ஆண்டவரின் திருட்காட்சிப் பொருவிழா.
ஆண்டவரின் திருட்காட்சி என்பது, முதல் ஏற்பாட்டில் பல வேறு நிகழ்வுகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தியதை ஞாபகப்படுத்துகிறது. கடவுள் தன்னை வெளிப்படுத்துவதை இஸ்ராயேலரும் கிறிஸ்தவர்களும் ஒரு மறைபொருளாகவே பார்கின்றனர். கீழைத்தேய திருச்சபையிலே மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இவ்விழா பின்னர் கத்தோலிக்க முழுத் திருச்சபையின் விழாவாக மாறியது. பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திய இறைவன், இயேசுவாக தன்னை முழு மனித இனத்திற்கும் தன்னை வெளிப்படுத்தியதையும், இறைவனின் இறைதன்மை அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிறது எனும் விசுவாசத்தை இவ்விழா நினைவூட்டுகிறது. ஞானிகளின் வருகையும், அவர்களின் பரிசில்களும் எமது பாலன் குடில்களை இன்று அலங்கரிக்கும்.
எசாயா 60,1-6
1.எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! 2.இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3.பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
4.உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
5.அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். 6.ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
நாடுகளின் துருவ நட்சத்திரம் (வடமீன்) என்னும் சிந்தனையுள்ள, மூன்றாம் எசாயாவின் பகுதியிலிருந்து இவ்வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள யூதா மக்களுக்கும், சிதைந்துபோயுள்ள சீயோன் நகரின் எதிர்கால நம்பிக்கையை உறுதிபடுத்துவதாகவும் அழகான உருவக அணிகளுடன் இப்பகுதி அமைந்துள்ளது.
வ.1. எருசலேமின் ஒளியென எசாயா ஆண்டவரின் மாட்சியை ஒப்பிடுகிறார்.
வ.2. ஆண்டவரின் வருகை எனும் நிகழ்வு, இஸ்ராயேல் மக்களிடம் காலம் காலமாக இருந்த முக்கிய நம்பிக்கை, எருசலேமின் அழிவின் பின்னர் இந்நிகழ்வு, முக்கியமான நிகழ்வாக உருவெடுக்கிறது. இதனையே இவ்வசனத்தில் காண்கிறோம். (חֹשֶׁךְ֙ ஹொஷேக்) இருள் இங்கு ஆண்டவரின் வருகையின் வல்லமையை காட்ட பயன்;படுத்தப்படுகிறது. ஆண்டவரின் மாட்சி: (כָּבוֹד கவோட் மாட்சி, அருள், நிறைவு) என்று ஆண்டவரின் மாட்சியை சொல்லி எருசலேமில் அவரது பிரசன்னம் இருக்கும் என நம்பிக்கை கொடுக்கிறார்.
வ.3. உதயக் கதிர்: (נֹגַהּ זַרְחֵךְ நோகா ட்சேர்ஹேகா) இது எருசலேமின் புது மாட்சியையோ அல்லது அந்த மாட்சியைக் கொடுக்கும் ஆண்டவரையோ குறிக்கலாம்.
வ4. கண்களை உயர்திப்பார்க்கச்சொல்லி, எசாயா நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டாம் எனச் சொல்கிறார், இது ஒருவகை உருவக அணி. ஷஷபுதல்வர் புதல்வியர் தூக்கி வரப்படுவர்|| என்பது இஸ்ராயேல் மக்களின் இடம்பெயர் மற்றும் புலம்பெயர் வாழ்வை காட்டுகிறது. இந்த உருவக அணி, எம் மக்களின் புலம்பெயர் வாழ்வையும் படம் பிடிக்கிறது. (பி.கு. எம் மக்களில் அதிகமானவர், இஸ்ராயேல் மக்களைப்போல, பல புலம் பெயர் உறவுகள், மண் மீது அன்பு கொண்டு வருகின்றனர். சிலர் தங்களது விடுமுறையை தவறான முறையில் களிக்க வந்து, ஈழ மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுப்பது வேதனையான விடயம்)
வ.5. இஸ்ராயேலின் புது உணர்வு காட்டப்படுகிறது: கண்டு மகிழ்வாய், இதயம் விம்மும், செல்வமும் சொத்துக்களும் கொண்டு வரப்படும். யூதா நாடும் எருசலேமும் கொள்ளையிடப்பட்ட போது எதிரிகள் இதனையே உணர்ந்தனர், இப்போது நீ அதனை உணர்வாய் என்கிறார் எசாயா.
வ.6. இவ்வசனம் மிகமுக்கியாமானது. இஸ்ராயேலருக்கும் எசாயாவிற்க்கும் இது சாலமோனின் நாட்களை ஞாபகப்படுத்துகிறது, அவர்காலத்தில் சிபாவின் அரசி பரிசில்களை எருசலேமிற்கு கொண்டுவந்ததை
நினைவூட்டுகிறது. கிறிஸ்தவர்களுக்கு இவ் நிகழ்வு ஞானியர் இயேசுவிற்கு பரிசில்களை கொண்டுவந்ததை நினைவூட்டுகிறது அல்லது இறைவாக்கு உரைக்கிறது.
பதிலுரைப்பாடல், திருப்பாடல் 72,1-2.7-8.10-11.12-13
திருப்பாடல் 127ம் 72ம் சாலமோனைப்பற்றிய திருப்பாடல்கள் என வல்லுனர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், அல்லது சாலமோனுக்கான தாவிதின் செபம் என கருதுகின்றனர். சாலமோனின் மெய்யறிவும், செல்வமும், போர் இல்லாத அமைதியும் இஃது நோக்கப்பட வேண்டியவை. அதேவேளை இத்திருப்பாடல் மனித அரசனைத் தாண்டிய ஒரு பெருந்தலைவரை, மெசியாவை குறிக்கிறது என்பதை மறக்க முடியாது. 19 வரிகளைக் கொண்ட இத்திருப்பாடல், கருத்துக்களால் பிணைக்கப்பட்ட அடிகளைக் கொண்டமைந்துள்ளதை காணலாம்.
பதிலுரைப்பாடல், திருப்பாடல் 72.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக.
7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.
10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.
12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.
வவ.1-2: தாவீதின் வேண்டுதல் போல் உள்ளது, நீதியும் நீதித்தீர்ப்பும் அரசர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாய பண்புகள். (வரலாற்றில் மிக அரிதாகவே இவர்களிடம் காணப்பட்டது)
வவ.7-8: நிலா உள்ள அளவு, அரசரது நாட்டின் பரப்பளவை குறிகக் பயன்படுகிறது, கடல் என குறிக்கப்படுவது மத்தியதரைக்கடலையும், அரேபியக் கடலையும் குறிக்கலாம். பேராறு என்பது யூப்பிரதீசு ஆற்றைக் குறிக்கும்.
வவ.10-11: தர்சீசு நகரும் சேபா மற்றும் செபா நாடுகள் திசைகளைக் குறிக்க பயன்;படுத்தப்பட்டுள்ளன. சாலமோனின் ஆட்சியில் செல்வங்களும், பரிசில்களும் (மணவாட்டிகளும்) இவ்விடங்களில் இருந்து வந்ததை விவிலியம் பதிவு செய்கிறது. பின்னர் இயேசுவுக்கு பரிசில்கள் கொண்டுவந்த ஞானியரும் இவ்விடத்திலிருந்து வந்ததாக பாரம்பரியம் சொல்கிறது.
வவ. 12-13: இவ்வரிகள் சாலமோனையும் தாண்டி மெசியாவை குறிப்பாதாகவே காணப்படுகிறது. ஏழைகளை விடுவித்தலும் (אֶבְי֣וֹן எவ்யோன், ஏழைகள்), இரக்கம் காட்டுதலும், உயிரைக் காத்தலும், வரவிருந்த மெசியாவின் பண்புகளாகும்.
இரண்டாம் வாசகம், எபேசியர் 3,2-3.5-6
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.
அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள
தூய பவுலுடைய திருச்சபை சிந்தனைகளையுடைய திருமடல் என இதனை சிலர் அழைக்கின்றனர். தளத்திருச்சபைக்காண அறிவுறத்தல்களையும், வழிபாட்டு முறைகளையும், அமைதியான படிப்பினைகளையும், கொண்டமைந்துள்ள இக்கடிதத்தில், பவுலடிகளாரின் சில மற்றைய கடிதங்களிலிருந்து மாறுபடுவதனையும் மறக்க முடியாது. இது பவுலுடையது என்பதனைவிட அவருடை பெயரில் எழுதப்பட்டது என இன்று பலர் இதனைக் காண்கின்றனர். இன்றைய வாசகத்தில்
அ. யூதரல்லாதவர்க்கு இயேசுவை அறிவிக்கும் பணியை தனது பொறுப்பு என்று சொல்லி அதனை மறைபொருள் எனவும் சொல்கிறார். இங்கே அவர் தமஸ்கு-வழியில் உயிர்த்த இயேசுவை சந்தித்ததை சொல்கிறார் என் எண்ணலாம்.
ஆ. இந்த மறைபொருள் அதாவது இயேசுதான் மெசியாவென்பதும், அவருடைய முதல் வருகை நிறைவடைந்துவிட்டதென்பதையும், இது பவுலுடைய காலத்தில்தான் நடந்ததென்பதையும் நினைவுபடுத்துகிறார்.
இ. முதல் ஏற்பாட்டு பெரியவர்களை விட திருத்தூதர்களும் இறைவாக்கினர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது பவுலுடைய வாதம்.
உ. இந்த மறைபொருளான, இயேசுவின் உடண் பஙகாளியாகும் வாய்ப்பு அனைவருக்கும் நற்செய்தியின் வாயிலாக கிட்டியுள்ளதென்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றார்.
நற்செய்தி, மத்தேயு
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். 3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. 4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். 5-6அவர்கள் அவனிடம்,
'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
'யூதா நாட்டுப் பெத்லகேமே,யூதாவின் ஆட்சி மையங்களில்
நீ சிறியதே இல்லை; ஏனெனில்,என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர்உன்னிலிருந்தே தோன்றுவார்'
என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' என்றார்கள்.
7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 8மேலும் அவர்களிடம், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
வ.1. ஏரோது என்னும் அரசனை வரலாறு பெரிய ஏரோது எனச் சொல்கிறது. இந்த ஏரோது குடும்பம் இதுமேய அரச வம்சத்ததை சார்ந்தது. ஹெஸ்மோனியர் (மக்கபேயர் காலத்திற்கு பின்னர்) காலத்தில் பிரசித்திபெற்று, பின்னர் யூதப்பெண்களை திருமணம் செய்து கொண்டு அரசாட்சியை உரோமையருடைய காலத்தில் தந்திரமாக பெற்றுக்கொண்டனர். இக் குடும்பத்தில் முக்கியமானவன் நாம் இன்று சந்திக்கும் ஏரோது. உரோமில் ஆட்சியில் இருப்பவர்களுடன் விசுவாசமாக இருந்து, ஒருகாலத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த யூதேயா நாட்டையும் மக்களையும் தன் விருப்பப்படி நடத்தினான். குடும்ப அங்கத்தவர்களையே நம்பாத இவன், மனைவியர், உறவினர் இன்னும் பிள்ளைகளையும் கொலை செய்ய துணிந்தான். உரோமைய சீசர், மாற்கு அந்தோனி, எரோதுவின் நண்பர்களாக மற்றும் உறவினாராக இருப்பதை விட பன்றிகளாக இருக்கலாம் என்றார். (யூதர்கள் பன்றிகளை தொடுவதில்லை). கட்டடக்கலையை மிகவும் விரும்பிய இவன் பல கட்டடங்களை யூதேயாவில் கட்டினான். எருசலேம் தேவாலய திருத்தம் மற்றும் மசாதா போன்றவை இவனுடைய பிரசித்தி பெற்ற கட்டடங்களே. குழந்தை இயேசுவை அழிக்க மற்றைய குழந்தைகளைக் கொலை செய்யக்கூடிய ஒரு அரசனாக இவனைத் தவிர வேறு எவரையும் மத்தேயுவினால் தெரிவு செய்திருக்க முடியாது. இவனுடைய வாரிசைதான் இயேசு "நரி"என்று அழைத்தார்.
வ.1.1. கிழக்கிலிருந்து ஞானிகள்: இந்த மெய்யறிவு வாதிகளைத்தான் நாம் மூவிராசாக்கள் என்று அழைக்கிறோம். இவர்களை அரசர்கள் என்றோ, மூன்று பேர்கள் என்றே மத்தேயு பதிவு செய்யவில்லை. இவர்களைப்பற்றி பல சுவாரசியமான பாரம்பரியங்களைச் தலத்திருச்சபைகள் கொண்டிருக்கின்றன. இன்னும் விசேடமாக நம்முடைய சில ஈழத்து கதைகள், இதில் கஸ்பார் என்னும் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றார் என்றும் சொல்லும் (கதைவிடும்). யேர்மனி பாரம்பரியம் ஒன்று, இவர்கள் யேர்மனி நாட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டனர் என்கிறது. இவர்களை மூவர் என்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார். உண்மையில், மத்தேயுவின் ஞானிகள் யார்?
அ. மத்தேயு வெளிநாட்டு நண்பர்களை அறிவாளியாக்கி யூதேய அறிவாளிகள் ஆண்டவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அழகாக சொல்வார். இந்த உவமையையும் அதற்கே பாவிக்கிறார் என நம்புகிறேன்.
ஆ. இவர்கள் வானசாஸ்திர வல்லுனர்களாக இருந்திருக்கலாம். கிழக்கு ஞானிகள் என்பவர்கள் இங்கு மொசப்பத்தேமியரை குறிக்கலாம் (தற்போதைய இராக் நாடு), இவர்கள் வின்மீன்களையும், வானவியலையும் கணிப்பதில் அன்றைய நாசாக்காரர்கள் எனலாம். இந்த ஞானிகள் வின்மீன் என கூறுவதை கிரேக்கத்தில் ἀστήρ அஸ்டேர் என காண்கின்றோம், ஆங்கில ஸ்டார், யேர்மனிய ஸ்டர்ன் போன்றவை இதிலிருந்தே வருகின்றன. இது மாட்சியையும் வான அடையாளத்தையும் குறிக்கிறது.
வ. 2-3. ஞானிகளையும் ஏரோதுவையும் ஒப்பிடுகிறார்: ஞானிகள் தேடிவருகின்றனர், ஆண்டவரை வணங்கக்கேட்கின்றனர், ஆனால் எரோது கலங்குகிறான். அவனோடு சேர்ந்து எருசலேம் முழுவதும் கலங்கிற்று என்று கூறி, நன்பர்களும் வெளிநாட்டவரும் கடவுளைத்தேட, எருசலேமும் அதன் பொய் அரசனும் அவரைக்கண்டு கலங்கினர் என்று லாவகமாகச் சொல்கிறார் இந்த விவிலிய வல்லுநர் மத்தேயு.
வ. 4. மத்தேயு நற்செய்தியில் இயேசுவை அழிக்கத்தேடிய மற்றைய யூத பெரியவர்கள் கோடிடப்படுகின்றனர், அவர்கள் தலைமைக் குருக்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள். கிறிஸ்துவிற்கு எதிராக சதிநடக்கும் போதெல்லாம் மத்தேயு நற்செய்தியில் இவர்களைக் காணலாம்.
வவ.5-6. இயேசுவின் பிறப்பைப்பற்றியும், பெத்லகேமைப்பற்றியும், இஸ்ராயேலின் ஆயர் (கடவுள்) பற்றியும் இந்த யூத அறிஞர்களுக்கு நல்ல தெளிவு இருந்ததை மத்தேயு நமக்கு காட்டி, இவர்கள் எவ்வளவு பக்க சார்பானவர்கள் என நம்மை தூண்டுகிறார். இவர்களுக்கு தெரிந்திருந்தும், இவர்கள் ஆர்வம் காட்டவில்ல என்கிறார்.
வவ.7-8. ஏரோது யார் என்று காட்டுகிறார் மத்தேயு. இவ்வாறுதான் ஹஸ்மோனியரை வீழ்த்த உரோமையருடன் சதிதிட்டம் தீட்டியிருப்பான் என்கிறார் போல. (இப்படியான ஏரோதுக்களிடம் இருந்து ஞானியரையும், குழந்தை இயேசுவையும் காப்பாற்றியது போல, ஆண்டவர் ஈழத்தையும், மக்களையும் காக்க வேண்டும்)
வவ. 9-10. விண்மீனை மீண்டும் கண்டார்கள் என சொல்வதன் மூலம், ஏரோதுவின் வீட்டில் அது இல்லை என்கிறார். அவர்கள் பெரு மகிழ்சி அடைந்தார்கள் என்பதன் மூலம், ஏரோதுவின் வீட்டிலும் இஸ்ராயேல் அறிஞர்களிடமும் அவர்கள் பெருமகிழ்சி அடையவில்லை என்கிறார். இந்த பெருமகிழ்சி (χαίρω காய்ரோ) இறையனுபவத்தை பெறும்போது கிடைப்பதாக விவிலியத்தில் காணலாம், ஆக விண்மீன் தருவதும் இந்த இறையனுபவமே என்கிறார் மத்தேயு.
வ.11. அ. குழந்தையையும் அதன் தாய் மரியாவையும் கண்டார்க்ள என்று, இந்த ஞானியர் கண்டது சரியான குழந்தை இயேசுவைத்தான் என்கிறார்.
ஆ. நெடுஞ்சான் கிடையாய் விழுந்தார்கள் (πεσόντες προσεκύνησαν αὐτῷ) முகங்குப்புற விழுந்து வணங்கினார்கள் என்று சொல்லலாம். இது இறைவனின் முன்னால் மனிதர்கள் செய்யும் பணிவான வணக்க முறை, மோயிசனும் பலரும் இதைத்தான் ஆண்டவர் முன்னர் செய்தனர். இந்த வணக்கம் இயேசுவை யார் எனக் காட்டுகிறது.
இ. பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம்: இவை அரசர்களுக்கு கொடுக்கப்படுகின்ற விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் (காணிக்கைப்பொருட்கள்). சாலமோனுக்கு கிடைத்தவையும் இவைதான். மத்தேயு இயேசுவை தாவிதின் உண்மையான வாரிசாக காட்டுகிறார் போல. சிலர் ஆண்டவரின் மரணத்தின் பின்னர் நடந்த நிகழ்வுகளைக் காட்ட இப்பொருட்கள் பயன்படுகின்றன என்கின்றனர்.
மத்தேயு பல வேளைகளில் இயேசுவை புதிய மோயிசனாக காட்டுவதைக் காணலாம். இந்த ஏரோது எகிப்திய பாரவோனை நமக்கு ஞாபகப்படுத்துகிறான். யார் என்ன செய்தாலும், இந்த மெசியாவை, கடவுளின் உண்மையான மகனை உலகம் அறிந்து கொள்வதில் இருந்து எவரும் தடுக்க முடியாது என்கிறார் இந்த முன்னைய நாள் ஆயக்காரர் தூய மத்தேயு.
உலகில் கடவுளைக் காட்ட பல அடையாளங்கள் உள்ளன,
புறவினத்தவர் என்று சொல்லி அவைகளை விலக்கிவிடாமல்
மெய்யறிவோடு தேடுவோம், அவரைக் கண்டு வணங்குவோம். பேராசை கொண்ட போலி தலைவர்களான ஏரோதுக்களிடமிருந்து எம்மையும் எமது எதிர்காலத்தையும் காப்பாற்றுவோம்.
நம்மக்களின் கனவான சுயநிர்ணய உரிமைவாழ்வை இப்புத்தாண்டு கொண்டுவருவதாக!
ஆமென்.