ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரண்டாம் வாரம் (அ)
03,09,2023
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Sinthathirai Matha,
Chaddy,
Velanai, Jaffna.
Friday, 1 September 2023
முதல் வாசகம்: எரேமியா 20,7-9
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 62
இரண்டாம் வாசகம்: உரோமையர் 12,1-2
நற்செய்தி: மத்தேயு 16,21-27
துன்பறுத்தப்படல்:
தனிமனிதர் மேலோ அல்லது ஒரு குழுவின் மேலோ, சுமத்தப்படும் விருப்பத்திற்கு மாறான துன்பம், துன்புறுத்தப்படல் என அழைக்கப்படுகிறது. இது விவிலியத்தில் காணப்படும் மிக முக்கியமான ஒரு கருப்பொருள். கடவுளுடைய மனிதர்கள் தொடக்க காலத்திலிருந்தே துன்புறத்தலுக்கு உள்ளாகின்றார்கள் (1அரசர் 18,13: மத்தேயு 23,34-37: 1தெசலோனிக்கேயர் 2,14-15). திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய துன்பங்களை பல திருப்பாடல்களில் அழகாகக் காட்டியுள்ளார், துன்புறுத்தல்களை, எதிரிகளின் தீய எண்ணமாக காணும் திருப்பாடல் ஆசிரியர், அதனை கடவுளை நெருங்குவதற்கான வாய்ப்பாகவும் காண்கிறார் (காண்க தி.பா 7,1: 31,15: 69,26-29). இறைவாக்கினர்களும் தங்களுடைய வாழ்வில் பல துன்புறுத்தல்களை சந்தித்தே, கடவுளை பறைசாற்றினார்கள். இறைவாக்கினர்கள் எலியா, எரேமியா போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். இறைவாக்கினர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை யூத மக்களும் நன்கு அறிந்திருந்தார்கள் (காண்க தி.பணி 7,52).
ஏற்பாடுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் (கிரேக்கர் காலம்) யூதர்கள், கிரேக்க மன்னன் நான்காம் அந்தியோக்கசினால் பல விதமான துன்பங்களை சந்தித்தார்கள். கிரேக்கர்களுடைய துன்புறுத்தல்கள் முன்னைய காலங்களைப் போலல்லாது வெளிப்படையாகவே இருந்தன. இவர்களை எதிர்த்து மக்கபேயர்கள் வன்முறையாக போராடினார்கள். தங்கள் துன்பங்களை அவர்கள் மறைசாட்சியமாகவும், தேசிய காதலாகவும் கருதினார்கள் (காண்க 2மக்கபேயர் 6-7).
புதிய ஏற்பாடு, துன்புறுத்தல்களை இறையரசின் படிக்கல்லாக பார்க்கிறது (காண்க மாற் 10,30: லூக் 11,49-51: கலா 6,12). இயேசு ஆண்டவரும் இந்த துன்புறுத்தல்களில் உச்சத்தை அனுபவித்திருக்கிறார். அவர் துப்பப்பட்டார், முகத்தில் அறையப்பட்டார், கசையடிபட்டார், சிலுவையில் அறையப்பட்டார் இறுதியாக அவர் கொலையும் செய்யப்பட்டார், இதனை அவர் ஏற்றுக்கொண்டு அதனை தன் சீடர்களுக்கு முன்மாதிரியாக காட்டுகிறார் (காண்க மத் 10,23: 24,9: மாற் 13,9: லூக 21,12: யோவ 15,20: 16,2). துன்புறுத்தல்கள் நடைபெறும் வேளையில் தூய ஆவி உடன்நிற்பார் என்ற நம்பிக்கையையும் புதிய ஏற்பாடு தருகின்றது (காண்க லூக் 12,11-12: 21,15 தி.பணி 1,8)
துன்புறுத்தல்கள் ஆரம்ப திருச்சபையில் கடுமையாக இருந்தது. தொடக்கத்தில் சில யூத தலைமைத்துவத்தால் துன்புறுத்தப்பட்ட திருச்சபை (காண்க தி.பணி 12,2) முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை உரோமைய பேரரசால் கடுமையாக துன்புறுத்தப்பட்டது. எவ்வளவிற்கு திருச்சபை துன்புறுத்தப்பட்டதோ, அவ்வளவிற்கு திருச்சபை வீரியமாக வளர்ந்தது. இந்த காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் திருச்சபையின் பொற்காலம் எனக் காண்கின்றார்கள். இந்த பின் புலத்தை மையமாகக் கொண்டே அதிகமான புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதை இன்று பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் (தி.பணி 2,4: 4,8-13: 6,10: 7,55).
புறவினத்தவர் திருத்தூதர் என்று தன்னை பெருமையாக அழைக்கும் திருத்தூதர் பவுலே ஆரம்ப காலத்தில் திருச்சபையை துன்புறுத்தினார், இதனை அவரே ஏற்றுக்கொள்கிறார். சில யூதர்கள், கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதை தங்கள் தார்மீக கடமையாக கருதினார்க்ள. இன்றைய கிறிஸ்தவ-இந்து-இஸ்லாமிய- மற்றும் மதம்சாராத, தீவிரவாதிகள் தாங்கள் மற்றவர்களை துன்புறுத்துவதை சரியென, பிழையாக கருவதைப்போல (காண்க 1கொரிந் 15,9). ஆரம்ப கால திருச்சபை தலைவர்களும், புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் கிறிஸ்துவின் துன்பத்தை விவரிப்பதன் வாயிலாக கிறிஸ்தவர்கள் தங்கள் துன்பத்தை ஏற்றுக்கொண்டு அதனைத் தாண்டி வரவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர் (காண்க எபிரேயர் 12,1-4). துன்புறுத்தல்களை தாங்கவேண்டும் என்பதை ஆசிரியர்களும் புத்தகங்களும் கற்பிக்கின்றன, அத்தோடு துன்பங்கள் மற்றும் துன்புறுத்தல்கள், புனிதமான மற்றும் ஆன்மீகம் நிறை வாழ்விற்கும் சார்பாக அமைகின்றன என்பதை விடுத்து, கிறிஸ்தவைர்கள் துன்பத்தை வலிந்து ஏற்க வேண்டும் என்பது விவிலியத்தின் படிப்பினை இல்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
எரேமியா 20,7-9
7ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். 8நான் பேசும்போதெல்லாம் 'வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. 9'அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
எரேமியா இறைவாக்கினர் இஸ்ராயேல்-யூதா வரலாற்றில் மிக முக்கியமானவர். அடையாள இறைவாக்கு மற்றும் மாற்று சிந்தனை போன்றவற்றிக்கு இவர் மிகவும் அறியப்படுகிறார். புதிய ஏற்பாட்டு காலத்தில் சில மக்கள் இவரை இயேசுவிற்கு ஒப்பிடுமளவிற்கு இவர் பெயர் பெற்றவர். யூதேய மன்னர்களான யோசியா, யோயாக்கீம், செதேக்கியா போன்றவர்களின் காலத்தில் இவர் பணியாற்றினார். இவர் காலத்தில்தான் யூதேய நாடும், எருசலேம் தேவாலயமும் பபிலேனியர்களால் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இவர் காலத்தில் பல பொய் இறைவாக்கினர்களும், குருக்களும் அரசர்களை தவறாக வழியில் நடத்தினர். இதனால் அரசர்களும் தவறான முடிவுகளை எடுத்து, பேரரசான பபிலோனியாவை எதிர்க்க துணிந்தார்கள். இது நாட்டினதும் மக்களினதும் அழிவிற்கு காரணமாக அமைந்தது. பபிலோனியர்கள் முதல் தடவையாக எருசலேமை தாக்கி அதன் அரசரான யோயாக்கினை சிறைப்பிடித்தார்கள். அவரோடு நாட்டின் வலியவர்களை நாடு கடத்தினார்கள். பின்னர் அரசரின் சித்தப்பாவான மத்தனியாவை அரசனாக்கி அவர் பெயரை செதேக்கியா (காண்க 2அரசர்கள் 24) என்று மாற்றி, அவரை பொம்மை அரசராக்கினார்கள்கள் (தற்போதுள்ள சில ஈழ மற்றும் தமிழ்நாட்டு, கோமாளித் தலைவர்களைப் போல). இவருடைய காலத்தில் பஸ்கூர் என்ற ஒரு அரசவை தலைமை அதிகாரி இருந்தான; இவன் எரேமியாவின் கருத்துக்களை திரித்து அரசரை தவறான வழியில் நடத்தினான். இவனுடைய நெருக்குதல்களால் அரசர் எகிப்தின் உதவியை பெறமுயன்றார் என சொல்லப்படுகிறது. இது பபிலோனியர்களின் சினத்தை வரவழைத்தது. எரேமியா உடைந்த சாடியின் அடையாளம் (காண்க எரேமியா 19). என்ற இறைவாக்கை உரைத்தபோது, இவன் எரேமியாவை கைது செய்து அவரை தண்டித்து சிறையில் அடைத்தான். மறுநாளே எரேமியாவை இவன் விடுதலை செய்தாலும், எரேமியா அவனை கடுமையாக சாடினார். அவனுடைய பெயரை 'மாகோர் மிசாபீப்' என்று மாற்றினார் (מָג֥וֹר מִסָּבִֽי). இதன் அர்த்தமாக சுற்றிலும் பயங்கரம் என்று வரும். பஸ்கூரையும் அவன் வீட்டாரையும் தாக்கி இறைவாக்குரைத்த எரேமியா ஆண்டவரிடம் முறைப்பாடு செய்கிறார், அதில் சில வரிகள்தான் இன்றைய முதலாம் வாசகமாக வருகின்றன.
வ.7: எரேமியா ஆண்டவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்கிறார், தானும் ஏமாந்து போனதாகச் சொல்கிறார் (פִּתִּיתַ֤נִי יְהוָה֙ וָאֶפָּת பித்திதானி அதோனாய் வா'எப்பாத்). எந்த நிலையிருந்து எமாற்றிவிட்டர், என்று சொல்லவில்லை. சில ஆங்கில மொழிபெயர்ப்புக்கள், எரேமியா ஆண்டவர் தன்னை இறைவாக்கினர் நிலையிலிருந்து எமாற்றிவிட்டார் என்கிறார்.
எழாவது வசனத்தின் முதல் பாகம் சந்தேகங்களையும், விளக்கங்களையும் உருவாக்குகின்றது. இந்த எபிரேய வரியின் சரியான மொழிபெயர்ப்பு கிடைக்கப் பெறவில்லை. ஆங்கில மற்றும் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் வித்தியாசப்படுகின்றன. இறைவாக்கினரை கடவுள் எப்படி கைவிடலாம், அவர் கைவிடவில்லை மாறாக சோதிக்கிறார் என்ற அர்த்தமும் கொடுக்கப்படுகிறது. ஆண்டவர் எரேமியாவைவிட பலமானவர், இதனால் அவர் இறைவாக்கினரை சோதிக்க தகுதி பெறுகிறார் எனலாம்.
ஆண்டவரின் இந்த தண்டனை அல்லது சோதனை, தன்னை நகைப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது, நாள் முழுவதும் அவர் நகைப்பிற்கு உள்ளானார் என்பதையும் காட்டுகிறார் எரேமியா (שְׂחוֹק செஹோக்- சிரிப்பு). இறைவாக்கினரை ஒரு தலைமை அதிகாரி துன்புறுத்தி சிறையில் அடைத்தபோது அவர் பட்ட அவமானம் இந்த வரியின் பின்புலமாக இருக்கலாம். அத்தோடு அவர் நிலையைப் பார்த்து மக்கள் சிரிப்பதும் இவர் வேதனையைக் கூட்டுகிறது.
வ.8: உண்மையை பேசுகிறவர்கள் சந்திக்கின்ற துன்பத்தை இந்த வரி காட்டுகிறது. தான் பேசுவதெல்லாம் வன்முறை அழிவு என்றுதான் இருக்கிறது என்கிறார் (חָמָס וָשֹׁד ஹாமாஸ் வாஷாத்- வன்முறையும் அழிவும்). தான் பேசுவதுதான் எதார்த்தம் என்றிருந்தாலும், அதனை தான் தனிபட்ட விதத்தில் ஏற்க்கவில்லை என்பது போல உள்ளது அவரது வரி. துன்பத்தைப் பற்றி பேசி அவரே களைத்தவிட்டார் போல.
எரேமியா ஆண்டவரின் வாக்கிற்கும் தனக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் காட்டுகிறார். ஆண்டவரின் வாக்கு பயங்கரமானதாக இருப்பதனாலும், மக்கள் அதன் தார்ப்பரியத்தை உணராததாலும் அவர்கள் சிரிக்கிறார்கள் என்று வருந்துகிறார். இந்த பழிச்சொற்களும் நகைப்புக்களும் நாள் முழுவதும் நடைபெறுகிறது என்று தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் (כָּל־הַיּוֹם கோல்-ஹய்யோம்). கேட்கிறவர்கள் நகைக்கிறார்கள் என்பதற்கு, அவர்கள் நையாண்டி செய்கிறார்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (קֶלֶס கெலெஸ்).
வ.9: இந்த வசனம் மிக முக்கியமானது. ஆண்டவருடன் கோபம் கொண்டாலும் உண்மையான இறைவாக்கினர் என்ற வகையில் அவருடைய ஆன்மா பேசுகிறது. ஆண்டவருடை பெயரை சொல்லாமலும், அவர் பெயரால் பேசாமலும் தன்னால் இருக்க முடியாது என்கிறார்
(לֹֽא־אֶזְכְּרֶנּוּ וְלֹֽא־אֲדַבֵּר עוֹד בִּשְׁמ֔וֹ லோ' 'எட்ஸ்கெரேனூ வெலோ'-'அதாபெர் 'ஓத் பிஷ்மோ- அவரை நினைக்காமலும் அத்தோடு இனிமேல் அவர் பெயரைப்பற்றி பேசாமலும்).
ஆண்டவருடைய பெயர் இதயத்தில் பற்றி எரியும் தீ போல் உள்ளது என்கிறார். இது ஒரு நல்ல இறைவாக்கினரின் இறையனுபவம் (כְּאֵשׁ בֹּעֶרֶת கெ'எஷ் போ'எரெத்- எரியும் நெருப்பாக). இந்த நெருப்பு போன்ற ஆண்டவரின் பெயரின் மட்டிலான உணர்வு தன் எலும்புகளுக்குள் அடங்கிக் கிடக்கிறது என்கிறார். எலும்புகள் எபிரேய சிந்தனையில் மிக முக்கியமானவை. இங்கே அவை மனிதரின் ஆழ்மனத்தை காட்டுகின்றன (בְּעַצְמֹתָי பெ'அடஸ்மோதாய்- என் எலும்புகளுக்குள்).
இப்படியாக இந்த உணர்வு, பாதுகாப்பாக உள்ளது ஆனால் நிம்மதியாக இல்லை என்பதைக் குறிக்கிறது. இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார். அதாவது தான் இனி தொடர்ந்து இறைவாக்குரைக்க இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
வவ.10-18: எரேமியாவின் புலம்பல் இந்த பாடல் மொத்தமாக 18 வரிகளைக் கொண்டுள்ளது. ஒன்பதாவது வரிக்கு பின்னால் வரும் வரிகள், மிக துன்பமான உணர்வுகளைத் தாங்கி வருகின்றன. புலம்பல் என்பது இஸ்ரேலிய இலக்கியத்திலும் சரி அல்லது வழிபாட்டிலும் சரி ஒருவகையான மன்றாட்டாகவே இருக்கிறது. இந்த புலம்பலின் வாயிலாக அதனை பாடுகிறவர் தன்னுடைய உணர்வுகளை கடவுளுக்கு வெளிகாட்ட முயல்வார். திருப்பாடல்களில் இந்த புலம்பல் ஒரு தனி குழுவாகவே இருக்கிறது. இந்த புலம்பல், பாடுகிறவர்க்கு மன நிம்மதியைத் தரவல்லது. தமிழர் மரபான சாவு வீட்டு ஒப்பாரி போல.
திருப்பாடல் 62
கடவுளுக்காக ஏங்குதல்
(யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா)
(1 சாமு 23:14)
1கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
2உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
4என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.
6நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.
7ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. 9என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.
10அவர்கள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர்.
11அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்; அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்; பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்.
தாவீது அரசர் பல கால கட்டங்களில் யூதேய பாலைநிலத்தில் இருந்திருக்கிறார். முக்கியமாக அவர் அரசர் சவுலினால் தேடப்பட்டபோது பாலைநில குகைகளில் தங்கி வாழ்ந்தார். தாவீது நல்ல பாடகராகவும், கின்னரம் மற்றும் யாழ் போன்ற நரம்பு வாத்திய கருவிகளை மீட்டுவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தபடியால், பல திருப்பாடல்களை அவரே எழுதினார் என்ற பலமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன (காண்க 1சாமுவேல் 23-24).
அதேபோல தாவீதின் ஒரு மனைவிக்கு பிறந்த மகனான அப்சலோமின் கலவரத்தின் போதும், இரத்த களரியைத் தவிர்க்க தாவீது தன் இளைய மகன் சாலமோனுடன் யூதேய பாலை நிலத்திற்கு மீட்டும் சென்றார். அங்கே அவரின் உணர்வுகள் பலமாகவும், கடினமாகவும் இருந்தன. ஏனெனில் இந்த அப்சலோமை பல வேளைகளில் தாவீது மன்னித்தவர் (ஒப்பிடுக 2சாமுவேல் 14-15).
பாலை நிலத்தில் சவுலுடைய குடும்பத்தாரின் பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் தாவீது உள்ளானார். அப்சலோம், தாவீதை பல வழிகளில் தாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான், இது தாவீதிற்கு நன்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் தாவீது இந்த திருப்பாடலை எழுதியிருப்பார் என்ற நம்பப்டுகிறது (காண்க 2சாமுவேல் 16-17).
இவை சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படும் வாதங்கள் மட்டுமே. இதனை உறுதிப்படுத்துவது அவ்வளவு இலகுவாக இருக்காது, ஏனெனில் அதிகமான திருப்பாடல்கள் சொல்லாட்சிகளாலும், கதையம்சங்களாலும் தாவீதுக்கு பிற்காலத்தவையாக இருக்கின்றன. அதகிமான திருப்பாடல்கள் பின்நாட்களில் வடிவமைக்கப்பட்டு தாவீது அரசருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன.
வ.0: தாவீது இந்த பாடலை அவர் யூதேய பாலைவனத்தில் இருந்த போது பாடடினார் என காட்டுகிறது (בְּמִדְבַּר יְהוּדָה பெமித்பார் யெஹுதாஹ்- யூதாவின் பாலைவனத்தில்). இந்த முன்னுரை இந்த பாடலுக்கு ஒரு பின்புலத்தை தரும் அதேவேளை, இது பிற்கால இணைப்பாக இருக்கலாம் என்ற பலமாக வாதம் ஒன்றும் இருக்கிறது.
வ.1: தாவீது தன்னுடைய உள்ளத்தை நீரின்றி வறண்ட தரிசு நிலத்திற்கு ஒப்பிடுகிறார். நீரின்றி வறண்ட தரிசு நிலம் நீருக்காக ஏங்குவதைப் போல தன் உள்ளம் கடவுளுக்காக ஏங்குகின்றது என பாடுகிறார். யூத பாலை நிலம் நீரில்லாத காலங்களில் பயங்கரமான அனுபவத்தை தரவல்லது. நீரில்லாத இடத்தில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நீரின் பெறுமதியை நன்கு அறிவார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் நீர், மிகவும் பெறுமதியான சடப்பொருள். இதனால்தான் நீர் நிலைகளை கடவுளுக்கும் அல்லது கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கும் ஒப்பிடுகிறார்கள், ஆசிரியர்கள். நீரில்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது, அதேபோல கடவுள் இல்லாமல் தன் உள்ளம் இல்லை என்பதை அழகாகக் காட்டுகிறார். (אֶֽרֶץ־צִיָּ֖ה 'எரெட்ஸ்-ட்சிய்யாஹ் தரிசு நிலம்).
வ.2: இரண்டாவது வரி சற்று வித்தியாசமாக உள்ளது. தமிழ் விவிலியத்தில் இந்த வசனம் எதிர்கால அல்லது நிகழ்கால விருப்பு வாக்கியத்தில் உள்ளது 'உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்' ஆனால் எபிரேய மூல மொழியில் இந்த வரி இறந்த கால வினைமுற்றில் இருப்பது போல தோன்றுகிறது.
כֵּן בַּקֹּ֣דֶשׁ חֲזִיתִ֑יךָ கென் பாகோதெஷ் ஹட்சிதாவ்கா- ஆம், தூயகத்தில் உம்மை நோக்கினேன்
:לִרְא֥וֹת עֻ֝זְּךָ֗ וּכְבוֹדֶֽךָ லிர்'ஓத் 'ஊட்செகா வுக்வொதாகா- உம் வல்லமையையும், மாட்சியையும் பார்க்க
தாவீது கடவுளின் கடவுளின் வல்லமையையும் பரிசுத்தத்தையும் எங்கு பார்த்தார் என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக எருசலேம் தேவாலயமாக இருக்க முடியாது. அவர் காலத்தில் அது கட்டப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை ஆண்டவருடைய கூடாரமாக இருக்கலாம். இங்கே 'தேவாலயத்தையோ அல்லது கூடாரத்தைiயோ' நேரடியாக குறிக்கும் சொற்கள் இல்லை, மாறாக தூய்மை அல்லது பரிசுத்தத்தை குறிக்கும் சொல் மட்டுமே இருக்கிறது.
வ.3: சொந்த மகனால் அலைக்கழிக்கப்படும் ஒரு அரசர், கடவுளின் அன்பை உணர்ந்து பாடுவது ஆச்சரியமாக உள்ளது. தாவீது கடவுள் மேல் கொண்ட அன்பின் காரணமாகத்தான், பாவியகாக
இருந்தாலும் மற்றைய அரசர்களைவிட பலவிதத்தில் மேன்மையானவராகிறார்.
கடவுளுடைய அன்பை தன்னுயிரை விடவும் மேலானது என்கிறார், இது சாதாரணமாக அரசியல் தலைவர்களின் உணர்வாக இருக்காது - כִּי־טוֹב חַסְדְּךָ מֵֽחַיִּים கி-தோவ் ஹஸ்தெகா மஹய்யிம்- உயிரைவிட உம் அன்பு எத்துணை நன்மையானது. இதனால் தான் தன் இதழ்கள் அவரை புகழ்கின்றன என்கிறார்.
வ.4: தான் வாழ்கின்ற நாட்கள் எல்லாம் கடவுளை புகழ்வதாகவும், கையை கூப்பி கடவுளை வாழ்த்துவதாகவும் சொல்கிறார். கடவுளை புகழ்தல் என்னும் வரி, கடவுளின் பெயரை ஆசித்தல் என்று எபிரேயத்தில் உள்ளது (אֲבָרֶכְךָ֣ בְּשִׁמְךָ 'அவாரெக்கா பெஷிம்கா உம்மை ஆசித்தல் உம் பெயரை). ஆண்டவரை புகழ்தலும் ஆண்டவரின் பெயரை புகழ்தலும் ஒத்த கருத்துக்களாக எபிரேய வழிபாட்டில் கருதப்படுகின்றன.
கைகூப்பி ஏத்துதல் என்பது என் கரங்களை உயர்த்துதல் என்ற எபிரேயத்தில் உள்ளது (אֶשָּׂא כַפָּֽי 'எஸ்ஸா' கப்பாவ்). நாம் கரங்களை கூப்பி கடவுளை வணங்குவதைப்போல், எபிரேயர்கள் கரங்களை உயர்த்தி கடவுளை வணங்குவர்.
வ.5: உணவு ஒரு சாதாரண மனிதனை அவருடைய பசியை நிச்சயமாக நிறைவடைய வைக்கும். எந்த முனிவரும் ஏதோ ஒரு விதத்தில் உணவை ருசிப்பவராகவே இருப்பர். ஆசிரியர் தன்னுடைய கடவுள் அனுபவத்தை உணவில் கிடைக்கும் அறுசுவை ருசிக்கு ஒப்பிடுகிறார். இதிலிருந்து இவர் நன்றாக சாப்பிடுவார் என்பதும், இவருடைய கடவுள் அனுபவம் மிக மிக இயற்கையானது என்பதும் தெரிகிறது. அறுசுவை உணவு என்ற அழகான தமிழ் சொற்களை எபிரேயம் மூல மொழியில் 'கொழுத்த கொழுப்புக்கள்' என்று காட்டுகிறது (חֵלֶב וָדֶשֶׁן கெலெவ் வாதெஷென்). இஸ்ராயேலர்கள் கால் நடை வளர்ப்பவர்கள், இதனால் இவர்களுக்கு பால், தயிர், கொழுப்பு போன்றவை அறுசுவை உணவுகளாக இருந்திருக்க வேண்டும்.
'என் இதழ்கள் மகிழ்ச்சிமிகு புகழ்சிகளால் நிறைவடையும்' என்று மோனை வடிவில் இரண்டவாது அடியை அமைக்கிறார். இந்த வரியும் ஏனைய வரிகளைப்போல் நேர்த்தியாக எதுகை மோனை அடியில் அழகாக நெய்யப்பட்டிருக்கிறது.
כְּמ֤וֹ חֵ֣לֶב וָ֭דֶשֶׁן תִּשְׂבַּ֣ע נַפְשִׁ֑י கெமோ ஹெலெவ் வாதெஷென் திஸ்பா' நப்ஷி
וְשִׂפְתֵ֥י רְ֝נָנ֗וֹת יְהַלֶּל־פִּֽי׃ வெஸிப்தே ரெநாநோத் யெஹல்லெல்-பி
வ.6: மனிதர் முழித்திருக்கும் போது கடவுளை நினைத்தல் சாதாரண விசுவாசம், ஆனால் படுத்திருக்கும் போது அவரை நினைத்தல் என்பது மிக ஆச்சரியமானது, அப்படியான விசுவாசத்தை தான் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துகிறார் தாவீது.
அத்தோடு இதற்கு இணையாக தான் இரவு வேளைகளிலும் கடவுளை நினைப்பதாக மீண்டும் கூறுகிறார். தாவீதின் காலத்தில் இரவு மற்றும் இருள், நம்பிக்கையின்மையை மற்றும் பயங்கரத்தின் அடையாளமாக கருதப்பட்டன. இரவு மனிதருக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரலாம். பல தலைவர்கள் இரவு வேளைகளில்தான் கொலை செய்ய்பட்டார்கள். நாடுகளும் இரவு வேளையில்தான் சூறையாடப்பட்டன. காவல் வீரர்கள் இரவு முடிந்து, விரைவில் விடியல் வரவேண்டும் என எண்ணுவார்கள். இதனால் தான் 'விடியல்' நேர்முகமான சொல்லாக தமிழிலும் இருக்கிறது. இந்த பின்னனியில், ஆசிரியர் இரவிலும், தன் படுக்கையிலும் கடவுளை நினைப்பதாகச் சொல்கிறார். ஆழ்ந்து சிந்தித்தல் என்பதற்கு எபிரேயம் הָגָה (ஹாகாஹ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. திரவிடர்களைப் போல், செமித்தியர்கள் மௌனமாக தியானிக்க மாட்டார்கள், அவர்கள் வாயசைத்து முணுமுணுத்து தியானம் செய்யவார்கள். இதனைத்தான் இந்த சொல் காட்டுகிறது. இது ஒரு வகையான செபம்.
வ.7: இந்த வரி ஆசிரியரின் முற்கால அனுபவத்தை விவரிக்கிறது. ஆண்டவர் தனக்கு துணையாய் இருந்தார் என்கிறார். இதனை சொல்கின்றபோது, ஆசிரியர் பெரும் துன்பத்தில் இருக்கிறார், இருந்தும் கடந்தகால அனுபவம் அவருடைய தற்கால துன்பத்திற்கு ஆறுதலாக இருக்கிறது. அதாவது, கடந்த காலத்தைப் போல இக்காலத்திலும் ஆண்டவர் நிச்சயமாக தன் துன்பத்தில் ஆறுதலாக வருவார் என்பதை இது காட்டுகிறது (כִּֽי־הָיִ֣יתָ עֶזְרָ֣תָה לִּ֑י கி-ஹாய்யிதா 'எட்ஸ்ராதாஹ் லி- ஏனெனில் எனக்கு நீர் துணையாக இருந்தீர்).
ஆண்டவர் துணையாக இருப்பது, அவருடைய பாதுகாப்பில் இருத்தலுக்குச் சமன். இதனை உருவகிக்க 'ஆண்டவருடைய சிறகுகளில் நிழல்கள்' என்ற அடையாளம் பாவிக்கப்படுகிறது. அண்டவருடைய துணையை வர்ணிக்க விவிலியம் பல இடங்களில் கழுகின் இறக்கை நிழலை அடையாளமாக பாவிக்கிறது. கழுகு, பாலைவனத்தின் மிகவும் பலமான பறவை. அத்தோடு இந்த கழுகு அடையாளம் ஒரு எகிப்திய கடவுளின் அடையாளம் என்ற ஒரு பாரம்பரியமும் இருக்கிறது. ஆசிரியர், சிறகின் நிழலை கடவுளின் பாதுகாப்பிற்கு ஒப்பிடுகிறார். (בְצֵל כְּנָפֶיךָ வெட்செல் கெநாபேகா- உம் சிறகுகளின் நிழலில்).
வ.8: ஆண்டவரை உறுதியாக பற்றிக் கொள்ளல் - அவரின் வலக்கையை இறுக்கமாக பிடித்தல் என்ற வரிகள் ஒத்தகருத்து வரிகளாக பாவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரை பற்றிக்கொள்ளல் என்பது புதிய விடயமாக இருக்க வாய்பில்லை ஆனால், உறுதியாகவும், இறுக்கமாகவும் பற்றிக் கொள்ளல் என்பதே இங்கே முக்கியத்துவத்தை உருவாக்குகின்றது. அரசர்கள் அல்லது துன்பத்தில் இருக்கிறவர்கள் பலரை அல்லது பலவற்றை இறுக்கமாக அல்லது உறுதியாக பற்றிக்கொள்ளவர். அரசர்கள் தங்கள் நட்பு அரசர்களை பற்றிக்கொள்வர். சாதாரண மக்கள் அரசர்களை பற்றிக் கொள்வர். இந்த ஆசிரியர் ஆண்டவரை பற்றிக்கொள்ள விரும்வுவதாகச் சொல்வது, அவரின் விசுவாசத்தைக் காட்டுகிறது. வலது கரம், ஆண்டவரின் அரியணை மற்றும் அவரது படைத்திறனைக் காட்டுகிறது (יְמִינֶךָ யெமிநேகா- உம் வலக்கை).
வ.9: தன்னை அழித்துவிட தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்கு செல்வர் என்கிறார் ஆசிரியர். திருப்பாடல் காலத்தில் நரகம் பற்றிய சிந்தனைகள் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் பூவுலகின் ஆழம் என்ற இடத்தை பற்றிய அறிவு ஒன்று இருந்திருக்கிறது. இந்த இடம் இருள் சூழ்ந்ததாகவும், ஆழமானதாகவும், அங்கே இறந்தவர்கள் இருப்பதாகவும் நம்பப்பட்டது. இதனை கடவுள் இல்லாத இடமாக இவர்கள் கருதினார்கள். ஆண்டவருக்கு இந்த இடத்தின் மேலும் அதிகாராம் இருப்பதாக நம்பினாலும், ஆண்டவர் இந்த இடத்தில் இல்லை என்பதும், இங்கேதான் அசுத்தமான ஆவிகள், விலங்குகள் இருப்பதாகவும் நம்பினார்கள். இந்த நம்பிக்கைகள் ஒரு வகையானவதைதான். இப்படியாக பல நம்பிக்கைகள் இந்த பூவுலகின் ஆழத்தைப் பற்றி இருந்திருக்கின்றன. תַחְתִּיּ֥וֹת הָאָֽרֶץ தாஹ்திதோத் ஹா'ஆரெட்ஸ்- பூவுலகின் ஆழங்கள். இந்த இடத்திற்கு சீயோல், ஹெகெனா, என்ற வேறு பெயர்களும் உள்ளன.
இந்த வரியில் தன்னை அழிக்கத் தேடுவோர்கள் என்பவர்களை குறிப்பிடுகிறார் ஆசிரியர். யார் இவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. இவர்கள், பின்புலத்தின் படி அரசரின் மக்களாக
இருந்திருக்கலாம். ஆனால் இவர்களுக்கு விரும்பப்படும் தண்டனைகளை நோக்கினால், ஒரு தகப்பன் தன் மக்களுக்கு இப்படியான தண்டனையை விரும்புவாரா என்ற கேள்வி எழுகிறது.
வ.10: தன் எதிரிகளுக்கான தண்டனையை விவரிக்கின்றார், அவர்கள் வாளுக்கு இரையாவார்கள் அத்தோடு நரிகளுக்கு இவர்கள் விருந்தாவார்கள். ஆசிரியர் இந்த தண்டனையை தான் கொடுக்கப்போவதாகச் சொல்லவில்லை மாறாக, ஆண்டவர்தான் இந்த தண்டனையை கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதுவும் இஸ்ராயேல் புலம்பல் மற்றும் தூற்றல் பாடல்களுக்கான ஒரு சிறப்பம்சம்.
வாளுக்கு இரையாதல் போரில் ஏற்படும் மரணத்தைக் குறிக்கலாம். நரிகளுக்கு விருந்தாதல் என்பது பாலைவனத்தில் இறந்துகிடக்கும் சடலங்களுக்கு ஏற்படும் நிலையைக் குறிக்கிறது.
வ.11: இந்த வரியில் 'அரசர்' என்று படர்க்கையில் (மூன்றாம் ஆள்) குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஏன் தன்னை அவர் மூன்றாம் ஆளில் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆசிரியர்கள் தங்களை 'அவர், அவர்கள்' என்று குறிப்பிடுவது இலக்கியத்தில் ஒன்றும் புதிதல்ல (הַמֶּלֶךְ֮ ஹம்மெலெக்- அரசர்). இவர் எதிரிகள், வாளுக்கும் நரிகளுக்கும் விருந்தாக, இவர் ஆண்டவரின் களிகூருகிறார்.
(יִשְׂמַח בֵּאלֹהִים யிஸ்மாஹ் பெ'லோஹிம்- ஆண்டவரில் களிகூர்வார்).
அவர் மேல் ஆணையிடுவோர் பெருமிதம் கொள்வர் எனப்படுகின்றனர் (בּוֹ போ, அவரில்).
யார் இந்த 'அவர்' என்பது தெரியவில்லை, சூழலியலில் நோக்குகின்றபோது, இது கடவுளாகத்தான் இருக்கவேண்டும். கடவுளில் ஆணையிடுவது அக்காலத்தில் வழக்கிலிருந்ததா என்ற கேள்வியும்இங்கே எழுகிறது. இறுதியாக பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும் என்று இந்த திருப்பாடல் முடிவடைகிறது. இதிலிருந்து, சிலருடைய பொய்களினால் ஆசிரியர் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருப்பார் போல் இருக்கிறது.
உரோமையர் 12,1-2
1சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. 2இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
உரோமையர் பன்னிரண்டாம் அதிகாரம், கிறிஸ்தவ வாழ்வு என்ற தலைப்பில் சிந்திக்க முயல்கிறது. பன்னிரண்டாவது அதிகாரத்தை இந்த முதல் இரண்டு வரிகளும் சுருக்கமாக சாரம்சம் செய்கின்றன. பவுலுடைய கருத்துப்படி, அவர் உரைக்கும் நற்செய்தி மரணத்திலிருந்து மக்களை மீட்டு வாழ்வுக்கு கொண்டு வரும் என்பதாகும். இருப்பினும் இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் நேர்மையானவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டியது மிக கட்டாயமான கடமையாகிறது. கடவுள் கிறிஸ்து வழியாக அனைவரும் ஏற்புடையவராக்கிவிட்டார், ஆனால் அவரவர் தம் சொந்த வாழ்வில் இந்த ஏற்புடைமையை தமதாக்கவேண்டும் என்கிறார். இது ஒரு தொடர் பயணம் என்பது பவுலுடைய வாதம். இதனை அவர் கீழ்ப்படிதலுள்ள பயணம் என்றும் அழைக்கிறார்.
கிறிஸ்தவர்களாக வாழ்வது என்றால் என்ன, என்பதை இந்த பன்னிரண்டாம் அதிகாரம் அழகாகக் காட்டுகிறுது.
வ.1: இவ்வளவு நேரமும் இஸ்ராயேலர் தாம் இழந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பு
இன்னமும் இருக்கிறது என்பதை காட்டிய பவுல், இப்போது உறுதியாக மீண்டும், புறவின கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுகிறார், Παρακαλῶ οὖν ὑμᾶς ἀδελφοί (பாராகாலோ ஊன் ஹுமாஸ் அதெல்போய்).
ஆண்டவருடைய இரக்கத்தால், இவர்கள் தங்களுடைய உடலை, உயிருள்ள தூய, கடவுளுக்கு ஏற்ற பலியாக ஒப்புக்கொடுக்க கேட்கிறார். இரக்கம் பன்மை பொருளில் பாவிக்கப்பட்டுள்ளது (τῶν οἰκτιρμῶν டோன் ஒய்க்டிர்மோன்). ஆக இது பல செயற்பாடுகளைக் குறிக்கலாம். உயிருள்ள தூய பலி (θυσίαν ζῶσαν ἁγίαν தூசியான் ட்சோஸான் ஹகியான்) என்பது, உண்மையான வாழ்வுப் பலியைக் குறிக்கிறது என எடுக்கலாம்.
இதனை பவுல் உள்ளார்ந்த பலி என சொல்கிறார் (τὴν λογικὴν λατρείαν ὑμῶν· டேன் லொகிகேன் லாட்ரிய்யான் ஹுமோன்). உரோமைய கிறிஸ்தவர்கள் பலவிதமான வழிபாடுகளை பார்த்திருப்பர், சில வழிபாடுகளிலிருந்து இவர்கள் விரட்டவும் பட்டிருப்பர், அல்லது தேவையில்லா வெளி வழிபாடுகளில் இவர்கள் கவனமும் செலுத்தியிருப்பர். இந்த வேளையில்தான் உள்ளார்ந்த அறிவு ரீதியான வழிபாடு மிகவும் முக்கியம் என்பதை பவுல் காட்டுகிறார்.
வ.2: முதலாவது வரியில் சொல்லப்பட்ட அந்த உண்மையான பலியாக எப்படி மாறுவது என்பதை இந்த வரி காட்டுகிறது, அதற்கு இந்த 'உலகின் போக்கின் படி வாழவேண்டாம்' என்கிறார் பவுல் (μὴ συσχηματίζεσθε τῷ αἰῶνι τούτῳ தே சுஸ்சுகேமாடிட்செஸ்தே டோ அய்யோனி டூடோ). இதனை, இந்த காலத்தினால் (போதனைகளால்) உறுதிப்படுத்தப்பட வேண்டாம் என்கிறார். இங்கே செயற்பாட்டு வினை பாவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தின் படிப்பினைகள் என்பது யாரை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை இது, யூத மற்றும் உரோமைய சட்டங்களைக் குறிக்கிறது எனவும் எடுக்கலாம்.
இதற்கு மாறாக கிறிஸ்தவர்களின் உள்ளம் (νοῦς நூஸ்- உள்ளம், மனம்), மாற்றமடைந்து (μεταμορφόω மெதாமொர்பொஓ) புதுப்பிக்கப்படவேண்டும் (ἀνακαίνωσις அனாகாய்நோசிஸ் புதுப்பித்தல்) என்கிறார். இப்படியாக, கிறிஸ்தவர்களின் மனங்கள் மாற்றமடைந்து புதுப்பிக்கப்பட்டால்தான், கடவுளின் திட்டம் என்ன? அத்தோடு அது நல்லது, ஏற்றுக்கொள்ளக்கூடியது மேலும் நிறைவானது என்னவென்று புரிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த புறவின திருத்தூதர்.
யூத மற்றும் உரோமையர்களைப் போல, எழுதப்பட்ட சட்டங்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள் அல்லர் கிறிஸ்தவர்கள், அவர்கள் மனத்தாலும் சிந்தனையாலும் சுதந்திரமானவர்கள், அதனை அவர்கள் வாழ்விலும், தெரிவிலும் காட்ட வேண்டும் என்பது பவுலின் இறையியல்.
மத்தேயு 16,21-27
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். 22பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, 'ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது' என்றார். 23ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, 'என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' என்றார். 24பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 25ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். 26மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? 27மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார். 28நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்' என்றார்.
பேதுருவுக்கும் இயேசுவிற்கும் இடையிலான உரையாடல்கள் மிக சுவாரசியமானவை. அதிகமான உரையாடல்களில் பேதுரு சரியாக தொடங்கி முடிவில் பிழையான அறிவுரையைச் சொல்லப் போய், ஆண்டவரிடம் 'நன்றாக வாங்கிக்கட்டுவார்.' இந்த பகுதியில் பேதுரு அனைத்து சீடர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறார் எனலாம். இந்த பகுதி மூன்று நற்செய்திகளிலும் பதியப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மிகவும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது எனலாம். மத்தேயு நற்செய்தியின் 16வது அதிகாரம் நான்கு பிரிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அ. ஆண்டவரிடம் அடையாளம் கேட்டல்: வவ 1-4.
ஆ. பரிசேயர், சதுசேயரைப் பற்றிய அவதானம்: வவ. 5-12
இ. பேதுருவின் அறிக்கை: வவ. 13-20
ஈ. இயேசு தன் சாவை முதல் தடவை அறிவித்தல் வவ.21-28
இந்த அதிகாரத்தை விசுவாசத்திற்கும், விசுவாசமின்மைக்கும் இடையிலான போராட்டத்தை விளக்கும் அதிகாரம் என எடுக்கலாம். ஏற்கனவே இயேசுவைப் பற்றி சரியான விசுவாச அறிக்கை தந்த பேதுரு, இயேசுவிடம் நல்ல உயர் சான்றிதழ் பெற்று, திருச்சபையின் அத்திவாரமாகிறார். அவர் அந்த நிலையிலேயே நின்றிருக்க வேண்டும். மனித பெலவீனம் சில வேளைகளில், பாராட்டுக்கள் வருகின்றபோது தாங்கள் உண்மையில் யார் என்பதை மறக்க வைக்கிறது. இயேசு தான் யார் என்பதிலும், தன்னுடைய முடிவு என்ன என்பதிலும் சரியாக இருக்கிற மீட்பர். மனித தலைவர்கள் கடவுளுக்கு பிழையான கருத்துக்களை சொல்லக்கூடாது அல்லது தேவையில்லாத இடத்தில் தம் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதற்கு இந்த பகுதி நல்ல உதாரணமாக வருகிறது.
வ.21 ஏற்கனவே தான் யார் என்பதை அறிவித்த இயேசு, இப்போது மிக முக்கியமான உண்மையை தம் சீடர்களுக்கு வெளிப்படுத்த முனைகிறார். இது அவருடைய மரணத்தைப் பற்றிய முதலாவது முன்னறிவிப்பு. மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் மரணத்திற்கு முக்கிய பங்காளிகளாக காட்டப்படுகிறவர்கள் மூப்பர்கள் (πρεσβύτερος புரெஸ்புதெரொஸ்), தலைமைக் குருக்கள் (ἀρχιερεύς அர்கியரெஉய்ஸ்), மற்றும் மறைநூல் அறிஞர்கள் (γραμματεύς கிராம்மாதெஉஸ்).
இவர்களைப் பற்றி பல முறை மத்தேயு பதிவு செய்வார். இவர்கள் ஆரம்ப கால திருச்சபைக்கு கொடுந்திருந்திருக்கக்கூடிய நெருக்குதல்களை இந்த பதிவுகள் காட்டுகின்றன.
எருசலேமிற்கு போதல் என்பதும் துன்பப்படுதல் என்ற அர்த்தத்தைத்தான் மத்தேயு நற்செய்தயில் கொடுக்கிறது. இயேசு தான், ஏன் எருசலேமிற்கு போகிறார் என்பதையும் முடிவாகக் காட்டுகிறார், துன்பப்படவும் (παθεῖν பாதெய்ன்), கொலை செய்யப்படவும் (ἀποκτανθῆναι அபொக்தான்தேனாய்), மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் (τρίτῃ ἡμέρᾳ ἐγερθῆναι டிரிடே ஹேமெரா எகெர்தேனாய்) வேண்டும் என்பவை அவை. இயேசுவின் இந்த அறிவுறுத்தல்கள் பேதுருவிற்கு மட்டும் உரியவை அல்ல, மாறாக அவை அனைத்து சீடர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அத்தோடு இந்த அறிவித்தல்கள் தொடர்ச்சியாக கொடுக்கப்படுவதாக கிரேக்க மூல வரி காட்டுகிறது. ஆக இது ஒரு உடனடி வரியல்ல, மாறாக தொடர் போதனை என்பது புலப்படுகிறது (ἤρξατο δεικνύειν ஏர்ட்சாடொ தெய்னுநெய்ன்- வெளிப்படுத்த தொடங்கினார்).
வ.22: பேதுருவின் தேவையில்லாத வேலை. பேதுரு ஆண்டவரை தனியே அழைத்துப் போகிறார், அத்தோடு கடிந்து கொள்கிறார் (ἐπιτιμᾶν எபிடிமான்- கடிந்தார்), பின்னர் ஆண்டவர் முன்னுரைத்தன் படி நடக்கக்கூடாது என்கிறார். இங்கே முக்கியமான சில நிகழ்வுகள் நோக்கப்படவேண்டும். பேதுரு தன் சொல்லவதின் தார்ப்பரியத்தை உணர்ந்திருப்பாரா என்பது தெரியவில்லை ஆனால் அவர் சொல்வது பிழையானவை என்பதை மத்தேயு காட்டுகிறார்.
எருசலேம் போக வேண்டாம் என்பது, மரணத்தை மட்டுமல்ல அதனால் வரும் உயிர்ப்பையும் மறுதலிக்கின்ற செயற்பாடாகின்றது. சீடர் என்பவர் ஆண்டவரின் பின்னால் நிற்கவேண்டியவர். ஏற்கனவே இயேசுவால் அதிகமான பாராட்டப்பட இந்த தலைமைச் சீடர் தன் இடத்தை பிழையாக புரிகறார் என்பது போல தெரிகிறது. அவர் தன் இடத்தை விட்டுவிட்டு, ஆலோசகர் என்ற இடத்தை பிடிக்க முயல்கிறார். இயேசு சீடர்களோடு உரையாடும் போது, அவரை தனியே அழைத்துச் செல்வது, சுயநலம் அல்லது, பிழையான வழிநடத்தலைக் காட்டுகிறது. பின்னர் கடிந்து கொள்வது, ஆண்டவரையே கடிந்து கொள்ளமுடியுமா என்ற கேள்வியையும் கேட்கிறது.
பேதுரு முன்மொழியும் திட்டம், கடவுளுக்கு முரணாக இருக்கிற படியால், அது தவறான திட்டமாக மாறலாம். இருந்தபோது, பேதுரு தான் ஆண்டவரிடம் பேசுகிறார் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். பேதுருவின் இந்த செயல், ஆரம்ப கால திருச்சபையில் துன்பத்தைக் கண்டு விலகி ஓடி அல்லது மறையை மறுதலித்த கிறிஸ்தவர்களை நினைவூட்டுகிறது. இவர்கள்தான் இந்த பகுதியின் உடன் வாசகர்களாக இருந்திருக்கலாம்.
வ.23: ஆண்டவரின் தண்டனை. இயேசு கோபம் கொள்ளும் இன்னொரு முக்கியமான சந்தர்பமாக இதனை பேதுரு மாற்றுகிறார். இயேசு பேதுருவை திரும்பிப் பார்க்கிறார். திரும்பிப் பார்த்தல் விவிலியத்தில் கடவுளின் முக்கியமான செயற்பாடுகளில் ஒன்று (στραφεὶς ஸ்ட்ராபெய்ஸ்- திரும்பி). பின்னர், பாறையான சீமோன் பேதுரு, சாத்தான் என அழைக்கப்பட்டு, ஆண்டவருக்கு முன்னால் நிற்காமல், சீடர்க்குரிய பின் இடத்திற்கு செல்லும்படி கண்டிக்கப்படுகிறார். ஆண்டவருடைய வார்த்தைகள் மிக கடுமையாக இருக்கின்றன - ὕπαγε ὀπίσω μου σατανᾶ· ஹுபாகே ஒபிசோ மூ சாடானா- பின்னால் போ சாத்தானே. இந்த கடுமையான வார்த்தைக்கான காரணத்தை ஆண்டவர் சொல்கிறார்.
அ. நீ எனக்கு தடையாக இருக்கிறாய் - σκάνδαλον ⸂εἶ ἐμοῦ - ஸ்கான்தாலொன் எய் எமூ- எனக்கு இடறலாய் இருக்கிறாய்.
ஆ. உன் சிந்தனை கடவுளுடையது அல்ல- οὐ φρονεῖς τὰ τοῦ θεοῦ ஊ பிரொநெய்ஸ் டா டூ தியூ- சிந்திப்பது கடவுளுடையது அல்ல.
இ. மாறாக அது மனிதருடையது ἀλλὰ τὰ τῶν ἀνθρώπων அல்லா டா டோன் அந்ரோபோன்- மாறாக மனிதருடையது.
இந்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை, இதனால் அவை கடுமையான வார்த்தைகளை உண்டுபன்ணுகின்றன.
வ.24: சீடத்துவத்தின் எதிர்பார்ப்பு சொல்லப்படுகிறது. இயேசு இந்த வரியை பேதுருவிற்கு மட்டும் சொல்வதாக மத்தேயு காட்டவில்லை மாறாக, அனைத்து சீடர்க்கும் சொல்கிறார் (τοῖς μαθηταῖς டொய்ஸ் மாதேடாய்ஸ் - சீடர்களுக்கு). இயேசுவை பின்பற்ற எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அவர் முதலில் தன்னலத்தை துறக்க வேண்டும் (ἀπαρνησάσθω ἑαυτὸν அபார்நேசாஸ்தோ எஅவுடொன்- தன் சுயத்தை மறுதலித்தல்), தம் சிலுவையை தாமே தூக்க வேண்டும் (ἀράτω τὸν σταυρὸν அராடோ டொன் ஸ்டாவுரொன்- சிலுவையை தூக்கட்டும்), பின்னர் பின்பற்ற வேண்டும்.
தன்னலம் துறக்காமல், சிலுவையை தூக்காமல், இயேசுவை பின்பற்ற முடியாது என்ற ஆழமான கருத்துக்கள் இந்த வரியில் அடங்கியிருக்கிறன. இந்த வரியும் ஆரம்ப கால திருச்சபையின் துன்பம் மற்றும் காட்டிக்கொடுப்பு போன்ற, கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன. இந்த வரி இன்றும் நமக்கு பொருந்துபவை. சிலுவை இங்கே அடையாள உருவகமாக பாவிக்கப்படுகிறது என்பதை இந்த சுழலியல் காட்டுகின்றது (σταυρός ஸ்டஉரொஸ் - சிலுவை, மரம், துன்பம், பாடுகள், சோதனை).
வ.25: உயிரை காத்துக்கொள்ளலும், வாழ்வை அடைதலும் என்ன என்பது இந்த வரியில் காட்டப்படுகின்றன. இந்த வரி மத்தேயு நற்செய்தியின் வாசகர் பின்புலத்தில் வாசிக்கப்பட்டால்
இன்னும் ஆழமாக புரியக்கூடியதாக இருக்கும். ஆரம்ப கால திருச்சபையில் பலர் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள கிறிஸ்துவை மறுதலிக்க ஆயத்தமாக இருந்தார்கள். இந்த மறுதலிப்பு உண்மையில் உயிரைக் காக்காது, மாறாக மறுதலிப்பவர்கள் சந்தேக நோக்கோடு பார்க்கப்படுவார்கள், அல்லது ஒருநாள் அவர்களும் நிச்சயமாக இறந்து போவர்கள். ஆனால் ஆண்டவர் பொருட்டு துன்பங்களை தாங்குகிறவர்கள் இறந்தாலும், கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து வாழ்வார்கள் என்ற அர்தத்தைக் கொடுக்கிறது.
வாழ்வார்கள் என்பதற்கு, அவர்கள் வாழ்வை கண்டடைவார்கள் என்றே கிரேக்க மூல மொழியல் காண்படுகிறது (τὴν ψυχὴν εὑρήσει αὐτήν டேன் ப்புகேன் ஹெவுரேசெய் அவுடேன்).
வ.26: இந்த வரி மத்தேயு நற்செய்தியில் உள்ள மிக முக்கியமான வரிகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. பல புனிதர்கள் இந்த வரியை தங்களுடைய தார்மீக மந்திரமான பாவித்திருக்கிறார்கள். இயேசு சபை நிறுவுனர் தூய லொயேலா இஞ்ஞாசியார் இந்த வரியை தூய பிரான்சிஸ்கு சவேரியாருக்கு சொல்லிக் காட்டினார் என்று திருச்சபையின் ஓரு வரலாறு காட்டுகின்றது.
உலகத்தை ஆட்கொள்ள அல்லது ஆதாயமாக்கிக் கொள்ள பல அரசுகள் முயன்றன. மத்தேயு நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் இந்த போட்டியில் முதல் இடத்தில் இருந்தது உரோமைய பேரரசு. இவர்கள் முழு உலகத்தையும் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் செயற்பட்டார்கள். மனிதர் முழு உலகத்தையும் பிடித்துவிட முடியுமா? முடியாது, ஆனால் அந்த ஆசையை கொண்டிருக்க முடியும். முழு உலகத்தையும் பிடித்தாலும், அவர் ஆன்மாவை இழந்தால் அதனால் என்ன பயன் என்பது மத்தேயுவின் கேள்வி. மத்தேயு கிரேக்க கதைகளை நன்கு கேள்வி பட்டிருப்பார். பேரரசன் அலெக்சான்டருடைய முடிவும் இப்படித்தான் இருந்தது என்று கிரேக்க வரலாற்றின் சில விளக்கவுரைகள் சொல்கின்றன. அதனையும் மத்தேயு நன்கு அறிந்திருப்பார் போல.
வாழ்வு என்று இங்கு சொல்லப்படுவது (ψυχή ப்புயுகேன்) சாதாரண வாழ்வையும் தாண்டிய இயேசு போதிக்கின்ற நிலைவாழ்வாக கருதப்படவேண்டும். இந்த நிலைவாழ்விற்கு இந்த முழு உலகமும் போதாது என்பதுதான் இயேசுவின் செய்தி.
வ.27: இறுதிக் கால நிகழ்வுகளை விவரிப்பதில் மத்தேயு வல்லவர். இந்த வரியிலும் அந்த நிகழ்வை விவரிக்கவே முயல்கிறார். இயேசு தன்னை மானிட மகன் என்கிறார் (ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ஹொ ஹுய்யோஸ் டூ அந்த்ரோபூ). இந்த மானிட மகன் தன் தந்தையின் மாட்சியோடு, அவருடைய வானதூதர்களின் படையோடு வரவிருப்பதாகவும் சொல்கிறார் (μετὰ τῶν ἀγγέλων மெடா டோன் அங்கெலோன்- வானதூதர்களோடு). அந்த வருகை ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்விற்கேற்ப கைமாறை தருவிக்கும் என்றும் சொல்கிறார்.
இந்த இடத்தில் இயேசு தன்னை ஆண்டவரின் மெசியா மற்றும் அவருடை நீதிபதி என்பது போலக் காட்டுகிறார். மானிடமகன் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் பல அர்த்தங்களில் வருகிறது. மத்தேயுவிற்கு இந்த சொல் கடவுளின் மகன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. தானியேல் புத்தகத்தில் வரும் மானிடமகன் என்ற அர்த்தத்தையும் இங்கே நினைவில் கொள்ளலாம் (காண்க தானியேல் 7,13).
ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலைகளுக்கு ஏற்றபடி சன்மானம் வழங்கப்படும் என்ற மத்தேயுவின் வரி முதல் ஏற்பாட்டின் சில வரிகளை நினைவுபடுத்துகின்றன (ஒப்பிடுக தி.பா 28,4: 62,12: நீதிமொழிகள் 24,12).
வ.28: 'நான் உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்' என்ற வாக்கு ஆண்டவருடைய போதனையின் உறுதியையும், அவர் அதிகாரத்தையும் குறிக்கின்றன என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது (Ἀμὴν λέγω ὑμῖν ஆமென் லெகோ ஹுமின்). சில மொழிபெயர்ப்புக்கள் இந்த வரியை வரிக்கு வரியாகவும் மொழிபெயர்க்கிறார்கள். உம். 'ஆமென் நான் உங்களுக்கு சொல்கிறேன்'
ஆண்டவர் தான் வருவதற்கு முன் சிலர் இறக்க மாட்டார்கள் என்கிறார். ஆண்டவர் இந்த வார்த்தைகளை சீடர்களுக்குத்தான் சொல்கிறார். இந்த வார்த்தையின் காரணமாக, சில திருத்தூதர்கள் ஆண்டவருடைய வருகைக்கு முன் சாகமாட்டார்கள் என்ற வாதமும் நிலவியது. மத்தேயு இந்த வரிமூலம் எதை சொல்ல விளைகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆய்வாளர்கள் இதற்கு பல வாய்ப்புக்களை முன்வைக்கிறார்க்ள. அவை:
அ. ஆண்டவருடைய உருமாற்றமாக இருக்கலாம்,
ஆ. ஆண்டவருடைய மரணம் மற்றும் உயிர்ப்பாக இருக்கலாம்,
இ. தூய ஆவியின் வருகையாக இருக்கலாம்,
ஈ. திருச்சபையில் ஆண்டவரின் பிரசன்னமாக இருக்கலாம்,
உ. எருசலேம் தேவாலயத்தின் அழிவாக இருக்கலாம்,
ஊ. இயேசுவின் இரண்டாம் வருகையும், இறையரசின் ஏற்படுத்தலுமாக இருக்கலாம்.
மத்தேயு இந்த வரி மூலம் ஆண்டவருடைய திருவுரு மாற்றத்தைத்தான் குறிக்கிறார் என்ற வாதமே பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அனைத்தும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறையாட்சியைக் குறிக்க βασιλεία (பசிலெய்யா) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது மனித அரசுகளையும் குறிக்கும் சொல்லாகவே முதலில் இருந்திருக்கிறது.
துன்பம் என்பது இயேசு தன் சீடர்களுக்கு வலிந்து தருகிறதல்ல,
துன்பத்திற்கான காரணம் உலகில் ஏராளாம்.
இயேசுவை பின்பற்றுவோருக்கு துன்பம் வராது என்ற மாயையையும்
இயேசு தரவில்லை.
துன்பம் கடந்து போகும், இயேசுவோடு இருந்தால்
என்பதே ஆண்டவரின் செய்தி.
போராட்டம் இல்லாமல் சுதந்திரம் இல்லை,
துன்பம் இல்லாமல் வெற்றியில்லை,
சிலுவையில்லாமல் நிலைவாழ்வில்லை.