வியாழன், 19 நவம்பர், 2020

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் (அ) கிறிஸ்து அரசர் பெருவிழா: Christ the King Feat A 22.11.2020



ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் () கிறிஸ்து அரசர் பெருவிழா

Christ the King Feat A

22.11.2020



M. Jegankumar Coonghe OMI,

Our Lady of Good Voyage, Chaddy,

Velanai, Jaffna.

Friday, November 20, 2020




முதலாம் வாசகம்: எசேக்கியேல் 34,11-12.15-17

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 15,20-26.28

நற்செய்தி: மத்தேயு 25,31-46



இயேசு ஆண்டவர் அரசரா? ஆண்டவர் எப்படி அரசராக முடியும்?

 எபிரேய மொழி அரசனை (מֶלֶךְ ) மெலக் எனவும், கிரேக்க மொழி (βασιλεύς) பசிலெயுஸ் எனவும் அழைக்கின்றன. அரசன், அரசு, அரச குலம் என்பவை முழுக்க முழுக்க மனிதர்கள் உருவாக்கிய ஒருபக்கச் சார்பானதும், ஆபத்தானதுமான கட்டமைப்புக்களே ஆகும். இதற்கு இந்த உலகின் மனித வரலாறே நல்ல சான்று. இந்த வேளையில் சாமுவேலுக்கு கடவுள் சொன்னது ஞாபகத்துக்கு வருகின்றது. காண்க ✳︎(!1சாமுவேல் 8,7-18). இந்த உலகம் பல அரசர்களை உருவாக்கியிருக்கிறது. பெரிய அரசர்கள் என கொண்டாடுகின்ற யாவரும் மனிதர்களே. அவர்களுள் பலர் தங்களுடைய சிந்தனைகளுக்காகவும், நம்பிக்கைகளுக்காகவும், மதத்திற்காகவும், பெயருக்காகவும், ஆசைகளுக்காகவும்; இவ்வுலகையே கொள்ளையிட்ட வெறும் கொள்ளைகாரர்களே, சக மனிதர்க்களையும் விலங்குகளையும் கொலைசெய்த இரக்கமில்லா கொலைகார்களே, உலகை அழித்த அழிவுக்காரர்களே. கடவுள் மனிதர்களை தன் சாயலாக மட்டுமே படைத்தார், இவ்வாறிருக்க மனிதர்களே தங்களை தாங்களே ஆணாதிக்கவாதிகளாகவும், அரசர்களாகவும், சாதிக்காரர்களாகவும், மதக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டனர். இதற்கு கடவுள் பொறுப்பாளியல்ல, அவரை பொறுப்பாளியாக்கவும் வேண்டாம்

இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு ஒரு வரலாறு உண்டு. கிறிஸ்து அரசர் என்கின்ற கருப்பொருள், இறைவனின் அரசு என்ற இறையியல் சிந்தனையை உள்வாங்கியுள்ளது (ἡ βασιλεία τοῦ θεοῦ. ஹே பசிலெய்யா து தியூஒ - இறைவனின் அரசு). யூதர்கள் இயேசுவை தம் அரசராக ஏற்க மறுத்தனர் இருப்பினும், இந்த வாதத்தினுள் அவர் உண்மையில் அனைத்து உலகின் அரசர் என்ற மறைமுக வாதம் மறைந்துள்ளது. ஐரோப்பாவிலே அதிகமான ஆலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், துறவு மடங்கள், மற்றும் பொது இடங்கள் போன்றவை இந்த பெயரால் அழைக்கப்படுகின்றன. உண்மையிற் சொல்லின், கிறிஸ்து அரசர் என்ற பதம் பல விதத்தில் ஒர் ஐரோப்பிய சொல் என்றே பார்க்கப்பட வேண்டும்

 கிரேக்க மொழியில் கிறிஸ்து (Χριστός கிறிஸ்டொஸ்) என்றால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்று பொருள். இதனை எபிரேய மொழி (מַשִׁיחַ ) மஷியாஹ் என்றழைக்கிறது. இதற்கு அரசர் என்ற பொருளும் கொடுக்கப்படலாம், ஆனால் இதன் உண்மையான அர்த்தம் அரசர் என்பதல்ல. புதிய ஏற்பாட்டில் இயேசு பல இடங்களில் கிறிஸ்து-மெசியா என்று அழைக்கப்பட்டாலும், கிறிஸ்து அரசர் என்ற பெயரில் அழைக்கப்படவில்லை. புதிய ஏற்பாடு இயேசுவை கிறிஸ்து அல்லது அருட்பொழிவு பெற்றவர் என்று 550 தடவைகளுக்குமேல் அழைக்கின்றபோதெல்லாம் அதன் அர்த்தம் சாதாரண அரசர் என்பதில்லை, அதுக்கும் மேலே... திருத்தந்தை 1925ம் ஆண்டில் முதன்முறையாக 'கிறிஸ்து அரசர்' என்ற பதத்தை முதலாம் உலகப் போரின் பிற் காலத்தில், குவாஸ் பிறிமாஸ் Quas primas என்ற சுற்றுமடலில்  திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் PIUS XI பயன்படுத்தினார் (QUAS PRIMAS ENCYCLICAL OF POPE PIUS XI ON THE FEAST OF CHRIST THE KING TO OUR VENERABLE BRETHREN THE PATRIARCHS, PRIMATES, ARCHBISHOPS, BISHOPS, AND OTHER ORDINARIES IN PEACE AND COMMUNION WITH THE APOSTOLIC SEE.). அதிலே ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் பிரிவினைகளையும், போரியல் சிந்தனைகளையும், அதிகார மற்றும் அழிவுக் கலாச்சாரத்தையும் விடுத்து, கிறிஸ்துவின் அரசில் அனைவரையும் மதிக்கும் தலைவர்களாக மாறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கத்தோலிக்க திருச்சபையில் இந்த விழா வருடத்தின் கடைசியில் வரும் பொதுக்கால ஞாயிறு தினத்தில் கொண்டாடப்படுகிறது. பழமைவாத கத்தோலிக்க திருச்சபையின் சில பிரிவுகள் இந்த திருநாளை இன்னொரு நாள் கொண்டாடுகின்றன. இந்த விழாவின் மூலம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. ஆனால் கிறிஸ்து இயேசு நம் ஆண்டவர், அவரை அரசர் என்ற மனித, வரையறைக்குட்பட்ட அரசியல் பதத்திற்குள் அடக்க அல்லது, இறையியல் பிறழ்வுகளை உருவாக்க முயல்வது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல

 முதல் ஏற்பாட்டுக் காலத்தில் அரசன் என்ற பதம் ஓரு முக்கியமான பதமாக பார்க்கப்பட்டது. இஸ்ராயேலரை சுற்றியிருந்த கானானியர், மொசப்தேமியர் மற்றும் எகிப்தியர் பலர் தங்களுக்கென்று அரசர்களை கொண்டிருந்தனர். அவர்களின் அரசர்கள் பலர் கடவுளின் மகன்களாக கருதப்பட்டனர், அல்லது கடவுள்களாகவும் கருதப்பட்டனர். இந்த சிந்தனை படிப்படியாக இஸ்ராயேலரிடையே தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் அவர்களும் தங்களுக்கென்று ஓர் அரசனை கேட்கும் அளவிற்கு வளர்ந்தது. பல இறைவாக்கினர்கள் கடவுள்தான் இஸ்ராயேலின் ஒரே அரசர் என்று இறையியலை பலமாக விவாதிப்பதை முதல் ஏற்பாடு அழகாக் காட்டுகிறது (!!தி.பா 74,12)

(!'மக்கள் குரலையும் அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில் அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர். அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும் ஐம்பதிமர் தலைவராகவும் தன் நிலத்தை உழுபவராகவும் தன் விளைச்சலை அறுவடை செய்வராகவும் தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான். மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளத் தைலம் செய்கின்றவர்களாகவும் சமைப்பவர்களாகவும் அப்பம் சுடுபவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான். உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான். உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும் உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளர்களாய் இருப்பீர்கள். அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்').


(!!12 கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.)




எசேக்கியேல் 34,11-12.15-17

11எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். 12ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். 13மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். 14நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும். 15நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். 16காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.

17எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.


  எசேக்கியேல் புத்தகம் அதிகமான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இது இந்தப் புத்தகத்தின் ஒரு தனித்துவம். சிலர் இந்த புத்தகத்தை வெளிப்பாடுகள் அடங்கிய இறைவாக்கு என அடையாளம் காண்கின்றனர். எசேக்கியேல் புத்தகத்தின் காட்சிகளில், அவர் அந்த காட்சிக்குள் உள்ளே இருப்பது போல காட்டப்படுகிறார். எசேக்கியேல் புத்தகத்தின் முதல் 32 அதிகாரங்கள் வரவிருக்கின்ற அழிவைப் பற்றி பேசுகின்றன, மிகுதி 16 அதிகாரங்கள் நம்பிக்கையை கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன

  கடந்தால துன்பங்கள் கடந்து போகும், கடவுளின் மக்கள் கடவுளிடம் திரும்புவார்கள், மீண்டும் தங்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு திரும்புவார்கள். இவர்கள் கடவுளின் மக்களாக மாறுவார்கள், கடவுளும் அவர்களின் கடவுளாவார் என்ற செய்தியை எசேக்கியேல் புத்தகம் தாங்கி வருகிறதுஅனைத்து தவறுகளுக்கும், அதனால் வரும் விளைவுகளுக்கும் மனிதர்கள்தான் பொறுப்பு என்பதும் எசேக்கியேலின் செய்தி. கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உறவையும் எசேக்கியேல் புத்தகம் காட்ட முயற்சிக்கிறது. 'இதனால் அவர்கள் அறிந்துகொள்வார்கள்' என்ற வார்த்தைகள் அடிக்கடி எசேக்கியேலில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். மக்கள் சந்திக்கும் துன்பங்கள், இறைவனிடம் இருந்து வரும் தண்டனைகள் என்பதைவிட அவை மனமாறுவதற்கான வாய்ப்புக்கள் என்பதை எசேக்கியேல் வலியுறுத்துகிறார். எசேக்கியேல் புத்தகம் ஆண்டவரை நல்ல ஆயனாக வர்ணிக்கிறது (காண்க அதிகாரம் 34). முன்னைய மனித ஆயர்களைப் போலல்லாது இந்த ஆயர் மக்களை தேடிவரும் ஆயராக காட்டப்படுகிறார். கடவுளுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே உள்ள உறவு காட்டப்பட்டாலும், மற்றை மக்களுக்கும் கடவுள்தான் ஆண்டவர் என்பதும் தெளிவாக காட்டப்படுகிறது. அனைத்து மக்களினங்களும் நாடுகளும் கடவுளின் திட்டங்கள் மற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டவையே, இதனால்தான் இவர்களைக் கொண்டு கடவுள் தன் திட்டங்களை நிறைவேற்றுகிறார் என்பது காட்டப்படுகிறது

 எசேக்கியேல் புத்தகம், இஸ்ராயேலின் மிக இருண்ட மற்றும் துன்பமாக காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையாக வருகிறது. இந்த காலத்தில் மக்கள் அன்னிய தேசத்தில் அடிமைகளாக இருந்தார்கள், நாடு, மண், ஆலயம், அரசன் மற்றும் நம்பிக்கை அனைத்தையும் இழந்திருந்தவர்களுக்கு இது, கடவுள் நல்ல ஆயனாக தன் மக்களை தேடிவருவார் என்ற நம்பிக்கையை கொடுகிறதுஇன்யை அதிகாரத்தில் கடவுளின் ஆயத்துவத்தின் மேன்மை தெளிவுபடுத்தப்படுகிறது. இந்த அதிகாரத்தின் முதல் பகுதி (காண்க 34,1-10) இஸ்ராயேலின் மனித ஆயர்கள் தங்கள் பணிகளிலிருந்து தவறிவிட்டார்கள் என்பதைக் காட்டுகின்றது


.11: முன்னைய ஆயர்களின் தவறான வழிநடத்தல்களையும், அவர்களால் மந்தைகள் பட்ட வேதனைகளையும் காட்டிய ஆசிரியர், இஸ்ராயேலின் உண்மையான ஆயர் என்ன செய்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் தானே தன் மந்தைகளை தேடிச் செல்வதாகவும் (אָנִי וְדָרַשְׁתִּי אֶת־צֹאנִי 'அனி வெதாரஷ்தி 'எத்-ட்சொ'னி), பின்னர் அவற்றை கூட்டிச் சேர்ப்பதாகவும் (וּבִקַּרְתִּֽים வுவிக்கர்திம்) சொல்லப்படுகிறார். இதனை அவரே தன் சொந்த வாயால் உரைத்ததாகக் காட்டப்படுகிறார்


.12: ஆயனின் உருவகம் இங்கே காட்டப்படுகிறது (רֹעֶה ரோ'எஹ்). ஆயன் என்ன செய்வார் என்பது இஸ்ராயேல் மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இதனால் இந்த உருவகம் நிச்சயமாக இவர்களுக்கு இறைவார்த்தையை அறிவிப்பதில் உறுதுணையாக இருக்கும்சாதாரணமாக 

ஓர் ஆயன் தன் மந்தையில் ஒவ்வொரு ஆட்டின்மீதும் மிகவும் அக்கறையுள்ளவராக 

இருப்பார். தொலைந்தவற்றை கூட்டிச்சேர்ப்பது அவருடைய பிரதான கடமைகளில் ஒன்று. மப்பும் மந்தாரமுமனான நாளில் அவற்றை தேடிச் செல்வார் இந்த ஆண்டவர் - ஆயர் என தமிழ் விவிலியம் காட்டுகிறது. இதனை எபிரேயம் בְּיוֹם עָנָן וַעֲרָפֶל׃ (பெயோம் 'ஆனான் வா'அராபெல்) என்று மூல மொழியில் கெண்டுள்ளது. மேகங்கள் மற்றும் இருள் சூழ்ந்த நாட்கள் என்பது மழைக்காலங்களைக் குறிக்கலாம், இப்படியான காலப்பகுதியில் மந்தைகள் வழி தவறுவது வழக்கம். இதனைத்தான் இங்கே ஆசிரியர் உருவகமாக எடுக்கிறார் எனலாம்


.13: இந்த வரி மிக முக்கியமான நான்கு செய்திகளைக் காட்டுகிறது. முதலாவது ஆண்டவர் தன் மக்களை மக்களினங்களிலிருந்து வெளிக்கொணர்கிறார் (הוֹצֵאתִ֣ים מִן־הָעַמִּ֗ים ஹோட்செ'திம் மின்-ஹா'அம்மிம்), அதாவது இவர்கள் பல மக்களினங்களில் தங்கள் அடையாளங்களை தொலைத்திருக்கிறார்கள். இது பபிலோனிய பின்புலத்தைக் காட்டுகிறது. இரண்டாவதாக அவர்கள் நாடுகளிலிருந்து ஒன்று சேர்ககப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறார்கள், இது இவர்களின் அகதி வாழ்வைக் காட்டுகிறது. அகதி வாழ்வு, ஒருவருடைய தனித்துவத்தை அழித்துவிடும். மொழி, இனம், பாரம்பரியம், மதம் மற்றும் கலாச்சாரத்தை இது சிதைக்கும். ஈழவர் நமக்கு நன்கு தெரிந்த அனுபவம். நம் உறவுகள் இதனைத்தான் வெளிநாடுகளில் சந்திக்கிறார்கள். இந்த அனுபவம் இஸ்ராயேல் மக்களுக்கும் இருந்தது (קִבַּצְתִּים מִן־הָאֲרָצוֹת கிப்பாட்ஸ்திம் மின்-ஹா'அராட்சோத்). மூன்றாவதாக இவர்களை சொந்த நாட்டிற்கு கூட்டிவருவதாக ஆண்டவர் சொல்கிறார். சொந்த நாட்டிற்கு வருவது என்பது எப்போது தன் நாட்டை மதிப்பவருக்கு மிக இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும். இஸ்ராயேல் மக்கள் எங்கிருந்தாலும், எப்போதுமே தங்கள் சொந்த நாட்டையே அதிகமாக விரும்பினர். இவர்களுக்கு இந்த வரி நிச்சயமாக இனிமையாக இருந்திருக்ககும் (הֲבִיאֹתִ֖ים אֶל־אַדְמָתָ֑ם ஹவி'ஓதிம் 'எல்-'அத்மாதாம்). இறுதியாக இவர்கள் இஸ்ராயேலின் மலைகளின் ஓடையோரங்களிலும், நாட்டின் எல்லாக் குடியிருப்புக்களுக்கும் கொண்டு வரப்படுகிறார்கள். மக்கள் மந்தைகளுக்கு ஒப்பிடப்படுவதால், அவர்களை இந்த இடங்களில் மேய்ச்சலுக் கொண்டுவருவதாக சொல்கிறார் ஆண்டவர். ஓடையோரங்களில் அதிகமாக புல்வளர்வதால் அவை மேய்சலுக்கு உவப்பான இடமாக இருக்கிறது. இங்கே இது உருவகமாக, மக்களை ஆண்டவர் திருப்பிக்கொணர்ந்து, நல்ல இடங்களில் குடியேற்றுவார் என்பதை காட்டுகிறது


.14: பதின்மூன்றாம் வரியில் சொல்லப்பட்டதுதான் இங்கேயும் சொல்லப்படுகிறது. நல்ல மேய்ச்சல் நிலம் (מִרְעֶה־טּוֹב֙ மிர்'எஹ்-தோவ்), மற்றும் இஸ்ராயேலின் மலையுச்சிகள் (בְהָרֵ֥י מְרֽוֹם வெஹாரி மெரோம்), இங்கே அழகாக சித்தரிக்கப்படுகின்றன. மந்தைகள் இங்கே இளைப்பாறுகின்றன அத்தோடு மேய்கின்றன. இவையும் உருவகங்களாகவே பாவிக்கப்படுகின்றன. அடிமைகளாக இருந்த மக்களுக்கு இந்த உருவகங்கள் நிச்சயமாக நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்மலையுச்சிகள் அதிகமான பச்சை புல்வெளிகளைக் கொண்டிருக்கும் என்பது ஊகம். இது தென் நாடான யூதேயாவில் சாத்தியமில்லை, ஆனால் வடநாட்டில் இது சாத்தியம். இருப்பினும் பொதுவான உருவகத்தை இறைவாக்கினர் உருவகத்திற்கு எடுக்கிறார் எனலாம்


.15: இந்த வரி யோவான் நற்செய்தியில் இயேசு தன்னை நல்ல ஆயனாக வர்ணிப்பதை நினைவுகூறுகிறது. இயேசுவிற்கு எசேக்கியேல் புத்தகம் நன்கு பரீட்சயமாக இருந்திருக்க வேண்டும். யோவான் நற்செய்தியாளருக்கும் இந்த அறிவு நன்கு இருந்திருக்க வேண்டும். எசேக்கியேலில் ஆண்டவர் தானே தன் மந்தையை மேய்ப்பதாகச் சொல்கிறார். (אֲנִי אֶרְעֶה צֹאנִי֙ 'அனி 'எர்'எஹ் ட்சோ'னி- நான் என்மந்தையை மேய்ப்பேன்). தலைவர்களால் தொடர்சியாக ஏமாற்றப்படும் மக்களுக்கு கடவுளே அந்த இடத்தை நிரப்புவது நிச்சயமாக பெருமூச்சை வரவழைக்கும். இதனை எசேக்கியேல் நன்கு உணர்ந்திருக்கிறார். இதனால்தான் 

இஸ்ராயேலர்கள் ஆண்டவரை மட்டுமே தங்களது உண்மையான அரசராக எதிர்பார்த்திருந்தனர்

மந்தைகளை செழிப்பான இடங்களுக்கு கொண்டு சென்றால் மட்டும் போதாது, அவைகள் நிம்மதியாக ஓய்வெடுப்பதற்கும், சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். உணவு மட்டுமல்ல, உறையுளும் மிக முக்கியமானது என்பதை இந்த வரி காட்டுகிறது. (இது நமக்கும் கிடைக்க அரசராம் ஆண்டவர் கிருபை செய்ய வேண்டும்).


.16: இன்னுமாக, மந்தைகளை அதிகமாக நேசிக்கிற ஆயன் என்ன செய்வார் என்பதை வரி மேலும் காட்டுகிறது. காணாமல் போனதை தேடுவதாகச் சொல்கிறார் ஆண்டவர் (הָאֹבֶדֶת ஹா'ஓவெதெட் - தொலைந்தவர்கள்). காணமல் போன மந்தை இங்கே காணாமல் போன மக்களைக் குறிக்கிறது. தொலைந்தது மட்டுமல்ல அலைந்து திரிவதையும் இந்த ஆயன் கண்நோக்குகிறார் (הַנִּדַּחַת ஹன்னிதாஹாத்- அலைபவை). அலைந்து திரிபவை இலக்கை தவறவிட்டவை என எடுக்கலாம். இடப்பெயர்வு மற்றும் அடிமை வாழ்வில் இந்த நியதியும் சாதரணமாக இருக்கும். காயப்பட்டவை கட்டுப்போடப்படுகின்றன (נִּשְׁבֶּרֶת நிஷ்வெரெத்- அடிப்பட்டவை). மத்திய கிழக்கு பாலை நிலங்களும், மலையுச்சிகளும் மிகவும் கூர்மையான பாறைகளைக் கொண்டிருப்பதால், மென்மையான செம்மறிகளை இலகுவாக காயப்படுத்தக்கூடியவை. இதனை உருவகமாக எடுத்து ஆண்டவரை குணப்படுத்துவபராகக் காட்டுகிறார் ஆசிரியர். மக்களுடைய காயங்கள் உடல் காயங்களாகவும், உள காயங்களாகவும் இருக்கலாம். அத்தோடு ஆண்டவர் நலிந்தவற்றை திடப்படுத்துவார் எனவும் சொல்லப்படுகிறார் (הַחוֹלָה ஹஹோலாஹ்- நலிந்தவை). நலிந்தவை என்பது பராமரிப்பு இல்லாதவை, வறியவை மற்றும் நோய்வாய்ப்பட்டவை போன்றவற்றைக் குறிக்கலாம்இந்த வரியின் இரண்டாவது பகுதி ஆயனின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. இதனையும் உருவகமாகவே பார்க்கவேண்டும். மந்தையில் கொழுத்த செம்மறிகளை யாரும் வெறுக்க மாட்டார்கள். அதனை நினைத்து மகிழ்வடைவார்கள். இங்கே கொழுத்த மற்றும் வலிமையுள்ளவை என்பது, நம்பிக்கையில்லாத, தவறான வழியில் செல்லும் மக்களையே குறிக்கிறது. இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதே இந்த வரியின் செய்தி. இதற்கு காரணம் இந்த ஆயர்-கடவுள் நீதியுள்ளவராக இருப்பதே ஆகும்



திருப்பாடல் 23

ஆண்டவரே நம் ஆயர்

(தாவீதின் புகழ்ப்பா)


1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை

2பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. 6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.



  திருப்பாடல் புத்தகத்திலுள்ள 151 பாடல்களில், முதன்மையான பாடலாக இந்தப் பாடலைக் கொள்ளலாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இசைவடிவங்களைக் கொண்டுள்ள இந்த பாடல் பல ஆண்டுகள் சென்றாலும் அழியாத கடவுள்-மனித பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த பாடலின் முன்னுரை இதனை தாவீதின் பாடலாக முன்மொழிகிறது (מִזְמ֥וֹר לְדָוִ֑ד). அழகான இந்த பாடலை மூன்று பிரிவாக பிரித்து கடவுளின் பாதுகாக்கும் தன்மையை உற்று நோக்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள், சாதாரண சொற்களாக இருந்தாலும் அவை மிக ஆழமான உணர்வுகளை தாங்கியுள்ளன. தேவை ஒன்றும் இராது, பயம் இராது, ஆண்டவரில் வாழ்தல் போன்றவை மிக ஆழமான வரிகள். எப்படியான பின்புலத்தில் தாவீது இந்த திருப்பாடலை பாடினார் என்பது புலப்படவில்லை ஆனால் இதன் வரிகளைக் கொண்டு நோக்குகின்ற போது, கடுமையான சிக்கலிலிருந்து அவர் மீண்ட போது, ஆண்டவரின் நன்மைத் தனத்தை நினைத்து அவர் பாடியிருக்கலாம் என்பது புலப்படுகிறது. தாவீதுதான் இந்தப் பாடலை பாடினார் அல்லது இயற்றினார் என்பதற்கும் போதிய சான்றுகள் இல்லை, இதனை சிலர் திருப்பயண பாடல் என்றும் காண்கின்றனர்


.1: ஆண்டவரை ஆயராக வர்ணிப்பது, முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான உருவகம்

இதனைத்தான் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் அடிக்கடி செய்வார் (காண்க எசே 34,10: செக் 11,16: யோவா 10,11.14). ஆயத்துவம் அக்கால இஸ்ராயேல் மக்களுக்கு மிக தெரிந்திருந்தது. ஆயர்கள் அதிகமாக நல்லவர்களாக இருந்து தங்கள் மந்தைகளை காத்தார்கள். மந்தைகளை தங்கள் சொந்த பிள்ளைகள் போல வளர்த்தார்கள், சில வேளைகளில் ஆபத்துக்களையும் பாராது தங்கள் மந்தைகளை மேய்த்தார்கள். தாவீது கூட நல்ல ஆயனாக தன் மந்தைக்காக கொடிய விலங்குகளுடன் போரிட்டதாக விவிலியம் சொல்கிறது (காண்க 1சாமு 17,34.37). இதனால் தாவீது உண்மையான ஆயனாக கடவுளைக் காண்பது அவருடைய சொந்த அனுபவம் என்றுகூட சொல்லலாம் (יְהוָה רֹעִ֗י לֹ֣א אֶחְסָר அதோனாய் ரோ'யி லோ' 'எஹ்சார்), அத்தோடு கடவுள் தன் ஆயனாக இருப்பதனால் தனக்கு எதுவும் தேவையில்லை என்கிறார்


.2: இங்கே தாவீது தன்னை ஓர் ஆடாக வர்ணிக்கிறார். பசும் புல் வெளிமீது இளைப்பாறச் செய்வது அழகான உருவகம். நவீன உளவியலாளர்கள் சிலர், கிறிஸ்தவம் மக்களை மந்தைகளாக காட்டுகின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் மந்தைகளுக்குள் இருக்கும் இந்த அதிசயமான பண்புகள், நல்ல அடையாளங்கள் என்பதை, உளவியலை தாண்டிய சாதாரண உணர்வுகளும் ஏற்றுக்கொள்கின்றன. பசுமபுல் வெளி மற்றும் குறையாத நீரோடைகள் என்பன பாலஸ்தீன ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் என்றுமே ஒரு கனவுதான். இப்படியானவை அங்கே குறைவு அவை கிடைத்தாலும், அங்கே அதிகமான போட்டிகளிருக்கும். ஆனால் ஆண்டவர் ஆயனாக இருக்கின்ற படியால் இந்த கனவு, தாவீதுக்கு நனவாகிறது. (בִּנְאוֹת דֶּשֶׁא பின்'ஓத் தெஷெ'- பசுமையான புல்வெளியில்: עַל־מֵי מְנֻחוֹת 'அல்-மெ மெநூஹோத்- அமைதியான நீர்நிலைக்கு)


.3: கடவுள் தனக்கு புத்துயிர் அளிப்பதாக தாவீது பாடுகின்றார். இதனை எபிரேய விவிலியம், 'என் ஆன்மாவை புதுப்பிக்கிறார்' என்று அழகாக காட்டுகிறது (נַפְשִׁי יְשׁוֹבֵב நப்ஷி யெஷோவெவ்;). கழைத்துப்போய், சேர்ந்துபோய் இருக்கின்ற தலைவர்களுக்கு, தங்கள் பதவி, பலம், குலம், சொத்துக்கள், இன்பங்கள் போன்றவை புத்துயிர் அளிக்காதவை, மாறாக புத்துயிர் தருபவர் கடவுள் ஒருவரே என்பது தாவீதுக்கு நன்கு தெரிந்திருக்கிறதுகடவுளுடைய நன்மைத்தனங்களுக்கும் அவருடைய நீதியான பெயருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது இங்கே நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய பெயரைப்போலவே அவருடைய உறவும் இருக்கிறது என்பது ஆசிரியரின் அனுபவம்


.4: இந்த வரி இன்னும் ஆழமான உணர்வுகளைத் தாங்கிச் செல்கிறது. முதல் மூன்று வரிகளும் கடவுளை மூன்றாம் ஆளாகவும், ஆயனாவும் வர்ணித்தன. இந்த நான்காம் வரி கடவுளை இரண்டாம் ஆளாக காட்டுகிறது, அத்தோடு அவரை வழியில் பாதுகாப்பவராக காட்டுகிறது. இந்த வரியில் இருந்துதான் சிலர் இந்த பாடலை வழித்துணை திருப்பயணப் பாடல் என்று காண்கின்றனர். பாலைவனங்கள், பயங்கரங்கள், தனிமையான பாதைகள், வழிப்பறிக் கொள்ளைகள் என்று பாலஸ்தீனத்தின் பாதைகள் இருந்திருக்கின்றன. இந்த பாதைகளில் கடவுளின் காத்தல் மிகவும் அனுபவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் ஆசிரியர் சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் தான் நடக்க நேர்ந்தாலும் என்று பாடுகிறார் (גַּם כִּֽי־אֵלֵךְ בְּגֵיא צַלְמָוֶת לֹא־אִירָא கம் கி-'எலெக் பெகெ' ட்ஸல்மாவெத் லோ'-'ஈரே'). அதற்கான காரணமாக கடவுளுடைய கோலையும் (שֵׁבֶט ஷெவெட்), நெடுங்கழியையும் (מִשְׁעֶנֶת மிஷ்'எனெத்), காட்டுகிறார். இவை ஆயர்களுடைய பாதுகாப்பு ஆயுதங்கள், இதனைக் கொண்டே அவர்கள் தங்கள் மந்தைகளை பாதுகாத்தார்கள். பிற்காலத்தில் இவை பாதுகாப்பின் அடையாளங்களாக மாறின. அரசர்களுடைய கையிலிருக்கும் கோலுக்கும், ஆயனுடைய கோலுக்கும் அதிகமான தொடர்பிருக்கிறது


.5: இவ்வளவு நேரமும் தன்னை ஆடாக வர்ணித்த ஆசிரியர் இந்த வரியிலிருந்த தன் உருவத்தை விருந்தாளியாக மாற்றுகிறார். ஆட்டின் தலையில் நறுமண தைலம் பூசமாட்டார்கள். எதிரிகளின் கண் முன்னே விருந்தை ஏற்பாடு செய்தல், தலையில் நறுமண தைலம் பூசுதல், பாத்திரத்தை 

இரசத்தால் நிறைத்தல் போன்றவை சிற்றரசர்களுக்கு பேரரசர்கள் கொடுக்கும் அன்பு விருந்தைக் காட்டுகிறது. இப்படியான விருந்துகள் மத்திய கிழக்கு நாடுகளின் முன்னைய பேரரசுகளில் பலமுறை நடந்திருக்கிறது. இந்த வரியை வைத்து பார்க்கும் போது, பாடலாசிரியர் ஒரு அரசர் போல தோன்றுகிறது, அல்லது அவர் அரச உதாரணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னுடைய எதிரிகள் அவமானப்பட கடவுள் தன்னுடைய நன்மைத் தனத்தைக் காட்டுகிறார் அதாவது தன்னை உயர்த்துகிறார் என்பது இந்த ஆசிரியரின் அனுபவம்.


.6: கடவுளின் அருளும், பேரன்பும் (טוֹב וָחֶסֶד தோவ் வெஹெசெத்வாழ்நாள் முழுவதும் புடைசூழ்ந்து வரும் என்பதிலிருந்து ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை புலப்படுகிறது. அத்தோடு ஆசிரியரின் கடவுள் அனுபவம் ஒரு முடிவுறாத அனுபவம் என்பதும் புலப்படுகிறது. ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் என்கிறார் ஆசிரியர். இந்த ஆண்டவரின் இல்லத்தை எபிரேய விவிலியம், கடவுளின் வீடு (בֵית־יְהוָה வெத்-அதோனாய்) என்கிறது. இதனால் இதனை எருசலேம் ஆலயம் என்று எடுக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது எருசலேம் ஆலயமாக இருந்தால், இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்க முடியாது


1கொரிந்தியர் 15,20-26.28

20ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. 21ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். 22ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். 23ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். 24அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். 25எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். 26சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். 27ஏனெனில், 'கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.' ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது. 28அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.


பின்புலம்:

  கொரிந்து உரோமையருடைய மிக முக்கியமான கடலோர துறைமுக நகரமாக இருந்தது. கிரேக்கருடைய ஆட்சியில் மிக முக்கியமான நகராக இருந்த கொரிந்து போரிலே உரோமையரால் அழிக்கப்பட்டு அவர்களாலேயே புதுப்பொழிவுடன் மீளக் கட்டப்பட்டது. கி.பி 50களில் பவுல் கொரிந்திற்கு வருகை தந்தார். யூலியஸ் சீசர் இந்த நகரை 100 வருடங்களுக்கு பின்னர் உரோமைய சாயலில் உருவாக்கினார். அக்காயா மாநிலத்தின் தலைநகராக மாறி இது ஏதேன்ஸ் நகருக்கு ஒத்த மக்கட்தொகையை மிக விரைவாகவே தனதாக்கியது. ஆரம்பத்தில் போர்வீரர்களை மட்டுமே கொண்டிருந்த இந்த நகரம் படிப்படியாக சாதாரண மக்களை உள்வாக்கி கலாச்சாரத்திலும் கல்வியிலும் வளரத் தொடங்கியது. இதன் மலையுச்சிகளின் அழகில் (1800 அடி உயரம்) மயங்கிய சில முக்கியமான கிரேக்க பணக்கார குடும்பங்கள் இங்கே குடியேறத்தொடங்கினர். கிறிஸ்தவம் தொடங்கிய காலத்தில் களியாட்டங்களுக்கும், விளையாட்டுகளுக்கும் இந்த நகர் பிரசித்தம் பெறத் தொடங்கியது. கடல் தெய்வமாக கருதப்பட்ட பொசிதியோனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுஇஸ்திமோஸின் சரணாலயத்தில் விளையாடப்பட்ட, இஸ்மித்திய விளையாட்டுகள் இங்கே பிரசித்தி பெற்றிருந்தது. கொரிந்து நகரின் துறைமுகங்கள் அக்காலத்திலேயே பல இக்கால கட்டமைப்பை கொண்டிருந்ததாக தொல்பொருளியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்

  பவுல் கொரிந்தியருக்கு திருமுகம் எழுதியபோது ஏற்கனவே இங்கே திருச்சபை ஆழமாக வேரூன்றியிருந்தது. ஏதென்சுவைப் போல இந்நகரும், செல்வத்திலும் காலச்சாரத்திலும் வலுவாகவே இருந்தது. பல தெய்வங்களை கொரிந்தியர்கள் வணங்கினர். அபோரித்து என்ற தெய்வம் இங்கே மிகவும் பிரசித்தமாக இருந்தது. இந்த கடவுளுளையும் காதல் மற்றும் ஆலய விபச்சார சடங்கை தொடர்புபடுத்தி பார்க்கின்றனர். உரோமையர் அபோரித்து தெய்வத்திற்கு தங்கள் அடையாளத்தைக் கொடுத்து அதனை உரோமைய தெய்வமாக்கினர். அத்தோடு போரரசின் தாய் தெய்வமாகவும் அதனை அவர்கள் கண்டனர். பாலியல் பிறழ்வுகள் மற்றும் இன்பங்கள் எப்படி கொரிந்தினுள் நுழைந்தன என்பதில் பல ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். சிலர் இதற்கு உரோமையர்களை காரணம் காட்டுகின்றனர். இந்த பாலியல் இன்பங்கள் கிரேக்கருடைய கலாச்சாரம் என்று சொல்வதற்கில்லை

பவுல் கி.பி. 50ல் இங்கே திருச்சபையை நிறுவினார், அவருடைய முதல் நம்பிக்கையாளர்களாக பல முக்கியமான யூதர்கள் விளங்கினர் (காண்க தி.பணி 18,8). முதல் மனமாற்றம் யூத செபக்கூடத்திலேயே நிகழ்ந்தது. யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை ஆரம்ப காலத்தில் முன்வைத்ததால், கொரிந்திய-உரோமைய ஆளுநர்கள், கிறிஸ்தவர்களையும், யூதர்களாகவே பார்த்தனர். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் பவுல் கொரிந்தில் பணியாற்றியிருக்கிறார். பவுலிற்கு பின்னர் அப்பல்லோ மற்றும் அக்குவிலா மற்றும் பிறிஸ்கா தம்பதியினர் பவுலுடைய பணியை தொடர்ந்தனர் (காண்க தி. 18,24-28). பேதுருவும் கொரிந்தில் இருந்ததற்கான வாய்ப்புக்கள் உள்ளன (காண்க 1கொரி 1,12). 

  பவுல் கொரிந்தியருக்கு ஐந்திற்கும் மேற்பட்ட திருமுகங்களை எழுதினார் என்ற வாதமும் பலமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள மிக நீண்ட உரையாகவும், பங்குப் பணித்தளங்களில் ஏற்படும் சிக்கல்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கும் கொரிந்தியர் திருமுகம் நல்லதோர் உதாரணம்

  1கொரிந்தியர் 15வது அதிகாரம், உடலின் உயிர்ப்பைப் பற்றி பேசுகிறது. இந்த உடலின் உயிர்ப்பு மற்றும் மறுவாழ்வு கொரிந்திய திருச்சபையில் பல வாதங்களையும், கேள்விகளையும் எழுப்பியவேளை, பவுல் அதற்கு பதிலளிப்பது போல இப்பகுதி காணப்படுகிறது


.20: ஏற்கனவே கிறிஸ்துவின் உயிர்ப்பைப் பற்றி பேசிய பவுல், அவரைப்போலவே அவரில் நம்பிக்கை கொண்டோரும் உயிர்ப்பர் என்று தன்னுடைய வாதத்தை வலுப்படுத்துகிறார். கிறிஸ்துவின் உயிர்ப்புத்தான் ஆரம்ப கால திருச்சபையின் மையமான நம்பிக்கை. Χριστὸς ἐγήγερται ἐκ νεκρῶν கிறிஸ்டொஸ் எகேகெர்டாய் எக் நெக்ரோன். இந்த கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது ஒரு அனுபவமல்ல மாறாக அது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதைக் காட்ட அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தார் என்பது சொல்லப்படுகிறது. அத்தோடு அவர்தான் இறந்தவர்களிடமிருந்து உயிர்த்த முதலாமவர் என்பதும் சொல்லப்படுகிறது (ἀπαρχὴ அபார்கே- முதற்கனி). இதன் மூலம் இறைவாக்கினர்கள், குலமுதுவர்கள் மற்றும் இஸ்ராயேலரின் மிக முக்கியமான முன்னோர்களிலும் இயேசு முதன்மையானவர் ஆகிறார்


.21: ஆதாம் மூலமாகவே சாவு வந்தது என்பது இஸ்ராயேலருடைய நம்பிக்கை. இது பவுலிற்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த ஆதாமால் சாவு வந்து அனைத்து மனித குலத்திலும் தாக்கம் செலுத்துவது போல, இன்னொரு மனிதரால் வாழ்வு வந்தது அதுவும் தாக்கம் செலுத்துகிறது என்கிறார். ஒரு மனிதர் என்பது இங்கே (δι᾿ ἀνθρώπου தி அந்த்ரோபூ), யாரோ ஒரு மனிதரை குறிக்காமல் முக்கியமான 'ஒரு மனிதரைக்' குறிக்கிறது என எடுக்க வேண்டும்


.22: ஏற்கனவே சொல்லப்பட்ட ஆதாம் மற்றும் கிறிஸ்துவின் உருவகம் மீண்டும் வலுப்படுத்தப்படுகிறது. ஆதாம் முதல் ஏற்பாட்டில் மிகவும் அறியப்பட்ட ஒரு உருவகம். முதல் மனிதரான இவர், மனித குலத்தின் அடையாளமாகப் பார்கப்படுகிறார். அதிகமான முதல் ஏற்பாட்டு பரம்பரை அட்டவனைகள், ஆதாமிலிருந்தே தொடங்குகின்றன. இந்த நன்கு அறிந்த மனிதரை இயேசுவுடன் ஒப்பிட்டு, ஆதாமில்லை, கடவுளின் உண்மையான மகன், மாறாக கிறிஸ்துதான் கடவுளின் மகன் என்பது தொடக்க காலத்திலேயே திருச்சபையின் நம்பிக்கையாக வளர்கிறது. ஆதாமால் அனைவரும் சாவடைய இந்த புதிய ஆதாமல் அனைவரும் வாழ்வடைந்தனர் என்று எதிர்கால வினையில் சொல்லப்படுகிறது (ζῳοποιηθήσονται ட்சோஓபொய்யேதேசொன்டாய்- மீட்கப்படுவர்), அதாவது இந்த மீட்புத் திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை இந்த எதிர்கால வினை காலம் காட்டுகிறது


.23: ஒவ்வொருவரும் அவரவர் முறைவரும் போது உயிர்பெறுவர் என்பது திருச்சபையின் உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையில் வளர்ச்சி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இதன் மூலம் உயிர்ப்பு என்பது உடனடியாக அனைவருக்கு ஒரே நேரத்தில் நடக்கும் என்ற பழைய நம்பிக்கையை சற்று வேறுபத்திக்காட்டுகிறது அல்லது இந்த விசுவாசம் வளர்கிறது என எடுக்கலாம். கிறிஸ்துதான் முதலில் உயிர்த்தவர் என்பதில் மாற்றம் இல்லை (ἀπαρχὴ Χριστός அபார்கே கிறிஸ்டொஸ் - கிறிஸ்துதான் முதற்கனி). கிறிஸ்துவை சார்ந்தோர் என்பவர்கள் அவரில் நம்பிக்கை கொள்வோரைக் குறிக்கிறது (οἱ τοῦ Χριστοῦ ஹோய் தூ கிறிஸ்டூ- கிறிஸ்துவுடையவர்கள்). இவர்கள் கிறிஸ்துவுடைய வருகையின் போதுதான் உயிர்ப்படைய இருக்கிறார்கள்


.24: இந்த இரண்டாம் வருகையுடன் உயிர்ப்பு வருகிறது. இதன் பின்னர் முடிவு வரும் என்கிறார் பவுல் (τέλος டெலொஸ்- முடிவு). இந்த முடிவிலே, ஆட்சியாளர்கள் (ἀρχὴν அர்கேன்), அதிகாரம் செலுத்துகிறவர்கள் (ἐξουσίαν எட்சூசியான்), வலிமையுடையவர்கள் (δύναμιν துனாமின்), அனைவரும் அழிக்கப்படுகிறார்கள். ஒரு வேளை திருச்சபையின் துன்பத்திற்கு காரணமாக இருந்தவர்களை பவுல் குறிப்பிடுகிறாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது

 இவர்களுக்குப் பின்னர் இயேசு ஆட்சியை தந்தையாகிய கடவுளிடம் கொடுக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. அதிகாரத்திற்கு 'அரசாட்சியை' (βασιλείαν பசிலெய்யான்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, தற்கால ஆட்சி பிழையான ஆட்சி என்பதை பவுல் மறைமுகமாக சொல்கிறார் என்பது புலப்படுகிறது


.25: ஆண்டவருடைய ஆட்சி அனைத்து பகைவரையும் அழிக்கும் வரை இருக்கும் என்கிறார் (ἐχθρός எக்த்ரொஸ்). யார் இந்த பகைவர் என்பது சொல்லப்படவில்லை. இவர்கள் திருச்சபையை துன்புறுத்திகிறவர்கள் அல்லது கிறிஸ்துவில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் எடுக்கலாம்


.26: சாவை சவுல் கடைசிப் பகைவனாகப் பார்க்கிறார் (θάνατος தானாடொஸ் -சாவு). மனிதர் நாகரீகமடைந்த காலத்திலிருந்தே, சாவு என்பது ஒரு பலமான சக்தியாகவும், தீய சக்தியாகவும் பார்க்கப்படுகிறது. சாவிற்கு மேல் மனிதருக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்பதையும், அப்படி மனிதர்கள் சாவை மேற்கொண்டால் அவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை என்பதையும், பல இலக்கியங்கள் காட்டுகின்றன. கிரேக்க, உரோமைய, திராவிட, சமஸ்கிரத சமயம் சார்ந்த இலக்கியங்கள் இந்த கதைகளை தம்மகத்தே வைத்துள்ளன

 யூதர்களுக்கும் சாவு மிகவும் முக்கியமான கருப்பொருளாகவும், தீர்க்க முடியாத கேள்வியாகவும் இருக்கிறது. கிறிஸ்தவம் சாவை வித்தியாசமாக பார்க்க முயற்சி செய்கிறது. பவுல் சாவை இறுதியான பகைவன் என்று கூறுவதில் ஆச்சரியம் இல்லை


.27: கடவுள் தன்னைத் தவிர அனைத்தையும் கிறிஸ்துவிற்கு அடிபணிய செய்துள்ளார் என்று பவுல் வாதிடுகிறார். அதாவது கடவுளைத்தவிர மற்றனைத்து பலங்களும், அதிகாரங்களும் கிறிஸ்துவிற்கு அடிபணிகின்றன, ஆக மரணமும் கிறிஸ்துவிற்கு அடிபணிய வேண்டும். இங்கே கிறிஸ்துவிற்கு அடிபணிய செய்கின்ற செயற்பாடு கடவுளால் முன்னெடுகப்படுகிறது. இதன் மூலம் மீட்புத் திட்டத்தில் கிறிஸ்துவும் கடவுளும் இணைந்து ஒருவராக செயலாற்றுகின்றனர் என்பதும் சொல்லப்படுகிறது


.28: இந்த சிந்தனை இந்த வரியில் தந்தை மகன் உறவு மூலமாகக் காட்டப்படுகிறது. கடவுள், தந்தையாக அனைத்தையும் மகனுக்கு அடிபணிய செய்கிறார். இதனால் கிறிஸ்து, மகன் தந்தைக்கு விசுவாசமாக அடிபணிகிறார் (ὑποτάσσω; ஹுபொடாஸ்ஸோ- அடிபணி). 

 இந்த வரி மூலமாக ஒரு அரசர் தன் ஆட்சியை மகனுக்கு கையளிக்கின்றபோது ஏற்படுகின்ற நிகழ்வை உருவகமாக பவுல் எடுத்து விளக்குவது போல இருக்கிறது. இந்த உருவகம் அக்கால மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கலாம். அடிபணிதல் என்பதை சூழலியலில் நோக்க வேண்டும் அல்லது கிறிஸ்து சுய அதிகாரம் இல்லாதவராக இருந்தார் என்ற கருத்தை தரும். இங்கே இவர்களுக்கிடையே இருந்த உறவு பரஸ்பர உறவாகக் காட்டப்படுகிறது


மத்தேயு 25,31-46

மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு


31'வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். 32எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். 33ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாக பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் தனித்தனியாக பிரித்து நிறுத்துவார். 34பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். 35ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 36நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். 37அதற்கு நேர்மையாளர்கள் 'ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? 38எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? 39எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். 40அதற்கு அரசர், 'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். 41பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். 42ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. 43நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். 44அதற்கு அவர்கள், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். 45அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். 46இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.


கடந்த வாரங்களில் நாம் வாசித்த நற்செய்திகளின் தொடர்சியாகவே இந்த வார நற்செய்தியும் வருகிறது. இயேசு ஆண்டவரை அன்பான, இரக்கம் நிறைந்த, மன்னிக்கும் ஆண்டவராக காட்டும் மத்தேயு, இறுதியான அதிகாரங்களில் அவருடைய இன்னொரு முகத்தைக் காட்டுகிறார். இயேசு நீதியின் அரசர் என்பது இந்த பகுதியில் காட்டப்படுகிறது. இந்த பகுதியில் பல அடையாளங்கள் பாவிக்கப்பட்டாலும், செய்திகள் நேரடியாகவே இருக்கின்றன. ஆண்டவர் மக்களினங்கள் அனைவருக்கும் தீர்ப்பு கொடுக்கிறார் என்பதை இந்த பகுதியின் சாரம்சமாகக் கொள்ளலாம்இறுதிநாட்களை யூதர்கள் கடவுளின் நாட்கள் என நம்பினார்கள். இந்த கடவுளின் நாட்கள் எவ்வாறு இருக்கும், அதன் விளைவுகள் என்ன என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன


.31: மத்தேயு சில உருவகங்களை பாவிக்கின்றார். இயேசுவை அவர் மானிட மகன் என்கின்றார். மானிட மகன் என்பது (ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ஹொ ஹுய்யொஸ் டூ அந்த்ரோபூ) இயேசுவிற்கான அடையாளம். மத்தேயுவில் அது அவரை மெசியாவாகவும், உரிமைக் குடிமகனாகவும் காட்டுகிறது. இந்த மெசியா வானதூதர்கள் புடைசூழ வருகின்றார், அத்தோடு அவர் தன் மாட்சியின் அரியணையில் அமர்வார் (ἐπὶ θρόνου δόξης αὐτοῦ· எபி துரோனூ தொக்ஸ்சேஸ் அவுடூ). இந்த அடையாளங்கள் அவரை இறைவனின் அரசின் வாரிசாகக் காட்டுகிறது


.32: இங்கே யூதர்கள் மட்டுமல்ல மாறாக அனைத்து மக்களினங்களும் (πάντα τὰ ἔθνη பான்டா டா எத்நே) ஒன்று கூட்டப்படுகின்றனர். இந்த செயல் செயற்படுத்தப்படுகின்ற படியால், மக்களினங்கள் இவர் முன் அதிகாரம் இல்லாதவர்களாகவும், அனைவரும் சமன் என்ற அர்த்தங்களும் கொடுக்கப்படுகின்றன


33: ஆயர் (ποιμήν பொய்மேன்), செம்மறியாடுகள் (πρόβατον புரொபாடொன்) மற்றும் வெள்ளாடுக்ள் (ἐρίφιον எரிபியொன்) உருவகங்களாக பாவிக்கப்பட்டுள்ளன. இந்த உருவகங்களை அக்கால மத்திய கிழக்கு மக்கள் இலகுவாக அறிந்து கொள்வர். மத்தேயுவின் வாசகர்கள் யூத கிறிஸ்தவர்களாக இருந்ததால், அவர்களுக்கு இந்த உருவகங்கள் இலகுவாக புரியும். முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை பல இடங்களில் (முக்கியமான இறைவாக்குகளில் -ம் எசேக்கியேல்) ஆயனாக வர்ணிக்கிறார். புதிய ஏற்பாட்டிலும் இயேசு தன்னை ஆயன் என்றே சொல்கிறார் (-ம் யோவான் நற்செய்தி 10). ஆக இந்த உருவகம் இயேசுவிற்கு என்பது அழகாக தெரிகிறது. வெள்ளாடுகள் இஸ்ராயேல் சமூகத்தில் செம்மறிகளைப் போல அதிகம் முக்கியத்துமவ் பெறவில்லை. இவைகள் இறைச்சிக்காவும், பாலுக்காவுமே அதிகமாக பயன்பட்டன. ஆனால், செம்மறியாடுகள் பல தேவைகளை பூர்த்தி செய்த படியால் அவை உயர்ரக ஆடுகளாக கருதப்பட்டன எனலாம். இதனால்தான் மத்தேயு சீடர்களுக்கு செம்மறியையும், மற்றவர்களுக்கு வெள்ளாட்டையும் உருவகமாக கொடுக்கிறார் எனலாம்


.34: ஆண்டவர் அரியணையிலிருந்து பேசுகிறார். இது அவரை நீதியின் தேவனாகக் காட்டுகிறது. வலப்பக்தில் உள்ளவர்கள், செம்மறி, நல்லவர்கள் என காட்டப்படுகிறார்கள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் தீயவர்கள் என காட்டப்படுகிறார்கள். வலப்பக்கம் அதிகமான மனிதர்களுக்கு இலகுவானதாகவும், பலமானதாகவும், அதிகமான ஆயதங்களும் வலது கையை நோக்கியே செய்யப்பட்டன. இதன் காரணமாக வலது பக்கம் நல்ல பக்கமாக கருதப்பட்டது. இதே படிப்பினையை மத்தேயுவும் கையாள்கிறார். வலது பக்கம் உள்ளவர்கள ஆண்டவரின் ஆசியை பெற்றவர்கள் ஆகிறார்கள் (εὐλογημένοι எவுலொகேமெனொய்). 


வவ.35-36: இந்த ஆசீர்வாதம் பெற்ற வலது கைக்காரர்கள் என்னனென்ன செய்தார்கள் என்பது பட்டியலிடப்படுகிறது


. அரசர் பசியாய் இருந்தபோது உணவு கொடுத்தார்கள்: பசித்தவருக்கு உணவு கொடுத்தல் யூத கலாச்சாரத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது (தமிழ் கலாச்சாரத்தைப் போல). உணவு என்பதற்குள் பல வகையான உணவு வகைகள் அடங்கலாம்


. அரசர் தாகமாக இருந்தபோது இவர்கள் அவர் தாகத்தை தணித்தார்கள். உணவைப் போல நீர் ஆகாரமும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. நீர் இஸ்ராயேல் நாட்டில் மிக முக்கியமான சொத்து

இதனை கடவுளுக்கு ஒப்பிடும் அளவிற்கு மிக அரிதாக காணப்பட்டது. உணவை விட சில 

இடங்களில் நீரின் முக்கியத்துவம் வலுப்பெறுகிறது. ஒருவர் இன்னொருவருக்கு  நீர் கொடுத்தல் என்பது உண்மையில் அவரின் இரக்க குணத்தையே காட்டுகிறது


. அரசர் அன்னியனாக இருக்க, இவர்கள் அவரை ஏற்றுக்கொண்டார்கள். இஸ்ராயேல் சமுதாயத்தில் அன்னியர்கள் (ξένος ட்செனொஸ்) மிகவும் பின்தள்ளப்பட்டவர்களாக இருந்தார்கள். உரிமையற்றவர்களாகவும் இருந்தார்கள். இதனால்தான் அன்னியர்களைப் பற்றி லேவியர் புத்தகமும் அதிகமான கட்டளைகளைக் கொண்டு வருகிறது. அன்னியர்கள் இலகுவாக மற்றவர்களால் சுறண்டப்பட்டார்கள். அன்னியர்களை பாதுகாப்பதைக் கொண்டே ஒரு அரசரின் இரக்க குணம் அளவிடப்பட்டது. ஆண்டவர் தன்னை அன்னியரோடு ஒப்பிடுவது மிகவும் அழகான உருவகம்


. அரசர் ஆடையின்றி இருந்தபோது இவர்கள் அவருக்கு ஆடை கொடுத்தார்கள். விவிலியத்தில் ஆடை என்பது ஒருவருடைய சுய மரியாதையைக் காட்டுகிறது. ஒருவருடைய ஆடையைக் கொண்டே அவருடைய குலம், குடும்பம், தொழில் மற்றும் பல அடையாளங்கள் கணிக்கப்பட்டன. ஆடையை இழத்தல் என்பது ஒருவர் தன்னுடைய அனைத்து மரியாதையையும் இழத்தலைக் குறிக்கலாம். இவர்கள் ஆடை கொடுக்கிறார்கள் என்றால், உண்மையில் இவருக்கு இவர்கள் மாண்பினைக் கொடுக்கிறார்கள் என்ற பொருளையும் கொடுகிறது (περιβάλλω பெரிபல்லோ - ஆடை அணிவி).  இதனை விட ஆடை மனிதரின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கின்ற படியால் இதனை சாதாரண அடிப்படை இரக்கச் செயலாகவும் காணலாம்


. நோயுற்றபோது இவர்கள் அரசரை கவனித்திருக்கிறார்கள். அக்காலத்தில் சில நோய்களை மக்கள் தீய சக்தியின் ஆதிக்கமாக கருதிய படியால், நோயுற்றவர்கள் இலகுவாக புறந்தள்ளப்பட்டார்கள். நோயுற்றவர்கள் சமுதாயத்தினால் வெளியில் ஒதுக்கிவைக்கவும்பட்டார்கள். நோயுள்ளவர்களை கவனித்தல் என்பது அவர்களின் மேல் ஒருவருக்கிருந்த அன்பைக் காட்டியது. இதனால்தான் இதனை அரசர் மிக முக்கியமான கவனிப்பாக எடுக்கிறார் என்றும் கருதலாம் (ἀσθενέω அஸ்தெநெயோ- நோய்வாய்ப்படு). 


. அரசர் சிறையிலிருந்தபோது அவரை இவர்கள் தேடிவந்திருந்தார்கள். அக்கால சிறைகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தன. அதிகமான அடிமைகள் மற்றும் பயங்கர குற்றவாளிகள் என கருதப்பட்டவர்கள் மற்றும் போராளிகள் போன்றவர்கள் சிறையில் இருந்தார்கள். சிறையில் 

இருப்பவர்களை சந்திப்பது என்பது அவ்வளவு ஆரோக்கியமானதொன்றாக இருக்கவில்லை. சிறைக் காவலர்களாலும், அரச அதிகாரிகளாலும் இவர்கள் துன்புறுத்தப்படலாம். இப்படியான வேளையில் சிறையில் இருந்த அரசரை இவர்கள் சந்திக்கிறார்கள் என்றால், இவர்கள் தங்கள் உயிரிலும் மேலாக அரசரை மதிக்கின்றனர் என்று பொருள் படுகிறது. (அக்கால சிறைகள் இக்கால இலங்கை சிறைகளைப்போலத்தான் இருந்திருக்கும் போல). 


வவ.37-39: அரசரின் பாராட்டுக்களை கேட்கிற வலது பக்கக்காரர்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறது. இந்த ஆச்சரியத்தின் மூலம், இவர் எதனையும் எதிர்பாராமல் அத்தோடு முகம் பாராமல் இவர்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது. அரசர் சொன்ன அனைத்து செயற்பாடுகளையும் இவர்கள் கேள்வியாக கேட்கிறார்கள். இந்த கேள்விகளின் மூலமாக மத்தேயு இவர்களின் புனிதத்தன்மையை காட்ட விளைகிறார்மத்தேயு அதிகமாக பரிசேயர்கள், மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக சில காரியங்களை செய்கிறார்கள் என்று சாடுவார். இந்த வழியில் இவர்கள் பரிசேயர்கள் அல்ல என்பதையும் காட்டுகிறார் எனலாம்


.40: எப்போது யாருக்கு செய்தோம் என்ற கேள்விக்கு அரசர் பதிலளிக்கிறார். மிகச் சிறியோருக்கு செய்ததெல்லாம் தனக்கு செய்ததாக சொல்கிறார் அரசர். யார் இந்த மிகச் சிறியோர் என்பது சொல்லப்படவில்லை (ἐλαχίστων எலாகிஸ்டோன்- சிறியவர்கள்). இவர்கள் ஆண்டவரின் சீடராக இருக்கலாம், அல்லது சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக்கூட இருக்கலாம். சாதாரணமாக எவரும் சமுதாயத்தில் சிறியவர்களுக்கு உதவிசெய்வதை வழக்காமாக அல்லது புத்திசாலித்தனமாக கொள்ளமாட்டார்கள். இந்த நல்லவர்கள் இதனை செய்வதனால் அவர்கள் கடவுளின் மக்களாகிறார்கள் எனலாம்


.41: இடப்பக்கம் உள்ளவர்களுக்கு சாபம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள் எனப்படுகிறார்கள் (κατηραμένοι கடேராமெனொய்- சபிக்கப்பட்டவர்கள்). இவர்கள் மிகவும் ஆபத்தான சொல்லில் சபிக்கப்படுகிறார்கள். இதனை பின்வரும் சொற்கள் விவரிக்கின்றன. இவர்கள் கடவுளிடமிருந்து அகன்று போகிறார்கள், அலகைக்கும் (διάβολος தியபொலொஸ்) அதன் தூதருக்குமான (ἀγγέλοις αὐτοῦ அங்கெலொய்ஸ் அவுடூ) இடமான அணையாத நெருப்பிற்குள் போகிறார்கள். அணையாத நெருப்பு (τὸ πῦρ τὸ αἰώνιον டொ புர் டொ அய்யோனியோன்) இங்கே நரகத்தைக் குறிக்கலாம். இந்த உருவகம் இக்காலத்தில் யூதர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறதுஇதனை இவர்கள் கெகெனா என்றும் அழைத்தார்கள் (γέεννα). இது எருசலேமிற்கு கீழிருந்த ஒரு பள்ளத்தாக்கு இங்கே குப்பைகள் மிருக எச்சங்கள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டன. சிலவேளைகளில் மனித எச்சங்களும் இங்கே எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரவு பகலாக இது எரிந்து கொண்டிருந்ததால், மக்கள் இதனை நரகத்திற்கு அடையாளப்படுத்தினர். நரகம் என்பது சிந்தனையில் மகிவும் காலத்தால் பிந்தியது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்


வவ.42-43: முன்வரியில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் செய்த அனைத்து காரியங்களையும் இவர்கள் செய்யவில்லை என்று அரசர் குற்றம் சாட்டுகிறார் (காண்க வவ. 35-36). 


வவ.44: இந்த குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இவர்கள் அரசருக்கு இதனை செய்யாமல்விடமாட்டார்கள். எனவே இவர்கள் அரசரின் குற்றச்சாட்டை நம்ப ஆயத்தமாக இல்லை


.45: அரசர் உண்மையை உடைக்கிறார். அதாவது மிகச்சிறியோருக்கு இவர்கள் செய்யாததால், அது அரசருக்கு எதிரான குற்றமாகிறது. இவர்கள் சிறியவர்களை அரசரின் இயல்பில் பார்க்கவில்லை. இவர்கள் ஆட்களைப் பார்த்து வேலைசெய்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது


.46: தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீயவர்களுக்கு முடிவில்லா தண்டனையும் (κόλασιν αἰώνιον கொலாசின் அய்யோனியோன்), நல்லவர்களுக்கு நிலைவாழ்வும் கிடைக்கிறது (ζωὴν αἰώνιον ட்சோஏன் அய்யோனியோன்). மத்தேயு இந்த பகுதியை அரசவையில் நடக்கும் தீர்ப்புக்காட்சி போல காட்டுகிறார். இதன் மூலமாக இயேசுவை சட்டங்களின் கடவுளாகவும், மெசியாவாகவும், தாவீதின் வழிமரபாகவும் காட்டுகிறார் என எடுக்கலாம்



இயேசு அரசர் அல்ல

ஏனெனில் அரசர் என்பது மனித பதம்

அரசர் என்ற சொல், இயேசுவை அடக்க போதுமானது அல்ல

அரசர்க்கு நண்பர்களைவிட எதிரிகளே அதிகம்

அரசர்கள் பலத்தையே அதிகம் நம்பினார்கள், நிலம் அவர்களின் அடையாளம்

அரசர்களுக்கு குலம், மதம் போன்றவை மிக முக்கியமானவை

இவர்கள் உருவாக்கியவர்கள் என்பதை விட, அதிகமாக அழித்தார்கள்

இயேசுவிற்கு, குலம், இனம், மதம், நிலம் கிடையாது

அரசராக அவர் ஒன்றும் சுயநல மனிதர் அல்ல

இயேசு பெரியவர். அவர் அரசர் என்றால், அது அன்பின் அரசு மட்டுமே


அன்பு ஆயரே

ஆட்சிசெய்வதல்ல, அன்புசெய்வதே ஆட்சி என்று கற்றுத்தாரும், ஆமென்



கடவுளின் இடத்தை நிரப்ப விரும்பும் சுயநலமான அரசர்கள்-தலைவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக செபிப்போம்

இந்த கொரோனா காலத்திலும் கூட, வன்முறையை ஆயுதமாக எடுக்கும் 

மனநோய் பிடித்த தலைவர்களை கடவுள் குணப்படுத்துவாராக

ஆர்மோனியா, அசர்பையான், துருக்கி, பொலாருஸ், சீனா, வட கொரியா, தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, இலங்கை, இந்தியாக மற்றும் ஏனைய  நாட்டு தலைவர்கள்  சரியான புத்தி பெறுவார்களாக


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...