ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்திநான்காம் வாரம் (ஆ)
(16,09,2018)
மி. ஜெகன்குமார் அமதி,
இலங்கை அன்னை அமதி உயர்குருமடம்,
அம்பிடிய, கண்டி.
முதல் வாசகம்: எசாயா 50,5-9
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 2,14-18
நற்செய்தி: மாற்கு 8, 27-35
எசாயா 50,5-9
5.ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை;
விலகிச் செல்லவுமில்லை.
6அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.
நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
7ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.
8நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?
அவன் என்னை நெருங்கட்டும்.
9இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட
யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்; புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.
எசாயா புத்தகத்தின் 49-50 வது அதிகாரம், மீட்பின் விடியல் என்ற பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது. கடவுளின் ஊழியர், எருசலேமின் மீட்பு, கடவுளின் ஊழியருடைய பாடல், முடிவுறாத அருள் போன்ற மிக அழகான பகுதிகள் இங்கே உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றைய பகுதி, கடவுளின் ஊழியருடைய மூன்றாவது பாடல் என அறியப்படுகிறது. இந்தப் பாடலின் கதாநாயகர், யார் என்பதில் பல கேள்விகளும் பதில்களும் உள்ளன. சிலர் இவரை, பாரசீக மன்னரான சைரசாகவும், அல்லது இறைவாக்கினர் எசாயாவாகவும், அல்லது மெசியாவாகிய மீட்பராகவும், காண்கின்றனர். இன்றைய பகுதி இரண்டாவது எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா முழு புத்தகத்தையும், நாம் எசாயா என்கின்ற ஒரு ஆசிரியருக்கு கொடுத்தாலும், இந்த புத்தகத்தை பல ஆசிரியர்கள் எழுதியிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. இந்த இரண்டாவது எசாயா புத்தகம், பல வழிகளில் தனித்துவமாக தெரிகிறது.
இதனை எசாயாவின் மாணவர் ஒருவர், அடிமைத்தன வாழ்விலிருந்துகொண்டு, அல்லது அதற்கு சற்று பின்னரான காலத்தில் எழுதியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
வ.4: ஊழியருடைய முக்கியமான ஒரு தகமை இங்கே பாடப்படுகிறது. கடவுளின் சேவகர், தன் மக்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் கேட்கக்கூடியவராக இருக்க வேண்டும். கேட்டல் ஒருவகை, அதிலும் கற்போர் கேட்கும் விதம் இன்னொரு விதம் (לְשׁוֹן לִמּוּדִים லெஷோன் லிம்மூதிம்- நாவின் வாக்கு), அதனை இந்த ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். அத்தோடு அவர் தன்னுடைய நல்வாக்கால் நலிந்தவர்களை தூக்கிவிட தெரிந்தவராக (לָדַעַת לָעוּת אֶת־יָעֵף லாத'அத் லா'ஊத் 'எத்-யா'எப்- நலிந்தவரை தூக்கிவிட தெரிந்த) இருக்க வேண்டும்.
ஆண்டவர் ஒரு (தமிழ்த்) தாயைப் போல தன்னை காலைதோறும் எழுப்பி விடுகிறார் என சொல்கிறார். அதாவது ஆண்டவர்தான் இவருடைய நாளை அல்லது செயற்பாடுகளை தீர்மானிக்கிறார் என்பதை இவர் சொல்வதாக எடுக்கலாம் (בַּבֹּקֶר בַּבֹּקֶר יָעִיר לִי֙ பாபோகெர் பாபோகெர் யா'இர் லி- காலைதோறும், காலையில் என்னை எழுப்புகிறார்).
வ.5: இந்த வரி ஆண்டவரின் ஊழியரின் கீழ்ப்படிவைக் காட்டுகிறது. ஆண்டவர் தன் காதுகளை திறந்துள்ளதாகச் சொல்கிறார் (אֲדֹנָי יְהוִה֙ פָּתַח־לִי אֹ֔זֶן அதோனாய் எலோஹிம் பாடாத்-லி 'ஓட்சென்),
இதன் வாயிலாக காதுகள் செவிப்புலனோடு இருந்தாலும், அனைவரும் அனைத்தையும் கேட்பதில்லை என்பது புலப்படுகிறது. இங்கே காதுகளை திறப்பவர் கடவுளாக இருப்பதனால் அனைத்தும் கேட்கப்படுகிறது. கிளர்ச்சி செய்தலும், திரும்பிச் செல்லுதலும் கீழ்படிதலுக்கு எதிரானவை, அதனைத்தான் ஆசிரியர் மீள வலியுறுத்துகிறார். கேட்டல் என்பது கீழ்படிவோடு சம்மந்தப்பட்டது. ஆக கேட்டல், கிளர்ந்தெழாமை, திரும்பிச் செல்லாமை போன்றவை நல்லதோர் தலைவனின் பண்பாகின்றன, (וְאָנֹכִי לֹא מָרִיתִי אָחוֹר לֹא נְסוּגֹֽתִי׃ வெ'ஆனோகி லோ' மாரிதி 'ஆஹோர் லோ' நெசூகோதி- நான் கிளர்ச்சி செய்யவும் இல்லை, பின்னால் திரும்பி செல்லவம் இல்லை).
வ.6: அக்கால வன்முறைசார் சமுதாயத்தின் இகழ்ச்சிகள் இந்த வரியில் காட்டப்படுகின்றன. கிறிஸ்தவ விவிலிய ஆய்வாளர்கள் இந்த தண்டனைக்கான விளக்கத்தை, ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒரு அரசர் தன் தாடியையோ, தன் உடலையோ, தன்னை சித்திரவதை செய்வோருக்கு கொடுப்பதில்லை, அப்படி செய்தால் அவர் மாண்புள்ள தலைவராக இருக்க முடியாது, ஆனால் இந்த தலைவர் இந்த சித்திரவதைகளை தன் கடவுளுக்காக ஏற்றுக்கொள்கின்றார். முகத்தை திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்தலும், அக்கால அரசர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவை, அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார் (פָּנַי לֹא הִסְתַּרְתִּי מִכְּלִמּוֹת וָרֹֽק பானய் லோ' ஹிஸ்தார்தி மிக்லிமோத் வாரோக்-என் முகத்தை நான் மறைக்கவில்லை, அவமானத்திலும் எச்சிலிலுமிருந்து). கிறிஸ்தவ பாரம்பரியத்தில், இங்கே இவர் சந்திக்கின்ற தண்டனைகள், ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கப்படுகின்றன.
வ.7: இந்த ஊழியத் தலைவர் எப்படி இந்த அவமானங்களைத் தாங்க வல்லமை பெறுகிறார் என்பதற்கு விடை இந்த வரியில் காட்டப்படுகிறது. ஷஆண்டவர் தனக்கு உதவிசெய்கிறார்| என்கிறது எபிரேய விவிலியம் (וַאדֹנָי יְהוִה יַֽעֲזָר־לִי வா'அதோனாய் அதோனாய் யா'அட்செர்-லி - கடவுளாகிய ஆண்டவர் எனக்கு உதவி). இந்த வரியில் அவருடைய ஆழமான விசுவாசமும் தெரிகிறது. முகத்தை கற்பாறை ஆக்கிக் கொள்ளல் என்பது, உணர்வுகளை அடக்கிக்கொள்வதற்கு சமனாகும், (פָנַי כַּֽחַלָּמִ֔ישׁ பானய்; கஹல்லாமிஷ்- முகத்தை இறுக்கமாக்கி) இதன் மூலம் ஒருவர் தன்னுடைய அசைவுகளை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை பெறுகிறார் என்று சொல்லலாம்.
வ.8: நீதிச் சங்கங்களில் குற்றம் சாட்டுபவரும், குற்றம் சாட்டப்படுபவரும் எதிரெதிரே வழக்காட அழைக்கப்படுவார்கள். வாத பிரதிவாதங்கள் இந்த சங்கத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறுதியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதியின் பங்குதான் இறுதியில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. நீதிபதி யார் பக்கம் இருக்கின்றாரோ அவர்தான் வெற்றி பெறுகிறவர் ஆகிறார். நீதிபதியை திருப்திப்படுத்துவது அல்லது அவருடைய நீதியைப் பெறுவது வழக்கில் முக்கியம் பெறுகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில், தான் நீதிமான் எனவும், தனக்கு நீதிக்கான தீர்ப்பை வழங்குபவரும் அருகில் இருக்கிறார் என்கிறார் ஆசிரியர் (קָרוֹב מַצְדִּיקִ֔י காரோவ் மட்ஸ்திகி- எனக்கு நீதிசெய்பவர் அருகில் உள்ளார்). இதன் காரணமாக தன்னை குற்றம் சாட்டுபவர்களை அவர் கேள்வி கேட்கிறார். அத்தோடு தன்னை குற்றம் சாட்டுகிறவர்களுக்கு சவாலும் விடுகிறார். இவருடைய சவால், இவரை குற்றமற்றவர் எனவும், நீதிபதி இவர் பக்கம் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
வ.9: இந்த வரியில் ஆண்டவருக்கும் தனக்கும் உள்ள உறவை தலைவர் பணியாளர் உறவிற்கு ஒப்பிடுகிறார். ஆண்டவராகிய தலைவர் தனக்கு துணைநிற்கிறார் என்பதன் மூலம், தனக்கு ஆபத்தில்லை என்பதைக் காட்டுகிறார். אֲדֹנָי יְהוִה יַֽעֲזָר־לִ֔י 'அதோனாய் அதோனாய் ய'அட்சார்-லி - என் தலைவர் என் கடவுள் எனக்கு துணை.
தான் குற்றவாளி என யாரால் கேள்வி கேட்க முடியும்? என்று கேட்கிறார். அதாவது தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்பதை தெளிவாகவே சொல்லிவிடுகிறார். தன்னை எதிர்ப்பவர்களை அவர் இரண்டு உருவகங்களுக்கு ஒப்பிடுகிறார், அவை: இற்றுப் போகும் துணி (כַּבֶּגֶד יִבְל֔וּ கவ்வெகெத் யிவ்லூ), புழுவால் அரிக்கப்படுவார்கள் (עָשׁ יֹאכְלֵם׃ 'அஷ் யோ'க்லெம்).
திருப்பாடல் 115
சாவினின்று தப்பியவர் பாடியது
1அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு
நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
2அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.
3சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன் பாதாளத்தின் துன்பங்கள்
என்னைப் பற்றிக் கொண்டன் துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
4நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‛ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.
5ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.
6எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது
எனக்கு மீட்பளித்தார்.
7‛என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்; ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்'.
8என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.
9உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
10‛மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
11‛எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.
12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?
13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.
14இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன்.
15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்;
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;
19உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
அல்லேலூயா!
இந்த 116வது திருப்பாடல் ஐந்தாவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தனி மனித புகழ்சிப் பாடல் என சில ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஒன்றை பின்புலமாக காட்டுகிறார் ஆசிரியர். இதற்கு காரணமாக மனிதர்களின் ஏமாற்றுத்தனத்தையும், தன்னுடைய வெகுளிதனத்தையும் அவர் சாடுகிறார். இப்படியான சூழ்நிலையில் செபம் உதவிக்கு வருகிறது, கடவுள் அவர் குரலைக் கேட்கிறார், இந்த கடவுள் அருள் மிக்கவர், இரக்கமும், உண்மையுமுள்ளவர் என்று பாடல் தொடர்ந்து முன்னேறுகிறது. எபிரேய கவிநடையான 'படி அடுக்கு' முறையில் இந்த பாடல், அமைக்கப்பட்டுள்ளது.
அ1. துன்ப நாளில் கடவுளை கூவி அழைத்தல் (வவ.1-2)
ஆ1. செபத்தினால் துன்பங்களை சந்தித்தல் (வவ.3-4)
இ1. கடவுளில் முழுமையாக தங்கியிருத்தல் (வவ. 5-7)
ஈ1. நம்பிக்கை அனைத்தையும் புதியதாக்கிறது (வவ. 8-11)
இ2. கடவுள் துன்பங்களுக்கு விடையளிக்கிறார். (வவ.12-14)
ஆ2. கடவுள் துன்பங்களை அகற்றுகிறார் (வவ.15-16)
அ2. மீட்பு நாளில் கடவுளை கூவி அழைத்தல் (வவ. 17-19)
வ.1: அல்லேலூயா என்ற புகழ்ச்சி வார்த்தையில் இந்த திருப்பாடல் தொடங்குகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்). இந்த புகழ்ச்சி சொல் எபிரேய விவிலியத்தில் 115வது திருப்பாடலின் இறுதியான சொல்லாக இருக்கிறது. 116வது திருப்பாடலின் முதலாவது சொல்லாக இல்லை.
ஆசிரியர், தான் ஏன் கடவுள் மீது அன்புகூருகிறார் (אָהַבְתִּי 'ஆஹவ்தி- அன்புகூருகிறேன்) என்பதற்க்கு, ஆண்டவர் தன் குரலைக் கேட்டதை காரணமாகச் சொல்கிறார். ஆண்டவர் ஒருவரின் குரலைக் கேட்கிறார் என்பது, ஒருவருக்கு துன்பத்திலும் மன ஆறுதலைக் கொடுக்கிறது. இதனை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்துகிறார்.
வ.2: முதலாவது வரியில் சொன்ன அதே அர்த்தம் வேறு சொற்பிரயோகங்களில் இந்த வரியிலும் திருப்பிக்கூறப்படுகிறது. மன்றாடிய நாளில் ஆண்டவர் தனக்கு செவிசாய்த்ததாகச் சொல்கிறார்.
בְיָמַי אֶקרָֽא׃ வெயாமய் 'எக்ரா- நான் கூப்பிடும் நாட்களில். இந்த வரியின் இரண்டாவது பிரிவை, 'நான் வாழுகின்ற வரை, தேவையில் ஆண்டவரை உதவிக்காக கூப்பிடுவேன்' என்று சில ஆங்கில விவிலியங்கள் மொழிபெயர்க்கின்றன.
வ.3: தன்னுடை துன்பத்தின் நிலையை அடையாளங்களில் அவர் உருவகிக்கின்றார். சாவின் கயிறுகள் தன்னை பிணித்துக்கொண்டன என்கிறார். இதனை சாவின் கண்ணிகள் என்னை சூழ்ந்து கொண்டன என்று எபிரேய பாடம் தருகிறது אֲפָפ֤וּנִי ׀ חֶבְלֵי־מָ֗וֶת 'அபாபூனி ஹெவ்லே மோவெத். மேலும் இதனை வேறு சொற்களில், பாதாளத்தின் துன்பங்கள் தன்னை பற்றிக்கொண்டன என்கிறார். பாதாளம் (שְׁאוֹל ஷெ'ஓல்), இங்கே இவருக்கு மரண அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
இப்படியான அனுபவங்கள் தனக்கு துன்பத்தையும் துயரத்தையுமே தருகிறது என்கிறார்.
צָרָה וְיָגוֹן אֶמְצָא׃ ட்சாராஹ் வெயாகோன் 'எம்ட்சா'- துன்பத்தையும் துயரத்தையும் நான் கண்டுகொள்கிறேன்.
வ.4: ஆசிரியர் தான் ஆண்டவரை தொழுததாகச் சொல்கிறார், இதனை எபிரேய விவிலியம், בְשֵׁם־יְהוָה אֶקְרָא (பெஷெம்-அதோனாய் 'எக்ரா'), நான் ஆண்டவரின் பெயரில் அழைத்தேன் என்று வாசிக்கிறது.
இதனை அந்த வரியின் இரண்டாவது பிரிவு, 'என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன்' என்று மீள சொல்கிறது.
வ.5: ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடுவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். கடவுள் அருளும் இரக்கமும் உள்ளவராக இருப்பதுதான் அதற்கான காரணம் என்கிறார். חַנּוּן יְהוָֹ֣ה וְצַדִּ֑יק ஹனூன் அதோனாய் வெட்சாதிக். ஆண்டவருடைய அருளும் நீதியும் இன்னொரு சொல்லில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ஆண்டவர் இரக்கம் உள்ளவராக பாடப்படுகிறார்.
வ.6: ஆண்டவர் எளிய மனத்தோரை பாதுக்கிறவர் (פְּתָאיִם பெதா'யிம்- எளியோர்), தன்னையும், தான் தாழ்த்தப்பட்ட போது (דַּלּוֹתִי தல்லோதி- நான் தாழ்த்தப்பட்டேன்) பாதுகாக்கிறார் என்கிறார். அதாவது தான் எளியமனத்தவர், இதனால்தான் ஆண்டவரின் பாதுகாப்பு தனக்கு கிடைக்கிறது என்கிறார். வாசகர்களும் எளிய மனத்தோராய் ஆண்டவரின் பாதுகாப்பை பெறமுடியும் என்பது இவர் வாதம்.
வ.7: தன் நெஞ்சை அமைதி கொள்ளச் சொல்கிறார். இந்த இடத்தில் தன் நெஞ்சை இரண்டாவது ஆளாக வர்ணித்து அதற்கு தான் முதலாவது ஆளாக கட்டளை கொடுக்கிறார். பல மொழிகளின்
இலக்கியங்கள் இப்படியான வழிமுறையை பின்பற்றுகின்றன. எபிரேய மொழி இதனை (שׁוּבִי נַפְשִׁי)
ஷுவி நப்ஷி - என் ஆன்மாவே திரும்பு என்று காட்டுகிறது.
அதாவது தன் ஆன்மா, இதனை உயிர் அல்லது சுயம் என்றும் மொழி பெயர்க்கலாம்:
அலையும் ஆன்மாவை மீண்டும் அமைதிக்கு திருப்ப கட்டளை கொடுக்கிறார் போல. இதற்கு காரணமாக, ஆண்டவர் அதற்கு நன்மை செய்தார் என்று பாடுகிறார். நன்மை செய்ததை, ஆசிரியர் இறந்த காலத்தில் குறிப்பிடுகிறார், ஆக ஆண்டவரின் நன்மைத்தனம் வெறும் எதிர்காலம் அல்ல என்பது புலப்படுகிறது.
வ.8: மூன்று விதமான ஆண்டவரின் நன்மைத்தனங்கள் நினைவுகூறப்படுகின்றன, அதாவது:
அ. அவர் உயிர் சாவினின்று விடுவிக்கப்படுகிறது (חִלַּצְתָּ נַפְשִׁי ஹில்லாட்ஸ்தா நப்ஷி)
ஆ. அவர் கண் கலங்காமல் பாதுகாக்கப்படுகிறது (אֶת־עֵינִי מִן־דִּמְעָה 'எத்-'எனே மின்-திம்'அஹ்).
இ. அவர் கால் இடறாதபடி காக்கப்படுகிறது (אֶת־רַגְלִי מִדֶּֽחִי 'எத்-ரக்லி மித்தெஹி).
வ.9: இந்த வசனம் மிகவும் இனிமையான வசனம். இஸ்ராயேலர்கள் தங்கள் நாட்டை உயிர்வாழ்வோர் நாடு என்று அழைப்பார்கள் (בְּאַרְצ֗וֹת הַחַיִּים பெ'அர்டஸொத் ஹஹய்யிம்).
இவர்கள் இரண்டாவது வாழ்வு அல்லது மரணத்தின் பின் வாழ்வு என்ற சிந்தனையை கொண்டிருக்காத படியால், வாழ்வோரின் நாடே இவர்களின் இலக்காக இருக்கிறதை இந்த வரியில் காணலாம்.
அதுவும் இந்த வாழ்வோர் நாட்டில், தான் ஆண்டவரின் திருமுன் வாழ்ந்திடுவதாகச் சொல்கிறார். இதனை ஆண்டவர் முன் நடந்திடுவேன் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது.
இரண்டும் ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது (אֶתְהַלֵּךְ לִפְנֵי יְהוָ֑ה 'எத்ஹல்லெக் லிப்னே அதோனாய்).
வ.10: இஸ்ராயேல் புலம்பல் பாடல்கள் கூட நம்பிக்கையை மையமாக கொண்ட பாடல்களே. தமிழ்க் கலாச்சாரத்தைப் போல, இஸ்ராயேல் கலாச்சாரத்திலும், புலம்பல் என்பது உண்மையில் நீதிக்கான ஒரு வேண்டலே.
இந்த வரியில் தான் மிகவும் துன்புறுகிறதாக சொன்னாலும் (אֲנִ֗י עָנִיתִי 'அனி 'அநிதி- நான் துன்புற்றாலும்), அவர் நம்பிக்கையோடு இருந்ததாகச் சொல்கிறார்.
வ.11: இந்த வரியில் எந்த மனிதரையும் நம்பலாகாது என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பாடுகிறார். இது அவர் மனிதர்களால் வெறுக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற பின்புலத்தைக் காட்டுகிறது எனவும் எடுக்கலாம்.
இங்கே இவர் மனிதர்களை சபிக்கிறார் என்பதைவிட, மனிதர்களிலும் கடவுளை அதிகமாக நம்புகிறார் என்ற சிந்தனைதான் மேலோங்கி இருக்கிறது எனலாம். இங்கே எழுவாய்ப் பொருள், மனிதர் மீதான கோபமல்ல, மாறாக கடவுள் மீதான ஆழமான விசுவாசம். எந்த மனிதரையும், என்று சொல்லி அனைத்து மனிதர்களையும் உள்வாங்குகிறார் போல தோன்றுகிறது. எபிரேய மூல பாடம் அனைத்து மனிதர்களையும், பொய்யர்கள் என்கிறது (כָּל־הָאָדָם כֹּזֵב கோல்-ஹா'ஆதாம் கோட்செவ்).
வ.12: முக்கியமான ஒரு கேள்வியை அனைத்து வாசகர்களிடமும் கேட்கிறார். ஆனால் கேள்வியை அவர் தன்னிடமே கேட்பது போல அமைக்கிறார். ஆண்டவர் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எப்படி ஒருவரினால், பிரதிபலன் செய்ய முடியும் என்பது அவர் கேள்வி. இதற்கு விடையாக, மனிதர்களினால் எந்த விதமான கைமாறையும் கடவுளுக்கு செய்ய முடியாது என்பது விடையாக வரும்.
வ.13: மீட்பின் கிண்ணம் என்ற சொல் இங்கே எழுவாய்ப் பொருளாக வருகிறது, כּוֹס־יְשׁוּעוֹת אֶשָּׂ֑א கோஸ்-யெஷு'ஓத் 'எஸ்ஸெ' (மீட்பின் கிண்ணத்தை உயர்த்துவேன்). இந்த மீட்பின் கிண்ணத்தைக் கொண்டு ஆண்டவரின் திருப்பெயரை தொழுவதாகச் சொல்கிறார்.
இந்த வரி புதிய ஏற்பாட்டில், நற்கருணைக் கிண்ணத்திற்கு ஒப்பிட்படுகிறது. இருப்பினும்
இந்த இடத்தில் இது திரவ பலிக்கான கிண்ணத்தையே குறிக்கிறது எனலாம். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், ஆண்டவருக்கு மிருக பலி, தானிய பலி, மற்றும் திரவப் பலிகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டன. திரவ பலி என்பது எண்ணெய் மற்றும் இரசத்தைக் குறிக்கும்.
வ.14: இந்த வரியுடன் ஒப்பிடுகின்றபோது, முதல் வரி காணிக்கையை குறிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆண்டவருக்கு பொருத்தனைகளை தான் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார்
(נְדָרַי לַיהוָה நெதாரய் லஅதோனாய் - ஆண்டவருக்கு பொருத்தனைகள்). பல விதமான பொருத்தனைகள் வழக்கிலிருந்திருக்கின்றன. உழைப்பில் பத்தில் ஒன்றைக் கொடுத்தல், நகர்களை கடவுளுக்கு அர்ப்பணித்தல், தலைச்சான் உயிரினங்களை கடவுளுக்கு கொடுத்தல், செபங்களை பொருத்தனையாக் கொடுத்தல், அத்தோடு தலைமுடியையும் பொருத்தனையாகக் கொடுத்தலும் பிற்காலத்தில் வழக்கிலிருந்திருக்கின்றன.
இவர் என்ன பொருத்தனை செய்வார் என்பது இந்த வரியில் சொல்லப்படவில்லை, ஆனால் அதனை அவர் ஆண்டவர் மக்கள் முன்னிலையில் செய்வதாகச் சொல்கிறார் (כָל־עַמּֽוֹ கோல்-'அம்மோ, அனைத்து அவர் மக்கள்).
வ.15: இந்த வரியும் இன்னும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வழக்கமாக மரணத்தை
இஸ்ராயேலர்கள் போற்றுவது கிடையாது, முக்கியமாக முதல் தேவாலயத்தின் காலத்தில். மரணத்தை அவர்கள் கடவுளின தண்டனை அல்லது ஒருவகையான துன்பமாகவே பார்த்தார்கள். அதுவும் சிறு பாராயத்தில் மரணம், அல்லது நல்லவர்களின் மரணம் போன்றவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவர்கள் மரணத்தின் பின் வாழ்வையும் முதல் தேவாலயத்தின் காலத்தில் நம்பவில்லை.
இந்த வரியில், ஆண்டவருடய அன்பர்களின் மரணம் அவர் பார்வையில் மதிப்புக்குரியது என்கிறார் ஆசிரியர். יָקָר בְּעֵינֵי יְהוָ֑ה הַמָּ֗וְתָה לַחֲסִידָיו׃ யாகார் பெ'எனே அதோனாய், ஹம்மாவெதாஹ் லஹசிதாய்வ். கடவுளுடைய கண்களில் ஒப்பற்றது, அவர் அன்பர்களின் சாவு.
வ.16: தன்னுடைய அடையாளத்தை பல ஒத்த கருத்து வரிகளில் தெளிவு படுத்துகிறார். தன்னை ஆண்டவரின் ஊழியன் என்கிறார் (אֲנִי־עַבְדְּךָ 'அனி-'அவ்தேகா- நான் உம் ஊழியன்). இந்த வரி மீண்டும் இன்னொருமுறை அதே வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. தமிழ் விவிலியம் ஊழியன், பணியாளன் என்ற ஒத்த கருத்துச் சொற்களைப் பாவித்தாலும். எபிரேயம் ஒரே சொல்லை இரண்டு முறை பாவிக்கிறது (עַבְדְּךָ 'அவ்தேகா), இப்படியாக எபிரேயத்தில் முக்கியமான வரிகள் அமைக்கப்படுகின்றன. இறுதியாக தன்னை ஆண்டவரின் அடியாளின் மகன் என்றும் சொல்கிறார் (בֶּן־אֲמָתֶךָ பென்- 'அமாதெகா- உம் அடியாளின் மகன்). இதுவும் ஆண்டவரின் பணியாளனை குறிக்கும் மிக முக்கியமான வார்த்தை பிரயோகம்.
வவ.17-18: இறுதியாக தான் கடவுளுக்கு என்னனென்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக விளங்கப்படுத்துகிறார். ஆண்டவருக்கு நன்றிப் பலி செலுத்தி (זֶבַח תּוֹדָה ட்செவாஹ் தோதாஹ்- நன்றிப் பலி), அவர் பெயரைத் தொழுவதாகச் சொல்கிறார். நன்றிப்பலி, பலி வகைகளில் ஒன்று.
அத்தோடு மக்கள் முன்னிலையில் ஆண்டவருக்கு பொருத்தனைகள் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். இந்த வாக்குறுதியை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். மக்கள் முன்னிலையில் பொருத்தனைகள் செய்தல், ஒரு வகையான சாட்சியமாக அமைகிறது.
வ.19: ஆண்டவருக்கு அவர் செய்யவிருக்கின்ற பொருத்தனைகளை எங்கே செய்யப்போகிறார் என்பது விவரிக்கப்படுகிறது. அதனை அவர் ஆண்டவரின் இல்லத்தின் முற்றத்தில் செய்யவிருக்கிறார். அது எருசலேம் தேவாலயம் என்ற அடுத்த வரி விளங்கப்படுத்துகிறது. இந்த வரி மூலமாக இந்த திருப்பாடல் இரண்டாம் தேவாலயத்தின் காலப் பாடல் என எடுக்கலாம் போல தோன்றுகிறது.
இறுதியாக இந்த திருப்பாடல் அல்லேலூயா என்ற புகழ்சசி சொல்லுடன் நிறைவேறுகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ், ஆண்டவரை புகழுங்கள்).
யாக்கோபு 2,14-18
நம்பிக்கையும் நற்செயல்களும்
14என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?
15ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, 16'நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;' என்பாரென்றால் அதனால் பயன் என்ன? 17அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
18ஆனால், 'ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன' என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
கத்தோலிக்க திருச்சபையில் இந்த திருமுகத்திற்கு விசேட இடமுன்டு இதன் காரணமாகத்தானோ என்னவோ இதனை மாட்டின் லூத்தர் 'வைக்கோலைப் போன்ற கடிதம்;' என்றார். இருப்பினும் இதனை இன்று பல கிறிஸ்தவ சபையினர் ஏற்றுக்கொள்கின்றனர். நம்முடைய பாரம்பரியப்படி அவர்கள் ஏற்கிறார்களோ இல்லையோ, அது நம் பிரச்சனையல்ல மாறாக இது தொன்றுதொட்டு நமது விவிலியத்தில் இருந்திருக்கிறது. முக்கியமான நடைமுறை வாழ்வியல் சிக்கல்களை அழகாக இது படம்பிடிக்கிறது.
ஆதிக் கிறீஸ்தவர்கள் பொருளாதார துன்பத்திற்கு தள்ளப்பட்ட போது இந்த மடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்து. இது கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதா அல்லது அன்றைய உலகத்தோடு சேர்ந்து இயேசுவை மறுதலிப்பதா என்ற தெரிவைக் காட்டுகிறது. சிதறிய பன்னிரண்டு கோத்திரங்களுக்கு எழுதப்பட்டதாக தொடங்கும் இத்திருமுகம் (δώδεκα φυλαῖς ταῖς ἐν τῇ διασπορᾷ தோதெகா பூலாய்ஸ் டாய்ஸ் என் டே தியாஸ்பொரா- நாடுகடந்துள்ள பன்னிரு கோத்திரங்களுக்கு) யூத கிறிஸ்தவர்களையும் மற்றனைவரையும் உள் வாங்குகிறது. புதிய ஏற்பாட்டின் ஞானநூல் என்றும் சிலர் இதனை விவரிக்கின்றனர். இதன் காலத்தையும் ஆசிரியத்துவத்தையும் கணிப்பது கடினம். காலமாக பலர் கி.பி. 50-100 ஐயும், ஆசிரியராக இயேசுவின் சகோதரரும், எருசலேமின் முதல் ஆயருமான யாக்கோபையும் பாரம்பரியம் காட்டுகிறது. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை அதற்கு நேராகவும் எதிராகவும் பல சான்றுகள் உள்ளன.
இந்த கடிதத்தின் முக்கியமான கூறுகளாக தெய்வீக ஞானத்தின் மகிமை, உலக ஞானத்தின் பலவீனம், சட்டம், விசுவாசம், வாழ்;க்கை முறை, நாளாந்த வேலைகள், நிறைவான வாழ்வு, மற்றும் இறுதிக்கால நிகழ்வுகள் போன்றவைகள் பார்க்கப்படலாம்.
இன்றைய வாசகம், நம்பிக்கையும் நற்செயல்களும் என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்படுகின்றன. சில முக்கியமான நடைமுறை சவால்களை இந்த பகுதி உள்ளவாங்கியுள்ளது.
வ.14: யாக்கோபு தன் வாசகர்களை தன் சொந்த சகோதர சகோதரிகளே என அழைக்கிறார் (ἀδελφοί μου அதெல்பொய் மூ- என் சகோதரர்களே: இந்த சொல் இருபாலார்களையும் உள்ளடக்குகின்றது).
நம்பிக்கையை செயல்களில் காட்டாவிட்டால் அதனால் என்ன பயன் என்கிறார் யாக்கோபு.
இதன் மூலம் நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையில் அதுவும் முக்கியமாக யாக்கோபின் திருச்சபையில் நற்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தது என்பது புலப்படுகிறது. திருச்சபையில் சிலர் வேலைசெய்யாமல் இருந்தார்களா அல்லது வேலைசெய்பவர்களை இவர்கள் சிரமப்படுத்தினார்களாh என்ற கேள்வியும் எழுகிறது.
நற்செயல்கள் அற்ற நம்பிக்கையால் மீட்புண்டா என்ற கேள்வி மிக முக்கியமானது. μὴ δύναται ἡ πίστις σῶσαι αὐτόν; மே தூனாடாய் ஹே பிஸ்டிஸ் சோசாய் அவ்டொன்- அந்த விசுவாசத்தால் அவரை மீட்க முடியுமா? இதற்கு யாக்கோபு எதிர்மறையான விடையைத்தான் கொண்டிருக்கிறார், அதாவது இந்த நம்பிக்கை மீட்காது.
வவ.15-16: மிகவும் அடிப்படையான நடைமுறை வாழ்க்கை கேள்வியை யாக்கோபு சிந்தனைக்கு எடுக்கிறார். வார்த்தைகளை மட்டும் கொண்ட ஆசீர்வாதத்தால் ஏதேனும் பயனுண்டோ? பிரான்சிய புரட்சியின் பின்புலத்தை இந்த வரிகள் இக்கால வாசகர்களுக்கு நினைவூட்டலாம்.
சகோதரர்கள் உணவும் உடையும் கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாவிடின் உடன் சகோதரர்கள் அவற்றைக் கொடுக்க வேண்டும். இவற்றைக்கொடுக்காமல், அவர்களை குளிர்காயச் சொல்வது அல்லது பசியாற்றச் சொல்வது எங்கணம் நியாயம் என்கிறார் திருத்தூதர். இந்த ஆசீர் பயனற்றது. ஏனெனில் அவர்களிடம் உணவே உடையோ இல்லை.
உணவும் உடையும் சகோதரர்களுக்கு மானிட கௌரவத்தைக் கொடுக்கின்றன. அதில்லாமல் அவர்கள் உரிமையற்றவர்கள். அதனை கொடுக்காத சகோதரர்கள், உறவற்றவர்கள். τί τὸ ὄφελος; டி டொ ஒபெலொஸ்- அதனால் நன்மை என்ன?
17: செயல்வடிவம் பெறாத நம்பிக்கையை செத்த நம்பிக்கை என்கிறார் யாக்கோபு (ἡ πίστις, ἐὰν μὴ ἔχῃ ἔργα, νεκρά ἐστιν ஹே பிஸ்டிஸ் எஆன் மே எகே எர்கா நெக்ரா எஸ்டின்- இந்த விசுவாம், நற்காரியங்களை கொண்டிருக்காவிடில் இறந்து விட்டது) . இந்த வரி பிற்காலத்தில் பல வாத பிரதி வாதங்களை உருவாக்கியது.
நற்காரியங்களை மட்டுமே மையப்படுத்தினாலும், அல்லது நம்பிக்கையை மட்டுமே மைய்யப்படுத்தினாலும் அது அடிப்படைவாதங்களையே உருவாக்கும். ஒரு காலத்தில் சில கத்தோலிக்கர் நற்காரியங்களை மட்டுமே மைய்யப்படுத்தியதாகவும், சில சீர்திருத்தவாதிகள் நம்பிக்கையை மட்டுமே மைய்யப்படுத்தியதாகவும் வரலாறு இன்றும் சாட்சியம் சொல்கிறது. இது கத்தோலிக்க-சீர்திருத்த வாத பிரிவினைவாதத்திற்கு வழிகோலியது.
வ.18: யாக்கோபு நம்பிக்கையையோ அல்லது நற்காரியங்களையே தனித்தனியாக முக்கியப்படுத்தவில்லை. இதனை இந்த வரி தெளிவாகக் காட்டுகிறது. ஒருவரிடம் நம்பிக்கை
இருக்கிறது, இன்னொருவரிடம் நற்செயல்கள் இருக்கிறது என்பது அக்காலத்தில் சகிப்புத்தன்மையாக இருந்திருக்க வேண்டும். இது சரியான வாதம் இல்லை என்பது யாக்கோபுவின் நம்பிக்கை.
செயல்கள் இன்றி நம்பிக்கை கொண்டிருக்க முடியாது என்கிறார் யாக்கோபு (δεῖξόν μοι τὴν πίστιν °σου ⸀χωρὶς τῶν ἔργων தெக்ட்சொன் மொய் டேன் பிஸ்டின் சூ கோரிஸ் டோன் எர்கோன்- எனக்கு காட்டுங்கள், செயல் இல்லாத விசுவாசத்தை).
இதற்கு மாறாக தான் செயல்கள் அடிப்படையில் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகச் சொல்கிறார். அதாவது தன்னுடைய விசுவாசம் வெறும் பேச்சில் அல்ல மாறாக அது செயல்கள் வடிவம் எடுக்கிறது என்கிறார் (σοι δείξω⸊ ἐκ τῶν ἔργων μου τὴν πίστιν சொய் தெக்ட்சோ எக் டோன் எர்கோன் மூ டேன் பிஸ்டின்- செயல்களில் இருந்து வரும் விசுவாசத்தைக் உங்களுக்கு காட்டுவேன்).
யாக்கோபின் வரிகள் அவதானமாக ஆரயப்படவேண்டியவை. யாக்கோபு விசுவாசமற்ற நற்செயல்களையோ அல்லது விசுவாமற்ற வேலைகளையோ முன்னிருத்தவில்லை, அவருடை கருத்துக்கள் அனைத்தும் செயல்வடிவமற்ற விசுவாசத்தையே சாடுகின்றன. அதாவது விசுவாசம் என்பது உயிருள்ளதாக இருக்க அது செயல்வடிவம் பெற வேண்டும் என்கிறார். விசுவாசத்தை மட்டுமே மையப்படுத்துவதும், அல்லது நற்செயல்களை மட்டுமே மையப்படுத்துவதும் கிறிஸ்தவ விசுவாசம் அல்ல. இந்த அடிப்படைவாதத்திற்கு புனித யாக்கோபை உதாரணப்படுத்துவதும் நேர்த்தியானதல்ல.
மாற்கு 8, 27-35
இயேசு மெசியா என்னும் அறிக்கை
இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
(மத் 16:13-20; லூக் 9:18-21)
27இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார். 28அதற்கு அவர்கள் அவரிடம், 'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்' என்றார்கள்.✠ 29'ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா' என்று உரைத்தார். 30தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
3. இயேசுவே மானிடமகன்
பயணம் செய்யும் மானிடமகன்
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மத் 16:21-28; லூக் 9:22-27)
31'மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். 32இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், 'என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' என்று கடிந்துகொண்டார்.
34பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.✠ 35ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். 36ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? 37அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? 38பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்' என்றார்
இயேசுவை மெசியா என்று அறிக்கையிடுவது மிகவும் முக்கியமானதாக ஆரம்ப கால திருச்சபையில் இருந்தது. சிலர் இயேசுவை இறைவாக்கினராக, ஆன்மீக தலைவராக, தெய்வ புருசராக, மெய்யியல் வாதியாக கண்டனர். ஆனால் மாற்கு மற்றும் ஏனைய நற்செ;யதியாளர்களுக்கு இது போதுமானதல்ல. அவர்கள் இயேசுவை சமரசம் செய்ய முடியாத மெசியாவாக அறிக்கையிட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மாற்கு, மெசியாவை தனக்கே உரிய பாணியில் அறிக்கையிடுகிறார். யூத மெசியா தாவீதின் மகன். அவர் துன்பப்பட முடியாதவர், தோல்வியை சந்திக்க முடியாதவர். மெசியா சிலுவையில் மரணிக்க முடியுமா என்ற கேள்வி யூத உலகத்தையும், அக்கால கிறிஸ்தவ உலகத்தையும் வெகுவாக தாக்கியிருக்க முடியும். இதனைத்தான் தனக்கே உரிய பாணியில், அதுவும் முதல் திருத்தூதரை வைத்து சரிசெய்ய முயற்சிக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு.
வ.27: இயேசு தன் சீடர்களோடு பிலிப்பு செசாரியா பகுதிகளுக்கு செல்கிறார். இந்த இடம் கலிலேயாவிற்கு வடக்Nகு உள்ளது. இந்த இடத்தில் அதிகமான நீர் இருந்திருக்க வேண்டும். யோர்தான் நதிக்கு நீர் வரும் ஊற்றுக்களில் ஒன்று இந்த இடத்தில் இருக்கிறது. இந்த இடத்தை பனியாஸ் என்றும் அழைக்கிறார்கள். இயேசு விரும்பிய இடங்களில் இதுவும் ஒன்றாக
இருந்திருக்கலாம், இந்த இடத்திற்கு பலர் வந்து போவதும், இயேசுவை இந்த இடத்திற்கு ஈர்த்திருக்கலாம் என நம்ப வாய்ப்புண்டு.
இப்படியான ஒரு முக்கியமான இடத்தில் இயேசு மிக முக்கியமான கேள்வியை தன் சீடர்களிடம் முன்வைக்கிறார். இதே கேள்வியை மாற்கு நற்செய்தியாளர் தன்னுடைய அக்கால வாசகர்களிடமும் முன்வைக்கிறார் எனலாம். இதே கேள்வி நம்மிடமும் முன்வைக்கப்படுகிறது. 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' τίνα με λέγουσιν οἱ ἄνθρωποι εἶναι; டினா மெ லெலூசின் ஹொய் அந்த்ரோபொய் எய்னாய்- நான் யாராக இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள்.
வ.28: இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அக்கால நம்பிக்கையிலே பதில் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பதிலில் விவிலிய அறிவும், அவர்களின் அக்கால சிந்தனையும் கலந்திருக்கிறது. இயேசுவுடைய காலத்தில் மக்கள் மெசியாவை எதிர்பார்த்தார்கள் எனலாம். மெசியாவின் வருகைக்கு முன்னர் எலியா வரவேண்டும் என்பது யூத இராபினிக்க நம்பிக்கை. அதுவும் அவர்களின் பதிலில் வெளிப்படுகிறது.
மக்கள் சிலர், இயேசுவை திருமுழுக்கு யோவான் என பார்க்கின்றனர் (Ἰωάννην τὸν βαπτιστήν ஈயோன்னேன் டொன் பப்டிஸ்டேன்). திருமுழுக்கு யோவான் சற்று காலத்திற்கு முன்னர்தான் கொலை செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் உண்மையாக இறக்கவில்லை, அவர் இயேசுவாக நடமாடுகிறார் என்ற நம்பிக்கை ஒன்று இருந்திருக்கிறது. யோவானை கொலை செய்த ஏரோது அரசன்கூட அதனை நம்பினான் எனலாம். இன்னும் சிலர் இயேசுவை எலியா இறைவாக்கினர் எனவும் நினைக்கின்றனர். ஏலியா இறைவாக்கினர் மரணமடையாமல் உடலோடு வானகத்திற்கு எடுகக்கப்பட்டார் (காண்க 2எலியா 2,11). பிற்காலத்தில் இந்த இறைவாக்கினர் மெசியாவின் காலத்திற்கு சற்று முன் வருவார் என்ற நம்பிக்கை வெகுவாக நிலவியது (காண்க மாற்கு 9,11-12). இயேசுவின் சில நடவடிக்கைகள் எலியா இறைவாக்கினரை ஒத்திருந்திருக்கலாம். இவர்களைவிட, இயேசுவை சாதாரண மக்கள் இறைவாக்கினருள் ஒருவராகவே கண்டனர். இயேசுவின் வார்த்தைகளும், வாழ்க்கையும் அவரை இறைவாக்கினராகவே காட்டியது. இயேசுவும் சில இடங்களில் தன்னை இறைவாக்கினர் போலவே வெளிப்படுத்தினார்.
வவ.29-30: இயேசுவுடைய இரண்டாவது கேள்வி, முதலாவது கேள்விக்கான விடை சரியானது அல்ல என்பதைக் காட்டுகிறது. அதாவது அவர் தான் யோவான், எலியா அல்லது சாதராண
இறைவாக்கினர் அல்ல என்பதைக் உறுதியாக காட்டுகிறார். மக்கள் சொல்லட்டும் சீடர்கள் தன்னை என்னவென்று சொல்கிறார்கள் என்பதில் இயேசு ஆர்வம் காட்டுகிறார். மாற்குவின் செய்திப்படி, வெளி உலகம் இயேசுவை எப்படியும் சொல்லட்டும், ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இயேசு யார் என்பதில், கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்களா எனப் பார்;க்கிறார். ὑμεῖς δὲ τίνα με λέγετε εἶναι; ஹுமெய்ஸ் தெ டினா மெ லெகெடெ எய்னாய்- நான் யாராக இருகிறேன் என நீங்கள் சொல்கிறீர்கள்.
ஆண்டவரின் கேள்விக்கு பேதுருதான் மறுமொழி சொல்கிறார். பேதுரு சாதாரணமாக முதலில் பேசுவார். இந்த இடத்திலும் அவர்தான் முதிலில் பேசுகிறார். அத்தோடு, மாற்கு நற்செய்தி பேதுருவிற்கு முக்கியத்தும் கொடுக்கிறதாகவும் ஒரு வாதம் உள்ளது. அத்தோடு மாற்குவின் உலகத்தில் பேதுரு நன்கு அறியப்பட்டவர். அவருடைய தலைமைத்துவமும் அறியப்பட்டது. ஆக பேதுருவின் விடை முழு கிறிஸ்தவர்களின் விடையாகவே பார்க்ப்படவேண்டும். மாற்கு நற்செய்திக்கே உரிய முறையில் பேதுரு இயேசுவை 'நீர் மெசியா' என்று சுருக்கமாக இருந்தும் ஆழமாகச் சொல்லிவிடுகிறார் (σὺ εἶ ὁ χριστός சு எய் ஹொ கிறிஸ்டொஸ்- நீர் மெசியாவாக இருக்கிறீர்). அதேவேகத்தில் இயேசு இந்த உண்மையை யாருக்கும் சொல்ல வேண்டாம் என கண்டிப்பாகச் சொல்கிறார். மாற்கு நற்செய்தியில், சில விசுவாச விழுமியங்கள் தனித்துவமாக வைக்கப்படுகிறது. அதாவது இயேசுவை மெசியாவாக காண்பது ஒருவருடைய தனிப்பட்ட தேடல் மற்றும் முயற்ச்சி என்பது காட்டப்படுகிறது.
வ.31: இவர்கள் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி அறிக்கையிடுகிறார். இவர்கள் நம்பும் மெசியா எப்படியான மெசியா என்பதை இந்த வரி காட்டுகிறது. மெசியாவை இயேசு மானிட மகன் (τὸν υἱὸν τοῦ ἀνθρώπου டொன் ஹுய்யொன் டூ அந்த்ரோபூ) என்று மாற்றி சொல்லிடுகிறார். மானிட மகனை துன்புறும் மெசியாவாக அடையாளப்படுத்தலாம் என்பது சில வேளைகளில் மாற்கு நற்செய்தியில் தெரிகிறது.
இயேசு தன்னை மானிட மகனாகவும், தான் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்படவும் கொலை செய்யப்படவும் வேண்டும் என்றும் சொல்கிறார். இங்கே காட்டப்படுகின்ற அதிகார வர்க்கத்தினர், யூத சமுதாயத்தில் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்டவர்கள். ஆக யூத தலைமைத்துவம் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த வரி காட்டுகிறது.
இருப்பினும், இறப்பு இயேசுவிற்கு முடிவாகாமல், அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதும் சொல்லப்படுகிறது. இந்த படிப்பினைகளை இயேசு தொடர்ச்சியாக கற்பிக்கிறார். இதன் மூலம் இந்த படிப்பினை ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டதல்ல, மாறாக அது தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது என்பது புலப்படுகிறது எனலாம் (ἤρξατο διδάσκειν αὐτοὺς ஏர்ட்சாடொ திதாஸ்கென் அவ்டூஸ்- அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்).
வ.32: இயேசுவின் படிப்பினை வெளிப்படையாக இருந்தது என்பதை மாற்கு தெளிவாக காட்டுகிறார். அதாவது துன்புறும் மானிட மகனாகிய மெசியா என்ற படிப்பினை வெளிப்படையானது என்பதை மாற்கு காட்டுகிறார். இங்கே ஒழித்து வைக்கப்படவேண்டிய எந்த படிப்பினையும் இல்லை என்பது புலப்படுகிறது. ஆக துன்பம் கிறிஸ்தவர்கள் வாழ்வில் வெளிப்படையாகவே வரும், அதனை அவர்கள் வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்பது சொல்லப்படுகிறது.
இன்னொரு முறை பேதுரு திருச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்டவரின் கடுமையான வார்த்தைகளை சந்திக்கிறார் எனலாம். பேதுரு ஆண்டவரை தனிமையாக அழைத்து கடிந்தும் கொள்கிறார் (προσλαβόμενος ⸂ὁ Πέτρος αὐτὸν புரொஸ்லாபொமெனொஸ் ஹொ பெட்ரொஸ் அவ்டொன்- பேதுரு அவரை தனிமையாக அழைத்தார்- ἤρξατο ἐπιτιμᾶν αὐτῷ. ஏர்ஸ்சாடொ எபிடிமான் அவ்டோ- அவரை கடிந்துகொள்ள தொடங்கினார்). இந்த இடத்தில் பேதுரு பிழையான முன்னுதாரணத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார்.
இயேசுவின் படிப்பினைகள் தொடர்சியாக இருந்தது போல, பேதுருவுடைய கடிந்து கொள்ளலும் தொடர்சியாகவே இருந்திருக்கிறது. பேதுரு ஆரம்ப கால திருச்சபையில் மனநிலையை காட்டுகிறார் எனலாம்.
வ.33: இந்த வரி அவதானமாக நோக்கப்படவேண்டும். பேதுருவின் செயலால் கோபம் அடைந்த
இயேசு, பேதுருவின் பக்கம் மட்டுமல்ல அனைத்து சீடர்களின் பக்கமும் திரும்பிப்பார்க்கிறார். அதாவது பேதுருவின் விடை, அவருடையது மட்டுமல்ல அது அனைத்து சீடர்களுக்கும் உரியது என்பதை அவர் அறிந்திருக்கிறார் (ἐπιστραφεὶς καὶ ἰδὼν τοὺς μαθητὰς αὐτοῦ எபிஸ்ட்ராபெய்ஸ் காய் ஈதோன் டூஸ் மாதேடாஸ் அவ்டூ- அவர் தன் சீடர்களை திரும்பிப் பார்க்கிறார்).
பேதுருவை சாத்தான் என்று திட்டும் அவர், அவரை தனது பார்iவியில் நிற்க வேண்டாம் என்கிறார். அதாவது நம்பிக்கையில்லாத சீடர்கள் சாத்தானாகலாம், சாத்தானுக்கு இயேசுவின் பார்வையில் இடமில்லை என்பது சொல்லப்படுகிறது. சீடர்கள் கடவுளுக்கு உரியவை பற்றி சிந்திக்காமல், மனிதருக்கு உரியவை பற்றி சிந்திப்பதால், சாத்தான்களாகிறார்கள். மனிதர்கள் என்பது இந்த இடத்தில் யூத தலைமைத்துவத்தையும் அல்லது ஆரம்ப கால திருச்சபையில்,
இயேசுவிற்கு எதிராக இருந்த அனைத்து தலைமைத்துவத்தையும் குறிக்கும்.
வ.34: இவ்வளவு நேரமும் தன் சீடர்களுடன் உரையாடியவர், இந்த இடத்தில் மக்கள் கூட்டத்தையும் வரவழைக்கிறார். ஆக இந்த செய்தி அனைவருக்கும் உரியது என்பது புலப்படுகிறது.
தன்னை பின்பற்றுதல் ஒரு அழைப்பு என்றும், அதற்கு ஒருவர் தன்னுடைய சிலுவையை சுமக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. இயேசு தன்னுடைய மரணத்திற்கு முன்பே சிலுவையை அடையாளமாக பாவிக்கிறார் எனலாம். சிலுவை (σταυρός ஸ்டௌரொஸ் - சிலுவை) அக்காலத்தில், பொறுப்பு அல்லது கடமை, இன்னுமாக சுமையின் அடையாளமாக இருந்திருக்கலாம். இந்த சிலுவையை தூக்க ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. சிலுவை இல்லாமல் சீடத்துவம் இல்லை என்பது மாற்குவின் வாசகர்களுக்கு தெளிவாக காட்டப்படுகிறது.
வ.35: உயிரைக் காத்தலும், இழத்தலும் இங்கே எழுவாய்ப் பொருளாக அலசப்படுகிறது. உயிர் மனிதருக்கு மிக முக்கியமானது (ψυχή ப்சுகே- உயிர், மூச்சு). உயிரைக் காக்க பலர் பல முயற்சிகளை செய்யவேண்டியிருந்திருக்கும். ஆரம்ப கால திருச்சபையில் இயேசுவை புறக்கணிக்கவும் வேண்டியிருந்தது. மாற்கு இயேசுதான் உயிர் என பார்க்கிறார். அதாவது, இயேசுவை புறக்கணிக்கிறவர் தன்னுயிரை இழந்தவர் என்றும், இயேசுவை அறிக்கையிடுபவர் உயிரை காக்கிறவர் என்பது காட்டப்படுகிறது.
இயேசுவின் பொருட்டும், அவர் நற்செய்தியின் பொருட்டும் பலர் தம் உயிரை கொடுக்க வேண்டியிருந்த காலத்தில், அதனை உயிரைப் பெறுவதற்கான வாய்ப்பு என்று மாற்கு காட்டுகிறார்.
வ.36: இந்த வரி மாற்கு நற்செய்தியில் மிகவும் நோக்கப்பட்ட வரி. புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் வாழ்வில்; இந்த வரி பல மாற்றத்தை ஏற்படுத்தியது என இயேசுசபை வரலாறு சொல்கிறது.
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்க முடியும் என்கிறார் இயேசு. இந்த இடத்தில் உலகம் என்பது இயேசு இல்லாத இன்பங்கள் அனைத்தையும் குறிக்கிறது (τὸν κόσμον ὅλον டொன் கொஸ்மொன் ஹொலொன்- உலகம் முழுவதையும்). வாழ்வு என்பது இயேசுவையே குறிக்கிறது (τὴν ψυχὴν டேன் ப்ஸ்சுகேன்- வாழ்க்கையை). வாழ்வு இல்லாத முழு உலகம் இங்கே ஆராயப்படுகிறது.
வ.37: வாழ்விற்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்? இது மிக முக்கியமான கேள்வி. வாழ்வு கடவுள் கொடுத்தது. மாற்குவிற்கு வாழ்க்கை இயேசு, ஆக இயேசுவிற்கு ஈடாக எதனையும் கொடுக்க முடியாது என்கிறார்.
பண்டமாற்று முறைகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தது. இந்த வார்த்தைகளையே அவர் பாவனைக்கு எடுக்கிறார். ἀντάλλαγμα τῆς ψυχῆς அந்த்டால்லாக்மா டேஸ் ப்சுகேஸ்- வாழ்விற்கு மாற்றீடாக.
வ.38: இந்த வரி மிகவும் கடுமையாக இருக்கிறது. இயேசு தன்னை புறக்கணிப்பவரை, பாவத்தில் உழலும் விபச்சார தலைமுறையினர் என்கிறார் (τῇ γενεᾷ ⸂ταύτῃ τῇ μοιχαλίδι⸃ καὶ ἁμαρτωλῷ டே கெனெயா டௌடே டே மொய்காலிதி காய் ஹமார்டோலோ- பாவ விபச்சார தலைமுறைக்கு). இந்த சொல் அக்காலத்தில் மிகவும் கடுமையான சாபச் சொல்லாக இருந்திருக்கலாம்.
இந்த தலைமுறை தன்னைப்பற்றியும், தன் வார்த்தையைப் பற்றியும் வெட்கப்படுகிறது என்கிறார். இது மாற்குவின் உலகத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்திருக்கிறது எனலாம். இவர்களின் இந்த செயற்பாடு, தனக்கு மட்டுமல்ல தந்தைக்கும் எதிரானது என்பதும் காட்டப்படுகிறது.
அதாவது மானிட மகன் இறுதிநாளில் தந்தையின் மாட்சியோடும் (τῇ δόξῃ τοῦ πατρὸς டே டொக்சே டூ பாட்ரொஸ்), வானதூதர்களோடும் வருகிறார் (μετὰ τῶν ἀγγέλων τῶν ἁγίων. மேடா டோன் அங்கெலோன் டோன் ஹகியோன்- புனிதமான வானதூதர்களோடு).
தானும் வெட்கப்படுவார் என்கிறார். அதாவது கடவுளின் பழிவாங்கல் எச்சரிக்கப்படுகிறது. ἐπαισχύνομαι எபாய்ஸ்குனொமாய்- வெட்கப்படுதல். இந்த செயற்பாடு நம்பிக்கைக்கு எதிரான பண்பாக பார்க்கப்படலாம்.
யார் இயேசு? என்பது ஒரு கேள்வி அல்ல,
அது ஒரு தேடல்,
உலகத்தின் செய்திகளையும் அறிவுகளையும் நோக்கலாம்,
இயேசு என்பது ஒரு அனுபவம், அது உணரப்பட வேண்டும்.
இயேசு இல்லாத சீடத்துவம், வெறுமையானது.
இயேசுவிற்காக அனைத்தையும் இழக்கலாம்,
இயேசுவை எதற்காகவும் இழக்கக்கூடாது.
அன்பு ஆண்டவரை உம்மை பற்றிக்கொள்ள வரம் தாரும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக