பாஸ்கா காலம் நான்காம் வாரம்
08.05.2022
'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்'
(யோவான் 10,11)
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velaani, Jaffna.
Friday, 6 May 2022
முதல் வாசகம்: தி.பணி 13,14.43-52.
திருப்பாடல் 100.
இரண்டாம் வாசகம்: தி.வெ 7,9.14-17.
நற்செய்தி: யோவான் 10,27-30.
தி.பணி 13,14.43-52.
14அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். 43தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.44அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். 46பவுலும் பர்னபாவும் துணிவுடன், 'கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47ஏனென்றால், 'உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்' என்று எடுத்துக் கூறினார்கள். 48இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு
இக்கோனியாவுக்குச் சென்றார்கள். 52சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கு என்னும் நகரம், உரோமைய கலாத்திய மாநிலத்தின் தெற்கில் அமைந்திருந்தது, புவியியலாளர்கள் இதனை இன்று மத்திய துருக்கியில் இருப்பதாகக் காண்கின்றனர். பவுல் தன்னுடைய முதலாவது திருத்தூது பயணத்தை தொடங்கி, சைப்பிரஸ் தீவில் திருப்பயணத்தை முடித்துக்கொண்டு, பெருகை வழியாக இங்கே வந்திருந்தார். அக்காலத்தில் இந்த உரோமைய காலனித்துவ நகரம் நன்கு வளர்ந்துகொண்டிருந்தது. திபேரியுஸ் சீசர், ஏரோது அரசன், மற்றும் அந்தியோக்கிய அரச பரம்பரை போன்றவர்களின் உறவினர்கள் இந்த நகரில் வசித்து வந்தனர். இந்த காரணத்திற்காகவும், இந்நகர், சின்ன ஆசியாவின் முக்கிய இடங்களில் ஒன்றாக உருவெடுத்தது. பவுல், சைப்பிரஸ் தீவில் தன்னுடைய மறைப்பயணத்தில் வெற்றி கண்டிருந்தார். அதே வல்லமையோடு இங்கே பணியைத் தொடர்கிறார். இந்த முதலாவது பயணம் முழுவதும் பர்னபா பவுலுடன் பயணம் செய்கிறார். பவுலுடைய குழுமத்தில் இருந்த யோவான் மாற்கு இங்கே இவர்களை விட்டுவிட்டு
எருசலேமிற்கு திரும்பினார். என்ன காரணத்திற்காக மாற்கு வீட்டிற்கு திரும்பினார் என்று லூக்கா பதிவுசெய்யவில்லை.
வ.14: ஓய்வு நாளன்று இந்த இருவரும் செபக்கூடத்திற்குச் சென்று அமர்ந்திருந்தது, இவர்கள் தங்கள் யூத மதச் சடங்குகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதனைப் பாவித்து நற்செய்தியை அறிவிக்க முயலுவதையும் காட்டுகிறது. இவர்களின் வருகையை தொடக்கத்தில் யாரும் எதிர்க்காமை, ஆரம்பகாலத்தில் அனைத்து யூதர்களும் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருந்திருக்கவில்லை அல்லது அதனை அறிந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. συναγωγή சுனாகோகே- செபக்கூடம், σαββάτον சபாப்டொன்- ஓய்வுநாள்.
வ.43: இந்த செபக்கூடத்தில் பவுல் முக்கியமான மறையுரையொன்றை ஆற்றுகிறார் (வவ.16-25), வரலாற்றை தனக்கே உரித்தான நடையில் விளக்கிய பவுல், யூதர்களுக்குத்தான் செய்தி முதலில் அறிவிக்கப்பட்டது என்கிறார் (வவ.26-31). இந்த செய்தி நற்செய்தி என்று பின்னர் அழகாக விவரிக்கின்றார் (வவ.32-37). இயேசுவின் வழியால்தான் அனைவருக்கும் பாவமன்னிப்பு உண்டு என்று முழக்கமிடுகிறார், அத்தோடு லேசாக கேட்போரையும் எச்சரிக்கையும் செய்கிறார் (வவ.39-42). இந்த செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள் கோபம் கொள்ளாமலும் அத்தோடு அடுத்த வாரமும் செபக்கூடத்திற்கு வரும்படியும் கேட்கின்றனர், இவ்வாறு இங்கே, பவுலுடைய செய்தி யூதர்களை பொறாமைகொள்ளச் செய்யவில்லை என்பதை நமக்கு லூக்கா காட்டுகிறார். τῇ χάριτι τοῦ θεοῦ. டே காரிடி டூ தியூ- கடவுளின் அருளில்.
வவ.44-46: முந்தின வாரம் யூதர்களுக்கு அறிவித்திருந்த நற்செய்தி இப்போது முழு நகரத்தையும் பற்றிகொண்டிருந்தது. லூக்கா மறைமுகமாக பவுல் அறிவித்த செய்தி யூத போதகர்களின் செய்தியைவிட கவரக்கூடியதாய் இருந்ததால், நகரமே கூடி வருவதாகக் காட்டுகிறார் (πᾶσα ἡ πόλις பாசா ஹே பொலிஸ்), இதனால் சில யூதர்களுக்கு பொறாமை ஏற்படுகின்றது. இந்த பொறாமை இவர்களைத் திருத்தூதர்களுக்கு எதிராக பழித்துரைக்க வைக்கிறது. பவுலும் பர்னபாவும், யூதர்கள் தங்களின் செயலுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று காட்டி அதற்கு திருத்தூதர்கள் காரணம் அல்ல என்பதையும் காட்டுகின்றனர். ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள்தான் யூத மதத்தை பிளவடைய வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்ததை இங்கே நினைவில்கொள்ள வேண்டும்.
வ.47: இந்த வசனம் சிமியோன் ஆலயத்தில் குழந்தை இயேசுவைப்பற்றி சொன்னதையும் (லூக் 2,32), இயேசு திருத்தூதர்களுக்கு கொடுத்த கட்டளையையும் (தி.ப 1,8) நினைவூட்டுகிறது. எசாயா 42,6 மற்றும் 49,6 போன்ற வசனங்கள் இந்த வரிக்கு பின்புலமாக அமைகின்றன. அனைத்து நாட்டினர்க்கும் ஒளி என்பது மிக முக்கியமான மறைபரப்பு வசனம் (לְאוֹר גּוֹיִם லெ'ஓர் கயோயிம் - மக்களினங்களுக்கு ஒளியாக). இந்த கட்டளை இயேசுவிற்கு முன்னமே, கடவுளால்
இஸ்ராயேலருக்கு கொடுக்கபட்டது என்பதை திருத்தூதர்கள் நினைவூட்டுகின்றனர்.
வவ.48-50: 47வது வசனம் யூதரல்லாதோருக்கும், ஏற்கனவே இயேசுவில் நம்பிக்கை கொண்டோருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது (ἔθνη ἔχαιρον καὶ ἐδόξαζον எத்னே எகாய்ரொன் காய் எதொக்ட்சாட்சொன்- மக்களினத்தார் மகிழ்ந்தனர் கடவுளை போற்றினர்). லூக்கா இங்கே திருத்தூதர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையே நடைபெற்ற இழுபறியை ஒப்பிடுகிறார். யூதர்கள் திருத்தூதர்களை விரட்ட புதிய உத்தியைக் கையாளுகின்றனர்.
கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்கள் என்பவர்கள், யூத மதத்திற்கு தழுவ இருந்த முக்கியமான பெண்களைக் குறிக்கலாம். முதன்மைக் குடிமக்கள் என்பவர்கள் கிரேக்க-உரோமைய குடிமக்களைக் குறிக்கலாம். லூக்கா, யூத தலைவர்கள் தங்கள் பொறாமைக்கு சார்பாக சமூக தலைவர்களை பாவிப்பதைக் காட்டுகிறார். கட்டுக்கடங்காத கூட்டஙகள் அதிக வேளைகளில் ஆபத்தாக அமைகின்றன.
வவ.51-52: ஒரு சமூகத்தினுடைய படிவாதம் இன்னொரு சமூகத்திற்கு நன்மையை செய்கிறதை
இங்கே காண்கிறோம். ஆண்டவர் கட்டளையிட்ட படி கால்களின் தூசி (κονιορτός கொனியொர்டொஸ்) இவர்களுக்கு எதிராக தட்டிவிடப்படுகிறது (ஒப்பிடுக மத் 10,14). திருத்தூதர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும் அதனால் வந்த துன்பங்களும் அவர்களையோ அல்லது சீடர்களையோ பாதிக்கவில்லை மாறாக மகிழ்ச்சியைத்தான் தந்தது என்கிறார் லூக்கா. மறைஅறிவிப்பில் துன்பமும் மகிழ்ச்சியே.
திருப்பாடல் 100
1அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
4நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!
5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
அணிநயத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருப்பாடல் ஒரு வகை நன்றிப்பாடல் இயல்பைச் சார்ந்தது. மூன்றுவகை அழைப்புக்கள், மூன்றுவகை உறுதிப்படுத்தல்கள் என்று இரண்டு அடுக்காக அழகான எபிரேய வார்த்தைகளில் இது கோர்க்கப்பட்டுள்ளது.
அ.1). வவ.1-2: மூன்றுவகை அழைப்புக்கள்:
ஆர்ப்பரியுங்கள், மகிழ்வோடு பணிசெய்யுங்கள், பாடலுடன் அவரிடம் வாருங்கள்.
ஆ.1). வ.3: மூன்றுவகை உறுதிப்படுத்தல்கள்:
எம் கடவுள் எங்களை உருவாக்கினார், நாம் அவர் மக்கள், அவர் மேய்சலின் மந்தைகள்.
அ.2). வ.4: மூன்றுவகை அழைப்புக்கள்:
அவர் வாயிலுக்குள் வாருங்கள், நன்றிசெலுத்தி புகழுங்கள், அவர் பெயரை போற்றுங்கள்
ஆ.2). வ.5: மூன்றுவகை உறுதிப்படுத்தல்கள்:
அவர் நல்லவர், அவர் அன்பு-இரக்கம் தலைமுறைக்கும், சந்ததிக்கும் நம்பத்தகுந்தவர்.
இந்த திருப்பாடலை மொழிபெயர்த்த தமிழ்த் தந்தையர்கள் அழகு தமிழில், எபிரேய கவிநயம் குன்றாமல் மொழி பெயர்த்திருக்கிறார்கள். எபிரேய கவிநடைக்குரிய திருப்பிக்கூறுதல், சமாந்தர வார்த்தைகள், ஒத்தகருத்துச் சொற் பயன்பாடுகள் என்று அழகாக இந்தப்பாடல் புனையப்பட்டுள்ளது. கடவுளை நாம் ஏன் நம்ப வேண்டும் என்றும், அதற்கான காரணங்களையும் மென்மையான வரிகளில் ஆனால் ஆழமான விசுவாசத்தில் பாடுகிறார் இந்த பெயர் தெரியாத நம்பிக்கையாளர்.
வ.1: நன்றிப் பாடல் என இந்த திருப்பாடல் தொடங்குகின்றது (מִזְמוֹר לְתוֹדָה மிட்ஸ்மோர் லெதேதாஹ்). ஆண்டவரை வாழ்த்த உரிமை அனைவருக்கும் உரியது என்பது அறிக்கையிடப்படுகிறது (כָּל־הָאָֽרֶץ׃ கோல்-ஹா'ஆரெட்ஸ்).
வ.2: ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுவதும் (בְּשִׂמְחָה பெசிம்ஹாஹ்- மகிழ்ச்சியில்), மகிழ்ச்சி நிறைபாடலுடன் அவர் திருமுன் வருவதும் ஒரே அர்த்தத்தில் வருகிறது (בִּרְנָנָה பிர்நாஹ்- மகிழ்சியில்).
வ.3: ஆண்டவர்தான் கடவுள் (דְּע֗וּ כִּי־יְהוָה ה֤וּא אֱלֹהִים மெ'ஊ கி-அதோனாய் ஹூ' 'எலோஹிம்). இது எபிரேய நம்பிக்கையில் மகி முக்கியமான வரி. இதனை அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். மக்கள் ஆடுகளாகவும், கடவுள் மேய்ப்பவராகவும் காட்டப்படுகிறார் (אֲנַחְנוּ עַמּוֹ 'அனாஹ்னூ 'அம்மோ- நாங்கள் அவர் மக்கள்: וְצֹאן מַרְעִיתוֹ׃ வெட்சோ'ன் மர்'இதோ- மேய்சலின் ஆடுகள்).
வ.4: முதலாவது வரி மீளப் பாடப்படுகிறது. ஆண்டவரின் திருவாயில்களில் நுழையவேண்டும்
(בֹּאוּ שְׁעָרָיו போ'ஊ ஷெ'எரெவ்- அவர் வாயிலுக்கு வாருங்கள்), புகழ்ப்பாடலோடு அவர் முற்றம் வரவேண்டும் (בְּתוֹדָ֗ה חֲצֵרֹתָיו பெதோதாஹ் ஹட்செரோதாவ்- நன்றியில் அவர் முற்றம்), நன்றி செலுத்தி அவர் பெயரை போற்ற வேண்டும் (בָּרֲכוּ שְׁמֽוֹ׃ பாராகூ ஷெமோ- அவர் பெயரை ஆசீர்வதியுங்கள்).
வ.5: ஆண்டவரைப் பற்றிய மிக அழகான வார்த்தைகள்.
ஆண்டவர் நல்லவர் (כִּי־טוֹב יְהוָֹה கி-தோவ் அதோனாய்- ஆண்டவர் நல்லவர்). அவர் பேரன்பு என்றும் உள்ளது (לְעוֹלָם חַסְדּוֹ லொ'ஓலாம் ஹஸ்தோ- அவருடைய பேரன்பு என்றும் உள்ளது).
தலைமுறைதோரும் அவர் நம்பத்தக்கவர் (דֹּר וָדֹ֗ר אֱמוּנָתֽוֹ׃ தோர் வாதோர் 'எமூனாதோ).
தி.வெ. 7,9.14-17:
9இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.
14நான் அவரிடம், 'என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: 'இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். 15இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். 16இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. 17ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.'
ஏழாவது அதிகாரத்தில் யோவான் புதிய இஸ்ராயேலை காட்சியில் காண்கிறார். ஆறு தொடக்கம் எட்டு வரையான அதிகாரம், ஏழு விதமான முத்திரைகளை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏழாவது அதிகாரம் ஆறாவது மற்றும் ஏழாவது முத்திரைகளுக்கிடையிளான இடைவெளியாக வருகிறது. வெளிப்பாட்டு நூல்களில், கதாநாயகன், காட்சி மற்றும் குரல் போன்ற இரண்டு விதமான வெளிப்பாடுகளை பெறுவார். இந்தப் பகுதியில் யோவான் இரண்டு விதமான வெளிப்பாடுகளைப் பெறுகிறார், அதாவது காட்சி காண்கிறார் அத்தோடு வானக குரலையும் கேட்கிறார்.
வ.9: இந்த வசனம், பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. விவிலியத்தில் பல இடங்களில் கடவுளுக்கு அனைவரும் சமமே என்ற வாதம் வலுவாக அறிவிக்கப்படும். அப்படியான
இடங்களில் இந்த வசனம் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே வவ.5-8 இஸ்ராயேல் குலத்திலிருந்து செம்மறியின் முன்நின்றவர்களை 144,000 என்று எண்ணிக்கை காட்டியது. இப்போது இஸ்ராயேல் குலமல்லாத எண்ணமுடியாதவர்கள் (ὄχλος πολύς, ὃν⸃ ἀριθμῆσαι ஒக்லொஸ் பொலூஸ் ஹொன் அர்pத்மேசாய்) செம்மறியின் முன் நிற்பதாக காட்டப்படுகிறது. இஸ்ராயேல் குலத்திலிருந்தவர்களை எண்ணக்கூடியதாகவும், மற்றவர்களை எண்ணமுடியாதனவாகவும் யோவான் காட்டுவதால், கடவுள் ஒரு குறிப்பிட்ட இன-குல மக்களுடையவர் இல்லை என்பது தெளிவாகிறது. (மிக அருமையான வரி. கடவுளை கட்டுப்படுத்தி அவருக்கு தனிப்பட்ட மொழியையும், மார்க்கத்தையும் கொடுக்க நினைக்கும் அறிவில்லாதவர்க இதனை உணரவேண்டும். பயங்கரவாதமும் பயமும் கடவுளை அல்ல சாத்தானைத்தான் மக்களுக்கு எண்பிக்கும்).
இந்த கூட்டம், எண்ணிக்கையில் அடங்காமல், பல நாட்டு-குல-மக்களின-மொழியையும் சார்ந்திருந்தார்கள். அனைவரும் வித்தியாசமின்றி ஆட்டுக்குட்டிக்கு முன் நிற்கின்றனர். வெண்மையான தொங்கலாடை (στολὰς λευκὰς ஸ்டொலாஸ் லெஉகாஸ்- வெண்மையான தொங்கலாடை) அவர்களின் தூய்மையைக் குறிக்கிறது. கையில் குருத்தோலையை (φοίνικες ἐν ταῖς χερσὶν பொய்நிகெஸ் என் டாய்ஸ் கெர்சின்) பிடித்திருந்தமை அவர்கள் வெற்றியடைந்தவர்கள் என்பதனைக் காட்டுகிறது. இந்த எண்ண முடியாத தொகை தொடக்கத்தில் கடவுள் ஆபிராகமிற்கு வாக்களித்த சந்ததியை நினைவூட்டலாம். செம்மறியின் முன் பிரிவினை அடையாளங்கள் காணாமல் போய்விட்டன.
வவ.10-13: காட்சியமைப்பு மாறுகிறது. பேசுகிறவர்கள் வேறு நபர்கள். இந்த எண்ணிக்கையில் அடங்காதவர்கள் விசுவாச பிரமாணம் செய்கிறார்கள். கடவுளிடமிருந்தும், ஆட்டுக்குட்டியிடமிருந்தும் தான் மீட்பு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். வானதூதர்கள், மூப்பர்கள், நான்கு உயிர்கள் அனைத்தும் கடவுளை வணங்குகின்றன. ஆக இந்த எண்ணிக்கையில் அடங்காதோர் வாணவர்களின் நிலையை அடைந்துவிட்டார்கள் என்பது புலனாகிறது. அத்தோடு அவர்கள் கடவுளை தங்கள் கடவுளாகவும் அவருக்கே புகழ்ச்சி, பெருமை, ஞானம், நன்றி, மாண்பு, வல்லமை, வலிமை, போன்ற பண்புகள் உரியன என்கிறார்கள். இதற்கு முன் அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் பொய்த்துப் போய்விட்டன இதனால்தான் அவர்கள் ஆமென் என்கிறார்கள் (ἀμήν அமென்). இந்த வேளையில் மூப்பர்கள் ஒருவர் யோவானிடம் கேள்வி ஒன்றையும் முன்வைக்கிறார். அந்த கேள்வியில் இந்த எண்ணில் அடங்காதவர்கள் எந்த மக்கள் என்பது வினவப்படுகிறது. ஆக யோவானுக்கு இவர் வெளிப்படுத்தினால் அன்றி தெரியாது என்பதும் புலப்படுகிறது.
வ.14: யோவான் இந்த மூப்பரை தலைவரே (κύριέ °μου, கூரியே மூ- என் தலைவரே) என்று அழைப்பது, அவர் இந்த உயிர்த்தவர்களைவிட உயர்ந்தவரல்ல என்பதை காட்டுகிறது, அத்தோடு யோவான் தன்னுடைய அறியாமையையும் வெளிப்படுத்துகிறார். இந்த சொல் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மிக உயர்ந்த மரியாதைச் சொல். சீசருக்கு இந்த சொல் பயன்பட்டது, இயேசுவையும்
இந்த சொல்லால் விழித்தார்கள். கொடிய வேதனை என்பது இந்த புத்தகத்தின் காலக்கோட்டில் உரோமைய கலாபனைகளையும் துன்பங்களையும் குறிக்கும். தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தில் தோய்த்ததன் வாயிலாக இயேசுவின் ஆசீர்களை பெற்றுக்கொள்கின்றனர்.
(2019, பாஸ்கா விழாவன்று கொல்லப்பட்ட அனைத்து ஈழ கிறிஸ்தவர்களும், நல் மக்கள் அனைவரும் இச் சாதியினரே). ஒப்பிடுக தானியேல் 12,1: மத் 24,21: மாற் 13,19.
வ.15: இந்த வசனம், இவர்களுக்கு இனி தோல்வியில்லை என்பதைக் குறிக்கிறது. திருப்பாடல்கள், ஆண்டவரின் திருத்தலத்தில் நாள் முழுவதும் இருப்பதை கெடையாக பாடுகின்றன, இங்கே அந்த சந்தர்ப்பம் இவர்களுக்கு மிகவும் இலாபகமாக கிடைக்கிறது, கடவுளும் ஓர் ஆயனைப்போல அவர்களில் நடுவில் இருப்பார், அதாவது இனி கலாபனைகள் இராது என்கிறார் யோவான். இனி இவர்கள் ஆண்டவரை மையமாகக் கொண்ட கூட்டம். σκηνώσει ἐπ᾿ αὐτούς ஸ்கேநோசெய் எப் அவ்டூஸ் - அவர்கள் மத்தியில் குடிகொள்வார். இந்த சொல் யோவான் நற்செய்தியல் 1,14 பயன்படுத்தப்பட்ட சொல். கூடாரமடித்தல் இவர்களுக்கு பாலைவன அனுபவத்தை நிச்சயமாகக் கொடுக்கும்.
வவ.16-17: இவ்வுலக சாதாரண தேவைகளான பசி, தாகம், உறைவிட தேவை போன்றவையும்
இருக்காது என்கிறார். வாழ்வளிக்கும் நீருற்று என்பது நிலை வாழ்வை அல்லது கிறிஸ்துவோடு
இணைந்த வாழ்வை குறிக்கிறது. கண்ணீரைத் துடைத்தலும், கடவுளின் பாதுகாப்பைக் குறிக்கிறது.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படியான துன்பங்களைக் தாண்டி இயேசுவிற்கு சாட்சியம் பகர்ந்தார்கள் என்பதனையும், துன்புறுகிறவர்கள் எவ்வாறு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த திருவெளிப்பாடு அழகாக காட்டுகிறது. பல ஆயிரம் வருடங்கள் தாண்டியும் கிறிஸ்தவர்கள்; (அத்தோடு மற்றவர்களும்) தங்களது மத நம்பிக்கையின் பொருட்டு தொடர்ந்து துன்புற்று வருவது தடுக்கமுடியாத கதையாகிப்போகிறது.
கடவுள் அவர்களின் கண்ணிர் அனைத்தையும் துடைப்பார் என்பது மிக அழகான வரி (καὶ ἐξαλείψει ὁ θεὸς πᾶν δάκρυον ἐκ τῶν ὀφθαλμῶν αὐτῶν காய் எக்சாலெப்செய் ஹொ தியொஸ் பான் தாக்குவொன் என் டோன் ஒப்தால்மோன் அவ்டோன்- ஆண்டவர் அனைத்து கண்ணீரையும் அவர்கள் கண்களிலிருந்து துடைத்துவிடுவார்).
யோவான் 10,27-30:
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்' என்றார்.
யோவான் நற்செய்தி பத்தாவது அதிகாரம் இயேசுவை நல்ல ஆயனாக அடையாளப்படுத்தி விளங்கப்படுத்துகிறது. ஆயர் அல்லது ஆயத்துவம் என்பது, விவிலியத்தில் மிகவும் அறியப்பட்ட கடவுளின் அடையாளம். Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός. எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலொஸ்- நானே நல்ல ஆயன், ὁ ποιμὴν ὁ καλὸς τὴν ψυχὴν αὐτοῦ ⸀τίθησιν ὑπὲρ τῶν προβάτων· ஹொ பொய்மேன் ஹொ காலொஸ் டேன் ப்சுகேன் அவ்டூ திதேசின் ஹூபெர் டோன் புரொபாடோன் - நல்ல ஆயன் தன் உயிரை தன் ஆடுகளுக்காக கொடுப்பான் (காண்க 10,11).
அனைத்து மக்களினங்களைப் போலவும், இஸ்ராயேல் மக்களும் நாடோடிகளாக வாழ்வைத் தொடங்கி பின்னர் நிலையான குடிகளாக தங்களை மாற்றிக்கொண்டவர்களே. தமிழர்களாகிய நாமும் எதோ ஒரு காலத்தில் இப்படியான நாடோடி மேய்ச்சல்காரர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
விவிலியம் காட்டுகின்ற முதலாவது ஆயன் ஆபேல். ஆபிராகாம் தொடங்கி தாவீது அரசர்வரை அனைவரும் ஆயர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆயர்களிலும் ஏழைகள், எளியவர்கள், அத்தோடு யாக்கோபு போன்ற வல்லமையுள்ள வளர்ப்பாளர்கள் என்ற பிரிவினைகளும் இருந்திருக்கின்றார்கள். வேளாண்மை, இஸ்ராயேல் மக்களிடையே தொடங்கிய பின்னர்கூட, இந்த ஆயத்துவம் இவர்களிடையே மிக முக்கியமான தொழிலாகவும், கலாச்சாரமாகவும் இருந்தது. மந்தைகள் எப்போதும் மென்மையானதாகவும், செயற்திறனற்றதாகவும், கூட்ட-கூச்ச-சுபாவம் உடையதாகவும், முழுமையாக தமது ஆயர்களின் குரலை நம்பியதாகவும் காணப்படுகின்றன. பலமற்ற இந்த மந்தைகளைச் சுற்றி பலமான வேட்டை மிருகங்கள் என்றுமே நிறைந்திருந்தன. இதற்குள் மனித மிருகங்களும் அடங்கும். இதனாலே ஆயத்துவம் மிக முக்கியமான காத்தல் கலையாக உருவெடுத்தது. மேய்ச்சல் நிலங்களை கண்டு கொள்ளுதல், தண்ணீர் தேசங்களை அடையாளம் காணல், பத்திரமாக அவற்றை நோக்கி மந்தைகளை வழிநடத்துதல், கர்ப்பமுற்ற சினையாடுகளை பாதுகாத்தல், குட்டியாடுகளைத் தூக்கி வளர்த்தல் போன்ற பலவகையான இனிமையான தொழில்களைக் கொண்டது ஆயத்துவம். ஆயர்கள் சாதாரண உடைகளையும் பாதுகாப்பு ஆயுதங்களையும் கொண்டிருந்தனர். கடினமான உடை, கோல், தோற்பை, தண்ணீர்ப்பை, கவண் மற்றும் கவண் கற்கள் போன்றவையாகும். இது கரடுமுரடாக இருந்தாலும் கண்ணியமான தொழில்.
இப்படியான சாதாரன மனித வாழ்வினுடைய, இந்த அழகானதும் ஆனால் கடினமானதுமான வாழ்க்கைமுறை, பின்னாளில் தலைவர்களின், கடவுளின் அடையாளமாக மாறியது. விவிலிய ஆசிரியர்;கள், அரசர்களையும் தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஆயர்களாக வர்ணிக்கின்றனர். மோசே தொடங்கி தாவீது வரை தலைவர்கள் இந்த பணியை செய்தவர்களே. எல்லாவற்றிக்கும் மேலாக விவிலிய ஆசிரியர்கள் கடவுளையே நல்ல ஆயனாக வர்ணித்து படம் பிடித்தனர். இந்த சிந்தனை இஸ்ராயேல் மக்களுக்கு மட்டுமே உரிய சிந்தனை அல்ல. தலைவர்கள் தவறியது போது அவர்களை கண்டித்த இறைவன், தன்னையே நல்ல ஆயனாக இறைவாக்கினர் வழியாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார் (காண்க எரேமியா 10,21: 23,1-4: எசேக் 34,1-10: செக் 10,3: தி.பா 23: எசா 44,28: லூக் 15,3-7: மத் 15,24: யோவான் 10,1-29). இன்றையை நற்செய்தியில் யோவான், ஆண்டவர் இயேசுவை உண்மையான ஆயனாக காட்டுவதனைப் சற்று பார்ப்போம்.
வ.27: ஆடுகளுக்கு, தன் ஆயனின் குரல் தெரிந்திருக்க வேண்டும், தம் ஆயனை அவை பின்பற்ற வேண்டும், அத்தோடு ஆயனுக்கு தன் ஆடுகளைத் தெரிந்திருக்கவேண்டும். தெரிந்திருத்தல், பின்பற்றல், செவிசாய்த்தல் ஆயனுக்கும் ஆடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவை காட்டுகிறது, இவை தனக்குரிய பன்பு என்கிறார் இயேசு ஆண்டவர். ஆயனுக்கு ஆடுகளின் மணம் தெரிந்திருக்க வேண்டும் என்பது திருந்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்குவின் அழகான சிந்தனை. τῆς φωνῆς μου ἀκούουσιν டேஸ் போனேஸ் மூ அகூஊசின்- என் குரலுக்கு செவிகொடுக்கின்றன. κἀγὼ γινώσκω αὐτὰ καὶ ἀκολουθοῦσίν μοι, காகோ கினோஸ்கோ அவ்டா காய் அகொலூதூசின் மொய்- எனக்கு அவற்றை தெரியும் அத்தோடு அவை என்னை பின்பற்றுகின்றன.
வ.28: சாதாரன ஆயர் ஆடுகளுக்கு உணவை அளிக்கிறார், ஆனால் ஆண்டவர் இயேசு, தான் நிலைவாழ்வை அளிப்பாதாக கூறுகிறார் (ζωὴν αἰώνιον ட்சோஏன் அய்யோனிஓன்- நிலை வாழ்வு). சாதாரண ஆயனிடமிருந்து எப்போதாவது ஒருநாள் ஆடுகள் பிரியும் அல்லது அழிந்து போகும், ஆனால் இயேசு தன்னுடைய ஆயத்துவத்தில் அந்த ஆபத்தில்லை என்று நம்பிக்கை அளிக்கிறார் καὶ οὐ μὴ ἀπόλωνται காய் ஊ மே அபொலோன்டாய்- அவை அழியா. இந்த வசனங்கள் இயேசு கடவுள் என்பதற்கு நல்ல உதாராணங்கள். (தங்களை அரச-மத ஆயர்கள் என்று சொல்பவர்கள்,
இன்று காப்பதைவிட அழிப்பதையே தொழிலாக செய்கிறார்கள்).
οὐχ ἁρπάσει τις⸃ αὐτὰ ἐκ τῆς χειρός μου - ஊக் ஹர்பாசெய் டிஸ் அவ்டா எக் டேஸ் கெய்ரொஸ் மூ- யாரும் என் கையில் இருந்து அவர்களை பிரிக்க முடியாது.
வ.29: இயேசு, ஏன் தன்னுடைய ஆயத்துவத்தும் நித்தியமானது அத்தோடு அழிக்க முடியாதது என்று விளக்கம் கொடுக்கிறார். ஆயத்துவம் கடவுளிடமிருந்து வரவேண்டும். இயேசுவிற்கு ஆயத்துவம் கடவுளிடமிருந்தே வருகிறது, இதனால், அதனையோ அல்லது அவரது ஆடுகளையோ யாரும் பிரிக்க முடியாது என்கிறார்.
ஏற்கனவே தன் கையிலிருந்து தன் ஆடுகளை யாரும் பிரிக்க முடியாது என்றவர், தன் தந்தையின் கையிலிருந்தும் அவர்களை பிரிக்க முடியாது என்கிறார். ஆடுகள் ஒன்றே, தந்தையும் தனயனும் ஒன்றே. தந்தை பெரியவர் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது - πάντων μεῖζόν பன்டோன் மெய்ட்சோன்- பெரியவர். இந்த சொல்லிற்கு பெரியவர், முதன்மையானவர், பழமையானவர் என்ற அர்த்தங்கள் பல உள்ளன.
இந்த வரியை 'என் தந்தை எனக்களித்தது, அனைத்திலும் பெரிது, அதை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது' என்றும் மொழிபெயர்க்கும் வாய்பு உள்ளது.
வ.30: இந்த வசனத்ததை அவதானமாக நோக்க வேண்டும். 'ஒன்றாய் இருக்கிறோம்' என்பதில் எழுவாய் பொருள் 'ஒன்றாய்' என்பதாகும (ἐγὼ καὶ ὁ πατὴρ ἕν ἐσμεν.). இது கிரேக்க மொழியிலும் தமிழ் மொழியிலும் பலர்பால் வகையைச் சார்ந்தது. இன்னும் இலகுவாக மொழிபெயர்த்தால், நானும் தந்தையும் ஒரே பொருளாய் இருக்கிறோம் என்றும் கொள்ளலாம். இங்கே யோவான் இரண்டு அர்தங்களை ஆழமாக சொல்கிறார்.
அ) நல்ல ஆயன்-தந்தையாகிய கடவுள்-இயேசு.
ஆ) முதல் ஏற்பாட்டில் தந்தையாகிய கடவுள் தன்னை நல்ல ஆயன் என்றுசொன்னததை மீண்டுமாக நினைவூட்டி, தான்தான் அவர், அவர்தான் தான், என்று சொல்கிறார் ஆண்டவர் சொல்வதாக பதிகிறார் யோவான்.
ஆயத்துவம் எவருடையதுமான பரம்பரை சொத்து கிடையாது.
எவரும் ஆயர்களாக பிறக்கவும் முடியாது.
தனது மந்தைகளை மேய்ப்பதற்காகவும், மந்தைகளுக்கு பணிசெய்வதற்காகவும்,
கடவுள்தான், தன் ஆயர்களை தெரிவு செய்கிறார்.
ஆயத்துவம் ஒர் அழைப்பு, தொழிலல்ல.
உண்மையில் மந்தைகளே ஆயர்களின் முதல்வர்களும், முதலாளிகளுமாவர்.
தகுதியில்லாதவர்கள் தங்களைத் தாங்களே ஆயர்களாக்கி,
மந்தைகளைச் சிதறடித்து அழிவிற்குக் கொண்டுசெல்கின்றனர்.
சில மந்தைகளும் பகுத்தறிவில்லாமல்,
ஆயருக்கும் ஆபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்,
அழிவைத் தேடுகின்றன. 'வெறும் மந்தைகள்'
நடிகர்களின் படங்களுக்கு பால் ஊற்றுவதும்,
அரசியல் தலைவர்களை தெய்வங்களாக பார்த்து காலில்கூட விழுவதும்,
இதற்கு நல்ல உதாரணங்கள்.
சோம்பேரி மந்தைகளும், பிழையான ஆயர்களும்
ஆபத்தானவர்கள்.
அன்பான நல்ல ஆயனே, ஆண்டவர் இயேசுவே!
உம்முடைய மந்தைகளுக்கு நல்ல அறிவையும், நல்ல ஆயர்களையும் தாரும். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக