ஆண்டின் பொதுக்காலம் இருபத்தைந்தாம் வாரம் (ஆ)
23,09,2018
மி. ஜெகன்குமார் அமதி
சங்கமம்,
கோப்பாய், யாழ்ப்பாணம்.
Wednesday, September 19, 2018
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 2,12.17-20
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 53
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 3,16-4,3
நற்செய்தி: மாற்கு 9,30-37
சாலமோனின் ஞானம் 2,12.17-20
'நீதி மான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில், அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான
பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள். நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.
17. அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு
என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.
18நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்;
பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.
19அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம்.
20இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில், தங்கள் வாய்மொழிப் படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'
சாலமோனின் ஞானம் இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நூல் செப்துவாஜிந்தில் ஒரு நூலாக காணப்பட்டது, இதனை ஆரம்ப கால யூதர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நூல் தன் மூல மொழியாக, கிரேக்கத்தை கொண்டிருப்பதனால் இதனை தற்கால யூதர்களும், பிரிந்த சகோதர கிறிஸ்தவர்களும் தங்களின் விவிலியங்களில் ஏற்றுக்கொள்வதில்லை. அரசர் சாலமோனின் பெயர் நேரடியாக இந்த புத்தகத்திலே குறிப்பிடப்படாவிட்டாலும், அவரின் மகிமையைக் காரணம் கண்டு, இந்த புத்தகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரத்திற்கும் 1அரசர் 3,6-9 இற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருச்சபைத் தந்தை தூய அகுஸ்தினுடைய விருப்பமான புத்தகம் இதுவாக இருந்திருக்கிறது. இதன் காலத்தை கணிப்பது கடினமாக இருந்தாலும், தற்போது இந்த புத்தகம் கி.மு முதலாம் நூற்றாண்டை சார்ந்தது என பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பக்திமிக்க யூதர். இவர் எகிப்து அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர், எபிரேய இலக்கியங்கள், கலாச்சாரம் அத்தோடு கிரேக்க
இலக்கியங்கள், மற்றும் கிரேக்க மெய்யியலை நன்கு அறிந்தவராக இருந்திருக்க வேண்டும்.
மெய்யறிவு (ஞானம்) σοφία சோபியா, என்பதுதான் இந்த புத்தகத்தின் மையப் பொருள். அதேவேளை மற்றைய ஞான நூல்களாக யோபு, நீதிமொழிகள், சபை உரையாளர், சீராக், திருப்பாடல், மற்றும் இனிமைமிகு பாடல் போன்றவற்றிலும் பார்க்க இந்த நூல் தனித்துவமாக
இருக்கிறது. இதன் இலக்கிய வகையாக புத்திமதி அல்லது அறிவுரை நூற்கள் என சிலர் இதனை வகைப்படுத்துகின்றனர், இந்த வகை கிரேக்க இலக்கியத்தில் மிகவும் முக்கியமான ஒரு வகை
இலக்கியம். சிலர் இதனை அரிஸ்டோட்டிலின் இலக்கிய அலகுகளின் வகையிலும் சேர்க்கப் பார்க்கின்றனர். எது எவ்வாறெனினும் இது முழுக்க முழுக்க கிரேக்க இலக்கியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நினைக்கிறேன். முக்கியமாக இந்த புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர் .
அ. மெய்யறிவின் அழியாத்தன்மை (நித்தியம்), அதிகாரங்கள் 1-6
ஆ. மெய்யறிவை பற்றிய விளக்கம், அதிகாரங்கள் 7-9
இ. வரலாற்றில் மெய்யறிவின் செயற்பாடுகள், அதிகாரங்கள் 10-19
இந்த இரண்டாவது அதிகாரம் இறைபற்றில்லாதவர்களின் வார்த்தைகளை ஒப்பது போல அமைந்திருக்கிறது. இறைபற்றில்லாதவர்கள் தங்கள் உள்ளத்தில் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதை ஆசிரியர் கற்பனையில் வடிக்கிறார். இவர் இறைபற்றில்லாதவர்களின் வாயில் வைக்கும் வார்த்தைகளை பார்க்கின்றபோது, அது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த தீமைகளை பிரதிபலிப்பது போல இருக்கிறது. சாலமோனின் ஞானம் கிரேக்க காலத்தில் எழுதப்பட்டமையால், இந்த தீமைகள் என கருதப்படுபவை கிரேக்க கலாச்சாரத்தை மறைமுகமாக சாடுகின்றன எனவும் எடுக்கலாம்.
வ.12: நீதிமான்களை தாக்க தீமையாளர்கள் சொல்வது போல இந்த வரி அமைகிறது. நீதிமான்களை தாக்க பதுங்கியிருப்போம் எனச் சொல்கிறார்கள் (ἐνεδρεύσωμεν τὸν δίκαιον எனெத்ரெயுசோமென் டொன் தியாக்யொன்). அதற்கான காரணமாக அவர்கள் தொல்லையாக
இருக்கிறார்கள் என்கிறார் (δύσχρηστος தூஸ்கிரேஸ்டொஸ்- இடைஞ்சலாக).
அத்தோடு இவர்கள் குற்றம் சுமத்துவதாகவும் சொல்கிறார்கள். அதாவது நீதிமான்கள் திருச்சட்டங்களுக்கு எதிராக குற்றம் செய்;கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள், மேலும் நற்பயிற்சியை அவர்கள் மீறியதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். திருச்சட்டங்களை மீறுவதும், நற்பயிற்சியை மீறுவதும் யூத கலாச்சாரத்திற்கு எதிரானதாக கருதப்பட்டிருக்க வேண்டும். இவை தீயவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இவற்றைத்தான் இவர்கள் மீறுகிறார்கள், இருப்பினும் அக்குற்றங்களை நீதிமான்கள் மீது சுமத்துகிறார்கள்.
வ.17: நீதிமான்கள் (δίκαιος தீகாய்யொஸ்) கடவுளைப் பற்றி பலவாறு அறிக்கையிடுவார்கள்.
இதனை பொல்லாதவர்கள் என அறியப்பட்டவர்கள் உண்மையா? என கேள்வி எழுப்புகிறார்கள் என்பது ஆசிரியரின் வாதம். நீதிமான்கள் நீதியான வாழ்வு அவர்களுக்கு எந்த விதமான நன்மைத்தனங்களையும் வழங்காது என்பது பொல்லாதவர்களின் வாதம்.
அவர்கள் இரண்டு விதமான ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர்: கண்டறிவோம் ἴδωμεν ஈதோமென்- கண்டிறிவோம், πειράσωμεν பெய்ராசோமென்- ஆய்ந்தறிவோம். இந்த இரண்டு பண்புகளும் மனிதனுடைய அகங்காரத்தின் வெளிப்பாடாக சில முக்கியமான இடங்களில் விவிலியத்தில் காட்டப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலும் இயேசுவை கேள்வி கேட்கிறவர்கள் இப்படியான மனநிலையைக் கொண்டிருந்தார்கள் என காட்டப்படுகிறது.
வ.18: நீதிமான்கள் தங்களை கடவுளின் மக்கள் என அறிக்கையிட்டார்கள். அவர்கள் கடவுளின் மக்கள் என்பதில் பொல்லாதவர்களுக்கு சில சந்தேகம் இருந்திருக்க வேண்டும் (γάρ ἐστιν ὁ δίκαιος υἱὸς θεοῦ கார் எஸ்டின் ஹொ திகாய்யொஸ் ஹுய்யொஸ் தியூ- நீதிமான் கடவுளின் மகனாக இருப்பதால்).
நீதிமான்களுக்கு வரும் துன்பங்களிலிருந்து யார் அவர்களை பாதுகாப்பார் என்பது கிண்டல் சார்ந்த, பொல்லாதவர்களின் கேள்வியாக இருக்கிறது. நீதிமான்களுக்கு துன்பம் வருகிறது, பொல்லாப்புக்கள் வருகின்றன, பகைவர்களிடம் துன்பப்படுகிறார்கள், ஆக ஏன் இவர்கள் காக்கப்படவில்லை என்பது இவர்களின் கேள்வி.
வ.19: அதேவேளை நீதிமான்கள் தங்களை கனிவுள்ளவர்களாகவும், பொறுமைசாலிகளாகவும் சொல்லிக்கொள்வதனால், அவர்களின் பொறுமையையும், கனிவுள்ளத்தையும் சோதிக்க முயல்கிறார்கள், பொல்லாதவர்கள் எனப்படுகிறவர்கள்.
இதற்கு ஊடகமாக அவர்கள் வசைமொழியையும் (ὕβρις ஹுப்ரிஸ்-வசைமொழி), துன்புறுத்தலையும் (βάσανος பாசானொஸ்- துன்புறுத்தல்) பயன்படுத்துகிறார்க்ள. இந்த துன்பங்கள் அக்காலத்தில் யூத மறையை கிரேக்க கலாச்சாரத்திற்கு எதிராக பின்பற்றிய நீதிமான்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். இந்த துன்பங்களை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார்.
வ.20: இழிவான சாவு (θανάτῳ ἀσχήμονι தானாடோ அஸ்கேமொனொய்- இழிவான சாவுக்கு), எதனை குறிக்கிறது என்பது இந்த வரியில் தெளிவாக இல்லை. கிரேக்க கலாபனைகளின் போது பல யூத தலைவைர்கள், இளையோர்கள் கொடுமையான மரணத்தை சந்தித்தார்கள். இதனை அவர்கள் கேலியாகவும் கூட செய்தார்கள்.
அதிகமான துன்புறுத்தல்களின் போது, யூதர்கள் அவமானங்களை சந்தித்தார்கள், அதில் தங்கள் கடவுள் தங்களை கைவிட்டுவிட்டார் என்பது மிக முக்கியமான அவமானமாக இருந்தது.
இதனை துன்புறுத்துகிறவர்களும் நன்கு அறிந்தார்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது.
திருப்பாடல் 54
எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்)
1கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது
நேர்மையை நிலைநாட்டும்.
2கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.
3ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப்
பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)
4இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;
5என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக!
‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்!
6தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.'
7ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன்.
தாவீதுடைய சொந்த பாடல்களின் ஒன்றாக சில பாரம்பரிய ஆய்வாளர்கள் இந்த பாடலையும் காண்கின்றனர். இந்த பாடலும் 52வது பாடலும் இறையியலிலும் கதாம்சத்தில் ஒன்றித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏதோம் இஸ்ராயேலுடைய பரம்பரை எதிரியாக விவிலியத்தில் அதிகமான புத்தகங்களில் காட்டப்படுகிறது. சிப் என்ற நகர் யூதேயாவின் தென் நகர்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. இது தாவீதுடைய நகர்களில் ஒன்று. ஒரு முறை இந்த நகர் சவுலிடம் தாவீதை காட்டிக் கொடுக்க முயற்சி செய்தது. இதனை தாவீது மிகவும் மனவருத்தத்தோடு நோக்கினார். தன் சொந்த மக்களே தன்னை சவுலிடம் காட்டிக் கொடுக்க முயன்றதை அவரால் சகித்திருக்க முடியாது.
இந்த பாடல் தனி மனித புலம்பல் பாடல் வகையை சார்ந்திருக்கிறது. இதனால் இதில் வேண்டல்களும் மன்றாட்டுக்களும் தனி இடம் பிடிக்கின்றன
வ.0: இந்த பாடலின் தலைப்பு இதனை 'இசைக் கருவியின் பாடல், தாவீதின் பாடல்' என அடையாளப் படுத்துகிறது (מַשְׂכִּיל לְדָוִֽד மாஸ்கில் லெதாவித்- தாவீதின் பாடல்). அத்தோடு இந்த தலைப்பில் சிப்பியர் தாவீதை சவுலிடம் காட்டிக்கொடுத்தது சொல்லப்படுகிறது. (וַיֹּאמְרוּ לְשָׁאוּל הֲלֹא דָוִ֗ד מִסְתַּתֵּר עִמָּנוּ׃ வய்யோம்ரூ லெஷா'வூல் ஹலோ' தாவித் மிஸ்தாத்தெர் 'இம்மானூ- தாவீது தங்களிடம் மறைந்திருப்பதாக அவர்கள் சவுலுக்குச் சொன்னார்கள்). இந்த விளக்கம் பிற்கால இணைப்பாக
இருக்கலாம்
வ.1: கடவுளை, தன் பெயரின் வல்லமையால், ஆசிரியர் தனக்கு உதவிசெய்யுமாறு அழைக்கிறார். கடவுளின் பெயருக்கு வல்லமை உள்ளது என்பது யூதர்களின் மிக முக்கியமான நம்பிக்கை. கடவுளின் பெயரின் வல்லமை மற்றும் கடவுளின் வல்லமை என்பது ஒத்த கருத்துச் சொற்களாகவே பார்க்கப்படவேண்டும் (אֱלֹהִים בְּשִׁמְךָ הוֹשִׁיעֵנִי 'எலோஹிம் பெஷ்மெகா ஹோஷி'எனி- ஆண்டவரே உம் பெயரின் பொருட்டு என்னை காத்தருளும்).
இதற்கு ஒத்த கருத்தாக தன்னுடைய நேர்மையை நிலைநாட்டச் சொல்கிறார். நேர்மை ஆசிரியருடைய தலையாக பண்பாக பார்க்கப்படுகிறது. சவுலுக்கு தாவீது துரோகம் செய்தார் என்பது அவர்மீதான குற்றச் சாட்டாக இருந்திருக்கிறது. கடவுள் தாவீதை சவுலிடம் இருந்து விடுவித்தால், தாவீது குற்றமற்றவர் என்பது தெளிவாகும், இதனைத்தான் தாவீது எதிர்பார்க்கிறார்.
வ.2: ஒத்த கருத்து வரிகள் மற்றும் திருப்பிக் கூறும் வரிகள் அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகின்றன. தன்னுடைய விண்ணப்பத்தையும், தன் வாயின் சொற்களையும் ஒத்த கருத்துச் சொற்களாகப் பார்க்கிறார். இந்த வரி, புலம்பல் பாடல்களின் மிக முக்கியமான பண்பாகிய வேண்டுதல், இந்த இடத்தில் அமைந்துள்ளது.
வ.3: தனக்கெதிரானவர்களை ஆசிரியர் செருக்குற்றவர் எனப் பார்க்கிறார். இவர்கள் தனக்கெதிராக எழுந்துள்ளார்கள் என முறையிடுகிறார். செருக்குற்றவர்கள் என்று தமிழில் மொழிபெயர்ப்பதை எபிரேயம் 'வெளிநாட்டவர்' என வார்த்தைப்படுத்துகிறது (זָרִים ட்சாரிம்- வெளிநாட்டவர்). வெளிநாட்டவர் மற்றும் செருக்குற்றவர் (זֵר சர்) என்பதற்கு ஒரே வகையான மெய்யெழுத்துக்களே விவிலியத்தில் பாவிக்கபட்டுள்ளன. இ;நத எபிரேய மெய்யெழுத்துக்களுக்கு கொடுக்கப்பட்ட உயிர்எழுத்துக்கள் வேறு சொல்லை. உருவாக்கிவிட்டது எனும் வாதம் ஒன்று உள்ளது. இதனால் செருக்குற்றவர் என்ற சொல் (זֵדִים ட்செரிம்- செருக்குற்றவர்), வெளிநாட்டவர் என மாறிவிட்டது (זָרִים ட்சாரிம்- வெளிநாட்டவர்).
இவர்களைக் குறிக்க வரியின் இரண்டாவது பிரிவில் עָרִיצִים 'ஆரிட்சிம்' (இரக்கமற்றவர்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராகவே கடவுள் என்றும் இருக்கிறார் என்றும் இந்த வரியை அவர் நிறைவு செய்கிறார்.
வ.4: இந்த வரி ஆசிரியரின் நம்பிக்கையை காட்டுவதாக அமைகிறது. கடவுள் தனக்கு துணைவராக இருக்கிறார் என்கிறார் (אֱלֹהִים עֹזֵר לִי 'எலோஹிம் 'ஓட்சிர் லீ- கடவுள் எனக்கு நண்பராய் இருக்கிறார்).
இதனை விளக்க கடவுள் தனக்கு ஆதரவாய் உள்ளளோருடன் இருக்கிறார் (סֹמְכֵי נַפְשִׁי சோம்கி நப்ஷி- என் ஆன்மாவிற்கு ஆதரவாக உள்ளவர்கள்) என்றும் சொல்லப்படுகிறது.
வ.5: தன் எதிரிகள் தனக்கு எதிராக பல தீய செயற்பாடுகளை செய்ய இருக்கிறார்கள் என்பதையும், அந்த தீமைகளை அவர்களுக்கு எதிராக திருப்பிவிடுவதாகச் சொல்கிறார். தன்னுடைய எதிரிகளை அவர் பெயரிடவில்லை. அவர்கள் சவுலுடைய ஆட்களாக இருக்கலாம் என எண்ணவும் வாய்ப்புண்டு அல்லது அவரைக் காட்டிக்கொடுத்த சிப்பியராகவும் இருக்கலாம். ஏதோமியர் இஸ்ராயேலருக்கு என்றும் எதிரிகளாக இருந்தபடியால் இந்த வரியில் உள்ள எதிரிகள், ஏதோமியர்களாகவும்
இருக்கலாம்.
கடவுளை வாக்குபிறழாதவர் என்று அழைக்கும் ஒரு பாரம்பரியம் விவிலியத்தில் பலமாக உள்ளது. அதாவது கடவுள் தான் சொன்னதை நிறைவேற்றுகிறவர். בַּאֲמִתְּךָ֗ பம்'அம்தெகா- உம்முடைய வாக்குபிறழாமையில்.
வ.6: தன்னார்வத்தோடு ஆண்டவருக்கு பலி செலுத்துவேன் என்கிறார். அதாவது எந்த விதமான பயமுமின்றி, எதிர்பார்ப்புக்களுமின்றி. தன்னிச்சையாகவே கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும், அது தன்னுடைய அன்பின் அடையாளமாகவும் இருக்கும் என்பது போல அமைகிறது.
ஆண்டவருக்கு நன்றி செலுத்தலும், அவருடைய பெயருக்கு நன்றி செலுத்தலும் ஒத்த கருத்துச் சொற்களாக வார்த்தைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதே நன்று என்று இந்த வரியை முடிக்கிறார் ஆசிரியர்.
வ.7: ஏன் தான் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை இந்த வரியில் ஆசிரியர் விளக்குகின்றார். ஆண்டவர் தன்னை எல்லா இன்னல்களினின்ரும் விடுவித்திருக்கிறார்
(כִּי מִכָּל־צָרָה הִצִּילָנִי கி மிகோல்-ட்சாராஹ் ஹிட்ஸிலானி- எல்லா தீமையினின்ரும் அவர் என்னை விடுவித்தார்). இந்த இன்னல்கள் என்னவென்பதை அவர் விளக்கவில்லை மாறாக அதனை வாசகர்களுடைய சிந்தனைக்கு விட்டுவிடுகிறார்.
அத்தோடு தன் எதிரியின் வீழ்ச்சியை கண்ணாரக் கண்டுள்ளதாகவும் சொல்கிறார். எதிரிகள் ஆசிரியரின் வீழ்ச்சியைக் காண துடிக்கின்றபோது, இவர் எதிரியின் வீழ்ச்சியைக் கண்டுவிட்டார் என்று சொல்வதின் வாயிலாக கடவுள் தன்னோடு இருக்கிறார் என்பதை சொல்ல முயல்கிறார். இங்கே எதிரியின் அழிவு அல்ல முக்கிய செய்தி, மாறாக கதாநாயகரின் மீட்பே மிக முக்கிய செய்தி. புலம்பல் பாடல்கள் இறுதியாக நன்றியுடனும் நம்பிக்கையுடனும் நிறைவடைவது எபிரேய ஆண்மீகத்திற்கே உரிய தனித்துவம். அதனை இந்த பாடலிலும் காணலாம்.
யாக்கோபு 3,16-4,3
16பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். 17விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன்
தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது வெளிவேடமற்றது. 18அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.
உலகத்தோடு நட்பு
1உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? 2நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. 3நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.
யாக்கோபின் திருமுகம் கிறிஸ்தவ நடைமுறை சிக்கல்களை சிறந்த உதாரணத்துடன் விளக்க முயற்சி செய்து, ஆழமான கிறிஸ்தவ ஆன்மீகத்தைத் தருகிறது. இந்த வரிகளை ஆய்வு செய்வதன் வாயிலாக அக்கால திருச்சபையில் இருந்த மிக முக்கியமான சிக்கல்கள் சவால்களை கண்டுகொள்ளலாம்.
இந்த பகுதி மெஞ்ஞானம் என்ற தலைபில் வகுக்கப்பட்டுள்ளது. ஞானத்தை மெச்சுகிறார் யாக்கோபு. ஒரு மெஞ்ஞானத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறார். அதனை அவர் அறிவாலும் நன்னடத்தையாலும் காட்ட வேண்டும் என்கிறார். பொறாமையும் மனக்கசப்பும் உடனடியாக தவிர்க்கப்படவேண்டியது, அதனை தவிர்ப்பதையும், பெருமைக்குரிய செயலாக காட்டக்கூடாது என்கிறார். உண்மையை எதிர்த்துப் பேசுவதை மிகவும் ஆபத்தான செயலாக பார்க்கிறார் யாக்கோபு. உண்மையை எதிர்த்துப் பேசுவது, மண்ணுலக ஞானம் எனவும, அது விண்ணுலக ஞானத்திற்கு எதிராக இருக்கிறது, அதேவேளை இது மனித இயல்பைக் கொண்டு பேய்த்தன்;மை வாய்ந்தது என கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார் (ἐπίγειος, ψυχική, δαιμονιώδης. எபிகெய்யொஸ், ப்சூகிகே, தைமொனியோதேஸ்- மண்ணுலகம் சார்ந்தது, ஆன்மீகம் அற்றது, பேய்த்தன்மையானது).
வ.16: சுயநலம், இன்று மட்டுமல்ல அன்றும், தீமைகள் அனைத்திற்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதைக் காணலாம்.
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் எல்லா குழப்பமும் கொடுஞ்செயல்களும் நடக்கும் என்கிறார். கட்சி மனப்பான்மை ஆரம்ப கால திருச்சபையில் பிளவுகளை உருவாக்க முயலுக்கின்ற வேளையில் அதனை சாத்தானின் நடவடிக்கையாக யாக்கோபு பார்க்கிறார்.
வ.17: ஞானத்தின் தலையான பண்பு தூய்மை எனவும், ஞானம் விண்ணிலிருந்து வருகிறது என்கிறார் (ἁγνός ஹக்நொஸ்- தூய்மை). ஞானத்தின் வேறு பண்புகளும் காட்டப்படுகிறது. ஞானம் அமைதியை நாடுகிறது (εἰρηνική எய்ரேநிகே), பொறுமை கொள்ளும் (ἐπιεικής எபியெய்கேஸ்), இணங்கிப் போகும் (εὐπειθής எவுபெய்தேஸ்), இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது (ἐλέους καὶ καρπῶν ἀγαθῶν எலெவூஸ் காய் கார்போன் அகாதோன்), நடுநிலை தவறாதது (ἀδιάκριτος அதியாகிரிடொஸ்), அத்தோடு வெளிவேடமற்றது (ἀδιάκριτος அதியாகரிடொஸ்).
ஞானத்தின் இந்த பண்புகள் கொரிந்தியர் திருமுகத்தில் பவுல் அன்பின் மேன்மையைப் பற்றி உரைப்பதை நினைவூட்டுகிறது (காண்க 1 கொரிந்தியர் 13). இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்புகளை யாக்கோபு தன்னுடைய திருச்பை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.
வ.18: அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் எனும் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மிக முக்கியமான நிலையை அடைந்திருக்க வேண்டும். அமைதிக்கும் நீதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதை இந்த வரியில் கண்டுகொள்ளலாம்.
தற்கால மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மானிடவியலாளர்கள், அமைதி ஏற்படுத்த நீதி முதலில் செய்யப்படவேண்டும் என்பர். யாக்கோபின் கருத்துப்படி அமைதியின் உலகில்தான் நீதி கிடைக்கும் என்கிறார். அமைதியா நீதியா முதலில் தோன்றவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமாக காரியம். (முட்டையா கோழியா முதலில் வந்தது என்பதைப் போன்றது). καρπὸς δὲ δικαιοσύνης ἐν εἰρήνῃ σπείρεται கார்பொஸ் தெ திகாயோசூனேஸ் என் எய்ரேனே ஸ்பெய்ரெடாய்.
யாக்கோபு திருமுகத்தின் நான்காம் அதிகாரம் உலகத்தோடு நட்பு என்ற பெயரில் தமிழ் விவிலியத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.
4,1: மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் நடைபெற காரணம் என்ன என்று கேள்வியை கேட்கிறார் இந்த திருத்தூதர். அதற்கான விடையையும் அவர் கேள்விகலந்ததாக தந்துவிடுகிறார்.
யாக்கோபுவின் கருத்துப்படி சண்டை சச்சரவிற்கான காரணம், மனிதருக்குள்ளேயே இருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் (ἡδονῶν ὑμῶν ஹேதொனொன் ஹுமோன்- உங்களுடைய சிற்றின்ப நாட்டங்கள்). உங்களுக்குள்ளே என்று யாக்கோபு சொல்வது மனிதர்களின் உடலைக் குறிக்கிறது என்ற வாதமும் சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
வ.2: கொலை செய்தல் யூத சட்டத்திலே மிகவும் பாரதூரமான குற்றம். கிரேக்க மற்றும் உரோமைய சமூதாயத்திலே கொலை செய்தல் பற்றிய படிப்பினைகள் பிற்காலத்தில் மாறுபட்டதாக இருந்திருக்க வேண்டும். இன்றும் கொலை செய்தலை ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு கலாச்சாரமும் வித்தியாசமானதாகவே நோக்குகின்றன. யாக்கோபு கொலை செய்தலை யூத கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் நோக்குவது தெளிவாகிறது.
ஆசையும் பேராசையும் தான் கொலைக்கான காரணம் என சரியாகச் சொல்கிறார் திருத்தூதர். φονεύω பொனெயுஓ- கொலை செய்தல். கொலை செய்தலுக்கும், சண்டை சச்சரவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதையும் இந்த வரியில் காணலாம். சில வேளைகளில் ஆசைப்படுவது கிடைக்காமைக்கான காரணம், அவை கடவுளிடம் நேர்த்தியாக கேட்கப்படவில்லை என்பதாகும் என்கிறார்.
வ.3: சில வேளைகளில் தேவைகள் கடவுளிடம் கேட்கப்பட்டாலும் அவை கிடைக்காமைக்கான காரணத்தையும் அவர் முன்வைக்கிறார்.
சிற்றின்ப நாட்டத்துடன் தேவைகள் கேட்கப்படுகின்றபோது அவை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. தீய எண்ணங்கள் சிற்றின்ப நாட்டகளை (ἡδονή ஹேதொனே- சிற்றின்பம்) நிறைவேற்றவே என்பதும் சொல்லப்படுகிறது.
மாற்கு 9,30-37
யேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்
(மத் 17:22-23; லூக் 9:43ஆ-45)
30அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். 31ஏனெனில், 'மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். 32அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
யார் மிகப் பெரியவர்?
(மத் 18:1-5; லூக் 9:46-48)
33அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, 'வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். 34அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். 35அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்' என்றார். 36பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 37'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்' என்றார்.
மாற்கு நற்செய்தியின் இந்த ஒன்பதாவது அதிகாரம், இயேசுவின் பாடுகள், சாவு மற்றும் அதனை சார்ந்துள்ள இறையியலைப் பற்றி கலந்துரையாடுகின்றன. ஏற்கனவே இயேசு தன்னுடைய சாவைப் பற்றி தெரிவிக்க பேதுரு அதனைக் கடிந்து கொள்ள, இயேசுவிடம் அவர் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். இது சீடர்களுக்கு சற்று பயத்தையும், குழப்பத்தையும் உருவாக்கியிருந்திருக்கும்.
வ.30: தீய ஆவி பிடித்திருந்த சிறுவனை குணமாக்கியதன் பின்னர் இயேசு அமைதியாக கலிலேயா வழியாக வேறு இடத்திற்கு செல்ல தீர்மானிக்கிறார். இயேசு தீய ஆவியை குணப்படுத்தியது பலமான அதிர்வலையை ஏற்படுத்தியது. பலர் இயேசுவை பயத்தோடும், அதிசயமாகவும் பார்க்கத் தொடங்கினர்.
இயேசு யாரும் தன்னை அதிசயமாக பார்க்கக்கூடாது என விரும்பினார்.
வ.31: இயேசு சீடர்களுக்கு பாஸ்கா மறைபொருளை கற்பித்துக்கொண்டிருந்தார். மாற்கு நற்செய்தியில் இந்த பாஸ்கா மறைபொருள் மிக முக்கியமான மூன்று பரிவுகளைக் கொண்டிருந்தது. அவை: மானிட மகன் மக்கள் கையில் ஒப்புவிக்கப்படுகிறார் (ὁ υἱὸς τοῦ ἀνθρώπου παραδίδοται εἰς χεῖρας ἀνθρώπων ஹொ ஹுய்யொஸ் மூ அந்தேராபூ பாராதிதொடாய் எய்ஸ் கெய்ராஸ் அந்த்ரோபோன்- மானிட மகன், மனிதர் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்), அவர்கள் அவரை கொலை செய்வார்கள் (ἀποκτενοῦσιν αὐτόν அபொக்டெநூசின் அவ்டொன்), அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் (μετὰ τρεῖς ἡμέρας⸃ ἀναστήσεται மெடா ட்ரெய்ஸ் ஹெமெராஸ் அனாஸ்டேசெடாய்).
இந்த மூன்று படிப்பினைகளையும் சீடர்கள் விரும்பியிருக்கமாட்டார்கள் அத்தோடு அவற்றை அவர்கள் புரிந்திருக்கவும் மாட்டார்கள். அவர்கள் மெசியாவைப் பற்றி வேறுவிதமான நினைக்க, மெசியா தன்னை மானிட மகனாகக் காட்டி, அவரின் முடிவையும் வித்தியாசமாகவும் காட்டுகிறார்.
வ.32: இயேசு சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை, அத்தோடு அவர்கள் அதற்கு விளக்கம் கேட்கவும் அஞ்சினார்கள். இவர்களின் அச்சம், இயேசுவின் கடுமையான வார்த்தைகளை முன்னிட்டு இருக்கலாம், அல்லது, அவர்கள் இயேசுவிடம் விளக்கம் கேட்க தயங்கியிருக்கலாம். மாற்கு நற்செய்தியில் இயேசு சில விடயங்களில் சற்று கடுமையாக இருந்ததை இந்த நிகழ்வு உறுதிசெய்கிறதை அவதானிக்கலாம்.
இருப்பினும் இயேசு இவர்களின் மனஅசைவுகளை அவதானமாக நோக்கிக் கொண்டேயிருக்கிறார்.
வ.33: கலிலேயாவின் மிக முக்கியமான பகுதியான கப்பர்நாகூமிற்கு இயேசு வந்து சேர்கிறார்.
இது இயேசுவுடைய சொந்த பணித்தளம் என கருதப்படுகிறது. இயேசு அதிகமான நாட்களை
இந்த இந்த இடத்தில்தான் செலவழிக்கிறார். அதேவேளை அவர் வீட்டில் இருக்கிறார். ஆக இப்போது இயேசுவும் சீடர்களும் தனிமையாக, இருக்கிறார்கள் என்று நற்செய்தியாளர் காட்டுகிறார்.
இயேசு சீடர்களைப் பார்த்து அவர்கள் எதிர்பார்த்த கேள்வி ஒன்றைக் கேட்கிறார். இந்த கேள்வியை அவர்கள் நிச்சயமாக எதிர்பார்த்திருப்பார்கள். அத்தோடு இந்த கேள்வி நற்செய்தியில், மிக முக்கியத்துவமும் பெறுகிறது. இயேசுவின் இந்த கேள்வி மூலமாகத்தான், சீடர்களின் விடையையும், இயேசுவுடைய தெளிவான விளக்கத்தையும், வாசகர்கள் பெறமுடிகிறது. τί ἐν τῇ ὁδῷ διελογίζεσθε; டி என் டே ஹொதோ தியலொகிட்செஸ்தெ- வழியில் எதைப் பற்றி கலந்தாலோசித்தீர்கள். இந்த கேள்வி இயேசுவை அனைத்தும் அறிந்தவராகக் காட்டுகிறது. அத்தோடு அவர்களின் கலந்துரையாடல் சரியான பாதையில் இல்லை என்பதையும் காட்டுகிறது.
வ.34: அவர்கள் பேசாதிருக்கிறார்கள். இவர்களின் மௌனம், இயேசுவின் ஊகத்தையும், வாசகர்களின் ஊகத்தையும் நியாயப்படுத்துகிறது. அவர்கள் எதோ பிழை செய்திருக்கிறார்கள்.
இயேசுவின் போதனைகள் முழுவதும், அதுவும் முக்கியமாக மாற்கு நற்செய்தியின் மையமாக, தாழ்ச்சி என்கின்ற புண்ணியம் இருக்கின்றபோது, இவர்கள் அதற்கு எதிராக எதனையோ செய்திருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது. οἱ δὲ ἐσιώπων· ஹொய் தெ எசியோபோன்.
அவர்களின் மௌனம், அவர்கள் செய்திருக்கக்கூடிய தவறைக் சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் வழியில் தங்களுள் யார் பெரியவர் என்பதைப் பற்றி வாதாடியிருக்கிறார்கள் (ἀλλήλους γὰρ διελέχθησαν ⸋ἐν τῇ ὁδῷ⸌ τίς μείζων அல்லேலூஸ் கார் தியலெக்தேசான் என் டே ஹொதோ டிஸ் மெய்ட்சோன்- ஒருவரோடு ஒருவர் யார் பெரியவர் என வாதாடினார்கள்).
இன்றைய பார்வையில் இது தவறாக நிச்சயமாகத் தெரியும். சீடர்கள் அவ்வளவு பாவிகள் அல்ல, அத்தோடு பெயருக்காக இயேசுவை பின்பற்றியவர்களும் அல்ல. சீடர்களில் அதிகமானவர்கள் இயேசுவை உண்மையாகவே அன்பு செய்தவர்கள். இவர்களுடைய கேள்வி சாதாரண மனிதர்களின் கேள்வியாகவே வருகிறது, அத்தோடு சீடர்களும் சாதாரண மனிதர்களாக இருந்தார்கள் என்பதையும் இது எண்பிக்கிறது.
இருப்பினும் யார் பெரியவர் என்ற கேள்வி, இயேசுவின் போதனைக்கு முற்றிலும் எதிரான கேள்வியாகவே வாசகர்களால் பார்க்கப்படுகிறது.
வ.35: இந்த வரி மிகவும் அவதானமாக நோக்கப்படவேண்டும். இவர்கள் வீட்டில்தான் தனிமையாக
இருக்கிறார்கள். இயேசுவும் அவர்களோடுதான் இருக்கிறார். இந்த வரியில் சில அடையாளங்களை மாற்கு முன்வைக்கிறார். இயேசு அதிகாரம் கொண்ட போதகர் போல காட்டப்படுகிறார். அவர் அவர்கள் முன் அமர்கிறார் (καθίσας காதிசாஸ், அமர்ந்துகொண்டு), இது அவரை மோசேயின் இடத்திற்கு கொண்டு செல்கிறது. பெரியவர்கள்தான் முதலில் அமர்வர்.
பின்னர் பன்னிருவரை அவர் அழைக்கிறார் (ἐφώνησεν τοὺς δώδεκα எபோனேசென் டூஸ் தோதெகா- பன்னிருவரையும் அழைத்தார்), அதாவது அவருக்கு அவர்களை அழைக்க இருக்கும் உரிமையும், பன்னிருவரும்தான் இங்கே மிக முக்கியமானவர்கள் என்பதும் காட்டப்படுகிறது.
இறுதியாக தன்னுடைய அதிகார உரையை கொடுப்பது போல அமைக்கப்படுகிறது. ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் என்ற மிக முக்கியமான போதனை கொடுக்கப்படுகிறது (εἴ τις θέλει πρῶτος εἶναι, ἔσται πάντων ἔσχατος καὶ πάντων διάκονος⸌. எய் டிஸ் தெலெய் புரோடொஸ் எய்னாய், எஸ்டாய் பான்டோன் எஸ்காடொஸ் காய் பான்டோன் தியாகொனொஸ்). இந்த போதனை அக்கால மெய்யியல்களில் காணப்படாமல், இயேசுவிற்கே மிகவும் தனித்துவமானதாக அமைகிறது என்று சில ஆய்வாளர்கள் காட்டுகின்றனர்.
சாதாரணமாக மனிதர்கள் தங்கள் வாழ்விலும் பணிகளிலும் உயர்ந்த இடத்தை பிடிக்க முயல்வார்கள். இக்கால தொழில்சார் முறைகளும் அதனை நோக்கியே அமைகிறது. பதவி உயர்வும், சம்பள உயர்வும் எக்காலத்திலும் அனுசரிக்கப்பட்ட முறையே. இந்த உலக முறையை மாற்றி தன்னுடைய அரசு, இவ்வுலக அரசுகளை பின்பற்றாது என்பதில் ஆண்டவர் மிகவும் உறுதியாக இரக்கிறார்.
வ. 36: தன்னுடைய இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த இயேசு ஒரு உருவகத்தை எடுக்கிறார். கிரேக்க அறிஞர்கள் சில வேளைகளில் உருவகத்தைக் கொண்டே தங்களது தத்துவங்களை முன்வைத்தார்கள். அதனைப் போலவே இயேசுவும் நல்லதோர் ஆசிரியராக தன் வாதத்தை முன்வைக்கிறார் (λαβὼν παιδίον ἔστησεν αὐτὸ ἐν μέσῳ αὐτῶν லாபோன் பாய்தியோன் எஸ்டேசென் அவ்டொ என் மெட்சோ அவ்டோன்- குழந்தையை எடுத்து அவர்கள் நடுவில் வைத்தார்).
யூத சமுதாயத்தில் அதிகார வர்க்கத்தில் குழந்தைகள் முக்கியம் பெறாதவர்கள் என எடுக்கலாம். இருந்தாலும் யூத சமூதாயம் குழந்தைகளுக்கு எதிரானது என எடுக்க முடியாது. குழந்தைகள் அதிகமான சமூதாயங்களில் அறிவில் மட்டுப்பட்டவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இப்படியிருக்க இயேசு குழந்தையை அன்றைய நடைமுறைக்கு எதிராக பெரியவர்களின் நடுவில் வைக்கிறார். இயேசு குழந்தையை அரவனைக்கிறார், அதாவது கடவுளின் சித்தம் என்றும் குழந்தைகளுக்கு சார்பானதே என்பது காட்டப்படுகிறது (ἐναγκαλισάμενος எனாக்காலிசாமெனொஸ்- கைகளில் அரவனைத்துக்கொண்டு).
வ.37: இந்த குழந்தை இங்கே அடையாளமாக செயற்படுகிறது. ஆக இயேசுவின் போதனையின் அடையாளமாக இந்த குழந்தை இருக்கிறது. இப்படியாக இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்கிறவர், இயேசுவை மட்டுமல்ல மாறாக அவரை அனுப்பிய வானக தந்தையை ஏற்றுக்கொள்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
இயேசுவின் போதனைகளை சிறுபிள்ளைகளுக்கு ஒப்பிடுகிறார். சிறுபிள்ளைகள் முக்கியமில்லாதவர்கள் என கருதப்படுவதால், அவைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த உலக நியதி தனக்கு பொருந்தாது என்கிறார். இயேசுவின் சிறுபிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறவர் சரியான பாதையில் உள்ளவர் என்பது சொல்லப்படுகிறது. இயேசுவின் போதனைகள், இயேசு, மற்றும் அவரை அனுப்பியவர், இந்த மூன்றும் ஒன்றோடோன்று தொடர்புபட்டவை என்பது சொல்லப்படுகிறது.
இயேசு தன்னுடைய போதனை மட்டில் மிகவும் கவனமாக இருப்பார். அதாவது அவருடைய போதனை அவரை அனுப்பியவருடையது என்பது அதன் அர்த்தம். இந்த இடத்தில் அவரை அனுப்பியவர் யார் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை, ஆனால் அது கடவுள் என்று வாசகர்களுக்கு நன்கு தெரியும் (οὐκ ἐμὲ δέχεται ἀλλὰ τὸν ἀποστείλαντά με ஊக் எமெ தெக்கெடாய் அல்லா டொன் அபெஸ்டெய்லான்டா மெ - என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்).
யார் பெரியவர் இந்த உலகில்?
இந்த கேள்வியே பிழையான கேள்விதான்.
இந்த உலகில் பெரியவர் என்று எவரும் இல்லை,
அனைவரும் எதோவிதத்தில் பலவீனமாவர்களே.
கடவுள் ஒருவரே பெரியவர்.
தங்களை பெரியவர் எனக் காட்டுவது,
ஒருவருடைய பலவீனத்தின் அடையாளம்.
மற்றவர்களை நினைத்து பயப்படுகிறவர்களே,
தங்களை உயர்த்த முயல்வார்கள்.
குழந்தைக்கு எதிரிகள் கிடையாது, போட்டியாளர்களும் கிடையாது,
(இக்கால உலகம், குழந்தைகளுக்கும் இந்த நோயை விதைக்க தொடங்கிவிட்டது)
அன்பு ஆண்டவரே உம்;மை மட்டுமே
தலைமையாக ஏற்க வரம் தாரும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக