புதன், 30 நவம்பர், 2022

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதலாம் ஆண்டு அ) 04,12,2022: Second Sunday of Advent




திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதலாம் ஆண்டு )

04,12,2022: Second Sunday of Advent

 

M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Velanai, Jaffna.

Wednesday, November 30, 2022

முதல் வாசகம்: எசாயா 11,1-10

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 72

இரண்டாம் வாசகம்: உரோமையார் 15,4-9

நற்செய்தி: மத்தேயு 3,1-12 

 

 

எசாயா 11,1-10

1ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். 2ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வுஇவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். 3அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; 4நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். 5நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை. 6அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். 7பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்; 8பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். 9என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். 10அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.

 

 எசாயா புத்தகத்தின் எழாவது அதிகாரத்திலிருந்து பதினோராவது அதிகாரம் வரையிலான பகுதிகள் அசிரியாவின் ஆபத்துக்களையும், ஆண்டவர் இந்த ஆபத்திலிருந்து யூதாவையும் தாவீதின் வழிமரபையும் எங்கணம் காப்பாற்றுவார் என்பதையும் விவரிக்கின்றன. எசாயாவின் காலத்தில் அசிரியா யூதாவின் நண்பனாகி பிற்காலத்தில் அதன் எசமானாகியது. எசாயாவின் எதிர்பையும் தாண்டி, யூதேயா அசிரியாவுடன் கூட்டுச் சேர்ந்து அதன் நண்பராக முயன்றது, பிற்காலத்தில் இந்த அசிரியாவே யூதாவிற்கு ஆபத்தாய் அமைந்தது. இந்த வேளையில், எசாயா அசிரியாவை கடவுள்தான் துருப்பாக பாவிக்கின்றார், சிறிது காலத்தின் பின் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்கும் எனவும், தாவீதின் வழிமரபு என்றும் நீடித்து நிலைக்கும் என்று நம்பிக்கை தருகிறார். அவருடைய நம்பிக்கை வார்த்தையில் இந்த பகுதி மிகவும் முக்கியமானது. 

 

1: ஈசாய்- இவரின் பெயரின் அர்த்தமாக 'கடவுளின் மனிதன்' (יִשַׁי யிஷாய்) என எடுக்கலாம். எசாயா, தாவீது என்னும் முக்கியமான யூதாவின் அரசரைப் பயன்படுத்தாமல், அவருடைய தகப்பனான ஒரு ஏழை குடிமகனின் பெயரைப் பயன்படுத்துகின்றார். ஒரு வேளை தாவீதின் வழிமரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை பெறாமலே கடவுளை ஏமாற்றினர். ஆக இனிவருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருபவர் என சொல்கிறார் எனலாம். ஈசாய், தாவீதின் தந்தை, ஓபேதின் மகன், மற்றும் போவாசின் பேரனாவார். இவருக்கு தாவீது அடங்கலாக ஏழு புதல்வர்களும் இரண்டு புதல்வியர்களும் இருந்தனர். தாவீதின் சகோதரிகள் வாயிலாக இந்த குடும்பத்திற்கு மோவாமியர் மற்றும் அம்மோனியர் தொடர்பிருந்திருக்கலாம் என்று சிலர் வாதாடுகின்றனர். இந்த ஈசாய் தான் தாவீதை சவுலுக்கு இசை மீட்ட அனுப்பினார், அத்தோடு இவர்தான் போர்களத்திலிருந்த தம் புதல்வர்களை நலம் விசாரிக்க தாவீதை களத்திற்கு அனுப்பினார். தாவீதையும் தாண்டி, நல்ல ஒரு தந்தையாக ஈசாய் இன்றும் அறியப்படுகிறார். இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. 

 அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளைவருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் அர்த்தத்தை காட்டுகிறது. அடிமரத்தளிர், வேர்க்கிளை என்பவை யூதாவின் ஆபத்தான நிலையைக் காட்டுகிறது. 

 

.2: இங்கே இரண்டு விதமான இறைவாக்குகளை எசாயா உரைக்கிறார். 

 

. ஈசாயுடைய வாரிசின் பண்புகள்: 

 ஆண்டவரின் ஞானம் அவரில் இருக்கும் (רוּחַ יְהוָה றூவா அதோனாய்). இந்த ஆவி அவருக்கு ஞானம் (חָכְמָה ஹொக்மாஹ்), மெய்யுணர்வு (בִינָה பினாஹ் பகுத்தறிவு), அறிவுரைத்திரன் (עֵצָה֙ எட்சாஹ் ஆலோசனை), ஆற்றல் (גְבוּרָה கெவுறாஹ் வீரம்), நுண்மதி (דַּעַת டஆத் அறிவு), மற்றும் ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு (יִרְאַת יְהוָה யிராத் அதோனாய் இறையச்சம்) போன்றவற்றை அவருக்கு அருளும். 

 

. எசாயா மறைமுகமாக இப்படியான பண்புகள் தற்போதைய அரசனும், தாவீதின் வழிமரபான அகாசுக்கு இல்லை என்பதை நினைவூட்டுகிறார். 

 

.3: இறையச்சம் என்பது எபிரேய நம்பிக்கைப் படி ஞானத்திற்கான முக்கியமான வழிமுறை, இந்த வழிமுறையை அரசர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வது நேர்மறையாக உள்ளது. கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் வைத்து நீதி வழங்குதல் உண்மையாகது என்பதை இருபதாம் நூற்றாண்டில்தால் உலகம் புரிந்து கொண்டது ஆனால் ஆசிரியர் இதனை 2700 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருக்கிறார். 

இதிலிருந்து அக்கால நீதிமுறைகள் விழுமிய அளவில் இக்காலத்திற்கு எந்த வகையிலும் குறைந்தல்ல என்பது புலப்படுகிறது. 

 

.4: ஆகாசுடைய காலத்தில் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நீதியும், நடுநிலையும் எட்டாக் கனிகளாவே இருந்தது (இன்றும் அப்படித்தான்). ஏழையாக பிறத்தலே சாபம் என்றாட் போல் ஆகிவிட்டது. 'வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்' என்பது எபிரேய விவிலியத்தில் 'வார்த்தை எனும் கோலினால் நிலத்தை அடிப்பார்' (וְהִכָּה־אֶרֶץ בְּשֵׁבֶט פִּיו) என்றே உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பு இந்த வரியின் பின்னைய வரியடியின் அர்த்த்திற்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. அரசர்களின் வார்த்தைகளாக, அரச கட்டளையாக சக்திமிக்கது இதனையே, இறைவாக்கினர் இங்கு குறிப்பிடுகிறார். 

 

.5: இடைக்கச்சை (אֵזוֹר எட்சோர் இடைகச்சை, இடைப்பட்டி) என்பது ஒரு அடையாள வார்த்தை. இது ஒரு தலைவரின் அதிகாரத்தை அல்லது அடிப்படை எண்ணங்களைக் குறிக்கிறது. எசாயா சொல்லும் ஈசாயின் வாரிசுக்கு நேர்மையும் (צֶדֶק ட்செடெக்), உண்மையும் (אֱמוּנָה எமுனாஹ்) தான் இவர் இடைக்கச்சையாகிறது. இப்படியான தலைவர் நிச்சயமாக கடவுள் ஒருவராகவே இருக்க முடியும் என்பது எசாயாவின் அனுபவம் போல். 

 

வவ.6-8: இந்த வரிகள் எசாயா இறைவாக்கின் மிக முக்கியமான வரிகளும், பல காலமாக ஆராயப்பட்ட வரிகளுமாகும். இந்த வரிகள் மெசியாவின் ஆட்சி சிறப்பை அடையாள ரீதியாக தெளிவுபடுத்துகின்றன. ஓநாய் (זְאֵב֙) செம்மறியாட்டுக்கு (כֶּבֶשׂ) மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமான வேட்டை மிருகம். சிறுத்தைப்புலி (נָמֵר) இளம் (גְּדִי) ஆடுகளை அதிகமாக வேடடையாடும் மிருகம். சிங்கக் குட்டி (כְּפִיר) கன்றுகளையும் (עֵגֶל), கொழுத்த மிருகங்களை (מְרִיא) விரும்பி வேட்டையாடும். சிங்கக் குட்டிகள், சிங்கங்கள் எசாயாவின் காலத்திற்கு முன்பே பாலஸ்தீனாவிலிருந்து அழிந்திருந்தன. இருப்பினும் சிங்கங்களைப் பற்றிய கதைகள் அக்காலத்திலும் பாவனையில் இருந்தன. அசிரியாவையும் சிங்கத்திற்கு அக்கால வரலாறுகள் ஒப்பிடுகின்றன. இங்கே எசாயாவின் கருத்துப்படி இந்த மிருகங்கள் இயற்கையாக சேர்ந்து வாழ முடியாதவை, ஆனால் ஈசாயின் வாரிசின் ஆட்சியில் இவை சேர்ந்து வாழும், அத்தோடு சிறு குழந்தை (נַעַר קָטֹן) இவற்றை வழிநடத்தும். சிறு குழந்தைகள் அக்காலத்தில் விவேகம் இல்லாதவர்களாக கருதப்பட்டனர், ஆனால் இவர்கள்தான் இந்த இளர்தளிர் காலத்து ஞானிகளாக இருப்பர் என்பது எத்துணை அழகு. 

 கரடி (דֹב֙) தன்னுடைய குட்டிகளின் ஆபத்துக்காக மிக வன்முறையாக மாறும் இது இயற்கை, ஆனால் ஈசாயின் மகனின் காலத்தில் இது கன்றுக்குட்டிகளோடு தன்குட்டிகளையும் விடுமாம், அத்தோடு கரடி, பசு மாட்டோடு (פָּרָה) மேய்வது கிடையாது இங்கே அதுவும் நடக்கிறது. 'புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது' என்பது நம் பழமொழி ஆனால் புதிய படைப்பில் சிங்கம் (אַרְיֵה) மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கிறது. உண்மையாகவே இது புதிய படைப்புத்தான். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பது நமக்கு நன்கு தெரியும் இங்கே பால்குடி மறவாத குழந்தை நல்ல பாம்பின் (פֶּתֶן) வளைக்குள் கையை விடுமாம். இந்த உவமை திருப்பிச் சொல்லப்படுகிறது. கட்டுவிரியனும், விரியனும் இங்கே காட்டப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் பாலஸ்தீனாவில் காணப்பட்ட ஒரு வகை விசம் பொருந்தி நல்ல பாம்பு வகைகளை குறிக்கின்றன. (நல்ல பாம்புகள் உண்மையில் நல்லவை கிடையாது, விசத்தை பொறுத்த மட்டில்). 

 இந்த உருவக அணிகள் மூலமாக, மிருகங்கள் தங்களது மிருக குணங்களை விடுத்து, ஆதியில் கடவுள் ஏற்படுத்திய மனித-மிருக சுமூக உறவிற்கு திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். பாம்பினால்தான் பாவம் வந்தது என்பது எபிரேயரின் நம்பிக்கை, அத்தோடு பாம்பு தீண்டப்படக்கூடாத ஒரு ஊர்வனவாகவும் கருதப்பட்டது. இதற்கு அவர்களை சுற்றியிருந்த பாம்பு வழிபாடே காரணம். (ஒப்பிடுக தொ.நூல் 3,1)ஆனால் இந்த நம்பிக்கையையும் தாண்டி ஈசாயின் வழிமரபு காலத்தில் பாம்புகள் கூட செல்லப்பிராணிகளாக மாறும் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. 

 

(ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், 'கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது.)

 

.9: இந்த வரி மேல் குறித்தவை அனைத்தையும் மீட்டுப்பார்க்கிறது. இங்கே ஆண்டவரின் திருமலை என்று தமிழ் விவிலியம் சொல்வது (כָל־הַר קָדְשִׁי) சீயோனையோ, எருசலேமையோ, யூதாவையோ, இஸ்ராயேலையோ அல்லது முழு உலகையோ குறிக்கலாம். உலகில் தண்ணீர் 75வீதமாக உள்ளது அதுபோல ஆண்டவரை பற்றிய அறிவின் காரணமாக தீமைசெய்வோரும், கேடுவிளைவிப்போரும் இரார் என்கிறார் எசாயா. ஆண்டவரைப் பற்றிய அறிவுதான் எல்லா தீமைகளிலிருந்தும் விடுபட ஒரே வழி என ஆழமாக நம்புகிறார் ஆசிரியர், அத்தோடு இவர் நல்ல ஒரு புவியியலாளர் போல தோன்றுகிறார். 

 

 

 

திருப்பாடல் 72

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 

2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! 3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 

4எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக் பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக! 

5கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக. 

6அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக் நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக. 

7அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக் நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 

8ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். 

9பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்; அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள். 

10தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். 

11எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். 

12தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 

13வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். 

14அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 

15அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! 

16நாட்டில் தானியம் மிகுந்திடுக! மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக! லெபனோனைப்போல் அவை பயன் தருக! வயல்வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக! 

17அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! 18ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 

19மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். 

20(ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன.)

 

 திருப்பாடல் 127க்கு பிறது சாலமோனுடன் சம்மந்தப்பட்ட பாடலாக திருப்பாடல் 72 கருதப்படுகிறது. இருப்பினும் இவை சாலமோனினால் எழுதப்பட்டன என்பதைவிட அவருக்கு அர்ப்பணிகக்ப்பட்டது என்றே கொள்ளவேண்டும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்துக்கள். தாவீது தன் மகன் சாலமோனுக்காக மன்றாடியது போல இந்த பாடல் அமைந்திருந்தாலும், தாவீது தனக்காக இந்தப் பாடலை பாடினார் என்ற வாதமும் இருக்கிறது. அத்தோடு இந்தப் பாடல் மனித அரசர்களையும் தாண்டி மெசியா அரசரை பற்றிய பாடல் என்ற ஒரு வாதமும் இருக்கிறது. இருபது வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடல் திருப்பிக்கூறல் (chiasmus) வகையில் அமைந்திருக்கிறது:

 

1. வவ.1-5: பராமரிக்கும் அரசர்

1. வவ.6-8: உலக தலைவர்

2. வவ.11-14: பராமரிக்கும் அரசர்

2. வவ.15-17: உலகத்திற்கான ஆசீர்

 

தலைப்பு: சாலமோனுக்கு உரியது என்ற தலைப்பு இதற்க்கு கொடுக்கப்பட்டுள்ளது (לִשְׁלֹמֹה)

 

.1-2: இந்த திருப்பாடலின் ஆரம்ப வரி ஒரு மன்றாட்டு போல அரசர்காக பரிந்து பேசுகிறது. அரசரிடம் நீதி தீர்ப்புக்கான அற்றலையும் நீதியையும் (צְדָקָה ட்செதாகாஹ்) ஆசிரியர் எதிர்பார்ப்பது தெரிகிறது. அரசர் தம் மக்களையும், ஏழைகளையும் இந்த நீதியோடு ஆள எதிர்பார்க்கப்படுகிறார்.  

 

.3: மலைகளும் הָרִים குன்றுகளும் גְבָעוֹת அடையாளங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. மலைகளும் குன்றுகளும் சமதள நிலத்திற்கு மேல் உயர்ந்து நிற்பது எதோ செய்தி சொல்வது போல ஆசிரியருக்கு தெரிகின்றன.

 

.4: ஏழைகளுக்கு நீதி வழங்குதல், ஏழைகளின் பிள்ளைகளை காத்தல், பிறரை வஞ்சிப்போரை அழித்தல் போன்றவை ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை. 

 

.5: சூரியனும் (שָׁמֶשׁ) நிலாவும் (יָ֝רֵ֗חַ) இந்த ஆசிரியரின் கருத்துப்படி அழியாத படைப்புக்கள் அவற்றிக்கு முடிவு கிடையாது. அதேபோல் கடவுளின் மேல் கொள்ளவேண்டிய இறையச்சம் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

.6: புல் வெளித் தூறலும், நிலமேல் மழையும் பாலஸ்தீன ஆசிரியருக்கு கடவுளின் தெரியக்கூடிய முக்கியமான ஆசீர்வாதங்கள். இவை வளர்ச்சியை கொடுக்கக்கூடிய வளங்கள், மக்கள் கடவுளுக்கு அஞ்சுவதால் இதனைப்போல் இருப்பார்களாக என எதிர்பார்க்கப்படுகிறார்கள். 

 

.7: நிலா ஒவ்வொருநாளும் தெரியக்கூடிய நல்லதொரு அடையாளம், இது மறைந்துபோகாது என்பது 

இவர்களின் வானசாஸ்திர நம்பிக்கை, அதேபோல் ஆண்டவரின் நீதி எதிர்பார்க்கப்படுகிறது. 

 

.8: ஒரு கடலிலிருந்து மற்றக் கடல் என்பது மத்தியதரைக்கடலிலிருந்து சாக்கடலைக் குறிக்கலாம் 

(מִיָּם עַד־יָם). இங்கே பேராறு என்பது (נָהר) யூப்பிரடிஸ் நதியை குறிப்பதாக பலர் காண்கின்றனர். இந்த ஆற்றிலிருந்து உலகின் எல்லைவரை இந்த அரசரது ஆட்சி எதிர்பார்க்கப்படுகிறது. 

 

.9: பாலைநிலத்தில் வாழ்ந்தோர் என்றும் எருசலேம் அரசருக்கு தலைவலியாக இருந்தவர்கள், மண்ணை நக்குவர் என்பது, அவர்கள் வாயில் மண் கவ்வப்பட தலைவணங்குவர் என்பதைக் குறிக்கிறது. தலையடிபட குனிந்து வணங்குதல் ஒருவர் அரசருக்கு காட்டும் வணக்கத்தையும் விசுவாசத்தையும் குறிக்கிறது.  

 

.10: இந்த வரி சாலமோனின் காலத்தில் நடந்த நிகழ்வுகளை காட்டுகிறது. தார்சிசு என்பது யூதேயாவிற்கு வடமேற்கிலிருந்த (தற்போதைய தெற்கு துருக்கி) இடமாகும், இருப்பினும் இதன் துல்லியமான இடவரைபு கிடைக்கப்படவில்லை. ஷெபா (שְׁבָא) தென் அரேபியாவிலுள்ள ஒர் இடம், செபா (סְבָא) வடகிழக்கு ஆபிரிக்காவிலுள்ள ஓர் இடம். இப்படியாக உலகின் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் இந்த அரசர்க்கு பரிசில்கள் வருகின்றன. சாலமோன் இந்த அரசுகளுடன் நல்ல ராஜதந்திரத்தை பேணினார். இதனால் அவர்கள் அவருக்கு பரிசில்களை கொணர்ந்தனர் என வரலாறு சொல்கிறது. 

 

.11: இந்த வரியை ஒரு புகழ்ச்சி எதிர்பார்ப்பாகவே கருதவேண்டும். பல அரசர்கள் சாலமோனை புகழ்ந்தது உண்மையே ஆனால் அனைத்து அரசர்களும் அவருக்கு தரைமட்டும் தாழ்ந்து பணிந்து வணங்குவார்கள் என்பது கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்பாகவே காண்படுகிறது. (இதன் இலக்கு சாலமோனாக இருந்தால்). இந்த பாடல் மெசியா அரசரருக்காக இருந்தால் இந்த எதிர்பார்ப்பில் பிழையிருக்காது.

 

வவ.12-14: இந்த வரிகள், இந்த அரசர் ஏழைகள் மட்டில் கொண்டுள்ள கரிசனையைக் காட்டுகிறது. ஏழைகளை விடுவித்தலும், அவர்களுக்கு கரிசனை காட்டுதலும், அவர்களின் உயிரைக் காத்தலும் நல்ல அரசரின் உயரிய பண்பாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு எல்லா வேளைகளிலும் ஏழைகளே அன்றும் பாதிக்கப்பட்டனர் என்பது இவ்வாறு புலப்படுகிறது. ஏழைகளின் இரத்தம் விலைமதிப்பற்றது என்னும் வரித்தொடர் அக்காலத்திலும் மனித மாண்பு உயர்வாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. 

 

.15: அரசர்க்கு ஆசியுரை வழங்கப்படுகிறது. அரசருக்கு நீடுழி வாழ்வும், பரிசில்களும், வேண்டுதல்களும், ஆசீக்கான மன்றாட்டுக்களும் இரஞ்சப்படுகின்றன. ஷேபா அக்காலத்தில் பொன்னுக்கு பெயர்போன இடம். 

 

.16: அவர் நாட்டிற்கு ஆசிகள் வழங்கப்படுகின்றன. தானிய மிகுதி, மலைகளில் பயிர்ச்செய்கை, மக்களின் பெருக்கம், போன்றவை நாட்டில் வளர்ச்சியைகாட்டும் வெளியடையாளங்கள். இஸ்ராயேலுக்கு வடக்கிலிருந்த லெபனான் மிகவும் வளமான நாடாகும், இஸ்ராயேலைவிட காட்டு வளங்களில் அது மிகுந்திருந்தது. ஆசிரியர் அதனையும் நன்கு அறிந்திருக்கிறார். 

 

.17: இந்த மன்னரின் பெயர் சூரியனைப்போல் நிலைத்திருக்க ஆசிக்கப்படுகிறார். அவர் ஆசீராக 

இருப்பதனால் அவரால் மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆண்டவர் ஆபிரகாமிற்கு சொன்னது போல் (தொ. நூல் 12,2: 'உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்'), இந்த அரசர் ஆசீராக மாறுகிறார். எபிரேய விவிலியத்தில் வரும் இந்த சொல் பல விதாமாக ஆராயப்படுகிறது, இது பல விதமான அர்த்தங்களையும் கொடுக்கிறது (יִתְבָּ֥רְכוּ அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.) இதனால் எல்லா நாட்டினரும் அவரை வாழ்த்துவார்கள். 

 

வவ.18-19: இந்த இரண்டு வசனங்கள் அரசர் என்ற தலைப்பிலிருந்து மாறி, கடவுளை மையப்படுத்துகின்றன. இந்த ஆசீர்கள் இஸ்ராயேலர் சாதாரணமாக பாவிக்கின்ற நாளாந்த ஆசியுரை. 

(בָּרוּךְ ׀ יְהוָ֣ה אֱלֹהִים אֱלֹהֵ֣י יִשְׂרָאֵל இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக.) அத்தோடு இந்த கடவுள் ஒருவரே கடவுளாக போற்றப்படுகிறார். இதற்கு முன் சொல்லப்பட்ட அனைத்து புகழ்ச்சியும் கடவுளுடைய புகழ்ச்சியில்தான் நிறைவு பெறுகிறது. அத்தோடு அவரது மாட்சி அனைத்து உலகிலும் 

இருக்கும் படியாக வேண்டப்படுகிறது. இறுதி வசனம் 'தாவீதின் செபம் முடிவடைந்தது' என வாசிக்கிறது. இப்படியாக இது தாவீதின் பாடல் என சொல்ல முயல்கிறார் ஆசிரியர். 

 

 

உரோமையார் 15,4-9

4முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. 5கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! 6இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள். 7ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. 8கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், 9பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, 'பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்' என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

 

 பவுலுடைய இறுதி ஆலோசனையிலிருந்து இந்த பகுதி எடுக்கப்பட்டுள்ளது. பிறருக்கு உகந்தவற்றையே தேடவேண்டும், அத்தோடு நற்செய்தி அனைவருக்கும் உரியது என்ற தலைப்புக்கள் இந்த வரிகளுக்குள் அடங்கியுள்ளது. 

 

.4: இங்கே முற்காலத்தில் எழுதப்பட்டவை என்று பவுல் முதல் ஏற்பாட்டு நூல்களை குறிப்பிடுகிறார். பவுல் எபிரேய இறைவார்த்தையில் நல்ல தெளிவு பெற்றிருந்தவர் என்பதை இது காட்டுகிறது. அத்தோடு அனைத்தும் நல் அறிவுரை என்று முதல் ஏற்பாட்டிற்கு நல்ல யூதனாக மரியாதை செய்கிறார். மறைநூல் ஒருவருக்கு உற்சாகத்தை தந்து அதன் வாயிலாக எதிர்நோக்கை பெறவைக்கிறது என்கிறார். 

 

.5: கடவுளுக்கு இரண்டு வரைவிலக்கணம் கொடுக்கப்படுகிறது, அவர் மனவுறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுளாக காட்டப்படுகிறார் (ὁ δὲ θεὸς τῆς ὑπομονῆς καὶ τῆς παρακλήσεως மனவுறுதியினதும் ஊக்கத்தினதும் கடவுள்). ஆரம்ப திருச்சபையில் கடவுளுக்கு பல விதமான பெயர்களும் வரைவிலக்கணங்களும் சுதந்திரமாக வழங்கப்பட்டன, இதில் பவுல் கடவுளுடைய அனைத்து பண்புகளையும் வரைவிலக்கணமாக தலத் திருச்சபைகளின் தேவைக்கேற்ப பாவிக்கிறார். இந்த கடவுள் உரோமைய கிறிஸ்தவர்களை ஒற்றுமையாக இருக்க அழைக்கிறார் என்கிறார் பவுல், அதற்கு உதாரணமாக இயேசுவைக் காட்டுகிறார். இதிலிருந்து உரோமை திருச்சபையில் சில முக்கிய பிளவுகள் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். 

 

.6: இந்த வசனம் அந்த ஊகத்தை உறுதிப்படுத்துகிறது. அனைவரும் ஒருமனப்பட்டு கடவுளை போற்ற அழைக்கப்படுகின்றனர். இங்கே கடவுளை இயேசுவின் கடவுளும் தந்தையுமாக பார்க்கிறார் பவுல் (τὸν θεὸν καὶ πατέρα τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ. எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் ) இந்தக் காலத்தில் கிறிஸ்தியலோ அல்லது இறையியலோ தற்காலத்தைபோல வளர்ந்திருக்கவில்லை, இதனாலதான் சில சொற் பதங்கள் மாறி மாறி இயேசுவிற்கும் தந்தையாகிய கடவுளுக்கும் பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம். 

 

.7: ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் விளக்குகிறார் பவுல். இயேசுவிற்கு யூதரன்றோ யூதரல்லாதவரன்றோ இல்லை, அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்த ஒரு ஏற்றுக்கொள்ளலே போதும் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கு. இப்படி ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளை பெருமைப் படுத்தும். இதனை தன்னுடைய கருத்தாக காட்டமாக சொல்கிறார் பவுல் (இது கிரேக்க விவிலியத்தில் நேரடியாக இந்த வரியில் இல்லை).

 

வவ.8-9: முன்சொன்ன அறிவுரைக்கு காரணம் காட்டுகிறார் பவுல். இயேசுவின் செயற்பாடுகள் விளக்கப்படுகின்றன:

 

. கடவுள் உண்மையுள்ளவர் என காட்ட கிறிஸ்து விருத்த சேதனம் செய்துகொண்டவர்களுக்கு (யூதருக்கு) தொண்டரானார். 

 

. மூதாதையருக்கு தரப்பட்ட வாக்குறிதிகளை உறுதிப்படுத்தவும், பிறவினத்தார் கடவுளின் இரக்கத்தைக் கண்டு அவரை புகழவும் இயேசு தொண்டர் ஆனார். 

 

 இதன் காரணமாகத்தான் முற்கால இறைவாக்கான 'பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்;' (διὰ τοῦτο ἐξομολογήσομαί σοι ἐν ἔθνεσιν  καὶ τῷ ὀνόματί σου ψαλῶ.) என்பது நிறைவேறுகிறது (காண்க தி.பா 18,49).

(ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.)

 

 இவ்வாறு இயேசுவின் தொன்டர் நிலை (διάκονος தியாகொனொஸ்) யூதரையும் யூதரல்லாதோரையும் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவையை ஆழப்படுத்துகிறது. (உரோமைய கிறிஸ்தவர்கள் அன்று இதை ஏற்றார்களோ என்னவோ, ஆனால் இன்று பல கிறிஸ்தவர்கள் மற்றவர்களை சக கிறிஸ்தவர்களை சமமானவர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் அத்தோடு அதற்கு மடத்தனமாக வியாக்கியானங்களையும் முன்வைக்கின்றனர்). 

 

மத்தேயு 3,1-12

திருமுழுக்கு யோவான் விண்ணரசின் வருகையை அறிவித்தல்

(மாற் 1:1 - 8; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)

 

1-2அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்று பறைசாற்றி வந்தார். 3இவரைக் குறித்தே,

'பாலைநிலத்தில் குரல் ஒன்று

முழங்குகிறது: ஆண்டவருக்காக

வழியை ஆயத்தமாக்குங்கள்;

அவருக்காகப் பாதையைச்

செம்மையாக்குங்கள்'

என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். 4இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 5எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் 

இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். 6அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். 7பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, 'விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? 8நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். 9'ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். 10ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். 11நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 12அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்' என்றார்.

 

 

மத்தேயு நற்செய்தியின் ஆசிரியத்துவமும் காலமும்:

(கடந்த வாரத் தொடர்ச்சி)

 

 ஆரம்ப கால பாரம்பரியம் இந்த நற்செய்தியை கப்பாநாகுமை சேர்ந்த லேவியான மத்தேயுவே எழுதினார் என நம்புகிறது (காண்க மத் 9,9). அத்தோடு முதல் மத்தேயு நற்செய்தி கிரேக்கத்திலல்ல மாறாக அரமாயிக்கத்தில் எழுதப்பட்டது என்ற ஒரு பாரம்பரிய நம்பிக்கையும் இருக்கிறது. இந்த இரண்டு சிந்தனைகளையும் இன்றைய மத்தேயு ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. 

 நம்மிடம் உள்ள மத்தேயு கிரேக்க நற்செய்தி ஒரு மொழிபெயர்ப்பு என்ற எண்ணத்தை தராது அது மாற்கு, லூக்கா நற்செய்திக்கு எந்த விதத்திலும் குறையாமல் நல்ல கிரேக்க மொழியிலே எழுதப்பட்டுள்ளது. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எபிரேய அல்லது அரமாயிக்க மத்தேயு நற்செய்தியை பாவித்திருக்கலாம் ஆனால் அவைதான் நம்முடைய இந்நாள் கிரேக்க நற்செய்தி என்றும் சொல்வதிற்கில்லை. பபியாஸ் என்ற ஒரு ஆரம்ப கால எழுத்தாளர் ஒருவரே மத்தேயுவின அரமாயிக்க நற்செய்தி வாசகங்கள் பற்றி முதல்முதலில் குறிப்பிடுகிறார், ஆனால் அவர் எதனை குறிப்பிடுகிறார் என்பதும் தெளிவில்லை. ஆக மத்தேயு நற்செய்தி அரமாயிக்கத்தில்தான் எழுதப்பட்டது என்பதை நிறுவுவது மிகக் கடினம். அதேவேளை நம்முடைய இந்த கிரேக்க நற்செய்திக்கு திருத்தூதர் மத்தேயுவைவிட வேறு ஒரு பொருத்தமான ஆசிரியரைக் கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது. 

 வரிதண்டுவோராக இருந்து மனமாற்றமடைந்த திருத்தூதர் மத்தேயு இதன் ஆசிரியராக இருப்பதுபோல பல உள்ளக காரணிகள் இருக்கின்றன. முக்கியமாக இவருடைய யூத எதிர்ப்பு பார்வையை குறிப்பிடலாம். ஆயக்காரர்கள் பத்திரங்களையும், கணக்குகளையும் பாதுகாப்பதில் வல்லவர்கள் இந்த சாயலை மத்தேயு நற்செய்தியில் இலகுவாக காணலாம். இருப்பினும் இவை மத்தேயுதான் இதன் ஆசிரியர் என்பதற்கு போதுமான சான்றுகள் அல்ல. மத்தேயு நற்செய்தியும் எந்த இடத்திலும் இதன் ஆசிரியரை பற்றி குறிப்பிடவில்லை. 

 பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை மத்தேயுவின் ஆசிரியத்துவம் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாற்கு நற்செய்தியின் முக்கியத்துவத்தின் அறிவு மத்தேயு நற்செய்தி மாற்குவிலும் பிந்தியது என்ற வாதத்தை முன்வைக்க தொடங்கியது. இவ்வாறு இந்த நற்செய்தி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது என நம்பப்பட்டது. மாற்குவின் முக்கியத்துவமும் (Markan Priority) இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் மத்தேயுவின் காலத்தை மத்தேயு நற்செய்தியிலிருந்தே கணிக்க வேண்டும் என நம்புகிறார்கள். 

 கி.பி 70 ஆண்டில் எருசலேம் தேவாலயம் அன்றைய உரோமைய தளபதியும் பின்நாள் சீசருமான தீத்துவினால் அழிக்கப்பட்டது, இது மத்தேயு நற்செய்தியில் ஒரு முக்கியமான பார்வை. மத்தேயு இதனை எதிர்கால நிகழ்வாக இயேசுவின் வாயில் வைத்தாலும், மத்தேயுவின் ஆசிரியர் எருசலேம் அழிவின் பின்னர்தான் இந்த நற்செய்தியை எழுதினார் என பலர் நம்புகின்றனர். இந்த வாதத்தை எதிர்பவர்களும் 

இல்லாமல் இல்லை. ஏனெனில் சில இடங்கள் எருசலேம் தேவாலயத்தின் இருப்பை அழகாக வர்ணிக்கின்றன காண்க (5:23-24 17:24-27 23:16-22). எப்படியாயினும் பலருடைய கருத்துப்படி இந்த நற்செய்தி கி.பி 60-80 ம் ஆண்டுகளிலே எழுதப்பட்டிருக்க வேண்டும். 

 

விரிவுரை:

 மத்தேயு நற்செய்தியின் முதல் இரண்டு அதிகாரங்களும் இயேசுவின் குழந்தை பருவத்தைபற்றி விவரிக்கின்றன. பதினேழு வசனங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த மூன்றாம் அதிகாரம் திருமுழுக்கு யோவானையையே மையப்படுத்துகின்றது. திருமுழுக்கு யோவான் ஒரு முக்கியமான நபராக அக்காலத்தில் 

இருந்ததாலும், திருமுழுக்கு யோவானின் ஒரு சக்திமிக்க குழு அவரைத்தான் மெசியாவாக கருதியதாலும் மத்தேயு ஆசிரியருக்கும் யோவானைப் பற்றி எழுதவேண்டிய தேவையிருந்தது எனலாம். இந்த பன்னிரண்டு வசனங்கள் திருமுழுக்கு யோவான் யார்? அவர் பணி என்ன? அவருக்கும் இயேசுவிற்கும் தொடர்பென்ன? என்பதை சுருக்கமாக ஆனால் ஆழமான இறையியல் சிந்தனையில் காட்டுகிறது. மத்தேயு ஒரு ஆயக்காரர் என்பதால் என்னவோ, இந்த மூன்றாவது அதிகாரத்திலும் மறைமுகமாக இயேசுவையே காதாநயகனாக வைக்கிறார். 

 

.1: திருமுழுக்கு யோவானை திடீரென மத்தேயு அறிமுகப்படுத்துகிறார். லூக்கா நற்செய்தியின் உதவியுடன் யோவானின் பின்புலத்தை அறிதுள்ள நாம் இதனை சார்பாக எடுக்கின்றோம். ஆனால் மத்தேயு யோவானின் குழந்தை பருவ நிகழ்ச்சியை குறிப்பிடாமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் இருந்திருக்கும். முக்கியமாக மத்தேயு எந்த இடத்திலும் இயேசுவின் முக்கியத்துவத்தை குறையாமல் பார்ப்பார். திருமுழுக்கு யோவானின் காலத்தில் இந்த யூதேயாவின் பாலைநிலத்தில் (ἐρήμῳ τῆς Ἰουδαίας) பலர் உலகத்தையும் உரோமை அடக்குமுறையையும் வெறுத்து கடவுளை மட்டுமே நினைக்க பாலைவன வாழ்க்கை வாழ்ந்தனர் என சில ஆய்வுகள் காட்டுகின்றன. 

 

.2: திருமுழுக்கு யோவானின் முதலாவதும் மிக முக்கியமான நற்செய்தியாக 'மனமாறுங்கள், வானக அரசு நெருங்கிவந்துவிட்டது' என்பதாகும் (μετανοεῖτε· ἤγγικεν γὰρ ἡ βασιλεία τῶν οὐρανῶν). இங்கே அவதானமாக நோக்கப்படவேண்டியது, மத்தேயு இறையரசு என்று சொல்ல மாட்டார் மாறாக விண்ணரசு என்றே சொல்வார். இதற்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. இறையரசு (ἡ βασιλεία τοῦ θεοῦ) என்றால் அது யூத கிறிஸ்தவர்களுக்கும் அல்லது யூத வாசகர்களுக்கும் சிலைவழிபாடாக அல்ல தேவநிந்தனையாக இருக்கலாம் எனவே அவர் எபிரேய சிந்தனையான வானரசு (βασιλεία τῶν οὐρανῶν) என்ற அழகான பதத்தை பாவிக்கிறார்.

 திருமுழுக்கு யோவானின் இந்த அவரச பிரகடணம் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களை நமக்கு நினைவூட்டும். இங்கே ஒரு அவசரம் தெரிகிறது. மத்தேயு பிற்பகுதியில் இயேசுவும் இதே வார்த்தைகளை பாவிப்பதை காட்டுவார் (காண்க 4,17: 10,7). 

 

.3: மத்தேயுவின் கருத்துப்படி யோவான்தான் எசாயா குறிப்பிகின்ற பாலைவனக் குரல் (காண்க எசாயா 40,3). ஆனால் எசாயாவின் (40,3) இறைவாக்கிற்கும், மத்தேயு அதனை குறிப்பிடுகின்ற விதத்திற்கும் முக்கியமான வேற்றுமை காணப்டுகிறது.

 

Is. 40:3 φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ Ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίου, εὐθείας ποιεῖτε τὰς τρίβους τοῦ θεοῦ ἡμῶν·  (செப்துவாஜிந்து - குரலொலி ஒன்று முழங்குகின்றது, பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.)

 

ק֣וֹל קוֹרֵ֔א בַּמִּדְבָּ֕ר פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ׃ Is. 40:3

(எபிரேய விவிலியம் - குரலொலி ஒன்று முழங்குகின்றது, பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்)

 

Mtt. 3:1. φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ· ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίουεὐθείας ποιεῖτε τὰς τρίβους αὐτοῦ. 

(கிரேக்க மத்தேயு - பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.)

 

 முதல் இரண்டு இடத்திலும் பாலைநிலத்தில்தான் ஆண்டவருக்கு பாதையொன்றை தயார்படுத்த கேட்க்கப்படுகிறன. ஆனால் மத்தேயு சுதந்திரமாக இந்த இறைவாக்கை மாற்றி, அதனை திருமுழுக்கு யோவானின் குரலாகவும், பாலைநிலத்தில் அல்ல மாறாக முழு உலகத்தையும் இயேசுவிற்காக தயார் படுத்தக் கேட்கிறார். இதிலிருந்து மத்தேயுவின் புலமைத்துவமும், முதல் ஏற்பாட்டில் அவருக்கிருந்த அறிவும் புலப்படுகிறது. 

(குரலொலி ஒன்று முழங்குகின்றது, பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.)

 

.4: யோவானின் நடை, உடை மற்றும் பாவனை விவரிக்கப்படுகிறது. யோவானின் உடையும் நடையும் எருசலேமில் செல்வத்திலிருந்த பல குருக்களின் வாழ்க்கைக்கு எதிராக இருக்கிறதை மத்தேயு காட்டுகிறார். இவரின் உணவும் அவரின் ஆடையும் அவரின் பாலைவன வாழ்க்கையைக் காட்டுகிறது. இவருடைய தோற்றம் இறைவாக்கினர் எலியாவை நினைவூட்டுகிறது (காண்க 2அரச1,8). வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் பாலைவனத்தில் மக்கள் உண்ட பொதுவான உணவு அத்தோடு அதனை லேவியர் சட்டம் தூய்மையான உணவாக ஏற்றிருந்தது (✽✽காண்க லேவி 11,22)

 

(அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, 'அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்' என்றனர். அப்பொழுது அவன், 'அந்த ஆள் திஸ்பேயைச் சார்ந்த எலியாதான்!' என்றான்.)

 

(✽✽ நீங்கள் உண்ணக்கூடியவை தத்துக்கிளி, அதன் இனம்; வெட்டுக்கிளி, அதன் இனம்; மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்; சுவர்க்கோழி, அதன் இனம்.)

 

வவ.5-6: இந்த வசனத்தின் மூலம் அனைவரும் யோவானை இறைவாக்கினராக ஏற்றதையும் அவரை 

இறைவாக்கினராக ஏற்றதையும் மத்தேயு குறிப்பிடுகிறார். ஆக இவர்தான் எலியாவின் வருகை என்பதை அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த புதிய எலியா சுட்டிக்காட்டிய மெசியாவை ஏற்க மறுத்தனர் என மறைமுகமாக கிண்டல் செய்கிறார். 

 

.7: மத்தேயுவிற்கு பரிசேயரையும் சதுசேயரையும் மிகவே பிடிக்காது. இவரின் கருத்துப்படி உரோமையரை விட இயேசுவின் பாடுகளுக்கு இவர்களே காரணம். மத்தேயு இவர்களை விரியன் பாம்புக்குட்டிகளாக்குகிறார். தொடக்க நூலில் பாம்புதான் முதல் பெற்றோரின் வீழ்ச்சிக்கு காரணம் சாத்தான். பாம்பு சாத்தானாகவும், சுழ்ச்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. இவர்களை மத்தேயு விரியன் பாம்புகளாக்குவது (ἔχιδνα- விரியன் குட்டிகள், பாம்புக்குணம் உடையவர்கள்) சற்று அதிகம்தான். 

 

.8: உண்மையான மனமாற்றம் செயல்களில் வரவேண்டும் வெளியடையாளங்கள் முக்கியமல்ல என்பது யோவானின் கருத்து. இதன்படி இவர்களின் மனமாற்றம் வெறும் வெளிவேடமே. 

 

.9: சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் தங்களை ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லி மார்தட்டுபவர்கள் என்று யோவான் சாடுகிறார். ஆபிரகாம் இவர்களுக்கு ஒரு முக்கியமான அடையாளம். ஆனால் கடவுள் முன் இவர்களின் பெறுமதி கற்களைவிடவும் குறைவானது என யோவான் காட்டுகிறார். இந்த வசனம் மிகவும் காட்டமானதாக இருந்தும் இவர்கள் யோவானை சத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். 

 

.10: கிளைகளை வெட்டுவது மரத்தை வளர்க்க, ஆனால் வேரருகே கோடரி வைக்கப்படுவது பலன்தராத மரத்தை வேரோடு வெட்டி அழிக்கவே. இப்படியாக யோவானின் கருத்துப்படி கடவுளின் தண்டனை மனந்திரும்புவதற்காக அல்ல மாறாக இறுதியழிப்பிற்காக, அத்தோடு ஆபத்து மிக அருகில் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. 

 

.11-12: இயேசுவின் உயர்தன்மை யோவானுடன் ஒப்பிடப்படுகிறது:

 

. யோவானின் திருமுழுக்கு தண்ணீரால் கொடுக்கப்படும் மனமாற்ற அடையாளம்.

. இயேசு யோவானைவிட வலிமையானவர், அவர் மிதியடியைகூட யோவானால் கழற்ற முடியாது. 

. இயேசுவின் திருமுழுக்கு தூய ஆவியால் கொடுக்கப்படும். 

. இவரின் திருமுழுக்கு மனமாற்றத்தையும் தாண்டி இறை நீதியையும் காட்டுகிறது.  

 சுளகினால் பதரை பிரித்தல் என்பது நன்கு தெரிந்த ஒரு விவசாய அறுவடை அடையாளம். இதனை அழகாக மத்தேயு (திருமுழுக்கு யோவான்) பயன்படுத்துகிறார். இந்த அடையாளம் இறுதிநாள் தண்டனை பற்றிய கருத்தையும் குறிக்கும். 

 மத்தேயு இந்த பகுதி மூலமாக திருமுழுக்கு யோவானை கொச்சைப்படுத்துகிறார் என்ற எடுக்க முடியாது. இங்கே அவர் இயேசுவையே மையப்படுத்துகிறார். அவருடைய பார்வை சதுசேயர் பரிசேயர் மேலேயே அதிகமாக இருக்கிறது. 

 

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு இறை அன்பை மையப்படுத்துகிறது.

இறை அன்பு பல வடிவங்களில் தரப்படும் ஒரு இனிமையான அனுபவம்.

அதனை புத்தகத்திலும் செபத்திலும் மட்டும் தேடி உணராமல்,

வீட்டிலிலும் தேடுவோம், உணருவோம். ஆமென்.

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...