வெள்ளி, 31 மார்ச், 2023




பெரிய சனி - Holy Saturday  

08, 04, 2023 A


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Jaffna. 



தொடக்க நூல் 1,1-2,2

விடுதலைப் பயணம் 14,15-15,1

எசாயா 54,5-14

எசேக்கியேல் 36,16-17,18-28

உரோமையர் 6,3-11

மத்தேயு 28,1-10


 பெரிய சனி அல்லது பாஸ்கு சனி, அல்லது திருவிழிப்பு சனி என்று பலவாறு இந்த நன்நாள் அழைக்கப்படுகிறது. பண்டைய தமிழ் மக்கள் சனிக்கிழமையை சனி பகவானுடைய நாளாகவும், சனி கிரகத்தினுடைய நாளாகவும் கருதி வழிபட்டனர். யூத மக்கள் சனிக்கிழமையை கடவுளுடைய ஓய்வு நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். கிரேக்க-உரோமையர் சனிக்கிழமையை, சனி கோளுக்கு அல்லது அதன் தேவைதையோடு ஒப்பிட்டு விவாதித்தனர். நமக்கு, இயேசு ஆண்டவர் இந்த நாளில் ஓய்ந்திருந்தார் அல்லது துயில் கொண்டார் என்பதனால், இந்த நாள் முக்கியமான நாட்களில் ஒன்றாகவும், புனிதமான நாளாகவும் மாறுகிறது. இந்த தூய்மையான நாளைப்பற்றி திருச்சபை பல படிப்பினைகளை முன்வைக்கிறாள் அவற்றைப் பார்ப்போம்:


! ஆண்டவர் இந்த நாளில் துயில் கொண்டார்

! ஆண்டவர் இறந்து பாதளங்களுக்குள் இறங்கி தொலைந்து போனவர்களை தரிசித்தார்

! செபத்தோடும் தபத்தோடும் இந்த நாள் செலவிடப்படுகிறது

! பிரதானமாக திருவருட்சாதனங்கள் இன்று நிறைவேற்றப்படாது

! திருச்சபை உயிர்ப்பு திருவிழிப்பிற்க்காக காத்திருக்கிறது

! இரவு வேளையில் இத்திரு விழிப்பு தொடங்குகிறது

! இத்திருவிழிப்பில் கடவுளின் மாட்சிமிகு செயல்கள் நினைவூகூரப்பபடுகின்றன

! புது நெருப்பு ஏற்றபடுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறது

! தியாக்கோன் (திருத்தொண்டர்) அல்லது குரு பாஸ்கா புகழுரை பாடி கிறிஸ்துவை    மாட்சிப்படுத்துவார்

! இன்று, இறைவார்த்தைகள் மூலமாக மக்கள் வரலாற்றில் கடவுள் செய்தவற்றை நினைவுகூருவர்

! புதியவர்களுக்கு திரு முழுக்கு தரப்படுகிறது, ஏற்கனவே அதனை பெற்றவர்கள் தங்களை   புதுப்பிப்பர்

! இன்றைய நற்கருணை வழிபாடு ஆண்டின் முக்கிய வழிபாடாக உருப்பெருகிறது





தொடக்க நூல் 1,1-2,2


 தொடக்க நூல் முதல் 11அதிகாரங்கள் இஸ்ராயேலின் தனி வரலாற்றைப் பற்றி விவரிக்காமையினால் அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என அழைக்கப்படுகிறது. இந்த படைப்பு காட்சிகளினூடாக யாவே மரபு ஆசிரியரும், (மற்றயவர்களும்) இஸ்ராயேலை முழு வரலாற்றினுள் நிலைநிறுத்த முயற்சி செய்கின்றனர். இந்த முதல் அதிகாரங்களில் யாவே மரபிற்கு, குரு மரபு அசிரியர் தொகுப்புரை வழங்க முயற்சிப்பதனால் இந்த இரண்டு மரபுகளும் மாறி மாறி வருவதனைக் காணலாம், இருந்தபோதிலும் யாவே மரபு தனது தனித்துவத்தோடு வாசகர்களை கவர்கின்றது. படைப்புக்களைப் பற்றி பல கதைகள் மத்திய கிழக்கு மற்றும் எகிப்திய பிரதேசங்களில்இருந்தன, இவை மனிதனையும், உலகையும் மற்றும் கடவுளையும் பற்றி பல கேள்விகளை மேலதிமாக்கிச் சென்றன. விவிலிய படைப்புக் கதைகளில், ஆசிரியர்கள், படைப்புக்கள் கடவுளால் நடந்தப்பட்ட நல்ல திட்டங்கள் எனவும், மனிதர் தங்களது தீய எண்ணத்தாலும், கீழ்படியாமையினாலும், சுயநலத்தாலும் கடவுளைவிட்டு அகன்று சென்றனர் எனவும் விவரிக்கின்றார்


. 1,1-2  : படைப்பின் தொடக்கம்


தொடக்க நூலின் முன்னுரை தனியாக தெரிவதன் மூலம், இது முழு முதல் ஏற்பாட்டிற்கும் தொடக்க உரை போல தோன்றுகிறது. முதல் இரண்டு சொற்கள் (בְּרֵאשִׁ֖ית בָּרָ֣א பெரெஷித் பரா) மட்டுமே பல விவிலிய வாதங்களையும் ஆய்வுகளையும் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது வசனத்தில், கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும் படைத்ததால் அவர் முழு வல்லமையுடையவர் என காட்டப்படுகிறார். ஆனால் உலகு உருவற்று சாயலற்று இருந்ததால், கடவுள் அதனை எவ்வாறு வடிவமைத்தார் என்று, தொடர்கின்ற வசனங்கள் விவரிக்கின்றன. இரண்டாவது வசனத்தில் உலகம் இருளாகவும், கைவிடப்பட்டும், நீரால் மூடப்பட்டும், விசித்திரமான ஆவியால் ஆட்கொள்ளப்பட்டும் இருந்தது என விவரிக்கிறது. இவை உண்மையில் உலகம் எவ்வாறு தொடக்கத்தில் இருந்தது என்பதைவிட, கடவுள் உலகை எவ்வாறு படைத்தார் என்பதையே காட்ட முய்ற்சிக்கிறது


. 1,3-23 : படைப்பு தொடர்கின்றது


வவ. 3-5: ஒளியின் படைப்பு: இருண்ட உலகிற்கு, ஒளி தோன்றுக (יְהִ֣י א֑וֹר) என்று கடவுள் சொன்னவுடன் ஒளியேற்றப்பட்டது. ஒளி இங்கே ஒரு பெரிய சக்தியாக காட்டப்படுகிறது. நவீன அறிவியலாளரின் பெரு வெடிப்பு கொள்கையும் ஒளியோடு உலகம் தோன்றியது என்று வாதிடுகின்றனர். கடவுள் ஒளிதோன்றியதன் பின்னர், அதனை நல்லதெனக் கண்டதன் மூலம், படைப்பு நல்லதாகவே உருவெடுக்கிறது. இங்கே பாவிக்கப்படுகின்ற இரவு, பகல், மாலை, காலை போன்றவற்றை எபிரேய நாட்கணிப்பில் விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை இக்கால கணக்கின் படி வாசித்தால் சரியான விளக்கங்களை கண்டுகொள்ள முடியாமல் போகும்


வவ. 6-8: நீர்த்திரள் பிரிக்கப்படுகிறது: (וִיהִ֣י מַבְדִּ֔יל בֵּ֥ין מַ֖יִם לָמָֽיִם) இவ்வாறு கடவுளுக்கு நீர்திரளின் மீதுள்ள அதிகாரம் காட்டப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் நீரை ஒரு வகை சக்தியாக கருதினர். உலகத்தின் கீழும் மேலுமாக நீர்திரள் இருப்பதாகவே கருதினர். கடவுள் ஒர் ஆகாய-விரிப்பினால் (רָקִ֖יעַ ராகியா)அதனை பிரித்துள்ளார் என சிந்தித்தனர்.


வவ. 9-13: நிலங்கள், தாவரங்களின் படைப்புக்கள்: உலர்ந்த தரை, விதவிதமான தவாரங்கள் கடவுளின் ஒழுங்கான படைப்புத்திறனுக்கு உதாரணங்கள்.


வவ. 14-19: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் (שְׁנֵ֥י הַמְּאֹרֹ֖ת הַגְּדֹלִ֑ים הַכּוֹכָבִֽים) போன்றவற்றை அக்கால மக்கள் தெய்வீக சக்திகளாக கருதினர், இங்கே கடவுளே அவற்றை படைக்கின்ற போது, அவரின் பலம் தெரிகிறது அத்தோடு அவை பலமான ஆனால் படைப்புப் பொருளாகின்றன.


வவ. 20-23: பறவைகளும், மீன்களும்: சில கடல் உயிரினங்கள், அக்காலத்தில் புராணக்கதை உருவக உயிரினங்களாக பார்க்கப்பட்டு, பயமுறுத்தும் விலங்கினங்களாக கருதப்பட்டன. இன்று நாம் அறிந்துள்ள டைனோசர்கள் போன்றவற்றை அவர்கள் கடல் உயிரினங்களாகவும், பெயரிடப்படாத உயிரினங்களாகவும் கண்டனர். விலங்கினங்கள் முதலில் கடலிலும் மற்றும் நீரிலும் தோன்றின என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கும், விவிலிய அறிவிக்கும் எதோ தொடர்புள்ளது போல தோன்றுகிறது


. 1,24-31 : மிருகங்களினதும் மனிதரினதும் படைப்பு


வவ. 24-31: மனிதனின் படைப்பு: இதுதான் கடவுளின் உச்ச படைப்பு, பல புராணக் கதைகள், மனிதன் பாவி எனவும், தீயவர் எனவும், கலகக்காரர் எனவும் சொன்னவேளை, தொடக்கநூல் மனிதனை கடவுளின் சாயலும், பாவனையும் என்று சொல்வது, மிகவும் அற்புதமானது 

(נַֽעֲשֶׂ֥ה אָדָ֛ם בְּצַלְמֵ֖נוּ כִּדְמוּתֵ֑נוּ). மனிதனிடம் சகல படைப்புக்களும் ஒப்படைக்கப்படுகின்றன. படைப்புக்களை பாதுகாக்க கடவுள் மனிதனை ஏற்படுத்துகிறார். ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று, யாவே மரபில் கடவுள், மனிதனிடம் பிரிவினையை காணவில்லை எனலாம். கடவுள் அனைத்தையும் நல்லது (וְהִנֵּה־ט֖וֹב מְאֹ֑ד) எனவே கண்டார்


. 2,1-3   : தூய ஏழாம் நாள்


கடவுள் எப்படி தான் படைத்தவற்றை விரும்பினாரோ, அவ்வாறே ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார். (וַיִּשְׁבֹּת֙ בַּיּ֣וֹם הַשְּׁבִיעִ֔י מִכָּל־מְלַאכְתּ֖וֹ אֲשֶׁ֥ר עָשָֽׂה׃) கடவுளுடைய நாளை புனிதப்படுத்த வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. அதனை இங்கே அழகாக காட்டுகிறார். கடவுளே ஓய்ந்திருந்தார், எனவே கடவுளுடைய நாள் கடவுளுக்கு உரியது என்பதே இங்கே மையப்படுத்தப்படுகிறது. ஓய்வு நாள் בַּיּ֣וֹם הַשְּׁבִיעִ֔י  புனிதமானது என்ற சிந்தனை இதிலிருந்தே வருகிறது




விடுதலைப் பயணம் 14,15-15,1


 இந்த பகுதியிலே ஆசிரியர், எகிப்திய கடவுள் என பார்க்கப்பட்ட பாரவோனுக்கும்

இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கும், இடையிலான ஓர் போராட்டத்தை காட்டுகிறார். மக்களின் பயம் அவர்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. கடவுள் மோசேயின் கையைக் கொண்டு கடலை பிரித்தது, ஆண்டவரின் பணியாளர்களோடு அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கடல், தீய சக்தியாக இருந்தாலும் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்கிறார் ஆசிரியர். இங்கே விவிலிய ஆசிரியர் பபிலோனிய மற்றும் கானானிய சிந்தனையிலிருந்து மாறுபடுகிறார். மேகத்தூணும் நெருப்புத்தூணும் (עַמּ֤וּד הֶֽעָנָן֙) கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. இங்கே பார்க்கப்படவேண்டியது கடவுள் எப்படி எகிப்தியரை சாவடித்தார் என்பதைவிட, கடவுள் எப்படி இஸ்ராயேலரை பாதுகாத்தார் என்பதே. உண்மையில் செங்கடல் என்பது எங்கே இருக்கிறது என்பதிலும் இன்று வரை பல புதிர்கள் இருக்கின்றன. செங்கடலை கடந்து வந்த அனுபவம் இஸ்ராயேல் மக்கள் மட்டில் அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டுபண்ணியதை முழு விவிலியத்திலும் காணலாம். மக்கள் ஆண்டவரிலும் அவர் பணியாளன் மோசேயிலும் நம்பிக்கை கொண்டனர் என்பதே, இந்த கதையின் செய்தி. யார் கடவுள் என்ற கேள்விக்கும் இந்த பகுதி விடையளிப்பதாக அமைகிறது, ஆண்டவரா அல்லது பாரவோனா? என்பதே அந்தக் கேள்வி. எகிப்தியர்கள் ஆண்டவரைக் கண்டார்கள் என்பதே அதன் விடை


எசாயா 54,5-14


கடவுள் இஸ்ராயேல் மக்கள்பால் கொண்ட அன்பு, என்று மையப் பொருளில் இந்த பகுதி அமைந்துள்ளது. ஆண்டவருக்கு மிக முக்கியமான இனிமையான பெயர்கள் வழங்கப்பட்டுளளன, அவர் படைகளின் ஆண்டவர் (יְהוָ֥ה צְבָא֖וֹת அதோனாய் செவாஓட்), இஸ்ராயேலின் தூயவர் உன் மீட்பர் (גֹֽאֲלֵךְ֙ קְד֣וֹשׁ יִשְׂרָאֵ֔ל கேஅலெக் கதோஷ் யிஸ்ராஏல்), உலக முழுமைக்கும் கடவுள் 

(אֱלֹהֵ֥י כָל־הָאָ֖רֶץ ஏலேஹெ கோல் ஹாஅரெட்ஸ்) என சொல்லிடப்படுகிறார். இந்த பகுதியிலே எசாயா, இஸ்ராயேலை ஒரு தாயாகவும், இளம் மனைவியாகவும் (אֵ֧שֶׁת נְעוּרִ֛ים), ஒப்பிட்டு அழகான வார்த்தைகளால் இந்த பகுதியை நெய்துள்ளார். கடவுளை கணவராக இஸ்ராயேலுக்கு 

(כִּ֤י בֹעֲלַ֙יִךְ֙ עֹשַׂ֔יִךְ) ஒப்பிடுவது அழகான உருவகம், இது இங்கே அழகாக கையாளப்பட்டுளளது. இப்போது இஸ்ராயேலின் நிலை, கைவிடப்பட்டவள் போல் இருந்தாலும், மீட்பராகிய கடவுள் அதனை மாற்றுவார் என்பது எசாயாவின் இறைவாக்கு. கடவுளின் தன் மன்னிப்பை, நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையையோடு நினைவூட்டி உறுதிப்படுத்துகிறார். மலைகள் சாயினும் கடவுளின் நம்பிக்கை சாயாது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. அடித்தளங்கள், கால்மாடங்கள், வாயில்கள் போன்றவை ஒரு நகருக்கு மிக முக்கியமானவை. இஸ்ராயேலை ஒரு நகராக ஒப்பிட்டு கடவுள் இந்த நகரை இப்போது புதுப்பிக்க இருக்கிறார் என்று எசாயா இறைவாக்குரைக்கிறார். நேர்மையில் நிலைநாட்டப்படுதல் 

(בִּצְדָקָ֖ה תִּכּוֹנָ֑נִי) என்பது, நம்பிக்கையிழந்து போயிருந்த மக்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தி



எசேக்கியேல் 36,16-17,18-28


 கடவுள் தன்னுடைய பெயரின் பொருட்டு அதிசயங்கள் செய்வார், புது இதயத்தை தருவார் என்பது எசேக்கியல் இறைவாக்கினரின் தனித்துவமான செய்திகள். எசேக்கியலும் அகதியாக பபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் ஒருவர் என்று சில விளக்கவுரையாளர்கள் கருதுகின்றனர். எவ்வாறெனினும், இவருடைய இறைவாக்குகளில் புது இதயம், புதிய உடன்படிக்கை, புதிய சட்டம், புதிய நீதி போன்றவை மிகவும் அழகானதும், மிகவும் ஆழமானவையுமாகும். இன்றைய பகுதி இஸ்ராயேலின் புதிய வாழ்வைப் பற்றி பேசுகிறது. பெண்களின் மாதவிடாய் இரத்தமாக வெளியேறிய படியால் பலர் அன்று அதனை தீட்டாக கருதினர்இந்த உதாரணத்தை ஆசிரியர் உவமையாக பாவிக்கிறார் (சிலர் இந்த இயற்கையின் ஆச்சரியத்தை இன்னமும் தீட்டாக கருதுகின்றனர்). ஆசிரியர் மாதவிடாயைப் பற்றி பேசவில்லை, மாறாக பாவத்தைப் பற்றியே பேசுகிறார். எசேக்கியேல், ஏன் மக்கள் கடவுளை வழிபட்டாலும், வேறு நாட்டுற்கு அகதிகளாக போகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விவரிக்கின்றார்

 தீட்டானது இஸ்ராயேலருடைய நாடும் மக்களுமட்டுமல்ல, கடவுளுடைய பெயரும்கூட என்பது எசேக்கியேலுடைய புதிய போதனை. எனவே மக்கள் மட்டில் இல்லாவிடினும், தனது பெயரின் பொருட்டுடாவது கடவுள் மக்களை மீட்க வேண்டியவராக இருக்கிறார் என்பது இவரது வாதம். கடவுள் இரண்டு விதமான மீட்புச் செய்ற்பாடுகளை செய்ய இருக்கிறார், ). கூட்டிச் சேர்த்தல் (וְקִבַּצְתִּ֥י אֶתְכֶ֖ם). ). சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டுவருதல் (וְהֵבֵאתִ֥י אֶתְכֶ֖ם אֶל־אַדְמַתְכֶֽם׃). இதனையே இஸ்ராயேல் மக்கள் விரும்பினர். (இதுவே ஈழத்தழிழர்கும் தேவையாக இருக்கிறது.) ஆண்டவரே இவர்கள் விரும்பியவற்றை செய்யப்போகிறார் என அழகாக சொல்கிறார். இந்த புலம்பெயர்ந்த இறைவாக்கினர், எசேக்கியல். 26-28 வரையான வசனங்கள் மிகவும் முக்கியமானவை. பல விசேட அம்சங்கள் இங்கே சொல்லப்படுகின்றன. ). புதிய இதயம் (לֵ֣ב חָדָ֔שׁ). ). புதிய ஆவி (ר֥וּחַ חֲדָשָׁ֖ה). ). கல்லுக்கு பதிலான சதையான இதயம் (וְנָתַתִּ֥י לָכֶ֖ם לֵ֥ב בָּשָֽׂר). ). ஆண்டவரின் ஆவி (רוּחִ֖י) ). ஆண்டவிரின் நியமங்களும் சட்டங்களும் (בְּחֻקַּי֙ תֵּלֵ֔כוּ וּמִשְׁפָּטַ֥י תִּשְׁמְר֖וּ). இறுதியாக பழைய உடன்படிக்கை புதிய வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. அதாவது கடவுள் இவர்களின் ஆண்டவராகவும், மக்கள் ஆண்டவரின் மக்களாகவும் இருப்பார்கள், இதுதான் மோசேயுடன் செய்து கொண்ட உடன்படிக்கை, அது இங்கே புதியதாகவும் வித்தியாசமானதாகவும் சொல்லப்படுகிறது


உரோமையர் 6,3-11


 கிறிஸ்தவ வாழ்வின் மறையுண்மைகளை அழகாக விவரிக்கும் திருமுகங்களில் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த பகுதியிலே திருமுழுக்கினால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் நன்மை எடுத்துரைக்கப்படுகிறது. திருமுழுக்கு (βάπτισμα பப்டிஸ்மா) ஒருவருக்கு புதுவாழ்வு அருளுகின்றதென்பது நமது நம்பிக்கை, இதனை மரணம் என்று வர்ணிக்கிறார் பவுல். திருமுழுக்கு இந்த நல்ல மரணத்தை

கொண்டுவருகின்றதென்றும், திருமுழுக்கு ஒருவகை அடக்கச் சடங்கு என்றும் வித்தியாசமான பாவனையில் விளங்கப்படுத்துகிறார். உரோமையர்கள் கிறிஸ்துவோடு உயிர்க்க வேண்டும் என்றால் அவரோடு இறக்க வேண்டும் என்பது கட்டாயம் என்கிறார் பவுல். பவுல் இங்கு உருவகங்களை கையாள்கின்றார் என்பதை அவதானமாக நோக்க வேண்டும். திருமுழுக்கை ஒரு வகையான மாய வித்தையாக தவறாக கண்ட உரோமையருக்கு திருமுழுக்கு ஒரு திருவருட்சாதனம், அது வாழப்படவேண்டும். மாற்றம் இல்லாமல் திருமுழுக்கினால் பயன் இல்லையென்று காட்டமாக சொல்கிறார்

 பாவ வாழ்கை சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது (ὅτι ὁ παλαιὸς ἡμῶν ἄνθρωπος συνεσταυρώθη) என்ற உருவகத்தின் வாயிலாக கிறிஸ்தவர்கள் பாவ வாழ்க்கையை வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை முன்வைக்கிறார். இறந்தோர் பாவத்திலிருந்து விடுதலையடைந்துவிட்டனர் என்ற வரிகளின் ஊடாக, பவுல் சிலருக்கு உயிர்ப்பு எற்கனவே கிடைத்துவிட்டது என நம்பினாரா என எண்ணத்தோன்றுகிறது. இவரின் வாதங்களை ஒரு இறையியல் வளர்ச்சியாகவே காணவேண்டும். பாவம் என்பது மரணம், வாழ்வு என்பது உயிர்பு என்ற சிந்தனையே இங்கே நோக்கப்படவேண்டியது. பவுலுடைய உயிர்ப்பு மற்றும் திருமுழுக்கு போன்ற வாதங்களை விளங்கிக்கொள்ள திருமுகங்களை அவற்றின் பின்புலத்திலும், எழுதப்பட்ட காலநிலைகளுக்கும் ஏற்றபடி வாசிகக் வேண்டும்


மத்தேயு 28,1-10

இயேசு உயிர் பெற்று எழுதல்

(மாற் 16:1 - 8: லூக் 24:1 - 12: யோவா 20:1 - 10)


1ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். 2திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். 3அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. 4அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். 5அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, 'நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். 6அவர் இங்கே இல்லை அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். 7நீங்கள் விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்' என்றார். 8அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். 9திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். 10அப்பொழுது இயேசு அவர்களிடம், 'அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்' என்றார்.


 இந்த வாசகப் பகுதி, நாம் குருத்தோலை ஞாயிறில் வாசித்த ஆண்டவருடைய பாடுகளின் வரலாற்றின் தொடர்ச்சியாக வருகிறது. மத்தேயு ஆண்டவரின் உயிர்ப்பின் போது நடந்த காட்சிகளிலும் தன்னுடைய தனித்துவத்தைக் காட்டுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் வித்தியாசமான விதங்களில் இந்த காட்சியை வர்ணித்தாலும், இந்த காட்சியின் மையமான உண்மைகள் அனைத்து நற்செய்திகளிலும் ஒன்றாகவே உள்ளன. இந்த காட்சிகள் ஆண்டவருடைய உயிர்ப்பை விவரிக்கின்றன, என்பதைவிட அவரது உயிர்ப்பு எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதையே விவரிக்கின்றன


.1: இவர்கள் ஓய்வுநாளுக்கு அடுத்த நாள், அதாவது ஞாயிறு தினம் கல்லறைக்கு சென்றிக்க வேண்டும். இதனை வாரத்தின் முதல்நாளின் விடியலில் என்றும் மொழி பெயர்க்கலாம்

இந்த இரண்டு பேரில் ஒருவர் மகதலா மரியா (Μαριὰμ ἡ Μαγδαληνὴ), இவர்

இயேசுவை பின்பற்றிய மிக முக்கியமான ஒரு பெண் சீடர். இவரோடு சென்ற மற்றயை பெண்மணியை மத்தேயு பெயரிடவில்லை மாறாக வேறு  ஒரு மரியா (ἄλλη  Μαρία) என்கிறார். எதற்காக இவரை வேறு மரியா என்கிறார் என்பது புரியவில்லை, ஒருவேளை இவரை மத்தேயுவின வாசகர்கள் நன்கு தெரிந்திருக்கலாம், அல்லது மகதலா மரியாவை முக்கியப்படுத்திக் காட்டவும் இப்படி சொல்லியிருக்கலாம்


.2: இவர்களின் கண்முன்னே கல்லறையின் வாயிலில் முக்கியமான நிகழ்வொன்று நடைபெறுகிறது. கல்லறை புதியது, அதன் கல் நிச்சயமாக பெரியதாக இருக்கும். இந்த கல் பெரிதாக இருப்பதன் காரணமே, அது அகற்றப்படக்கூடாதது என்பதுதான். இப்படியிருக்க பெண்களால் எப்படி கற்களை அகற்ற முடியும். இந்த கேள்வி அக்காலத்தில் உலாவியிருந்திருக்கும். இதற்க்குத்தான் விடையளிக்கிறார் மத்தேயு. மத்தேயுவின் விவரணப்படி சில முக்கியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன:


. பெரிய நிலநடுக்கம் ஏற்படுகிறது (ἰδοὺ σεισμὸς ἐγένετο μέγας·): நிலநடுக்கம், முதல் ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இறைபிரசன்னத்தையும், இறைசெயற்பாட்டையும் காட்டுகின்றன. நில நடுக்கத்தின் விஞ்ஞான விளக்கம் அறியப்படாத அந்த நாட்களில் இதன் அர்த்தம் நிச்சயமாக பயத்தையும், இறையனுவத்தையும் கொடுத்திருக்கும். சில புராதன மதங்களின் இதிகாசங்கள் நில நடுக்கத்தை தெய்வங்களின் போர்கள் என நம்பின. மத்தேயு இந்த நிலநடுக்கத்தை கடவுளின் செயலாக காட்டுகிறார்


. ஆண்டவரின் வானதூதர் இறங்கி வருகிறார், வாயிற்கல்லை புரட்டுகிறார் (ἄγγελος γὰρ κυρίου καταβὰς ἐξ οὐρανοῦ  °καὶ προσελθὼν ἀπεκύλισεν τὸν λίθον): வானதூதர்களைப் (ἄγγελος ஆங்கலொஸ்) பற்றிய அறிவு புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நன்றாகவே வளர்ந்திருந்தது. இவர்கள் தெய்வீக உயிர்களாகவும், கடவுளுடைய படைவீரர்களாகவும், அவருடைய தூதர்களாகவும் இந்த காலத்தில் அறியப்பட்டார்கள். இவர்களைப் பற்றி கிரேக்க கால யூத இலக்கியங்களும், மற்றைய இலக்கியங்களும் அதிகமாகவே சொல்லியிருக்கின்றன. இப்படியான வானதுதர் ஒருவர் இறங்கிவருகிறார். தீய வானதூதர்களும் அக்காலத்தில் அறியப்பட்ட படியால், குழப்பம் ஏற்படாமல் இருக்க இந்த இறங்கிவந்த வானதூதர், ஆண்டவரின் வானதூதர் என்று எழுதப்பட்டிருக்கிறார். அத்தோடு கல்லறையின் பெரிய கல்லை இவரே புரட்டுகிறார், இதனால் இது கடவுளின் கட்டளையாகவும் திட்டமாகவும் இருக்கிறது


. அதன் மேல் உட்காருகிறார் (καὶ ἐκάθητο ἐπάνω αὐτοῦ.): மேலுமாக வானதூதர் அந்த கல்லின் மேல் உட்காருவது, இனி ஆண்டவர் மேல் எந்த மனிதருக்கும் அதிகாரமில்லை அத்தோடு எந்த கல்லும் ஆண்டவரின் உயிர்ப்பை தடுக்க முடியாது என்பதையும் காட்டுவது போல உள்ளது. யூதர்கள் பெரிய கல்லை வைத்து உடல்கள் எடுக்கப்படாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்கள், ஆனால் இங்கே கடவுளின் வானதூதரே கல்லை அகற்றிவிடுகிறார், அதாவது நம்பிக்கை மாறுபடுகிறது


.3: வானதூதரின் தோற்றம் வர்ணிக்கப்படுகிறது. இவருடைய தோற்றம் கடவுளின் தோற்றத்தையே ஒத்திருக்கிறது போல தெரிகிறது (ஒப்பிடுக தானி 7,9: ✽✽10,6). இவருடைய தோற்றம் மின்னல் போலவும் (εἰδέα αὐτοῦ ὡς ἀστραπὴ), ஆடை உறைபனி வெண்மையாகவும் இருந்தது (ὸ ἔνδυμα αὐτοῦ λευκὸν  ὡς χιών.). இதிலிருந்து இங்கே தோன்றியவர் ஒரு மாயையல்ல மாறாக அவர் கடவுளின் தூதர் அத்தோடு, சீடர்கள்தான் இயேசுவின் உடலை களவெடுத்துவிட்டு அவர் உயிர்த்துவிட்டார் என்று பொய் சொல்கிறார்கள் என்ற சில யூத தலைமைத்துவத்தின் பிரச்சாரத்தை இந்த குறிப்புக்கள் பொய்யாக்குகின்றன


(9நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன் தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன் அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.)

(✽✽6அவரது உடல் பளிங்கு போல் இருந்தது அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் வெண்கலம் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.)


.4: இங்கே தோன்றியவர் நிச்சயமாக மனிதர் அல்ல அவர் வானதூதர் என்பது இந்த வரியில் விளங்கப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாகத்தான் படைவீரர்கள் பயந்து (கோமா) மயக்க நிலைக்கு போகிறார்கள். உண்மை வெளிப்படும்போது பொய்மை மயங்கிவிடும் என்பதை இது காட்டுகிறது. இவர்கள் செத்தவர்கள் போலாயினர் என்று மத்தேயு காட்டுகிறார் (ἐγενήθησαν  ὡς νεκροί.). இந்த காவல்வீரர்கள் தலைமைக் குருக்களின் காவல் வீரர்களாக இருந்திருக்க வேண்டும்


வவ.5-6: வானதூதரின் முதலாவது உரையாடல் பதியப்பட்டுள்ளது. இந்த வானதூதருக்கு அந்த பெண்களின் தேடல் நன்கு தெரிந்திருக்கிறது, ஆக அனைத்தும் கடவுளின் பார்வையிலேயே நடைபெறுகிறன. இந்த வானதூதரின் தோற்றம் சாதாரண மனித பெண்களுக்கு பயம் உண்டாக்கும் என்ற காரணத்தால் அவர்களுக்கு திடமும் கொடுக்கப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த படைவீரர்களை கண்டதாலும் இவர்கள் பயப்பட வாய்ப்பு இருந்திருக்கும். ஆண்டவர் ஏற்கனவே சொன்னபடியே உயிருடன் எழுப்பட்டிருக்கிறார், அதற்கு சாட்சியமாக ஆண்டவரை வைத்த இடத்தை வந்து பார்க்க சொல்கிறார்


.7: இந்த வரியில் சீடர்களுக்கான முக்கியமான கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது

. இறந்த ஆண்டவர் உயிருடன் எழுப்பப்பட்டார் (ὅτι ἠγέρθη ἀπὸ τῶν νεκρῶν). இது ஆண்டவர் உண்மையாகவே இறந்து உயிர் பெற்றார் என்பதைக் காட்டுகிறது. இயேசு உண்மையாக 

இறக்கவில்லை மாறாக மயக்க நிலையிலிருந்து பின்னர் உயிர் பெற்றார் என்ற எதிர் வாதத்திற்கு சவலாக வருகிறது


. உயிர்த்த ஆண்டவர் தொடர்ந்து தன்னுடைய பணியில் கவனமாக இருக்கிறார், அவர் மீண்டும் கலிலேயாவிற்கு போய்க்கொண்டிருக்கிறார். இந்த கலிலேயாவில்தான் ஆண்டவரின் பணி தொடங்கியது


.8: இந்த வரி, அந்த பெண்களின் உணர்வுகளை காட்டுகிறது. அவர்கள் அச்சமுற்றாலும், பெருமகிழ்வடைகிறார்கள் (μετὰ φόβου καὶ χαρᾶς μεγάλης), இது சாதாரண உணர்வுதான். இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கிறது. அவர்கள் வானதூதரின் தோற்றத்தைக் கண்டு பயந்த அதேவேளை, ஆண்டவரின் உயிர்ப்பை கண்டு மகிழ்கிறார்கள். இவர்கள் ஓடிப்போகிறார்கள். இந்த ஓட்டம் அவர்களின் மகிழ்வையும் அவசரத்தையும் காட்டுகிறது


.9: இது மிக முக்கியமான வரி, இங்கே தோன்றுகிறவர் வானதூதர் அல்ல மாறாக தோன்றுகிறவர் இயேசு ஆண்டவர் (Ἰησοῦς  ὑπήντησεν αὐταῖς). இயேசு சாதாரணமாக இவர்களுக்கு தோன்றவில்லை, மாறாக அவர் அவர்களை சந்தித்து வாழ்த்துகிறார். இந்த வாழ்த்து அவர்களுக்கு 

பெரிய ஆறுதலைக் கொடுத்திருக்கும். வானதூதர் சொன்னது உண்மையாகிறது அத்தோடு யாரை இவர்கள் தேடினார்களோ அவரை கண்டுகொள்கிறார்கள். இயேசுவை கண்டதால் அனைத்தையும் மறந்து அவர் காலடிகளை பற்றிக்கொள்கிறார்கள். αἱ δὲ προσελθοῦσαι ἐκράτησαν αὐτοῦ τοὺς πόδας καὶ προσεκύνησαν αὐτῷ. அவர்கள் அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு வணங்கினார்கள் என்று கிரேக்க விவிலியம் சொல்கின்றது


.10: யூதப் பெண்கள் வாழ்க்கையும், வரலாற்றிலும் முதல் தடவையாக ஆண்டவரை முகம் முகமாக காண்கிறார்கள், அத்தோடு உயிர்த்த ஆண்டவரைக் காண்கிறார்கள். இதனால் அச்சம் இயற்கையாக ஏற்படும். இதனைத்தான் மத்தேயு மீண்டும் மீண்டும் சொல்கிறார். வானதூதர் சொன்னதையே இயேசுவும் மீண்டும் வலியுறுத்துகிறார். இந்த முறை இயேசு தன் சீடர்களை தனது சகோதரர்கள் என அழைக்கிறார் (ἀδελφοῖς μου அதெல்பொய்ஸ் மூ). சீடர்களாக இருந்தவர்கள் உயிர்ப்பின் பின் உறவு வலுப்பட ஆண்டவரின் சகோதரர்கள் ஆகிறார்கள். இனி இவர்கள்தான் ஆண்டவரின் சகோதரர்கள். கலிலேயாவில் அவர்கள் ஆண்டவரைக் காண்பார்கள் என்பது அவர்களுக்கு வழங்கப்படும் நற்செய்தி



ஆண்டவர் இயேசு அனைத்தையும் கடந்தவர்,

எந்த சக்தியாலும் அடக்க முடியாதவர்.

எந்த கல்லறையும், அல்லது எப்பெரிய வாயிற் கல்லும் அவரை அடைக்க முடியாது

இயேசுவையோ அல்லது அவர் விழுமியங்களையோ,

அழிக்க நினைக்கும், இவ்வுலகின் மடமைகளுக்கு பரிசு

திறந்த கல்லறையும், சாவு போன்ற மயக்கமுமே.


அன்பு  ஆண்டவரே உயிர்க்க நம்பிக்கை தாரும். ஆமென்


(காப்பக அறிவிப்பு:

இந்த விளக்கவுரை கடந்த வருடம் ஏற்கனவே இத்தாலிஇ றெஜியோ எமிலியாவில்இ 24 பங்குனி 2016 இல் எழுதப்பட்டதுஇ இப்போது மீண்டும் தொகுக்கப்படுகிறது). இந்த விளக்கவுரைகள்http://jegankumaromi.blogspot.it என்ற வலைப்பூ பதிவிலும்இ என்ற http://www.tamilcatholic.de/sundaySermon/JeganKumarFr_biblical_explanations.html என்ற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியத்தின் வலைத்தளத்திலும்ஏற்றப்படுகின்றன. அங்கே முன்னைய பதிவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்).



இயேசுவின் பெயருக்காக நித்திக்கப்படும்,


ஒவ்வொரு கிறிஸ்தவ உடன் பிறப்பிற்கும் சமர்ப்பணம்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம் (ஆ) (18,11,2018) Commentary on the Sunday Readings 

  ஆண்டின் பொதுக்காலம் 33 ம் வாரம் ( ஆ ) (18,11,2018) Commentary on the Sunday Readings  M. Jegankumar Coonghe OMI, Chaddy Shrine of Sint...