சனி, 1 அக்டோபர், 2022

ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்தேழாம் வாரம் 02,10,2022, 27th Week in OTC2022



ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்தேழாம் வாரம்

02,10,2022



M. Jegankumar Coonghe OMI,

Chaddy Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Jaffna. 



முதல் வாசகம், அபகூக்கு 1,2-3:2,2-4

பதிலுரைப்பாடல், திருப்பாடல்: 95

இரண்டாம் வாசகம், 2திமோத்தேயு 1,6-8.13-14

நற்செய்தி, லூக்கா 17,5-10





அபகூக்கு 1,2-3:2,2-4

2ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? 3நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன் வழக்கும் வாதும் எழும்புகின்றன.


2ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: 'காட்சியை எழுதிவை விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. 3குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. 4இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.


 யார் இந்த அபகூக்கு என்பதைப் பற்றி தனித்துவமான தரவுகள் விவிலியத்தில் இல்லை. விவிலியம் இவரை ஒரு இறைவாக்கினர் என்று மட்டுமே அறிமுகம் செய்கின்றது. இவருடைய பெயரும் எபிரேய பெயர் போல இல்லை. சிலர், இந்த பெயருக்கு 'ஆண்டவர் என்னை அணைத்துக் கொண்டார்' என்ற எபிரேய அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். இவருடைய பெயரிலே மெசபத்தேமியரின் ஆதிக்கத்தைக் காணலாம். மெசபத்தேமியரின் அக்காடியன் மொழியில் அபகூக்கு என்றால், பழ மரம் என்பது பொருள். இவர் ஒரு லேவியர் எனவும், இரண்டாம் ஆலய நிர்மாணப் பணியில் பங்காற்றினார் எனவும் சில யூத பாரம்பரியங்கள் இவரை அடையாளம் காண்கின்றன. இவருடைய தனிப்பட்ட அடையாளங்களில் சில மயக்கம் தெரிகிறதே அன்றி அவர் செய்திகளில் அல்ல, இவரின் இறைவாக்கு செய்தி மிக தெளிவாக வாசகர்களுக்கு விளக்கம் கொடுக்கிறது. யோபுவைப் போல இவரும் பல கேள்விகளை கடவுளிடம் கேட்கிறார், ஆனால் யோபு இறுதிவரை தன்னுடைய பாவமற்ற தூய்மையை மையப்படுத்தினார், ஆனால் இவர் பாவிகள் பாவம் செய்துகொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியை வாசகர்கள் சார்பாக கேட்கிறார். அபகூக்கின் கேள்விகள் கடவுளின் தூய்மையையோ அல்லது இவரது விசுவாசத்தையோ குறைக்கவில்லை, மாறாக அவர் கடவுளை கேள்வி கேட்பது அவர் விடையை அறிந்துகொள்வதற்குத்தான் என ஒரு புதிய இஸ்ராயேல் மெய்யறிவு முறையை முன்வைக்கிறார்

 அபகூக்குவின் காலத்தை கணிப்பது கடினமாக இருக்கும். சிலர் இந்த புத்தகத்தை கி.மு 2ம் நூற்றாண்டு என காண்கின்றனர். சிலர் பபிலோனியர்களின்காலம் எனவும் கணிக்கின்றனர்

அபகூக்குவின் இறையியல் இன்றைய நல்ல மனிதர்களின் பல கேள்விகளை சார்ந்திருக்கிறது. ஏன் தீயவர்கள் முன்னேறுகிறார்கள் நல்லவர்கள் தொடர்ந்து துன்புறுகிறார்கள் என்ற நவீன மனிதரின் கேள்விகளை இவர் அன்றே கேட்டுவிட்டார். இவர் மனிதருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் சீனாய் மலையின் உடன்படிக்கையை நினைவூட்டுகிறார். கடவுள் நீதிவழங்க காலம் தாழ்தினாலும், அவர் நீதி வழுவாது என்பதும் இவர் புத்தகத்தின் செய்தியாக இருக்கிறது அத்தோடு கடவுளின் மௌனமும், தீயவர்களின் வளர்ச்சியும், நீதிமான்களின் துன்பமும் வாழ்வியலின் முக்கியமான மறைபொருட்கள் என்பதையும் காட்டுகிறார். கடவுளை கேள்வி கேட்பது குற்றமுமல்ல பாவமுமல்ல, மாறாக அர்த்தம் தெரியாமல் மூட நம்பிக்கைகளைக் மட்டுமே கொண்ட உதவாத விசுவாசம்தான், குற்றமும் பாவமுமாகும் என்ற உளவியளாலர்களின் சிந்தனையை இந்த இறைவாக்கினர் அன்றே

கூறிவிட்டார்



.2: இந்த கேள்விகள் மிக முக்கியமான இதயத்தின் நெருக்கடிகளை பிரதிபலிக்கின்றன. இங்கேயும் எபிரேய திருப்பிக்கூறும் கவிநயம் பாவிக்கப்பட்டுள்ளது


. எத்துணை காலத்திற்கு துணைவேண்டி கூப்பிடுவேன் - நீர் செவிசாயதிருப்பீர்

. அழுது புலம்புவேன் - மீட்காதிருப்பீர் 


 முதலம் அதிகாரத்தின் முதல் நான்கு வரிகள் (1,1-4), தீமையின் எழுச்சியையும் அதன் வளர்ச்சியையும் வியந்து கேள்விகள் பல கேட்கின்றன. இந்த வரிகள் திருப்பாடல் 13 நமக்கு 

நினைவூட்டுகின்றன. இந்த வரிகளில் அபகூக்கு முன்வைக்கின்ற சமூதாய சிக்கல்கள் இஸ்ராயேல் மக்களால் இஸ்ராயேல் மக்களுக்கு செய்யப்படும் அநீதியை காட்டுகின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்கே அபகூக்கு குறிப்பிடுகின்ற வன்முறை உண்மையில் யூதேயாவில் அவர் கண்ட வன்முறையாகவே பார்கப்படவேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் நம்பிக்கை. மக்கள் மீட்கப்பட்டும் மீட்கப்படாமல் இருக்கிறார்கள். அதவாது கடவுள் சீனாயிலே உடன்படிக்கை செய்துகொண்டார் இருப்பினும் ஏழை மக்களின் துன்பங்கள் நீண்டுகொண்டே செல்கின்றனவே என்பது இவரின் கேள்வியாக இருக்கிறது


.3: இந்த வரி ஏறுவரிசை விவரணம் போல இன்னொரு எபிரேய கவிநயத்தை காட்டுகிறது

. கொடுமையை பார்க்கச் செய்கிறீர்

. கேட்டினைச் காணச் செய்கிறீர்

. கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன

. வழக்கும் வாதும் எழும்புகின்றன


இந்த முறைப்பாடுகள் அடுத்த வரியில் இன்னும் ஆழாக முன்வைக்கப்படுகிறன. இந்த கேள்வியை கேட்பதல்ல அபகூக்குவின் விருப்பம், மாறாக அதற்கான விடையை தன் வாசகர்கள் கண்டுகொள்ள வேண்டும் என்பதே அவர் விருப்பம். அதற்கான விடையையும் முதல் அதிகாரத்தின் 5-11வது வரிகள் தருகின்றன


.2: அபகூக்குவின் கேள்விகளுக்கு ஆண்டவர் இரண்டாம் அதிகாரத்தில் பதிலளிக்கிறார். அபகூக்கு ஆண்டவரிடம் கேள்விகேட்டதற்காக பயப்படுவதனைப்போல தெரியவில்லை மாறாக கடவுள் உடனடியாக பதிலளிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவர் போல காணப்படுகிறார். கடவுளின் உடனடியான பதிலுரையும் இந்த இறைவாக்கினரின் காத்திருப்பு நீதியானது என்பதைக் காட்டுகிறது. பலகைகளில் எழுது வைத்தல் அக்கால எழுதி கருவிகளின் பாவனையைக் காட்டுகிறது. கற்கள், சுடப்பட்ட களிமண் சிலேடுகள், பலகைகள் போன்றவை திறமையான எழுது சாதனங்களாக கருதப்பட்டன. இதன் மூலம், கடவுளின் வார்த்தைகள் பொய்காது அவை நிலைநிற்பவை என்ற செய்தி கொடுக்கப்படுகிறது


.3: காலம் தாழ்த்துதல் மற்றும் நிறைவேறாமை போன்றவை இரண்டும் ஒன்றல்ல, மாறாக இரண்டு விதமான யதார்த்தங்கள். காலம் தாழ்த்துவதால் கடவுளின் தண்டனைகளும், நிகழ்வுகளும் நிறைவேறாதவை என்ற எண்ணம் தவறானது என்பதை கடவுள் இறைவாக்கினருக்கு கொடுக்கிறார். அவை நிறைவேறியே தீரும் என்ற சொற்களில் ஒரு அவசரம் தெரிகிறது. காலம் எப்போதுமே கடவுளின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது என்ற சிந்தனை இஸ்ராயேலரின் நம்பிக்கையில் மிக முக்கியமான ஒன்று


.4: நேர்மையுடையவர் நம் நம்பிக்கையால் வாழ்வர் என்பதுதான் அபகூக்குவின் மையச் செய்தி

צַדִּיק בֶּאֱמוּנָתוֹ יִחְיֶה׃ நீதிமான்கள் தங்கள் உண்மைத்தன்மைகளில் இருப்பார்கள். நீதியாக வாழுதல் என்பது அதன் உள்ளார்ந்த தன்மையிலே புனிதமானது அத்தோடு துன்பங்கள் வரலாம், வராமல் போகலாம் ஆனால் நீதியான வாழ்க்கை எச்சந்தர்பத்திலும் சமரசம் செய்யப்படக்கூடாது என்ற இஸ்ராயேலரின் ஆழமான ஆன்மீகத்தை அபகூக்கு நமக்கு நினைவூட்டுகிறார்


திருப்பாடல் 95

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்

2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்

3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்

4பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன

5கடலும் அவருடையதே அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின

6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்

7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்

8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்

9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்

10நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது; 'அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'. 

11எனவே, நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.


 கடவுளை பாறை என்று விழிக்கும் இந்த திருப்பாடல் மிக முக்கியமான புகழ்ச்சிப்பாடல்களில் ஒன்று. மீட்பின் மகிழ்ச்சியான நற்செய்தி என்றும் இதனை ஆய்வாளர்கள் பெயரிடுகின்றனர். கடவுளை, பாறை, அரசர், படைத்தவர், உருவாக்கியவர், ஆயன், அத்தோடு அவருக்கே கீழ்ப்படிவு கொடுக்கப்படவேண்டும் என்ற பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பாடலில் சில இடங்களில் பல கடவுள் வழிபாடுகளை நினைவூட்டுகிற சொற்பதங்கள் காணப்பட்டாலும், இவை ஒரு கடவுள் வழிபாட்டை மையப்படுத்தவே பாவிக்கப்பட்டுள்ளன என்றே எடுக்க வேண்டும். அத்தோடு கடவுளுக்கு பாவிக்கப்படும் சொற்கள் (எலோகிம்) வேற்று தெய்வங்களுக்கு (אֱלִילִ֑ים எலிலிம் தி.பா 96,5) பாவிக்கப்படவில்லை அல்லது தவிர்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அதற்க்கு பதிலாக வேறு சொற் பதம் பாவிக்கப்பட்டுள்ளது

 தொண்ணூற்றைந்தாவது திருப்பாடல் காரியம் காரணம் வடிவத்தில், அத்தோடு அதிகமான பாடல் அடிகள் திருப்பிக்கூறுதல் கவி நயத்தில் அமைந்துள்ளது, இவ்வாறு:


1. (வவ.1-2). மகிழ்வுடன் ஆராதிக்க ஒரு அழைப்பு

 1. (வவ.3-5) ஆண்டவருடைய மாட்சியை பற்றிய விளக்கம்


2. (.6). வணக்கத்துடன் ஆராதிக்க ஒரு அழைப்பு

 2. (.7,,) எமது சலுகைகளைப் பற்றிய விளக்கம்


3. (7). பணிவிற்க்கான ஒரு அழைப்பு

 3. (வவ.8-11). அதனுடைய முக்கியமான விளைவுகளைப் பற்றிய விளக்கம்


வவ.1-2: மீட்பின் பாறை என்று ஆண்டவரை விழிப்பது இஸ்ராயேல் கவி வரிகளின் முக்கியமான ஒரு சொற்றொடர். பாலை நிலத்தில் அசையாமல் இருக்கும் கடினமாக பாறைகள் கடவுளின் பலத்தையும் மாட்ச்சியையும் மக்களுக்கு நினைவூட்டின. 'அவர் திருமுன் செல்வோம்' என்பதற்கு 'அவர் முகத்தின் முன் செல்வோம்' என்ற வரிகள் எபிரேயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன


.3: முதல் இரண்டு வரிகளுக்கான காரணங்கள் இந்த வரியில் விளக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் பெரிய இறைவன் என்பதும் (גָּדוֹל יְהוָה), தெய்வங்கள் எல்லாவற்றிக்கும் மோலான பேரரசர் என்பதும் இதற்கான காரணங்கள். கடவுளை அரசராகவும், தெய்வங்களை அரசர்களாகவும் பார்க்கின்ற சிந்தனைகள் இந்த காலத்தில் வழக்கிலிருந்தன. இஸ்ராயேல் இறைவாக்கினர்களுக்கு கடவுளை அரசராக காட்டவேண்டிய தேவையிருந்தது. கடவுள்தான் இஸ்ராயேலருக்கு என்றும் அரசர், மனிதர்கள் அவர்கள் அரசராக இருக்க முடியாது என்ற சிந்தனையை இது நினைவூட்டுகிறது (ஒப்பிடுக 1சாமு 8:7).


வவ.4-5: கடவுளுடைய படைப்பாற்றல்கள் விவரிக்கப்படுகின்றன. ஆழிகள், மலைகளின் கொடுமுடிகள், கடல், உலர்ந்த தரை போன்றவை கடவுளாலே படைக்கப்பட்டன என்னும் போது கடவுளின் மாட்சிமை வெளிப்படுத்தப்படுகிறது. எந்த ஒரு அரசனாலும் அல்லது வேறு தெய்வங்களாலும் இவை அனைத்தையும் படைத்திருக்க முடியாது என்ற வாதத்தை ஆசிரியர் சொல்லாமல் சொல்லுகிறார்


.6: இப்படியாக ஆண்டவர் வணக்கத்துக்குரியவராக இருக்கின்ற படியால் அவரை வணங்க ஆசிரியர் அழைப்பு விடுகிறார். முழந்தால் படியிடுதல் வணங்குதலை, அதிகமான வேளைகளில் எபிரேய மொழியில் குறிக்கிறது (נִשְׁתַּחֲוֶה வணங்குவோமாக).


.7: இந்த வரி வித்தியாசமாக கடவுளின் மக்கள், முதலில் யார் என்றும் கடவுள் யார் என்றும் விளங்கப்படுத்தி, பின்னர் கடவுளுக்கு செவிசாய்க்க ஒரு அழைப்பை விடுகிறது. ஆடும் ஆயனும் என்ற உருவகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் தெரிந்த மற்றும் அந்நியோன்யமான உருவகங்கள்


வவ.8-10: பணியாதவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை வரலாற்றின் பாடத்திலிருந்து விளக்க முயல்கிறார் ஆசிரியர். மெரிபாவிலும் மாசாவிலும் இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு செய்த காட்டிக்கொடுப்புக்கள் முக்கியமான படிப்பினைகளாக இஸ்ராயேல் பிள்ளைகளால் தங்கள் மறையறிவின் போது நினைவுகூறப்பட்டது


. மெரிபா (מְרִיבָה மெரிபாஹ்) என்றால் கலவரம் என்று பொருள். இது இரண்டு வித்தியாமனா நிகழ்வுகளாக விவிலியத்தில் பதியப்பட்டுள்ளது (ஆராய்க வி. 17,1-7 மற்றும் எண் 20,1-13 அத்தோடு தி.பா 81,7: 106,32). இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தண்ணீரைப் பற்றிய முறைப்பாடு பதியப்பட்டுள்ளது


. மாசா (מַסָּה மாசாஹ்) என்பது சோதித்தலைக் குறிக்கிறது. மெரிபாவைப்போல இதுவும் இஸ்ராயேலரின் முணுமுணுப்பையும், முறைப்பாடையும் பதிவு செய்த நிகழ்வு. இதுவும் கடவுளுக்கெதிரான ஒரு குற்றச் செயலாக இஸ்ராயேலரிடையே கணிக்கப்பட்டது (காண்க வி. 17,1-7: . 6,16: 9,22: 33,8). 


 கடவுளை சோதித்தால் மனிதருக்கு கிடைக்கும் விளைவு என்ன என்பதை இங்கே காணலாம். கடவுளை சோதித்ததை கடவுளுக்கு வெறுப்பூட்டியதாக ஆசிரியர் காண்கிறார். சோதித்ததும்,

வெறுப்பூட்டியதும் கடவுளிடம் இருந்து மனிதருக்கு தூரத்தை அதிகமாக்கியது என்கிறார் ஆசிரியர். அத்தோடு கடவுளின் மக்கள் புதிய பெயரை பெற்றுக்கொள்கின்றனர்.


. அலைகின்ற இதயத்தை கொண்ட மக்கள் (עַם תֹּעֵ֣י לֵבָב הֵם)

. அவர்கள் கடவுளின் பாதையை அறியாத மக்கள் (הֵ֗ם לֹא־יָדְעוּ דְרָכָי)


.11: இறுதியாக இந்த மக்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது, அதாவது அவர்கள் பாலைநிலத்திலே மடிந்தார்கள், அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு நுளைய முடியாமல் போனார்கள். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இங்கே ஒரு புதிய உருவகம் கொடுக்கப்படுகிறது அதாவது அது 'இளைப்பாற்றின் இடமாக' பார்க்கப்படுகிறது. இஸ்ராயேல் மக்களை மந்தைகளாக பார்க்கும் ஆசிரியர் மந்தைகளுக்கு இளைப்பாறும் இடம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கானானை இளைப்பாறும் இடமாக காண்கின்றார்


2திமோத்தேயு 1,6-8.13-14

6உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். 7கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

8எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

13கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். 14நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்.


 பவுல் திமோத்தேயுவிற்கு எழுதியதாக கருதப்படும் இந்த இரண்டாவது திருமுகம் மேய்ப்புப் பணி திருமுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தீத்து, 1திமோத்தேயு மற்றும் 2திமோத்தேயு போன்றவை பல விதங்களில் ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இவற்றை பவுல்தான் எழுதினார் என்ற ஒரு பலமான வாதமும் பாரம்பரிய நம்பிக்கையும் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கின்றது. அதே போல இவற்றை பவுலின் பெயரில் வேறு சிலர் எழுதினர் என்ற பலமான வாதங்களும் இந்நாட்களில் முன்வைக்கப்படுகின்றன. பவுல் இவற்றை எழுதியிருந்தால், இளைஞர்களாக இருந்த திருச்சபை ஆயர்களின் மேல் அவரின் மதிப்பிட முடியாத அன்பிற்கும் அக்கறைக்கும் இந்த கடிதங்கள் நல்ல எடுத்துக்காட்டுக்கள். பவுல் பெயரில் எழுதப்பட்டவையாக இருந்தால், ஆரம்ப கால திருச்சபையிலிருந்த பல சிக்கல்களை இந்த கடிதங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த திருமுகங்கள் ஒரு தலத் திருச்சபைக்கோ அல்லது கிறிஸ்தவ குழுமங்களுக்கோ எழுதப்படவில்லை மாறாக தனிப்ட்ட தலைவர்களுக்கு எழுதப்பட்டவை எனவே இந்த கண்ணோட்டத்தில் இவற்றை வாசிப்பது சாலச்

சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.


.6: திருப்பணி என்பது இங்கே திமோத்தேயுவின் ஆயத்துவத்தைக் குறிக்கலாம். கைகளை தலைமீது வைத்து செபித்தல் அந்த சடங்கை குறிக்கலாம். கைகளை வைத்து செபித்தல் விவிலியத்தில் ஒரு வகையான செப முறையைக் குறிக்கின்றன. முதல் ஏற்பாட்டில் பலியிடப்பட்ட விலங்குகளின் தலைகளில் கூட கைகளை வைத்து ஒரு வகையான சடங்குகளைச் செய்தனர் (காண்க லேவியர் 8,22). லேவியர்களும் குருக்களாக அபிசேகம் செய்யப்பட கைகளை வைத்து செபிக்கப்பட்டனர் (காண்க எண் 8,10). திருத்தூதர்களும் ஆரம்ப காலத்தில் தம் கைகளை வைத்து மக்களுக்காக செபித்து ஆவியை வழங்கினர் (காண்க தி. 8,18). இப்படி செபித்த போது ஆவியின் அருட் கொடை செபிக்கப்பட்டவரால் உணரப்பட்டதை பவுல் நினைவுகூறுவது அவதானிக்கப்பட வேண்டியது. ஆக ஆவியின் கொடைகளை உணரும் வகையாக ஒரு வகையான செபமாக இந்த கைகளை தலைமேல் வைத்து செபிப்பதைக் கொள்ளலாம்


.7: திமோத்தேயுவிற்கான பவுலின் வரிகளில் மிகவும் முக்கியமான வரி இதுவாகும். கோழைத்தனத்தை குறிக்க πνεῦμα δειλίας என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. கோழைத்தனமான ஆவியை என்பது சாதாரண மனித ஆவியைக் குறிக்கலாம். வல்லமையும், அன்பும் கட்டுப்பாடும் போன்ற பண்புகள் தூய ஆவியின் பண்புகளை நினைவூட்டுகின்றன


.8: ஒருவேளை பவுல் கைதியாக இருந்ததும், இந்த புறவின கிறிஸ்தவரின் (திமோத்தேயுவின்) சான்றும் ஏளன பொருளாக கருதப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படியான எண்ணங்கள் தவறானவை என்பதை இந்த விளக்கங்கள் காட்டுகின்றன. துன்பத்தில் பங்கு கொள்ளுதல் என்பது ஒரு முக்கியமான விவிலிய பண்பு. அதனை முன்னிட்டு வெட்கமடையாமல் அதனில் பங்குகொள்ள கேட்கிறார் பவுல்


.13: பவுல் தான் அறிவித்த வார்த்தைகளை நலம் தரும் வார்த்தைகளாகவும், மேல் வரிச் சட்டமாகவும் காண்கிறார்


.14: நல்ல போதனைகள் என்பது இங்கே நற்செய்தியைக் குறிக்கலாம். அக்காலத்தில் பவுல் அறிவித்த நற்செய்தி பல விதமான தப்பறைகளை சந்தித்தது அல்லது மாற்றுக் கருத்துக்களால் பாதிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து காணலாம். ஆக நல்ல நற்செய்தியை காப்பாற்றுவதும் ஒரு ஆயனின் தலையாகிய கடமை என்பதையும் பவுல் நினைவூட்டுகிறார்


லூக்கா 17,5-10

5திருத்தூதர்கள் ஆண்டவரிடம், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று கேட்டார்கள். 6அதற்கு ஆண்டவர் கூறியது: 'கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

7'உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா

8மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வாரல்லவா

9தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ

10அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்.'


லூக்கா நற்செய்தியின் இந்த பகுதி மிகவும் நோக்கப்பட வேண்டியது. பல வேளைகளில் பலர் இயேசுவிடம் இருந்து பலவற்றைக் கேட்கின்றனர். திருத்தூதர்கள் கூட இயேசுவிடம் முதன்மையான இருக்கைகளைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே திருத்தூதர்கள் இயேசுவிடம் தமது நம்பிக்கையை அதிகமாக்கும் படி கேட்பது, திருத்தூதர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இந்த பகுதியில் இரண்டு வகையான பிரிவுகளைக் காணலாம்:


: நம்பிக்கையின் பகுதி, வவ.5-6.

. பணிவாழ்கையின் நியதி, வவ.7-10.


. நம்பிக்கை என்பது இஸ்ராயேல் மக்களுக்கு சாதாரணமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு உன்னதமான பண்பு. அதே பாரம்பரியத்தில் இந்த பண்பு ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடமிருந்தும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. நம்பிக்கையை அதிகரிக்க திருத்தூதர்கள் கேட்டது, நம்பிக்கைக்கான கொடைக்காக அல்ல, மாறாக ஏற்கனவே தங்களிடம் உள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தவே கேட்கின்றனர். கடுகு மரம் வயல்களிலும், இல்லங்களிலும் வளர்க்கப்பட்ட ஒரு வகை சிறிய மரம். இந்த மரத்தில் பல வகைகள் பாலஸ்தீனாவில் காணப்பட்டன. இவை விதைகளுக்காக வளர்க்கப்பட்டு அதன் விதைகளில் இருந்த எண்ணை செய்யப்பட்டது. சில வேளைகளில் இதன் விதைகள் சரக்கு தூளாகவும் சமையலுக்கு பயன்பட்டது (κόκκον σινάπεως கடுகு விதை). இதனுடைய விஞ்ஞான தாவரவியல் பெயர் Brassica nigra Koch என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காட்டு அத்தி மரம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, συκάμινος சுகாமினோஸ், அதாவது ஒரு வகை மெல்பரி வகை மரத்தை சார்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மரம் 20 அடி உயரம் வரை வளரக் கூடியது, இதன் சிக்கலான வேர்களை மீட்பது உண்மையிலேயே மிக கடினமான வேலையாக இருக்கும். இதனால் இதன் வேர்கள் இலகுவில் வெளியே எடுக்கப்பட முடியாதவை. ஆக இதன் வேர்களோடு இந்த மரத்தை ஒருவர் பெயர்கிறார் என்றால் அவரின் விசுவாசம் உண்iமையில் மெச்சப்பட வேண்டியது. இது ஒரு வகையான பேச்சு கலையின் உதாரணம். நடக்க முடியாததை சொல்லி அதன் மூலம் ஒரு செயலின் கடினத்தை வியக்கும் ஒரு உதாரணம் இதுவாகும். ஊசியின் காதில் ஒட்டகம் நுழைதல் என்ற சொற்சொடரும் இப்படியான வகையைச் சார்ந்ததே


. இந்தப் பகுதி, அன்றைய நாட்களில் பணியாளர்கள், அடிமைகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற படத்தை நமக்கு வரைகிறது. அத்தோடு பணியாளர்கள் தங்களின் பணியைப் பற்றி எதுவும் தம்பட்டம் அடிக்கக்கூடாது, கர்வமில்லாத பணியாளர்களே உண்மைப் பணியாளர்கள் என்ற சிந்தனையை தூய லூக்கா மறைமுகமாக முன்வைக்கிறார். இங்கே கடினமான பணிவாழ்வை அல்லது எந்த விதமான அடிமை வாழ்வை இயேசுவோ அல்லது லூக்காவோ ஆதரித்தனர் என்ற தவறான முடிவுகளுக்கு வந்துவிடக்கூடாது


.7: அந்த நாட்களில் பணியாளர்களின் உரிமைகள் எப்படி மதிக்கப்பட்டன என்பதை நன்கு விளங்கிக்கொள்ளலாம். ஒருக்காலும் பணியாளர்கள், களைப்பில் வேலை முடித்து வந்தாலும் அவர்கள் முதலாளிகளுடன் சமபந்தியில் அமர்வது கிடையாது. அப்படியான ஒரு சமத்துவம் இருந்திருக்கவில்லை. இந்த அநீதியை லூக்கா நல்லதொரு உதாரணமாக எடுக்கிறார். முதலாளியிடம் சமமாக உணவருந்த அமருதல், பணியாளருக்கு முதலாளியின் அந்தஸ்தைக் கொடுக்கிறது. இங்கே இவருக்கு மறுக்கப்படுவது உணவல்ல மாறாக சம அந்தஸ்து என்பதை காணலாம்


.8: மான்புமிகு வைத்தியர், அந்த நாட்களில் சாதாரண முதலாளிகள் தங்கள் பணியாளர்களுக்கு என்ன செய்வார்கள் என்பதை உதாரணப்படுத்துகிறார். இடையை வரிந்து கட்டுதல், வேலை செய்வதற்கு ஆயத்தமாதல் என்பதைக் குறிக்கும். அக்கால யூதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்ததால், குனிந்து வேலை செய்ய இடையை வரிந்து கட்ட வேண்டிய தேவையிருந்தது. உண்டு குடித்தல், முழு நிறைவான விருந்தை குறிக்கிறது. தலைவர் உண்டு குடித்ததன் பின்னரே பணியாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது


.9: சாதாரண முதலாளிகள் தங்கள் பணியாளர்களுக்கு நன்றி சொல்வது கிடையாது. இந்த உதாரணம் பின்பற்றுவதற்கல்ல மாறாக தியானிக்க என நினைக்கிறேன். மனிதர்களின் முழுமையில்லா வாழ்கை முறையை இயேசு அழகாக பாவிக்கிறார். நன்றி சொல்லுதல் மிக முக்கியமான யூத பண்பு, ஆனால் பணியாளர்களுக்கு இது மறுக்கப்படுவது, பணியாளர்கள் என்றுமே முதலாளிகளின் உலகத்திற்கு வரமுடியாமல் போனது என்பதைக் காட்டுகிறது


.10: இப்படியான ஒரு முழுமையில்லாத பணிவாழ்வை இயேசு உதாரணமாக எடுத்தது பல கேள்விகளை முன்வைக்கிறது


. தம் சீடர்கள் கர்வமுள்ளவர்களாக இருக்கக் கூடாது என்பதற்காக


. உலகில் உள்ள தரக்குறைவான பணிவாழ்வே இப்படியிருக்கும் போது இறையரசின்   பணியாளர்கள் தங்களின் நலன்களை பாராமல் இறையரசின் நலன்களையே பார்க்க   வேண்டும் என சொல்கிறது


. பணிவாழ்வு இலகுவான ஒன்றல்ல மாறாக அது பல தியாகங்களை விட்டுக்கொடுப்புக்களை எதிர்பார்க்கிறது


'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' இந்த வரி ஆரம்ப கால திருச்சபையில் இருந்த பணியாளர்வர்க்க கர்வத்தை மறைமுகமாக சாடுகிறது. அக்காலத்திலிருந்த பணிக்கான போட்டி பூசல்களையும் இது நமக்கு நினைவூட்டுகிறது. பணி என்பது அதிகாரம் அல்ல மாறாக அது கொடுக்கப்பட்ட கடமை என்ற ஆழமான ஒரு செய்தியை லூக்கா நமக்கு ஆணித்தரமாக சொல்கிறார்





சிந்தனைக்கு சில கருத்துக்கள்


கடவுளின் மௌனமும், தீயவர்களின் வளர்ச்சியும், நீதிமான்களின் துன்பமும் வாழ்வியலின் முக்கியமான மறைபொருட்கள்

பணிவாழ்வு ஒரு அதிகாரமல்ல, அந்தஸதல்ல

மாறாக அது ஒரு கொடை.

பணியாளர் இயேசுவைத் தவிர எதையும் பற்றி தம்பட்டம் அடிக்க முடியாது.

நோக்கப்படவேண்டியவர்கள் பணியாளர்கள் அல்லர், அவர்கள் சொல்லும் ஆண்டவர்.

இன்று பணியாளர்களே இயேசுவை விட உயர நினைப்பதை என்னவென்று சொல்ல,

இயேசு எதையெல்லாம் தகர்க்க வந்தாரோ

அவற்றில் பல அவரின் பெயரிலேயே மறைமுகமாக முன்னெடுக்கப் படுகின்றன

லூக்காவின் இந்த கடைசி வரிகள் பணியாளர்களுக்கு உண்மையை உரைக்கட்டும்.



அன்பு ஆண்டவரே 

நாங்கள் வெறும் பணியாளர்களே என்ற உண்மையை 


ஒவ்வொரு கனப்பொழுதும் நினைவூட்டும். ஆமென்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...