வெள்ளி, 9 டிசம்பர், 2022

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (முதலாம் ஆண்டு அ)  Third Sunday of Advent 11.12.2022



திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (முதலாம் ஆண்டு

Third Sunday of Advent

11.12.2022


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage, 

Chaddy, Velanai, Jaffna. 

Friday, 9 December 2022



முதல் வாசகம்: எசாயா 35,1-6.8.10

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 146

இரண்டாம் வாசகம்: யாக்கோபு 5,7-10

நற்செய்தி: மத்தேயு 11,2-11


முதல் வாசகம்: எசாயா 35,1-6.8.10

தூய வழி

1பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். 2அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கார்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். 3தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். 4உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, 'திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.' 5அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். 6அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். 7கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். 8அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது 'தூய வழி' என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். 9அங்கே சிங்கம் இராது அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். 10ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.


எசாயா புத்தகத்தின் 32 தொடக்கம் 35 வது அதிகாரங்கள் மீட்பையும் அதற்கு முன் வரும் இருள் பற்றிய நிகழ்வுகளை விவரிக்கின்றன. எசாயாவின் 35ம் அதிகாரம் 'தூயவழி' என்று தமிழ் விவிலிய மொழிபெயர்பாளர்களால் தலைப்பிடப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத தன்மை, கடவுளால் கைவிடப்பட்ட உணர்வு, அரசனின் தூரநோக்கற்ற அரசியல், அரசின் பலவீனம், அசிரியாவின் அச்சுறுத்தல் மற்றும் வட அரசான இஸ்ராயேலின் அழிவு போன்றவை எசாயாவின் வாசகர்களுக்கு பலவிதமான கேள்விகளை எழுப்பியிருக்கும். அதற்கான விடையைப் போல இந்த அதிகாரம் அமைகிறது. தமிழ் பக்திப்பாடல்களிலும் மற்றய மொழி பக்திப்பாடல்களிலும் இந்த அதிகாரம் பல தாக்கங்களை செலுத்தியிருக்கிறது. அத்தோடு எபிரேயத்தில் இந்த அதிகாரம் திருப்பிக்கூறும் கவி நடையில் அழகாக கவிநயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் விவிலியமும் எபிரேய கவி நடைக்கு அநீதி இழைக்காமல் தமிழிலும் அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது


.1: எபிரேய வாசகர்கள் இந்த முதலாவது வசனத்தில் சில எழுத்து சிக்கல்களை அவதானிப்பர். எபிரேயத்தில் வியங்கோள் வாக்கியத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசனம் தமிழில் சாதாரண வினையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசீரியர் பாலைநிலத்தையும் (מִדְבָּר மிட்பார்), உலர் தரையையும் (עֲרָבָה அரபாஹ்) மகிழவும், அக்களிக்கவும் கேட்கிறார். இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் ஆழமான சில உண்மைகளை மையப்படுத்துகிறார், அதாவது பலம் தர முடியாது என்று எபிரேயர்கள் எண்ணிய பாலைநிலங்களும், உலர் தரையும் ஆண்டவரின் தலையீட்டால் சோலையாக மாறுகின்றன

חֲבַצֶּלֶת ஹவாட்செலெட் என்பது லில்லி மலர் என மொழிபெயர்கப்பட்டுள்ளது. இது ஒருவகை புல்வெளி லில்லி மலர் இது இவர்களுக்கு நன்கு தெரிந்த மலராக இருந்திருக்க வேண்டும்


.2: இந்த வசனத்தில் கடவுளின் மாட்சிக்கும், பெருமைக்கும் கானான் தேசத்தின் மிக முக்கியமான மூன்று நில அமைவுகள்:

. லெபனான் (לְבָנוֹן): வடக்கு இஸ்ராயேல் மலைத்தொடரில் அமைந்துள்ள மலைநாடு. இதன் பச்சையான நிலங்களும், உயர்ந்த மலைகளும் அதன் பனி உச்சிகளும், அத்தோடு கேதுரு மரங்களும் இஸ்ராயேலருக்கு என்றும் வளமையைக் காட்டின. இதனை ஆசிரியர் கடவுளின் மாட்சியாகக் காண்கிறார். லெபனான் இன்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் வளமானதும் செளிப்பானதுமான நாடாக கருதப்படுகிறது


. கார்மேல் (כַּרְמֶל): இஸ்ராயேலின் மேற்கு கரையோரத்தில் காணப்பட்ட கார்மேல் மலையுச்சி 

இஸ்ராயேலின் வரலாற்றில் மிக முக்கியமான இடம். இதனுடைய உயரத்தின் காரணமாக (1500 அடி) இது எப்போதுமே இதமான காலநிலையைக் கொண்டிருக்கும். எலியா இந்த மலையில்தான் பால் கடவுளின் இறைவாக்கினர்களுடன் போராட்டத்தில் இறங்கினார் (காண்க 1அரச 18). கார்மேல் சபை துறவிகள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்த மலையில் மடங்களை அமைத்து மரியாவை கார்மேல் மாதா என்று தங்களது சபையின் பாதுகாவலியாக கொண்டாடினர். இதனாலும் கிறிஸ்தவ உலகில் இந்த இடம் முக்கியத்துவம் பெறுகிறது. எசாயா ஆசிரியர் கார்மேலின் மேன்மையை மெசியாவிற்கு ஒப்பிடுகிறார்


. சாரோன் (שָׁרוֹן): ஷாரோன் என்றால் சமதரை அல்லது புல்வெளி என்று பொருள்படும். உலர்ந்த பாலஸ்தீன நாட்டில் சாரோனின் சமதரையும் அதன் புல்வெளிகளும் நிச்சயமாக கடவுளை நினைவூட்டும். தாவீதின் மந்தைகள் இந்த புல்வெளியில் மேய்ந்ததாக விவிலியம் காட்டுகிறது (1குறி.27,29) சாரோனின் ரோசா என்பது (חֲבַצֶּלֶת הַשָּׁרוֹן havadzelet haššrôn) இதன் குறைவுபடாத அழகைக் குறிக்கிறது. பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் இந்த சொல்லை கிறிஸ்துவிற்கும், மரியாவிற்கும் பயன்படுத்தினர்இதுவும் எசாயாவினால் கடவுளின் மாட்சிக்கு அடையாளமாகிறது


.3: விவிலியத்தில் உள்ள அழகான வரிகளில் இதுவும் ஒன்று. தந்தை பெர்க்மான்ஸ் இந்த வரிகளுக்கு பாடலாக உயிர் கொடுத்தது மறக்கமுடியாது. தளர்ந்த கைகளும் (יָדַיִם רָפ֑וֹת yādîm rāfôt ), தள்ளாடும் முளங்கால்களும் (בִרְכַּיִם כֹּשְׁלוֹת virkkayim kôšlôt) பாலவனத்தில் தூர பயணம் செய்ய இடைஞ்சலாக இருப்பவை, அவை உறுதிப்படுத்தப்படவேண்டும்


.4: தொடர் தோல்விகளாலும், தொடர் ஏமாற்றங்களினாலும், சுமக்கமுடியாத கப்பங்களினாலும் துவன்டுபோயிருந்த அரசனுக்கும், மக்களுக்கும் உடனடியான நம்பிக்கை வார்த்தைகள் தேவைப்பட்டது. உள்ளத்தில் உறுதியற்றவர்கள் என்பது எபிரேய விவிலியத்தில் 'இதயத்தில் சங்கடமாக இருப்பவர்கள்' (לְנִמְהֲרֵי־לֵב limeharê-lev) என்று வருகிறது. இது அக்காலத்தில் இதயம்தான் அதிகமான உணர்வுகளின் இருப்பிடமாக பார்க்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. கடவுள் பழிவாங்குபவராக வந்து அநீதிக்காக பழிவாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணுவது சாதாரணம், இதனால்தான் முதல் ஏற்பாட்டில் கடவுள் பழிவாங்கும் கடவுள் என்றும் அறியப்பட்டார்

(אֱלֹֽהֵיכֶם נָקָם ’elôhêkem nāqām). பழிவாங்குதல் தண்டனை அல்லது கடவுளின் பயங்கர முகம் என்பதைவிட அதனை கடவுளின் நீதியின் முகம் என்றே முதல் ஏற்பாடு காட்ட முயல்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். இந்த நீதி பாதிக்கப்பட்டவர்களை மீட்கிறது என்பதுதான் இதிலுள்ள இறையியல். இந்த வரியிலும் இறுதியில் அந்த சிந்தனை (மீட்பு) நினைவூட்டப்படுகிறது


வவ.5-7: இந்த வரிகள் ஆண்டவரின் வருகையின் நாட்களில் நடப்பவையை விவிரிக்கின்றன


. பார்வையற்றோரின் கண்கள் திறக்கப்படுதல்: கண் தெரியாதவர்கள் தண்டனை

பெற்றவர்களாகவே முதல் ஏற்பாட்டு காலத்தில் பார்க்கப்பட்டார்கள். பார்வைபெறுதல் என்பது இவர்கள் கடவுளால் சாபத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது


. காது கேளாதவர்களின் காது கேட்கும்: இங்கே இவர்கள் கடவுளின் மீட்புச் செய்தியை கேட்பார்கள் என்ற சிந்தனை மையப்படுத்தப்படுகிறது. (இன்றைய ஈழத்து நிலையியலில், சில வேளைகளில் பார்வையற்றும் செவிப்புலனற்றும் மாற்றுத்திறனாளிகளாய் இருப்பதுதான், மாற்றக்கூடிய திறனை தருவது போல் உள்ளது அல்லது பாவம் இல்லா வாழ்வை தருவது போல் உள்ளது). 


. கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளலும், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுதலும் கடவுளின் அதிசயங்களைக் குறிக்கின்றன. இவர்கள் இதனைதான் எதிர்பார்த்தார்கள் அவற்றை அக்கால வைத்தியர்களால் கொடுக்க முடியாது ஆக கடவுளால்தான் கொடுக்க முடியும். விவிலிய எபிரேயம் பழைய மொழியாக தொடர்ந்து இருப்பதனால் முடம் (פִּסֵּחַ phisseh), ஊமை (אִלֵּם ’illem) என்ற சொற்களை பயன்படுத்துகிறது, ஆனால் அழகு தமிழ் இவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சொற்களை பயன்படுத்துவது அழகான ஒரு முயற்சி. நிச்சயமாக எசாயாவும் கடவுளும் இதனைத்தான் விரும்புவார்கள்

பாலை நிலத்தில் நீரூற்றும், வறண்ட நிலத்தில் நீரூற்றும் அதிசயங்கள். அவற்றை சாதாரனாமக கானானிய பால் நிலங்களில் காணமுடியாது. அதனையும் கடவுளால்தான் செய்ய முடியும். இதனைத்தான் கடவுள் மேசே வாயிலாக சீனாய் பாலைநிலத்தில் செய்தார். இது கடவுள் மக்களை மீட்கிறார் என்பதற்கான ஒரு தொட்டுணரக்கூடிய அடையாளம். இது ஆண்டவரின் வருகையில் இடம்பெறும் என்பது எசாயாவின் நம்பிக்ககை


. அனல் போன்ற மணல் தரை, தடாகமாவதும்: தரை, நீர்தடாகம் ஆவதும்: நரிகளின் பழைய வலைகள் புதிய புற்தரைகளாக மாறுவதும் இன்னோர் அடையாளம். நீர் மற்றும் நீரூற்று கடவுளின் அடையாளம் அத்தோடு குள்ள நரிகள் மந்தைகளை தாக்குவதால் அவை ஒரு கெட்ட விலங்காக அக்கால மக்களால் பார்க்கப்பட்டது. புற்தரைகளில் நரிகள் தங்காது மாறாக மான், முயல் போன்ற தீங்கில்லா விலங்குகள் அங்கே குடிகொள்ளும். இதனால்தான் இதனை விரும்புகிறார் ஆசிரியர்


வவ.8-9: இன்றைய நாட்கள் போலவே அன்றும் பலரும் விரும்பியது, பாதுகாப்பான பெருவீதிகளையும் விரைவு வீதிகளையுமே (מַסְלוּל וָדֶרֶךְ maselôl wāderek). பாதைகளில் குன்றும் குழிகளும், அனல்கக்கும் வெப்பமும், கொள்ளைகாரர்களின் தாக்குதலும், கொடிய விலங்குகளின் நடமாட்டமும் அந்நாட்களில் சாதாரண மக்களின் தூர பயணங்களை பயங்கரமாக்கியது. இப்படியாக மக்களின் அனுபவம் இருக்கிறபோது எசாயா 'தூய வழி' (דֶרֶךְ הַקֹּדֶשׁ֙ derek haqôdeš) என்ற ஒரு முக்கியமான செய்தியைக் கொடுக்கிறார்

  எட்டாவது வழியின் இரண்டாம் பகுதி, இந்த வழியில் தீட்டானவர்களும் பேதையரும் நடவார் என்கிறது. இதனை ஒரு அடையாளமாகவே பார்க்க வேண்டும். எசாயா இங்கு உடல்

நலமில்லாதவர்களைக் குறிக்கவில்லை மாறாக நேரிய உள்ளமில்லாதவர்களையே குறிக்கிறார். ஆக ஆண்டவரின் தூய வழி, நேரிய மக்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்கிறார். (இக்காலத்தில் பெரு வீதிகளில் அனுமதிச் சீட்டு கொடுப்பதுபோல்). ஒன்பதாவது வரியில், கொடிய விலங்குகளின் நடமாட்டம் இல்லாமையால் அங்கே கடவுளால் மீட்க்கப்பட்டவர்கள் மட்டுமே நடமாடுவார்கள் என்கிறார் எசாயா


.10: அடிமைகளாக கொண்டு செல்லப்படுவதும், அடிமைவாழ்வும் அக்கால சமுதாயத்தின் பாரமான முகங்கள். (இன்றும் வறுமைகாரணமாகவும், முற்றும் பிழையான சமய நம்பிக்கைகளாலும் மனித வர்த்தகம் மனிதர்களை வியாபாரப்பொருளாக்குகிறது. மனித அறிவினதும், கலாச்சாரங்களினதும் உண்மையான தோல்வி இது). எசாயாவின் கருத்துப்படி மெசியாவின் நாளில் விடுவிக்கப்பட்டவர்கள் பாடிக்கொண்டு சீயோனுக்கு திரும்புவர், இதனால் அவர்கள் முகம் குறையாத மகிழ்வால் மலரும்இதனைத்தான் எசாயாவின் காலத்து யூதேயாவினர் விரும்பினர் அத்தோடு அவர் இறைவாக்கு இன்றும் அனைவருக்கும் பொருந்துகின்றது. துன்பமும் துயரமும் பறந்தோடும் என்பதுதான் இந்த அதிகாரத்தின் மகுடச் செய்தி.  


திருப்பாடல் 146

மீட்பராம் கடவுள் போற்றி!

1அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு

2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்

3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம். 4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்

5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்

6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே

7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்

8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்

9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்

10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!


திருப்பாடல்கள் 146-150 வரையானவை அல்லேலூயா (கடவுள் புகழ்) பாடல்கள் என்ற இலகுவாக அறியப்படக்கூடியவை. இந்த ஐந்து பாடல்களில் கடவுளின் புகழ்ச்சி படிப்படியாக வளர்வதைக் காணலாம். அவை: 146- தனிநபர் புகழ்ச்சி, 147- குழுப்புகழ்ச்சி, 148- பிரபஞ்ச்த்தின் புகழ்ச்சி, 149- இஸ்ராயேலின் நன்மைத்தனத்திற்கான புகழ்ச்சி மற்றும் 150- அனைவரினதும் 

இறுதிவரையான புகழ்ச்சி. இந்த புகழ்ச்சித் தொடரில் இந்தப் பாடல் தனிமனித புகழ்சிப்பாடலகா ஒருவரின் அகமும் புறமும் கடவுளை புகழவேண்டும் என்பதனைக் காட்டுகிறது. இந்த பாடலும் எபிரேய கவிநடையான திருப்பிக்கூறுதல் முறையில் அமைந்துள்ளது


.1: ஆசிரியர் தன்னுடைய சுயத்திற்கு கட்டளையிடுகிறார். மற்றவருக்கு கடவுளை புகழ கட்டயிடுவதற்கு முன் ஒருவர் தனக்கு தானே கட்டளையிடுவது முக்கியமானது போல் உள்ளது 

இந்த கட்டளை. இந்த திருப்பாடலில் அல்லேலூயா என்ற பிரசித்தமான சொல் பாவிக்கப்பட்டுள்ளதுஅல்லேலூயா (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்) என்றால் நீங்கள் கடவுளை புகழுங்கள் என்று பொருள்


.2: ஒருவர் எவ்வளவு காலம் கடவுளை புகழ வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். ஒருவரின் உயிர் மற்றும் வாழ்நாள் காலம் வரை அவர் கடவுளை புகழவேண்டும் என்பதைக் காட்டுகிறார்


.3: ஆட்சித் தலைவர்களை கடவுளாக்க வேண்டாம் என்பது பல முதல் ஏற்பாட்டு ஆசிரியர்களின் வாதம். பல அரசர்கள் தங்களை கடவுள்களாக்க முயன்றனர், இஸ்ராயேலின் சில அரசர்களும் 

இதனையே விரும்பினர். அன்றுமட்டுமல்ல இன்றும் பல அரசியல் தலைவர்கள் தாங்கள்தான் கடவுள்கள் என நினைக்கின்றனர், அல்லது அவர்களின் மனித அடிமைகள் அவர்களை கடவுளாக்க முயல்கின்றனர். இன்று அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து இந்த ஓட்டத்தில் நடிகர்களும்இணைந்துள்ளார்கள். இந்த திருப்பாடல் ஆசிரியரின் கருத்துப்படி இவர்கள் மனிதர்களின் புதல்வர்களே இதனால் இவர்களால் யாரையும் மீட்க முடியாது அது கடவுளால் மட்டுமே முடியும். ஆட்சியாளர்களுக்கு உயர்குடி மக்கள் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (נְדִיבִים நெதிவிம்). ஆக நம்பகூடியவர் கடவுள் ஒருவரே. ஆசிரியர் நல்லதோர் மெய்யியல்வாதி.


.4: இந்த வசனம் மீண்டும் மனித தலைவர்களின் நிலையாமையைக் காட்டுகிறது. அவர்களும் சாதாரணமானவாகளாக இறுதி மூச்சில் அழிகிறார்கள் அவர்களோடு அவர்களின் திட்டங்களும் அழிகின்றன


.5: கடவுளின் முக்கியமான பெயர் இங்கே நினைவுகூறப்படுகிறது. 'யாக்கோபின் கடவுள்

(אֵל יַעֲקֹב ’el ya‘qôv), என்பது யாக்கோபிற்க்கும் கடவுளுக்கும் இடையிலான உறவைக்காட்டுகிறது. யாக்கோபின் கடவுள்தான் உண்மையான கடவுளாகிய ஆண்டவர் என்ற இறையியலும் இங்கே ஆழமாக முன்வைக்கப்படுகிறது. அத்தோடு இந்த கடவுளை தம் துணையாளராக கொண்டிருப்போர் பேறு பெற்றோர் என்கிறார் ஆசிரியர். அதாவது இந்த கடவுளின் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்பது இவர் எச்சரிக்கை


.6: இந்த யாக்கோபின் கடவுளின் வியத்தகு செயல்கள் மனித தலைவர்களுக்கு எதிராக காட்டப்படுகின்றன. விண் (שָׁמַיִם ஷமாயிம்), மண் (אָרֶץ அரெட்ஸ்), கடல் (יָּ֥ם யாம்), மற்றும் அவற்றிலுள்ளவை அன்றுமட்டுமல்ல இன்றும் நமக்கு ஆச்சரியாமானவை. மனிதர்கள் அவற்றை கண்டுபிடிக்கலாம் ஆனால் உருவாக்க முடியாது. உருவாக்கினாலும் அவை நிலைக்காது. அத்தோடு இந்த அதிசயங்களை உருவாக்கியவர், என்றுமே உண்மையானவராக நிலைக்கிறார் எனவே அவரில்தான் இந்த பாடலை வாசிக்கிறவர் (பாடுகிறவர்) நம்பிக்கை வைக்கவேண்டும் என்பது ஆசிரியரின் வேண்டுகோள்


. 7-9: எசாயா, ஆமோஸ் போல இந்த திருப்பாடல் ஆசிரியரும் சமூக நீதியின் இறைவாக்கினராக உருவெடுப்பதை இந்த வரிகளில் காணலாம்


. ஒடுக்கப்பட்டோருக்கு நீதி (מִשְׁפָּט  לָעֲשׁוּקִים)

. பசித்தோருக்கு உணவு (לֶחֶם לָרְעֵבִים)

. சிறைப்பட்டோருக்கு விடுதலை (מַתִּ֥יר אֲסוּרִֽים)

. பார்வையற்றோருக்கு பார்வை (פֹּקֵחַ עִוְרִים)

. தாழ்த்தப்பட்டோருக்கு உயர்ச்சி (זֹקֵף כְּפוּפִים)

. நீதிமான்களுக்கு அன்பு (אֹהֵב צַדִּיקִים)

. அயல் நாட்டினர்க்கு பாதுகாப்பு (שֹׁמֵר אֶת־גֵּרִים)

. அனாதையருக்கும் கைம்பெண்களுக்கும் பாதுகாப்பு (יָתוֹם וְאַלְמָנָה יְעוֹדֵד)

. பொல்லாருக்கு கவிழ்ப்பு (דֶרֶךְ רְשָׁעִים יְעוֵּֽת)


இந்த திருப்பாடல் ஆசிரியர் நல்லதோர் அரசியல் வாதி. மேற்குறிப்பிடப்பட்டவை ஒரு நல்ல அரசன் செய்யவேண்டிய நீதியான ஆட்சிமுறை. இவை பரலோகத்தில் கிடைக்கும் கண்ணுக்கு தெரியாத ஆசீர்வாதங்கள் அல்ல மாறாக இந்த உலகில் இப்போதே கிடைக்கவேண்டிய பாதுகாப்புக்களும், நலன்களுமாகும். இதில் உள்ள ஒவ்வொரு அலகும் மக்களின் சாதாரண வாழ்வின் மிக முக்கியமான தேவைகள், அவைதான் இவ்வுலக வாழ்வை நிம்மதியான வாழ்வாக மாற்றுகின்றன. உலக அரசர்கள் இவற்றை செய்தாலும் அவர்கள் ஏதோ இடத்தில் தவறுவார்கள் ஆனால் ஆசிரியர் யாக்கோபின் கடவுளைத்தான் உண்மையான அரசராக பாhக்கிறார் அவரே என்றும் வழுவாதவர் என்பது இவர் கருத்து. ஆசிரியரின் இந்த வாழ்த்துக்கள், இவை இவ்வுலகில் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது


.10: இந்த வசனம் மிக முக்கியமானது. துன்பமான வேளைகளில் இஸ்ராயேல் மக்களின் விசுவாசம் ஆட்டம் கண்டது. அவர்களுடைய கேள்விகளில் மிக முக்கியமானது, யார் இப்போது சீயோனில் ஆட்சி செய்வது? இஸ்ராயேலின் கடவுளா அல்லது வேற்றுத் தெய்வங்களா?. இந்த கேள்விகளுக்கு ஆசிரியரின் பதில் 

 'சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!' (יִמְלֹךְ יְהוָ֨ה  לְעוֹלָ֗ם אֱלֹהַיִךְ צִ֭יּוֹן לְדֹר וָדֹ֗ר  הַֽלְלוּ־יָהּ)

 இந்த வரி இவர்களுக்கு நம்பிக்கையும் மனநிம்மதியையும் கொடுத்திருக்கும். (ஈழத்திலும் கடவுளின் ஆட்சி வந்தால் நலமாயிருக்கும்). 


யாக்கோபு 5,7-10

பொறுமையும் வேண்டுதலும்

7ஆகவே, சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். 8நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது. 9சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.10அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.


முதல் இரண்டு பகுதிகளைப்போல யாக்கோபின் இந்த பகுதியின் கடவுளுடைய நாளை விசேடமாக இயேசுவின் இரண்டாவது வருகையைப் பற்றி சில விசேட கருத்துக்களை தாங்கி வருகிறது. யாக்கோபுவின் திருமுகம் கத்தோலிக்க அல்லது பொதுத் திருமுகங்களில் ஒன்று என்று அறியப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையில் இந்த திருமுகத்திற்கு விசேட இடமுன்டு இதன் காரணமாகத்தானோ என்னவோ இதனை மாட்டின் லூத்தர் 'வைக்கோலைப் போன்ற கடிதம்;' என்றார். இருப்பினும் இதனை இன்று பல கிறிஸ்தவ சபையினர் ஏற்றுக்கொள்கின்றனர். நம்முடைய பாரம்பரியப்படி அவர்கள் ஏற்கிறார்களோ இல்லையோ, அது நம் பிரச்சனையல்ல மாறாக இது தொன்றுதொட்டு நமது விவிலியத்தில் இருந்திருக்கிறது. முக்கியமான நடைமுறை வாழ்வியல் சிக்கல்களை அழகாக இது படம்பிடிக்கிறது

ஆதிக் கிறீஸ்தவர்கள் பொருளாதார துன்பத்திற்கு தள்ளப்பட்ட போது இந்த மடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்து. இது கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதா அல்லது அன்றைய உலகத்தோடு சேர்ந்து இயேசுவை மறுதலிப்பதா என்ற தெரிவைக் காட்டுகிறது. சிதறிய பன்னிரண்டு கோத்திரங்களுக்கு எழுதப்பட்டதாக தொடங்கும் இத்திருமுகம் (δώδεκα φυλαῖς ταῖς ἐν τῇ διασπορᾷ தொதேகா பூலாயிஸ் டாயிஸ் என் டே தியாஸ்போரா) யூத கிறிஸ்தவர்களையும் மற்றனைவரையும் உள் வாங்குகிறது. புதிய ஏற்பாட்டின் ஞானநூல் என்றும் சிலர் இதனை விவிரிக்கின்றனர். இதன் காலத்தையும் ஆசிரியத்துவத்தையும் கணிப்பது கடினம். காலமாக பாலர் கி.பி. 50-100 ஐயும், ஆசிரியராக இயேசுசுவின் சகோதரரும், எருசலேமின் முதல் ஆயருமான யாக்கோபையும் பாரம்பரியம் காட்டுகிறது. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை அதற்கு நேராகவும் எதிராகவும் பல சான்றுகள் உள்ளனஇந்த கடிதத்தின் முக்கியமான கூறுகளாக தெய்வீக ஞானத்தின் மகிமை, உலக ஞானத்தின் பலவீனம், சட்டம், விசுவாசம், வாழ்க்கை முறை, நாளாந்த வேலைகள், நிறைவான வாழ்வு, மற்றும் இறுதிக்கால நிகழ்வுகள் போன்றவைகள் பார்க்கப்படலாம்


.7: பொறுமை (μακροθυμία மக்ரொதூமியா) இறைவிழுமியங்களில் ஒன்று, இதனை வேதனைகள் கலாபனைகளில் மக்கள் இழப்பது வழமை. முக்கியமாக ஆரம்ப கால திருச்சபை தனது கலாபனைக் காலங்களில் மிகவுமே இழந்தது. எனவே யாக்கோபு கிறிஸ்தவர்கள் பொறுமையோடு இருக்கவேண்டும் எனப்பணிக்கிறார். இவர் பணக்கார கிறிஸ்தவர்களின் காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராகவே ஏழைக் கிறிஸ்தவர்களை பொறுமையோடு இருக்க கேட்கிறார் போல தோன்றுகிறது. யாக்கோபு பயிரிடுவோரை துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதாரணமாக தருகிறார் (γεωργός கெஓர்கோஸ்- உழவர்). முன்மாரியும் பின்மாரியும் என்று பருவ கால மழைவீழ்ச்சி பாலஸ்தீனாவில் வருவதில்லை மாறாக அங்கே இலையுதிர் கால மழைவீழ்ச்சியும் வசந்த கால மழைவீழ்ச்சியும்  (πρόϊμον καὶ ὄψιμον)இயற்க்கையாக நடப்பவை இதற்கிடையில் பலமாத வித்தியாசங்கள் உண்டு அதற்காக விவசாயிகள் பொறுமையோடு இருப்பது இங்கே நினைவுகூறப்படுகிறது


.8: இந்த விவசாயிகளைப்போல கிறிஸ்தவர்களும் பொறுமையோடு இருக்க கேட்கப்படுகிறார்கள். ஆண்டவரின் வருகை அண்மையில் உள்ளதால் அவர்கள் பொறுமையுள்ளவர்களாகவும், உள்ளத்தை திடப்படுத்துபவர்களாகவும் இருக்க கேட்கப்படுகிறார்கள். இருப்பினும் ஆண்டவரின் வருகை (ἡ παρουσία τοῦ κυρίου ஹே பரூசியா டூ கூரியூ) எப்போது என்று யாக்கோபு குறிப்பிடவில்லை. அது அவர்க்கு தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பும் இல்லைபோல் தெரிகிறது


.9: ஆரம்பகால திருச்சபை சந்தித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது, கிறிஸ்தவர்களுக்கு 

இடையிலான பரஸ்பர குற்றச்சாட்டுக்கள். சில வேளைகளில் கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவர்களை சிவில் நீதிமன்றங்களுக்கும் இழுத்துச் சென்றார்கள். ஆரம்ப கால கிறிஸ்தவ தலைவர்கள் இதனை ஒரு வெறுக்கத்தக்க காட்டிக்கொடுப்பாகவே கருதினார்கள். கிறிஸ்தவர்கள் நீதிமான்களாகவும், தங்கள் சிக்கல்களை தாங்களே தீர்த்துக்கொள்ளக்கூடிய முதிர்ச்சியுள்ளவர்களாகவும் எதிர்பார்க்கப்பட்டார்கள். (இன்று இந்த நிலைமை எள்ளளவும் கிடையாது, கிறிஸ்தவர்களின் சிக்கல்களை கிறிஸ்தவர்கள் இல்லாதவர்கள்தான் தீர்த்துவைக்கவேண்டிய வெறுமைதான் அதிகம்). பரஸ்பர குற்றச்சாட்டை வெறுக்கும் ஆசிரியர், நடுவர் வாயிலில் நிற்பதாக கூறுகிறார் (ὁ κριτὴς πρὸ τῶν θυρῶν ἕστηκεν. ஹொ கிறிடேஸ் புரோ டோன் தூரோன் எஸ்டேகென்) புதிய ஏற்பாட்டில் இந்த வாயில், நகர் வாயிலைக் குறிக்கும் அங்கேதான் நடுவர் இருக்கை இருந்தது. ஆனால் யாக்கோபு கூறுகின்ற வாயிலும் நடுவரும் இயேசுவையும் அவரின் இரண்டாம் வருகையையும் குறிக்கிறது. ஆண்டவரின் வருகை அருகில் உள்ளது என்பது புதிய ஏற்பாட்டு நூல்களில் அடிக்கடி வருகின்ற ஒரு அறிவுரை, காண்க (உரோ 13,12: ✽✽எபி 10,25: ✽✽✽1பேதுரு 4,7)

(12இரவு முடியப்போகிறது பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!)

(✽✽சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.)

(✽✽✽எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.)


.10: துன்பங்களை தாங்குவதில் ஆண்டவரின் இறைவாக்கினர்களை முன்மாதிரியாக கொள்ளக் கேட்கிறார் யாக்கோபு. யார் இந்த ஆண்டவரின் இறைவாக்கினர் என்பது இப்பகுதியில் விவரிக்கப்படவில்லை, அதிகமாக இது முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா ஆமோஸ், ஓசியா மற்றும் யோனா போன்றவர்களைக் குறிக்கலாம். இந்த இறைவாக்கினர்கள் பல்வேறு காலப்பகுதியில் இறைவாக்கிற்க்காக அரசர்களால் துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால் அவர்கள் பொறுமையோடு இருந்தார்கள். இவர்களைப்பற்றிய கதைகள் ஆரம்பகால திருச்சபையில் வழக்கிலிருந்தன

 ஆரம்ப கால திருச்சபையிலும் இறைவாக்கினர்கள் இருந்திருக்கிறார்கள் ஆனால் யாக்கோபு இவர்களை குறிப்பிடுவது போல இங்கே தெரியவில்லை. (காண்க தி.பணி 13,1)

(அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்


மத்தேயு 11,2-11

விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்

(லூக் 7:18 - 35)


2யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். 3அவர்கள் மூலமாக, 'வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?' என்று கேட்டார். 4அதற்கு இயேசு மறுமொழியாக, 'நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். 5பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்' என்றார். 7அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: 'நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? 8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். 9பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 10'இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று 

இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. 11மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்


மத்தேயுவின் முக்கியமான இறையியல் சிந்தனைகள்

(கடந்த வாரத் தொடர்ச்சி):


. இயேசுதான் மெசியா:

மத்தேயு யூத கிறிஸ்தவர்களை தன்னுடைய முதலாவது இலக்காக கொண்டிருந்தார் என நம்பப்படுகிறது. யூத இறைவாக்குகளும், யூத பாரம்பரியங்களும் முற்குறித்துக்காட்டிய மெசியா 

இயேசுதான் என்பதை மத்தேயு நற்செய்தின் தொடக்க முதல் இறுதிவரை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார். இதனை நோக்கியே அனைத்து இறைவாக்குகளும் நகர்கின்றன என்பதையும் மீண்டும் மீண்டும் மத்தேயு தெளிவு படுத்துவார் காண்க: (1,22: 2:15.17.23: 4,14: 8,17: 12,17: 13,35: 21,4: 27:9). இந்த இறைவாக்குகளின் நிறைவு மூலமாக மத்தேயு தன்னுடைய யூத வாசகர்களுக்கு 

இயேசுதான் வரவிருந்தவர் என்பதை நிரூபிக்க முயல்கிறார். மத்தேயுவின் இயேசுவும் தான் இறைவாக்குகளை நிறைவேற்றவந்தவர் என்பதை குறித்து காட்டுவது இந்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டும் (காண்க 5,17). இப்படியாக மத்தேயு இயேசுதான் முதல் ஏற்பாட்டின் வெளிபாடு என்றும் அந்த வெளிப்பாட்டின் நிறைவு என்றும் கூறுகிறார்


. இஸ்ராயேலும் திருச்சபையும்:

 மத்தேயு நற்செய்தி இராபினிக்க தர்கங்களை கிறிஸ்தவ முறையில் வாதிடுகின்ற புத்தம் என பலர் ஏற்றக்கொள்கின்றனர். முக்கியமாக இராபினிக்க மற்றும் யூத வார்த்தைகளான -ம் 'விண்ணரசு', தாவீதின் மகன், அத்தோடு பல அரமேயிக்க சொற்கள் இதனையே நினைவூட்டுகின்றன. மத்தேயு நற்செய்தியில் மட்டும்தான் இயேசுதான் முதலில் தொலைந்து போன இஸ்ராயேல் ஆடுகளுக்காக அனுப்பப்பட்டவர் என்பதை காட்டுகிறார் (10,6: 15,24), அத்தோடு யூத தலைவர்களினதும், மற்றும் யூத ஆசிரியர்களினதும் அதிகாரங்கள் இந்த நற்செய்தியில் கடினமாக ஆராயப்படுகின்றன

 அதேவேளை இந்த நற்செய்தி பல இடத்தில் யூத எதரிப்புக்கொள்கையை கடைப்பிடிக்கிறது என்றும் சிலர் அவதானிக்கின்றனர். யூத தலைவர்கள் வெளிவேடக்காரர்களாகவும் எச்சரிக்கப்பட்டு அவர்களின் விண்ணரசு வாய்ப்பு மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் இந்த நற்செய்தி உரைக்கிறது (8,11-12: 22,1-10). கடவுளுடைய தீர்ப்பு ஒருநாள் நிச்சயமாக இந்த மக்கள்மேல் விழும் என்றும் மத்தேயு எச்சரிக்கின்றார், இதன் அடையாளமாகத்தான் எருசலேம் தேவாலயம் கல்லின் மேல் கல்லில்லாதபடி இடிக்கப்படும் என்றும் இறைவாக்குறைகிறார். மத்தேயு நற்செய்தியில்தான், இயேசு தீர்ப்பிடப்பட்ட போது யூதர்கள் அந்த இரத்த பலியை தங்கள் மீதும் தங்கள் பிள்ளைகள் மீதும் ஏற்றுக்கொள்கின்றனர் (27,25). சிலர் மத்தேயு வல்லுனர்கள் இந்த நிகழ்வை மத்தேயு ஆசிரியர் யூதர்கள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையின்மையை காட்டுவதாக இந்த வசனத்தைப் பார்க்கின்றனர்

மத்தேயு முழு யூதத்திற்கோ அல்லது யூதர்களுக்கு எதிரான நற்செய்தி என்று சொல்ல முடியாது ஆனால் அதிகமான யூதர்கள் இயேசுவை ஏற்காததை மத்தேயு படம்பிடிக்க தவறவில்லை. இதனால் திருச்சபை யூதத்தின் மகளாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ பார்க்கப்படாமல், யூதத்திற்கு மாற்று சபையாகவே பார்க்கப்படுகிறது. மத்தேயு நற்செய்திதான் இயேசுவை புதிய இஸ்ராயேலாகவும், திருச்சபையை அவர் வாரிசாகவும் முன்நிறுத்துகிறது. இதனால் இனி விண்ணரசுக்குள்ளோ அல்லது ஆபிரகாமின் ஆசிருக்குள் வருவதற்கோ யூதராக இருக்கவேண்டிய தேவைகிடையாது, மாறாக ஒருவருக்கு இயேசுவிடம் உள்ள உறவே போதும் என்றாகிறது. இந்த உறவு அனைவருக்கும் உரியது அத்துடன் இதில் புறவினத்தவரே வெற்றியும் பெறுகின்றனர் (காண்க 8, 5-13). இஸ்ராயேல் கடவுளின் கூட்டம் என்பது மாறி இந்த நற்செய்தியில் திருச்சபை கடவுளின் கூட்டமாக காட்டப்படுகிறது (16,18). அத்தோடு அது தேசிய அடையாளம் என்பது மாறி இனி சர்வதேச அடையாளமாகிறது (28,19-20).


விரிவுரை:

மற்றைய நற்செய்திகளைப் போலவே மத்தேயுவிலும் திருமுழுக்கு யோவான் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மத்தேயுவில் நான்காம் அதிகாரம் யோவான் சிறைக்கு செல்வதை காட்டி இந்த பதினோராவது அதிகாரத்தில் அவர் சிறையிலிருந்து பேசுவது போல காட்டுகிறது. இங்கே யோவானும் இயேசுவும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கின்றனர்


.2: இந்த வரியில் மத்தேயு இரண்டு முக்கியமான விடயங்களை தெளிவு படுத்துகிறார். முதலாவது யோவான் சிறையிலிருந்தார், இரண்டாவது அவர் மெசியாவின் செயற்பாடுகளை கேள்வியுற்று (Χριστός கிறிஸ்டோஸ்) தன் சீடர்களை அனுப்புகிறார். ஆக அவர் இயேசுவை ஏற்கனவே உண்மை கிறிஸ்துவாக எற்கிறார், இதனால் யோவான் கிறிஸ்து இல்லை என்றாகிறது


.3: இந்த வசனம் யோவான் தனக்கு தான் கிறிஸ்து இல்லை என்பதை நன்கு தெரிந்தவர் என்பதைக் காட்டுகிறது. ஆரம்ப கால திருச்சபையில் சிலர் யோவானைத்தான் கிறிஸ்துவாக நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஒரு கட்டத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்தது. யோவானுடைய கேள்வி உண்மையில் ஒரு பதிலாகவே பார்க்கப்படவேண்டும்


.4: இயேசு யோவானின் சீடர்களுக்கு கொடுக்கும் பதில் வித்தியாசமாக இருக்கிறது. இது மத்தேயுவின் தனி அழகு. இயேசு மறைமுகமான விடையைக் கொடுக்கிறார். அதாவது இயேசுவின் சொந்த பதில்களைப் பார்க்கிலும் சீடர்கள் காண்பதும், கேட்பதும் ஒரு தலைப்பட்சமற்றதாக இருக்கும் என்பது இயேசுவின் நம்பிக்கை. காண்பதும் கேட்பதும் 

(ἃ ἀκούετε καὶ βλέπετε· ஹா அகுஏடே காய் பிளெபெடெ ) நீதித் தீர்வைக்கு மிக முக்கியமான சாட்சிகள் என்பது ஆசிரியரான மத்தேயுவிற்கு நன்கு தெரியும்


.5: இந்த வசனத்தில் வருகின்ற அடையாளங்களான பார்வைபெறுதல், நடத்தல், தொழுநோய் குணமடைதல், காதுகேட்டல், உயிர்பெறுதல் மற்றும் நற்செய்தி அறிவிக்கப்படுதல் போன்றவை ஏற்கனவே இறைவாக்குகளில் முக்கியமாக திருப்பாடல் மற்றும் எசாயாவில், மெசியாவின் வருகை அடையாளங்களாக காணப்பட்டவை (ஒப்பிடுக எசாயா 35,5.6). 


.6: இதுதான் இயேசு திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கு தரும் நேரடியான விடை. அதாவது தன்னை ஏற்றுக்கொள்பவர்தான் பேறுபெற்றோர் என்கிறார் (μακάριος மகாரியோஸ்- பேறுபெற்றோர்.) இது யூதர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல், அதாவது சட்டங்களை கடைப்பிடிப்போர் பேறுபெற்றோராக கருதப்பட்டனர் (காண்க தி.பா 1,1-2). ஆக இனி நம்பவேண்டியது மோசேயின் சட்டங்களை அல்ல மாறாக இயேசுவையே என்கிறார் மத்தேயு. இது யோவானின் சீடர்களுக்கு மட்டுமல்ல அனைத்து வாசகர்களுக்கும் பொருந்தும்

(1நற்பேறு பெற்றவர் யார்? — அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;) 


வவ.7-9: இப்பொழுது காட்சி மாறுகிறது. இதில் இயேசு திருமுழுக்கு யோவானை பற்றி பேசுகிறார் அதாவது அவரை ஏற்றுக்கொள்கிறார். இதிலிருந்து சில சிந்தனைகள் தெளிவாகின்றன.


. மக்கள் யோவானை பார்க்க சென்றுவந்தார்கள்.

. யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தவர்

. யோவானுடைய ஆடை வித்தியாசமாக இருந்தது. அதாவது ஏழ்மையாக இருந்தது

. பணக்கார ஆடையணிந்தோர் அரச மாளிகையில் வாழ்ந்தனர்

. மக்கள் பார்க்கப் போனது ஓர் இறைவாக்கினரை

. திருமுழுக்கு யோவான் சாதாரண இறைவாக்கினர் அல்ல மாறாக அவர்களிலும் மேலானவர்

 திருமுழுக்கு யோவான் இறைவாக்கினரிலும் மேலானவர் என்பதிலிருந்து ஆரம்ப கால திருச்சபை மற்றும் நற்செய்தியாளர்கள் திருமுழுக்கு யோவானில் அதிகமான மரியாதை கொண்டிருந்தனர் அத்தோடு அவர் யார் என்பதிலும் தெளிவாக இருந்தனர் என்பதும் புலப்படுகிறது


.10: மத்தேயு இந்த வசனத்தை மலாக்கி புத்தகத்திலிருந்து எடுக்கிறார் போல் (காண்க மலா 3,1). அத்தோடு இது விடுதலைப்பயண நூலிலும் இறைவாக்கு உறைக்கப்பட்டுள்ளது (✽✽காண்க வி. 23,20). இங்கணம் மத்தேயு மிக முக்கியமான இரண்டு வாதங்களை யோவானை முன்னிட்டு முன்வைக்கிறார்.

. திருமுழுக்கு யோவான் கடவுளின் தூதர்

. அவர் இயேசுவின் பாதையை ஆயத்தப்படுத்தியவர்.

(1'இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.)

(✽✽20வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.)


.11: இந்த வசனம் மேலதிகமாக யோவானைப் பற்றி விளக்குகிறது

. திருமுழுக்கு யோவான் மனிதர்களுள் மிக உன்னதமானவர்

. இருப்பினும் அவருடைய காலம் விண்ணரசுக்கு முன்னைய காலம்

. விண்ணரசில் மிக சிறியவரும் இந்த உன்னதமான பெரிய மனிதரை விட பெரியவராகலாம்

 ஆக யோவான் பெரியவராயினும் அவரைவிட பெரியதும் முக்கியமானதுமாக இருப்பது விண்ணரசு என்று மத்தேயு தன்னுடைய இலக்கில் கவனமாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம். இதனால்தான் மத்தேயுவை ஆசிரியர் என்கிறோம்


இயேசுதான் மெசியா

அவரை நம்புவதும் நம்பாததும் நம்மைப்பொறுத்தது.

இயேசுவை மெசியாவாக ஏற்பது அறிவல்ல மாறாக

அது ஒரு பெறுபேறு அல்லது விழுமியம்


ஆண்டவரே உம்மை நம்பவும், அதனால் 

நற்பேறு பெற்றவராகவும் வரம் தாரும், ஆமென்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம் (ஆ) (18,11,2018) Commentary on the Sunday Readings 

  ஆண்டின் பொதுக்காலம் 33 ம் வாரம் ( ஆ ) (18,11,2018) Commentary on the Sunday Readings  M. Jegankumar Coonghe OMI, Chaddy Shrine of Sint...