சனி, 27 ஜூலை, 2024

17th Sunday in Ordinary Times (B):  ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு (ஆ) 28.07.2024




17th Sunday in Ordinary Times (B): 

ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு ()

28.07.2024


M. Jegankumar Coonghe OMI, 

Shrine of Our Lady of Good Voyage, 

Chaddy, Velanai, 

Jaffna.

Friday, 26 July 2024


முதல் வாசகம்: 2அரசர் 4:42-44

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145

இண்டாம் வாசகம்: எபேசியர் 4:1-6

நற்செய்தி: யோவான் 6:1-15


2அரசர் 4:42-44

42பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, 'மக்களுக்கு உண்ணக் கொடு' என்றார்.

43அவருடைய பணியாளன், 'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?' என்றான். அவரோ, 'இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்' என்றார். 44அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.


எலிசா பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான இறைவாக்கினருள் ஒருவர். எலிசாவின் பெயரில் இறைவாக்கு புத்தகங்கள் இல்லாவிடினும், எலிசா வடநாட்டில் இறைவாக்கு பாரம்பரியத்தின் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறார். எலிசா 'கடவுளின் மனிதர்' என அழைக்கப்படுகிறார். வட நாடான இஸ்ராயேலில் பணிபுரிந்த மிக முக்கியமான இறைவாக்கினர் எலியாதான் இவருடைய ஆசிரியர். எலிசா, எலியாவினால் பெயர்சொல்லி அழைக்கப்பட்டவர், எலியா அழைத்தவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு அவரை பின்பற்றினார். அழைப்பிற்கு முன் இவர் குறிப்பிட்டளவு செல்வந்தராக இருந்திருக்க வேண்டும் (காண்க 1அரசர் 19,19-21). எலியா-எலிசா உறவு, மோசே-யோசுவா உறவை நினைவூட்டுகின்றன

புதுமைகளைப் பொறுத்தவரையில் அதிகமான புதுமைகளை எலிசா இறைவாக்கினர் செய்திருக்கிறார், அவற்றிலும், நீர் சம்மந்தமான புதுமைகள் அதிகமாக பதியப்பட்டுள்ளன. எலிசாவைச்; சுற்றி பல சீடர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள், இறைவாக்கினர் கூட்டம் என அறியப்படுகிறார்கள். எலிசா ஓர் இடத்தில் இருந்து பணியாற்றியது போல தெரியவில்லை, இவர் பல இடங்களுக்கு கால் நடையாகச் சென்று, அதிலும் முக்கியமாக தன்னுடைய சீடர்களின் வறுமை மற்றும் வேறு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தினார் என்பதை அரசர்கள் புத்தகத்தில் காணலாம். ஒழுக்கவியல் அல்லது இறையியல் போதனைகள் எலிசாவோடு சம்மந்தப்பட்டு தரப்படவில்லை

எலிசா இறந்தவர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும் வாழ்வளிக்கிறவராக காட்டப்படுகிறார்

இருப்பினும் தன்னை அவமானம் செய்த 42 இளைஞர்களை இவர் மரணிக்கச் செய்தது அவரின் 

இயற்கைக் குணத்தோடு ஒத்துப்போகவில்லை (காண்க 2அரசர்கள் 2,23-25). இது எலிசாவின் புனிதத்துவம் மற்றும், அதிகாரத்தைக் குறைக்க பயன்பட்டிருக்கலாம். சூனாமிய பெண்ணிற்கு பிள்ளை வரம் கொடுத்ததும், அந்த பிள்ளையை மரணத்தில் இருந்து உயிர்ப்பித்ததும், எலிசா பணக்காரர்களுக்கும் நம்மை செய்யக்கூடியவராக இருந்தார் என்பதைக் காட்டுகின்றது (காண்க 2அரசர்கள் 4,8-37). எலிசாவின் எலும்புகூட புதுமை செய்யக்கூடியதாக இருந்தது என்பதையும் 2அரசர்கள் புத்தகம் காட்டுகிறது (13,20-21). 

எலிசா அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். எப்போது அரசன் தன் மக்களை காக்க தவறினாரோ அங்கே எலிசா மக்களுக்காக பரிந்து பேசி அதிசயம் செய்வதையும் காணலாம். அரமேயர்கள் இஸ்ராயேலருக்கு எதிராக பல முற்றுகைகளை முன்னெடுத்தனர், சில வேலைகளின் எலிசாவின் வேண்டுதலால் அரமேயிக்க இராணுவம் கடவுளால் தண்டிக்கப்பட்டதையும் இவரைப் பற்றி விவிலிய தரவுகள் காட்டுகின்றன. எலிசா இஸ்ராயேலிலும், பக்கத்து, வெளிநாடுகளிலும் அரசியல் செல்வாக்கு உடையவாக இருந்தார். அரமேயிக்க இராணுவ தளபதி நாமான் தொழுநோயால் பாதிக்கப்பட்ட போது, எலிசா அவரை குணமாக்கி அதன் மூலம் இஸ்ராயேலின் கடவுள்தான் உண்மையான கடவுள் என்பதை காட்ட முன்வந்தார்

எலிசா ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணிசெய்திருக்க வேண்டும், ஒம்ரியின் வம்சம் அழிந்துபோய் எகுவின் அரசு வரவும், எலிசா காரணமாக இருந்திருந்தாகவும் விவிலியத்தில் தரவுகள் இருக்கின்றன


2அரசாகள் 4ம் அதிகாரம் எலிசாவின் பல விதமான புதுமைகளை காட்டுகின்றன. இந்த புதுமைகள் எலிசா, துன்பத்தில் இருந்து தன்னை சுற்றியிருந்தவர்களை பாதுகாக்க மிகவும் ஆயத்தமாக இருந்தார் என்பது தெரிகிறது


4,1-7: எலிசா ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு உதவி செய்கிறார். இந்த ஏழைக் கைம்பெண்ணின் 

இறந்த கணவர் எலிசாவின் சீடராக இருந்திருக்க வேண்டும். இறந்தவர் பெற்ற கடனை அடைக்க முடியாமல், அவருடைய இரண்டு பிள்ளைகளும் அடிமைகளாகும் நிலைவரவே அதனை தடுக்க எலிசா எண்ணெயை பெருகச் செய்கிறார். பிள்ளைகள் காப்பாற்றப்படுகிறார்கள், இந்த குடும்பத்தின் வறுமையும் தீர்க்கப்படுகிறது

எலிசாவின் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியிருந்திருக்கலாம். இந்த பஞ்சத்தின் காரணமாக ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக அடிமைகளாகும் நிலையும் இருந்திருக்கிறது


4,8-37: எலிசாவும் சூனேமியப் பெண்ணும். ஏலிசா சென்று வரும் பாதையின் ஒரு பணக்கார பெண் தன்னுடைய கணவருடன் சேர்ந்து எலிசாவிற்கு அறையொன்றை தயார்ப்படுத்திக் கொடுக்கின்றார். இந்த தம்பதியினருக்கு பிள்ளைப் பேறு இல்லாமையை எலிசா சரிசெய்கிறார். ஒருமுறை இந்தப் பிள்ளை இறந்து போகிறது. இறந்த பிள்ளையை எலிசா உயிர்ப்பிக்கிறார்


4,38-44: இருவேறு அருஞ்செயல்கள். இந்த பகுதியில் எலிசா நஞ்சாகிய கூழை புனிதப்படுத்தியதையும், வாற்கோதுமை அப்பங்களை பலுகச் செய்த புதுமையும் விளங்கப்படுத்தப்படுகின்றன


.42: இறைவாக்கினருக்கு பல நன்கொடையாளர்கள் இருந்திருந்ததை இந்த வரி காட்டுகிறது. இந்த முறை நன்கொடையாளர், பாகால்-சாலிசாவை சேர்ந்தவர் என காட்டப்படுகிறார் אִ֨ישׁ בָּ֜א מִבַּ֣עַל שָׁלִ֗שָׁה 'இஷ் பா' மிபா'அல் ஷாலிஷாஹ்- பாகால்-சாலிசாவை சார்ந்த ஒரு குறிப்பிட்ட நபர் வந்தார்

இந்த இடத்தைப் பற்றி மேலதிக தரவுகள் தரப்படவில்லை.

இவர் வாற்கோதுமை அப்பங்களையும், முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வருகிறார். ஏலிசாவை குறிக்க அரசர்கள் புத்தக ஆசிரியர், אִישׁ הָאֱלֹהִים ('இஷ் ஹா'எலோஹிம்- கடவுளின் மனிதர்) என்ற காரணப் பெயரைப் பயன்படுத்துகிறார். இந்த சொல் எலிசா இறைவாக்கினருக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

வாற்கோதுமை அப்பங்கள் (לֶחֶם שְׂעֹרִ֔ים லெஹெம் செ'ரிம்): குளிர் காலத்தில், புனித பூமியில் 

இந்த தானியம் வளர்க்கப்பட்டது (ஐப்பசி - தை). சாதாரண கோதுமையைவிட இந்த தானியம் குறைந்த காலத்திலே சாகுபடி செய்யப்பட்டது. இந்த காலத்தில்தான் பாஸ்கா விழாவும் கொண்டாடப்பட்டது. நீர் குறைந்த மற்றும் வளமில்லாத நிலங்களில் கூட இந்த பயிர் அதிகமான வளர்ச்சி கண்டது. இஸ்ராயேலுக்கு கடவுள் கொடுத்த விளைச்சல் அதிசயங்களில் இந்த தானியமும் ஒன்றாக காட்டப்பட்டுள்ளது (காண்க . 8,8). வாற்கோதுமை வெறும் தானியமாகவும், அவித்தும், பொடியாக்கியும், கூழ் செய்தும் அத்தோடு காய்ச்சி வடித்தும் (பீர்) உண்ணப்பட்டது. முக்கியமான தானியத்தைதான் இந்த மனிதர் எலிசாவிற்கு கொண்டு வந்திருக்கிறார்

எலிசா இந்த மனிதருக்கு, தான் கொண்டுவந்த உணவை கொடுக்கச் சொல்லி கட்டளை கொடுக்கிறார். ஆக அங்கிருந்தவர்களையும் இந்த மனிதருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது


.43: எலிசாவின் பணியாளர் ஒருவருக்கு நியாமான கேள்வி ஒன்று எழுகிறது. இருபது வாற்கோதுமை அப்பங்களை எப்படி நூறு பேறுக்கு கொடுக்க முடியும்? என்று கேள்வி கேட்கிறார். எலிசாவுடன் நூறுக்கு மேற்பட்ட இறைவாக்கினர் சீடர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நன்கு தெரிகிறது

எலிசாவின் காலத்திலேயே பாலைவன துறவற வாழ்க்கை வழக்கதிற்கு வந்திருக்கிறது என்பதையும் இதன் மூலம் கண்டுகொள்ளலாம். இந்த சீடர்களுக்கு எலிசாதான் தினசரி உணவு கொடுத்திருக்க வேண்டும், அதற்கு அவருடைய நன்கொடையாளர்கள் உதவியிருக்கலாம். அருகில் இருந்த மக்கள் இந்த ஆரம்ப கால துறவியருடன் நல்ல உறவை பேணியிருக்க வேண்டும்

எலிசா பெரிய எண்ணிக்கையை கண்டு அஞ்சுவதாக தெரியவில்லை. மாறாக அவர் அனைவருக்கும் கொடுத்தும் மிகுதி இருக்கும் என்கிறார். அதற்கு ஆண்டவர் காரணம் என்று சொல்லவும் அவர் தயங்கவில்லை (כֹה אָמַר יְהוָה கோஹ் 'ஆமர் அதோனாய்- இப்படிச் சொல்கிறார் ஆண்டவர்). 


.44: எலிசா சொன்னது அப்படியே நிறைவேறுகிறது. அனைவரும் வயிராற உண்டனர், மிகுதியும் இருந்தது

இந்த புதுமையும் எலிசாவின் புனிதமான வாழ்க்கையைக் காட்டுகிறது. எலிசா என்ற மனிதர் இயற்கையின் மீது அதிகாரம் உள்ள இறைமனிதர் என்பதற்கு இந்த வரிகள் நல்ல சாட்சிகள்



திருப்பாடல் 145

அரசராம் கடவுள் போற்றி!

(தாவீதின் திருப்பாடல்)


1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்

2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்

3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது

4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்

5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்

6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்

7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்

11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்

13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது

14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்

15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்

16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். 17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்

19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்

20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார்

21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


 திருப்பாடல் புத்தகத்தில் காணப்படும் அகரவரிசைப் பாடல்களில் இந்த 145வது சங்கீதமும் ஒன்று. நுன் ן, பதினான்காவது எழுத்து) வருகின்ற வரி மட்டும் இதில் இல்லாமல் இருக்கிறது

இதனால்தான் இந்த பாடல் 21வரிகளைக் கொண்டிருக்கிறது, இல்லாவிடில் இதில் 22வரிகள் காணப்படும். காலத்தின் ஓட்டத்தில் இந்த வரி அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறது

இருந்தாலும், மனித மொழியான எபிரேயம், ஆண்டவரின் மறைபொருளை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதது என்பதைக் காட்டவே, ஆசிரியர் வேண்டுமென்றே இந்த (நுன்) வரியை (14ம்) விட்டிருக்கலாம் என்ற ஒரு பலமான வாதமும் இருக்கிறது

  இந்தப் பாடல், கடவுள் பாடப்படவேண்டியவர், மற்றும் அவருடைய மாட்சிமை புகழப்படவேண்டியது என்பதைக் காட்டுகிறது. தாவீதின் திருப்பாடல் என்று தொடங்கும் இந்த திருப்பாடல், அதிகமான திருப்பாடல்களைப் போல் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. (תְּהִלָּה לְדָוִד தெஹிலாஹ் லெதாவித் - தாவீதின் (தாவீதுக்கு) பாடல் (புகழ்))


.1 (א '- அலெப்): திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய அரசராக காண்கிறார் 

(אֱלוֹהַי הַמֶּלֶךְ 'எலோஹாய் ஹம்மெலெக்- என்கடவுள் அரசர்). கடவுளைப் போற்றுவதும் அவர் பெயரைப் போற்றுவதும் சமனாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புகழ்ச்சி என்றென்றைக்கும் நடைபெற வேண்டியது என்கிறார்.


.2 (בּ - பெத்): மீண்டுமாக ஆண்டவரும் அவர் பெயரும் ஒத்தகருத்துச் சொற்களாக பார்க்கப்டுகின்றன. ஆண்டவரை போற்றுதலும் அவருடைய பெயரை புகழ்தலும் நாள் முழுவதும் செய்யப்பட வேலை என்பதை விளக்குகின்றார்


.3 (גּ கி- கிமெல்): ஆண்டவரை புகழ்வதற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பெரியவர், மாட்சிக்குரியவர். இந்த சொற்கள், மனிதர்கள் மற்றும் மனித தலைவர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு ஆண்டவருடைய உயரிய தன்மைகள் தேடிக்கண்டுபிடிக்க முடியாதவை என்பதையும் விளக்குகிறார் (אֵין חֵקֶר 'ஏன் ஹகெர்- தேட முடியாதது). 


.4 (דּ - தலெத்): ஒரு தலைமுறையின் நோக்கத்தை கடவுள் அனுபவத்தில் பார்க்கிறார் ஆசிரியர். அதாவது ஒரு தலைமுறையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு கடவுளின் புகழை எடுத்துரைப்பதாகும் என்கிறார். இந்த புகழை அவர், வல்லமையுடைய செயல்கள் என்கிறார்.

தலைமுறைகள் வரலாற்றைக் குறிக்கின்றன. வரலாறு கடத்தப்படவேண்டும். வரலாற்றை சரியாக படிக்கிறவர்கள், அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த ஆயத்தமாக இருக்கிறார்கள்.  


.5 - ஹெ): மனிதர்கள் எதனைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. கடவுளுடைய வியத்தகு செயல்கள், மாண்பின் மேன்மை இவற்றைப் பற்றியே தான் சிந்திப்பதாகச் சொல்கிறார். இது கடவுளை புகழ்தலுக்கு சமமானது என்ற அர்த்தத்தில் வருகிறது


.6 - வாவ்): கடவுளுடைய செயல்கள் அச்சம் தருபவை என சொல்லப்படுகின்றன. இந்த அச்சம் பயத்தினால் ஏற்படுபவையல்ல, மாறாக கடவுள்மேல் உள்ள மாறாத அன்பினால் வருபவை. கடவுளுடைய இந்த அச்சந்தரும் செயல்கள், மாண்புக்குரிய, உயரிய செயல்கள் என்று ஒத்த கருத்தில் திருப்பிக்கூறப்பட்டுள்ளது (גְּדוּלָּה கெதூலாஹ்- உயர்தன்மை). 


.7 ட்ச- ட்சயின்): ஆண்டவரின் உயர்ந்த நற்பண்புகளை நினைப்பது அவரை புழந்து பாடுவதற்கு சமன் என்கிறார். ஒருவருடைய நற்பண்புகளை நினைத்தல், அவர்மேல் உள்ள நல்மதிப்பு மற்றும் விசுவாசத்தை ஆழப்படுத்தும், என்ற தற்கால உளவியல் சிந்தனைகளை அன்றே அறிந்திருக்கிறார் இந்த ஆசிரியர்


.8 - ஹத்): முதல் ஏற்பாடு அடிக்கடி கொண்டாடும் கடவுளைப் பற்றிய பல நம்பிக்கைகளை 

இந்த வரி அழகாக தாங்கியுள்ளது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர் என்பது 

இஸ்ராயேலருடைய நாளாந்த நம்பிக்கை. இந்த இரக்கமும் கனிவும்தான் கடவுளின் மன்னிப்பை மக்களுக்கு பெற்றுத்தருகிறது என இவர்கள் நம்பினார்கள் (חַנּוּן וְרַחוּם יְהוָה ஹனூன் வெராஹம் அதோனாய் - இரக்கமும் பரிவும் உள்ளவர் ஆண்டவர்). 

இந்த ஆண்டவர் எளிதில் சினம் கொள்ளாதவர் என்கிறார் ஆசிரியர். தெய்வங்களின் கோபம், நோய் மற்றும் போர் போன்றவை துன்பங்களை உலகில் ஏற்படுத்துகின்றன என்று அக்கால ஐதீகங்கள் நம்பின, இதனை மறுத்து உண்மையான இஸ்ராயேலின் தேவனின் குணங்கள் பாராட்டப்படுகின்றன (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அபிம்- மூக்கில் மெதுமை, கோபத்தில் மெதுமை). ஆண்டவருக்கு பேரன்பு என்ற அழகான பண்பு மகுடமாக சூட்டப்படுகிறது (חָסֶד ஹெசெட்- அன்பிரக்கம்). மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்புகள் ஆண்டவருக்கு மட்டுமே அதிகமாக விவிலியத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்க வேண்டும்


.9 (טֹ - தெத்): ஆண்டவர் அனைவருக்கும் (அனைத்திற்கும்) நன்மை செய்கிறவராக பார்க்கப்படுகிறார். இந்த அனைத்து (כֹּל கோல், சகலமும்) என்பதை அவர் உருவாக்கியவை என காட்டுகிறார் ஆசிரியர். ஆக இந்த உலகத்தில் கெட்டவை என்பது கிடையாது, அனைத்தும் நல்லவை, அவையனைத்தையும் ஆண்டவரே உருவாக்கியுள்ளார் எனக் காட்டுகிறார். ஆண்டவருடைய இரக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக அது அனைத்திற்கும் உரியது. இந்த சிந்தனை சாதாரண யூத சிந்தனையிலிருந்து மாறுபட்டது


.10: - யோத்): இப்படியாக ஆண்டவர் உருவாக்கிய (מַעֲשֶׂה மா'அசெஹ்- உருவாக்கியவை) அனைத்தும் அவருக்கு நன்றி செலுத்துகின்றன. இந்த ஆண்டவர் உருவாக்கியவை என்பவை ஆண்டவருடைய அன்பர்கள் (חָסִיד ஹசிட்- தூயவர், அன்பர்) என பெயர் பெறுகின்றன


.11 (כּ - கப்): இந்த அன்பர்கள் கடவுளுடைய ஆட்சியின் வித்தியாசத்தை அறிவிக்கிறவர்கள் அதாவது அவருடைய வல்லமையை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆண்டவரை அரசராக பார்ப்பதும் அவருடைய அரசில் நன்மைத்தனங்களை பாடுவதும், முதல் ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். இதனைக் கொண்டு அவர்கள் மனித அரசர்களை பாராட்டவும், எச்சரிக்கை செய்யவும் செய்தார்கள்


.12 - லமெத்): இந்த தூயவர்கள் மானிடர்க்கு ஆண்டவரின் வல்ல செயல்களை சொல்கிறார்கள். மானிடர்கள் என்பவர்கள் இங்கே ஆண்டவரை அறியாத வேற்றின மக்களைக் குறிக்கலாம். இந்த மானிடர்களைக் குறிக்க ஆதாமின் மக்கள் (בְנֵי הָאָדָם வெனே 'ஆதாம்) என்ற சொல் பயன்படுகிறது. இந்த சொல் சில வேளைகளில் இஸ்ராயேல் மக்களையும் குறிக்க பயன்படுகிறது. ஆண்டவருடைய ஆட்சிக்கு பேரொளி உள்ளதாகவும் ஆசிரியர் காட்டுகிறார்


.13 מ - மெம்): அனைத்து மன்னர்களுடைய ஆட்சியும் காலத்திற்கு உட்பட்டதே. மன்னர்களின் ஆட்சிகள் தொடங்குகின்றன பின்னர் அவை முடிவடைகின்றன. ஆளுகை என்பது அவர்களின் ஆட்சி நடைபெறும் இடங்கள். இவையும் மாற்றமடைகின்றன. ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் அவர் இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர். இதனைத்தான் ஆசிரியர் அழகாகக் காட்டுகிறார். ஒருவேளை இந்தப் பாடல் இடப்பெயர்விற்கு பின்னர் அல்லது யூதேய அரசு சிக்கலான காலங்களில் இருந்த போது எழுதப்பட்டிருந்தால், இந்த வரி அதிகமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்


.14 (סֹ - சாமெக்): இந்த பதிநான்காவது வரி எபிரேய (அரமேயிக்க) எழுத்தில் நுன்னாக 

ן ,) இருந்திருக்க வேண்டும். எதோ ஒரு முக்கிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நுன் விடப்படுகிறது. அதற்கு பதிலாக சாமெக் வருகிறது, இது பதினைந்தாவது எழுத்து. சில கும்ரானிய படிவங்கள் இந்த பதிநான்காவது எழுத்திற்கும் ஒரு வரியை புகுத்த முயன்றிருக்கின்றன, ஆனால் பிற்காலத்தில் அவை மூலப் பாடலின்படியே விடப்பட்டுள்ளன. கும்ரானிய பிரதியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வரி இவ்வாறு வருகிறது: 'ஆண்டவருடைய வார்த்தைகள் எக்காலத்திற்கும் நம்பக்கூடியவை, அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிகைக்கு உரியவை'  

சாமெக் வரி, பாதிக்கப்பட்டவர்களை கடவுள் எப்படி காக்கிறார் எனக் காட்டுகிறது. கடவுள் தடுக்கி விழுகிறவர்களை காக்கிறவராக காட்டப்படுகிறார். இந்த தடுக்கி விழுகிறவர்களை எபிரேய விவிலியம், துன்புறுகிறவர்கள் மற்றும் மற்றவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் போன்றோரைக் குறிக்கிறது (הַנֹּפְלִים ஹநோப்லிம்- விழுகிறவர்கள்: הַכְּפוּפִים ஹப்பூபிம்- ஊக்கமிழந்தவர்கள்). 


.15 (ע '- அயின்): அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்குபவராக கடவுள் காட்டபடுகிறார். இந்த வரியை எபிரேயே விவிலியம், 'அனைத்து கண்களும் உம்மையே எதிர்பார்க்கின்றன' என்ற வரியில் காட்டுகிறது, அத்தோடு கடவுள் அனைத்திற்கும் தக்க காலத்தில் உணவளிக்கிறவர் எனவும் காட்டுகிறது. இங்கே கடவுள் அதிசயம் செய்து, காலங்களை கடந்து அல்லது காலத்திற்கு புறம்பாக உணவளிப்பவராக காட்டப்படவில்லை, மாறாக அவர் தக்க காலத்திலேயே உணவளிக்கிறார். அதாவது காலங்களை அவர் நெறிப்படுத்துகிறார் எனலாம். அதிசங்களை 

இயற்கைக்கு வெளியில் தேடாமல், இயற்கையே அதிசயம்தான் என்ற அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது


.16 (פּ , ף - பே): ஆண்டவர் தன் கைகளை திறந்து அனைத்து உயிரினங்களினதும் தேவைகளை நிறைவேற்றுகிறவராக பாடப்படுகிறார். ஆண்டவர் கரங்களை திறத்தல் என்பது, வானங்களை திறந்து மழைநீரை வழங்குவதைக் குறிக்கலாம். மழைநீர் அனைத்து உயிரினங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதால் இப்படி உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஆண்டவரின் கரங்களில் அனைத்து விதவிதமான உணவுகளும் அடங்கியிருக்கின்றன என உருவகங்கள் மூலமாகக் காட்டுகிறாh. 



.17 (צ , ץ, ட்ச- ட்சாதே ): உலக அரசர்கள் தங்களுக்கென்று நீதியை வைத்திருக்கிறார்கள். நாடுகள், கலாச்சாரங்கள், சுய தேவைகள் என்பவற்றிருக்கு ஏற்ப உலக நீதி மாற்றமடைகிறது அல்லது திரிபடைகிறது. ஆனால் கடவுளை பொறுத்தமட்டில் அவரது நீதிக்கு மாற்றம் கிடையாது அவர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளவராகவே இருக்கிறார். இந்த அனைத்து செயல்களில் ஆண்டவரின் தண்டனையும் உள்ளடங்கும். ஆண்டவர் தண்டிக்கும்போதும் நீதியுள்ளவராகவே 

இருக்கிறார். צַדִּיק  יְהוָה ட்சாதிக் அதோனாய் (ஆண்டவர் நீதியுள்ளவர்) בְּכָל־דְּרָכָיו பெகோல்-தெராகாய்வ் (அவருடைய வழிகள் அனைத்திலும்). 



.18 - கோப்): ஆண்டவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி விவிலியத்தில் மிக முக்கியமானது. பல இடங்களில் ஆண்டவர் வானத்தில் இருக்கிறார் என விவிலியம் காட்டினாலும், ஆண்டவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை இந்த வரி ஆழமாகக் காட்டுகிறது. அதுவும் அந்த விசுவாசிகள் கடவுளை உண்மையில் அழைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பையும் தருகிறது


.19 - ரெஷ்): ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மெச்சப்படுகிறார்கள். காட்டுச் சுதந்திரத்தையும், பொறுப்பில்லாத தனிமனித சுதந்திரத்தையும் பாராட்டுகின்ற இந்த உலகிற்கு, கடவுள்-அச்சம் ஒரு உரிமை மீறலாகவே காணப்படும். விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்ற கடவுள் அச்சம் என்பது, மரியாதை மற்றும் அன்பு கலந்த விசுவாச அச்சத்தைக் குறிக்கும். இங்கே மனிதர்கள் பயத்தால் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள் என்றில்லை, மாறாக சட்டங்களில் உள்ள தேவைகள் மற்றும் கடவுளில் உள்ள அன்பின் பொருட்டு அதனை செய்கிறார்கள். இதனைத்தான் ஆசிரியர் பாராட்டுகிறார். இவர்களின் தேவையை கடவுள் நிறைவேற்றுகிறார் என்கிறார்


.20 (שׁ - ஷின்) இந்த வரி கடவுளை பாதுகாக்கிறவராகக் காட்டுகிறது (שׁוֹמֵר ஷோமெர்). ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொண்டவர்களை பாதுகாக்கின்றவேளை, பொல்லார்களை அழிக்கிறார். பாதுகாக்கிறவர் அழிக்கிற வேலையையும் செய்கிறவர் என்ற சிந்தனை பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த சிந்தனை புதிய ஏற்பாட்டில் மெதுவாக மாற்றம் பெறுகிறது


.21- தௌ): இந்த இறுதி வரியில் தன்னுடைய வாயையும், உடல் கொண்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக்கி, இவை ஆண்டவரின் திருப் பெயரின் புகழை அறிவிப்பதாக என்று ஒரு விருப்பு வாக்கியத்தை அமைக்கிறார். உடல் கொண்ட அனைத்தும் என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும்


எபேசியர் 4:1-6

கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை

1ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். 2முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, 3அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். 4நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே தூய ஆவியும் ஒன்றே. 5அவ்வாறே ஆண்டவர் ஒருவரே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே திருமுழுக்கு ஒன்றே. 6எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.


.1: தன்னை ஆண்டவர் பெயரால் கைதியாக இருக்கும் ஒருவர் என அறிமுகப் படுத்துகிறார் அத்தோடு தன் சீடர்களை ஆண்டவருக்கு உரிய வாழ்க்கையை வாழுமாறு மீண்டும் கட்டளையிடுகிறார். எபேசியர் திருமுகமும் சிறைக்கூட திருமுகங்களில் ஒன்று என்பதற்கு இந்த வரி சான்றாகலாம் (ὁ δέσμιος ἐν κυρίῳ ஹொ தெஸ்மியொஸ் என் கூரியோ- ஆண்டவரில் கைதியான). 

அதேவேளை அவர் தன்னை கைதி என்று சொல்லாமல், 'ஆண்டவரின் கைதி' என்பது ஒருவேளை அவருடைய கிறிஸ்தவ சீடத்துவத்தை குறிக்கலாம் என்ற ஆழமான வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆக இந்த திருமுகத்தை எழுதியபோது பவுல் உண்மையில் அரசியல் கைதியாக இருந்தாரா அல்லது, இயேசுவில் அவர் மேல் கொண்ட அன்பினால் தன்னை 'இயேசுவில் கைதி' என்று குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது

கிறிஸ்தவராக இருப்பது ஒரு அழைப்பு என்ற இறையியல் இங்கே முன்வைக்கப்படுகிறது

இந்த அழைப்பிற்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழக் கேட்கப்படுகிறார்கள் (ἐκλήθητε எக்லேதேடெ- அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்). 


வவ.2-3: சில முக்கியமான விழுமியங்களை வாழும் படி கேட்கிறார். முழு மனத்தாழ்மையோடும் (ταπεινοφροσύνης டாபெய்நொப்ரொசுனேஸ்), கனிவோடும் (πραΰτητος பிராவ்டேடொஸ்), பொறுமையோடும் (μακροθυμίας மக்ரொதுமியாஸ்), ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி (ἐν ἀγάπῃ என் அகாபே), அமைதியில் இணைந்து (τῆς εἰρήνης டேஸ் எய்ஸ்ரேனேஸ்), தூய ஆவி அருளும் ஒருமைப் பாட்டை காத்துக்கொள்ள கட்டளையிடுகிறார்

இங்கே சொல்லப்படுகின்ற விழுமியங்கள் கிறிஸ்தவ வாழ்விற்கும், திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்கும் மிக முக்கியம் என்பதை பவுல் உணர்ந்திருக்கலாம், அல்லது இவை 

இல்லாமையினாலேதான் திருச்சபையில் பல சிக்கல்கள் உருவாகின்றன என்பதையும் அவர் சந்தேகித்திருக்கலாம்


.4: பவுலுடைய இறையியலில் 'எதிர்நோக்கு' (ἐλπίς எல்பிஸ்) என்பது மிக முக்கியமான ஓர் 

இறையியல் பதம். இன்று உலகு, எதிர்நோக்கு என்ற பதத்திற்கு வேறு அர்த்தங்களைக் கொடுத்தாலும், விவிலியத்தில் எதிர்நோக்கு நம்பிக்கையோடு தொடர்புபட்ட ஒரு விழுமியமாக பார்க்கப்படுகிறது. ஒருவர் தான் நம்புகின்ற விசுவாச உண்மைகள் நடக்கும் என எதிர்பார்ப்பதை எதிர்நோக்கு எனலாம். உதாரணமாக இயேசுவின் இரண்டாம் வருகை, நிலைவாழ்வு, நீதித்தீர்ப்பு போன்றவை எதிர்நோக்காக கருதப்படலாம். நம்பிக்கை வேறு, எதிர்நோக்கு வேறு. எதிர்நோக்கில் ஒருவர் தன்னுடைய நம்பிக்கையை எதிர்பார்க்கிறார். இதனை நம்பிக்கை கலந்த காத்திருப்பு என்றும் அழைக்கலாம்

கிறிஸ்தவர்களுடைய எதிர்நோக்கு, என்றும் ஒன்றே என்பதை ஒரே உடலுடனும், ஒரே ஆவியுடனும் ஒப்பிடுகிறார். இங்கே உடல் திருச்சபையை குறிக்கிறது என எடுக்கலாம். திருச்சபை தன்னிலே ஒன்று, என்ற வாதம் எபேசியர் திருமுகத்தில் முன்வைக்கப்படுகிறது, (Ἓν σῶμα καὶ ἓν πνεῦμα என் சோமா காய் என் புனுமா- ஒரே உடல் மற்றும் ஒரே ஆவி). 


.5: பிரிவினைவாதம் ஆரம்ப கால திருச்சபையை பாதித்த மிக முக்கியமான சவாலாக பார்க்கப்படுகிறது. இவற்றிக்கு எதிராகத்தான் பல திருமுகங்கள் எழுதப்பட்டன. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய படி குழுக்களை உருவாக்கி அதற்கு தூய ஆவியரின் பெயர்களை வைப்பது பிற்காலத்தில் பல சிக்கல்களை உருவாக்கும், அதே வேளை யூத மற்றும் உரோமைய சவால்களை சமாளிப்பதற்கும் இவை இடைஞ்சலாக இருக்கும் என்பதையும் ஆரம்ப கால திருச்சபை தலைவர்கள் நன்கு அறிந்திருந்தனர்

ஆண்டவரும், நம்பிக்கையும், திருமுழுக்கும் ஒன்றே என்று சொல்வதன் மூலம், அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கிடையில் பிரிவினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (εἷς κύριος, μία πίστις, ἓν βάπτισμα, எய்ஸ் கூரியோஸ், மியா பிஸ்டிஸ், என் பப்டிஸ்மா- ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு). 


.6: இவை எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளும் ஒருமையின் உதாராணத்திற்கு எடுக்கப்படுகிறார். . கடவுளை எல்லோருக்கும் தந்தை எனவும் (πατὴρ பாடேர்), அவர் எல்லோருக்கும் மேலானவர் எனவும் (ἐπὶ πάντων எபி பன்டோன்), எல்லோருக்கும் மூலம் எனவும் (διὰ πάντων தியா பன்டோன்), மற்றும் எல்லோருக்குள்ளும் இருப்பவர் (ἐν πᾶσιν என் பாசின்) என்றும் சொல்லப்படுகிறது

வரிகள் 4-6 போன்றவற்றில் 'ஒன்று' என்ற வார்த்தை ஏழு தடவைகள் பாவிக்கப்பட்டுள்ளன

இது ஒருமையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற அதே வேளை, ஒரு காலைச் செபம் போன்ற வடிவத்தையும் உருவாக்குகின்றது. யூதர்கள் தினமும் காலையில் 'ஷேமா யிஸ்ராயேல்

(இஸ்ராயேலே கேள்) என்ற செபத்தை செபிப்பார்கள், இது ஒரு கடவுள் நம்பிக்கையை நினைவூட்டுகின்ற செபம் (. 6,4), இதனை ஒத்ததாக எபேசியர் திருமுக வரிகள் அமைகின்றன


யோவான் 6,1-15

இரண்டாம் பாஸ்கா விழா

அப்பம் பகிர்ந்தளித்தல்

(மத் 14:13-21 மாற் 6:30-44 லூக் 9:10-17)

1இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' என்று பிலிப்பிடம் கேட்டார். 6தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7பிலிப்பு மறுமொழியாக, 'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' என்றார். 8அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 'இங்கே சிறுவன்ஒருவன் இருக்கிறான்

அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். 10இயேசு, 'மக்களை அமரச் செய்யுங்கள்' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

12அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார். 13மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். 15அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.


சமநோக்கு நற்செய்தியைப் போலல்லாது, ஆண்டவரின் திருவிருந்து நிகழ்வுகளை அதிகமான அடையாளங்கள் மற்றும், உருவகங்கள் வாயிலாக யோவான் நற்செய்தியாளர் காட்டுகிறார். இவருக்கு இது வரலாற்று நிகழ்வு என்பதை விட, இறையியல் நிகழ்வாகவே முக்கியம் பெறுகிறது. அப்பங்களை பகிர்ந்தளித்த நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் காணப்படுகின்றமை நோக்கப்படவேண்டும். இந்த நிகழ்வு திபேரியக் கடற்கரையில் நடைபெறுவது போல காட்டப்படுகிறது. இந்த பகுதி இன்றைய 'கோலான் குன்றுகள்' பகுதியாக இருந்திருக்க வேண்டும். சமநோக்கு நற்செய்தியில் சீடர்களே அப்பம் பலுகும் நிகழ்வில் முயற்சி எடுக்கிறார்கள், ஆனால் யோவான் நற்செய்தியில் இயேசுவே அந்த முயற்சியை தொடக்கிவைத்து, முடித்தும் வைக்கிறார். அத்தோடு இந்த பகுதியில் இயேசு பிலிப்பையும், அந்திரேயாவையும் பெயர் சொல்லி கட்டளையிடுகிறார் இதன் மூலம், இங்கே நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அவர் அறிந்திருக்கிறார் என்பது புலப்படுத்தப்படுகிறது


.1: இயேசு கலிலேயக் கடற்கரையை கடந்து மறுகரைக்குச் செல்கிறார். இது கலிலேயக் கடற்கரையின் கிழக்கு கரையாக இருந்திருக்க வேண்டும். கலிலேயக் கடற்கரை இயேசுவின் அதிகமான பணிகளை பெற்றிருக்கிறது. இயேசுவின் நகர் நாசரேத்து இந்த பகுதியில் இருந்த படியாலும், அதிகமான சீடர்கள் இந்த பகுதியை சார்ந்தவர்களாக இருந்ததாலும், அல்லது அவர் கலிலேயாவை தன்னுடைய பணித்தளமாக கொண்டதாலும் இந்த இடம் இயேசுவோடு மிக முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்

யோவான், கலிலேயக் கடலுக்கு திபேரியக் கடல் என்ற பெயரும் உண்டு என்கிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் இந்த பெயர் இக்கடலுக்கு சூட்டப்படவில்லை. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் இந்த பெயர் கொடுக்கப்பட்டது. திபேரியூ சீசரின் பெயர் இந்த கடலுக்கு கொடுக்கப்பட்டது. τῆς θαλάσσης  τῆς Γαλιλαίας τῆς Τιβεριάδος டேஸ் தாலாஸ்சேஸ் டேஸ் காலிலாய்யாஸ் டேஸ் திபெரியாதொஸ். யோவான் மட்டும்தான் கலிலேயக் கடலை திபேரியக் கடல் என அழைக்கிறார். இந்த கடலுக்கு அருகில் திபேரியாஸ் என்ற நகரை கி.மு 20களில் எரோது கட்டினார்


.2: உடல் நலமற்றோருக்கு இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரை பின்தொடர்கின்றனர். இந்த குணமாக்கலை யோவான் தனக்கே உரிய வார்த்தையான 'அரும் அடையாளம்' என்கிறார். σημεῖον சேமெய்யோன்- அடையாளம்

பொரும் திரளான மக்கள் என்பது (ὄχλος πολύς, ஒக்லொஸ் பொலுஸ்), சீடர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை அவர்கள் சாதாரண மக்களாக இருந்திருக்கலாம்


.3: இயேசு மலைமேல் ஏறி அமர்கிறார் அவரோடு சேர்ந்து சீடர்களும் அமர்கிறார்கள். மக்கள் கிழே இருக்க, இயேசுவும் சீடர்களும் மலைமேல் ஏறி அமர்வது அவரை உயர்ந்த இடத்தில் வைக்கிறது. அதாவது அவர் சாதாரண மக்கள் கூட்டத்தை சார்ந்தவர் அல்ல என்பதையும், அவரின் சீடர்கள், சாதாரண கூட்டத்தை சார்ந்தவர்கள் இல்லை என்பதையும் காட்டுகிறது

பெரிய போதகர்கள் மற்றும் இறைவாக்கினர்கள், மலைகளில் மீது ஏறியே இறைவாக்கு உரைத்தார்கள். மலை மற்றும் மலையை சார்ந்த உயர்ந்த இடங்கள் கடவுளின் பிரசன்னத்தைக் குறித்தன


.4: இந்த காலப்பதியில்தான் யூதர்களின் பாஸ்கா விழா கொண்டாடப்படவிருந்தது. πάσχα பாஸ்கா

இந்த பாஸ்கா விழா, எகிப்திலிருந்து கடவுள் இஸ்ராயேல் மக்களை மீட்டுக் கொண்டு வந்ததையும், அழிக்கும் வானதூதர், இஸ்ராயேல் வீடுகளைக் கடந்து, எகிப்திய தலைச்சான் பிள்ளைகளை அழித்த நிகழ்வைக் குறிக்க ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டது

இஸ்ராயேலருடைய மிக முக்கியமான மூன்று விழாக்களில் இது முதன்மையானது (காண்க வி. 12). இதனை புளியாத அப்பத்திருவிழா என்றும் அழைக்கின்றனர், அல்லது அந்த விழாவோடு இந்த விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் (ஏழு நாட்களில்) புளித்த மாவால் செய்த அப்பத்தை இஸ்ராயேலர்கள் உண்பது கிடையாது. பிற்காலத்தில் பலியிடப்பட்ட செம்மறிக்கும் இந்த பெயர் வழங்கப்பட்டு அது பாஸ்கா செம்மறி என அழைக்கப்பட்டது


.5: இயேசு நிமிர்ந்து மக்களைப் பார்க்கின்றார் (Ἐπάρας οὖν τοὺς ὀφθαλμοὺς ὁ Ἰησοῦς καὶ θεασάμενος எபாராஸ் ஹுன் டூஸ் ஒப்தால்மொஸ் ஹொ ஈயேசூஸ் காய் தெயாசொ). நிமிர்ந்து பார்த்தலும், கடவுளுடைய பண்பைக் குறிக்கின்றது. கடவுள் நிமிர்ந்து பார்க்கிறார் என்பது அவர் மக்களுடைய தேவையில் கரிசனை கொள்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவருக்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் தன்னிம் வருவது நன்கு தெரிந்திருக்கிறது. யோவான் நற்செய்தியில் 

இயேசு அனைத்தையும் அறிந்திருக்கின்ற ஆண்டவர் என்பது இங்கு விளங்குகின்றது

இயேசு பிலிப்பிடம் ஒரு முக்கியமான கேள்வி ஒன்றை கேட்கிறார் (πόθεν  ἀγοράσωμεν ἄρτους ἵνα φάγωσιν οὗτοι; பொதென் அகொராசோமென் ஆர்டூஸ் ஹினா பாகோசின் ஹுடொய்- இவர்களுக்கு உண்ணக் கொடுக்க எங்கே உணவு வாங்கலாம்?). இயேசு அனைத்தையும் அறிந்திருக்கின்ற ஆண்டவர், எதோ ஒரு தேவைக்காகவே இந்தக் கேள்வியை பிலிப்பிடம் கேட்கிறார்


.6: நம்முடைய ஊகத்தை இந்த வரி தெளிவுபடுத்துகிறது. இயேசு தான் செய்யப்போவதை அறிந்திருந்தும், பிலிப்பை சோதிக்கவே இந்த கேள்வியை கேட்கிறார் என யோவான் காட்டுகிறார். (πειράζων αὐτόν· பெய்ராட்சோன் அவ்டொன்- அவரை சோதனை செய்து). 


.7: பிலிப்பு மனித அறிவிலிருந்து சாதாரணமாக பதிலளிக்கிறார். இருநூறு தெனாரியத்திற்கு உணவு வாங்கினாலும், இங்கிருப்பவருக்கு ஒரு துண்டும் கிடைக்காது என்கிறார். ஓரு தெனாரியம் ஒரு நாட் கூலியாக உரோமையருடைய காலதத்தில் புனித பூமியில் கொடுக்கப்பட்டது. ஆக இருநூறு தொனாரியம் என்பது ஆறு மாதகால நாட்கூலிகள் (διακοσίων δηναρίων தியாகொசியோன் தேனாரியோன்- இருநூறு தொனாரியங்கள்). இன்றைய காலத்தில் ஒரு நாளைக்கு 1500 இலங்கை ரூபாய்கள் நாட்கூலியாக கொடுக்கப்பட்டால், இது மூன்று இலட்சத்தைத் தாண்டும் (300,000.00). இதிலிருந்து அங்கே கூடியிருந்த மக்கள் திரள் எவ்வளவு என்பது புரியும். இப்படியாக திரளான மக்கள் கூட்டத்திற்கு இயேசு எப்படி தன்னுடைய குரலால் பேசினார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது


வவ.8-9: சீமோன் பேதுருவின் சகோதரரான அந்திரேயா, இயேசுவின் கேள்விக்கு பிலிப்பை விட சற்று வித்தியாசமான விடையை கொடுக்க முன் வருகிறார். இவர் அங்கிருந்த ஒரு சிறுவனின் உணவுக் கையிருப்பை அறிந்திருந்து, அவரிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன என்கிறார். இருந்தும் இவை இந்த சனத்திரளுக்கு எப்படி போதும் என்பது இவருடைய கேள்வி

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் (πέντε ἄρτους κριθίνους καὶ δύο ὀψάρια· பென்டெ ஆர்த்டொஸ் கிரிதிநூஸ் காய் துவொ ஒப்சாரியா) ஆடையாள மொழியில் பாவிக்கப்டுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. அப்பங்களும் மீன்களும் சாதாரண மக்களின் உணவாக இருந்தன

இரண்டும் ஐந்தும் சேர்ந்து நிறைவான ஏழு என்ற இலக்கத்தை உருவாக்கின்றன. இருப்பினும் 

இரண்டும், ஐந்தும் தன்னிலே நிறைவான இலக்கம் அல்ல, அதாவது அங்கிருந்த உணவு மிகவும் சொற்பமானது என்பதை இது காட்டுகிறது எனலாம். இந்த நிகழ்விற்கு பின்னர், திருச்சபையின் வரலாறில் இந்த அடையாளங்கள் நற்கருணை விருந்தை குறிக்க பயன்படுத்தப்பட்டன

இயேசுவுடைய உயிர்ப்பின் பின்னர், மீன் அடையாளம் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்களை குறிக்க பயன்பட்டது


.10: இயேசு மக்களை அமரச் சொல்லி கட்டளை கொடுக்கிறார். மக்களை அமரச் சொல்லிக் கட்டளை கொடுப்பதும், இயேசுவை அதிகாரமுள்ள கடவுளாக காட்டுகிறது. கலிலேயக் கடற்கரையை அண்டிய பகுதிகளில் புற்தரைகள் அதிகமாக இருந்தன. இந்த பகுதிகளுக்கு 

இயேசுவும் சீடர்களும் அடிக்கடி செல்வது வழமையாக இருந்திருக்கிறது. இங்கு இருந்த மக்களின் எண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்திருக்கிறது

ஐயாயிரம் என்பது மிக பெரிய எண்ணிக்கை (πεντακισχίλιοι பென்டாகிஸ்கிலியோய்- ஐந்து ஆயிரங்கள்). ஆண்களே ஐயாயிரம் என்றால் பெண்களும் பிள்ளைகளும் அதிகமாகவே 

இருந்திருப்பார்கள் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள் பெண்களும் பிள்ளைகளும் இங்கிருந்திருக்க வேண்டிய தேவையில்லை என்றும் வாதிடுகின்றனர். எப்படியாயினும் ஐயாயிரம் என்பது மிக பெரிய தொகையே


.11: விவிலிய ஆய்வாளர்கள் இந்த வரியில் முக்கியமான சில செயற்பாடுகளை அவதானிக்கின்றனர். முதலில் இயேசு அப்பங்களை எடுக்கிறார் (ἔλαβεν  எலாபென்), பின்னர் நன்றி சொல்கிறார் (εὐχαριστήσας  எவ்காரிஸ்டேசாஸ்), பின்னர் கொடுக்கிறார் (διέδωκεν தியெதோகென்). இந்த வினைச் சொற்கள், பாஸ்கா விழாவை இயேசு கொண்டாடியபோது அப்பங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை இந்த வார்த்தைகள் தற்போதைய நற்கருணை மன்றாட்டுக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன

யூதர்கள் ஒவ்வொரு பந்தியின் முன்னரும், அந்த நாளுக்காவும், அந்த உணவிற்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள், அதனை எபிரேய மொழியில் பரூக்கொத் என அழைக்கிறார்கள். இது ஒருவகையான நன்றி அல்லது ஆசீர்வாத செபம் என்று கூடச் சொல்லலாம். அப்பத்தைப் போல மீன்களையும் இயேசு எடுத்து, நன்றிசொல்லி, பகிர்ந்தளிக்கிறார்

இந்த இடைவெளியில் அப்பங்களும் மீன்களும் பலுகியிருக்க வேண்டும். அதனை யோவான் குறிப்பிடவில்லை

.12: மக்கள் வயறார உண்கிறார்கள். இந்த வரி மூலமான மக்கள் உண்மையாகவே உண்டார்கள் என்பது சொல்லப்படுகிறது. இங்கே அடையாள உணவுப் பறிமாற்றம் நடைபெறாமல் உண்மையாகவே விருந்து கொடுக்கப்படுகிறது எனலாம். பசித்தவர்களுக்கு முதலில் உண்ணக் கொடுக்க வேண்டும் என்பதில் இயேசு கவனமாக இருக்கிறார்

உணவை பலுகச் செய்தாலும், இந்த ஆண்டவர் இயேசு உணவை விரயமாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். மிஞ்சியவற்றை சேகரிக்கச் சொல்கிறார் (λέγει τοῖς μαθηταῖς αὐτοῦ· லெகெய் டொய்ஸ் மாதேடாய்ஸ் அவ்டூ- அவர் சீடர்களுக்கு சொன்னார்:). இவற்றை வைத்து இயேசுவின் சீடர்களும் என்ன செய்தார்கள் என்பது சொல்லப்படவில்லை, நிச்சயமாக இவை பின்னர் பயன்படுத்தப்பட்டிருக்கும் எனலாம்


.13: மக்கள் நிறைவாக உண்டபின்னர், ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய 

தூண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர். பன்னிரண்டு நிறைவு அல்லது முழுமையின் அடையளாம் (δώδεκα κοφίνους தோதெகா கொபிநூஸ் - 12கூடைகள்). 

ஐந்து கூடைகளில் இருந்துதான் அப்பங்கள் பெருகியிருக்கின்ற என்பதை இன்னொரு முறை யோவான் தெளிவாகக் காட்டுகிறார். அதாவது வேறு இடத்திலிருந்து அப்பங்கள் வரவில்லை என்பது தெளிவாகிறது


.14: உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே என்று மக்கள் இயேசுவை அடையாளம் காண்கிறார்கள். இந்த சொற் தொடர் மெசியாவை குறிப்பது போல உள்ளது (οὗτός ἐστιν ἀληθῶς ὁ προφήτης ὁ  ⸉ἐρχόμενος εἰς τὸν κόσμον⸊.  ஹுடொஸ் எஸ்டின் அலேதூஸ் ஹொ புரொபேடேஸ் ஹொ எர்கொமெனொஸ் எய்ஸ் டொன் கொஸ்மொன்- உண்மையாகவே உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே). 

மக்கள் கண்டதை யோவான் பெரிய அருளடையாளம் என்கிறார் (σημεῖον செமெய்யோன்- அடையாளம்). 


.15: யோவானின் இந்த பார்வை அவருக்கே உரிய தனித்துவமான பார்வை. யோவானின் இயேசு அனைத்தையும் அறிந்த ஆண்டவர். மக்கள் வயிராற உண்டிருக்கிறார்கள். உணவு இவர்களின் மிக முக்கியமான அடிப்படை தேவையாக இருக்கிறது. இந்த காலத்தில் இந்த வேலையை நாட்டு அரசியல் மற்றும் சமய தலைவர்கள் செய்ய மாட்டார்கள், அன்னிய ஆட்சியாளர்களான உரோமையர்களும் செய்ய மாட்டார்கள். இதனை மெசியாவால் மட்டுமே செய்ய முடியும், அல்லது இதனை செய்கிறாவர் அரசராக வரவேண்டும். இதனை இயேசு அறிந்திருக்கிறார்

இருப்பினும் மக்களின் சிந்தனையில் உள்ள உலக அரசர் தான் இல்லை என்பதிலும் இயேசு நிதானமாக இருக்கிறார். அதனால்தான் அந்த சந்தர்பத்தையும் தவிர்க்கிறார். அவர் தனியாக மீண்டும் மலைக்கு ஏறி செல்கிறார். யோவானின் கடவுள் தனித்துவமானவர். அவர் திட்டங்களை அவர்தான் தீர்மானிக்கிறார், மக்களோ ஆட்சியாளர்களோ அல்ல. அவர் சீடர்களையும் மக்களோடு விட்டுவிட்டே செல்கிறார் எனலாம் ἀνεχώρησεν πάλιν εἰς τὸ ὄρος αὐτὸς μόνος அனெகோரேசென் பாலின் எய்ஸ் டொ ஹொரொஸ் அவ்டொஸ் மொனொஸ்- அவர் தனியாக மீண்டும் மலைக்கு அகன்றார்


இந்த உலகின் வறுமையும் பஞ்சமும் இயற்கையானது அல்ல

கடவுள் அனைவருக்கும் தேவையானதை, போதியளவு படைத்திருக்கிறார்

இவ்வுலகின் வளங்கள் ஆயிரம் தலைமுறைக்கு போதுமானவை

இல்லாவிட்டாலும் அதனை தரக்கூடியவர் நம் கடவுள்

மனிதனின் சுயநலமும், அடங்காத பசியும்தான் இவ்வுலகில்

வறுமையையும், பஞ்சத்தையும் உண்டாகுகின்றன

மிகச் சிலர், எதனை தெரிவு செய்வது என்று செல்வத்தில் திழைக்க

வெகு பலர், எதவாது கிடைக்குமா என ஏங்குகின்றனர்

பகிராமை ஒரு நோய். திருப்பதிப்படாமையும் ஒரு பெரும் நோய்


உணவை விரயமாக்குவதும், பசியில்லாவிட்டாலும் உண்ண முயல்வதும்

மனித விலங்குகளுக்கே உரிய செயற்கையான குணம்




என்னிடம் மேலதிகமாக உள்ளது மற்றவருடையது என காட்டும் ஆண்டவரே!

உணவு கொடுக்க சொல்லித்தாரும் ஆண்டவரே! ஆமென்



உணவில்லாமல் பசியால் வாடும் பிள்ளைகளுக்கும்

வறுமையிலே பிறந்து வறுமையிலே இறக்கும் அனைவருக்கும் 

சமர்ப்பணம்!!! 


  



 

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு (ஆ) (08.09.2024)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு ( ஆ ) (08.09.2024) முதல் வாசகம் : எசாயா 35,4-7 பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 146 இர...