வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா (அ) 06,08,2017



ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா ()

06,08,2017


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Siththathirai Matha, 

Chaddy, Velanai, 

Jaffna. 

Saturday, 5 August 2023


முதல் வாசகம்: தானியேல் 7,9-14

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 97

இரண்டாம் வாசகம்: 2பேதுரு 1,16-19

நற்செய்தி: மத்தேயு 17,1-9



ஆண்டவரின் திருவுருமாற்றப் பெருவிழா


சமநோக்கு நற்செய்தியில் முக்கிய நிகழ்வாக காட்டப்படும் ஆண்டவரின் திருவுருமாற்றம் ஒவ்வொரு நற்செய்தியாளரின் விசேடமான பார்வையிலே அழகுபடுத்தப்பட்டுள்ளது (ஒப்பிட மத்தேயு 17,1-8: மாற்கு 9,2-8: லூக்கா 9,28-36). இந்த சமநோக்கு நற்செய்தியாளர்களின் பதிவை பேதுரு தன்னுடைய இரண்டாம் திருமுகத்தில் நினைவுபடுத்துகிறார் (காண்க 2பேதுரு 1,16-18). இந்த மூன்று நற்செய்திகளிலும் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்ற திருத்தூதர்கள் ஆண்டவருடன் புனித மலையில் ஏறுகின்றனர். ஆண்டவரின் திருவுரு மாற்றத்தை கிரேக்க விவிலியம், (μεταμορφόω) 'மெடாமொர்பொஓ' என குறிப்பிடுகிறது. இதற்கான அர்த்தமாக உருவம் மாறுதல், வடிவம் மாறுதல், சாயல் மாறுதல் என்பதைக் கொள்ளலாம். இயேசு உருமாற்றம் அடைகின்றபோது அவருடைய ஆடைகள் மிக வெண்மையாக மாற, அவரோடு எலியாவும் மோசேயும் உரையாடுகின்றனர். இதனைக்கண்ட பேதுரு மூன்று கூடாரங்களை அடித்து அங்கே தங்கிவிடலாம் என இயேசுவிடம் பரிந்துரைக்கிறார், மாற்கு நற்செய்திப்படி அவர் ஆண்டவரிடம் பேச்சும் வாங்குகிறார் (காண்க மாற்கு 8,33). அந்த நேரத்தில் மேகம் ஒன்று அவர்களை ஆட்கொள்ள, வானகத்திலிருந்து குரல் ஒன்று கேட்கிறது, அந்த குரல் 'இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்கு செவிசாயுங்கள்' என்று முழங்க, சீடர்கள் திரும்பிப்பார்க்கின்றனர் ஆனால் ஒருவரையும் அவர்களால் காணமுடியவில்லை. நற்செய்தியாளர்களின் பார்வையில் இந்த நிகழ்வு Nயுசுவை, எலியா மற்றும் மோசேயைவிட உயர்ந்ததாகக் காட்டுகிறது

நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் இந்த நிகழ்வை விவரித்தாலும், அவர்கள் இந்த நிகழ்வின் மூலமாக இயேசுவை எபிரேய விவிலியம் மற்றும் எபிரேய விவிலிய ஆட்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. மோசேயும் எலியாவுமும் முக்கியமான சட்டவாதிகளாகவும், இறைவாக்கினராகவும் இருக்கின்ற அதேவேளை, அவர்கள் இருவருமே வௌ;வேறு மலைகளில் ஆண்டவரின் தெய்வீக பிரசன்னத்தைப் பார்த்திருக்கிறார்கள் (காண்க மோசே சினாய் மலையில் வி. 24,15: எலியா ஒரேபு மலையில் 1அரசர் 19,8). அத்தோடு இவர்கள் இருவரும் இயற்கையான மரணத்தை சந்திக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது. எலியா உயிரோடு வானகத்திற்கு நெருப்புக் குதிரைத்தேரில் எடுத்துக் கொள்ளப்பட்டார் (காண்க 2அரசர் 2,11), மோசேயின் கல்லறை அறியப்படாததால் அவர் உண்மையாக மரணிக்கவில்லை என்ற நம்பிக்கையும் பலமாக இன்றுவரை இருக்கிறது (காண்க . 34,5-8). சில எபிரேய பாரம்பரியங்களின் படி இந்த இருவரும் மெசியாவின் வருகைக்கு முன் மீண்டும் வரவிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எபிரேய விவிலியத்தின் கடைசி வரிகள், மலாக்கி 3,22-23 (4,4-5) இந்த இரண்டு நபர்களின் வருகையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றன

தாபோர் மலையில் இயேசுவுடைய உருமாற்றத்திற்கும், சீனாய் மலையில் மோசே 

இருந்ததற்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. மலைக்கு மோசே மூன்று சீடர்களுடன் ஏறினார் (காண்க வி. 24,1), மலையில் மேகம் இவர்களை மூட ஆறாவது நாள் கடவுள் மோசேயை மேகத்திலிருந்து அழைக்கிறார் (காண்க வி. 24,15-18). நாற்பது நாட்களுக்கு மேல் மோசே கடவுளோடு இருந்த படியால் அவருடைய சருமம் தூய்மையான வெண்மை நிறமாக மாறி, அவர் முகம் ஒளிவீசியது (காண்க வி. 34,29). பேதுரு மூன்று கூடாரங்களை அமைப்போம் என்று ஆண்டவரிடம் பரிந்து பேசியதும், எபிரேயர்களின் கூடாரத்திருவிழாவையும், பாலைவனத்தில் சந்திப்புக் கூடாரத்தில் கடவுளின் பிரசன்னம் இருந்ததையும் நினைவூட்டுகின்றன

ஆண்டவரின் திருவுருமாற்ற நிகழ்வைப் பற்றிய பாரம்பரிய விளக்கங்கள் வேறுபடுகின்றன. சிலர் இந்த நிகழ்வை ஆண்டவருடைய உயிர்ப்பு நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என வாதிடுகின்றனர். இன்னும் சிலர் இந்த நிகழ்வுதான் ஆண்டவரின், தெய்வீக சாயலை நினைவுபடுத்தி அவர் துன்புறுகின்ற மெசியாவாக இருந்தாலும் அவர் கடவுள், என்பதைக் காட்டுகின்றது என்கின்றனர்இந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ளாதவர்கள், இதனை கிரேக்க புராணக் கதை என்றும், சீடர்களின் தனிப்பட்ட அனுபவம் என்றும், சொல்கின்ற அதே வேளை, கத்தோலிக்க பாரம்பரியம், விவிலியத்தின் பின்னனியில் இதனை உண்மையான நிகழ்வாகவும், இதுதான் திருத்தூதர்களுக்கு 

இயேசுவின் இறை சாயலை நினைவூட்டியது என்று நம்பி விசுவசிக்கின்றது. இறையியலாலர்கள் 

இந்த நிகழ்விற்கு பல அர்த்தங்களைக் கொடுக்கின்றனர். இயேசுதான் சட்டம் (மோசே) மற்றும் இறைவாக்கு (எலியா) போன்றவற்றின் மையம் என இந்த நிகழ்வு காட்டுகிறது என்கின்றனர்

பின்நாட்களில் இந்த நிகழ்வு நடந்த இடம் தாபோர் மலை என்று கிறிஸ்தவ பாரம்பரியம் நம்பத்தொடங்கியது. ஏனெனில் இந்த நிகழ்வு நடந்த வேளையில், சீடர்கள் அதற்கு முன் 

இருந்த இடத்திலிருந்து அதாவது செசாரியா பிலிப்புவில் இருந்து, தாபோர் மலைதான் அருகில் இருக்கிறது (72கி.மீ). சிலர் இந்த மலையை எர்மோன் மலை என்றும் வாதிடுகின்றனர்

இந்த மலை செசாரியா பிலிப்புவுக்கு வடக்கில் இருக்கிறது. எது எவ்வாறெனினும், ஆண்டவரின் திருவுருமாற்ற நிகழ்வு, மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்பது மிகவும் நோக்கப்படவேண்டியது. அதேவேளை இந்த நிகழ்வு மிகவும் இறையியல் அர்த்தம் கொண்டது என்பதும் மிக முக்கியமானது


தானியேல் 7,9-14


9நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன் தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன் அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. 10அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள். பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

11அந்தக் கொம்பு பேசின பெருமை மிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. 12மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது. 13இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். 14ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.


தானியேல் புத்தகம் பெரிய இறைவாக்கு புத்தகங்களில் ஒன்று என்று அறியப்பட்டாலும், இது ஒரு திருவெளிப்பாட்டு புத்தகம் என்பதை, இன்று அதிகமான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். எபிரேய மொழியில் தொடங்கும் இந்த புத்தகம், அதிகமான பகுதிகளை அரமேயிக்க மொழியில் கொண்டுள்ளது. இன்னுமாக அசிரியாவின் மன்றாட்டு, மூவர் பாடல், சூசன்னா மற்றும் பேலும் பறவை நாகமும் என்ற பகுதிகள் கிரேக்க மொழியில் காணப்படுகின்றன. தானியேல் புத்தகம், பபிலோனியாவை காட்டுவது போல அமைக்கப்பட்டாலும், தானியேல் புத்தகத்தின் ஆசிரியர் கிரேக்க கலாபனையை பின்புலமாகக் கொண்டு, துன்புறுத்தப்படும் யூதர்களுக்கு நம்பிக்கையையும் விசுவாசதையும் கொடுக்கவே இந்த புத்தகத்தை எழுதினார் என்று அதிகமான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த எபிரேய தானியேல் புத்தகம், 12அதிகாரங்களைக் கொண்டுள்ளது

இதனை 'தானியேல் இணைப்புக்கள்' என தமிழ் விவிலியம் காட்டுகிறது

தானியேல் புத்தகத்தின் காட்சியமைப்பை நோக்கினால், தானியேலும் அவர் நண்பர்களான அனனியா, மிசாவேல் மற்றும் அசரியா போன்றோர், நெபுக்கத்னேசர் மன்னனினால் பபிலோனியாவிற்கு நாடுகடத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அந்த மன்னன் முறையே பெல்தசாச்சர், சாத்ராக்கு, மேசாக்கு, மற்றும் ஆபேத்நெகோ என்று பெயர்களையும் மாற்றினான். இவர்களோடு சேர்த்து பல யூதேய இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பபிலோனிய உணவு பழக்கங்களை பழக்கி, அவர்களை திடமுள்ளவர்களாக மாற்றி அரசசேவைக்கு இணைக்க முயன்றான். ஆனால் இந்த மூவரும் கடவுளின் அருளால் மற்ற இளைஞர்களைவிட அறிவிலும், ஞானத்திலும் மற்றும் உடல் வலிமையிலும் வளர்ந்தனர். இவர்களில் தானியேல் மிக அறிவுள்ளவர்களாக இருந்தார். இது விவிலிய பாரம்பரிய நம்பிக்கை

  தானியேல் என்பவர் யார் என்பதில் வாதங்களும் பிரதிவாதங்களும் இருக்கின்றன. தானியேல் என்பவர் ஒரு கதாபாத்திரம் என்றும், அவர் தானியேல் புத்தகத்தைவிட காலத்தால் முந்தியவர் என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த தானியேல் புத்தகம், தானியேல் என்ற அந்த பிரசித்தி பெற்ற கதாபாத்திரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் சில நவீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கு உதாரணமாக தானியேல் புத்தகத்தில் வரும் தானியேலுக்கும், சூசன்னா கதையில் வரும் தானியேலுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். தானியேல் புத்தகம் கி.மு 2ம் நூற்றாண்டில் எழுத்தப்பட்டிருக்க வேண்டும் என தற்போது ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்

இருப்பினும் கி.மு 6ம் நூற்றாண்டில் தானியேல் என்ற வீர மகன் ஒருவர் வாழ்ந்திருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. தானியேல் புத்தகம், கிரேக்க செலுக்கிய துன்புறத்தலால் துவண்ட யூத மக்களுக்கு உற்சாகம் கொடுக்க எழுதப்பட்டது என்பதை அதன் அடையாளங்கள் மற்றும் சொற்பதங்களில் 

இருந்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக பபிலோனிய அரசன் நெபுக்கத்னெசார் இந்த புத்தகத்தின் வில்லன் என்பதை விட, கிரேக்க செலுக்கிய மன்னன் நான்காம் அந்தியோக்குதான் 

இதன் உண்மையான வில்லன் என்பது தெளிவு. எப்படி தானியேலும் அவர் நண்பர்களும் பபிலோனிய துன்புறத்தலையும் தாண்டி உண்மையான எபிரேய மதத்தை காத்தார்களோ அதனைப்போல, தற்கால யூதர்கள் கிரேக்க துன்புறுத்தலைத் தாண்டி தங்கள் மதத்தை காக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியரின் நோக்கம்

தானியேல் புத்தகத்தில் மூன்று முக்கியமான காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன

. நான்கு விலங்குகளின் காட்சி (7,1-28): 

. செம்மறியும் வெள்ளாடும் (8,1-9,27): 

. வானதூதர் காட்சி (12,1-13). 

இந்த காட்சிகளை ஒப்பிட்டு பார்க்கின்றபோது அவையனைத்தும் ஒரேவிதமான இறையியல் கருத்தைத்தான் முன்வைக்கிறது. அதாவது, துன்பங்கள், துயரங்கள், கலாபனைகள் கடந்து போகும், ஆனால் கடவுளும் அவர் நம்பிக்கையும் நிலைத்து நிற்கும் என்பதாகும். ஈழத்திலே நாம் சந்திக்கின்ற தற்கால துன்பியல் நிகழ்வுகளில் துவண்டு போகின்றபோது, தானியேல் புத்தகத்தின் இறையியல் நிச்சயமாக நம்பிக்கை தரும் என்பதில் ஐயமில்லை

இன்றைய வாசகம் முதலாவது காட்சியில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்தக் காட்சியிலே பாபிலோனிய மன்னர் பெல்த்தசார் படுத்திருக்கிறார், அப்போது அவர் கனவு காண்கின்றார். அந்த கனவிலே அவருக்கு நான்கு விலங்குகள் தென்படுகின்றன. சிங்கம் போன்ற ஒரு விலங்கு, கரடி போன்ற ஒரு விலங்கு, சிறுத்தை போன்ற இன்னொரு விலங்கு, நான்காவதாக பல கொம்புகளைக் கொண்ட வித்தியாசமான விலங்கு, இதனை யானை போன்ற விலங்கு என்றும் சிலர் காண்கின்றனர். இந்த விலங்குகள் கடவுளின் அரசிற்;கு எதிரான அக்கால அரசுகளைக் குறிக்கின்றன. இந்த விலங்குகள் முறையே நெபுக்கத்நெசாரின் அரசையும், மேதிய, கிரேக்க மற்றும் உரேமைய அரசுகளையும் குறிக்கின்றன என்பது புலப்படுகிறது. இவ் விலங்குகளின் ஆதிக்கங்கள் 

இருக்கின்றவேளை, இதற்கு மாறாக கடவுளை அல்லது அவரது அரசைக் குறிக்கும் வண்ணம் பின்வரும் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன


.9: தொன்மைவாய்ந்தவர் என்று ஒருவர் காட்சியில் விளங்கப்படுத்தப்படுகிறார். அரமேயிக்க விவிலியமும், கிரேக்க செப்துவாஜின்து விவிலியமும் இந்த சொல்லை 'தொன்மையான நாட்களை உடையவர்' (עַתִּיק יוֹמִין 'அதிக் யோமின்: παλαιὸς ἡμερῶν பாலாய்யோஸ் ஹேமெரோன்) என்றே காட்டுகின்றன. அர்த்தத்தில் இவையனைத்தும் ஒருமித்தே இருக்கின்றன. இந்த தொன்மைவாய்ந்தவர் தன் ஆட்சியிருக்கையை எடுக்கிறார். அவருக்கு அரியணைகள் அமைக்கப்படுகின்றன என்று பன்மையில் சொல்லப்படுவது (כָרְסָוָן֙ கொர்சாவான்- அரியணைகள்) அவர் பல ஆட்சிகளுக்கு சொந்தக்காரர் என்பது போல தெரிகிறது. அவருடைய ஆடை வெண்பனி போல அமைந்திருக்கிறது (תְלַג חִוָּר தெலாக் ஹிவ்வார்- பனி வெண்மை), இந்த வெண்மை அவருடைய தூய்மை அல்லது 

இறைமையைக் காட்டுகிறது எனலாம். அவருடைய தலைமுடி தூய்மையான பஞ்சு போலவும் காட்டப்படகிறது (שְׂעַר רֵאשֵׁהּ כַּעֲמַר செ'அர் ரெ'ஷெஹ் 'அமர்- அவன் தலைமுடி பஞ்சைப்போல்), 

இது அவருடைய கணிக்கமுடியாத வயது மற்றம் ஞானத்தைக் குறிக்கலாம். இந்த தொன்மை வாய்ந்தவரின் அரியணை தீக்கொழுந்துகளாலும், மற்றும் எரி நெருப்புகளாலும் அமைந்திருக்கின்றன. அரியணை விவரிக்கப்பட்டிருக்கும், அதனை சக்கரங்கள் கொண்ட இருக்கையாகக் காட்டுகிறது. அக்காலத்தில் இருந்து அரச அரியணைகளைப்போல அல்லாமல், நெருங்கமுடியாத அமைப்புக்களையும், தெய்வீக தன்மைகளைக் கொண்டதாகவும் இது இருக்கிறது. நெருப்பு, விவலியத்தில் கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் ஒரு அடையாளம். இந்த அடையாளம் மற்றைய மதங்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. இங்கே அந்த நெருப்பை அதிகமாக பாவிக்கிறார் ஆசிரியர்


.10: இந்த தொன்மைவாய்ந்தவர் முன்னால் நெருப்பினாலான ஓடை ஒன்று ஓடுகின்றது. இந்த நெருப்பினாலான ஓடை முடியாத வாழ்வைக் குறிக்கலாம். இந்த தொன்மைவாய்ந்தவர்தான் வாழ்வின் ஊற்று என்பது போல காட்டப்படுகின்றது. பணிபுரிகிறவர் பல்லாயிரம் பேராகவும், முன்நிற்கின்றவர்கள் பலகோடிப்பேர்களாகவும் இருக்கிறார்கள். இந்த விவரணங்கள் இந்த தொன்மைவாய்ந்தவரின் வல்லமையையும் அவருடைய ஆட்சியின் பலத்தையும் காட்டுகிறது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கூடுகின்றது, இவர்தான் நீதிபதி என்பதையும் காட்டுகிறது. ஆக நீதிவழங்குவதும் இவருடைய முக்கியமான வேலையென காட்டப்படுகிறது (דִּין தின்- தீர்ப்பு, அரமாயிக்கம்). நூல்கள் திறந்து வைக்கப்படுகின்றன என்பது மக்களின் வழக்குகளைக் காட்டுகின்றன. ஒவ்வொருவருடைய வாழ்வின் நிலைகளும் புத்தகங்களில் எழுதப்பட்டு கடவுளின் இடத்தில் பாதுகாக்கப்படுகின்றன என்ற நம்பிக்கை பிற்கால யூதர்கள் மத்தியில் பாவனையில் இருந்தது


.11: கொம்பின் பலமான வார்த்தைகள் (מִלַּיָּ֣א רַבְרְבָתָ֔א அரமாயிக்கம்), வார்த்தைகளின் பொருட்டு விலங்கு கொலை செய்யப்படுகின்றது. எந்த விலங்கு என்பது தெளிவாக இல்லை, இந்த விலங்கு நான்காவது விலங்காக இருக்கலாம். இங்கே வருகின்ற கொம்பு அந்தியோக்கஸ் எபிபானஸ் மன்னனைக் குறிப்பதாக இருக்கலாம். இந்த விலங்கின் உடல் சிதைந்து அது நெருப்பில் எறியப்படுவது, கிரேக்க அரசின் அழிவைக்குறிக்கலாம். கிரேக்கருடைய ஆட்சி உரோமையரால் சிதைக்கப்பட்டது, அவர்களுடைய முழு பேரரசையும் உரோமையர்கள் கைப்பற்றினார்கள்


.12: ஏற்கனவே குறிப்பிடப்பட்ட முதல் மூன்று விலங்குகளையும் விளக்குகிறார் ஆசிரியர். ஆட்சியுரிமை இவற்றிடமிருந்து பறிக்கப்படும், இருந்தும் இதற்கு நாட்கள் செல்லும் என்பதுபோல காட்டப்படுகிறது. ஆட்சியுரிமை பறிக்கப்பட்டாலும், இந்த அரசுகள் இன்னும் சில நாட்களுக்கு நிலைத்து நிற்கும் என்பது காட்டப்படுகிறது


.13: தானியேல் புத்தகத்தில் மானிடமகன் (בַר אֱנָשׁ வார் 'எனோஷ்- υἱὸς ἀνθρώπου ஹுய்யோஸ் அந்த்ரோபூ) போன்ற ஒருவர் காட்டப்படுகிறார். முதல் ஏற்பாட்டில் மானிட மகன் என்ற சிந்தனை இந்த புத்தகத்தில் மட்டுமே வருகிறது. புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னை மானிட மகன் என குறிப்பிடுகிறார், இந்த மானிட மகனுக்கும், தானியேல் புத்தகத்தில் வரும் மானிட மகனும் ஒன்று என்பது கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களின் நம்பிக்கை

தற்கால தானியேல் புத்தக ஆசிரியர்கள் இந்த மானிட மகனும் புதிய ஏற்பாட்டு மானிட மகனும் வௌ;வேறான கருத்துப்பொருட்கள் என்று வாதிடுகின்றனர். சிலர் இந்த மானிட மகனை, கடவுளின் தூயவர்கள் எனவும் அதாவது கிரேக்க காலபனையில் விசுவாசத்தை காத்த யூத மக்கள் எனவும், இன்னும் சிலர் இவரை தூய மிக்கேல் வானதூதர் எனவும் காண்கின்றனர்

இந்த மானிட மகனின் அடையாளங்களும், புதிய ஏற்பாட்டு மானிட மகனின் அடையாளங்களும், பல விதத்தில் ஒத்திருக்கின்றன. இந்த மானிட மகன் வானத்தில் மேகங்கள் மீது வருகின்றார். இதன் மூலம் இருவருக்கும் இடையிலான நெருங்கிய உறவு காட்டப்படுகிறது


.14: இந்த மானிட மகனுக்கு ஆட்சியுரிமையும், மாட்சியும், அரசும் கொடுக்கப்படுகின்றன

இதற்காகத்தான் யூதர்கள் கிரேக்கர்களை எதிர்த்து போராடினர். கலாபனைகளில் காட்டிக்கொடுக்காமல் துன்பங்களை மேற்கொள்கிறவர்கள் இறுதியில் வெற்றி கொள்வார்கள் என்ற சிந்தனை இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது. எல்லா இனத்தாரும் மற்றும் மொழியினரும் அவரை வழிபடக் கேட்கப்படுகிறார்கள். அதாவது இஸ்ராயேல் நாடு இனி அனைத்து நாடுகளுக்கும் மேலாக வரவிருக்கிறது என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. பபிலோனியரிடம் அழிந்து போனதைப் போல இராமல், இனி இந்த மானிட மகனின் ஆட்சியுரிமை அழியாது, முடிவுறாது, அரசும் அழியாது என்று பலமான வார்த்தைகளால் நம்பிக்கை கொடுக்கப்படுகிறது

 



திருப்பாடல் 97

அனைத்து உலகின் தலைவர்


1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக! 2மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன் நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்

3நெருப்பு அவர்முன் செல்கின்றது சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது

4அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன் மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது. 5ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன

6வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன் அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன

7உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்

8ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை சீயோன் கேட்டு மகிழ்கின்றது; யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன

9ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே

10தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார். 11நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.


திருப்பாடல்கள் 95-99 அரச மகுடம் ஏறும் பாடல்கள் என அறியப்படுகின்றன. கடவுள்தான் 

இஸ்ராயேலின் அரசர், மனிதர்கள் அவர் பணியாளர்களே என்பது இஸ்ராயேலின் மிக முக்கியமான நம்பிக்கையில் ஒன்று. ஆண்டவருடைய அரசாட்சிக்கும், அவருடைய புனிதத்திற்கும், இடையில் நெருங்கிய தொடர்பை இந்த பாடல் அழகாகக் காட்டுகிறது. இந்த பாடலின் மையப்பொருளான ஆண்டவரின் நீதி, நேர்மை, உண்மைத்தன்மை போன்றவை மனித ஆட்சியாளர்களுக்கு சவலாக அமைகின்றன


.1: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார் என்பதே உலக மக்களுக்கு நற்செய்தியாக வருகின்றது 

(יְהוָ֣ה מָ֭לָךְ அதோநாய் மாலாக்). துன்பியல் நிறைந்த ஆட்சியையும் கொடுங்கோல் ஆட்சியாளரையும் கண்டு சலிப்படையும் மக்களுக்கு, உண்மையில் அரசாள்கிறவர் ஆண்டவரே என்ற நம்பிக்கை கொடுக்கப்படுகிறது. இந்த மகிழ்வுக்கு முழு பூவுலகும் அதற்கு ஒத்த கருத்துச் சொற்களாக தீவு நாடுகளும் அழைக்கப்படுவது நோக்கப்படவேண்டும். ஆண்டவராகிய அரசர் இஸ்ராயேலுக்கு மட்டும் அரசர் அல்ல அவர் முழு உலகத்திற்குமே அரசர் என்ற நம்பிக்கை இங்கே காட்டப்படுகிறது


.2: மேகமும் காரிருளும் ஆண்டவரைச் சூழ்ந்துள்ளனவாம் (עָנָן וַעֲרָפֶל סְבִיבָיו 'அனான் வா'அராபெல் செவிவாவ்). இந்த மேகமும் காரிருளும் ஆண்டவரின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகினறன. அத்தோடு அவர் பயப்படவேண்டியவர், அவருடைய அரசு சாதாரண மானிட அரசு அல்ல என்பதையும் இவை காட்டுகின்றன. மேகம் மற்றும் காரிருளுள் போன்றவை விவிலியத்தில் கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகின்றன என்பது நினைவுகூறப்படவேண்டியது

ஆண்டவருடைய அரியணையின் அடித்தளம், நீதியும் நேர்மையும் என்கிறார். இது விவிலியத்திலுள்ள ஆண்டவரின் மிக முக்கியமான பண்புகள், ஆசிரியர் இதனை மற்ற மனித அரசர்கள் கொண்டிருக்க வேண்டும் என விரும்புவது தெரிகிறது (צֶדֶק וּמִשְׁפָּט ட்செதெக் வுமிஷ்பாத்- நீதி மற்றும் நேர்மை). 


.3: ஆண்டவரின் நெருப்பு அவர் முன்சென்று எதிரிகளை சுட்டெரிக்கின்றது. நெருப்பு (אֵשׁ 'எஷ்) ஒரு மறைபொருள். நெருப்பை கண்டபோதுதான் மனிதர் நாகரீகம் அடைந்தார் என வரலாறு சொல்கிறது. சாதாரணமாக தூய்மைப்படுத்த நெருப்பு பயன்படுவதாலும், அழிக்க மற்றும் பற்றவைக்க நெருப்பு பயன்படுவதாலும், இதனை கடவுளின் அடையாளமாகக் விவிலிய ஆசிரியர்கள் காண்கின்றனர்

நெருப்பை எதிர்த்து எந்த சடப்பொருளும் தக்க முடியாது என்பதால் நெருப்பை கடவுளின் வல்லமையாகக் காண்கின்றனர். அதிகமான சமயங்களிலும், புராணக் கதைகளிலும் நெருப்பு தெய்வங்கள் மற்றும் தண்டனை போன்றவற்றோடு ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. சீனாய் மலையில் ஆரோனுக்கும் (காண்க லேவியர் 9,24), சாலமோனின் காணிக்கையிலும் இந்த நெருப்பின் மூலம்தான் கடவுள் தன் அடையாளத்தை வெளிப்படுத்தினார் (காண்க 2குறிப்பேடு 7,1). 


.4: மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன என்கிறார் ஆசிரியர். அதேவேளை இந்த மண்ணுலகம் அதனைக் கண்டு நடுங்குகின்றது என்கிறார். மேகத்திலே ஏற்படும் அதியுச்ச மின்வெளிப்பாட்டு தாக்கம் மின்னல் எனப்படுகிறது. இடியும் மின்னலும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், ஒளி ஒலியை முந்தி முதலில் தென்படுகிறது. மின்னலை அக்கால மனிதர்கள் கடவுளின் அசைவாக அல்லது அவரின் வெளிப்பாடாக கண்டனர் (בָּרָק பாராக்- மின்னல் வெளிச்சம்).


.5: ஆண்டவரை அனைத்துலகின் தலைவராகவும், அவர் முன் மலைகள் மெழுகாக உருகுகின்றன என்கிறார். மலைகள் உருகுதல் என்று ஆசிரியர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக 

இல்லை. நிலநடுக்கத்தை அல்லது பனிமலையின் உருகுதலைக் குறிப்பிடலாம். பனிமலைகள் பொதுவாக பாலஸ்தீனாவில் பெருவாரியாக இல்லை, ஆனால் நிலநடுக்கம் மற்றும் மலைகளில் உடைவுகளை இவர்கள் கண்டிருக்கலாம். இதனைத்தான் ஆசிரியர் கடவுளின் செயற்பாடாகக் காண்கிறார். ஆண்டவரை முழு உலகின் தலைவர் (אֲד֣וֹן כָּל־הָאָֽרֶץ׃ 'அதோன் கோல்-ஹா'அரெட்ஸ்) என வர்ணிப்பது அவருடைய அரசாட்சியின் அதிகாரத்தை முன்னிறுத்தும் சொற்பதம்


.6: வானங்கள் அவரது நீதியை அறிவிக்க மக்களினங்கள் அதனைக் காண்கின்றன என்கிறார். வானங்கள் கடவுளின் நீதியை எப்படி அறிவிக்கலாம்? கடவுள் அனைத்து மக்களினங்கள் மீதும் மழையை வருவிக்கிறவர், இதனை அனைத்து மக்களினங்களும் காண்கிறார்கள். இதனைத்தான் கடவுளுடைய நீதியின் அடையாளமாக ஆசிரியர் காண்கிறார் என நினைக்கின்றேன். இந்த வரி அழகான வார்த்தைகளைக் கொண்டு எதுiகை மோனை ஒலியசைவில் அமைக்கப்பட்டுள்ளன

הִגִּ֣ידוּ הַשָּׁמַ֣יִם צִדְק֑וֹ ஹிகிதூ ஹஷாமாயிம் ட்சித்கோ 

וְרָא֖וּ כָל־הָעַמִּ֣ים כְּבוֹדֽוֹ׃ வெரா' கோல்-ஹா'அம்மிம் கெவொதோ


.7: உருவங்களை வழிபட்டு சிலைகளை பெருமைப் படுத்துவோர் வெட்கத்துக்கு உள்ளாவர் என்கிறார். இஸ்ராயேலரைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சிலைகளையும் உருவங்களையும் வெகுவாக பயன்படுத்தினார்கள். இது இஸ்ராயேலில் சிலரை கவர்ந்தது. இதனால் சிலவேளைகளில் இந்த சிலை வழிபாடுகள் இஸ்ராயேலுக்குள்ளும் முன்னெடுக்கப்பட்டன. இதனைத்தான் பலமாக தாக்குகிறார் ஆசிரியர். இதற்கு இணையாக அனைத்து தெய்வங்களையும் கடவுளுக்கு பணியுமாறு பணிக்கிறார். அனைத்து தெய்வங்கள் என்பதற்கு כָּל־אֱלֹהִֽים (கோல்-'எலோஹிம்) என்ற சொல் பயன்பட்டுள்ளது. இந்த சொல்தான் கடவுளுளைக் குறிக்க அதிகமான இடங்களில் விவிலியத்தில் பயன்படுகிறது


.8: சீயோனும் (צִיּוֹן), யூதேயாவும் (יְהוּדָה) ஒத்த கருத்துச் சொற்களில் பார்க்கப்படுகின்றன. இவை ஆண்டவரின் நீதித்தீர்ப்புக்களில் மகிழ்வதாகச் சொல்லப்படுகிறது. சீயோனும் யூதாவும் பலவிதத்தில் வேற்று நாட்டினர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் ஆண்டவரின் தீர்ப்பு இந்த பாதிப்பிலிருந்து சீயோனையும், யூதேயாவையும் காப்பாற்றும். இதனைத்தான் மகிழ்ச்சி என்கிறார் ஆசிரியர். யூதேயா இந்த வரியில் 'யூதேயாவின் மகள்கள்' (בְּנ֣וֹת יְהוּדָ֑ה பெனோத் ஜெஹுதாஹ்) என்று காட்டப்படுகிறது


.9: தெய்வங்களுக்கும் அரசர்களுக்கும் தொடர்பிருப்பதாக அக்கால மக்கள் கருதினார்கள். மண்ணக அரசர்கள் விண்ணக தெய்வங்களின் பிரதிநிதிகள் என அறியப்பட்டார்கள். மண்ணக வெற்றி தோல்விகள், மற்றும் போர்கள் போன்றவை விண்ணகத்தில் தெய்வங்களால் தீர்மாணிக்கப் படுகின்றன என இஸ்ராயேலின் அயலவர்கள் நம்பினாலும் கூட, இஸ்ராயேலின்  கடவுள்தான் அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவர், இதனால் அவர் மண்ணக அரசர்களுக்கும் மேலானவர் ஆகிறார்

இந்த வரியிலும் அனைத்து தெய்வங்களைக் குறிக்க כָּל־אֱלֹהִֽים (கோல் 'எலோஹிம்) என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது. இது கடவுளைக் குறிக்க பயன்படும் வார்த்தை. இதிலிருந்து இந்த திருப்பாடல் ஆசிரியர் மற்ற தெய்வங்களின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார் என்று சொல்ல முடியாது மாறாக அவர் மற்ற தெய்வங்களை ஒரு எடுகோளாகவே காண்கிறார் எனலாம்.  


.10: தீமையை வெறுக்கிறவர்கள் ஆண்டவரின் அன்பை பெறுகிறார்கள், ஆண்டவரும் அவர்களின் உயிரைப் பாதுகாத்து, தீயோரிடமிருந்து அவர்களை விடுவிக்கிறார். ஆண்டவரை அன்பு செய்கிறவர்கள் விவிலியத்தின் படி நீதிமான்கள் ஆகிறார்கள் (אֹהֲבֵי יְהוָה 'ஓஹவே அதேனாய்), இந்த நீதிமான்கள் ஆபத்திலிருந்து தப்புவார்கள் என்ற நம்பிக்கை இங்கே காட்டப்படுகிறது.  


.11: நேர்மையாளர்களும், நேரிய உள்ளத்தவர்களும் மகிழ்ச்சியை கொண்டுள்ளனர். இங்கே ஒளி (אוֹר 'ஓர்) மகிழ்ச்சியாக (שִׂמְחָֽה சிம்ஹாஹ்) பார்க்கப்பட்டுள்ளது


.12: இந்த இறுதியான வரி ஒரு வேண்டுதல் போல காட்டப்பட்டுள்ளது. ஆண்டவரின் களிகூருதல் என்பது, அவருடைய தூய்மையை நினைத்து புகழ்தலுக்கு சமனாகும். ஆண்டவரின் தூய்மை என்ற அடையாளம், அவருடைய நீதிமான்களை அதே தூய்மையான வாழ்விற்கு அழைத்து நிற்கிறது. நீதிமான்கள் (צַדִּיקִים ட்சாதிகிம்): தூய்மை (קֹדֶשׁ கோதெஷ்). 



2பேதுரு 1,16-19

கிறிஸ்துவின் மாட்சி


16நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். 17'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். 18தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொளியை நாங்களே கேட்டோம். 19எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற்கொள்வது நல்லது ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது. 20ஆனால் மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும். 21தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல.


நற்செய்திகளைத் தாண்டி புதிய ஏற்பாட்டில், ஆண்டவரின் திருவுருமாற்றத்தை விளக்கும் பகுதியாக பல ஆய்வாளர்கள் இந்த பகுதியைக் காண்கின்றனர். இத்திருமுகத்தின் ஆசிரியர் தன்னை சீமோன் பேதுரு, இயேசு கிறிஸ்துவின் பணியாளரும் திருத்தூதரும் என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார் (Συμεὼν Πέτρος δοῦλος καὶ ἀπόστολος Ἰησοῦ Χριστοῦ சுமெயோன் பெட்ரொஸ் தூலொஸ் காய் அபொஸ்டொலொஸ் இயேசூ கிறிஸ்டூ). அதே வேளை தான் ஏற்கனவே இன்னொரு கடிதத்தை எழுதியுள்ளதாகவும் (காண்க 2பேதுரு 3,1), பவுலடிகளாரை சகோதரன் எனவும் விழிக்கிறார் (காண்க 2பேதுரு 3,15). ஆசிரியர் தன் வாசகர்களுக்கு தன்னுடைய மரணத்தைப் பற்றியும் அறிவிக்கின்றார் (காண்க 2பேதுரு 1,14). பேதுரு தன்னைப் பற்றி சொல்லுகின்ற தரவுகள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டவை என்று வாதிடுவது இலகுவாக இருக்காது. இருப்பினும் தற்கால ஆய்வியல் சில இந்த திருமுகம் பேதுருவின் இறப்பின் பின்னர் அவர் சீடர் ஒருவரால், பேதுருவின் பெயரில், கலாபனைகளின் போது பேதுரு இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை மனதில் இருத்தி எழுதப்பட்டது எனவும் வாதிடுகின்றனர்

இதற்கான காரணங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர்


. இந்த இரண்டாம் திருமுகம் சொற்பிரயோகத்திலும் மொழியியலிலும் முதலாம் திருமுகத்தை ஒத்திருக்கவில்லை. இருப்பினும் சில இறையியில் கருத்துக்களும் சிந்தனைகளும் முதலாம் திருமுகத்தை ஒத்திருக்கின்றன


. பேதுருவின் ஆசிரியத்துவம் ஆரம்ப கால திருச்சபையால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இதனால் ஆரம்ப காலத்தில் இதனை புதிய ஏற்பாட்டு விவிலிய தொகுப்பினுள் ஏற்றுக்கொள்ள திருச்சபை சற்று தயங்கியது. ஏனெனில் அக்காலத்தில் பல மெய்யியல் புத்தகங்கள் பேதுருவின் பெயரில் உலாவந்தன. இருப்பினும் இந்த கடிதம் பின்னர் புதிய ஏற்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது


. யூதாவின் திருமுகத்தின் தரவுகள் பலவற்றை இந்த திருமுகம் பயன்படுத்துகிறது. பேதுரு, ஆண்டவரின் மிக முக்கியமான சீடர், ஏன் இந்த யூதாவின் தரவுகளை பயன்படுத்துகிறார் என்ற கேள்வி பலமாக முன்வைக்கப்படுகிறது. இந்த யூதா திருத்தூதரான யூதாவாக இருக்க முடியாது. இவர் இயேசு ஆண்டவரின் சகோதரரான யூதாவாக இருந்தால், இந்த யூதா ஆண்டவருடைய உயிர்ப்பின் பின்னர்தான் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டார். ஆக இப்படி விசுவாசத்தில் பிந்திய ஒரு சீடரின் திருமுகத்தை, திருத்தூதர்களின் முதல்வர் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன, என்பது ஆய்வாளர்களின் கேள்விகள்


. 2ம் பேதுரு திருமுகத்தின் இறையியல் சிந்தனைகள் தூய பேதுருவின் காலத்திற்கு பிற்பட்ட சிந்தனைகளை காட்டுவது போல உள்ளது

இருப்பினும் பேதுரு இல்லாமல் அவர் சீடர் பேதுருவின் பெயரையும், தரவுகளை இவ்வளவு உன்னிப்பாக பயன்படுத்துவாரா என்பது பாரம்பரிய நோக்கர்களின் கேள்விகள். ஏனெனில் இப்படி பயன்படுத்துவது, இந்த திருமுகத்தின் உண்மைத் தன்மையை பாதித்தது திருச்சபையால் வெளியேற்றப்பட்டிருக்கும் என்பதும் இவர்களின் காரணங்கள்


பவுலுடைய திருமுகங்களுக்கு பின்னர்தான் இந்த திருமுகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை நற்செய்திகளும் இந்த திருமுகத்திற்கு முன்னர் பாவனையில் இருந்திருக்க வேண்டும். இப்படி நோக்குகின்றபோது இந்த திருமுகம் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டு;ம். பேதுரு இந்த திருமுகத்தின் ஆசிரியர் என்றால் இந்த திருமுகம் அவர் மரணத்திற்கு முன்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும், ஏறக்குறைய கி.பி.60களில். எங்கே இந்த திருமுகம் எழுதப்பட்டது என்பது சொல்லப்படவில்லை, பேதுரு எழுதியிருந்தால், இத் திருமுகத்தின் எழுதப்பட்ட இடமாக உரோமை இருக்கும்


முதலாம் திருமுகம் எழுதப்பட்ட கிறிஸ்தவர்களுக்கே இந்த திருமுகம் எழுதப்பட்டதாகவும், அல்லது பெரிய வாசகர் வட்டத்திற்கு இந்த திருமுகம் எழுதப்பட்டதாகவும் வாதாடப்படுகிறது. கிரேக்க மெய்யியல் சிந்தனைகளால் தாக்கப்பட்ட திருச்சபைகளுக்கு இந்த திருமுகம் திருச்சபையின் படிப்பினைகளைக் கொடுக்க எழுதப்பட்டது என்ற வாதமும் இருக்கிறது. யூத மற்றும் யூதரல்லாத கிறிஸ்தவர்கள் இந்த திருமுகத்தின் வாசகர்களாக இருந்திருக்கலாம்


.16: பேதுரு தம்முடைய சான்றின் உண்மைத் தன்மையை விவரிக்கின்றார். ஏற்கனவே கிறிஸ்தவ அழைப்பை பற்றி விவரித்த பேதுரு (வவ.3-15), இப்போது கிறிஸ்துவின் மாட்சியை பற்றி விவரிக்க முயல்கின்றார்

இயேசு கிறிஸ்தவின் வல்லமையும் அவரது வருகையும் இந்த வரியின் கருப்பொருளாக அடைகிறது (δύναμιν καὶ παρουσίαν  துனாமின் காய் பாரூசியான்- மாட்சியையும் வருகையையும்). 

இவைகள் சூழ்ச்சியாக புனையப்பட்ட கதைகள் இல்லை என்கிறார். சில புனைக்கதைகள் அக்காலத்தில் பாவனையில் இருந்த படியால் பேதுரு இப்படிச் சொல்லியிருக்கலாம் (σεσοφισμένοις μύθοις செசொபிஸ்மெநொய்ஸ் முதொய்ஸ்- மெய்யியலில் செய்யப்பட்ட புனைக்கதைகளில்). 

இறுதியாக தாங்கள் ஆண்டவரின் மாட்சிமையை நேரில் (ἐπόπται எபொபப்டாய்- சாட்சிகள்) கண்டவர்கள் என சாட்சியம் சொல்கிறார். இந்த வரி மிக முக்கியமானது. அதாவது பேதுரு ஆண்டவரின் நேரடி சாட்சி அத்தோடு ஆண்டவர் மாட்சிமை மிக்கவர் என்பது ஐயமற்ற தெளிவு


.17: வானத்திலிருந்து கூறப்பட்ட குரலை நினைவூட்டுகிறார் பேதுரு 'ὁ υἱός μου ὁ ἀγαπητός μου οὗτός ἐστιν  εἰς ὃν ἐγὼ εὐδόκησα - ஹொ ஹுய்யோஸ் மு ஹொ அகாபெடொஸ் மு ஹுடொஸ் எஸ்டின் எய்ஸ் ஹொன் எகோ எவுதோகேசா- என் மகன், என் அன்புக்குரியவன் அவன், அவனில் நான் பூரி;ப்படைகின்றேன்' இதனை மாட்சிமையாகவும், மரியாதையாகவும் கண்டு அவற்றை தந்தையிடம் இருந்து தாங்கள் பார்த்ததாகவும் பேதுரு சொல்கிறார். இந்த பதிவு நற்செய்திகளில் பதியப்பட்டிருக்கிறது (காண்க மத் 17,5: மாற் 9,7: லூக் 9,35). 


.18: இந்தக் குரலைக் கேட்ட போது தாங்கள் தூய மலையில் இருந்ததாகச் சொல்கிறார் (ἁγίῳ ὄρει ஹகியோ ஓரெய்). நற்செய்திகளைப் போல் இங்கேயும் இந்த மலையின் பெயர் சொல்லப்படவில்லை. அந்த விண்ணக குரலை நாங்கள் கேட்டதாகச் (ἠκούσαμεν ஏகூசாமென்) பன்மையில் சொல்லி நற்செய்தியில் காட்டப்படும் விவரணங்களை மெய்ப்பிக்கிறார்


.19: இறைவாக்கு ஒன்றை பெயர் குறிப்பிடாமல் மேற்கோள் காட்டுகின்றார். இந்த இறைவாக்கை அதிகமான ஆய்வாளர்கள் எண்ணிக்கை 24,17 உடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இவ்விறைவாக்கை தன்வாசகர்கள் கரிசனையில் கொள்ளவேண்டும் என்பது பேதுருவின் விருப்பம்

பேதுரு இறைவாக்கை 'பொழுது புலர்ந்து விடிவெள்ளி இதயங்களில் தோன்றும் வரை, அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கை போன்றது' என்று மிக அழகான வரிகளில் விளக்குகிறார். இங்கே ஒளிவிளக்கு (λύχνος லுக்நொஸ்- விளக்கு) மையப்படுத்தப்படுகிறது. ஒளி இறைவனின் அடையாளமாக வருகிறது. இருண்ட இடம் (αὐχμηρός அவுக்மேரொஸ்- இழிநிலை இருட்டு) இறைவனைவிட்டு தூரத்தில் இருக்கும் நிலையைக் காட்டுகிறது. விடிவெள்ளி விவிலியத்தில் மெசியாவை காட்டுகிறது. கிரேக்கர்கள் வீனஸ் கோளை விடிவெள்ளி எனக் கருதினார்கள் (φωσφόρος போஸ்பொரொஸ்). இங்கே இறைவாக்கா அல்லது இயேசுவா, எழுவாய்ப் பொருள் என்பதில் பலத்த வாதங்கள் உள்ளன


.20: இந்த வரி சற்று விளக்கமாக உள்ளது. இதனைக் கொண்டு மேல் வரியின் எழுவாய்ப் பொருள் இறைவாக்கு என எடுக்கலாம். மறைநூலில் உள்ள இறைவாக்குகள் எவருடைய சொந்த விளக்கங்களுக்கும் உட்பட்டது அல்ல என்கிறார் பேதுரு. விளக்கங்கள் என்று தமிழில் சொல்லப்படுவதற்கு கிரேக்க மூல மொழி ἰδίας ἐπιλύσεως οὐ γίνεται· (இதியாஸ் எபிலுசெயோஸ் கிநேடாய்) என்ற சொற்களை பாவிக்கின்றது. இதன் அர்த்தம் விளங்கிக்கொள்ள கடினமாக இருக்கும். இதிலே வருகின்ற இரண்டாவது சொல் ἐπιλύσεως விவிலியத்தில் ஒரு முறைமட்டுமே வருகின்ற சொல் (hapax legomenon). 

இருப்பினும் செய்தி தெளிவாக இருக்கிறது. அதாவது இறைவாக்கு தனி மனித அறிவிற்கும், விருப்பு வெறுப்பிற்கும் அப்பாற்பட்டது, அது தூய ஆவியாரையே மூல ஆசிரியராகக் கொண்டுள்ளது என்பதே அச்செய்தி


.21: இறைவாக்கு என்பதன் வரைவிலக்கணம் சொல்லப்படுகிறது. இறைவாக்கு என்பது தூய ஆவியால் அருளப்படுவது, அது மனிதரின் விருப்பத்தினால் ஒருபோது உருவாகாது என்கிறார் ஆசிரியர். இங்கே மனிதர்கள் என்பவர்கள் இறைவாக்கை எழுதிய ஆசிரியர்களைக் குறிக்கின்றது என்பது பல ஆய்வாளர்களுடைய வாதம். இந்த வரியில் இறைவாக்கின் மூல ஆசிரியர், துணை ஆசிரியர்கள், கடவுள் போன்றவர்களின் பணிகள் விளக்கப்பட்டுள்ளன


மத்தேயு 17,1-9

இயேசு தோற்றம் மாறுதல்

(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)


1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். 2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. 3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

4பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார்.

5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. 6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். 7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். 8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. 9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.


.1: இயேசு தான் உருமாறுவதற்கு முன் ஏற்கனவே தன்னுடைய மரணத்தைப் பற்றி சீடர்களுக்கு அறிவித்திருக்கிறார். ஆறு நாட்களுக்கு பின்னர் அவர் தன்னுடைய நெருங்கிய சகாக்களான யாக்கோபு, யோவான் மற்றும் பேதுருவை ஓர் உயர்ந்த மலைக்கு அழைத்துச் செல்கிறார். இவர்கள் பல முக்கியமான வேளைகளில் ஆண்டவரோடு இருக்கிறவர்கள். இதிலே யாக்கோபுவும் யோவானும் செபதேயுவின் மக்கள். இவர்களுக்காக இவர்களின் தாய் பின்நாட்களில் ஆண்டவரிடம் பரிந்து பேசியுமிருக்கிறார் (காண்க மத்தேயு 20,20-28). 

ஆண்டவரும் இந்த முக்கியமான சீடர்களும் செல்லும் இடம் எதுவென்று தெரியவில்லை ஆனால் அவர்கள் ஓர் உயரமான மலையிலே ஏறுகிறார்கள். ஆய்வாளர்களில் சிலர் இதனை தாபோர் மலை என்று அடையாளப் படுத்துகின்றார்கள்


.2: ஆண்டவர் இங்கே தோற்றம் மாறுகிறார். அவர் தோற்றம் மாற்றப்பட்டார் என்று கிரேக்க விவிலியம் செயற்பாட்டு வினையிலே இதனைக் காட்டுகிறது (μετεμορφώθη மெடெமொர்போதே)

முதலாம் நூற்றாண்டு யூத நம்பிக்கை ஒன்று, நீதிமான்கள் தக்க காலத்தில் விண்ணரசிற்கு நுழைய தோற்றம் மாறுவார்கள் என நம்பியது. இந்த தோற்ற மாற்றம், அவர்கள் கடவுளின் மகிமையில் பங்கு கொள்கிறார்கள் என காட்டியது. சீனாய் மலையில் மோசேயின் முகமாற்றமும் இந்த அர்த்தத்தோடே பார்க்கப்பட்டது (வி. 34). ஆண்டவருடைய உருமாற்றத்திலே சீடர்கள் அவருடைய தெய்வீக சாயலின் சிறு அங்கத்தை காண்கிறார்கள்

அவருடைய முகம் கதிரவனின் முகத்தை போல மாறியது (ἥλιος ஏலியோஸ்). கதிரவன் ஒளிகளின் உச்ச சக்தி. பல மதங்கள் கதிரவனை ஒரு தெய்வமாக கண்டனர். சீயுஸ், அப்பல்லோ, இந்திரன் போன்றவர்கள் இப்படியாக நம்பப்பட்ட சூரியக் கடவுள்கள்.

அவருடைய ஆடைகள் வெண்மையாயின. இயேசு சாதாரண கலிலேய சமானியரைப்போல உடுத்தியிருப்பார். இந்த உடைகள் அவரை ஒரு சாதாரண யூத கலிலேயராகவே காட்டியிருக்கும். அவர் ஆடைகள் வெண்மையாவது, இப்போது இவர் சாதாரண மனிதர் அல்ல மாறா தெய்வீக சாயல் கொண்டவர் என்பதைக் காட்டுகிறது. இந்த விவரணங்களை மற்றைய நற்செய்தியாளர்கள் இன்னும் அதிகமாக விவரிக்கின்றனர்


.3: மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர். (முன்னுரையை வாசகிக்கவும்). மோசேயும் எலியாவும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இஸ்ராயேலுக்கு தனி அடையாளங்கள் கொடுத்தவர்கள். ஒருவர் சட்டத்தின் காவலர், இன்னொருவர் இறைவாக்கின் பிதாப்பிதா. இப்படியாக சட்டமும் இறைவாக்கும் இயேசுவோடு கலந்துரையாடுகின்றன. அல்லது இயேசு சட்டத்தினதும், இறைவாக்கினதும் மையமாக வருகிறார் எனலாம்


.4: பேதுருவின் கேள்வி சாதாரண வாசகர்களுக்கு விளையாட்டாக இருந்தாலும். இதற்கு பின் பல இறையியில் சிந்தனைகள் இருக்கின்றன. பேதுரு ஆண்டவருடைய மகிமையில் நிலைக்க விரும்புகிறார் என்பது தெரிகிறது. ஆரம்ப கால திருச்சபை துன்பத்தை தாங்க சற்று பின்வாங்கியதை ஆசிரியர் நிதானமாகச் சொல்கிறார். பேதுரு இங்கே கூடாரம் அடிக்க ஆசிக்கிறார். கூடாரங்கள் இவர்களுக்கு பாலைவன நாட்களை நினைவுபடுத்தும். பாலைவன நாட்கள் துன்பமாக இருந்தாலும், அங்கே கடவுள் அவர்களோடு இருந்தார். அங்கே இஸ்ராயேல் என்ற அடையாளம் இருந்தது. உரோமையருடைய காலத்திலே அது இல்லை என்பதும் தெரிகிறது


.5: பேதுரு பேசிக்கொண்டிருக்கும் போதே கடவுள் மேகத்தில் 'இவரே என் அன்பார்ந்த மகன், இவரின் நான் பூரிப்படைகிறேன்' என்று அறிக்கையிடுகிறார். இந்த நிகழ்வு எதோ ஒரு முடிசூட்டு வைபவம் போல காட்சி தருகின்றது. இவருக்கு செவிசாயுங்கள் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் மேசேயின் சீனாய் அனுபவத்தைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. அங்கேயும் கடவுள் மேகத்தில்தான் தோன்றினார், ஆனால் அவர் மேசேயோடு மட்டுமே பேசினார். இங்கே கடவுளின் குரலை இவர்கள் கேட்கிறார்கள். மேகமும் வானகக் குரலும் கடவுளின் அடையாளங்களாக பார்க்கப்படலாம் (காண்க . 18,15). 


.6: மேகத்தையும் குரலையும் கேட்டவர்கள் அஞ்சி விழுகிறார்கள். இவர்களுடைய முகம்பட குப்புற விழுதல், இயேசுவை கடவுளாக காட்டுகிறது. இதே போலத்தான் சீனாய் மலையிலும் கடவுள் இடி மின்னலில் தோன்ற மக்கள் இவ்வாறு செய்தார்கள். முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் தெய்வீக பிரசன்னம் வருகின்ற போதெல்லாம், அதனை பெறுகிறவர்கள் முகம்பட விழுகிறார்கள். குழந்தை இயேசுவைக் கண்ட கீழைத்தேய ஞானிகளும் இப்படியே முகம்பட குப்புற விழுந்தார்கள்.


.7: இயேசு இவர்களை தொட்டு எழுந்திருக்கச் செய்கிறார். அத்தோடு அஞ்சவேண்டாம் எனவும் சொல்கிறார் (ἐγέρθητε καὶ μὴ φοβεῖσθε. எகெர்தேடெ காய் மே பொபெய்ஸ்தே). இயேசு இவர்களை எழுந்திருக்கச் சொல்வது, தான்தான் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறவர் என்பதைக் காட்டுகிறது


.8: நிமிர்ந்து பார்க்கின்றபோது ஒருவரையும் அவர்கள் காணவில்லை. இதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அதாவது என்றும் நம்மோடு கூட இருக்கிறவர் மறைந்து போகமாட்டார் என எடுக்கலாம். அல்லது மோசேயும் எலியாவும் காட்சி போன்றவர்கள், ஆனால் இயேசு ஒரு உன்னதமான அடையாளம் அது மறையாது எனவும் எடுக்கலாம். இவ்வளவு நேரமும் அவர்கள் குனிந்தே இருக்கிறார்கள்


.9: அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். இதனை நற்செய்தியாளர் மையப்படுத்துவதன் மூலமாக சீடர்கள் ஆண்டவருடைய வரப்பிரசாதங்களில் இருந்து இறங்கி வந்து, சாதாரண வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுபோல புலப்படுகிறது

மானிட மகன் இறந்து உயிர்க்கும் வரை எவரிடமும் சொல்லக்கூடாது என்ற கட்டளை முன்வைக்கப்படுகிறது. இதன் மூலமாக, இறப்பும் உயிர்ப்பும், திருவுருமாற்ற நிழ்வைவிட மிக முக்கியமானது என்ற செய்தி சொல்லப்படுகிறது. சீடர்கள் இதனை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிகழ்வு நமக்கும் ஆண்டவருடைய உயிர்ப்பின் பின்னர்தான் பகிரப்படுகிறது. இதனையும் ஆண்டவர் ஒரு கட்டளையாகவே கொடுக்கிறார்


இயேசு தான் தெய்வம் என்பதை பலவேளைகளில் காட்டுகிறார்

இருப்பினும் அவர் சீடர்கள் தன் மாட்சியைவிட

தன்னுடைய இறப்பு மற்றும் உயிர்ப்பைக் குறித்தே

சாட்சியம் பகிரவேண்டும் என எதிர்பார்க்கின்றார்

கிறிஸ்தவ சீடத்துவம் மலையில் ஒய்யாரமாக உட்காந்திருப்பதற்கல்ல

மாறாக இறங்கிவந்து பணியாற்றுவதற்கே


அன்பு ஆண்டவரே

இறங்கிவந்து பணியாற்ற வரம் தாரும், ஆமென்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...