ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஆறாம் வாரம்
25.09.2022
Fr. M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Jaffna.
Friday, 23 September 2022
முதல் வாசகம்: ஆமோஸ் 6,1.4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 146
இரண்டாம் வாசகம்: 1திமோத்தேயு 6,11-16
நற்செய்தி: லூக்கா 16,19-31
ஆமோஸ் 6,1.4-7
1'சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!
4தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! 5அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். 6கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள். 7ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.
ஆமோஸ் புத்தகத்தின் ஆறாவது அதிகாரம், இஸ்ராயேலின் அழிவை பற்றி இறைவாக்கு உரைக்கும் அதே வேளை, இந்த பகுதி சமாரியாவின் உயர் குடி மக்களுக்கு எதிராக நேரடியாகவே இடித்து உரைக்கிறது. இரண்டாம் எரோபோவாமின் காலத்தில் இருந்த பணக்காரர்களின் டாம்பீக வாழ்க்கை, ஏழைகளை மோசமாக பாதித்தது. அத்தோடு அவர்களின் அசமந்தமான அரசியல் பார்வை, இஸ்ராயேலின் மிக முக்கிய எதிரியான அசிரியாவின் கோபத்தை சிறிது சிறிதாக ஆனால் தொடர்ச்சியாக சம்பாதித்தது. இஸ்ராயேல்
ஒரு நாள் நிச்சயமாக அசிரியாவினால் வீழ்த்தப்பட்டு அழிக்கப்படும் என்பதை இந்தஇறைவாக்கினர் நன்கு அறிந்திருக்கிறார். ஆமோசின் இறைவாக்கை மதிக்காத இந்த வட நாடு கி.மு 722 அசிரியாவினால் அழிந்து போனது. ஆமோஸ் இறைவாக்கினர் ஏற்கனவே பணக்கார பெண்களின் அட்டூழியங்களை காரசாரமாக எடுத்துரைத்திருப்பார் (காண்க 4,1-3), இங்கே அதற்கு சமாந்தரமாக ஆண்களின் மேல் இறைவாக்கு வருகிறது. பல ஒற்றுமைகளை இந்த இரண்டு இறைவாக்குகளிலும் காணலம்.
வ.1: ஆமோஸ் இறைவாக்கினர் வட நாட்டில் இறைவாக்கு உரைத்தார் ஆயினும் அவரின் பார்வையில் சீயோனும் உள்வாங்கப்படுகிறது. சீயோன் (צִיּוֹן ட்சியோன்) பெரும்பாலும் எருசலேமை (தென்நாடு) பிரதிநிதித்துவப் படுத்தியது. எசாயா (28,1-4) மற்றும் மீக்கா (1,5) போன்ற தென்நாட்டில் பணிபுரிந்த இறைவாக்கினர்கள் தங்கள் சிந்தனைகளில் வடநாட்டு கரிசனைகளைக் கொண்டிருந்தனர். இது இஸ்ராயேல் இறைவாக்கினர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், பிரதேச வாதங்களுக்கு உட்பட்டவர்கள் அல்லர் என்பதைக் காட்டுகிறது. சமூக தீமை எங்கிருந்தாலும் அது தீமையே என்ற நீதியையும் இது காட்டுகிறது. (இன்று ஈழம் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று பிரதேச வாதம், வரலாற்றில் இந்த பிரதேச வாதம் பல இனங்களை அழித்துள்ளது என்பதை அறியாத தலைவர்களால் எப்படி தம் மக்களுக்கு விடுதலை தர முடியும்?).
முதலாவது வசனம், சீயோன் குன்றின்மீது இன்பத்தில் இருப்போரையும், சமாரியா மலைமீது கவலையற்றிருப்போரையும் ஒரே பார்வையில் ஒப்பிடுகிறது. ஐயோ கேடு என்ற தமிழ் மொழி பெயர்ப்பு எபிரேய הוֹי ஹோய் என்ற வியப்பிடைச் சொல்லைக் கொண்டுள்ளது. இது புலம்பல் மற்றும் மரணவீட்டு ஓலச் சொல் வகையைச் சார்ந்தது. இயேசுவும் இப்படியான வார்த்தை பிரயோகத்தை புதிய ஏற்பாட்டு ஆதிக்க
சமூக மக்களுக்கு எதிராக பாவித்தை நினைவில் கொள்ள வேண்டும் (❊காண்க மத் 23,13).
(❊வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;)
வ.4: உலகத்தின் 95வீதமான சொத்துக்கள் 5வீதமான பணக்கார முதலைகளின் வாய்களில் சுருண்டு கிடப்பதை அழகாக படம்பிடிக்கின்றார் இறைவாக்கினர். தந்தத்திலான கட்டில்கள் அக்காலத்தில் மிகவும் உயர்தரமானதாகவும் மிக மிக விலையுயர்ந்தாதகவும் கருதப்பட்டது (הַשֹּֽׁכְבִים עַל־מִטּ֣וֹת שֵׁ֔ן) . இஸ்ராயேலரின் மதம் வளமான வாழ்வினை எதிர்க்கவில்லை ஆனால் தேவையில்லா ஆடம்பரங்களை அது வெறுத்தது. இப்படியான ஆடம்பரங்கள் வறிய மக்களின் இரத்தினால் செய்யப்பட்டவை என்பதை ஆமோஸ் நன்றாக அறிந்திருக்கிறார். (இன்றும் பலருக்கு வீடுகள் இல்லாமலிருக்க, சில பணக்கார தலைகள் தங்கள் கழிப்பறையை தங்கத்தால் செய்வதை என்வென்று சொல்ல.) கொழுத்த கன்றுகளை உண்போரும் பணக்காரர்களாகவே கருதப்பட்டனர். கொழுத்த கன்றுகளை சாதாரண மக்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தினர், ஆனால் பணக்காரர்கள் மட்டுமே அதனை தங்களது உணவிற்கு பாவித்தனர்.
வ.5: இந்த ஐந்தாவது வசனம், பணக்காரர்களின் திமிரை அழகாக படம்பிடிக்கிறது. பணக்காரர்களின் பணம், அவர்களின் கண்களை மூடி அவர்களால் எதையெல்லாம் செய்ய முடியாதோ அவற்றை செய்ய மாயம் காட்டியது. பணக்காரர்களின் இசை அலறலுக்கு ஒப்பானது என்கிறார் இறைவாக்கினர்.
இந்த வசனத்தின் இரண்டாவது பகுதி, பல மொழிபெயர்ப்புக்களை முன்வைக்கிறது. அவர்கள் தாவீதைப்போல எதைச் செய்கிறார்கள் என்பதில் மயக்கம் இருக்கிறது: כְּדָוִיד חָשְׁבוּ לָהֶם כְּלֵי־שִֽׁיר׃
அ. அவர்களின் இசைக்கருவிகள் தாவீதின் கருவிகளைப்போன்றது என நினைக்கிறார்கள்
ஆ. அவர்கள் தங்களை தாவீதைப்போல இசைஞானிகள் என கருதுகிறார்கள்
இ. அவர்கள் இசைக்கருவிகளை தாவீதைப்போல் உயர்வாக விரும்புகிறார்கள்
ஈ. அவர்கள் தாவீதைப்போல் தங்களுக்கென்று புதிய பாடல்களை உருவாக்குகிறார்கள்.
எது எவ்வாறெனினும், இறைவாக்கினர்கள் இவர்களின் இசையை சாடுகிறார், அத்தோடு தாவீதுதான் உண்மையான இசையாளர் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். தாவீது எபிரேய இசையில் முக்கியமானவர் என்ற எபிரேயரின் நம்பிக்கையை இங்கே காணலாம். இதன் காரணமாகத்தான் திருப்பாடல்கள் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வ.6: இங்கே இவர்கள் பெரிய கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கிறார்கள் என்பது இவர்கள் திருச்சடங்கு கோப்பைகளை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற வாதத்தையும் முன்வைக்கிறது. எண்ணெய் தடவுதல் அபிசேகம் செய்தலை நினைவூட்டுகிறது, ஆக இவர்கள் தங்களை தாங்களே அபிசேகம் செய்கிறார்கள். இதுவும் பணக்கார கர்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தமிழ் விவிலியத்தில் இங்கே இந்த வசனத்தின் இன்னொரு பிரிவு விடப்பட்டுள்ளது (காரணம் தெரியவில்லை). எபிரேயம் இதனை இவ்வாறு வாசிக்கிறது ' ஆனால் அவர்கள் யோசேப்பின் அழிவைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை' (וְלֹא נֶחְל֖וּ עַל־שֵׁבֶר יוֹסֵֽף). இங்கே யேசேப்பு என்பது வட நாட்டை (இஸ்ராயேல்) குறிக்கலாம்.
வ.7: இந்த வசனத்தில் தண்டனை அறிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்படுதலும் நாட்டின் அழிவும் ஆமோசின் முக்கியமான எச்சரிக்கைகள். அவை நிச்சயமாக நடைபெறும் என்பதை அவர் நன்கு முன்னறிந்திருந்தார். அந்த தண்டனை முதலில் இந்த பணக்காரர்களுக்கே வரும் என்பதுதான் அவரின் செய்தி.
திருப்பாடல்: 146
1அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.
3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம். 4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.
5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!
திருப்பாடல் 146 ஒரு புகழ்ச்சிப்பாடல் என்பது அதன் வார்த்தை பிரயோகத்திலிருந்து நன்கு தெரிகிறது. யார் இறைமக்களுக்கு காவலரும் வாழ்வளிப்பவரும் என்ற கேள்விகள் காலம் காலமாக இஸ்ராயேல் மக்களிடம் இருந்து வந்திருக்கிறது. அரசர்களா அல்லது இறைவனாகிய கடவுளா மக்களை காக்கிறவர் என்ற கேள்விக்கு இந்த திருப்பாடல் அழகாக விடையளிக்க முயன்று அந்த விடைக்கான காரணத்தையும் முன்வைக்கிறது.
வ.1: ஆசிரியர் தனக்குத்தானே கட்டளையிடுவதைப்போல் இட்டு மக்களுக்கு செய்தியொன்றை முன்வைக்கிறார். ஹல்லேலூயா הַֽלְלוּ־יָ֡הּ என்பது ஓர் அழகான எபிரேயச் சொல். அது புகழ்ச்சியைக் குறிக்கும். என் நெஞ்சே என்பது என் ஆத்துமாவே அல்லது உயிரே என்ற பொருளையும் தரும் (נַפְשִׁי நப்ஷி - என் ஆன்மாவே) எபிரேயரிடத்தில் ஆரம்பத்தில் உடல் - ஆன்மா பிரிவுகள் இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆக இங்கே நெஞ்சே என்பது முழு ஆளையும் குறிக்கும்.
வ.2: பலர் தங்கள் விசுவாசத்தை நாட்டிற்கும், அரசர்க்கும், அரச மக்களுக்கும் கையளிக்கின்ற போது, இந்த ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதையும் கடவுளுக்கு கையளிக்கிறார். இந்த வரியும் எபிரேய திருப்பிக்கூறும் கவி நடையில் அமைந்துள்ளது:
அ. நான் ஆண்டவரை போற்றிடுவேன் - என் உயிருள்ள வரை
ஆ. நான் பாடிடுவேன் என் கடவுளுக்கு - எக்காலத்திலும்
இங்கே உயிருள்ள நாட்களும், எக்காலமும் ஒரே கருத்தாக இருக்கவேண்டிய தேவையில்லை, இரண்டு கருத்தாக இருக்கலாம், ஆனால் எபிரேயத்தில் இந்த இரண்டு சொற்களும் எதுகையிலும் மோனையில் ஒத்திருக்கின்றன.
வ.3: இந்த வசனம் ஒரு முக்கியமான இஸ்ராயேலரின் நம்பிக்கையை முன்வைக்கிறது. யார் இஸ்ராயேலின் அரசர்? யார் இஸ்ராயேலரை ஆளுகிறவர்? கடவுள் ஒருவரே என்பது ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை. கடவுள் நம்பிக்கைக்கும், அரசர் விசுவாசத்திற்கும் பல காலமாக சிக்கல்கள் இருந்திருப்பதை இந்த வரியின் மூலமாக கண்டு கொள்ளலாம். இநத் வரியில், ஆசிரியர் அரச குல மக்களை அழிந்து போகிறவர்களாக காண்கிறார். கானானிய, எகிப்பதிய மற்றும் மொசேபெத்தேமிய நம்பிக்கைகள், அரசர்களை தெய்வ மக்களாக கண்டனர், இப்படியான நம்பிக்கையை ஆசிரியர் இடித்துரைக்கிறார். (இன்றும் அரசியல் தலைவர்களுக்கு பந்தம் பிடிக்கிறவர்கள், அவர்களை தெய்வங்களாக காண்கின்றனர், ஆனால் அவர்களுக்கே தெரியும், அந்த நம்பிக்கை பிழையென்று).
வ.4: இந்த வரி அதற்கான காரணத்தை விளக்குகிறது. கடவுள் தன் ஆவியை ஊதி மனிதர்களை மண்ணிலிருந்து படைத்தார், மரணத்தின் போது அந்த ஆவி மண்ணிற்கு திரும்புகிறது என இஸ்ராயேலர் நம்பினர். இந்த நியதி மனிதர்களாகிய அரச மைந்தர்களுக்கும் உரியது என்பது ஆசிரியரின் போதனை. அத்தோடு அவர்களின் திட்டங்களும் அழிந்துபோகும் என்று சொல்லி கடவுளின் திட்டங்கள் மட்டுமே அழியாது என ஆசிரியர் உரைக்கிறார்.
வ.5: இது இஸ்ராயேலரின் ஒரு விசுவாச கோட்பாடு. கடவுளுக்கு முதல் ஏற்பாடு பல பெயர்களை கொடுத்தது. அதில் 'யாக்கோபின் கடவுள்' என்பது மிக முக்கியமானதும் மிகவும் உணர்ச்சிகரமானதுமாகும் (שֶׁאֵל יַעֲקֹב ஷ’ஏல் யா‘கோப் - அவர் யாக்கோபுவின் கடவுள்). இவர்களைத்தான் இந்த ஆசிரியர் பேறுபெற்றோர் என பாடுகிறார். மத்தேயு நற்செய்தியில் ஐந்தாம் அதிகாரத்தில் வரும் மழைப்பொழிவில் 'பேறுபெற்றோர்' என்னும் சிந்தனையுடன் இதனை ஒப்பிட்டு நோக்கலாம். இந்த வரியின் மூலமாக, பலர் தங்கள் நம்பிக்கையில் கடவுளை துணையாளராக நம்பவில்லை என்பது ஆசிரியரின் கவலையாக இருந்தது தெரிகிறது.
வ.6: இந்த வரி மேலதிகமாக கடவுளின் பலமான செயற்பாடுகளை மீள் நினைக்கிறது. விண், மண், கடல் மற்றும் அதிலுள்ள யாவையும் மனிதர்களுக்கு எப்பொழுதுமே அதிசயத்தைக் கொடுக்கக்கூடியவை, ஆக அதனை படைத்தார், எவ்வளவு அதிசயமாயிருக்கிறார் என்பதே இங்குள்ள செய்தி. சிலர் சில காலங்களில் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கின்றனர், ஆனால் கடவுள் மட்டும்தான் என்றும் நம்பிக்கைக்கு உரியவராகிறார்.
வவ.7-9: இந்த வரிகள் கடவுளுடைய மீட்புப் பணிகளை நினைவூட்டுகிறன. இங்கே சொல்லப்படுகின்ற பணிகள் ஏழ்மையான சமூதாயத்தில் மிக முக்கியமான பணிகளாக கருதப்பட்டவை. இதனை சாதாரண மனிதர்களால் செய்ய முடியாது. இதனை செய்யவதன் மூலமாக கடவுள் தன்னை இறைவனாகக் காட்டுகிறார்.
அ. ஒடுக்கப்பட்டோருக்கு நீதி
ஆ. பசித்தோருக்கு உணவு
இ. சிறைப்பட்டோருக்கு விடுதலை
ஈ. பார்வையற்றோருக்கு பார்வை
உ. தாழ்த்தப்பட்டோருக்கு உயர்வு
ஊ. நீதிமான்களுக்கு அன்பு
எ. அயல் நாட்டினர்க்கு பாதுகாப்பு
ஏ. அனாதை பிள்ளைகளுக்கும், கைம்பெண்களுக்கும் ஆதரவு
ஒ. பொல்லாருக்கு கவிழ்ப்பு
இந்த பண்புகள் இஸ்ராயேலின் கடவுளின் நன்மைத் தனத்தை ஆழமாக படம்பிடிக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இந்த செயற்பாடுகள் நிச்சயமாக இயேசுவின் வாழ்வையும் பணியையும் நினைவூட்டும். ஆண்டவரின் ஆசீர்வாதங்களை பல அடுக்குகளாக பாடிய ஆசிரியர் ஆண்டவரின் தண்டனையை ஒரே ஒரு வரியில் மட்டுமே சொல்கிறார்.
வ.10: இந்த இறுதி வசனம் சீயோன் மக்களுக்கு சொல்லப்படும் முடிவுரையும் தீர்மானமுமாகும். அதாவது என்றென்னும் ஆட்சி செய்கிறவரும் ஆட்சி செய்யப்போகிறவரும் ஆண்டவர் மட்டுமே. எனவே அவருக்கு ஹல்லேலூயா. לְעוֹלָ֗ם אֱלֹהַיִךְ צִיּוֹן לְדֹ֥ר וָדֹ֗ר הַֽלְלוּ־יָֽהּ׃ le’ôlām ’elôhayik dzîôn ledôr wādôr hllū-yāh.
1திமோத்தேயு 6,11-16
11கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு. 12விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய். 13அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின்முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 14நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. 15உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். 16அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.
திமோத்தேயு என்ற ஆயர் அல்லது, மூப்பருக்கு எழுதப்பட்ட இந்த திருமுகம், அல்லது அவரின் பெயரில் தளத் திருச்சபைகளின் மூப்பர்களுக்கு எழுதப்பட்ட இந்த திருமுகம் பல முக்கியமான அறிவுரைகளை தாங்கி வந்திருக்கிறது. பலவற்றைப் பற்றி விவாதித்த பவுல் இங்கே முடிவுரையாக அனைத்திலும் கடவுளில் தங்கியிருக்கவும், அத்தோடு அவருக்கு மட்டுமே மாட்சி செலுத்தவும் வேண்டும் என்பது போல சொல்வதாக முடிவடைகிறது. இதன் இறையியலுக்கும் இன்றைய திருப்பாடலின் (146) இறையியலுக்கும் அதிகமாகவே ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த வரிகளில் பவுலின் முதிர்ச்சி தென்படுகிறது, அத்தோடு தளத் திருச்சபைகளின் மேல் அவர்கொண்டிருந்த அளவற்ற அக்கறையும் தென்படுகிறது. தளத் திருச்சபைகளில் மட்டுமல்ல மாறாக அதன் மூப்பர்களில் எவ்வளவு கரிசனை உள்ளவராக அவர் இருந்தார் என்பதையும் இது உணர்த்துகிறது.
வ.11: கடவுளின் மனிதன் என்ற சொல் முதல் ஏற்பாட்டில் இறைவாக்கினர்களுக்கும் முக்கியமான மனிதர்களுக்கும் தரப்பட்ட சொல், இதனை திமோத்தேயுவிற்கு கொடுத்து அவரை இறைவாக்கினர்களின் பட்டியிலில் சேர்க்கப்பார்க்கிறார் பவுல் (ἄνθρωπε θεοῦ அந்திரோபெ தீயூ- இறைவனின் மனிதன்). மோசே (காண்க இ.ச 33,1), கடவுளின் தூதர் (காண்க 13,6), கடவுளின் தூதர் (காண்க 1சாமு 2,27), செமாயா (காண்க 1அர 12,22), பெத்தேலின் முதிய இறைவாக்கினர் (1அர 13,11), எலியா (காண்க 1அர 17,24), எலிசா (காண்க 2அர 4,7), மற்றும் இன்னும் பலர் கடவுளின் மனிதராக அறியப்படுகின்றனர்.
பவுல் கடவுளின் மனிதர்க்கு வாழ்க்கை ஒரு பந்தயம் என்பதை நினைவூட்டுகிறார். அத்தோடு வாழ்க்கை ஒரு தேடல் என்பதையும் விளக்குகிறார். இறை மனிதர்கள் நீதி, இறைபற்று, நம்பிக்கை, மனவுறுதி, பணிவு ஆகியவற்றை தேடவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
வ.12: இந்த வசனம் திமோத்தேயுவின் அழைப்பு நிகழ்ச்சியை மையப்படுத்துகிறது. இதனை அவருடைய திருமுழுக்கு, குருத்துவ திருநிலைப்படுத்தல் அல்லது பணி வாக்குத்தத்த நிகழ்வின் நினைப்பு என்று இன்றைய சொல்லாடலில் காணலாம். திமோத்தேயு பலர் முன்னிலையில் தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட பின்னே இந்த பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்பது இந்த வரியின் மூலம் புலப்படுகிறது. விசுவாச வாழ்வு என்பது ஒரு போராட்டம் என்று பவுல் சொல்வது மிகவும் நோக்கப்பட வேண்டியது. ஆரம்ப கால திருச்சபையில் இயேசுவிலே கொண்ட விசுவாசம் பல தியாகங்களை எதிர்பார்த்தது. இன்றைய கால விசுவாசம் தியாகங்கள் இல்லாமையினாலே தன்னுடைய ஆழத்தை இழக்கிறது என நினைக்கிறேன்.
வ.13: இந்த வசனம் மிகவும் நோக்கப்படவேண்டியது. கடவுள்தான் அனைத்திற்கும் வாழ்வளிக்கிறவர் என்பது ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச பேதனைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். இயேசு பொந்தியு பிலாத்துவின் முன்னிலையில் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டதை பவுல் இங்கே கோடிடுகிறார். இந்த சாட்சியம் ஆரம்ப கால திருச்சபையில் ஒரு நல்ல உதாரணமாக இருந்திருக்கலாம். இந்த வாதம் புதிய ஏற்பாட்டில் இந்த திருமுகத்தில் மட்டுமே காணப்படுகிறது.
வ.14: ஆரம்ப கால திருச்சபை எதிர்நோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக பணியாளர்களின் தூய்மையான வாழ்வு இருந்திருக்கிறது. தூய்மையில்லாத பணியாளர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்களால் நகைப்பிற்கு உள்ளானார்கள் அத்தோடு அது ஒரு எதிர் சாட்சியமாகக்கூட அமைந்தது. அத்தோடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆரம்ப காலங்களில் பவுல் அருகில் நடக்கவிருந்த நிகழ்வாக நம்பினார் என்பதையும் இங்கே காணலாம்.
வ.15: ஆண்டவர் தோன்றுகின்ற இந்த காலம் எப்போது என்று பவுல் தெரிந்திருக்கவில்லை என்பதையும் இந்த வரியில் காணலாம். அவர் அதனை உரிய காலம் என விழிக்கிறார் (καιροῖς ἰδίοις கய்ரோய்ஸ் இதியொய்ஸ் - பொருத்தமான காலத்தில்). இங்கே கடவுள் பற்றிய முக்கியமான விசுவாச பிரமாணங்கள் நினைவூட்டப்படுகின்றன:
அ. கடவுள் ஒருவரே இறையாண்மையுள்ள தலைவர்
ஆ, அவர்தான் அரசர்கெல்லாம் அரசர்
இ. அவர்தான் ஆண்டவர்கொல்லாம் ஆண்டவர்
இந்த பிரமாணங்கள் உரோமைய-கிரேக்க அரச வழிபாடுகளையும், அவர்களின் தெய்வ வழிபாடுகளையும் தாக்குவது போல இருக்கின்றன. ஒரு வேளை கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்த விசுவாச தளம்பல்களை சரிசெய்ய இவை பயன்பட்டிருக்கலாம்.
வ.16: யார் இந்த கடவுள் என்பதை இந்த வரிகள் விளங்கப்படுத்துகின்றன:
அ. அவர் சாவை அறியாதவர்- சாவின்மை அக்கால அரசர்களின் தன்மையாக கருதப்பட்டது, ஆனால் அனைத்து அரசர்களும் இறந்து போனார்கள். ஆக கடவுள் மட்டுமே நித்தியமானவர் என்பதை வரலாற்றில் காண்கிறோம், இதனையே இந்த ஆசிரியரும் சொல்கிறார்.
ஆ. அவர் அணுக முடியாத ஒளியில் வாழ்கிறார்- ஒளி முக்கியமான கடவுளின் அடையாளமாக இன்றுவரை பார்க்கப்படுகிறது. எப்போது மனிதன் ஒளியை உணர்ந்தானோ, அன்றே அவன் கடவுளையும் உணர்ந்தான் என்ற ஒரு பழமொழியும் இருக்கிறது. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுள் தன் இருப்பை இந்த அடையாளம் மூலமாக காட்டுகிறார். கடவுளை யாரும் கண்டதில்லை அத்தோடு அவரைக் காணவும் முடியாது என்ற கோட்பாடுகள் இஸ்ராயேலருக்கு மிகவும் பரிச்சித்தியமான நம்பிக்கை. மோசேகூட கடவுளின் பின்புறத்தை மட்டும்தான் கண்டதாக நம்பப்படுகிறது (❊காண்க வி.ப 33,20-23). இந்த வரிகள் மிகவும் ஆய்விற்கு உற்படுத்தப்பட வேண்டியவை. கடவுள் ஓர் மனித ஆள் கிடையாது அவரை என்னவென்று சொல்வதென்றும் யாருக்கும் தெரியாது. ஒருவேளை மோசே கடவுளின் விம்பத்தை அல்லது ஒளிக்கீற்றை கண்டிருக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர். சூரியனையே வெறும் கண்ணால் காண இயலாதபோது, எப்படி கடவுளைக் காண இயலும்?
இயேவின் போதனைகளில் இருந்து கடவுளின் குணங்களை மட்டும்தான் எம்மால் உணர முடிகிறது. இயேசுவின் சாயலைக் கொண்டும் சில கடவுளின் தன்மைகளை நாம் அறிய முயல்கின்றோம். இயேசுகூட தன்னால் அன்றி எவராலும் கடவுளை வெளிப்படுத்த முடியாது என்று விளக்கியிருக்கிறார் (❊❊ஒப்பிடுக யோவான் 1,18)
(❊20மேலும் அவர், 'என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது' என்றார். 21பின்பு, ஆண்டவர் 'இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள். 22என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன். 23பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்' என்றார்.)
(❊❊கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மைகொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.)
கடவுளுக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக என்று பவுல் திமோத்தேயுவிற்கு சொல்வது இன்றும் அனைத்து ஆயர்களுக்கும் பொருந்துகிறது. ஆரம்ப காலத்தில் இந்த மாண்பையும் ஆற்றலையும் பலர் அரசியல் தலைவர்களுக்கு கொடுக்க பார்த்தனர், அதே போல இன்று இந்த கடவுளின் மாண்பையும் ஆற்றலையும், அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, கடவுளின் பெயரிலுள்ள சில பணியாளர்களும் தமக்குரியதாக்க முயற்ச்சி செய்கின்றனர். (தூய பவுலிடம்தான் முறையிட வேண்டும்).
லூக்கா 16,19-31
19'செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 20இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 21அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். 22அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். 23அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். 24அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். 25அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 26அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். 27'அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 28எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். 29அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். 30அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். 31ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்.'
லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் மிக முக்கியமான பகுதியில் இதுவும் ஒன்று. இந்த பகுதி லூக்கா நற்செய்தியின் இறையியலையும் வாசகர் வட்டத்தையும் படம்பிடித்து காட்டுகிறது. பணகாரர்களும், கடின உள்ளங்கள் கொண்ட மனிதர்களும் எவ்வாறான முடிவுகளை எட்டுவர் அல்லது அவர்கள் இறையரசிற்கு எவ்வளது தொலைவில் அவர்கள் உள்ளனர் என்பதை இந்த உவமை காட்டுகிறது. இது ஒரு உவமை என்ற படியால் இங்கே உள்ள கதாபாத்திரங்கள் கற்பனையாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு ஆனால் இந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் இயேசுவிற்கு அல்லது லூக்காவிற்கு தெரிந்த மனிதர்களாக இருந்திருக்கலாம்.
வவ. 19-20: பத்தொன்பதாவது வரி இந்த செல்வரின் அடையாளங்களை விவரிக்கின்றது. மெல்லிய செந்நிற ஆடை πορφύρα பொர்புரா - ஊதா நிறம் என கிரேக்க விவிலியத்தில் உள்ளது. இந்த ஊதா நிற ஆடைகளை உரோமைய காலத்தில் மிகவும் பணக்காரர்களே உடுத்தினர் அல்லது அரச வம்சாவளியினர் மட்டுமே அணிந்தனர். ஆடைகள் ஒருவர் அந்தஸ்தை காட்டுவது அக்காலத்தில் வழமை இந்த நிறமும் இவர்களின் சமூக அடையாளத்தை காட்டியது. சில முக்கியமில்லாத கிரேக்க வாசகங்கள் இந்த பணக்காரரின் பெயரை நெயுரேஸ் எனக் காட்டுகிறது (ονοματι Νευης 𝔓75). இவருடைய நாளாந்த வாழ்க்கை செல்வ செழிப்பிலும், செருக்கிலும் நிறைந்துள்ளது.
இருபதாவது வசனம் இந்த உவமையின் கதாநாயகன் லாசரை விளக்குகிறது. இவர் இந்த பணக்காரருக்கு முழுவதும் எதிர் மறையில் விவரிக்கப்படுகிறார். இவர் எப்படி பணக்காரரின் வாயிலுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இவருக்கு லாசர் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவிற்கு லாசர் என்ற நண்பர் ஒருவர் இருந்திருக்கிறார், அந்த நண்பராக இவர் இருக்க வாய்பில்லை (❊காண்க யோவான் 11,1) இவர் உடலின் புண்களின் நிலை அவரது வறுமையையும் அவர் அந்த பணக்காரரினால் எந்த விதமான உதவியையும் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த ஏழை அந்த பணக்காரரின் வாயிலில் இருந்தார் என்பதைவிட, அவர் அங்கே கிடந்தார் என்று சொல்லி லூக்கா ஏழைகளின் நிலையை அப்படியே படம் பிடிக்கிறார் (ἐβέβλητο அவர் எறியப்பட்டு கிடந்தார்). புதிய ஏற்பாட்டின் உவமைகளில் இந்த மனிதருக்கு மட்டும்தான் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
(❊பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.)
வ.21: இந்த ஏழை பணக்காரரின் மேசையிலிருந்து விழும் துண்டுகளுக்காக ஏங்கினார் ஆனால் அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை, இந்த அடையாளம், காணாமல் போன மகன் உவமையில் பன்றிகளின் உணவை நமக்கு நினைவூட்டுகிறது (ஒப்பிடுக லூக்கா 15,16). பணக்காரர்களின் கோரமான அநியாயங்களை இவ்வாறு லூக்கா பதிவு செய்கிறார். நாய்கள் என்பது இங்கே தெரு நாய்களை குறிக்கிறது. இது வீட்டு வளர்ப்பு நாய்களை குறிக்காது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (κύνες குனெஸ் - தெரு நாய்). இந்த சொல்லுக்கு ஆண் விபச்சாரிகள் என்ற பொருளும் உண்டு. சாதாரணமாக நாய் ஒரு அசுத்தமான விலங்காக கருதப்பட்டது, ஆக மனிதரின் புண்களை, அசுத்தமான பிராணி நக்கும் அளவிற்கு இந்த மனிதர் தன் மாண்பினை இழந்திருந்தார் அல்லது புறக்கணிக்கப்பட்டிருந்தார் என்பது புலப்படுகிறது.
வ.22: இது ஒரு முக்கியமான வசனம். இரண்டு பேரும் இறக்கிறார்கள் ஆனால் லாசர் உடனடியாக ஆபிரகாமின் மடிக்கு செல்கிறார். பணக்காரரோ அடக்கம் செய்யப்படுகிறார். அதாவது துயில் கொள்கிறார். அபிரகாம் இஸ்ராயேலரின் முதலாவது குலமுதுவர், கடவுளின் நண்பர், அவரது மடி என்பது கடவுளின் இல்லமாக கருதப்படலாம். ஆனால் பணக்காரர் மண்ணிலே அடக்கம் செய்யப்படுகிறார், அது அழியக்கூடிய இடத்தின் அடையாளமாக இருக்கலாம். வானதூதர்கள் லாசரின் உடலை ஆபிரகாமிடம் கொண்டு போவதும், ஆபிரகாமிற்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டுகிறது. (ஒப்பிடுக தொ.நூல் 15,15)
வ.23: எபிரேயர்கள் பாதாளத்தை (ᾅδης ஹதேஸ் - பெரிய குழி அல்லது ஷெயோல்) பூமிக்கு கீழே உள்ள ஒரு வதை முகாமாக கருதினர், இங்கே மனிதர்கள் உடல் ரீதியாக துன்புற்றனர் என்பதைவிட அவர்கள் கடவுளின் பிரசன்னம் இன்றி வெறுமையிலும் இருளிலும் வாடினர் என்றே எடுக்க வேண்டும். அண்ணார்ந்து பார்ப்பது, இந்த பாதாளம் கீழே இருப்பதை நினைவூட்டுகிறது.
வ.24: இந்த பாதாளத்தில் நெருப்பு தீவிரமாக இருந்ததாகவும், அது அங்கிருப்பவரை வாட்டுவதாகவும், அவர்கள் நீருக்காக ஏங்குவதாகவும் காட்டுகிறது. இங்கே பல அடையாளங்களை லூக்கா உட்புகுத்தியிருக்கிறார்
அ. ஆபிரகாம்தான் தனது மக்களின் தந்தை என்பதை பணக்காரர் நன்கு அறிந்திருக்கிறார், ஆக லாசரும் இவர் இன சகோதரரே என்பது இவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
ஆ. லாசரை அவர் பெயர் சொல்லி அழைக்கிறார், ஆக லாசரை இவர் முதலில் முழு அறிவோடே அசட்டை செய்திருக்கிறது புலப்படுகிறது.
இ. விரல் நுனியை தண்ணீரால் நனைத்தல் என்பது இவரின் வேதனையைக் காட்டுகிறது. தாகம் கடவுளில் இல்லாமையை அல்லது இவர் கடவுளை விட்டு தொலைவில் இருப்பதைக் காட்டுகிறது.
ஈ. தீப்பிழம்பு கடவுளின் தண்டனையை அல்லது நீதியைக் குறிக்கிறது எனலாம்.
வ.25: ஆபிரகாமின் வசனம், கடவுளின் வசனம் போல தென்படுகிறது. அதாவது ஏழைகள் விண்ணரசில் மகிழ்ச்சி அடைவர் என்று இயேசுவின் வார்த்தைகளை இங்கே நினைவூட்டுகிறது. அதே வேளை இந்த பணக்காரரும் ஆபிரகாமின் மகன்தான் என்பதையும் இங்கே காணலாம். ஆனால் அவரவர்க்கு அவரவரின் வாழ்க்கையின் படி நீதி கிடைக்கும் என்ற தீர்ப்பும் இங்கே காட்டப்படுகிறது.
வ.26: வானகத்திற்கும், பாதாளத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை யாரும் கடக்க முடியாது என்ற யூதர்களின் நம்பிக்கையை இந்த வரியில் காணலாம். எவர் விரும்பினாலும் அது நடைபெறாது என்ற வார்த்தைகள் இந்த பிளவு கடக்கப்பட முடியாதது அல்லது கடவுளின் தீர்ப்பில் மாற்றங்கள் இல்லை என்பதையும் காட்டுகிறது.
வவ. 27-28: துன்பமான வேளையிலும் கூட இவரின் சகோதர பாசம் நமக்கு வியப்பை தருகிறது. இந்த பணக்காரருக்கு இங்கு இப்போது உண்மை புலப்படுகிறது. அதாவது இவரின் ஐந்து சகோதரர்களும் நிச்சயமாக இந்த பாதாளத்திற்கே வரவிருக்கின்றனர். அவர்களை ஏழை லாசரால் மட்டுமே காப்பற்ற முடியும் என்பது ஒரு 'சுடலை ஞானம்'. யூதர்கள் தங்கள் சகோதரர்கள் மட்டில் அதிக அக்கறையுள்ளவர்களாக இருந்தனர், அதனை இங்கே காணலாம். ஆனால் இவர், லாசரும் தன் சகோதரர் என்பதை முதலில் மறந்துவிட்டார்.
வ.29: மோசேயும் இறைவாக்கினர்களும் யூதர்களின் முதல் ஏற்பாட்டை நினைவு படுத்துகின்றனர். மோசே சட்ட புத்தகங்களையும், இறைவாக்கினர்கள் இறைவாக்கு புத்தகங்களையும் அடையாளப்படுத்துகின்றனர். ஆக இந்த இரண்டு பாரம்பரியங்களையும் சரிவர ஒருவர் பின்பற்றினால் அவர் பாதாளத்திற்கு வரமாட்டார் என்கிறார் ஆண்டவர் இயேசு.
வ.30-31: இறந்தவர்கள் வந்து சொன்னால் உண்மை புலப்படும் என்ற நம்பிக்கை பல
சமூதாயங்களில் இன்றும் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் இங்கு இது ஒரு ஏளனக் குறியாகவே பார்க்கப்படுகிறது. அதவாது வாழுகிறவர்கள் சொல்லியே இவர்கள் கேட்கவில்லை, எப்படி இறந்தவர்களின் செய்தியை இவர்கள் கேட்பார்கள் என்பதே அந்த செய்தி. அத்தோடு இங்கே இன்னொரு அடையாளத்தையும் லூக்கா முன்வைக்கிறார் அதாவது வாழ்வில் இயேசுவை நம்பாதவர்கள் அவரின் உயிர்ப்பையும் நம்ப மாட்டார்கள், நம்பிக்கை இல்லாதாவர்களுக்கு உயிர்பும் கிடையாது வாழ்வும் கிடையாது என்பது அந்த மறைமுக செய்தியாக இருக்கலாம்.
உலக அளவில் சொத்துக்கள் இருந்தாலும்,
இயேசு இல்லையென்றால் அவை வெறும் வறுமையே.
ஆன்மாவின் தாகத்தை தீர்க்க இயேசு என்னும் தண்ணீர் நிச்சயமாக தேவைப்படும்.
மேசையில் இருந்து உண்ண முடியாமல் விழும் ஒவ்வொரு உணவும்,
ஏழைகளுக்கு உரியது என்பதை மறக்கக் கூடாது.
இவ்வுலகில் தங்கள் பாவங்களை திருத்தாதவர்களை,
ஆபிரகாமினால் கூட காப்பாற்ற இயலாது.
அன்பு ஆண்டவரே!
பாதாளத்தின் ஆழத்தை அதன் பயங்கரத்தை மனிதர் மறக்காதிருக்க துணை செய்யும். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக