வியாழன், 4 அக்டோபர், 2018

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் வாரம் (ஆ): 27th Week in Ordiary Times (B)



ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் வாரம் ()
07,10,2018
(ஞாயிறு வாசகங்களின் விளக்கவுரை)
(A Commentary on the Sunday Readings)


மி. ஜெகன்குமார் அமதி
சங்கமம்
கோப்பாய், யாழ்ப்பாணம்.
Tuesday, October 2, 2018 

முதல் வாசகம்: தொடக்கநூல் 2,18-24
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 128
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 2,9-11
நற்செய்தி: மாற்கு 10,2-16

திருமணம், மணவிலக்கு:
மனிதன் புனிதனாக இருந்தபோது திருமணம் பரலோகத்தில் உருவாக்கப்பட்டதாக தொடக்கநூல் காட்டுகிறது. இந்த நம்பிக்கை அதிகமான மதங்களில் நம்பப்படுகிறது. 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்பது ஒரு தமிழ் நம்பிக்கை. தொடக்கநூலில் பரிந்துரைக்கப்படும் சட்டங்களே மனித திருமணத்தின் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
இயேசுவின் காலத்தில்கூட இந்த சட்டங்களே மதிப்பு பெற்றிருந்தன என்பதனை அவதானிக்கலாம். தொடக்கநூல் சட்டங்கள் (காண்க தொ.நூல் 2,18-24) வெகு சீக்கிரத்திலேயே மீறப்பட்டன (காண்க தொ.நூல் 4,19: 6,2). இஸ்ராயேல் குலமுதுவர்கள் காலத்தில் பலதார பழக்கங்கள் சாதாரணமாக காணப்பட்டதையும் அவதானிக்கலாம் (காண்க தொ.நூல் 16,1-4: 22,21-24: 28,8: 29,23-30). மோசே காலத்திலிருந்து யூதர்கள் பபிலோனியாவிற்கு அடிமைகளாக சென்ற காலம் வரை பலதார வழக்கம் இருந்திருக்கிறது. பபிலோனிய அடிமைவாழ்விற்கு பின்னர், பல தார வழக்கம் இல்லாமல் போய்விட்டது எனலாம். இருந்தாலும் விவிலிய ஆசியர்கள் பல தார வழக்கத்தை நியாயப்படுத்தினார்கள் என்று சொல்வதற்கில்லை. அக்கால மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட பல தார வழக்கங்களின் பின்புலத்துடனேயே விவிலிய பல தார நிகழ்வுகளையும் நோக்க வேண்டும்
திருமணம் எபிரேயர்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கினை பெற்றிருந்தது. பெற்றோர்கள், முக்கியமாக தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தில் மிகவும் கரிசனையாக இருந்தார்கள். ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் ஏற்பாட்டு திருமண நிகழ்வுகள் பெண்களின் சுதந்திரத்திற்கு முக்கியத்தும் கொடுத்தது போல காட்டப்படவில்லை. அதிகமான செமித்திய கலாச்சாரங்களில் காணப்படுவது போல, இஸ்ராயேல் சமூகத்திலும் திருமணம் செய்யும் ஆண், தன் மனைவியாக வரவிருப்பவருக்காக ஒரு தொகை பணப்பரிசை, அப்பெண்ணின் தந்தைக்கு கொடுத்தார். மோசேயின் சட்டங்கள் இந்த குலமுதுவர்கள் சட்டத்தை மாற்றவில்லை
பெண்ணுக்கான விலைகொடுக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக ஆண் தன்னுடைய மனைவியை தன்னுடைய வீட்டிற்குள் உடனடியாக கொண்டுசெல்வார். இயேசு பல முன்னோக்கு சிந்தனையுடன் பிழையான பாரம்பரியங்களை கடிந்துகொண்டார். பிற்கால பெண்விடுதலைக்கு 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் இட்டார். பெண்ணையும் ஆணையும் சமனாக்கி, திருமணம் ஆண்டவரின் கட்டளையால் உருவாக்கப்படும் ஒரு புனிதமான உறவு என்பதை அவர் வலியுறுத்தினார் (காண்க மத்தேயு 22,23-30). பிற்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரின் போதனையை வேறுவிதத்திற்கு கொண்டுசென்றனர் (எபேசியர் 5,22-33: கொலே 3,18-19: 1பேதுரு 3,1-7). 
விவிலியத்தின் முதல் ஏற்பாடும், புதிய ஏற்பாடும் திருமணத்தை கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான உறவாக அடையாளப்படுத்தி அதன் புனிதத்துவத்தை காட்டுவது மிகவும் நோக்கப்படவேண்டியது (எசாயா 54,5: எரேமியா 3,1-14: ஓசேயா 2,9.20)
திருமணத்திற்கு முதல் எதிரியாக விவாகரத்து பார்க்கப்படுகிறது. மோசே இந்த விவாகரத்து சட்டங்களை ஒழுங்குபடுத்தியதாக இணைச்சட்டம் 24,14 வரிகள் காட்டுகின்றன. எஸ்ரா, பபிலோனியாவிலிருந்து வந்த இஸ்ராயேல் மக்கள் பிறவினத்து பெண்களை விவாகரத்து செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார் (காண்க எஸ்ரா 10,11-19). இயேசு விவாகரத்தை சாதாரண நிலைகளில் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் விபச்சார குற்றச்சாட்டுகளுக்கு அதனை ஏற்றார் என்பது போல தமிழ் மொழிபெயர்பு காட்டுகிறது (காண்க மத்தேயு 5,31-32: 19,1-9: மாற்கு 10,2-12, லூக்கா 16,18). இருந்தாலும் விபச்சாரம் என மொழிபெயர்க்கப்படும் போர்னெய்யா என்ற (πορνεία) கிரேக்கச் சொல் பாலியல் பிறழ்வு என்ற அர்த்தத்தையே பொருத்தமாக தருகிறது. இந்த சொல் சாதாரண தற்கால 'விபச்சாரம்' என்ற அர்த்தத்தை மட்டும் கொண்டுள்ளது போல தோன்றவில்லை. ஆக விபச்சாரம் என்று நவீன சட்டங்கள் காட்டும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பிழையாக இருந்தாலும், குற்றமாககூட இருந்தாலும், அதனை மட்டுமே காரணமாக கொண்டு திருமண உடன்படிக்கையை முறித்துவிடுவது ஏற்றதாக இருக்காது என நினைக்கின்றேன். திருமணம் என்பது மனித பலவீனங்களை தாண்டிய ஒரு தெய்வீக உடன்படிக்கை, அதனால்தான் முறையாக நடந்து, நிறைவேறிய திருமணத்தை திருத்தந்தையால்கூட முறிக்க முடியாது என்று திருச்சபைத் தாய் கற்பிக்கிறாள்


தொடக்கநூல் 2,18-24
18பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். 19ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. 20கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. 21ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 22ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.
23அப்பொழுது மனிதன்,
'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும்
சதையின் சதையும் ஆனவள்;
ஆணிடமிருந்துழூ எடுக்கப்பட்டதால்,
இவள் பெண்ழூழூ என்று
அழைக்கப்படுவாள்' என்றான்.
24இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 25மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.

.18: விவிலியத்தில் ஆழமாக ஆராயப்பட்ட வரிகளில் இந்த வரியும் ஒன்றாகும். மனிதன் 
இயற்கையாகவே ஒரு சமூகப்பிராணி என்பதை இந்த வரி காட்டுகிறது. கடவுளை இந்த வரி ஆண்டவராகிய கடவுள் என காட்டுகிறது (יְהוָה אֱלֹהִים அதோனாய் எலோஹிம்). இந்த பகுதி யாவே மரபை சார்ந்திருக்கிறது என்பது விவிலிய ஆய்வாளர்களின் மிக புராதனமான நம்பிக்கை. இந்த மரபிலே ஆண்டவர் மனித அடையாளங்களோடும், மனிதருக்கு மிக அருகில் உள்ளவராகவும் காட்டப்படுகிறார்
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என கடவுள் எண்ணுகிறார். இந்த எண்ணம், மனிதர் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது எனலாம் 
(לֹא־טוֹב הֱיוֹת הָאָדָם לְבַדּוֹ லோ-தோவ் ஹெயோத் ஹா'ஆதாம் லெபாதோ-). மனிதனுக்கு தகுந்த துணையை கடவுள்தாமே உருவாக்க முன்வருகிறார் (אֶֽעֱשֶׂהּ־לּ֥וֹ עֵזֶר כְּנֶגְדּֽוֹ ''எசெஹ்-லோ 'எட்செர் கெநெக்தோ). இங்கே துணை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொல்லை, துணையாளர், உதவியாளர், மறுபக்கம், உற்றவர் என்றும் மொழிபெயர்க்கலாம். அதாவது இந்த துணையாளர் மூலமாகத்தான் மனிதன் நிறைவு பெறுகிறார் என்பது இந்த சொல்லிற்கு பின்னால் இருக்கும் அர்த்தம்

.19: கடவுள் விலங்குகளை எப்படி படைத்தார் என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து அனைத்து காட்டு விலங்குகளையும் படைத்ததாகச் சொல்லப்படுகிறது (וַיִּצֶר֩ יְהוָה אֱלֹהִים מִן־הָֽאֲדָמָ֗ה வய்யிட்செர் அதோனாய் எலோஹிம் மின்-ஹா'அராமாஹ்- ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து உருவாக்கினார், כָּל־חַיַּ֤ת הַשָּׂדֶה֙ וְאֵת֙ כָּל־ע֣וֹף הַשָּׁמַ֔יִם கோல் ஹய்யாத் ஹசாதெஹ் வெ'எத் கோல்-'ஓப் ஹஷ்ஷமாயிம்- நிலத்தில் விலங்குகள் அனைத்தையும், வானங்களின் பறவைகள் அனைத்தையும்). மண்ணிற்கும் விலங்கினங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது பல ஆராய்ச்சிகளில் நிருபிப்பட்டுள்ளது. இதனை தொடக்க நூல் ஆசிரியர் அறிந்திருந்தாரா என்பதைவிட, அனைத்து உயிர்களும் மண், அதாவது தூசிக்கு சமனானது என்பதையே அவர் இங்கு வலியுறுத்துகிறார். கடவுளின் வல்லமையால் தூசி உயிர் பெறுகிறது என்பதையே, அவர் இங்கே வலியுறுத்துகிறார் என்று எடுக்கலாம்
உருவாக்கியவர் இறைவன், இருப்பினும் மனிதன் என்ன பெயரிடுவான் என்று அவற்றை மனிதனிடம் கடவுள் அழைத்துவருகிறார், இதன் மூலம் உயிர்களின் பராமரிப்பிலே மனிதனுக்குள்ள பொறுப்பு காட்டப்படுகிறது (יִקְרָא־לוֹ הָֽאָדָם  נֶפֶשׁ חַיָּה הוּא שְׁמוֹ׃ யிக்ரா'-லோ ஹா'ஆதாம் நெபெஷ் ஹய்யாஹ் ஹு' ஷெமோ- உயிர்களை மனிதன் எப்படி அழைத்தானோ அப்படியே அதன் பெயராயிற்று). உயிர்களுக்கு பெயர்வைத்தவன் மனிதன், இதன் மூலமாக மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாகிறது

.20: மனிதன் கால் நடைகள், வானத்து பறவைகள், காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பெயரிடுகிறான். இருந்தாலும் அவன் தனக்கு ஒத்தாசையாக, துணையாக எதனையும் காணவில்லை. இந்த வரியின் மூலம், விலங்குகள் மனிதனின் துணையாக வர முடியாது என்பது இயற்கையாகவே உள்ளமை அழகாகக் காட்டப்படுகிறது. לֹא־מָצָא עֵזֶר כְּנֶגְדּוֹ׃ லோ'-மாட்சா' 'எட்செர் கெநெகெதோ- அவன் தனக்கு துணையை காண்டுகொள்ளவில்லை
விலங்குகளை மனிதன் பெயரிட்டாலும், அவற்றை அவன் தன் பராமரிப்பில் கொண்டாலும், அவனுக்கு தகுந்த துணை விலங்குகள் இல்லை என்பது சொல்லப்படுகிறது

.21: இதன் காரணமாக கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்கிறார் (תַּרְדֵּמָה தர்தெமாஹ்- ஆழ் உறக்கம்). மனிதன் உறங்கும் போது அவன் விலா எலும்பு ஒன்றை கடவுள் எடுத்து, அந்த இடத்தை சதையால் அடைக்கிறார். ஆசிரியர் கடவுளை நேர்த்தியான சிற்பியாக வர்ணிக்கிறார். எங்கே இந்த உவமானத்தை அவர் பெற்றார் என்பது தெரியவில்லை. இந்த நம்பிக்கை இஸ்ராயேல் மக்களுக்கு எங்கிருந்தோ கிடைத்திரு;கிறது எனலாம்
விலா எலும்பு இங்கே ஆய்வுப் பொருளாக வருகிறது. விலா எலும்பிற்கு பாவிக்கப்படும் இந்த எபிரேயச் சொல் (צֵלָע ட்செலா'), விலாவைக் குறிப்பதாக பாரம்பரியமாக கருதப்பட்டாலும், இது மனிதனின் 'பக்கத்தையே' குறிக்கிறது. அதாவது மனிதன் தன்னுடைய ஒரு பக்கத்தை இழந்தே பெண்ணைப் பெறுகிறான். இதனால் பெண்ணில்லாத மனிதன் ஒரு பக்கம் இல்லாதவன், அல்லது நிறைவில்லாதவன் என்பது புலப்படுகிறது. பெண்களை வெறும் சதைகளாகவும், ஆண்களின் சொத்துக்களாகவும் கருதிய அக்காலத்தில் விவிலிய ஆசிரியரின் இந்த உன்னதமான சிந்தனை மிகவும் மெச்சப்படவேண்டியது. இதனால்தான் இதனை இறைவார்த்தை என்கின்றோம்
மத்தியு ஹென்றி என்ற பிரபல்யமான விவிலிய மறையுரைஞ்ஞர் இந்த விலா எலும்பை பற்றி சொல்லும் போது, ஆணுக்கு சம நிகரானவள் பெண் என்ற வாதத்தை முதன் முதல் முன்வைத்தார். விலா இதயத்தை பாதுகாப்பதால், பெண் மனிதனின் பொக்கிசம் என்பது, அவர் மனிதனுக்கு உயர்ந்தவளோ அல்லது தாழ்ந்தவளோ இல்லை என்பது அழகாகக் காட்டப்படுகிறது

.22: கடவுள் எடுத்த விலா எலும்பு பெண்ணாக உருவாகி மனிதனிடம் கொண்டுவரப்படுகிறது 
(וַיְבִאֶהָ אֶל־הָאָדָֽם׃ வய்பி'எஹா 'எல்-ஹா'ஆதாம்- அவளை மனிதனிடம் அழைத்து வந்தார்). இதன் மூலமாக ஆணைப் படைத்தது போலவே, பெண்ணையும் கடவுள்தான் படைத்தார். ஆக பெண், ஆணால் படைக்கப்படவில்லை என்பது புலப்படுகிறது. ஆணிலிருந்து படைக்கப்பட்டவள் என்பது, ஆணின் அடிமை என்ற பொருளைத் தராது. அப்படியானின் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆண், மண்ணின் அடிமை என்ற பொருளையே தரும். ஆண் மண்ணிலிருந்து உருவாகினாலும், பெண் ஆணிலிருந்து உருவாகி, ஆணைவிட ஒரு படி முன்னால் இருக்கிறார்

.23: விவிலியத்தின் மிக முக்கியமான வரி. மனிதன் தன் பெண்ணைப் பார்த்து
וַיֹּאמֶר הָֽאָדָם வய்யோ'மெர் ஹா'ஆதாம்- மனிதன் இவ்வாறு அழைத்தான்
זֹאת הַפַּעַם עֶצֶם מֵעֲצָמַ֔י ட்சோ'த் ஹப'அம் 'எட்செம் மெ'அட்சாமய்- இப்போது இது என் சுயத்தின் எலும்பு
וּבָשָׂר מִבְּשָׂרִ֑י வுவாசார் மிப்பெசாரி- என் சதையின் சதை
לְזֹאת יִקָּרֵא אִשָּׁ֔ה லெட்சோ'த் யிக்காரெ' 'இஷ்ஷாஹ்- இவள் பெண் எனப்படுவாள்
כִּי מֵאִישׁ לֻקֳחָה־זֹּאת׃ கி மெ'இஷ் லூகாஹாஹ்-ட்சோ'த்- ஏனெனில் இவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டவள். 

ஒருவரை இன்னொருவர் பெயரிடுவதன் மூலமாக அவர் அந்த பெயரிடுகிறவரின் சொத்தாக ஆகிறார் என்ற ஒரு கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். ஆக பெண் ஆணின் சொத்து என சொல்லப்படுகிறார் என்பது சிலரின் வாதம். இருந்தாலும் இங்கே அழைக்கப்படுவாள் என்பதற்கு பாவிக்கப்பட்டுள்ள செயற்பாட்டு வினைச் சொல் (יִקָּרֵא யிக்காரெ'-அழைக்கப்டுவாள்) இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை

.24: ஆணும் பெண்ணும் கடவுளால் உருவாக்கப்பட்டதால், கணவனும் மனைவியும் தாய் தந்தையைவிட்டுவிட்டு ஒன்றாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆணையும் பெண்ணையும் கடவுள் உருவாக்கியபோது, அவர்களுக்கு பெற்றோர்கள் இருந்திருக்கவில்லை, அப்படியிருக்க விவிலிய ஆசிரியர் இவர்களின் பெற்றோர்களை பற்றி பேசுகிறார்
இங்கே இரண்டு மிக முக்கியமான வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன
. மனிதன் இனி தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான் (דָבַק בְּאִשְׁתּ֔וֹ தாவாக் பெ'இஷ்தோ- தன் மனைவியிடம் ஒன்றித்திருப்பான்), 
. இருவரும் ஒரே உடலாய் இருப்பர் (לְבָשָׂר אֶחָד லெவாசார் 'எஹாத்- ஒரே சதையாக). ஒன்றித்திருத்தல், இங்கே இணைபிரியாத உறவைக் குறிக்கிறது. ஒரே சதை என்பது, இனி இவர்களுள் பிரிவில்லை என்பதைக் காட்டுகிறது

.25: கணவனும் மனைவியும் ஆடையின்றி இருந்தனர் எனக் காட்டுகிறார், ஆசிரியர். ஆடையின்றி இருத்தல் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறாவிடினும் அடுத்த அதிகாரத்தில் அதுவே எழுவாய்ப் பொருளாக இருக்கிறது (עֲרוּמִּ֔ים 'அரூமிம்- ஆடையின்றிருந்தனர்). இந்த இடத்தில் இவர்கள் பாவமின்றி இருந்தனர் என்ற அர்த்தத்தையும் கொடுக்கலாம் என சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். அவர்கள் தங்களைச் சுற்றி எந்த ஆபத்தையும் உணரவில்லை, அத்தோடு அவர்களுக்கு யாரும் எதிரிகளாக இருக்கவுமில்லை என்பதையும் அது காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் வெட்கப்படவில்லை என ஆசிரியர் காட்டுகிறார் (לֹא יִתְבֹּשָׁשׁוּ லோ' யித்வோஷாஷு- அவர்கள் வெட்கப்படவில்லை). வெட்கம் இங்கே பாவ உணர்வைக் கொடுக்கும் கருவியாக பார்க்கப்படுகிறது
உலகில் பாவம் நுழைந்தபின்பு, இந்த ஆடையின்றி இருத்தல் என்ற அடையாளம், எதிர்மறை விளக்கத்தைக் கொடுக்கிறது. ஆடையின்றி இருத்தல் என்பது பிற்காலத்தில் ஒருவர் தன் மானத்தையும், சுதந்திரத்தையும் இழத்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். போரில் கைதிகள் தங்கள் ஆடைகளை இழப்பார்கள், அதாவது தங்கள் அடையாளத்தை இழப்பார்கள்

மனைவி
(இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்,
இல்லவள் மாணாக் கடை? குறள் 53).
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன?
அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?


திருப்பாடல் 128
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
3உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல்
இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல்
உம்மைச் சூழ்ந்திருப்பர்.
4ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர்
எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
6நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!

இந்த திருப்பாடல் இஸ்ராயேல் மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது, இந்த பாடலை அவர்கள் தங்கள் திருமண விழாக்களிலே பாடினார்கள். குடும்பத்திற்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் எவ்வளவு முக்கியமானது அல்லது ஆண்டவரிலே குடும்பங்கள் தங்கியிருக்கின்றன என்பதை இந்த திருப்பாடல் நினைவூட்டுகிறது. தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஆண்டவர் 
இருக்கவேண்டும், ஆண்டவருடைய பிரசன்னம் ஒருவருடைய வாழ்வை வித்தியாசமானதாக்குகிறது என்பதை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார்
இந்த பாடலின் முன்னுரை, இதனை சீயோன் மலையேறு பாடல் என வர்ணிக்கிறது 
(שִׁיר הַמַּעֲלוֹת ஷிர் ஹம்ம'லோத்- ஏறுகின்றபோது பாடல்). இதனைவிட இந்தப் பாடலை ஞான பாடல்களில் ஒன்று என்றும் சில ஆசிரியர்கள் வர்ணிக்கின்றனர். இப்படியான ஞான பாடல்கள் பல, திருப்பாடல்கள் புத்தகத்தில் காணப்படுகின்றன

.1: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என முன்மொழியப்படுகின்றனர். ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது, எபிரேய சிந்தனையில் பார்க்கப்பட வேண்டும். ஆண்டவருக்கு அஞ்சுதல், என்பது அவரில் நிபந்தனையற்ற நம்பிக்கை வைத்தலைக் குறிக்கிறது. ஆண்டவருடைய இருப்பை அறியாதவர்கள் அவர் மேல் மரியாதையை அல்லது விவிலிய வார்த்தையில், அவர் மேல் அச்சம் இல்லாதவர்களாக இருப்பர். இந்த உலகின் அதிகமான தீமைகளுக்கு காரணம், ஆண்டவர் மேல் நம்பிக்கை அல்லது அச்சம் இல்லாததே, என்று இன்று சமூகவியலாளர்கள் காண்கின்றனர். ஒரே குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகள்கூட தமது பெற்றோர் முன் சில வேலைகளை செய்ய தயங்குவர். இதனை அவர் மரியாதை கலந்த அச்சம் என்று எடுக்கிறார்கள். இப்படியான ஒருவகை அச்சம்தான் தெய்வ பயம். இங்கே ஆண்டவர் ஒருவரை தண்டிப்பார் என்பதைவிட, அவர் ஆண்டவர் மேல் அதிகமான அன்பை வைத்திருப்பதால், ஆண்டவரை புண்படுத்த விருப்பாமல் இருப்பார். இதனைத்தான் விவிலியம் தெய்வ பயம், அல்லது ஆண்டவர் மேல் அச்சம் என்று விளக்குகின்றது. இத்தகையோர் பேறுபெற்றோர் என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (אַשְׁרֵי כָּל־יְרֵ֣א יְהוָ֑ה 'அஷ்ரே கோல்-யெரெ' அதோனாய், பேறுபெற்றவர் அவர்கள் அனைவரும் ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள்).
ஏற்கனவே நாம் விளக்கியதை இந்த வரியின் இரண்டாவது பிரிவு விளக்குகின்றது. இந்த பிரிவில் ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் என்ன செய்வார்கள் என்பது சொல்லப்படுகிறது 
(הַהֹלֵךְ בִּדְרָכָיו׃ ஹஹோலெக் பித்ராகாவ்- அவர் அவரின் பாதையில் நடப்பவர்). இங்கே ஆண்டவருடைய பாதைகள் என்பது ஆண்டவருடைய சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைக் காட்டுகிறது

.2: சாதாரணமாக நாம் நம் உழைப்பின் பயன் அனைத்தையும் உண்பது கிடையாது. நாம் இன்று உண்பதும் நம்முடைய உழைப்பு கிடையாது. நம் முன்னோரின் கடினமான உழைப்பைத்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஒருவர் தம் உழைப்பின் பயனை அனுபவித்தால், அவர் நி;ச்சயமாக நிறைவடைவார் (יְגִיעַ כַּ֭פֶּיךָ כִּ֣י תֹאכֵ֑ל யெகி' காபெகா கி தோ'கொல்- உம் கையின் உழைப்பை உண்பீர்). போராட்டங்களும், போர்களும், அன்னியர்களின் படையெடுப்புக்களும் நிறைந்த அக்கால வாழ்வில் ஒருவர் தன் நிலத்தில் தான் உழைத்து உருவாக்கியதை, உண்பது சந்தேகமானதாகவே 
இருந்தது. இப்படியான வேளையில்தான் திருப்பாடல் ஆசிரியர் 'உம் உழைப்பின் பயனை நீரே உண்பீர்' என்கிறார்
இது நற்பேறுக்கும் நலத்திற்கும் ஒப்பிடப்படுகிறது (אַשְׁרֶ֗יךָ וְט֣וֹב לָֽךְ׃ 'அஷ்ரேகா வெதோவ் லெகா- ஆசீர்வாதமும் நன்மைத்தனமும் உமக்கு). 

.3: இந்த வரி மனையாளைப் பற்றிப் பேசுகிறது. இந்த வரியின் காரணமாகத்தான் இந்த திருப்பாடலை திருமண திருப்பாடல் என அழைத்தனர். ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவரின் துணைவியர், அவர் இல்லத்தில் கனிதரும் திராட்சை செடிக்கு ஒப்பிடப்படுகிறார் (אֶשְׁתְּךָ֤ ׀ כְּגֶ֥פֶן פֹּרִיָּה֮ 'எஷ்தெகா கெகெபென் போரியாஹ்- உம் மனைவி கனிதரும் திராட்சை போல்). திராட்சை இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் ஒன்றாக கலந்த செடி, இதற்கு பல அர்த்தங்களும் அடையாளங்களும் கொடுக்கப்படுகின்றன. இஸ்ராயேல் நாடு இனமும் பல வேளைகளில் திராட்சை செடியாகவும், கடவுள் அதன் உரிமையாளராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னை திராட்சை செடியாகவும், மக்களை அதன் கொடிகளாகவும், கடவுளை தோட்ட உரிமையாளராகவும் வர்ணிக்கிறார் (காண்க திராட்சைச் செடி: ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு () 08.10.2017.)
கனிதரும் திராட்சை செடி தன் உரிமையாளருக்கு செல்வத்தை கொண்டுவரும், அதேபோல நல் மனையாள் தன் கணவருக்கு மக்கட் செல்வத்தை கொண்டுவருவார் என்பது இங்கே உருவகிக்கப்படுகிறது
இரண்டாவதாக, ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் மனிதரின் பிள்ளைகள் ஒலிவ கண்டுகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். இந்த ஒலிவ கண்டுகள் இவரை சுற்றியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது (זֵיתִים ட்செதிம்- ஒலிவ மரங்கள்). ஒலிவ மரங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் பிரசித்தமானது, இந்த மரங்களை அதிகமான இடங்களில் இவர்கள் வளர்த்தார்கள். இந்த பகுதியில் காணப்பட்ட காலநிலை காரணமாக இந்த மரங்கள் தென் ஐரோப்பிய நாடுகளைப் போல இங்கேயும் அதிகமாக வளர்ந்தன. ஒலிவ மரங்கள் பல நூறு ஆண்டுகள் வாழக்கூடியவை. இதன் இலைகள், பட்டைகள், கிளைகள், பழங்கள், விதைகள் மற்றும் அதன் எண்ணெய் என்று அனைத்தும் பயன்படக்கூடியவை. இதனை அவர்களின் 'பனை மரம்' என்றுகூட அழைக்கலாம். ஆண்டவர் இயேசுவுடைய வாழ்விலும், ஒலிவ மரம் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இயேசு கெத்சமெனியில் ஒரு ஒலிவ மரத்தின் அடியில்தான் செபித்தார். முதல் ஏற்பாட்டில், முக்கியமாக இறைவாக்கினர்கள் ஒலிவ மரத்தை இஸ்ராயேலுக்கு ஒரு அடையாளமாக பயன்படுத்துகின்றனர்
பிள்ளைகள் ஒலிவ கண்டுகள் போல் இருப்பார்கள் என்பது, பிள்ளைகளின் வழமையான நிலையைக் காட்டுகிறது

.4: மேற்குறிப்பிட்ட வியாக்கியானங்களை இந்த வரி மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. அதாவது ஆண்டவருக்கு அஞ்சுகின்ற ஆடவர்கள் இப்படியான மகிழ்வை பெறுவார்கள் என்கிறார் 
(גָּבֶר יְרֵא יְהוָה׃ காவெர் யெரெ' அதேனாய்). இதிலிருந்து இந்த பாடலின் பாடுபொருள், ஆண்டவருக்கு அஞ்சும் மனிதர் என்பது அழகாக தெரிவிக்கப்படுகிறது

.5: இந்த பாடலின் மிகவும் அழகான வரி. ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!, (יְבָרֶכְךָ יְהוָה מִצִּיּוֹן யெவாரெக்கா அதோனாய் மிட்ஸ்சியோன்) உம் வாழ்நாள் எல்லாம் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக (וּרְאֵה בְּטוּב יְרוּשָׁלִם כֹּ֝ל יְמֵי חַיֶּיךָ׃ வுரெ'எஹ் பெதோவ் யெரூஷாலாயிம் யெமெ ஹய்யெகா). இந்த இரண்டு ஆசீர்வாதங்களைத்தான் ஒரு இறையன்புள்ள இஸ்ராயேலர் விரும்பினார். இவற்றை கடவுள் தருவார் என்பது நிச்சயமாக இவருக்கு நிறைவளிக்கும்
ஆண்டவரின் மலை சீயோன், அங்குதான் அவர் மண்ணுலக உறைவிடமான எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் யூதர்கள் திருப்பயணமாக சீயோன் மலையை நோக்கி வந்தார்கள். தேவாலயம் இடிக்கப்பட்டதன் பின்னர் கூட, இன்னும் சீயோன் மலைதான் ஆண்டவரின் உண்மையான உறைவிடமாக அனுபவிக்கப்படுகிறது
எருசலேமின் நல்வாழ்வு என்பது, ஒவ்வொரு இஸ்ராயேல் மகன் மற்றும் மகளுடைய கனவு. எருசலேமிற்காக இன்று இத்தனை போர்கள் நடக்கிறது என்றால், அதற்கு காரணம் இந்த நம்பிக்கைதான் (இது சரியா தவறா என்று தெரியவில்லை). எருசலேமில் வாழ்வு என்பதை விட, எருசலேமின் வாழ்வு என்பது இஸ்ராயேலருக்கு மகிவும் முக்கியமானதாக அமைகிறது

.6: இந்த இறுதியான ஆசீர், இதனை பெறுபவருக்கு அவருடைய மரணத்தின் பின்னும் ஆசீர் அளிப்பது போல உள்ளது. நல்ல மனிதர்களுக்கு மட்டும்தான் நிறைவான வாழ்வு கிடைக்கும் என்று இஸ்ராயேலர்கள் நம்பினார்கள். ஒருவர் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்கிறார் என்றால், அவர் நீடிய காலம் ஆயுளோடு வாழ்கிறார் என்று பொருள் (בָנִים לְבָנֶיךָ பானிம் லெவானெகா- உமது பிள்ளைகளின் பிள்ளைகள்). 
இறுதியாக இஸ்ராயேலுக்கு நலம் உண்டாவதாக என்று இந்த திருப்பாடலை நிறைவு செய்கிறார். அதிகமான ஈழத்தமிழர்கள் தமிழீழ மலர்வை விரும்புவதைப் போல, இஸ்ராயேலர்கள் அனைவரும், எருசலேமிற்கு நலம் உண்டாகவேண்டும் என்று விரும்பினார்கள். பிற்காலத்தில் இது மக்களுக்கான ஆசீர்வாதமாகவே மாறியது. 'எருசலேமிற்கு அமைதி உண்டாகுக
שָׁל֗וֹם עַל־יִשְׂרָאֵֽל ஷாலோம் 'அல்-யிஷ்ரா'எல்


எபிரேயர் 2,9-11
9நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட 
இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
10கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.
11தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை

எபிரேயர் திருமுகம் அல்லது நூல், சாதாரணமாக விளங்கிக்கொள்ள கடினமான புத்தகமாகத் தோன்றலாம். அதிகமான முதல் ஏற்பாட்டு வசனங்களையும், குருத்துவ சடங்கு முறைகளையும் இந்த நூல் காட்டுவது போல தோன்றுகிறது. ஆழமாக ஆராய்ந்து கற்பவர்களுக்கு நிச்சயமாக எபிரேயர் நூல் ஒரு புதையல் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. எபிரேயர் புத்தகம் எவ்வகையான புத்தகம் என்பதில் பல கோட்பாடுகள் இருக்கின்றன. கடிதத்திற்குரிய சில அடையாளங்கள் இதில் இருந்தாலும், மற்றைய பவுலின் கடிதங்களைப்போன்ற அமைப்புக்கள் இதில் இல்லை. எபிரேயர் புத்தகம் கிறிஸ்துவின் ஆளையும் பணியையும் மையப்படுத்திய ஒரு புத்தகம் என்பதில் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. சிலர் இந்த புத்தகத்தை ஒரு இறையியில் கட்டுரையாகவே பார்க்கின்றனர்
இந்த புத்தகத்தின் ஆசிரியராக, பாரம்பரியமாக பவுல் அடிகளார் கருததப்பட்டாலும், அவர் இதனை எழுதியதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. இயேசுவை தலைமைக் குருவாக காட்டுவதும், அத்தோடு பழைய ஏற்பாட்டில் சடங்கு முறைகள் இயேசுவின் கல்வாரி பலியில் நிறைவடைவதாகக் காட்டுகிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர். இந்த இறையியல் பவுலுடைய சிந்தனையோடு ஒத்துபோவதாக தெரியவில்லை. இதனைவிடவும் வேறு பவுலுடைய மிக முக்கியமான சிந்தனைகளும் இந்த புத்தகத்தில் குறைவுபடுகிறது அல்லது வேறு விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பவுல் தன்னை கிறிஸ்துவின் திருத்தூதராக அவருடைய உயிர்ப்பின் பின் சாட்சியாகக் காட்டுவார், அதுவும் இந்த புத்தகத்தில் குறைவுபடுகிறது
இரண்டாம் நூற்றாண்டின் திருச்சபை தந்தையரில் ஒருவரான தெர்த்துள்ளியன், பர்னபாவை இந்த புத்தகத்தின் ஆசிரியராகக் காட்டுகிறார். மாட்டின் லூதர் அப்பெல்லோவை இந்த புத்தகத்தின் ஆசிரியராக முன்வைத்தார். இந்த இரண்டு பேரும் அல்லது வேறு ஒருவரையோ ஆசிரியராக முன்வைத்தாலும், சாட்சியங்கள் மிக குறைவாகவே உள்ளன. இந்த புத்தகத்தின் அகக் சாட்சியங்களைக் கொண்டும் இதன் ஆசிரியரைக் கணிப்பிடுவது மிக கடினமாகவே உள்ளது, எபிரேயர் புத்தகம், மனித ஆசிரியத்துவத்தை இரண்டாவது நிலையில் வைப்பதும் இதற்கான ஒரு மிக முக்கிய காரணம்
எபிரேயர் புத்தகத்தின் இரண்டாவது அதிகாரம், ஒப்பற்ற மீட்பு மற்றும் கிறிஸ்து நம் மீட்பர் என்ற தலைப்புக்களில் சிந்திக்கின்றது. கிறிஸ்து நம் மீட்பு என்ற தலைப்பிலே, கிறிஸ்து வானதூதர்களைவிட மேலானவர் என்பதையும் அவருடைய அரசு வானதூதர்களின் அரசு என்று தவறாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக வாசிக்கிறது. மனிதர்கள் சிறியவர்கள், வானதூதர்கள் அவர்களைவிட சற்று உயர்ந்தவர்கள் என்றும், கிறிஸ்து ஒருவரே உன்னதர் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் மனிதர்கள் கிறிஸ்துவின் மாட்சியையும், மேன்மையையும் பரிசாக பெற்றுள்ளனர், அத்தோடு அனைத்து உயிரினங்களும் மனிதரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதும் தெளிவாகிறது. இருந்தும் அனைத்தும் இன்னமும் மனிதருக்கு கீழ்படியவில்லை என்பதும் சிறுகுறிப்பாக சேர்க்கப்பட்டுள்ளது

.9: தற்போது காணப்படும் இயேசு சற்று தாழ்ந்தவராகக் காணப்படுகிறார், அவர் வானதூதர்களை விட சற்று குறைந்தவராக காணப்படுகிறார் என்பதன் காரணத்தை விளக்க முயல்கிறார். இந்த 
இயேசு துன்புற்று இறந்தவர் என்ற பாஸ்கா மறைபொருள் சொல்லப்படுகிறது (τὸ πάθημα τοῦ θανάτου டொ பாதேமா டூ தானாடூ- பாடுகளின் மரணம்). இயேசுவின் இறப்பு அவருக்கு மாட்சியையும் மாண்பையும் முடியாக கொண்டுவருகிறது
இயேசு அனைவரின் நலனுக்காகவும், சாவுக்கு உட்படவேண்டியிருக்கிறது, இதுவும் கடவுளின் அருளால்தான் நடைபெறுகிறது என்கிறார் ஆசிரியர். துன்புறுத்தப்பட்ட ஆரம்ப திருச்சபைக்கு இயேசுவின் மரணம் பாடுகளின் மீட்புத்தன்மை மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. பாடுகள் மரணம் சில வேளைகளில் அவசியமானதுதான் என்பதை அவர் இயேசுவின் பாடுகள் மரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்

.10: கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்றே தாமே உருவாக்கினார் என்ற விவிலிய அறிவு இங்கே நினைவுகூறப்படுகிறது. அதாவது படைப்பின் நோக்கமும், மூலமும் கடவுள்தான் என்பது இந்த வரியின் பொருள் (δι᾿ ὃν τὰ πάντα καὶ δι᾿ οὗ τὰ πάντα தி ஹொன் டா பான்டா காய் தி ஹு டா பான்டா- அனைத்தும் அவர் வழியாய் அவரால் உள்ளன).  கடவுள் மக்கள் பலரை தன் மாட்சியில் பங்குகொள்ள அழைத்து செல்ல விரும்பினார். பலர் என்ற சொல், சிலரை வெளியே விட்டுவிடுவது போல உள்ளது (πολλοὺς பொல்லூஸ்-பலர்). 
இந்த மீட்பு ஒரு பயணம், இந்த பயணம் இயேசுவால் தொடங்கப்படுகிறது. இதற்கு இயேசு துன்பப்படவேண்டியிருக்கிறது. இந்த துன்பத்தின் மூலம் அங்கே நிறைவு கிடைக்கிறது. இந்த துன்பமும், அதனால் வரும் நிறைவும் தகுதியான செயலே என்கிறார் ஆசிரியர் (Ἔπρεπεν எப்ரெபென்- தகுதியானது). 

.11: அனைவரும் இயேசுவின் சகோதரர் சகோதரரிகள் என்ற இறையியல் வாதம் அழகாக முன்வைக்கப்படுகிறது. அதாவது இயேசு அனைவரினதும் உயிர்மூலம் என்பது சொல்லப்படுகிறது (ἐξ ἑνὸς πάντες· எக்ஸ் ஹெனொஸ் பன்டெஸ்- ஒன்றிலிருந்து எல்லாம்). தூய்மையாக்கிறவர் என இயேசுவும், தூய்மையாக்கப்படுவோர் என மக்களும் உறவுநிலைப் படுத்தப்படுகின்றனர். (ἁγιάζων ஹகியாட்சோன்- தூய்மையாக்குவோர், ἁγιαζόμενοι ஹகியாட்ஸ்சோமெனொய்- தூய்மையாக்கப்படுவோர்கள்). இந்த உறவு நிலையால் இயேசுவின் சகோதரர்கள் சகோதரிகளாக மக்கள் மாற்றமடைகின்றனர், இவ்வாறு அழைக்க இயேசு வெட்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்


மாற்கு 10,2-16
மண விலக்கு
(மத் 19:1-12)
1இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். 2பரிசேயர் அவரை அணுகி, 'கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?' என்று கேட்டு அவரைச் சோதித்தனர். 3அவர் அவர்களிடம் மறுமொழியாக, 'மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?' என்று கேட்டார். 4அவர்கள், 'மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்' என்று கூறினார்கள். 5அதற்கு இயேசு அவர்களிடம், 'உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். 6படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
7இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.
8இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல் ஒரே உடல். 9எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்' என்றார். 10பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். 11இயேசு அவர்களை நோக்கி, 'தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். 12தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்' என்றார்.
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மத் 19:13-15 லூக் 18:15-17)
13சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். 14இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, 'சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. 15இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். 16பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.


மணவிலக்கு பற்றி இயேசு போதித்த போதனைகள் நிகழ்வை ஒவ்வொரு நற்செய்தியாளரும் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்கின்றனர். மாற்குவும் இந்த நிகழ்வை தன்னுடைய சுருக்கமாக சொல்லும் முறையில் பதிவுசெய்கிறார்

.1: இயேசு யோர்தான் அக்கரைப் பகுதிக்கு வருகிறார். இந்த இடத்தில்தான் திருமுழுக்கு யோவான் பணியாற்றியிருக்க வேண்டும். மக்கள் அவரிடம் வருவதும், அவர் வழக்கம் போல கற்பிப்பதும் தொடர்வினைகளில் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்வுகள் என்பது காட்டப்படுகிறது. ἐδίδασκεν எதிதாஸ்கென்- தொடாந்து கற்பித்தார்

.2: பரிசேயர் இயேசுவை அணுகி கேள்வி ஒன்றை முன்வைக்கின்றனர். பரிசேயர்கள் மோசேயின் சட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆக இவர்கள் இயேசுவை வேறு காரணத்திற்காக அணுகுகிறார்கள். அவர்களுடைய அணுகு முறை சோதிக்கவே என்பது சொல்லப்படுகிறது (πειράζοντες பெய்ராட்சொன்டெஸ்- சோதித்துக்கொண்டு). பரிசேயர்கள் உரோமையரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், வெளியில் உரோமையருடன் போரிட விரும்பவில்லை. மோசேயின் சட்டங்களை நுணுக்கமாக கடைப்பிடித்து, அதன் வாயிலாக மீட்படையவும், ஆண்டவரின் வருகைக்காகவும் காத்திருந்தனர். சில சிந்தனைகளில் இவர்கள் இயேசுவின் போதனைகளை வெறுத்தனர். இயேசுவை மோசேயின் சட்டத்தை மீறுபவராகவும், இயேசுவால் இஸ்ராயேலுக்கு ஆபத்து வருகிறது என்றும் நினைத்தனர். இயேசுவுடைய காலத்தில் தோன்றிய பல பிழையான பிரிவினைவாதிகளைப் போலவே இவர்கள் இயேசுவையும் நினைத்திருக்கலாம். மோசேயின் சட்டங்களை வெறும் வரிக்கு வரி பின்பற்றியதால், இவர்கள் இயேசுவின் ஆன்மீகத்தை புரிந்து கொள்ளாமல் போயிருக்கலாம். Φαρισαῖοι பரிசய்யொய்- பரிசேயர்கள். இயேசு பரிசேயர்களை வெறுத்தார் என சொல்லமுடியாது, அவர் சில பரிசேயர்களின் பிழையான வாதங்களையே வெறுத்தார். இயேசுவிற்கு பரிசேயர்கள் மத்தியில் சில முக்கியமான நண்பர்களும் இருந்தனர்
இயேசுவை பல மக்கள் பல தேவைக்காக அணுகும் போது, இவர்கள் அவரை சோதிக்க அணுகுகிறார்கள் என்று மாற்கு காட்டுகிறார். விவிலியத்தில் சோதிப்பது, சாத்தானின் வேலையாக கருதப்படுகிறது. இங்கே இந்த சொல் இவர்களின் பொல்லாத மனநிலையைக் காட்டுகிறது எனலாம். பரிசேயர்கள் என இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொல், சில குறிப்பிட்ட பரிசேயர்களைக் குறிக்கலாம்.
கணவன் மனைவியை விலக்கிவடுவது முறையா என்ற கேள்வியை இவர்கள் முன்வைக்கிறார்கள். லேவியர் சட்டம் விவாகரத்து முறையை மிகத் தெளிவாக சொல்லும் வேளை, இவர்கள் அதனை ஒரு கேள்வியாக இயேசுவிடம் முன்வைக்கின்றனர். இதன் மூலம் மனைவியை விலக்கிவிடுவது ஒரு விவாதப்பொருளாக அன்றே இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது

.3: மோசேயின் சட்டங்களை நுணுக்கமாக கற்றவர்களுக்கு, இயேசு மோசேயின் கட்டளைகளை இன்னொருமுறை சொல்லிக் கொடுக்க முயல்கிறார். மோசேயின் கட்டளைகளையே இயேசு கேள்வி கேட்பதன் வாயிலாக. அவருடைய கேள்விற்குள் அனைவரும் வரத்தான் வேண்டும் என்பது தெளிவாகிறது. அத்தோடு மோசேயும் மட்டுப்படுத்தப்பட்டவரே என்பதும் காட்டப்படுகிறது. τί ὑμῖν ἐνετείλατο Μωϋσῆς; டி ஹுமின் எனெடெய்லாடொ மூஓஊசேஸ்- மோசே உங்களுக்கு கொடுத்த கட்டளை என்ன?).

.4: இயேசு மோசேயையே கேள்வி கேட்க, இவர்கள் அதனையும் பொறுத்துக்கொள்கிறார்கள்
இதன் மூலம், இவர்கள் மோசேயின் சட்டத்தை பின்பற்றுவதைவிட, இயேசுவில் குறைகண்டுபிடிப்பதில் கவனமாயிருக்கிறார்கள் என்பது புலனாகிறது
லேவியர் சட்டத்தை இவர்கள் இயேசுவிற்கு கற்றுக்கொடுக்கிறார்கள். (காண்க இணைச்சட்டம் 24,1-4). இணைச்சட்டத்தின் படி ஒருவன் அருவருக்கத்தக்க செயலுக்காக தன் மணைவியை முறிவுச் சீட்டு எழுதி விலக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவருக்கத்தக்க செயலுக்கு எபிரேய விவிலியம் עֶרְוַת 'எர்வாத் என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இது ஆடையின்மையை மற்றும் ஒழுக்கமின்மையைக் குறிக்கும். முறிவுச் சீட்டிற்கு סֵפֶר כְּרִיתֻת சபெர் கெரிதூத் என்ற செல் பயன்படுத்தப்படுகிறது
மோசே ஒழுக்கமற்ற வாழ்விற்குத்தான் மணவிலக்கு சான்றுதல் மூலம், மணமுறிவு செய்யலாம் என்று சொல்ல, இவர்கள் மணவிலக்கை மட்டும் மையப்படுத்துகிறார்கள்

.5: இயேசு இவர்களின் மனநிலையையும், மோசேயின் சட்டத்தையும் நன்கு அறிந்தவராக உடனடியாக தன்னுடைய படிப்பினைக்கு சென்று விடுகிறார். மோசேக்கு எதிராக இயேசு எதையும் சொல்லாமல், சட்டத்தின் பலவீனத்தைப் பற்றியே பேசுகிறார். மோசே கொடுத்ததில் தவறில்லை மாறாக மக்களுடைய மனநிலை மற்றும் கலாச்சார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர் புதிதான சிந்தனையை முன்வைக்கிறார்
உங்கள் கடின உள்ளம்தான் விவாகரத்திற்கு காரணம் என இயேசு மனிதர்களின் கடின உள்ளத்தின் கொடுமையைப் பற்றி பேசுகிறார். இந்த எச்சரிக்கை ஒவ்வொரு கடின உள்ளம் கொண்ட ஆண்மகனுக்கும் பொருந்தும். விவாகரத்தை, பெண்களின் உரிமைகளுக்கு எதிராக, பயன்படுத்தும் எந்த கலாச்சாரமும் கடவுளின் திட்டத்திற்கு எதிரானது என்பதை இயேசு கடுமையாக காட்டுகிறார். πρὸς τὴν σκληροκαρδίαν ὑμῶν புரொஸ் டேன் ஸ்கேரொகாதியான் ஹுமோன்- உங்கள் கடின இதயத்தின் பொருட்டு. கடின இதயம் விவிலியத்தில் புறவினத்தவரின் பழக்கவழக்கமாக காட்டப்படுகிறது. சிலவேளைகளில் இஸ்ராயேல் மக்கள் தண்டிக்கப்படுவதன் காரணமாகவும் கடின உள்ளம் காட்டப்படுகிறது

வவ.6-8: இயேசு நல்லதொரு யூதனாக பூரண விவிலிய அறிவைக் கொண்டிருந்தார் என்பது இந்த வரிகளில் காட்டப்படுகின்றன
இங்கே தொடக்கநூலை கோடிடுகிறார். இங்கு பல வரிகள் மேற்கோள் காட்டப்படுகின்றன (காண்க தொ.நூல் 1,27: 2,24: 5,2). படைப்பின் தொடக்கத்திலே கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்திருக்கிறார் ἄρσεν καὶ θῆλυ ἐποίησεν  அர்சென் காய் எபொய்ஏசென்- ஆண் பெண்ணாக படைத்தார். இதன் காரணமாகத்தான் கணவன் தன் தாய் தந்தையைவிட்டுவிட்டு மனைவியுடன் ஒன்றித்திருக்கிறார். இங்கே கணவனைப் பற்றித்தான் தொடக்கநூல் பேசுகிறது. இதன் மூலம் மனைவியின் உற்ற பாதுகாப்பு கணவன்தான் என்பது நன்கு சொல்லப்படுகிறது
இருவரும் ஒரே உடலாய் இருப்பர் என்ற சிந்தனையையும் இயேசு நினைவூட்டுகிறார். οἱ δύο εἰς σάρκα μίαν· ஹொய் துவோ எய்ஸ் சர்கா மியான்- இருவரும் ஒரு உடலாக. இந்த ஒரு உடல் சிந்தனை இஸ்ராயேல் மக்களின் முழுமை பற்றிய தத்துவத்திலிருந்து உருவாகியிருக்கலாம். இரண்டாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது முழுமையாக இருக்கிறது என்ற வாதம் இதற்கு பின்னால் இருக்க வேண்டும். திருமணத்தில் ஒருவர் தன்னுடைய தனித்துவத்தை இழக்கிறார், அல்லது மற்றவருக்கு அவர் அடிமையாக மாறுகிறார் என்ற சிந்தனையை, இந்த எபிரேய சிந்தனை முன்வைக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

.9: இறுதியாக இயேசு மோசேயைப்போல கடுமையான கட்டளையை முன்வைக்கிறார். கடவுள் 
இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்ற கட்டளை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ἄνθρωπος μὴ χωριζέτω அந்த்ரோபொஸ் மே கோரிட்ஸெடோ- மனிதர் பிரிகாதிருக்கட்டும். திருமணத்தின் பிரிவிற்கு காரணம் மனிதர்தான் என்பதை தொடக்கநூல் ஆசிரியரும், இயேசுவும் வலியுறுத்துகின்றனர் என்பது இங்கு நன்கு புலனாகிறது

.10: வழக்கம் போல சீடர்களுக்கு இந்த படிப்பினையும் புரியவில்லை. ஆணாதிக்க சமுதாயத்தில் இயேசுவின் இந்த நேர்த்தியான படிப்பினை அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர்கள் இதனை இயேசுவிடம் மேலும் கேட்கின்றனர். சீடர்கள் இதனை இன்னொரு முறை கேட்பது, இந்த கேள்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது

வவ11-12: இயேசு இந்த இடத்தில் இணைச்சட்ட சட்டத்தை விட்டு ஒரு படி மேலே சென்று விடுகிறார். வழமையாக இயேசு சட்டத்தை மீறுகிறவராக காட்டப்படுகிறார். இங்கே அவர் சட்டத்தை இன்னும் இறுக்கமாக்கிறார். இணைச்சட்டம், துர்நடத்தையால் ஆண் பெண்ணை விலக்கலாம் என்ற அனுமதியைத் தர, இயேசு அதனைப் பற்றி இங்கே பேசாமேலேயே: தன் கணவனைவிட்டு வேறு ஆணை மணப்பவரும், தன் மனைவியைவிட்டு வேறு பெண்ணை மணப்பவரும் விபச்சாரம் செய்கின்றனர் என்கிறார்
விபச்சாரம் என்பது உடலில் என்பதைவிட உள்ளத்தில்தான் செய்யப்படுகிறது என்பதை இயேசு அழகாகக் காட்டுகிறார். இங்கே விபச்சாரத்திற்கு மொய்காவோ (μοιχάω) என்ற சொல் பாவிக்கப்படுகிறது.

.13: இயேசு சிறு பிள்ளைகள் மீது அதிக அக்கறையுள்ளவராக இருந்தார். அதனை அறிந்த மக்கள் சிலர் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டும் என அவரிடம் கொண்டு வருகின்றனர். παιδία ἵνα  αὐτῶν ἅψηται பாய்தியா ஹினா அவ்டோன் ஹப்ஸ்ஏடாய்- சிறு பிள்ளைகள் அவரால் தொடப்பட. சீடர்கள் அவர்களை அதட்டுகின்றனர். சீடர்கள் சிறுவர்களை வெறுத்தனர் என்று சொல்வதற்கில்லை, மாறாக அவர்கள் இயேசு ஓய்வெடுக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். ἐπετίμησαν αὐτοῖς எபெய்டிமேசான் அவ்டொய்ஸ்- அவர்களை எச்சரித்தனர்

.14: சீடாகளின் பார்வை இவ்வாறு இருக்க, இயேசுவின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது
இயேசு சீடர்கள் மீது கோபம் கொள்கிறார். இதன் மூலம் சீடர்களின் பார்வை தவறானது என்பது புலப்படுகிறது. (ἠγανάκτησεν ஏகானாக்டேசென்- கோபம் கொண்டார்)
இயேசு வேறு ஒரு படிப்பினையை இங்கே முன்வைக்கிறார். அதாவது, இறையாட்சி சிறுபிள்ளைகளுக்கே உரியது என்கிறார். சிறுபிள்ளைகளை தடுக்கவேண்டாம் என்றும், அவர்களை தன்னிடம் வரவிடவும் சொல்கிறார்
சிறுபிள்ளைகளை கடவுளிடம் செல்ல தடையாக இருப்பவர்கள் இயேசுவிற்கு எதிரானவர்கள் என்பது இங்கே மறைமுகமாக சொல்லப்படுகிறது. இயேசு சிறு பிள்ளைகளை தொடவேண்டும் என்று சிலர் விரும்ப, இயேசுவிற்கு அருகில் உள்ளவர்கள் அதனைத் தடுக்கிறார்கள். யார் இந்த பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டுவந்தவர்கள் என்பது சொல்லப்படவில்லை. இவர்கள் இப்பிள்ளைகளின் பெற்றோர்களாக மட்டும் இருக்க வேண்டிய தேவையில்லை. γὰρ τοιούτων ἐστὶν ἡ βασιλεία τοῦ θεοῦ. கார் டொய்யூடோன் எஸ்டின் ஹே பசிலெய்யா டூ தியூ- ஏனெனில் இவர்களுக்கே இறையரசு உரியதாக இருக்கிறது

.15: இறையாட்சியை சிறுபிள்ளைகளைப் போல ஏற்றுக்கொள்ளாதோர் இறையரசினின்று வெளியில் இருப்பர் என்கிறார். சாதாரணமாக சிறுவர்கள், பரிசில்களை நல்மனத்துடன் ஏற்பர். இவர்கள் சந்தேகம் கொள்வது குறைவாக இருக்கும். இந்த சிறுபிள்ளைகளின் திறந்த மனங்களை, இறையரசை ஏற்றுக்கொள்ளும் போது, வளர்ந்தவர்கள் கொண்டிருக்க வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார்
இந்த கட்டளையும் உறுதியான வார்த்தைகளால் சொல்லப்படுகிறது ἀμὴν λέγω ὑμῖν, அமேன் லெகோ ஹுமின்- உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்

.16: பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தன் கைகளை அவர்கள் மீது வைத்து ஆசி வழங்கினார். சிறுவர்கள் கடவுளின் அரவணைப்பையும், ஆசீரையும் பெறுகிறார்கள். இறையரசை ஏற்றுக்கொள்வோரும் இந்த அரவணைப்பையும், ஆசீரையும் பெறுவர் என்பது சொல்லப்படுகிறது என்றும் இதனை எடுக்கலாம்


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
திருமணத்தில் தலைவனும் இல்லை, தலைவியுமில்லை
திருமணம் இயேசுவையும், திருச்சபையையும் கொண்டுவருகிறது.
தியாகம், அன்பு, மன்னிப்பு இல்லா திருமணம், ஒரு வியாபாரம்
இன்னொரு சொல்லில், அதுவும் விபச்சாரமே
பெண்ணை மதிக்காத ஆண், ஆண் இல்லை
ஆணை மதிக்காத பெண்ணும், பெண் இல்லை
திருமணம் ஒரு உறவு
எடுக்கபட்ட விலா எலும்பு, பெண்ணாக வரும்வரை
திருமணத்தில் ஆண் குறைபாடுடையவரே
சுயநலமான விவாகரத்து, இயேசுவிற்கு எதிரானது

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சுனாமியால் தங்கள் உயிரையும் உறவுகளையும், உடமைகளையும், இழந்த
இந்தோனேசிய உறவுகளுக்கு சமர்ப்பணம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...