சனி, 28 மே, 2022

ஆண்டவரின் விண்ணேற்பு விழா: Ascension of the Lord - 2022 C


 ஆண்டவரின் விண்ணேற்பு விழா: Ascension of the Lord - 2022 C


ஆண்டவரின் விண்ணேற்பு விழா

'நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.'

(எபி 10,23)

M. Jegankumar Coonghe OMI, 

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai, 

Jaffna. 

Saturday, 28 May 2022



முதலாம் வாசகம்: தி..1,1-11.

திருப்பாடல்: தி.பா. 47.

இரண்டாம் வாசகம்: எபி. 9,24-28.19-23.

நற்செய்தி: லூக்கா 24,46-53.



விண்ணேற்ப்பு என்னும் சிந்தனையை விவிலிய நூல்களும் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களும் உள்வாங்கியிருக்கின்றன. முதல் ஏற்பாடு, ஏனோக்கு மற்றும் எலியா போன்றவர்கள் விண்ணிற்கு சென்றதாக காட்சி அமைக்கின்றது (காண்க தொ.நூ 5,24: 2அர 2,11). மோசே கூட, அவருடைய இறந்த உடலை மக்கள் காணாதபடியால் விண்ணகம் சென்றார் என இஸ்ராயேல் மக்கள் நம்பினர். இராபேல் தோபியாவின் கண்முன்னால் வானகம் ஏறிச்சென்றதை தோபித்து நூல் காட்டுகிறது (காண் தோபி 12,20). ஏற்றுக்கொள்ளப்படாத பல நூல்களான 4ம் எஸ்ரா, 2ம் பாருக்கு, போன்ற காட்சி நூல்களும் இந்த சிந்தனையை ஆழமாக முன்வைக்கின்றன. இதைவிட வேறு சில யூத நூல்களும் இப்படியான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றன. ஆரோனின் சாட்சியம் என்ற நூல் அவர் கடவுளின் அரியணைக்கு ஏறிச்சென்றதாக கூறும் அதேவேளை சில கும்ரான் சுருள்களும் நீதிமான் என்னும் பெரும் தலைவரும், வானகம் ஏறிச்சென்றார் என்று கூறுகின்றது (காண் 4கும்ரான் 491). ஆபிராகாம் ஈசாக்கு போன்றோரும் இவ்வாறு வானகம் சென்றதாகவும் சில வெளிப்பாட்டு நூல்கள் காட்டுகின்றன. ஏறுதல்-இறங்குதல் என்னும் சிந்தனை, மோசே சீனாய் மலையின் மீது ஏறி கடவுளின் வார்த்தையை பெற்றுக்கொண்டு இறங்கினார் அத்தோடு மேலே உயரமான இடத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்ற சிந்தனையிலிருந்து தொடங்கியது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிய ஏற்பாடு ஆண்டவர் 

இயேசுவின் மரணத்திற்கு பின்னர், அவர்தாமே உயிர்த்து விண்ணுலகம் ஏறினார் என்பதை காட்டுகின்றது

 நற்செய்தியாளர்கள் இயேசு விண்ணிற்கு சென்ற நிகழ்வை தானியேலில் காணப்படும் மானிட மகனுடன் (காண்க தானியோல் 7,13) ஒப்பிடுகின்றனர். மேகங்களில் இயேசு மேலே செல்லும் நிகழ்வு, இயேசு மேலுலகை சார்ந்தவர் என்பதனைக் காட்டுகிறது. இந்த சிந்தனையை யோவான் அதிகமாக பயன்படுத்துவார் (காண்க யோவான் 3,13: 6,62). இது இயேசுவிற்கு கடவுளோடு இருந்த நெருங்கிய தொடர்பையும், அவரது இறைதன்மையையும் காட்டும் அடையாளமாகும். இந்த சிந்தனைகளையும் தாண்டி, எபிரேயர் திருமுகம், இயேசுவை வானகத்திற்கு ஏறிச்சென்ற தலைமைக் குருவாகக் காண்கின்றது. இந்த தலைமைக் குருவால்தான் மனித குலம் தன்னுடைய பழைய பாவங்களுக்கு பரிகாரம் செய்ய முடிந்தது என்பதனையும் விவரிக்கின்றது. பவுல் தன்னுடைய திருமுகங்களில், காலம் வரும்போது இயேசுவைப் போல மக்களும் வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என எழுதுகிறார் (காண்க 1தொச 4,17). இச் சிந்தனையை திருவெளிப்பாடும் காட்டுகிறது (காண்க திருவெளிப்பாடு 11,12). 


திருவெளிப்பாடு 1,1-11.


1தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார் 2விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். 3இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். 4அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், 'நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். 5யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்' என்று கூறினார். 6பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், 'ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?' என்று கேட்டார்கள்.7அதற்கு அவர், 'என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல் 8ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்' என்றார். 9இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. 10அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, 11'கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' என்றனர்.


வவ.1-3: லூக்கா தன்னுடைய இரண்டாவது நூலான திருத்தூதர் பணி நூலையும் முதலாவது நூலின் பெறுநரனான தியோபிலுவிற்கே எழுதுகிறார். Θεόφιλος தியோபிலொஸ் என்பவர் அல்லது என்பது, இறைவனின் அன்பரைக் குறிக்கலாம். அல்லது ஒரு மரியாதைக்குரிய தனி நபரைக் குறிக்கலாம். உரோமைய பேரரசில் அனைவரினாலும் மரியாதை செய்யப்பட்ட ஒருவர், லூக்கா ஆண்டவரின் வரலாற்றை எழுதுவதற்கு நிதியுதவி செய்தார், அவருக்கே லூக்கா தன்னுடைய நூல்களை சமர்பித்ததாகவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் யாராக இருந்தாலும், இங்கே நோக்கப்பட வேண்டியது லூக்காவின் செய்திகளையாகும். லூக்கா இயேசு விண்ணேற்றமடைந்த நிகழ்வை இயேசுவின் முதலாவது பாகமாகக் காண்கிறார். அத்தோடு இயேசு தான் திருத்தூதர்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிய பின்னர்தான், விண்ணேற்றம் அடைந்தார் என்கிறார். இதனால் இயேசுவின் விண்ணேற்றம் அவருடைய கட்டுப்பாட்டில்தான் நடந்தது என்கிறார். இயேசு உயிர்த்த நாளில் இருந்து விண்ணேற்றம் அடையும் நாள்வரை, இந்த குறிப்பிட்ட நாட்களில் அவர் திருத்தூதர்களோடு பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் புலப்படுகிறது. இந்த செயற்பாடுகள் இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதைக் காட்டுகின்றன. இயேசு இறந்த பின்னர் அவருடைய உடல் திருடப்பட்டது, அவர் உண்மையிலேயே உயிர்க்கவில்லை என்ற சில கிறிஸ்தவ எதிர்போக்குகள் அக்காலத்தில் முன்வைக்கப்பட்டன, இதனை எதிர்க்க வேண்டிய தேவையும் லூக்காவிற்கு இருந்தது. மூன்றாவது வசனத்தில் உள்ள நாற்பது நாட்கள் என்பது அவர் நாற்பது நாட்களும் தொடர்ச்சியாக தோன்றினார் என்பதை குறிக்காது. நாற்பது நாட்கள் என்னும் காலப் பகுதி ஒரு நிறைவான காலப்பகுதியாக விவிலியத்தில் அங்காங்கே காணப்படுகிறது

 நாற்பது ஆண்டுகள் விடுதலைப்பயணம்

 எலியாவின் நாற்பது நாட்கள் பயணம்

 மோசேயின் நாற்பது நாட்கள் சீனாய் மலையுச்சி தியானம்,

 தாவீதின் நாற்பது ஆண்டுகால ஆட்சி

 இயேசுவின் நாற்பது நாட்கள்; பாலை வன அனுபவம் 

  என்று இந்த நாற்பது என்ற அளவு, உண்மையில் ஒரு நிறைவான காலத்தை காட்ட முயல்கிறது


.4: இயேசுவின் கட்டளைகள் மீளறிவிக்கப்படுகிறது. இயேசு திருத்தூதர்களுடன் உணவருந்தும் போதுதான் இந்ந கட்டளைகளைக் கொடுத்தார் என்று கூறுவதனால் இயேசுவின் உயிர்ப்பு ஒரு திப்பட்ட மன அனுபவம் அல்ல, மாறாக அது ஒரு வரலாற்று உண்மை நிகழ்வு என்று விவரிக்கின்றார். அத்தோடு இந்த கட்டளைகள் இயேசுவால் சீடர்களுக்கு கொடுக்கப்பட்டது, மாறாக சீடர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள் அல்ல என்பதையும் காட்டுகிறார் லூக்கா. எருசலேமில் காத்திருக்கச் சொன்னது, ஏற்கனவே லூக்கா நற்செய்தியிலும் வேறு வார்த்தைகளில் பதியப்பட்டுள்ளது (காண்க 24,49). எருசலேமின் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் இந்த வசனத்தை எடுக்கலாம்


.5: ஏற்கனவே இயேசு திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவின் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை யோவான் கூறியிருக்கிறார் (காண்க லூக்கா 3,16). இது இங்கே நிறைவடைகிறது. இயேசுவின் சீடர்களில்  சிலரும் தண்ணீர் திருமுழுக்கை (ἐβάπτισεν ὕδατι எபாப்டிசென் ஹூதாடி- தண்ணீரால் திருமுழுக்கு) பெற்றவர்களாக இருந்திருக்கலாம், இங்கே இயேசுவின் உண்மை திருமுழுக்கான தூய ஆவியின் திருமுழுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. யோவானின் தண்ணீர் திருமுழுக்கும், இயேசுவின் பெயரால் பெற்ற தூய ஆவியார் திரு முழுக்கும், ஆரம்ப காலத்தில் ஒரே நேரத்தில் இருந்ததாகவும் திருத்தூதர் பணி நூலில் காணலாம். திருச்சபை தூய ஆவியின் திருமுழுக்கை மட்டுமே உண்மையானதாக அங்கீகரித்தது, நீர் திருமுழுக்கை அடையாளமாகவும் அல்லது ஆயத்தமாகவும் நோக்கியது


வவ. 6-7: திருத்தூதர்களின் இந்தக் கேள்வி அவர்களின் இஸ்ரேலிய பாரம்பரிய நம்பிக்கையைக் காட்டுகிறது. பபிலோனியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், எரோதியர்கள், உரோமையர்கள் என பலரால் ஆட்சிசெய்யப்பட்டவர்கள், தங்களுக்கு சுதந்திரமும் தாவீதின் ஆட்சியைப்போல சொந்த 

ஆட்சியுரிமையும் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். இயேசுவின் பதில் இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது

 ) காலங்களை நிர்ணயிப்பவர் இறைவன் ஒருவரே

 ) மனிதர்களின் ஆட்சி மாறினாலும் உள்ளார்ந்த சுதந்திரத்தை அவர்களால் தர இயலாது. அத்தோடு உண்மையான ஆட்சியுரிமை கடவுளிடமிருந்தே வருகிறது


.8: எருசலேமில் தங்கியிருக்கச் சொன்னவர், இப்போது சமாரியாவையும் உலகின் கடையெல்லையையும் (ἐσχάτου τῆς γῆς எஸ்காடூ டேஸ் கேஸ்- உலகின் கடையெல்லை வரை) உள்ளடக்குகிறார். இஸ்ராயேலுக்கு விடுதலையைப் பற்றி குறுகிய நோக்குடன் சிந்தித்த திருத்தூதர்களுக்கு இயேசு முழு உலகையும் உள்ளடக்கிய சுதந்திரத்தை போதிக்கிறார். இந்த உள்ளடக்க சிந்தனைக்கு அவர்களுக்கு தேவையாக இருந்தது தூய ஆவியின் வருகையே எனவும் காட்டுகிறார்


. 9: ஆண்டவர் சீடர்களின் கண் முன்னால்தான் எடுத்துக்கொள்ளப்பட்டார். இங்கே செயற்பாட்டு வினை பாவிக்கப்படுகிறது. ஆக ஆண்டவரின் விண்ணேற்பில் இறைவனின் திட்டம் அடங்கியிருக்கிறது என்பதை லூக்கா காட்டுகிறார். இயேசுவை அனுப்பியதைப் போல இப்போது அவருடைய வருகையையும் கடவுளே ஏற்பாடு செய்கிறார். மேகம், (νεφέλη நெபெலே - மேகம்) இயேசுவின் தெய்வீகத்தையோ அல்லது அவர் மனித உலகில் இருந்து தன்னுடைய உலகம் செல்லுவதையோ குறிக்க பயன்படுகிறது


வவ. 10-11: வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்து, இவர்கள் காட்சி; காண்பவர் போல் காணப்படுகிறார்கள். அனைத்தும் அவர்கள் கண்முன்னாலே நடக்கிறது. வெண்ணுடை அணிந்தவர்கள் லூக்கா நற்செய்தியில் ஏற்கனவே தோன்றியவர்கள் (லூக்கா 24,4.23). இவர்கள் வானதூதர்களாக இருக்கலாம். கலிலேயர்கள் என்று சீடர்களை அழைப்பதன் மூலம் சீடர்களை குறுகிய வரையறைக்குள் இருந்து, வெளியால் வந்து, இயேசு சொன்ன முழு உலகையும் பார்க்கக் கேட்கின்றனர்;. வெண்மை இங்கே இவர்களின் ஆடையைவிட அவர்களின் மேலுக தன்மையை காட்டும் உருவகமாக இருக்கலாம். பார்வையாளர்களாக இருக்காமல் சாட்சியாளர்களாக இருக்குமாறு இந்த வெண்மையானவர்கள் இயேசுவின் கட்டளைகளை நினைவூட்டுகின்றனர்


திருப்பாடல்: 47.

1மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்

2ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே 3வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்

4நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா

5ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்

7ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்

8கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். 9மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.


 இந்த நாற்பத்தி ஏழாவது திருப்பாடல் ஒரு வகை புகழ்சிப்பாடல் வகையை சார்ந்தது. கோராவின் பாடல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது (בְנֵי־קֹרַח பெனே-கோராஹ்). இந்த கோராவினா,; பாடகர் குலாமாக இருக்கலாம் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இந்த பாடல் இஸ்ராயேலரின் பெருமைகளை எடுத்துரைப்பது போல தோன்றினாலும், இங்கே மக்கள் என்பவர்கள் கடவுளின் பிள்ளைகளாகிய அனைவரையும் குறிக்கும் என்ற நோக்கோடே இப்பாடலை காணவேண்டும். இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய வேதனையான நாட்களில் இப்படியான பாடல்களை பாடி தங்களது பழைய பெருமைகளை நினைத்து துன்பத்தில் துவண்டு விடாமல் மீண்டும் எழுந்திருக்க முயற்சிசெய்தனர். பழைய நன்மைத் தனங்களை நினைப்பது தற்கால வெறுமைகளிடமிருந்து தப்பிக்க நல்தொரு ஆரோக்கியமான முயற்சி என்பதை அவர்கள் அன்றே அறிந்திருக்கிறார்கள். (ஒப்பிடுக: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். குறள் 239). இந்த பாடல் பல வழிபாட்டு வார்த்தைகளை கொண்டமைந்திருப்பதனால் இதனை ஆலய வழிபாட்டு புகழ்சிப்பாடல் எனவும் சிலர் தரம்பிரிக்கின்றனர்


வவ.1-2: மக்களினங்கள் என்று அனைத்து மக்களையும் உள்வாங்குகிறார் ஆசிரியர். கைதட்டுதலும் (תָּקַע தகா), மகிழ்சியால் சத்தமிடுதலும் (רוּעַ றூ') வழிபாட்டு முறையை குறிக்கின்றன. உன்னதராகிய கடவுள் (יְהוָה עֶלְיוֹן அடோனாய் எலியோன்) என்பது கடவுளுக்கு இஸ்ராயேலர் கொடுத்த இன்னொரு காரணப் பெயர். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது பயத்தை உண்டு பண்ணுவதற்கல்ல, மாறாக நன்மைத் தனத்தை மேற்கொள்வதற்கே என்று பார்க்கவேண்டும்

இந்த கருத்துடன்தான், கடவுளிடம் கொள்ளும் அச்சமே மெய்யறிவின் தொடக்கம் என்று விவிலியம் காட்டுகின்றது. மக்களினங்களுக்கு மனிதர்கள் அரசர்களாக இருக்க முடியாது கடவுள் மட்டுமே அரசர் என்பது கடவுள்-இறைமைத் தத்துவம்


வவ.3-4: யாக்கோபு வீட்டாரின் (இஸ்ராயேலரின்) பழைய பெருமைகள் நினைவூட்டப்படுகின்றன 

(גְּאוֹן יַעֲקֹב கெ'யோன் யா'அகோவ்- யாக்கோபின் பெருமை). எபிரேய விவிலியத்தில் வேற்றினத்தார் என்று பிரிவினைச் சொல் இல்லை, மக்களினம் (עַמִּים  'அம்மிம்- மக்கள்) என்றே உள்ளது. இது சில வேளைகளில் இஸ்ராயேலரையும் குறிக்கும், மற்றவரையும் குறிக்கும். கடவுளுக்கு அனைவரும் அவர் மக்களே. யாக்கோபு வீட்டார் தவறான வழியில் சென்றால் அவர்களும் மற்றவர் காலடியில் விழுவர் என்பதைத்தான் ஆசிரியர் காட்டுகிறார். தமது பெருமைகளைக் காட்டும் அதேவேளை ஆசிரியர் மறைமுகமாக எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்


வவ.5-7: கடவுள் உயரமான இடத்தில் இருக்கிறார் என்பது பண்டைய நம்பிக்கை. இஸ்ராயேலர் 

இதனால்தான் மலைகளில் பீடங்களைக் கட்டினர். இயேசுவும் மலையில் சென்று செபிப்பதையும் அல்லது மலையில் அமர்ந்து போதிப்பதையும் இங்கு ஒப்பிட வேண்டும். ஆறாவது வசனம் அழகான எபிரேய சொற்றொடர் அணிநயத்தில் அமைந்துள்ளது. நான்கு தடவைகள் பாடுங்கள் என்று ஏவல் விடப்படுகிறது (זַמְּרוּ ட்சம்ரூ- பாடுங்கள்), மீண்டுமாக ஆசிரியர் கடவுளை அரசராக வர்ணிக்கிறார்;. ஏழாவது வசனம், புகழ்பா என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறது. இதனை எபிரேயத்தில் மஸ்கில் מַשְׂכִּיל என்று அழைப்பார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு, தியானப் பாடல் என்றும் இது பொருள்படும்.


வவ.8-9: பிற இனத்தார் என்பதற்கு நாடுகளின் மக்கள் என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் கடவுள் மேல் உரிமையுண்டு என்பதனைக் காட்டுகிறது. அரியணையை அதிகாரத்தின் அடையாளமாக மனிதர்கள் கருதுகின்றனர். ஆனால் கடவுளின் அரியணை தூய்மையின் அடையாளமாக இருப்பதாக காட்டுகிறார் ஆசிரியர் (קֹדֶשׁ கொடோஷ்- தூய்மை).

ஆபிராமின் மக்களுக்கு இணையாக மக்களினங்களின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பாதுகாக்காக்கப்படுவததையும் நினைவூட்டுகிறார். கொற்றம் என்பதை கடவுளின் பாதுகாப்பு கேடயம் எனவும் கொள்ளலாம். מָגִנֵּי־אֶרֶץ மாகினே-'எரெட்ஸ்- நிலத்தின் கொற்றம்



எபிரேயர் 9,24-28: 10,19-23.

24அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். 25தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. 26அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். 27மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி. 28அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

19-20சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. 21மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. 22ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. 23நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.


 இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் குருத்துவ உடன்படிக்கை செயற்பாடுகளை விவரிக்கும் பகுதியலிருந்து எடுக்ப்பட்டுள்ளது. இந்த பகுதி (8-10 வரையான அதிகாரங்கள்) இயேசு மெல்கிசதேக்கின் வழிவந்த ஆதி-அந்தமில்லாத உண்மையான குரு என்பதையும், அவர் வழியாகவே மீட்பு உண்டு என்பதையும் விவரிக்கின்றது. எருசலேம் ஆலயம் கடவுளின் வானக இருப்பிடத்தின் முன்னடையாளம் என்ற சிந்தனை இரண்டாவது ஆலயத்தின் காலத்தில் உதித்திருக்க வேண்டும். இது கிறிஸ்தவர்களின் சிந்தனை அல்ல, ஏற்கனவே இஸ்ராயேலர்கள் கடவுளை உலக ஆலயத்தில் அடக்க முடியாது என்பதனை ஏற்றுக்கொண்டனர். சாலமோனின் ஆலயத்திலும் பின்னர் வந்த இரண்டாம் ஆலயத்திலும் மிக புனிதமான இடம் என்று ஒன்று இருந்தது, அங்கே விடுதலைபயண அனுபவத்தின் எச்சங்கள் இருந்ததாக இஸ்ராயேலர் நம்பினர். வருடத் தவணையில் தலைமைக் குரு அதனுள் நுழைந்து மக்களின் பாவங்களுக்காக பரிகாரப் பலி செய்வார்


. 24: உலக புனித இடத்தையும் வானகத்தையும் ஒப்பிடுகிறார் ஆசிரியர். இயேசுதான் உண்மையான தலைமைக் குரு என்பது அவர் வாதம். மண்ணக தலைமைக்குருவும் மண்ணக ஆலயமும் கடவுளின் உண்மையான குருவான இயேசுவிற்கு முன்னால் ஒன்றுமில்லை என்கிறார்.


வவ. 25-26: ஒவ்வொரு வருடமும் ஒப்புக்கொடுக்கப்படும் மிருக பலியினால் பயனில்லை என்பதுபோல சாடுகிறார். மிருக பலிக்கு பதிலாக இயேசுவின் சொந்த இரத்தம் சிந்தப்பட்டதனால். மனித குருத்துவம் தேவையில்லை என்பதனைப்போல கூறுகிறார். இயேசுவின் பலியும் ஒரே ஓரு முறை செலுத்தப்பட்ட நித்திய பலி என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நூல் சில வேளைகளில் ஆரம்ப கிறிஸ்தவர்களுக்கும் எருசலேம் தேவாலயத்திற்கும் இடையிலான விரிசலை அல்லது, தேவாலயம் அழிக்கப்பட்டிருந்த வேளையில் எழுந்திருந்த சில கருத்துக்களை பின்புலமாகக் கொண்டிருக்கிறது என சிலர் கருதுகின்றனர்


வவ. 27-28: மனிதர்களின் மரணத்தையும் கிறிஸ்துவின் பலியையும் ஒப்பிடுகிறார் ஆசிரியர். சாவின் பின்னர் நீதித் தீர்ப்பு உண்டென ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இக்காலத்திலேயே நம்பத் தொடங்கிவிட்டதனை இந்த வரியில் காணலாம். இந்த சாவும் தீர்வையும் ஒரு முறை நடப்பதனைப் போலவே கிறிஸ்துவின் பலியும் நடந்தது எனவும், இன்னொருமுறை கிறிஸ்து தோன்றவும் இருக்கிறார் என்பதையும் ஆசிரியர் விளங்கப்படுத்துகிறார். இரண்டாவது முறையான தோற்றம், பலியாக அல்ல மாறாக காத்திருப்போருக்கு மீட்பை கொடுக்க என்கிறார் இந்த பெயர் தெரியாத ஆசிரியர்.


வவ. 19-20 : 10வது அதிகாரம் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்படும் புதிய உடன்படிக்கையின் சலுகைகைளைப் பற்றி காட்டுகிறது. எருசலேம் ஆலயத்தில் ஒரு பெரிய திரைச்சீலை ஒன்று தொங்கிக் கொண்டு இருந்தது, அது தூயகத்தையும் அதி தூயகத்தையும் பிரித்தது. கூரையிலிருந்து தரைமட்டும் தொங்கிய இத் திரைச் சீலையினூடாக தலைமைக் குருக்கள் அல்லது பணியிலிருந்த குருக்கள் மட்டுமே செல்ல முடிந்தது. ஆசிரியர் இந்த திரைச் சீலையை இயேசுவினுடைய உடலுக்கு ஒப்பிடுகிறார். சாதாரணமாக பொது மக்கள் இந்த திரையினூடாக நுழைய முயலமாட்டார்கள், இங்கே ஆண்டவரின் உடலில் சிந்திய இரத்தின் வழியாக கிறிஸ்தவர்கள் வானகம் என்கிற ஆலயத்தினுள் நுழைய தகுதி பெற்றுவிட்டனர் என்கிறார்


வவ. 21-22: தலைமைக் குருக்கள் வழமையாக ஆலயத்தின் மீது அதிகாரம் பெற்றிருந்தனர். இங்கே வானகத்தை கடவுளின் இல்லமாகவும், கிறிஸ்துவை அதன் பொறுப்பதிகாரியாகவும் காண்கிறார். இந்த குருவிற்கு அருகில் செல்ல சில நிபந்தனைகளை முன்வைக்கிறார்: நேரிய உள்ளம், தூய உடல், மற்றும் உறுதியான நம்பிக்கை என்பவையாகும். இந்த வரி முதல் ஏற்பாட்டில் மிருகங்கள் பலி கொடுக்கப்படும் போது குறையற்றதாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை நினைவூட்டுகிறது


. 23: கிறிஸ்து நம்பிக்கைக்கு உரியவர் என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுள் ஒருவரே நம்பிக்கைக்கு உரியவர் என்ற சிந்தனையை காட்டுகிறது. இந்த வரி கிறிஸ்துவைப் பற்றிய சில ஆழமான இறையியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளது. எதிர்நோக்கியிருப்பதைப் பற்றி தயக்கமின்றி அறிக்கையிடுவது கிறிஸ்தவர்களின் முக்கியமான கடமையாக கருதப்பட்டது


நற்செய்தி: லூக்கா 24,46-53.

46அவர் அவர்களிடம், 'மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 47'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. 48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். 49இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்' என்றார். 50பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். 51அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். 52அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். 53அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.


 லூக்கா நற்செய்தியின் இறுதி வரிகளை நாம் இன்று இந்த பகுதியில் வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியின் முடிவுரை மிகவும் தனித்துவமானது. லூக்கா இங்கே ஆண்டவரைப் பற்றி முதல் ஏற்பாட்டில் எழுதியுள்ளதை நினைவூட்டுகிறார். மெசியா என்ற சொல் எபிரேயத்தில் மஷா מָשַׁח என்ற சொல்லில் இருந்து வருகிறது. இதற்கு 'எண்ணையால் திருப்பொழிவு செய்தல்' என்று பொருள். குருக்களும் அரசர்களும் இவ்வாறு திருப்பொழிவு செய்யப்பட்டனர். இந்த திருப்பொழிவு அவர்களின் விசேட அழைத்தலைக் குறித்தது. கிரேக்கத்தில் இதற்கு இணையாக Χριστός கிறிஸ்டொஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டது. லூக்கா 12 தடவைகளாக இதனை பாவிக்கிறார்


வவ. 46-47: 

) மெசியாவின் துன்புறுதல் (παθεῖν பாதெய்ன்- மரணித்தல்), உயிர்த்தெழுதல் (ἀναστῆναι அனாஸ்டேனாய்- உயிர்த்தல்), மனமாறுதலுக்கான அறிவிப்பு போன்றவை, விவிலியத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது என்கிறார் லூக்கா. திருப்பொழிவு செய்யப்பட்டவரின் துன்பமும், அவருடைய வெற்றியும், அனைத்து மக்களினங்களுக்கான அறிவிப்பும் வேறு விதமாக முதல் ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இதனை லூக்கா இயேசுவிற்கானது என கோட்டிட்டு காட்டுகிறார். (காண் எசா 2,3: 42,1-6). 


) பாவமன்னிப்பு பெற, மனமாற்றம் முக்கியம் என்பது புதிய ஏற்பாட்டில் ஒரு முக்கியமான 

இறையியல் சிந்தனையை கொண்டு வருகிறது. இங்கே மனமாற்றம் என்பது இயேசுவை கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ளுதலை முக்கியமாக குறிக்கிறது. முதல் ஏற்பாட்டில் பாவ வாழ்விலிருந்து தோறாவிற்கு திரும்புதலை இந்த மனமாற்றம் குறித்தது. இந்த மனமாற்றத்திற்கு 

இயேசு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். (μετάνοιαν εἰς ἄφεσιν ἁμαρτιῶν மெடானொய்அன் எய்ஸ் அபேசின் ஹமார்டியோன்- பாவமன்னிப்பிற்கு மனமாற்றம்). 


). அனைத்து நாடுகள் என்பதைக் குறிக்க எத்னோஸ் ἔθνος என்னும் கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது உலகில் உள்ள அனைத்து மக்களையும் குறிக்கும்


. 48-49: சாட்சியம் சொல்லச் சொல்வதும் நற்செய்தியாளர்களின் முக்கியமான படிப்பினை. இந்த சாட்சியம் சொல்வதற்கே நான்கு நற்செய்திகளும் எழுதப்பட்டன. லூக்கா இந்த சாட்சிய பணியினை இன்னும் ஆழமாக திருத்தூதர் பணிகள் நூலில் காட்டுவார். இந்த சாட்சியம் என்ற சொல்லிலிருந்தே தொடக்க கிறிஸ்தவர்களின் சாட்சிய மரணம் என்ற சிந்தனையும் வளர்ந்தது. (μάρτυς மார்டுஸ்- சாட்சியம், μαρτυρέω மார்டுரெஓ- சாட்சிசொல்). ஒரு பணியைச் செய்ய வல்லமையும் தகுந்த நேரமும் முக்கியமானது என்பதை இயேசு சீடர்களுக்கு அறிவி;க்கிறார். எருசலேமில் இருக்கச் சொன்னதை கடவுளின் சிந்தனையிலே இருத்தல் என்றும் எடுக்கலாம். உன்னதத்திலிருந்து வரும் வல்லமை என்பது கடவுளின் வல்லைமையைக் குறிக்கிறது. மரியாவிற்கு இந்த வல்லமைதான் கடவுளின் தாயாகும் வரத்தைக் கொடுத்தது (காண்க லூக்கா1,35), இங்கே அதே உன்னத வல்லமை இவர்களுக்கு சாட்சிகளாகும் வரத்தை கொடுக்கவிருக்கிறது


. 50-51: பெத்தானியா, எருசலேமிற்கும் ஒலிவ மலைக்கும் கிழக்கு பக்கமாக இருக்கிறது. எருசலேமிற்கும் பெத்தானியாவிற்கும் இடையில் இரண்டு மைல் தூரம் இருக்கும். இயேசு இவ்வளவு தூரம் இவர்களை அழைத்துச் செல்வது இந்த இடத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. கிழக்கு பக்கம், செமித்தியர்களுக்கு வளமை நிறைந்த பகுதியாக காணப்பட்டதை இங்கு நோக்க வேண்டும். முதல் ஏற்பாட்டில் குலமுதுவர்கள் தம் வாழ்வை நிறைவு செய்யும் வேளை தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பது வழக்கம் அத்தோடு இந்த ஆசீர் பிள்ளைகளின் உரிமையாகவும் கருதப்பட்டது. இந்த ஆசீர்க்காக பல சண்டைகள் நடந்ததையும் நாம் முதல் ஏற்பாட்டில் காணலாம். இங்கே ஆசிரியரின் உறைவிடமான கடவுளே தம் பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்காமலே கைகளை உயர்த்தி வழங்குகிறார். இது அவரின் பிரியாவிடையை காட்டலாம்


வவ. 52-53: ஆண்டவர் உயிர்த்த பின்னும் சீடர்கள் பயத்தால் நிறைந்து ஒளிந்திருந்தார்கள். ஆனால் அவரின் விண்ணேற்றம், உயிர்ப்பின் முக்கிய பலனான மகிழ்சியை கொண்டுவருகிறது. பயமற்றவர்களாய் ஆலயத்திற்கு சென்று கடவுளை போற்றினார்கள் என்பதன் வாயிலாக சீடர்கள் தங்கள் சாட்சிய பணியை செவ்வனே தொடங்கிவிட்டார்கள் என்கிறார் லூக்கா


ஆண்டவரின் மக்களாய் இருக்கும் நாம் அண்ணாந்து வேடிக்கை பார்ப்பவர்களாய் இராமல்

சாட்சியம் சொல்லுபவர்களாகவும்

நம்புவததை அறிக்கையிடக் கூடியவர்களாகவும் இருக்க அழைக்கப்படுகிறோம்

ஆண்டவரின் விண்ணேற்றம், நம்முடைய விண்ணேற்றத்தையும் நினைவுபடுத்துகின்றது

இறப்பின் பின்னர் வருகின்ற விண்ணேற்றத்தைப் போல 

தற்கால வாழ்க்கையிலும் உள்ளத்திலும் எண்ணத்திலும் உயர்ந்தவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்

விண்ணேற்றம் அடைந்த ஆண்டவருக்கு விழா எடுப்பது இலகு

கலிலேயராக இருப்பதும் இலகு

ஆனால் மகிழ்சியாக ஆண்டாவருக்கு சாட்சியம் சொல்வதே 

கடினமான அழைப்பு

அதனையே ஆண்டவர் விரும்புகிறார்


அன்பு ஆண்டவரே, எங்கள் வட்டங்களை விட்டு வெளியில் வந்து

நீர் கொண்டுவந்த மீட்பை இங்கேயும் வாழவும் அத்தோடு மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு துணை செய்யும். ஆமென்


ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...