செவ்வாய், 3 நவம்பர், 2020

ஆண்டின் பொதுக்காலம் முத்திரண்டாம் வாரம் 08.11.2020; 32nd, Sunday in Ordinary Times



ஆண்டின் பொதுக்காலம் முத்திரண்டாம் வாரம்

08.11.2020


M. Jegankumar Coonghe OMI,

'Sangamam,' OSAC,

Kopay South, Jaffna

Monday, November 2, 2020


முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 6,12-16

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 63

இரண்டாம் வாசகம்: 1தெசலேனியர் 4,13-18

நற்செய்தி: மத்தேயு 25,1-13


சாலமோனின் ஞானம் 6,12-16

12ஞானம் ஒளிமிக்கது மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். 13தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். 14வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். 15அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். 16தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.


ஞானம் (חָכְמָה ஹொக்மாஹ், σοφία சோபியா) முதல் ஏற்பாட்டில் கடவுளுடைய மிக முக்கியமான அடையாளம் அல்லது, அவரது இறை பண்பாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவ விவிலியம் ஞான நூல்கள் என்ற ஒரு பிரிவை தனித்துவமாக காட்டுகிறது. விவிலியத்தில் உள்ள ஞான நூல்கள், அக்கால புராதன மத்திய கிழக்கு பிரதேசங்களின் ஞான சிந்தனைகளை சிறியளவில் ஒத்துள்ளது. இருப்பினும் விவிலிய ஞான இலக்கியங்கள், இஸ்ராயேலருக்கே தனித்துவமான ஒரே கடவுள் நம்பிக்கையை மையப்படுத்துவதாகவே உள்ளன

ஒரு சில ஞான நூல்கள் ஞானத்தை (மெய்யறிவு) ஒரு ஆள் போல விளக்க முயல்கின்றன. அதிகமான புத்தகங்கள் ஞானத்தை கடவுளுடைய வல்லமையாகவும், இந்த வல்லமையைக் கொண்டே கடவுள் உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தார் என்பதையும் காட்டுகின்றன. இந்த ஞானம் மேலுலகம் சார்ந்த ஒரு கொடை, இதனை கடவுள்தான் மனிதருக்கு கொடுக்கவேண்டும். இது இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் மனிதர்கள் இதனைக் கொண்டு வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இதே ஞானத்தை இயேசு என்றும், அவர்தான் உண்மையான ஞானத்தின் ஆசிரியர் என்றும் காட்டுகிறார்கள்நான்காம் நற்செய்தியாளர் யோவான் இந்த சிந்தனையில் மிக முக்கியமானவர். அவருடைய வார்த்தை என்னும் பாடல், இயேசுவை முதல் ஏற்பாட்டு மெய்யறிவுடன் ஒப்பிடுகிறது. இருந்தாலும் இயேசு வெறும் மெய்யறிவல்ல என்பதிலும் யோவான் மிகவும தெளிவாக இருப்பார். 

சாலமோனின் ஞானம், ஞான புத்தகங்களில் காலத்தால் பிந்தியது என அறிஞர்கள் வாதிடுகிறார்கள். சாலமோனின் ஞானம் என்ற நூல் கிரேக்க செப்துவாஜின்து மொழியில் எழுதப்பட்ட படியால் இதனை எபிரேய விவிலியத்தில் காணமுடியாது. இதனை எபிரேயர்கள் 'ஏற்றுக் கொள்ளப்பட்டாத' நூலாகவே கருகின்றனர். கத்தோலிக்கருக்கு இந்த நூல் இணைத்திருமுறை நூல். ஞான நூல்கள் என்ற பிரிவில் இந்த நூல் இடம் பெறுகிறது. இந்த நூலை மன்னர் சாலமோனுக்கு அர்ப்பணித்தாலும், இதனை அந்த மன்னர்தான் எழுதினார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். சாலமோன், ஞானத்தில் (மெய்யறிவில்) சிறந்து விளங்கியவர். ஆகவே மெய்யறிவு நூல்களை அவருக்கு அர்ப்பணிப்பது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபு. இப்படியாக, நூல்களுக்கு அதிகாரமும், பிரசித்தமும் பெற்றுக்கொடுக்கப்பட்டது

இதனைப் போலத்தான் திருப்பாடல்கள் தாவீது அரசருக்கும், சட்ட புத்தகங்கள் மோசேக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்திலுள்ள ஒன்பதாவது அதிகாரம், 1அரசர்கள் 3,6-9 உள்ள சாலமோனின் செபத்தை ஒத்திருப்பதால் இந்த புத்தகத்திற்கும் சாலமோனுக்குமான உறவு நோக்கப்படுகிறது. சாலமோனின் ஞானம் என்று இந்த புத்தகம் அறியப்பட்டாலும், சாலமோனின் பெயர் இந்த புத்தகத்தில் இடம்பெறவில்லை. வல்கேற் இந்த புத்தகத்தை மெய்யறிவு புத்தகம் என்றே அழைக்கிறது. தூய ஜெரோமுடைய விரும்பத்தக்க புத்தகமாக இந்த நூல் இருந்திருக்கிறது

இந்த புத்தகத்தின் காலத்தை அறிவது இலகுவாக இருக்காது. அநேகமாக இந்த புத்தகம் முதலாம் நூற்றாண்டின் (கி.பி) இறுதிப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கர்களின் ஆதிக்கம் இஸ்ராயேல் நாட்டில் இருந்தபோது இந்த இந்த புத்தகம் யூதர்களின் விசுவாசத்தை தக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பாரம்பரிய யூதர், அவர் செப்துவாயிந்து மொழிபெயர்ப்பில் வேலை செய்திருக்க வேண்டும். இவர் எகிப்திய அலெக்சாந்திரியாவில் இருந்த பிரபலமான யூதர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். இதனால் புலம்பெயர் யூதர் ஒருவரின் புத்தகம் என இதனை சிலர் வரையறுக்கின்றனர். பல ஆசிரியர்கள் இந்த புத்தகத்திற்கு இருந்திருக்க வேண்டும் எனவும், இந்த புத்தகம் முதலில் அரமேயிக்கத்தில் எழுதப்பட்டது என்றும் சிலர் வாதிட்டாலும், அவைகளுக்கு அக புற சான்றுகள் மிக குறைவாகவே இருக்கின்றன

இலக்கிய வகையில் இந்த புத்தகம் மெய்யறிவு புத்தக வகையைச் சார்ந்தது, முக்கியமாக கிரேக்க வகையைச் சார்ந்தது. இருப்பினும் எபிரேயர்களின் ஆழமான நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், இலக்கிய வரி வடிவங்கள் இந்த புத்தகத்தில் நிறைவாகவே உள்ளன. ஆய்வாளர்கள் இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கின்றனர்.


.12: இந்த பகுதி, ஞானத்தின் தோற்றம், இயல்பு, மற்றும் அதனை அடையும் வழி போன்றவற்றை விளக்குவதாக உள்ளது. ஞானத்திற்கான தேடல் என்ற உப தலைப்பிலும் இந்த வரிகளை உள்ளடக்கலாம்

ஆசிரியர் ஞானத்தை பெண்போல வர்ணித்து அதனை ஒளிமிக்கதாகவும் (Λαμπρὰ லாம்ப்ரா), மங்காதது (ἀμάραντός அமாரான்டொஸ்) என்றும் விவரிக்கின்றார். ஞானத்தை இலகுவில் அடையமுடியாது என்ற சிந்தனை இருந்தாலும், ஞானத்தின் மீது அன்புகூர்வதால் ஒருவர் அதனை இலகுவில் அடையமுடியும் என்ற குறுக்கு வழியையும் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார்

இந்த வரியின் மூலம், ஞானத்தின் மீது அன்பு வைத்தலையும், அதனை தேடுவதையும் ஒத்த சொற்களாக உபயோகிக்கின்றார்


.13: தன்னை வெளிப்படுத்துவோர்க்கு ஞானம் தன்னை விரைந்து வெளிப்படுத்தும் என்கிறார் (φθάνει τοὺς ἐπιθυμοῦντας προγνωσθῆναι. ப்தாநெய் டூஸ் எபிதுமூன்டாஸ் புரொக்நோஸ்தேனாய்). இந்த வரியில் ஞானம் தான் நினைப்பதை செய்யக்கூடிய சுதந்திரமான ஒரு நபராக காட்டுகிறதுஇதன் மூலம், ஆசிரியர் ஞானத்தை ஒரு ஆளாக காட்டுகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்

வெளிப்படுத்தும் என்பதற்கு φθάνω (ப்தாநோ) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நெருங்கிவருதல், அடைதல் என்ற அர்த்தங்களும் காணப்படுகிறது


.14: அழகான வரியமைப்பில் ஞானத்தின் வருகையும், அதனை தேடுவோரின் நிலையையும் காட்டப்படுகிறது. வைகறையில் ஞானத்தை தேடுவோர், என்பதற்கு விடியற்காலையில் எழுந்து ஞானத்தை தோடுவோர் என்று செப்துவாஜின்து விவிலியம் காட்டுகிறதது (ὀρθρίσας ஒர்த்ரிசாஸ்- வைகறை அல்லது விடியற் காலையில் எழுவோர்). 

விடியற்காலையில் ஞானத்தை தேடுவோர் கழைத்துவிட மாட்டார்கள், மாறாக தங்கள் வாயிற் கதவுகளுக்கு அருகில் ஞானம் உட்கார்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள் என்கிறார். இந்த வரியிலும் ஆசிரியர் ஞானத்தை ஆளாக வர்ணிப்பதை உணரலாம், இருப்பினும் இந்த ஆள் உருவகம் ஒரு படிபித்தலுக்கான அடையாளம் என்றே எடுக்கவேண்டும் எனலாம்


.15: இந்த வரியும் ஞானத்தை தேடுவதன் பயனைத்தான் காட்டுகிறது. ஞானத்தின் மீது மனதை செலுத்துதல்தான் ஞானத்தின் நிறைவு என்கிறார். பலர் பலவற்றின் மீது தங்கள் மனதினை செலுத்துகின்றபோது, ஞானத்தின் மீது மனதை செலுத்துதலை உண்மையான தேடல் என்று தன்னுடைய வாசகர்களுக்கு புரியவைக்கிறார் ஆசிரியர்

இவர்கள் விரைவில் கவலையிலிருந்து விடுபடுவர் என்பதற்கு, அவர்கள் சாதாரண பதட்டத்திலிருந்து விடுதலை பெறுவர் என்று மூல மொழி காட்டுகிறது


.16. இதற்கான காரணத்தை இந்த வரி விளக்குகின்றது. ஞானம் தனக்கு தகுதியுள்ளவர்கள் என்று கருதப்படுகிறவர்களை அதுவே தேடிச் செல்கிறது என்கிறார். இந்த இடத்தில் ஞானத்தில் தெய்வீகத் தன்மை காட்டப்படுகிறது. கடவுள் பல வேளைகளில் தன் மக்களை தேடிச் செல்கிறவராக காட்டப்படுகிறார், அதனைத்தான் ஞானமும் செய்கிறது

இரண்டாவதாக அவர்களுடைய வழியிலே அந்த தகுதியுள்ளவர்களை ஞானம் சந்திக்கிறது என்கிறார். வழியில் சந்தித்தல் என்பது, ஒருவர் தன்னுடைய இலக்கை அடைய முன்பே தான் நினைத்ததை அடைகிறார் என்பது பொருள்

மூன்றாவதாக, ஞானம் இந்த தகுதியுள்ளவர்களின் ஒவ்வொரு நினைவிலும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலமாக அவர்கள் ஞானத்தின் உண்மையான அங்மாக மாறிவிட்டார்கள் என்பது காட்டப்படுகிறது (ἐν πάσῃ ἐπινοίᾳ ὑπαντᾷ αὐτοῖς.  என் பாசே எபிநொய்யா ஹுபான்டா அவுடொய்ஸ்- அவர்களின் எல்லா சிந்தனைகளில் அவர்களை சந்திக்கிறது). 



  


திருப்பாடல் 63

கடவுளுக்காக ஏங்குதல்

(யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா)

(1 சாமு 23:14)


1கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது

2உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன

4என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்

5அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்

6நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்

7ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்

8நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. 9என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்

10அவர்கள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர்

11அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்; அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்; பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்.


தாவீது அரசர் பல கால கட்டங்களில் யூதேய பாலைநிலத்தில் இருந்திருக்கிறார். முக்கியமாக அவர் அரசர் சவுலினால் தேடப்பட்டபோது பாலைநில குகைகளில் தங்கி வாழ்ந்தார். தாவீது நல்ல பாடகராகவும், கின்னரம் மற்றும் யாழ் போன்ற நரம்பு வாத்திய கருவிகளை மீட்டுவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தபடியால், பல திருப்பாடல்களை அவரே எழுதினார் என்ற பலமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன (காண்க 1சாமுவேல் 23-24)

அதேபோல தாவீதின் ஒரு மனைவிக்கு பிறந்த மகனான அப்சலோமின் கலவரத்தின் போதும், இரத்த களரியைத் தவிர்க்க தாவீது தன் இளைய மகன் சாலமோனுடன் யூதேய பாலை நிலத்திற்கு தப்பிச் சென்றார். அங்கே அவரின் உணர்வுகள் பலமாகவும், கடினமாகவும் இருந்தன. ஏனெனில் இந்த அப்சலோமை பல வேளைகளில் தாவீது மன்னித்திருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகும் அவர் அப்சலோமை மன்னிக்க ஆயத்தமாக இருந்தார் (ஒப்பிடுக 2சாமுவேல் 14-15).  

பாலை நிலத்தில் சவுலுடைய குடும்பத்தாரின் பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் தாவீது உள்ளானார். அப்சலோம், தாவீதை பல வழிகளில் தாக்க திட்டம்தீட்டிக்கொண்டிருந்தான்

இது தாவீதிற்கு நன்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் தாவீது இந்த திருப்பாடலை எழுதியிருப்பார் என்ற நம்பப்டுகிறது (காண்க 2சாமுவேல் 16-17). 

இவை சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படும் வாதங்கள் மட்டுமே. இதனை உறுதிப்படுத்துவது அவ்வளவு இலகுவாக இருக்காது, ஏனெனில் அதிகமான திருப்பாடல்கள் சொல்லாட்சிகளாலும், கதையம்சங்களாலும் தாவீதுக்கு பிற்காலத்தவையாக இருக்கின்றன. அதிகமான திருப்பாடல்கள் பின்நாட்களில் வடிவமைக்கப்பட்டு தாவீது அரசருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன


.0: தாவீது இந்த பாடலை அவர் யூதேய பாலைவனத்தில் இருந்த போது பாடடினார் என காட்டுகிறது (בְּמִדְבַּר יְהוּדָה பெமித்பார் யெஹுதாஹ்- யூதாவின் பாலைவனத்தில்). இந்த முன்னுரை இந்த பாடலுக்கு ஒரு பின்புலத்தை தரும் அதேவேளை, இது பிற்கால இணைப்பாக இருக்கலாம் என்ற பலமான வாதம் ஒன்றும் இருக்கிறது.


.1: தாவீது தன்னுடைய உள்ளத்தை நீரின்றி வறண்ட தரிசு நிலத்திற்கு ஒப்பிடுகிறார். நீரின்றி வறண்ட தரிசு நிலம் நீருக்காக ஏங்குவதைப் போல தன் உள்ளம் கடவுளுக்காக ஏங்குகின்றது என பாடுகிறார். யூத பாலை நிலம் நீரில்லாத காலங்களில் பயங்கரமான அனுபவத்தை தரவல்லது. நீரில்லாத இடத்தில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நீரின் பெறுமதியை நன்கு அறிவார்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் நீர், மிகவும் பெறுமதியான சடப்பொருள். இதனால்தான் நீர் நிலைகளை கடவுளுக்கும் அல்லது கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கும் ஒப்பிடுகிறார்கள், ஆசிரியர்கள். நீரில்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது, அதேபோல கடவுள் இல்லாமல் தன் உள்ளம் இல்லை என்பதை அழகாகக் காட்டுகிறார். (אֶֽרֶץ־צִיָּה 'எரெட்ஸ்-ட்சிய்யாஹ் தரிசு நிலம்). 


.2: இரண்டாவது வரி சற்று வித்தியாசமாக உள்ளது. தமிழ் விவிலியத்தில் இந்த வசனம் எதிர்கால அல்லது நிகழ்கால விருப்பு வாக்கியத்தில் உள்ளது 'உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்' ஆனால் எபிரேய மூல மொழியில் இந்த வரி இறந்த கால வினைமுற்றில் இருப்பது போல தோன்றுகிறது


כֵּן בַּקֹּדֶשׁ חֲזִיתִיךָ கென் பாகோதெஷ் ஹட்சிதாவ்கா- ஆம், தூயகத்தில் உம்மை நோக்கினேன்

:לִרְא֥וֹת עֻזְּךָ֗ וּכְבוֹדֶֽךָ லிர்'ஓத் 'ஊட்செகா வுக்வொதாகா- உம் வல்லமையையும், மாட்சியையும் பார்க்க

தாவீது கடவுளின் வல்லமையையும் பரிசுத்தத்தையும் எங்கு பார்த்தார் என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக எருசலேம் தேவாலயமாக இருக்க முடியாது. அவர் காலத்தில் அது கட்டப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை ஆண்டவருடைய கூடாரமாக இருக்கலாம். இங்கே 'தேவாலயத்தையோ அல்லது கூடாரத்தையோ' நேரடியாக குறிக்கும் சொற்கள் இல்லை, மாறாக தூய்மை அல்லது பரிசுத்தத்தை குறிக்கும் சொல் மட்டுமே இருக்கிறது


.3: சொந்த மகனால் அலைக்கழிக்கப்படும் ஒரு அரசர், கடவுளின் அன்பை உணர்ந்து பாடுவது ஆச்சரியமாக உள்ளது. தாவீது கடவுள் மேல் கொண்ட அன்பின் காரணமாகத்தான், பாவியகாக 

இருந்தாலும், மற்றைய அரசர்களைவிட பலவிதத்தில் மேன்மையானவராகிறார்.

கடவுளுடைய அன்பை தன்னுயிரை விடவும் மேலானது என்கிறார், இது சாதாரணமாக அரசியல் தலைவர்களின் உணர்வாக இருக்காது - כִּי־טוֹב חַסְדְּךָ מֵֽחַיִּים கி-தோவ் ஹஸ்தெகா மஹய்யிம்- உயிரைவிட உம் அன்பு எத்துணை நன்மையானது. 

இதனால் தான் தன் இதழ்கள் அவரை புகழ்கின்றன என்கிறார்


.4: தான் வாழ்கின்ற நாட்கள் எல்லாம் கடவுளை புகழ்வதாகவும், கையை கூப்பி கடவுளை வாழ்த்துவதாகவும் சொல்கிறார். கடவுளை புகழ்தல் என்னும் வரி, கடவுளின் பெயரை ஆசித்தல் என்று எபிரேயத்தில் உள்ளது (אֲבָרֶכְךָ֣ בְּשִׁמְךָ 'அவாரெகா பெஷிம்கா உம்மை ஆசித்தல் உம் பெயரை). ஆண்டவரை புகழ்தலும் ஆண்டவரின் பெயரை புகழ்தலும் ஒத்த கருத்துக்களாக எபிரேய வழிபாட்டில் கருதப்படுகின்றன

கைகூப்பி ஏத்துதல் என்பது என் கரங்களை உயர்த்துதல் என்ற எபிரேயத்தில் உள்ளது (אֶשָּׂא כַפָּי 'எஸ்ஸா' கப்பாவ்). நாம் கரங்களை கூப்பி கடவுளை வணங்குவதைப்போல், எபிரேயர்கள் கரங்களை உயர்த்தி கடவுளை வணங்குவர்


.5: உணவு ஒரு சாதாரண மனிதனை அவருடைய பசியை நிச்சயமாக நிறைவடைய வைக்கும். எந்த முனிவரும் ஏதோ ஒரு விதத்தில் உணவை ருசிப்பவராகவே இருப்பார். ஆசிரியர் தன்னுடைய கடவுள் அனுபவத்தை உணவில் கிடைக்கும் அறுசுவை ருசிக்கு ஒப்பிடுகிறார். இதிலிருந்து இவர் நன்றாக சாப்பிடுவார் என்பதும், இவருடைய கடவுள் அனுபவம் மிக மிக இயற்கையானது என்பதும் தெரிகிறது. அறுசுவை உணவு என்ற அழகான தமிழ் சொற்களை எபிரேயம் மூல மொழியில் 'கொழுத்த கொழுப்புக்கள்' என்று காட்டுகிறது (חֵלֶב וָדֶשֶׁן கெலெவ் வாதெஷென்). இஸ்ராயேலர்கள் கால் நடை வளர்ப்பவர்கள், இதனால் இவர்களுக்கு பால், தயிர், கொழுப்பு போன்றவை அறுசுவை உணவுகளாக இருந்திருக்க வேண்டும்.  

'என் இதழ்கள் மகிழ்ச்சிமிகு புகழ்சிகளால் நிறைவடையும்' என்று மோனை வடிவில் இரண்டவாது அடியை அமைக்கிறார். இந்த வரியும் ஏனைய வரிகளைப்போல் நேர்த்தியாக எதுகை மோனை அடியில் அழகாக நெய்யப்பட்டிருக்கிறது

כְּמ֤וֹ חֵ֣לֶב וָ֭דֶשֶׁן תִּשְׂבַּ֣ע נַפְשִׁ֑י கெமோ ஹெலெவ் வாதெஷென் திஸ்பா' நப்ஷி

 וְשִׂפְתֵ֥י רְ֝נָנ֗וֹת יְהַלֶּל־פִּֽי׃ வெஸிப்தே ரெநாநோத் யெஹல்லெல்-பி


.6: மனிதர் விழித்திருக்கும் போது கடவுளை நினைத்தல் சாதாரண விசுவாசம், ஆனால் படுத்திருக்கும் போது அவரை நினைத்தல் என்பது மிக ஆச்சரியமானது, அப்படியான விசுவாசத்தை தான் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துகிறார், தாவீது

அத்தோடு இதற்கு இணையாக தான் இரவு வேளைகளிலும் கடவுளை நினைப்பதாக மீண்டும் கூறுகிறார். தாவீதின் காலத்தில் இரவு மற்றும் இருள், நம்பிக்கையின்மையை மற்றும் பயங்கரத்தின் அடையாளமாக கருதப்பட்டன. இரவு மனிதருக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரலாம். பல தலைவர்கள் இரவு வேளைகளில்தான் கொலை செய்ய்பட்டார்கள். நாடுகளும் இரவு வேளையில்தான் சூறையாடப்பட்டன. காவல் வீரர்கள் இரவு முடிந்து, விரைவில் விடியல் வரவேண்டும் என எண்ணுவார்கள். இதனால் தான் 'விடியல்' நேர்முகமான சொல்லாக தமிழிலும் இருக்கிறது. இந்த பின்னணியில், ஆசிரியர் இரவிலும், தன் படுக்கையிலும் கடவுளை நினைப்பதாகச் சொல்கிறார். ஆழ்ந்து சிந்தித்தல் என்பதற்கு எபிரேயம் הָגָה (ஹாகாஹ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. திராவிடர்களைப் போல், செமித்தியர்கள் மௌனமாக தியானிக்க மாட்டார்கள், அவர்கள் வாயசைத்து முணுமுணுத்து தியானம் செய்யவார்கள். இதனைத்தான் இந்த சொல் காட்டுகிறது. இது ஒரு வகையான செபம்


.7: இந்த வரி ஆசிரியரின் முற்கால அனுபவத்தை விவரிக்கிறது. ஆண்டவர் தனக்கு துணையாய் இருந்தார் என்கிறார். இதனை சொல்கின்றபோது, ஆசிரியர் பெரும் துன்பத்தில் இருக்கிறார், இருந்தும் கடந்தகால அனுபவம் அவருடைய தற்கால துன்பத்திற்கு ஆறுதலாக இருக்கிறது. அதாவது, கடந்த காலத்தைப் போல இக்காலத்திலும் ஆண்டவர் நிச்சயமாக தன் துன்பத்தில் ஆறுதலாக வருவார் என்பதை இது காட்டுகிறது 

(כִּֽי־הָיִיתָ עֶזְרָתָה לִּי கி-ஹாய்யிதா 'எட்ஸ்ராதாஹ் லி- ஏனெனில் எனக்கு நீர் துணையாக இருந்தீர்). 

ஆண்டவர் துணையாக இருப்பது, அவருடைய பாதுகாப்பில் இருத்தலுக்குச் சமன். இதனை உருவகிக்க 'ஆண்டவருடைய சிறகுகளில் நிழல்கள்' என்ற அடையாளம் பாவிக்கப்படுகிறது. ஆண்டவருடைய துணையை வர்ணிக்க விவிலியம் பல இடங்களில் கழுகின் இறக்கை நிழலை அடையாளமாக பாவிக்கிறது. கழுகு, பாலைவனத்தின் மிகவும் பலமான ஒரு பறவை. அத்தோடு இந்த கழுகு அடையாளம் ஒரு எகிப்திய கடவுளின் அடையாளம் என்ற ஒரு பாரம்பரியமும் இருக்கிறது. ஆசிரியர், சிறகின் நிழலை கடவுளின் பாதுகாப்பிற்கு ஒப்பிடுகிறார்

(בְצֵל כְּנָפֶיךָ வெட்செல் கெநாபேகா- உம் சிறகுகளின் நிழலில்).


.8: ஆண்டவரை உறுதியாக பற்றிக் கொள்ளல் - அவரின் வலக்கையை இறுக்கமாக பிடித்தல் என்ற வரிகள் ஒத்தகருத்து வரிகளாக பாவிக்கப்பட்டுள்ளன

ஆண்டவரை பற்றிக்கொள்ளல் என்பது புதிய விடயமாக இருக்க வாய்பில்லை ஆனால், உறுதியாகவும், இறுக்கமாகவும் பற்றிக் கொள்ளல் என்பதே இங்கே முக்கியத்துவத்தை உருவாக்குகின்றது. அரசர்கள் அல்லது துன்பத்தில் இருக்கிறவர்கள் பலரை அல்லது பலவற்றை இறுக்கமாக அல்லது உறுதியாக பற்றிக்கொள்ளவர். அரசர்கள் தங்கள் நட்பு அரசர்களை பற்றிக்கொள்வர். சாதாரண மக்கள் அரசர்களை பற்றிக் கொள்வர். இந்த ஆசிரியர் ஆண்டவரை பற்றிக்கொள்ள விரும்புவதாகச் சொல்வது, அவரின் விசுவாசத்தைக் காட்டுகிறது

வலது கரம், ஆண்டவரின் அரியணை போன்றவை அவரது படைத்திறனைக் காட்டுகிறது (יְמִינֶךָ யெமிநேகா- உம் வலக்கை). 


.9: தன்னை அழித்துவிட தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்கு செல்வர் என்கிறார் ஆசிரியர். திருப்பாடல் காலத்தில் நரகம் பற்றிய சிந்தனைகள் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் பூவுலகின் ஆழம் என்ற இடத்தை பற்றிய அறிவு ஒன்று இருந்திருக்கிறது. இந்த இடம் இருள் சூழ்ந்ததாகவும், ஆழமானதாகவும், அங்கே இறந்தவர்கள் இருப்பதாகவும் நம்பப்பட்டது. இதனை கடவுள் இல்லாத 

இடமாக இவர்கள் கருதினார்கள். ஆண்டவருக்கு இந்த இடத்தின் மேலும் அதிகாராம் இருப்பதாக நம்பினாலும், ஆண்டவர் இந்த இடத்தில் இல்லை என்பதும், இங்கேதான் அசுத்தமான ஆவிகள், விலங்குகள் இருப்பதாகவும் நம்பினார்கள். இப்படியாக பல நம்பிக்கைகள் இந்த பூவுலகின் ஆழத்தைப் பற்றி இருந்திருக்கின்றன. תַחְתִּיּוֹת הָאָֽרֶץ தாஹ்திதோத் ஹா'ஆரெட்ஸ்- பூவுலகின் ஆழங்கள். இந்த இடத்திற்கு சீயோல், ஹெகெனா, என்ற வேறு பெயர்களும் உள்ளன

இந்த வரியில் தன்னை அழிக்கத் தேடுவோர்கள் என்பவர்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். யார் இவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. இவர்கள், பின்புலத்தின் படி அரசரின் மக்களாக 

இருந்திருக்கலாம். ஆனால் இவர்களுக்கு விரும்பப்படும் தண்டனைகளை நோக்கினால், ஒரு தகப்பன் தன் மக்களுக்கு இப்படியான தண்டனையை விரும்புவாரா என்ற கேள்வி எழுகிறது

.10: தன் எதிரிகளுக்கான தண்டனையை விவரிக்கின்றார், அவர்கள் வாளுக்கு இரையாவார்கள் அத்தோடு நரிகளுக்கு இவர்கள் விருந்தாவார்கள். ஆசிரியர் இந்த தண்டனையை தான் கொடுக்கப்போவதாகச் சொல்லவில்லை மாறாக, ஆண்டவர்தான் இந்த தண்டனையை கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதுவும் இஸ்ராயேல் புலம்பல் மற்றும் தூற்றல் பாடல்களுக்கான ஒரு சிறப்பம்சம்

வாளுக்கு இரையாதல் போரில் ஏற்படும் மரணத்தைக் குறிக்கலாம். நரிகளுக்கு விருந்தாதல் என்பது பாலைவனத்தில் இறந்துகிடக்கும் சடலங்களுக்கு ஏற்படும் நிலையைக் குறிக்கிறது


.11: இந்த வரியில் 'அரசர்' என்று படர்க்கையில் (மூன்றாம் ஆள்) குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஏன் தன்னை அவர் மூன்றாம் ஆளில் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆசிரியர்கள் தங்களை 'அவர், அவர்கள்' என்று குறிப்பிடுவது இலக்கியத்தில் ஒன்றும் புதிதல்ல (הַמֶּלֶךְ֮ ஹம்மெலெக்- அரசர்). அல்லது இந்த பாடலை அரசர்காக மூன்றாம் ஆள் வடிவில் எழுதியிருக்கலாம் எனவும் எடுக்கலாம். இவர் எதிரிகள் வாளுக்கும் நரிகளுக்கும் விருந்தாக, இவர் ஆண்டவரில் களிகூருகிறார்.(יִשְׂמַח בֵּאלֹהִים யிஸ்மாஹ் பெ'லோஹிம்- ஆண்டவரில் களிகூர்வார்)

அவர் மேல் ஆணையிடுவோர் பெருமிதம் கொள்வர் எனப்படுகின்றனர் (בּוֹ போ, அவரில்). 

யார் இந்த 'அவர்' என்பது தெரியவில்லை, சூழலியலில் நோக்குகின்றபோது, இது கடவுளாகத்தான் இருக்கவேண்டும். கடவுளில் ஆணையிடுவது அக்காலத்தில் வழக்கிலிருந்ததா என்ற கேள்வியும்இங்கே எழுகிறது. இறுதியாக பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும் என்று இந்த திருப்பாடல் முடிவடைகிறது. இதிலிருந்து, சிலருடைய பொய்களினால் ஆசிரியர் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருப்பார் போல் இருக்கிறது




1தெசலேனியர் 4,13-18

ஆண்டவரின் வருகை


13சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. 14இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். 15ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே; ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். 16கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். 17பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். 18எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.


தெசலோனிக்கருக்கான திருமுகத்தை பவுல் எழுதியபோது தெசலோனிக்க திருச்சபை ஆண்டவரின் இரண்டாம் வருகை மற்றும், இறந்தவர்களைப் பற்றிய அச்சம் போன்றவற்றால் பல குழப்பங்களை சந்தித்தது. இந்த பகுதியில் பவுல் ஆண்டவரின் வருகையைப்  பற்றி விளக்க முயல்கிறார் அதேவேளை இறந்தவர்களைப் பற்றியும் இவர்களுக்கு தன் இறையியலை கற்பிக்கின்றார்


.13: இறந்தவர்களைப் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது திருச்சபையின் விருப்பம் என்கிறார் பவுல். எதிர்நோக்கில்லாதவர்களைப் போல தெசலோனிக்க திருச்சபை துயருறக்கூடாது என்றும் கோரிக்கை முன்வைக்கிறார்

எதிர் நோக்கில்லாதவர்கள் (οἱ μὴ ἔχοντες ἐλπίδα. ஹொய் மே எக்னொன்டெஸ் எல்பிதா) என்று யாரை குறிப்பிடுகிறார் என்பதை சூழலியிலில் நோக்க வேண்டும். இது கிரேக்க நம்பிக்கையை சார்ந்தவர்களாகவோ அல்லது, கிறிஸ்தவ மறையில் குழப்பங்களை முன்வைக்க முயன்ற சில யூதர்களையும் குறிக்கலாம். இவர்களுடைய மரணம் பற்றிய நம்பிக்கை நேர்முகமாக 

இருந்திருக்கவில்லை மாறாக எதிர்மறையாக இருந்தது. இது தெசலோனிக்கருக்கு பல குழப்பங்களை உண்டாக்கியிருக்கும் இதனைத்தான் விளக்க முயல்கிறார் திருத்தூதர். இறந்தவர்களை குறிக்க கிரேக்க விவிலியம் நித்திரைகொள்கிறவர்கள் (κοιμωμένων கொய்மோமெநோன்- நித்திரைகொள்கிறவர்கள்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த சொல் உருவகமாக பாவிக்கப்படுகிறது. நித்திரைகொள்கிறவர்கள் துயில் எழுவார்கள், அதனைப் போல் மரணத்தில் தூங்குகிறவர்கள் உயிர்ப்பில் துயில் எழுவார்கள் என்ற நம்பிக்கை இந்த சொல்லில் வைத்துள்ளார் எனலாம்


.14: இந்த நம்பிக்கையை விளங்கப்படுத்த கிறிஸ்தவ விசுவாசத்தின் அடி நாதத்திற்கு செல்கிறார் பவுல். கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் ஒப்பிடுகிறார். கிறிஸ்து இறந்து உயிர்த்தார் என்பது அனைவரது நம்பிக்கை இதனை நினைவூட்டுகிறார் (ὅτι Ἰησοῦς ἀπέθανεν καὶ ἀνέστη, ஹொடி இயேசூஸ் எபெதானென் காய் அனெஸ்டே). இந்த நம்பிக்கை அனைத்து கிறிஸ்தவர்களின் அடிப்படை என்பதை எடுகோளாக் கொண்டு, இதனைப் போலவே இறந்த விசுவாசிகளும் உயிர்த்தெழுவார்கள் என்கிறார். இங்கே உயிர்ப்பின் காரணராக இருப்பது கடவுள் என்று காட்டுகிறார். கடவுள்தான் இறந்தவர்களை கிறிஸ்து வழியாக உயிர்ப்பிக்கிறார் என்பது இங்கே சொல்லப்படுகிறது


.15: இறந்தவர்களைப் பற்றி சொல்லிய பவுல், உயிரோடு இருப்பவர்களைப் பற்றியும் சொல்கிறார். இதற்குள் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஆரம்ப காலத்தில் பவுல் தான் இறப்பதற்கு முன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரும் என்று நம்பியிருக்க வேண்டும் என்ற ஒரு வாதம் இருக்கிறது. இந்த வாதத்தை இந்த வரி நிரூபிக்கிறது எனலாம். தன்னுடைய உடன் பணியாளர்களையும் இணைத்து 'நாங்கள் சொல்கின்றோம்' (λέγομεν லெகொமென்) என்கிறார்

உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பில் முந்த முடியாது, அனைவருக்கும் ஒன்றான நன்மைத்தனமே உள்ளது என்பதையும் இந்த வரி காட்டுகிறது. இந்த நம்பிக்கை இறந்தவர்கள் மேல் அக்கறை மற்றும் சந்தேகம் உள்ளவர்களுக்கு நல்ல விளக்கமாக அமைந்திருக்கும்


.16: ஆண்டவரின் இரண்டாம் வருகை எப்படி நடக்கும் என்பதை படம் போல விளக்குகிறார். இந்த நம்பிக்கையில் முதல் ஏற்பாட்டின் இறுதிகால நம்பிக்கைகள் புகுந்திருப்பதை அவதானிக்கலாம்


. கட்டளை பிறக்க (ἐν κελεύσματι என் கெலெஉஸ்மாடி): இது ஒரு படைநகர்வு போல காட்சிப்படுத்தப்படுகிறது


. தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க (ἐν φωνῇ ἀρχαγγέλου என் போனே அர்கான்கெலூ): தலைமை வானதூதர்கள் தெய்வீக படையணிக்கு தலைமை தாங்குகிறார்கள் என்ற நம்பிக்கை இங்கே தெரிகிறது


. கடவுளுடைய எக்காளம் முழங்க (ἐν σάλπιγγι θεοῦ என் சால்பிக்கி தியூ): எக்காளமும் போர் நிகழ்வை காட்டுவதாகவே உள்ளது. எக்காள முழக்கம் விவிலியத்தில் இறைபிரசன்னத்தையும் காட்டுகிறது. யோசுவா எக்காள முழுக்கத்தினால்தான் எரிகோ மதிலை விழச் செய்தார், அதே வேளை தானியேலின் காட்சிகளும் இந்த எக்காளம் கடவுளின் பிரசன்னத்தை காட்டுகின்ற அடையாளமாக வருகிறது


. ஆண்டவர் வானின்று இறங்கி வருவார் (καταβήσεται ἀπ᾿ οὐρανοῦ  காடாபேசெடாய் அப் ஊராநூ): ஆண்டவர் வானங்களில் (பரலோகம்) இருக்கிறார் எனவும், அவருடைய வருகையின் போது அவர் அந்த வானங்களில் இருந்து இறங்கி வருகிறார் என்றும் பவுல் கூறுகிறார். இறங்கி வருதல் விவிலியத்தில் கடவுளின் பண்பாகப் பார்க்கப்படுகிறது. கடவுள்தான் பரலோகத்தில் இருந்து இறங்கி வருகிறவர், இங்கணம் இப்போது இயேசுதான் அவர் என்று காட்டுகிறார் எனலாம்


. இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர் (ἀναστήσονται  πρῶτον அனாஸ்டேசொன்டாய் புரோடொன்): கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட இறந்தவர்கள் என்ற விளக்கம், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாமல் இறந்தவர்களை உள்ளடக்கவில்லை. இதன் மூலம், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வதுதான் மாற்றத்தை உண்டாக்குகின்றது என்பதை பவுல் காட்டுகிறார்


.17: இறந்தவர்கள் உயிர்க்கிறார், உயிரோடு இருப்பவர்களின் நிலை என்ன என்பதை விளக்குகிறார் பவுல், இவர்களும் ஆண்டவரை சந்திக்கிறார்கள். சற்று வித்தியாசமாக. உயிரோடு எஞ்சியிருப்போர்களில் தன்னையும் இணைத்து, அவர்கள் மேகங்களில், இறந்தவர்களோடு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். வான்வெளியில் ஆண்டவரை சந்திக்கிறார்கள். மேகம் இங்கே தெய்வீக பிரசன்னத்தைக் காட்டுகிறது, இதன் மூலம் இவர்கள் மனித உலகிலிருந்து மேலுகிற்கு செல்கிறார் என்பது அடையாளம் (ἐν νεφέλαις என் நெபெலாயிஸ்- மேகத்தில்). வான் வெளியும் 

இதனைத்தான் குறிக்கிறது (εἰς ἀέρα எய்ஸ் அயிரா). 

இந்த வரியின் இறுதியான பிரிவு அழகான இறையியல் வாதத்தை முன்வைக்கிறது. ஆண்டவரோடு என்றும் இருத்தல் என்பது அனைத்து நற்செய்தியாளர்கள் மற்றும் திருத்தூதர்களின் போதனைகளின் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கம் ஆண்டவரின் வருகையில் நிறைவேறும் என்கிறார் பவுல் (πάντοτε  σὺν κυρίῳ ἐσόμεθα. பன்டொடெ சுன் கூரியோ எசொமெதா). 


.18: இந்த வசனம், பவுலுடைய விளக்கத்தின் நோக்கத்தைக் காட்டுகிறது. ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் பவுல் (παρακαλεῖτε ἀλλήλους பாராகாலெய்டெ அல்லேலூஸ் ஒருவரையொருவர் தேற்றுங்கள்). அதாவது இறந்தவர்களைப் பற்றியோ அல்லது வாழுகிறவர்களின் உயிர்ப்பைப் பற்றியோ கவலை வேண்டாம் என்கிறார்

 


மத்தேயு 25,1-13

பத்துத் தோழியர் உவமை


1'அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். 2அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். 3அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. 4முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். 5மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். 6நள்ளிரவில், 'இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. 7மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். 8அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, 'எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன் உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். 9முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது' என்றார்கள். 10அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. 11பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். 12அவர் மறுமொழியாக, 'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். 13எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.'


மத்தேயு நற்செய்தியின் இருபத்தைந்தாவது அதிகாரம், ஆண்டவருடைய பாடுகளுக்கு முன் வருகின்ற இறுதியான அதிகாரம். இந்த அதிகாரத்தில் உள்ள மூன்று உவமைகள் (பத்துக் கன்னியர் உவமை, பத்து தாலந்து உவமை, மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு) ஆண்டவருடைய வருகை அல்லது இறுதி நாளைப் பற்றி விளக்குகின்றன. இந்த அதிகாரத்தை இறுதிநாள் பற்றிய நிகழ்வுகளின் அதிகாரம் என வரையறுக்கின்றனர்


. 1'அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.: மத்தேயு இறுதி நாள் பற்றியும் விண்ணரசு பற்றியும் விளக்க முயற்சிக்கிறார். மக்கள் காணாத ஒன்றை விளக்குவது அவ்வளவு இலகுவாக இருக்காது. மத்தேயு நல்லதொரு ஆசிரியர், ஆகவே இவர் உருவக அணியை உவமையாக வடிவமைத்து விளக்குகிறார்

விண்ணரசைப் பற்றி பல விளக்கங்கள் மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற கேள்வியும் இவரது விளக்கத்திலிருந்து தெரிகிறது. மணமகனை எதிர்கொள்ள மணமகளின் பத்துத் தோழியர் விளக்குகளோடு செல்கின்றனர் (δέκα παρθένοις தெகா பார்தெநொய்ஸ், பத்து தோழியர்). இவர்கள் கைகளில் உள்ள விளக்குகளுக்கு கிரேக்க விவிலியம் λαμπάς லாம்பாஸ் என்ற சொல்லை பாவிக்கின்றது

அனேகமாக மத்தேயு ஒரு கிராமம்புற திருமணத்தை இங்கே உவமித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். கிராமப்புற திருமணத்தில் மணப்பெண்ணின் தோழியர்கள் அவரோடு இறுதி வரைக்கும் கூடவே இருப்பார்கள். அதிகமான வேளைகளில் இவர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களாகவும் இருப்பார்கள் (நம்முடைய தமிழ் திருமணங்களைப் போலத்தான் அல்லது கிறிஸ்தவ திருமண திருவருட்சாதனத்தில் மணமகனுக்கும், மணமகளுக்கும் தோழியர் தோழர்கள் இருப்பது போல). இந்த தோழியர்கள் அக்காலத்தில் புழக்கத்திலிருந்த விளக்குகளைத்தான் பிடித்திருப்பார்கள். இது ஒரு வகையான பந்தம்-விளக்கு என்று சொல்லலாம். மரக் கம்புகளின் உச்சியில் சாக்குகளை சுற்றி அதில் எண்ணெய் வார்த்து இந்த விளக்குகள் பற்றி எரியவைக்கப்படும். சில நிமிடங்கள் மட்டுமே இந்த பந்தத்தால் எரிய முடியும், நெருப்பு அணையும் தறுவாயில் மீண்டும் அது எண்ணெய்யில் தோய்க்கப்படும். இப்படியாக இந்த விளக்குகள் அருகிலிருக்கும் எண்ணெய்யைத்தான் நம்பியிருந்தன


.2அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். : அவர்களில் ஐந்து பேர் அறிவிலிகள் ஐந்துபேர் முன்மதியுடையவர்கள் என மத்தேயு காட்டுகிறார் (μωραὶ மோராய், அறிவிலிகள்: φρόνιμοι புரொனிமொய், அறிவாளிகள்). 


.3அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. : அறிவிலிகள் ஐந்துபேரும் விளக்குகளை எடுத்துச் செல்கின்றனர், ஆனால் எண்ணெய்யை எடுத்துச் செல்லவில்லை. எண்ணெய்யை குறிக்க (ἔλαιον) எலாய்யொன் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது ஒலிவ எண்ணெய்யைக் குறிக்கும்


.4முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். : அறிவாளிகளை தமிழ் விவிலியம் முன்மதியுடையோர் என்று சொல்லிடுகிறது. இவர்கள் தங்களோடு எண்ணெயையும் எடுத்துச் செல்கிறார்கள். இவர்கள் குவளைகளில் (ἀγγείοις  அங்கெய்யொஸ், குவளைகள்) எண்ணெய் எடுத்துச் செல்வதால், அது இவர்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும்.  


.5மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.: இந்த நாட்களில் மணமக்கள் நேரத்திற்கு ஆலயத்திற்கு வரமாட்டார்கள், அவர்கள் வந்தாலும் அவர்களின் உறவினர்களும், உடல் அலங்கரிப்பவர்களும் இவர்களை நேரத்திற்கு வரவிடுவதில்லை. இது திருமண திருப்பலியில் சாதாரணம். இதனைப் போலத்தான், இந்த உவமையில் மணமகள் காலம் தாழ்த்தி வருகிறார். அதற்கான காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் அவருடைய காலம் தாழ்த்துதல், மணமகளின் தோழியருக்கு தூக்கத்தை கொண்டுவருகிறது. இதிலிருந்து மணமகன் அதிகமாக காலம் தாழத்தியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது


.6நள்ளிரவில், 'இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது.

நள்ளிரவில் குரலொன்று கேட்கிறது. இந்த குரல் யாருடையது என்று மத்தேயு சொல்லவில்லை மாறாக இந்த குரல் மணமகனை வரவேற்கச் சொல்லி கட்டளையிடுகிறது. தொடர்பு சாதனங்கள் குறைவாக இருந்த காரணத்தால், அக்காலத்தில் வாயை மட்மே பாவித்து மற்றவர்களை அழைக்க வேண்டியதாக இருந்தது


.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

இந்த குரலின் காரணமாக அனைவரும் நித்திரைவிட்டு எழுகின்றனர், அத்தோடு அது அவர்களை வேலை செய்யவும் வைக்கிறது. தூக்கத்திலும், அவசரமாக எழுவதிலும், விளக்குகளை ஒழுங்கு படுத்துவதிலும் பத்து தோழியர்களும் ஒருமித்தவர்களாகவே இருக்கின்றனர்


.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, 'எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன் உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். : இப்பொழுதுதான் சிக்கல் அறியப்படுகிறது. அறிவிலிகளின் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன, இதற்கான காரணமும் விளங்கப்படுத்தப்படுகிறது

அந்த ஐந்து அறிவிலி தோழியர், தங்கள் விளக்குகளுக்கு எண்ணெய் கேட்கிறார்கள். உடனடியாக அணைந்ததாக தெரியவில்லை, அணைந்து கொண்டிருக்கிறது என்பது சொல்லப்படுகிறது (σβέννυνται சுபென்நுன்டாய்). 


.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது' என்றார்கள்.

முன்மதியுள்ளவர்களின் பதில்கள் நியாயமானவை. இங்கே மணமகனை வரவேற்பதுதான் உத்தேசம். எண்ணெய்யை பகிர்ந்து கொண்டால், ஒருவேளை அது அனைவருடைய விளக்குகளையும் அனைத்து விடலாம். இதனால் அறிவாளிகள் அறிவிலிகளுக்கு எண்ணெய் கொடுக்காமல், அதற்கு பதிலாக வியாபாரியிடம் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள்


.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

அறிவிலிகளும் இவர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் எண்ணெய் வாங்க சென்றுவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் மணமகன் வீட்டினுள் வருகிறார் (ἦλθεν ὁ νυμφίος ஏல்தென் ஹொ நும்பியொஸ்). ஆயத்தாமாக இருந்தவர்கள் மட்டுமே உள்நுழைகிறார்கள் (εἰσῆλθον எய்சேல்தொன், உள்நுழைந்தார்கள்), அத்தோடு கதவும் அடைபடுகிறது. கதவு அடைபடுதல் (ἐκλείσθη ἡ θύρα எக்லெய்ஸதே ஹே தூரா, கதவு அடைக்கப்பட்டது) வாய்ப்பு ஒன்று கண் முன்னாலே இழக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. அத்தோடு இங்கே செயற்பாட்டு வினை பாவிக்கப்பட்டுள்ள படியால், இந்த கதவு ஒரு அதிகாரத்தால் அடைக்கப்படுகிறது என்றும் எடுக்கலாம்.  


.11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள்.

கடைக்கு போய் வந்த தோழியர்கள் கதவை திறந்துவிடும் படி வேண்டுகிறார்கள். இதற்க்கு 'ஆண்டவரே ஆண்டவரே எங்களுக்கு கதவை திறந்துவிடும்' (κύριε κύριε, ἄνοιξον ἡμῖν கூரியே கூரியே அநொய்ட்ஸ்சொன் ஹேமின்) என்ற அர்த்தத்தில் வரி அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய வேண்டுதலைப் பார்த்தால் கதவை அடைத்தவர் தலைவர் அல்லது மணமகன் என்றே எண்ணத்தோன்றுகிறது


.12 அவர் மறுமொழியாக, 'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார்.

தலைவர் இவர்களை தெரியாது என்கிறார். தெரியாதவர்களுக்கு யாரும் அக்காலத்தில் அதுவும் நடுநிசியில் கதவைத் திறந்து விடமாட்டார்கள். 'உங்களை எனக்கு தெரியாது' என்று இந்த மனித தலைவர் சொல்வது, ஆண்டவரே சொல்வது போல இருக்கும் படி மத்தேயு சொற்களை அமைத்துள்ளார் (ἀμὴν λέγω அமென் லெகோ, உறுதியாக செல்கிறேன்: οὐκ οἶδα ὑμᾶς ஊக் ஒய்தா ஹுமாஸ், உங்களை தெரியாது). 


.13எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.': 

இந்த வரி மத்தேயுவால் (இயேசுவால்) அனைத்து வாசகர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆண்டவர் வரும் நாளோ வேளையோ யாருக்கும் தெரியாது. விழிப்பாய் இருப்பதன் மூலம் மட்டுமே அவர் வரவை தவறவிடாமல் இருக்கலாம் என்பது இங்கே சொல்லப்படுகிறது

ஆண்டவருடைய வருகையின் நாளும் நேரமும் தெரியும் என்று சொல்பவர்களுக்கு இந்த செய்தி சவாலாக இருந்திருக்கும்


ஆண்டவருடைய வருகை யாருக்கும் தெரியாது

இதனை ஆண்டவரே சொல்லிவிட்டார்

ஆண்வருடைய வருகையை கணிக்கப்போய்,

இருக்கும் நேரத்தையும் தொலைக்காமல்

இருக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி

அவர் வருகைக்கு ஆயத்தம் செய்வோம்


அன்பு ஆண்டவரே

தூங்கினாலும், விழிப்பாயிருக்க வரம் தாரும், ஆமென்






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...