ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கிறிஸ்துபிறப்பு விழா நள்ளிரவு திருப்பலி 24-25, 12, 2023


 

கிறிஸ்துபிறப்பு விழா நள்ளிரவு திருப்பலி

24-25, 12, 2023

 

முதல் வாசகம்: எசாயா 9:1-6

            இந்த வாசக பகுதி, எசாயா இறைவாக்கு புத்தகதத்தின், முதல் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. மிகவும் நம்பிக்கை தரும் வாசக பகுதிகளில், இந்த பகுதி, மிக முக்கியமானது. அத்தோடு, இந்த பகுதி, மெசியாவின் விடியல், என அறியப்படுகிறது, இன்னும் அதிசயமாக, இந்த அழகான பகுதி, ஒவ்வொரு வருடமும், இந்த விழாவில் மட்டும்தான் வாசிக்கப்படுகிறது. இதே வாசக பகுதியை, மத்தேயு, இயேசு ஆண்டவரின், வருகைக்கு ஒப்பிட்டு, விளக்குவார். எசாயா 7ம் அதிகாரத்தில், இம்மானுவேல் அடையாளத்தை வழங்கிய எசாயா, இந்த பகுதியில், இஸ்ராயேல் நாட்டை சூழந்துள்ள, இருள்கள் அனைத்தும், ஆண்டவரின் பெயரால், அழிந்து போகும், என்ற நம்பிக்கையைத் தருகிறார். கவனமாக எசாயாவின் இறைவாக்கிற்கு, செவிகொடுப்போம்.

 

திருப்பாடல்: 96

திருப்பாடல்கள் 95-100 வரையுள்ளவை, அரச முடிசூட்டுப் பாடல்கள், என அறியப்படுகின்றன. இந்த பாடல்கள், ஆண்டவரின் அரசத்துவத்தைப் பற்றிப் பாடுகின்றன. திருப்பாடல் 96இன் பின்புலத்தை, சில ஆய்வாளர்கள் தாவீதோடு இணைத்துப்பார்க்கின்றனர். தாவீது ஆண்டவரின் திருப்பேழையை, ஒபேத்-ஏதோம் வீட்டிலிருந்து எருசலேமிற்கு கொண்டு வந்தார், பின்னர் அதனை அதற்கென ஆயத்தம் செய்த, இடத்தில் வைத்தபின்பு, அங்கே எரிபலிகளையும், தானிய பலிகளையும் ஒப்புக்கொடுத்தார். இறுதியாக, தாவீது குருவாக செயற்பட்டு, அங்கே கூடியிருந்த தன் மக்களுக்கு, ஆண்டவரின் ஆசிரையும், பரிசுப்பொருட்களையும் கொடுக்கிறார். மேலுமாக தாவீது, சில லேவியர்களையும், பாடகர்களையும், ஆண்டவரின் கூடாரத்தில் பணியாற்றுமாறு, வேலைக்கு அமர்;த்துகிறார். இப்படியாக அமர்த்தப்பட்ட பாடர்கள், அங்கு பாடிய பாடல்களில் ஒன்றே, இந்த திருப்பாடல் 96, என்ற வாதமும் இருக்கிறது. வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து, பதில் சொல்லி பாடுவோம். 

 

இரண்டாம் வாசகம்: தீத்து 2:11-14

தூய பவுல் எழுதிய மேய்ப்புப்பணி திருமுகங்களில் ஒன்றான இந்த திருமுகத்தில், இயேசு கொடுக்கும்;, தூயஆவியின் தன்மைகளை, தீத்துவிற்கு ஞாபகப்படுத்துகிறார், பவுல். தீத்து என்ற தனிநபருக்கு எழுதியதெனினும், இதனை உற்று நோக்குகின்ற போது, பவுல், தப்பறைகளுக்கு விளக்கம் கொடுப்பது, போல அமைந்துள்ளதைக் காணலாம். மனிதர் அனைவருக்கும், மீட்பராம் கடவுளின் அருள், வெளிப்பட்டுள்ளது என்ற, அழகான வரி, இந்த பகுதியில், மிக முக்கியமான வரி. பவுலின் வார்த்தைகளுக்கு, கவனமாக செவி கொடுப்போம்.

 

நற்செய்தி: லூக்கா 2:1-14

            லூக்கா நற்செய்தியின், இந்த இரண்டாவது அதிகாரம், இயேசு ஆண்டவரின், குழந்தை பருவ நிகழ்வுகளிலிருந்து, எடுக்கப்படுகிறது. இந்த பகுதி, லூக்கா நற்செய்தியில் மட்டுமே, காணப்படுகிறது. லூக்கா மிக தெளிவாக, இயேசு வரலாற்றில் பிறந்தார், என்பதைக் காட்ட, அக்கால உரோமைய உலகை அடையாளப்படுத்துகிறார். இயேசு பிறந்தபோது யார் ஆளுநராக இருந்தார் என்பதையும், இயேசு பெத்லகேமில் பிறந்தார் எனவும், அவருடைய காட்சி, முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டத்திற்கே, கிடைத்தது, என்பதையும் மிக தெளிவாகக் காட்டுகிறார். உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு, அமைதி உண்டாகுக, என்ற வரி நமக்கு நிம்மதியைத் தருகிறது. லூக்காவின் ஆழமான வரிகளுக்கு கவனமாக செவிகொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...