வியாழன், 27 அக்டோபர், 2022

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தோராவது வாரம் Thirty-first Sunday in Ordinary Time



ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தோராவது வாரம் Thirty-first Sunday in Ordinary Time


'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!

(லூக்கா 19,9)

03-11-2019



Fr. M. Jegankumar Coonghe OMI

Shrine of Our Lady of Good Voyage, 

Chaddy, Velanai, 

Jaffna. 

Friday, 28 October 2022



முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 11,22-12,2

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145

இரண்டாம் வாசகம்: 2தெசலோனிக்கர் 1,11-2,2

நற்செய்தி: லூக்கா 19,1-10 


சாலமோனின் ஞானம் 11,22-12,2

22தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது. 23நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்; மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர். 24படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! 25உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? 26ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன.

1உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. 2ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்


  சாலமோனின் ஞானம் இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நூல் செப்துவாஜிந்தில் ஒரு நூலாக காணப்பட்டது, இதனை ஆரம்ப கால யூதர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நூல் தன் மூல மொழியாக கிரேக்கத்தை கொண்டிருப்பதனால் இதனை தற்கால யூதர்களும், பிரிந்த சகோதர கிறிஸ்தவர்களும் தங்களின் விவிலியங்களில் ஏற்றுக்கொள்வதில்லை. அரசர் சாலமோனின் பெயர் நேரடியாக இந்த புத்தகத்திலே குறிப்பிடப்படாவிட்டாலும், அவரின் மகிமையைக் காரணம் கண்டு, இந்த புத்தகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரத்திற்கும் 1அரசர் 3,6-9 இற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருச்சபைத் தந்தை தூய அகுஸ்தினுடைய விருப்பமான புத்தகம் இதுவாக இருந்திருக்கிறது. இதன் காலத்தை கணிப்பது கடினமாக இருந்தாலும், தற்போது இந்த புத்தகம் கி.மு முதலாம் நூற்றாண்டை சார்ந்தது என பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பக்திமிக்க யூதர். இவர் எகிப்து அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர், எபிரேய இலக்கியங்கள், கலாச்சாரம் அத்தோடு கிரேக்க இலக்கியங்கள், மற்றும் கிரேக்க மெய்யியலை நன்கு அறிந்தவராக இருந்திருக்க வேண்டும்மெய்யறிவு (ஞானம்) σοφία  சோபியா, என்பதுதான் இந்த புத்தகத்தின் மையப் பொருள். அதேவேளை மற்றைய ஞான நூல்களாக, யோபு, நீதிமொழிகள், சபை உரையாளர், சீராக், திருப்பாடல், மற்றும் இனிமைமிகு பாடல் போன்றவற்றிலும் பார்க்க இந்த நூல் தனித்துவமாக இருக்கிறது. இதன் இலக்கிய வகையாக புத்திமதி அல்லது அறிவுரை நூற்கள் என சிலர் இதனை வகைப்படுத்துகின்றனர், இந்த வகை கிரேக்க இலக்கியத்தில் மிகவும் முக்கியமான ஒரு வகை இலக்கியம். சிலர் இதனை அரிஸ்டோட்டிலின் இலக்கிய அலகுகளின் வகையிலும் சேர்க்கப் பார்க்கின்றனர். எது எவ்வாறெனினும் இது முழுக்க முழுக்க கிரேக்க இலக்கியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நினைக்கிறேன். முக்கியமாக இந்த புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர்

. மெய்யறிவின் அழியாத்தன்மை (நித்தியம்), அதிகாரங்கள் 1-6

. மெய்யறிவை பற்றிய விளக்கம், அதிகாரங்கள் 7-9

. வரலாற்றில் மெய்யறிவின் செயற்பாடுகள், அதிகாரங்கள் 10-19


.22: ஆண்டவரின் கண்முன் உலகத்தின் நிலையை விளக்குகிறார் ஆசிரியர்


. உலகம் நுண்ணிய தூசி போன்றது - தூசி அற்பமான பொருளுக்கான ஒரு முதல் ஏற்பாட்டு அடையாளம். கடவுள் இந்த தூசியிலிருந்துதான் மனிதனை படைத்திருக்கிறார். இந்த தூசி நிலையாமையைக் காட்டும், அத்தோடு அனைவருக்கும் தெரிந்த ஒரு அடையாளம்.


. நிலத்தில் விழும் காலைப் பனி - மத்திய கிழக்கு மற்றும் பாலை வன பகுதிகளில் சில காலங்களில் நிலத்தில் விழும் இந்த பனித்துளிகள், சூரியனின் வருகையால் அப்படியே காய்ந்து போகும். நிலையாமையை குறிக்கும் இன்னொரு முக்கியமான அடையாளத்தை இங்கே ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார்.


.23: இந்த மெய்யறிவு நூல் ஒரு முக்கியமான வாதத்தை முன்வைக்கிறது. கடவுள் மனந்திரும்புவதற்காக பாவிகளின் குற்றங்களை பார்த்தும் பாரமல் விடுகிறார், என்ற ஒரு வாதம் இங்கே ஆராயப்படுகிறது. ஏன் கடவுள் இப்படி செய்கிறார், இது அநீதி போல தோன்றினாலும், அவர் பாவி மனமாறுவதற்கான ஒரு வாய்ப்பை தேடுகிறார் என்பது புலப்படுகிறது அத்தோடு அதுவே கடவுளின் நீதியாகவும் காணப்படுகிறது. இதனையே புதிய ஏற்பாட்டில் இயேசுவும் பாவத்தை வெறுத்து பாவியை நேசித்த சந்தர்பங்கள், எமக்கு நினைவூட்டுகின்றன


.24: கடவுள் எதனையும் வெறுப்பதில்லை. கிரேக்க வரி, இந்த வசனத்தின் முதல் பகுதியை இவ்வாறு வாசிக்கிறது, ἀγαπᾷς γὰρ τὰ ὄντα πάντα  agapas gar ta onta 'அன்பு செய்கின்றீர், இருக்கின்ற ஒவ்வொன்றையும்' இதிலிருந்து கடவுளுக்கு பிடிக்காத ஒன்று, அவர் படைத்ததில் இல்லை என்ற ஓர் அழகான வாதம் முன்வைக்கப்படுகிறது. அதற்கான காரணத்தையும் ஆசிரியர் முன்வைக்கிறார். கடவுள்தான் அனைத்தையும் படைத்தார், அவர் படைத்த அனைத்தும் நல்லது, பிடிக்கவில்லை என்றால் அவர் படைத்திருக்க மாட்டார். ஆக படைத்த எதையும் நீங்கள் தீட்டு, கீழ்தரமானது என நினைக்காதீர்கள் என்று நமக்கு ஆசிரியர் புகட்டுகிறார்


.25: நீடித்தல் அல்லது காப்பாற்றப்படுதல் என்ற இந்த இரண்டு செயற்பாடுகளும், கடவுளிலேயே முழுமையாக தங்கியிருக்கின்றன என்கிறார் ஆசிரியர். இந்த உலகில் எதுவும் கடவுளின் திட்டமின்றி நிலைக்காது அல்லது எந்த ஆபத்திலிருந்தும் மீட்க்கப்படாது என்பது ஒரு மெய்யறிவுச் சிந்தனை. கிரேக்கர்களுடைய காலத்தில் இஸ்ராயேலர் அல்லது யூதர்கள் பல கலாபனைகளைச் சந்தித்தனர், சிலர் கிரேக்க மயமாக்களுக்குள் தங்களை ஈடுபத்தியும் கொண்டனர், இந்த ஆபத்தான நிலையில், நம்பிக்கை தரவேண்டியது விவிலிய ஆசிரியர்களின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நோக்கத்தை இந்த வரியில் காணலாம்


.26: உயிர்கள் யாருடையவை? அவை கடவுளுடையவை என்கிறார் ஆசிரியர். கிரேக்க மொழியில் உயிர்கள் என்பதைவிட, 'அனைத்தையும்' என்றே உள்ளது. ஆக இங்கே உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை அனைத்தையும் கடவுளின் பராமரிப்பில் வைக்கிறார் ஆசிரியர். கடவுளுக்கு ஆசிரியர் அழகான கிரேக்க பெயர் ஒன்றை வைக்கிறார். கடவுள் இங்கே உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே!(φιλόψυχε பிலொப்புகே), என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சொல் உயிரை, ஆன்மாவை அல்லது மூச்சு விடுகிறதை மீட்கிறவர் என்ற அர்த்தத்தையும் கொடுக்கும்


.1: ஆண்டவருடைய ஆவியை பற்றி முதல் ஏற்பாட்டில் சுட்டிக்காட்டுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. இங்கே ஆண்டவரின் ஆவி இன்னொரு ஆளாக, அது அனைத்திலும் இருப்பதாக காட்டப்படுகிறது (πνεῦμά ἐστιν ἐν πᾶσιν pnuma estin en pasin அனைத்திலும் உம் ஆவி).


.2: மீண்டுமாக தவறு செய்பவர்கள் எவ்வாறு திருத்தப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.

. அவர்கள் சிறிது சிறிதாக திருத்தப்படுவர் (κατ᾿ ὀλίγον kat holigon)

. அவர்களின் பாவத்தாலேயே எச்சரிக்கப்படுவர் ὑπομιμνῄσκων νουθετεῖς, hupomimvēskōn noutheteis

. இதனால் அந்த பாவத்திலிருந்து விடுபடுவர் ἀπαλλαγέντες τῆς κακίας apallagentes tēs kakias

. கடவுள் மேல் நம்பிக்கை கொள்வர் - πιστεύσωσιν ἐπὶ σέ, κύριε.  pisteusōsin epi se, Kurie

 இந்த படிமுறைகள் நமது ஒப்புரவு திருவருட் சாதனத்தை நினைவூட்டுகின்றன


திருப்பாடல் 145

அரசராம் கடவுள் போற்றி!

(தாவீதின் திருப்பாடல்)


1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்

2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்

3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது

4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்

5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்

6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்

7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்

11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்

13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது

14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்

15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்

16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். 17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்

19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்

20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார்

21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


திருப்பாடல் 145 அகர வரிசையில் எழுதப்பட்ட ஒரு புகழ்ச்சிப் பாடல். புகழ்சிப்பாடலாக இருக்கின்ற அதே வேளை, அரச புகழ்சிப்பாடலுக்குரிய பல முக்கியமான வார்த்தைகளையும் இப்பாடல் கொண்டுள்ளது. அகர வரிசையில் பாடல்களையும் மெய்யறிவு அறிவுரைகளையும் அமைப்பது எபிரேய இலக்கியத்தில் மிகவும் பிரசித்தமானது. தமிழ் இலக்கியத்திலுள்ள ஒளவையார் பாடல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவை இப்படியான இலக்கிய படைப்புக்களாகும்


ஆத்திசூடி

றம் செய்ய விரும்பு

றுவது சினம்

யல்வது கரவேல்

வது விலக்கேல்

டையது விளம்பேல்

... (தொடர்ந்து வரும்)

கம் சுருக்கேல்


கொன்றை வேந்தன்

ன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்

லயம் தொழுவது சாலவும் நன்று

ல்லறம் அல்லது நல்லறம் அன்று

யார் தேட்டை தீயார் கொள்வர்

... (தொடர்ந்து வரும்)

கமும் காசும் சிக்கெனத் தேடு


திருப்பாடல் 145

 (எபிரேயத்தின் முதல் எழுத்தான א அலெப்) אֲרוֹמִמְךָ֣ אֱלוֹהַ֣י

 (எபிரேயத்தின் இரண்டாம் எழுத்தான ב பேத்)בְּכָל־י֥וֹם אֲבָרֲכֶ֑ךָּ

(எபிரேயத்தின் மூன்றாம் எழுத்தான ג கிமெல்)גָּ֘ד֤וֹל יְהוָ֣ה 

(எபிரேயத்தின் நான்காம் எழுத்தான ד தலெத்)דּ֣וֹר ל֭֭דוֹר

(தொடர்ந்து வரும்)...


(எபிரேயத்தின் இறுதி (இருபத்திரண்டாவது) எழுத்தான ת தெத்) תְּהִלַּ֥ת יְהוָ֗ה



  இப்படியான அகரவரிசை பாடல்கள், மனப்பாடம் செய்வதற்கு வசதியாக இருக்கும் படி அமைக்கப்பட்டிருக்கலாம், அல்லது முழுமையை காட்டவும் இப்படியான அமைப்புக்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம். இப்படியான திருப்பாடல்களில் 119வது திருப்பாடலையே அதி முக்கியமானதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர், அந்த 119வது திருப்பாடல், 176 வரிகளைக்கொண்டுள்ளது. ஒவ்வொரு இருபத்திரண்டு எழுத்துக்களும் எட்டுதடவைகளாக அதே எழுத்தில் அமைந்திருக்கும் (22x8=176)

திருப்பாடல் புத்தகத்தில் காணப்படும் அகரவரிசைப் பாடல்களில் இந்த 145வது சங்கீதமும் ஒன்று. நுன் (נ , ן, பதினான்காவது எழுத்து) வருகின்ற வரி மட்டும் இதில் இல்லாமல் இருக்கிறதுஇதனால்தான் இந்த பாடல் 21வரிகளைக் கொண்டிருக்கிறது, இல்லாவிடில் இதில் 22வரிகள் காணப்படும். காலத்தின் ஓட்டத்தில் இந்த வரி அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறதுஇருந்தாலும், மனித மொழியான எபிரேயம், ஆண்டவரின் மறைபொருளை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதது என்பதைக் காட்டவே, ஆசிரியர் வேண்டுமென்றே இந்த (நுன்) வரியை (14ம்) விட்டிருக்கலாம் என்ற ஒரு பலமான வாதமும் இருக்கிறது

  இந்தப் பாடல், கடவுள் பாடப்படவேண்டியவர், மற்றும் அவருடைய மாட்சிமை புகழப்படவேண்டியது என்பதைக் காட்டுகிறது. தாவீதின் திருப்பாடல் என்று தொடங்கும் இந்த திருப்பாடல், அதிகமான திருப்பாடல்களைப் போல் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. (תְּהִלָּה לְדָוִד தெஹிலாஹ் லெதாவித் - தாவீதின் (தாவீதுக்கு) பாடல் (புகழ்))


.1 (א '- அலெப்): திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய அரசராக காண்கிறார் 

(אֱלוֹהַי הַמֶּלֶךְ 'எலோஹாய் ஹம்மெலெக்- என்கடவுள் அரசர்). கடவுளைப் போற்றுவதும் அவர் பெயரைப் போற்றுவதும் சமனாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புகழ்ச்சி என்றென்றைக்கும் நடைபெற வேண்டியது என்கிறார்.


.2 (בּ - பெத்): மீண்டுமாக ஆண்டவரும் அவர் பெயரும் ஒத்தகருத்துச் சொற்களாக பார்க்கப்டுகின்றன. ஆண்டவரை போற்றுதலும் அவருடைய பெயரை புகழ்தலும் நாள் முழுவதும் செய்யப்பட வேலை என்பதை விளக்குகின்றார்


.3 (גּ கி- கிமெல்): ஆண்டவரை புகழ்வதற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பெரியவர், மாட்சிக்குரியவர். இந்த சொற்கள், மனிதர்கள் மற்றும் மனித தலைவர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு ஆண்டவருடைய உயரிய தன்மைகள் தேடிக்கண்டுபிடிக்க முடியாதவை என்பதையும் விளக்குகிறார் (אֵין חֵקֶר 'ஏன் ஹகெர்- தேட முடியாதது). 


.4 (דּ - தலெத்): ஒரு தலைமுறையின் நோக்கத்தை கடவுள் அனுபவத்தில் பார்க்கிறார் ஆசிரியர். அதாவது ஒரு தலைமுறையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு கடவுளின் புகழை எடுத்துரைப்பதாகும் என்கிறார். இந்த புகழை அவர், வல்லமையுடைய செயல்கள் என்கிறார்.

 தலைமுறைகள் வரலாற்றைக் குறிக்கின்றன. வரலாறு கடத்தப்படவேண்டும். வரலாற்றை சரியாக படிக்கிறவர்கள், அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த ஆயத்தமாக இருக்கிறார்கள்.  דּוֹר לְדוֹר dōr ledōr - தலைமுறைக்கு தலைமுறை


.5 - ஹெ): மனிதர்கள் எதனைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. கடவுளுடைய வியத்தகு செயல்கள், மாண்பின் மேன்மை இவற்றைப் பற்றியே தான் சிந்திப்பதாகச் சொல்கிறார். இது கடவுளை புகழ்தலுக்கு சமமானது என்ற அர்த்தத்தில் வருகிறதுהֲדַר כְּבוֹד hadar kevōd - kfpikapd; Gfo;. 


.6 - வாவ்): கடவுளுடைய செயல்கள் அச்சம் தருபவை என சொல்லப்படுகின்றன. இந்த அச்சம் பயத்தினால் ஏற்படுபவையல்ல, மாறாக கடவுள்மேல் உள்ள மாறாத அன்பினால் வருபவை. கடவுளுடைய இந்த அச்சந்தரும் செயல்கள் נוֹרְאֹתֶיךָ nōr’ōteka , மாண்புக்குரிய, உயரிய செயல்கள் என்று ஒத்த கருத்தில் திருப்பிக்கூறப்பட்டுள்ளது (גְּדוּלָּה கெதூலாஹ்- உயர்தன்மை). 


.7 ட்ச- ட்சயின்): ஆண்டவரின் உயர்ந்த நற்பண்புகளை (זֵכֶר רַב־טוּבְךָ֣ dzeker rav-tūvka) நினைப்பது அவரை புழந்து பாடுவதற்கு சமன் என்கிறார். ஒருவருடைய நற்பண்புகளை நினைத்தல், அவர்மேல் உள்ள நல்மதிப்பு மற்றும் விசுவாசத்தை ஆழப்படுத்தும், என்ற தற்கால உளவியல் சிந்தனைகளை அன்றே அறிந்திருக்கிறார் இந்த ஆசிரியர்


.8 - ஹத்): முதல் ஏற்பாடு அடிக்கடி கொண்டாடும் கடவுளைப் பற்றிய பல நம்பிக்கைகளை 

இந்த வரி அழகாக தாங்கியுள்ளது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர் என்பது 

இஸ்ராயேலருடைய நாளாந்த நம்பிக்கை. இந்த இரக்கமும் கனிவும்தான் கடவுளின் மன்னிப்பை மக்களுக்கு பெற்றுத்தருகிறது என இவர்கள் நம்பினார்கள் (חַנּוּן וְרַחוּם יְהוָה ஹனூன் வெராஹம் அதோனாய் - இரக்கமும் பரிவும் உள்ளவர் ஆண்டவர்). 

இந்த ஆண்டவர் எளிதில் சினம் கொள்ளாதவர் என்கிறார் ஆசிரியர். தெய்வங்களின் கோபம், நோய் மற்றும் போர் போன்றவை துன்பங்களை உலகில் ஏற்படுத்துகின்றன என்று அக்கால ஐதீகங்கள் நம்பின, இதனை மறுத்து உண்மையான இஸ்ராயேலின் தேவனின் குணங்கள் பாராட்டப்படுகின்றன (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அபிம்- மூக்கில் மெதுமை, கோபத்தில் மெதுமை). ஆண்டவருக்கு பேரன்பு என்ற அழகான பண்பு மகுடமாக சூட்டப்படுகிறது (חָסֶד ஹெசெட்- அன்பிரக்கம்).  மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்புகள் ஆண்டவருக்கு மட்டுமே அதிகமாக விவிலியத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்க வேண்டும்


.9 (טֹ - தெத்): ஆண்டவர் அனைவருக்கும் (அனைத்திற்கும்) நன்மை செய்கிறவராக பார்க்கப்படுகிறார். இந்த அனைத்து (כֹּל கோல், சகலமும்) என்பதை அவர் உருவாக்கியவை என காட்டுகிறார் ஆசிரியர். ஆக இந்த உலகத்தில் கெட்டவை என்பது கிடையாது, அனைத்தும் நல்லவை, அவையனைத்தையும் ஆண்டவரே உருவாக்கியுள்ளார் எனக் காட்டுகிறார். ஆண்டவருடைய இரக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக அது அனைத்திற்கும் உரியது. இந்த சிந்தனை சாதாரண யூத சிந்தனையிலிருந்து மாறுபட்டது


.10: - யோத்): இப்படியாக ஆண்டவர் உருவாக்கிய (מַעֲשֶׂה மா'அசெஹ்- உருவாக்கியவை) அனைத்தும் அவருக்கு நன்றி செலுத்துகின்றன. இந்த ஆண்டவர் உருவாக்கியவை என்பவை ஆண்டவருடைய அன்பர்கள் (חָסִיד ஹசிட்- தூயவர், அன்பர்) என பெயர் பெறுகின்றன


.11 (כּ - கப்): இந்த அன்பர்கள் கடவுளுடைய ஆட்சியின் வித்தியாசத்தை அறிவிக்கிறவர்கள் அதாவது அவருடைய வல்லமையை நன்கு அறிந்திருக்கிறார்கள் (כְּבוֹד מַלְכוּתְךָ֣ kevōd malkūtka- உமது ஆட்சியின் மகிமை). ஆண்டவரை அரசராக பார்ப்பதும் அவருடைய அரசில் நன்மைத்தனங்களை பாடுவதும், முதல் ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். இதனைக் கொண்டு அவர்கள் மனித அரசர்களை பாராட்டவும், எச்சரிக்கை செய்யவும் செய்தார்கள்


.12 - லமெத்): இந்த தூயவர்கள் மானிடர்க்கு ஆண்டவரின் வல்ல செயல்களை சொல்கிறார்கள். மானிடர்கள் என்பவர்கள் இங்கே ஆண்டவரை அறியாத வேற்றின மக்களைக் குறிக்கலாம். இந்த மானிடர்களைக் குறிக்க ஆதாமின் மக்கள் (בְנֵי הָאָדָם வெனே 'ஆதாம்) என்ற சொல் பயன்படுகிறது. இந்த சொல் சில வேளைகளில் இஸ்ராயேல் மக்களையும் குறிக்க பயன்படுகிறது. ஆண்டவருடைய ஆட்சிக்கு பேரொளி உள்ளதாகவும் ஆசிரியர் காட்டுகிறார்


.13 מ - மெம்): அனைத்து மன்னர்களுடைய ஆட்சியும் காலத்திற்கு உட்பட்டதே. மன்னர்களின் ஆட்சிகள் தொடங்குகின்றன பின்னர் அவை முடிவடைகின்றன. ஆளுகை என்பது அவர்களின் ஆட்சி நடைபெறும் இடங்கள். இவையும் மாற்றமடைகின்றன. ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் அவர் இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர். இதனைத்தான் ஆசிரியர் அழகாகக் காட்டுகிறார் (מַֽלְכוּתְךָ֗ מַלְכ֥וּת כָּל־עֹֽלָמִ֑ים malkūtekā malkût kôl-‘ôlāmîm- உமது அரசு என்றென்றுமுள்ள அரசு). ஒருவேளை இந்தப் பாடல் இடப்பெயர்விற்கு பின்னர் அல்லது யூதேய அரசு சிக்கலான காலங்களில் இருந்த போது எழுதப்பட்டிருந்தால், இந்த வரி அதிகமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்


.14 (סֹ - சாமெக்): இந்த பதிநான்காவது வரி எபிரேய (அரமேயிக்க) எழுத்தில் நுன்னாக 

ן ,) இருந்திருக்க வேண்டும். எதோ ஒரு முக்கிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நுன் விடப்படுகிறது. அதற்கு பதிலாக சாமெக் வருகிறது, இது பதினைந்தாவது எழுத்து. சில கும்ரானிய படிவங்கள் இந்த பதிநான்காவது எழுத்திற்கும் ஒரு வரியை புகுத்த முயன்றிருக்கின்றன, ஆனால் பிற்காலத்தில் அவை மூலப் பாடலின்படியே விடப்பட்டுள்ளன. கும்ரானிய பிரதியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வரி இவ்வாறு வருகிறது: 'ஆண்டவருடைய வார்த்தைகள் எக்காலத்திற்கும் நம்பக்கூடியவை, அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிகைக்கு உரியவை'  

  சாமெக் வரி, பாதிக்கப்பட்டவர்களை கடவுள் எப்படி காக்கிறார் எனக் காட்டுகிறது. கடவுள் தடுக்கி விழுகிறவர்களை காக்கிறவராக காட்டப்படுகிறார். இந்த தடுக்கி விழுகிறவர்களை எபிரேய விவிலியம், துன்புறுகிறவர்கள் மற்றும் மற்றவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் போன்றோரைக் குறிக்கிறது (הַנֹּפְלִים ஹநோப்லிம்- விழுகிறவர்கள்: הַכְּפוּפִים ஹப்பூபிம்- ஊக்கமிழந்தவர்கள்). 


.15 (ע '- அயின்): அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்குபவராக கடவுள் காட்டபடுகிறார். இந்த வரியை எபிரேயே விவிலியம், 'அனைத்து கண்களும் உம்மையே எதிர்பார்க்கின்றன' (עֵינֵי־כֹל אֵלֶיךָ יְשַׂבֵּרוּ ‘ēnē-kôl ’ēlêkā yesabērû) என்ற வரியில் காட்டுகிறது, அத்தோடு கடவுள் அனைத்திற்கும் தக்க காலத்தில் உணவளிக்கிறவர் எனவும் காட்டுகிறது. இங்கே கடவுள் அதிசயம் செய்து, காலங்களை கடந்து அல்லது காலத்திற்கு புறம்பாக உணவளிப்பவராக காட்டப்படவில்லை, மாறாக அவர் தக்க காலத்திலேயே உணவளிக்கிறார். அதாவது காலங்களை அவர் நெறிப்படுத்துகிறார் எனலாம். அதிசங்களை இயற்கைக்கு வெளியில் தேடாமல்இயற்கையே அதிசயம்தான் என்ற அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது


.16 (פּ , ף - பே): ஆண்டவர் தன் கைகளை திறந்து அனைத்து உயிரினங்களினதும் தேவைகளை நிறைவேற்றுகிறவராக பாடப்படுகிறார். ஆண்டவர் கரங்களை திறத்தல் என்பது, வானங்களை திறந்து மழைநீரை வழங்குவதைக் குறிக்கலாம். மழைநீர் அனைத்து உயிரினங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதால் இப்படி உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஆண்டவரின் கரங்களில் அனைத்து விதவிதமான உணவுகளும் அடங்கியிருக்கின்றன என உருவகங்கள் மூலமாகக் காட்டுகிறா



.17 (צ , ץ, ட்ச- ட்சாதே ): உலக அரசர்கள் தங்களுக்கென்று நீதியை வைத்திருக்கிறார்கள். நாடுகள், கலாச்சாரங்கள், சுய தேவைகள் என்பவற்றிருக்கு ஏற்ப உலக நீதி மாற்றமடைகிறது அல்லது திரிபடைகிறது. ஆனால் கடவுளை பொறுத்தமட்டில் அவரது நீதிக்கு மாற்றம் கிடையாது அவர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளவராகவே இருக்கிறார். இந்த அனைத்து செயல்களில் ஆண்டவரின் தண்டனையும் உள்ளடங்கும். ஆண்டவர் தண்டிக்கும்போதும் நீதியுள்ளவராகவே 

இருக்கிறார். צַדִּיק  יְהוָה ட்சாதிக் அதோனாய் (ஆண்டவர் நீதியுள்ளவர்) בְּכָל־דְּרָכָיו பெகோல்-தெராகாய்வ் (அவருடைய வழிகள் அனைத்திலும்). 



.18 - கோப்): ஆண்டவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி விவிலியத்தில் மிக முக்கியமானது. பல இடங்களில் ஆண்டவர் வானத்தில் இருக்கிறார் என விவிலியம் காட்டினாலும், ஆண்டவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு மிக அருகில் இருக்கிறார் (קָר֣וֹב יְ֭הוָה לְכָל־קֹרְאָיו kaôv YHWH lekôl-kôr’āyw) என்பதை இந்த வரி ஆழமாகக் காட்டுகிறது. அதுவும் அந்த விசுவாசிகள் கடவுளை உண்மையில் அழைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பையும் தருகிறது


.19 - ரெஷ்): ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மெச்சப்படுகிறார்கள். காட்டுச் சுதந்திரத்தையும், பொறுப்பில்லாத தனிமனித சுதந்திரத்தையும் பாராட்டுகின்ற இந்த உலகிற்கு, கடவுள்-அச்சம் ஒரு உரிமை மீறலாகவே காணப்படும். விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்ற கடவுள் அச்சம் என்பது, மரியாதை மற்றும் அன்பு கலந்த விசுவாச அச்சத்தைக் குறிக்கும். இங்கே மனிதர்கள் பயத்தால் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள் என்றில்லை, மாறாக சட்டங்களில் உள்ள தேவைகள் மற்றும் கடவுளில் உள்ள அன்பின் பொருட்டு அதனை செய்கிறார்கள். இதனைத்தான் ஆசிரியர் பாராட்டுகிறார். இவர்களின் தேவையை கடவுள் நிறைவேற்றுகிறார் என்கிறார்


.20 (שׁ - ஷின்) இந்த வரி கடவுளை பாதுகாக்கிறவராகக் காட்டுகிறது (שׁוֹמֵר ஷோமெர்). ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொண்டவர்களை பாதுகாக்கின்றவேளை, பொல்லார்களை அழிக்கிறார். பாதுகாக்கிறவர் அழிக்கிற வேலையையும் செய்கிறவர் என்ற சிந்தனை பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த சிந்தனை புதிய ஏற்பாட்டில் மெதுவாக மாற்றம் பெறுகிறது


.21- தௌ): இந்த இறுதி வரியில் தன்னுடைய வாயையும், உடல் கொண்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக்கி, இவை ஆண்டவரின் திருப் பெயரின் புகழை அறிவிப்பதாக என்று ஒரு விருப்பு வாக்கியத்தை அமைக்கிறார். உடல் கொண்ட அனைத்தும் என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும்


2தெசலோனிக்கர் 1,11-2,2

11இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! 12இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

1சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது 2ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.


  இந்த கடிதம் பவுலால் எழுதப்பட்டு தெசலோனிக்க திருச்சபைக்கு அனுப்பப்பட்டது என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு சார்பாகவும் எதிராகவும் பல வாதங்கள் இன்று வரை இருக்கின்றன. ஆனால் இக்கடிதத்தில் உள்ள உள்ளகச் சான்றுகள் பல இதனை பவுல் எழுதியிருக்கமாட்டார் எனவும், அவரின் பெயரில் அவர் சீடர் ஒருவர், இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த பல சிக்கல்களுக்கு பவுல் எப்படி பதில் தந்திருப்பார் என்பது போல, இக் கடிதம் அமைக்கப்பட்டுள்ளதாக வாதாடுகின்றனர். முதலாம் தெசலோனிக்கர் மடலை பல வழிகளில் ஒத்திருந்தாலும், பல விடயங்களில் இது வித்தியாசமாக இருக்கிறது. முக்கியமாக தனி உறவு வார்த்தைகளின் மறைவு, அந்தரத் தொனி, பரூசியாவை (இரண்டாம் வருகை) பற்றிப் பேசுகின்ற போது சிலுவை மற்றும் உயிர்ப்பைப் பற்றிய வார்த்தைகள் இல்லாமை, போன்றவற்றைக் குறிப்பிடலாம்

  கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை இக் கடிதத்தின் காலமாக சிலர் கணிக்கின்றனர். இங்கே பவுல் தன்கையால் எழுதினார் என்ற வார்த்தைகள் (காண்க 2தெச 3,17) வித்தியாசமாக உள்ளது. இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர் நோக்கிய பயங்கரமான கலாபனைகளையும், சித்தரவதைகளையும் தாண்டி அவர்கள் தங்கள் விசுவாசத்தில் பயணம் செய்ய, ஆசிரியர் பவுலின் பெயரை பாவித்திருக்கலாம். இப்படியான முறைமை அன்றைய நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகவே இருந்தது. (நல்ல வேளை இவருக்கு நம்முடைய 'மொட்டை கடிதத்தைப்' பற்றிய அறிவு இல்லாமல் இருந்தது). இன்றைய நான்கு வரிகள், இரண்டு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. முதலாவது, தீர்ப்பு நாளைப் பற்றிய பகுதியிலிருந்தும், இரண்டாவது பகுதி ஆண்டவரின் வருகைக்கான அடையாளங்கள் என்ற பகுதியிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.  


(இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை).


.11: இந்த வரிக்கு முன் தீர்ப்பு நாளைப்பற்றி விளக்கிய ஆசிரியர், கலாபனைகளில் கிறிஸ்தவர்கள் சாட்சியமாக நிற்க வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். இயேசு ஆண்டவர் வருகின்ற போது அவர் நிச்சயமாக நம்பிக்கையில்லாதவர்களையும், கிறிஸ்தவர்களை துன்புறுத்துகிறவர்களையும் தண்டிப்பார் எனவும் காட்டுகிறார். பின்னர் இதற்காகத்தான் தான் இப்போதும் வாசகர்களுக்காக வேண்டுவதாக எழுதுகிறார். இந்த கடிதத்தை எழுதுகிற ஆசிரியர் தெசலோனிக்க கிறிஸ்தவர்களின் துன்பங்களை நன்கு அறிந்தவர் என்பது இந்த வரிகளின் மூலம் நன்கு புலப்படுகிறது. அத்தோடு இந்த கிறிஸ்தவர்களின் நல்லெண்ணங்களையும் (ἀγαθωσύνη agathosunê ), நம்பிக்கை செயல்களையும் (ἔργον πίστεως ergon pisteôs) கடவுள் நன்கு அறிந்துள்ளார் என்று கூறி அவர்கள் எப்போதுமே கடவுளின் பார்வையில்தான் இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்


.12: இந்த வசனத்தில் ஆரம்ப கால திருச்சபை இயேசுவிற்கு கொடுத்த பெயரொன்று புலப்படுகிறது. இயேசுவை கடவுளும் ஆண்டவரும் என விழிப்பது இங்கே நோக்கப்படவேண்டும், (θεοῦ ἡμῶν καὶ κυρίου Ἰησοῦ Χριστοῦ. Theou hêrmôn kai kuriou Iêsou Cristou எங்கள் கடவுளும் ஆண்டவருமாக இயேசு கிறிஸ்து). இந்த வசனம் கிறிஸ்தியலின் வளர்ச்சிக்கு ஊட்டம் கொடுத்திருக்க வேண்டும். இயேசுவை கடவுளாக பார்ப்பது பிற்கால நம்பிக்கை என்ற பேதகம் (தப்பறை) நான்காம் நூற்றாண்டிலே திருச்சபையை உலுக்கியது, ஆனால் இயேசுவை கடவுளாக அறிக்கையிட்ட இந்த முதலாம் இரண்டாம் நூற்றாண்டு விசுவாச வார்த்தைகள், நம்முடைய விசுவாசத்திற்கு நல்ல ஆதாரங்கள் ஆகின்றன. அத்தோடு இங்கே ஒருவரின் விசுவாசம்இயேசுவிற்கும் அவரை விசுவசிக்கும் அந்த நபருக்கும், நன்மை செய்கிறது என்கின்ற, ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் ஒரு நன்மைத்தனத்தை காட்டுகிறார்


வவ.1-2: ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை (παρουσία பரூசியா) பற்றிய நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையின் மிக முக்கியமான நம்பிக்கையில் ஒன்றாக இருந்தது. இயேசு தன்னுடைய விண்ணேற்பிற்கு முன்னர் பல வேளைகளில் அவருடைய இரண்டாம் வருகையைப் பற்றி பல தரவுகளை தந்திருந்தார். இயேசுவோடு இருந்த முதலாவது பரம்பரையான திருத்தூதர்களின் இறப்புவரை இந்த நம்பிக்கை கேள்விகளை சந்திக்கவில்லை. திருத்தூதர்களின் மறைவும், ஆரம்பகால திருச்சபையின் சிக்கல்கள் மற்றும் கலாபனைகள் இந்த இரண்டாம் வருகையைப் பற்றிய பல கேள்விகளை உருவாக்கியது

 உரோமைய சீசர்கள், மற்றும் கிரேக்க அரசர்கள் தங்கள் வேற்று நாட்டு மாகாணங்களை சந்திக்க வருவதை அல்லது தங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதையும், கிரேக்க-உரோமர்கள் பரூசியா என்று நம்பினார்கள். முதல் ஏற்பாட்டில் கடவுளின் நாளையும் பற்றிய பல சிந்தனைகள் 

இஸ்ராயேல் மக்களிடையே நம்பிக்கையில் இருந்திருக்கிறது. இந்த சிந்தனைகளின் தாக்கத்தை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான பரூசியாவில், இயேசுவின் இரண்டாம் வருகையில் காணலாம்

 இந்த இரண்டு வரிகளில் ஆசிரியர், தன் வாசகர்கள் இப்படியான பரூசியாவைப் பற்றிய போதனையில் அவதானமாக இருக்கும் படி அறிவுறுத்துவதைக் காணலாம். திருத்தூதர்களின் 

இறப்பின் பின்னர், ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிய தெளிவு யாருக்கும் கிடையாது அது கடவுளுக்கு மட்டுமே உரியது என்பதை திருச்சபைத் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால் சில வேளைகளில் இந்த முக்கியமான படிப்பினையை சிலர் தவறாக பயன்படுத்தி தங்களை பிரபல்யப் படுத்த முயன்றனர். இவர்கள் மட்டிலேதான், தன் வாசகர்களை கவனமாக இருக்கக் கேட்கிறார் ஆசிரியர்



லூக்கா 19,1-10

1இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். 2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். 3இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். 4அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். 5இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், 'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்றார். 6அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். 7இதைக் கண்ட யாவரும், 'பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்' என்று முணுமுணுத்தனர். 8சக்கேயு எழுந்து நின்று, 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்' என்று அவரிடம் கூறினார். 9இயேசு அவரை நோக்கி, 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 10இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்' என்று சொன்னார்.


லூக்கா நற்செய்தியின் பிரபல்யத்திற்கு சக்கேயுவின கதையும் மிக முக்கியமாகிறது. லூக்கா நற்செய்தியை கைவிடப்பட்டோரின் நற்செய்தி (ஆறாம் வேற்றுமை) என்பதைவிட கைவிடப்பட்டோருக்கான நற்செய்தி (நான்காம் வேற்றுமை) என அழைப்பதே பொருந்தும் என நினைக்கிறேன். பணம் எவ்வளவிருந்தாலும், ஓருவரின் வெறுமையை கடவுளால்தான் நிரப்ப முடியும் என்பதை இந்த மாண்பு மிகு வைத்தியர் லூக்கா அழகாக படம் பிடிக்கிறார்


சக்கேயு (Ζακχαῖος ட்சக்காய்யோஸ்):


 இவர் லூக்கா நற்செய்தியில் மட்டுமே வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்படுகிறார்இவரைச் சுற்றி பல இறையியல் கோட்பாடுகளை லூக்கா அமைக்கிறார். லூக்காவின் கருத்துப்படி இவர் ஒரு தலைமை சுங்கவரி அறவிடும் ஆயக்காரர் (ἀρχιτελώνης ஆர்கிடெலோனெஸ்). இவர் உரோமையருக்காக தன் மக்களிடம் வரி அறவிட்ட ஆயக்காரர்களின் ஒரு முகாமையாளராக இருந்திருக்கலாம். இவர் சாதாரண ஆயக்காரரைபோல் அல்லாது, மிக முக்கியமான வரிகளான, சுங்க வரி, தனி நபர் வரி, மற்றும் பொருள் சேவை வரி போன்றவற்றை மக்களிடமிருந்து உரோமையருக்காக அறவிட்டிருக்கலாம். இவர்களுடைய வேலையின் நிமித்தமும், அவர்கள் பல வேளைகளில் தம் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததினாலும் யூதர்கள் இவர்களை பலமாக வெறுத்தார்கள். தங்கள் நாட்டில் அந்நியர் இருப்பதையே வெறுத்த யூதர்கள் அவர்களுக்கு வரி செலுத்துவதையும் அறவே வெறுத்தார்கள். ஆனால் அவர்கள் இராணுவ ரீதியாக பலவீனமாக இருந்த படியாலும், தங்கள் வீட்டு அரசியலை உரோமையரைக் கொண்டு செய்த படியினாலும், இவர்களால் உரோமையரை நேரடியாக எதிர்க்க முடியாமல், அவர்களுக்கு வேலை செய்யும் இந்த அதிகாரிகளை வெறுத்தனர். இவர்களுடன் சகவாசம் வைப்பதையே பாவமாகவும், காட்டிக்கொடுப்பாகவும் கருதினர். சுருங்கச் சொல்லின் சக்கேயு, யூதர்களின் பார்வையில்படு பாவி’. 


.1: இயேசுவின் பார்வையில் எரிகோ தப்பவில்லை என்பதை லூக்கா காட்டுகிறார். எரிகோ ஒரு புறவின நகர். இந்த நகரின் சுவரைத்தான் யோசுவா போர் செய்யாமலே தகர்த்தார் (பார்க்க யோசுவா 6). யோசுவா இந்த நகருக்குத்தான் தன் ஓற்றர்களை அனுப்பினார். இந்த நகரில் இருந்த இராகாபு என்ற பெண் இவ் ஒற்றர்களை காப்பாறினார் (பார்க்க யோசுவா 1-2). இந்த நகரில் இருந்தவர்களை தீட்டானவர்கள் என்று இஸ்ராயேலர் கருதினர், ஆனால் இயேசுவின் பரம்பரை அட்டவணையில், இந்த ஊரைச் சார்ந்த இதே பெண்மணி இராகாபு முக்கியமான 

இடத்தில் இருப்பதை அவதானமாக தியானிக்க வேண்டும் (காண்க மத் 1,5).


(சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு, போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த

மகன் ஓபேது ஓபேதின் மகன் ஈசாய்.) 


.2: சக்கேயு யார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். இவர் வரிதண்டுவோரின் தலைவராகவும், அத்தோடு பெரிய செல்வராகவும் இருக்கிறார். இவருடைய செல்வம் தவறான வழியில் அறவிடப்பட்டதாக லூக்கா குறிப்பிடவில்லை. ஒருவேளை இவர் நேர்மையான வழியில்கூட உரோமையரின் அடிமைச் சட்டத்திற்கு உட்பட்டு, தன் செல்வத்தை சேர்த்திருக்கலாம். வரிதண்டுபவர் என்ற அடையாளமே இவரை பாவிகளின் கூட்டத்தில் சேர்கிறது. அத்தோடு இயேசுவின் பார்வையில் செல்வர்கள் தொலைவில் இல்லை என்பதையும், இயேசு செல்வர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதையும் இங்கணம் காணலாம். முதல் ஏற்பாட்டில் செல்வம் கடவுளின் கொடையாக இருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற குலமுதுவர்கள் பலர் செல்வர்களாகவே இருந்தனர்


.3: சக்கேயுவின் உடல் அடையாளம் காட்டப்டுகிறது. இயேசுவைச் சுற்றி மக்கள் திரள் எப்போதுமே இருந்திருக்கிறது என்ற உண்மையும் இங்கே புலப்படுகிறது. முதலிலே இயேசுவை பார்க்க விருமபியவர் இவர்தான் அல்லது இயேசுவை சந்திக்க முயற்சி எடுத்தவர் இவர்தான் என்பதை லூக்கா காட்டுகிறார். சில வேளைகளில் உடல் அமைப்புக்கள் மனிதர் விரும்புவதை செய்ய அனுமதிப்பதில்லை என்ற ஒரு இருப்பியல் வாதத்தையும் இங்கே காணலாம்


.4: சக்கேயுவிற்கு இயேசுவின் பாதை நன்கு தெரிந்திருந்தது. ஒரு வேளை இயேசு பல முறை இந்த வழியில் பயணம் செய்திருக்கலாம். சக்கேயு காட்டு அத்திமரத்தில் (συκομορέα சுகோமோரெயா சிக்காமோர், இலத்தீனில் Ficus sycomorus) ஏறுகிறார். குள்ளமானவர் உயரமான இடத்தை அடைகிறார். உயரம் எப்போதும் கடவுளுக்கு அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் அக்கால மக்களிடத்திலிருந்தது. சக்கேயு மக்களுக்கு முன்பே ஓடிப்போகிறார், இதிலிருந்து அவரின் உற்சாகம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அத்திமரங்கள் ஓக் மரங்களைப் போல் உயரமாக இருந்தன. அவற்றின் கிளைகள் ஐம்பது அடிகளுக்கு மேல்கூட வளரக் கூடடியவை. பாலஸ்தீனாவில் காணப்பட்ட மிகவும் சாதாரண மரங்கள் என்று கூட இவற்றைச் சொல்லாம், நம்மூர் பனை, வேம்பைப் போல். சிக்காமோரின் பழங்கள் மற்றும் பலகையும் மிகவும் பெறுமதியானது


.5: சக்கேயு எதிர்பார்த்தது போல இயேசுவும் அவ்வழியேதான் வருகிறார். அத்தோடு நிற்காமல் இயேசு அண்ணாந்து பார்கிறார். வழமையாக கடவுள் உயரத்திலிருந்து மனிதர்களை குனிந்து பார்ப்பார். ஆனால் இந்த கடவுள் கீழேயிருந்து, மேல் உள்ள ஒரு புறக்கணிக்கப்பட்டவரை அண்ணாந்து பார்க்கிறார். லூக்காவின் கடவுள் வித்தியாசமானவர்

  இயேசுவின் வார்த்தைகளான 'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும'  என்ற வார்ததைகள் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானது

இந்தவரிகளில் மட்டுமே பல நூறு பாடல்கள் உள்ளன. தமிழிலும் பல பாடல்கள் இந்த வரியை மையமாகக் கொண்டுள்ளன. வழமையாக மனிதர்கள் கடவுளின் இல்லத்திற்கு செல்வார்கள், இங்கே கடவுள் மனிதரின் இல்லத்தை பார்க்க விளைகிறார். சக்கேயு ஆண்டவரை பார்க்க மட்டும்தான் முயன்றார், ஆனால் ஆண்டவரோ அவர் வீட்டில் தங்கவே முடிவெடுக்கிறார். இஸ்ராயேல் கலாச்சாரத்தில் வீட்டில் தங்குபவர் நண்பர் அல்லது சகோதரர். அவர் அவ்வீட்டில் நிச்சயம் உணவருந்துவார். சக்கேயு என்னும் இந்த நபர் இப்போது கடவுளின் நண்பராக அல்லது சகோதரராக மாறுகிறார். (σήμερον γὰρ ἐν τῷ οἴκῳ σου δεῖ με μεῖναι. sêmeron gar en tô hoikô sou dei me meinai -  இன்று உன் வீட்டில் நான் இருக்க வேண்டும்)


.6-7: 

 அனைவரின் முணுமுணுப்பிற்கு எதிராக, சக்கேயு மகிழ்ச்சியோடு இயேசுவை வரவேற்கிறார். யார் இங்கு இயேசுவை வரவேற்கிறார்கள் என்பதே லூக்காவின் சிந்தனை. அவரோடு நடந்தவர்களைவிட, அவரோடு இருக்காத சக்கேயு இந்த போட்டியில் வெற்றி பெருகிறார்.  

 அனைவரின் முணுமுணுப்பு என்பது இங்கே பலரைக் குறிக்கிறது. முக்கியமாக இயேசுவோடு அவர் என்ன செய்கிறார் என்று விடுப்பு பார்க்க வந்து, அவரை அன்புசெய்யாதவர்களை குறிக்கலாம், அல்லது அவரோடு இருந்த சீடர்களைக் கூட குறிக்கலாம். ஏனெனில் ஒரு உன்னதமான போதகர் உரோமையருக்கு வரி தண்டும் ஆயக்காரரின் வீட்டில் தங்குவது அக்காலத்தில் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால் இந்த ஆச்சரியம் தவறானது என்பதை லூக்கா காட்டுகிறார். (διεγόγγυζον deigoggudzon -முணுமுணுத்தார்கள்)


.8: சக்கேயுவின் பாவ பரிகாரம் வார்த்தைப்படுத்தப்படுகிறது


. சக்கேயு எழுந்து நிற்கிறார், அதாவது தன்னுடைய திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்.


. உடமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்க முன்வருகிறார். இதிலிருந்து இவர் சொத்துக்கெல்லாம் சொத்தாகிய இயேசுவை சுவீகரிக்க முயல்கிறார் என்று நம்பலாம். பணக்காரராகாவும், ஆயக்காரராகவும் இவருக்கு எப்படி, எங்கு எதை பெற வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கும்


. பொய் குற்றமும், பிறர் உடமையை கவர்தலும்: இந்த இரண்டும் பத்துக் கட்டளைகளுக்கு எதிரான மிக முக்கியமான பாவங்கள். இவை நிவர்த்தி செய்யப்படவேண்டியவை. ஆனால் அவற்றை, சட்டங்களையும் தாண்டி நான்கு மடங்காக கொடுக்க சக்கேயு முன்வருவது, அவருடைய உண்மையான மனமாற்றத்தைக் காட்டுகிறது. அத்தோடு சக்கேயு போன்றவர்கள் மற்றவர்களின் செர்த்துக்களை சுரண்டியிருப்பார்கள் என்ற வாதத்தையும் உண்மைப் படுத்துகிறது


.9: இந்த வரிதான் இந்த கதையின் முக்கியமான செய்தி. σήμερον σωτηρία τῷ οἴκῳ τούτῳ ἐγένετο, sêmeron sôtêria tô oikô toutô egeneto - இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று


. ஆண்டவரின் வருகையும், சக்கேயுவின் மனமாற்றமும் மீட்பைக் கொணர்கிறது. σωτηρία சேடேரியா, மீட்பு என்பது இயேசுவின் முக்கியமான பணி. இயேசு என்ற சொல்லிற்கும் மீட்பவர் என்பதுதான் பொருள் (Ἰησοῦς இயேசூஸ், יְהוֹשׁוּעַ ஜெஹோசுவாஹ் - மீட்பவர்). இயேசுவின் மீட்டுப் பணிக்கு சக்கேயு தன் வீட்டை உட்புகுத்தகிறார். யார் ஆபிரகாமின் மக்கள் என்பது யூதர்கள் மட்டில் ஒரு அடையாளமான கேள்வியாக இருந்தது. இந்த ஆபிரகாமின் மக்கட் கூட்டத்தினுள் யாரை சேர்க்க வேண்டும் என்பதை இங்கே இயேசுவே தெரிவுசெய்கிறார். லூக்காவின் பார்வையில் கடவுளின் அருளிருந்தால் யாரும் ஆபிரகாமின் மக்களாகலாம். υἱὸς Ἀβραάμ huios Abraam ஆபிரகாமின் மகன் என்பவர், இஸ்ராயேலின் அனைத்து வரசபிரசாதங்களையும் பெறுபவர், அதனை இங்கு சக்கேயு பெறுகிறார்


யார் பாவி என்பதை விட,

யார் பாவத்தை அறிக்கையிடுகிறார் என்பதே கேள்வியாகிறது.

ஆண்டவரின் பார்வையும், சக்கேயுவின் பார்வையும் ஒன்றானதால் 

சக்கேயு வீட்டிற்குள் இயேசு வந்தார்

ஆண்டவரோடு நடந்தாலும்கூட

அவரை வீட்டிற்குள் அழைக்க நாம் தவறலாம்.


அன்பு ஆண்டவரே

எங்கள் வீட்டினுள்ளும் வந்து எங்களோடு தங்கும்.


எம் பாவங்களை விட்டுவிட உதவிசெய்யும். ஆமென்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் 32ம் ஞாயிறு ஆ: 32nd Sunday in Ordinary Times (B) 06.11.2024

ஆண்டின் பொதுக்காலம் 32 ம் ஞாயிறு ஆ : 32nd Sunday in Ordinary Times (B) 06.11.2024 ( ஞாயிறு வாசகங்களின் விளக்கவுரை ) ( A Commentary ...