவுல் இணைத்து இயேசு திருட்சட்டதிற்கு (தோறா) எதிரானவர் என்றில்லை என்பதை காட்டுகிறார். அதே வேலை சட்டத்தின் பிடியிலிருந்தும் அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தேவை இயேசுவுக்கு இருக்கிறது எனவும் காட்டுகிறார்.

இ. பவுல் தன்னுடைய திருமுகங்களில் ஆவியின் உந்துதல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் அதனையே இங்கேயும் செய்கிறார். இயேசு ஆண்டவர் முதல் முதலாக பாவித்த அப்பா என்ற அரமேயிக்க சொல்லை (காண். மாற் 14,36) முதல் தடவையாக பாவிக்கிறார், இச் சொல்லை உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பாவிப்பார் (உரோ. 8,15). இங்கே பாவிக்கப்பாடுகின்ற அப்பா எனும் சொல் (אַבָּא) என் அப்பா என்பதைக் குறிக்கும், ஆனால் பவுல் இங்கு இச்சொல்லை பொதுச் சொல்லாகப் பாவிக்கிறார்.

உ. அடிமைகள் அல்ல உரிமை குடிமக்கள் என்பது கலாத்தியர் திருமுகத்தின் முக்கியமான வாதம். இந்த உரிமைக் குடிமக்களாகும் தகுதியை கடவுள் இலவசாமக இயேசுவின் வாயிலாக தந்துள்ளார் என பிரதிவாதங்களை முன்வைப்பவர்களுக்கு கூறுகிறார் பவுல்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
16.அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17. பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18.அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
19.ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 20.இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21.குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இங்கே இன்றைய நாளுடைய சிறப்பினை ஒட்டி இரண்டு வாதங்களை முன்வைக்க முடியும்.

அ. வவ 16.17.18.20: பிறந்த குழந்தை அதன் பெற்றோர், கேட்டவர்கள் வியப்படைதல், மற்றும் அடையாளங்கள் அனைத்தும் இக்குழந்தை கடவுளுடைய மனித வருகை என்பதனைக் காட்டுகிறது.

ஆ. வ 19. மரியாவின் அமைதியான சிந்தனைகள், இங்கு நடப்பவைகளை முன்னமே அறிந்திருந்தார் அல்லது அவர் அவற்றை கிரமமாக நோக்கினார் எனச் சொல்லி, மரியா ஒரு சாதாரண பாத்திரம் அல்ல மாறாக, இறைதிட்டத்தில் முக்கியமான பங்காளி எனச் சொல்கிறார் லூக்கா.

வ. 20. மரியாவின் வயிற்றில் வந்தவர்தான் இயேசு என ஆணித்தரமாக சொல்கறார் லூக்கா. συλλημφθῆναι αὐτὸν ἐν τῇ κοιλίᾳ அவள் கர்பத்தில் கருத்தரித்த அவரை என்று மொழிபெயர்கலாம். அவர் கர்பத்தில் கருத்தரித்த அவர்தான் இயேசு எனக் காட்டுவதன் மூலம் மரியா என்பதவர்தான் இயேசுவினுடைய தாய் என விரிவாகவும், நேர்தியாகவும் சொல்கிறார் லூக்கா. மரியா இறைவனின் அல்லது ஆண்டவரின் தாய் என்பதற்கு இதைவிட வேறு வசனங்கள் தேவையில்லை.

இறைவனின் தாயான மரியா, இறைவனை சுமந்து காட்டியவர், இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இறைவனை தமது வார்தையாலும், வாழ்க்கையாலும், சுமப்பாவர்களும் மரியாள்களே, அவர்களும் இறைவனின் தாய்மார்களே!!!

இறைவனின் தாயும், எங்கள் தாயுமான மரியா, எங்களுக்காக தம் மகனை தொடர்ந்து பரிந்து பேசுவாராக,
கடவுள் நம்மை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக! இப் புத்தாண்டில் ஆண்டவர் தம் திருமுகத்தை; நம்மீது ஒளிரச் செய்து அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை நம்; பக்கம் திருப்பி நமக்கு அமைதி அருள்வாராக!||
ஆமென்.
அன்புடன் மி. ஜெகன்அமதி
நாப்போலி,திங்கள், 28 டிசம்பர், 2015

வியாழன், 24 டிசம்பர், 2015

Holy Family Feast, God sanctifies and wills the families.












கிறிஸ்து பிறப்பு எண்கிழமை, ஞாயிறு
திருக்குடும்ப விழா, நல்லதொரு குடும்பம் செய்வோம்|
ஞாயிறு 27 டிசம்பர் 2015

முதல் வாசகம்: 1சாமுவேல் 1,20-22.24-28


உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஷநான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்| என்று சொல்லி, அவர் அவனுக்குச் ஷசாமுவேல்| என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை.
அவர் தம் கணவரிடம், பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் 
தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.
பின் அவர் கூறியது: என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.
ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

அ. சாமுவேல்: 
உண்மையில் சாமுவேலின் பெயரின் அர்த்தம் என்ன? என்பது சில விவிலிய ஆய்வாளர்களின் தேடல், இங்கே ஓர் அழகான சொம்மொழி சிலேடையை பாவிக்கிறார் ஆசிரியர். שְׁמוּאֵל (ஷெமுஎல்) என்கின்ற சொல் வழக்கம் போல் மூன்று மெய்யெழுத்துக்களைக் கொண்டமைந்துள்ளது அவை, שׁמא செவிமெடுஎன்று பொருள், வரம் கேள் என்பதற்கு שָׁאַל ஆக வரவேண்டும், இப்படிவந்தால் அது ஆசிரியருடைய கருத்தையோ, பெயரையோ குறிக்காது, சிலர் உண்மையில் இது சவுல் அரசரைக் குறிக்கிறது என்பர், ஆனால் இந்த வாதத்துக்கு அதிக வாய்ப்பு இக்கதை அமைப்பில் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம், ஆசிரியர் இங்கே இறைவாக்கினர் சாமுவேலைத்தான் குறிக்கிறார், அவருடைய பெயரின் அர்த்தமும், எழுத்தும் ஒத்துப்போகவில்லை.

ஆ. ஆனால் அன்னா செல்லவில்லை:
முழு குடும்பமும் யாத்திரை செல்லும் போது அன்னா செல்லவில்லை என்பதைக் காட்டி, அக்கால பெண்களின் தனிமனித சுதந்திரத்தை காட்டுகிறார் போல. அன்னாவிற்கு ஆலயத்தைவிட வீட்டில் முக்கியமான வேலை இருப்பதை உணர்கிறார். 

இ. அன்னாவின் கட்டளை:
அன்னா இங்கே தன் கணவரிடம் இரஞ்சவில்லை, சம உரிமையோடு பொறுப்பாக பேசுகிறார். முடிவையும் அவரே எடுக்கிறார். 23வது வசனம் (இன்றைய வாசகத்தில் இல்லை) நல்ல கணவனின் பண்பைக் காட்டுகிறது. ஏற்கனவே அன்னா எடுத்த முடிவை மதிக்கிறார், எல்கானா. (பி.கு. கணவனை அரசனாகவோ-அதிகாரியாகவோ அல்லது மனைவியை சண்டைக்காரியாகவோ பார்க்கும் சிலருக்கு இவர்கள் நல்ல பாடம் சொல்கின்றனர்.)

ஈ. பலிப்பொருட்கள்:
வழமையாக பலிப்பொருட்களை ஆண்களே கொண்டுவருவதனைப் பார்க்கிறோம், இங்கு அன்னாதான் பலிப்பொருள்களைக் கொண்டுவருகிறார். அவர்தான் இங்கே கதாநாயகி. பலிப்பொருட்களில் அக்கால கட்டளைப்படி பொருட்களைக்கொண்டு வருகிறார் (மாவு, இரசம், காளை). மூன்று காளைகளைக் கொண்டுவந்தாரா? அல்லது மூன்று வயது காளையைக் கொண்டுவந்தாரா? என்பது தெளிவாக இல்லை. எபிரேய விவிலியம் காளைகள் என்று சொல்லி பின் காளை என்று சொல்கிறது. 

உ. சீலோ இல்லம்:
வட நாட்டில் இருந்த இந்த ஆண்டவரின் இல்லம், அரசர்கள் காலத்திற்கு முந்தியது, இங்கே ஆண்டவரின் சந்திப்புக் கூடாரமும், ஒரு பலிப்பீடமும் இருந்ததென்பர். ஆரோனுடைய குருத்துவத்தோடு தொடர்புபட்ட இந்த இடம், பெத்தேலை ஒத்தது. தாவிதினுடைய எழுச்சியும், எருசலேம் ஆலயத்தின் வருகையும் பிற்காலத்தில் இந்த இடத்தை அதிகாரபூர்வமற்ற வழிபாட்டிடமாக்கியது. வடநாட்டுக்காராக்களும், சவுல் மன்னரும் இவ்விடத்தை பெரிதும் மதித்தனர். இங்கே நிச்சயமாக ஆண்டவரின் பிரசன்னம் இருந்ததை விவிலியம் காட்டுகிறது. ஆண்டவர் சாமுவேலிடம் போசியதும் இங்கேதான். 

ஊ. ஏலியிடம்:
ஏலி இங்கே பணிபுரிந்த குரு, ஒரு நீதிபதியாகவும் கருதப்பட்டார் (1சாமு 4,18), பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்காத தகப்பனாக விவிலியம் இவரைக் காட்டுகிறது (1சாமு 2,12), அன்னாவை அவசரப்பட்டு தவறாக கருதுகிறார். அன்னா ஏலியை மரியாதையுடனே பார்கிறார், தனது வாக்கினையும் நிறைவேற்றுகிறார். 
(தங்களைத் முதலில் திருத்தாமல், அவசரப்பட்டு மற்றவருக்கு முடிவெடுக்கும் குருக்களுக்கும், மௌனமாக நற் பாரம்பரியங்களை கற்பிக்கும் அன்னையர்க்கும் இவர்கள் நல்ல உதாரணங்கள்)


எ. ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவன்:
சிலர் இவ்வர்ப்பணிப்பை "நாசிரேத்து" அர்ப்பணிப்பாக கருதுகின்றனர் ஆனால் பாடம் இவ்வாறு சொல்லவில்லை (சிம்சோன் ஓர் நசிரேத்துவாக அர்ப்பணிக்கப்பட்டவர்). சில ஆய்வாளர்கள், இங்கே ஆசிரியர் சவுல் மன்னனையும் அவரது பிரமாணிக்கமில்லா அழைப்பையும் சாடுவதாக இக்காட்சிகளைக் காண்கின்றனர். வசனங்களை ஆராய்ந்தால் அவை சாமுவேலையே குறிக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால் ஏலியின் மைந்தர்களை கடவுள் புறக்கணித்தது போல சாமுவேலின் மைந்தர்களையும் புறகணித்தார், அவர்களின் தீவினையின் பொருட்டு (1சாமு 8,1-3), சவுலையும் புறக்கணித்தார். தலைவர்கள்; யாராக இருந்தாலும், வழுவினால் புறக்கணிக்கப்படுவார்கள்!




திருப்பாடல் 84,1-2.4-5.8-9

பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.

1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! 2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். 5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.

8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்! 9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்.

இது ஒருவகை எருசலேம் திருப்பயண திருப்பாடல் அல்லது சீயோன் பாடல். கோராவினுடைய அல்லது கோரா பிரிவினரால் எழுதப்பட்ட பாடல்களில் ஒன்று எனக்கொள்ளலாம். எருசலோம் ஆலயத்தை, பலவகை பெயர்களால் (முற்றம், வாயில், பீடம், இல்லம், சீயோன்) அலங்கரிப்பதனால், ஆசிரியரின் எருசலேம் மீதான காதல் புரிகிறது.

வ 1-2: உலகில் எத்தனை வகை இன்பங்கள் இருந்தாலும் தனது ஆன்மாவும், இதயமும், சதையும் வாழுகின்ற ஆண்டவரின் இல்லத்திற்காக ஏங்கிப்பாடுவதாக கூறுகிறார்.

வ 4-5: ஆசிரியர் ஆண்டவர் இல்லத்தில் தொடர்ந்து இருக்கும் குருக்களில் வியப்படைகிறார். சீயோனிற்கான பாதைகள் இதயத்தில் பதிந்துள்ளது என்கிறார். அதனையே தமிழில் 'உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது' 
என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது. 

வ 8ல்: ஒருபோகு நிலை (இருசொல் இயைபணி) பாவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். படைகளின் ஆண்டவர்-யாக்கோபின் கடவுள் (אֱלֹהִים צְבָאוֹת - אֱלֹהֵי יַעֲקֹב  எலோஹிம் ட்சபாஒத் - எலோஹே யா'கொப்)

வ 9ல்: திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்பது, இடப்பெயர்வுக்கு முன் அரசர்களைக் குறித்திருக்கும், பின்னர் தலைமைக்குருக்களையோ அல்லது மக்களின் பிரேதேச தலைவர்களையோ குறித்திருக்கும்.


இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2.21-24

1.அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. 2.என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். 
21.அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.
22.அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

அமைப்பிலும் இறையியலிலும் யோவான் நற்செய்தியை ஒத்திருக்கும், யோவானின் மடல்கள் மிகவும் ஆழமான வரிகளைக் கொண்டவை. திருமுகங்கள் என் அழைக்ப்பட்டாலும் யாருக்கு யாரால் போன்ற திருமுக பன்புகளை இங்கே காணமுடியாது. கிறிஸ்தவம் "அறிவுவாதிகள்" என்னும் ஒரு பிரிவினருடைய போதனைகளால் தாக்கப்பட்டபோது இந்த மறையுறை தொகுப்புக்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

வ.1: τέκνα θεοῦ κληθῶμεν  καὶ ἐσμέν: கடவுளுடைய பிள்ளைகளாக அழைக்கப்படலாம் ஆக அவ்வாறே இருக்கிறோம் யோவான் குடும்பத்திற்கே உரிய சொற்பிரயோகம். யோவான் கிறிஸ்தவர்களை கடவுளுடைய பிள்ளைகள் என்று சொல்வதன் மூலம் எல்லாவிதமான வேற்றுமைகளையும் தகர்க்க முயல்கிறார். 
ὁ κόσμος கொஸ்மோஸ், உலகம் என்று யோவான் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மிகவும் சாதூர்தியமாக இருக்கும். இது இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களையோ, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களையோ, யோவான் திருச்சபைக்கு ஏதிரான கருத்துக்களை பரப்பியவர்களையோ அல்லது அறிவுவாதிகளையோ குறிக்கலாம். 

வ.2. இன்னும் வெளிப்படவில்லை: (οὔπω ἐφανερώθη) இது அக்கால திருச்சபைக்கு பெரிய சிக்கலாகவே இருந்தது. சிலர் ஆண்டவர் வந்துவிட்டார் அங்கே இங்கே என்று பல கதைகளைச் சொன்னதால் யோவானுக்கு தன் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இயேசு இரண்டாம் முறை வரும்போது எப்படி இருப்பார் எனும் கேள்விக்கு (ὀψόμεθα αὐτόνஇ καθώς ἐστιν) அவரைப் பார்ப்போம், அவர் இருப்பதைப் போல என்று பதிலலிக்கிறார். யோவான், கடவுள் மோயிசனுக்கு வெளிப்படுத்தியதை இங்கே ஞாபகப்படுத்துகிறார் என நினைக்கிறேன் (காண். வி.ப 3,14: אֶהְיֶה אֲשֶׁר אֶֽהְיֶה இருந்து கொண்டு இருக்கிறார் அவர் இருந்துகொண்டு இருக்கிறார்)

வ.21. மனச்சான்று என்று யோவான் இதயத்தையே இங்கு குறிப்பிடுகிறார் (καρδία கார்தியா) இங்கே ஒரு எதிர்காலத்திலே பேசுகிறார். ஆக மற்றவருடன் வாதிடுவதன் முன் ஒருவர் தன்னில் சரியாக இருக்கவேண்டும் என்பது நியதி.

வ.22. கட்டளைக் கடைப்பிடிப்பதும் கடவுள் விரும்புவதைச் செய்வதும் ஒன்று எனும் வாதம் மீண்டும் மீண்டும் யோவான் நற்செய்தியில் வருவதை இங்கு நோக்க வேண்டும்.

வ.23-24. அந்த கட்டளை எது என்று விளக்கம் தரப்படுகிறது. இயேசுவை நம்புதலும், ஒருவர் மற்றவரை அன்பு செய்தலுமாகும். (ஒப்பிடுக: யோவான் 12,49: 13,34: 14,15: 14,21: 15,10: 15,12) ஷஆண்டவரோடு இணைந்திருத்தல|; (μένω மெனோ) என்பது யோவானுடைய இன்னுமொது இறையியல் வாதம். 

நற்செய்தி: லூக்கா 2,41-52

41.ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். 42. இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். 43. விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது. 44. பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;. 45.அவரைக் காணாததால் அவழiரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். 46. மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். 47. அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 48. அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ஷஷமகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே|| என்றார்.
49. அவர் அவர்களிடம், ஷஷநீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?|| என்றார். 50. அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 51. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். 52. இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.


வ.41. இயேசுவினுடைய பெற்றோர் யூத சமய சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாய் இருந்ததைக் காட்டுகிறது. யூத ஆண்கள் மூன்று விழாக்களை கடைப்பிடித்தனர், பாஸ்கா விழா அவற்றுள் முக்கியமானது. எருசலேமிற்கு போதல் என்பது யூதருக்கு தவிர்க்க முடியாத கடமை, திருப்பாடலில் அதனை அவதானித்தோம். இயேசுவிற்கும் நல்ல யூதனாக எருசலேம் மீதான காதல் இருந்தது. 

வ.42. தமிழர்களுக்கு பெண்பிள்ளைகள் முக்கியமானவர்கள் என்பதைப் போல் யூதர்களுக்கு ஆண் பிள்ளைகள் மிக முக்கியமானவர்கள். 12வயது ஆண் பிள்ளைகள் சமய சடங்குகளை செய்ய தகுதி அடையும் வயதாக அறியப்படுகிறது. அதனை அவர்கள் "பார் மிட்ஸ்வா" בַּר מִצְוָה என்று அழைக்கிறார்கள். நமது மொழியில் சொன்னால், இயேசு ஆண்டவர் "வயசுக்கு வந்த நாள்". 

வ.44. எருசலேம் சுமார் 25,000 மக்களைக் கொள்ளக்கூடிய நகர் பாஸ்காவிழாவின் போது நிரம்பி வழிந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே வருவார்கள். உரோமைய அரசாங்கத்திற்கு அது பிடிக்காத நாள். பலர் கலவரமும் செய்வார்கள். இதனால் பலர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக உறவினர்களை நாடுவது வழக்கம். ஆகவேதான் உறவினர்களிடம் தேடினர் என்று லூக்கா சொல்லுகிறார். 

வ.45. எருசலேமிற்கு திரும்பினர் என்று இந்த திருக்குடும்பத்தின் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒரு நாள் இதே எருசலேமில் தம் மகனை இழப்பர் என சொல்லாமல் சொல்லுகிறார் போல.

வ.46. மூன்று நாட்களுக்கு பின் கோவிலில் கண்டார்கள்: மூன்றாவது நாள் என்றும் பொருள் படும் (μετὰ ἡμέρας τρεῖς), லூக்கா இங்கே மூன்று என்னும் இலக்கத்துடன் விளையாடுவது போல தோன்றுகிறது. இயேசு இறந்த பின்னர், (லூக் 9,12: 18,33: 24,7: 24,46) இவ்வாறே மூன்றாம் நாள் உயிர் பெறும் இம்மரியின் மைந்தனை யாரும் தொலைக்க முடியாது என்பதைப் போல. 

வ.46-47. இயேசுவை ஆலயத்தில் முதியவர்களின் நடுவில் காண்பதும், ஆச்சரியப்படுவதும், தானியேலை பெரியவர்கள் நடுவில் கண்டதை ஞாபகப்படுத்துகிறது. தானியேல் சமூக முதியவர்கள் நடுவில் இருந்தார், இயேசுவோ ஆசிரியர்கள் நடுவில் இருக்கிறார். (διδασκάλων திதாஸ்கலோன்), இங்கே அவர்களுக்கு போதித்தார் என்று எடுக்க முடியாது மாறாக அவர் நல்ல யூத சிறுவனாக அறிவில் இருந்தார், சமய பற்றோடு இருந்தார் என எடுக்கலாம். கேட்டவர்கள் மலைத்துப்போயினர் என்பதனால் இயேசு வயதையும் தாண்டிய அறிவாளியாக சிறு வயதிலே இருந்தார் என உலக தலைவர்களைப் சொல்வதைப்போல மேலாக சொல்கிறார் லூக்கா. 

வ.48. அன்னை மரியாவுடைய கேள்வி எம்மை பல கேள்விகள் கேட்க வைக்கிறது. லூக்காவுடைய மரியா சாதாரன மரியா அல்ல, அவர் ஆண்டவரின் தாய். இங்கே லூக்கா மரியாவை ஒரு பொறுப்புள்ள நல்ல தாயாக காட்டுகிறார், அல்லது இயேசு முழுமையாக மனிதாராகவும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது. 

வ.49. இயேசுவினுடைய பதில், செல்லமாக மரியாவை மங்கள வாழ்த்து நிகழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. மரியாவுக்கு மீண்டும் இயேசு தாம் யார் எனச் சொல்கிறார். பிறப்பிலே குழந்தைகள் தனித்துவமானவர்கள் என்பதை ஒவ்வொரு தாயாரும் உணர வேண்டும் என தனது அன்புத் தாயாருக்கு சொல்கிறார் ஆண்டவர்.

வ.50. ஆண்டவரின் தாயாரால் கூட புரிய முடியாத நிகழ்வுகளும் உண்டு என லூக்கா பதிவு செய்கிறார். அனைத்திற்கும் பதில் அளிப்பவரும், அனைத்தையும் புரிந்துகொள்பவரும்தான் ஞானியர் என்றில்லை என்கிறார் லூக்கா. மரியா மான்புள்ள யூத தாய் என்பது இவ்வாறு விளங்குகிறது.

வ.51. இந்த வசனம் அன்னை மரியாவை இன்னொரு முறை பெண்களுக்கெல்லாம் முதல் பெண்னாக காட்டுகிறது. இதனையே மரியா 2,19லும் செய்தார்.  அவர் தனது இதயத்தில் சேர்த்து வைத்தார்என் கிரேக்க மூல பாடம் சொல்கிறது (ἡ μήτηρ αὐτοῦ διετήρει πάντα τὰ ῥήματα ἐν τῇ καρδίᾳ) மரியாவின் மாட்சியை அறியாதவர்கள் இவ்வார்த்தைகளை வாசித்து தெளிய வேண்டும்.

வ.52. இவ்வசனம் இயேசுவின் முழுமனித வளர்ச்சியைக் காட்டுகிறது. இயேசுவின் மீட்புப்பணிக்கு இவ்வசனம் சாட்சி. பிள்ளைகள் அறிவிலும், அளவிலும் வளரவேண்டும், அத்தோடு கடவுள்-மனித அருளைப் பெறவேண்டும், இயேசுவைப்போல. 

இன்று நாம் காணும் மரியாவும் அன்னாவும் உதாரணமான அன்னையர்கள். தமிழர் பண்பாடும், கலாச்சாரமும் பெண்மையை முதன்மைப்படுத்துவபையே. அதனையே நம்முடைய மொழியின் சொற்களும், இலக்கியங்களும் சொல்கின்றன. வேற்று நன்பர்களின் சிந்தனைகளும் மதங்களும், தமிழர் பண்பாட்டை ஆணாதிக்க சமூகமாக மாற்றிவிட்டது. இதற்கு நம்முடைய சமயங்களின் சில கொள்கைகளும் காரணம். சமய மடமைகளைத் தாண்டி நம் தமிழ் பெண்ணை மீட்க வேண்டும், பாரதியின் புதுமைப் பெண்ணை விடுவிக்க வேண்டும். நல்லதொரு குடும்பம் அமைக்க பெண்களை அவர்களின் இடத்தில் வைக்க ஆண்டவர் எமக்கு ஆசீர் தருவாராக! ஆமென்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

Christmas Morning Mass Celebrations!




நத்தார் விழா, காலைத் திருப்பலி

எசாயா 62,11-12

மூன்றாம் எசாயாவின் இறையியல் சிந்தனைகளை இப்பகுதி தாங்கி வருகிறது. எவ்வாறு முழு உலகும் எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டதோ, அதே போல, அவளுடைய மீட்பையும் காணும் என்பது மையக்கருத்து. ஷஉன் மீட்பு வருகிறது| (יִשְׁעֵךְ בָּא யிஷ்எஹா பா) இந்த சொல்லுக்கும் இயேசு என்கிற சொல்லுக்கும் வேர்ச்சொல்லில் தொடர்பிருக்கிறது. கைவிடப்பட்டவர்கள் என அறியப்பட்ட மக்கள் இனி தூயவர்கள் என அறியப்படுவாhகள். ஒரு மக்கள் போரில் தோற்றால் அவர்கள் தெய்வமும் தோற்றதற்கு சமம். இங்கே இனி இஸ்ராயேல் மக்களும் அவர்கள் கடவுளும் தோற்றவர்கள் அல்ல என எசாயா நம்பிக்கை கொடுக்கிறார். அழிக்கப்பட்ட எருசலேமிற்கு புதுப்பெயர் கொடுக்கப்படுகிறது, ஷதேடப்படுகிற நகர் (பிரசித்திபெற்ற), கைவிடப்பட்ட நகர் அல்ல.

தீத்து 3,4-7

திருத்தூதர் பவுலுடைய மேய்புப்பணி மடல்களில் ஒன்றான தீத்துவிற்கான திருமுகம், செய்தியிலும் இறையியலிலும் திமோத்தேயுவிற்கான மடல்களை ஒத்திருக்கிறது.

அ. ஷநம் மீட்பராம் கடவுள்| (σωτῆρος ἡμῶν θεοῦ சோடேரோஸ் ஹேமோன் தேஇஉ) என்பது இயேசுவுக்கு ஆரம்ப காலத்திலே வழங்கப்பட்ட சிறப்பு பெயர் சொற்கள். இங்கே பவுல் இயேசுவை முதல் ஏற்பாட்டு கடவுளாக காண்கிறார்.

ஆ. ஷநன்மையும் மனித நேயமும்| (ἡ χρηστότης καὶ ἡ φιλανθρωπία) இவை பவுல் மேய்புப்பணி நூல்களிலே அதிகமாக பயண்படுத்தும் சொற்றொடர். இது நன்மையையும் பரிவையும் பிரிக்கமுடியாது எனக் காட்டுகிறது.

ஆ. கடவுளிடம் இருந்து பெறும் எந்தக் கொடைக்கும் மனிதர் உரிமை கோர முடியாது, அது கடவுளின் இரக்கத்தினால் மட்டுமே பெறப்படுகிறது என்கிறார் பவுல். தீத்துவை (ஆயர்களை) அதனைச் செய்யச் சொல்கிறார். கடவுள் மீட்டது தூய ஆவியால் என்பதன் மூலம், கிறிஸ்தவர்கள் பாரபட்சத்தைக் கண்டு அஞச வேண்டியதில்லை என்கிறார்.

பவுல் தன்னுடைய இறுதி காலம் நெருங்கியதை உணர்ந்தவராக, இனி வரும் காலங்களில் திருச்சபையை வழிநடத்துகிற ஆயர்கள் எவ்வாறு அக்கால சவால்களை சந்திக்க வேண்டும் என்று இம்மடல்களை எழுதியதாக பாரம்பரியம் கருதுகிறது. இம்மடல்களை வாசிக்கும் போது, அக்கால பிரச்சனைகளும், அக்கால கிறிஸ்தவ நம்பிக்கையும் நமக்கு புரியும். கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் இருந்து விடுபட்டு முழு உலகை அடைவதனை இங்கு காணலாம்.

லூக்கா 2,15-20

லூக்கா அவதாணமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம். மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், மெசியாவாகவும் காட்டுகிற அதே வேளை, லூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லது அனைவரின் கடவுளாகவும் காட்டுவார். லூக்காவின் கடவுள் அனைவரின் கடவுள். இயேசுவின் பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால், இயேசுவை அவர் எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும். இன்றைய பகுதியிலே,

அ. ஷவானதூதர்கள்.| இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக் காட்டுகிறார். மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும், கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம் காட்ட, லூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார்.

ஆ. இடையர்களின் பெத்லகேம் வருகை: (οἱ ποιμένες  ஹொய் பொய்மெனஸ்) இடையர்கள் பற்றி இயேசு பிறந்த காலத்தில் நல்ல அபிப்பிரயாயம் இருக்கவில்லை, அவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல் நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லை. கடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவே காட்டினார். தலைவர்களையும் நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார், இயேசுவும் தன்னை நல்ல ஆயன் எனவே பல வேளைகளில் வெளிப்படுத்தினாh. பேதுருவையும் அவர் பணியாளர்களையும் ஆயர்களாகவே இருக்கச்சொல்கிறார். லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ஒன்று: நல்ல ஆயரின் பிறப்பு ஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இரண்டு: தாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும் லூக்கா அறிவிக்கிறார்.

இ. இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம் சிந்திக்க வைக்கிறது. ஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம் அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறது.

ஈ. பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்: யாருக்கு சொன்னார்கள், மரியாவுக்கும் யோசேப்புக்கும் என்று நினைக்கிறேன். யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இந்த மற்ற அணைவரும் யார்? (πάντες οἱ ἀκούσαντες கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம். வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல். (θαυμάζω தௌமாட்சோ: வியப்படை, ஆச்சரியப்படு, மகிழ், பயங்கொள், மரியாதைகொள், வணங்கு,) ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின் இந்த பதிலுணர்வு, வெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

உ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்: லூக்காவின் மரியா சாதாரண இளம்பெண்ணல்ல. அவர் திருச்சபையின் முன்னோடி. நம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்கா. மரியா பல வேளைகளில் இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவது, மரியாவை யார் எனக் காட்டுகிறது.

ஊ. இடையர்களின் ஆட்டமும் பாட்டும், கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக் காட்டுகிறார். எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லி, கடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும் சொல்கிறார்.

பிறந்த குழந்தை ஆண்டவர், நமது குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவுபடுத்துவாராக!
தன்னலத்தாலும்;, போர் வெறியாலும், சமய மூட நம்பிக்கையாலும்
அல்லலுறும் இவ்வுலகை குழந்தை இயேசு தன் சிரிப்பால் கழுவுவாராக!

இயேசு ஆண்டவரின் பிறப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வாழ்த்துகிறேன்!


அன்புடன்
மி.ஜெகன்அமதி










திருவிழிப்பு திருப்பலி: 24.12.2015

எசாயா: 62,1-5

எருசலேமை திருமணக்கோலத்தில் இருக்கும் மணமகளாக ஒப்பிட்டு எசாயா இறைவாக்குரைக்கிறார். எருசலேமிற்கு புதிய பெயர், மகிழ்ச்சி என சூட்டப்படுகிறது. மணமுடித்தல் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு, அது பெண்களுக்கு தாய்மையையும் இல்லத்தரசி அதிகாரத்தையும் தருகிற நிகழ்வு. கடவுளை மணமகனாக வர்ணிப்பது இஸ்ராயேல் மக்களின் வழமை. ஆக இங்கு எருசலேம் மண மகளாகவும் அதன் மணவாளனாக கடவுளும் வர்ணிக்கப்படுகின்றனர். இஸ்ராயேல் மக்களை சுற்றி இருந்தவர்கள் தங்கள் தெய்வங்களை மணவாளர்களாகவும், மணவாட்டிகளாகவும் நினைப்பது வழமை. எசாயா கடவுளை காதலனாக நினைப்பது, அன்புறவை மையப்படுத்துகிறது.
(எருசலேமின் புதுப்பெயர்: חֶפְצִי־בָהּ கெப்ட்சி-பா மகிழ்ச்சி)

திருத்தூதர் பணி: 13,16-17,21-25

பவுலுடைய முதலாவது திருத்தூதுப் பயணத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. பிசிதியா அந்தியோக்கியாவில்
யூதருக்கும் மற்றவருக்கும் பவுல் போதிக்கும் அவருடைய முதலாவது உரை அல்லது பிரசங்கம் என இதனைக் கருதலாம். இதிலே பவுல் இஸ்ராயேல் மக்களுக்கு தங்களது மீட்பின் வரலாற்றை சுருக்கமாக கூற விழைகிறார். மூதாதையர் தொடங்கி, பாலைவனம் சென்று, சவுலையும் தாவீதையும் தாண்டி, உண்மையாக கடவுள் தேர்ந்தெடுத்தவர் இயேசு ஆண்டவரே என புலமைத்துவத்தோடு வாதிடுகிறார். பவுல் திரு முழுக்கு யோவானையும் யார் என்று சுட்டிக்காட்ட மறக்கவில்லை. லூக்கா பவுலைப் பற்றி பதிவு செய்த முக்கியமான போதனை உரைகளில் இதுவும் ஒன்று.

இயேசுதான் எதிர்பார்க்கப்பட்ட மீட்பர் என்பதுதான் இவ்வுரையின் சுருக்கம்: (σωτήρ Ἰησοῦς சோடேர் ஏசூஸ்)

மத்தேயு: 1,1-25

மத்தேயு நற்செய்தியில் மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியை இரண்டாக பிரிக்கலாம்.
அ. ஆண்டவரின் தலைமுறை அட்டவணை. 1:1-17
ஆ. யோசேப்புக்கு வானதூதரின் செய்தி. 1:18-25

அ. மிகவும் பிடித்த, விளங்க முடியாத ஆழமான பகுதி இதுவாகும். வரலாற்றில் முக்கியமானவர்களுக்கு தலைமுறை அட்டவணையைக் கொடுத்து அவர்களின் சாதாரண பிறப்பைக் கூட பிரசித்திபெற்றதாக செய்வது திறமையான ஆசிரியர்களின், எழுத்தாளர்களின் இலக்கிய நடை. அதனையே மத்தேயு நற்செய்தியாளர் தனது ஆண்டவருக்கு செய்கிறார், ஆனால் இங்கு ஆண்டவரை பிரசித்திபடுத்த அல்ல. மாறாக, அவரை தலைமுறைகளுக்கு அறிவிக்க. (εὐαγγελίζω எவான்ங்கலிட்சோ).
1. தலைமுறை அட்டவணை: (γενεσις கெனஷிஸ்) என்பதை ஷதொடக்கம்| எனவும் மொழிபெயத்கலாம். இது முதல் ஏற்பாட்டின் முதல் நூலும், தோராவினுடைய முதல் நூலுமான தொடக்க நூலை (בְּרֵאשִׁית பெர|ஷித்) ஞாபகப்படுத்துகிறது. மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், தனது நூலை புதிய தோராவாகவும் காட்டுகிறார் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆக இந்த அட்டவணைதான் மத்தேயு நற்செய்தின் தொடக்கமும் முடிவுமாகும்.

2. இதனுடைய தலையங்கமே மத்தேயு நற்செய்தியின் சுருக்கத்தை காட்டுகிறது. மத்தேயு நற்செய்திப்படி இயேசுகிறிஸ்து (மெசியா - எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்) ஆபிரகாமின் மகன்: (தொடக்கநூல் 12ம் அதிகாரத்தில் வாக்களிக்கப்பட்டவர்). அனைத்து மக்களினங்களின் வாரிசும் கடவுளுமானவர். தாவீதின் மகன்: எருசலேமில் தாவீதின் அரச பரம்பரை அழிந்தபோது  எசாயா மற்றும் இறைவாக்கினர்களும் வாக்களித்த அழியாத தாவிதின் வாரிசு, அவர் தாவீதுக்கும் தலைவர்.

3. இந்த பகுதியில் மத்தேயு ஐந்து பெண்களை உள்வாங்கியுள்ளார், இவர்கள் அனைவரும் சாதாரண பெண்கள் இல்லை. மிக உயர்ந்தவர்கள். தமிழில் சொன்னால், குல தெய்வங்கள். ஆண்களுடைய தீய எண்ணங்களால் பாதிக்கப்பட்டாலும், வரலாற்றில் தோற்காதவர்கள். இவர்களைப்பற்றி ஆயிரம் புத்தகங்கள் எழுதினாலும் போதாது. ஆண்களை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் தலைமுறை அட்டவணையில் பெண்களைக் கொண்டுவருவதன் மூலம், கடவுளுக்கு பேதங்கள் இல்லை என்பதனை நிருபிக்க விழைகிறார் மத்தேயு. இவ்வட்டவணையில் பல அரசர்கள்களும் வரலாற்று புதல்வர்களும் வந்து போனாலும் இங்கே தோன்றுகின்ற இந்த ஐந்து பெண்கள் நம்முடைய கவனத்தை ஈர்ப்பது அவர்களின் மாட்சியைப் பறைசாற்றுகிறது. இங்கே வரும் பெண்கள்: தாமார்: யூதாவின் மருமகள். இவர் வழியாகவே யூதாவின் சந்ததி வளர்ந்தது. இராகாபு: மத்தேயுவின் எண்ணப்படி இவர் போவாசின் தாயாகிரார். ரூத்து: போவாசின் மனைவியும், தாவீது மன்னனின் பாட்டியுமாவார். உரியாவின் மனைவி: தாவீதின் மனைவியாகி, சாலமோன் மன்னனின் தாயாகிறார். மரியா: இயேசு ஆண்டவரின் தாய்.

4. இந்த பகுதி மூன்று தடவை ஏழு ஏழாக பிரிக்கப்பட்டு 21 தலைமுறைகள் என கணக்கிடுகிறார் மத்தேயு, தான் ஒரு மறைநூல் அறிஞர் என சொல்கிறார் போலும். 3, 7, 21 - இவை நிறைவின் எண்கள், இறைவன் ஏழு நாட்களில் உலகை படைத்ததாக கருதுவதும் இந்த நம்பிக்கையில்தான். தாவீதினுடைய எண் கணக்கும் ஏழு ஆகும். ஏழு என்னும் இலக்கம், எண்ணையும் தாண்டி அறியப்பட வேண்டியது.

ஆ. இரண்டாவது பகுதி வானதூதர் யோசேப்புக்கு சொன்ன செய்தியை உள்ளடக்கி அமைந்துள்ளது.

லூக்கா நற்செய்தியில் மரியாவுக்கு நிஜத்தில் தோன்றும் வானதூதர் இங்கே யோசேப்புக்கு கனவில் தோன்றுகிறார். யோசேப்பை தாவீதின் மகன் எனச் சொல்வதன் மூலம், இயேசு தாவீதின் வாரிசு எனும் இறைவாக்கு மீண்டும் ஞாபகப்படுத்தப்படுகிறது. யோசேப்பு, முதல் ஏற்பாட்டு கணவான்களான தானியேல், யோசேப்பு போன்றவர்களும் சரியாக கனவிலே கடவுளுடைய செய்தியை கண்டடைந்தவர்களே. நேர்மையாளர் (δίκαιος திக்கைஒஸ்), ஆண்டவரின் சட்டங்களை கடைப்பிடித்து வாழ்பவர், இஸ்ராயேல் மக்கள் இச்சட்டங்களுக்காக தமது உயிரையும் கொடுத்தனர். மத்தேயு சட்டங்களை எப்படி கடைப்பிடிக்க வேண்டும், சட்டங்கள் தேவையானவைதான், ஆனால் இரக்கம் அதனைவிட தேவையானதே, எனக் காட்டுகிறார், பின்னர் இயேசுவும் தன் தந்தை வளனாரை பின்பற்றி சட்டங்களுக்கு புது விளக்கம் கொடுப்பார் (மத் 5:17).
இயேசு: உலக வரலாற்றைப் புரட்டி போட்ட பெயர் இது. (Ἰησοῦς இஏசுஸ்) என்கிற கிரேக்கச் சொல் யோசுவா (יהושׁווּעַ யேஹோஷுவா) என்ற எபிரேய-அரமேயிக்க சொல்லின் வடிவமாகும். இதற்கு 'கடவுள் மீட்கிறவர்' என்று பொருள் கொள்ளலாம். (காண். விப 3:10-15) இப்பெயர் கடவுளுடைய சொந்த பெயரை ஒத்ததாக தோன்றுகிறது.
இம்மானுவேல்: (Ἐμμανουήλ இம்மானுஏல், עִמָּ֥נוּ אֵֽל இம்மானு ஷஏல்) 'நம்மோடு கடவுள்' என்று பொருள். எசாயா இறைவாக்கு 7:14 இங்கே கோடிடப்படுகிறது. இரண்டு வேறுவிதமான பின்புலங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். எசாயா ஆகாசு மன்னனுக்கு நம்பிக்கை கொடுக்க இறைவாக்குரைக்கிறார், அங்கே கன்னிப்பெண் என சொல்லப்படுவது ஆகாசு மன்னனுடைய இளம் மனைவியொருவரைக் குறிக்கலாம், அல்லது எசாயாவினுடைய மனைவியைக் குறிக்கலாம், அல்லது மெசியாவினுடைய தாயையும் குறிக்கலாம். மத்தேயு இங்கே கன்னி என்று சொல்வது நிச்சயமாக மரியாவையே குறிக்கவேண்டும்-குறிக்கிறது.
வ25. மிகவும் பிரச்சனைக்குரிய வசனம், ஆனால் நற்செய்தியாளருக்கு அது பிரச்சனையான விடயம் அல்ல. கத்தோலிக்க திருச்சபைக்கு அன்னை மரியா உடலாலும், உள்ளத்தாலும் கன்னியானவள்-தூய்மையானவர். திருமணத்தையோ திருமண உறவையே இங்கே நற்செய்தியாளர் தனது வாதத்துக்குள் எடுக்கவில்லை என்பதை கவணமாக நோக்கவேண்டும். நமக்கு விவிலியத்துடன் பாரம்பரியமும் முக்கியம் என்ற படியாலும், அன்னை மரியாவை விவாதிக்க எனக்கு தகுதியில்லை என்பதாலும் அம்மாவை அம்மாவாகவே விடுவோம்.

Wish you all a blessed Nativity Celebration of our Living Lord, Jesus.

Jegan omi


புதன், 16 டிசம்பர், 2015

Fourth Sunday of the Advent




20 டிசம்பர் 2015 திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு
முதல் வாசகம், மீக்கா 5,1-4
ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்
2நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும்இ இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். 3ஆதலால் பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். 4அவர் வரும்போது ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில் உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; 5அவரே அமைதியை அருள்வார்.

எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யூதேயா இறைவாக்கினர் மீக்காவுக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பன்னிருவருள் இவர் ஆறாமவர். மீக்கா என்பதன் முழுவடிமாக மீக்காயா என்று வரலாம் (מִיכָיָה மீக்காயா, கடவுளைப்போல் யார்? ). பல அழகான இறைவாக்குகனை கொண்டு;ள்ள இந்நூல் திருவருகைக்காலத்தில் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றது. இவ்விறைவாக்கினர் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா காலத்திலும் மற்றும் இறைவாக்கினர்களான எசேயா, ஆமோசு, ஓசேயா  போன்றவர்களுடைய காலத்திலும் இறைவாக்குரைத்துள்ளார். இவருடைய காலத்தில்தான் வட அரசு அசிரியரிடம் வீழ்ந்ததும், தென்அரசு அசீரியர்களின் ஆக்கிரபிப்பை சந்தித்ததுமாகும். அரசியல் நிச்சயமற்ற காலங்களில் எழுந்த இந்த இறைவாக்கு, அடிப்படையில் தென்னரசுக்கு நம்பிக்கையை கொடுப்பதாக அமைகிறது.

வ.2. அ. எப்ராத்தா எனப்படும் பெத்லகேம: (בֵּֽית־לֶ֣חֶם אֶפְרָ֗תָה எப்ராத்தாஹ் பேத் லெஹெம்): எப்ராத்தா, பெத்லேகேமிற்கு ஒத்த கருத்துச் சொல்லாகவே அல்லது பெத்லேகேமின் மாகாணத்தை குறிப்பதாகவே அமையலாம்.

ஆ. இஸ்ராயேலே என் சார்பாக: தென் நாட்டவருடைய சிந்தனையை அழகாக இவ்வார்த்தைகள் காட்டுகின்றன. வட நாடு, தென் நாடு என்று இருந்தாலும் கடவுளுடைய வாக்களிப்பட்ட நாடு ஒன்றுபட்ட இஸ்ராயேலே, அதன் தலைவர் தாவீதின் வழிமரபே, என்பது மீண்டும் மீண்டும் இறைவாக்குகளில் வருவதைக் காணலாம். (நம்முடைய பல அரசியல் தலைவர்களும் மக்களும், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கவேண்டும் என விரும்புவதைப்போல என்றும் எண்ணலாம்)

ஆ. உன்னிடமிருந்தே தோன்றுவா: தாவீதின் வழிமரபு என்பது தென்நாட்டு அரசர்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி, சில இறைவாக்கினர்களுக்கும் சரி மிகவும் முக்கியமான கருப்பொருள். அரசியல் குழப்பங்கள் நடைபெறும் மீக்காவின் காலத்தில் மீட்பர் அல்லது எதிர்கால ஆட்சியாளர் தாவீதின் வாரிசாகவே இருப்பார் என்பது மீக்காவுக்கு மிகவும் முக்கியமான சிந்தனை.

இ. ஊழி ஊழிக் காலம: (מִקֶּ֖דֶם מִימֵ֥י עוֹלָֽם மிகெதெம் மிமெ ஓலாம்) புராதன நாட்களிலிருந்து நித்தியத்திற்கு என மொழிபெயர்க்கலாம். இவ்வார்த்தைகள் அரசியல் எதிர்காலமில்லாமலிருந்த இருந்த தென்நாட்டு மக்களுக்கு நிச்சயமாக நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

வ.3. அ. பேறு கால வேதனை|: (יוֹלֵדָ֖ה יָלָ֑דָה யோலெதா யாலாதா) இது உருவகிக்கப்பட்ட எருசலேமின் வேதனைகளைக் குறிக்கிறது. அதாவது எருசலேமில் வேதனைகள் நடந்தே தீரும், ஆண்டவர் அதனை அனுமதிக்கவேண்டியிருக்கிறது.

ஆ. எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களிடம் திரும்புவார்கள்: இதுவே இவ்விறைவாக்கினுடைய மையமாக இருக்கும் என எண்ணுகிறேன். கடவுள் ஒட்டுமொத்தமாக கைவிடமாட்டார் எனும் சிந்தனை.

வ.4. இங்கு எழுவாய்பொருள் மாறுவதை அவதானிப்போம். அவர் வரும்போது| யார் இவர்?: ஏற்கனவே மீக்கா குறிப்பிட்ட ஆட்சியாளர் (மோட்ஷேல் מוֹשֵׁ֖ל) என்பதனைக் குறிக்கும். அப்போது நடைபெறுபவை விவரிக்கப்படுகின்றன:

ஆண்டவரின் வலிமையோடும், பெயரின் மாட்சியோடும் விளங்குவா: மீக்கா கால அரசர்களைப்போல பலவீனமானவர்களாகவும், மாட்சியற்றவர்களாகவும் இரார். அவரின் வல்லமையும் மாட்சியும் கடவுளேயாவார் என்கிறார்.

மந்தையை மேய்ப்பர்: மந்தையை மேய்க்கும் தன்மை, இஸ்ராயேல் மக்களுக்கு கடவுளுடைய அரவணைப்பையும் அன்பினையும் இலகுவாக காட்டக்கூடிய ஒரு உருவகம். யோவானும் பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இயேசு ஆண்டவரை நல்ல ஆயனாக சித்தரிப்பதும் இதே நல்லெண்ணத்தோடே (காண். யோவான் 10,11)

வரலாற்றில் ஆயத்துவம் அதிகாரத்துவமானது அநியாயமானது !!!.

அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள: மக்கள் எவ்வாறு அச்சமின்றி வாழ்வார்கள் என்பதற்கு விடையாக அடுத்த வரிவருகிறது. இந்த ஆட்சிசெய்கிறவரே உலகின் கடை எல்லைவரை ஆட்சி செய்வார். இதனால் அரசியல் பேராசைகள், நாடு பிடித்தல்கள், இனவழிப்புக்கள், மதமாற்றங்கள், இனமாற்றங்கள், கொள்ளைகள் இடம்பெறாது என ஒரே வரியில் சொல்கிறார் மீக்கா.

அமைதி: (שָׁל֑וֹם லோம், அமைதி) எபிரேய மூலப் பிரதி அவரே-அதுவே இந்த அமைதி என காட்டுகிறது. பயத்தில் நடுங்கும் தென்நாட்டினர்க்கு, எசக்கியா அரசர் அல்ல, ஆண்டவரே அமைதியாய் இருப்பார் என காட்டுகிறார், ஆண்டவரே அமைதியாய் வருவார் என்பது எத்துணை ஆழமான செய்தி. (தமது அமைதிக்காக மற்றவர்களை பயமுறுத்தும் தலைவர்களுக்கு இது விளங்கினால் எத்துணை நலம்)

பதிலுரைப்பாடல், திருப்பாடல் 80, நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்

1இஸ்ரயேலின் ஆயரேஇ செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரேஇ ஒளிர்ந்திடும்!முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! 
14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 
15உமது வலக்கை நட்டுவைத்த கிளையைஇ உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! 16அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால்இ அவர்கள் அழிந்துபோவார்களாக! 
17உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 
18இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். 
19படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!

இருபது வரிகளைக் கொண்டமைந்த இப்பாடல், ஒரு குழு வேதனைப்பாடல் என்பது பல விவிலிய வல்லுநர்களின் கருத்து.

வ.1. கடவுளுக்கு பல வரலாற்றனுபவ பெயர்களைக் கொடுத்து, கடவுளைத் தொடநினைக்கிறார் ஆசிரியர்:
இஸ்ராயேலின் ஆயர், யோசேப்பின் மேய்ப்பர், கேருபுகளில் வீற்றிருப்பவர், என்பவை இதனையே குறிக்கின்றன.

வ.14. திராட்சைக்கொடி: இது இஸ்ராயேல் மக்களுக்கான இன்னொரு உருவகம்.

வ.15. இந்த திராட்சைக்கொடியின் தற்போதைய நிலைமை வர்ணிக்கப்படுகிறது.

வ.17. ஏன் கடவுள் இந்த திராட்சைகொடியை காக்க வேண்டும் என்பது கடவுளுக்கு நினைவூட்டப்படுகிறது. வலப்புறம் இருக்கிறவர்| மானிட மைந்தர் இவர்கள் யார் என்பதை அறிவது கடினம். முழு மக்களையும் குறிக்கலாம் அல்லது அக்கால தலைவர்களையும் குறிக்கலாம். திருப்பாடல்களின் முக்கிய பண்பான சபித்தலை அழிந்துபோவார்களாக என இங்கே காணலாம்.

வ.18. அகலமாட்டோம், தொழுவோம : இவ் வசனங்கள், பழைய பாவ வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது. இறைவனை விட்டு அகலாமலிருப்பதும் அவரை தொழுதலுமே முக்கியமென காட்டப்படுகின்றன.

வ.19. அ. இந்த திருப்பாடலின் முக்கிய மைய வேண்டுதல் இதுவாகும். முன்னைய நிலைக்கு கொணர்ந்தருளும். பின்னைய நிலைமை மோசமாக இருக்கிறபோது மனங்கள் பழைய நல்ல நிலைகளை நினைப்பது, அன்றும் இருந்திருக்கிறது என்னும் உணர்வினை இங்கு காணலாம். (நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற நமது நாட்டார் பழமொழி ஞாபகம் வருகிறது)

ஆ. முக ஒளியைக் காட்டியருளும்|: அநேகமாக கடவுளுடைய சிரிப்பை இது குறிக்கலாம். (காண்: சபை உரை 8,1: எண் 6,25: தி.பா 4,6: தானி 9,17). கடவுளுடைய முகத்தின் சிரிப்பு அல்லது ஒளி மீட்பைக் கொணர்கிறது என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது.

இரண்டாம் வாசகம், எபிரேயர் 10:5-10
5அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோதுஇ 'பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லைஇ ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். 6எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. 7எனவே நான் கூறியது: என் கடவுளேஇ உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது' என்கிறார்.
8திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும் 'நீர் பலிகளையும் காணிக்கையையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல' என்று அவர் முதலில் கூறுகிறார். 9பின்னர் 'உமது திருவுளத்தை நிறைவேற்றஇ இதோ வருகின்றேன்' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். 10இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

இதனை திருமடல் என்பதைவிட, புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற அழகான இறையியல் தொகுப்பு என்பதே சாலப் பொருந்தும். முன்னர் இதனை பவுல் அடிகளார் எபிரேயர்க்கு எழுதிய திருமுகம் என கருதினர், பின்னர் (தற்போது) இதன் காலத்தையும் இடத்தையும் அறியமுடியாமல், இதனை பவுல் எழுதவில்லை, எபிரேயர்க்கும் எழுதப்டவில்லை, இது கடிதமும் இல்லை என வாதிடுகின்றனர். இந்த ஆய்வுகள் இதன் பெருமையை குறைப்பாதற்காகவல்ல. மாறாக இதனுடைய உண்மை செய்தியையும் அதன் ஆழத்தையும் கண்டுபிடிக்கவே ஆகும் என்பதை கவனமாக நோக்க வேண்டும். அநேகமாக இது ஓர் அழகான கிறிஸ்தியல் தர்க்க பிரசங்கம் போல தோன்றுகிறது.

வ.5-6. இங்கு பேசுகிறவர் இயேசு போல தென்படுகிறவாறு எழுதப்பட்டுள்ளது. பலியையும் காணிக்கையையும் இந்த வரிகளுக்கு பின்னால் ஒரு முதல் ஏற்பாட்டு கருத்தியல் காணப்படுகிறது. மிருக பலிகள் பொய்த்துப்போனதையும், கடவுளுக்கு அவை தேவையில்லை என்பதையும் பல பின்னைய இறைவாக்கினர்கள் எடுத்துரைத்தனர். எருசலேம் ஆலயத்தின் அழிவும் இதற்க்கு ஒரு காரணம். ஆசிரியர் இவ் வசனங்களை செப்துவாயிந்த் திருப்பாடல் 39,7-9 வரையான பகுதியிலிருத்து காட்டுகிறார். இங்கு சொல்லப்படுகின்ற செய்திகளாவன:

அ. பலியையும் காணிக்கையையும் கடவுள் விரும்பவில்லை (θυσίαν καὶ προσφορὰν தூயசியா புரஸ்பொரா), இங்கு சாமுவேல் சவுலுக்கு சொன்னது ஞாபகம் வருகிறது. (காண்: 1சாமு 15,22 ஒசேயா 6,6: மத் 9,13) மனிதர் தங்களை கடவுளின் சாயல், படைப்புக்களில் உயர்ந்தவர் என்று சொல்லி, சாதுவான உயிர்களை தங்கள் தெய்வங்களுக்கு பலியிடுகின்றனர். அறிவு வளர்ந்துள்ளது எனச் சொல்லும் இக்காலத்திலும் இது நடக்கிறது, எமது சில ஆலயஙகளிலும் நடக்கிறது. மிருகங்கள் தங்களை கடவுளின் சாயல் எனச் சொல்லி மனிதரை பலியிட்டால் எப்படி இருக்கும்? அவைகளையும் (அவர்களையும்) கடவுள்தானே படைத்தார்.

வ.7. திருப்பாடலில் பேசுகிறவர் யார் என்பதனை கண்டறிய கடினமாக இருக்கும், இது அரசரை அல்லது மக்களையோ குறிக்கலாம், இங்கே எபிரேயர் நூலின் ஆசிரியர்க்கு, இவர் இயேசு ஆண்டவர்.

ஆ. திருநூலில் எழுதப்பட்டுள்ளது இவ்வாறு இயேசுவை முதல் ஏற்பாட்டின் இறைவாக்குகளில் நிலை நிறுத்துகிறார் ஆசிரியர்.

வ.8. திருச்சட்டப்படி| (תּוֹרָה தோரா, νόμος நோமோஸ்) அதிகமாக தவறாக அறியப்பட்ட ஒரு முக்கியமான நல்ல சொல் இதுவாகும். பலிகள் சட்டப்படி நடப்பதால் அது தூய்மையானது என்ற கருத்து பல வேளைகளில் தேவையற்ற பலிகளுக்கும் உயிர் கொடுத்தது ஆனால் சட்ட வரிகளுக்கு உயிர்கொடுப்பது திருச் சட்டமல்ல மாறாக திருச்சட்டத்தின் முதலாளியான கடவுளே என்ற இயேசு ஆண்டவரின் படிப்பினையை மறைமுகமாக காட்டுகிறார்.

நீர் விரும்பியிருக்கவுமில்லை திருப்திப்பட்டிருக்கவுமில்லை| என்;பது, ஒரு இறந்த கால தொடர்ச்சியை காட்டுகிறது.   கிரேக்க மொழியில் இறந்தகால வினைமுற்று வாக்கியம் ஒன்று பாவிக்கப்பட்டுள்ளது. இது கடவுள் எதை விரும்புகிறார் என்பதை கேள்வியாக்கி அதற்க்கு விடையை 9வது வசனத்தில் கொணர்கிறது.

வ.9. திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்| - இதுதான் பல முன்னனி இறைவாக்கினருடைய இறைவாக்கின் சாராம்சம். அதனை ஆசிரியர் இயேசுவின் முழு வாழ்க்கைக்கும் ஒப்பிடுகிறார். அத்தோடு ஆண்டவரின் திருவுளத்தின் முன் சட்டங்கள் செயலற்றவை எனவும் வசனத்தின் இறுதியில் காட்டுகிறார்.

வ.10. எபிரேயர் நூலின் கிறிஸ்தியலில் முக்கியமான ஒரு பகுதி இயேசுவின் நித்திய குருத்துவமாகும். இந்த வசனம் இயேசுவின் குருத்துவத்தின் தன்மையையும், பலிப்பொருளையும், காலத்தையும் காட்டுகிறது. செலுத்தியவர் இயேசு, மனித குரு அல்ல. செலுத்தப்பட்டது அவர் உடல், மிருகங்கள் அல்ல,
காலம் நித்தியத்திற்கும், இனி வேறு பலிகள் தேவைப்படாது என்கின்றார்.

நற்செய்தி, லூக்கா 1,39-45
மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்

39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42அப்போது அவர் உரத்த குரலில் 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' என்றார்.

ஈழத்தில் பிள்ளைகளை தொலைத்த தாய்மார் ஒவ்வொர் ஆணைக்குழுக்களுக்கும் பின்னால் சென்று களைத்து, தற்போது  சனாதிபதி ஆணைக்குழுவிற்கு பின்னால் சென்று கண்ணீர்வடிக்கும் இக்காலத்தில், லூக்கா அன்னை மரியா ஷஎயின் கரேம்| என்ற யூதேய மலைநாட்டுக்கு சென்ற வரலாற்றை தனது சாயலில் வர்ணிக்கிறார். எருசலேமின் மேற்கு மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த உயர் நகர், எருசலேமிலிருந்து 7.5 கி.மீ தொலைவில் உள்ளது. யூதர்கள், எரேமியா இறைவாக்கினர் எருசலேமை தாக்க வந்தவர்களை கண்காணிக்க சிறுவர்களை இங்கே அமர்த்தினார் என நம்புகின்றனர் (காண். எரே 6,1), கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு யோவானின் இரண்டு வீடுகளையும், அன்னை மரியாவின் நீர் ஊற்று இடத்தையும் கொண்டு இது விளங்குவதால் முக்கியம் பெறுகிறது. இங்குள்ள எலிசபேத்தின் ஆலய வீட்டில் நம்முடைய அழகு தமிழிலும், சகோதர சிங்கள மொழியிலும் செபங்களைக் காணலாம். (சுப்பர்லிங் வான்சேவைக்கு நன்றி). ஷஎயின் கரேம்| என்றால் ஷதிராட்சை தோட்ட நீர் ஊற்று| என்று பொருள.

அன்னை மரியா 145 கி.மீ தொலைவிலுள்ள (தற்போதைய நிலவரப்படி) மலைநாட்டுக்கு வந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

வ.40. எலிசபெத்தை வாழ்த்தினார்|: எலிசபெத்திற்கு நிச்சயமாக மரியா இயேசுவை கருத்தரித்துள்ளமை தெரியும், இருந்தும் இங்கு முதலில் வணக்கம் சொல்பவர் மரியாவாகவே இருக்கிறார். இதிலிருந்து லூக்காவின் புலமைத்துவம் புரிகிறது. மரியா எவ்வளவு உயர்ந்தவர் எனச் சொல்கிறார் லூக்கா.

வ.41. அ. ஷகுழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று|: துள்ளுதல் உச்ச கட்ட மகிழ்ச்சியின் அடையாளமாக முதல் ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பதியப்பட்டுள்ளது. தாவீது தொடங்கி ஆலய வாயிலில் இருந்து பிச்சைக்காரர் வரை, ஆண்டவரை அணுபவித்த போது துள்ளினர் (காண. 2சாமு 6,16 தி.ப 3,8)

ஆ. தரிசிக்கும் கடவுள்: விவிலியத்தில் கடவுள் தன்னை மக்களை தரிசிப்பவராகவே வெளிப்படுத்துகிறார். பாபேல் கட்டிய தீயவர்களனாலும் சரி, ஆபிரகாமானலும் சரி, நீதி தலைவர்களானாலும் சரி, கடவுள் அவர்களை தரிசிப்பதை விவிலியத்தில் பல இடங்களில் காணலாம். ஆனால் இறைவாக்கினர்கள் தாம் கடவுளை தரிசிக்க அவர்கள் பிரயாணம் செய்வதையே காண்கிறோம் (மேசே, எலியா), இங்கு லூக்கா கடவுள் தன் இறைவாக்கினரை வந்து தரிசிப்பதை காட்டுகிறார். லூக்காவின் கடவுள் ஷதேடி வந்து தரிசிக்கும் கடவுள்|, இதனையையே எம்மாவு (லூக் 24,15) சந்திப்பிலும் மேலும் விரிவுபடுத்துவார் லூக்கா.

இ. வயிற்றிலுள்ள குழந்தைகள் தாம் சந்திக்கின்ற அதே நிகழ்வை, எலிசபெத்தை மரியா சந்திக்கும் நிகழ்வோடு ஒப்பிட்டு காட்டுகிறார். மரியா பயணம் செய்ததை பலர் பலவாறு விவாதிக்கின்றனர், சிலர் மரியா, கபிரியேல் வானதூதரின் செய்தியை உண்மைதன்மை பார்க்கவே வந்தார் என்று கூட சொல்வார்கள். ஆனால் லூக்காவின் நற்செய்தியில் மரியா ஒரு முக்கியமான கதாபாத்திரம், லூக்காவுடைய மரியாவுக்கு அப்படியான தேவை இருந்திருக்காது என எண்ணுகிறேன். ஆக மரியா உதவிசெய்யவே 145 கி.மீ மேல் வந்துள்ளார் என அறியலாம்.

உ. தூய ஆவி|: லூக்காவின் நற்செய்தியிலும் திருத்தூதர் பணியிலும் தூய ஆவியானவருக்கு முக்;கிய பங்குள்ளதை அவதானிக்கலாம். இங்கு தூய ஆவி எலிசபெத்தை ஆட்கொள்வதிலிருந்து, ஆட்களை தெரிவு செய்பவர் கடவுளே என்பது புரிகிறது.

வ.42. பெண்களுள் ஆசி பெற்றவர், உமது குழந்தையும் ஆசி பெற்றதே|: லூக்காவின் நற்செய்தியின் சுருக்கம் எனச் சொல்லலாம். ஏற்கனவே இந்த செய்தியை வானதூதர் சொல்லி இருக்கிறார், இங்கு ஆவியானவரே எலிசபெத்தின் வாயிலாக சொல்கிறார். இந்த செய்தி மரியாவுகல்ல, லூக்காவின் வாசகர்களுக்கு.

வ.43. ஆண்டவரின் தாய்|: (ἡ μήτηρ τοῦ κυρίου μου ஹே மேடேர் தூ கூரியூ மூ, ஷஎனது ஆண்டவரின்-தலைவரின் தாய்|)
மரியாவை ஆண்டவரின் தாய் என வழிக்கும் சந்தர்ப்பத்ததை பெற்ற முதல் பெண்மணியாகிறார் லூக்காவின் எலிசபேத்து, கடவுளின் மீட்பு திட்டத்தில் முதியவரான இப்பெண் உள்வாங்கப்படுவதை அழகாக சித்தரிக்கிறார். கிரேக்க உரோமைய வரலாற்றில் அரசர்ககளின், பேரரசர்களின் தாயார், மனைவியர் முக்கியமானவர்கள் என்பதனையும் நோக்கும் போது இவ்வரிகளின் ஆழம் நமக்கு புரியும். தமிழ் இலக்கியங்களிலும் பெண்கள்தான் மிக நோக்கப்பட வேண்டியவர்கள் (தமிழ் காவியங்கள் காவிய தலைவிகளை மறப்பதில்லலை, ஒப்பிடுக கண்ணகி - சிலப்பதிகாரம்).

வ.44. மரியா ஏன் முதலில் வாழ்த்துச்சொல்ல வேண்டும்? ஏன்; குழந்தை தன் தாயைவிட வாழ்த்ததை முதலில் உணர வேண்டும்? லூக்காவின் ஆழமான வரிகள் சிந்திக்க தூண்டுகின்றன. மரியாவின் வாழ்த்து எலிசபெத்துக்கா அல்லது திரு முழுக்கு யோவானுக்கா?

வ.45. யார் இந்த மரியா? என்ற கேள்விக்கு ஓரே வரியில் விளக்கம் கொடுக்கிறார் மாண்புமிகு வைத்தியர் லூக்கா. அவர் நம்பியவர்| வினைச்செற்களை அவதானமாக பார்த்தால், முதலில் மரியா நம்புகிறார் (இறந்த காலம் நம்பிய நீ) நடைபெற இருந்தது எதிர்காலத்தைச் சார்ந்தது (எதிர் காலம் நிறைவேறும்) என்பது புலப்படும். இறைவனின் மக்களுக்கு நம்பிக்கைதான் முதலில் வரவேண்டும் என்பதனை அவதானிக்கவேண்டும், இயேசுவும் பின்னர் பல வேளைகளில் இச்செய்தியையே முதன்மைப் படுத்துவார்.


பிறந்த பிள்ளைகளைக் காணாது, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி பாவிகளிடம் கூட பேரம் பேசி கண்ணீர் வடிக்கும் ஈழத்து தாய்மாருக்கு, இந்த திருவருகைக் காலம் ஆறுதலைக் கொண்டுவர வேண்டியும், அன்னை மரியா தொடர்ந்து ஆண்டவர் இயேசுவை இவ்வன்னையர்க்கும் கொண்டுவரவும் மன்றாடுவோம். ஆமென். 

lovingly 
Jegankumar omi

புதன், 9 டிசம்பர், 2015

Third Sunday of Advent


Third Sunday of Advent, 13,12,2015







13 டிசம்பர் 2015: திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

ஆண்டவர் நம் நடுவில்! இஸ்ராயேலின் தூயவர் உங்களிடையே சிறந்துவிளங்குகிறார்!

முதல்வாசகம்: செப்பானியா 3:14-16

14மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. 15ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்  தள்ளிவிட்டார்;  உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். 16அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: 'சீயோனேஇ அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். 17உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். 18அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவேஇ இனி நீ இழிவடையமாட்டாய்.

விவிலியத்தின் பன்னிரு சிறிய இறைவாக்கினருள் ஒன்பதாவது இடத்தில் காணப்படும் செப்பானியா இறைவாக்கு கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இவருடைய பெயரின் அர்த்தமாக ஷகடவுள் காக்கிறார்| (צְפַנְיָה֙ ட்சேபானி யா) எனக் கொள்ளலாம். செப்பானியா புத்தகம் ஒன்பது உரைகளின் தொகுப்பாக காணப்படுகிறது. இன்றைய முதல் வாசகம் இறுதியான ஒன்பதாவது உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மகளே சீயோன்!, இஸ்ராயேலே! எருசலேம்! இவை புகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் விளிப்புச் சொற்கள். இஸ்ராயேல் வாசகர்களுக்கு மிகவும் நேசமான வார்த்தைகள், மகளே! என விளிப்பதன் மூலம் வாசகர்களின் பார்வையை தன்னகத்தே திருப்புகிறார் ஆசிரியர். மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை பிரயோகங்கள், எபிரேய கவிதை மற்றும் உரைநடையின் முக்கிய பண்பான ஷதிருப்பிக்கூறுதலை| படம் பிடிக்கிறது. ஒத்த கருத்துடைய சொற்கள் ஒரே செய்தியை கூற பயன்படுத்தப்பட்டுள்ளது. திரும்ப திரும்ப கூறுவதன் வாயிலாக ஆசிரியர், திருப்பாடல்களை ஞாபகப்படுத்துகிறார், அத்தோடு தனது செய்தியையும் ஆழப்படுத்துகிறார்.

மீண்டும், கடவுளுக்கு பிரியமானவர்கள், பிரியமற்றவர்கள் என்றில்லை அனைவருமே பிரியமானவர்கள்தாம் என இரண்டு நாட்டினரையும் உள்வாங்கி யூதா இஸ்ராயேல் என்று அறிவிக்கின்றார்.

எவ்வளவுதான் ஆண் ஆதிக்க சமுதாயமாக இருந்தாலும் (அன்றும் இன்றுமாக), இதயத்திலும் மனிதத்திலும் பெண்களின் மாண்பினை காட்டுகிறார் செப்பானியா, நமக்கும்..!

தண்டனைத் தீர்ப்பு, பகைவர்கள்: இவ்வார்த்தைகள் அரசவைக்கு தகுதியான வார்த்தைகள்.

அரசராகிய ஆண்டவர்: (מֶ֣לֶךְ יִשְׂרָאֵל יְהוָה֙ மெலெக் இஸ்ராயேல் அதோனாய்) இந்த வார்த்தை பிரயோகம் மிகவும் முக்கியமானது.

அ. இஸ்ராயேலுக்கு மனிதர்கள் எவரும் அரசராக இருக்க முடியாது, இருந்தாலும் அவர்கள் உண்மை அரசராக இருக்க முடியாது, ஏனெனில் கடவுள் ஒருவரே அரசர் என்பது பல இறைவாக்கினர்களின் வாதம்.
ஆ. மனிதர்கள் அரசர்களாக இருக்கிறபோதுதான் இடப்பெயர்வுகளும், அழிவுகளும், தோல்விகளும் ஆனால் கடவுள் அரசராக எருசலேமில் இருக்கிறபோது இப்பிறழ்வுகள் நடைபெறாது என முன்னுரைக்கின்றார் செப்பானியா.

இந்த அரசரின் பண்புகள்:
அ. மாவீரர்- எபிரேய மூலச்சொல் ஷஅவர் போர்வீரர், மீட்கிறவர்| என காட்டுகிறது. கடவுள் மட்டுமே வீரர், மீட்பவர் மற்ற மனிதர் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தோற்கிறவர்களும் மீட்கப்பட வேண்டியவர்களுமே ஆவர்.
ஆ. உன் பொருட்டு மகிழ்ந்து களி கூர்வார்: இவ்வுலக அரசர்கள் தங்களது சொத்துக்களிலும், தங்கள் சொந்த பலத்திலும், சொந்த பிள்ளைகளிலும் அல்லது தங்கள் சொந்த வல்லமையிலுமே களிகூர்வர், ஆனால் கடவுள் தன் மக்கள் அனைவரிலும் களிகூர்வார்.
இ. அன்பினால் புத்துயிர் அளிப்பார்: ஷஅவர் அன்பினால் அமைதி கொள்வார்| என்கிறது எபிரேய மூல பாடம்.
உ. மகிழ்ந்து ஆடிப்பாடுவார்: வழமையாக மக்கள் தங்கள் கடவுளர்களுக்கு ஆடிவார்கள் பாடுவார்கள், இங்கு கடவுளே ஆடுவாராம் பாடுவாராம். செப்பானியாவின் கடவுள் மக்களின் கடவுள்.
ஊ. 18வது வசனம் எபிரேய மூல நூலில் ஷதிருநாளில் துன்புறுகிறவர்களை கூட்டிச்சேர்க்கிறேன், உன் மத்தியிலிருந்து, இருந்தார்கள்: அஞ்சலி அவள்மேல், நிந்தை.| யார் இந்த வரிகளின் பாடு பொருள் என்பதை அறிய கடினமாக இருக்கிறது. இது இஸ்ராயேலின் எதிரிகளை குறிப்பது போல தெரிகிறது.
செப்துவாயின்த்: இவ்வாறு மொழிபெயர்க்கிறது: உன்னுடைய துன்பப்பட்டவர்களை கூட்டிச்சேர்பேன், ஐயோ கேடு!, அவளுக்கெதிராய் நிந்தை செய்தவர் யார்? (நேரடி மொழிபெயர்பு சில வேளைகளில் கடினமாக இருக்கும்)


பதிலுரைப்பாடல், எசாயா 12

நன்றிப் பா
1அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: 'ஆண்வடரேஇ நான் உமக்கு நன்றி சொல்வேன்; நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்; இப்பொழுதோஇ உம் சினம் தணிந்து விட்டது; நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர். 
2இறைவன் என் மீட்பர்இ அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்இ நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல்இ அவரையே பாடுவேன்இ என் மீட்பும் அவரே. 
3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். 
4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். 5ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 
6சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

அமைப்பிலும், வார்த்தை பிரயோகங்களிலும் திருப்பாடலை ஒத்திருக்கும் இந்த 12வது அதிகாரம், எசாயாவின் முதல் பகுதியின் முடிவில் அமைந்துள்ளது. யூதாவிற்கான பல இறைவாக்கின் பின்னர் நன்றிப்பாடலாக அமைந்துள்ளது. இரண்டு பாடல்களை அடக்கிய ஒரு பாடல் போல தோன்றுகிறது. தனி மற்றும் குழு நன்றிப்பாடலாக தெரிகின்ற இப்பாடல், பாடல்கள், திருப்பாடல் நூலுக்கு மட்டும் உரியதல்ல மாறாக விவிலியத்தின் அனைத்து இடங்களிலும் அதனைக் காண முடியும் என்பதை நிறுபிக்கிறது.

1. ஆண்டவர் கோபம் நிலைக்காது, அது தனியும் அத்தோடு கோபித்த ஆண்டவர் ஆறுதல் படுத்துவார் (மனிதருடைய கோபத்தை போல் அல்ல, என்கிறாரோ?)

2. ஷஆண்டவரே என் ஆற்றல் அவரையே பாடுவேன|; : கடவுள் என் ஷபலமும் சக்தியும|; பாடல் (זמר; சமார்) என்பது எபிரேயத்தில் சக்தியை குறிக்கும், பல முந்தைய மொழிபெயர்ப்பாளர்கள் இதனைப் பாடல் எனக் கொண்டனர். கடவுள் எனது பலமும் வல்லமையும் என்பது மோசேக்கு மிகவும் பிடித்த சொற் பிரயோகம்.

3. ஷமகிழ்ச்சியில் தண்ணீர் அள்ளுங்கள், மீட்பின் ஊற்றுக்களிலிருந்து|: இவ்வாறு நேரடி மொழிபெயர்ப்பு இருக்கும். தூய ஆவியை மகிழ்ச்சியின் ஊற்றுக்கும், வாழ்வு தரும் தண்ணீருக்கும் நற்செய்தியாளர் யோவான் அடிக்கடி ஒப்பிடுவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தண்ணீர் இன்றுவரை இஸ்ராயேல் மக்களுக்கு இறையாசீராகவே இருக்கிறது.

4. 5. மக்களினங்கள் அனைவருக்கும் அவர்செயல்களை அறிவியுங்கள், அனைத்துலகும் இதை அறிந்து கௌ;வதாக: ஆண்டவருடைய நன்மைத்தனங்களை அனுபவித்தால் போதாது, அதனை அறிக்கையிட வேண்டும், அதாவது மற்றவருடன் பகிர வேண்டும், மற்றவரையும் நினைக்க வேண்டும். நன்றி சொல்லுதல் வார்த்தையிலும் செயலிலும் தங்கியுள்ளதை காட்டுகிறது.

6. இஸ்ராயேலின் தூயவர்: எசாயாவினுடைய முக்கியமான இறையியல் கருத்து இது. (קְד֥וֹשׁ יִשְׂרָאֵֽל கெதோஷ் யிஷ்ராஏல்) கடவுளை வெளியில் தேட வேண்டாம், அவர் இங்கே இருக்கிறார்!, இது எசயாவினுடைய மக்களுக்கும் புரியவில்லை எமக்கும் புரியவில்லை.


இரண்டாம் வாசகம், பிலிப்பியர் 4:4-6

4ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்இ மகிழுங்கள். 5கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். 6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடுகூடிய இறை வேண்டல்இ மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7அப்பொழுதுஇ அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

கடந்த வாரம் இதே திருமுகத்தில் முதல் அதிகாரத்தில் இருந்த அதே செய்தி, இன்று இறுதி அதிகாரத்தில் மீண்டும் கூறப்படுகிறது. இது செபத்திற்கும், மகிழ்ச்சிக்குமான அழைப்பு. இதன் செய்திகளாவன:

4. மகிழ்ச்சி: (காரிஸ் χαρις) பிலிப்பியர் திருமுகத்தின் முக்கிய செய்தி இது. ஆண்டவரோடு இணைந்திருப்பவர் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

5. கனிந்த உள்ளம்: அழகான தமிழ் மொழிபெயர்பு, மூலச்சொல் (ἐπιεικής எபிஎய்கேஸ்). இதற்கு ஷஉண்மையான, பொருத்தமான, மென்மையான, சமத்துவமான, நியாயமான| என பல அர்த்தங்களைக் கொள்ளலாம். ஆண்டவர் அண்மையில் உள்ளதால் பிலிப்பியரை இவ்வாறு வாழ அழைக்கிறார்.

6. (εὐχαριστία எவுகரிஸ்தியா) செபத்திலே பல வகையுண்டு: வேண்டுதல், செபித்தல், இறைஞ்சுதல் இவையனைத்தையும் விட நன்றி கூறுதலே சிறந்த செபம் என்கிறார் பவுலடிகளார். திருப்பலியினுடைய மூலச் சொல் இதுவாகும்.

7. அறிவெல்லாம் கடந்த இறை அமைதி: இவ்வசனம் பவுலின் விசுவாசத்தையும் அறிவின் ஆழத்தையும் காட்டுகிறது. கிரேக்கத்திலே பல அறிவுக்கொள்கைகள் இருந்த காலப்பகுதியில், எந்த அறிவும், கிறிஸ்துவில் இணைந்திருப்பதால் கிடைக்கும் இறைவனின் அமைதியுடன் ஒப்;பிட முடியாது என்கிறார். சிறந்த அறிவாளி பவுல், ஷகிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன்| என்பது ஞாபகத்துக்கு வருகிறது.


நற்செய்தி, லூக்கா 3:10-18

10அப்போதுஇ 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். 11அதற்கு அவர் மறுமொழியாகஇ 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார். 12வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்துஇ 'போதகரேஇ நாங்கள் என்ன செய்யவேண்டும்?' என்று அவரிடம் கேட்டனர். 13அவர்இ 'உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்' என்றார். 14படைவீரரும் அவரை நோக்கிஇ 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டனர். அவர்இ 'நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்' என்றார்.
15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். 16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்துஇ 'நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 17அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்' என்றார். 18மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

கடந்த வாரம் எடுக்கப்பட்ட அதே அதிகாரத்திலிருந்தே இந்த வாரமும் நற்செய்தி எடுக்கப்படுகிறது. ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு பகுதிக்கு சற்று முன்னுள்ள பகுதியாகும் இது. ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கின் தன்மையையும், அவர் யாருடைய திருமுழுக்கை பகிர்ந்து கொண்டார் என்பதையும் இப்பகுதி படம் பிடிக்கிறது. யோவானிடம் திருமுழுக்கு பெற்ற மக்;கள் யார் எனப் பார்ப்போம், யார் இவர்கள்?

அ. கூட்டத்தினர் (ὄχλος ஒக்லோஸ்): இவர்கள் சாதாரண மக்கள், தற்செயலாக ஒன்று கூடியவர்கள், ஆட்சியாளர்களுக்கும் தலைவர்களுக்கும் எதிர்ப்பதமானவர்கள், அறிவில்லாத சாமானியர்கள், சனம், கொந்தளிக்கும் கூட்டம், சட்டமில்லாதவர்கள் என பல வரைவிலக்கனங்களை கிரேக்க அகராதிகள் கொடுக்கின்றன. ஆக இவர்கள் சாதாரண சாமானிய மக்கள் என்பது இவ்வாறு புலப்படுகின்றது.

யோவானின் பதில்: உள்ளார்ந்த மனமாற்றத்தை காட்டுகிறார் யோவான், பழைய காலத்தில் சாக்குடை தரிக்க கேட்கப்பட்டது, ஆனால் யோவான் இவர்களை பகிரக்கேட்கிறார். மற்றவருக்கு இரக்கம் காட்ட கேட்கிறார். (காண் லேவியர் 19,18: மீக்கா 6,8) கலகத்திற்கு போகாமல் பழைய பாரம்பரிய விழுமியமான ஷநல்ல இரக்கத்திற்கு| போகச் சொல்கிறார்.

ஆ. வரிதண்டுவோர் (τελῶναι தேலோனாய்) இவர்கள் உரோமையருக்காக மண்ணின் மைந்தரிடம் கப்பம் பொறுபவர்கள்,    

யூதர்களினால் அதிகமாக வெறுக்கப்பட்டவர்கள் இவர்கள். வேலை நேரத்தில் உரோமை இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாவிட்டால் பிணமாக மீட்கப்பட்டார்கள். இவர்களின் குடும்ப சுமைகளும், வறுமையும், வெறுப்பும், அதிகாரமும் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த தூண்டியது. (பி.கு. ஈழத்தில் போராட்ட காலத்திலும் சரி தற்போதும் சரி இவர்களின் வாரிசுகள் பலர் இருக்கிறார்கள், திருவாளர் எட்டப்பனுடைய மற்றும் —— உடைய வாரிசுகள்) இவர்கள் மத்தியில் இருந்த நியாயத்தையும் பலவீனத்தையும் யோவானும் இயேசுவும் நன்கு அறிவார்கள், அதனால்தான் அவர்களை அன்பும் செய்தனர்.

யோவானின் பதில்: அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்கிறார். வரிகொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, இயேசுவும் போதுருவை வரி கொடுக்கச் சொன்னது ஞாபகம் வருகிறது. (புறவின அரசு என்பதற்காக மக்கள், பொதுச் சொத்துக்களை சூறையாடுவதும், வரி ஏற்றம் செய்வதும், சொந்த மக்களிடமே சீட்டு பிடிப்பதும், இன்னும் கள்ள மின்சாரம் எடுப்பதும் எவ்விதத்திலும் சுயநிர்ணய போராட்டமாகது என்கின்றார் போல)

இ. படைவீரர்கள் (στρατευόμενοι ஸ்ட்த்ராதெயுஒமெனொய்): இவர்கள் உரேமைய இராணுவமல்ல என எண்ணுகிறேன், அனேகமாக காசுக்கு ஆலயத்திலும் வேறு இடங்களிலும் கூலிக்கு பாதுகாப்பு கொடுக்கும் கூலிப்படையினர்.

யோவானின் பதில்: பொய்சாட்சி சொல்ல வேண்டாம், பயமுறுத்த வேண்டாம்.

இந்;த மூண்று பகுதியினர்க்கும் பொதுவாக, மற்றவரை சுரண்ட வேண்டாம் என்ற அறிவரை வழங்கப்படுகிறது, பல வேளைகளில் வறுமை வன்முறையாக மாறி, சுரண்டப்படுகிறவர்கள் சுரண்டுபவர்களாக மாறுவதை வரலாற்றில் பார்க்கிறோம். வெற்றி பெற்றால் அவர்கள் மறுமலர்ச்சிக்காரர்கள், தோற்றால் அவர்கள் பயங்கரவாதிகள். யோவானும் இயேசுவும் இந்த சிந்தனையை ஆதரிக்கவில்லை என்பதனை அவதானமாக நோக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

யோவானும் இயேசுவும்:

வைத்தியர் லூக்கா எவ்வளவு சிறந்த நற்செய்தியாளரும் ஆசிரியரும் என்பதற்கு இந்த வரிகளே போதும். இயேசு வந்த காலம் மெசியாவினுடைய காலம் என்று மக்கள் எண்ணுவதிலிருந்து, தன் நற்செய்தியை நிரூபிக்கின்றார் லூக்கா. யோவான் எலியாவைப் போல இருக்கலாம். ஆனால் கடவுளாகவோ அல்லது மெசியாவாகவே இருக்கமுடியாது என்று காட்டுகிறார். யோவானை மெசியாவாக பார்த்த அக்கால ஒரு பிரதிவாதத்தினரிடமிருந்து தனது வாசகர்களை பாதுகாக்க வேண்டிய தேவையை லூக்கா நன்கு அறிவார்.

அ. மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்கு தகுதியில்லை: கிரேக்க உரோமை காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளே தமது முதலாளி முதலைகளின காலணிகளை அவிழ்த்தனர், இங்கு அடிமைகளை கொச்சைப்படுத்த லூக்கா முயலவில்லை. மாறாக, மெசியாவை காட்ட முயல்கிறார். இதே லூக்கா இன்னொரு இடத்தில் (காண். லூக்கா 7,28) யோவானை இயேசு உயர்ந்த இடத்தில் வைப்பதை காட்டுவார்.

ஆ. தூய ஆவியெனும் நெருப்பால் திருமுழுக்கு: இது லூக்காவின் ஓப்பீட்டுச் செய்;தி. (πνεῦμα புனுஎவுமா, ஆவி மூச்சு: πῦρ பூர், நெருப்பு, நாக்கு, தீ) தண்ணீர் சாதாரண தூய்மைப் பொருள், நெருப்பும் ஆவியும் உன்னதமான தூய்மைப் பொருட்கள், முதல் ஏற்பாட்டில் இவை கடவுளின் பிரசன்னத்தைக் குறிக்கின்றன.

இ. கோதுமை, பதர், அணையா நெருப்பு: கோதுமை மணிகளும் பதரும் விவசாயிகளுக்கு நன்கு தெரிந்த உருவகங்கள். அறுவடையின் போது நடக்கும் வேலையைத்தான் யோவான் கண்டுபாவிக்கிறார். இங்கே இது நல்லாரையும் பொல்லாரையும் குறிக்கின்றன. அணையா நெருப்பு என்று யோவான் ஷகேஹேனா| பள்ளத்தாக்கை குறிப்பிடுகிறார். எருசலேமின் குப்பைகளைக் கொண்டமைந்த இப்பள்ளத்தாக்கு, எப்போதுமே எரிந்துகொண்டிருந்தது. இதனை பாவித்து ஆண்டவரின் வருகையால் நடக்கும் நீதித்தீர்ப்பை வர்ணிக்கிறார் திருமுழுக்கு யோவான்.

மேலுள்ள வாசகங்களைப் போல நற்செய்தியும் அருகில் இருக்கும் ஆண்டவரை குறிப்பதாக அமைகிறது. ஆண்டவரைக் கோவில்களில் தேடித் தேடி களைத்துப்போன மக்களுக்கு இன்றைய வாசகங்கள், அவர் அருகில் இருப்பதை உணர்த்துகின்றன.

ஆண்டவருடைய வருகைக்கு உள்ளத்து மறுமலர்ச்சியும், நீதியுமே இன்றியமையாதது என்கின்றனர் ஆசிரியர்கள். வியாபாரமயமாகிப்போன, கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸில் இது கடினமாகவே இருக்கப்போகிறது.

ஆண்டவரே நீர் எங்கள் நடுவில் சாதாரணமாகவும் இருக்கிறீர் என்பதை எங்களுக்குப் புரிய வையும்! ஆமென்.

Lovingly,
Jegan omi

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...