தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (அ)
05.03.2023
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai, Jaffna.
Friday, 3 March 2023
முதல் வாசகம்: தொடக்க நூல் 12,1-4
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 33
இரண்டாம் வாசகம்: 2 திமோத்தேயு 1,8-10
நற்செய்தி: மத்தேயு 17,1-9
தொடக்க நூல் 12,1-4
1ஆண்டவர் ஆபிராமை நோக்கி, 'உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்' என்றார். 4ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.
தொடக்க நூல் பதினோராம் அதிகாரம் ஆபிராமை அறிமுகப்படுத்துகின்றது, இருப்பினும் பன்னிரண்டாவது அதிகாரத்தில்தான் ஆபிராம் கடவுளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ஆபிராம் ஆபிரகாமாய் மாறி அவருடைய இறப்பு வரை தொடர்கிறது. இன்று அவர்க்கும் கடவுளுக்கும்
இடையிலான உறவு, அவருரடைய இறப்பின் பின்னரும், பல ஆயிரம் வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வருகிறது. ஆபிராம் אַבְרָם, தெராவின் மகன், சாராவின் கணவர் இவருக்கு
இஸ்மாயில் மற்றும் ஈசாக்கு என்று மூத்த பிள்ளைகள் இருந்தனர். ஆபிரகாம், யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மூன்று மதங்களின் பிதாவாகக் கருதப்படுகிறார். இஸ்ராயேலர்கள் தங்கள் வழிமரபை ஈசாக் வழியாக காண்கின்றனர், இஸ்லாமியர்கள் தங்கள் வழிமரபை இஸ்மாயேல் வழியாக காண்கின்றனர், ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் வழிமரபை நம்பிக்கை வழியாக தொடர்கின்றனர்.
ஆபிரகாம் விசேட விதமாக கடவுளால் அழைக்கப்பட்டு தன்னுடைய சொந்த நாடான ஊரிலிருந்து கானானுக்கு செல்லச்சொல்லி அனுப்பப்படுகிறார். அங்கே அவர் பல தடைகளுக்கு பின் மக்கள் கூட்டத்தின் தந்தையாகிறார். ஆபிராம் என்கின்ற இவருடைய இயற்பெயர், ஆபிரகாமாக மாற்றப்படுகிறது. இதற்கு மக்களினங்களுக்கு தந்தை என்ற பொருளும் கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு பெயர்களும் எபிரேயம் மற்றும் அரேமேயிக்க வட்டார வழக்குகளுக்கிடையிலான உச்சரிப்பு வேறுபாடுகளேதான் என்ற வாதமும் இருக்கிறது. இருப்பினும் பெயர் மாற்றம் ஒருவருடைய தனிமனித நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது. இதே போல ஆபிரகாமின் மனைவியின் பெயரும் சாராயிலிருந்து சாராவாக மாற்றப்படுகிறது (காண்க தொ.நூல் 17,15). பிற்காலத்தில் யாக்கோபின் பெயரும் யாக்கோபிலிருந்து இஸ்ராயேலாக மாற்றம் பெற்றது (காண்க தொ.நூல் 32,28).
வரலாற்று ஆபிரகாமிற்கும், விவிலியம் காட்டும் ஆபிரகாமிற்கும் பல வேறுபாடுகள்
இருக்கலாம் என்ற வாதம் முற்காலத்திலிருந்தே முன்வைக்கப்படுகின்றன. விவிலிய ஆபிரகாம், தாவீதின் காலத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்ததாக காட்டப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் ஆபிரகாமை கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என வாதாடுகின்றனர் (இது இரண்டாம் வெண்கல யுகத்தைக் குறிக்கும்). ஆபிரகாம் இஸ்ராயேலின் தெற்கு அல்லது வடக்கு பாரம்பரியங்களின் அடையாளமாக காட்டப்படவில்லை, மாறாக அவர் முழு இஸ்ராயேல் இனத்தின் அடையாளமாக காட்டப்படுகிறார். இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை (யாவே) மையாமாகக் கொண்ட மத அடையாளம். நிலங்களை வாங்குதல், மற்றைய அரசர்களுடன் சமரசம் செய்தல், மற்றும் இறந்தவர்களுக்கு நினைவிடம் அமைத்தல் போன்ற முக்கியமான செயற்பாடுகளின் தொடக்கமாக ஆபிரகாம் பார்க்கப்படுகிறார். இவைதான் ஆபிரகாமை குலமுதுவராகக் காட்டுகின்றன. ஆபிரகாமின் முன்னோர்கள் ஊர் தேசத்திலிருந்து ஹாரானுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். இந்த ஹாரான் அக்காலத்திலிருந்து முக்கியமான பொருட்கள் கொண்டுசெல்லப்படும் பாதையாக இருந்தது. இஸ்ராயேல் மக்கள் தாங்கள் கானானியருடன் உறவில்லாதவர்கள் மாறாக ஹாரான் அல்லது மொசோபத்தோமியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்பதை காட்ட முயற்சிக்கிறார்கள். ஆபிரகாமுடைய முன்னோர்களின் பெயர்கள்கூட பல மொசோபத்தோமியா நகர்களை குறித்துக் காட்டுகின்றது. ஆபிரகாமுடைய சகோதரனான ஹாரானின் புதல்வர்கள் அரமேயர்களின் முன்னோர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் சிரிய பாலைநிலத்தில் வசித்தார்கள். லோத், மோவாபு மற்றும் அம்மோனியர்களின் முன்னோர்களாக கருதப்படுகிறார் (காண்க தொ.நூல் 22,20-23).
ஆபிரகாமின் மூன்று பிள்ளைகளும் பல இனங்களின் குலமுதுவர்களாக காட்டப்படுகிறார்கள். இஸ்மாயில் - அரபியர் அல்லது இஸ்மாயேலர், ஈசாக்கு - இஸ்ராயேலர் மற்றும் இதுமேயர், அத்தோடு கெத்தூரா வழியாக பிறந்த பிள்ளைகள் மற்றைய அரமயிக்க குலங்களின் மக்களாக காட்டப்படுகிறார்கள். அராபிய பாலைவன மக்கள் கூட்டங்களுக்கும், சிரிய பாலைவன மக்கள் கூட்டங்களுக்கும் ஆபிரகாமின் மற்றைய மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகளுடன் தொடர்புள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள் அக்காலத்திலிருந்து பாலைவன நகர்களை சுட்டிக்காட்டுகின்றன.
இவற்றைவிட ஆபிரகாம் தன்னுடைய கேள்வியற்ற கீழ்ப்படிவிற்காக விவிலியத்தில் மின்னுகிறார். தெரியாத கடவுள், தெரியா நாடு, தெரியாத மக்கள் என ஆபிராகம் தனக்கு தெரிந்த அனைத்தையும் துறக்க தயாராக இருப்பது அவருடைய ஆழமான விசுவாசத்தைக் காட்டுகிறது. ஆபிரகாமின் கேள்வி கேட்காத கீழ்ப்படிவு பிறக்கால இணைப்பு என்று சொல்வதிற்கில்லை என அதிகமான ஆய்வாளர்கள் வாதாடுகின்றனர், ஏனெனில் ஈசாக்கின் கதையிலும் ஆபிராம் இப்படியான கேள்வி கேட்காத கீழ்ப்படிவை மேற்கொள்கிறார். இவ்வாறு முதல் ஏற்பாட்டையும் கடந்து புதிய ஏற்பாட்டிலும், இன்னும் பல கிறிஸ்தவ மற்றும் யூத இலக்கியங்களிலும் ஆபிரகாம் நம்பிக்கையின் முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
வ.1: இந்த வரிதான் தொடக்கநூலில் உள்ள ஆபிரகாமிற்கான கடவுளின் முதலாவது கட்டளை. ஆபிரகாமின் பெயர் ஆபிராம் என்று குறிப்பிட்பட்டுள்ளது (אַבְרָם). இங்கே ஆபிராகமிற்கு மூன்றுவிதமான கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது:
அ. உன் நாட்டிலிருந்தும் מֵאַרְצְךָ֥
ஆ. உன் இனத்தவரிடமிருந்தும் מֵאַרְצְךָ֥
இ. உன் தந்தைவீட்டிலிருந்தும் מִבֵּ֣ית אָבִ֑יךָ
ஈ. நான் உனக்கு காண்பிற்கும் நாட்டிற்கு செல் אֶל־הָאָרֶץ אֲשֶׁר אַרְאֶךָּ
இந்த கட்டளைகள் ஒருவரின் மிக முக்கியமான அடையாளங்களையே தியாகம் செய்யச் சொல்லி கேட்கின்றன. இக்காலத்தை போலல்லாது, ஆபிரகாமின் காலத்தில் நாடும், இனமும், தந்தைவீட்;டாரும் ஒருவருக்கு மிக முக்கியமானவையாக கருதப்பட்டன. இதனை வைத்தே ஒருவரின் உறவும் உரிமையும் அளவிடப்படுகின்றன. கடவுளை பின்பற்ற இந்த உறவுகளையும் உரிமைகளையும் ஆபிரகாம் துறக்கவேண்டியதாக உள்ளது. இந்த கட்டளைகளை கடைப்பிடிக்க ஆபிரகாமிற்கு சாதாரணமாக மிக கடினமாக இருந்திருக்கும், இருப்பினும் அவருடைய கடவுள் அனுபவம் இதற்கு துணையாக இருந்திருக்கலாம்.
வ.2: இந்த வரி முதலாவது வரியில் சொல்லப்பட்ட கட்டளைகளின் விளைவாக வருகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டளைகள் வாயிலாக பின்வரும் வரப்பிரசாதங்கள் ஆபிரகாமிற்கு கிடைக்கின்றன.
அ. பெரிய இனமாக்குவேன் ג֣וֹי גָּדוֹל
ஆ. உனக்கு ஆசி வழங்குவேன் אֲבָ֣רֶכְךָ֔
இ. உன் பெயரை சிறப்புறச் செய்வேன் אֲגַדְּלָה שְׁמֶךָ
ஈ. நீயே ஆசியாக விளங்குவாய் הְיֵה בְּרָכָֽה
இந்த ஆசீர்கள் மிக முக்கியமானவையாக விவிலியத்தில் கருதப்படுகின்றன. பல விவிலிய நூல்கள் இந்த ஆசீர்களை முன்னுதாரணமாக எடுத்து விளக்குகின்றன. பெரிய இனமாகுதலும் கடவுளுடைய ஆசீரை பெறுதலும், முதல் ஏற்பாட்டில் மிக உன்னதமான பெறுபேறுகளாக கருதப்படுகின்றன. இந்த பெறுபேறுகளை ஆபிரகாம் கேட்காமலேயே பெற்றுக்கொள்கிறார். இது அவரின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இதில், 'நீயே ஆசீராய் விளங்குவாய்' என்ற சொற்றொடர் மிக முக்கியமானது. இந்த வரி ஆபிரகாமிற்கு மட்டுமே முதல் ஏற்பாட்டில் பொருந்துகின்றது. வேறெவர்க்கும் இந்த வார்த்தைகள் பாவிக்கப்பட்டாலும், அது அவர்களை ஆபிரகாமின் ஆசீர்களை நினைவூட்டுவதாகவே இருக்கிறது
(※ஒப்பிடுக செக்கரியா 8,13).
(※13யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்; இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்; நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்; அஞ்சாதீர்கள்; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.)
வ.3: ஆபிரகாமிற்கு வழங்கப்பட்ட ஆசீர் இப்போது அவர்வழியாக அவர் நாட்டிற்கும் முழு உலகிற்கும் வழங்கப்படுகிறது. ஆபிரகாமின் முக்கியத்துவத்தின் மூலமாக அவரைச் சார்ந்தவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஆபிரகாமின் மக்கள் கடவுளின் மக்களாகவும், அவரின் எதிரிகள் கடவுளின் எதிரிகளாகவும் உருவாகுகின்றார்கள். இந்த ஆசீர்கள் சாதாரணமாக அரியணை ஏறும் அரசர்க்கு அவரின் தெய்வங்களின் ஆசீர்களாக கருதப்பட்டன. இங்கே ஆபிரகாம் இதற்கும் மேற்பட்ட ஆசீரை பெறுகிறார். இங்கே ஆசீர்வதிப்பவர் சாதரண உயிரற்ற தெய்வமல்ல, ஆசீர்வதிக்கப்படுகிறவர் சாதாரண அரசரும்மல்லர். ஆதாமின வாயிலாக மண்ணுலகு தண்டனை பெற்றதிற்கு பின்னர் ஆபிரகாமின் வாயிலாக அனைத்து மக்களினமும் ஆசீர்வதிக்கப்படுகின்றன. இந்த வரியை எபிரேய விவிலியம், 'அனைத்து மக்கள் கூட்டமும்' என்று (כֹּל מִשְׁפְּחֹת הָאֲדָמָה׃) காட்டுகிறது.
வ.4: இஸ்ராயேல் மக்கள் தாங்கள் கானானியருடைய உறவினர்கள் இல்லை என்பதில் கவனமாக இருந்தார்கள். அவர்கள் தாங்கள் செமித்தியர்கள் அதாவது ஆபிரகாமின் வழிமரபினர், இந்த ஆபிரகாம் ஊரிலிருந்து ஹாரானுக்கும், பின்னர் ஹாரானிலிருந்து கானானிற்கும் வந்தவர். அவர் அப்படி வருவதற்கான காரணம், கடவுளைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆபிரகாம் தனி மனிதனாக ஹாரானை விட்டு செல்லவில்லை, அவருடன் அவருடைய சகோதரன் லோத் வருகிறார். இந்த லோத் ஆபிரகாமைப் போல செமித்திய இனங்களின் மூதாதை. இவரிலிருந்துதான் மோவாபியரும், அமோனியரும் உருவாகினர் என்று விவிலியம் காட்டுகிறது. இந்த இனத்தவர்கள் இஸ்ராயேலருக்கு எதிரிகளாகவே காட்டப்படுகின்றனர், இதற்கு உதாரணமாக லோத்தின் மகள்கள் தந்தையுடன் கொண்ட தவறான உறவு காட்டப்படுகிறது (தொ.நூல் 19,30-38). இந்த நிகழ்வுகள் நடந்தபோத ஆபிரகாமின் வயது 75 ஆக இருக்கிறது. இந்த வயதின் மூலமாக ஆசிரியர், ஆபிரகாம் ஏற்கனவே நிறைவான வயதை அடைந்திருந்தார் என்பதைக் காட்டுகிறார்.
திருப்பாடல் 33
1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். 4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. 6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.
7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார்.
8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக!
9அவர் சொல்லி உலகம் உண்டானது அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது. 10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.
11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே!
16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.
17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. 18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33, புகழ்ச்சிப்பாடலாக கருதப்படுகிறது. இருப்பத்திரண்டு வரிகளைக்கொண்டுள்ள இந்தப் பாடல் அழகாக இரட்டை வரி அமைப்பில் பிரித்து நோக்கப்படுகிறது. தொடக்க மற்றும் முடிவு வரிகள் கடவுளில் மகிழ்வதற்கான அழைப்பை விடுகின்றன. அனேகமான திருப்பாடல்களைப் போல இந்த திருப்பாடலும் திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு தலைப்பு வழங்கப்படவில்லை, இதனால் இதனுடன் தொடர்புள்ள விவிலிய பின்புலத்தை அறிவது கடினமாக இருக்கலாம்.
வ.1: இந்த வரி இப்பாடலின் ஆரம்ப அழைப்பாக பணியாற்றுகிறது. நீதிமான்கள் ஆண்டவரில் களிகூரக் கேட்கப்படுகிறார்கள். அதாவது நீதிமான்கள் என்பவர்கள் (צַדִּיקִים ட்சத்திகிம்), ஆண்டவரில் தங்களது திருப்தியை தேடக் கேட்கப்படுகிறார்கள், இச்செயலானது அவரைப் புகழ்வதற்கு பொருத்தமானது என சொல்கிறார் ஆசிரியர்.
வ.2: யாழ், எபிரேய இசைக்கருவிகளில் மிகவும் பிரசித்தமானது, இதனை வாசிப்பதில் தாவீது அரசர் விருப்பமுடையவராய் இருந்தார் என சொல்லப்படுகிறது. இது ஒருவகை நரம்பிசைக் கருவி. நம்முடைய யாழ் நகருக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாக ஈழ வரலாறு சொல்கிறது. பத்து நரம்பிசைக் கருவி என்றும் இதனை ஒத்த சொல்லில் அழைத்தார்கள். இதனைத்தான் ஆசிரியர் திருப்பிக்கூறும் நடையில் இங்கே பாவிக்கிறார். இதிலிருந்து இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல் என்பது புலப்படுகிறது. ஆகவே திருப்பாடல்கள் வாசிக்கப்படுவதை விட, பாடப்படவேண்டும் என்பது உண்மையே.
வ.3: ஆண்டவருக்கு புதிய பாடல் பாடப்படவேண்டும் (שִׁיר חָדָשׁ), அவருக்கான பாடல்கள் திறம்பட இசைக்கப்பட வேண்டும் என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆண்டவர் சாதாரண தலைவர்களைப் போல அர்த்தமில்லா உதட்டுப் புகழ்ச்சிக்கு உரியவர் அல்லர், அவர் மேன்மை மிக்கவர், இறைவன். இதனால் அவருக்கான பாடல்கள் எப்போதும் புதியனவாகவும், மகிழ்ச்சி ஒலியுடையதாகவும் இருக்க வேண்டும் என்பது இவர் நம்பிக்கை.
வ.4: வாக்கு என்பது ஒருவரின் அடையாளம். அரசர்களுடைய வாக்கு கட்டளை அல்லது ஆணை போன்றது, அது பொய்க்கக் கூடாது, இதனை விட ஆண்டவருடைய வாக்கு உண்மையானது என்கிறார் ஆசிரியர் (דְּבַר־יְהוָה தெவார் அதோநாய்). ஒருவருடைய வாக்கிற்கும் செயல்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். தாறுமாறான செயற்பாடுகள் நல்ல வாக்கை பிரதிபலிக்காது. ஆனால் ஆண்டவரைப் பொறுத்த மட்டில் அவர் வாக்கும் செயல்களும் (מַעֲשֶׂה) ஒன்றானவை என்கிறார்.
வ.5: ஆண்டவர் எதை விரும்புகிறார். சடங்குகளின் பெருக்கம், ஆண்டவர் சடங்குகளையும், பலிகளையும் மற்றும் இரத்தத்தையும் விரும்புகிறார் என்ற பொய்பிரச்சாரத்தை முன்வைத்தன.
இஸ்ராயேல் இனம் குருத்துவத்தை மையப்படுத்தியபோது, இந்த ஆபத்துக்களை அதிகமாகவே எதிர்கொண்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் ஆண்டவர் பலிகளையோ அல்லது எரிபலிகளையோ விரும்பியதாக காட்டப்படவில்லை. இந்த பலிகள் அனைத்தும் காலத்தால் பிற்பட்டவை.
இவற்றைவிட ஆண்டவர் உண்மையாக விரும்புவை, நீதியும் நேர்மையும் என்கிறார் இந்த ஆசிரியர் (צְדָקָ֣ה וּמִשְׁפָּט). இயேசு ஆண்டவருடைய படிப்பினைகளில் இந்த சிந்தனை ஆழமாக ஊடுருவி இருந்தது. இதன் காரணமாகத்தான் இந்த முழு பூவுலகுமே அவரது அன்பால் நிறைந்துள்ளது. ஆண்டவருடைய பேரன்பு என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான சொற் பிரயோகம்
வ.6: இந்த வரி ஆண்டவரின் வாக்கின் பலத்தை காட்டி, அத்தோடு பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் காட்டி நிற்கின்றன. பிரபஞ்ச படைப்புக்களை கடவுள்களாக பார்த்த அக்கால கானானிய மக்கள் நடுவில் வாழ்ந்த இஸ்ராயேலருக்கு கடவுளின் பெருமையையும், பிரபஞ்ச படைப்புக்களின் சிறுமையையும் காட்ட வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. வானங்களும் (שָׁמַ֣יִם ஷமாயிம்), வான்கோள்களும் (כָּל־צְבָאָֽם கோல் ட்செவாம்), ஒன்றுமில்லை மாறாக கடவுளுடைய படைப்பே என்பது இவர் சிந்தனையில் உள்ள உண்மை.
வ.7: வானங்கள் மட்டுமல்ல அதற்கு இணையாக கீழ் உள்ள நீரைப் மற்றும் அறிவிக்க வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. கடல், பல விதத்தில் விவிலியத்தில் காட்டப்படுகிறது. சில வேளைகளில் இது நேர்முகமாகவும் பல வேளைகளில் எதிர் மறையாகவும் காட்டப்படுகிறது. இந்த கடலில்தான் தீய சக்திகள் உறைவதாகவும் அக்கால விஞ்ஞானம் கருதியது. ஆனால் கடவுளுக்கு முன்னால் இவையும் சாதாரண படைப்புக்களே. அத்தோடு இவையும் கடவுளின் சிந்தனையால் உருவானவையே என்று பெரிய விஞ்ஞானத்திற்கு, சிறிய ஆனால் ஆழமான முடிவுரையை எழுதுகிறார் ஆசிரியர். இந்தக் கடலை (מֵי הַיָּם), கடவுள் குவியல் போல் குவித்துள்ளார் எனச் சொல்கிறார், இது தொடக்க நூல் (※1,9) சிந்தனையை நினைவூட்டுகிறது எனலாம். நிலவறைகளில் சமுத்திர நீரை சேமித்துவைத்துள்ளார் கடவுள் என்கிறார் ஆசிரியர். இதற்க்கு תְּהוֹמֽוֹת தெஹோமோத் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்கடல் நீர்கள் என்று எபிரேயம் காட்டுகின்றது. இது எதனை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை இது நிலக்கீழ் நீரைக் குறிக்கலாம். அத்தோடு ஆழமான பாதாளங்கள் நிலத்தின் கீழே உள்ளன என்பதும் இவர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த இடத்திலே கடவுள் நீரை சேமித்து வைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர்.
(※அப்பொழுது கடவுள், 'விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!' என்றார். அது அவ்வாறே ஆயிற்று.)
வ.8: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது ஒரு விவிலிய விழுமியம். இக்கால சிந்தனையில் இது மூட நம்பிக்கையாக பார்க்கப்படலாம். ஆனால் இந்த கடவுள் அச்சம் என்பது ஆழமான விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாக மனிதர் நன்மைத் தனத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். இக்கால சிந்தனையில் இதனை மரியாதை கலந்த அன்பு என்று கூடச் சொல்லலாம். இன்று உலகில் உள்ள அவவிசுவாசம் மற்றும் காட்டுச் சுதந்திரத்திறத்திற்கான காரணமாக இந்த இறையச்சம் இன்மையே என்பது பலருடைய எண்ணம்.
வ.9: இந்த உலகத்தின் படைப்பு எப்படி உருவானது, அதனுடைய மூல கர்த்தர் யார் என்பது அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி முக்கியமான கேள்வியாக உள்ளது. புகழ்ச்சிப்பாடல்களில் பல மெய்யறிவுச் சிந்தனைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றை இந்த வரியில் கண்டுகொள்ளலாம். உலகத்தை ஒரு சொல்லால் படைத்தவர் நம் கடவுள் என்ற ஆழமான மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். 'அவர் சொன்னார் அது உருவானது' என்பது இஸ்ராயேலின் அசைக்க முடியாத நம்பிக்கை (כִּי הוּא אָמַר וַיֶּהִי). இந்த வரியில் உலகம் என்ற எழுவாய் பொருள் எபிரேய விவிலியத்தில் இல்லை, ஆனால் முன்னுள்ள வரியில் அது உள்ளபடியால் தமிழ் விவிலியம் இந்த வரிக்கும் உலகு என்ற சொல்லை பயன்படுத்துகிறது.
வ.10: ஆண்டவர் ஏன் வேற்றினத்தாரின் திட்டங்களை முறியடிக்க வேண்டும், ஏன் வேற்றினத்தார் தோற்க்க வேண்டும் என்பது நம்முடைய கேள்வியாக இருக்கலாம். கடவுள் இஸ்ராயேலின் கடவுள் மட்டுமல்ல, அவர் அனைவரின் கடவுள். இதனைத்தான் இயேசு காட்டினார். ஆனால் இங்கு வேற்றினத்தார் என குறிப்பிடப்படுகிறவர்கள் (גּוֹיִם கோயிம்), அனைத்து மக்களையும் குறிக்கவில்லை, மாறாக இஸ்ராயேலின் வீழ்ச்சியை விரும்பிய ஒரு குறிப்பிட்ட மக்களாக அல்லது அவர்களது தலைமைத்துவமாக இருக்கலாம். இங்கே இவர்களின் எண்ணங்கள் குலைக்கப்படுகிறது என்றால், இஸ்ராயேல் காக்கப்படுகிறது என்று பொருள்.
வ.11. தீயவர்களுடைய எண்ணங்கள் தீமையானவை, ஆனால் கடவுளுடைய எண்ணங்கள் அனைவருக்கும் நன்மையானவை. இதனால் இந்த எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் (לְעוֹלָם), அவர் இதயத்தின் திட்டங்களும் அனைத்து பரம்பரைக்கும் உறுதியாக இருக்கும். ஆசிரியர் ஆண்டவருக்கும் இதயத்தைக் கொடுத்து மனித வார்த்தைகளில் அவரை வடிக்க முயல்கிறார்.
வ.12: இஸ்ராயேல் இனம் அக்கால சமூதாயத்தில் ஒப்பிடுகின்ற வேளை மிக சிறியதாகவும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. நிலத்தை பொறுத்த மட்டில் பெரிதாக வளமான நிலங்களை கொண்டிருந்தது என்று சொல்வதற்கும் இல்லை. இங்கே 'ஆண்டவரை தம் கடவுளாக கொண்ட இனம்' என்பதை 'யாவேயை கடவுளாக கொண்ட இனம்' (אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו), என்று மொழிபெயர்க்க வேண்டும். இதனால் பலர் கடவுளாக பல தெய்வங்களை கொண்டிருந்த வேளை, இஸ்ராயேல் தங்கள் கடவுளாக ஆண்டவரை (அதோனாய்-யாவே) கொண்டிருப்பதனால் அது பேறுபெற்றது என்கிறார் ஆசிரியர். அதே வேளை ஆண்டவரும் இஸ்ராயேலை தன் உரிமைச் சொத்தாக எடுத்திருந்தார், இதனால் இஸ்ராயேல் பேறுபெற்றதாகின்றது. உரிமைச் சொத்தாக எடுத்தல் என்பது ஆட்சி அதிகாரம் அல்லது வாரிசு அதிகாரம் போன்றவற்றைக் குறிக்கும். இதனை இஸ்ராயேல் பெற்றுள்ளது என்பது இவர் வாதம்.
வ.13: கடவுள் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பதற்கு இந்த வரி விளக்கம் கொடுக்கிறது. வானின்று கடவுள் பார்க்கிறார், இதனால் கடவுள் வானில் இருக்கிறார் என்ற இவர்களின் நம்பிக்கை புலப்படுகிறது. ஆதாமின் மக்கள் அனைவரையும் பார்க்கிறார் என்று எபிரேய பாடம் வாசிக்கிறது.
இங்கே ஆதாம் என்பவர் அனைத்து மக்களினங்களையும் குறிக்கிறார் (כָּל־בְּנֵי הָאָדָם).
வ.14-15: இந்த வரிகளும் பதின்மூன்றாவது வரியை ஒத்ததாக இருக்கின்றன. பார்த்தல் என்ற எபிரேய சொல் רָאָה (ரா'ஹ்), நோக்கல், கண்நோக்கல், அவதானித்தல், உற்றுபார்த்தல், ஆராய்தல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கும். கடவுள் மனிதர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் என்ற படியாலும், மனிதர்களின் செயல்களை உற்று நோக்குவதனாலும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கின்றன.
வ.16-17: மனிதரின் பலம் என்ன?, அரசர் தன் படையால் காப்பாற்றப்பட முடியாதவர், படைவீரர் தன்னுடைய அதீத பலத்தாலும் மீட்கப்பட முடியாதவர், என்பது அக்கால இராணுவ அறிவுக்கு எதிரானது. ஏனெனில் சாதாரண அரசர்களும், வீரர்களும், தங்கள் படைபலத்திலும் உடல் வலிமையிலுமே அதிக கவனம் செலுத்தினர். இதனைத்தான் வீண் என்கிறார் ஆசிரியர். அதற்கான காரணத்தையும் வரலாறு இவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். இந்த பாடலின் ஆசிரியர் ஒரு அரசராக இருந்தால் இது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த சிந்தனைக்கு மேலும் வலுவூட்ட போர்க் குதிரையை உதாரணமாக எடுக்கிறார் ஆசிரியர் (סּוּס சுஸ் குதிரை). அக்காலத்தில் குதிரையின் வலுவினைக் கொண்டு படைகளில் பலம் கணக்கிடப்பட்டது. இக்காலத்தில் இராணுவ வாகனங்களைப் போல.
வ.18: இது இப்படியிருக்க கடவுள் யாரை காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை, கடவுள் தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பிற்காக காத்திருப்போரையும் காக்கிறார் என்கிறார் ஆசிரியர். இந்த சிந்தனை ஏற்கனவே முன் வரியில் வந்திருக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்பதைக் குறிக்கும். கடவுளின் அன்பிற்காக காத்திருத்தல் என்பதும் (לַֽמְיַחֲלִ֥ים), கடவுளில் நம்பிக்கை வைத்தலையே குறிக்கும்.
வ.19: இவர்களுக்கான உதவி சொல்லப்படுகிறது. கடவுள் இவர்களை சாவினின்று காக்கிறார்
(מִמָּוֶת נַפְשָׁם), அத்தோடு அவர்களை பஞ்சத்திலும் உயிர்விக்கின்றார் (לְחַיּוֹתָם בָּרָעָב). இந்த வரியும் இராணுவ சிந்தனைகளையே பின்புலமாகக் கொண்டுள்ளது. போர் காலத்தில் பஞ்சமும் சாவும் நிச்சயமானவை, இதனை அரசரின் பலமோ, போர்க்குதிரைகளோ தவிர்க்காது. அதனை தவிர்க்கக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே.
வ.20-21: இந்த வரிகளில் ஆசிரியர் இஸ்ராயேல் மக்களின் வரைவிலக்கணத்தைக் காட்டுகிறார். அவர்கள் ஆண்டவரை நம்பியிருக்கிறவர்கள், அவர்களின் கேடயமும் துணையும் ஆண்டவர் என்கிறார்;. இதனால் இதயம் களிகூர்வதாகவும், அவரது தூய்மையான பெயரில் நம்பிக்கை வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வ.22: இந்த வரி இறுதியான வரியாக, வேண்டுதலாக வருகிறது. இறுதியாக ஆசிரியர் கடவுளின் பேரன்பிற்காக இரஞ்சுகிறார் (יְהִי־חַסְדְּךָ יְהוָ֣ה עָלֵינוּ). அதற்கான நியாயமாக தங்களுடைய எதிர்நோக்கை காட்ட முயற்சிக்கிறார். இந்த எதிர்நோக்கு (יָחִיל யாஹில்), இந்த எதிர்நோக்கு ஒரு விவிலிய விழுமியமாக இருக்கிறபடியால் இவருடைய வேண்டுதல் சரியான பாதையில் செல்கிறது எனலாம்.
2 திமோத்தேயு 1,8-10
8எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். 9அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். 10நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
இரண்டாம் திமோத்தேயுவிற்கான திருமுகம் பவுலுடைய பணித்திருமுகங்களில் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த திருமுகத்தை பவுல் எழுதினாரா என்பதில் சந்தேகம்
இருந்தாலும் இது கொண்டுவருகின்ற இறையியல் சிந்தனைகள் பவுலுடைய ஆழமான இறையியல் சிந்தனையையே அடித்தளமாக கொண்டவை என்பதை மறுக்க முடியாது. அத்தோடு இங்கே சிந்திக்க வைக்கின்ற கருத்துக்கள் அனைத்தும் ஆரம்ப கால திருச்சபை சந்தித்த சவால்களை பிரதிபலிக்கின்றன என்ற தெளிவு இந்த திருமுகத்தை இன்னும் தெளிவாக வாசிக்க உதவி செய்யும். இந்த வரிகளுக்கு முந்தின வரிகளில் பவுல் தான் இயேசுவிற்காக கைதியாக இருப்பதாகவும், அதனைக் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறுகிறார். அத்தோடு திமோத்தேயுவின் விசுவாசத்தையும் அவர் முன்னோரின் விசுவாசத்தையும் திமோத்தேயுவிற்கு நினைவுபடுத்துவதன் வாயிலாக அவர், அந்த விசுவாசத்தை கட்டிக்காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதேவேளை திமோத்தேயுவின் அபிசேக அனுபவத்தையும் மீள நினைவுபடுத்துகிறார் (வ.6). கோழைகளாக இருப்பது கடவுளின் அரசிற்கும், பணிக்கும் எதிரானது என்பதை வலிமையாகக் காட்டுகிறார் (வ.7). கைவிடுதல்களும், காட்டிக்கொடுப்புக்களும் சாதரணமாகவிருந்த ஆரம்ப கால திருச்சசபைக்கு இப்படியான வரிகள் மிகவும் அவசியமாக இருந்திருக்கும்.
வ.8: கிறிஸ்துவைப் பொருட்டு வெட்கம் அடைதல், முக்கியமான பிரச்சனையாக இருந்திருக்கலாம். பலருக்கு, தங்களுடைய பழைய யூத நம்பிக்கைக்கும், அல்லது உரோமைய-கிரேக்க நம்பிக்கைக்கும் எதிராக கிறிஸ்தவ நம்பிக்கை இருந்ததாகவும், இது வெட்கத்துக்குரியது என்ற சிந்தனை ஒரு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். இதனைத்தான் திமோத்தேயுவின் பெயரில் விளக்குகிறார் ஆசிரியர். அதேவேளை கைதியாக இருக்கிறவர், குற்றவாளி. ஆக பவுல் ஒரு குற்றவாளி, இந்த குற்றவாளி எப்படி நற்செய்தியை அறிவிக்க முடியும் என்ற கேள்விகளையும் திமோத்தேயுவோ அல்லது ஆரம்ப கால திருச்சபையோ சந்தித்திருக்கலாம். இதனைத்தான் தேவையில்லா கவலை என்கிறார் பவுல். நற்செய்தியின் பெருட்டு துன்பமடைதல், என்பது மறைசாட்சியத்தின் அடித்தளமாக ஆரம்ப கால திருச்சபையில் இருந்தது. பவுல் இதனை வலுப்படுத்துகிறார்.
வ.9: இந்த துன்பம் மீட்கும் துன்பம். கிறிஸ்தவர்கள் அல்லது அனைவரும் மீட்கப்படுவது அவர்களுடைய செயல்களினால் அல்ல. இந்த சிந்தனை பிற்கால யூத சிந்தனைகளுக்கு முரணாக இருக்கிறது. பிற்கால சில யூத சிந்தனைகள், மனித செயல்கள் காரணமாகத்தான் மீட்பு கிடைக்கிறது என்று நம்பினார்கள். இதனை மறுக்கிறார் பவுல். மீட்பு என்பது காலங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. அதுவும் அந்த மீட்பு, அருளாக இயேசு ஆண்டவர் வழியாகத்தான் தரப்பட இருக்கிறது. இதற்கான அழைப்புத்தான் இப்பொழுது கிறிஸ்தவர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அழைப்புத்தான் புதிது, ஆனால் திட்டம் ஏற்கனவே இருந்தது.
வ.10: அருள் இயேசு இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாகத்தான் இது உண்மையாகிறது. (φανερωθεῖσαν δὲ νῦν διὰ τῆς ἐπιφανείας τοῦ σωτῆρος ἡμῶν ⸂Χριστοῦ Ἰησοῦ⸃) இது பவுலுடைய முக்கியமான நற்செய்தி. அருள் உலகிற்கு ஆபிரகாம் மூலம் அல்லது திருச்சட்டங்கள் மூலம் அல்லது விருத்தசேதனம் மூலம் வந்தது என்ற பலர் கருதுகின்றவேளை, பவுல் அந்த அருள் உண்மையாக இயேசுவின் வருகையுடன் வந்திருக்கிறது என்கிறார். இயேசு கிறிஸ்துவை, 'நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு' (σωτῆρος ἡμῶν ⸂Χριστοῦ Ἰησοῦ) என்பது பழங்கால நம்பிக்கை என்பது இந்த வரியில் புலப்படுகிறது. இந்த மீட்பர் செய்த செயல்கள் அறிக்கையிடப்படுகின்றன. ஒரு பக்கம் அவர் சாவை அழித்தார், மறுபக்கம் அழியா வாழ்வை நற்செய்தியின் ஒளியில் ஒளிரச் செய்தார்.
மத்தேயு 17,1-9
1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். 2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. 3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். 4பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார். 5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. 6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். 7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். 8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது
இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. 9அவர்கள் மலையிலிருந்து
இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
இயேசுவின் உருமாற்றம் சமநோக்கு நற்செய்திகள் மூன்றிலும் சிறு வித்தியாசங்களுடன் பதியப்பட்டுள்ளது. மாற்கு நற்செய்தியிலிருந்தும், பொதுவான மூலத்திலிருந்து மத்தேயுவும் லூக்காவும் இந்த தரவுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் மத்தேயுவிலிருந்து லூக்கா சில இடங்களில் வேறுபடுகிறார், இந்த இடத்தில் இவர்களின் மூலத் தரவுகள் வௌ;வேறான இடங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன எனலாம் (ஒப்பிடுக மாற்கு 9,2-13: லூக்கா 9,28-36). ஆண்டவரின் உருமாற்றத்தை சமநோக்கு நற்செய்தியாளர்கள் காட்சியாக காட்டாமல் அதனை வெளிப்பாடாக காட்டுகின்றனர். இந்த வெளிப்பாடு முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்திய காட்சிகளை நினைவூட்டுகிறது.
வ.1: இங்கே நடக்கிற நிகழ்வுகள் மற்றைய நற்செய்திகளில் முக்கியமான தரவுகளில் ஒன்றாகவும், சில இடங்களில் வேறாகவும் இருக்கின்றன. மாற்கு, லூக்காவைப் போல இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானை கூட்டிக்கொண்டு உயரமான மலையொன்றிக்கு ஏறிச் செல்கிறார். மத்தேயு மாற்குவில் இது ஆறுநாட்களுக்குப்பின் நடைபெறுகிறது, லூக்காவில் இது எட்டு நாட்களுக்குப்பின் நடைபெறுகிறது. நற்செய்தியாளர்கள் எவரும் இங்கே இந்த உயரமான மலை எதுவென குறிப்பிடவில்லை. இனி மத்தேயுவின் தனித்துவங்களை உற்று நோக்குவோம்.
மத்தேயு, ஆறு நாட்களுக்குப்பின் இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறுகிறார். இதனால்
இதற்கு முன் முக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது என்பது புலப்படுகிறது. விவிலியத்தின் படி முன் அதிகாரங்களில் இயேசு தன் சாவை முன்னறிவிக்கிறார் (ஒப்பிடுக மத் 16,21-28). இயேசு தன்னோடு தன்னுடைய வழமையான மும்மூர்த்திகளை அழைத்துச் செல்கிறார், அவர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இவர்கள் அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும் இயேசுவோடு
இருக்கிறார்கள். இப்படியிருக்க யோவான் நற்செய்தியில் இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து இயேசு தன்னுடைய திருத்தூதர்களில் சிலருக்கு முக்கியமான அனுபவங்களை கொடுத்திருக்கிறார் எனலாம். இவர்கள் நான்கு பேரும், ஓரு பெயரிடப்படாத மலைக்கு தனிமையாக செல்கின்றனர். மலை ὄρος இங்கே கடவுளின் பிரசன்னத்தை குறிக்கும் உயரமான இடத்தை குறிக்கலாம். தனிமையாக κατ᾿ ἰδίαν இவர்கள் செல்வது முக்கியமான விடயத்தை குறிப்பதாக இருக்கலாம்.
வ.2: இந்த வரி இங்கே ஒரு தெய்வீக காட்சி நடைபெறுவதைக் காட்டுகின்றது. இயேசு தோற்றம் மாறினார். இதற்கு கிரேக்க மூல பாடம் செயற்பாட்டு வினையை பாவிக்கிறது (μετεμορφώθη உருமாற்றப்பட்டார்) அத்தோடு இந்த நிகழ்வு, இந்த மூவருக்கும் முன்னால் நடைபெறுகிறது. பிற்கால யூதர்கள், நீதிமான்கள் பரலோகத்தை அடையும் வண்ணம் மாட்சியான உடலை பெறுவர் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர் (ஒப்பிடுக 1கொரிந்தியர் 15,42-49). இதனை இயேசு இவர்களுக்கு முன்சுவையாக காட்டுகிறார் என எடுக்கலாம். அவருடைய முகம் கதிரவனின் (ἥλιος ஹேலியோஸ்) முகத்தைப் போன்று ஒளிர்கின்றது. இது மோசேயின் முகத்தை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க வி.ப 34, 29-35). கதிரவன் கிரேக்க இலக்கியங்களில் முக்கியமான கடவுளின் அடையாளமாக இருக்கிறது. இந்து மத நம்பிக்கைகளிலும் இந்த தரவுகளைப் காணலாம். முதல் ஏற்பாடு சூரியனை கடவுளின் படைப்பாகவும் முக்கியமான தீச்சுவாலையாகவும், உலகத்திற்கு ஒளி தரும் முக்கியமான ஊடகமாகவும் காண்கிறது. கிறிஸ்தவ பிற்கால இலக்கியங்கள் கதிரவனை இயேசுவின் ஒரு அடையாளமாக காண்கிறது.
வ.3: மோசேயும் எலியாவும் இயேசுவோடு உரையாடுகின்றனர். இந்த இருவரும் எபிரேய நம்பிக்கையில் மிக முக்கியமானவர்கள். மோசேயும் எலியாவும் ஒரே கடவுள் கொள்கையிலும், யாவே கடவுள் நம்பிக்கையினதும் மூல கர்த்தாக்கள் என யூத பாரம்பரியம் கருதுகின்றது. மோசே சட்டங்களின் தந்தையாக இருக்கிறார், அத்தோடு முதல் ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்கள் (தோறா), மோசேக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இன்னுமாக முதல் ஏற்பாடு மேசேயை கடவுளின் நண்பனாகவும் பணியாளனாகவும் காட்டுகிறது (※காண்க சீராக் 45,1). சட்டத்தையும் மோசேயையும் பிரித்துப்பார்க்க முடியாது. இந்த மோசே இங்கே இயேசுவுடன் கலந்துரையாடுகிறார். இதே வேளை, யூதர்கள் இயேசுவை சட்டத்தை மீறுகிறார் என பலவேளைகளில் குற்றம் சாட்டியதை நினைவுகூர வேண்டும். எலியா இறைவாக்குகளின் பிதாப்பிதாவாக கருதப்படுகிறார். இந்த இறைவாக்கினர் வட அரசில் பணியாற்றினாலும், இவரின் ஒரு கடவுள் கொள்கையும், தாக்கமும் தென்நாட்டிலே மிகவும் பிரசித்தமாக இருந்தது. எலியாவிற்கென்று தனித்துவமான புத்தகங்கள் இல்லாவிட்டாலும்,எலியாவைப் போல ஒரு இறைவாக்கினரை இஸ்ராயேல் கண்டதில்லை. அத்தோடு மோசேயும் எலியாவும் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையும் இஸ்ராயேல் மக்களிடையே பரவலாக இருந்தது. மோசேயின் கல்லறையை மக்கள் கண்டதில்லை, அதே வேளை எலியா நெருப்புக் குதிரைத் தேரிலே எடுத்துக்கொள்ளப்பட்டார் எனவும் விவிலியத்தில் வாசிக்கிறோம் (காண்க 2அரசர் 2,11). இதனை பின்புலமாகக் கொண்டு இந்த இரண்டு பிரமாண்டமான கடவுளின் மனிதர்கள் நடுவில் இயேசுவை நிறுத்தி, இயேசு சட்டத்திற்கும், இறைவாக்கிற்கும் மையாமாக இருக்கிறார் என்று காட்டுகிறார் மத்தேயு. அத்தோடு இவர்கள் இயேசுவோடு உரையாடுகின்றார்கள், அதாவது இயேசு இவர்களைவிட பெரியவராக இருக்கிறார் என்பது புலப்படுகிறது போல.
(※1யாக்கோபின் வழிமரபிலிருந்து இறைப்பற்றுள்ள ஒரு மனிதரைக் கடவுள் தோற்றுவித்தார்; அம்மனிதர் எல்லா உயிரினங்களின் பார்வையிலும் தயவு பெற்றார்; கடவுளுக்கும் மனிதருக்கும் அன்புக்குரியவரானார். அவரது நினைவு போற்றுதற்குரியது. அவரே மோசே!)
வ.4: பேதுருவின் கேள்வி சாதாரணமானதுதான். இயேசு தன்னுடைய உண்மையான முகத்தை காட்டிய போது அதனை பற்றிக்கொள்ள மனித பலவீனமான இதயம் முயற்ச்சி செய்கிறது. இங்கே பேதுரு துன்புறும் மத்தேயுவின் திருச்சபையை பிரதிபலிக்கிறார். முதல் ஏற்பாட்டிலே கடவுளுக்கு கூடாரம் அமைத்து அதனை சந்திப்பு கூடாரமாக மக்கள் கண்டனர். அங்கே மோசே தொடர்ச்சியாக கடவுளுடன் பேசினார். இதனை பேதுரு நினைத்திருக்கலாம். அத்தோடு இயேசுவின் உண்மையான மாட்சியில் இருப்பதுதான் நல்லது என ஆலோசனைவேறு சொல்கிறார். இருப்பினும் இயேசுவின் விருப்பத்தை கேட்கிறார் பேதுரு.
வ.5: பேதுரு பேசிக்கொண்டிருக்கும் போதே காட்சி மாறுகிறது. இதிலிருந்து பேதுருவின் பேச்சு முக்கியமில்லாத பேச்சு அல்லது தெளிவில்லாத பேச்சு என்பதுபோல காட்டப்படுகிறது. இந்த வேளையில் ஒளிமயமான மேகம் ஒன்று இவர்கள் மேல் நிழலிடுகிறது (νεφέλη φωτεινὴ). முதல் ஏற்பாட்டில் முக்கியமாக, விடுதலைப் பயணத்தில் மேகம் கடவுளின் முக்கியமான ஓர் அடையாளம். இந்த மேகத்தின் உள்ளிருந்து வருகின்ற குரல் கடவுளின் குரலாகக் காட்டப்படுகிறது. இந்தக் குரல் முக்கியமான செய்தியை சொல்கிறது. οὗτός ἐστιν ὁ υἱός μου ὁ ἀγαπητός ἐν ᾧ εὐδόκησα· ⸂ἀκούετε αὐτοῦ. 'இவர் என் அன்பு மகனாக இருக்கிறார், அவரில் நான் பூரிப்படைகிறேன், அவருக்க செவிகொடுங்கள்'. இந்த செய்தி ※இ.ச 18,15ஐ நினைவூட்டுகிறது. இப்படியான இன்னொரு செய்தி இயேசுவின் திருமுழுக்கின்போதும் சொல்லப்பட்டது, அது இங்கே மீளவும் உறுதிப்படுத்தப்படுகிறது (※※காண்க மத் 3,17).
(※15கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு.).
(※※'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது).
வ.6: சீடர்கள் அஞ்சி முகம் குப்புறவிழுதல், இயேசு சாதாரண மனிதர் மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது அல்லது அவர்கள் கண்டது மாயையோ அல்லது கனவோ அல்ல உண்மையான வெளிப்பாடு என்பதைக் காட்டுகிறது. முகம் குப்புற விழுதல் சாதாரணமாக கடவுளுக்கு முன்னால் செய்யப்படும் மரியாதையின் அடையாளம்.
வ.7-8: இயேசு அவர்களை தொட்டு திடப்படுத்துகிறார். இதிலிருந்து இங்கே நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் இயேசுவின் அறிவுடன்தான் நடைபெறுகின்றன என்பது புலப்படுகிறது. இயேசு தன் சீடர்கள,; சாதாரண மனிதர்கள் என்பதிலும் அக்கறையுள்ளவராயுள்ளார். எழுந்திருங்கள் மற்றும் அஞ்சாதீர்க்ள் என்றும் சொற்தொடர், கடவுளின் வார்த்தைகளை பிரதிபலிக்கின்றன. எழுந்த திருத்தூதர்கள் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணாது விழிக்கிறார்கள். இதிலிருந்து இந்த வெளிப்பாடு ஒரு முக்கியமான செய்தியை சீடர்களுக்கு கொடுப்பதற்காகவே திட்டமிடப்பட்டு இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டது எனலாம்.
வ.9: இதுதான் இந்த காட்சியின் முக்கியமான செய்தி. அதாவது சீடர்கள் மலையிலிருந்து இறங்கி வரவேண்டும். வாழ்வின் நியதிகளை சந்திக்க வேண்டும். இயேசுவின் இறைதன்மையைப் போல, அவரின் பாடுகள் மிக முக்கியமானவை. பாடுகள் வரும் முன் அவரின் தெய்வீகத்தைப் பற்றி பேசுவது இயேசுவின் திட்டம் கிடையாது. இயேசுவின் இறப்பு உயிர்ப்பின் முன் இந்த செய்தி மற்றவர்களுக்கு சொல்லப்படக்கூடாது என்பது அவர் வேண்டுகோள் அல்ல, ஆனால் அது அவரின் கண்டிப்பான கட்டளை. ஒரு வேளை இதன் காரணமாகத்தான் நாம் இந்த செய்தியை அவருடைய உயிர்ப்பின் பிற் காலத்தில் பெறுகிறோம்.
பாடுகள் இல்லாமல் உயிர்ப்பில்லை,
ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம், இயேசுவில் நிறைவடைகிறது.
இயேசுதான் சட்டத்தினதும் மற்றும் இறைவாக்குகளின் மையமும்,
நிறைவுமாகிறார்.
அன்பு ஆண்டவரே,
நீரே எமது ஆசீர்வாதமாகவும்,
நாங்கள் மற்றவருக்கு ஆசீர்வாதமாகவும் அமைய
உதவிசெய்யும். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக