புதன், 11 மே, 2022

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம்: Fifth Sunday of Easter, 2022





பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம்: Fifth Sunday of Easter, 2022

15.05.2022

'ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்

வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்'

(தி.பா 145,4)

M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of  Good Voyage,

Chaddy, Velanai, Jaffna.

Wednesday, 11 May 2022





முதல் வாசகம்: திருத்தூதார் பணி 14,21-27

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145

இரண்டாம் வாசகம்: தி.வெளி 21,1-5

நற்செய்தி: யோவான் 13,31-35


தி.பணி 14,21-27

21அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். 22அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, 'நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். 23அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; 24பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். 25பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; 26அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். 27அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். 28அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.


  இந்த பகுதி பவுலடிகளாரின் முதலாவது மறையுறை பயணத்தின் முடிவுரையாக வருகிறது. பவுல் எவ்வளவு ஆர்வமாக திருச்சபைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தினாரோ, அதனையே அவர் அவற்றை சந்தித்து திடப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார் என்பதனை இந்த பகுதிகளில் காணலாம். ஆரம்ப கால திருச்சபை பலவீனமானதாகவும், அதனை சுற்றியிருந்த கேளிக்கைகளும் சவால்களும் பலமானதாக இருந்ததையும் பவுல் நன்கு அறிந்திருந்தார். இதனால்தான் ஒரு தகப்பனைப் போல இந்த இளம் திருச்சபைகளை திடப்படுத்துவதில் ஆர்வமாய் இருக்கிறார்


வவ. 21-22: இங்கே பவுல் நிறைவான எண்ணிக்கையில் பலரை சீடராக்கியது, அதாவது அவர்களை கிறிஸ்துவிற்கு சீடராக்கியதனையே குறிக்கிறது. சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த உண்மையை நேரடியாகவே உரைக்கிறார். துன்பங்களின் வழியாகவே இறையரசை அடையமுடியும் என்பதனை பவுல் தன்னுடைய வாழ்வினாலும் உணர்ந்திருந்தார். பல விதமான துன்பங்கள் என்பது இங்கே பல ஆரம்ப கால சமய-அரசியல் கலாபனைகளைக் குறிக்கலாம்Ἀντιόχεια;  அந்தியோக்கியா, லிஸ்திராவிற்கு 145 கிலோமீட்டர் தொலைவில் இருந்த உரோமை உலகத்தின் மிக முக்கியமான நகர்களில் ஒன்று


வவ. 23: இந்த வரி, ஆரம்பகால திருச்சபையின் தலைமைத்துவ ஒருங்கிணைப்பினை படம்பிடிக்கிறது. மூப்பர்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு விதமான செபமுறைகள் பின்பற்றப்படுகிறன்றன

). நோன்பிருத்தல், νηστειῶν நேய்டெய்யோன்

). இறைவனிடம் வேண்டுதல். προσευξάμενοι புரொசெயுக்ட்சாமெனொய்

 மூப்பர்களை தெரிவுசெய்ததன் பின்னரே இவற்றை செய்கின்றனர். பவுலும் பர்னாபாவும் 

இப்படித்தான் தெரிவுசெய்யப்பட்டனர். இறுதியாக தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இக்கால ஆயர்கள் தெரிவும் அத்தோடு அவர்களுடைய திருப்பொழிவு நிகழ்வுகளும் இந்த சிந்தனைகளை காட்டுவதாக வழிபாடுகளில் அமைகின்றன. மூப்பர்கள் என்பவர்களைக் குறிக்க πρεσβύτερος பிரஸ்புடெரொஸ் என்ற கிரேக்க மூலச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் வயதிலும் அனுபவத்திலும் முதிந்தவர்களைக் குறிக்கும், பின்நாளில் இது திருச்சபையின் தலைமைத்துவத்தில் இருந்தவர்களை குறிக்க பயன்பட்டது. திருத்தூதர்களான பேதுரு, பவுல், யாக்கோபு போன்றோரும் தங்களை இந்த பதத்துடன் அழைத்திருக்கின்றனர். திருச்சபையின் வருகைக்கு முன்பே இப்படியான பலர் யூத மற்றும் கிரேக்க உயர்சபைகளில் இருந்ததாக காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறெனினும், ஆரம்பகால திருச்சபை மூப்பர்களை யூத பாரம்பரியத்தில் அதாவது அவர்களின் நம்பிக்கை மற்றும் நன்நடத்தை முதிர்சியிலே தெரிவுசெய்தது


.24-28: அதிகமாக தான் நிறுவிய திருச்சபைகளை தரிசித்துவிட்டு பம்பிலியாவிலிருந்த பெருகையிலிருந்து நேரடியாக அந்தியோக்கியாவிற்கு வருகிறார் பவுல். அந்தியோக்கியாவில் தன்னுடைய உடன் சகோதரர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலமாக பவுல் மறைபரப்பு பணி திருச்சபையினுடைய பணி, தன்னுடைய தனிப்பட்ட பணியல்ல என்பதைக் காட்டுகிறார்பவுல் கடவுள் செய்த அதிசயங்களையும், பிற இனத்தவரின் நம்பிக்கையையும் தனது செய்தியின் பொருளாக காட்டுகிறார், அவர்களுடைய திறமைகளையோ அல்லது அவர்கள் செய்த அதிசியங்களையோ பவுல் கூறவில்லை என்பதை லூக்கா அழகாக காட்டுகிறார். கடினமான பணிக்குப் பின்னர், மறைபணியாளர்கள் தேவையான ஓய்வு எடுப்பதனைக் காணலாம்.

 அந்தியோக்கியாவில்தான் அவர்கள் கடவுளின் பணியை தொடங்கினார்கள் என்ற விளக்கத்தை லூக்கா கொடுக்கிறார். ஆரம்ப கால திருச்சபையில் அந்தியோக்கியா மிக முக்கியமான இடத்தை பெற்றிருந்தது என்பது இவ்வாறு புலப்படுகிறது



திருப்பாடல் 145

அரசராம் கடவுள் போற்றி!

(தாவீதின் திருப்பாடல்)


1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்

2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்

3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது

4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்

5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்

6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்

7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்

11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்

13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது

14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்

15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்

16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். 17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்

19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்

20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார்

21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


 திருப்பாடல் புத்தகத்தில் காணப்படும் அகரவரிசைப் பாடல்களில் இந்த 145வது சங்கீதமும் ஒன்று. நுன் (נ , ן, பதினான்காவது எழுத்து) வருகின்ற வரி மட்டும் இதில் இல்லாமல் இருக்கிறதுஇதனால்தான் இந்த பாடல் 21வரிகளைக் கொண்டிருக்கிறது, இல்லாவிடில் இதில் 22வரிகள் காணப்படும். காலத்தின் ஓட்டத்தில் இந்த வரி அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறதுஇருந்தாலும், மனித மொழியான எபிரேயம், ஆண்டவரின் மறைபொருளை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதது என்பதைக் காட்டவே, ஆசிரியர் வேண்டுமென்றே இந்த (நுன்) வரியை (14ம்) விட்டிருக்கலாம் என்ற ஒரு பலமான வாதமும் இருக்கிறது

  இந்தப் பாடல், கடவுள் பாடப்படவேண்டியவர், மற்றும் அவருடைய மாட்சிமை புகழப்படவேண்டியது என்பதைக் காட்டுகிறது. தாவீதின் திருப்பாடல் என்று தொடங்கும் இந்த திருப்பாடல், அதிகமான திருப்பாடல்களைப் போல் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. (תְּהִלָּה לְדָוִד தெஹிலாஹ் லெதாவித் - தாவீதின் (தாவீதுக்கு) பாடல் (புகழ்))


.1 (א '- அலெப்): திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய அரசராக காண்கிறார் 

(אֱלוֹהַי הַמֶּלֶךְ 'எலோஹாய் ஹம்மெலெக்- என்கடவுள் அரசர்). கடவுளைப் போற்றுவதும் அவர் பெயரைப் போற்றுவதும் சமனாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புகழ்ச்சி என்றென்றைக்கும் நடைபெற வேண்டியது என்கிறார்.


.2 (בּ - பெத்): மீண்டுமாக ஆண்டவரும் அவர் பெயரும் ஒத்தகருத்துச் சொற்களாக பார்க்கப்டுகின்றன. ஆண்டவரை போற்றுதலும் அவருடைய பெயரை புகழ்தலும் நாள் முழுவதும் செய்யப்பட வேலை என்பதை விளக்குகின்றார்


.3 (גּ கி- கிமெல்): ஆண்டவரை புகழ்வதற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பெரியவர், மாட்சிக்குரியவர். இந்த சொற்கள், மனிதர்கள் மற்றும் மனித தலைவர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு ஆண்டவருடைய உயரிய தன்மைகள் தேடிக்கண்டுபிடிக்க முடியாதவை என்பதையும் விளக்குகிறார் (אֵין חֵקֶר 'ஏன் ஹகெர்- தேட முடியாதது). 


.4 (דּ - தலெத்): ஒரு தலைமுறையின் நோக்கத்தை கடவுள் அனுபவத்தில் பார்க்கிறார் ஆசிரியர். அதாவது ஒரு தலைமுறையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு கடவுளின் புகழை எடுத்துரைப்பதாகும் என்கிறார். இந்த புகழை அவர், வல்லமையுடைய செயல்கள் என்கிறார்.

 தலைமுறைகள் வரலாற்றைக் குறிக்கின்றன. வரலாறு கடத்தப்படவேண்டும். வரலாற்றை சரியாக படிக்கிறவர்கள், அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த ஆயத்தமாக இருக்கிறார்கள்.  


.5 - ஹெ): மனிதர்கள் எதனைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. கடவுளுடைய வியத்தகு செயல்கள், மாண்பின் மேன்மை இவற்றைப் பற்றியே தான் சிந்திப்பதாகச் சொல்கிறார். இது கடவுளை புகழ்தலுக்கு சமமானது என்ற அர்த்தத்தில் வருகிறது


.6 - வாவ்): கடவுளுடைய செயல்கள் அச்சம் தருபவை என சொல்லப்படுகின்றன. இந்த அச்சம் பயத்தினால் ஏற்படுபவையல்ல, மாறாக கடவுள்மேல் உள்ள மாறாத அன்பினால் வருபவை. கடவுளுடைய இந்த அச்சந்தரும் செயல்கள், மாண்புக்குரிய, உயரிய செயல்கள் என்று ஒத்த கருத்தில் திருப்பிக்கூறப்பட்டுள்ளது (גְּדוּלָּה கெதூலாஹ்- உயர்தன்மை). 


.7 ட்ச- ட்சயின்): ஆண்டவரின் உயர்ந்த நற்பண்புகளை நினைப்பது அவரை புழந்து பாடுவதற்கு சமன் என்கிறார். ஒருவருடைய நற்பண்புகளை நினைத்தல், அவர்மேல் உள்ள நல்மதிப்பு மற்றும் விசுவாசத்தை ஆழப்படுத்தும், என்ற தற்கால உளவியல் சிந்தனைகளை அன்றே அறிந்திருக்கிறார் இந்த ஆசிரியர்


.8 - ஹத்): முதல் ஏற்பாடு அடிக்கடி கொண்டாடும் கடவுளைப் பற்றிய பல நம்பிக்கைகளை 

இந்த வரி அழகாக தாங்கியுள்ளது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர் என்பது 

இஸ்ராயேலருடைய நாளாந்த நம்பிக்கை. இந்த இரக்கமும் கனிவும்தான் கடவுளின் மன்னிப்பை மக்களுக்கு பெற்றுத்தருகிறது என இவர்கள் நம்பினார்கள் (חַנּוּן וְרַחוּם יְהוָה ஹனூன் வெராஹம் அதோனாய் - இரக்கமும் பரிவும் உள்ளவர் ஆண்டவர்). 

  இந்த ஆண்டவர் எளிதில் சினம் கொள்ளாதவர் என்கிறார் ஆசிரியர். தெய்வங்களின் கோபம், நோய் மற்றும் போர் போன்றவை துன்பங்களை உலகில் ஏற்படுத்துகின்றன என்று அக்கால ஐதீகங்கள் நம்பின, இதனை மறுத்து உண்மையான இஸ்ராயேலின் தேவனின் குணங்கள் பாராட்டப்படுகின்றன (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அபிம்- மூக்கில் மெதுமை, கோபத்தில் மெதுமை). ஆண்டவருக்கு பேரன்பு என்ற அழகான பண்பு மகுடமாக சூட்டப்படுகிறது (חָסֶד ஹெசெட்- அன்பிரக்கம்).  மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்புகள் ஆண்டவருக்கு மட்டுமே அதிகமாக விவிலியத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்க வேண்டும்


.9 (טֹ - தெத்): ஆண்டவர் அனைவருக்கும் (அனைத்திற்கும்) நன்மை செய்கிறவராக பார்க்கப்படுகிறார். இந்த அனைத்து (כֹּל கோல், சகலமும்) என்பதை அவர் உருவாக்கியவை என காட்டுகிறார் ஆசிரியர். ஆக இந்த உலகத்தில் கெட்டவை என்பது கிடையாது, அனைத்தும் நல்லவை, அவையனைத்தையும் ஆண்டவரே உருவாக்கியுள்ளார் எனக் காட்டுகிறார். ஆண்டவருடைய இரக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக அது அனைத்திற்கும் உரியது. இந்த சிந்தனை சாதாரண யூத சிந்தனையிலிருந்து மாறுபட்டது


.10: - யோத்): இப்படியாக ஆண்டவர் உருவாக்கிய (מַעֲשֶׂה மா'அசெஹ்- உருவாக்கியவை) அனைத்தும் அவருக்கு நன்றி செலுத்துகின்றன. இந்த ஆண்டவர் உருவாக்கியவை என்பவை ஆண்டவருடைய அன்பர்கள் (חָסִיד ஹசிட்- தூயவர், அன்பர்) என பெயர் பெறுகின்றன


.11 (כּ - கப்): இந்த அன்பர்கள் கடவுளுடைய ஆட்சியின் வித்தியாசத்தை அறிவிக்கிறவர்கள் அதாவது அவருடைய வல்லமையை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆண்டவரை அரசராக பார்ப்பதும் அவருடைய அரசில் நன்மைத்தனங்களை பாடுவதும், முதல் ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். இதனைக் கொண்டு அவர்கள் மனித அரசர்களை பாராட்டவும், எச்சரிக்கை செய்யவும் செய்தார்கள்


.12 - லமெத்): இந்த தூயவர்கள் மானிடர்க்கு ஆண்டவரின் வல்ல செயல்களை சொல்கிறார்கள். மானிடர்கள் என்பவர்கள் இங்கே ஆண்டவரை அறியாத வேற்றின மக்களைக் குறிக்கலாம். இந்த மானிடர்களைக் குறிக்க ஆதாமின் மக்கள் (בְנֵי הָאָדָם வெனே 'ஆதாம்) என்ற சொல் பயன்படுகிறது. இந்த சொல் சில வேளைகளில் இஸ்ராயேல் மக்களையும் குறிக்க பயன்படுகிறது. ஆண்டவருடைய ஆட்சிக்கு பேரொளி உள்ளதாகவும் ஆசிரியர் காட்டுகிறார்


.13 מ - மெம்): அனைத்து மன்னர்களுடைய ஆட்சியும் காலத்திற்கு உட்பட்டதே. மன்னர்களின் ஆட்சிகள் தொடங்குகின்றன பின்னர் அவை முடிவடைகின்றன. ஆளுகை என்பது அவர்களின் ஆட்சி நடைபெறும் இடங்கள். இவையும் மாற்றமடைகின்றன. ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் அவர் இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர். இதனைத்தான் ஆசிரியர் அழகாகக் காட்டுகிறார். ஒருவேளை இந்தப் பாடல் இடப்பெயர்விற்கு பின்னர் அல்லது யூதேய அரசு சிக்கலான காலங்களில் இருந்த போது எழுதப்பட்டிருந்தால், இந்த வரி அதிகமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்


.14 (סֹ - சாமெக்): இந்த பதிநான்காவது வரி எபிரேய (அரமேயிக்க) எழுத்தில் நுன்னாக 

ן ,) இருந்திருக்க வேண்டும். எதோ ஒரு முக்கிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நுன் விடப்படுகிறது. அதற்கு பதிலாக சாமெக் வருகிறது, இது பதினைந்தாவது எழுத்து. சில கும்ரானிய படிவங்கள் இந்த பதிநான்காவது எழுத்திற்கும் ஒரு வரியை புகுத்த முயன்றிருக்கின்றன, ஆனால் பிற்காலத்தில் அவை மூலப் பாடலின்படியே விடப்பட்டுள்ளன. கும்ரானிய பிரதியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வரி இவ்வாறு வருகிறது: 'ஆண்டவருடைய வார்த்தைகள் எக்காலத்திற்கும் நம்பக்கூடியவை, அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிகைக்கு உரியவை'   சாமெக் வரி, பாதிக்கப்பட்டவர்களை கடவுள் எப்படி காக்கிறார் எனக் காட்டுகிறது. கடவுள் தடுக்கி விழுகிறவர்களை காக்கிறவராக காட்டப்படுகிறார். இந்த தடுக்கி விழுகிறவர்களை எபிரேய விவிலியம், துன்புறுகிறவர்கள் மற்றும் மற்றவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் போன்றோரைக் குறிக்கிறது (הַנֹּפְלִים ஹநோப்லிம்- விழுகிறவர்கள்: הַכְּפוּפִים ஹப்பூபிம்- ஊக்கமிழந்தவர்கள்). 


.15 (ע '- அயின்): அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்குபவராக கடவுள் காட்டபடுகிறார். இந்த வரியை எபிரேயே விவிலியம், 'அனைத்து கண்களும் உம்மையே எதிர்பார்க்கின்றன' என்ற வரியில் காட்டுகிறது, அத்தோடு கடவுள் அனைத்திற்கும் தக்க காலத்தில் உணவளிக்கிறவர் எனவும் காட்டுகிறது. இங்கே கடவுள் அதிசயம் செய்து, காலங்களை கடந்து அல்லது காலத்திற்கு புறம்பாக உணவளிப்பவராக காட்டப்படவில்லை, மாறாக அவர் தக்க காலத்திலேயே உணவளிக்கிறார். அதாவது காலங்களை அவர் நெறிப்படுத்துகிறார் எனலாம். அதிசங்களை இயற்கைக்கு வெளியில் தேடாமல்

இயற்கையே அதிசயம்தான் என்ற அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது


.16 (פּ , ף - பே): ஆண்டவர் தன் கைகளை திறந்து அனைத்து உயிரினங்களினதும் தேவைகளை நிறைவேற்றுகிறவராக பாடப்படுகிறார். ஆண்டவர் கரங்களை திறத்தல் என்பது, வானங்களை திறந்து மழைநீரை வழங்குவதைக் குறிக்கலாம். மழைநீர் அனைத்து உயிரினங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதால் இப்படி உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஆண்டவரின் கரங்களில் அனைத்து விதவிதமான உணவுகளும் அடங்கியிருக்கின்றன என உருவகங்கள் மூலமாகக் காட்டுகிறாh. 



.17 (צ , ץ, ட்ச- ட்சாதே ): உலக அரசர்கள் தங்களுக்கென்று நீதியை வைத்திருக்கிறார்கள். நாடுகள், கலாச்சாரங்கள், சுய தேவைகள் என்பவற்றிருக்கு ஏற்ப உலக நீதி மாற்றமடைகிறது அல்லது திரிபடைகிறது. ஆனால் கடவுளை பொறுத்தமட்டில் அவரது நீதிக்கு மாற்றம் கிடையாது அவர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளவராகவே இருக்கிறார். இந்த அனைத்து செயல்களில் ஆண்டவரின் தண்டனையும் உள்ளடங்கும். ஆண்டவர் தண்டிக்கும்போதும் நீதியுள்ளவராகவே 

இருக்கிறார். צַדִּיק  יְהוָה ட்சாதிக் அதோனாய் (ஆண்டவர் நீதியுள்ளவர்) בְּכָל־דְּרָכָיו பெகோல்-தெராகாய்வ் (அவருடைய வழிகள் அனைத்திலும்). 



.18 - கோப்): ஆண்டவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி விவிலியத்தில் மிக முக்கியமானது. பல இடங்களில் ஆண்டவர் வானத்தில் இருக்கிறார் என விவிலியம் காட்டினாலும், ஆண்டவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை இந்த வரி ஆழமாகக் காட்டுகிறது. அதுவும் அந்த விசுவாசிகள் கடவுளை உண்மையில் அழைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பையும் தருகிறது


.19 - ரெஷ்): ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மெச்சப்படுகிறார்கள். காட்டுச் சுதந்திரத்தையும், பொறுப்பில்லாத தனிமனித சுதந்திரத்தையும் பாராட்டுகின்ற இந்த உலகிற்கு, கடவுள்-அச்சம் ஒரு உரிமை மீறலாகவே காணப்படும். விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்ற கடவுள் அச்சம் என்பது, மரியாதை மற்றும் அன்பு கலந்த விசுவாச அச்சத்தைக் குறிக்கும். இங்கே மனிதர்கள் பயத்தால் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள் என்றில்லை, மாறாக சட்டங்களில் உள்ள தேவைகள் மற்றும் கடவுளில் உள்ள அன்பின் பொருட்டு அதனை செய்கிறார்கள். இதனைத்தான் ஆசிரியர் பாராட்டுகிறார். இவர்களின் தேவையை கடவுள் நிறைவேற்றுகிறார் என்கிறார்


.20 (שׁ - ஷின்) இந்த வரி கடவுளை பாதுகாக்கிறவராகக் காட்டுகிறது (שׁוֹמֵר ஷோமெர்). ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொண்டவர்களை பாதுகாக்கின்றவேளை, பொல்லார்களை அழிக்கிறார். பாதுகாக்கிறவர் அழிக்கிற வேலையையும் செய்கிறவர் என்ற சிந்தனை பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த சிந்தனை புதிய ஏற்பாட்டில் மெதுவாக மாற்றம் பெறுகிறது


.21- தௌ): இந்த இறுதி வரியில் தன்னுடைய வாயையும், உடல் கொண்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக்கி, இவை ஆண்டவரின் திருப் பெயரின் புகழை அறிவிப்பதாக என்று ஒரு விருப்பு வாக்கியத்தை அமைக்கிறார். உடல் கொண்ட அனைத்தும் என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும்


தி.வெளி 21,1-5

1பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. 2அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.

3பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, 'இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 4அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன' என்றது.

5அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்' என்று கூறினார். மேலும், ''இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது' என்றார்.


யோவானுடைய திருவெளிப்பாட்டின் 21வது அதிகாரம் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் காட்சிப்படுத்துகிறது. இதற்கு முன்னுள்ள அதிகாரங்களில், ஏழு திருச்சபைகள், வானுலக காட்சி, ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், திருச்சபைக்கும், சாத்தானுக்குமான போராட்டம், ஏழு வாதைக் கிண்ணங்கள், மற்றும் அந்திக் கிறிஸ்துவின் தோற்றமும் அழிவும் என்று திருவெளிப்பாட்டை யோவான் காட்சிப்படுத்தினார். இந்த இறுதி அதிகாரங்களில் (19-22), கிறிஸ்துவின் வருகையையும், கடவுளின் நகரத்தையும் காட்சிப் படுத்துகிறார். இந்த அதிகாரம் துன்பப்பட்ட ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் செய்திகளைக் கொண்டமைந்துள்ளன


.1: 

). புதிய விண்ணகமும் (οὐρανὸν καινὸν ஊரானொன் காய்னொன்), மண்ணகமும் (கேன் காய்னேன் γῆν καινήν) ஏற்கனவே விவிலியத்திலே அறியப்பட்டிருக்கின்றன. எசாயா இதனை 

புதுப்படைப்பாக காண்பார் (65,17). நற்செய்தியாளர்களும் இந்த சிந்தனையை பலமாக முன்வைத்தனர். யூத இராபிக்கள் இதனை கடவுள் இஸ்ராயேலை பெரிய வல்லரசாக மாற்றுவார் என்று விளக்கம் கொடுத்தனர், இன்னும் சிலர், கடவுள் பழையதை புதியதால் மீள்நிரப்புவார் என்றும் விளக்கம் கொடுத்தனர். யோவானுடைய காட்சியில் இந்த விளக்கங்கள் அனைத்தும் அடங்கியிருப்பதைக் காணலாம்


). கடல் மறைவு என்பது தீமையின் மறைவைக் குறிக்கும். விவிலியத்தில் கடல் தீய சக்திகளின் உறைவிடமாக பார்கப்பட்டது. ஆண்டவர் இயேசு கடலின் மேல் நடந்தது, பேதுரு கடலில் மூழ்கச் சென்றது, பன்றிகளை கடலினுள் அமிழ்தியது போன்றவை இதனையே குறிக்கின்றன. அத்தோடு கடல் தீமையின் அடையாளம் என்று மட்டுமே கருத முடியாது. கடளுக்கு வேறு அர்தங்களும் உள்ளன. யோவானின் திருவெளிப்பாட்டில், அந்திக்கிறிஸ்து, அந்திக் கிறிஸ்தவர், கடளில் வாழ்ந்த அசுரர்களாக உருவகப்படுத்ப்பட்டனர். (ἀντίχριστος அன்டிகிரிஸ்டொஸ், எதிர் கிறிஸ்து - இது கிறிஸ்துவிற்கு எதிரானவர்களைக் குறிக்கும், அன்றைய உரோமை கொடிய ஆட்சியாளர்களையும் குறித்தது). 


. 2: தூய நகர் என்பது இங்கே புதிய எருசலேமைக் குறிக்கிறது (πόλιν τὴν ἁγίαν பொலின் டேன் ஹகியான்). எருசலேமும் பபிலோனும் ஒப்பிடப்படுவதை அவதானிக்க வேண்டும். பபிலோன் என்பது திருவெளிப்பாட்டில் உரோமையை குறிக்கலாம். (உரோமை, உரோமையர்களின் தலை நகராக இருந்து சீடர்களை துன்புறுத்தியமையே இதற்கு காரணம்). இந்த புதிய எருசலேம் வானுலக காட்சியின் முன்சுவையை தருகிறது. முதல் ஏற்பாட்டில் எருசலேம் மணமகளாகவும் கடவுள் மணமகனாகவும் காண்பிக்கப்படுவது, இங்கே வேறுவிதமாக சொல்லப்படுகிறது. இங்கே வருவது புதிய எருசலேம். இங்கே மணமகள், புதிய எருசலேம் அதாவது திருச்சபை. மணமகன் கிறிஸ்து ஆண்டவர்


. 3: மிகவும் ஆழமானதும் அழகானதுமாக வரி. இந்தக் குரல் அறிவிப்புக் குரலாக இருக்கலாம். கடவுளின் உறைவிடம் என்பது, கிரேக்க மூல மொழியில் கடவுளின் 'கூடாரம்' என்றே இருக்கிறது. இந்தக் கூடாரம் பற்றிய சிந்தனையை யோவான் தன்னுடைய நற்செய்தியில் ஏற்கனவே வார்த்தையைப் (λόγος லொகொஸ்;) பற்றிக் கூறும் போது அலசியிருப்பார் (காண்க யோவான் 1,14). ஆண்டவரின் கூடாரம் என்பது இஸ்ராயேல் மக்கள் மத்தியில் ஆண்டவர் குடியிருந்த சந்திப்புக் கூடாரத்தையும் ஆண்டவரின் திரு இல்லமான எருசலேம் தேவாலயத்தையும் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கியருக்கிறது. இந்த வரியில் கடவுளின் உடனிருப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. மூன்று தடவை 'உடன்' என்ற முன்னிடைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது  பலைவன கூடாரத்தைப்போலவோ அல்லது அழிந்துபோன எருசலோம் தேவாலயத்தைப் போலவோ அன்றி கடவுளின் உடனிருப்பு அசைக்க முடியாதது என்பதனைக் குறிக்கிறது (μετά மெதா, உடன், ஓடு, நடுவில்).  கடவுள் மற்றும் மக்களின் இந்த புதிய உறவைப் பற்றி இறைவாக்கினர்களும் வாக்குரைத்திருக்கிறார்கள். யோவானின் திருவெளிப்பாட்டிலும் இந்த செய்தி முக்கியமானதொன்றாகும்


. 4: கிறிஸ்தவர்களுடைய துன்பங்களான சாவு, துயரம், அழுகை போன்றவை இனி இருக்காது என்று யோவான் அன்பு மொழி கூறுகிறார். இவை மனித குலத்தின் தவிர்க்க முடியாத துன்பியல் காரணிகள், இதற்கு மருந்து கடவுளிடம் இருந்தே வருகிறது என்பது யோவானின் செய்தி


. 5: இப்பொழுது கடவுள் பேசுகிறார். இவ்வளவு நேரமும் முழங்கிய அறிவிப்புக் குரலை அரியணையில் இருந்தவர் ஏற்றுக்கொள்கிறார். அரசவையில் பரிந்துரைகள் வாசிக்கப்பட்டதன் பின் அரசர் அதனை ஏற்றுக்கொள்கின்ற போது அது சட்டமாகிறது. இங்கேயும் கடவுள் புதிய சட்டங்களைக் கொடுக்கிறார். யோவானுடைய காட்சி வெறும் காட்சியல்ல அது உண்மை என்று காட்டப்படுகிறது. அனைத்தையும் புதியனவாக்குதல் என்ற செய்தி யோவானின் படிப்பினைகளில் மிக முக்கியமானது. இது வாழ்க்கையை இயேசுவில் நிலை நிறுத்தி அனைத்தையும் அவரில் உறுதிப்படுத்துவததைக் குறிக்கும்



யோவான் 13,31-35

31அவன் வெளியே போனபின் இயேசு, 'இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். 34'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். 35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்' என்றார்.


இந்த பகுதி ஆண்டவர் தன் சீடர்களோடு அமர்ந்து, தன்னுடைய மரணத்தின் முன் சில முக்கிய படிப்பினைகளை கற்பித்த நிகழ்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இநத் காட்சிக்கு முன் ஆண்டவர் சீடர்களுடைய பாதங்களை கழுவினார், அத்தோடு தன்னை காட்டிக்கொடுப்பவரைப் பற்றியும் சுட்;டிக்காட்டியிருந்தார். சீடர்கள் ஆண்டவரின் மரணத்தைப் பற்றியும், அவரது பாடுகளைப் பற்றியும் அத்தோடு ஆண்டவர் தங்களின் அருகில் இல்லாத நிலையை பற்றியும் நினைத்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், இந்த வரிகள் ஆண்டவரின் வாயிலிருந்து வருகின்றன. இங்கே, மாட்சி மற்றும் அன்பு என்ற இரண்டு முக்கியமான யோவான் நற்செய்தியின் படிப்பினைகள், உரையாடல்களில் மையம் பெறுகின்றன


வவ. 31-32: 

). இவ்வளவு நேரமும் பல முக்கிய படிப்பினைகளை பற்றி கூறிக்கொண்டிருந்த ஆண்டவர், இந்த வரிகளுடன் ஒரு புதிய பகுதிக்குள் நுளைகிறார். யூதாசு வெளியே சென்றவுடன் இந்த நேரம் ஆரம்பமாவது ஒரு அடையாளம் போல காட்சி தருகிறது. யோவான் அடிக்கடி கூறும், நேரம் என்ற குறிப்பிட்ட காலம் இங்கே வந்திருக்கிறது. அந்த தக்க நேரத்திற்குள் ஆண்டவர் சீடர்களையும் உள்வாங்குகின்றார். இந்த நேரத்தை யோவான் மாட்சிக்குரிய நேரமாக காட்டுகிறார். இங்கே பல இறுதிக்கால வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன.


). மாட்சி என்பது யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவிற்கும் கடவுளுக்கும் மட்டுமே உரிய பண்பாக காட்டப்படுகிறது. மாட்சி என்பதற்கு, δόξα தொக்சா என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவரின் பார்வை, தீர்ப்பு, நோக்கு, மரியாதை, கௌரவம் போன்ற அர்தங்களைக் கொடுக்கும். எபிரேய மொழியில் மாட்சியை குறிக்க כָּבוֹד கவோட் என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இதுவும் கடவுளின் மாட்சியையை குறிக்கிறது. யோவான் இந்த சொல்லை அவதானமாக பாவித்து, ஆண்டவர் இயேசுவினுடைய வருகை கடவுளை மாட்சிப்படுத்துவதாகும் என்கிறார். அத்தோடு, ஆண்டவர் இயேசுவும், தன்னுடைய உயிர்பினால் கடவுள் மானிட மகனை மாட்சிப்படுத்துவார் என்ற இன்னொரு கட்டத்தை காட்டுகிறார். இங்கே மாட்சிப் படுத்துதல் ஒரு உறவாக நடைபெறுகிறது. கடவுள் ஆரம்பத்தில் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது, இந்த மாட்சிமை என்ற பணிக்காகவே என்று தொடக்க நூல் அழகாக படைப்புக் கதைகளில் உருவகப்படுத்துகின்றது. கடவுள் மானிட மகனை உடனே மாட்சிப்படுத்துவார் என்பதில் ஒரு அவசரத்தை யோவான் காட்டுகிறார். இது ஆண்டவர் இயேசுவின் கடவுள் தன்மையை குறிக்கலாம், அதாவது இயேசு உண்மையான கடவுள், மாட்சிமை இல்லாத நிலை அவருக்கு கிடையாது என்பதை குறிக்கிறது


வவ. 32-33:  அன்பொழுக பிள்ளைகளே (τεκνία டெக்நியா-பிள்ளைகளே!) என்ற இதய வார்த்தை மூலம் தன் சீடர்களை விழிக்கிறார் இயேசு. சாதாரணமாக பிரியாவிடையின் போது இப்படியான வார்த்தைகள் பாவிக்கப்படுவது வழக்கம். இந்த பிள்ளைகளே என்ற விழிப்புச் சொல் யோவான் குழுமங்களிடையே பாவனையில் இருந்த சொல் என்று சில யோவான் நற்செய்தி அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆண்டவர் எவ்வளவு சொல்லியும் சீடர்கள் அவரின் மரணத்தின் பின் கலங்கி 

அவரைத் தேடுவர், அல்லது அவரில்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்குள் வருவர் என்பதை இயேசு நன்கு அறிந்துள்ளார். அதனால்தான் இங்கே ஒரு தகப்பனைப் போல் பேசுகிறார். இயேசு யூதர்களையும் உள்வாங்கி தன்னுடைய போதனைகளில் மாற்றமோ பிரிவினையோ இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார். ஆண்டவருடைய இடத்திற்கு சீடர்களால் வரமுடியாது என்பது இறைவன் என்றும் இறைவன் என்பதைக் காட்டலாம், சீடர்கள் சீடர்களாய் இருக்கவே அழைக்கப்படுகின்றனர், கடவுளாக மாற அல்ல.  


. 34: இந்த வரிதான் முழு யோவான் நற்செய்தியின் மையச் செய்தி போல. ஆண்டவர் இயேசு தான் எப்படி சீடர்களை அன்பு செய்தாரோ அதே அன்பை ஒருவர் மற்றவரிடம் வாழக் கேட்கிறார்

இதை ஏன் இயேசு புதிய கட்டளை என்று சொல்வதைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே முதல் ஏற்பாடு அன்பைப் பற்றி பல கட்டளைகளை கொடுத்திருக்கிறது. ἀγαπάω அகபாவோ என்ற கிரேக்க சொல்லை இயேசுவின் உதடுகளில் வைக்கிறார் யோவான், நிச்சயமாக ஆண்டவர் அரேமேயத்தில்தான் இந்த செய்தியை சொல்லியிருக்க வேண்டும். இந்த ἀγαπάω அன்பு செய், நல் எண்ணம் கொண்டிரு, நன்மையை நினை, நன்மையை நிறைவாகச் செய், போன்ற ஆழமான அர்தங்களைக் கொண்டுள்ளது. கிரேக்க இலக்கியங்களில் இந்தச் சொல் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு விவிலிய அல்லது கிறிஸ்தவ சொல் என்றே பலர் கருதுகின்றனர்

 தமிழில் அன்பு என்கின்ற சொல், இதன் ஆழத்தை கச்சிதமாக உணர்த்துகிறது. (ஒப்பிடுக: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு, குறள் 80). தமிழில் ஆசை, காதல், பிரியம், சிநேகம், விரும்பம், இஸ்டம் போன்ற சில சகோதர வார்த்தைகள் இருப்பது போல, கிரேக்கத்திலும் பல வார்த்தைகள் பல விதமான அன்பைக் குறிக்கிறது. ἀγαπάω என்பது உண்மையில் தியாக-தாய்மை அன்பைக் குறிக்கும், அதற்கு வரைவிலக்கணமாக இயேசுவின் அன்பை மட்டுமே எடுக்கலாம். இதற்கு உதாரணமாகத்தான் பாதம் கழுவுதலையும் தன்னுடைய உயிரைக் கொடுத்தலையும் ஆண்டவர் செய்தார்


. 35: இஸ்ராயேலருக்கு அடையாளமாக விருத்தசேதனம் இருக்கின்ற போது இப்போது தன்னுடைய சீடர்களுக்கு அடையாளமாகவும், புதிய கட்டளையாகவும் ஆண்டவர் இந்த அன்பை கொடுக்கிறார். இந்த அன்பு சிந்தனையிலும் படிப்பினைகளிலும் இருக்கிற அன்பாக மட்டுமிருக்காமல், செயற்பாட்டிலும் இருக்கிற அன்பாக வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. இந்த அன்புக் கட்டளை பல இடங்களில் ஆண்டவரின் முக்கியமான செய்தியாக யோவான் நற்செய்தியில் ஆழ ஊடுருவி இருப்பதனைக் காணலாம் (காண்க யோவான் 14, 15. 21. 23: 15, 12). 


அன்பு, இன்றைய உலகில் அதிகமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட

வார்த்தையில் மிக முக்கியமானது

அன்பு, என்பது காதல், வீரம், தியாகம், பொறுமை

அமைதி, இரக்கம், சகிப்புத்தன்மை, கல்வி, தெய்வீகம் போன்றவற்றை குறிக்கும்,

அடக்க முடியாத அர்தங்களைக் கொண்டுள்ள இந்தச் சொல்

இன்று, சிற்றின்பக் காமம், கோழைத்தனம், தந்திரம், சுயநலம்

வரட்டு-சுதந்திரம், வன்முறை, பிடிவாதம், அறியாமை 

போன்ற தற்கால மதிப்புக்கால் மழுங்கடிக்கப்படுகிறது

அன்பை உணராதவர்களும், வாழதாவர்களும் 

அதற்க்கு அர்த்தம் கொடுக்க விளைவது மிக ஆபத்தானது


அன்பான ஆண்டவர் இயேசுவே

உமது அன்பை வாழ கற்றுத்தாரும், உமது அன்பால் எம்மை நிறைவாக்கி உமது சீடராக்கும். ஆமென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...