ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு (அ)21st Sunday in Ordinary Time
27.08.2023
முதல் வாசகம்: எசாயா 22,19-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 138
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11,33-36
நற்செய்தி: மத்தேயு 16,13-20
கேள்விகள்:
விவிலியத்தில் பல விதமான இலக்கிய நடைகளை அவதானிக்கின்றோம். விவிலியத்தில், கதைகள், புராண நம்பிக்கைகள், விடுகதைகள், பாடல்கள், கவிதைகள், விவரணங்கள், நேரடிப்பேச்சுக்கள், மறைமுகப் பேச்சுக்கள், கடிதங்;கள், வெளிப்பாடுகள் என்ற பல விதமான வகைகள்காணப்படுகின்றன. இவற்றுக்குள்ளும் பலவிதமான துணைப்பிரிவுகளும் காணப்படுகின்றன.
இந்த இலக்கியவகைள் விவிலியத்திற்கு மட்மே உரித்தானவை என்று சொல்வதற்கில்லை, ஏனைய பாரசீக, பபிலோனிய, எகிப்திய மற்றும் மொசப்தேமிய இலக்கியங்களிலும் இவைகள்காணப்படுகின்றன.
நமக்கு தெரிந்த படி விவிலியத்திலே எழுத்து ஆசிரியர்கள் (தொகுப்பாசிரியர்கள்) மிகமுக்கியமான பங்கை வகிக்கிறார்கள். சிலவேளைகளில் இவர்கள் வரலாற்றை விவரிக்கிறார்கள், சில வேளைகளில் கடவுளின் வார்த்தைகளை அப்படியே பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலவேளைகளில் கடவுளின் கேள்விகளையும் இவர்கள் முன்வைக்கிறார்கள். இந்த கேள்விகளை, இறையியலையும் தாண்டி யோசித்தால் இவை ஒவ்வொரு வாசகருக்குமான கேள்வியாகஇருக்கின்றன என்பது தென்படுகிறது. அனேகமான கேள்விகளுக்கு வாசகர்கள் உடனடியாகவிடைசொல்லிவிடுவார்கள், அப்படித்தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முறையைநவீன சினிமாக்கள் அல்லது நாவல்களும் பின்பற்றுவதை வாசகப் பிரியர்கள் அறிவார்கள்.
இன்னுமாக சிலகேள்விகள், விடையைத்தராமல் பல கேள்விகளை உருவாக்குவதாகவும்விவிலியத்தில் அமைந்திருக்கின்றன. ஆக அனைத்து விவிலிய கேள்விகளும் விடையைஎதிர்பார்க்கின்றன என்பதற்கில்லை, விடையில்லாத கேள்வியை மட்டும் தரும் கேள்விகளும்இந்த வாழ்வின் புத்தகத்தில் உள்ளன.
விவிலியத்தில் பல ஆயிரம் கேள்விகள் உள்ளன, அதேவேளை கடவுள் கேட்கும் பல நூறுகேள்விகளும் இருக்கின்றன. இப்படியான கடவுளின் கேள்விகளில் முக்கியமாக ஏழு (7) கேள்விகளை விவிலியத்தை தியானிப்பவர்கள் கண்டெடுத்துள்ளார்கள், அவற்றைதியானிப்போம்.
1. நீ எங்கே இருக்கிறாய் (אַיֶּכָּה 'அய்யேகாஹ்- எங்கே நீ)? (காண்க தொ.நூ 3,9).
இந்த கேள்வியை மொழியலாளர்கள் அல்லது சொல்லாட்சியாளர்கள் எரோடேசிஸ்(erotesis) என அழைக்கின்றார்கள். இது ஒரு வகையான கடுமையான கேள்வி, இங்கேஇப்படியான கேள்வியை கேட்கிறவர் எதிர்மறையான விடையை எதிர்பார்த்தே கேட்கிறார். வாசிப்போருக்கும் கடவுளுக்கும் தெரியும் ஆதாம் எங்கிருக்கிறார் என்று, இருந்தும் இந்தகேள்வி கதை நடையை விறுவிறுப்பாக்கின்றது. இந்த கேள்வியை கடவுள் ஆதாமிடம் கேட்டார்.
2. இது என்ன நீ செய்துவிட்டாய் (מַה־זֹּאת עָשִׂית மாஹ்-ட்ஸோ'த் 'அசித்- இது என்ன நீசெய்துவிட்டாய்)? (காண்க தொ.நூல் 3,13).
இதுதான் கடவுள் பெண்ணிடம் கேட்ட முதலாவது கேள்வி. 'இது என்ன' என்று அழுத்திக்கேட்க சுட்டிக்காட்டும், பெயர்ச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது (זֶה ட்செஹ்). இதனை பாவித்துஆசிரியர் குறித்த செயற்பாட்டின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறார். இந்த கேள்வி மூலம் ஏவாள்அந்த செயலை தவிர்த்திருக்கலாம், என்ற செய்தியை ஆசிரியர் காட்டுகிறார். இந்த கேள்விஏவாளிடம் கேட்டகப்பட்டது.
3. 'நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்'? (τί με λέγεις ἀγαθόν டி மெ லெகெய்ஸ் அகாதொன்)(காண்க மாற் 10,18) இதனை ஒரு மெய்யியல் கேள்வி என எடுக்கலாம். இந்த கேள்வியைவிளங்கிக் கொள்ள இதன் இரண்டாவது வரி பார்க்கப்படவேண்டும். இதன் இரண்டாவது வரியில்'கடவுள் ஒருவரே நல்லவர்' என்ற முதல் ஏற்பாட்டு நம்பிக்கையை இயேசு அந்த இளைஞருக்குநினைவூட்டுகிறார் (தி.பா 73,1). இதன் வாயிலாக தன்னை கடவுள் என காட்டுகிறார் எனஎடுக்கலாம். இதனை பிரதிபலிப்பு கேள்வி எனவும் எடுக்கலாம்.
4. 'ஆனால் நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்'? (ὑμεῖς δὲ τίνα με λέγετε εἶναι ஹுமெய்ஸ் தெடினா மெ லெகெடே எய்னாய் - இருப்பினும் நீங்கள் என்னை யாராக இருக்கிறேன் எனசொல்கிறீர்கள்) (காண்க மாற்கு 8,29).
இந்த கேள்வியை கேட்கும் முன் மக்கள் தன்னை யாரென கேட்கிறார்கள் என்ற கேள்வியைஇயேசு கேட்கிறார், அதற்கான பதிலையும் அவர்கள் கொடுக்கிறார்கள். அந்த கேள்வியில்திருப்தி
அடையாத இயேசு இன்னொரு கேள்வியையும் கேட்கிறார். இதற்கான விடையை அவர்எதிர்பார்க்கிறார்.
5. மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? (δοκεῖτε ὅτι εἰρήνην παρεγενόμην δοῦναι ἐν τῇ γῇ தொகெய்டே ஹொடி எய்ரேனேன் பரெகெநொமேன் தூனாய் என்டே கே) (காண்க லூக் 12,51).
இதனை எதிர்மறை கேள்வி எனலாம். அதாவது இதன் விடையாக 'இல்லை' என்பதேவரும்.வாசகர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றி யோசிக்க வேண்டும் என்பதை இந்த கேள்விகுறித்துக் காட்டுகிறது. இந்த கேள்விக்கு வாசகர்கள் உடனடியாக பதிலை தெரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை.
6. மனிதருக்கு கிடைக்கும் பயன் என்ன? (ὠφεληθήσεται ἄνθρωπος ஓபெலேதேசெடாய்அந்த்ரோபொஸ்) (காண்க மத் 16,26).
இதனை மெய்யறிவுக் கேள்வி என்ற வகைக்குள் அடக்கலாம். உலகத்தில் மனிதர் எதையும்நித்தியத்திற்கும் வைத்திருக்க முடியாது, அனைத்தும் கடந்து போகும். ஆக ஆன்மாவைவிடுத்துமற்றவை அனைத்தையும் சேர்த்தாலும் ஏதும் பயனில்லை என்பது புலப்படுகிறது. இதேகேள்வியை ஏற்கனவே பெரிய அலெக்சான்தர் அரசர் தன்னுடைய மரணத்தின்போது தன்வீரர்களிடம் கேட்டார். இப்படியான கேள்விகள் கிரேக்க உலகத்திற்கு நன்கு தெரிந்திருந்தகேள்வி. இந்துகளின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதையிலும், புத்தபெருமானின்போதனைகளிலும் இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன, அவை மனிதருக்கு ஞானத்தைகொடுக்க கேட்கப்பட்டவை.
7. நாளைக்கு உங்கள் வாழ்கை எப்படியிருக்கும்? (οἵτινες οὐκ τὸ τῆς αὔριον ποία ἡ ζωὴ ὑμῶν ஹொடினெஸ் ஊக் டொ டேஸ் அவுரியோன் பொய்யா ஹே ட்சோஏ ஹுமோன்) (காண்க யூதா4,16).
இந்த கேள்வி எதிர்காலத்தை மையப்படுத்திய எதிர்மறை பதிலை எதிர்பார்க்கும் கேள்வி.
உங்களுக்கு தெரியாதா? என்ற தோறனையில் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. ஆகஉங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், இருந்தும் உங்களுக்கு தெரியவில்லை அல்லது நீங்கள்அறிவிலிகளாக
இருக்கிறீர்கள் என்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக விவிலியத்தில் கேள்விகள், சாதாரண வினாக்கள் என்பதையும் தாண்டி அவைபடிப்பினைகளாகவும், இலக்கிய வகையாகவும் இருப்பதை அவதானிக்கலாம். கேள்விகேட்கிறவர், ஆண்டவராகவோ அல்லது ஆசிரியராகவோ இருக்கலாம். சாதாரண மனிதர்களைப்போல விடைதெரியாமல் கேள்வி அமைக்கப்படாமல், விடையை வாசகர்கள் புரிய வேண்டும்என்பதற்காகவே இந்த கேள்விகள் அமைக்கப்படுகின்றன.
எசாயா 22,19-23
19உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.
20அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, 21உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன்அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதாகுடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். 22அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலைஅவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான். 23உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்; 24ஆனால், அவன் தந்தை குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு கலயங்கள், கிண்ணங்கள் முதல், கலயங்கள், குடங்கள் வரையுள்ள அனைத்துக் கலங்களைப் போல்அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர். 25படைகளின் ஆண்டவர் உரைத்தது: அந்நாளில்உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை பெயர்ந்து முறிந்து கீழே விழும். அதில் தொங்கியசுமையும் வீழ்ந்து அழியும், என்கிறார் ஆண்டவர்.
அதிகமான ஆய்வாளர்கள் எசாயா புத்தகத்தை மூன்று பரிவுகளாக பிரிப்பர், அதில் இந்த
இருபத்திரண்டாவது அதிகாரம் முதலாவது பிரிவிற்குள் வருகிறது. இந்த அதிகாரம் எருசலேமைஎச்சரிப்பது போல அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியினுள் எசேக்கியா மன்னன் (கி.மு 715-687) எருசலேமில், யூதாவின் அரசராக இருக்கிறார். ஏற்கனவே அசிரியா, வடநாடானஇஸ்ராயேலை அழித்திருந்தது. இந்த காலத்தில் யூதா நாட்டினர் அறிவற்ற விதத்தில்அசிரியாவுடன் உடன்படிக்கை செய்திருந்தனர். அசிரியாவுடன் இவர்கள் செய்தஉடன்படிக்கையே இவர்களுக்கு கண்ணியாக மாறியது. பெரிய அளவிலான பணத்தை தென்நாடுஅசிரியாவிற்கு கப்பமாக கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை தாங்க முடியாதஅரசர் எசேக்கியா, அசிரியாவை எதிர்க்கத் துணிந்தார். இதற்கு இணையாக எசேக்கியாஎகிப்தின் உதவியையும் நாடினார். எகிப்தும் அசிரியாவும் பரம எதிரிகளாக இருந்தனர். இவர்கள்தங்கள் பேரரசுகளுக்கிடையிலிருந்த சிறிய நாடுகளை தங்கள் கைப்பொம்மைகளாக மாற்றிஅரசியல் விளையாடினர்.
இந்த காலப்பகுதியில் எசாயா, எசேக்கியா மன்னனை எகிப்தின் பக்கம் சாராமலும், அசிரியாவிற்கு எதிராக கலகம் செய்யாமலும் இருக்கச் சொல்கிறார். எசாயா எந்த எதிரிநாட்டையும் ஆதரிக்கவில்லை எனினும், யூதாவின் பலவீனத்தையும், அசிரியாவின் பலத்தையும்கருத்தில் கொண்டும், அரசியல் சாணக்கியத்தை நினைவிற் கொண்டும், எசேக்கியா மன்னனைஎச்சரிக்கிறார். எசேக்கியா தனிபட்ட வாழ்வில் ஒரு நல்ல அரசராக இருந்தபடியால் எசாயாஇறைவாக்கினருக்கு அவர்மேல் மதிப்பு இருந்தது (காண்க எசாயா 38,10-20). எசேக்கியாவின்கிளர்ச்சி எருசலேமிற்கு பல அழிவுகளைக் கொண்டுவந்தது என்பதை வரலாற்றில்காண்கின்றோம். இப்படியாக எசேக்கியா மன்னனை தவறான வழியில் கொண்டு சென்றதற்குபலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவாராக செப்னா-செபுனாஇருக்கிறார் (שֶׁבְנָא ஷெப்னா'). இவர் எசேக்கியா மன்னனின் அரண்மனையில் தலைமைஅதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும். இந்த அதிகாரி தன்னுடைய வரம்பை மீறி தன்அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து, அரசர் தவறான முடிவுகளை எடுக்க காரணமாகஇருந்திருக்கிறார்.
(சிலவேளைகளில் தலை சரியாக இருந்தாலும், வால்களின் அலுப்புக்கள் தாங்கமுடியாததாக இருக்கும். இது 2700 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்திருக்கிறது).
வவ.15-18: இந்த வரிகள் அரண்மனைப் பொறுப்பாளராகிய செபுனாவிற்கு எதிராக வருகின்றன. செபுனா விலையுயர்ந்த கல்லறையை தனக்காக வெட்டியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இஸ்ராயேலருடைய கல்லறை நம்பிக்கை வித்தியாசமானது, கல்லறைகள் வழமையாகஅலங்கரிக்கப்படாதவை. அவை நம்பிக்கையின் அடையாளம் அல்ல. இந்த அடையாளம்எசாயாவின் கோபத்தை தூண்டுகிறது. எசாயா இவர்மேல் கோபம் கொள்ள இது மட்டும்தான்காரணமா, என்று தெரியவில்லை.
செபுனாவை ஆண்டவர் தண்டிப்பார் என சில கடுமையான வார்த்தைகளையும் பாவிக்கிறார். எசாயா இவரிடம் காட்டும் கோபத்தை எசேக்கியாவிடம் காட்டவில்லை, இது எசாயாவிற்குஎசேக்கியாவின் மேல் உள்ள மரியாதையைக் காட்டுகிறது. அத்தோடு எசாயா செபுனாவின்தேர்ப்படையைப் பற்றி பேசுகிறார். இது செபுனாவின் காலத்தில் யூதேயாவிற்கு ஒரு நல்லதேர்ப்படை இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது (מַרְכְּב֣וֹת כְּבוֹדֶ֔ךָ மர்கெவோத் கெவோதெகா- பெருமதியா உன் தேர்கள்).
வ.19: இந்த வாக்கை ஆண்டவரின் வார்த்தையாக இறைவாக்குரைக்கிறார் எசாயா. செபுனாதன்னுடைய அலுவல்களை இழப்பார் என எச்சரிக்கப்படுகிறார். பின்நாட்களில் இது நடந்ததைவரலாறு காட்டுகிறது. செபுனா தலைமை அதிகாரியாவிருந்து பின்னர் செயலாளாரக மாறினார். இதனை எசாயாவின் தண்டனையான வார்த்தைகள் என ஆய்வாளர்கள் காண்கின்றனர்.
வ.20: இலக்கியாவின் மகன் எலியாக்கிம் காட்சிக்குள் உள்வாங்கப்படுகிறார் (אֶלְיָקִים בֶּן־חִלְקִיָּהוּ
'எலியாகிம் பென்-ஹில்கியாஹு). இந்த எலியாக்கிம் செபுனாவை போலல்லாது, அரசியல்சாணக்கியம் உள்ளவராகக் காட்டப்படுகிறார். இவரை எசாயாவின் வழி, கடவுள் 'தன் ஊழியர்' என்கிறார் (עַבְדִּי 'அவ்தி- என் பணியாளன்).
இந்த எலியாக்கிம்தான் அசிரியர்கள் எருசலேமை சூழ்ந்து படைகட்டியபோது அரசருக்காகபரிந்து பேசி பேரம் செய்தவர்கள். எலியாக்கிம் அறிவு முதிர்ந்தவராய், அசிரிய இராணுவதலைவர்களை எபிரேயத்தில் கதைக்காமல், அரமேயத்தில் கதைக்கச் சொல்கிறார். இதனால்எருசலேம் வாழ் மக்கள் அவர்கள் பேசுவதை விளங்காமலும், பயப்படாமலும் இருப்பார்கள் எனநம்புகிறார் (காண்க எசாயா 36,3 - 37-7). இதிலிருந்து இரண்டு விடயங்கள் தெளிவாகிறது. இந்தகாலத்தில் யூதேயா மக்கள் எபிரேயத்தைத்தான் கதைத்திருக்கிறார்கள், இரண்டாவதாகஎலியாக்கிம் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளுக்கு அரமேயிக்கம் தெரிந்திருக்கிறது. இந்தஅரமேயிக்கம் அக்காலத்தில் பன்நாட்டு மொழியாக வழக்கிலிருந்திருக்கிறது.
இன்னும் ஆச்சரியமாக அசிரியருக்கும் எபிரேயம் தெரிந்திருக்கிறது. (அக்கால உயர்அதிகாரிகள் தங்கள் அடையாளங்களை நேசித்தாலும், மற்றைய நாட்டு மொழிகளைஅறிந்திருந்தனர் என்பது, தற்கால நம் அதிகாரிகள் ஒரு மொழிக் கொள்கையை மட்டுமேகட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதை நகைக்கிறது). எசேக்கியா மன்னன் அசிரியர்களால்மனவுளைச்சலுக்கு உள்ளானபோது, இந்த எலியாக்கிம்தான் எசாயா இறைவாக்கினரிடமிருந்துநம்பிக்கையான வார்த்தைகளை பெற்று வந்தார்.
வ.21: அதிகாரமும் பணிகளும் செபுனாவிடமிருந்து எலியாக்கிமிற்கு மாறுவதை இந்த வரிகாட்டுகிறது. அங்கி மற்றும் கச்சை (כֻּתֹּנֶת குத்தோநெத்- ஆடை: אַבְנֵט 'அவ்நெத்- இடைக் கச்சை) என்பவை ஒருவருடைய சமூக அந்தஸ்தைக் காட்டுகின்றன. இவை கழையப்படும் போது அவர்அந்த நிலையை இழக்கிறார் எனவும், உடுத்தப்படும் போது, அவர் அந்நிலையை அடைகிறார்எனவும் எடுக்கலாம்.
இதற்கு மேலாக எலியாக்கிம் எருசலேமிலும் முக்கியம் பெறுகிறார். அவர் அதிகாரத்தைமட்டும் பெறவில்லை, மாறாக அவர் எருசலேம் வாசிகளுக்கு தந்தை என்ற நிலையையும்அடைகிறார் (וְהָיָה לְאָב לְיוֹשֵׁב יְרוּשָׁלַ֖ם வெஹாயாஹ் லெ'அவ் லெயோஷெவ் யெரூஷாலாம்). இந்தநிலை யாக்கோபின் மகன் யோசேப்பு எகிப்தில் அடைந்த நிலையை நினைவூட்டுகிறது.
வ.22: எலியாக்கிமின் முக்கியமான முடிவுகள் காட்டப்படுகின்றன. தாவீதின் குடுபத்தின்திறவுகோல் இவருக்கு கொடுக்கப்படும் எனப்படுகிறது (מַפְתֵּחַ בֵּית־דָּוִד மப்தெஹா பெத்-தாவித்). இது வீட்டு தலைமை அதிகாரியின் பணியைக் குறிக்கலாம். இவருடைய பணியின் காரம்சொல்லப்படுகிறது, அதாவது இவருடைய முடிவில் யாரும் தலையிடமாட்டார்கள் என்பதற்கு- இவர் பூட்டித் திறப்பார் யாரும் தலையிடமாட்டார்கள் என விளக்கம் கொடுக்கப்படுகிறது.
வ.23: எசாயா எலியாக்கிமை கூடார முளைக்கு ஒப்பிடுகிறார் (יָתֵד யாதெத்- முளை, பற்றிறுக்கி, ஆப்புக்கட்டை). முளையின் உறுதியைப் பொறுத்துத்தான் கூடாரத்தின் உறுதியியுமிருக்கும். இந்த கூடாரமாக தாவீதின் வீட்டாரை அதாவது எசேக்கியாவின் வீட்டாரையும், கூடாரமுளையாக எலியாக்கிமையும் ஒப்பிடுகிறார் இறைவாக்கினர்.
எலியாக்கிமின் இந்த புதிய பொறுப்புக்கள் அவர் தந்தை வீட்டாருக்கு மாண்பைக்கொண்டுவரும் என்றும் சொல்கிறார். இந்த மாண்பை, மேன்மையான அரியணை என்கிறார்
(כִסֵּא כָבוֹד கிஸ்ஸே காவோத்).
வ.24: இந்த வரி கதை நடையை மாற்றுகிறது. இவ்வளவு நேரமும் எலியாகிமின் பெருமைகளைப்பேசிய எசாயா, எலியாக்கிமின் இறுதி நாட்களையும் எச்சரிக்கிறார். எலியாக்கிமின் மேன்மைக்குபாதகமாக அவர் குடும்பத்தார் மாறுவர் என்பதையும் காட்டுகிறார். அதிகமான விவிலிய பெரும்பாத்திரங்களின் பாதகமான முடிவுநாட்களுக்கு அவர்களின் குடும்பங்களே காரணமாக
இருந்திருக்கிறார்கள்.
எலியாக்கிம் குடும்பத்தார் விளங்கப்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் பிள்ளைகளும்பேரப்பிள்ளைகளுமாவர். இவர்களுடைய பிழைகளை கலயங்கள், சிறு கலயங்கள், குடங்கள், போன்ற சுமைகள் என்கிறார். எலியாக்கிம் ஒரு முளையாக காட்டப்பட்டிருக்கிறார், இந்தமுளையின் பெறுமதியில் அவர் குடும்பம் தொங்கப்போகிறது. இதன் தொங்குதல்சுமையாகப்போகிறது. சாதாரணமாக அரசு உயர் அலுவலில் இருக்கும் ஒருவரின் குடும்பம்தாங்களும் அதன் சுகபேகத்தை அனுபவிப்பர், இது எல்லை மீறுகின்றபோது அது, அந்தஅதிகாரியின் இருப்பையும் மாண்பையும் கேள்விக்குள்ளாக்கும். இந்த நிலைதான்எலியாக்கிமுக்கும் என்கிறார் எசாயா. எசாயா சொன்னது போலவே வரலாற்றிலும்நடந்திருக்கிறது.
(அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை அரச பணிக்குள் உட்புகுத்துகின்ற வேளை, பலவிதமான இன்னல்களை சந்திப்பர். இந்த நிலை அன்றும் நடந்திருக்கிறது, இன்றும்நடக்கிறது. வீட்டில் ஒருவர் குருவானார், அவர் சகோதரர்கள் ஆயர்கள் ஆகிறார்கள்: வீட்டில்ஒருவர் வைத்தியரானால் அவர் உறவினர்களும் வைத்திய ஆலோசகர்கள் ஆகிறார்கள். வீட்டில்ஒரு அமைச்சர் இருந்தால் அவர் உறவினர்கள் இல்லங்கள் எல்லாம் விரைவாக அபிவிருத்திஅடைகின்றன, என்ன சொல்ல..).
வ.25: எலியாக்கிமின் முடிவும் அவர் துணையில் தொங்கும் குடும்பத்தின் நிலையும்காட்டப்படுகிறது. இந்த எச்சரிக்கையை படைகளின் ஆண்டவரே உரைத்ததாகச் சொல்லி, தன்இறைவாக்கை உறுதிப்படுத்துகிறார். படைகளின் ஆண்டவர் (יְהוָה צְבָאוֹת அதோனாய் ட்செபா'ஓத்) என்பது விவிலியம் பாவிக்கும் ஆண்டவரின் மிக முக்கியமான பெயர்.
எலியாக்கிமின் நிலை இறுதிக்காலத்தில் பெயர்க்கப்படும் என்கிறார். இது யூதேயாவின்இறுதி நாட்களைக் காட்டுகிறது. எலியாக்கிம் என்கின்ற முளை, உடைகின்றபோது அதில்தொங்குகின்ற பாத்திரங்களும் உடைகின்றன. இது இவர் குடும்பத்தின் நிலையைக்காட்டுகிறது.
திருப்பாடல் 138
நன்றிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)
1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில்உம்மைப் புகழ்வேன்.
2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும்உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும்மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
4ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டுஉம்மைப் போற்றுவர்.
5ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! 6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்குஎதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளதுஉமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
திருப்பாடல் 138ஐ தனிமனித புகழ்ப்பாடல் என திருப்பாடல் ஆய்வாளர்கள்வகைப்படுத்துகின்றனர். இதன் முன்னுரை இந்தப் பாடல் தாவீதுக்குரியது எனக் காட்டுகிறது. தனி மனித அனுபவங்கள் கூட கடவுளின் இயல்பை சமூகத்திற்கு காட்டக்கூடியவை என்பதைஇங்கே காணலாம். இந்த பாடலை தாவீதுதான் பாடினார் என்று சிலர் வாதிடுகின்றனர். தாவீதுகடவுளிடம் பெற்ற அருளுக்கு அடையாளமாக இந்த பாடலை இசைத்திருக்க வேண்டும்என்கின்றனர். இதன் பின்புலமாக பிலிஸ்தியருக்கு எதிரான போரை ஆய்வாளர்கள்காட்டுகின்றனர் (காண்க 2சாமுவேல் 5,17-21).
பால்-பெராட்சிம் என்ற இடத்தில் தாவீது முதல் தடைவையாக அரசராக பிலிஸ்தியரைவென்று அவர்களுடைய தெய்வச் சிலைகளை கைப்பற்றுகிறார். இவை கடவுள் இஸ்ராயேலோடு
இருக்கிறார் என்பதைக் காட்டியது.
வ.1: தாவீது தான் கடவுளுக்கு முழு மனத்தோடு நன்றி செலுத்துவதாக சொல்கிறார்
(אוֹדְךָ בְכָל־לִבִּי 'ஓதெகா வெகோல்-லிப்பி). முழு மனதைக் குறிக்க முழு இதயத்தோடு என்ற சொல்பாவிக்கப்பட்டுள்ளது.
தெய்வங்கள் முன்னிலையில் தான் கடவுளைப் புகழ்வதாகவும் சொல்கிறார். இந்த வரிமூலமாக பல கடவுள் நம்பிக்கையில் இந்த ஆசிரியர் நம்பிக்கை உடையவராக இருந்தாரா என்றகேள்வி எழுகிறது. தெய்வங்கள் என்று இவர் கருதுபவை இவருடைய எதிரி நாட்டின் கடவுளாக
இருந்திருக்கலாம் (אֱלֹהִים אֲזַמּרֶךָּ 'எலோஹிம் 'அட்சாம்மெரெகா). தெய்வங்களைக் குறிக்கஎலோஹிம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது கடவுளைக் குறிக்க பயன்படும் சொல்என்பதை நினைவில் கொள்வோம்.
வ.2: தாவீது தான் திருக்கோவிலை நோக்கி திரும்பி தாள் பணிவதாக சொல்கிறார், இங்கேதிருக்கோவில் (היכַל קָדְשְׁךָ֡ ஹெகால் காத்ஷெகா- உம்முடைய திருக்கோவில்) என்பது எதனைக்குறிக்கிறது என்பது தெரியவில்லை. தாவீதுடைய காலத்தில், நிச்சயமாக எருசலேம் தேவாலயம்இருந்திருக்கவில்லை. ஆனால் ஆண்டவருடைய சந்திப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைபேழை நகருக்கு வெளியில் இருந்தது. இங்கே பாவிக்கப்படும் சொல் எருசலேம் தேவாலயத்தைகுறிப்பது போல உள்ளது. இப்படியானால், இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்கமுடியாது.
ஆசிரியர் தான் ஆண்டவருக்கு அவருடைய பேரன்பையும் (חֶסֶד ஹெசெத்), உண்மையையும்(אֱמֶת 'எமெத்) முன்னிட்டு நன்றி சொல்லவதாக அறிக்கையிடுகிறார். ஆண்டவருக்கு நன்றிசொல்வதை அவர், ஆண்டவரின் பெயருக்கு நன்றி சொல்வதாக சொல்கிறார். ஆண்டவரை காணமுடியாது எனவே அவரின் பெயருக்கு நன்றி சொல்வது அடையாளமாக அமைகிறது.
இதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார், அதாவது கடவுள் அனைத்திற்கும் மேலாக தன்பெயரையும் (שֵׁם ஷெம்) வாக்கையும் (אִמְרָה 'இம்ராஹ்) மேன்மையுறச் செய்துள்ளார்.
வ.3: ஆண்டவரிடம் பலர் பலவற்றிக்காக மன்றாடுகின்றனர். சில வேளைகளில் இந்தமன்றாட்டுக்கள் காலம் தாழ்த்தியே கேட்கப்படுகின்றன என்ற அனுபவத்தை சிலர் பெறுகின்றனர். இதனால் மன்றாட்டுக்கள் சரியான காலத்தில் கேட்கப்பட்டால் அது வித்தியாசமானஉணர்வுகளைக் தரவல்லது. இந்த அனுபவத்தைத்தான் ஆசிரியர் உணர்கிறார். ஆண்டவரின்செவிசாய்ப்பு (עָנָה 'ஆனாஹ்) இவரின் மனத்திற்கு, மனவலிமையை (עֹז 'ஒட்ஸ்) தருவதாகச்சொல்கிறார்.
வ.4: ஆண்டவரின் சொற்களை நினைவுகூறுகிறார். இந்த சொற்கள் நம்பிக்கை அல்லதுவெற்றியின் சொற்களாக இருந்திருக்கலாம். இவை முக்கியமானவையாக இருப்பதால் அவற்றைபலர் நினைவுகூறுவர் என்கிறார் போல் (אִמְרֵי־פִֽיךָ 'இம்ரெ-பிகா- உம்முடைய வாயின் சொற்கள்).
பூவுலகின் மன்னர்கள் என்பவர்கள் (כָּל־מַלְכֵי־אָרֶץ கோல்-மெல்கே-'அரெட்ஸ்) தாவீதின்நாட்டைச் சுற்றியிருந்த அரசர்களைக் குறிக்கலாம். தாவீது இவர்களை எதிரிகள்என்றழைக்காமல், அவர்களை மரியாதையோடு ஒப்பிடுகிறார்.
வ.5: இவர்கள் ஆண்டவரின் மிகப் பெரிய மாட்சிமையின் பொருட்டு, அவரை புகழ்ந்து பாடுவர்என்கிறார். ஆண்டவரின் மிகப் பெரிய மாட்சிமை என்பது பாடலாசிரியரின் வெற்றியைக்குறிக்கலாம், அந்த வெற்றி அவரின் கடவுளுடைய மாட்சியைக் காட்டுகிறது (גָדוֹל כְּבוֹד יְהוָה காதோல் கெவோத் அதோனாய்).
வ.6: ஆண்டவர் உன்னதத்தில் உறைபவர் என்பது எபிரேய நம்பிக்கை (רָם יְהוָה ராம் அதோனாய்). இதே நம்பிக்கையைத்தான் இஸ்ராயேலரைச் சுற்றியிருந்தவர்களும் தங்கள் தெய்வங்களில்வைத்திருந்தனர், ஆனால் இஸ்ராயேலரின் நம்பிக்கை இதனையும் தாண்டி, இந்த கடவுள்உன்னதத்தில் இருந்தாலும், நேரடியாக மண்ணகவாசிகளை நேசிக்கிறார் என்பதைக்கூடுதலாகக் காட்டுகிறது.
இது ஆண்டவருடைய பலவீனம் அல்ல, ஏனெனில் செருக்குற்றவர்களை அவர் அவர்களின்இடத்திலேயே அறிகிறார் என்கிறார் ஆசிரியர்.
வ.7: இந்த வரி தாவீதின் தனிப்பட்ட அனுபவத்தையும், கடவுள் செய்த உதவியையும் நினைப்பதுபோல அமைந்திருக்கிறது.
தான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், அவருடைய உயிர் காக்கப்பட்டுள்ளது எனவிளக்கப்பட்டுள்ளது. தாவீது இப்படியான பல அனுபவங்களை கடந்திருக்கிறார். ஆசிரியர் எந்தஇடத்தில் இப்படியான அனுபவத்தை பெற்றார் என விளக்கவில்லை. சிலர் இதற்கு, தாவீதுபிலிஸ்தயருடன் போரிட்டு வெற்றி கண்ட நிகழ்வை பின்புலமாகக் காட்டுகின்றனர்.
தன்னுடைய எதிரிகளின் சினத்திற்கு எதிராக ஆண்டவர் தன் கையை நீட்டுகிறார் என்பது, தாவீதுடைய எதிரி, ஆண்டவருடைய எதிரியாக மாறுவதாகக் கொள்ளலாம். ஆண்டவருடையகை (יָדֶךָ யாதெகா- உமது கை) என்பது, அவருடைய வல்லமையை அல்லது பலத்தைக்குறிக்கிறது.
வ.8: ஆண்டவர் வாக்களிக்கின்ற அனைத்தையும் செய்கிறவர். இதனை எதிர்கால வினையில்நினைக்கிறார் ஆசிரியர். அதற்கான காரணமாக, ஆண்டவருடைய பேரன்பைக் காட்டுகிறார். ஆண்டவருடய பேரன்பு என்றும் உள்ளபடியால் அவர் வாக்களித்த அனைத்தையும் செய்கிறவர்ஆகிறார்.
தாவீது தன்னை ஆண்டவரின் கைவினைப் பொருளாகக் காண்கிறார் (מַעֲשֵׂי יָדֶיךָ மா'அசெயாதேகா- உமது வேலைப் பொருள்). இது சிற்பி மற்றும் சிற்பம் என்ற உருவகத்தைநினைவூட்டுகிறது. ஆண்டவரை சிற்பியாகவும், குயவனாகவும் வருணிப்பது எபிரேயவிவிலியத்தில் அடிக்கடி வருகிறது.
உரோமையர் 11,33-36
33கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணைஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள்ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! 34'ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்குஅறிவுரையாளராய் இருப்பவர் யார்? 35தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் எனமுன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?' 36அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன்அவராலேயே உண்டாயின் அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சிஉரித்தாகுக! ஆமென்.
உரோமையர் திருமுகத்தின் பதினொராவது அதிகாரம் மூன்று முக்கியமான தலைப்பில்
இறையியல் செய்கிறது. வவ.1-10: இஸ்ராயேலருள் எஞ்சியோரைப் பற்றிப் பேசுகிறது. வவ.11-24: பிற இனத்தாரின் மீட்பை பற்றிப் பேசுகிறது. வவ.25-36: இஸ்ராயேலர் இழந்த நிலையைமீண்டும் அடைதல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. உரோமைய திருச்சபை பிறவினத்தாரை மையமாககொண்டுள்ள திருச்சபை என்பதால் யார் பிறவினத்தவர், அவர்களின் நிலை என்ன, கடவுள்பார்வையில் அவர்களின் பெறுமதி என்ன? போன்ற கேள்விகளை பவுல் அவதானமாகவிளங்கப்படுத்த வேண்டியவராக இருக்கிறார். பவுல் பிறவினத்தவர்களின் திருத்தூதர் எனஅறியப்பட்ட அதேவேளை அவர் யூத மக்களை வெறுக்கும் திருத்தூதர் அல்ல என்பதையும்தெளிவுபடுத்த வேண்டியவராக இருக்கிறார்.
பின்வரும் வரிகள் கடவுளின் செல்வம், ஞானம், அறிவு, தீர்ப்பு, போன்றவை மனித அறிவிற்குஅப்பாற்பட்டவை, அத்தோடு அவற்றை மனிதர் ஆராச்சிக்கு உட்படுத்த முடியாது என்றும்முடிக்கிறார். இதற்கு எசாயா 40,13: தி.பா 139,17-18: எசாயா 55,8 போன்ற இறைவார்த்தைகளைபயன்படுத்தி தன்னுடைய விவாதத்தை முன்வைக்கிறார்.
வ.33: பவுல் கடவுளின் அருட்செல்வத்தை எழுவாய்ப் பொருளாக எடுத்து விளக்க முயற்சிக்கிறார். கடவுளின் அருட்செல்வத்திற்கு ஒத்த கருத்துச் சொற்களாக அவருடைய ஞானத்தையும், அறிவையும் ஒப்பிடுகிறார் (πλοῦτος புளுடொஸ்- செல்வம்: σοφία சோபியா- ஞானம்: γνῶσιςகுனோசிஸ்- அறிவு).
இந்த சிந்தனையை இந்த வரியின் இரண்டாவது பிரிவு மேலும் விளக்குகின்றது. ஆண்டவருடைய தீர்ப்புக்கள் அறிவிற்கு எட்டாதவை எனப்படுகிறது. அதேபோல அவர்செயல்முறைகளும் ஆராய்சிக்கு அப்பாற்பட்டவை எனப்படுகிறது (κρίμα கிரிமா- தீர்ப்பு: ὁδόςஹொடொஸ்- பாதை). இந்த வரியின் மூலம், கடவுள் மனித உலகத்திற்குள்ளும் அவர்களின்சிந்தனைகளுக்குள்ளும் அடக்கப்பட முடியாதவர் என்பது காட்டப்படுகிறது.
வ.34-35: வசனம் 33 சொன்ன வாதத்தை, சில முதல் ஏற்பாட்டு வரிகளைக் கொண்டு விளக்கமுயல்கிறார் பவுல்.
வ.34, எசாயா 40,13-14 வரியை நினைவூட்டுகிறது. இந்த வரியில் பவுல் கேள்வி கேட்கிறார், அதாவது ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாக இருப்பவர் யார்? இதனைத்தான் எசாயாவும் தன் இறைவாக்கில் 'இஸ்ராயேலின் ஒப்பற்ற கடவுள்' என்ற பகுதியில்விளக்குகிறார்:
13ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்துகற்றுத்தந்தவர் யார்?
14யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்குப் பயிற்சி அளித்து, நீதிநெறியைஉணர்த்தியவர் யார்? அவருக்கு அறிவு புகட்டி, விவேக நெறியைக் காட்டியவர் யார்?
வ.35: இரண்டாவது கேள்வியை முன்வைக்கிறார் பவுல். இப்போது யோபு புத்தகத்திலிருந்துஇறைவார்த்தையை பாவிக்கிறார், காண்க யோபு 41,11.
11அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர் எவராவது உண்டோ? விண்ணகத்தின்கீழ்அப்படிப்பட்டவர் யாருமில்லை! இந்த இறைவார்த்தை யோபு புத்தக வரியை அப்படியே பிரதிபலிக்காவிட்டாலும், அதன் சிந்தனையை தாங்கியுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வ.36: இந்த வரி மிக முக்கியமான வரி. இந்த வரியில் பிரபஞ்சத்தின் இருப்பியலுக்கு முடிவுரைஎழுதுகிறார் பவுல். அனைத்தும் கடவுளிலிருந்து வந்தன, கடவுளாலேயே உருவாயின, அவருக்காகவே இருக்கின்றன என்கிறார். ὅτι ἐξ αὐτοῦ καὶ δι᾿ αὐτοῦ καὶ εἰς αὐτὸν τὰ πάντα· ஹொடி எக்ஸ் அவுடு, காய் தி அவுடு காய் எய்ஸ் அவுடொன் டா பான்டா). இந்த வரி யோவான்நற்செய்தியின் 1,1 வரியை நினைவூட்டலாம்.
இந்த கடவுளுக்கே மாட்சி என்றென்றும் கொடுக்கப்படவேண்டும் என முடிக்கிறார்.
மத்தேயு 16,13-20
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30: லூக் 9:18 - 21)
13இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, 'மானிடமகன்யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார். 14அதற்கு அவர்கள், 'சிலர் திருமுழுக்குயோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிறஇறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்' என்றார்கள். 15'ஆனால் நீங்கள், நான் யார்எனச் சொல்கிறீர்கள்?' என்று அவர் கேட்டார். 16சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். 17அதற்கு இயேசு, 'யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாகவிண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18எனவே நான் உனக்குக்கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19விண்ணரசின் திறவுகோல்களை நான்உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்' என்றார். 20பின்னர், தாம்மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க்கூறினார்.
பேதுருவுக்கும் இயேசுவிற்கும் இடையிலான உரையாடல்கள் மிக சுவாரசியமானவை. அதிகமான உரையாடல்களில் பேதுரு சரியாக தொடங்கி முடிவில் பிழையான அறிவுரையைச்சொல்லப் போய் ஆண்டவரிடம் நல்ல திட்டு வாங்குவார். இந்த பகுதியில் பேதுரு அனைத்துசீடர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறார் எனலாம். இந்த பகுதி மூன்று நற்செய்திகளிலும்பதியப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மிகவும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறதுஎனலாம்.
மத்தேயு நற்செய்தியின் 16வது அதிகாரம் நான்கு பிரிவுகளைக் கொண்டுஅமைக்கப்பட்டுள்ளது.
அ. ஆண்டவரிடம் அடையாளம் கேட்டல்: வவ 1-4.
ஆ. பரிசேயர், சதுசேயரைப் பற்றிய அவதானம்: வவ. 5-12
இ. பேதுருவின் அறிக்கை: வவ. 13-20
ஈ. இயேசு தன் சாவை முதல் தடவை அறிவித்தல் வவ.21-28
இந்த வரியை விசுவாசத்திற்கும், விசுவாசமின்மைக்கும் இடையிலான போராட்டத்தைவிளக்கும் அதிகாரம் என எடுக்கலாம்.
வ.13: இயேசு பிலிப்பு செசாரியா பகுதிகளுக்குச் செல்கிறார். இந்த பிலிப்பு செசாரியா எர்மோன்மலைக்கு அடியில் இருந்த ஒரு பசுமையான நகர். கோடை காலத்திலும் நீர் கிடைக்கக்கூடியமிகவும் வளமான வட இஸ்ராயேலின் ஒரு பகுதி. இதனுடைய பழைய பெயர் பெனயாஸ். பெரியஏரோதின் மகனாக பிலிப்பு, பிலிப்பியாவின் குறுநில மன்னராக இருந்தார். பிலிப்பு இந்த நகரைபுதுப்பித்தார், இதனை அகுஸ்து சீசருக்கு அர்ப்பணித்து அதனை செசாரியா என்று பெயர்சூட்டினார். கடலோர செசாரியாவிலிருந்து இதனை அடையாளப்படுத்த இதனை பிலிப்பிசெசாரியா என அழைத்தார். இந்த நகர்தான் பிலிப்புவுடைய அரச மற்றும் சமய தலைநகராகவிளங்கியது. இந்த நகரின் ஊடாக பல முக்கியமான பிரதான வணிக வீதிகள் சென்றதினால்பொருளாதார ரீதியிலும் இந்த நகர் முக்கியம் பெற்றிருந்தது.
இந்த இடத்தில்தான் பேதுரு தன்னுடைய மிக முக்கியமான விசுவாச அறிக்கையைவெளிவிட்டார் என்பதிலிருந்து இந்த இடத்தின் முக்கியத்துவம் தெரிகிறது என்றும் சிலர்வாதிடுகின்றனர். கி.பி 60களில் இந்த நகர் இரண்டாம் அக்கிரிப்பா மன்னனால் மீளவும்கட்டப்பட்டது, பின்னர் இதனை அவர் நீரோ சீசரை மகிழ்ச்சிப்படுத்த நெரோனியஸ் என்ற பெயர்மாற்றம் செய்தார். நீரோ சீசரின் மரணத்தின் பின் இந்த நகர் மீண்டும் பழைய பெயரையேபெற்றது. உரோமைய உலகத்திலே இந்த இடம் மிக முக்கியமான இடமாக இருந்திருக்கிறது. பல சீசர்கள் இங்கே தங்களுடைய இராணுவத்தை தங்க வைத்திருக்கிறார்கள். யூத-உரோமையபோரின் போது இங்கிருந்துதான் உரோமைய இராணுவம் புறப்பட்டிருக்கிறது (கி.பி 66-70).
இயேசு இந்த இடத்திற்கு சென்றிருக்கிறார் என்பதிலிருந்து இயேசு வடக்கு இஸ்ராயேல்பிரதேசம் வரை பயணம் செய்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. இந்த இடத்திலிருந்து மானிடமகனை மக்கள், யார் என சொல்கிறார் என்ற ஒரு முக்கியமான கேள்வியை அனைத்துசீடர்களையும் பார்த்து கேட்கிறார் (τὸν υἱὸν τοῦ ἀνθρώπου டொன் ஹுய்யோன் டூ அந்ரோபூ- மானிட மகனை).
மானிட மகன் என்ற இறையியல் பதத்தை சிலர் சாதாரண பதமாகவும், சிலர் விவிலியஅடையாள பதமாகவும் பார்க்கின்றனர் (ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ஹொ ஹுய்யோஸ் டூ அந்த்ரோபூ- மனிதனின் மகன்). முதல் ஏற்பாட்டில் தானியேல் புத்தகத்தில் இந்தச் சொல்பாவிக்கப்பட்டுள்ளது (காண்க தானியேல் 7,13). முதல் ஏற்ப்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டுபுத்தகங்களில் இந்த சொல்லாடல்களுக்கிடையே பல வித்தியாசங்களும் மாற்றங்களும்இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயேசு இந்த சொல்லை அதிகமாகபயன்படுத்துகிறார். இயேசு இந்த சொல்லிற்கு என்ன அர்த்தத்தைக் கொடுத்தார் என்பதுதெளிவாக இல்லை. பல ஊகங்கள் இந்த சொல்லின் அர்த்தமாக முன்வைக்கப்படுகிறது.
அ. இயேசு தன்னை மெசியாவாக அடையாளப் படுத்த,
ஆ. இயேசு தன்னை சாதாரண பாலஸ்தீன மனிதனாக காட்ட,
இ. இயேசு தன்னை புதிய ஆதாமாக உருவகிக்க,
ஈ. இயேசு தன்னை இரண்டாம் வருகை கடவுளின் மகனாக வர்ணிக்க,
போன்ற தொனியில் இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள்வாதிடுகின்றனர். இயேசுவின் கேள்வி நேரடியாக சீடர்களை நோக்கி, ஆனால் மக்களைப்பற்றியதாகவே இருக்கிறது.
வ.14: சீடர்களின் பதிலை பதிவு செய்கிறார் மத்தேயு. அவர்கள், இயேசுவை மக்கள் திருமுழுக்குயோவான், எலியா, எரேமியா மற்றும் வேறு இறைவாக்கினருள் ஒருவர் என காண்கின்றனர்என்கிறார்கள். திருமுழுக்கு யோவான் சற்று நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருந்தார், இருப்பினும் அவர் உண்மையாக இறக்கவில்லை, அவர் வருவார் என்ற நம்பிக்கை நிலவியது. எலியா இறைவாக்கினர் மெசியாவின் வருகைக்கு முன்னர் வருவார் என்ற நம்பிக்கையும்இஸ்ராயேல் மக்களிடையே ஆழமாக நிலவியது (காண்க மலாக்கி 4,5). எரேமியாஇறைவாக்கினர், பபிலோனியரிடம் எருசலேம் வீழ்ந்தபோது, எகிப்திற்கு தப்பி போயிருந்தார், அங்கே அவருக்கு என்ன நடந்தது என்று இஸ்ராயேலருக்கு முழுமையாக தெரியாதிருந்தது. எனவே அவரும் மீண்டும் வருவார் என இவர்கள் நம்பியிருந்திருக்கலாம்.
இயேசுவை பல இடங்களில் மக்கள் இறைவாக்கினராக கண்டிருக்கின்றனர். இதனையேசீடர்களும் இயேசுவிடம் அறிக்கையிடுகிறார்கள். இதனை அவர்கள் மக்களின் பதில்களாகத்தான்தருகிறார்கள்.
வ.15: இயேசு இந்த பதிலால் திருப்தியடைந்ததாக தெரியவில்லை, ஏனெனில் அவரும் இந்தபதிலை ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பார். இதனால்தான் அவர் 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' என்கிறார் (ὑμεῖς δὲ τίνα με λέγετε εἶναι ஹுமெய்ஸ் தெ டினா மெ லெகெடெ எய்னாய்). இந்தகேள்வி சாதாரண கேள்வியாக கருதப்படக்கூடாது, மாறாக இயேசு தன் சீடர்களிடம், தன்னைஅவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதாக அமைந்துள்ளது போலதோன்றுகிறது. இவர்களுடைய பதிலையும் இயேசு ஏற்கனவே அறிந்திருப்பதற்கான வாய்ப்பும்உள்ளது.
வ.16: சீமோன் பேதுருவின் விசுவாச அறிக்கை சொல்லப்படுகிறது. இந்த வரியில் பேதுரு, சீமோன் பேதுரு, என்று முழுப்பெயரில் எழுதப்படுகிறார். இது இவரின் முக்கியத்துவத்தையும், அவர் அறிக்கையின் முக்கியத்துவத்தையும் காட்ட இருக்கலாம் (Σίμων Πέτρος ட்சிமோன்பெட்ரொஸ்).
பேருவின் அறிக்கை முழு திருச்சபையின் அறிக்கை அல்லது திருச்சபை கொண்டிருக்கவேண்டிய அறிக்கையை காட்டுகிறது. நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் என்பதுதான் முழுபுதிய ஏற்பாட்டின் மையக் கருத்து (σὺ εἶ ὁ χριστὸς ὁ υἱὸς τοῦ θεοῦ ⸂τοῦ ζῶντος⸃. சு எய் ஹொகிறிஸ்டொஸ் ஹொ ஹுய்யோஸ் டூ தியூ டூ ட்சோன்டோஸ்). இதனை பேதுரு மிக அழகாகவும்ஆணித்தரமாகவும் சொல்கிறார். இந்த வரிகள் பேதுருவின் விசுவாசத்தின் முதிர்ச்சியைக்காட்டுகிறது.
சில ஆய்வாளர்கள் இந்த வரிகள் ஆண்டவரின் உயிர்ப்பின் பின்னர் பேதுரு கொண்டிருந்தவிசுவாசத்தின் அடையாளம் என்கின்றனர்.
வ.17: மற்றைய நற்செய்திகளைவிட மத்தேயு இந்த வரியில் வித்தியாசப்படுகிறார் (ஒப்பிடுகமாற்கு 8,27-30: லூக்கா 9,18-21). இந்த இடத்தில் பேதுருவின் முக்கியத்துவம் காட்டப்படுகிறது. இயேசு பேதுருவை முழுப்பெயரில் அழைத்து அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்கிறார் (μακάριος εἶ Σίμων ⸀Βαριωνᾶ மாகரியோஸ் எய் ட்சிமோன் பாரியேனா). இதன் மூலம் இந்த விசுவசத்தைவெளிப்படுத்தும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது புலப்படுகிறது. அத்தோடு இதுஒரு தெய்வீக விசுவாசம் எனவும், இதனை மனிதர் அல்ல கடவுள்தான் வெளிப்படுத்தக் கூடியவர்என்பதையும் காட்டுகிறார். ஆக கிறிஸ்தவர்களின் இந்த விசுவாசம் மனித விசுவாசம் அல்லமாறாக அது தெய்வீக விசுவாசம் என்பது புலப்படுகிறது. இந்த விசுவாசத்தைக் கொள்ளாதோர்கடவுளின் வெளிப்பாட்டை அறியாதோர் என்பதும் புலப்படுகிறது.
கடவுளை இயேசு விண்ணகத்திலுள்ள என் தந்தை என அழைக்கிறார் (ὁ πατήρ μου ὁ ⸄ἐν τοῖς οὐρανοῖς ஹொ பாடேர் மூ ஹொ என் டொய்ஸ் ஹுராநொய்ஸ்).
வ.18: பேதுருவின் அறிக்கையால் மகிழ்ந்த இயேசு தன் ஆசிர்வாதத்தை பேதுருவிற்குகொடுக்கிறார்.
இயேசு அதிகாரத்தோடு பேசுகிறார். 'நான் உனக்கு கூறுகிறேன்' (κἀγὼ δέ σοι λέγω காகோதெ சொய் லெகோ- ஆனால் நான் உனக்கு சொல்கிறேன்) என்பது அவருடைய தெய்வீகத்தைக்குறிக்கிறது என எடுக்கலாம். இயேசு பேதுருவை பாறை என்கிறார். பெட்ரொஸ் (Πέτρος) என்றஆண்பால் பெயர்ச் சொல்லின் பெண்பால் பெயர்ச்சொல் பெட்ரா (πέτρᾳ) என்று வரும். இதன்அர்த்தம் பாறையைக் குறிக்கிறது.
இந்த வரியில்தான் முதல் முதலின் 'திருச்சபை' (ἐκκλησία எக்கலேசியா- புனிதசபை) என்றசொல், மத்தேயு நற்செய்தியில் பாவிக்கப்படுகிறது. எக்லேசியா என்ற சொல் முதல் ஏற்பாட்டில்,
இஸ்ராயேல் மக்களைக் குறிக்க கஹால் (קָהָל) என்று பாவிக்கப்பட்டது. இயேசு தன்திருச்சபையை பேதுரு என்கின்ற பாறை மேல் கட்டுவதாகச் சொல்கிறார். அத்தோடுபாதாளத்தின் வாயில்கள் (πύλαι ᾅδου புலாய் ஹதூ) அதன் மேல் வெற்றி கொள்ளா என்கிறார். பாதாளத்தின் வாயில்கள் என்று எதனைக் குறிக்கிறார் என்பது தெளிவாக இல்லை. சிலர்இதனை நரகம் என்கின்றனர், சிலர் இதனை பிரிவினைவாதம் என்கின்றனர், இன்னும் சிலர்இதனை உரோமைய பேரரசு என்கின்றனர். பிலிப்பு செசாரியாவில் இந்த மூன்றாவது அர்த்தம்முக்கியத்துவம் பெறலாம்.
பாதாளத்தின் வாயில்கள் என்பது யூதர்களுக்கு அக்காலத்தில் நன்கு தெரிந்திருந்த ஒருஉருவகம்.
வ.19: பேதுருவிற்கு மேலதிகமாக சில விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
அ. விண்ணகத்தின் திறவுகோல்கள் அவரிடம் கொடுக்கப்படுகிறது (κλεῖδας τῆς βασιλείαςகிலேய்தாஸ் டேஸ் பாசிலெய்யாஸ்). திறவு கோல்கள் அதிகாரத்தைக் குறிக்கின்றன. இந்தவரியின் மூலம் பேதுரு விண்ணகத்தின் அதிகாரத்தைப் பெறுகிறார். அக்காலத்தில்அரண்மனையின் திறவு கோல்களை வைத்திருப்பவர் வீட்டின் தலைமை அதிகாரியாகக்கருதப்பட்டார். இந்த நிலைக்கு பேதுரு உயர்த்தப்படுகிறார்.
ஆ. மண்ணுலகில் பேதுரு தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்- மண்ணுலகில்அவர் அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்: இது பேதுருவின் பணி அதிகாரத்தைக்காட்டுகிறது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். இந்த வரியைக் கொண்டே, குருக்களுக்குஒப்புரவு திருவருட்சாதன பணி கொடுக்கப்பட்டுள்ளது என திருச்சபையின் தந்தையர்கள் ஆரம்பகாலத்தில் வாதாடினார்கள். அனுமதிப்பதும், தடைசெய்வதும் ஓரு வீட்டு தலைமை அதிகாரியின்மிக முக்கியமான பணி. இதனைத்தான் பேதுரு பெறுகிறார்.
ஒரு சில முக்கியமான ஆய்வாளர்கள், இந்த வரிகள் ஆரம்ப கால திருச்சபையுடையதுஎனவும், இது இயேசு ஆண்டவர் உயிர்த்த பின்னர் உருவானவை எனவும் வாதிடுகின்றனர்.
இங்கே இருக்கின்ற வார்த்தை பிரயோகங்கள் காலத்தால் மிகவும் பிந்தியது எனகாட்டுகின்றனர்.
வ.20: இந்த வரியில் மத்தேயு மற்றைய நற்செய்தியாளர்களை ஒத்திருக்கிறார். மத்தேயுவின்இயேசு
இந்த இடத்தில் தான் மெசியா என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறார். மத்தேயுநற்செய்தியின் முக்கியமான நோக்கமும், இயேசுவை மெசியாவாக காட்டுவதாகும். இந்த வரி சிலமுக்கியமான படிவங்களில் சற்று மாறுதலோடு காணப்படுகிறது (ὁ Χριστὸς Ἰησοῦς ஹொகிறிஸ்டொஸ் இயேசூஸ்- அவர் இயேசு மெசிய).
இயேசு இதனை இரகசியம் என்று சொல்லி அதனை எவரிடமும் (μηδενὶ மேதெனி), சொல்வேண்டாம் என கட்டளையிடுகிறார். நற்செய்தியின் நோக்கமே, இயேசு மெசியா எனஅறிக்கையிடுவதாகும், அப்படியிருக்க யாரிடமும் சொல்ல வேண்டாம் என இயேசு சொல்வதுவித்தியாசமாக இருக்கிறது. ஒருவேளை, ஒவ்வொருவரும் ஆண்டவரை தனித்தனியாக மெசியாஎன கண்டுபிடிக்கட்டும் என இயேசு விரும்பியிருக்கலாம்.
இயேசு யார் என்பது ஒரு தேடல்.
சிறு வயதில் நம்பெற்றோர் இதற்கு விடையை சொல்லித்தருகிறார்கள்.
பெரியவரானதும்தான் தெரிகிறது,
அவர்களும் இதன் விடையை இன்னும் தேடுகிறார்கள் என்று.
இயேசு என்னும் தேடல் தியாகங்களை எதிர்பார்க்கிறது.
இந்த தேடலின் விடை அவ்வளவு எளிதிலும்
கிடைக்காது,
ஆனாலும் அது சாத்தியமானது.
அன்பு ஆண்டவரே,
உம்முடைய உண்மையான முகத்தைக் காண
வரம் தாரும், ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக