செவ்வாய், 7 ஏப்ரல், 2020

Holy Thursday, பெரிய-தூய வியாழன் 09,04,2020




Holy Thursday, பெரிய-தூய வியாழன் 09,04,2020






பெரிய-தூய வியாழன்
13,04,2017 

M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’ Oblate Spiritual Animation Centre,
Kopay South, Kopay, Jaffna
Tuesday, April 7, 2020

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 12,1-8.11-14
பதிலுரைப்ப பாடல்: திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 11, 23-26
நற்செய்தி: யோவான் 13,1-15



  பெரிய வியாழன், ஆண்டவர் புதிய கட்டளையை சீடர்களுக்கு கொடுத்ததால், கட்டளை வியாழன் என்று லத்தின் மொழியில் அழைக்கப்படுகிறது (mandatum). நற்கருணையை ஏற்படுத்திய படியால் இந்த வியாழன் குருத்துவத்தின் வியாழனாகவும் ஏற்படுத்தப்படுகிறது. மிருகங்களையும், பறவைகளையும் ஒப்புக்கொடுத்து தெய்வங்களை திருப்திப்படுத்தும், பயங்கரமான உலகில் கடவுளே வந்து, பாதங்களைக் கழுவி, தன்னை ஒப்புக்கொடுத்து பலி என்றால் என்ன வென்று போதிக்கிறார்
இன்றைய நாள் திருச்சபையின் வரலாற்றிலும் கிறிஸ்தவ கலாச்சாரத்திலும் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு நாள் திருப்பலியும் இந்த முதல் திருப்பலியின் மீள் வடிவமாகும். இந்த திருப்பலிதான் திருச்சபையின் இதயமும் மூச்சும். பெரிய வியாழனில் திருப்பலிக்கு பின்னர் செய்யப்படுகின்ற திருமணித்தியாலங்கள், கெத்சமனி தோட்டத்தில் ஆண்டவர் இயேசு மனக்கலக்கமுமவேதனையும் அடைந்து செபித்ததை நினைவூட்டுகிறது, ஆண்டவர் கேட்டதற்கு 
இணங்க நாம் அவரோடு விழித்திருந்து செபிக்க முயல்கிறோம். ஆண்டவரின் இறுதி இராவுணவு
(Ultima Cena உல்திமா சேனா) பல்லாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவ ஓவிய மற்றும் சிற்பக் கலையின் அங்கமாக மாறுயிருக்கிறது. இவற்றுள் இத்தாலிய சிற்பி-ஓவியர் வரைந்தது இன்று வரை மனிதரின் கலை ஆர்வத்தையும், ஆன்மாவின் தெய்வீக தேடலையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது. இறுதி இராவுணவில் ஆண்டவர் பாவித்த கிண்ணத்தை வைத்து பல விதமான கதைகளையும், கட்டுக்கதைகளும் இயேசுவை சேராதவர்களால் உருவாக்கப்படுகின்றன. சினிமாக்காரர்களும், உலக மெய்யியல்வாதிகளும், தங்கள் வங்கிக் கணக்குகளை பெருக்க 
இதனை பாவிக்க முயல்கின்றனர். இவர்களின் கற்பனை ஆண்டவரை நிந்திக்க முயல்கிறது, இதற்கு நல்ல ஒரு உதாரணம் - பல வருடங்களுக்கு முன் வந்த 'டாவின்சி கோட்' (The Da Vinci Code - Dan Brown) என்ற திரைப்படம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த நாள், உணர்வு பூர்வமான நாள், இதயத்திற்கு நெருக்கமான நாள், கட்டுக்கதைகளையும் புராணங்களையும் நாம் நம்ப வேண்டிய ஆன்மீக வறுமையில் நாமோ, நம் திருச்சபையோ அல்லது இறையரசோ இல்லை. நமக்கு, ஆண்டவரின் கிண்ணத்தைவிட அந்த கிண்ணம் தாங்கிய இரத்தமே முக்கியமானது, ஏனெனில் அது ஆண்டவரின் இரத்தம்

வி.: 12,1-8.11-14
1எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்
2உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே
3இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். 4ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். 5ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்
6இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். 7இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். 8இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
11நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது 'ஆண்டவரின் பாஸ்கா'.
12ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்
13இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.புளிப்பற்ற அப்ப விழா
14இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

. பாஸ்கு (פֶּסַח பெசா) என்பது கடந்து போதலைக் குறிக்கும். பாஸ்கு விழா இஸ்ராயேலருடைய முக்கிய விழாவாகி, ஆண்டவர் எகிப்திலே இஸ்ராயேல் மக்களை மீட்டதையும், அழிக்கும் வான தூதர் இஸ்ராயேல் வீடுகளைக் கடந்து சென்றதையும், இஸ்ராயேலர் செங்கடலைக்க கடந்ததையும் குறிக்கிறன. அநேகமாக நிசான்-சித்திரை மாதம் 14ம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஓரு செம்மறி ஆட்டுக் குட்டியை பலியிட்டு குடும்பமாக கொண்டாடப்பட்ட இந்த விழா, அதே மாதம் 15ம் தொடங்கப்பட்ட புளிக்காத அப்ப விழாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு விழாக்களும் வரலாற்றிலே தனித் தனியாக தொடங்கப்பட்டு, பின்நாளில் இஸ்ராயேலிரின் மீட்பு வரலாற்றோடு சேர்ந்து ஒரே விழாவானது. மத்தேயு, மாற்கு, லூக்கா, பவுல் போன்றோர் ஆண்டவரின் இறுதி உணவை பாஸ்கா விழாவாக காண்கின்றனர், யோவான் சற்று முன்னே சென்று ஆண்டவர் சிலுவையில் மரணித்ததே, பாஸ்கா விழாவென்று காண்கிறார்

. குருமரபு பாரம்பரியம் என்று காணப்படும் இந்த பகுதி, மத்திய கிழக்கு பகுதிகளின் நாடோடி வாழ்கையை நினைவு கூருகிறது என்பர் ஆய்வாளர்கள். வசந்த காலத்தின் தொடக்கத்தில் புதிய மேய்சல் நிலங்களைத் தேடி மந்தைகளை கூட்டிச் செல்கிற நாடோடி மக்கள், தெய்வங்களிடம் பாதுகாப்பு வேண்டி, செய்யப்பட்ட ஒரு வகை பலி விழாக்களை ஒட்டி இது அமைந்துள்ளது. குரு, பலிப்பீடம், ஆலயம் இவை இந்த பகுதியில் இல்லாமையானது, இந்த விழா மிகவும் புரதனமானது என காட்டுகிறது. மதத்திற்கு வெளியில் உண்டாகி, பின்னர், இஸ்ராயேலின் மதத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். (எம்முடைய தைப்பொங்கலுக்கும் இப்படியான அழகான வரலாறு உள்ளது). 

வவ. 1-4: பல புராதன கால அட்டவணைகள், வசந்த காலத்தையே வருடத்தின் முதலாவது மாதமாக கொண்டிருந்தன. குடும்ப விழா என்பதும், அயலவரையும் சேர்த்துக்கொள்ளட்டும் என்பதும், மனிதன் சமூக பிராணி என்பதற்கு நல்ல உதாரணம். ஆண்டவர் ஆரோனிற்கும் மோசேக்கும் இடும் கட்டளையின் பின்னனியில், ஏற்கனவே வேறு மாதங்களை இவர்கள் முதல் மாதமாக கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது. குடும்பங்களின் முக்கியத்துவத்தையும் இந்த வரிகள் காட்டுகின்றன. குடும்பங்கள் தனித்து இயங்கக் கூடாது அவை மற்றவர்களையும் உள்வாங்க வேண்டும் என்ற சிந்தனையும் இங்கே காணப்படுகிறது. குடும்பம் என்பதை குறிக்க எபிரேயம் 'வீடு' (בַּיִת பாயித்) என்ற சொல்லையே பாவிக்கிறது. இதிலிருந்து குடும்பம் இல்லத்தோடு சம்மந்தப்பட்டது என்பது புலப்படுகிறது

வவ. 5-6: ஆட்டின் தேர்வுத்தன்மை விவரிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் அனைத்து ஆடுகளும் நல்லவைகளாகவே கருதப்பட்டன, பின்னர் இறையியலும், அறிவியலும் வளர வளர: செம்மறி நல்லதையும், சாதாரண ஆடு தீமையையும் குறிப்பதாக மாறிவிட்டது. குறைபாடு அல்லது நோய் என்பன சாபம் என்று நம்பப்பட்ட காலப்பகுதியில் குறைபாடுள்ள விலங்குகளும் அவ்வாறே கருதப்பட்டன. ஆண்டவர் வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையே தெரிவுசெய்யலாம் என்கிறார். ஒரு வருடம் பூர்த்தியான ஆடு அத்தோடு கிடாய் போன்றவை தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதிலிருந்து அக்கால சமுதாயம் பெண்விலங்குள், மற்றும் குட்டி விலங்குகள் மட்டில் அக்கறை உள்ளவர்களாக இருந்தனர் என்பதும் புலப்படுகிறது.  

வவ. 7-8.11: இரத்தங்களை பூசுதல் ஒரு வகை பாதுகாப்பு வேண்டி பலி ஒப்புக்கொடுக்கும் சடங்கு. சட்டங்களிலும் நிலைகளிலும் பூசுதல், இக்காலங்ளில் ஏற்கனவே இவர்கள் சிறிய வகை வீடுகளில் வாழத் தொடங்கிவிட்டனர் எனலாம். (கிறிஸ்து சிலுவையில் தொங்கி, தனது இரத்தத்தால் அனைவரையும் ஒப்புரவாக்கிவிட்டார், ஆனாலும் இன்னும் சில கிறிஸ்தவர்கள் இயேசுவை திருப்திப்படுத்த சில ஆலயங்களில் அப்பாவி மிருகங்களை பலியிடுவதை என்னவென்று சொல்வது? இது கிறிஸ்தவ நாகரீகம் மற்றும் இறையலுக்கு பொருத்தமானது அல்ல) இறைச்சியை உண்ணும் விதமும், கசப்புக் கீரையும், சாதாரண பாலைவன மேய்சல்காரர்களின் வறிய உணவை குறிக்கிறது. வாட்டி உண்ணுதல், சமைக்க பாத்திரம் இன்மையையும், கசப்புக் கீரை அவர்களின் தொட்டுண்ணும் உணவையும் குறிக்கலாம். உண்ணுபவர்களின் முறை, எதோ ஒரு அவசரத்தை காட்டுகிறது. குறிப்பிடப்பட்டுள்ள ஆடை அணிகள் சாதாரண நாடோடி மக்களின் உடைகள். இடையில் கச்சை (מָתְנֵיכֶ֣ם חֲגֻרִ֔ים), காலில் காலணி (עֲלֵיכֶם֙ בְּרַגְלֵיכֶ֔ם), கையில் கோல் (מַקֶּלְכֶם בְּיֶדְכֶם) போன்றவை, இவர்களுக்கு அவசரமான ஒரு பயண அனுபவத்தை நினைவூட்ட சொல்லப்படுகிறது
அத்தோடு இவ்வளவு காலமும் சாதாரன செமித்திய கலாச்சார சடங்காக இருந்தது இப்போது ஆண்டவரின் பாஸ்காவாக மாறுகிறது. இதுவே விடுதலைப் பயண ஆசிரியரின் மையச் செய்தி

வவ. 12-14: தலைப்பிள்ளைகளின் மரணம், ஒரு இனத்தின் எதிர்காலத்தின் மரணத்தைக் குறிக்கும். கடவுள் கொலை செய்வாரா, எப்படி கடவுள் தன் மக்களை காக்க இன்னொரு மக்களினத்தை சாகடிக்க முடியும் (அவர்கள் பாவிகளானாலும் சரி). இஸ்ராயேலின் கடவுள் மக்கள் என்றால் எகிப்தியர் யார் மக்கள்? இவை தற்காலத்தில் நம்பிள்ளைகளால் எழுப்பப்படும் கேள்விகளில் சில. இங்கே கடவுள் எகிப்தியரை சாவடித்தார் என்பதை விட, கடவுள் துன்புற்று துணையில்லாமல் இருந்த இஸ்ராயேலரை காக்கிறார் என்பதையே கருப்பொருளாக எடுக்க வேண்டும். பாரவோன் தன்னை கடவுளாக நினைத்ததும், அவர் மக்களும் அவர் தலைவர்களும் இந்த பாரவோனின் மோலாதிக்க சிந்தனைக்கு உரம் இட்டதும், அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கின்றன. கடவுள் எகிப்தியரை உடனடியாக தண்டித்ததாக விவிலியம் காட்டவில்லை மாறாக பல சந்தர்பங்கள் கொடுக்கப்பட்டதன் பின்னரே தண்டனை இறுதியாக வருகின்றது. அதே வேளை தண்டனையையும் கடவுள் நேரடியாக கொடுக்கவில்லை அதுவும் வானதூதர்கள் வழியாகவே வருகின்றன. கடவுளின் தண்டனையும் அவர் கோபமும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாதவை, அத்தோடு அவற்றை சூழலியலில் மட்டுமே பார்க்க வேண்டும். இவற்றை அவற்றின் பின்புலம் அறியாமல் வாசித்தால் நம்முடைய கடவுள் பற்றிய அறிவில் பல சவால்களை சந்திக்கலாம். எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளின் கோபத்தை மற்றும் தண்டனை பற்றிய ஆன்மீகத்தை இயேசுவின் பார்வையில் வாசிக்க வேண்டும்.   
 இந்த வரிகளில், ஆண்டவர்தான் உன்மையான கடவுள் என்று காட்ட ஆசிரியர் கொடுக்கும் விளக்கம். אֲנִי יְהוָה அனி அடோனாய் (நான் கடவுள்), என்று இங்கே கடவுள் மோசேக்கு சொல்வது, பின்நாளில் யோவான் நற்செய்தியில் இயேசு தன்னைப் பற்றி சொல்லும் வசனங்களை ஒத்திருக்கின்றன. இரத்தம் முதல் ஏற்பாட்டில் பல அர்தங்களைக் கொடுக்கிறது. இரத்தம் உயிரின் அடையாளம் என்பது மிகவும் முக்கியாமான ஒரு செய்தி. கடவுள் எகிப்தின் மக்கள், விலங்குகள் மற்றும் தெய்வங்கள் மேல் தீர்ப்பிடக்கூடியவர் என்பதும் இந்த கதையில் மிக முக்கியமான செய்திகளில் ஒன்று (מֵאָדָם וְעַד־בְּהֵמָ֑ה וּבְכָל־אֱלֹהֵי מִצְרַ֛יִם אֶֽעֱשֶׂה שְׁפָטִים אֲנִי יְהוָה׃). இரத்தம் உயிரின் அடையாளம் அத்தோடு அதனை மனிதர் சிந்தவோ அல்லது உண்ணவே கூடாது என்று இஸ்ராயேலர் கருதினர், இதன் முக்கியத்துவத்தையும் இங்கு காணலாம். இன்றிலிருந்து
இந்த விழா ஆண்டவரின் நினைவு நாளாக இஸ்ராயேல் மக்களுக்கு மாறுகிறது

1கொரி 11,23-26
23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். 25அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்' என்றார். 26ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

  புதிய ஏற்பாட்டில் நற்செய்திகளைத் தாண்டி, நற்கருணை ஏற்பாட்டினைப் பற்றி விவரிக்கின்ற முக்கியமான பகுதி இதுவாகும். இந்த விவரிப்பின் மூலம், நற்செய்திகள் எழுதப்படுவதற்கு முன்னமே ஆரம்ப திருச்சபை நற்கருணைக் கொண்டாட்டங்களை நிறைவேற்றியது என காணலாம். பவுல் எழுதியிருக்கும் வசனங்கள், நற்செய்தியாளர்கள் எழுதியிருக்கும் வசனங்களோடு அதிகமாக ஒத்திருப்பததைக் காணலாம். 1கொரிந்தியர் 11வது அதிகாரம், ஆரம்பகால திருச்சபைக் கொண்டாட்டங்களில் இருந்த பிணக்குகளை தீர்க்க எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. பவுல் இந்த வசனங்களை நினைவூட்டியதன் வாயிலாக இன்று போல அன்றும் நற்கருணைக் கொண்டாட்டங்களில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்திருந்ததையும் எண்பிக்கிறது

. 23: பவுல் தன்னுடைய செய்திகளுக்கும், தான் பெற்றுக்கொண்ட செய்திகளுக்கும் வித்தியாசம் காட்டுகிறார். திருத்தூதர்களிடமிருந்தே பவுல் இந்த வரிகளைப் பெற்றிருப்பார், ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன் Εγὼ γὰρ παρέλαβον  ἀπὸ τοῦ κυρίου ὃ καὶ παρέδωκα ὑμῖν, என்று அவற்றிக்கு உரமேற்றுகிறார்

. 24: ஆண்டவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் இந்த பாஸ்கு கொண்டாடப்பட்டிருக்கிறது என இவ்வாறு நிறுவலாம்

வவ. 24-25: நினைவாகச் செய்ய சொன்னதை பவுல் மையப்படுத்துகிறார். விடுதலைப்பயண நூல், 12வது அதிகாரத்தில், முன்னைய பாஸ்காவை, ஆண்டவர் தன் நினைவாகவே செய்யச் சொன்னார், ஆனால் இங்கே அப்பத்தை தன் உடலாகவும், இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றி புதிய உடன்படிக்கையை நினைவுகூற சொல்கிறார் என்று பவுல் அழகாக சொல்லுகிறார். இங்கே பவுல் ஆண்டவருடைய சொந்த வரிகளை உச்சரிக்கிறார், ஆண்டவர் இதனை அரமேயிக்கத்தில் சொல்லியிருக்க வேண்டும், அந்த வரிகள் இங்கே கிரேக்க மொழியில் பதியப்படுகின்றன (τοῦτό  μού ἐστιν τὸ σῶμα  τὸ ὑπὲρ ὑμῶν· τοῦτο ποιεῖτε εἰς τὴν ἐμὴν ἀνάμνησιν 'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்': τοῦτο τὸ ποτήριον ἡ καινὴ διαθήκη ἐστὶν ἐν τῷ  ἐμῷ αἵματι· τοῦτο ποιεῖτε, ὁσάκις ἐὰν πίνητε, εἰς τὴν ἐμὴν ἀνάμνησιν 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'), 

. 26: இதுவே பவுலுடைய முக்கிய செய்தி, நினைவுகூரப்படும் இந்த உணவு, ஆண்டவரின் சாவை முன்னறிவிக்கிறது. ஆக ஆயத்தம் இல்லாமலும், தகுதியில்லாமலும் உண்ணப்படும் இவ்வுணவு அவரின் சாவை கொச்சைப்படுத்துகிறது எனலாம்.    

யோவான் 13,1-15
சீடரின் காலடிகளைக் கழுவுதல்

1பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். 2இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், 3தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், 4இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 5பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், 'ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?' என்று கேட்டார். 7இயேசு மறுமொழியாக, 'நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது பின்னரே புரிந்து கொள்வாய்' என்றார். 8பேதுரு அவரிடம், 'நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்' என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை' என்றார். 9அப்போது சீமோன் பேதுரு, 'அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்' என்றார். 10இயேசு அவரிடம், 'குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். 11தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் 'உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். 12அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: 'நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? 13நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். 14ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 15நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

  யோவான் நற்செய்தி பல அர்தங்களையும் அடையாளங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால் அதனை அவதனமாகா வாசிக்க வேண்டும். 13தொடக்கம் 17வரையான அதிகாரங்கள், இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் நடந்த தனித்துவமான உரையாடல்களை கொண்டமைந்துள்ளது. இன்றைய வாசகத்திலே வருகின்ற பாதங்களை கழுவுகின்ற நிகழ்வு, யோவான் நற்செய்தியின் தனித்துவத்தைக் காட்டுகிறன்ற பகுதிகளில் மிக முக்கியமான ஒன்று என்று கருதலாம். யோவான் இயேசுவைப் பற்றி மற்றய நற்செய்திகள் தராதவற்றை தெரிவு செய்து தருவதில் வல்லவர், இவருக்கு மாற்கு நற்செய்தி மற்றும் மூல தரவுகளை விட இன்னும் அதிகமான தரவுகளும் பாரம்பரியங்களும் கிடைத்திருக்கிறது எனலாம்.

.1: குறிப்பிட்ட பாஸ்கா விழாவை சீடர்கள் எப்போது கொண்டாடினார்கள் என்பதை இந்த வசனத்தில் இருந்து கணிப்பது கடினம். சமநோக்கு நற்செய்தியாளர்களுக்கும் யோவானுக்கும் இடையில் பாஸ்கா விழாவின் நாள் மட்டில் பல வேறுபாடுகள் தோன்றுவது போல உள்ளது. யோவானுடைய கணிப்பின்படி இயேசு பாஸ்கா உணவுண்ட நாளை மற்றவர்களை விட ஒரு நாள் முன்கூட்டி கணித்தது போல தோன்றுகிறது. இதற்கான காரணம் இரண்டு வகையான கால அட்டவணைகள் பாவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த விடையும், திருப்திகரமானதாக 
இல்லை. எவ்வாறு எனினும் நிசான் மாதம் 15ம் நாள் இவ்விழா கொண்டாடப்பட்டது எனலாம். யோவான் நற்செய்திப்படி இயேசு காலங்களையும் நேரங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். தமக்குரியோர் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், இங்கே சீடர்களைக் குறிக்கலாம், முழு நற்செய்தியில் இது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைக் குறிக்கிறது

.2: இயேசுவை காட்டிக்கொடுக்கும் திட்டம் யூதாசுடையது என்பதையும் தாண்டி, அது அலகையுடையது என்கிறார் யோவான். யூதாசினுடைய இதயம் இப்போது கடவுளுடைய இடமல்ல மாறாக அலகையுடையது என்கிறார் யோவான் (διαβόλου ἤδη βεβληκότος εἰς τὴν καρδίαν  ἵνα παραδοῖ αὐτὸν Ἰούδας Σίμωνος Ἰσκαριώτου).

.3: மீண்டுமொருமுறை தன்னுடைய பணிகளை நன்கு அறிந்திருந்தார் இயேசு என்று கூறி, இயேசுவின் தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் தன்னுடைய வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் யோவான். முதல் ஏற்பாட்டு கடவுளைப்போல இயேசுவே அனைத்தையும் தீர்மானிக்கிறார்

வவ.4-5: இங்கே சில நோக்கப்படவேண்டிய செயற்பாடுகள் நடைபெறகின்றன

. பந்தியிலிருந்து எழும்புதல் (ἐγείρεται ἐκ τοῦ δείπνου): பணிசெய்ய ஒருவர் தன்னுடைய நிலையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கலாம்

. மேலுடைகளை கழட்டி வைத்தல் (τίθησιν τὰ ἱμάτια): ஒருவர் தன்னுடைய மேன்மையை தியாகம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கலாம்

. துண்டை இடுப்பில் கட்டுதல் (λαβὼν λέντιον διέζωσεν ἑαυτόν): இன்னொரு குறைவான நிலைக்கு தன்னை அர்ப்பணித்ததைக் குறிக்கும். காலடிகளைக் கழுவுதலும், அதனை தன்னுடைய துண்டால் துடைத்தலும், சாதராணமாக சேவகர்கள் அல்லது அடிமைகள் செய்கின்ற வேலை, அதனை ஆண்டவரே செய்கின்றமை, நல்ல ஒரு உதாரணமாக அமைகிறது

இங்கே இரண்டு செய்திகளை அவதானிக்கலாம்
). ஒருவர் பாதங்களைக் கழுவ மற்றவரை தன்னைவிட உயர்ந்தவராக கருதவேண்டும்
). தன்னுடைய மேன்மையில் இருந்து அவர் இறங்கி வர வேண்டும்

வவ. 6-10: பேதுருவின் கேள்விகளும், ஆண்டவரின் பதிலும் புதிய ஏற்பாட்டில் பேதுருவின் நடத்தையை பற்றி தெரிந்த வாசகர்களுக்கு பெரிய வியப்பாக இருக்காது. பேதுருவின் கணிப்பின்படி, இயேசு, மெசியா மற்றும் இறைவனின் உத்தம மகன், அவர், ஒரு சாதாரண கலிலேய யூதனின் பாதங்களை கழுவுவதை சகித்துக்கொள்ள முடியாது. அதே வேளை, அனைத்தையும் அறிந்திருக்கிற இயேசு ஆண்டவர் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார் என்ற முன்கூட்டிய அறிவும் இப்போது இந்த பேதுருவுக்கு இல்லை. இங்கே அவரின் சாதாரண அறிவிற்கப்பாற்பட்ட அன்பு பேசுகிறது. பேதுருவின் அறியாமையை நன்கு அறிந்திருந்த ஆண்டவர் தன்னுடைய கழுவுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி அடையாளமாக சொல்ல, பேதுரு அதனை உடல் ரீதியான கழுவுதலாக எடுத்து ழுழு உடலையையும் கழுவச் சொல்லி கேட்கிறார். கடவுளோடு கூடவே இருந்தாலும், பணியாளர்கள் தங்களை இற்றைப்படுத்தாவிட்டால், ஆண்டவரின் எண்ணங்களை செவ்வனே புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு பேதுரு ஒரு நல்ல உதாரணம்
 இந்த உரையாடலின் மூலமாக ஒருவர் இயேசுவின் சீடனாக மாற அவருக்கு இயேசுவுடன் பங்கிருக்க வேண்டும். இந்த பங்கு இயேசுவை செயலாற்ற அனுமதிப்பதன் வாயிலாக வருகிறது
இதனால்தான் இயேசு பேதுருவை அவருடைய கால்களை கழுவ தன்னை அனுமதிக்குமாறு கேட்கிறார். பாதங்களை கழுவுதல் ஆரம்ப காலத்திலே ஒரு முழுமையான குளியலாக இருந்து பின்னர் அது ஒரு அடையாள தூய்மை சடங்காக மாறியது. இயேசுவும் அதனை ஒரு அடையாள சடங்காகவே செய்கிறார். இந்த சடங்கை செய்வதன் மூலம் அனைவரும் தூய்மை அடைய முடியாது, ஏனெனில் தூய்மை என்பது ஒருவருடைய உள்ளார்ந்த மனத்துடன் சம்மந்தப்பட்டது
இதனால்தான் யூதாசு தூய்மையில்லாதவராகவே தொடர்ந்தும் இருக்கிறார்.

. 11: யூதாசைப் பற்றி இயேசுவிற்கு முதலே தெரிந்திருந்தது என்று சொல்லி மீண்டுமாக அனைத்தையும் அறிந்த இயேசு ஆண்டவர் என்கிறார் யோவான் (ᾔδει γὰρ τὸν παραδιδόντα αὐτόν·).


வவ. 12-15: இந்த வரிகள் இந்த பகுதியின் மிகவும் முக்கியமான செய்திகளைத் தாங்கி வருகிறது. பணியாளர்கள் தங்களின் செயற்பாடுகளின் பின்னர், தமது நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்கிறார் போல. யோவான் நற்செய்தியில் இயேசு தன்னுடைய தெய்வீகத்தை அப்படியே ஏற்று உறுதிப்படுத்துவார். இங்கே தனக்கே உரித்தான இரண்டு சொற்பதங்களை ஏற்றுக்கொள்கிறார். (ὁ διδάσκαλος καί· ὁ κύριος ஹோ திதாஸ்கலோஸ் காய் ஹோ குரியோஸ்) - தான்தான் உண்மையான ஆசிரியரும் ஆண்டவரும் என்கிறார். செய்தி என்னவெனில் இந்த ஆசிரிய-ஆண்டவரின் முன்மாதிரியை தனது சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்பது. முதல் ஏற்பாட்டில் நானே கற்றுத்தருவேன் என்று கடவுள் எரேமியாவிற்கு சொன்னதை நினைவிற்கு கொண்டுவருகிறது (காண் எரே 31,34). இங்கே யோவான் முக்கியமான சில படிப்பினைகளை முன்வைக்கிறார்:


குருத்துவத்திற்கு வரைவிலக்ணமும் அகராதியும் கொடுத்தவர் ஆண்டவர் இயேசு!
இயேசு இல்லாத குருத்துவம், மூட நம்பிக்கையின் அடையாளம்.  
இயேசு நற்கருணையிலே கடவுளையே பலிப்பொருளாக்கி,
 மனிதத்தின் தெய்வீகத்தை போதிக்கிறார்
பாதங்களை கழுவ விடுவதல்ல
மாறாக கழுவுவதே குருத்தவம் என்கிறார்.

ஆண்டவரே, குருத்துவத்தின் நாளில், குருக்கள் உம்மையே பற்றிக் கொள்ள வரம் தாரும்
ஆமென்


(காப்பக அறிவிப்பு:
இந்த விளக்கவுரை கடந்த வருடம் ஏற்கனவே இத்தாலி, றெஜியோ எமிலியாவில், 21, பங்குனி 2016 இல் எழுதப்பட்டது, இப்போது மீண்டும் தொகுக்கப்படுகிறது). இந்த விளக்கவுரைகள்
http://jegankumaromi.blogspot.it என்ற வலைப்பூ பதிவிலும், எனற் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியத்தின் 
http://www.tamilcatholic.de/sundaySermon/JeganKumarFr_biblical_explanations.html என்ற வலைத்தளத்திலும் ஏற்றப்படுகின்றன. அங்கே முன்னைய பதிவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்).

அனைத்து குருத்துவ உடன் சகோதரர்களுக்கு
முக்கியமாக அக மற்றும் புற காரணிகளால் துன்புறும் குருக்களுக்கு சமர்ப்பணம்

கொரோனா என்கின்ற தொற்றுநோய் உலகத்தில் சிந்துகின்ற அப்பாவி இரத்த ஆற்றை 
ஆண்டவர் வெகுசீக்கிரத்தில் நிறுத்துவாராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...