ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு (ஆ) 16th Sunday in Orinary Times (B)
ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு (ஆ)
21.07.2024
M. Jegankumar Coonghe OMI,
Sinthathirai Matha Shrine,
Chaddy, Velanai,
Jaffna.
Thursday, 18 July 2024
முதல் வாசகம்: எரேமியா 23:1-6
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23
இண்டாம் வாசகம்: எபேசியர் 2:13-18
நற்செய்தி: மாற்கு 6:30-34
எரேமியா 23:1-6
வருங்கால அரசரைப் பற்றிய முன்னறிவிப்பு
1ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! 2தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். 3என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். 4அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறர் திகிலுறர் காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். 5ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ நாள்கள் வருகின்றன் அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள 'தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். 6அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். 7ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, 'எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று எவரும் சொல்லார். 8மாறாக, 'இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை' என்று கூறுவர்.
எரேமியா (יִרְמְיָהוּ யிர்மெயாஹு- கடவுளால் உயர்த்தப்பட்டவர்) இறைவாக்கினர் தென் நாடான யூதேயாவின் இறுதி காலத்தில் முக்கியமாக அரசர்களான யோசியா, எகோஅகாஷ், எகோக்கிம், எகோக்கின், சேதேக்கியா போன்ற மன்னர்களுடைய காலத்தில் பணியாற்றினார். மிகவும் மென்மையான இயல்பையுடைய மனிதராக இருந்தாலும், இறைவாக்கினராக மிகவும் கடுமையானவராக இருந்தார். நாற்பது ஆண்டுகளாக இறைவாக்குரைத்த இவரை கிறிஸ்தவ நாகரீகம், பெரிய இறைவாக்கினரில் இரண்டாமவராகக் கருதுகின்றது. யூத மறை இவரை வரலாற்றிக்கு உட்பட்ட இறைவாக்கினராகவும் கருதுகின்றது. யூதேயாவின் இறுதிக்காலத்தில் இவர் பணியாற்றியமையாலும், பபிலோனியரின் வருகையை இவர் சந்தித்ததாலும், இடப்பெயர்வின் இறைவாக்கினருள் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.
பபிலோனியர் எரேமியாவிற்கு மரியாதை கொடுத்தார்கள் என விவிலியம் காட்டுகிறது. முன்னைய இறைவாக்கினர்களான எசாயா, ஆமோஸ், ஓசேயா போன்றவர்களின் இறைவாக்கிற்கு மக்கள் செவி கொடுக்காமல் அழிவை சந்தித்ததைப் போலவே, இவருடைய இறைவாக்கிற்கு யூதேயா செவிகொடுக்காமல், அழிவை சந்தித்தது. எரேமியாவின் செயலளராக இறைவாக்கினர் பாரூக் பணியாற்றியிருக்கிறார். எரேமியா தன்னுடைய இறுதிக் காலத்தை எகிப்தில் சந்தித்ததாகவும், தெலைந்து போன வட நாட்டு இஸ்ராயேலரை அவர் தேடியலைந்ததாகவும் ஒரு சில பாரம்பரியங்கள் காட்டுகின்றன. நாடுகடத்தப்பட்டோரைவிட எஞ்சிய பலவீனமானவர்களை கடவுள் நேசிக்கிறார் என்ற புதிய சிந்தனையை எரேமியா கொண்டிருந்தார்.
எரேமியாவுடைய ஆரம்ப காலத்தில் மிகவும் நல்ல அரசர் என்று கருதப்பட்ட யோசியா ஆட்சிசெய்தார், இந்த காலத்தில் அசீரிய பேரரசு தன்னுடைய வலுவை இழந்துகொண்டிருந்தது.
இந்த காலத்தில் யோசியா மன்னன், வடநாடான இஸ்ராயேல் இழந்திருந்த சில நிலங்களை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருந்தார். நினிவே இப்போது பபிலோனியர்களுடைய ஆட்சியின் கீழ் வந்தது, பபிலோனியா, கடவுளின் மக்களுக்கு புதிய ஆபத்தாக வளர்வதை எரேமியா கண்டார்.
எரேமியாவின் 23வது அதிகாரம், நம்பிக்கை கொடுக்கும் செய்திகளைத் தாங்கியுள்ளது.
இந்த அதிகாரத்திற்கு முற்பட்ட பகுதிகளில் யூதாவினதும், எருசலேமினதும் அழிவைப் பற்றி
இறைவாக்குரைத்தவர், வரப்போகும் அரசரைப் பற்றி இந்த அதிகாரத்தில் இறைவாக்குரைக்கிறார்.
Jer. 23:1 ה֣וֹי רֹעִ֗ים מְאַבְּדִ֧ים וּמְפִצִ֛ים אֶת־צֹ֥אן מַרְעִיתִ֖י נְאֻם־יְהוָֽה
1ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு!
23:1: எரேமியா மந்தைகளை சிதறடிக்கும் ஆயர்களை கடுமையாக சாடுகிறார். இங்கே மந்தைகள் மக்களையும், ஆயர்கள், அரசியல்-சமய தலைவர்களையும் குறிக்கின்றன.
இந்த வரியில் மக்களை அவர் 'மேய்ச்சலுக்குட்பட்ட என் ஆடுகள்;' என்கிறார், அதாவது அவர்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்கிறார் (צֹאן מַרְעִיתִי ட்சோன் மர்'இதி). ஆயர்களை, அழிப்பவர்களும் சிதறடிப்பவர்களும் என்று காட்டுகிறார் (רֹעִ֗ים מְאַבְּדִים וּמְפִצִים ரோ'இம் மி'அவ்திம் வுமெபிட்சிம்). இதனை கடவுள்தான் உரைத்தார் என்றும் சொல்கிறார் (נְאֻם־יְהוָה நெ'வும்-அதோனாய்(ஆண்டவரின் பொதுப்பெயர் பாவிக்கப்பட்டுள்ளது)).
2 לָ֠כֵן כֹּֽה־אָמַ֨ר יְהוָ֜ה אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל עַֽל־הָרֹעִים֮ הָרֹעִ֣ים אֶת־עַמִּי֒ אַתֶּ֞ם הֲפִצֹתֶ֤ם אֶת־צֹאנִי֙ וַתַּדִּח֔וּם וְלֹ֥א פְקַדְתֶּ֖ם אֹתָ֑ם הִנְנִ֨י פֹקֵ֧ד עֲלֵיכֶ֛ם אֶת־רֹ֥עַ מַעַלְלֵיכֶ֖ם נְאֻם־יְהוָֽה׃
2தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.
வ.2: முதல் வரியில் சொன்னது இந்த வரியில் தெளிவு படுத்தப்படுகிறது. தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு (הָרֹעִים אֶת־עַמִּי֒ ஹாரோ'யிம் 'எத்-'அம்மி) எதிராக இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் (יְהוָ֜ה אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל அதோனாய் 'எலோஹாய் யிஷ்ரா'எல்), கூறுவது இதுவே என்று இறைவாக்குரைக்கிறார். இந்த பகுதியில் இறைவனுக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும்
இடையிலான நெருங்கிய தொடர்பு காட்டப்படுகிறது.
இரண்டாவதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது: இவர்கள் மந்தையை சிதறடித்தவர்களாக (הֲפִצֹתֶם אֶת־צֹאנִי ஹபிட்சோதெம் 'எத்-ட்சோ'னி), அதனை துரத்தியடித்தவர்களாக (תַּדִּח֔וּם தாத்திஹும்), மற்றும் அதனை பராமரிக்காதவர்களாகவும்
(וְלֹא פְקַדְתֶּם אֹתָם வேலோ' பெகத்தெம் 'ஓதாம்) காட்டி எச்சரிக்கப்படுகின்றனர்.
மூன்றாவதாக தன் தண்டனையை கடவுள் முன்வைக்கிறார். அதாவது அவர்களுடைய தீச்செயல் காரணமாக, அவர்களை கடவுள் துரத்தப்போகிறார் என்கிறார் (פֹקֵ֧ד עֲלֵיכֶם போகெத் 'அலெகெம்- உங்களை சந்திக்கிறேன்). துரத்தப்போகிறேன் என்று தமிழ் விவிலியத்தில் இருப்பது, 'உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று எபிரேயத்தில் காட்டப்படுகிறது.
3 וַאֲנִ֗י אֲקַבֵּץ֙ אֶת־שְׁאֵרִ֣ית צֹאנִ֔י מִכֹּל֙ הָאֲרָצ֔וֹת אֲשֶׁר־הִדַּ֥חְתִּי אֹתָ֖ם שָׁ֑ם וַהֲשִׁבֹתִ֥י אֶתְהֶ֛ן עַל־נְוֵהֶ֖ן וּפָר֥וּ וְרָבֽוּ׃
3என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும்
வ.3: மிகவும் நம்பிக்கை தரும் வரி. மக்களை மந்தை என சொன்ன ஆண்டவர், அதில் எஞ்சியுள்ளவற்றில் இரக்கம் காட்ட முன்வருகின்றார். தான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச்சேர்த்து, அவர்களுடைய ஆட்டுப் பட்டிக்கு கொண்டுவருவதாகச் சொல்கிறார்.
இந்த வரியில் மக்களின் இடப்பெயர்வு கடவுளின் திட்டத்தினாலேயே நடைபெற்றது என்பதும், அவர்கள் இப்போது பிழையான இடத்தில் இருக்கிறார்கள், விரைவில் அவர்களின் ஆட்டுப் பட்டியான தாய் நாட்டிற்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை தரும் செய்தி கொடுக்கப்படுகிறது. இந்த வார்த்தைகள் நிச்சயமாக பபிலோனியரின் காலத்தில் அனைத்தையும் இழந்திருந்த மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்திருக்கும். எரேமியா, பபிலோனியாவை மட்டும் கருத்தில் எடுக்காமல் பல நாடுகளையும் கருத்தில் எடுக்கிறார். எரேமயாவுடைய காலத்தில் எகிப்திலும் இஸ்ராயேல் மக்கள் நாடுகடந்து இருந்தார்கள் என்பது வரலாறு. שְׁאֵרִית צֹאנִ֔י ஷெ'எரித் ட்சோ'னி- எஞ்சிய என் மந்தை.
இறுதியாக அவை இனி தண்டிக்கப்படாது, மாறாக பலுகிப் பெருகும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது (וּפָרוּ וְרָבוּ׃ வுபாரூ வெராவூ- அவை பயன் தரும் பெருகும்).
4 וַהֲקִמֹתִ֧י עֲלֵיהֶ֛ם רֹעִ֖ים וְרָע֑וּם וְלֹא־יִֽירְא֨וּ ע֧וֹד וְלֹא־יֵחַ֛תּוּ aוְלֹ֥א יִפָּקֵ֖דוּa נְאֻם־יְהוָֽה׃ ס
4அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.
வ.4: தன் ஆடுகள் மட்டில் கடவுள் புதிய திட்டங்களை முன்னெடுக்கிறார். இதனால் பல நல்ல எதிர்விளைவுகளும் நடைபெற இருக்கின்றன.
இந்த மந்தைகளை பேணிக்காக்க வேறு மேய்ப்பர்கள் நியமிக்கப் பட இருக்கிறார்கள். இதன் மூலம் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள் என்பது சொல்லப்படுகிறது. எரேமியா ஆட்சியாளர்களாலும், சமய தலைவர்களாலும் அதிகமான தாக்கப்பட்டார், பல நாட்களுக்கு சிறையிலும், பாழ் குழியிலும் இருந்தார். எரேமியாவின் கடினமாக வார்த்தைகளை அவர்களால் தாங்க முடியவில்லை (உண்மை உரைக்கும்). (וַהֲקִמֹתִי עֲלֵיהֶם רֹעִים வாஹகிமோதி 'அலேஹெம் ரோ'யிம்- அவர்களுக்காக ஆயர்களை உருவாக்குவேன்).
இதன் காரணமாக இந்த மந்தைகள் இனி அச்சமுறா (וְלֹא־יִֽירְא֨וּ வெலோ'-யிர்'ஊ), திகிலுறா (וְלֹא־יֵחַתּוּ வெ-யெஹதூ), காணாமலும் போகா (לֹא יִפָּקֵדוּ லோ' யிப்பாகெதூ), என்கிறார் ஆண்டவர். ஆக இப்படியான முன்னைய அனைத்து நிலைகளுக்கும் காரணம் முன்னைய ஆயர்கள் என்பது சொல்லப்படுகிறது.
5 הִנֵּ֨ה יָמִ֤ים בָּאִים֙ נְאֻם־יְהוָ֔ה וַהֲקִמֹתִ֥י לְדָוִ֖ד צֶ֣מַח צַדִּ֑יק וּמָ֤לַךְ מֶ֙לֶךְ֙ וְהִשְׂכִּ֔יל וְעָשָׂ֛ה מִשְׁפָּ֥ט וּצְדָקָ֖ה בָּאָֽרֶץ׃
5ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்.
வ.5: எரேமியா புத்தகத்திலும், முழு முதல் ஏற்பாட்டில் இது மிக முக்கியமான வரி. இந்த வரியை ஆண்டவர்தான் கூறுகிறார் என்பதற்காக எரேமியா 'ஆண்டவர் கூறுகிறார்' என இன்னொரு முறை ஆரம்பிக்கிறார் (נְאֻם־יְהוָ֔ה நெ'ஊம்- அதோனாய்). இந்த சொற்கள் அடிக்கடி வருவதை அவதானிக்கலாம், இதற்கான நேரடி அர்த்தமாக, 'கடவுளின் உரை' என்றும் மொழிபெயர்க்கலாம்.
தாவீதிற்கு நீதியின் தளிர் ஒன்றை உயர்த்துவதாக கடவுள் உரைக்கிறார்:
וַהֲקִמֹתִי לְדָוִד צֶמַח צַדִּיק வாஹகிமொதி லெதாவித் ட்செமாஹ் ட்சாதிக் - இது மெசியாவைப் பற்றிய மிக முக்கியமான இறைவாக்கு. இந்த பகுதியிலிருந்து மெசியாக பற்றிய நம்பிக்கை மிக அதிகமாக பாவனைக்கு வருவதைக் காணலாம். இதற்கு முன் 'இதோ நாட்கள் வருகின்றன' என்று எதிர்காலத்தை குறிக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன (הִנֵּה יָמִים בָּאִים֙ ஹின்னேஹ் யாமிம் பா'யிம்). இதன் மூலம் இந்த மெசியாவின் வருகை நிச்சயமாக எதிர்காலத்தில் நடக்கும் என்பது சொல்லப்படுகிறது.
தாவீதுடைய நீதியின் தளிரின் குணாதிசியங்கள் சொல்லப்படுகின்றன: அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார் (מָלַךְ מֶלֶךְ וְהִשְׂכִּיל மாலாக் மெலெக் வெஹிஸ்கில்-). இதன் மூலம் அவர் சமய தலைவர் அல்லது இறைவாக்கினராக செயல்படுவார் என்ற சந்தேகம் தீர்த்து வைக்கப்படுகிறது. அவர் ஞானமுடன் செயல் பட்டு (עָשָׂה מִשְׁפָּט 'ஆசாஹ் மிஷ்பாத்), நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார் என்று சொல்லப்படுகிறது (וּצְדָקָה בָּאָֽרֶץ வுட்செதாகாஹ் பா'ஆரெட்ஸ்). இந்த வரிகள் மூலமாகவும் இன்னொருமுறை, தற்கால ஆட்சியாளர்கள் இடித்துரைக்கப்படுகிறார்கள்.
6 בְּיָמָיו֙ תִּוָּשַׁ֣ע יְהוּדָ֔ה וְיִשְׂרָאֵ֖ל יִשְׁכֹּ֣ן לָבֶ֑טַח וְזֶה־שְּׁמ֥וֹ אֲֽשֶׁר־יִקְרְא֖וֹ יְהוָ֥ה ׀ צִדְקֵֽנוּ׃ס
. 6அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
வ.6: எல்லாவற்றிக்கும் மேலாக, நாட்டின் எதிர்காலமும் சொல்லப்படுகிறது. முதலில் இவர் நாளில் யூதா விடுதலைபெறும் எனச் சொல்லப்படுகிறது. இதனை 'அந்நாட்களில் யூதா மீட்கப்படும்' என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது (בְּיָמָיו תִּוָּשַׁע יְהוּדָה பெயாமான் திவ்வாஷா' யெஹுதாஹ்). யூதேயாவினரால் கவனிக்கப்படாத இஸ்ராயேல் (வட நாடு) நாட்டைப் பற்றியும் இறைவாக்கு சொல்லப்படுகிறது (וְיִשְׂרָאֵל יִשְׁכֹּן לָבטַח வெயிஸ்ரா'எல் யிஷ்கோன் லாவாதாஹ்- இஸ்ராயேல் பாதுகாப்பாக வாழும்).
புதுப்பெயரால் அந்நகர் அழைக்கப்படும் என்று தமிழில் உள்ளதை, 'அவர் அழைக்கப்படுவார்' என்று எபிரேய மொழி காட்டுகிறது. இங்கே எழுவாய்ப் பொருள் நகர் என்பதைவிட, தாவீதின் தளிரைப் பற்றியது போலவே தெரிகிறது. וְזֶה־שְּׁמוֹ אֲשֶׁר־יִקְרְאוֹ வெட்செஹ்-ஷெமோ 'அஷேர்-யிக்ரெ'ஊ- இந்தப் பெயரால் அவர்(ன்) அழைக்கப்படுவார்(ன்).
அந்தப் பெயர்: יְהוָ֥ה ׀ צִדְקֵֽנוּ׃ அதோனாய் ட்சித்கேனூ (ஆண்டவர் நம்; நீதி).
7 לָכֵ֛ן הִנֵּֽה־יָמִ֥ים בָּאִ֖ים נְאֻם־יְהוָ֑ה וְלֹא־יֹ֤אמְרוּ עוֹד֙ חַי־יְהוָ֔ה אֲשֶׁ֧ר הֶעֱלָ֛ה אֶת־בְּנֵ֥י יִשְׂרָאֵ֖ל מֵאֶ֥רֶץ מִצְרָֽיִם׃
כִּ֣י אִם־חַי־יְהוָ֗ה אֲשֶׁ֣ר הֶעֱלָה֩ וַאֲשֶׁ֨ר הֵבִ֜יא אֶת־זֶ֨רַע בֵּ֤ית יִשְׂרָאֵל֙ מֵאֶ֣רֶץ צָפ֔וֹנָה וּמִכֹּל֙ הָֽאֲרָצ֔וֹת אֲשֶׁ֥ר הִדַּחְתִּ֖ים שָׁ֑ם וְיָשְׁב֖וּ עַל־אַדְמָתָֽם׃ ס
7ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, ‘எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை’ என்று எவரும் சொல்லார். 8மாறாக, ‘இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று கூறுவர்.
வவ.7-8: ஏற்கனவே சொல்லப்பட்ட நம்பிக்கையான வார்த்தைகள், மேலுமாக தெரிந்த வரிகளில் சொல்லப்படுகின்றன. சாதாரணமாக எகிப்திலிருந்து இஸ்ராயேல் மக்களை அழைத்து வந்ததே
இதுவரை வரலாற்றில் ஆண்டவரின் பெரிய சான்றாக இருந்தது. இதனைச் சொல்லித்தான் பலர் தம் சத்தியங்களை மேற்கொண்டனர் 'எகிப்திலிருந்து அழைத்துவந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை'
(חַי־יְהוָ֔ה אֲשֶׁר הֶעֱלָה אֶת־בְּנֵי יִשְׂרָאֵל מֵאֶרֶץ מִצרָֽיִם׃ ஹாய்-அதோனாய், அஷேர் ஹெ'ஏலாஹ் ''எத்-பெனி யிஸ்ராஎல் மெ'எரெட்ஸ் மிட்ஸ்ராயிம்).
இதற்கு பதிலாக புதிய பெயர் ஒன்று சத்தியத்திற்கு பயன்படப் போகிறது. அது: 'இஸ்ராயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை' என்று சொல்லப்படும். இது எரேமியாவிற்கே உரிய மிகவும் தனித்துவமான வரி. இந்த வரிக்கு பின்னால் ஆழமான நம்பிக்கை ஒன்று உள்ளதை அவதானிக்கலாம்.
திருப்பாடல் 23
ஆண்டவரே நம் ஆயர்
(தாவீதின் புகழ்ப்பா)
1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
திருப்பாடல் புத்தகத்திலுள்ள 151 பாடல்களில், முதன்மையான பாடலாக இந்தப் பாடலைக் கொள்ளலாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இசைவடிவங்களைக் கொண்டுள்ள இந்த பாடல் பல ஆண்டுகள் சென்றாலும் அழியாத கடவுள்-மனித பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த பாடலின் முன்னுரை இதனை தாவீதின் பாடலாக முன்மொழிகிறது (מִזְמ֥וֹר לְדָוִ֑ד மிட்ஸ்மோர் லேதாவித்). அழகான இந்த பாடலை மூன்று பிரிவாக பிரித்து, கடவுளின் பாதுகாக்கும் தன்மையை உற்று நோக்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள், சாதாரண சொற்களாக இருந்தாலும் அவை மிக ஆழமான உணர்வுகளை தாங்கியுள்ளன. தேவை ஒன்றும் இராது, பயம் இராது, ஆண்டவரில் வாழ்தல் போன்றவை மிக ஆழமான வரிகள். எப்படியான பின்புலத்தில் தாவீது இந்த திருப்பாடலை பாடினார் என்பது புலப்படவில்லை ஆனால் இதன் வரிகளைக் கொண்டு நோக்குகின்ற போது, கடுமையான சிக்கலிலிருந்து அவர் மீண்ட போது, ஆண்டவரின் நன்மைத் தனத்தை நினைத்து அவர் பாடியிருக்கலாம் என்பது புலப்படுகிறது. தாவீதுதான் இந்தப் பாடலை பாடினார் அல்லது இயற்றினார் என்பதற்கும் போதிய சான்றுகள் இல்லை, இதனை சிலர் திருப்பயண பாடல் என்றும் காண்கின்றனர்.
Psa. 23:1 מִזְמ֥וֹר לְדָוִ֑ד יְהוָ֥ה רֹ֝עִ֗י לֹ֣א אֶחְסָֽר׃
ஆண்டவரே என் ஆயர்;
எனக்கேதும் குறையில்லை.
வ.1: ஆண்டவரை ஆயராக வர்ணிப்பது, முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான உருவகம்.
இதனைத்iதான் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் அடிக்கடி செய்வார் (காண்க எசே 34,10: செக் 11,16: யோவா 10,11.14). ஆயத்துவம் அக்கால இஸ்ராயேல் மக்களுக்கு மிக தெரிந்திருந்தது. ஆயர்கள் அதிகமாக நல்லவர்களாக இருந்து தங்கள் மந்தைகளை காத்தார்கள். மந்தைகளை தங்கள் சொந்த பிள்ளைகள் போல வளர்த்தார்கள், சில வேளைகளில் ஆபத்துக்களையும் பாராது தங்கள் மந்தைகளை மேய்த்தார்கள். தாவீது கூட நல்ல ஆயனாக தன் மந்தைக்காக கொடிய விலங்குகளுடன் போரிட்டதாக விவிலியம் சொல்கிறது (காண்க 1சாமு 17,34.37). இதனால் தாவீது உண்மையான ஆயனாக கடவுளைக் காண்பது அவருடைய சொந்த அனுபவம் என்றுகூட சொல்லலாம் (יְהוָ֥ה רֹ֝עִ֗י לֹ֣א אֶחְסָֽר அதோனாய் ரோ'யி லோ' 'எஹ்சார்), அத்தோடு கடவுள் தன் ஆயனாக இருப்பதனால் தனக்கு எதுவும் தேவையில்லை என்கிறார்.
2 בִּנְא֣וֹת דֶּ֭שֶׁא יַרְבִּיצֵ֑נִי עַל־מֵ֖י מְנֻח֣וֹת יְנַהֲלֵֽנִי׃
பசும்புல் வெளிமீது எனை அவர்
இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார்.
வ.2: இங்கே தாவீது தன்னை ஓர் ஆடாக வர்ணிக்கிறார். பசும் புல் வெளிமீது இளைப்பாற செய்வது அழகான உருவகம். நவீன உளவியலாளர்கள் சிலர், கிறிஸ்தவம் மக்களை மந்தைகளாக காட்டுகின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் மந்தைகளுக்குள் இருக்கும் இந்த அதிசயமான பண்புகள், நல்ல அடையாளங்கள் என்பதை சாதாரண உணர்வுகள் ஏற்றுக்கொள்கின்றன. பசும்வெளி மற்றும் குறையாத நீரோடைகள் என்பன பாலஸ்தீன ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் என்றுமே ஒரு கனவுதான். இப்படியானவை அங்கே குறைவு அவை கிடைத்தாலும், அங்கே அதிகமான போட்டிகளிருக்கும். ஆனால் ஆண்டவர் ஆயனாக இருக்கின்ற படியால் இந்த கனவு, தாவீதுக்கு நனவாகிறது. בִּנְא֣וֹת דֶּ֭שֶׁא יַרְבִּיצֵ֑נִי עַל־מֵ֖י מְנֻח֣וֹת יְנַהֲלֵֽנִי׃ பின்'ஓத் தெஷெ' யர்பிட்செனி 'அல்-மே மெனூஹோத் யெநாஹாலெனி- பசும் தரையில் என்னை அமரச் செய்கிறார், அமைதியான நீர் நிலைகளுக்கு என்னை அவர் அழைத்துச் செல்கிறார்.
3 נַפְשִׁ֥י יְשׁוֹבֵ֑ב יַֽנְחֵ֥נִי בְמַעְגְּלֵי־צֶ֝֗דֶק לְמַ֣עַן שְׁמֽוֹ׃
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப
எனை நீதிவழி நடத்திடுவார்;
வ.3: கடவுள் தனக்கு புத்துயிர் அளிப்பதாக தாவீது பாடுகின்றார். இதனை எபிரேய விவிலியம், 'என் ஆன்மாவை புதுப்பிக்கிறார்' என்று அழகாக காட்டுகிறது (נַפְשִׁ֥י יְשׁוֹבֵב நப்ஷி யெசோவௌ;). கழைத்துப்போய் சேர்ந்துபோய் இருக்கின்ற தலைவர்களுக்கு, தங்கள் பதவி, பலம், குலம், சொத்துக்கள், இன்பங்கள் போன்றவை புத்துயிர் அளிக்கா. மாறாக அதனை தருபவர் கடவுள் ஒருவரே என்பது தாவீதுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அத்தோடு கடவுளுடைய நன்மைத்தனங்களுக்கும் அவருடைய நீதியான பெயருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய பெயரைப்போலவே அவருடைய உறவும் இருக்கிறது என்பது ஆசிரியரின் அனுபவம். נַפְשִׁי יְשׁוֹבֵב יַֽנְחֵנִי בְמַעְגְּלֵי־צֶדֶק לְמַעַן שְׁמֽוֹ׃ நப்ஷி யெஷோவௌ; யன்ஹெனி வெம 'கெலெ-ட்செதெக் லெமா'அன் ஷெமோ- எனக்கு புத்துயிர் தருகிறார், நீதியான பாதையில் என்னை நடத்துகிறார், அவருடைய பெயரின் பொருட்டு.
4 גַּ֤ם כִּֽי־אֵלֵ֨ךְ בְּגֵ֪יא צַלְמָ֡וֶת לֹא־אִ֘ירָ֤א רָ֗ע כִּי־אַתָּ֥ה עִמָּדִ֑י שִׁבְטְךָ֥ וּ֝מִשְׁעַנְתֶּ֗ךָ הֵ֣מָּה יְנַֽחֲמֻֽנִי׃
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்
நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும்
என்னைத் தேற்றும்.
வ.4: இந்த வரி இன்னும் ஆழமான உணர்வுகளைத் தாங்கிச் செல்கிறது. முதல் மூன்று வரிகளும் கடவுளை மூன்றாம் ஆளாகவும், ஆயனாவும் வர்ணித்தது. இந்த நான்காம் வரி கடவுளை இரண்டாம் ஆளாக காட்டுகிறது அத்தோடு அவரை வழியில் பாதுகாப்பவராக காட்டுகிறது. இந்த வரியில் இருந்துதான் சிலர் இந்த பாடலை வழித்துணை திருப்பயணப் பாடல் என்று காண்கின்றனர். பாலைவனங்கள், பயங்கரங்கள், தனிமையான பாதைகள், வழிப்பறிக் கொள்ளைகள் என்று பாலஸ்தீனத்தின் பாதைகள் இருந்திருக்கின்றன. இந்த பாதைகளில் கடவுளின் காத்தல் மிகவும் அனுபவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் ஆசிரியர் சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் தான் நடக்க நேர்ந்தாலும் என்று பாடுகிறார் (גַּם כִּֽי־אֵלֵ֨ךְ בְּגֵ֪יא צַלְמָ֡וֶת לֹא־אִ֘ירָ֤א காம் கி-'எலெக் பெகெ' ட்சல்மாவெத் லோ'-'இரா'). அதற்கான காரணமாக கடவுளுடைய கோலையும் (שֵׁבֶט ஷெவெட்), நெடுங்கழியையும் (מִשְׁעֶנֶת மிஷ்எனெத்), காட்டுகிறார். இவை ஆயர்களுடைய பாதுகாப்பு ஆயுதங்கள், இதனைக் கொண்டே அவர்கள் தங்கள் மந்தைகளை பாதுகாத்தார்கள். பிற்காலத்தில் இவை பாதுகாப்பின் அடையாளங்களாக மாறின. அரசர்களுடைய கையிலிருக்கும் கோலுக்கும், ஆயனுடைய கோலுக்கும் அதிகமான தொடர்பிருக்கிறது.
5 תַּעֲרֹ֬ךְ לְפָנַ֨י ׀ שֻׁלְחָ֗ן נֶ֥גֶד צֹרְרָ֑י דִּשַּׁ֖נְתָּ בַשֶּׁ֥מֶן רֹ֝אשִׁ֗י כּוֹסִ֥י רְוָיָֽה׃
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே
எனக்கொரு விருந்தினை
ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
வ.5: இவ்வளவு நேரமும் தன்னை ஆடாக வர்ணித்த ஆசிரியர் இந்த வரியிலிருந்த தன் உருவத்தை விருந்தாளியாக மாற்றுகிறார். ஆட்டின் தலையில் நறுமண தைலம் பூச மாட்டார்கள். எதிரிகளின் கண்முன்னே விருந்தை ஏற்பாடு செய்தல், தலையில் நறுமண தைலம் பூசுதல், பாத்திரத்தை
இரசத்தால் நிறைத்தல் போன்றவை சிற்றரசர்களுக்கு பேரரசர்கள் கொடுக்கும் அன்பு விருந்தைக் காட்டுகிறது. இப்படியான விருந்துகள் மத்திய கிழக்கு நாடுகளின் முன்னைய பேரரசுகளில் பலமுறை நடந்திருக்கிறது. இந்த வரியை வைத்து பார்க்கும் போது, பாடலாசிரியர் ஒரு அரசர் போல தோன்றுகிறது, அல்லது அவர் அரச உதாரணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னுடைய எதிரிகள் அவமானப்பட கடவுள் தன்னுடைய நன்மைத் தனத்தைக் காட்டுகிறார் அதாவது தன்னை உயர்த்துகிறார் என்பது இந்த ஆசிரியரின் அனுபவம். תַּעֲרֹ֬ךְ לְפָנַ֨י ׀ שֻׁלְחָ֗ן נֶגֶד צֹרְרָ֑י தா'ரோக் லெபானாய் சூல்கான் நெகெத் ட்சொர்ராய்- ஏனக்கு முன்னே விருந்து மேசை ஏற்பாடு செய்துள்ளீர், என் எதிரிகளின் முன்னே. דִּשַּׁנְתָּ בַשֶּׁמֶן רֹאשִׁ֗י כּוֹסִי רְוָיָֽה׃ திஷ்ன்தா பாஷ்ஷெமென் ரோ'ஷி கோசி ரெவாயாஹ்- என் தலையை எண்ணெய்யால் தடவுகிறீர், என் பாத்திரம் நிரம்புகின்றது.
6 אַ֤ךְ ׀ ט֤וֹב וָחֶ֣סֶד יִ֭רְדְּפוּנִי כָּל־יְמֵ֣י חַיָּ֑י וְשַׁבְתִּ֥י בְּבֵית־יְ֝הוָ֗ה לְאֹ֣רֶךְ יָמִֽים׃ --
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
வ.6: கடவுளின் அருளும், பேரன்பும் (טוֹב וָחֶסֶד தோவ் வாஹெசெத்) வாழ்நாள் முழுவதும் புடைசூழ்ந்து வரும் என்பதிலிருந்து ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை புலப்படுகிறது. அத்தோடு ஆசிரியரின் கடவுள் அனுபவம் ஒரு முடிவுறாத அனுபவம் என்பதும் புலப்படுகிறது. ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் என்கிறார் ஆசிரியர். இந்த ஆண்டவரின் இல்லத்தை எபிரேய விவிலியம், கடவுளின் வீடு (בֵית־יְ֝הוָ֗ה வேத்-அதோனாய்) என்கிறது. இதனால் இதனை எருசலேம் ஆலயம் என்று எடுக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது எருசலேம் ஆலயமாக இருந்தால், இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்க முடியாது.
எபேசியர் 2:13-18
13ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். 14ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். 15பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். 16தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். 17அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். 18அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
எபேசியர் திருமுகம் திருச்சபையியலை அதிகமாக சுட்டிக்காட்டுகின்ற திருமுகங்களில் மிக முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட தப்பறைக்கு எதிராக இந்த திருமுகம் எழுதப்பட்டது போல தெரியவில்லை மாறாக திக்கிக்கு (Tychicus) என்ற பவுலுடைய அன்பான சீடர் சென்ற இடம் எல்லாம் இதனை வாசிக்கும் படியாக எழுதப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. பவுல் இந்த திருமுகத்தின் ஆசிரியர் இல்லை என்று வாதிட்டாலும், இதிலுள்ள முக்கியமாக, செபங்கள் பவுலுடையவை போன்றே தோன்றுகின்றன. ஆக பவுலுடைய இறையியலையும், சிந்தனையையும்
இந்த திருமுகம் நிச்சயமாக கொண்டுள்ளது எனலாம். வழிபாட்டை பற்றி பேசுவதும் இந்த திருமுகத்தின் முக்கியமான ஒரு சிறப்பம்சம். இருந்தும் பவுலுடைய ஆசிரியத்தும் என்பது இன்றும் ஒரு கேள்வியாகவே எபேசியர் திருமுகத்தைப் பொறுத்தவரையில் இருந்துகொண்டே இருக்கிறது.
இன்றைய வாசக பகுதி மிகவும் முக்கியமான கருத்தியலைக் கொண்டுள்ளது. இந்த பகுதியில் கிறிஸ்து அருளும் ஒற்றுமையை பற்றி பவுல் விளக்குகின்றார். இதனை வைத்து பார்கின்றபோது திருச்சபையில் இருந்த பிளவுகள் அவரை அதிகமான பாதித்திருந்தன என்ற ஊகத்திற்கு வரலாம் என தோன்றுகிறது.
2:11-12: எபேசிய திருச்சபையில் சில குழறுபடிகள் இருந்திருக்கின்றன. எபேசிய திருச்சபை கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், புறவினத்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை மறந்து சில பிரிவினைவாதத்திலும், தற்புகழ்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம்.
இந்த பின்புலத்தில் இவர்களை மறைமுகமாக சாடுகிறார் பவுல். பிறப்பால் பிற இனத்தாராகிய இவர்களை தங்கள் முன்னிலையை நினைவிற் கொள்ள கேட்கிறார். பிறவினத்தவர்கள் என்போர் விருத்தசேதனம் செய்யாதோர் எனவும் பொருள்படும் (ἀκροβυστία அக்ரொபூஸ்டியா). இதனைச் சொல்லியே விருத்தசேதனம் செய்தோர் இவர்களை இகழ்ந்ததையும் பவுல் நினைவூட்டுகிறார்.
இந்த நாட்களில் இவர்கள் கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தார்கள் என்பதையும்
(χωρὶς Χριστοῦ கோரிஸ் கிறிஸ்டூ- கிறிஸ்து அற்ற) இங்கே அவர் பதிவு செய்கிறார். அத்தோடு அவர்கள் இஸ்ராயேல் இனத்திற்கு புறம்பானவர்களாகவும் (ἀπηλλοτριωμένοι அபோல்லொட்ரியோமெனொய்- புறிவனத்தவர்கள்), வாக்குறுதியை கொண்டோருக்கு அன்னியர்களாகவும் (ξένοι τῶν διαθηκῶν ட்செநொய் டோன் தியாதேகோன்- உடன்படிக்கையாளர்களுக்கு அன்னியர்), எதிர்நோக்கற்றவர்களாகவும் (ἐλπίδα எல்பிதா- நம்பிக்கையற்ற), அத்தோடு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் (ἄθεοι அதெய்யொய்-நம்பிக்கையற்ற) இருந்திருந்தார்கள் என்ற வரலாற்றையும் எதோ தேவைக்காக பவுல் நினைவூட்டுகிறார்.
13 νυνὶ δὲ ἐν Χριστῷ Ἰησοῦ ὑμεῖς οἱ ποτὲ ὄντες μακρὰν ἐγγὺς ἐγενήθητε ἐν τῷ αἵματι τοῦ Χριστοῦ.
ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.
வ.13: இந்த வரியில் இவர்களது நிகழ்காலத்தை விளக்குகிறார் பவுல். ஒருகாலத்தில் தொலைவில் இருந்தவர்கள், இப்போது கிறிஸ்துவின் இரத்தத்தால் கடவுளுக்கு அருகில் கொண்டுவரப்பட்டவர்கள் என சொல்கிறார்.
இவர்கள் பிறப்பால் தொலைவில் இருந்தார்கள், அதனையும், இப்போது இயேசுவின்
இரத்தத்தால் கடவுள் அருகில் இருக்கிறர்hகள், இதனையும் இவர்கள் மறவாமல்
இருக்கவேண்டும் என்பதே பவுலுடைய சிந்தனையாக இருக்கிறது.
ஏனெனில், அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.
14 αὐτὸς γάρ ἐστιν ἡ εἰρήνη ἡμῶν, ὁ ποιήσας τὰ ἀμφότερα ἕν, καὶ τὸ μεσότοιχον τοῦ φραγμοῦ λύσας,
வ.14: எபேசியர் திருமுகத்தில் உள்ள கிறிஸ்தியல் வரிகளில் இந்த வரியும் மிக முக்கியமானது. கிறிஸ்துவின் பணி வாழ்வை அழகான கிரேக்க வரிகளில் பவுல் காட்டுகிறார். கிறிஸ்து அமைதி தருபவர் என்பது காட்டப்படுகிறது (γάρ ἐστιν ἡ εἰρήνη ἡμῶν கார் எஸ்டின் ஹே எய்ரேனே ஹேமோன்- ஏனெனில் அவர் நம் அமைதி).
இந்த அமைதி-கிறிஸ்து, இரண்டு இனத்தவரையும் (யூதர், யூதரல்லார்) பிரித்து நின்ற பகைமை என்ற சுவரை, தன் உடலில் ஏற்ற துன்பத்தின் வாயிலாக தகர்த்து, அவர்களை ஒன்றாக்கி விட்டார் என்கிறார் (μεσότοιχον τοῦ φραγμοῦ மெசொடொய்கொன் டூ பிராக்மூ- பிரிவினைச் சுவர்).
பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார்.
15 τὴν ἔχθραν ἐν τῇ σαρκὶ αὐτοῦ, τὸν νόμον τῶν ἐντολῶν ἐν δόγμασι, καταργήσας· ἵνα τοὺς δύο κτίσῃ ἐν ἑαυτῷ εἰς ἕνα καινὸν ἄνθρωπον, ποιῶν εἰρήνην,
வ.15: யூத சட்டத்தை பவுல் சாடுவது போல தோன்றினாலும், சூழலியலில் அவ்வாறு இல்லை. அவர் பல கட்டளைகளைக் கொண்ட யூத சட்டத்தை ஒரு தேவைக்காக அழித்திருக்கிறார். அந்த தேவைதான் இந்த வரியின் எழுவாய்ப் பொருளாக இருக்கிறது, யூத சட்டத்தை அழிப்பது இந்த வரியின் எழுவாய்ப் பொருளாக தெரியவில்லை.
அந்த நோக்கத்தை விளங்கப்படுத்துகிறார். அதாவது இரண்டு இனங்களையும் ஒரே இனமாக இணைத்து, அதனை தன்னோடு இணைந்திருக்கும் புதிய இனமாக படைத்து, அதனால் அமைதி ஏற்படுத்துவதே அந்த நோக்கம். ἵνα τοὺς δύο κτίσῃ ἐν αὐτῷ εἰς ἕνα καινὸν ἄνθρωπον ποιῶν εἰρήνην ஹினா டூஸ் துவு கிடிசே என் அவ்டோ எய்ஸ் ஹெனா காய்னொன் அந்த்ரோபொன் பொய்யோன் எய்ரேனேன்- இரண்டு படைப்புக்களும் அவரில் ஒன்றாகி புதிய மனித இனமாக மாறி அமைதி செய்ய.
தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.
16 καὶ ἀποκαταλλάξῃ τοὺς ἀμφοτέρους ἐν ἑνὶ σώματι τῷ Θεῷ διὰ τοῦ σταυροῦ, ἀποκτείνας τὴν ἔχθραν ἐν αὐτῷ·
வ.16: இயேசு பகைமையை அழித்தவர், இதனை அவர் துன்புற்று சிலுவை வழியாக இரு
இனத்தவரையும் ஓருடலாக கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்திருக்கிறார்.
இயேசு பகைமையை அழித்தார் என்பதை இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அதனை அவர் எப்படிச் செய்தார் என்பதை அவர்கள் நினைவில் கொண்டிராமல் இருந்திருக்கலாம் (ἐν ἑνὶ σώματι τῷ θεῷ διὰ τοῦ σταυροῦ, என் ஹெனி சோமாடி டோ தியுஓ தியா டூ ஸ்டாவ்ரூ- ஒரே உடலில், கடவுளுக்கு, சிலுவை ஊடாக).
17 καὶ ἐλθὼν εὐηγγελίσατο εἰρήνην ὑμῖν τοῖς μακρὰν καὶ τοῖς ἐγγύς· 18 ὅτι δι’ αὐτοῦ ἔχομεν τὴν προσαγωγὴν οἱ ἀμφότεροι ἐν ἑνὶ Πνεύματι πρὸς τὸν πατέρα.
அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். 18அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
வ.17: இயேசுவிற்கு முன்னால் இரண்டு இனங்களும் ஒன்றுதான், அவர்களுடைய தேவையும் ஒன்றுதான் ஆகவேதான் கிறிஸ்து வரவேண்டியிருந்தது. அவர் வந்து தொலைவில் இருந்த புறவினத்தவர்க்கும், அருகில் இருந்த யூதருக்கும் அமைதியைக் கொடுத்;தார் என்கிறார்.
இந்த வரியில் பவுல் தன்னை வித்தியாசமாக இரண்டு இனங்களுடனும் இனங்காட்டவில்லை.
(ὑμῖν τοῖς μακρὰν ஹுமின் டொய்ஸ் மாக்ரான்- தொலையில் இருந்த நீங்கள், τοῖς ἐγγύς· டொய்ஸ் எக்குஸ்- அருகில் உள்ளவர்கள்).
வ.18: தூய ஆவியாரையும் தன்னுடைய வாதத்திற்கு இந்த வரியில் பவுல் எடுக்கிறார். கிறிஸ்து தூய ஆவியாரின் மூலம், இரண்டு இனத்தவருக்கும் தந்தையை அணுகும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் என்றும் வாதிடுகிறார். இதனை பவுல் ஒரு பேராக கருதுகிறார். προσαγωγή புரொசாகோகே-வாய்ப்பு.
கடவுளை தந்தை என விழிப்பது பவுலுடைய சிறப்பம்சம், அதற்கான உதராணத்தை இந்த வரியிலும் காணலாம் (ἐν ἑνὶ πνεύματι πρὸς τὸν πατέρα. என் ஹெனி புனுமாடி புரொஸ் டொன் பாடெரா- ஒரே ஆவியாரில் தந்iதையை நோக்கி).
வவ.19-20: இந்த வரிகளில் பவுல் எபேசிய மற்றும் அனைத்து புறவின கிறிஸ்தவர்களுக்கும் அவர்களின் புதிய அடையாளங்களை அழகான வார்த்தைகளில் காட்டுகிறார்.
அ. இனி அன்னியர் அல்ல- ξένοι ட்செனொய்- அன்னியர்
ஆ. வேற்று நாட்டினர் அல்ல- πάροικοι பாரொய்கொய்- புறவினத்தவர்.
இ. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்- συμπολῖται τῶν ἁγίων சும்பொலிடாய் டோன் ஹகியோன்- புனிதர்கள் கூட்டத்து குடிமக்கள்.
ஈ. கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்- οἰκεῖοι τοῦ θεοῦ ஒய்கெய்யொய் டூ தியூ கடவுளின் வீட்டு மக்கள்.
உ. திருத்தூதர்களையும் இறைவாக்கினர்களையும் அடித்தளமாகக் கொண்டு கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்ட கட்டடம்.
இந்த வார்த்தைகள் ஆரம்ப கால திருச்சபையின் இறையியல் வளர்ச்சியை காட்டுகின்றன. பவுலும் முதலாம் நூற்றாண்டு திருச்சபை தந்தையர்களும் இறையியலில் ஆழமாக இருந்ததை
இவை காட்டுகின்றன.
வவ.21-22: திருச்சபையை ஒரு கட்டிடமாக காண்கின்ற பவுல், அது கிறிஸ்துவில் நேர்த்தியாக பொருந்தியிருக்கிறது என்பதைக் சொல்கிறார். அத்தோடு இந்த நேர்த்தியான கட்டிடம், தன்னுடைய இன்னொரு அடையாளமான தூய கோவிலாக மாறியிருக்கிறது என்றும் சொல்கிறார். திருச்சபையை கடவுளின் தூய கோவில் என்று சொல்வதை பவுல் வழக்கமாக சில திருமுகங்களில் கொண்டிருக்கிறார் (συναρμολογουμένη αὔξει εἰς ναὸν ἅγιον ἐν κυρίῳ, சுனார்மொலொகூமெனே அவுட்செய் எய்ஸ் நாவோன் ஹகியோன் என் கூரியூ).
திருச்சபையை தூய ஆவியாரின் வழியாக கடவுளின் உறைவிடமாக கட்டுபவர் இயேசு என்பதே இந்த வரிகளின் மையமான செய்தியாக இருக்கிறது.
மாற்கு 6:30-34
30திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். 31அவர் அவர்களிடம், 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. 32அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். 33அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். 34அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
பன்னிரு திருத்தூதர்களை பெயர் சொல்லி அழைத்த இயேசு அவர்களை இருவர் இருவராக தாம் செல்லவிருந்த ஊர்களுக்கு அனுப்பினார். இந்த காலப்பகுதியில் திருமுழுக்கு யோவானும் கொலை செய்யப்பட்டார். இது இயேசுவுடைய பணியின் வேகத்தை இன்னும் கூட்டியிருக்கலாம். இயேசு தன்னுடைய மரணத்தையும் எதிர்நோக்கியிருந்திருப்பார். இயேசுவால் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள் திரும்பி வருகிறார்கள், வந்து இயேசுவை சந்திக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் இயேசு மக்களின் தேவையை உணர்ந்தவராக அப்பங்களை பெருக்கி அவர்களுக்கு கொடுத்தார்.
34 καὶ ἐξελθὼν εἶδεν ὁ Ἰησοῦς πολὺν ὄχλον, καὶ ἐσπλαγχνίσθη ἐπ’ αὐτοῖς, ὅτι ἦσαν ὡς πρόβατα μὴ ἔχοντα ποιμένα· καὶ ἤρξατο διδάσκειν αὐτοὺς πολλά.
Mark 6:30 Καὶ συνάγονται οἱ ἀπόστολοι πρὸς τὸν Ἰησοῦν, καὶ ἀπήγγειλαν αὐτῷ πάντα, καὶ ὅσα ἐποίησαν καὶ ὅσα ἐδίδαξαν. திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
வ.30: திருத்தூதர்கள் இயேசுவிடம் கூடிவருகிறார்கள், வந்து தாங்கள் செய்தவை (ἐποίησαν எபொய்ஏசான்- செய்தவை), கற்பித்தவை எல்லாம் (ἐδίδαξαν எதிதாட்சான்-கற்பித்தவை) அவருக்கு சொல்லிக் காட்டுகிறார்கள்.
இதற்கு முன் இவர்கள் 'பன்னிருவர்' என அழைத்தவர். இந்த இடத்தில் திருத்தூதர்கள் என அழைக்கிறார் (οἱ ἀπόστολοι ஹொய் அபொஸ்டொலொய்- திருத்தூதர்கள்). திருத்தூதர்களில் பலர், இயேசுவைவிட வயதில் முதிர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும், இருந்தும், தங்கள் பெற்றோரிடம் முதல் அனுபவத்தை சொல்லும் பிள்ளைகளைப் போல இவர்கள் இயேசுவிடம் நடந்ததைச் சொல்கிறார்கள்.
31 καὶ εἶπεν αὐτοῖς, Δεῦτε ὑμεῖς αὐτοὶ κατ’ ἰδίαν εἰς ἔρημον τόπον, καὶ ἀναπαύεσθε ὀλίγον. ἦσαν γὰρ οἱ ἐρχόμενοι καὶ οἱ ὑπάγοντες πολλοί, καὶ οὐδὲ φαγεῖν ηὐκαίρουν. அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
வ.31: இயேசு இவர்களின் அனுபவத்திற்கு செவி கொடுத்தது போல தெரியவில்லை, மாறாக அதனைவிட அவர்களின் உடல் தேவையை அவர் கருத்தில் கொண்டு அவர்களை ஓய்வெடுக்கச் சொல்கிறார். அதனையும் அவர் தனிமையான இடத்திற்கு சென்று ஓய்வெடுக்கச் சொல்கிறார்.
ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால் அவர்களுக்கு உண்ணக்கூட நேரம் இல்லை என்று மாற்கு காட்டுகிறார். ἀναπαύσασθε ὀλίγον அனாபௌசாஸ்தே ஒலிகொன்- சற்று ஓய்வெடுங்கள்.
பணியாளர்களுக்கு ஓய்வெதற்கு என்று எண்ணும் பணியாளர்களும், பயன்பெறுபவர்களும் (மக்கள்) சற்று சிந்திக்க வேண்டும். இது ஆண்டவரின் கட்டளை.
32 καὶ ἀπῆλθον εἰς ἔρημον τόπον τῷ πλοίῳ κατ’ ἰδίαν. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
வ.32: இயேசுவின் சொல்லைக் கேட்டு திருத்தூதர்கள் பாலைவனத்தை நோக்கி தனிமையான இடம் தேடி படகேறுகிறார்கள். (εἰς ἔρημον τόπον எய்ஸ் எரேமொன் டொபொன்- பாலைவன இடத்திற்கு).
இந்த நிகழ்வு கலிலேயா கடற்கரையை அண்டி கிழக்கு பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
இயேசுவும் அவர் சீடர்களுக்கும் இந்த பகுதி தெரிந்த இடமாகவும் இருந்திருக்கலாம். பாலைவனத்திற்கு சென்று செபிப்பதும், ஓய்வெடுப்பதும் இந்தப் பகுதியில் சாதாரணமாக
இருந்திருக்கலாம், மத்திய தரை நாடுகளில் பாலைவனமே அதிகமான பிரதேசமாக இருக்கிறது. (நாம் காட்டிற்கு செல்வது போல).
33 καὶ εἶδον αὐτοὺς ὑπάγοντας οἱ ὄχλοι, καὶ ἐπέγνωσαν αὐτὸν πολλοί, καὶ πεζῇ ἀπὸ πασῶν τῶν πόλεων συνέδραμον ἐκεῖ, καὶ προῆλθον αὐτούς, καὶ συνῆλθον πρὸς αὐτόν. அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
வ.33: இயேசுவின் சீடர்கள் செல்வதை மக்கள் காண்கின்றனர். இவர்கள் சீடர்கள் வருவதற்கு முன் இயேசுவோடு இருந்திருக்க வேண்டும் அல்லது இயேசுவை நோக்கி வந்தகொண்டிருக்க வேண்டும். இதனைக் கண்டுதான் இயேசுவும் தன் சீடர்களை தனிமையான இடத்திற்கு அனுப்ப முடிவும் எடுக்கிறார் எனலாம்.
இவர்கள் சீடர்களின் படகேறலை அவதானிக்கிறார்கள், அவர்களை சீடர்கள் எனவும் அடையாளம் கண்டு விடுகிறார்கள். அத்தோடு கலிலேய கடற்கரையின் அக்கரை வழியாக கால் நடையாகவே, சீடாகளின் படகு வந்த சேரும் இடத்தை அடைந்து விடுகிறார்கள். இயேசுவும் சீடர்களுடன் படகில் சென்றிருக்க வேண்டும்.
சீடர்களையும், படகையும் விட வேகமாக இந்த மக்கள் அக்கரையை அடைவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மக்கள் பல இடங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் மாற்கு காட்டுகிறார் (ἀπὸ πασῶν τῶν πόλεων συνέδραμον ἐκεῖ அபொ பாசோன் டோன் பொலெயோன் சுனெத்ரொமொன்- பல நகரிலிருந்து அங்கே விரைந்தார்கள்).
வ.34: இயேசு தன் சீடர்களோடு கரையில் இறங்கியபோது, பெருந்திரளாக மக்களைக் காண்கிறார். அவர்களை அவர் ஆயரில்லா ஆடுகளாக காண்கிறார், இதனால் அவர்கள் மீது பரிவு கொள்கிறார். அவர்கள் மீது பரிவு கொண்டார் என்பதைக் குறிக்க 'καὶ ἐσπλαγχνίσθη ἐπ᾿ αὐτούς காய் எஸ்பிலாக்கினிஸ்தே எப் அவ்டோஸ்' என்ற கிரேக்க வரி பாவிக்கப்பட்டுள்ளது. இங்கே பயன்படுத்தும் சொல் (σπλαγχνίζομαι ஸ்பிலாக்கினிட்ஸ்சோமாய்- பரிவு கொள்), இதயத்தில் ஏற்படும் ஒரு வகையான இரக்க குணத்தைக் காட்டுகிறது. இந்த குணத்தை முதல் ஏற்பாட்டில்
இறைவாக்கினர்கள் கடவுளுக்கு பல இடங்களில் ஒப்பிட்டு காட்டுகின்றனர்.
பரிவிற்கும் இரக்கத்திற்கும் தமிழில் வித்தியாசம் இருப்பதைப் போல கிரேக்கச் சொற்களிலும் வித்தியாசம் இருக்கிறது. இங்கே இதனை தெய்வீக குணமாக கருதலாம் (ἐλεέω எலெயெஓ- இரங்கு). சீடர்களை ஓய்வெடுக்கச் சொன்னவர், மக்களைக் கண்டவுடனும், சூழலுக்கு ஏற்பவும் தன் திட்டத்தை மாற்றுகிறார், அல்லது அவர் தான் ஓய்வெடுக்க நினைத்திருக்கவில்லை எனவும் எடுக்கலாம். அவர்களுக்கு பலவற்றை கற்பிக்கத் தொடங்குகின்றார்.
சுயநலமான ஆயர்களும், சுயஅறிவில்லா ஆடுகளும் மிகவும் ஆபத்தானவை,
தமக்கும் தம்மை சார்ந்தவர்களுக்கும்.
சுயநலமான ஆயர்கள், இந்த உலகின் அனைத்து அழிவிற்கும் சொந்தக்காரர்கள்,
சுயஅறிவில்லா ஆடுகள், அந்த அழிவின் பங்காளிகள்.
ஆயத்துவம் மிக புனிதமானது,
அதனை தங்களது பலவீனத்தால் பலவீனப்படுத்துகிறவர்கள்,
நிச்சயமாக விரட்டப்படவேண்டியவர்கள்.
ஏனெனில் ஆயத்துவம் ஆண்டவருடையது.
ஆயத்துவத்தில், சொந்த பலவீனங்களை சார்பாக பயன்படுத்தக் கூடாது.
வேலி பயிரை மேய்ந்தால், அந்த வேலி தேவையில்லை.
அன்பு ஆண்டவரே நான் ஆயனும், மந்தையும் என்பதை கற்றுத்தாரும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக