ஆண்டவர் உயிர்ப்புப் பெருவிழா
09.04.2023
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Jaffna.
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10,34அ.37-43
பதிலுரைப் பாடல்: 118
இரண்டாம் வாசகம்: கொலோசேயர் 3,1-4
நற்செய்தி: யோவான் 20,1-9
உயிர்ப்பு:
௧. மரணத்திலிருந்து ஒருவர் மீண்டெழுந்து வருவது உயிர்பு என்று அழைக்கப்படுகிறது. எபிரேய முதல் ஏற்பாட்டில் உடலின் உயிர்ப்பை பற்றிய சிந்தனைகள் இல்லை. புதிய ஏற்பாட்டில் இந்த சிந்தனையை குறிக்க (ἀνάστασις அனஸ்டாசிஸ் - உயிர்ப்பு, சாவிலிருந்து எழும்புதல்,) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், கடவுள் எவ்வாறு மனிதனை மண்ணில்
இருந்து உருவாக்கினாரோ, அவ்வாறே மனிதன் மண்ணுக்கு திரும்புகிறார் என்று நம்பினர். சீயோல் שְׁאוֹל எனப்படும் பாதாளம் இந்த இறந்தவர்களின் இருப்பிடமாக நம்பப்பட்டது. இந்த சீயோல் ஆதாள-பாதாளமாகவும், இருண்ட இடமாகவும் அறியப்பட்டது, அத்தோடு கைவிடப்பட்ட
இடமான இங்கிருந்து, எவருக்கும் விடிவு இல்லை எனவும் எண்ணப்பட்டது. இதற்கு வேறு பல பெயர்களும் விவிலியத்தில் உள்ளன (தி.பா 6,5). ஆனால் பல விவிலிய பகுதிகள் கடவுளுக்கு சீயோலின் மீதும் அதிகாரம் உள்ளது என்பதை எண்பிக்கிறது (யோபு 12,22: தி.பா 139,8: ஆமோஸ் 9,2). தனி மனிதனின் உயிர்பை பற்றி முதல் ஏற்பாடு பேசாவிட்டாலும், சில பகுதிகள் தேசிய உயிர்ப்பைப்பற்றி பேசுகின்றன (காண் எசாயா 26,19: எசேக் 37,13-14: ஓசேயா 6,1-2). முதல் ஏற்பாட்டு நூல்களில், மத்திய கிழக்கு பகுதிகளின் சில சிந்தனைகள் தாக்கத்தை செலுத்தியிருப்பதனைக் தெளிவாகவே காணலாம்.
௨. இணைத்திருமுறை நூல்களும் கிரேக்க-உரோமைய கால நூல்களும் உடலின் உயிர்பபைப் பற்றி அதிகமாகவே பேசுகின்றன. இவை கிரேக்க சிந்தனைகளின் தாக்கத்தை கொண்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக பரிசேயர்கள் உடலின் உயிர்ப்பை அப்படியே நம்பினர். இந்த காலகட்டத்திலும் சில குழுக்கள் உடலின் உயிர்ப்பை நம்பாமல் தமது பழைய சிந்தனைகளையே கொண்டிருந்தனர். சில கும்ரான் ஆய்வுகள், கும்ரான் பகுதியில் இருந்தவர்கள் உடலின் உயிர்ப்பை நம்பினர் என சொல்லத் தூண்டுகின்றன (காண்க 4ஞ521 1:12). சீராக்கின் ஞானம், சாலமோனின் ஞானம் போன்ற நூல்களில் இவ்வறிவின் வளர்ச்சியைக் காணலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில், போரில் நாட்டுக்காக மடிந்தவர்களும், கிரேக்க கலாபனைகளின் போது மடிந்தவர்களும் உயிர்பெறுவர் என சொல்லப்படுவதை வாசிக்கலாம் (காண் 2மக் 7,9: 12,43-45). இன்னும் அதிகமாக, விவிலியத்துள் ஏற்றுக்கொள்ளப்படாத, இரண்டாம் எஸ்திரா புத்தகம் இந்த சிந்தனையை மேலும் ஆழமாகச் சொல்கிறது.
௩. உயிர்ப்புதான் புதிய ஏற்பாட்டின் மையச் செய்தி. கிறிஸ்துவின் உயிர்ப்பே வரலாற்றின் மையமாகவும் முதல் ஏற்பாட்டின் நிறைவாகவும் கிறிஸ்தவர்களால் பார்க்ப்படுகிறது. அனைத்து புதிய ஏற்பாட்டு புத்தகங்களும் திருமடல்களும் இதனையே அடிப்படையாக கொண்டுள்ளன. இதனை பாஸ்கா மறைபொருள் என்கின்றோம். இயேசுவினுடைய போதனைகளிலும் இந்த செய்தி முக்கியமான செய்தியாக இறுதிவரைக்கும் பயணிக்கிறது. (காண்க யோவான் 11,25) இயேசு தான் இவ்வுலகில் மனிதனாக இருந்த காலத்தில் பலரை உயிர்பித்தாலும், அவரின் உயிர்ப்புச் செய்தி, பொது மரணத்தை தாண்டியதாகவே இருந்தது. இயேசு உயிர்பித்த பலர், அவருக்கு முன்னரோ பின்னரோ இறந்து போயினர். உயிர்ப்பைப் பற்றி சொல்லுகிற அதே வேளை, இயேசு நித்திய தண்டனையையும் பற்றி அறிவுறுத்துகிறார் (காண்க யோவான் 5,25). வெறுமையான கல்லறையே புதிய ஏற்பாட்டில் உயிர்பிற்கான முதல் அடையாளம். நான்கு நற்செய்தியாளர்களும் இதனை தங்களுக்கே உரித்தான வகையில் விவரிக்கின்றனர். பவுல் அடிகளாரே புதிய ஏற்பாட்டில் உயிர்ப்பினைப் பற்றி ஆழமான போதனைகளை முன்வைக்கிறார் (காண்க 1கொரி 15). ஆக உயிர்பு இயேசுவிலேயே தங்கியுள்ளது. முதல் ஏற்பாட்டில் கடவுள் தன் மூச்சை ஊதி உயிர்கொடுத்தர், புதிய ஏற்பாட்டில் கடவுள், தன் உயிரைக் கொடுத்து உயிர்;ப்பு கொடுத்தார்.
திருத்தூதர் பணி 10,34.37-43
34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, 'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். 37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 39யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். 40ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். 41ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். 42மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்' என்றார்.
திருத்தூதர் பணிகள் நூல், வைத்தியர் லூக்கா திருச்சபைக்கு விட்டுச்சென்ற இன்னொரு பொக்கிசம். இந்த நூலில் பல போதனைகள் அதாவது மறைபரப்பு மறையுரைகள் இருப்பதனை அவதானிக்கலாம். அதிகமான பவுலின் மறையுரைகளும், ஒரு சில முக்கியமான பேதுருவின் மறையரைகளும் இங்கே அழகாக பதியப்பட்டுள்ளன. இந்த மறைபரப்பு உரைகள் அன்றைய நாள் கிரேக்க-உரோமைய உரைகளை ஒத்திருக்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இன்றைய முதல் வாசகம் பேதுரு, கொர்ணேலியு (Κορνήλιος) என்ற உரோமைய நூற்றுவத்தலைவரின் வீட்டில் வழங்கிய மறையுறையின் சிறு பகுதியாகும். இந்த கொர்ணேலியுவின் வீடு செசாரியா மரித்திமாவில் அமைந்திருந்தது (இந்த நகரத்தை எரோது சீசருடைய பெயரிலே கட்டுவித்தார்). இவர்தான் திருச்சபையில் உள்வாங்கப்பட்ட முதலாவது யூதரல்லாத நண்பர். இவர் வீட்டில் நடந்தவை பின்னர் திருச்சபையின் முதலாவது பொதுச்சங்கத்தில் பேச்சுப் பொருளானது. கடவுளை நம்ப அவரவர் நல்ல மனப்பக்குவத்தை கொண்டிருந்தால் போதும், ஒருவரின் இனத்திலோ அல்லது பிறப்பிலோ, இயேசுவோ அல்லது கடவுளோ தங்கியிருக்கவில்லை என்பதற்கு இந்த உரோமையர் திருமுகம் நல்ல அடையாளம்.
வ.34: இந்த வசனத்திற்கு முன் பேதுரு பிறவினத்தவர்கள் மட்டில் யூத கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த மனநிலையை தானும் கொண்டிருந்ததை, லூக்கா காட்டுவார் (வவ.1-16). பின்னர் மனம்மாறி கொர்ணேலியுவின் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கே மனமாற்றம் அடைபவர் கொர்ணேலியு அல்ல மாறாக பேதுரு, அதாவது யூத கிறிஸ்தவர்கள்தான் மனம்மாறுகிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டுகிறார் லூக்கா. இது லூக்காவில் சிறப்பம்சங்களில் ஒன்று. கிரேக்க மூல பாடல் இந்த வரியை இப்படி சொல்கிறது 'அப்பபோது பேதுரு வாயைத் திறந்து சொன்னார், உண்மையாக நான் அறிந்துகொள்கிறேன், அதாவது கடவுளிடம் ஆள்பார்த்துசெயற்படும் தன்மை இல்லை' (Ανοίξας δὲ Πέτρος τὸ στόμα⸃ εἶπεν· ἐπ᾿ ἀληθείας καταλαμβάνομαι ὅτι οὐκ ἔστιν προσωπολήμπτης ὁ θεός) (நேரடி மொழிபெயர்ப்பு). இந்த வரி, சில யூதர்கள் தங்கள் கடவுள் ஆள்பார்த்துத்தான் செயல்படுவார், அதாவது யூதர்கள் ஆண்டவருடைய பார்வையில் முக்கியமானவர்கள் என்ற சிந்தனையை கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த யூத முன்னிலை வாதம் ஆரம்ப கால திருச்சபையில் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருந்தது.
வவ. 35-38: இயேசுவின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக பேதுரு மறையுறைக்கிறார், அதேவேளை யார் கடவுளுக்கு ஏற்புடையவர் என்ற சிந்தனையை பேதுரு விளக்கமாக இன்னொரு பார்வையில் காட்டுகிறார். யூத மக்கள் தாங்கள் விருத்தசேதனம் செய்வதாலும், தோறா என்னும் சட்டங்களை கடைப்பிடிப்பதாலும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் (δικαιοσύνη) ஆகின்றனர் என நம்பினர். இதனை அனைவருக்கும் பொருந்தும் விதத்தில் மாற்றுகிறார் பேதுரு. அதாவது கொர்னேலியு வீட்டில் கண்ட காட்சி யூதரான இவருக்கு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறது. எந்த இனத்தவராக இருந்தாலும், அவர் கடவுளுக்கு அஞ்சி, நேர்மையாக செயற்பட்டார் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுகிறார் என்பது அந்த செய்தி (ὁ φοβούμενος αὐτὸν καὶ ἐργαζόμενος δικαιοσύνην δεκτὸς αὐτῷ ἐστιν).
அ). இயேசு கிறிஸ்து வழியாக அமைதி உண்டு, அவர் அனைவருக்கும் ஆண்டவர் (εἰρήνην διὰ Ἰησοῦ Χριστοῦஇ οὗτός ἐστιν πάντων κύριος).
ஆ). இயேசு யோவானின் காலத்திற்கு பின் முக்கியமான பணியாற்றினார்.
இ). அவர் கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (ὡς ἔχρισεν αὐτὸν⸃ ὁ θεὸς πνεύματι ἁγίῳ).
ஈ). கடவுளின் ஆவியையும் வல்லமையையும் கொண்டவர் (ὁ θεὸς ἦν μετ᾿ αὐτοῦ).
உ). அவர் நற்செயல்களையும் குணமாக்கலையும் செய்து வந்தார் (ὃς ⸀διῆλθεν εὐεργετῶν).
வவ. 39-40: சாட்சியம் பகர்வது திருத்தூதர்களின் முக்கியமான பணி என்று லூக்கா அடிக்கடி தி.பணி நூலில் வலியுறுத்துவார் (μάρτυς மார்த்துஸ்- சாட்சியம்). பேதுரு இரண்டுவகையான சாட்சியம் சொல்கிறார். இயேசு செய்த நல்லவைகள், மக்கள் இயேசுவிற்கு செய்த தீமை. அதாவது இந்த இயேசு யூதேயாவிலும் எருசலேமிலும் நல்லதையே செய்ய மக்கள் அவரை மரத்திலே தொங்கவிட்டு கொன்றார்கள் என்கிறார். இங்கே சிலுவை என்று பாவிக்காமல் மரம் என்ற சொல்லை பாவிக்கிறார் (κρεμάσαντες ἐπὶ ξύλου). இந்த மரம் என்ற சொல் முதலாம் நூற்றாண்டிலே சிலுவைக்கு ஒத்தகருத்துச் சொல்லாக பயன்பட்டிருக்கிறது அத்தோடு இது இணைச்சட்டம் 21,23ஐ யும் நினைவுபடுத்துகின்றது. மூன்றாவதாக கடவுள் இயேசுவை உயிர்ப்பித்ததையும் அவரை தோன்றச்செய்ததையும் அத்தோடு தாங்கள் சாட்சி பகர்வதாக கூறுகிறார்.
வ. 41: ஆண்டவர் உயிர்த்த பின்பு அவரோடு உண்டு குடித்த தாங்களே விசேட சாட்சிகள் என்கிறார் பேதுரு. உயிர்த்த ஆண்டவர் அனைவருக்கும் தோன்றவில்லை என்ற ஒரு உண்மையும் இங்கே பதியப்பட்டுள்ளது. உயிர்த்த ஆண்டவருடன் இவர்கள் உண்டு குடித்தது அனைத்து நற்செய்திகளிலும் பதியப்படவில்லை, இங்கு லூக்கா இவ்வாறு எழுதுவதன் மூலம், ஆண்டவரின் உயிர்பின் பின் நடந்த அனைத்து காட்சிகளும் நற்செய்தியில் இல்லை என்பது புலப்படுகிறது.
வ. 42: இப்போது இந்த உயிர்த்த ஆண்டவரின் கட்டளையை பேதுரு விவரிக்கின்றார். அதாவது இயேசுவே இறந்தோருக்கும் வாழ்வோருக்குமான கடவுளின் நடுவர் என்பதே அந்த கட்டளை (οὗτός ἐστιν ὁ ὡρισμένος ὑπὸ τοῦ θεοῦ κριτὴς ζώντων καὶ νεκρῶν). இந்த நடுவத்தன்மை (κριτής கிறிடேஸ்) இயேசுவின் தெய்வீகத்தை வலியுறுத்தும் ஒரு சொல்.
வ. 43: இஸ்ராயேல் மக்கள் ஏற்கனவே பாவமன்னிப்பை பற்றி அறிந்திருந்தனர், ஆனால் இப்போது
இறைவாக்கினர் அனைவரும் அறிவித்திருந்த பாவமன்னிப்பிற்கு புது விளக்கம் கொடுக்கப்படுகிறது. லூக்கா இங்கே, அனைத்து இறைவாக்கினர்களினதும் இறைவாக்கு இயேசுவில் நிறைவாகிறது என்கிறார் (τούτῳ πάντες οἱ προφῆται μαρτυροῦσιν). இந்த அனைத்து இறைவாக்கினரும் சொல்கின்ற செய்தியாவது, அதாவது கிறிஸ்துவின் பெயரில் நம்புவதனால்; பாவமன்னிப்பு ஏற்படுகிறது என்பதாகும்.
கொலோசேயர் 3,1-4
1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 2இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். 3ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. 4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
கொலோசு, உரோமையர் சாம்பிராச்சிய காலத்தில் ஒரு முக்கியமில்லாத நகராக அறியப்பட்டது. பவுல் எபேசில் நற்செய்தி அறிவித்த காலத்தில் இங்கும் நற்செய்தி பரவியிருக்க வேண்டும். பவுலுடைய உடன்-பணியாளர்களில் ஒருவர் இங்கே நற்செய்தியை கொண்டுவந்திருக்க வேண்டும். எபாஃபிரஸ் (Ἐπαφρᾶς) (கொலோ 4,12) என்னும் கொலோசேய நபர் அந்த சீடராயிருக்க வாய்ப்புள்ளது. இக்கடிதத்தின் முகவுரை, செய்தி மற்றும் முடிவுரையிலிருந்து இதனை பவுலே எழுதினார் என நம்பினால் தவறில்லை. இதற்கு எதிர்கருத்துக்கள் இல்லாமலும் இல்லை. கொலோசேயில் சில தப்பறைகள் இருந்ததாகவும் அதனை களைவதற்கே பவுல் இந்த கடிதத்தை எழுதினார் எனவும் நம்பப்படுகிறது. இது எப்படியான தப்பறைகள் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன, சில இதனை யூத கால அட்டவனை சார்ந்த பிரச்சனைகளாகவும், சிலர் இதனை பிறமத சிலை வழிபாட்டு பழக்கவழக்கங்கள் எனவும் காண்கின்றனர். இன்றைய வாசகம் சிறிய பகுதியாக இருந்தாலும், முக்கியமான கொலோசேய செய்திகளை தாங்கி வருகின்றது. இந்த பகுதியிலே பவுல் பிழையான மெய்யறிவு-வாதிகளை சாடி, ஏன் மக்கள் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும்? என்ற இறையியல் வாதத்தை முன்வைக்கிறார்.
வவ. 1-2: கொலோசேயர் ஏற்கனவே கிறிஸ்துவோடு இணைந்துவிட்டதால் அந்த இணைப்பு அவர்கள் வாழ்வில் மாற்றத்தை காட்ட வேண்டும் என்கிறார் பவுல். அதாவது கிறிஸ்து மேலுலகை சார்ந்தவர் என்பதால், அவரைச் சார்ந்தவர்களும் மேன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது பவுலின் எதிர்பார்ப்பு, (τὰ ἄνω ζητεῖτε οὗ ὁ Χριστός ἐστιν ἐν δεξιᾷ τοῦ θεοῦ καθήμενος மேலுலகு சார்ந்வற்றை தேடுங்கள் அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்) மேலுலகு மற்றும் கீழுலகு என்று இரண்டு வகையான வாழ்கை முறையை பவுல் விவாதிப்பதைக் காணலாம். மேலுலகு என்பது விண்ணகம் என்பதைவிட, இங்கு நல்ல கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வை குறிக்கிறது. கீழுலகு என்பது கொலோசேய அக்கால மெய்யறிவு வாதத்தை குறிக்கலாம், இதன் வார்த்தை பிரயோகம் சாதரண உலகத்தைக் குறிக்கிறது (τὰ ἐπὶ τῆς γῆς). கடவுளின் வலது பக்கத்தில் இருக்கிறார் என்பதன் மூலம், கிறிஸ்துவின் வழியும், அவர் இருக்கும் உலகமும்தான் உண்மையானது என காட்டப்படுகிறது.
வ. 3: ஏன் இவர்கள் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். கிறிஸ்துவோடு இறந்துள்ளார்கள் என்பது, இவர்களின் திருமுழுக்கையும், உயிர்ப்பையும் குறிக்கும். வாழ்வு மறைந்திருக்கிறது என்பது, இந்த புதிய வாழ்வை யாரும் திருட முடியாது என்று விளக்குகிறது.
வ. 4: 'கிறிஸ்துவே உங்கள் வாழ்வு' (ἡ ζωὴ ὑμῶν) என்றும் சில பாடங்கள் மொழிபெயர்க்கப்படுகிறது. ஏன் மாட்சி இன்னும் தென்படவில்லை என்ற வாதம் இவர்களிடையே இருந்திருக்கலாம், ஆனால் கிறிஸ்து வரும்போதுதான் அந்த மாட்சி தொன்படும் என்கிறார் பவுல்.
யோவான் 20,1-9
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, 'ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!' என்றார். 3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. 6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
திருவிழிப்பு சனியில் வாசித்த மத்தேயுவின் பதிவைத்தான் யோவானின் நடையில் இங்கு காண்கின்றோம். ஆண்டவரின் உயிர்பின் பின் நடைபெறும் காட்சிகள் நாடக அரங்கேற்றத்தைப் போல், சிறிய-பெரிய-முக்கிய பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வவ. 1-2: மகதலா மரியா இங்கே ஒரு சிறிய பாத்திரம், அவர் கண்ட காட்சியிலிருந்து ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை மாறாக சாதாரண மனக் குழப்பத்தையே வெளிப்படுத்துகிறார்.
அ. எப்படி யூத மற்றும் உரோமைய காவலர்களால் பாதுகாக்கப்பட்ட கல்லறையின் வாயில் திறக்கப்பட முடியும்? (மத்தேயுவிற்கு இந்த கல்லை வானதூதர் திறந்தார்)
ஆ. எப்படி உடலை களவாடி கொண்டு செல்ல முடியும்? இது பாரதூரமான குற்றம்.
வாரத்தின் முதல் நாளே விடியும் முன் (ஞாயிறு விடியல்) கல்லறைக்கு சென்றது அவர் ஆண்டவர்மேல் கொண்ட அன்பை காட்டுகிறது. பேதுருவிடமும் யோவானிடமும் சொன்னது,
இவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில், இந்த தனி அன்புகொண்டிருந்த சீடர் (τὸν ἄλλον μαθητὴν ὃν ἐφίλει ὁ Ἰησοῦς) யார் என்று இலகுவில் அடையாளம் காண முடியாது. அவர் யோவானாக இருப்பதற்கு வாய்ப்புகள் பாரம்பரிய முறைப்படி அதிகமாகவே உள்ளன. எங்களுக்கு தெரியவில்லை (οὐκ οἴδαμεν ஊக் ஒய்தாமென்), என்று மகதலா மரியா கூறுவதனால், அவருடன் இன்னும் பலர் சென்றிருந்தனர் என ஊகிக்கவைக்கிறது. ஏன் யோவான் மற்றைய பெண்களின் பெயர்களை குறிப்பிடவில்லை? ஒருவேளை மகதலா மரியாவின் பாத்திரத்தை மையப்படுத்தவென நினைக்கலாம். இந்த ஊகம் சரியாக இருக்கலாம், ஏனெனில் அனைத்து நற்செய்திகளும் இந்த மகதலா மரியாவை பெயர்சொல்லி விவரிக்கின்றன.
வ.3: மகதலா மரியாவின் அவதானத்தைக் கேட்ட இந்த இருவர், பேதுரு மற்றும் அன்புச் சீடர் (ὁ Πέτρος καὶ ὁ ἄλλος μαθητὴς) உடனடியாக கல்லறைக்கு புறப்படுகின்றனர். இந்த இருவர் யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான பாத்திரங்கள்.
வவ. 4-5: இந்த வரிகள் பல கேள்விகளை எற்படுத்துகிறன. ஆசிரியர் பல வேiளைகளில் அன்புச் சீடரை முக்கியமான வேளைகளில் உள்வாங்குவது சாதாரணம், அது வரலாற்று நிகழ்வாகக்கூட
இருக்கலாம், அல்லது அப்படியான தேவை ஒன்று இருந்திருக்கலாம். இங்கு அவர் பேதுருவைவிட வேகமாக ஓடியதன் மூலம், அன்புச் சீடர் அல்லது அன்புச் சீடரின் கிறிஸ்தவ குழு பேதுரு குழுவிற்கு எந்த விதத்திலும், எதிரானதோ அல்லது குறைவானதோ இல்லை எனக்காட்டுகிறார் என நிச்சயமாக நம்பலாம். அவர் உள்ளே நுழையவில்லை என்பது, யோவான் பேதுருவுக்காக காத்திருப்பது புலப்படுகிறது. யோவான் பேதுருவுக்காக காத்திருப்பது பேதுருவின் முக்கியத்துவத்தையும், ஆரம்ப கால திருச்சபை பேதுருவுக்கு கொடுத்த மரியாதையையும் காட்டுகிறது.
வ. 6: பேதுரு உடனடியாக, நிறக்காமல் உள்ளே நுழைவது அவரின் தலைமைத்துவத்தையும் திருச்சபையில் அவருக்கிருந்த பொறுப்பையும், அல்லது இயேசுவின் மீது அவர்கிருந்த அன்பையும் காட்டுகிறது. அவர்தான் வெறுமையான கல்லறையை முதலில் காண்கிறார். இங்கே அவர் யோவானை (அன்பு சீடரை) மிஞ்சுகிறார்.
வ. 7: சுருட்டி வைக்கப்பட்டிருந்த துண்டுகளும், வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்ததும், அதனால் சுற்றப்பட்டிருந்தவர், எழுந்து அதனை அவிழ்த்து வைத்தது போல உள்ளது. தலையை மூடியிருந்த துண்டை இயேசு முதலில் கழட்டியிருக்க வேண்டும், அதனால்தான் அது தனியே வைக்கப்பட்டிருக்கிறது. யோவான் இவ்வாறு, யாரும் இயேசுவின் உடலை கொண்டுபோய்
இருக்கமுடியாது அத்தோடு இந்த பெண்கள் சொல்வது அறியாமையினாலும் அல்லது துன்பத்தினாலும் என்று விவரிக்கின்றார்.
வ. 8: இது முக்கியமான வசனம். (εἶδεν καὶ ἐπίστευσεν· கண்டார் நம்பினார்). யோவான் நற்செய்தியில் நம்புதல் முக்கியமான விழுமியம், யோவான் தனது நற்செய்தியின் நோக்கமாகவும் இதனையே தருகிறார் (யோவான் 20,31). யோவானின் நற்செய்தி நம்பகமானது, ஏனெனில் அவர் இயேசுவைக் கண்டவர் அத்தோடு நம்பியவர்.
வவ. 9-10: சீடர்களின் தற்போதைய நிலை விவரிக்கப்படுகிறது. அவர்கள் இன்னும் நிறைவாக புரிந்துகொள்ளவில்லை. 8வது வசனத்தில் அன்புச் சீடர் நம்பினார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக நம்பிக்கையும் புரிந்துகொள்ளுதலும் இரண்டு வேறு விழுமியங்கள் எனலாம். இந்த நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் ஏற்கனவே இயேசுவின் உயிர்ப்பை யோவான் முழுமையாக புரிந்திருப்பார், ஆனால் வெறுமையான கல்லறையில் அந்த பக்குவத்தை அவர் அப்போது பெற்றிருக்கவில்லை என்பதை அவர் பின்நோக்கி நினைத்துப் பார்க்கிறார். இறுதியாக அவர்கள் வெறும் கல்லறையை பார்த்துவிட்டு தங்கள் இடத்திற்கே திரும்பி செல்கிறார்கள், அதாவது தங்களது பழைய பயத்திற்கும், ஒழிந்த வாழ்க்கைக்கும் திரும்புகிறார்கள். இயேசு இன்னமும் அவர்களுக்கு தோன்றவில்லை.
ஆண்டவரை புரிந்து கொள்ளுதல் இரண்டாவதாக வரலாம்,
ஆனால் அவரை நம்புதல் எங்களது வாழ்வின் மையமாகமும்,
முதலாவதாகவும் இருக்கவேண்டும்.
யோவான் ஆண்டவரை நம்பினதற்கு
அவர் ஆண்டவரின் மார்பில் இடம் பிடித்துக்கொண்டமையே காரணம்.
அன்பான ஆண்டவரே! உமது உயிர்ப்பு,
எங்ளது நாளாந்த வாழ்வில் மாற்றம் ஏற்றபடுத்த உதவிசெய்யும்.
ஆமென்!!!
(காப்பக அறிவிப்பு:
இந்த விளக்கவுரை கடந்த வருடம் ஏற்கனவே இத்தாலி, றெஜியோ எமிலியாவில், 25, பங்குனி 2016 இல் எழுதப்பட்டது, இப்போது மீண்டும் தொகுக்கப்படுகிறது). இந்த விளக்கவுரைகள்
http://jegankumaromi.blogspot.it என்ற வலைப்பூ பதிவிலும், http://www.tamilcatholic.de/sundaySermon/JeganKumarFr_biblical_explanations.html என்ற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியத்தின் வலைத்தளத்திலும் தரவேற்றப்படுகின்றன. அங்கே முன்னைய பதிவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக