வியாழன், 11 ஜூலை, 2024

ஆண்டின் பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு (ஆ) 14.07.2024 - 15th Sunday in OT, B, 2024






 ஆண்டின் பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு ()

14.07.2024


M. Jegankumar Coonghe OMI,

Sinthathirai Matha Shrine,

Chaddy, Velanai,

Jaffna. 

Wednesday, 10 July 2024 

முதல் வாசகம்: ஆமோஸ் 7,12-15

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 85

இண்டாம் வாசகம்: எபேசியர் 1,3-14

நற்செய்தி: மாற்கு 6,7-13


ஆமோஸ் 7,12-15

ஆமோசும் அமட்சியாவும்

10பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு 

இவ்வாறு சொல்லியனுப்பினான்: 'இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். 11அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், 'எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்' என்று ஆமோஸ் சொல்லுகிறான்.'

12பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, 'காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். 13பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்' என்று சொன்னான்.

14ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: 'நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். 15ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, 'என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்.


தென் அரசில் பிறந்தவராயினும் வடஅரசில் மிக முக்கியமான இறைவாக்கு பணியை ஆற்றியவர் இறைவாக்கினர் ஆமோஸ். இவர் சிறிய இறைவாக்கினருள் ஒருவராக கருதப்பட்டாலும், இவருடைய இறைவாக்கு சிறிய இறைவாக்காக கருதப்படாது. நீதியின் இறைவாக்கினராக கருதப்படும் அளவிற்கு இவருடைய இறைவாக்கு காலத்தை கடந்து, அநீதிக்கு எதிராக எக்காலத்திலும் இடித்துரைக்கும். ஆமோஸ் இரண்டாம் எரோபோவாம் என்ற வட நாட்டு அரசரின் காலத்தில் சமாரியாவில் இறைவாக்குரைத்தார். இந்த அரசருடைய காலத்தில் வடநாட்டில் செல்வமும் கொழித்திருக்க வேண்டும். இருந்தாலும் இந்த செல்வத்தை செல்வர்கள் மட்டுமே அனுபவித்தார்கள், ஏழைகள் இன்னும் ஏழைகளானார்கள். இதனைத்தான், ஆமோஸ் கடுமையாக எதிர்த்தார்.

கி.மு 8ம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த இறைவாக்குதான் முதன் முதலில் எழுத்துவடிவம் பெற்ற இறைவாக்காக கருதப்படுகிறது. ஆமோசைப் பற்றிய வேறுதரவுகள் விவிலியத்திற்கு வெளியில் கிடைக்கப்படவில்லை. ஆமோஸ் எருசலேமிற்கு 8 கிமீ தெற்கிலிருந்த தெக்கோவா என்ற இடத்தை சார்ந்தவர் என அறிய முடிகிறது. இவருடைய ஊரார் மந்தை வளர்ப்பவர்கள் என அறியப்பட்டாலும், இவர் தன்னை காட்டு அத்திமர (சிக்காமோர் אָנֹכִי וּבוֹלֵס שִׁקְמִים׃ 'ஆனோகி வுபோலெம் ஷிக்மிம்- நான் சிக்கோமோர் பதினிடுபவர்) பதனிடுபவர் என்கிறார். ஆமோஸ் பல வேலைகளை செய்யும் சுயதொழிலாளியாகவே இருந்திருந்த வேண்டும்இருப்பினும் அவர் தன்னை இறைவாக்கினர் இல்லை என்று மறுக்கிறார். தொழில் ரீதியான இறைவாக்கினர்கள் அரசரையும், திருத்தலங்களையும் ஆதரிக்க வேண்டும் என அவர் நினைத்திருக்கலாம். ஆமோஸ் தன்னுடைய காலத்தில் அரச நிறுவனங்களையும், சமய நிறுவனங்களையும் பிழையானவை எனக் கண்டார்

ஆமோசுடைய காலத்தில் இரண்டாம் எரோபேவாம் (கி.மு 786-746) சமாரியாவிலும், உசியா (கி.மு 783-742) எருசலேமிலும் ஆண்டார்கள். இவர்களுடைய காலத்தில் எகிப்தும், அசிரியாவும் உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்ததால், இவர்களால் அமைதியாக இருக்க முடிந்தது. அத்தோடு தங்கள் நாட்டை வளப்படுத்தவும் முடிந்தது. இஸ்ராயேல் ஊடாக சென்ற சர்வதேச வணிக போக்குவரத்தின் ஊடாகவும் வடநாடு பொருளாதாரத்தில் வளர்ந்தது. எரோபோவாம் காலத்தில் சமாரியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும், அவர்கள் சொத்துக்களும் பெருகியிருந்ததை அகழ்வாராச்சிகள் காட்டுகின்றன. பணக்காரர்களின் பெருக்கம் ஏழைகள் தமது சொத்துகளை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. அதனை ஆமோசின் இறைவாக்கிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஏழைகளுக்காக குரல் கொடுத்து, கடவுளின் குரலாகவே ஆமோஸ் மாறினார்

ஆமோசுடைய காலத்திற்கு சற்று முன் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும். இதனை அவர் உதாரணமாக பாவித்து, கடவுளின் தண்டனை வருகிறது என்று எச்சரித்தார். இந்த நில நடுக்கம் சற்று வலிமையானதாகவே இருந்திருக்க வேண்டும், இந்த நிலநடுக்கமும் அழிவும் ஆமோசின் காலத்திற்கு பின்னர் மூன்று தலைமுறைக்கு நினைவுகூறப்பட்டது. இதன் வடுக்களை 

இன்றைய அகழ்வாராட்சிகளும் காட்டுகின்றன. இதனை விட சூரிய கிரகணத்தையும் பாவித்து ஆமோஸ் இறைவாக்குரைத்திருக்கிறார் (காண்க 8,9). மண்ணுலகில் ஏழைகளுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள், விண்ணுலகிலும் பல அடையாளங்களைக் காட்டும் என்பதை ஆமோஸ் 

இறைவாக்கினர் நம்பியிருக்கலாம்

  எரோபோவாமின் அரசவையில் அமட்சியா என்ற குரு ஒருவர் இருந்தார், அவர் அரசரை தவறாக வழியில் வழிநடத்தினார். இவரையும் ஆமோஸ் கடுமையாக எதிர்த்தார். இந்த அமட்சியா ஆமோஸ் இறைவாக்கினரை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டினார்


 10 וַיִּשְׁלַ֗ח אֲמַצְיָה֙ כֹּהֵ֣ן בֵּֽית־אֵ֔ל אֶל־יָרָבְעָ֥ם מֶֽלֶךְ־יִשְׂרָאֵ֖ל לֵאמֹ֑ר קָשַׁ֨ר עָלֶ֜יךָ עָמ֗וֹס בְּקֶ֙רֶב֙ בֵּ֣ית יִשְׂרָאֵ֔ל לֹא־תוּכַ֣ל הָאָ֔רֶץ לְהָכִ֖יל אֶת־כָּל־דְּבָרָֽיו׃


10பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்

              

.10: வடஅரசின் திருத்தலங்களில் பெத்தல் மிக முக்கியமான இடமாக இருந்தது. எருசலேமிற்கு எதிராக இந்த திருத்தலம் உருவாக்கப்பட்டது. அமட்சியா என்ற குரு இந்த இடத்தில்தான் பணியாற்றினார். இவர் ஆமோசுக்கு எதிராக செயல்பட்டவர். ஆமோசின் இறைவாக்குகள் இவரை நேரடியாக தாக்கியதால், இவர் அரசர் எரோபோவாமிற்கு செய்தி அனுப்புகிறார். ஆமட்சியா அரசரை திருப்பதிப்படுத்தியதால், அரசர் அவர் சொல்லை கேட்பார் என நம்பியிருந்திருக்கலாம்

(אֲמַצְיָה כֹּהֵן בֵּית־אֵ֔ל 'அமட்சியாஹ் கோஹென் பெத்-ஏல்: அமட்சியா பெத்தேலின் குரு). 

அமட்சியாவின் செய்தி இப்படி காட்டப்படுகிறது: קָשַׁר עָלֶיךָ עָמ֗וֹס காஷர் 'அலெகா 'ஆமோஸ்- ஆமோஸ் உமக்கெதிராக கிளர்ச்சி செய்கிறான். என்ன விதமான கிளர்ச்சி என்பதை அமட்சியா தெளிவுபடுத்தவில்லை. ஆமோசின் வார்த்தைகளை இந்த நாட்டால் தாங்கவே முடியவில்லை என்றும் சாடுகிறார். ஆக ஆமோசின் இறைவாக்கு மிகவும் கடுமையாகவே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது (לֹא־תוּכַל הָאָרֶץ לְהָכִיל லோ'-தூகல் ஹா'ஆரெட்ஸ் லெஹாகில்- நாட்டால் தாங்க முடியவில்லை). 


.11: ஆமோசின் குற்றச்சாட்டை இப்படிச்சொல்கிறார் அமட்சியா: அதாவது எரோபோவாம் வாளால் மடிவதாகவும் (בַּחֶרֶב יָמ֣וּת יָרָבְעָם பாஹெரெவ் யாமூத் யாராவ்'ஆம்), அவர் நாட்டைவிட்டு இஸ்ராயேல் அடிமையாக கொண்டு செல்லப்படும் (וְיִשְׂרָאֵ֔ל גָּלֹ֥ה יִגְלֶה யிஸ்ரா'ஏல் காலோஹ் யிக்லெஹ்- இஸ்ராயேல் நாடுகடத்தப்படும்) என்பதாகவும் சொன்னதாக குற்றம் சாட்டுகிறார்

அரசியல் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பின்புலத்தை அகற்றி வெறும் வார்த்தைகளாக சொன்னால், அரசியல் தலைவர்கள் உடனடியாக செயல்படுவார்கள் என்பதை அமட்சியா நன்கு அறிந்திருக்கிறார். அதனால்தான் அவர் இறைவாக்கினரின் குற்றச்சாட்டை வெறுமையாக போட்டுக்கொடுக்கிறார். அமட்சியாவிற்கும் எதிராக ஆமோஸ் இறைவாக்குரைத்தார், அது சொல்லப்படவில்லை


12 וַיֹּ֤אמֶר אֲמַצְיָה֙ אֶל־עָמ֔וֹס חֹזֶ֕ה לֵ֥ךְ בְּרַח־לְךָ֖ אֶל־אֶ֣רֶץ יְהוּדָ֑ה וֶאֱכָל־שָׁ֣ם לֶ֔חֶם וְשָׁ֖ם תִּנָּבֵֽא׃


12 பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.


.12: அரசரின் ஆணை வருவதற்கு முன்பே பெத்தேலின் குரு ஆமோஸ் இறைவாக்கினரை துரத்த ஆயத்தமாகிறார். ஆக அந்த குரு இதனைத்தான் விரும்பினார் என்பது தெரிகிறது

அமட்சியா ஆமோசை 'காட்சி காண்பவர்' என்கிறார். இறைவாக்கினர்களுக்கு இப்படியான பொருளும் அக்காலத்தில் வழக்கிலிருந்தது. இவர்கள் காட்சி கண்டு அதனை மக்களுக்கு தெளிவும் படுத்தியிருக்கிறார்கள் (חֹזֶה לֵךְ ஹோட்செஹ் லெகா- காட்சி காண்பவனே வெளியேறு)

அத்தோடு ஆமோஸ் யூதாவை சார்ந்வர் என்பதை அவர் அறிந்திருந்து, அவரை யூதாவிற்கு சென்று, அங்கு பிழைத்து, இறைவாக்குரைக்கச் சொல்கிறார் (וֶאֱכָל־שָׁם לֶחֶם וְשָׁם תִּנָּבֵא׃ வெ'ஏகால் லாஹெம் வெஷாம் தின்னாவெ'- அங்கே சாப்பிடு, அங்கேயே இறைவாக்குரை). பிரதேசவாதம் அக்காலத்திலேயே செயற்பட்டிருக்கிறது என்பதற்கு இது நல்ல உதராணம்


 וּבֵֽית־אֵ֔ל לֹֽא־תוֹסִ֥יף ע֖וֹד לְהִנָּבֵ֑א כִּ֤י מִקְדַּשׁ־מֶ֙לֶךְ֙ ה֔וּא וּבֵ֥ית מַמְלָכָ֖ה הֽוּא׃ ס


13பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்என்று சொன்னான்.


.13: அமட்சியா ஆமோசுக்கு கட்டளை கொடுக்கிறார். பெத்தேலில் இறைவாக்குரைக்க வேண்டாம் எனச் சொல்கிறார். அதற்கான காரணமாக அதனை அரசின் புனித இடம் (מִקְדַּשׁ־מֶלֶךְ ה֔וּא மிக்தாஷ் மெலெக் ஹு- அது அரசின் திருத்தலம்) என்கிறார்

அரசரின் புனித இடத்தில் ஆண்டவரின் இறைவாக்குக்கு இடமில்லை என்பது புலப்படுகிறது. ஆக அரசன் மற்றும் கடவுள் என்று வருகின்றபோது, யாரை திருத்திப்படுத்துகிறார்களோ அவர்கள் முக்கியம் பெறுகிறார்கள். ஆமோஸ் கடவுளை திருப்திப்படுத்தினார், அமட்சியா அரசனை திருப்திப்படுத்தினார்


14 וַיַּ֤עַן עָמוֹס֙ וַיֹּ֣אמֶר אֶל־אֲמַצְיָ֔ה לֹא־נָבִ֣יא אָנֹ֔כִי וְלֹ֥א בֶן־נָבִ֖יא אָנֹ֑כִי כִּֽי־בוֹקֵ֥ר אָנֹ֖כִי וּבוֹלֵ֥ס שִׁקְמִֽים׃


14ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்


.14: ஆமோசும் விட்டபாடில்லை. ஆமோஸ் அமட்சியாவிற்கு பதிலுரைக்கிறார். தான் 

இறைவாக்கினன் இல்லை என்கிறார் (לֹא־נָבִ֣יא אָנֹ֔כִי லோ'-நாவி' 'ஆனோகி- நான் இறைவாக்கினன் இல்லை). அத்தோடு இறைவாக்கினரோடு தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சொல்கிறார் (וְלֹא בֶן־נָבִיא אָנֹ֑כִי வெலோ' வென்-நாவி' 'ஆனோகி- இறைவாக்கினர் மகனும் இல்லை நான்).

இதற்கு மாறாக தன்னை மாடு மேய்ப்பவராகவும், காட்டு அத்திமரக் தோட்டக்காரராகவும் அடையாளம் சொல்கிறார். בוֹקֵר אָנֹכִי וּבוֹלֵס שִׁקְמִים வோகெர் 'ஆனோகி வுவோலெம் ஷிக்மிம்- நான் ஒரு கால்நடை வளர்ப்பவன், சிக்கோமோர் மர பதனிடுபவன். 

இந்த வரிகளை ஆமோஸ் சொல்வதற்கான நேரடியான காரணம் தெரியவில்லை

இறைவாக்கினர்கள் அடையாள மொழிவாயிலாக பேசுகிறவர்கள். ஆமோசும் இந்த வார்த்தைகளை அடையாளம் வாயிலாக பேசுகிறாரா என்று தெரியவில்லை. இருந்தாலும், அமட்சியாவின் எண்ணத்திலுள்ள இறைவாக்கினர் தான் இல்லை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்


15 וַיִּקָּחֵ֣נִי יְהוָ֔ה מֵאַחֲרֵ֖י הַצֹּ֑אן וַיֹּ֤אמֶר אֵלַי֙ יְהוָ֔ה לֵ֥ךְ הִנָּבֵ֖א אֶל־עַמִּ֥י יִשְׂרָאֵֽל׃


15ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடுஎன்று அனுப்பினார்.

.15: தன்னுடைய அழைப்பின் வரலாற்றை விளக்குகிறார். ஆயனாக இருந்த அவரை கடவுள்தான் அழைத்தார் எனவும், தன் மக்களிடம் சென்று இறைவாக்குரைக்க அனுப்பினார் என்றும் சொல்கிறார். ஆக இறைவாக்கு பணி இவருக்கு பிறப்பின் மூலமாக வரவில்லை மாறாக, கடவுளுடைய அழைப்பின் மூலமாக வந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறார். இந்த வார்த்தைகள் மூலமாக ஆமோஸ், அமட்சியாவை மறைமுகமாக சாடுகிறார் என எடுக்கலாம். அமட்சியா குருவாக பிறப்பினால் வந்திருக்கலாம், ஆனால் கடவுள் அவரை அழைக்கவில்லை என்பதை ஆமோஸ் சொல்வது போல இருக்கிறது இந்த வரி

இஸ்ராயேல் மக்கள்மேல் எரோபோவாம் உரிமை கொண்டாடினாலும், அவர்கள் உண்மையில் கடவுளின் மக்கள் என்பதும் இங்கே காட்டப்படுகிறது (עַמִּי יִשְׂרָאֵל׃ 'அம்மி யிஸ்ராஎல்- என்மக்கள் இஸ்ராயேல்). 




16 וְעַתָּ֖ה שְׁמַ֣ע דְּבַר־יְהוָ֑ה אַתָּ֣ה אֹמֵ֗ר לֹ֤א תִנָּבֵא֙ עַל־יִשְׂרָאֵ֔ל וְלֹ֥א תַטִּ֖יף עַל־בֵּ֥ית יִשְׂחָֽק׃

16. எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: ‘இஸ்ரயேலுக்கு எதிராகஇறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதேஎன்று நீ சொல்கிறாய்!

.16: ஆமோசின் வார்த்தை இந்த வரியில் அமட்சியாவிற்கு எதிராக திரும்புகிறது. அமட்சியா சொன்னதை, ஆமோஸ் இன்னொருமுறை நினைவுபடுத்திக் காட்டுகிறார். அதாவது அமட்சியா ஆமோசை, இஸ்ராயேலுக்கு எதிராக இறைவாக்குரைக்காதே (לֹא תִנָּבֵא֙ லோ' தின்னாவெ'- 

iறாக்குரையாதே) என்றும், ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராக பேசாதே (לֹא תַטִּיף லோ' ததிப்- மறையுரையாற்றாதே) என்றும் சொல்லியிருந்தார்

இஸ்ராயேல் மக்களை 'ஈசாக்கின் வீட்டார்' என அழைப்பது மிகவும் தனித்துவமானது. முழு விவிலியத்திலும் இந்த பாவனை இந்த இடத்தில் மட்டும்தான் உள்ளது. (בֵּית יִשְׂחָק׃ பேத் யிஸ்ஹாக்- ஈசாக்கின் வீட்டார்).  

ஆமோசின் இந்த வரி சற்றுக் கடினமாகவே இருக்கிறது


17 לָכֵ֞ן כֹּה־אָמַ֣ר יְהוָ֗ה אִשְׁתְּךָ֞ בָּעִ֤יר תִּזְנֶה֙ וּבָנֶ֤יךָ וּבְנֹתֶ֙יךָ֙ בַּחֶ֣רֶב יִפֹּ֔לוּ וְאַדְמָתְךָ֖ בַּחֶ֣בֶל תְּחֻלָּ֑ק וְאַתָּ֗ה עַל־אֲדָמָ֤ה טְמֵאָה֙ תָּמ֔וּת וְיִ֨שְׂרָאֵ֔ל גָּלֹ֥ה יִגְלֶ֖ה מֵעַ֥ל אַדְמָתֽוֹ׃ ס

17. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்;

உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்; உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும்,நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே

அடிமையாகக் கொண்டு போகப்படும்.”

.17: ஏற்கனவே ஆமட்சியா, ஆமோஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டையும் விட சற்று கடினமான வார்த்தைகளை ஆமோஸ் இந்த வரியில் வெளிப்படுத்துகிறார். எதிர்காலத்தில் இஸ்ராயேல் நாட்டிற்கு என்ன நடக்கவிருக்கிறது என்பதை காட்டுகிறார்

ஒரு நாடு அன்நியரின் கைகளில் அகப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த வரி அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது. மனைவியர் விலைமகளாக ஆக்கப்படுவர் (אִשְׁתְּךָ֞ בָּעִ֤יר תִּזְנֶה֙ 'இஷ்தெகா பா'யிர் திட்ஸ்நெஹ்- உன் மவைவி நகரில் விலைமகளாக). புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர் (בָנֶיךָ וּבְנֹתֶיךָ בַּחֶרֶב יִפֹּלוּ வானெகா வுவெநோதெகா பஹெரெவ் யிப்லூ- உன் புதல்வர், புதல்வியர் வாளால் விழுத்தப்படுவர்). நிலம் பங்கு போடப்படும் (אַדְמָתְךָ בַּחֶבֶל תְּחֻלָּק 'அத்மாதெகா பஹெவெல் தெஹுhக்). 

அமட்சியாவிற்கு என்ன நடக்கும் என்பதும் சொல்லப்படுகிறது. அவர் புனிதமற்ற நாட்டில் மாண்டு போவார் எனவும், இஸ்ராயேல் அடிமையாக போகும் என்பதும் சொல்லப்படுகிறது.

இந்த இறைவாக்கைத்தான் அமட்சியா, இவ்வுரையாடலின் தொடக்கத்தில் குற்றச்சாட்டாக ஆமோசுக்கு எதிராக முன்வைத்தார்




திருப்பாடல் 85

நாட்டின் நலனுக்காக மன்றாடல்

(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)

1

1ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்



2உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா)  


3உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்


4எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.  


5என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?  


6உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ



7ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்



8ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது


9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்


10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்


11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்


12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்


13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.


வாழ்வின் துன்பங்கள், கடவுளுடைய மறைவை பற்றியல்ல, மாறாக நம்முடைய வாழ்வின் நிலையைப் பற்றித்தான் சிந்திக்க அழைப்புவிடுகின்றன. ஆண்டவருடைய நன்மைத்தனங்கள் வரலாற்றில் இருக்கிறது, ஆனால் நிகழ்காலத்தில் பல துன்பங்கள் வழக்கிலிருக்கின்றன. இப்படியான வேளையில் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இறைவாக்கினர் அபகூக்குவைப் போல இந்த திருப்பாடலின் ஆசிரியர், வாசகர்களை, ஒரு கணம் அமைதியாயிருந்து தம் வாழ்வை ஆராய்ந்து பார்க்கும் படியாக அழைப்பு விடுகிறார். ஆய்வாளர்கள் இந்த 85வது திருப்பாடலை ஒரு குழு புலம்பல் பாடல் என விவரிக்கின்றனர்

Psa. 85:1

 לַמְנַצֵּ֬חַ ׀ לִבְנֵי־קֹ֬רַח מִזְמֽוֹר׃ 

நாட்டின் நலனுக்காக மன்றாடல்

(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)

.0: இந்தப் பாடலின் முன்னுரை, இதனை கோராகியரின் புகழ்பாடல் என்று அடையாளப் படுத்துகிறது. கோரா (קֹרַח) என பெயர் பெற்றவர்களில் நான்கு வகையான குழுக்கள் விவிலியத்தில் காட்டப்படுகின்றனர். இவர்கள் எதோமியர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இவர்கள் எசாவின் வழிமரபில் வந்தவர்கள். இவர்கள் லேவிய குருக்களின் ஒரு வகையினர் என்றும் அவர்கள் ஆலயத்தின் வாயிற் காப்பாளர்களாகவும், பாடகர் குழாமாகவும் இருந்திருக்கிறார்கள். எண்ணிக்கை நூல் கோராகியரை கடவுளுக்கு மோசேக்கும் எதிராக புரட்சி செய்தவர்களாக காட்டுகிறது

רָצִ֣יתָ יְהוָ֣ה אַרְצֶ֑ךָ שַׁ֝֗בְתָּ שְׁבִ֣ות יַעֲקֹֽב׃

1ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்


.1: இஸ்ராயேலின் முக்கிய பழைய அனுபவம் ஒன்று நினைவுகூறப்படுகிறது. நாடு 'உமது நாடு' என்று நினைவுகூறப்பட்டு அது கடவுளுக்குரியதாகின்றது (אַרְצֶךָ 'அர்ட்செகா- உமது நிலம்). நாட்டின் மீது அருள் கூறுவதும் யாக்கோபை முன்னைய நிலைக்கு கொண்டு வருவதும் ஒத்த கருத்தாகப் பார்க்கப்படுகிறது. இது எகிப்திய விடுதலை அனுபவமாக இருக்கலாம்


3 נָ֭שָׂאתָ עֲוֹ֣ן עַמֶּ֑ךָ כִּסִּ֖יתָ כָל־חַטָּאתָ֣ם סֶֽלָה׃

2உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா)  

.2: இந்த நினைவுகூறுதலும், நன்னிலைக்கு கொணர்தலும் மேலுமாக விளங்கப்படுத்தப்படுகிறது. அதாவது இவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன, அத்தோடு பாவங்கள் மறைக்கப்படுகின்றன. பாவங்களை மன்னித்தல் 'அவர்கள் குற்றங்களை நீர்; தூக்கிவிட்டீர்' என எபிரேயத்தில் சொல்லப்படுகிறது (נָשָׂאתָ עֲוֹן நாசா'தா 'அயோன்). தூக்கிவிடுதல் என்பது இல்லாமல் செய்தலைக் குறிக்கிறது. இதற்கு ஒத்த கருத்து பதமாக 'அவர்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் மறைத்துவிட்டீர்' எனவும் திருப்பிக்கூறப்படுகிறது (כִּסִּיתָ כָל־חַטָּאתָם கிசிதா கோல்-ஹத்தா'தாம்).  


4 אָסַ֥פְתָּ כָל־עֶבְרָתֶ֑ךָ הֱ֝שִׁיב֗וֹתָ מֵחֲר֥וֹן אַפֶּֽךָ׃


3உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். 5

.3: ஆண்டவர் தன்னுடைய சினத்தை அடக்கிக் கொள்கிறவர், இலகுவில் கோபம் கொள்கிறவர் அல்ல என்பது இஸ்ராயேலருடைய நம்பிக்கைகளுள் முக்கியமானது. இதனைத்தான் இந்த வரி நினைவூட்டுகிறது. மக்கள் இன்னமும் ஆண்டவரின் நன்மைத்தனத்தில் இருப்பதற்க்கு காரணம் மக்களுடைய புனிதமான வாழ்வு என்பதைவிட, ஆண்டவருடைய மன்னிப்பும் அன்பும் என்பது ஓர் ஆழமான இறையியல் சிந்தனை


שׁוּ֭בֵנוּ אֱלֹהֵ֣י יִשְׁעֵ֑נוּ וְהָפֵ֖ר כַּֽעַסְךָ֣ עִמָּֽנוּ׃ 5

4எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.  


.4: முதல் மூன்று வரிகளில் இஸ்ராயேல் மூதாதையர்கள் தங்களுக்கு சொன்ன வரலாற்றை நினைவுகூர்ந்த ஆசிரியர், இப்போது அதனையே சமகால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஆண்டவர் கருணை காட்ட வேண்டும் என மன்றாடுகிறார். இந்த வரியிலிருந்து நோக்குகின்றபோது, நாடு அல்லது ஆசிரியருடைய தனிப்பட்ட வாழ்வு ஏதோ முக்கியமான ஆபத்தில் இருக்கிறது என்பது புலப்படுகிறது. ஆண்டவரை மீட்பராக வர்ணிப்பது முதல் ஏற்பாட்டின் முக்கியமான சொற்பிரயங்களில் ஒன்று (יִשְׁעֵנוּ யிஷ்'எனூ- எம் மீட்பர்)

6 הַלְעוֹלָ֥ם תֶּֽאֱנַף־בָּ֑נוּ תִּמְשֹׁ֥ךְ אַ֝פְּךָ֗ לְדֹ֣ר וָדֹֽר׃

5என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?  


.5: இந்த கேள்வி ஆசிரியருடைய துன்பத்தைக் படம்பிடிக்கிறது. இந்த வரியில், தான் அல்லது தன் மக்கள் சுத்தவாளிகள் என்று அவர் வாதாடாமல், ஆண்டவரின் தொடர் சினத்தில் நியாமில்லை என்பதுபோல காட்டப்படுகிறது. ஆண்டவருடைய சினமும் (אַף 'அப்) கோபமும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்படவேண்டும் என்பதை ஆண்டவருக்கு காட்ட விளைகிறார். இந்த வரிகளுக்கு பின்னால் மனிதர்கள் பலவீனமானவர்கள், அவர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள் இருந்தும் தலைமுறைதோறும் அவர்களை தண்டிப்பது கடவுளுக்கு உகந்தது அல்ல என்பது போல வாதாடப்படுகிறது.

7 הֲֽלֹא־אַ֭תָּה תָּשׁ֣וּב תְּחַיֵּ֑נוּ וְ֝עַמְּךָ֗ יִשְׂמְחוּ־בָֽךְ׃


6உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ

.6: கடவுளில் மகிழ்தல் என்பது, உச்ச கட்ட சந்தோசத்தை இஸ்ராயேல் மக்களுக்கு தருகிறது

இதனையே இவர் புத்துயிர் என்றும் சொல்கிறார். நேர்மையாளர்கள் கடவுளில் மகிழ்வார்கள் (יִשְׂמְחוּ־בָֽךְ யிஷ்மெஹு-பாக் - உம்மில் அவர்கள் மகிழ்வார்கள்) என்பது விவிலியத்தின் படிப்பினை. இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் பலவற்றில் மகிழ்கின்ற வேளை தன் மக்கள் கடவுளில் மகிழவேண்டும், அதுதான் அவர்களுக்கு புத்துயிர் அளிக்கும் என்கிறார்


8 הַרְאֵ֣נוּ יְהוָ֣ה חַסְדֶּ֑ךָ וְ֝יֶשְׁעֲךָ֗ תִּתֶּן־לָֽנוּ׃

7ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்

.7: ஆண்டவரினால் மகிழ்ந்து புத்துயிர் பெறவேண்டும் என்றால், ஆண்டவர் மக்களுக்கு தன்னுடைய பேரன்பையும் (חַסְדֶּךָ ஹஸ்தெகா- உம் பேரன்பு), மீட்பையும் (יֶשְׁעֲךָ֗ யெஷ்'எகா- உமது மீட்பு) தரவேண்டும் என்கிறார். புலம்பல் பாடல்களில் மன்றாட்டு முக்கியமான விடயமாக வருவதை இங்கே அவதானிக்கலாம்


9 אֶשְׁמְעָ֗ה מַה־יְדַבֵּר֮ הָאֵ֪ל ׀ יְה֫וָ֥ה כִּ֤י ׀ יְדַבֵּ֬ר שָׁל֗וֹם אֶל־עַמּ֥וֹ וְאֶל־חֲסִידָ֑יו וְֽאַל־יָשׁ֥וּבוּ לְכִסְלָֽה׃

8ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது


.8: புலம்பல் பாடல்களில் ஞான வாக்கியங்களும் அடங்கியிருக்கும். இந்த வரி, ஆண்டவர் உரைப்பதை அனைவரும் கேட்க வேண்டும் என்றும், அதாவது அவர் தம் மக்களாகிய அவர் அடியார்களுக்கு நிறைவாழ்வை அளிக்கிறார், இதனால் அவர்கள் மடமைக்கு திருப்பிச் செல்லலாகாது என்கிறார்

10 אַ֤ךְ ׀ קָר֣וֹב לִירֵאָ֣יו יִשְׁע֑וֹ לִשְׁכֹּ֖ן כָּב֣וֹד בְּאַרְצֵֽנוּ׃

9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்

.9:  ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் என்பவர் ஆண்டவரின் நியமங்களை கடைப்பிடிக்கும் விசுவாசிகளைக் குறிக்கிறது (לִירֵאָיו லிரெ'அவ்- அவருக்கு அஞ்சுவோர்). இவர்கள் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது பயத்தினால் அல்ல, மாறாக மரியாதை கலந்த விசுவாசத்தைக் வெளிக்காட்டுகிறது. இவர்கள் ஆண்டவரின் மீட்பிற்கு அருகில் இருக்கிறார்கள்ஆண்டவரின் மாட்சி (כָּבוֹד காவோத்) என்பது முதல் ஏற்பாட்டில் அதிகமாக கையாளப்படும் ஒரு சொல். இது ஆண்டவருடைய பாதுகாப்பு, பிரசன்னம், ஆசீர்வாதம் போன்றவற்றைக் குறிக்கும். ஆண்டவரின் மாட்சி இஸ்ராயேல் நாட்டில் குடிகொள்ளும் என்பது ஆண்டவர் இஸ்ராயேல் நாட்டில் குடிகொள்வதைக் குறிக்கும்

11 חֶֽסֶד־וֶאֱמֶ֥ת נִפְגָּ֑שׁוּ צֶ֖דֶק וְשָׁל֣וֹם נָשָֽׁקוּ׃

10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்

.10: இந்த திருப்பாடலிலே மிகவும் அழகான வரி இதுதான்

பேரன்பும் உண்மையும் ஒன்றை ஒன்று சந்திக்கிறது

(חֶֽסֶד־וֶאֱמֶ֥ת נִפְגָּשׁוּ ஹெசெத்-வெ'எமெத் நிப்காஷூ). 

நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடுகிறது 

(צֶדֶק וְשָׁלוֹם נָשָׁקוּ ட்செதெக் வெஷாலோம் நாஷாகூ). 

இந்த வரியின் எதுகை மோனை மற்றும் சொல்லாடல் போன்றவற்றிலிருந்து, விவிலிய எபிரேயம் எவ்வளவு செம்மையானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மொழியில் மட்டுமல்ல 

இறையியல் மற்றும் மனிதத்திலும் இந்த சொற்கள் மிகவும் வரவேற்கப்படவேண்டியவை. உண்மையில்லா பேரன்பும், நீதியில்லா அமைதியும், பிரயோசனம் அற்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த திருப்பாடல் ஆசிரியர் அழகாக அறிந்து, வாழ்ந்திருக்கிறார்


12 אֱ֭מֶת מֵאֶ֣רֶץ תִּצְמָ֑ח וְ֝צֶ֗דֶק מִשָּׁמַ֥יִם נִשְׁקָֽף׃

11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்

.11: மண்ணினின்று உண்மையும் (אֱמֶת מֵאֶ֣רֶץ 'எமெத் மெ'எரெட்ஸ்), விண்ணினின்று நீதியும் 

(צֶדֶק מִשָּׁמַיִם ட்செதெத் மிஷாமாயிம்) வெளிவருகின்றன என்கிறார். பூவுலகம் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும், அதேவேளை இந்த பூவுலகை ஆண்டவரின் மேலுகம் நீதி செலுத்த வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. பூவுலகும் மேலுலகும் ஒன்றையொன்ற சார்ந்து இருக்க வேண்டும் அல்லது தொடர்பு பட்டிருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அவாவாக இருக்கிறது


13 גַּם־יְ֭הוָה יִתֵּ֣ן הַטּ֑וֹב וְ֝אַרְצֵ֗נוּ תִּתֵּ֥ן יְבוּלָֽהּ׃ 

12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்

.12: ஆண்டவர் அருளுவது நல்லவையே, என்பதுதான் முழு விவிலியத்தின் செய்தியாகும். இதன் அடையாளம்தான், நிலம் அருளுகின்ற நல்விளைச்சல் என்பது இந்த ஆசிரியரின் ஞானம். நிலம் இயற்கையாக நல்லதை தரவல்லது, இந்த நல்விளைச்சலை ஆண்டவருடைய ஆசீர்வாதமாக பார்க்கிறார் ஆசிரியர். ஆண்டவர் நல்லது செய்கிறவர் என்பது இஸ்ராயேலின் தனித்துவமான நம்பிக்கை (גַּם־יְ֭הוָה יִתֵּ֣ן הַטּוֹב கம்-அதோனாய் யித்தென் ஹதோவ்).





14 צֶ֭דֶק לְפָנָ֣יו יְהַלֵּ֑ךְ וְיָשֵׂ֖ם לְדֶ֣רֶךְ פְּעָמָֽיו׃

13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.

.13: ஆண்டவர் நீதியின் கடவுள். நீதிதான் ஆண்டவர் முன்னால் செல்லும். நீதிதான் ஆண்டவருடைய அடிச்சுவடு. அதவாது அவர் மக்கள் நீதியுள்ளவர்களாக இருக்க கேட்கப்படுகிறார்கள். அதேவேளை அவர்கள் நீதிக்காக போராடுபவர்களாகவும் இருக்க வேண்டியவர்கள்.  


எபேசியர் 1:3-14

2. கிறிஸ்துவும் திருச்சபையும்

மீட்பின் திட்டம்

3நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். 4நாம் 

தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். 5அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்; 6இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம்.

7கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். 8அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார். 9அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். 10கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

11கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம்

12இவ்வாறு கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

13நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். 14அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.


எபேசியர் திருமுகம் திருச்சபையியலை அதிகமாக சுட்டிக்காட்டுகின்ற திருமுகங்களில் மிக முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட தப்பறைக்கு எதிராக இந்த திருமுகம் எழுதப்பட்டது போல தெரியவில்லை மாறாக திக்கிக்கு (Tychicus) என்ற பவுலுடைய அன்பான சீடர் சென்ற இடம் எல்லாம் இதனை வாசிக்கும் படியாக எழுதப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. பவுல் இந்த திருமுகத்தின் ஆசிரியர் இல்லை என்று வாதிட்டாலும், இதிலுள்ள முக்கியமாக, செபங்கள் பவுலுடையவை போன்றே தோன்றுகின்றன. ஆக பவுலுடைய இறையியலையும், சிந்தனையையும் 

இந்த திருமுகம் நிச்சயமாக கொண்டுள்ளது எனலாம். வழிபாட்டை பற்றி பேசுவதும் இந்த திருமுகத்தின் முக்கியமான ஒரு சிறப்பம்சம். இருந்தும் பவுலுடைய ஆசிரியத்துவம் என்பது இன்றும் ஒரு கேள்வியாகவே எபேசியர் திருமுகத்தைப் பொறுத்தவரையில் இருந்துகொண்டே இருக்கிறது

இன்றைய வாசக பகுதி மிகவும் முக்கியமான கருத்தியலைக் கொண்டுள்ளது. இந்த பகுதியில் கிறிஸ்துவும் திருச்சபையும், அத்தோடு மீட்பின் திட்டத்தில் இவர்களின் பங்கு என்பனவற்றை பவுல் தெளிவு படுத்துகிறார்


Eph. 1:3 Εὐλογητὸς ὁ Θεὸς καὶ πατὴρ τοῦ Κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ, ὁ εὐλογήσας ἡμᾶς ἐν πάσῃ εὐλογίᾳ πνευματικῇ ἐν τοῖς ἐπουρανίοις ἐν Χριστῷ·

3நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.


.3: கடவுளுக்கு விளக்கம் கொடுக்கிறார் பவுல். அவரை நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தந்தை என அழகாக காட்டுகிறார் (ὁ θεὸς  καὶ πατὴρ τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ ஹொ தியூஸ் காய் பாடேர் டூ கூரியூ ஹேமோன் ஈயேசூ கிறிஸ்டூ). அவருடைய திருமுகத்தின் தொடக்கத்திலேயே கடவுளுக்கும் இயேசுவிற்கும் இடையிலான உறவு காட்டப்படுகிறது. கடவுள், விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார் எனச் சொல்லி கடவுள் இயேசு மீது காட்டிய அன்பை திருச்சபை மீதும் காட்டியுள்ளார் என்பதைக் காட்டுகிறார்


4 καθὼς ἐξελέξατο ἡμᾶς ἐν αὐτῷ πρὸ καταβολῆς κόσμου, εἶναι ἡμᾶς ἁγίους καὶ ἀμώμους κατενώπιον αὐτοῦ ἐν ἀγάπῃ, 4நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.


.4: கடவுள் ஏன் திருச்சபையை தேர்ந்தெடுத்தார் என்பது சொல்லப்படுகிறது. திருச்சபை தூயதாகவும் மாசற்றதாகவும் தம்முன் விளங்கவே, கடவுள் திருச்சபையை கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த தேர்ந்தெடுத்தல் பண்பு உலகம் தோன்றுவதற்கு முன்பே நடைபெற்றிருக்கிறது. ஆக கிறிஸ்தவர்களின் தெரிவு என்பது சில மனிதர்களால் உருவானது என்ற குற்றச்சாட்டு பொய்ப்பிக்கப்படுகிறது. எப்படி இஸ்ராயேல் மக்கள் கடவுளால் வெகு காலத்திற்கு முன்பே தெரிவு செய்யப்பட்டார்களோ அதனைப் போலவே, கிறிஸ்தவர்களின் தெரிவும் நடைபெற்றிருக்கிறது. (ἐξελέξατο ἡμᾶς  ⸂ἐν αὐτῷ⸃ πρὸ καταβολῆς κόσμου எக்செலெட்சாடொ ஹேமாஸ் என் அவ்டோ புரொ காடாபொலேஸ் கொஸ்மூ- உலகம் தோன்றுவதற்கு முன்பே தெரிந்தெடுத்தார்


5. προορίσας ἡμᾶς εἰς υἱοθεσίαν διὰ Ἰησοῦ Χριστοῦ εἰς αὐτόν, κατὰ τὴν εὐδοκίαν τοῦ θελήματος αὐτοῦ, அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்


.5: கடவுள் நம்மை யார் மூலம், எதனால் முன்குறித்து வைத்தார் என்பது சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் மூலம், கடவுளின் சொந்த பிள்ளைகளாகி, அன்பால் முன்குறித்து வைக்கப்படுகின்றனர். இது கடவுளின் விருப்பமாகவும் இருக்கிறது

கிறிஸ்தவர்களை கடவுள் தமக்கு சொந்தமான மக்களாக முன்குறித்து வைத்தல் என்பது, துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகள். யூதர்கள் மட்டும்தான் முன்குறித்து வைக்கப்படுதலால் கடவுளின் மக்களாக இருக்கிறார்கள் என்ற வாதத்திற்கு எதிர் வாதத்தை இந்த வரி முன்வைக்கிறது. இந்த முன்குறித்து வைத்தலுக்கு, இயேசு முக்கியமான ஊடகமாக 

இருக்கிறார். இஸ்ராயேல் மக்கள் தமது இனத்தாலும், விருத்த சேதனத்தாலும், கடவுளின் மக்களாக இருக்கிறார்கள் என நம்பப்பட்டது. இதனை தவிர்த்து இங்கே கிறிஸ்தவர்கள், இயேசுவினால் முன்குறித்து வைக்கப்படுகிறார்கள். προορίσας ἡμᾶς புரொஒரிசாஸ் ஹேமாஸ்- எங்களை முன்குறித்து வைக்கிறார்

இதனை கடவுளின் விருப்பம் என்று சொல்லி (θελήματος தெலேமாடொஸ்- விருப்பம்) கிறிஸ்தவர்களின் தெரிவைக் கடவுளின் விருப்பம் என்கிறார்


6 εἰς ἔπαινον δόξης τῆς χάριτος αὐτοῦ, ἐν ᾗ ἐχαρίτωσεν ἡμᾶς ἐν τῷ ἠγαπημένῳ· இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். 


.6: ஆண்டவருடைய விருப்பத்தைச் சொல்லிய முன்னையவரியைப் போன்று இந்த வரி அவரது திருவுளத்தைப் பற்றிச் சொல்கிறதுகடவுள் தன்னுடைய அன்பான மகன் வழியாக (ἠγαπημένῳ ஏகாபேமெனோ- அன்பு செய்யப்பட்டவர்), அவர் ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்துள்ளார் (δόξης τῆς χάριτος தொக்ட்சேஸ் டேஸ் காரிடொஸ்- ஒப்புயர்வற்ற அருள்), இதனால் அவரது புகழைப் பாடுகின்றோம். புகழைப் பாடுதல் மக்களின் பதிலாக அமைகிறது.  


7 ἐν ᾧ ἔχομεν τὴν ἀπολύτρωσιν διὰ τοῦ αἵματος αὐτοῦ, τὴν ἄφεσιν τῶν παραπτωμάτων, κατὰ τὸν πλοῦτον τῆς χάριτος αὐτοῦ, 7கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.


.7: இயேசு எப்படி மீட்பளித்தார் என்பது சொல்லப்படுகிறது, அவர் இரத்தம் சிந்தி அவருடைய அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பளித்துள்ளார் எனக் காட்டப்படுகிறது: ἀπολύτρωσιν διὰ τοῦ αἵματος அபொலுட்ரோசின் தியா டூ அய்மாடொஸ்- அவர் இரத்தம் வழியாக நமக்கு மீட்பளித்துள்ளார்

இந்த மீட்பு ஒரு சடங்காக மட்டும் இல்லாமல் நமக்கு, நம் பாவாங்களில் இருந்து விடுதலை தருகிறது என்பதைக் காட்டுகிறார்


8 ἧς ἐπερίσσευσεν εἰς ἡμᾶς ἐν πάσῃ σοφίᾳ καὶ φρονήσει, 8அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார்.

.8: ஆண்டவர் இயேசு வழியாக மக்களின் பாவத்தை மன்னித்தல், அவர்களின் ஆண்டவரின் அருளை பெருகச் செய்கிறது. அத்தோடு அது அருளையும் ஞானத்தையும் தருகிறது

கடவுளின் அருளை பெறுவதற்கான ஒரே வழி இயேசு என்பதும், இது கடவுளுடை கொடை எனபதும், அதனை கடவுள் இலவசமாகவும் தாராளமாகவும், தான் விரும்பும், அதாவது இயேசுவை நம்புவோர் அனைவருக்கும் தருகிறார் எனக் காட்டுவதில் பவுல் மிகவும் கருத்தாய் இருக்கிறார் (ἧς ἐπερίσσευσεν ஹேஸ் எபெரிஸ்செயுசென்- அதை அவர் நம்மில் பெருகச் செய்தார்.). 

ஞானமும் அறிவும், மோசேயின் சட்டங்களை நுணுக்கமாக கடைப்பிடிப்போருக்கும், எபிரேய சடங்குகளை நிறைவேற்றுபவருக்கும் மட்டுமே உடையது எனக் கருதப்பட்ட காலத்தில், இதனை இயேசு மீதான நம்பிக்கைதான் உண்மையாக தருகிறது என்பதை பவுல் வித்தியாசமாக காட்டுகிறார் (σοφίᾳ καὶ φρονήσει சோபியா காய் புரொநேசெய்- ஞானமும் அறிவுத்தறனும்).  

9 γνωρίσας ἡμῖν τὸ μυστήριον τοῦ θελήματος αὐτοῦ, κατὰ τὴν εὐδοκίαν αὐτοῦ, ἣν προέθετο ἐν αὐτῷ 9அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்


.9: ஆண்டவர் தம் திருவுளத்தின் மறைபொருளை தெரியப்படுத்தியுள்ளார் என்ற தன்னுடைய முன்னைய சிந்தனையை இன்னொருமுறை பவுல் வலியுறுத்துகிறார். இந்த தீர்மானம் கிறிஸ்து வழியாக மட்டும்தான் செய்யப்படுகிறது

ஆண்டவரின் திருவுளத்திற்கும், கிறிஸ்துவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. கிறிஸ்து 

இல்லாமல் ஆண்டவரின் திருவுளம் நிறைவாக வெளிப்படுத்தப்படாது என்பது கிறிஸ்தவ சிந்தனை, இதனை பவுல் போன்ற இறையியலாளர்கள் ஆரம்ப காலத்திலேயே கருத்தாய் வலியுறுத்தியிருக்கின்றனர் (μυστήριον τοῦ θελήματος αὐτοῦ மூஸ்டேரியொன் டூ தேலேமாடொஸ் அவ்டூ- அவருடைய திருவுளத்தின் மறைபொருள்). 


10 εἰς οἰκονομίαν τοῦ πληρώματος τῶν καιρῶν, ἀνακεφαλαιώσασθαι τὰ πάντα ἐν τῷ Χριστῷ, τά τε ἐν τοῖς οὐρανοῖς καὶ τὰ ἐπὶ τῆς γῆς· 10கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.


.10: இந்த மறைபொருளின் திட்டத்தை இந்த வரியில் வெளிப்படுத்துகிறார், அதாவது கால நிறைவில் (πληρώματος τῶν καιρῶ புரோரோமாடொஸ் டோன் காய்ரோன்), விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும் (ἐπὶ τοῖς οὐρανοῖς καὶ τὰ ἐπὶ τῆς γῆς எபி டொய்ஸ் ஹுரானொய்ஸ் காய் டா எபி டேஸ் கேஸ்), கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்த்தல் என்பதே அந்த மறைபொருள்

பவுல் போதிக்கும் மறைபொருள் மண்ணுலகிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, அது விண்ணுலகின் வாசிகளுக்கு பொருந்தும் என்பதும் பவுலுடைய புதிய சிந்தனை. இதற்கு அவர் தன்னுடைய முன்னோர்களின் விசுவாசத்தையும், கிரேக்க சிந்தனைகளையும் பயன்படுத்தியிருக்கலாம்


11 ἐν αὐτῷ, ἐν ᾧ καὶ ἐκληρώθημεν, προορισθέντες κατὰ πρόθεσιν τοῦ τὰ πάντα ἐνεργοῦντος κατὰ τὴν βουλὴν τοῦ θελήματος αὐτοῦ, 11கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம்.


.11: கடவுளுடைய திட்டம் ஒன்றுதான் நிறைவேறுகிறது. இந்த திட்டங்களை கடவுள் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்தி வருகிறார் என் காட்டுகிறார். வுரலாற்றை தீர்மானிப்பவரும், அதனை நடைமுறைப் படுத்துபவரும் கடவுள்தான் என்ற நம்மிக்கை மிகவும் காலத்தால் முந்திய எபிரேய சிந்தனை இதனை பவுலும் ஆதரிக்கிறார்

ஆனால் இந்த சிந்தனையில் அவர் புதுமை ஒன்றை புகுத்துகின்றார். அதாவது உரிமைப் பேறு உண்மையில் கிறிஸ்துவழியாகத்தான் கிடைக்கிறது என்பதுதான் அந்த புதிய சிந்தனை


12 εἰς τὸ εἶναι ἡμᾶς εἰς ἔπαινον τῆς δόξης αὐτοῦ, τοὺς προηλπικότας ἐν τῷ Χριστῷ· 12இவ்வாறு, கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.



.12: கிறிஸ்துவின் நம்பிக்கைக்கும், கடவுளை மாட்சிப்படுத்துவதற்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை என்பது காட்டப்படுகிறது. கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர் உண்மையில் கடவுளை நிறைவாக மாட்சிப்படுத்துகிறார். இதற்கு உதாரணமாக பவுல் தங்களையே காட்டுகிறார்

தன்னையும், தன்னைச் சார்ந்த பணியாளர்களையும், கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்த முதல் நபர்கள் எனவும், இவர்கள் இதன் மூலம் கடவுளை மாட்சிப்படுத்தினர் என்வும் காட்டுகிறார்


13 ἐν ᾧ καὶ ὑμεῖς, ἀκούσαντες τὸν λόγον τῆς ἀληθείας, τὸ εὐαγγέλιον τῆς σωτηρίας ὑμῶν, ἐν ᾧ καὶ πιστεύσαντες ἐσφραγίσθητε τῷ Πνεύματι τῆς ἐπαγγελίας τῷ Ἁγίῳ, 13நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள்.

.13: இதனையே அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அடையாளமாகக் காட்டுகிறார். தங்களைப் போலவே, அனைவரும், ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு (ἀκούσαντες τὸν λόγον அகுசான்டெஸ் டொன் லொகொன்- வார்த்தையைக் கேட்டு), அவர் மீது நம்பிக்கை கொண்டு (πιστεύσαντες பிஸ்டெயுசான்டெஸ்- நம்பிக்கை கொண்டு), வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டுள்ளார்கள் (ἐσφραγίσθητε எஸ்பிராகிஸ்தேடெ- முத்திரையிடப்பட்டீர்கள்) என்கிறார்


14 ὅς ἐστιν ἀρραβὼν τῆς κληρονομίας ἡμῶν, εἰς ἀπολύτρωσιν τῆς περιποιήσεως, εἰς ἔπαινον τῆς δόξης αὐτοῦ. 14அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.



.14: மீட்ப்புப் பணியிலும், உரிமைப் பேறைப் பெறும் நிகழ்விலும், தூய ஆவியாரின் பங்களிப்பு நிவர்த்தி செய்ய முடியாதது. இந்த தூய ஆவி, கிறிஸ்தவர்கள் மீட்படைந்து உரிமைப் பேறு பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றார். இதன் அடையாளமாகவும் அவர் இருக்கிறார். இதன் வாயிலாக இறை மாட்சி விளங்குகின்றது. இறைமாட்சி என்பதுதான் படைப்பின் நோக்கமாக இருக்கிறது என்பதிலும் பவுல் கவனமாக இருக்கிறார் (τῆς δόξης αὐτοῦ டேஸ் தொக்டேஸ் அவடூ- அவர் மாட்சி). 


மாற்கு 6,7-13

இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல்

பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல்

(மத் 10:1, 5-15; லூக் 9:1-6)

6டிஅவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார். 7அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். 8மேலும், 'பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். 9ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். 10மேலும் அவர், 'நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். 11உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்' என்று அவர்களுக்குக் கூறினார்; 12அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; 13பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.


ஆண்டவர் தன் சீடர்களை அனுப்பும் நிகழ்வை ஒவ்வொரு நற்செய்தியாளரும்; தனக்கே உரிய பாங்கில் காட்டுகின்றார். மாற்கு இந்த நிகழ்வை மிக சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் காட்டுவதில் வல்லவர். இந்த பகுதிக்கு முன்னர், இயேசு தன் சொந்த ஊரான நாசரேத்தில் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வைக் காட்டுகிறார். அதன் பின்னர் காட்சி மாறுகிறது


Καὶ περιῆγε τὰς κώμας κύκλῳ διδάσκων. 6bஅவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்


.6: சொந்ந ஊரில் புறக்கணிக்கப்பட்டதால், இயேசு சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு சென்று கற்பிக்கக் கூடிய வாய்ப்பு உருவாகிறது. இங்கே புறக்கணிக்கப்பட்டது இயேசு அல்ல, அவருடைய சொந்த ஊரர்தான். அவர்கள் இயேசுவை புறக்கணிக்க எண்ணி தங்களையே இயேசுவிடம் இருந்து புறக்கணித்துக் கொள்கின்றனர். κώμας κύκλῳ διδάσκων. கோமாஸ் குக்லூ திதாஸ்கோன்- சுற்றிலுமுள்ள ஊர்களில் அவர் கற்பித்துவந்தார்


Mark 6:7 Καὶ προσκαλεῖται τοὺς δώδεκα, καὶ ἤρξατο αὐτοὺς ἀποστέλλειν δύο δύο, καὶ ἐδίδου αὐτοῖς ἐξουσίαν τῶν πνευμάτων τῶν ἀκαθάρτων. 7அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.


.7: சொந்த ஊரில் அவர் புறக்கணிக்கப்பட்டதும், சுற்றிலுமுள்ள ஊர்களில் வரவேற்கப்பட்டதும், அவருக்கு சில முக்கியமான அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம். இயேசு தன்னுடைய வழிமுறைகளை மாற்றுகிறார் எனவும் எடுக்கலாம். இயேசு சில முக்கியமான முடிவுகளை எடுக்கிறார். முதலாவதாக அவர் தன்னுடைய 'பன்னிருவைரை' தம்மிடம் அழைக்கிறார். திருத்தூதர்கள் பன்னிருவர் என்று அக்காலத்திலிருந்தே அறியப்பட்டனர் (δώδεκα தோதெகா-பன்னிருவர்). 

இயேசு இந்த பன்னிருவர் மூலமாக, இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களையும் இஸ்ராயேல் சமூகத்திற்கு நினைவூட்டுகிறார் என எடுக்கலாம்

இரண்டாவதாக இவர்களை இருவர் இருவராக அனுப்புகிறார் (ἀποστέλλειν δύο⸃ δύο அபொஸ்டெல்லெய்ன் துவொ துவொ- இருவர் இருவரகா அனுப்பினார்). இதற்கான பல காரணங்களையும் விளக்கங்களையும் விவிலிய ஆய்வாளர்கள் முன்வைத்தாலும், ஒவ்வொன்றும் தனித்துவமானதாகவே இருக்கின்றன. சூழலியலில் இருந்து நோக்கும் பொழுது, இது குழுவாழ்க்கையை மையப்படுத்தும் ஒரு பணி என்பதைக் காணலாம், அல்லது இறையரசு பணி தனி பணி, தனி மனிதரில் தங்கியிருக்கக்கூடாது என்பதையும், பணிவாழ்வில் ஒருவர் இன்னொருவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டலாம்

அடுத்ததாக அவர் தீய அவிகள் மேல் இந்த பன்னிருவருக்கு அதிகாரம் கொடுக்கிறார் (ἐξουσίαν τῶν πνευμάτων τῶν ἀκαθάρτων எக்ட்சூசியான் டோன் புனுமாடோன் டோன் அகாதார்டோன்- தீய ஆவிகள் மீது அதிகாரம்). தீய ஆவிகளை மாற்கு முதன்மைப் படுத்துகிறார். ஆக தீய ஆவிகள் திருச்சபையின் பணிவாழ்வில் மிக முக்கியமான இடைஞ்சலாக 

இருந்திருக்கலாம். தீய ஆவிகள் மீது அதிகாரம், மெசியாவின் அதிகாரத்தையும், கடவுளின் நாளையும் குறிக்கிறது என்றும் கருதலாம்


8 καὶ παρήγγειλεν αὐτοῖς ἵνα μηδὲν αἴρωσιν εἰς ὁδόν, εἰ μὴ ῥάβδον μόνον· μὴ πήραν, μὴ ἄρτον, μὴ εἰς τὴν ζώνην χαλκόν· 8மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.

.8: அன்றைய நாட்களின் பயணத்திற்கு மிக முக்கியமான தேவையாக இருந்தவை

. கைத்தடி: ῥάβδος ஹராப்தொஸ்- காலுக்கு பலத்தையும், சிறு பிராணிகளிடமிருந்து பாதுகாப்பையும் இது கொடுத்திருக்கலாம். இது ஒருவகையான சாதாரண ஆயுதமாகவும் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள்  உள்ளன


. உணவு: பயணத்திற்கு மிக முக்கியமானது. பாலைவன பாதைகளாக இருந்தபடியால், உணவினை இருப்பில் வைத்திருத்தல் அறிவுப்பூர்வமானதாக கருதப்பட்டது (ἄρτος அர்டொஸ்- பாண்). 


. பை: இது பயணத்திற்கு தேவையான பொருட்களைக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்

இதற்குள் அனைத்து தேவாயானவற்றையும் வைத்திருந்திருப்பார்கள். அனேகமாக இது தோற்பைகளாக இருந்திருக்க வேண்டும் (πήρα பேரா-பை). இதனை இரவலர் பையாகவும் கருதுகின்றனர்


. இடைக்கச்சையில் செப்புக்காசு: செப்புக்காசு உரோமையருடைய தெனாரியத்தைக் குறித்திருக்கலாம். இவை பெறுமதியாக இருந்த படியால், அவற்றை பைகளில் வைக்காமல்

இடைக்கச்சையில் வைத்தனர். இரவில் படுக்கையில் கூட இவை பாதுகாக்கப்பட வேண்டியாதாக இருந்திருக்கலாம் (ζώνην χαλκόν ட்சோனேன் கால்கொன்- இடைக்கச்சையில் காசு).  

இப்படியான அத்தியாவசிய தேவைகளில், கைத்தடிகளை மட்டும் கொண்டு செல்லலாம் என்று விதிவிலக்கு கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இவர்கள் வழியில் சோர்வடைந்தால், அதற்கு இந்த கைத்தடி உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இயேசு வலுப்படுத்துகிறார்


9 ἀλλ’ ὑποδεδεμένους σανδάλια· καὶ μὴ ἐνδύσασθαι δύο χιτῶνας. ஆனால், மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.


.9: இன்னொரு விதிவிலக்கு கொடுக்கப்படுகிறது. மிதியடி போட்டுக்கொள்ளலாம் என்கிறார் இயேசு. இவர்களின் உடல் தைரியத்தில் அவர் கவனம் செலுத்துவதையும், தேவையற்ற வறுமையை இயேசு நிர்ப்பந்திக்கவில்லை என்பதும் புலப்படுகிறது. (σανδάλιον சான்தாலியோன்- மிதியடி). 

ஆனால் மாற்று உடையை கொண்டு செல்ல வேண்டாம் என்கிறார் ஆண்டவர். மாற்று ஆடைகளை பணியிடத்தில் இவர்கள் பெறலாம் என்பதை இது வலியுறுத்துகிறது (χιτών கிடோன்- உடை). 



10 καὶ ἔλεγεν αὐτοῖς, Ὅπου ἐὰν εἰσέλθητε εἰς οἰκίαν, ἐκεῖ μένετε ἕως ἂν ἐξέλθητε ἐκεῖθεν. 10மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.


.10: வீட்டிற்குள் சென்றால் அங்கிருந்து புறப்படும் வரை அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார்இந்த கட்டளை இரண்டு செய்திகளைக் கொடுக்கிறது. முதலாவது குறிப்பிட்ட வீட்டில் பணியாற்றும் பொழுது அந்த வீட்டை மட்டுமே கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும், பல இடங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றுவது உகந்ததாக இருக்காது என்பதையும் இது காட்டுவது போல உள்ளது. இரண்டாவதாக இந்த வீட்டிற்கு இனியும் வரவேண்டிய தேவையை உருவாக்கக் கூடாது என்பதையும் காட்டுவது போல உள்ளது (ἐκεῖ μένετε  எகெய் மெனெடெ- அங்கேயே தங்குங்கள்). 


11 καὶ ὅσοι ἂν μὴ δέξωνται ὑμᾶς, μηδὲ ἀκούσωσιν ὑμῶν, ἐκπορευόμενοι ἐκεῖθεν, ἐκτινάξατε τὸν χοῦν τὸν ὑποκάτω τῶν ποδῶν ὑμῶν εἰς μαρτύριον αὐτοῖς. ἀμὴν λέγω ὑμῖν, ἀνεκτότερον ἔσται Σοδόμοις ἢ Γομόρροις ἐν ἡμέρᾳ κρίσεως, ἢ τῇ πόλει ἐκείνῃ. 11உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்என்று அவர்களுக்குக் கூறினார்;


.11: திருத்தூதர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக அவர்களின் கால்களில் உள்ள தூசி சான்றாகிறது. இஸ்ராயேல் நாட்டில் தூசி சாதாரண அழுக்கின் அடையாளமாக இருக்கிறது. இந்த தூசியை யாரும் விரும்ப மாட்டார்கள். இதனை கழுவத்தான் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும், தண்ணீர்க் குடங்கள் வைத்திருந்தார்கள். இந்த வேலையை அடிமைகள் செய்தார்கள். ஆக தூசி அனைவராலும் வெறுக்கப்பட்டதாக காணப்படுகிறது

இறைவார்த்தையை கேட்க விரும்பாதவர்கள் இந்த தூசிக்கு ஒப்பாக காட்டப்படுகிறார்கள். அதவாது அவர்கள் அழுக்கிற்கு ஒப்பிடப்படுகிவார்கள். ஒருவர் தன்னுடைய காலின் தூசியை உதறிவிடுவதைப் போல, திருத்தூதர்கள் இந்த மனிதர்களை உதறிவிடுவதன் மூலம், அவர்கள் மிகவும் இழிவான நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள் எனலாம். இதனை ஒரு சான்று என மாற்குவின் இயேசு காட்டுகிறார் (ἐκτινάξατε τὸν χοῦν எக்டினாக்ட்சாடெ டொன் கூன்- தூசியை உதறிவிடுங்கள்: εἰς μαρτύριον αὐτοῖς எய்ஸ் மார்டுரியொன் அவ்டொய்ஸ்- அவர்களுக்கு சான்றாக). 


12 καὶ ἐξελθόντες ἐκήρυσσον ἵνα μετανοήσωσι. அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;


.12: இயேசுவின் கட்டளைகளை அவர்கள் கவனமாக எடுக்கிறார்கள். முதலாவதாக அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனமாற வேண்டும் என பறைசாற்றினார்கள். ἐκήρυξαν ἵνα  μετανοῶσιν எகேரூட்சான் ஹினா மெடானோசின்- மனமாறிட அவர்கள் பறைசாற்றினார்கள்). 


13 καὶ δαιμόνια πολλὰ ἐξέβαλλον, καὶ ἤλειφον ἐλαίῳ πολλοὺς ἀρρώστους καὶ ἐθεράπευον. பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.


.13: அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது இந்த வரியில் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் பல பேய்களை ஓட்டி, உடல் நலமற்றோரை எண்ணெய் பூசிக் குண்படுத்தினார்கள். பேயும் நோயும் தீய சக்திகளின் அடையாளமாகவே கருதப்பட்டது. இனி தீய சக்திகளுக்கு இடமில்லை, இது மெசியாவின் காலம் என்பதை அவர்கள் தங்கள் குணப்படுத்தல் மூலமாக காட்டுகிறார்கள் என்பது தெரிகிறது. δαιμόνια πολλὰ ἐξέβαλλον தாய்மொனியா பொல்லா எக்செபால்லொன்-பல பேய்களை விரட்டினார்கள், ἤλειφον ἐλαίῳ πολλοὺς ἀρρώστους καὶ ἐθεράπευον. எலெய்பொன் எலாய்யோ பொல்லூஸ் அர்ரோஸ்டூஸ் காய் எதெராபெனூன், ஒலிவ எண்ணெய்யால் பல நோய்களை குணப்படுத்தினார்கள்


இயேசு இன்றும் அழைக்கிறார். உள்ளும் புறமும் உள்ள பேய்கள் ஓட்டப்பட வேண்டும். தொடர்ந்து நான் நற்செய்தியாளனாக மாற வேண்டும். இயேசுவை அறிவிக்க, இயேசு வேண்டும், உலக பொருட்கள் அல்ல




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு (ஆ) (08.09.2024)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு ( ஆ ) (08.09.2024) முதல் வாசகம் : எசாயா 35,4-7 பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 146 இர...