பொதுக்காலம் 24வது ஞாயிறு, இ, 11.09.2022
-கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.-
M. Jegankumar Coonghe OMI,
Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Jaffna.
முதல் வாசகம்: வி.ப 32,7-11.13-14
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 51
இரண்டாம் வாசகம்: 1திமோ 1,12-17
நற்செய்தி: லூக் 15,1-32
விடுதலைப் பயணம் 32,7-11.13-14
7அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, 'இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். 8நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, 'இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்' என்றார். 9மேலும் ஆண்டவர் மோசேயிடம், 'இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள். 10இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்' என்றார்.
11அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, 'ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
13உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே' என்று வேண்டிக்கொண்டார். 14அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
மோசேயும் கடவுளும் மலையில் எப்படி உடன்படிக்கையை வாழ்வது என்பது பற்றி விவாதித்துக்கொண்டு இருக்க, மக்கள் மலையடிவாரத்தில் கன்றுக் குட்டி ஒன்றை செய்து, சிலை வழிபாடு செய்கின்றனர். இந்த கன்றுக் குட்டி கானானிய பால் கடவுளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கன்று அல்லது எருது எகிப்திலும் அறியப்பட்ட ஒரு தெய்வம். எகிப்திய கன்று அல்லது மாட்டுக் கடவுள் வழிபாடுதான் அன்றைய சிரியா-பாலஸ்தீனாவில் ஆதிக்கம் செலுத்தியது என்ற வாதம் ஒன்றும் உள்ளது. இது உண்மையாக இருக்க பல வாய்ப்புக்கள் உள்ளன. இஸ்ராயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள் என்று கூறும்போது அங்கே இருந்த வழிபாட்டு முறைகள் நிச்சயமாக அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். கன்று அல்லது எருது என்பது அநேகமாக பால் அல்லது ஏல் போன்ற தெய்வங்களின் அடையாளமாக கருதப்பட்டது. இஸ்ராயேலர் தங்கள் கடவுளுக்கு பலியிடும் போது எருதுகளை பலியிட்டமை, ஒருவேளை அவர்கள் நம்பாத இந்த பொய் தெய்வங்களை தம் உண்மை கடவுளுக்கு பலியிட்டார்களா என்ற வாதத்தையும் முன்வைக்கிறது. ஆரோன் தானாக இந்த கன்றுக் குட்டிகளை செய்யவில்லை மாறாக மக்களின் தூண்டுதல்களாலேயே செய்கிறார். அத்தோடு மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள், ஆரோன் காப்பாற்றப்படுகிறார் இது பல கேள்விகளை எழுப்புகிறது? எரேபோவாம் என்ற வட நாட்டு கிழர்ச்சி மன்னன் எருசலேமில் இருந்து பிரிந்து இஸ்ராயேல் என்று ஒரு தனி இராசியத்தை உருவாக்கிய போது, தான் மற்றும் பெத்தேலில் இதே போன்ற கன்றுக் குட்டிகளையே செய்து வைத்து அவைதான் மக்களை எகிப்திலிருநத்து மீட்டுக்கொண்டு வந்தன என அறிக்கையிட வைத்தான் என்று விவிலியம் சொல்கிறது (காண்க 1அரசர் 12,28❆)
(❆இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, 'நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!' என்றான்.).
இது சிலை வழிபாடு என்பதை விட இஸ்ராயேலரின் நம்பிக்கையில் ஏற்பட்ட மாற்றம் என்றே பார்க்கவேண்டும். அதாவது இஸ்ராயேலர் எகிப்திய கடவுளை இஸ்ராயேலின் கடவுளுக்கு நிகராக பார்க்க முயன்ற சந்தர்ப்பம் போல தோன்றுகிறது. கடவுள் பாரவோனுக்கு முன் தான்தான் உண்மைக் கடவுள் என்று நிரூபித்திருந்தார், ஆனால் இவர்கள் இங்கே மீண்டும் எகிப்திய கடவுளிடம் தமது நம்பிக்கையை செலுத்துகின்றனர். இதனையே விவிலிய ஆசிரியர் முக்கியமான பிரச்சினையாக காட்டுகிறார்.
வ. 7: மலை உயரமான இடமாக இருப்பதாலும், கடவுள் உயரத்திலிருக்கிறார் என்று ஒரு நம்பிக்கையிருந்ததாலும், இங்கே மேசே உயரத்தில் இருந்தது, அவர் கடவுளின் பிரசன்னத்தில் இருந்ததை காட்டுகிறது. மோசேயை இறங்கிபோகச் சொன்னது தன்பிரசன்னத்திலிருந்து போகச் சொன்னதாக எடுக்கலாம். அத்தோடு 'நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள்' என்று சொல்லி தனக்கும் மக்களுக்குமான உறவை முறிக்கிறார் கடவுள். மக்களின் கேட்டிற்கு அவர்களே பொறுப்பு என்கிறார்.
வ. 8: கடவுளின் முறைப்பாடு வகைப்படுத்தப்படுகிறது.
அ. கடவுளின் நெறியிலிருந்து விலகுதல்
ஆ. தங்களுக்கென்று கன்றுக்குட்டியொன்று செய்தல்
இ. அதற்கு வழிபாடு செய்தல்
ஈ. அதனை எகிப்திலிருந்து மக்களை மீட்ட தெய்வம் என அறிக்கையிடுதல்.
இவை கனமான உடன்படிக்கை மீறல்களாக கடவுளால் பார்க்ப்படுகிறது. இந்த பகுதிக்கு சற்று முன்னர்தான் கடவுள் நீண்ட உடன்படிக்கையையும், அதற்கான விசாலமான வரைபுகளையும் இவர்களுக்கு கொடுத்திருந்தார் (ஒப்பிடுக 19-24 அதிகாரங்கள்), அத்தோடு மக்கள் கடவுள் இட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாக 'ஆமென்' என்று பதிலளித்திருந்தனர்.
வ.9: கடவுள் இஸ்ராயேலருக்கு ஒரு புதிய பெயரை அறிவிக்கிறார். 'வணங்காக்கழுத்துள்ள மக்கள்' עַם־קְשֵׁה־עֹרֶף הֽוּא - வணங்கா கழுத்து இங்கே ஒரு உருவகமாக பார்கப்படுகிறது. கடவுளை பின்பற்றுகிறவர்கள் அவர் பேசுகிறபோது மக்கள் தலைகளை குனிந்து அவருக்கு செவிகொடுக்க அழைக்கப்படுகிறார்கள், வணங்காத கழுத்து அவர்கள் கடவுளுக்கு செவிசாய்கிறார்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது.
வ.10: இந்த வரிகள் மூலம், கடவுளின் கோபம் மக்கள் மீது மட்டும்தான் மோசே மீதல்ல, அவர் தொடர்ந்தும் வணங்கும் கழுத்துள்ளவாரகவே இருக்கிறார் என ஆசிரியர் காட்டுகிறார்.
வ.11: மோசேயின் தூய்மையுள்ளமும், அவர் மக்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பும் காட்டப்படுகிறது. அத்தோடு மோசே கடவுளின் மக்கள்மீதான பழைய அன்பை நினைவுபடுத்துகிறார். மத்தியஸ்தராக விளங்குபவர் எந்த வேளையிலும் ஒரு பக்கத்தை அதன் தீவிர நிலைக்கு போய் உடன்படிக்கையை முறித்துவிட அனுமதிக்கக் கூடாது, இங்கு ஆசிரியர் மோசேயை நல்ல மத்தியஸ்தராக காட்டுகிறார். மோசேயின் கதாபாத்திரம் பிற்காலத்தில் வந்த அரசர்கள், இறைவாக்கினர்கள் மற்றும் தலைவர்களுக்கு நற் சவாலான பாத்திரம். இந்த வரியில் மோசே இஸ்ராயேலருக்காக விசுவாச அறிக்கையிடுகிறார்: 'மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு..'
வ.12: இந்த வரியில் எகிப்தியரின் பழிச்சொல்லை நினைவு படுத்துகிறார். இதனால் கடவுளின் நற்பெயர் கெடுவதற்கான வாய்புள்ளதாகவும் கூறுகிறார்.
வ.13: இந்த வரியில், வரலாற்றின் காலங்களுக்கு அப்பால் சென்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபோடு கடவுள் செய்த உடன்படிக்கையை நினைவூட்டுகிறார். இங்கணம், ஆண்டவர் மறதிக்காரர் எனறு ஆசிரியர் காட்ட விளைவாதாக தெரியவில்லை மாறாக இஸ்ராயேலரின் கடவுள், அவர் மக்களோடு இறங்கி வந்து பேசக்கூடியவர் என்பதகைக் காட்டுவது போல தெரிகிறது. மோசே, கடவுளுக்கு அவர் வாக்குறுதியை
நினைவூட்டி அதனை பலப்படுத்த முயல்கிறார்.
வ.14: கடவுளின் இந்த உடனடி மனமாற்றம், மோசேயின் மேல் கடவுள் வைத்திருந்த பிரியத்தைக் காட்டுகிறது.
திருப்பாடல் 51
1கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத்
தூய்மைப்படுத்தியருளும்;
3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. 4உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
6இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். 7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.
8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
9என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 14கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
18சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.
இந்த ஐம்பத்தோராவது திருப்பாடல் miserere (மிசரேரே - இரங்கும்) என்று இலத்தினில் அறியப்படுகிறது. இது ஒரு தனிப் புலம்பல் பாடலாக வகைப்படுத்தப்படுகிறது. எபிரேய விவிலியம் (BHS) இந்த திருப்பாடலை, தாவீது உரியாவின் மனைவியை தன்வசப்படுத்தி, நாத்தான் இறைவாக்கினரால் கடுமையாக கண்டிக்கப்பட்ட நிகழ்வின் பின்னர் தாவீது பாடியதாக ஒரு தலைப்பை காட்கிறது (ஒப்பிடுக 2சாமு 12,1-8). ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் காலை செபத்திலும், திருப்புகழ்-மாலையில் இது உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மனித ஆன்மாவின் தூய்மைக்கான தேடலை அழகாக படம் பிடிக்கிறது. கடவுள் மீது எந்த விதமான பழியையும் போடமல், முழு பொறுப்பையும் பாவம் செய்தவர் ஏற்றுக்கொள்வது என்பது இன்றுவரை இஸ்ராயேலரிடையே காணப்படும் ஆழமான விசுவாசத்திற்கு நல்லதொரு உதாரணம்.
இந்த பாடலில் உள்ள தாவீதைப்பற்றி சிறிய முன்னுரை பிற்காலத்துக்குரியது என்று அதிகமான விவிலிய வல்லுனர்கள் கருதுகின்றனர். தமிழ் மற்றும் வேறு சில மொழிபெயர்ப்புக்களில் 19 வரிகளாக காட்டப்படுகின்ற இந்த திருப்பாடல் எபிரேய விவிலியத்தில், சிறு முன்னுரையை உள்ளடக்கி 21 வரிகளைக் கொண்டுள்ளதை அறிய வேண்டும்.அரசராக இருந்தாலும் சாதாரன மனிதராக இருந்தாலும் அனைவரும் கடவுள் முன்னிலையும் நீதியின் முன்னிலையிலும் சமமானவர்களே என்ற சிந்தனை உண்மையில் மிகவும் இறையியல் தன்மை வாய்ந்தது.
வவ.1-2: இந்த வரிகள் வேண்டுதல்களை முன்வைக்கிறது. ஆசிரியர் கடவுளின் பேரன்பையும் (חֶסֶד ஹெசெட்) அளவற்ற இரக்கத்தையும் (רַחֲמִים ரகாமிம்) எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இரண்டாவது வரியின்
இரண்டாவது பகுதி முதல் சொன்ன கருத்துக்களையே மீண்டும் பாடி, எபிரேய திருப்பிக்கூறும் கவிநடையில் பயணம் செய்கிறது.
அ. தீவினை நீங்கும்படி - கழுவியருளும்
ஆ. பாவம் அற்றுப்போகும்படி - தூய்மைப்படுத்தியருளும்
வவ.3-5: தன்னுடைய தனிப்பட்ட பாவ வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறார் ஆசிரியர். தனிப் புலம்பல் பாடல்களில் அதிகமான மன்னிப்பு கேட்டலும், பாவத்தன்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் வருவதை அவதானிக்கலாம். ஆசிரியர் தான் கடவுள் முன் உண்மையாகவே பாவி என்று ஏற்றுக்கொள்கிறார். வ.3 இல் தன்னுடைய பாவத்திற்கு பொறுப்பேற்கிறார். வ.4ல் தான் கடவுளுக்கெதிராகவே பாவம் செய்து சமூக நீதியை பாதித்துள்ளார் என ஏற்றுக்கொள்கிறார், அத்தோடு கடவுளின் நீதி சரியானது எனவும் திருப்த்தியடைகிறார். வ.5இல் தன்னுடைய தொடக்கமே பாவம்தான் என்று தனது எளிமையான வரலாற்றை நினைவுகூருகிறார்.
வ.6: கடவுள் விரும்புவது என்னவென்று சொல்லப்பட்டுள்ளது. உள்ளத்து உண்மை மெய்ஞானத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
பின்வரும் வரிகள் ஒவ்வொன்றும் பல வேண்டுதல்களை கொண்டமைந்துள்ளன:
வவ.7-8: ஈசோப்பு என்பது ஒருவகை சிறிய புற்தாவரம். இது மன்னிப்பு சடங்குகளில் தண்ணீர் தெளிப்பதற்கு பாவிக்கப்பட்டது. அதனை இங்கே ஆசிரியர் உருவகமாக்குகிறார். உறைபனி என்பது வெண்மைக்கு அடையாளமாக கருதப்பட்டது, வெண்மை என்பது பாவம் அல்ல, ஆனால் தூய வாழ்விற்கு அடையாளமாகிறது.
வவ.9-11: மிக அழகான வரிகள் இவை. தன் பாவங்களை பார்க்கவேண்டாம் என்று கூறி பாவங்கள் கடவுளின் பார்வைகளை இழிவு படுத்துகிறது என்ற தன் அன்பை வெளிப்படுத்துகிறார். பத்தாம் மற்றும் பதினொராம் வரிகள் தூய ஆவியை மையப்படுத்துகின்றன. ஆவி (רוּחַ றுவாஹ்) என்பது தூய ஆவியானவரை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் எடுப்பதில் தப்பில்லை, ஆனால் இங்கே இது கடவுள் மனிதனை படைத்தபோது அவர் ஊதிய தூய்மையான அவர் மூச்சை குறிக்கிறது. இந்த முன்னைய தூய்மையான மூச்சிற்கு செல்வதன் மூலம் தான் பழைய தூய்மையான நிலைக்கு திரும்ப முடியும் என்கிறார் ஆசிரியர்.
வவ.12-13: பாவ வாழ்க்கை கடவுள் கொடுத்த உண்மையான மகிழ்வை (שָׂשׂוֹן ஷஷோன்) கெடுக்கிறது என்ற ஆழான உண்மையை பாடுகிறார். தன்னைப்போல பல பாவிகளை மீண்டும் கடவுளிடம் கொண்டுவர தன் முன்னயை நாள் மகிழ்வு தேவையாக உள்ளது என்பதை ஆசிரியர் நினைவூட்டுகிறார். குற்ற வாழ்க்கை எல்லா மகிழ்வையும் கெடுக்கிறது என்பது, இன்றைய நாள் உளவியல் சிந்தனையாக இருப்பதையும் நாம் நினைவுகூர வேண்டும்.
வவ.14-15: இந்த வரியில் வருகின்ற இரத்தப் பழி (מִדָּמִים இரத்தத்திலிருந்து) என்ற கூற்றிலிருந்தே இந்த திருப்பாடலை தாவீதோடும் அவரால் கொலையுண்ட உரியாவோடும் இணைக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. இரத்தப் பழி இருக்கும் வரை ஒருவரால் நீதியைப் பற்றி விவாதிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. (ஈழத்தில் இரத்த பழிக்கு சொந்தக்காரர்களே விசாரணைக் காரர்களாக இருக்க முயல்வதை எப்படி அனுமதிக்க முடியும்..). மூடிய இதழ்கள், இங்கே முதல் வரியில் கூறப்பட்ட தகுதியில்லாத நிலையையே காட்டுகின்றன.
வவ.16-17: கடவுள் விரும்புவது நொறுங்கிய நெஞ்சமே என்று இஸ்ராயேலரின் ஆழமான ஆன்மீகம் பாடப்பட்டுள்ளது. நொருங்கிய நெஞ்சமே என்பது உடைந்த ஆவியென்று எபிரேயத்தில் உள்ளது (רוּחַ נִשְׁבָּרָה rûha nišbāreh). இது கர்வமில்லாத, தாழ்ச்சியுள்ள மனதை குறிப்பதாக எடுக்கலாம். உடைந்த ஆவியை ஆசிரியர் உடைந்த இதயத்தோடு ஒத்ததாக்குகின்றார். இதிலிருந்து, இதயம், ஆவி, மூச்சு போன்ற இவர்களின் எண்ணங்களை கண்டுகொள்ளலாம். இவற்றை அதிகமாக ஒத்த கருத்துச் சொற்களாகவே பாவிக்கின்றனர்.
வவ.18-19: இந்த வரிகள் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த பாடல் தாவீதுடைய பாடல் என்றால் ஏன் மதில்கள் மீளவும் கட்டப்பட வேண்டும்? தாவீதின் காலத்தில் ஆலயம் இருந்திருக்கவில்லை, அங்கே பீடமும் இருந்திருக்கவில்லை, பின், இது எந்த பீடத்தை குறிக்கிறது? சிலர் இந்த மதில்களை உருவகமாக பார்க்கின்றனர், அதாவது ஆசிரியர் தன் சமூகத்தை குறிப்பதாக பார்க்கின்றனர். எவ்வாறெனினும், இந்த வரிகள் இடப்பெயர்வு காலத்திற்கு (கி.மு 538) பிற்பட்டவைபோலவே தோன்றுகிறது. அப்படியாயின் இது ஒரு தனி மனிதர் புலம்பல் திருப்பாடல் போல வழிபாட்டிற்காக வரலாற்று அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டது எனவும் எடுக்கலாம்.
1திமோ 1,12-17
12எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். 13முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். 14இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது. 15'பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்'. — இக்கூற்று உண்மையானது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. — அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். 16ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்கவேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார். 17அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராயிருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.
திமோத்தேயுவிற்கு எழுதப்பட்ட திருமுகங்கள், ஆயர் திருமுக வகையை சார்ந்தவை என்று பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து நம்பப்பட்டு வருகிறது. திமோதேயுவும் தீத்துவும் பவுலுடைய நேரடி மறைபரப்பு பணியுடன் சம்பந்தப்பட்டவர்கள். புதிய ஏற்பாட்டில் இந்த மூன்று திருமுகங்கள் மட்டுமே இப்படியான தனி நபருக்கு ஆயத்துவத்துடன் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. பல திருமுகங்கள் இப்படியாக எழுதப்பட்;டிருக்கலாம். அவை எவையென அறியாமல் போய்விட்டது என்றும் சில முக்கியமான வாதங்கள் உள்ளன. திமோத்தேயு திருத்தூதர் பணிகள் நூல்களில் மட்டுமல்ல பவுலின் பல கடிதங்களிலும் அடையாளப்படுத்தப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் பவுலுடைய முதலாவது மறைபரப்பு பயணத்தில் மனமாற்றப்பட்ட ஒரு யூத-கிரேக்க பின்புலத்தைக் கொண்ட கிறிஸ்தவர். Τιμοθέος timotheos என்றால் 'கடவுளை மதிப்பவர்' என்று பொருள். திமோத்தேயு மற்றும் தீத்துவிற்கு எழுதப்பட்ட திருமுகங்கள் பவுலால் எழுதப்பட்டவை என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இந்நாட்களில் இந்த நம்பிக்கைக்கு எதிராக சில வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. அதாவது இவை பவுலின் சிந்தனைகளைகளைத் தாங்கிய பிற்காலத்து ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டவை என்பதாகும். இந்த பகுதி பவுலின் இயேசுவைப் பற்றிய தனிப்பட்ட அனுபவத்தை விவரிக்கின்றன. இந்த தனிப்பட்ட அனுபவத்தை சொல்லுவதன் ஊடாக இவர் அல்லது இதனை வாசிக்கும் எந்த மூப்பரும் இப்படியான இயேசு அனுபவத்தை பெற முயலவேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார் என்று எடுக்கலாம்.
வ.12: இந்த வரி பவுலுடைய சில திருத்தூதுத்துவ அனுபவங்களை மையப்படுத்துகிறது. பவுல் இயேசுவால் பன்னிருவருள் ஒருவராக அழைக்கப்படாத காரணத்தால் முதல் திருச்சபையில் பவுலுக்கு எதிரான சில வாதங்கள் இருந்தன. பவுல், இங்கு தன்னை தனது முன்னைய வாழ்வைப் பற்றி இயேசு கருதாமல் அவராகவே அழைத்துள்ளதை நினைவுபடுத்துகிறார். தன்னை இயேசு திருத்தொண்டில் இருத்தியதற்கான காரணம், தனது நம்பிக்கைத் தன்மை என்கிறார்.
வ.13: பவுலின் பழைய வாழ்க்கை மீண்டும் நினைவூட்டப்படுகிறது. திருத்தூதர் பணிகள் எவ்வாறெல்லாம் பவுல் திருச்சபையை துன்புறுத்தினார் என்பதை விவரிக்கின்றது (ஆராய்க தி.பணி 8). இவற்றையெல்லாம் தான் இயேசு-அறிவில்லாமல் செய்ததாக ஒப்புக்கொள்கிறார். கடவுளின் இரக்கத்தை பெறுபவர் நீதிமான்கள் என எபிரேயர் கருதினர், இதனைத்தான் தான் பெற்றதாக கூறுகிறார்.
வ.14: ஆண்டவரின் அருளுக்காக யூதர்கள் பலவிதமான முயற்ச்சிகளை மேற்கொள்வர், இங்கே இந்த அருளைப் பெற முக்கியமான வழியாக பவுல் இயேசுவின் அன்பையும் அவரோடு இணைந்திருத்தலையும் நிலையான ஊடகமாக காட்டுகிறார்.
வ.15: கூற்று என்பது நற்செய்தியை குறிக்கின்றது. இந்த கூற்று ὁ λόγος லோகோஸ் என்ற வார்த்தையில் பாவிக்கப்பட்டுள்ளது இப்படியாக இயேசுவைப் பற்றிய நற்செய்தி அக்காலத்தில் பிரசித்தி பெற்று இருந்ததையும் அதன் சாரம்சமாக, 'பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்' எனபதை இங்கனம் காணலாம்.
வ.16: இந்த நற்செய்தி பவுலுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் அறிவிப்பு பவுலிலே முழுமையடைவதாக பவுல் வாதாடுகிறார். பவுல் தான் தான் முதல் புறவின சீடன் என்பது போல தன்னை யூதரல்லாத கிறிஸ்தவர்களுடன் அடையாளப்படுத்துகிறார்.
வ.17: வழமையாக ஒரு கடிதத்தில் ஒரு செய்தி நிறைவுகூருகிறபோது ஒரு முடிவுரை இருக்கும். அப்படியான ஒரு சிறு முடிவுரையை இங்கே காணலாம். இன்று நாம் பாவிக்கும் சில புகழ்ச்சியுரைகள் இந்த வரிகளை பின்புலமாக கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். இயேசுவில் கொள்ளும் நம்பிக்கை யூதர்களின் பாரம்பரிய கடவுளுக்கு செய்யும் நம்பிக்கை விசுவாசமே என்பதை ஆழமாக விளங்கப்படுத்துகிறார்.
லூக் 15,1-32
1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர். 3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 4'உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? 5கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; 6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். 7அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா நற்செய்தியின் பதினைந்தாவது அதிகாரத்திற்கு பல பெயர்கள் விவிலிய வல்லுனர்களால் கொடுக்கப்படுகிறது, அவற்றில் முக்கியமாக இந்த அதிகாரம் இரக்கத்தின் அதிகாரம் என்று பார்க்கப்படுகிறது. லூக்கா நற்செய்தியின் பல தனித்துவான பண்புகளை இந்த அதிகாரத்திலே கண்டுகொள்ளலாம். இந்த அதிகாரம், இயேசுவின் இரக்க முகத்தையும், அவருடைய முழு உலக மீட்புத் திட்டத்தையும் பின்புலமாக லூக்கா எடுக்கிறார் என்பதை வெளிச்சமாகக் காட்டுகிறது.
வவ.1-6:
அ. முதலாவது வரி யார் இயேசுவிற்கு செவிகொடுத்தனர், அத்தோடு யார் யாரெல்லாம் அவரை புறக்கணித்தனர் என்பதை அழகாக முன்னுரைபோல காட்டுகின்றது. பாவிகள், வரிதண்டுவோர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோர் எவரும் லூக்காவின் இயேசுவின் மீட்பு அட்டவணையில், வெளியில் இல்லை என்பதைக் காட்டுகிறது. பரிசேயர் மறைநூல் அறிஞர்கள் முணுமுணுப்பதன் வாயிலாக இயேசுவின் மீட்பு அட்டவணையில் வெளியில் இருக்கிறார்கள்.
ஆ. ஏன் ஆண்டவர் அந்த தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலைநிலத்தில் விட்டார். ஒரு வேளை அவை பாதுகாப்பான இடமாக இருந்திருக்கலாம் அல்லது அந்த ஆடுகளை விட ஆயன் தொலைந்த ஆட்டையே விரும்பியிருக்கலாம்.
இ. கண்டுபிடிக்கப்பட்ட ஆடு ஆயனின் தோளில் இருக்கிறது. ஆயனின் தோள் என்பது மிகவும் முக்கியமான இடம். இந்த இடம் இந்த தொலைந்த ஆடுக்கே கிடைப்பது, பாவிகளுக்கு ஒரு விசேட இடம் இயேசுவின் இதயத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஈ. இங்கே நேர்மையாளர்கள் என்று வர்ணிக்கப்படுகிறவர்கள், நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாவிக்கப்பட்டுள்ளனர் என்பதில் கேள்விகள் உள்ளன. லூக்கா சில முக்கியமான வேளைகளில் நேர்மையாளர்கள் என காட்டுபவர்கள், இயேசுவிற்கு எதிராக முணுமுணுப்பவர்களாக இருக்கிறார்கள்.
இங்கே இது எதிர்மறையாகவே இருப்பது போல தோன்றுகிறது. (δίκαιος திகையோஸ் - நீதிமான்கள், சட்டத்தை பின்பற்றுகிறவர்கள்). இந்த வரிகள் நீதிமான்களுக்கு எதிரான வரிகள் என்பதை விட இது பாவிகளுக்கு சாதகமான வரிகள் என்றே எடுக்கவேண்டும்.
8'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். 10அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.'
வ. 8-9:
அ. திராக்கமா நாணயம், ஒரு தெனாரியத்தின் பெறுமதியைக் கொண்டது, இந்த தெனாரியம் ஒரு நாள் கூலிக்கு சமனாகும் (almost 1500.00 LKR) . ஆக ஒவ்வொரு தெனாரியமும் முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஆ. மேலே வந்த உவமையைப்போல இங்கேயும் தொலைந்தது கண்டுபிடிக்கப்பட்டது, மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. அத்தோடு அந்த மகிழ்ச்சி அண்டை வீட்டாருடன் கொண்டாடப்படுகிறது.
இ. இந்த பகுதியிலேயும் வானகக் கொண்டாட்டம் நினைவுகூரப்படுகிறது. வானகத் தூதரின் மகிழ்ச்சி மிகவும் நோக்கப்பட வேண்டிய விடயம். லூக்கா நற்செய்தியில் இந்த மகிழ்ச்சி (χαρά காரா) என்பது மிகவும் முக்கியமான இறையியல் கருத்து. இயேசுவின் பிறப்பை ஒட்டி வானதூதர்கள் இதே மகிழ்ச்சியைக் கொண்டாடினர் (காண்க லூக் 2,10❆)
(❆வானதூதர் அவர்களிடம், 'அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.)
11மேலும் இயேசு கூறியது: 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். 20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். 22தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25'அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார். 27அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். 28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். 31அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.'
லூக்கா நற்செய்தியில் மிக மிக முக்கியமானதும், மிக ஆழமாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதுமான பகுதி இதுவாகும். முதல் இரண்டு உவமைகளை ஒத்தகாகவே இதனுடைய இறையியலும் காணப்படுகிறது ஆனால் அதனை இன்னும் நிவர்தியாக சொல்ல முனைகிறது. இந்த பகுதியில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்கள் நம் சிந்தனைக்கு வைக்கப்படுகின்றன, அவை: தந்தை, இளைய மகன் மற்றும் மூத்த மகன். இந்த கதாபாத்திரங்கள் மூலமாக, அன்றைய சமூதாயத்தின் பிரச்சனைகளையும் மக்கள் குழுக்களையும் மறைமுகமாக படம்பிடிக்கிறார் லூக்கா. இந்த உவமை வரலாற்றில் பல இறையியல் போதனைகளை முன்வைத்திருக்கிறது. இதனை ஊதாரி மகன் மற்றும் ஊதாரி தந்தை உவமை என்று கூட சில வர்ணித்திருக்கின்றனர். இந்த இளைய மகனை தந்தை அரவணைக்கும் காட்சியை வரைந்த ஓவியர் மிகவும் பிரசித்தி பெற்றவர், Rembrandt Harmenszoon van Rijn. இவர் ஐரோப்பிய ஓவிய வரலாற்றில் முக முக்கியமானவர்களில் ஒரு நெதர்லாந்து ஓவியர்.
அ. தந்தை: கடவுளை நினைவூட்டுகிறார்.
ஆ. இளைய மகன்: மனந்திரும்பும் பாவிகளையும், புறக்கணிக்கப்பட்ட யூதரல்லாதவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்
இ. மூத்த மகன்: இயேசுவிற்கு செவிசாய்காத சில யூத தலைவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
வவ. 11-12: சாதாரணமாக தந்தை வாழும் போது மக்களுக்கு சொத்துக்கள் பிரிக்கப்படுவதில்லை, இருந்த போதும் லூக்காவின் இந்த வரைபு, இக் கதையில் வரும் தந்தையின் விசேடத்துவத்தைக் காட்டுகிறது.
வவ. 13-16: இங்கு பல முக்கிய விவரிப்புக்கள் இளைய மகனின் வாழ்க்கையுடன் காட்டப்படுகிறது.
அ. சில நாட்களுக்குள்ளேயே இளைய மகன் தந்தையையும் வீட்டையும் பிரிகிறார். இங்கே இவருடைய தாயைப்பற்றி லூக்கா எதுவும் சொல்லவில்லை. சாதாரணமாக லூக்கா பெண்களுக்கு முக்கியம் கொடுக்கிறவர். ஒரு வேளை இதனை வழக்கமான யூத முறையில் சொல்ல முனைகிறார் என எடுக்கலாம்.
ஆ. தொலை நாடு என்று கூறி, இளைய மகன் தந்தையுடன் உள்ள உறவை ஆழமான துண்டிக்க விளைந்தார் என காட்டுகிறார்.
ஆ. தாறுமாறான வாழ்வு என்பது இங்கே அவரது பாவ வாழ்க்கையைக் குறிக்கிறது. அத்தோடு சொத்துக்களை அவர் விரயமாக்கியது அவரின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
இ. வறுமை மற்றும் பஞ்சம் இந்த இளைய மகனின் ஆபத்தான நிலையைக் காட்டுகிறது.
ஈ. அந்நிய முதலாளி இவரை பன்றிகளை மேய்க அனுப்புவது நோக்கப்படவேண்டும். யூதர்கள் பன்றிகளை தீட்டாக கருதினர். நல்ல யூதமகனான இவர் இப்போது பன்றிகளின் மேய்ப்பனாகிறார். அதவாது தனது மாண்பை இளக்கிறார். (ஒப்பிடுக லேவியர் 11,7❆)
(❆பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது; ஆனால், அது அசைபோடாது; எனவே அது உங்களுக்குத் தீட்டு.)
உ. இந்த கீழ்த்தரமான வாழ்வு கூட அவருக்கு கிடைக்கவில்லை என்பது, இங்கே அவரின் மிக மோசமான நிலையைக் குறிக்கிறது.
வவ. 17-19: இங்கே அவருடைய பின்னைய முயற்ச்சிகள் காட்டப்படுகின்றன.
அ. அறிவு தெளிந்தவராக என்பது, கிரேக்கத்தில் 'அவர் தன்னுடைய நிலைக்கு திரும்பினார் என்று உள்ளது' (εἰς ἑαυτὸν δὲ ἐλθὼν eis eauton de elthon). ஆக அவர் இவ்வளவு காலமும் தன்னுடைய நிலையில் இருந்திருக்கவில்லை என லூக்கா சொல்லுவது புலப்படுகிறது.
ஆ. அவர் தான் செய்த குற்றங்கள் வெறுமனே தன் தந்தைக்கு எதிரானவை அல்ல மாறாக கடவுளுக்கும் எதிரானவை என்பதை உணர்கிறார். இந்த வரிகள், யூதர்கள் தங்களின் பாவ வாழ்வு கடவுளுக்கு எதிரான வாழ்வு என்ற சிந்தனையை கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
இ. மகனாக இருந்தவர், கூலியாளாக மாறலாம் என நினைக்கிறார். தந்தையின் கூலியாள் கூட மேன்மையானவர் என்பது, அவர் தந்தையின் உன்னத பொருளாதார நிலையைக் காட்டுகிறது.
வவ. 20-24: இங்கே தந்தை மற்றும் இளைய மகனுடைய உரையாடல் காட்டப்பட்டுள்ளது:
அ. தந்தை தானே ஓடிப்போவது, அவர் இன்னமும் தன் மகனை நினைத்து கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. அவர் தூரத்திலே தன் மகனை அடையாளம் காண்பதும் நோக்கப்படவேண்டியது. தந்தை பரிவு கொள்வதும் மகனை முத்தமிடுவதும், அவர் தன் மகனை ஏற்கனவே மன்னித்துவிட்டார் என்பதைக் காட்டுகின்றன.
ஆ. மகன் பாவ அறிக்கை செய்கிறார். தனது குற்றங்கள் தந்தைக்கும் கடவுளுக்கும் எதிரானவை என மீண்டும் அறிக்கையிடுகிறார். ஆனால் தந்தை அதனை காதில் வாங்கியதாக தெரியவில்லை.
இ. முதல் தரமான ஆடை இங்கே இவரின் மாண்பு திருப்பிக் கொடுக்கப்படுவதைக் காட்டுகிறது. மோதிரமும் மிதியடியும் அவரது மகன் அடையாளத்தையும், மகனின் உரிமைகளையும் காட்டுகின்றன.
ஈ. கொழுத்த கன்று அடிக்கப்படுவது, கொண்டாட்டத்தையும் விருந்தையும் காட்டுகிறது. சாதாரனமாக
இப்படியான கொழுத்த கன்றுகள் வழிபாட்டு கொண்டாட்டங்களுக்கே பலியிடப்பட்டன. ஆக லூக்கா இவரின் வருகையை, சடங்குகளை விட முக்கியமானது என காட்டுகிறார் போல.
உ. தந்தை தன் மகிழ்ச்சியின் காரணத்தை விளக்குகிறார். தந்தையை விட்டு தூர செல்லுதல் மரணத்திற்கு நிகரானது என்பதை விளக்குகிறார்.
வவ. 25-27: இந்த வரிகள் மூத்த மகனுடைய மன நிலையைக் காட்டுகின்றன. இந்த மூத்த மகன் லூக்காவின் திருச்சபையில் புறவின அல்லது மனம் மாறிய பாவிகளுக்கு, இடம்தராத கிறிஸ்தவர்கள் அல்லது யூதர்களை குறிக்கலாம்.
அ. மூத்த மகன் வயலில் இருந்து வருவது, அவர் தன் தந்தையின் அலுவல்களில் ஈடுபடுகிறார் என்பதைக் காட்டுகிறது.
ஆ. அவருடைய கேள்வி, இந்த வீட்டில் ஆட்டம் பாட்டங்கள் வழமைக்கு எதிரானவை என்பதைக் காட்டுகிறது.
இ. ஊழியரின் பதில், அந்த ஊழியர்கூட இளைய மகனின் வருகையை ஆதரிப்பது போல உள்ளது.
வவ. 28-32: இந்த வரிகள் மூத்த மகனுக்கும் தந்தைக்கும் இடையிலான உரையாடலை தாங்கி வருகிறது.
அ. உள்ளே வரமுடியாமல் இருப்பது அவரின் மன நிலையைக் காட்டுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். இளைய மகனின் பாவ வாழ்வு, தந்தையின் ஊதாரி இரக்கம், அல்லது தன் சொந்த உளவியல் சிக்கல்களாக இருந்திருக்கலாம். இருந்தும் தந்தை அவரையும் இளைய மகனைப்போல் உள்ளே அழைக்கிறார்.
ஆ. மூத்தவர் தன் நியாயங்களை முன்வைக்கிறார்:
அவர் அடிமைபோல் வேலை செய்திருக்கிறார்,
கட்டளைகளை மீறியது கிடையாது,
ஒரு ஆட்டையும் தந்ததில்லை,
ஊதாரி தம்பிக்கு கொழுத்த கன்றை தந்திருக்கிறார்.
இவை இந்த மூத்த மகன் சில இன்பங்களை விரும்பியும், செய்ய முடியாமல் இருந்ததைக் காட்டுகிறன.
இ. தந்தை தன்னுடைய நியாயங்களை முன்வைக்கிறார்:
மூத்தவர் எப்போதும் தன்னுடன் இருக்கிறார் (இதை மூத்தவர் உணர்ந்தாரா என்பது தெரியவில்லை),
தந்தையுடையவை மூத்தவருடையது (ஆனால் ஏன் மூத்தவர் அவற்றை கொண்டாடவில்லை),
தம்பியின் வருகை அவரது உயிர்ப்பிற்கு சமன் எனவே கொண்டாடப்படவேண்டியதே.
கடவுளின் பார்வை வித்தியாசமானது.
அவர் பாவத்தை வெறுக்கிறார், பாவிகளையல்ல
பாவிகள் மனமாறுவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
இங்கே மகன் ஊதாரி என்பதைவிட, தந்தைதான் இரக்கத்தில் ஊதாரியாக இருக்கிறார்.
விண்ணக தந்தையையைப் போல இரக்கமுள்ளவர்களாய் இருக்க உதவும்
நல்ல இயேசு ஆண்டவரே! ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக