வெள்ளி, 8 டிசம்பர், 2023

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (ஆ) 10,12,2023 ஞாயிறு வாசக விளக்கவுரை (A Commentary on the Sunday Readings)



திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு ()

10,12,2023

ஞாயிறு வாசக விளக்கவுரை

(A Commentary on the Sunday Readings)



முதல் வாசகம்: எசாயா 40,1-5.9-11

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 84

இரண்டாம் வாசகம்: 2 பேதுரு 3,8-14

நற்செய்தி: மாற்கு 1,1-8

M. Jegankumar Coonghe OMI,

Sinthathirai Matha Thiruththalam,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Jaffna. 

Friday, 8 December 2023


இரண்டாம் ஆண்டு, மாற்கு - ஓர் அறிமுகம்


மாற்கு நற்செய்தி, எந்தவொரு புதிய ஏற்பாட்டு புத்தகத்துடனும், ஒப்பிடப்படமுடியாத ஒரு தனித்துவமான புத்தகம். மாற்கு நற்செய்தியைப் பற்றி பல நூற்றுக்கணக்கான ஊகங்களும், அதற்கான விடைகளும் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் அனைத்தும் மீண்டும் ஊகங்களாகவே மாறிவிட்டன. மாற்கு நற்செய்தியை ஆய்வு செய்ய அவர் யாருக்கு, எங்கே, எப்போது இந்த நற்செய்தியை எழுதினார் என்றவகையில் எமது பார்வையை திருப்ப வேண்டும். இருப்பினும், அவருடைய இறையியலை அல்லது, தற்காலத்திற்கு மாற்கு நற்செய்தி என்ன சொல்கிறது என்பதை அறிய இந்த மேற்சொன்ன கேள்விகளை கேட்க வேண்டிய தேவையிருக்காது. இதுதான் மாற்கு நற்செய்தியின் விசேட அம்சம்

மாற்கு நற்செய்திதான் நற்செய்திகளிலே மிகவும் சுருக்கமானதும், சிறியதுமான நற்செய்தி. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் மாற்கு நற்செய்தி மிகவும் பிரபல்யம் அடைந்தது, அதற்கான காரணம், அக்கால்தில் மேற்கொள்ளப்பட்ட விவிலிய ஆய்வியல்கள் மற்றும் விளக்கவியல்கள் தேடல்களைக் குறிப்பிடலாம். மாற்கு நற்செய்தியில் காணப்படும் அனைத்து உவமைகளும், தரவுகளும், மத்தேயு மற்றும் லூக்காவில் காணப்படுவதாலும், அவற்றில் அவை சற்று விரிவாக காணப்படுவதாலும், மாற்கு நற்செய்தியை பலர் முக்கியமானதாக கருதவில்லை. அத்தோடு ஆரம்ப கால விவிலிய ஆய்வாளர்கள், சில முக்கியமான திருச்சபை தந்தையர்கள், மாற்கு நற்செய்தியை மத்தேயு அல்லது லூக்கா நற்செய்தியின் சுருக்கம் என கருதியதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகலாம். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 'மாற்குவின் முக்கியத்துவம்' என்ற கொள்கை மாற்கு நற்செய்தியின் தனித்துவத்தை உயர்த்தி, இன்று வரை மாற்கு நற்செய்திதான் ஆரம்ப நற்செய்தி எனவும், மூலமான நற்செய்தி எனவும் வாதிடுகிறது. மாற்கு அதிகமாகவே வரலாற்று இயேசுவை படம்பிடிக்கிறார் என்ற வாதத்திற்கு சில பலமான சவால்களும் இருந்திருக்கின்றன, அவற்றுள் வில்லியம் றீற் மற்றும் கார்ள் லுட்விக் ஷிமித் போன்றவர்களின் கொள்கைகள், வாதங்கள் மிக முக்கியமானவை. இவர்கள் மாற்குவின் வரலாற்று தன்மையை கேள்வி கேட்டார்கள், அத்தோடு மாற்கு நற்செய்தியில் திருச்சபையின் கைகள் பலமாக இருக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தார்கள்

இருப்பினும் இவர்களின் வாதங்கள் மாற்குவின் முக்கியத்துவம் என்ற கொள்கையை பெரிதாக பாதிக்கவில்லை. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர், 'மறுபார்வை விமர்சனம்

(redaction criticism) என்ற கொள்கை நற்செய்தியாளர்களின் முக்கியத்துவதை மையப்படுத்தியது. மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்களைப் போல மாற்குவின் நோக்கத்தை கண்டுகொள்வது அவ்வளவு இலகுவாக இருக்காது, ஏனெனில் மாற்குவே அதிகமான தரவுகளுக்கு மூலமாக இருக்கிறார். மாற்கு யார் என்ற வாதம் பலரால் ஆராயப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பப்பியாஸ் என்ற திருச்சபை தந்தை, மாற்குவை தூய பேதுருவின் பணியாளர் என்று குறிப்பிடுகிறார். பேதுருவின் மரணத்திற்கு பின்னர் இந்த மாற்கு பல சேவைகளை செய்திருக்க வேண்டும். இருப்பினும் பலர் மாற்குவை பேதுருவுடன் தொடர்பு படுத்துவதை பலமாக கேள்வி கேட்கின்றனர், அவர்களின் கருத்துப்படி மத்தேயு நற்செய்திதான் பேதுருவிற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது, மாற்கு அல்ல (காண்க 16,17-19: 17,24-27). பேதுருவை மாற்குவோடு தொடர்பு படுத்துவது, பேதுரு பவுல் என்று பிரிந்திருந்த திருச்சபையை ஒன்றாக்கும் முயற்சியாக இருக்கலாம் என வாதிடுகின்றனர். அதேவேளை யோவான் மாற்கு என்று திருத்தூதர் பணிகள் நூல்களில் வரும் மாற்குவும், நற்செய்தியாளர் மாற்குவும் ஒரே ஆளாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பதையும் முன்வைக்கின்றனர் (காண்க தி. 12,12.15). மாற்கு நற்செய்தியாளர் பிறப்பால் ஒரு யூதராக இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன

மாற்கு நற்செய்தி உரோமையில் எழுதப்பட்டது எனவும், இந்த நற்செய்தியில் ஆண்டவர் 

இயேசுவின் பாடுகள் பற்றிய காட்சிகள் உண்மையில் உரோமையில் திருச்சபை சந்திக்கின்ற துன்பங்களைக் காட்டுகின்றது எனவும் வாதாடப்படுகிறது. சீசர் நீரோ உரோமையில், உரோமைய கிறிஸ்தவர்களுக்கு எதிராக (கி.பி 64) கொடுமையான கலாபானைகளை தொடங்கினான் என்பது நினைவுகூறப்பட வேண்டும். பிற்காலத்தில் கி.பி 70களில் எருசலேம் தேவாலயமும், டைட்டஸ் என்ற சீசரால் அழிக்கப்பட்டது. இந்த காலத்தில் உரோமையருக்கு எதிராக யூதர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த அழிவுகள் மற்றும் போர்களைப் பற்றிய செய்திகள்தான் மாற்கு நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக இல்லை

'இறைவனின் மகன்' என்ற நம்பிக்கை மாற்கு நற்செய்தியில் மிகவும் முக்கியமான ஒரு கருத்து, இது 'மானிட மகன்' என்ற மற்றைய சமநோக்கு நற்செய்திகளின் கருத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் இருக்கிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உள்ளன. எதிராக கருத்துக்கள் சற்று அதிகமாகவே உள்ளன. அடுத்ததாக சிலுவை, மாற்கு நற்செய்தியில் முக்கியத்துவம் பெறுகிறது. ஜேர்மன் இறையியலாளர் மார்டின் கேர்லர் மாற்கு நற்செய்தியை, பெரிய முன்னுரையுடன் கூடிய ஆண்டவரின் பாடுகளின் நற்செய்தி என்று வர்ணிக்கிறார். இதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. மாற்கு நற்செய்தியின் மூல பிரதி, ஆண்டவருடைய அடக்கத்தோடு நிறைவடைகிறது. உயிர்ப்பு பற்றிய பகுதி பிற்காலத்தில் 

இணைக்கப்பட்டது என்பதை இன்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் (காண்க மாற்கு 16,8). இதன் வாயிலாக மாற்கு தன்னுடைய இறையியலை முக்கியத்துவப்படுத்த முயன்றிருக்கலாம்.  

எசாயா 40,1-5.9-11

நம்பிக்கை தரும் நல்வாக்கு


1'ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்' என்கிறார் உங்கள் கடவுள். 2எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

3குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். 4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்

5ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

9சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு

10இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன

11ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.'


எசாயா புத்தகத்தின் 40வது அதிகாரம் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட மெசியாவைப் பற்றி இறைவாக்குரைக்கிறது. பல துன்பங்களைத் தாங்குகின்றவர்கள் ஆறுதலான வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள் அந்த வார்த்தைகளை மென்மையான வரிகள் மூலமாக இந்த அதிகாரம் வெளிப்படுத்துகிறது


.1: மிகவும் அழகான வரி. ஆறுதல் மற்றும் கனிமொழி போன்ற சொற்கள் ஒத்த கருத்துச் சொற்களாக பாவிக்கப்பட்டுள்ளன. இதனை எபிரேய வரி 'ஆறுதலான வார்த்தைகளை கட்டாயம் சொல்லுங்கள்' என்று காட்டுகிறது (נַחֲמוּ נַחֲמוּ עַמִּי நகாமூ நகாமூ 'அம்மி). தமிழ் மொழிபெயர்ப்பு சரியான அர்த்தததைக் கொடுக்க அழகாக அமைக்கப்பட்டுள்ளது


.2: இந்த இரண்டாவது வரி, முதலாவது வரியில் சொல்லப்பட்டதையே மேலும் முன்னிறுத்துகிறது. இந்த வரியில் சில உருவகங்கள் முன்வைக்கப்படுகின்றன. எருசலேம் இங்கே இஸ்ராயேல் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எருசலேமிடம் இனிமையாக பேசுதல் என்பது, எருசலேமுடன் நல்ல உறவைக் கடைப்பிடிக்க எடுக்கும் முயற்சி என எடுக்கலாம். உரத்த குரலில் பேசுதல், என்பது நிச்சய தன்மையைக் குறிக்கலாம் (דַּבְּרוּ עַל־לֵב יְרֽוּשָׁלִַ֙ם וְקִרְאוּ אֵלֶיהָ டவ்ரூ 'அல்-லெவ் யெரூஷாலயிம் வெகிர்' 'எல்லெஹா). எருசலேம் தன் பாவங்களுக்காக இருமடங்கு (כִּפְלַ֖יִם கிப்லாயிம்) தண்டனை பெற்றுவிட்டாள் என்பது, அவளுடைய தண்டனை போதுமானது என்பதைக் காட்டுகிறது


.3: இந்த வரி விவிலியத்தில் அதிகமாக பாவிக்கப்பட்ட வரி, அத்தோடு புதிய ஏற்பாட்டில் அதிகமாக கோடிடப்பட்ட வரி என்று கூடச் சொல்லலாம். இதன் அர்த்தம் பல விதமாக பார்க்கப்படுகிறது. சூழலியலில் மற்றும், இந்த வரியில், இதன் அர்த்தம் வேறுவிதமாக இருக்கிறது


. எபிரேய வரியின் அமைப்பில் வாசிக்கின்றபோது அது இப்படியான அர்த்தத்தைத் தரும் -

குரல் ஒன்று முழங்குகின்றது (ק֣וֹל קוֹרֵ֔א கோல் கோரெ'): பாலை நிலத்தில் வழியொன்றை கடவுளுக்கு ஆயத்தப்படுத்துங்கள் (בַּמִּדְבָּ֕ר פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה பம்மித்பார் பானூ தெரெக் அதோனாய்). சீராக்குங்கள், பாலைநிலத்தில் நெடுஞ்சாலையை நம் கடவுளுக்காக (יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ׃ யாஷ்ரூ பா'ராவாஹ், மெசில்லாஹ் லெ'லோஹெனூ). சூழலியலில் இது போருக்கு பின்னர், செய்திகளைக் கொண்டுவரும் தூதரைக் குறிக்கலாம்


. புதிய ஏற்பாடு நற்செய்திகள் (மாற்கு, மத்தேயு, யோவான்) - பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகின்றது, ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள் (φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ·ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίουεὐθείας ποιεῖτε τὰς τρίβους αὐτοῦ.). ஆக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இந்த வரியை வித்தியாசமாக பார்த்திருக்கிறார்கள் அல்லது, தமது தேவைக்காக விளக்கவுரை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது திருமுழுக்கு யோவானின் குரலாக இருந்திருக்கலாம்


.4: இந்த நில அமைப்புக்கள் மத்திய கிழக்கு நாடுகளின் பாலைநிலங்களையும், மலைகளையும் அதன் பள்ளத்தாக்குகளையும் நினைவூட்டுகின்றன. பள்ளதாக்கு (גַּיְא கயெ'), மலை (הַר ஹர்), குன்று (גִבְעָה கிவ்'ஆஹ்), கோணலானது (הֶֽעָקֹב֙ ஹெ'ஆகொவ்), கரடுமுரடானது (רְכָסִ֖ים ரெகாசிம்), சீர் செய்யப்படுகின்றன


.5: இதன் பின்னர் ஆண்டவர் மாட்சி வெளிப்படுத்தப்படும் எனப்படுகிறது. ஆண்டவருடைய மாட்சி என்பது (כְּב֣וֹד יְהוָ֑ה கெவோத் அதோனாய்) பல வேளைகளில் அவரது பிரசன்னத்தைக் குறிக்கும். இது நன்கு தெரிந்த ஒரு அரசியல் வசனம், அரசர்களுடைய மாட்சி-பிரசன்னம் வெளிப்படுத்தப்படுவது, அவர்களின் அதிகாரத்தைக் குறிக்கும். இஸ்ராயேலர்கள் அடிமைகளாக இருப்பது, அவர்களுடைய கடவுளுக்கும் அவமானம். ஆக ஆண்டவரின் மாட்சி என்பது இங்கே அவருடைய மாட்சி வெளிப்படும் என்பது, கடவுளின் வெற்றி அல்லது மீள்வருகையைக் குறிக்கும். இதனை மக்கள் மட்டுமல்ல அனைத்து சதையுள்ள உயிர்களும் காண்பர் என்பதும் ஆண்டவருடைய ஆட்சியின் விசாலத்தையே குறிக்கிறது (רָא֤וּ כָל־בָּשָׂר֙ ரா' கோல்-பாசார்- அனைத்து சதைகளும் பார்ப்பர்). 


வவ.6-8: இந்த இறைவாக்கினுள் இன்னொரு உரையாடல் உட்புகுத்தப்பட்டுள்ளது. இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது வெளிப்படையாக சொல்லப்படவில்லை. இது பாலைவனத்தில் ஒலித்த குரலாக இருக்கலாம், அல்லது நேரடியாகவே இது கடவுளின் குரலாகவும் இருக்கலாம். ஆனால் கடவுளின் குரலாக இருந்தால், எசாயா தன்னுடைய பதிலை இப்படியாக வெளிப்படையாக கொடுத்திருக்கமாட்டார் என்றும் எண்ணத்தோன்றுகிறது. அந்த குரல், எசாயாவை உரக்க கூறச் சொல்கிறது. அதன் விடயமாக: மானிடர் உலர்ந்து போகும் புல்லிற்கு ஒப்பிடப்படுகின்றனர் (חָצִ֔יר ஹாட்சிர்), அத்தோடு அவர்களின் அழகு வயல்வெளி பூவிற்கும் (צִיץ הַשָּׂדֶה ட்சிட்ஸ் ஹசாதெஹ்), ஒப்பிடப்படுகிறது. ஏன் இப்படியான உருவகங்களுக்கு மனிதர்கள் ஒப்பிட்படுகிறார்கள் என்பது சொல்லப்படுகிறது. புல்லும், வயல் வெளி பூவும் வதங்கிப்போவன. மனிதர்களும் இவ்வாறே என்பது இவர் வாதம். எட்டாவது வசனத்தில் மனிதர்களின் நிலையாமையும், இறைவார்த்தையின் இறவாமையும் ஒப்பிடப்படுகின்றன. புல் உலர்ந்துபோம், பூ வதங்கி விழும், ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும் (יָבֵשׁ חָצִיר נָבֵל צִ֑יץ וּדְבַר־אֱלֹהֵינוּ יָקוּם לְעוֹלָם׃ ס யாவெஷ் ஹாட்ஸ்சிர் ட்சிட்ஸ், வூதெவர் 'எலோஹெனூ யாகூம் லெ'ஓலாம்), இந்த வரிகள் இறைவார்த்தையின் மகிமையைக் காட்ட விவிலியத்தில் அதிகமாக பாவிக்கப்பட்ட ஒரு வரி. ஏற்கனவே மனிதர்கள் பூவிற்றும் புல்லிற்கும் ஒப்பிடப்பட்டமையால், இந்த வரியிலும், பூவாகவும், புல்லாகவும் மனிதர்கள்தான் ஒப்பிடப்படுகிறார்கள் என்பது புலப்படுகிறது


.9: சீயோனும் எருசலேமும் ஒத்த கருத்துச் சொல்லாகவும்: நற்செய்தி தருதலும், நற்செய்தி உரைத்தலும் ஒத்த கருத்துச் சொல்லாகவும் பாவிக்கப்படுகின்றன. இந்த சீயோனும், எருசலேமும் முழு யூதாவிற்கும் ஆண்டவரின் வருகையை பறைசாற்றச் சொல்லக் கேட்கப்படுகிறார்கள். எசாயா இறைவாக்கினர் தென்நாட்டு இறைவாக்கினர் என்ற படியால், இவரது இறைவாக்குகள் தென்நாட்டை மையப்படுத்தியதாகவே அமைகிறதை அவதானிக்கலாம்


.10: கடவுள் அரசராக ஒப்பிடப்படுகிறார். அரசர்கள் போரின் முடிவில் மாட்சியுடன் வருவார்கள், அத்தோடு அவர்கள் எதிரி நாட்டிடம் இருந்து கவர்ந்து வந்த விலையுயர்ந்த பொக்கிசங்களை கொண்டு வருவார்கள். இது அக்காலத்தில் அவர்களின் வீரத்தையும், போர் வெற்றியையும் காட்டியது (நம் நாட்டிலிருந்து சுரண்டிக் கொண்டுபோனதைப் போன்று). இதனையே அடையாளமாக எடுத்து ஆண்டவரின் வருகையை படம் பிடிக்கும் முகமாக ஒப்பனை செய்கிறார் ஆசிரியர்


.11: ஆண்டவரை ஆயருக்கு (רֹעֶה֙ ரோ'எஹ்) ஒப்பிடுவது, ஓர் நன்கு தெரிந்த உருவகம். அந்த உருவகம் இங்கே பாவிக்கப்படுகிறது. ஆண்டவர் ஆயராகி, மந்தையாகிய தம் மக்களை மேய்கிறார் (יִרְעֶ֔ה யிர்'எஹ்-). இந்த வினைச் சொல், ஆயன் என்ற சொல்லுடன் தொடர்புள்ளது. மேய்த்தல் என்பது, மந்தைகளை நல்ல பசும் புல்வெளிகளை நோக்கி கொண்டுசெல்வதற்கு சமனாகும்

ஆயர்கள் ஆட்டுக்குட்டிகளுக்கு (טָלֶה தாலெஹ்- செம்மறிக்குட்டி) முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவை சிறியனவாய் இருப்பதால் அவைகளை தாங்களே தம் கைகளால் சேர்ப்பார்கள். இங்கே சொல்லப்படுகின்ற ஆடுகள், செம்மறியாடுகளைக் குறிக்கின்றன. சில வேளைகளில் ஆயர்கள் தம் செம்மறியாட்டுக் குட்டிகளை தம் தோள்களில் சுமப்பார்கள். இந்த உருவகம் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவிற்கு பாவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சினையாடுகளும் விசேடமாக கவனிக்கப்பட வேண்டியவை. சினையாடுகள் தாக்கப்பட்டால் அது அதன் குட்டிகளுக்கு ஆபத்தாக அமைந்துவிடும்

ஆயர், மந்தை, குட்டியாடு, சினையாடு போன்றவற்றை பாவித்து, கடவுளையும் அவர் மக்களையும் பற்றி இறைவாக்குரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா






திருப்பாடல் 85

1 ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.

2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும்

மறைத்துவிட்டீர். (சேலா)

3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்.

4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக்கொள்ளும்.

5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?

6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?

7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு

நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.

9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.

13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.


வாழ்வின் துன்பங்கள், கடவுளுடைய அமைதியைப் பற்றியல்ல, மாறாக நம்முடைய வாழ்வின் நிலையைப் பற்றித்தான் சிந்திக்க அழைப்புவிடுகிறது. ஆண்டவருடைய நன்மைத்தனங்கள் வரலாற்றில் இருக்கிறது, ஆனால் நிகழ்காலத்தில் பல துன்பங்கள் வழக்கிலிருக்கின்றன. இப்படியான வேளையில் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இறைவாக்கினர் அபகூக்குவைப் போல இந்த திருப்பாடலின் ஆசிரியர், வாசகர்களை, ஒரு கணம் அமைதியாயிருந்து தத்தமது வாழ்வை ஆராய்ந்து பார்க்கும் படியாக அழைப்பு விடுகிறார். ஆய்வாளர்கள் இந்த 85வது திருப்பாடலை ஒரு குழு புலம்பல் பாடல் என விவரிக்கின்றனர்


.0: இந்தப் பாடலின் முன்னுரை, இதனை கோராகியரின் புகழ்பாடல் என்று அடையாளப் படுத்துகிறது. கோரா (קֹרַח) என பெயர் பெற்றவர்களில் நான்கு வகையான குழுக்கள் விவிலியத்தில் காட்டப்படுகின்றனர். இவர்கள் எதோமியர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இவர்கள் எசாவின் வழிமரபில் வந்தவர்கள். இவர்கள் லேவிய குருக்களின் ஒரு வகையினர் என்றும் அவர்கள் ஆலயத்தின் வாயிற் காப்பாளர்களாகவும், பாடகர் குழாமாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது. எண்ணிக்கை நூல் கோராகியரை கடவுளுக்கு மோசேக்கும் எதிராக புரட்சி செய்தவர்களாக காட்டுகிறது


.1: இஸ்ராயேலின் முக்கிய பழைய அனுபவம் ஒன்று நினைவுகூறப்படுகிறது. நாடு 'உமது நாடு' என்று நினைவுகூறப்பட்டு அது கடவுளுக்குரியதாகின்றது (אַרְצֶךָ 'அர்ட்செகா- உமது நிலம்). நாட்டின் மீது அருள் கூறுவதும் யாக்கோபை முன்னைய நிலைக்கு கொண்டு வருவதும் ஒத்த கருத்தாகப் பார்க்கப்படுகிறது. இது எகிப்திய விடுதலை அனுபவமாக இருக்கலாம்


.2: இந்த நினைவுகூறுதலும், நன்னிலைக்கு கொணர்தலும் மேலுமாக விளங்கப்படுத்தப்படுகிறது. அதாவது இவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன, அத்தோடு பாவங்கள் மறைக்கப்படுகின்றன. பாவங்களை மன்னித்தல் 'அவர்கள் குற்றங்களை நீர்; தூக்கிவிட்டீர்' என எபிரேயத்தில் சொல்லப்படுகிறது (נָשָׂאתָ עֲוֹן நாசா'தா 'அயோன்). தூக்கிவிடுதல் என்பது இல்லாமல் செய்தலைக் குறிக்கிறது. இதற்கு ஒத்த கருத்து பதமாக 'அவர்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் மறைத்துவிட்டீர்' எனவும் திருப்பிக்கூறப்படுகிறது (כִּסִּיתָ כָל־חַטָּאתָם கிசிதா கோல்-ஹத்தா'தாம்).  


.3: ஆண்டவர் தன்னுடைய சினத்தை அடக்கிக் கொள்கிறவர், இலகுவில் கோபம் கொள்கிறவர் அல்ல என்பது இஸ்ராயேலருடைய நம்பிக்கைகளுள் முக்கியமானது. இதனைத்தான் இந்த வரி நினைவூட்டுகிறது. மக்கள் இன்னமும் ஆண்டவரின் நன்மைத்தனத்தில் இருப்பதற்க்கு காரணம் மக்களுடைய புனிதமான வாழ்வு என்பதைவிட, ஆண்டவருடைய மன்னிப்பும் அன்பும் என்பது ஓர் ஆழமான இறையியல் சிந்தனை


.4: முதல் மூன்று வரிகளில் இஸ்ராயேல் மூதாதையர்கள் தங்களுக்கு சொன்ன வரலாற்றை நினைவுகூர்ந்த ஆசிரியர், இப்போது அதனையே சமகால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஆண்டவர் கருணை காட்ட வேண்டும் என மன்றாடுகிறார். இந்த வரியிலிருந்து நோக்குகின்றபோது, நாடு அல்லது ஆசிரியருடைய தனிப்பட்ட வாழ்வு ஏதோ முக்கியமான ஆபத்தில் இருக்கிறது என்பது புலப்படுகிறது. ஆண்டவரை மீட்பராக வர்ணிப்பது முதல் ஏற்பாட்டின் முக்கியமான சொற்பிரயங்களில் ஒன்று (יִשְׁעֵנוּ யிஷ்'எனூ- எம் மீட்பர்). 


.5: இந்த கேள்வி ஆசிரியருடைய துன்பத்தைக் படம்பிடிக்கிறது. இந்த வரியில், தான் அல்லது தன் மக்கள் சுத்தவாளிகள் என்று அவர் வாதாடாமல், ஆண்டவரின் தொடர் சினத்தில் நியாமில்லை என்பதுபோல வாதாடுவதாக காட்டப்படுகிறது. ஆண்டவருடைய சினமும் (אַף 'அப்) கோபமும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்படவேண்டும் என்பதை ஆண்டவருக்கு காட்ட விளைகிறார். இந்த வரிகளுக்கு பின்னால் மனிதர்கள் பலவீனமானவர்கள், அவர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள் இருந்தும் தலைமுறைதோறும் அவர்களை தண்டிப்பது கடவுளுக்கு உகந்தது அல்ல என்பது போல வாதாடப்படுகிறது.


.6: கடவுளில் மகிழ்தல் என்பது, உச்ச கட்ட சந்தோசத்தை இஸ்ராயேல் மக்களுக்கு தருகிறது

இதனையே இவர் புத்துயிர் என்றும் சொல்கிறார். நேர்மையாளர்கள் கடவுளில் மகிழ்வார்கள் (יִשְׂמְחוּ־בָךְ யிஷ்மெஹு-பாக் - உம்மில் அவர்கள் மகிழ்வார்கள்) என்பது விவிலியத்தின் படிப்பினை. இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் பலவற்றில் மகிழ்கின்ற வேளை, தன் மக்கள் கடவுளில் மகிழவேண்டும், அதுதான் அவர்களுக்கு புத்துயிர் அளிக்கும் என்கிறார்


.7: ஆண்டவரினால் மகிழ்ந்து புத்துயிர் பெறவேண்டும் என்றால், ஆண்டவர் மக்களுக்கு தன்னுடைய பேரன்பையும் (חַסְדֶּךָ ஹஸ்தெகா- உம் பேரன்பு), மீட்பையும் (יֶשְׁעֲךָ֗ யெஷ்'எகா- உமது மீட்பு) தரவேண்டும் என்கிறார். புலம்பல் பாடல்களில் மன்றாட்டு முக்கியமான விடயமாக வருவதை இங்கே அவதானிக்கலாம்


.8: புலம்பல் பாடல்களில் ஞான வாக்கியங்களும் அடங்கியிருக்கும். இந்த வரி, ஆண்டவர் உரைப்பதை அனைவரும் கேட்க வேண்டும் என்றும், அதாவது அவர் தம் மக்களாகிய அவர் அடியார்களுக்கு நிறைவாழ்வை அளிக்கிறார், இதனால் அவர்கள் மடமைக்கு திருப்பிச் செல்லலாகாது என்கிறார்


.9:  ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் என்பவர் ஆண்டவரின் நியமங்களை கடைப்பிடிக்கும் விசுவாசிகளைக் குறிக்கிறது (לִירֵאָיו லிரெ'அவ்- அவருக்கு அஞ்சுவோர்). இவர்கள் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது பயத்தினால் அல்ல, மாறாக மரியாதை கலந்த விசுவாசத்தைக் வெளிக்காட்டுகிறது. இவர்கள் ஆண்டவரின் மீட்பிற்கு அருகில் இருக்கிறார்கள்ஆண்டவரின் மாட்சி (כָּבוֹד காவோத்) என்பது முதல் ஏற்பாட்டில் அதிகமாக கையாளப்படும் ஒரு சொல். இது ஆண்டவருடைய பாதுகாப்பு, பிரசன்னம், ஆசீர்வாதம் போன்றவற்றைக் குறிக்கும். ஆண்டவரின் மாட்சி இஸ்ராயேல் நாட்டில் குடிகொள்ளும் என்பது ஆண்டவர் இஸ்ராயேல் நாட்டில் குடிகொள்வதைக் குறிக்கும்


.10: இந்த திருப்பாடலிலே மிகவும் அழகான வரி இதுதான்

பேரன்பும் உண்மையும் ஒன்றை ஒன்று சந்திக்கிறது

(חֶסֶד־וֶאֱמֶת נִפְגָּשׁוּ ஹெசெத்-வெ'எமெத் நிப்காஷூ). 

நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடுகிறது 

(צֶדֶק וְשָׁלוֹם נָשָׁקוּ ட்செதெக் வெஷாலோம் நாஷாகூ). 

இந்த வரியின் எதுகை மோனை மற்றும் சொல்லாடல் போன்றவற்றிலிருந்து, விவிலிய எபிரேயம் எவ்வளவு செம்மையானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மொழியில் மட்டுமல்ல 

இறையியல் மற்றும் மனிதத்திலும் இந்த சொற்கள் மிகவும் வரவேற்கப்படவேண்டியவை. உண்மையில்லா பேரன்பும், நீதியில்லா அமைதியும், பிரயோசனம் அற்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த திருப்பாடல் ஆசிரியர் அழகாக அறிந்து, வாழ்ந்திருக்கிறார்


.11: மண்ணினின்று உண்மையும் (אֱמֶת מֵאֶ֣רֶץ 'எமெத் மெ'எரெட்ஸ்), விண்ணினின்று நீதியும் 

(צֶדֶק מִשָּׁמַיִם ட்செதெத் மிஷாமாயிம்) வெளிவருகின்றன என்கிறார். பூவுலகம் உண்மையுளள்தாக 

இருக்க வேண்டும், அதேவேளை இந்த பூவுலகை ஆண்டவரின் மேலுலகம் நீதி செலுத்த வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. பூவுலகும் மேலுலகும் ஒன்றையொன்ற சார்ந்து இருக்க வேண்டும் அல்லது தொடர்பு பட்டிருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அவாவாக இருக்கிறது போல.


.12: ஆண்டவர் அருளுவது நல்லவையே, என்பதுதான் முழு விவிலியத்தின் செய்தியாகும். இதன் அடையாளம்தான், நிலம் அருளுகின்ற நல்விளைச்சல் என்பது இந்த ஆசிரியரின் ஞானம். நிலம் இயற்கையாக நல்லதை தரவல்லது, இந்த நல்விளைச்சலை ஆண்டவருடைய ஆசீர்வாதமாக பார்க்கிறார் ஆசிரியர். ஆண்டவர் நல்லது செய்கிறவர் என்பது இஸ்ராயேலின் தனித்துவமான நம்பிக்ககை (גַּם־יְ֭הוָה יִתֵּ֣ן הַטּוֹב கம்-அதோனாய் யித்தென் ஹதோவ்).


.13: ஆண்டவர் நீதியின் கடவுள். நீதிதான் ஆண்டவர் முன்னால் செல்லும். நீதிதான் ஆண்டவருடைய அடிச்சுவடு. அதவாது அவர் மக்கள் நீதியுள்ளவர்களாக இருக்க கேட்கப்படுகிறார்கள். அதேவேளை அவர்கள் நீதிக்காக போராடுபவர்களாகவும் இருக்க வேண்டியவர்கள்.  



2 பேதுரு 3,8-14

8அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. 9ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.

10ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். 11இவை யாவும் அழிந்துபோகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! 12கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். 13அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

14ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.


இரண்டாம் பேதுரு திருமுகத்தை திருத்தூதர் தலைவர் பேதுரு எழுதினார் என்பது கிறிஸ்தவ பாரம்பரிய நம்பிக்கை. இந்த திருமுகத்தின் ஆசிரியர் தன்னை (காண்க 1,1), சீமோன் பேதுரு, இயேசுவின் பணியாளரும், திருத்தூதரும் என்று அறிமுகப்படுத்துகிறார். அவர் தான் ஆண்டவரின் உருமாற்றத்தின் போது அவரோடு இருந்தவர் என்கிறார் (காண்க 1,16-18). நற்செய்திகளின் படி ஆண்டவருடைய திருஉருமாற்றத்தின் போது, பேதுருவும், யோவானும், யாக்கோபுவும் அவரோடு 

இருந்தனர் (9,2-12). இந்த கடிதத்தில் பேதுரு தன்னுடைய முதலாவது திருமுகத்தையும் பற்றி பேசுகிறார் (காண்க 3,1), அத்தோடு பேதுரு, பவுலை தன்னுடைய அன்பான சகோதரர் என்று அழைக்கிறார் (காண்க 3,15). தன்னுடைய மரணம் வெகு விரைவில் இருப்பதை பேருது உணர்ந்திருந்தார் என்பதையும் இந்த திருமுகம் காட்டுகிறது (காண்க 1,14). 

பேதுருவை இந்த திருமுகத்தின் ஆசிரியராக்க, இப்படியான தரவுகள் பிற்காலத்தில் உட்புகுத்தப்பட்டவை என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் இந்த திருமுகமும் பேதுருவின் பெயரால் எழுதப்பட்ட திருமுகமே என்ற வாதமும் பலமாக இருக்கிறது. பிரசித்தி பெற்ற தலைவர்களின் பெயரில் திருமுகங்கள் மற்றும் நூல்களை எழுதுவதும் அல்லது அர்ப்பணிப்பதும் அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபாக இருந்திருக்கிறது. பேதுரு இந்த திருமுகத்தை எழுதவில்லை என்பதற்கு ஆய்வாளர்கள் சில முக்கியமான அகச்சான்றுகளை முன்வைக்கின்றனர்


. இதன் வார்த்தைகள், மொழியமைப்புக்கள் போன்றவை பேதுருவின் சாயலைக் கொண்டிருக்கவில்லை என்கின்றனர். இருப்பினும் முதலாம் பேதுருவிற்கும் இரண்டாம் பேதுருவிற்கும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தற்கால ஆய்வுகளின் படி, திருத்தூதர் பணிகள் நூலிலே உள்ள பேதுருவின் உரைகளுக்கும் இந்த திருமுகத்தின் சொல்லாடல்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தனியே, வார்த்தைகள், மொழியமைப்புக்களை மட்டுமே கொண்டு, இதனை பேதுரு எழுதவில்லை எனச் சொல்வதும் மிகச் சரியாக அமையாது என்பது தற்கால ஆய்வாளர்கள் சிலரின் கருத்து


. ஆரம்ப கால திருச்சபை இந்த கடிதத்தை புதிய ஏற்பாட்டு நூல்களுக்குள் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டியது. வேறு சில மெய்யியல் திருமுகங்களும், இப்படியாக பேதுருவின் பெயரிலே வலம் வந்திருக்கின்றன. ஏன் பேதுருவின் திருமுகத்தை ஆரம்ப கால திருச்சபை ஏற்க தயக்கம் காட்ட வேண்டும் என்பது ஒரு கேள்வி.


. யூதா திருமுகத்தின் தாக்கங்கள் இந்த திருமுகத்தில் இருப்பதால், யூதா திருமுகம் இதற்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். பேதுரு, ஏன் விசுவாசத்தில் பிந்தியவரான யூதாவை தன் திருமுகத்திற்கு சார்ப்பாக்க எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது


. இரண்டாம் பேதுருவின் திருமுகம், பேதுரு வாழ்ந்த காலத்தைவிட, பிந்திய கால பிரச்சனைகளை காட்டுவது போல இருக்கின்றது. பேதுரு வாழ்ந்த காலத்தில், ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றிய கேள்விகள் குறைவாகவே இருந்தன என்பது நம்பிக்கை, அப்படியிருக்கையில், இந்த திருமுகம் ஆண்டவரின் வருகைபற்றிய கேள்விகளுக்கு விடையளிப்பது இதன் ஆசிரியத்துவத்தை கேள்வி கேட்கிறது

தற்கால, அடிப்படைவாத ஆய்வாளர்கள், வேறுநபர்களின் பெயர்களின் நூல்களை எழுதும் பழக்கத்தை ஆரம்ப திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என வாதிடுகின்றனர் (ஒப்பிடுக 2தெசலோனியர் 3,17). இப்படியிருக்க இந்த திருமுகத்தை பேதுரு எழுதவில்லை என்றால், இதனை திருச்சபை ஏற்றிருக்காது, எனவே இதனை பேதுருவின் எழுதினார் என்பது இவர்களின் வாதம்

இன்றைய வாசகப் பகுதி 2பேதுருவின் 3ம் அதிகாரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றது


வவ.1-7: பேதுரு இறுதியான அதிகாரத்தில் தன்னை அறிமுகப்படுத்தி, இந்த திருமுகம் இரண்டாம் திருமுகம் எனச் சொல்கிறார். அத்தோடு தன்னுடைய வாசகர்கள் அவர்களின் விசுவாச முன்னோர்களை நினைவிற் கொள்ள வேண்டும் என்கிறார். ஆண்டவருடைய வருகை காலம் தாழ்த்துவது போல தோன்றுவதால், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரானவர்கள,; கிறிஸ்தவர்களை ஏளனம் செய்வதை அறிந்திருக்கிறார் பேதுரு. இதனை கருத்திற் கொண்டு தன் வாசகர்களை திடப்படுத்துகிறார். கடவுளுடைய வார்த்தைதான் அனைத்தையும் உருவாக்கியது, இருப்பினும் 

இவர்கள் இந்த வார்த்தையின் வல்லமையை மறந்தவர்களாக அதனை எள்ளி நகையாடுகின்றனர், என்று எச்சரிக்கின்றார்


.8: கிறிஸ்தவர்களை நகையாடுகிறவர்களை சாடிய பின்னர், சக கிறிஸ்தவர்களையும் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் படி வலுயுறுத்துகிறார். தன் வாசகர்களை அன்பானவர்களே என்று அழைக்கிறார் (ἀγαπητός அகாபெடொஸ்). ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் எனவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கும் என்ற பழமொழியை நினைவு படுத்துகிறார். பேதுரு இங்கே திருப்பாடல் 90,4 கோடிடுகிறார்.

(כִּי אֶלֶף שָׁנִים בְּעֵינֶיךָ כְּיוֹם கி 'எலெப் ஷானிம் பெ'ஏனெகா கெயோம்- ஏனெனில் ஆயிரம் ஆண்டுகள் உம்பார்வையில் ஒரு நாளைப் போன்றது.) இந்த வரி மூலமாக மனிதர்களுடைய நாட்களின் அளவு கடவுளுடையது அல்ல என்பதைக் காட்டுகிறார்


.9: ஆண்டவருடைய வாக்குறுதியின் (ἐπαγγελία எபான்கெலியா- வாக்குறுதி) படி அவர் விரைவாக வர வேண்டும், வரவில்லை எனவே காலம் தாழ்த்துகிறார் என்று சிலர் பிழையாக பரப்புரை செய்கின்றனர் என்கிறார் பேதுரு. இந்த காலம் தாழ்த்துதலை பேதுரு கடவுளின் பொறுமை என்கிறார் (μακροθυμεῖ மக்ரொதுமெய்- பொறுமையோடிருக்கிறார்). இந்த பொறுமைக்கு காரணம், யாரும் அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என கடவுள் விரும்புவது என்கிறார். இந்த பொறுமைக்குள், இப்படியான கேள்விகளைக் கேட்கிறவர்களும் அடங்குகிறார்கள் என்பது இவர் வாதம்


.10: இருப்பினும், ஆண்டவருடைய நாள் திடீரென வரும் என்பதையும் சொல்கிறார். இந்த தீடீர் தன்மைக்கு, திருடனை உதாரணத்திற்கு எடுக்கிறார். திருடர்கள் யாரும் எதிர்பார்க்காதவேளையில் வருகிறவர்கள் (இன்று யாழ்பாணத்தில் எதிர்பார்க்கிற நேரத்திலும் திருடர்கள் வருகிறார்கள்), (κλέπτης கிளெப்டேஸ்- திருடன்). திருடர்கள் பற்றிய அடையாளத்தை இயேசு ஏற்கனவே நற்செய்திகளில் குறிப்பிட்டுள்ளார் (காண்க மத் 24,42-43). இந்த வேளையில் வானங்கள் மறையும், பஞ்சபூதங்கள் வெந்துருகும், மண்ணுலகும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இந்த அடையாளங்கள் ஏற்கனவே வாசகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இப்படியான இயற்கையின் அடையாளங்களை அவர்கள் பூகம்பத்திலும், இடி மின்னல், போன்ற இயற்கை நிகழ்ச்சிகளிலும் பார்த்திருப்பார்கள்


.11: இயற்கையில் அழிய முடியாதவை என்பவை ஆண்டவரின் வருகையின் போது அழிந்து போகும், அழிந்து போனால்தான் ஆண்டவர் வருவார் என்பது போல சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு முன் இவர்கள் இறைபற்றுள்ள நடத்தையில் சிறந்து விளங்கவேண்டும் என்கிறார் 

(ἁγίαις ἀναστροφαῖς καὶ εὐσεβείαις ஹகியாய்ஸ் அனாஸ்த்ரொபாய்ஸ் காய் எவுசெபெய்யாஸ்- புனிதமான வாழ்க்கையிலும், இறைபற்றுள்ள வாழ்க்கையிலும்). 


.12: நம்பிக்கையாளர்கள் கடவுளின் வருகையை எதிர்பார்த்து அதனை விரைவுபடுத்த வேண்டும் என கேட்கப்படுகிறார்கள். காத்திருந்து விரைவுபடுத்தல் எப்படி சாத்தியம்? (προσδοκῶντας  ⸂καὶ σπεύδονταςபுரெஸ்தொகோன்டாஸ் காய் ஸ்பெயுதொன்டாஸ்). இங்கே கடவுளின் வருகையை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியும் என்பதை பேதுரு சொல்வதாக தெரியவில்லை, மாறாக மனிதர்கள் தங்களது நம்பிக்கையை வளர்க்க மற்றம் உறுதிப்படுத்த முடியும். இதனால் ஆண்டவரின் வருகை தானாகவே சீக்கிரமாக நடைபெறும் என்பது அவர் நம்பிக்கை


.13: ஆண்டவர் வாக்களித்த புதிய விண்ணுலகும், மண்ணுலகும் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார். அங்கே நீதி குடிகொண்டிருக்கும் என்பது அழகான வாதம் (ἐν οἷς δικαιοσύνη κατοικεῖ என் ஹொய்ஸ் திகாய்யோசூனே கடொய்கெய்- அதனுள் நீதி குடிகொண்டிருக்கும்). 


.14: இவ்வளவு நேரமும் தன் வாசகர்களை ஆயத்தப்படுத்தியவர் அதனை நிறைவு செய்கிறார். ஆண்டவரை எதிர்பார்த்திருப்பவர்களை ஆண்டவரும் எப்படி எதிர்பார்க்கிறார் என்பதை இந்த வரி காட்டுகிறது. அவர்கள் மாசு மறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணப்படவேண்டும் என்பது அந்த எதிர்பார்ப்பு


மாற்கு 1,1-8

திருமுழுக்கு யோவானின் உரை

(மத் 3:1-12; லூக் 3:1-9, 15-17; யோவா 1:19-28)


1கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2-3

'இதோ, என் தூதனை உமக்குமுன்

அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை

ஆயத்தம் செய்வார்.

பாலை நிலத்தில் குரல் ஒன்று

முழங்குகிறது; ஆண்டவருக்காக

வழியை ஆயத்தமாக்குங்கள்;

அவருக்காகப் பாதையைச்

செம்மையாக்குங்கள்'

என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். 5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். 6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 7அவர் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. 8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்' எனப் பறைசாற்றினார்.


இது மாற்கு நற்செய்தியின் தொடக்கவுரை. ஏனைய மூன்று நற்செய்திகளும், இயேசுவின் வரலாற்றுடன் தொடங்கும் வேளையில், மாற்கு நற்செய்தி திருமுழுக்கு யோவானின் இறைவாக்குடன் தொடங்குகிறது. இது மாற்குவின் தனித்துவம்


.1: மாற்கு நற்செய்தியின் ஆய்வாளர்கள் இந்த வரிதான் மாற்கு நற்செய்தியின் சாரம்சம் என்கின்றனர். இயேசு யார் என்பதை இந்த வரி காட்டுகிறது. இயேசு, கடவுளின் மகன் அத்தோடு அவர்தான் கிறிஸ்து என்பது நற்செய்தியின் தொடக்கத்திலேயே காட்டப்பட்டுள்ளது - Ἀρχὴ τοῦ εὐαγγελίου Ἰησοῦ Χριστοῦ  υἱοῦ θεοῦ. ஆர்கே டூ எவாங்கலியூ இயேசூ கிறிஸ்டூ ஹுய்யூ தியூ- கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவுடைய நற்செய்தியின் தொடக்கம். கிறிஸ்து என்றால் அபிசேகம் செய்யப்பட்டவர் அல்லது மெசியா என்று பொருள்


.2: மாற்கு இந்த வரியை மலாக்கி (காண்க 3,1) மற்றும் விடுதலைப் பயண நூலில் (காண்க 23,20) இருந்து பயன்படுத்தியிருக்கிறார். இந்த இரண்டு இறைவார்த்தைகளிலும் ஆண்டவரின் தூதர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது

மலாக்கியில் ஆண்டவரின் தூதர் ஆண்டவருக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார் - 'இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்' என்கிறார் படைகளின் ஆண்டவர்

விடுதலைப் பயண நூலில் ஆண்டவரின் தூதர் இஸ்ராயேலர்களுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார் - வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.


3: மாற்கு எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார் (காண்க எசாயா 40,3). எசாயாவின் வரிகள் சற்று வித்தியாசமானவை. மாற்கு சற்று மாறுதல்களோடு அதனை கையாண்டிருக்கிறார். இதனை அவர் தன் வாசகர்களின் தேவைக்காக இப்படிச் செய்திருக்கலாம்


. எசாயாவில்: குரல் ஒன்று முழங்குகின்றது (ק֣וֹל קוֹרֵ֔א கோல் கோரெ'): பாலை நிலத்தில் வழியொன்றை கடவுளுக்கு ஆயத்தப்படுத்துங்கள் (בַּמִּדְבָּ֕ר פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה பம்மித்பார் பானூ தெரெக் அதோனாய்). சீராக்குங்கள், பாலைநிலத்தில் நெடுஞ்சாலையை நம் கடவுளுக்காக (יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ׃ யாஷ்ரூ பா'ராவாஹ், மெசில்லாஹ் லெ'லோஹெனூ). சூழலியலில் இது போருக்கு பின்னர், செய்திகளைக் கொண்டுவரும் தூதரைக் குறிக்கலாம்


. φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ· ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίου, εὐθείας ποιεῖτε τὰς τρίβους  ⸀αὐτοῦ - போனே பொஓன்டொஸ் என் டே எரேமூ (பாலை நிலத்தில் குரல் முழங்குகிறது): ஹெடொய்மாசாடெ டேன் ஹொதொன் கூரியூ (ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்துங்கள்): எவுதெய்யாஸ் பொய்யெடெ டாஸ் டரிபூஸ் அவுடூ (அவருடைய பாதைகளை செம்மையாக்குங்கள்): 


.4: மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வரிகளும் திருமுழுக்கு யோவானைப் பற்றியது என்பது மாற்குவின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமுழுக்கு யோவான் பாலை நிலத்திற்கு வந்தது கடவுளின் திட்டம் என காட்டப்படுகிறது. பாலை நிலத்திற்கு வந்தவர், மக்கள் மனமாற திருமுழுக்கு கொடுக்கிறார்

மனமாற்றத்தைக் குறிக்க மெடானொய்யா (μετάνοια) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது

இது சிந்தையின் மாற்றம் அல்லது, இதயத்தின் மாற்றத்தைக் குறிக்கும். தீர்மானம் எடுப்பதில் இது மாற்றத்தை உண்டுபண்ணும். அத்தோடு இவர் மனமாற்றத்திற்கு அடையாளமாக திருமுழுக்கையும் (βάπτισμα பப்டிஸ்மா) அறிக்கையிடுகிறார். பப்டிஸ்மா, ஒருவகை கழுவுதல்-தூய்மை சடங்கு, இது காலங்கள் ஊடாக பல பரிணாமங்களைப் பெற்று இயேசுவின் காலத்தில் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு தூய்மை சடங்காக மாறியிருந்தது. அதிகமான யூத குடும்பங்கள் இதனை தங்களுடைய வீடுகளிலும் பின்பற்றினார்கள். ஆரம்ப காலத்தில் திருமுழுக்கு என்பது முழு உடலையும் கழுவுதல் அல்லது குளித்தலாக இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பாதங்களை மட்டும் கழுவும் சடங்காக மாறியது. தண்ணீர் தட்டுப்பாடு இதற்கான காரணமாக இருந்திருக்கலாம் (தமிழர் பாரம்பரியத்திலும் இது வழக்கிலிருந்திருக்கிறது, மற்றைய செமித்திய மற்றும் அராபிய கலாச்சாரங்களும் இதனை பின்பற்றி இருந்திருக்கிறார்கள்). 

திருச்சபை வரலாற்றில் பின்னர் இது, ஒரு திருவருட்சாதனமாக மாறியது. இன்று இது தூய்மை சடங்கு என்பதையும் தாண்டி ஒரு இறையியல் அடையாளமாகவே அதிகமானவர்களால் பார்க்கப்படுகிறது


.5: கிட்டத்தட்ட அனைத்து யூதேயாவினரும் யோவானிடம் சென்றதாக மாற்கு காட்டுகிறார். இந்த வரியில் எபிரேய தாக்கம் இருப்பதை அவதானிக்கலாம். அனைவரும் என்பதை பலர் என்று மொழிபெயர்க்கலாம், அல்லது பெருமளவானவர்கள் யோவானிடம் சென்றார்கள் என்றும் மொழிபெயர்க்கலாம் (πᾶς பாஸ்- அனைத்து, ஒவ்வொரு, எல்லா). இவர்கள் திருமுழுக்கு செய்யப்டுகிறார்கள். இங்கே செயற்பாட்டு வினை பாவிக்கப்பட்டுள்ளது (ἐβαπτίζοντο எபாப்டிஸ்சொன்டொ- திருமுழுக்கு கொடுக்கப்பட்டார்கள்). இதன் மூலம் திருமுழுக்கு என்பது இன்னொருவரால் கொடுக்கப்படுகிறது என்பது புலப்படுகிறது


.6: இந்த வசனம் திருமுழுக்கு யோவானின் ஆடைகளை விவரிக்கின்றது. யோவான் ஒட்டக முடி ஆடையயை அணிந்திருக்கிறார் (τρίχας καμήλου டிரிகாஸ் கமேலூ). தோல்கச்சையை இடையில் (δερμάτινος தெர்மாடினொஸ்) கட்டியிருக்கிறார். வெட்டுக்கிளியையும் (ἀκρίς அக்ரிஸ்), காட்டுத் தேனையும் (μέλι ἄγριον மெலி அக்ரியோன்) உண்கிறார். இது அப்படியே இயேசுவின் ஆடையலங்காரத்திற்கு மாறுதலாக உள்ளது எனலாம். இயேசு சாதரண யூதருடைய ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். அத்தோடு யோவானுடைய காலத்திலே வாழ்ந்த சமய தலைவாக்ள் ஆடம்பரமான ஆடைகளையே அணிந்தனர், இவர்களுக்கும் எதிராக யோவானின் ஆடையும், வாழ்க்கை முறையும் காணப்படுகிறது. யோவானின் ஆடைகள் இறைவாக்கினருடைய ஆடைகளை ஒத்திருக்கிறது. யோவானை எலியாவாக பல இடங்களிலே நற்செய்தியாளர்கள் காட்டுகின்றனர். எலியா வாடநாட்டில் பணியாற்றினாலும், முழு இஸ்ராயேல் வரலாற்றிலும், மிகவும் மதிக்கபட்ட ஓர் இறைவாக்கினர். ஒரே கடவுள் வழிபாட்டையும் பலமாக பரப்பியவர். அவருடைய பெயரின் அர்த்தமாகவும், 'யாவே என் இறைவன்' என்ற பொருளே வருகிறது (אֵלִיָּה 'எலியாஹ்). இயேசுவும் மறைமுகமாக இதனை அறிவித்திருக்கிறார். மெசியாவின் வருகைக்கு முன் எலியா வருவார் என்ற யூதர்கள் நம்பினர் (காண்க 2அரசர்கள் 1,8). வெட்டுக்கிளி, முக்கியமாக வறுத்த வெட்டுக்கிளியைக் குறிக்கிறது. நம்முடைய வெட்டுக்களியைவிட இது சற்று பெரியது. இதனை கீழைத்தேய மக்கள் சாப்பிட்டுள்ளனர். பெருமளவிலான வெட்டுக்கிளிகள் படையாக வந்து பின்னர் காற்றோடு அடிப்பட்டு மத்தியதரைக் கடலில் விழுந்து மடியும். இஸ்ராயேல் மக்களும் இதனை உண்டனர், இது அவர்களுக்கு தூய்மையான உணவுகளில் ஒன்றாக இருந்தது (காண்க லேவியர் 11,22). வெட்டுக்கிளியோடு சேர்த்து, காட்டுத்தேன் பாலைவன உணவுகளில் முக்கியமானதாக இருந்தது

வேறு இறைவாக்கினர்களும், முடியிலால் ஆன ஆடைகளை அணிந்திருந்தனர் என முதல் ஏற்பாடு காட்டுகிறது (காண்க செக்கரியா 13,4). இப்படியாக உணவாலும், உடையாலும் திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் ஆகிறார்


.7: யோவான் இன்னொருவரை காண்பிக்கிறார் அவரை தன்னைவிட பெரியவர் என்கிறார். யோவானிடம் பெரும் திரளான மக்கள் வரும் வேளையிலே யோவான் இதனை சொல்வது, அவருக்கு பின்னால் வருபவர் மிக முக்கியமானவர் என்பதைக் காட்டுகிறது. யோவான் இங்கே இயேசுவின் பெயரைச் சொல்லவில்லை. மாற்கு நற்செய்தியில் அதிகமாக இரகசியங்கள் காக்கப்படுகிறது. இதன் மூலமாக வாசகர்கள் அல்லது சீடர்கள் தங்கள் மெசியாவை அவர்களாகவே கண்டுபிடிக்க கேட்கப்படுகிறார்கள் என நோக்கப்படுகிறது

வீட்டு உரிமையாளார்கள், மற்றும் பெரியவர்களின் மிதியடிவார்களை அடிமைகள் அவிழ்த்தார்கள். அந்த அடிமைநிலைகூட தனக்கு இல்லை என்கிறார் யோவான். இதன் மூலம் யோவான் தன்னை இயேசுவின் அடிமட்ட பணியாளராகவே காட்டுகிறார்

முதல் ஏற்பாட்டில், மிதியடிவார்களை அவிழ்த்தல் என்பது ஒருவருடைய பொறுப்பைக் காட்டும். உதாரணமாக போவாசு தன் மிதியடிவாரை அவிழ்த்து ரூத்தை தன் மனைவியாக்கினார் (காண்க ரூத் 4, 7-9). மாற்கு இதனை உருவகமாக பாவித்தார் என்றால், திருச்சபையின் தலைவர் இயேசுதான், அவர்தான் தன் மிதியடிவாரை அவிழ்க்கவேண்டும் என்கிறார் எனலாம். ஆனால் இந்த உருவகம் இங்கே பாவிக்கப்படுகிறது என்பது போல தோன்றவில்லை.


.8: யோவானின் திருமுழுக்கிற்கும், இயேசுவின் திருமுழுக்கிற்கும் வித்தியாசம் காட்டப்படுகிறது. யோவானின் திருமுழுக்கு தண்ணீரால் கொடுக்கப்படும் திருமுழுக்கு (ὕδατι ஹுதாடி- தண்ணீரால்), இது வெறும் அடையாளம் என்படுகிறது எனலாம். இயேசுவின் திருமுழுக்கு தூய  ஆவியாரின் திருமுழுக்கு (ἐν πνεύματι ἁγίῳ. என் புனூமாடி ஹகியோ- தூய ஆவியால்). இது வெறும் அடையாளம் என்பதையும் தாண்டி, ஒரு சாதனமாகவே பார்க்கப்படுகிறது எனலாம்.  



அவசரமான உலகத்தில், ஆண்டவரின் வருகை பற்றிய நம்பிக்கை 

மங்கிப்போய்விட்டது

நிலையில்லா உலகமும், அதன் சொத்துக்களும்

நிரந்தரம் போல தெரிகிறது

ஆண்டவர் வரும்போது அனைத்தும் தெரிந்துவிடும்.

தோன்றுவதெல்லாம், நிலையானதாகாது,

காலம் தாழ்த்துபவை எல்லாம், பொய் என்றாகாது.  



ஆண்டவரே நீர் வர, என் வாழ்வை புனிதப்படுத்த 

பக்குவம் தாரும், ஆமென்




 

1 கருத்து:

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...